Tnpsc

பேரரசுகளின் காலம் : குப்தர், வர்த்தனர் Notes 6th Social Science

6th Social Science Lesson 17 Notes in Tamil

17] பேரரசுகளின் காலம் : குப்தர், வர்த்தனர்

அறிமுகம்

கி.பி.(பொ.ஆ) மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் வட இந்தியாவில் குஷாணர்களாலும், தெற்கே சாதவாகனர்களாலும் நிறுவப்பட்டிருந்த வலிமை வாய்ந்த பேரரசுகள் பெருமையையும் வலிமையையும் இழந்தன. இச்சூழல் சந்திரகுப்தரை ஒரு அரசை உருவாக்கித் தனது வம்சத்தின் ஆட்சியை நிறுவ வைத்தது. அவ்வாட்சி இருநூறு ஆண்டுக் காலம் நீடித்தது.

குப்தர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர், அதைத் தொடர்ந்து ஏறத்தாழ 50 ஆண்டு இடைப்பட்ட காலத்திற்குப் பின்னர், வர்த்தன அரச வம்சத்தைச் சேர்ந்த ஹர்ஷர் வட இந்தியாவை கி.பி. (பொ.ஆ) 606 – 647 வரை ஆட்சி புரிந்தார்.

சான்றுகள்

தொல்லியல் சான்றுகள்

  • குப்த அரசர்களால் வெளியிடப்பட்ட தங்க, வெள்ளி, செப்பு நாணயங்கள்
  • சமுத்திரகுப்தரின் அலகாபாத் தூண் கல்வெட்டு
  • மெக்ராலி இரும்புத்தூண் கல்வெட்டு
  • இரண்டாம் சந்திரகுப்தரின் உதயகிரி குகைக்கல்வெட்டு, மதுரா பாறைக் கல்வெட்டு, சாஞ்சி பாறைக் கல்வெட்டு,
  • ஸ்கந்த குப்தரின் பிதாரி தூண் கல்வெட்டு
  • கத்வா பாறைக் கல்வெட்டு
  • மதுபான் செப்புப் பட்டயம் (பஞ்சாப்)
  • சோனாபட் செப்புப் பட்டயம்
  • நாளந்தா களிமண் முத்திரைப் பொறிப்பு

இலக்கியச் சான்றுகள்

  • விஷ்ணு, மத்சய, வாயு, பாகவத புராணங்கள், நாரதரின் நீதி சாஸ்திரம்.
  • விசாகதத்தரின் தேவிச்சந்திர குப்தம், முத்ரா ராக்ஸம், பாணரின் ஹர்ஷ சரிதம்
  • காளிதாசரின் நாடகங்கள்.
  • இரண்டாம் சந்திரகுப்தரின் காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்த சீன பௌத்தத்துறவி பாகியானின் பயணக் குறிப்புகள்.
  • ஹர்ஷரின் ரதனாவளி, நாகநந்தா, பிரியதர்ஷிகா.
  • யுவான் சுவாங்கின் சி-யூ-கி

குப்த அரச வம்சம் நிறுவப்படல்

குப்த அரச வம்சத்தை நிறுவியவர் ஸ்ரீகுப்தர் எனக் கருதப்படுகிறார். அவர் தற்போதைய வங்காளம், பீகார் பகுதிகளை ஆண்டதாகக் கருதப்படுகிறது. நாணயங்களில் முதன்முதலாக இடம் பெற்ற குப்த அரசரின் வடிவம் இவருடையதே. இவருக்குப் பின்னர் இவருடைய மகன் கடோஜ்கதர் அரசப் பதவியேற்றார். கல்வெட்டுகளில் இவர்கள் இருவருமே மகாராஜா என்றே குறிப்பிடப்பட்டுள்ளனர்.

முதலாம் சந்திரகுப்தர் (கி.பி. (பொ.ஆ) 319 – 335)

முதலாம் சந்திரகுப்தர், புகழ்பெற்ற , வலிமை மிகுந்த ‘லிச்சாவி’ அரச குடும்பத்தைச் சேர்ந்த குமாரதேவியை மணந்தார். இக்குடும்பத்தின் ஆதரவோடு , வட இந்தியச் சிற்றரசுகள் பலவற்றை இவர் வெற்றிக்கொண்டு , ஒரு பேரரசின் முடியரசாகத் தன்னை முடி சூட்டிக்கொண்டார். சந்திரகுப்தரால் வெளியிடப்பட்டவை எனக் கருதப்படும் தங்க நாணயங்களில் சந்திரகுப்தர், குமாரதேவி ஆகிய இருவரின் உருவங்கள் இடம்பெற்றுள்ளன. ‘லிச்சாவையா’ என்ற வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளது.

  • லிச்சாவி பழமையான கன சங்கங்களில் ஒன்றாகும். அதனுடைய ஆட்சிப் பகுதி கங்கை நதிக்கும் நேபாள நாட்டிற்கும் இடைப்பட்டதாக இருந்தது.

