அரசியல் கொள்கைகள் – பகுதி II Notes 11th Political Science

11th Political Science Lesson 9 Notes In Tamil

அரசியல் கொள்கைகள் – பகுதி II

அறிமுகம்

நாம் முந்தைய பாடத்தில் சில அரசியல் கொள்கைகளைப் படித்தோம். இதர கொள்கைகளைத் தற்பொழுது காண்போம். அரசியல் கொள்கைகள் பகுதி மிகவும் வளமானது ஆகும். பல்வேறு கொள்கைகள் செழித்து வளர்கின்றன. கடந்து 40 ஆண்டுகளாக பல புதிய கொள்கைகளும் தோன்றியுள்ளன.

அமைப்பெதிர்வாதம் (Anarchism)

மனிதனுடைய அடிப்படை குணமாகிய பரஸ்பர ஒத்துழைப்புடன் ஆட்சி முறையை வலியுறுத்தும் அரசியல் கொள்கைக்கு ‘அமைப்பெதிர்வாதம்’ என்பது பெயராகும். இந்த தத்துவத்தின் ஆங்கிலப் பெயர் ‘ANARCHISM’ கிரேக்க மொழி சொல்லான ANARCHOS-இல் இருந்து தோன்றியது. அமைப்பெதிர்வாதம் என்பதுதான் இதன் பொருளாகும். பியரிஜோசப் பிரௌதான் இலாபத்தை திருட்டு என வர்ணித்தார். இத்தத்துவத்தை முதன் முதலில் ஆதரித்தவர்களில், பியரிஜோசப் பிரௌதான் முக்கியமானவர் ஆவார்.

இரஷ்யாவின் சிந்தனையாளரான கிரோபோட்கின், ஃபிரான்ஸ் நாட்டின் அமைதி சிந்தனையாளரான லியோ டால்ஸ்டாய் ஆகியோர் இக்கொள்கையை ஆதரித்தனர்.

எல்லா வகையான அதிகாரங்களையும் அகற்ற வேண்டும் மனிதர்களை, அரசு , தனி சொத்துரிமை, மதம் ஆகியவைகளின் பிடியில் இருந்து விடிவிக்க வேண்டும். மனிதரின் பரஸ்பர ஒத்துழைப்பு குண அடிப்படையில் புதிய முறையை படைக்க வேண்டும் என்று அதிகாரம் இல்லா கொள்கை கூறுகிறது.

அமைப்பெதிர்வாதம் அரசை ஒரு தேவையற்ற தீமையாக கருதுகின்றது. தேவையற்ற தீமையாக கருதுகின்றது. மக்களின் உரிமையை பாதித்து தார்மீக முன்னேற்றத்தைத் தடுப்பதால் அரசு ஒரு தீமையாகும். அரசினால் எந்த பயனும் இல்லை. அது தேவையற்ற ஒன்றாகும். எந்த பணியையும் அது செய்யாததால் அதனை உடனே அழிக்க வேண்டும் என்று இக்கோட்பாடு கூறுகின்றது.

அமைப்பெதிர்

எல்லா வகையான அதிகாரங்களும் தேவையற்றது, விரும்பத்தகாதது. ஆகவே மனிதர்கள் மற்றும் குழுக்களிம் ஒருங்கிணைப்பால் பரஸ்பர ஒத்துழைப்புடன் புதியதோர் சமுதாயத்தை படைக்க வேண்டும்.

அமைப்பெதிர் குழப்பமாகாது அமைப்பெதிர் அராஜகம் ஆகாது.

அமைப்பெதிர் சுய உரிமை கோட்பாட்டின்படி வாழ்க்கையை மேற்கொள்வதாகும்.

அமைப்பெதிர் ஆதரவாளர்கள் எவ்வித விதிவிலக்கும் இல்லாமல் அதிகார அத்துமீறல்களை எதிர்ப்பவர்கள் ஆவர்.

அமைப்பெதிர்வாதம் குழப்பத்தையும் ஒற்றுமையின்மையையும் உருவாகவில்லை. இது ஒழுங்கு மற்றும் ஒற்றுமையை கொண்டுவர முயற்சிக்கின்றது. மனிதர்கள் இயற்கையாகவே கூட்டுறவு சிந்தனை கொண்டவர்கள் ஆவர். பரஸ்பர ஒத்துழைப்பை உடையவர்கள் ஆவர். அரசு என்பது ஒரு செயற்கையான அமைப்பு ஆகும். மனிதனின் ஒத்துழைப்பு குணத்தை அது அழிக்கின்றது. மனிதனின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் பாதிக்கின்றது. ஆகவே அமைப்பெதிர்வாதம் அரசை அழித்துவிட்டு சுய விருப்பம் அடிப்படையில் ஒத்துழைப்பை ஆணி வேராக கொண்ட புதிய சமுதாயத்தை படைக்க வேண்டும் என்று கூறுகின்றது. ஒவ்வொரு ஆணும் பெண்ணும் மகிழ்ச்சியுடன் பொது வாழ்க்கையில் பங்கேற்பார்கள்.

அமைப்பெதிர்வாதம் ஆட்சி இல்லா சமூகத்தை ஆதரிக்கவில்லை. ஆட்சியாளர்கள் இல்லா சமூகத்தைத்தான் ஆதரிக்கின்றது.

அமைப்பெதிர்வாதம் சுய உரிமை மற்றும் சுய நிர்ணயம் ஆகிய கோட்பாடுகளை ஆதரிக்கின்றது. ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் சுய நிர்ணய உரிமையை பெற்றிருக்கிறான். அதைப் போலவே ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தனது உடல் மற்றும் உயிர் மீது உரிமை பெற்று இருக்கிறார்கள். அரசு இந்த இரண்டு கோட்பாடுகளையும் மீறுவதால் நாம் அதை அகற்ற வேண்டும்.

அமைப்பெதிர்வாதம் அரசை மட்டும் அல்ல, குடும்பம் , மதம் ஆகிய சமூக அமைப்புகளையும் எதிர்க்கின்றது. சில தத்துவ ஞானிகள் தனி சொத்துரிமையை எதிர்க்கின்றனர்.

அரசை ஒழிக்க வேண்டும் என்று மார்க்சிசம் கூறுவது போலவே அமைப்பெதிர்வாதம் கூறுகின்றது. இருந்தபோதிலும் மார்க்ஸியத்திற்கும் அமைப்பெதிர்வாதத்திற்கும் வேறுபாடுகள் உள்ளன. அமைப்பெதிர்வாதம் அரசை உடனே அழிக்க வேண்டும் என கூறுகின்றது. ஆனால் மார்க்சியம் சமதர்மவாத சமூகம் தோன்றிய பிறகு தானாகவே அரசு உதிர்ந்து போய்விடும் என்று கூறுகின்றது.

ஜெரார்ட் கசேய் 21-ஆம் நூற்றாண்டில் அமைப்பெதிர்வாதத்தை ஆதரித்தார். அரசை அவர் குற்றவாளி நிறுவனம் என்றி வர்ணித்தார். அரசு இல்லா சமூகங்களைப் புதிதாக உருவாக்க வேண்டும் என்று கூறினார்.

பல வகையான அமைப்பெதிர்வாதம் உட்பிரிவுகள் உள்ளன. தத்துவ அமைப்பெதிர்வாதம், சமதர்ம அமைப்பெதிர்வாதம், புதுத்தாராஅவாத அமைப்பெதிர்வாதம் என்று பல் உட்பிரிவுகளைக் கொண்டுள்ளன. இவற்றிடையே பல வெஏறுபாடுகள் உள்ளன. இவை பெரும்பாலும் அரசை அகற்ற வேண்டும் என்று கூறுகின்றன. ஆனால் புதுத் தாராளவாத அமைப்பெதிர்வாதம் கோட்பாடு, அரசை அகற்ற வேண்டாம், அதனுடைய அதிகாரத்தை குறைத்தால் போதும் என்கின்றது.

பல்வேறு, தத்துவ ஞானிகள் அமைப்பெதிர்வாதக் கொள்கையை விமர்ச்சிக்கிறார்கள். மனிதனின் இயற்கை குணத்திற்கு எதிரானது என்று கூறுகிறார்கள். அதனுடைய கருத்துக்கள் ஆழமற்றவை என்றும் விமர்சிக்கிறார்கள். மனிதனுடைய சுயநல குணத்தை அவர்கள் பார்க்கத் தவறிவிட்டார்கள். எல்லா மனிதர்களும் பரஸ்பர ஒத்துழைப்புடன் இருக்கின்றனர் என்று கூற முடியாது. சந்தர்ப்பங்களால் ஈர்க்கப்பட்டு சுயநலமாக அவர்கள் செயல்படலாம். . அரசு இல்லா சமுதாயம் பல பிரச்சனைகளை தோற்றுவிக்கும். பயங்கரவாதம், வலைதளக் குற்றங்கள், சுற்றுசூழல் மாசுபாடு ஆகியவைகள் மனிதகுலத்தை வாட்டி வதைக்கக்கூடும். அரசு இல்லாவிட்டால் தீவிரவாத குழுக்கள் அணு ஆயுதங்களைக் கைப்பற்றி உலகத்தையே அழித்துவிடுவார்கள்.

