Samacheer NotesTnpsc

சமத்துவம் Notes 7th Social Science Lesson 6 Notes in Tamil

7th Social Science Lesson 6 Notes in Tamil

6] சமத்துவம்

அறிமுகம்:

இயற்கை மனிதனை நிறம், உயரம், திறமை, உடல் வலிமை ஆகியவற்றில் சமமாக உருவாக்கவில்லை. மேலும் இயற்கையான சமத்துவமின்மையை சரிசெய்ய இயலாது. ஒரே மாதிரியாக உள்ள இரட்டைக் குழந்தைகள் கூட அவர்களது திறமையில் ஒன்றாக இருப்பதில்லை. சாதி, மதம், மொழி, பொருளாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட சமத்துவமின்மையை சரி செய்ய முடியும். மனிதர்கள் தங்களது திறன், வலிமை, எண்ணம் ஆகியவற்றில் வேறுபடுவார்கள் என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று. அது போல அவர்கள் அனைவருக்கும் திறன்கள் மற்றும் திறமைகள் மேம்பட சமமான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.

சமத்துவம் என்றால் என்ன?

சமத்துவம் என்பது ஒரு தனி மனிதன் அல்லது ஒரு குழு வேறுபாடு காட்டி நடத்தப்படாமல் இருத்தல் அல்லது சிறப்பாக பாதுகாக்கப்பட்ட இயல்புகளான இனம், பால், இயலாமை, சமயம் அல்லது நம்பிக்கை, பாலியல் சார்ந்த போக்கு வயது அடிப்படையில் குறைவாக நடத்தப்படாமல் இருத்தல் முதலியவற்றை உறுதி செய்தலாகும்.

பேராசிரியர் லாஸ்கி அவர்களது கூற்றின்படி “சமத்துவம் என்பது சமமாக நடத்துவது மட்டுமல்ல வெகுமதி அளிப்பதிலும் சமத்துவம் இருப்பதாகும். முதலாவதாக சமூக சிறப்புரிமை இல்லாததும் இரண்டாவதாக போதுமான வாய்ப்புகள் அனைவருக்கும் வழங்கப்படுவதும் ஆகும்”.

சுமத்துவத்தின் முக்கியத்துவம்:

சமத்துவம் பல நூறு ஆண்டுகளாக மனித சமூகத்தை ஊக்குவித்து வழி நடத்திய ஆற்றல் வாய்ந்த நீதி மற்றும் அரசியல் கோட்பாடாகும். சமத்துவம் என்ற கோட்பாடு மனித இனம் அதனுடைய சாதி, நிறம், பால், இனம் அல்லது தேசியம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து மனிதர்களும் சமமான மதிப்புள்ளவர்கள் என்ற கோட்பாட்டை அறை கூவுகிறது. மக்களாட்சிக் கோட்பாடுகளான சுதந்திரம், சமத்துவம் ஆகியவை நீதியின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும்போது மட்டுமே பொருளுடயவையாகும் இருக்கும்.

சமத்துவத்தின் வகைகள்:

சமூக சமத்துவம்:

அனைத்து குடிமக்களும் சம தகுதியை அடைய உரிமை கொண்டவர்கள் என்பதே சமூக சமத்துவம் ஆகும். சமூகத்தில் சாதி, சமயக்கொள்கை, நிறம் மற்றும் இனம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு இருத்தல் கூடாது. அனைவரும் தங்களது ஆளுமை மற்றும் நோக்கங்களை அடைவதற்கு சமமான வாய்ப்புகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.

குடிமை சமத்துவம்:

அனைத்து குடிமக்களும் குடியியல் உரிமைகளை அடைதல் வேண்டும் என்பதே குடிமை சமத்துவம் ஆகும். குடிமக்களிடையே உயர்ந்தோர், தாழ்ந்தோர், ஏழை, பணக்காரன், சாதி மற்றும் சமயக் கொள்கை ஆகியவை காரணமாக பாகுபாடு இருத்தல் கூடாது. சமத்துவ உரிமைகள் அனைவருக்கும் கிடைக்கச் செய்வதோடு எந்த உரிமையும் எவருக்கும் மறுக்கப்படுதல் கூடாது. இங்கிலாந்தில் சட்டத்தின் ஆட்சி என்ற போட்பாடு உள்ளது. அங்கு சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமம் என்பதோடு அது அனைவரையும் சமமாக நடத்துகிறது. இந்தியாவிலும் அதைப் போலவே சட்டத்தின் ஆட்சிக் கோட்பாடு பின்பற்றப்படுகிறது.