சமுத்திரகுப்தர் (கி.பி. (பொ.ஆ) 335 – 380)

முதலாம் சந்திரகுப்தரின் மகனான சமுத்திரகுப்தர் குப்த அரச வம்சத்தின் தலைசிறந்த அரசர் ஆவார். சமுத்திரகுப்தரின் அவைக்களப் புலவரான ஹரிசேனர் இயற்றிய பிரயாகை மெய்க்கீர்த்தி (பிரசஸ்தி) அலகாபாத் தூணில் பொறிக்கப்பட்டுள்ளது. சமுத்திரகுப்தரின் ஆட்சிக்கான மிக முக்கியச் சான்று அலகாபாத் தூண் கல்வெட்டாகும்.

பிரசஸ்தி / மெய்க்கீர்த்தி: பிரசஸ்தி என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். அதன் பொருள் ஒருவரைப் பாராட்டிப் ‘புகழ்வதாகும்’. அவைக்களப் புலவர்கள் அரசர்களைப் புகழ்ந்துபாடி அவர்தம் சாதனைகளைப் பட்டியலிட்டனர். இவை பின்னர் மக்கள் படித்துத் தெரிந்து கொள்வதற்காகத் தூண்களில் பொறிக்கப்பட்டன.

குப்த அரச வம்சம் ஒருங்கிணைக்கப்படல்

  • சமுத்திரகுப்தர் மகத்தான போர்த்தளபதியாவார். அவர் பேரரசர் ஆனவுடன் நாடு முழுவதும் படையெடுத்துச் சென்றார். தென்னிந்தியாவின் மீதும் படையெடுத்தார். தென்னிந்தியாவில் பல்லவநாட்டு அரசர் விஷ்ணுகோபனை சமுத்திரகுப்தர் தோற்கடித்தார்.
  • வட இந்தியாவில் சமுத்திரகுப்தர் ஒன்பது அரசுகளைக் கைப்பற்றினார். தென்னிந்தியாவைச் சேர்ந்த 12 அரசர்களைத் தனக்குக் கட்டுப்பட்ட சிற்றரசர்களாக்கி அவர்களைக் கப்பம் கட்டச் செய்தார்.
  • கிழக்கு வங்காளம், அஸ்ஸாம், நேபாளம், பஞ்சாபின் கிழக்குப் பகுதி ஆகியவற்றின் அரசர்களும் ராஜஸ்தானத்தைச் சேர்ந்த பல்வேறு பழங்குடியினரும் சமுத்திரகுப்தரின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டனர்.
  • சமுத்திரகுப்தர் ஒரு விஷ்ணு பக்தராவார். தனது மேலாதிக்கத்தை நிலை நாட்டும் அரசரால் நடத்தப்படும் வேதகாலச் சடங்கான குதிரைகளைப் பலியிடும் வேள்வியைச் சமுத்திரகுப்தர் மீண்டும் நடைமுறைப்படுத்தினார். அவர் தங்க நாணயங்களை வெளியிட்டார். அவற்றுள் ஒன்றில் அவர் வீணை வாசிப்பது போன்ற உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அவர் மிகச் சிறந்த படையெடுப்பாளர் மட்டுமல்ல; கவிதைப் பிரியரும் இசைப் பிரியருமாவார். அதனால் ‘கவிராஜா’ எனும் பட்டம் பெற்றார்.
  • இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீ மேகவர்மன் எனும் பௌத்த அரசன் சமுத்திரகுப்தரின் சமகாலத்தவராவார்.

இரண்டாம் சந்திரகுப்தர் (கி.பி. (பொ.ஆ). 380 – 415)