 • அதிகாரம் இருக்கும் இடத்தில் விடுதலை இருக்காது. – பீட்டர் கிரோபோட்கின்

பெண்ணியம்

பெண்களும் மனிதர்களே என்ற தீவிர கருத்துக்குப் பெயர் தான் பெண்ணியம்

ஆணிற்கும், பெண்ணிற்கும் உள்ள சமத்துவத்தையும் முழு மனிதத்துவத்தையும் கண்டு கொள்பவர் தான் பெண்ணியவாதி ஆவார்.

 • குளோரிஸ்டீபன்

பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடக்கூடிய இயக்கங்களுக்கும் கொள்கைக்கும் பெண்ணியம் என்பது பெயர் ஆகும். ஆண், பெண் சமத்துவத்தை பெண்ணியம் ஆதரிக்கின்றது. நவீன அரசியல் கோட்பாட்டியலில் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பெண்ணியம் தோன்றியது. அறிவியல் ரீதியாக ஆணும் பெண்ணும் சமம் என்று நிரூபிக்கப்பட்டதால் பெண்ணியம் தோன்றியது.

பல்வேறு பெண்ணிய கொள்கைப் பள்ளிகள், அரசியல் அறிவியலில் காணப்படுகின்றன.

 1. தாராளவாதப் பெண்ணியம்
 2. மார்க்சியவாதப் பெண்ணியம்
 3. தீவிரவாதப் பெண்ணியம்
 4. சுற்றுச்சூழல் பெண்ணியம்
 5. பின் காலனியப் பெண்ணியம்

 1. தாராளவாதப் பெண்ணியம்

முதல் கட்ட பெண்ணியமானது 19-ஆம் நூற்றாண்டில் தோன்றியது. ஆண்களுக்கு நிகரான அரசியல் உரிமைகளைப் பெண்களுக்கும் கோரியது. பெண்கள் அடிமையாக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வாக்குரிமை உள்ளிட்ட அரசியல் உரிமைகள் வழங்கப்பட்டால் பெண்களை ஆண்களுக்கு நிகராக முன்னேற்ற முடியும். அரசு ஆணையும், பெண்ணையும் சமமாக பார்க்கும் ஒரு கருவியாகும். இயற்கையாகவே பெண்களுக்கு எதிரானது அரசு கிடையாது. தாராளவாதப் பெண்ணியம் மேற்கத்திய மக்களாட்சி நாடுகளில் பெண்களுக்கு சமமான வாக்குரிமை பெற்றுத்தந்து மிகப்பெரிய சாதனை செய்தது.

 1. மார்க்சியவாதப் பெண்ணியம்

மனிதர்களிடையே சொத்துரிமை தோன்றியதால் தான் பெண்கள் அடிமையாக்கப்பட்டனர். மனித வரலாற்றின் இரண்டாவது காலகட்டமாகிய பண்டைய கால அடிமை முறையில் தான் தனிசொத்துகள் தோன்றின. காரல் மார்க்சின் நண்பரான பிரெட்ரிக் ஏங்கல்ஸ் “குடும்பம், தனி சொத்துகள் மற்றும் அரசின் தோற்றம்” என்ற நூலை எழுதினார். தனிசொத்துகள் தோன்றிய பிறகு ஆண்கள் ஆதிக்கம் செலுத்தினர், பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டனர் என்று அவர் கூறினார். பொதுவுடைமைவாத புரட்சி வர வேண்டும், புரட்சி மூலம் தொழிலாளர்களும் விடுதலை பெறுவார்கள், பெண் இனமும் விடுதலை பெறும், ஆண்களிடம் தனிசொத்துகள் இருக்காது, செல்வங்கள் எல்லாம் எல்லோருக்கும் பொதுவாக இருக்கும் என்று கூறினார்.

 1. தீவிரவாதப் பெண்ணியம்

பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையில் எந்தவித ஏற்றத்தாழ்வும் கிடையாது. பெண்கள் ஆண்களால் சுரண்டப்படுகிறார்கள், ஏமாற்றப்படுகிறார்கள் என்று தீவிரப் பெண்ணியம் கூறுகிறது.

சைமன் டி பீவர் இரண்டாவது பாலினம் என்ற நூலை எழுதினார். “பெண்கள் பிறப்பது கிடையாது, உருவாக்கப்படுகிறார்கள்” என்ற கருத்தை இவர் வலியுறுத்தினார். பிறக்கும் பொழுது ஆணும், பெண்ணும் சமமான திறமைகளேயே பெற்றிருக்கின்றனர். ஆணாதிக்க சமுதாயமும் , கலாச்சாரமும் பிரச்சாரங்கள் மூலம் பெண்களை அடிமைப்படுத்துகிறது.

ஆணாதிக்கம் இயற்கைக்கும் , நீதிக்கும் எதிராகப் பெண்களை அடிமைப்படுத்துகிறது. உலக முழுவதும் பல்வேறு கலாச்சாரங்கள் பெண்களுக்குப் பலவகையான மதிப்பை வழங்குவது இக்கருத்துக்கு சாட்சி ஆகும்.

ஜரோல் ஹானிஸ்க் புகழ்பெற்ற பெண்ணியவாதி ஆவார். “தனிப்பட்ட வாழ்விலும் அரசியல்” (The Personal is Political) என்று முழங்கினார். ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்துவதை இம்முழக்கம் மூலம் விளக்கினார், மனிதர்களின் வாழ்க்கையை இரண்டு தளங்களில் ஆண்கள் பிரித்திருக்கிறார்கள். தனிவாழ்க்கை மற்றும் பொது வாழ்க்கை. தனிவாழ்க்கை குடும்பம் சம்பந்தப்பட்டதாகும். இங்கு அன்பும், பாசமும் நிறைந்திருக்கும் போட்டி, பொறாமை இருக்காது.

குடும்பத் தளத்தில் பெண்கள் வசிக்கிறார்கள், இங்கு அரசியல் கிடையாது. மாறாக பொது வாழ்க்கையில் போட்டி, பொறாமை நிறைந்திருக்கும். ஆண்கள் இதில் பங்கேற்கிறார்கள். அரசியல் மற்றும் அதிகாரப் போட்டியில் ஆண்கள் ஈடுபடுகின்றனர். இக்கருத்துக்களை கரோல் ஹானிஸ்க் நிராகரிக்கின்றார். பொது வாழ்வில் மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்விலும் போட்டி, பொறாமைகள் உள்ளன. கணவன், மனைவி உறவுகளில் கூட அதிகாரம், போட்டி இருக்கலாம், தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் பெண்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்கள். தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையிலும் அரசியல், அதிகாரத்தை பற்றி பேச வேண்டும். ஆண்களுக்கு இணையான அதிகாரத்தை பெண்கள் பெற வேண்டும். ஆகவே தனிப்பட்ட வாழ்விலும் அரசியல் உள்ளது என்று அவர் கூறினர்.

“பெண் என்பவர் பிறப்பது கிடையாது, உருவாக்கப்படுகிறார்” – சைமன் டி பீவர்

“தனிநபர் வாழ்வென்பதும் அரசியலே” – கரோல் ஹானிஸ்க்

 1. சுற்றுச்சூழல் பெண்ணியம்

இச்சிந்தனை இயற்கையுடன் இணைந்த பெண்ணியக் கருத்தைக் கூறுகிறது. பெண்ணியமும், சூழலியமும் இக்கருத்தில் இணைந்துள்ளன. இயற்கையையும், பெண்களையும் ஆணாதிக்கும் ஏமாற்றுகிறது, சீரழிக்கிறது என்று இக்கோட்பாடு கூறுகிறது.

இரண்டு வகையான சுற்றுசூழல் பெண்ணிய கருத்துகள் உள்ளன. ஒன்று தீவிரப் பெண்ணியம், இரண்டாவது, கலாச்சாரப் பெண்ணியம். தீவிரப் பெண்ணியம் ஆணாதிக்கத்தை அழித்தால் தான் இயற்கையையும், பெண்களையும் காப்பாற்ற முடியும் என்று கூறுகிறது.