அரசியல் சமத்துவம்:

இந்தியா உள்ளிட்ட அனைத்து மக்களாட்சி நாடுகளும் அவற்றின் குடிமக்களுக்கு அரசியல் உரிமைகளை உறுதியளிக்கின்றன. அவை பின்வருமாறு:

  • வாக்களிக்கும் உரிமை.
  • பொது அலுவலகத்தில் பங்குகொள்ளும் உரிமை.
  • அரசை விமர்சனம் செய்யும் உரிமை.

குடிமக்கள் அனைவரும் அரசியல் வாழ்வில் தீவிரமாக பங்கெடுப்பதற்கு சமமான வாய்ப்பினை பெற்றிருத்தல் வேண்டும் இந்த உரிமைகள் அனைவருக்கும் வாக்குரிமை என்பதன் அடிப்படையில் மக்களுக்கு கிடைக்கின்றது. இந்தியாவில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் எவ்வித பாகுபாடும் இல்லாமல் வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது. 1952ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலிலேயே இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. ஆனால் சுவிட்சர்லாந்து நாட்டில் 1971ஆம் ஆண்டில் தான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. இந்தியாவில் 25 வயது பூர்த்தி அடைந்த எவரும் தேர்தலில் போட்டியிடலாம். அரசை விமர்சிக்கலாம் என்ற உரிமை ஒரு முக்கியமான உரிமை என்பதோடு மக்கள் தங்களது மாறுபட்ட கருத்துக்களை பல்வேறு வகையிலும் தெரிவிக்கலாம். நாட்டின் பிரதமரின் வாக்கின் மதிப்பும் ஒரு சாதாரண மனிதனின் வாக்கின் மதிப்பும் பொதுத் தேர்தலில் ஒன்றே என்பது அரசியல் சமத்துவத்தைக் குறிக்கிறது.

பாலின சமத்துவம்:

மனித இனங்களில் ஆண் பெண் இருவரும் தமது தனிப்பட்ட திறனை மேம்படுத்திக் கொள்ளலாம். தங்களது விருப்பங்களை எவ்வித கட்டுப்பாடுமின்றி ஏற்படுத்தியும் கொள்ளலாம். பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்படவில்லை மேலும் அவர்கள் ஆண்களைக் காட்டிலும் பலவீனமானவர்கள் என்பதோடு சமூகத்தில் ஆண்களுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் அவர்களை வைத்துள்ளனர். அவர்கள் சமமாக நடத்தப்பட வேண்டும். சமமாக நடத்தப்பட வேண்டும் என்பது அவர்கள் இருவரும் ஒன்றாக வேண்டும் என்பது இல்லை. ஆனால் உரிமைகள், பொறுப்புகள் மற்றும் வாய்ப்புகள் ஆகியவை ஆண், பெண் என்பதை பொறுத்து அமைதல் கூடாது. பாலியல் சமத்துவம் என்பது ஆண் பெண் இருவரும் வாய்ப்புகள் மற்றும் வளங்களை பெறுதல் ஆகும். பெண்கள் பொருளாதார நடவடிக்கைகளில் பங்கெடுக்கவும் முக்கியமான முடிவுகளை எடுக்கவும் உரிமை கொண்டவர்கள் ஆவர். பெண்கள் தமது திறன் மற்றும் கடின உழைப்பால் எவ்விதத்திலும் ஆண்களுக்கு குறைவானவர்கள் அல்லர் என்பதை நிரூபித்துள்ளனர். பெண்கள் தற்போது எல்லை பாதுகாப்பு படை, விமானப் படைகளில் வெற்றிகரமாக பணிபுரிந்து வருகின்றனர். பெண்களை மேம்படுத்தும் விதமாக உள்ளாட்சி அமைப்புகளில் 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

பாலின சமத்துவம் என்பது பெண்கள், ஆண்கள் சிறுவர், சிறுமியர், ஆகியோர் சமமான உரிமைகள் வாய்ப்புகள் பெற வேண்டும் என்று கூறுவதோடு அவர்கள் ஒன்று போல நடத்தப்பட வேண்டும் என யூனிசெப் நிறுவனம் கூறுகிறது. 2017ஆம் ஆண்டில் நிலையான மேம்பாட்டிற்கான 17 குறிக்கோள்களில் பாலின சமத்துவம் என்பது ஐந்தாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித மாண்பு:

மனித மாண்பு என்பது சுய மரியாதை ஆகும். மனித மாண்பு என்பது முக்கியமான மனித உரிமை என்பதோடு இதிலிருந்தே அனைத்து அடிப்படை உரிமைகளும் தோன்றுகின்றன. மாண்பு என்பது கௌரவமான மேலான சிறந்த தகுதி ஆகும். ஒவ்வொரு மனிதனும் சமூகத்தின் ஒரு மதிப்பு மிக்க உறுப்பினர் என்பதை கருதுதல் வேண்டும்.