  • இரண்டாம் சந்திரகுப்தர் சமுத்திரகுப்தரின் மகனாவார். அவர் விக்கிரமாதித்யர் என்றும் அறியப்பட்டார். அவர் சாக அரசர்களைத் தோற்கடித்து மேற்கு மாளவத்தையும் குஜராத்தையும் கைப்பற்றினார். தென்னிந்திய அரசுகளோடு அவர் நட்புறவைப் பேணினார். குதுப்மினாருக்கு அருகேயுள்ள இரும்புத் தூண் விக்கிரமாதித்யரால் உருவாக்கப்பட்டது என நம்பப்படுகிறது. இவருடைய ஆட்சியின்போது பாகியான் எனும் சீன பௌத்த அறிஞர் இந்தியா வந்தார். மிகச்சிறந்த அறிஞர்களும் புலவர்களும் எழுத்தாளர்களும் கலைஞர்களும் (நவரத்தினங்கள்) இவருடைய அவையை அலங்கரித்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் காளிதாசர் எனக் கூறப்படுகிறது.
  • இரண்டாம் சந்திரகுப்தரைத் தொடர்ந்து அவருடைய மகன் முதலாம் குமாரகுப்தர் அரியணை ஏறினார். அவரே நாளந்தா பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர்.
  • குமாரகுப்தரைத் தொடர்ந்து அரசப் பதவியேற்ற ஸ்கந்தகுப்தர் ஹூணர்களின் படையெடுப்பைச் சந்திக்க நேரிட்டது. அவர், அவர்களைத் தோற்கடித்து விரட்டி அடித்தார். ஆனால் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் படையெடுத்து வந்த ஹூணர்கள் குப்தப் பேரரசைத் தோற்கடித்தனர்.
  • மிகச் சிறந்த குப்தப் பேரரசர்களில் கடைசிப் பேரரசரான பாலாதித்யர் முதலாம் நரசிம்மகுப்தர் என்ற பெயரில் அரியணை ஏறினார். இவர் பௌத்த மதத்தால் ஈர்க்கப்பட்டவராவார். இவர் மிகிரகுலருக்கு கப்பம் கட்டிவந்தார். ஆனால் மிகிரகுலர் பௌத்தத்தைப் பகைமையோடு பார்த்ததால் மனவேதனை அடைந்து கப்பம் கட்டுவதை நிறுத்தினார்.
  • மிகிரகுலரைக் கைது.செய்து சிறையில் அடைப்பதில் பாலாதித்யா வெற்றி பெற்றாலும் மிகிரகுலர் வஞ்சகமாகப் பாலாதித்யரை மகதத்திலிருந்து வெளியேற்றினார். பாலாதித்யருக்குப் பின்னர் மாபெரும் குப்தப் பேரரசு தேய்ந்து காணாமற் போனது. குப்தப் பேரரசின் அங்கீகரிக்கப்பட்ட கடைசி அரசர் விஷ்ணுகுப்தர் ஆவார்.
விக்கிரமாதித்யரின் அவையிலிருந்த நவரத்தினங்கள்
காளிதாசர் சமஸ்கிருதப் புலவர்
ஹரிசேனர் சமஸ்கிருதப் புலவர்
அமர சிம்ஹர் அகராதியில் ஆசிரியர்
தன்வந்திரி மருத்துவர்
காகபானகர் சோதிடர்
சன்கு கட்டடக் கலை நிபுணர்
வராகமிகிரர் வானியல் அறிஞர்
வராச்சி இலக்கண ஆசிரியர் மற்றும் சமஸ்கிருதப் புலவர்
விட்டல்பட்டர் மாயவித்தைக்காரர் (Magician)
  • இரண்டாம் சந்திரகுப்தரின் பட்டப் பெயர்கள்:

விக்கிரமாதித்தியர் , நரேந்திர சந்திரர், சிம்ம சந்திரர், நரேந்திர சிம்மர், விக்கிரம தேவராஜர் , தேவ குப்தர், தேவஸ்ரீ.

பாகியான்

  • இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சிக் காலத்தில், சீனாவைச் சேர்ந்த பௌத்தத் துறவி பாகியான் இந்தியவிற்கு வந்தார். அவருடைய பயணக் குறிப்புகள் குப்தர் காலத்து மக்களின் சமூக-பொருளாதார, மத, ஒழுக்க நிலைகள் பற்றிய செய்திகளை நமக்கு வழங்குகின்றன. பாகியான் கூற்றுப்படி மகதத்து மக்கள் மகிழ்ச்சியோடும் செழிப்போடும் வாழ்ந்தனர். கடுமையான தண்டனையின்றி நீதி வழங்கப்படவில்லை. கயா பாழடைந்திருந்தது. கபிலவஸ்து காடாகியிருந்தது. ஆனால் பாடலிபுத்திரத்தில் மக்கள் செல்வத்தோடும் செழிப்போடும் வாழ்ந்தனர்.

குப்தர்களின் ஆட்சி அமைப்பு

  • குப்த அரசர்கள் தெய்வீக உரிமைக் கோட்பாட்டினை நடைமுறைப்படுத்தினர். (அரசர் கடவுளின் பிரதிநிதியாக கருதப்பட்டார். எனவே அரசர் கடவுளுக்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப்பட்டவராவார். மற்றவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டியதில்லை எனும் கோட்பாடு) குப்த அரசர்கள் அரசியல். நிர்வாகம், இராணுவம், நீதிவழங்கல் ஆகிய துறைகளில் பெருமளவிலான அதிகாரம் பெற்றுத் திகழ்ந்தனர்.
  • குப்த அரசர்களுக்கு அமைச்சர்கள் (மந்திரி) குழுவொன்று நிர்வாகத்தில் உதவி செய்தது. அக்குழு இளவரசர்களையும், உயர் அதிகாரிகளையும், கப்பம் கட்டும் சிற்றரசர்களையும் கொண்டிருந்தது.
  • நாட்டின் அன்றாட நிர்வாகத்தைத் திறம்பட நடத்த, பெருமளவிலான அதிகாரிகள் குப்த அரசர்களால் பணியமர்த்தப்பட்டனர். உயர் பதவிகளில் அமர்த்தப்பட்ட அதிகாரிகள் ‘தண்ட நாயகர்’ மற்றும் ‘மகாதண்ட நாயகர்’ என அழைக்கப்பட்டனர்.
  • குப்தப் பேரரசு ‘தேசம்’ அல்லது ‘புக்தி’ எனும் பெயரில் பல பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டன. அவற்றை ‘உபாரிகா’ எனும் ஆளுநர்கள் நிர்வகித்தனர். பிராந்தியங்கள் ‘விஷ்யா’ எனும் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. விஷ்யாபதிகள் எனும் அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்தை மேற்கொண்டனர். கிராம அளவில் கிராமிகா, கிராமதியாகஷா எனும் அதிகாரிகள் செயல்பட்டனர்.
  • விரிந்து பரந்த குப்தப் பேரரசு, இராணுவ அமைப்பின் முக்கியப் பங்கினை உணர்த்துகிறது. முத்திரைகளிலும் கல்வெட்டுக்களிலும் இராணுவப் பதவிகளின் பெயர்கள் பாலாதிகிரிதா, (காலாட்படையின் தளபதி) மஹாபாலாதிகிரிதா (குதிரைப் படையின் தளபதி) எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. ‘தூதகா’ எனும் ஒற்றர்களை உள்ளடக்கிய உளவு பார்க்கும் அமைப்பும் செயல்பட்டது.