கலாச்சாரப் பெண்ணியம் உணவு தயாரிப்பதிலும், இனத்தைப் பெருக்குவதிலும் பெண்கள் இயற்கைக்கும் நெருக்கமானவர்கள் என்று கூறுகிறது. இயற்கை சீரழிவால் ஆண்களை விடப் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மனித வாழ்க்கையில் வேலைப் பங்கீடு முறையால் இயற்கை சீரழியும் பொழுது பெண்களுக்குத்தான் அதிக இன்னல்கள் தோன்றுகின்றன. இயற்கையையும் பெண்களையும் பாதுகாக்க வேண்டும்.

 1. பின் காலனியப் பெண்ணியம்

பின் காலனி ஆதிக்கப் பெண்ணியம் 1980 களில் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் இயக்கமாகவும் , தத்துவமாகவும் தோன்றியது. ஆட்ர லார்டு என்ற பெண்ணியவாதி பின் காலனி ஆதிக்கப் பெண்ணியத்தை தோற்றுவித்தார். ‘நிபுணரின் கருவிகள் நிபுணரின் வீட்டை ஒருபோதும் உடைக்காது” (The Mater’s Tools Will Never Dismantle the Master’s House) என்ற முக்கிய நூலை எழுதினார். காயத்திரி எஸ்பிவாக், சந்தரா தல்பதே மொகந்தி, எதல் க்ராலி ஆகியோர் பின் காலனி ஆதிக்கப் பெண்ணிய வாதிகள் ஆவர்.

ஆட்ரலார்டு கூறினார். “எல்லா பெண்களும் ஒரே மாதிரியான அடக்குமுறையால் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறக்கூடாது. அவ்வாறு நினைத்தால் ஆணாதிக்கத்தின் பல வகையான தன்மைகளை நாம் பார்க்கத் தவறிவிடுவோம். எவ்வாறு ஆணாதிக்க கருவிகள் பயன்படுத்தப்படுகிறது என்ற விழிப்புணர்வு இல்லாமல் பெண்கள் இருப்பார்கள். வெள்ளைக்கார ஆணாதிக்கத்தில் ஆப்பிரிக்க, அமெரிக்கப் பெண்ணாக நான் சந்தித்த சோதனைகள், அனுபவங்கள் தவறாக சித்தரிக்கப்படுகின்றன. சிறுமைப்படுத்தப்படுகின்றன”.

பின் காலனி ஆதிக்கப் பெண்ணியம் மேற்கத்தியப் பெண்ணிய இயக்கங்களின் கருத்துகளை எதிர்க்கிறது. அவர்களின் அனுபவங்களை இலகம் முழுவதும் உள்ள பெண்களின் அனுபவம் என்று சித்தரிப்பதை இது எதிர்க்கிறது, உலகம் முழுவதும் பெண்கள் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. வர்க்கம், இனம், மதம், நாடு போன்ற காரணிகளால் பெண்களிடையே பல வேறுபாடுகள் உள்ளன. மேற்கத்தியப் பெண்ணிய கருத்துக்கள் உலகின் பிற பகுதிகளில் உள்ள பெண்களின் நிலையைப் பிரதிபலிப்பதில்லை. ஆசிய, ஆப்பிரிக்க பெண்கள் மேற்கத்தியக் காலனி ஆதிக்கத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கத்தியப் பெண்ணிய கருத்துக்கள் உலகின் பிற பகுதிகளில் உள்ள பெண்களின் நிலையைப் பிரதிபலிப்பதில்லை. ஆசிய, ஆப்பிரிக்க பெண்கள் மேற்கத்தியக் காலனி ஆதிக்கத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கத்தியக் காலனி ஆதிக்கத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கத்தியப் பெண்ணியவாதிகள் காலனி ஆதிக்கதாக்கத்தை சந்திக்காத்தால் அதனை கவனிக்க தவறுகிறார்கள். அப்பிரிக்கக் கண்டத்தின் பெண்கள் இனவாதம் , அடிமை மூறை கட்டாய குடியேற்றம் போன்ற சோதனைகளை சந்தித்தனர். மேற்கத்தியப் பெண்கள் இவைகளைச் சந்திக்கவில்லை. மேற்கத்தியப் பெண்ணியவாதம் தங்களை படித்த, அரசியல் விழிப்புணர்வு உள்ள , நவீன சக்தி பெற்ற பெண்களாகக் கருதுகிறது. ஆசிய, ஆப்பிரிக்க பெண்களை அதிகாரமில்லாத, விழிப்புணர்வு இல்லாத, செயலற்ற இனமாகக் கருதுகிறது. இது ஒரு தவறான அணுகுமுறையாகும். ஆசிய , ஆப்பிரிக்கப் பெண்கள் காலனி ஆதிக்கம், ஆணாதிக்கம் என்ற இரண்டு சுரண்டல் சக்திகளால் பாதுக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பின் காலனியப் பெண்ணியம் மேற்கத்திய காலனி ஆதிக்கத்தை விமர்ச்சிக்கின்றது. மேலும் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் அரசியல் சிந்தனைகளில் பெண்கள் சந்திக்கும் தனிப்பட்ட பிரச்சனைகள் பற்றி கவனம் செலுத்துவது இல்லை என்றும், பின் காலனியப் பெண்ணியம் கூறுகிறது.

“நாம் பெண்கள் தலைமையில் புவியில் அமைதியான வருங்காலத்தைப் பெறுவோம் அல்லது நமக்கு வருங்காலம் என்ற ஒன்றே இல்லாமல் போகும்:…

 • வந்தனா சிவா

இந்திய அரசின் மகளிர் அதிகாரம் ஏற்றலும்

பெண்ணியம் மட்டும் அல்ல சமீபத்தில் நமது அரசியல் அறிவியக் பாடத்தில் தோன்றிய கோட்பாடுகளெல்லாம் ஆண், பெண் சமத்துவத்தையும் பெண்கள் சக்தி ஏற்றத்தையும் ஆதரிக்கின்றன. இந்திய அரசும் பெண்களின் முன்னேற்றத்திற்காக முக்கிய திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. 73-வது மற்றும் 74-வது அரசியல் சாசன திருத்தச் சட்டங்கள் கிராம, நகர சுய ஆட்சி அமைப்புகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்கியுள்ளன, கடந்த இருபது ஆண்டுகளாக அமலில் இருக்கும் மகளிர் இட ஒதுக்கீடு பெண்களுக்கு முன்னேற்றத்தையும் அரசியல் சக்திகளையு,ம் வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றம் “விஷாகா வழிமுறைகள்” என்ற பாதுகாப்பினை தனது தீர்ப்பின் மூலம் பெண்களுக்கு வழங்கியுள்ளது. பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலின தொந்தரவுகளை தடுப்பதற்கு விஷாகா வழிமுறைகள் முயற்சிக்கின்றன. பாராளுமன்றம் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலின தொந்தரவுகளை தடை செய்து சட்டம் இயற்றி உள்ளது. கப் புகார் குழு மற்றும் தல புகார் குழு ஆகியவைகள் பணியிடங்களில் உருவாக்கப்பட வேண்டும் என்று இச்சட்டம் கூறுகிறது. முன்பாக பாராளுமன்றம் 2005-ஆம் ஆண்டு குடும்ப வன்முறை பெண்கள் பாதுகப்புச் சட்டத்தை இயற்றியது.

முடிவாக பாலின சமத்துவம் மனித குலத்தின் பாதி அளவாக இருக்கின்ற பெண்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். பெண்ணியம் இதற்கு முயற்சிக்கின்றது.

சமுதாயவாதம்

சமுதாயவாதம் ஓர் அரசியல் கோட்பாடாக 1980-களில் தோன்றியது, மைக்கேல் சாண்டர் என்னும் அறிஞர் “ தாராள வாதமும் நீதியின் எல்லைகளும்” (Liberalism and the Limits of Justice) என்ற நூலை எழுதினார்.

1840-களில் ஆங்கிலேய அறிஞரான குட்வின் பார்மி Communitarian (சமூகவாதி) என்ற சொல்லை உருவாக்கினார். இருந்தபோதிலும் சமுதாய வாதம் 20-ஆம் நூற்றாண்டின் இறுதியில் முழு வடிவம் பெற்றது.