வாய்ப்பு மற்றும் கல்வியில் சமத்துவம்:

அனைத்து தனி மனிதர்களும் கல்வியினை பெறுவதற்கு வாய்ப்புகளை கொண்டிருத்தல் வேண்டும். அவர்களது ஆளுமையை மேம்படுத்த வாய்ப்புகள் பெற்றிருத்தல் வேண்டும்.

சமூகத்தில் நாம் சமமாக நடத்தப்படுவதற்கு நமக்கு சமத்துவம் தேவைப்படுகிறது. நாம் சமமாக நடத்தப்பட்டால் மதிப்பையும் மாண்பையும் பெறுவோம்.

இந்திய அரசியலமைப்பில் சமத்துவம்:

உலகின் அனைத்து நாடுகளின் அரசியல் அமைப்புகளும் அதன் மக்களுக்கு சமத்துவத்தை உறுதி அளித்துள்ளன. இதே போன்று இந்திய அரசியலமைப்பு அதன் குடிமக்களுக்கு அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 14-18 மூலம் சமத்துவத்தை அளிக்கிறது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் அனைவருக்கும் சட்டத்தின்படி சமமான பாதுகாப்பு என்பது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21இல் மேலும் வலிமைபடுத்தப்பட்டுள்ளது.

நாம் பின்வரும் வழிகளில் சமத்துவத்தை மேம்படுத்தலாம்.

  • அனைவரையும் நியாயமாக நடத்துதல்.
  • அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பண்பாட்டினை உருவாக்குதல்.
  • வாய்ப்புகள் அனைவரும் பெறுவதை உறுதிப்படுத்துதல்.
  • முழு ஆற்றலையும் மேம்படுத்த ஊக்குவித்தல்.
  • சட்டம் மற்றும் கொள்கைகளை வகுத்தல்.
  • கல்வி

நிறைவு:

இந்தியா உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடாகும். சமத்துவம் மற்றும் நீதி என்பது மக்களாட்சியின் தூண்கள் ஆகும். மக்கள் சமமாக நடத்தப்படும்போது நீதி எட்டப்படும். சமத்துவம் என்பது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் அது தனிமனித மாண்பினை தக்க வைக்கிறது. சமூகம் நல்ல முறையில் இயங்குவதற்கு சமத்துவம் ஒரு முக்கியமான கோட்பாடு ஆகும்.

நினைவில் கொள்க:

  • சுதந்திரம் மற்றும் சமத்துவம் என்பது மக்களாட்சியின் இரண்டு அடிப்படைக் கோட்பாடுகள் ஆகும்.
  • அனைத்து மக்களும் சட்டத்தின் முன்பாக சமம். அனைவருக்கும் அரசியல் வாழ்வில் பங்கேற்க சமமான வாயப்புகள் வழங்கப்படுதல் வேண்டும்.
  • குடியியல் உரிமை என்பது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை குறிக்கிறது.
  • பாலின சமத்துவம் என்பது ஆண் பெண் இருவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை குறிக்கிறது.
  • பாலின சமத்துவத்தை அரசின் பல்வேறு சட்டங்கள் வலியுறுத்துகின்றன.

கலைச்சொற்கள்:

1 சமத்துவம் Absence of any privilege to anybody Equality
2 சட்டத்தின் ஆட்சி Rule based on law Rule of law
3 முடியாட்சி Government by a single person Monarchy
4 சலுகைகள் Special concessions Privileges
5 பாகுபாடு Difference Discrimination

தெரியுமா உங்களுக்கு?

  • சட்டத்தின் ஆட்சி என்ற பதத்தை, ஏ.வி.டைசி என்ற பிரிட்டிஷ் சட்ட வல்லுநர் வாதுரைத்தார்.
  • பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து பல்வேறு முயற்சிகள் பெண்களின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராஜா ராம் மோகன் ராய், ஈஸ்வர சந்திர வித்யாசாகர், தயானந்த சரஸ்வதி, மகாதேவ் கோவிந்தரானடே, தாராபாய் ஷிண்டே, பேகம் ருகேயா சகாவத் உசேன் ஆகியோர் பெண்கள் சம அந்தஸ்து பெறுவதற்கு கடினமாக பணியாற்றியவர்களின் குறிப்பிடத்தகுந்தவர்கள் ஆவர்.
  • சட்டப்பிரிவு 14 சட்டத்தின் முன் அனைவரும் சமம் என உத்தரவாதம் அளிக்கிறது.
  • சட்டப்பிரிவு 15 பாகுபாட்டை தடை செய்கிறது.
  • சட்டப்பிரிவு 16 பொது வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கிறது.
  • சட்டப்பிரிவு 17 தீண்டாமையை ஒழிக்கிறது.
  • சட்டப்பிரிவு 18 பட்டங்கள் அளித்து வேறுபடுத்துதலை தடை செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!