சமூகமும் பொருளாதாரமும்

நிலம் மற்றும் விவசாயிகள்

காமாந்தகரால் எழுதப்பட்ட நிதிசாரம் எனும் நூல் அரசுக் கருவூலத்தின் முக்கியத்துவத்தையும் வருமானத்திற்கான பல வழிகளையும் குறிப்பிடுகின்றது. சமுத்திரகுப்தரைப் போன்ற அரசர்களின் படையெடுப்பு நடவடிக்கைகளில், வருவாயின் உபரியே முதலீடு செய்யப்பட்டது.

நிலவரியே அரசின் முக்கிய வருவாயாக இருந்தது. விவசாயிகளின் நிலைமை பரிதாபகரமாக இருந்தது. அவர்கள் பல்வேறு வரிகளைச் செலுத்த வேண்டிய நிலையில் இருந்தனர். அவர்கள் கொத்தடிமை நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

குப்தர் காலத்தில் நிலங்களை வகைப்படுத்துதல்
சேத்ரா வேளாண்மைக்கு உகந்த நிலங்கள்
கிலா தரிசு நிலங்கள்
அப்ரகதா வனம் அல்லது காட்டு நிலங்கள்
வஸ்தி குடியிருப்பதற்கு உகந்த நிலங்கள்
கபத சரகா மேய்ச்சல் நிலங்கள்

வணிகமும், வர்த்தகமும்

  • குப்தர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு வணிகர்களின் பங்களிப்பு மிகவும் போற்றத்தக்கதாக இருந்தது. வணிகர்களில் இரண்டு வகையினர் இருந்தனர். ‘சிரேஸ்தி’ மற்றும் ‘சார்த்தவாகா’ என அவர்கள் அழைக்கப்பட்டனர்.
சிரேஸ்தி சார்த்தவாகா
சிரேஸ்தி பிரிவைச் சார்ந்த வணிகர்கள் ஓரிடத்தில் நிலையாக இருந்து வணிகம் செய்தவர்கள் சார்த்தவாகா வணிகர்கள் எருது பூட்டிய வண்டிகளில் பொருட்களை ஏற்றி பல்வேறு இடங்களுக்குச் சென்று வணிகம் செய்தவர்கள்.
  • விற்பனைப் பொருட்கள் அன்றாடப் பயன்பாட்டுக்குத் தேவையான பொருட்களிலிருந்து விலை மிகுந்த ஆடம்பரப் பொருட்களெனப் பல வகைப்பட்டவையாய் இருந்தன.
  • மிளகு, தங்கம், செம்பு, இரும்பு, குதிரைகள், யானைகள் ஆகியவை முக்கிய வணிகப் பொருட்களாகும். குப்தர்காலத்தில் அதிக வட்டிக்குக் கடன் கொடுக்கும் முறை நடைமுறையில் இருந்தது.
  • நாட்டின் பலபகுதிகளை இணைக்கும் சாலைகளைக் குப்தர்கள் அமைத்தனர். பாடலிபுத்திரம், உஜ்ஜைனி, வாரணாசி, மதுரா ஆகிய முக்கிய வணிக நகரங்களாக இருந்தன.
  • இந்தியாவில் உள்ள மேலைக் கடற்கரைத் துறைமுகங்களும் (கல்யாண், மங்களூர், மலபார்) கீழைக் கடற்கரைத் துறைமுகமும் (வங்காளத்திலிருந்த தாமிரலிப்தி) வணிகப் பெருக்கத்திற்கு உதவின.

நாளந்தா பல்கலைக்கழகம்

  • நாளந்தா பல்கலைக்கழகம் ஐந்தாம் மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளில் குப்தப் பேரரசின் ஆதரவில் தழைத்தோங்கியது. பின்னர் கன்னோசியைச் சேர்ந்த பேரரசர் ஹர்ஷரின் ஆதரவில் சிறப்புற்றது.
  • நாளந்தாவில் பௌத்தத் தத்துவமே முக்கியப் பாடப்பிரிவாக இருந்தது. யோகா, வேத இலக்கியங்கள், மருத்துவம் ஆகியவையும் கற்பிக்கப்பட்டன.
  • அப்பல்கலைக்கழகத்தில் யுவான் –சுவாங் பௌத்த தத்துவத்தைப் பற்றிப் படிப்பதில் பல ஆண்டுகள் செலவழித்தார்.
  • அந்த வளாகத்தில் எட்டு மகாபாடசாலைகளும் மூன்று மிகப்பெரிய நூலகங்களும் இருந்தன.
  • நாளந்தா பல்கலைகழகம் பக்தியார்கில்ஜி என்பாரின் தலைமையில் வந்த மம்லுக்குகள் என அழைக்கப்பட்ட துருக்கிய இஸ்லாமிய அடிமை வீரர்களால் அழித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டது.
  • நாளந்தா யுனெஸ்கோவின் உலகப்பாரம்பரியச் சின்னமாகும்.