சமுதாயவாதம், தாராளவாதத்தையும், மார்க்கிசியத்தையும் எதிர்த்து தோன்றியது. சமுதாயவாதம் , தாராளவாதத்தையும் மார்க்சியத்தையும் எதிர்த்து தோன்றியது. சமுதாயவாதமானது, தாராளவாதம் தனி நபர்களுக்கு அதிக, தேவையற்ற முக்கியத்துவம் வழங்குவதாக குற்றம் சாட்டியது. சமுதாய வாதம் மார்க்சியத்தையும் வகுப்புவாதம் என நிராகரித்தது. தாராளவாதம் உலகில் பெரும் பகுதிகளில் பின்பற்றப்பட்டதால் சமுதாய வாதம் அதனை அதிகாம விமர்சித்தது.

இராபர்ட் டி.புட்னம் என்ற அறிஞர் சமுதாய வாதம் தோன்றுவதில் முக்கிய பங்காற்றினார். பௌலிங் எனப்படும் விளையாட்டை புட்னம் ஆய்வு செய்தார். பல ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பான்மையான அமெரிக்கர்கள் பௌலிங் விளையாடினார்கள். தங்களிடையே சமூக தொடர்புகள், அறிவு, திறமைகள் ஆகியவற்றை வளர்த்துக் கொள்வதற்கு பௌலிங் விளையாட்டை பயன்படுத்திக் கொண்டனர்.

நாளடைவில் தொலைக்காட்சி, வலைத்தளம் போன்ற புதிய வசதிகள், பொழுதுப் போக்கு கருவிகள் தோன்றின, அதிகமாக இந்த புதிய தொழில்நுட்ப பொழுதுப்போக்குகளில் மக்கள் ஆர்வம் செலுத்தினர். பௌலிங் விளையாட்டு மக்களிடையே செல்வாக்கை இழந்தது. மக்களின் சமூக நடவடிக்கைகள், தொடர்புகள் மறையத் தொடங்கின. காலப் போக்கில் அரசியல் ஆர்வமும் மக்களிடையே குறைந்தது. மக்களாட்சியின் வலிமையை குறைக்கும் வகையில் மக்களின் அரசியல் ஆர்வமின்மை பெரிதானது. மக்களாட்சி வலுவாக இருக்க வேண்டும் என்றால் மக்களிடையிலான சமூகத் தொடர்புகள் அதிகமாக வேண்டும்.

சமுதாயத்தின் முக்கியத்துவம்

சமுதாயவாதம் மனிதன் வெற்றிடத்தில் பிறப்பதில்லை என வாதிடுகின்றது. மனிதன் ஒரு கலாச்சார , சமூக விலங்கு ஆகும். மனிதன் குறிப்பிட்ட சமுதாயத்தி; கலாச்சாரத்தில் பிறக்கின்றான். மனிதனுடைய நம்பிக்கை , நடத்தை, திறன்கள், திறமைகள், அணுகுமுறைகள் எல்லாம் அவனுடைய சமுதாயத்தால் உருவாக்கப்படுகிறன. ஒவ்வொரு நபரும் சமுதாயம் வழங்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்கிறார்கள். மனிதன் அணுவைப் போல தனியாக வசிப்பதில்லை,. சமுதாயத்துடன் பின்னிபிணைந்து வாழ்கிறான். மனிதன் சமுதாயத்திலிருந்து முற்றிலும் சுதந்திரமாக தடையில்லாமல் இயங்குவதில்லை (Not unencumbered Self). மாறாக அவன் சமுதாயத்தில் வேரூன்றி இருக்கின்றான் (Situated Self).

எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் பிறக்கும், வசிக்கும் குழந்தை தமிழ் மொழியில் சரளமாக பேசுகின்றது. ஜப்பானில் பிறந்து, வசிக்கும் குழந்தை ஜப்பானிய மொழியில் சரளமாக உரையாடுகின்றது. கணினித் தொழில்நுட்பம் நிறைந்த நாட்டில் வாழும் மனிதர் கணினி நிபுணராக உருவாகிறார். அதே சமயத்தில் தகவல் தொழில்நுட்பம் முன்னேறாத நாடுகளில் வசிக்கும் நபர் அத்துறையில் நிபுணராக பெரும்பாலும் இருப்பதில்லை.

அரசுக் கோட்பாடு

பொது நலனை மேம்படுத்தும் கருவியே அரசு என்று சமுதாயவாதம் கூறுகின்றது. பொது நலன் என்ற கருத்து எல்லா சமுதாயத்திலும் உள்ளது. ஒவ்வொரு சமுதாயமும் நோக்கங்கள், இலச்சியங்கள், நடவடிக்கைகளை எல்லோருடைய அடிப்படை முன்னேற்றத்திற்காக உருவாக்குகின்றன. பொது நலனை மேம்படுத்துவதற்காக இவைகள் தோற்றுவிக்கப்படுகின்றன. அரசு பொது நலனை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபடுகின்றது. பொது நலனை சிதைக்கும் நடவடிக்கைகளை அது தடை செய்கின்றது. மேலும் சமுதாயவாதம் மக்களாட்சி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஆதரிக்கின்றது. சமுதாயத்தின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்கும், சமுதாயத்தின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்கும். சமுதாயத்தின் மீது பொறுப்புணர்வு கொண்ட அரசு தான் நல்ல அரசு என்று சமுதாயவாதம் கூறுகின்றது.

உரிமைகள் கோட்பாடு

உரிமைகளும் கடமைகளும் நெருங்கிய தொடர்புடையவை என்று சமுதாயவாதம் கூறுகின்றது. தாராளவாதத்தின் தனிநபர் சுய ஆட்சி மற்றும் உரிமைகள் மீது கொண்டுள்ள அளவு கடந்த பற்றை சமுதாயவாதம் விமர்சிக்கின்றது. மாறாகச் சமுதாயத்தின் நலன் தான் முக்கியமாகும் என்று கூறுகிறது. சமூக, பொது நலனுக்காகத் தனி நபர் உரிமைகளைக் கட்டுப்படுத்தலாம் என சமுதாயவாதம் வாதிடுகிறது. ஒவ்வொரு மனிதனும் தனது நலன் பற்றிய சிந்தனையைப் பெற்றிருக்கலாம், ஆனால் பொது நலன் என்ற கருத்துக்கு அடிபணிந்து இயங்க வேண்டும்.

‘நேர்மறை உரிமைகள்’ என்ற புதிய கருத்தை சமுதாயவாதம் ஆதரிக்கின்றது. அரசு மானியத்துடன் கல்வி, வீடு வசதி, பாதுகாப்பான சுற்றுச்சூழல், எல்லோருக்கும் சுகாதாரம் போன்ற உரிமைகளை சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் வழங்குவது அரசின் கடமையாகும்.

நீதிக் கருத்து

சமுதாயவாதம் ஜான் ரால்ஸின் நீதிக் கோட்பாட்டை நிராகரிக்கின்றது. நீதி என்பது உலகளாவியது. ஏனென்றால் அது மனிதனில் பகுத்தறிவில் உருவாகிறது என்ற ஜான் ரால்ஸின் கருத்தை சமுதாயவாதம் ஏற்கவில்லை. உலகம் முழுவதும் பொருந்தக் கூடிய நீதிக் கோட்பாடு என்ற ஒன்று இல்லை. ஒவ்வொரு சமுதாயமும் தனக்கென நீதிக் கோட்பாட்டை உருவாக்கிக் கொண்டுள்ளது. சமுதாயத்திற்கு சமுதாயம் நீதிக் கோட்பாடு மாறுபடும் என்று சமுதாயவாதம் கூறுகின்றது.

சுருக்கமாக கூறினால், சமுதாயவாதம் மனிதனின் வாழ்க்கையில் சமுதாயம் இன்றியமையாதது என வாதிடுகின்றது. சமுதாயத்தில் ‘பொருத்தப்பட்ட மற்றும் அமைக்கப்பட்ட மனிதன்’ (Situated and Embedded Man) என்ற கருத்து சமுதாயவாதத்தின் ஆணி வேராக உள்ளது. அரசு மக்களுக்கு நேர்மறை உரிமைகளை வழங்கிப் பொதுநலனை மேம்படுத்த வேண்டும், பாதுகாக்க வேண்டும். ஆனால் சமுதாயவாதம் வருங்காலத்தில் சமூக அல்லது கூட்டு சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும் எனக்கூறி தாராளவாதம் எதிர் விமர்சனம் செய்கிறது.

பின்நவீனத்துவம்

நவீனத்துவத்தை எதிர்த்துத் தோன்றிய ஒருங்கிணைந்த சில கருத்துக்களைப் பின் நவீனத்துவம் என அழைக்கின்றோம். பிரட்ரிக் நீட்சே, ஜாக் டெரிடா, ஃபுகோ, லிடார்ட் ஆகியோர் பின் நவீனத்துவத்தை ஆதரித்தனர்.