ஹூணர்கள் என்போர் யாவர்?

ஹூணர்கள் என்போர் நாடோடிப் பழங்குடியினராவர். தங்கள் மாபெரும் தலைவர் அட்டில்லாவின் தலைமையில் இவர்கள் ரோமாபுரியையும் கான்ஸ்டாண்டிநோபினையும் பேரச்சத்திற்கு உள்ளாக்கினர். இவர்களோடு தொடர்புடைய வெள்ளை ஹூணர்கள் மத்திய ஆசியா வழியாக இந்தியா வந்தனர். தங்கள் தொடர் படையெடுப்புகளின் மூலமாக எல்லையோர நாடுகளுக்குத் தொந்தரவு கொடுத்துவந்தனர். ஸ்கந்தகுப்தரைத் தோற்கடித்த பின்னர் இவர்கள் மத்திய இந்தியப் பகுதிகளில் பரவினர். அவர்களின் தலைவரான தோரமானர் தனக்குத் தானே அரசராக முடி சூட்டிக் கொண்டார். அவருக்குப் பின்னர் அவரது மகன் மிகிரகுலர் ஆட்சி செய்தார். முடிவுல், மத்திய இந்தியாவில் மாளவத்தை ஆட்சி செய்துவந்த யசோதர்மன் அவர்களைத் தோற்கடித்து அவர்களின் ஆட்சிக்கு முடிவு கட்டினார்.

  • குப்தர்களின் நாணய அமைப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் சமுத்திரகுப்தர் ஆவார். குஷாணர்களின் நாணயங்கள் சமுத்திர குப்தருக்கு உந்துதலை வழங்கின. குப்தர்களின் பொற்காசுகள் தினாரா என்றழைக்கப்பட்டன. குப்தர்கள் வெளியிட்ட பொற்காசுகளை விட வெள்ளி, செப்புக் காசுகள் குறைவாகவே வெளியிடப்பட்டன. குப்தர்களுக்கு அடுத்து வந்த காலத்தில் பொற்காசுகளின் சுழற்சியில் வீழ்ச்சி ஏற்பட்டது. அது பேரரசினுடைய வளங்களின் வீழ்ச்சியைச் சுட்டிக் காட்டுவதாய் உள்ளது.

உலோகவியல்

உலோகவியல்

  • குப்தர்கள் காலத்தில் சுரங்கத் தொழிலும் உலோகத் தொழிலும் செழிப்புற்று விளங்கின.
  • உலோகத் தொழில் வளர்ச்சி பெற்றிருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டு சந்திரகுப்தரால் நிறுவப்பட்ட மெக்ராலி இரும்புத் தூணாகும். டெல்லியிலுள்ள இவ்வொற்றை இரும்புத்தூண் இன்றளவும் துருப் பிடிக்காமல் உள்ளது.
  • குப்தர்களால் பயன்படுத்தப்பட்ட உலோகங்கள்:

இரும்பு, தங்கம், தாமிரம், தகரம், ஈயம், பித்தளை, செம்பு, மணி வெண்கலம், மைக்கா, மாங்கனீசு, சிகப்புச் சுண்ணம் ஆகியவையாகும்.

சமூகம்

குப்தர் காலச் சமூகம் நான்கு வர்ணங்களைக் கொண்ட வர்ணாசிரம முறையில் அமைந்திருந்தது. அது தந்தைவழிச் சமூகமாக இருந்தது. ‘மனு’வின் சட்டங்கள் நடைமுறையில் இருந்தன. அவற்றின்படி பெண்கள், தந்தையின் , கணவனின் அல்லது மூத்த மகனின் பாதுகாப்பில் இருத்தல் வேண்டும். பலதார மணம் பரவலாக நடைமுறையில் இருந்தது. அரசர்களும் நிலப்பிரபுக்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியரைப் பெற்றிருந்தனர். குபேரநாகா, துருபசுவாமினி, ஆகிய இருவரும் இரண்டாம் சந்திரகுப்தரின் அரசியர் எனக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. உடன்கட்டை (சதி) ஏறும் முறை குப்தர்கள் காலத்தில் பின்பற்றப்பட்டது.

அடிமை முறை

இந்தியாவில் அடிமைமுறை மேலைநாடுகளில் இருந்தது போல ஒரு நிறுவனமாக இல்லை. ஆனால் குப்தர்கள் காலத்தில் பல்வகைப்பட்ட அடிமைகள் இருந்ததாகச் சான்றுகள் உணர்த்துகின்றன.

மதம்

வேதம் மதமும் வேதச் சடங்குகளும் புத்துயிர் பெற்று, மீண்டும் நடைமுறைக்கு வந்தன. சமுத்திரகுப்தரும் முதலாம் குமாரகுப்தரும் அஸ்வமேத யாகம் (குதிரைகளைப் பலி கொடுத்துச் செய்யப்படும் வேள்வி) நடத்தினர். குப்தர்கள் காலத்தில்தான் உருவ வழிபாடு தொடங்கியதையும் வைணவம், சைவம் ஆகிய இரு பிரிவுகள் தோன்றியதையும் காண்கிறோம். ஹீனயானம், மகாயானம் எனப் பௌத்தம் இரண்டாகப் பிரிந்தாலும் அது தொடர்ந்து வளர்ந்துவந்தது.

கலையும் கட்டடக்கலையும்

  • கட்டுமானக் கோவில்களை முதன்முதலாகக் கட்டியவர்கள் குப்தர்களே. இது முன்பிருந்த மரபான, பாறைக் குடைவரைக் கோவில்களின் அடுத்த கட்டப் பரிணாம வளர்ச்சியாகும். கோபுரங்களோடும் விரிவான செதுக்குவேலைப்பாடுகளோடும் அனைத்து இந்து தெய்வங்களுக்கும் இக்கோவில்கள் கட்டப்பட்டன.
  • மிகவும் குறிப்பிடத்தக்க பாறைக் குடைவரைக் குகைகள் அஜந்தா, எல்லோரா (மகாராஷ்டிரா), பாக் (மத்தியப் பிரதேசம்), உதயகிரி (ஒடிசா) ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. இக்காலப் பகுதியில் கட்டப்பட்ட கட்டுமானக் கோவில்கள், திராவிட பாணிக் கூறுகளை ஒத்திருக்கின்றன.
  • குப்தர்களின் உலோகச் சிற்பத்திற்கு இரு சிறந்த எடுத்துக்காட்டுகள்: நாளந்தாவிலுள்ள 18 அடி உயரமுள்ள புத்தரின் செப்புச் சிலை. சுல்தான் கஞ்ச் என்னும் இடத்திலுள்ள ஏழரை அடி உயரமுள்ள புத்தரின் உலோகச் சிற்பம்.
  • குப்தர்களின் ஓழியக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்பவை அஜந்தா குகை ஓவியங்களும், குவாலியர் பாக் குகையில் காணப்படும் ஓவியங்களும் ஆகும்.

இலக்கியம்

  • பிராகிருந்தம் மக்களால் பேசப்படும் மொழியாக இருந்தபோதிலும் குப்தர்கள் சமஸ்கிருதத்தை அலுவலகமொழியாகக் கொண்டிருந்தனர். அவர்களின் கல்வெட்டுகள், அனைத்தும் சமஸ்கிருத மொழியிலேயே உள்ளன.
  • குப்தர்கள் காலத்தில் சமஸ்கிருத இலக்கணமும் வளர்ச்சி பெற்றது. அது பாணினி எழுதிய ‘அஷ்டதியாயி’, பதஞ்சலொ எழுதிய ‘மகாபாஷ்யம்’ எனும் நூல்களை அடிப்படையாகக் கொண்டது.
  • வங்காளத்தைச் சேர்ந்த சந்திரோகோமியா எனும் பௌத்த அறிஞர் ‘சந்திர வியாகரணம்’ என்ற இலக்கண நூலை எழுதினார். காளிதாசர் இயற்றிய நாடக நூல்கள், சாகுந்தலம், மாளவிகாக்னிமித்ரம், விக்கிரம ஊர்வசியம் என்பனவாகும்.
  • அவருடைய ஏனைய சிறப்புமிக்க நூல்கள் மேகதூதம், ரகுவம்சம், குமாரசம்பவம், ரிதுசம்காரம் ஆகியனவாகும்.

கணிதம், வானியல் மற்றும் மருத்துவம்

  • பூஜ்ஜியத்தின் கண்டுபிடிப்பும், அதன் பரிணாம வளர்ச்சியாகத் தசம எண் முறையும் குப்தர்கள் நவீன உலகிற்கு விட்டுச்சென்றுள்ள மரபுவழிச் சொத்தாகும்.
  • ஆரியப்பட்டர், வராகமிகிரர், பிரம்ம குப்தர் ஆகியோர் அக்காலப் பகுதியைச் சேர்ந்த மிக முக்கிய கணிதவியல் , வானியல் அறிஞர்கள் ஆவர்.
  • ஆரியபட்டர் தனது நூலான ‘சூரிய சித்தாந்தா’வில் சூரிய, சந்திர கிரகணங்களுக்கான உண்மைக் காரணங்களை விளக்கியுள்ளார். பூமி தனது அச்சில் சுழல்கிறது எனும் உண்மையை அறிவித்த முதல் இந்திய வானியல் ஆய்வாளர் அவரேயாவார்.
  • மருத்துவத் துறையில் புகழ் பெற்ற அறிஞர் தன்வந்திரி ஆவார். அவர் ஆயுர்வேத மரித்துவத்தில் நிபுணராகத் திகழ்ந்தார். சாரக்கர் ஒரு மருத்துவ அறிவியல் அறிஞராவார். சுஸ்ருதர் அறுவைச் சிகிச்சை செய்முறையைப் பற்றி விளக்கிய முதல் இந்தியர் ஆவார்.