நவீனத்துவம் அரசியல் கோட்பாட்டில் ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தி வந்தது. பகுத்தறிவு, பிரபஞ்சத்துவம், ஒற்றைக் காரணி உலக விளக்கமுறை ஆகிய கோட்பாடுகள் நவீனத்துவத்தின் முதுகெலும்பாக இருக்கின்றன. இக்கோட்பாடுகளை பின்நவீனத்துவம் நிராகரிக்கின்றது. மாற்றுச் சிந்தனைகளை வழங்குகின்றது. மேற்கத்திய அரசியல் கோட்பாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு பின் நவீனத்துவம் தோன்றி வளர்ந்துள்ளது.

பிரட்ரிக் நீட்சே, பின் நவீனத்துவத்தின் தந்தையாகக் கருதப்படுகிறார். “கடவுள் இறந்துவிட்டார்” என்பது அவருடைய புகழ்பெற்ற கூற்று ஆகும்.

மனித வாழ்க்கையை விளக்குவதற்கான உன்னத காரணியைத் தேடும் முயற்சியை மனிதர்கள் கைவிட வேண்டும். மனித வாழ்க்கையை விளக்குவது என்பது அவர்களது சக்திக்கு அப்பாற்ப்பட்டது ஆகும்.

நவீனத்துவம் உலகளாவியமுறை, ஒற்றைக்காரணி உலகவிளக்கமுறை ஆகியவற்றை ஆதரிக்கின்றது. பின் நவீனத்துவம் இவைகளை நிராகரிக்கின்றது. ஒரு காரணி மூலம் இந்த உலகத்தை நம்மால் விளக்க முடியாது. ஒரு உன்னத உண்மை அல்லது காரணி உலகத்தை இயக்குகிறது என நாம் கூற முடியாது. காரல் மார்க்ஸ், பிரட்ரிக் ஹெகல் போன்ற தத்துவஞானிகள் கூறியது ஏர்புடையது அல்ல. காரல் மார்க்ஸ் மனித வாழ்க்கையின் அடிப்படைக் காரணி பொருளாதாரம் என்றார். தனிச்சொத்துரிமையை நீக்கி விட்டால் உலகப் பிரச்சனைகளை தீர்த்துவிடலாம் என்று மார்க்ஸ் கூறினார்.

ஜெர்மானிய சிந்தனையாளரான பிரடிர்க் ஹெகல் உலக ஆன்மாவின் உருவாக்கமே உலகம் என்று கூறினார். உலகத்தை ஆன்மா மூலமாக விவரித்தார். பின்நவீனத்துவம் இது தவறு என்று கூறுகிறது. உலகை விளக்குவதற்கு ஒரு காரணி போதாது, பல காரணிகளால் தான் உலகத்தை விளக்க முடியும். கலாச்சாரம், மொழி, மதம், அரசியல் பொருளாதாரம் உள்ளிட்ட பல காரணிகளின் உதவ்வியுடன் தான் உலகத்தை விளக்க முடியும்.

உண்மை ஒருமையில் இருப்பதில்லை, பன்மையில் இருக்கின்றது. எந்த ஒரு விஷயத்திலும் உண்மை என்ற ஒன்று இல்லை, உண்மைகள் தான் உள்ளன. எடுத்துக்காட்டாக , ஒரு தலைவரையோ, வரலாற்று நிகழ்ச்சியையோ நாம் கூறலாம். ஒவ்வொரு தலைவரைப் பற்றியும் பலவித கருத்துக்கள் உள்ளன. ஒருசிலர் அந்தத் தலைவரை தீர்க்கத்தரிசி என்பர்.

இன்னும் சிலர் அவரை வார்த்தை ஜாலம் மட்டுமே உள்ளவர் என்பர். ஒரே தலைவர் நல்லவர், கெட்டவர், தூயவர் , சுயநலவாதி என பலநிலைகளில் விமர்சிக்கப்படுகிறார். பார்ப்பவர் கண்களில் தான் உண்மை இருக்கின்றது. கருப்பு மற்றும் வெள்ளை என்று இரண்டு நிறங்களில் தான் உலகம் உள்ளது எனக் கூற முடியாது. ஒரு கோட்டில் கருப்பும், வெள்ளையும் இரண்டு கடைசி புள்ளிகள் என்றால், இரண்டிற்கும் இடையில் இதர பல நிறங்கள் உள்ளன. இதுபோலத்தான் மனித வாழ்க்கையும் உலகில் உள்ளது.

ஜாக் டெரிடா என்பவர் ஒரு பிரான்சு நாட்டின் தத்துவ ஞானி ஆவார். இவர் பின் நவீனத்துவத்தை ஆதரித்தார். தகர்ப்பமைப்பு அல்லது கட்டுடைத்தல் என்ற அணுகுமுறையை உரைகளின் பொருளைப் புரிந்து கொள்வதற்கு அவர் உருவாக்கினார்.

ஒவ்வொரு உரையிலும், பல பொருள்கள் உள்ளன. மனிதனுடைய மொழி இன்னும் வளர்ச்சி அடையவில்லை. ஆகவே எழுத்தாளர்கள் தங்கள் எல்லாக் கருத்துக்களையும் உரைமூலம் புரியவைக்க முடியது. உரையைப் படிப்பவர்கள் தங்களின் புரிதலுக்குத் தகுந்தவாறு உரையின் பொருளை உருவக்குகிறார்கள். ஒரே உரையில் பல பொருள்கள் உள்ளன. தகர்ப்பமைப்பின் மூலமாகத்தான் உரையைப் புரிந்து கொள்ள முடியும்.

நவீனத்துவத்தின் உலகளாவிய முறையைப் பின்நவீனத்துவம் நிராகரிக்கிண்றது. அதற்கு மாறாக தனித்துவத்தை அது ஆதரிக்கின்றது. ஒரு முழு அமைப்பை விட, அதனுடைய பகுதிகளே முக்கியம் என்று கூறுகின்றது. எடுத்துக்காட்டாக, நவீனத்துவம் உலகம் முழுவதற்கான உரிமைகள் கோட்பாட்டை ஆதரித்தது. பின்நவீனத்துவம் இதனை மறுக்கின்றது. பெண்கள், பழங்குடி மக்கள் போன்ற வஞ்சிக்கப்பட்ட, தனித்துவமான குழுக்களின் , மக்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் தருகின்றது.

நவீனத்துவம் அமைப்பு ரீதியான மாற்றங்களுக்கு முக்கியத்துவம் தருகின்றது. பின்நவீனத்துவம் குறிப்பிட்ட சமூகக் குழுக்களின் மாற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் வழங்குகின்றது.

பின்நவீனத்துவம் அடையாள அரசியலை ஆதரிக்கின்றது. குறிப்பிட்ட நலிவடைந்த எளிமையான சமூகக் குழுக்கள் ஆதிக்க முறைக்கு எதிராக தங்களது ஜாதி, இனம், பாலினம் அடிப்படையில் ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அடையாள அரசியல் என்பது பெயராகும். இந்த குழுக்களின் உறுப்பினர்கள் தங்களை பாசத்துடன் “நாம்” என்று அழைக்கிறார்கள். இவர்கள் எதிர்க்கும் குழுக்களின் உறுப்பினர்களை “அவர்கள்” என்று அழைக்கிறார்கள். குறிப்பிட்ட அடையாளம், இடம் சார்ந்த மக்களின் சக்தி ஏற்றலுக்கு அடையாள அரசியல் முயற்சிக்கின்றது.

பின்நவீனத்துவத்தை பல்வேறு சிந்தனையாளர்களும், அறிஞர்களும் விமர்சித்து உள்ளனர். ஆலன் கிர்பி என்ற பிரிட்டானிய கலாச்சார விமர்சகர் பின் நவீனத்துவம் முடிந்துவிட்டது என்று கூறினார். ஏனென்றால், பின் நவீனத்துவத்தின் கலாச்சார காலம் முடிந்து எண்மின் (Digital) நவீனத்துவம் உருவாகி உள்ளது என்று ஆலன் கிர்பி கூறினார்.

தகர்ப்பமைப்பு என்றால் என்ன?

“வாசிப்பதற்கும், விளக்குவதற்கும், எழுதுவதற்கும் ஆன விதிகள்”. – ஜாக் டெரிடா

உலகில் உண்மைகள் என்று எதுவும் கிடையாது. விளக்கங்கள் மட்டுமே உள்ளன. – பிரட்ரிக் நீட்சே

கடவுள் இறந்துவிட்டார், அவரை நாம் கொன்று விட்டோம். – பிரட்ரிக் நீட்சே

பின்நவீனத்துவம் பொதுவான உண்மை

கிடையாது என்னுடைய, உன்னுடைய

உண்மைகள் மட்டுமே உள்ளன.