வர்த்தன அரச வம்சம்

  • வர்த்தனா அல்லது புஷ்யபூதி அரச வம்சம் தானேஸ்வரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தது. பூஷ்யபூதி குப்தர்களிடம் படைத்தளபதியாகப் பணி செய்தவர்.
  • குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், அவர் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றார். பிரபாகர வர்த்தனர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் புஷ்யபூதி அரச குடும்பம் செல்வாக்கும் வலிமையும் மிக்கதாக மாறியது.
  • பிரபாகர வர்த்தனர் இயற்கை எய்திய பின்னர் அவருடைய மகன் ராஜவர்த்தனர் அரியணை ஏறினார். அவருடைய சகோதரி ராஜ்யஸ்ரீ ஆவார்.
  • ராஜ்யஸ்ரீயின் கணவர் கன்னோசியின் அரசராவார். அவர் வங்காளத்தைச் சேர்ந்த கௌடா வம்ச அரசர் கசாங்கரால் கொல்லப்பட்டார். சசாங்கர் ராஜ்யஸ்ரீயைச் சிறையிலடைத்தான். தன்னுடைய சகோதரியை மீட்கும் முயற்சியின்போது ராஜவர்த்தனன் சசாங்கரால் வஞ்சமாகக் கொல்லப்பட்டார்.
  • இதன் விளைவாக அவருடைய தம்பியான ஹர்ஷவர்த்தனர் தானேஸ்வரத்தின் அரசரானார். கன்னோசியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் ஹர்ஷரை கன்னோசியை ஆளும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள கேட்டுக்கொண்டனர்.
  • இதனால் ஹர்ஷர் தானேஸ்வரம், கன்னோசி ஆகிய இரண்டிற்கும் அரசரானார். இதனைத் தொடர்ந்து, ஹர்ஷர் தனது தலைநகரைத் தானேஸ்வரத்திலிருந்து கன்னோசிக்கு மாற்றினார்.

ஹர்ஷ வர்த்தனரின் படையெடுப்புகள்

  • வர்த்தன அரச வம்சத்தின் புகழ்பெற்ற அரசர் ஹர்ஷவர்த்தனர் ஆவார். ஹர்ஷர் 41 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். ஜலந்தர் , காஷ்மீர், நேபாளம், வல்லபி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குறுநில மன்னர்கள் ஹர்ஷருக்குக் கட்டுப்பட்டவர்கள் ஆவர். வங்காளத்தைச் சேர்ந்த சசாங்கர் தொடர்ந்து பகையுணர்வுடன் நடந்துகொண்டார்.
  • வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை ஹர்ஷரே ஒருங்கிணைத்தார். ஆனால் அவர் தனது ஆட்சி அதிகாரத்தை தென்னிந்தியாவில் பரப்புவதற்கு மேற்கொண்ட முயற்சிகளை, சாளுக்கிய அரசர் இரண்டாம் புலிகேசி தடுத்துநிறுத்தினார். கி.பி. 648இல் ஷர்ஷரின் மறைவோடு அவருடைய அரசு சிதைந்து பல சிற்றரசுகள் ஆனது. ஹர்ஷர் சீனா, ஈரான் ஆகிய நாடுகளின் அரசர்களோடு சுமுகமான உறவைப் பேணினார்.
  • ஹர்ஷர் சீனப்பயணி யுவான் சுவாங்கை முதன்முதலாக ராஜ்மகாலுக்கு (ஜார்கண்ட்) அருகேயுள்ள கஜன்கலா என்ற இடத்தில் சந்தித்தார்.

நிர்வாகம்

நிர்வாகத்தில் அமைச்சர் குழுவொன்று அரசருக்கு உதவியது. அமைச்சரவையில் பிரதம மந்திரி முக்கிய இடத்தை வகித்தார். பாகா, ஹிரண்யா, பாலி ஆகிய மூன்று வரிகள் ஹர்ஷரின் காலத்தில் வசூல் செய்யப்பட்டன. குப்தர்கள் காலத்தைக் காட்டிலும் குற்றவியல் சட்டங்கள் கடுமையாக இருந்தன. சட்டங்களை மீறுவோர்க்கும் அரசருக்கு எதிராகச் சதி செய்வோருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

பேரரசு முழுவதும் சட்டம், ஒழுங்கு பராமரிக்கப்பட்டது. ஷர்ஷர் தனது படைகளின் வலிமை, ஒழுக்கம் ஆகியவற்றின் மீது தனிப்பெரும் கவனம் செலுத்தினார். பயணிகள் தங்கிச் செல்வதற்கும், நோயுற்றோரையும் மற்றும் ஏழைகளையும் கவனித்துக் கொள்வதற்கும் பல தொண்டு நிறுவனங்களை ஹர்ஷர் நிறுவினார்.

மதக் கொள்கை

  • தொடக்கத்தில் ஹர்ஷர் சிவனை வழிபட்டுவந்தார். தன்னுடைய சகோதரி ராஜ்யஸ்ரீ, பௌத்தத் துறவி யுவான் சுவாங் ஆகியோரின் செல்வாக்கின் காரணமாக இவர் பௌத்த மதத்தைத் தழுவினார். இவர் மகாயான பௌத்தத்தைச் சேர்ந்தவர்.
  • ஹர்ஷர் வேத வித்தகர்களையும் பௌத்தத் துறவிகளையும் சரிசமமாகவே நடத்தினார்; அவர்களுக்குச் சரிசமமாகவே கொடை வழங்கினார். இந்தியாவில் பௌத்தத்தைப் பின்பற்றிய கடைசி அரசர் ஹர்ஷரே. பௌத்தரான ஹர்ஷர் உணவுக்கான மிருகங்களைக் கொல்வதைத் தடை செய்தார்.
  • அவர் தன்னுடைய மதச் சகிப்புத்தன்மை கொள்கைக்காக அறியப்பட்டவர். அவர் புத்தர், சிவன், சூரியன் ஆகிய உருவங்களை ஒரே நேரத்தில் வழிபட்டார். இவர் இரண்டு பௌத்தப் பேரவைகளைக் கூட்டினார். ஒன்று கன்னோசியிலும் அடுத்தது பிரயாகையிலும் கூட்டப்பட்டன.
  • ‘புனித யாத்ரீகர்களின் இளவரசன்’ என்றழைக்கப்படும் யுவான் சுவாங், ஹர்ஷரின் ஆட்சியின்போது இந்தியாவுக்கு வந்தார். சி-யூ-கி எனும் அவரது பயணக் குறிப்புகள் அடங்கிய ஆவணங்களின் தொகுப்பு, ஹர்ஷர் காலத்து இந்தியாவின் சமூக பொருளாதார, மத, பண்பாட்டு நிலைகள் குறித்து விரிவான செய்திகளை வழங்குகிறது. ஹர்ஷர் ஒரு பௌத்தராக இருந்தபோதும், பிரயாகையில் நடைபெற்ற மாபெரும் கும்பமேளா விழாவில் கலந்துகொள்ளச் சென்றார் என்று யுவன் சுவாங் குறிப்பிட்டுள்ளார்.

கலை மற்றும் இலக்கியம்

ஹர்ஷரே ஒரு கவிஞரும் நாடக ஆசிரியருமாவார். அவர் சிறந்த கவிஞர்களையும் கலைஞர்களையும் தன்னைச் சூழ்ந்து இருக்கச் செய்தார். அவருடைய புகழ்பெற்ற நூல்கள் ரத்னாவளி, நாகநந்தா, பிரியதர்சிகா ஆகியனவாகும். பானபட்டர், மயூரா, ஹர்தத்தா, ஜெயசேனர் ஆகியோர் அவருடைய அவையை அலங்கரித்தனர்.

கோவில்களும் மடாலயங்களும் கல்விமையங்களாகச் செயல்பட்டன. கன்னோசி புகழ்பெற்ற நகரமானது. ஹர்ஷர் கங்கை நதிக் கரையில் பல விகாரைகளையும் மடாலயங்களையும் ஸ்தூபிகளையும் கட்டினார். ஒரு பல்கலைக்கழகமாகவும் மடாலயமாகவும் செயல்பட்ட நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு யுவான் சுவாங் வந்தபோது 10,000 மாணவர்களும், பௌத்தத் தூறவிகளும் அங்கு தங்கியிருந்து கற்றதாகக் கூறப்படுகிறது.

கன்னோசி பௌத்தப் பேரவையில் 20 அரசர்கள் பங்கேற்றனர். பெரும் எண்ணிக்கையில் பௌத்த, சமண, வேத அறிஞர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர். பௌத்த மடாலயம் ஒன்றில் புத்தரின் தங்கச் சிலையொன்று நிறுவப்பட்டது. புத்தரது மூன்றடி உயரம் கொண்ட வேறொரு சிலை ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.

பிரயாகைப் பேரவையில் ஹர்ஷர் தனது செல்வங்களைப் பௌத்தத் தூறவிகளுக்கும் வேத வித்தகர்களுக்கும் ஏழைகளுக்கும் கொடையாக விநியோகித்தார். நான்கு நாட்கள் நடைபெற்ற அந்த நிகழ்வில் அனைத்து நாட்களி, அவர் பௌத்தத் துறவிகளுக்கு, அளவிடமுடியாத பரிசுகளை அள்ளிக் கொடுத்தார்.

முதலாம் சந்திரகுப்தர், கான்ஸ்டாண்டிநோபிள் நகரை உருவாக்கிய ரோமானியப் பேரரசர் மகா கான்ஸ்டன்டைனின் சமகாலத்தவர் ஆவார்.

ஹர்ஷரின் காலப்பகுதி சீனாவின் தாங் அரசவம்சத்தின் தொடக்க காலப் பகுதியோடு இணைந்து செல்கிறது. சீனர்களின் தலைநகரான சியான் (Xi-an) மாபெரும் கலை மற்றும் கல்விக்கான மையமாகத் திகழ்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!