கடந்த காலம் கிடையாது, எதிர்காலம் கிடையாது.

நிகழ்காலம் மட்டுமே உள்ளது.

அடிப்படைப் பொருளோ, நோக்கமோ கிடையாது.

என்னுடைய பொருளும், நோக்கமும் மட்டுமே.

சுற்றுச்சூழலியம்

நவீன அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் கொண்டு வந்த முன்னேற்றம் நமது பூமியின் சுற்றுச்சூழலை அழித்து வருகிறது. ஓசோன் அழிதல், பருவ நிலை மாற்றம், அமில மழை போன்ற சுற்றுச்சூழல் பிரச்சனைகள் நம்மை அச்சுறுத்துகின்றன. இயற்கையை அழிக்கும், முன்னேற்றத்திற்கு எதிரான இயக்கம் மற்றும் கொள்கைக்கு சுற்றுச்சூழலியம் என்பது பெயராகும். அகண்ட பிரபஞ்சத்தில் பூமியில் மட்டுமே நாம் வசிக்க முடியும், ஆகவே, பூமியைக் காப்பாற்றுவது அவசியமாகிறது.

 • எல்லோருடைய தேவைகளையும் இயற்கையால் பூர்த்திச் செய்ய முடியும். ஒருவருடைய பேராசையையும் அதனால் பூர்த்தி செய்ய முடியாது.

– மகாத்மா காந்தி

ஆழச் சூழலியல் மற்றும் மேலோட்டமான சூழலியல்

தத்துவ விவாதம்

மனிதனுக்கும், சூழலுக்கும், வளர்ச்சிக்கும், சூழ்நிலைக்கும் இடையில் உள்ள தொடர்புகளைப் பற்றி விரிவான விவாதம் உள்ளது. ஆழச் சூழலியல் _- மேலோட்டமான சூழலியல் என்ற விவாதம் உள்ளது.

மேலோட்டமான சூழலியல்

மனிதனை முன்னிருத்தி, பயனுள்ள கருவியாக இயற்கையை அணுகும் கொள்கைக்கும் மேலோட்டான சூழலியல் என்பது பெயராகும். அமெரிக்கத் தத்துவ ஞானியான அந்தோணி வெஸ்டன் இக்கோட்பாட்டைத் தீவிரமாக ஆதரித்தார். மனிதனுக்கு இந்த உலகில் முதன்மையான இடத்தை இக்கோட்பாடு வழங்குகிறது. இயற்கை மனித நலனுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. எல்லா உயிர்களும் இயற்கைச் செல்வங்களும் மனித வாழ்விற்காக உள்ளன.

மனித முன்னிறுத்தல்

(Anthroprocentricism)

சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு தொழில் நுட்பத் தீர்வுகளை இக்கோட்பாடு ஆதரிக்கின்றது. இயற்கை மாசுபடுவதைத் தடுப்பதற்கு மாற்று எரிசக்திகளை உருவாக்க வேண்டும். இவ்வணுகுமுறை மூன்று கருத்துகளை (R-களை) ஆதரிக்கின்றது.

 1. பயன்பாட்டைக் குறைத்தல் (Reduce)
 2. மறுபயன்பாடு (Reuse)
 3. மறுசுழற்சி (Recycle) ஆகியவைகளாகும்,. இயற்கைச் செல்வங்களை சிக்கனமாக மறுசுழற்சி அடிப்படையில் பயன்படுத்த வேண்டும்.

ஆழச் சூழலியல்

நார்வே நாட்டின் இயற்கைத் தத்துவ ஞானியான ஆர்ன் நேயஸ் (Arne Naess) 1973 ஆம் ஆணு இக்கருத்தை உருவாக்கினார். மகாத்மா காந்தி, ரஸேல் கார்ஸன் ஆகியோரிடமிருந்து இவர் ஊக்கம் பெற்றார். புவிக்கோள் மூன்று அங்கங்களைப் பெற்று இருக்கின்றது. அவைகள்

 1. மனிதர்கள்,
 2. மற்ற உயரினங்கள்
 3. உயிரற்ற பொருட்களும் விடைகளும் ஆகும்.

பூமியில் வாழும் கோடிக்கணக்கான உயிர்களில் மனித இனமும் ஒன்று. மனித இனத்தை முன்னிறுத்துவதை நாம் கைவிட வேண்டும்.

மனிதர் அல்லா உயிரினங்களுக்கும் அடிப்படை மதிப்பு, அடையாளம் ஆகியவை உள்ளன. எல்லா உயரினங்களும் சமமான முக்கியத்துவத்தை (Bio Cenytric Equality) பெற்றிருக்கின்றன. இயற்கையை கவனத்துடன் பயன்படுத்தி மனிதர்கள் வாழ வேண்டும். பல்லுயிர்களைப் பாதுகாக்க வேண்டும். பேராசையால் மனித இனம் பல உயிர்களை அழித்து வருகிறது. உடனடியாக மக்கள் தொகையை இப்பூமியில் கட்டுப்படுத்த வேண்டும். மக்கள் தொகைப் பெருக்கம் சுற்றுச்சூழலை அழிக்கின்றது.

“மனிதர்கள் சுற்றுச்சூழலின் பகுதிகளாவர். வெற்றியாளர்கள் கிடையாது” – ஆல்டோ லெபோல்ட்

சுற்றுச்சூழல் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு நாம் நமது தொழில் நுட்பத் தத்துவம், பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றை உடனடியாக மாற்ற வேண்டும். மனிதர்கள் “இயற்கையான நபர்கள்” ஆவர். நமது நுகர்வுக் கலாச்சாரத்தை மாற்ற வேண்டும். நமது “சூழலியல் தடம்” குறைக்கப்பட வேண்டும். இயற்கையை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். சுற்றுச்சூழல் மீது மனிதர்களின் தாக்கத்தை ஆழமாக, தத்துவமாக விவாதிப்பதால் இந்தக் கொள்கைக்கு ஆழச்சூழலியல் எனப் பெயரிடப்பட்டது.

புவி நமக்குச் சொந்தமானது கிடையாது. நாம் தான் புவிக்கு சொந்தமானவர்கள்.

ஆழச்சூழலியல் – மேலோட்டமான கருத்து முரண்பாடுகள்
ஆழச் சூழலியலின் எட்டு முக்கிய கருத்துகளின் சுருக்கம் மேலோட்டமான சுழலியலின் எட்டு முக்கிய கருத்துகளின் சுருக்கம்
 1. புவியில் உள்ள எல்லா உயிரினங்களும் அடிப்படை மதிப்பை பெற்று இருக்கின்றன.
புவியில் உள்ள அனைத்து உயிரினங்களும் மனிதனின் தேவைக்காக உள்ளன.
 1. இவ்வுலகில் உள்ள எல்லா உயிரினங்களும் (சிறியவையோ, பெரியவையோ) புவியின் சிறப்பு தன்மைக்கு முக்கிய பங்கை ஆற்றுகின்றன.
சிறிய உயிரினங்களை விட மனிதன் போன்ற பெரிய உயிரினங்கள்தான் முக்கியமனவைகள் ஆகும்.
 1. மனிதர்கள் தங்களது அடிப்படை தேவைக்கு மட்டுமே மற்ற உயிரினங்களைப் பயன்படுத்த வேண்டும்.
மனிதர்கள் எல்லா இயற்கை வளங்களையும், உயிரினங்களையும் தங்களது பொருளாதார நலனுக்காக பயன்படுத்தலாம்.
 1. உலகில் மனித மக்கள் தொகையை குறைப்பது மற்ற உயிரினங்களின் நலனுக்கு நல்லது ஆகும்.
மனித மக்கள் தொகை கட்டுப்பாடு இன்றி வளரலாம்.
 1. உலகில் மனிதனின் தலையீடு அதிகமாகவும், மோசமாகவும் உள்ளது.
தொழில் நுட்ப வளர்ச்சி எல்லா சிக்கல்களையும் நீக்கும்.
 1. பொருளாதாரம், தொழில்நுட்பம், கொள்கை ஆகிய துறைகளில் மனிதனின் கொள்கைகள் உடனடியாக , தீவிரமாக மாற்றப்பட வேண்டும்.
பொருளியல் வாதமும், நுகர் கலாச்சாரமும் மனித சமுகத்தை ஆள வேண்டும்.
 1. வாழ்க்கையின் நிலையை விட வாழ்க்கை தரம் முக்கியமானது.
மனிதனின் வாழ்க்கை நிலை உயர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
 1. மேற்கண்ட உண்மைகளை உணர்ந்த அனைவரும் மாற்றத்தை கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் பிரச்சனைகளை நிபுணர்களிடம் விட்டுவிட வேண்டும். அவர்கள் தீர்வுகளை வழங்குவார்கள். மற்றவர்கள் சூழலியப் பிரச்சனைகளில் தலையிட கூடாது.

சூழலியலும் அரசியல் கோட்பாடும்

ஆண்ட்ரு ஹேவுட் என்ற புகழ் பெற்ற அரசியல் அறிஞர் அரசியல் கோட்பாட்டியலில் சூழலியலை மூன்று வகையாகப் பிரித்தார்.

 1. சமூகச் சூழலியல்
 2. நவீனச் சூழலியல்
 3. ஆழச் சூழலியல்

அ) சமூகச் சூழலியல்

அமெரிக்க தத்துவ ஞானி முரே புக்சின் சமூக சூழலியல் என்ற கருத்தை உருவாக்கினார். சமூக சூழலியலில் மூன்று வித அணுகுமுறைகள் உள்ளன.

 1. சூழலிய சமதர்மவாதம்
 2. சூழலிய அமைப்பெதிர்வாதம்
 3. சூழலியப் பெண்ணியம்
 4. சூழைய சமதர்மவாதம்

யூடால்ப் பரோ சூழலிய சோசலிசத்தை ‘சிவப்பில் இருந்து பசுமைக்கு’ (From Red to Green) என்ற நூலில் விவரித்தார். முதலாளித்துவத்தை இயற்கையின் எதிரியாக இந்த அணுகுமுறை பார்க்கின்றது. நுகர் கலாச்சாரத்தின் மூலமாக முதலாளித்துவம் இயற்கையை சீரழித்துவிட்டது. கட்டுப்பாடு இல்லாத சொத்துரிமை புவிக் கோளின் நலத்தையும் வளத்தையும் கெடுத்துவிட்டது. அரசியலில் புதிய அணுகுமுறை வேண்டும். சமதரவாதமும், சூழலியிலும் ஒன்று சேர வேண்டும். சமதர்மவாதம் மட்டுமே சுற்றுச்சூழலைக் காப்பாற்றும். அரசுக்குச் சமதர்மவாத திசையையும், தன்மையையும் வழங்கி இயற்கையைக் காப்பாற்ற வேண்டும்.

 1. சூழலிய அமைப்பெதிர்வாதம்

முரே புக்சின் இந்த அணுகுமுறையை ஆதரித்தார். அதிகாரம் சூழலியலின் எதிரி என்று கூறினார். அரசு, மதம், குடும்பம் போன்ற போர்வையில் அதிகாரம் மனிதர்களை வாட்டிவதைக்கின்றது. மனிதனுடைய பரஸ்பர ஒத்துழைப்பு உணர்வை அதிகாரம் தடை செய்துள்ளது. இயற்கையாகவே மனிதன் பரஸ்பர ஒத்துழைப்புடன் வாழ்பவன் ஆவான். ஆகவே அதிகாரத்தை நீக்கி விட்டு பரஸ்பர ஒத்துழைப்புடன் புதியதோர் சமூகத்தை உருவாக்கி மனிதனையும் இயற்கையையும் காப்பாற்ற வேண்டும்.

 1. சூழலியப் பெண்ணியம்

கரோலின் மெர்சன்ட் ‘இயற்கையின் மரணம்’ (The Death of Nature) என்ற நூலில்ச் சூழலியப் பெண்ணியத்தை விவரித்தார். ஆணாதிக்கம் இயற்கையின் எதிரியாகும். பெண்ணியம் இயற்கையின் தோழி ஆகும். ஆணாதிக்கம் பெண்கள் மீது மட்டும் அல்ல, இயற்கையின் மீதும் ஆணின் ஆதிக்கத்தை உருவக்குகின்றது. பெண்களையும், இயற்கையையும் பயன்பாட்டு பொருளாக பாவிக்கின்றது. பெண்களுக்கும் இயற்கைக்கும் உள்ள அடையாளம், மதிப்பு, உயிர் தன்மை ஆகியவற்றை ஆணாதிக்கம் மதிப்பதில்லை. ஆகவே பாலினச் சமத்துவம் மற்றும் இயற்கை சார்ந்த புதிய அரசியலை நாம் உருவாக்க வேண்டும்.

ஆ) நவீனச் சூழலியல்

மேலோட்டமான சூழலியல் அரசியல் அறிவியலில் நவீன சூழலியலாக அழைக்கப்படுகிறது. தாராளவாதத்திற்கும் , இயற்கைக்கும் இடையில் சுற்றுச்சூழலைக் காப்பதற்காக தாராளவாதத்தைச் சிறிது திருத்தி அமைக்க வேண்டும் என்று நவீன சூழலியல் கூறுகின்றது. “அறிவொளி மனித முன்னிறுத்தல்” என்ற கருத்தை ஆதரிக்கின்றது. அதாவது இந்த புவியின் எதிர்காலத்தையும் மனித குலத்தின் எதிர்காலத்தையும் மனிதில் வைத்து மனிதன் செயல்பட வேண்டும். “தலைமுறைகளுக்கு இடையிலான நீதி” என்ற கருத்தையும் நவீனச் சூழலியல் ஆதரிக்கின்றது. அதாவது இந்த புவியை வருங்கால தலைமூறைகளிடம் இருந்து கடனாகப் பெற்று உள்ளோம். ஆகவே புவியை பாதுகாத்து வருங்காலத்தில் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். “நிலையான முன்னேற்றம்” என்ற கருத்தையும் நவீனச் சூழலியல் ஆதரிக்கின்றது. சீக்கிரமாக பணக்காரர் ஆக வேண்டும் என்பதை விட நிதானமாக பணக்காரர் ஆக வேண்டும். இதற்காக இயற்கையை நிதானமாக பயன்படுத்த வேண்டும் என்று நவீனச் சூழலியல் கூறுகின்றது.

நவீனச் சூழலியல் ஒற்றை தன்மை தத்துவம் கிடையாது. மாறாகப் பன்முகத் தன்மை உடையது ஆகும். சில நவீன சூழலியல் ஆதரவாளர்கள் இயற்கையை காப்பாற்றுவதற்காக “பசுமை சர்வ அதிகார அரசை” உருவாக்க வேண்டும் என்று கூறுகின்றனர். மேலும் சிலர் “பசுமை முதலாளித்துவம்” வேண்டும் என்று கூறுகிறார்கள். பெரும்பான்மையான நவீனச் சூழலியல் ஆதரவாளர்கள் இயற்கையை கப்பாற்றுவதற்கும், நமது தேவையை பூர்த்தி செய்வதற்கும் சந்தை பொருளாதாரத்தை அரசு ஒழுங்குபடுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள்.

இ) ஆழச் சூழலியல்

இயற்கைக்கு சாதகமான புது அரசியல் திட்டம் மற்றும் அரசியல் அணுகுமுறையை ஆழச் சூழலியல் வலியுறுத்துகிறது. அரசியலுக்கும், இயற்கைக்கும் இடையிலான உறவில் அடிப்படை மாற்றத்தை உருவாக்க வேண்டும். மனிதர்கள், பிற உயிரினங்கள் மற்றும் உயிரற்ற பொருட்கள் ஆகியவைகளிடையே உள்ள தொடர்பை மதிக்கும், புரிந்துகொள்ளும், காப்பாற்றும் அரசியல் வேண்டும்.

இந்தியாவின் சுற்றுச்சூழல் இயக்கங்கள்

நவீன முன்னேற்றம் இயற்கையைச் சீரழிப்பதால் பல்வேறு எதிர்ப்பு போராட்டங்கள் உலகம் முழுவதும் தோன்றியுள்ளன. நமது நாட்டிலும் சூழலையும் பல்லுயிர் அமைப்பையும் கப்பாற்றுவதற்காகப் பல சுற்றுச்சூழல் பாதுகப்பு இயக்கங்கள் தோன்றின. அவைகளில் முக்கியமான நான்கு இயக்கங்களை நாம் இங்கு காணலாம்.

அ) பீஸ்நவ் இயக்கம்

ஆ) சிப்கோ இயக்கம்

இ) அப்பிகோ இயக்கம்

ஈ) அமைதிப் பள்ளத்தாக்கு பாதுகப்பு இயக்கம்

அ) பீஸ்நவ் இயக்கம் (Bisnau Movement)

பதினெட்டாவது நூற்றாண்டில் ராஜஸ்தானில் உருவான வெற்றிகரமான சுற்றுச்சூழல் இயக்கமே பீஸ்நவ் இயக்கமாகும். தார் பாலைவனத்தில் குரு ஜம்பேஸ்வர் என்ற ஞானி பீஸ்நவ் என்ற மதக் குழுவை இடைக்கால வரலாற்றில் உருவக்கினார். ‘பீஸ்நவ்” என்ற இந்தி மொழிச் சொல்லிற்கு ‘29’ என்பது பொருளாகும். இயற்கையுடன் ஒன்றி வாழ வேண்டிய வாழ்க்கையை தனது 29 கோட்பாடுகள் மூலமாக இம்மத உட்குழு விவரிப்பதால் பீஸ்நவ் என்று அழைக்கப்பட்டது.

ஜோத்பூர் மகாராஜா பதினெட்டாவது நூற்றாண்டில் ஒரு புதிய அரண்மனையை கட்டினார். கேஜர்லி கிராமத்தில் அரக்க மரம் நிறைந்த காடு உள்ளது. தனது அரண்மனைக்காக மரங்களை வெட்டி வருமாறு இராணுவத்தை அனுப்பினார். அம்ரிதா தேவி என்ற பெண்மணி மரங்களை வெட்டக்கூடாது என்று போராட்டம் செய்தார். மரத்தை வெட்டுவதற்கு பதிலாக தனது தலையை வெட்டுங்கள் என்று கூறினார். இராணுவம் அவரது தலையை தூண்டித்தது. கிராம மக்கள் அனைவரும் வனத்தை காப்பாற்றுவதற்காக தங்களது உயிரைக் கொடுத்தனர். மொத்தம் 363 கிராம உறுப்பினர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். இச்சமவத்தைக் கேள்விப்பட்ட மகாராஜா உடனடியாக தனது இராணுவத்தைத் திரும்ப பெற்றார். அப்பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வனம் என்று அறிவித்தார். பிஸ்நவ் கேஜர்லி இயக்கம் நவீன இந்தியாவின் முதல் வெற்றிகரமான சுற்றுச்சூழல் இயக்கமாகும்.

 • வெட்டப்பட்ட மரத்தைவிட வெட்டுண்ட மனித உயிர் முக்கியமானது அல்ல.

ஆ. சிப்கோ இயக்கம் (Chipko Movement):

உத்தரகண்ட் மாநிலத்தில் 1973-ஆம் ஆண்டு நடைபெற்ற அமைதியான சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கமே சிப்கோ இயக்கமாகும். இந்தியில் ‘சிப்கோ’ என்றால் ‘கட்டிப்பிடி’ என்று பொருள்படும். விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் கம்பெனி, அலக்நந்தா பள்ளத்தாக்கில் மரங்களை வெட்டுவதற்காக அரசு அனுமதி பெற்று வந்தது. மரங்களை வெட்டக்கூடாது என்று அப்பகுதி மக்கள், முக்கியமாக பெண்கள் அமைதியாக போராடினார்கள். ‘தஸோலி கிராம ஸ்வராஜ்ய மண்டல்’ (DGSM) என்ற அரசு சாரா அமைப்பும் அதன் தலைவர் சந்திபிரசாத் பட் அவர்களும் போராடினார்கள்.

புகழ்பெற்ற சுற்றுச் சூழல் வாதியான சுந்தர்லால் பகுகுணா போராட்டத்தில் குதித்தார். பெரும் அளவில் பெண்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். தூம்சிங் நெகி, பச்னி தேவி போன்ற பெண் தலைவர்கள் மக்களின் வன உரிமைக்காக போராடினார்கள். 1980-ஆம் ஆண்டு முதல் இமயமலை வனப்பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு மத்திய அரசு தடைவித்து. பெண்ணியம், காந்தியம், சுற்றுச் சூழலியம் ஆகிய மூன்று கொள்கைகளை சிப்கோ இயக்கத்தில் நாம் காணலாம்.

சுற்றுச்சூழல் தான் நிரந்தர பொருளாதாரம் ஆகும். – சுந்தர்லால் பகுகுணா

இ. அப்பிக்கோ இயக்கம் (Appiko Movement):

மேற்குத் தொடர்ச்சி மலையில், கர்நாடகாவின் உத்திர கன்னட் மாவட்டத்தில் நடைபெற்ற இயக்கமே அப்பிக்கோ இயக்கமாகும். அப்பிகோ என்றால் கன்னட மொழியில் ‘கட்டிக்கோ’ என்று பொருளாகும். இம்மாவட்டத்தில் தொழிற்சாலைகள் பெருகியதால் 1950-ஆம் ஆண்டு 81% இருந்த வனப்பரப்பு 1980-ஆம் ஆண்டு 24% ஆக குறைந்தது. சுற்றுச்சூழல் ஆர்வமுள்ள மக்கள் மரங்களை கட்டி அணைத்து போராட்டம் நடத்தினர். எஞ்சிய காடுகளைக் காப்பாற்றுதல், அழிக்கப்பட்ட காடுகளை உருவாக்குதல், நல்ல முறையில் வளங்களைப் பயன்படுத்தும் விழிப்புணர்வை உருவாக்குதல் ஆகிய மூன்று நோக்கங்களை அப்பிக்கோ இயக்கம் ஆதரித்தது. மரங்களை கட்டி அணைத்துக் காப்பாற்றியதால் அப்பிக்கோ இயக்கம் என்று பெயர் வந்தது.

ஈ. அமைதி பள்ளத்தாக்கு பாதுகாப்பு இயக்கம்

அமைதிப் பள்ளத்தாக்கு என்பது கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் மெஏற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது. பசுமை மாறாக் காடுகள் இங்கு உள்ளன. ஆங்கிலத்தில் Silent Valley (அமைதிப் பள்ளத்தாக்கு) என்று அழைக்கப்படுகிறது. மகாபாரதத்தில் பாண்டவர்களின் மனைவியான திரௌபதிக்கு ‘சைரந்திரி’ என்று மற்றொரு பெயர் உள்ளது. இவ்வனப்பகுதி அவர்களின் நினைவாக சைரந்திரி வனம் என்று அழைக்கப்பட்டது. காலனிய ஆட்சியில் அந்த வனப்பகுதிக்கு ஆங்கிலேயர்கள் சென்றபோது அமைதியான வனமாக அது இருந்தது. வனத்தில் சத்தத்தை தொடர்ச்சியாக உருவாக்கும் சிகாடஸ் பூச்சிகள் அங்கு இல்லாததால் வனம் அமைதியாக இருந்தது என்று ஆங்கிலேயர் அதற்கு அமைதிப் பள்ளத்தாக்கு என்று பெயரிட்டனர்.

அந்தப் பள்ளத்தாக்கில் பல்லுயிர்கள் அதிகம் உள்ளன. சிங்கவால் குரங்குகள் அதிகம் காணப்படுகின்றன. சிங்கவால் குரங்கின் அறிவியல் பெயர் ‘மகாகா சைலேனஸ்’ என்பதாகும். இதனால் தான் அது ‘சைலண்ட் வேலி’ என்று அழைக்கப்படுகிறது என்பதும் ஒரு வாதமாகும். கேரள மாநில மின்சாரத்துறை 1970-களில் மின்சாரம் தயாரிப்பதற்காக அவ்வனத்தில் உள்ள குந்திப்புழா என்ற நதியில் அணைக்கட்டத் தொடங்கியது.

KSSP என்ற ‘கேரள சாஸ்திர சாகித்ய பரிசத்’ அமைப்புச் சுற்றுச்சூழல் போரட்டத்தை இந்த அணைக்கு எதிராக நடத்தியது. அணைகட்டினால் அமைதிப் பள்ளத்தாக்கு அழிந்துவிடும் என்ற பெரிய போராட்டம் நடைபெற்றது. பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் குதித்தனர். ஆகவே 1980-ஆம் ஆண்டு கேரளா மாநில அரசாங்கம் அணைகட்டும் திட்டத்தைக் கைவிட்டது. 1985-ஆம் ஆண்டு மத்திய அரசாங்கம் இப்பகுதியை தேசிய பூங்காவாக அறிவித்தது. பின்னர் இப்பகுதி ‘நீலகிரி உயிர்க்கோல இருப்பாக’ அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதிப் பள்ளத்தாக்கு பாதுகாப்புப் போராட்டம் 20-வது நூற்றாண்டின் மிகச்சிறந்த இந்திய சுற்றுச்சூழல் இயக்கமாக கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *