ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள் Notes 11th History

11th History Lesson 13 Notes in Tamil

13. ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள்

அறிமுகம்

ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி பலருடைய ஆட்சிப்பகுதிகளை வெற்றி கொண்டதும் தங்களது எல்லையை விரிவுபடுத்திக்கொண்டே போனதும் தொடர்ச்சியான பல கிளர்ச்சிகளுக்கு வழிவகுத்தன. அவர்களால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மன்னர்கள் அல்லது அவர்களின் வாரிசுகள், தங்கள் ஆட்சிப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஜமீன்தார்கள், பாளையக்காரர்கள் ஆகியோரால் இத்தகைய கிளர்ச்சிகள் ஏற்பட்டன. வரலாற்றாசிரியர்கள் இதை ஆரம்பநிலை எதிர்ப்பு என்று குறிப்பிடுகிறார்கள். உடைமைகள் பறிக்கப்பட்ட விவசாயிகள், பழங்குடிகள் ஆகியோரின் எழுச்சியும் இத்தகைய கிளர்ச்சிகளையொட்டித் தோன்றின. வேளாண் உறவுகளிலும், சில வருவாய் மூறையிலும், நீதி நிர்வாகத்திலும் ஆங்கிலேயர் செய்த மிக விரைவான மாற்றங்கள் பற்றி முந்தைய பாடம் விரிவாகக் கூறியுள்ளது. இம்மாற்றங்கள் வேளாண் பொருளாதார அமைப்பில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தின. சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த மக்களும் அவதிப்பட்டார்கள். எனவே, மனக்கொதிப்பில் இருந்த இந்திய ஆட்சியாளர்கள் கலகத்தில் இறங்கியபோது, அவர்களுக்கு விவசாயிகள், கைவினைஞர்கள் ஆகியோரின் ஆதரவு இயல்பாகவே கிடைத்தது. அக்காலகட்டத்தில் தென்னிந்தியாவில் நடந்த நிகழ்வுகளும் 1857ஆம் ஆண்டு பெருங்கிளர்ச்சியும் இப்பாடத்தில் விவரிக்கப்படுகின்றன.

மைசூர் சுல்தான்களின் எதிர்ப்பு

ஹைதர் அலியின் எழுச்சி

 • மைசூர், விஜயநகரப் பேரரசின் கீழ் நிலமானிய முறையில் இயங்கிய ஒரு சிறு அரசாக இருந்தது. 1565இல் விஜயநகரப் பேரரசு வீழ்ந்ததற்குப் பிறகு உடையார் வம்சத்தினர் சுதந்திரமான ஆட்சியாளர் ஆயினர்.
 • ராஜா உடையார் 1578இல் அரியணை ஏறினார். 1610இல் தலைநகரம் மைசூரிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணத்திற்கு மாற்றப்பட்டது.
 • அப்போதிருந்து உடையார் வம்சத்தினரின் ஆட்சி 1760 வரை தொடர்ந்தது. 1710இல் தளவாய் அல்லது முதன்மை அமைச்சராக நியமிக்கப்பட்ட ஹைதர் அலி அதிகாரத்தைக் கைப்பற்றும்வரை உடையார்களின் ஆட்சி நீடித்தது.

 • ஹைதர் அலியின் தந்தை ஃபதே முகம்மது கோலார் பகுதியின் கோட்டைக் காவற்படைத் தளபதியாக (பௌஜ்தார்) இருந்தார். அவரது இறப்புக்குப் பின் ஹைதர் அலி தன் தலைமைப்பண்புகள் மூலம் படையின் உயர்பதவிகளை விரைவாக அடைந்தார்.
 • 1755க்குள் அவர் 100 குதிரைப்படை வீரர்களையும் 2000 காலாட்படை வீரர்களையும் நிர்வகிக்கும் அளவுக்கு அதிகாரம் படைத்த பொறுப்பைப் பெற்றிருந்தார். மைசூரில் இராணுவத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியை ஒடுக்கினார். மராத்தியர் ஆக்கிரமித்த மைசூர் அரசின் சில பகுதிகளை ஹைதர் மீட்டெடுத்தார். இதற்காக அவர் ‘ஃபதே ஹைதர் பகதூர்’ (வீரமும் வெற்றியும் கொண்ட சிங்கம்) என்ற பட்டம் பெற்றார்.
 • 1760இல் ஹைதர் ஆங்கிலேயருக்கு எதிராக புதுச்சேரியில் இருந்த பிரெஞ்சுக்காரர்களுடன் கூட்டு சேர்ந்தார். ஆனால் அவர் தனது சொந்த மண்ணில் மராத்தியரால் உருவாக்கப்பட்ட சதித்திட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனினும் ஹைதர் அதை வெற்றிகரமாக முறியடித்தார்.
 • அதற்குப் பிறகு அவரே நடைமுறையில் மைசூரின் உண்மையான ஆட்சியாளர் ஆனார். 1770இல் மைசூர் அரசர் நஞ்சரஜா நஞ்சூட்டிக் கொல்லப்பட்டார். அதில் ஹைதருக்குத் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் கிளம்பியது. இந்த நிகழ்வுக்குப் பிறகு உடையார் வம்ச அரசர்கள் பெயரளவிலான ஆட்சியாளர்களாக ஆயினர். ஹைதரே உண்மையான அரச அதிகாரத்துக்கு உரியவர் ஆனார்.

ஹைதர் அலியும் ஆங்கிலேயரும்

 • கிழக்கிந்தியக் கம்பெனி திவானி உரிமையைப் பெற்ற (வங்காளம், பீகார் , ஒரிசா ஆகியவற்றில் முகலாய அரசுக்குப் பதிலாக வரி வசூலிக்கும் உரிமை) பிறகு, தனது நிர்வாகத்துக்கு உட்பட்ட பகுதிகளைக் கூடுதல் கவனத்துடன் பாதுகாக்க வேண்டியிருந்தது.
 • கம்பெனி போதுமான வலிமையுடன் இல்லாத்ததால் , இந்திய அரசுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்த்து வந்தது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிகாரத்துக்கு உட்பட்ட இடங்களைத் தக்கவைத்துக்கொள்ள இடைப்பட்ட நாடுகளை (buffer states) வாரன் ஹேஸ்டிங்ஸ் சுற்றுவேலிக் கொள்கை மூலம் தொடர்ந்து அனுமதித்தார். எனினும் கம்பெனி கர்நாடக அரசியல் விவகாரங்களினால் ஈர்க்கப்பட்டது.
 • நவாப் பதவிக்காகத் தொடர்ச்சியாக நடைபெற்ற மோதல்களே இதற்குக் காரணம். ஆங்கிலேய வணிகர்கள் இதை இந்திய அரசியலில் நேரடியாகத் தலையிடுவதற்காக ஒரு பெரிய வாய்ப்பாகக் கருதினார்கள். ஆனால் அவர்களின் முயற்சிக்கு ஹைதர் அலி, ஹைதராபாத் நிஜாம் ஆகிய வலிமைமிக்க சக்திகளிடமிருந்து அச்சுறுத்தல்கள் இருந்தன.

முதலாம் மைசூர் போர் 1767 – 69

 • மூன்றாம் கர்நாடகப் போரில் வங்காளத்திலிருந்து படைகளை வழிநடத்திய கர்னல் ஃபோர்டே 1759இல் மசூலிப்பட்டிணத்தைக் கைப்பற்றினார். இது ஜாலாபத் ஜங் உடனான உடன்படிக்கைக்கு வழிவகுத்தது.
 • அவர் ‘வட சர்க்கார்கள்’ என அறியப்படும் கஞ்சம் , விசாகப்பட்டினம், கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் ஆகிய மாவட்டங்களை ஆங்கிலேயருக்கு விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது. வட சர்க்கார்கள் ஆங்கிலேயர் வசம் ஆனதை முகலாயப் பேரரசர் 1765இல் அலகாபாத் உடன்படிக்கை மூலம் அங்கீகரித்தார்.
 • ஆனால் 1766இல் ஆங்கிலேயர் இப்பகுதியைக் கையகப்படுத்தியபோது பிரச்சனை தோன்றியது. இந்தப் பகுதிகளை ஆங்கிலேயர் கையகப்படுத்த நிஜாம் அலி எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க வேண்டும் என்றும் அதற்குப் பதிலாக அவருக்கு எதிரிகளிடமிருந்து ஆபத்து வரும்போது ஆங்கிலேயர் உதவிக்கு வருவார்கள் என்றும் ஓர் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.
 • இந்த வாக்குறுதி மூலம் ஹைதர் அலிக்கு எதிராக நிஜாம் அலிக்கு உதவத் தாங்கள் தயாராக இருப்பதை உணர்த்தினார்கள். ஆங்கிலேயர் பின்னாட்களில் பின்பற்றிய துணைப்படைத்திட்டத்துக்கு இந்நடைமுறை காரணியாக அமைந்தது.
 • நிஜாம் அலி ஆங்கிலேயருடன் உடன்படிக்கை செய்துகொண்டாலும், 1767இல் அவருக்கும் ஹைதர் அலிக்கும் இடையே ஓர் புரிந்துணர்வு உடன்பாடு ஏற்பட்டது. எனவே ஆங்கிலேயர் ஹைதருக்கு எதிரான போரை அறிவித்தார்கள். இது முதலாம் ஆங்கிலேய மைசூர் போர் அல்லது முதலாம் மைசூர் போர் என அறியப்படுகிறது.
 • பம்பாயிலிருந்து வந்த ஆங்கிலேயரின் ஒரு படை மேற்குக்கடற்கரையின் மங்களூரையும் அதைச் சுற்றியிருந்த பிற பகுதிகளையும் கைப்பற்றியது. ஆனால் ஹைதர் இவற்றை மீட்டெடுத்தார். பெங்களூரைக் கைப்பற்ற நினைத்த ஆங்கிலேயரின் முயற்சி வெற்றி பெறவில்லை.
 • 1768இல் ஹைதர் பாராமஹால் (சேலம் மாவட்டம்) மீது திடீர் தாக்குதல் தொடுத்து, கேப்டன் நிக்சனைத் தோற்கடித்துக் கரூரையும் ஈரோட்டையும் கைப்பற்றினார். இதற்கிடையே ஹைதரின் தளபதி ஃபசலுல்லா கான் மதுரையிலும் திருநெல்வேலியிலும் படையை எந்த எதிர்ப்புமின்றிச் சென்றார்.
 • ஆங்கிலேயர் மீதான தாக்குதலை நிறுத்த ஹைதர் விரும்பாவிட்டாலும், மராத்தியர் படையெடுத்து வரக்கூடும் என்ற அச்சுறுத்தல் அவரை ஆங்கிலேயருடன் அமைதி உடன்படிக்கை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளியது.
 • அவருக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட சென்னை உடன்படிக்கையில் இருந்த நிபந்தனைகள் வருமாறு: இரு தரப்பும் கைப்பற்றிய பகுதிகளை அவரவரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
 • கரூர் மட்டும் ஹைதரின் வசம் இருக்கும். தங்களைத் தற்காத்துக்கொள்ள நடைபெறும் போர்களில் இரு தரப்பும் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும். இது மராத்தியருக்கு எதிராக ஆங்கிலேயர் உதவுவதற்கு கடமைப்பட்டவர்கள் என்பதையே குறித்தது.
 • ஆனால் ஹைதருக்கும் மராத்தியருக்கும் எதிரான சண்டையின்போது தேவையான நேரத்தில் ஆங்கிலேயரின் உதவி கிடைக்காததால் ஹைதர் ஆங்கிலேயருக்கு எதிராகத் திரும்பினார்.

இரண்டாம் மைசூர் போரும் (1780) ஹைதரும்

 • அமெரிக்கச் சுதந்திரப்போருக்குப் பிறகு பிரான்ஸ் அமெரிக்காவுடன் நட்பு உடன்படிக்கை (1778) செய்துகொண்டது. எனவே பிரிட்டன் பிரான்ஸுக்கு எதிரான போரை அறிவித்தது. இதைப் போலவே ஸ்பெயினும் அமெரிக்காவுடன் நட்பு உடன்படிக்கை மேற்கொண்டு, இங்கிலாந்துக்கு எதிராகப் போரில் (1779) இறங்கியபோது இங்கிலாந்து தனிமைப்பட்டது.
 • இந்தியாவிலும் பிரெஞ்சுப்படையின் ஆதரவுடன் நிஜாம் அலியும் மராத்தியரும் கைகோத்துச் செயல்பட்ட போக்கு ஆங்கிலேயருக்கு நெருக்கடியை அதிகப்படுத்தியது. ஹைதர் அலி இந்தச் சூழலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள கர்நாடகத்திற்குப் படையெடுத்தார்.
 • ஹெக்டர் மன்றோ தலைமையிலான படையுடன் சேர்ந்து செயல்பட வேண்டிய கர்னல் பெய்லி ஹைதரின் திடீர்த்தாக்குதலில் கடுமையாகக் காயமுற்றர். இது மன்றோவை சென்னை நோக்கிச் செல்ல வைத்தது. ஹைதர் ஆற்காட்டைக் கைப்பற்றினார் (1780).
 • இந்நிலையில் சென்னை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வந்தவாசிப் போரில் வெற்றிபெற்ற அயர்கூட் மதராஸைக் கடல்வழியே முற்றுகையிட வங்காளத்திலிருந்து அனுப்பப்பட்டார்.
 • ஹைதருக்கு எதிராக வெற்றியை ஈட்டிய கூட் புதுச்சேரியை நோக்கி நகர்ந்தார். இதற்கிடையே ஹைதர் தஞ்சாவூர் அரசைத் தன் பிடிக்குள் கொண்டுவந்தார்.. கூட் பரங்கிப்பேட்டையை (Porto Novo) அடைந்து, ஹைதருக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் வெற்றி பெற்றார். ஹைதர் அங்கு நடைபெற்ற மோதலில் ஆங்கிலேயரிடம் பிடிபடுவதிலிருந்து நூலிழையில் தப்பினார்.
 • ஹைதரின் மகன் திப்பு சுல்தான் கர்னல் ப்ரெய்த்வெயிட்டை கும்பகோணம் அருகே தோற்கடித்துச் சிறைபிடித்தார். மைசூர் சுல்தானின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக ஜெனரல் மேத்யூஸ் மங்களூரை நோக்கி ஒரு படையெடுப்பை மேற்கொண்டார். இந்த நடவடிக்கை ஆங்கிலேயர் எதிர்பார்த்தபடி திப்பு சுல்தானைக் கர்நாடகத்தை விட்டு மேற்குக்கடற்கரையை நோக்கி நகர வைத்தது.
 • புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஹைதரின் மரணம் (1782), அமெரிக்கச் சுதந்திரப் போரின் முடிவில் கையெழுத்தான பாரிஸ் உடன்படிக்கை (1783), நீண்ட நாட்களுக்கு நீடித்த மங்களூர் முற்றுகை ஆகிய நிகழ்வுகள் திப்பு சுல்தானுக்கு எதிரான ஆங்கிலேயரின் நடவடிக்கைகளுக்கு வலுச் சேர்ப்பதாக இருந்தன.
 • கர்னல் லேங் கரூரையும் திண்டுக்கல்லையும் கைப்பற்றினார். கர்னல் ஃபுல்லர்ட்டன் பாலக்காட்டையும் கோயம்புத்தூரையும் கைப்பற்றினார். அடுத்ததாக ஸ்ரீரங்கப்பட்டணத்தைக் கைப்பற்றும் நோக்கத்துடன் அவர் முன்னேறி வந்தபோது திப்பு சுல்தான் சமாதானத்துக்கு விருப்பம் தெரிவித்து, முற்றுகையைத் தவிர்த்தார்.
 • 1784 மார்ச் மாதத்தில் மங்களூர் உடன்படிக்கை கையெழுத்தானது. அதன்படி, இரு தரப்பினரும் அதுவரை வென்ற பகுதிகளைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் போரில் கைதானவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

மூன்றாம் மைசூர்போர் 1790 – 92

 • இடைப்பட்ட காலத்தில் கார்ன்வாலிஸ் கவர்னர் ஜெனரல் ஆகப் பொறுப்பேற்றார். அவர் திப்பு சுல்தானைப் பழிவாங்கும் விதத்தில் நடந்துகொண்டார். தெற்கில் இரு மிகப்பெரும் சக்திகளாக விளங்கிய ஹைதராபாத் நிஜாமும் மராத்தியரின் கூட்டமைப்பும் ஆங்கிலேயரின் கூட்டாளிகளாக இதில் செயல்பட்டார்கள்.
 • திப்புவுடனான போருக்குத் தேவைப்பட்ட நிதியாதாரங்களையும் கூடவே தன் படைகளையும் ஹைதராபாத் நிஜாம் ஆங்கிலேயருக்கு வழங்கினார். 1782இல் முதல் ஆங்கிலேய-மராத்தியப் போருக்குப் பின் ஆங்கிலேயருடன் சால்பை உடன்படிக்கை செய்துகொண்ட மராத்தியர் ஆங்கிலேயரை ஆதரித்தார்கள். நிஜாம், மராத்தியர் ஆகிய இரு தரப்பிலிருந்தும் கிடைத்த ஆதரவால் ஆங்கிலேயரின் கை ஓங்கியது.
 • திப்பு கான்ஸ்டாண்டிநோபிளுக்கும் 1787இல் பாரிஸுக்கும் தூதுக்குழுவை அனுப்பினார். ஆங்கிலேயருக்கு எதிராகத் தன்னை வலுப்படுத்திக்கொள்பதற்காகத் திப்பு இந்த இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டார்.
 • பிரெஞ்சு அரசர் பதினாறாம் லூயி தூதுக்குழுவை நட்புறவுடன் நடத்தினாலும், திப்பு எதிர்பார்த்த ஆதரவு குறித்து வெற்று வாக்குறுதியையே அளித்தார்.

 • பிரிட்டனுடன் நட்பு பாராட்டிய திருவிதாங்கூர் மீதான திப்புவின் தாக்குதலும் கொடுங்களூரைக் கைப்பற்றியதும் கம்பெனி அரசுடனான போருக்கான அறிவிப்பாகவே எடுத்துக்கொள்ளப்பட்டன. இவ்வாறு மூன்றாம் ஆங்கிலேய-மைசூர் போர் தொடங்கியது.
 • கர்னல் ஹார்ட்லி திப்புவின் தளபதி ஹுசைன் அலியைக் கள்ளிக்கோட்டையில் தோற்கடித்தார். இதற்குப் பதிலடியாகத் திப்பு திருவண்ணாமலையைக் கைப்பற்றினார்.
 • புதுச்சேரி பிரெஞ்சு ஆளுநரின் ஆதரவைப் பெறுவதற்குத் திப்பு எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை. கவர்னர் ஜெனரலான காரன்வாலீஸ் தானே வேலூரிலிருந்து படையெடுத்து வந்து, பெங்கரூரை அடைத்தார்.
 • வழியில் அவர் திப்புவை எதிர்கொள்ள நேர்ந்தது. ஸ்ரீரங்கப்பட்டணம் அருகே திப்பு தோற்கடிக்கப்பட்டார். படையெடுப்பின்போது தேவைப்படும் பொருட்களின் பற்றாக்குறையால் காரன்வாலிஸ் பின்வாங்க வேண்டியிருந்தது. இந்தத் தருணத்தில் மராத்தியர் ஆங்கிலேயருக்குத் தேவையான பொருட்களை வழங்கினார்கள்.
 • கூடுதல் வலிமை பெற்ற ஆங்கிலேயப்படை ஸ்ரீரங்கப்பட்டணத்தை முற்றுகையிட்டது. அதன் கடுமையான தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் திப்பு அமைதி உடன்படிக்கைக்கு அழைப்பு விடுத்தார். உடன்படிக்கையில் காரன்வாலிஸ் விதித்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டார்.
 • ஸ்ரீரங்கப்பட்டண உடன்படிக்கையின்படி, திப்பு அவருடைய ஆட்சிப்பகுதிகளில் பாதி இடங்களை ஆங்கிலேயருக்குக் கொடுக்க வேண்டும்; போர் இழப்பீடாக மூன்று கோடி ரூபாய் அளிக்க வேண்டும்; அவருடைய மகன்களில் இருவரைப் பிணைக்கைதிகளாக அனுப்பி வைக்க வேண்டும்.
 • திப்புவிடமிருந்து பெறப்பட்ட பகுதிகளும் இழப்பீட்டுத்தொகையும் சமமாகப் பகிருந்துகொள்ளப்பட்டன. ஆங்கிலேயர் மலபார், திண்டுக்கல், பாராமஹால் ஆகிய பகுதிகளைப் பெற்றார்கள். திப்பு குடகுப் பகுதியை இழந்தார்.
 • அதன் அரசர் ஆங்கிலேயருக்குக் கீழ்ப்படிய வேண்டிய சிற்றரசர் ஆனார். திப்புவின் அதிகாரம் பெருமளவுக்குக் குறைக்கப்பட்டது. சென்னையில் பிணைக்கைதிகளாகயிருந்த திப்புவின் மகன்கள் அனைத்து நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட்ட பிறகு ஸ்ரீரங்கப்பட்டணத்துக்கு 1794ஆம் ஆண்டு மே 29 அன்று திருப்பியனுப்பி வைக்கப்பட்டாகள். இந்த உடன்படிக்கை மூலம் ஏற்பட்ட அவமானத்தையும் பொருளாதார இழப்பையும் திப்புவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
 • மைசூர் அரசர் ஒன்பதாம் சாமராஜ் 1796இல் இறந்தார். அடுத்த அரசரை நியமிக்கும் முறையான வழக்கத்தைத் திப்பு பின்பற்றவில்லை. அவர் இந்தத் தீர்மானத்துக்கு வந்த அதே நேரத்தில், பிரெஞ்சு காலனி ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த மொரீஷியஸின் கவர்னர் மாலரிக் ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.
 • பிரான்ஸிடமிருந்து உதவி கிடைத்த பிறகு திப்பு ஆங்கிலேயர் மீதான போர் குறித்த அறிவிப்பார் என்பதே மாலரிக்கின் அறிவிப்பாகும். திப்பு 1798 ஜுலையில் பிரான்சு ஆட்சியை நிர்வகித்த இயக்குநரகத்துடனும் அதற்குப் பிறகு அங்கு ஆட்சியைப் பிடித்த நெப்போலியனுடனும் மேற்கொண்ட கடிதத் தொடர்புகள், அவர் வெல்லெஸ்லியுடனான கடிதத்தொடர்பில் காட்டிய நழுவல் ஆகியவை வெல்லெஸ்ஸியை மீண்டும் திப்புவுக்கு எதிரான போரை அறிவிக்கச் செய்தது.

நான்காம் மைசூர் போர் 1799

 • திப்பு தனது படையையும் நிதியாதாரங்களையும் வலுப்படுத்துவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். 1796இல் பாரிஸுக்கு மீண்டும் தூதர்களை அனுப்பினார்.
 • 1797இல் வருகை புரிந்த பிரெஞ்சுத் தூதுக்குழுவானது மொரிஷியஸிலிருந்து பிரெஞ்சு ஆதரவு கொடுக்கப்படும் என உறுதியளித்தது. பிரான்சில் இருப்பதைப் போல ஸ்ரீரங்கப்பட்டணத்திலும் ஜேக்கோபியர் கழகம் தொடங்கப்பட்டது. மைசூர் சுல்தானுக்கும் பிரெஞ்சு அரசுக்குமான நல்லுறவைத் தெரிவிக்கும் விதத்தில் பிரெஞ்சு குடியரசின் கொடி ஏற்றப்பட்டது.
 • பிரான்சுடன் திப்பு ஏற்படுத்திக்கொண்ட கூட்டணியால் கோபமுற்ற புதிய கவர்கர் ஜெனரலான வெல்லெஸ்லி துணைப்படைத்திட்டத்தின் கீழ் மைசூரில் ஆங்கிலேயப் படை ஒன்றை நிரந்தரமான வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தினார். திப்பு இதை ஏற்கவில்லை.
 • ஆங்கிலேயர் நான்காம் ஆங்கிலேய-மைசூர் போரை 1799இல் அறிவித்தனர். ஜெனரல் டேவிட் பெய்ர்டு ஸ்ரீரங்கப்பட்டணத்தின் மீது திடீர் தாக்குதல் தொடுத்துக் கைப்பற்றினார். அமைதி உடன்படிக்கைக்கான திப்புவின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. இறுதி மோதலில் காயமுற்ற திப்பு ஓர் ஐரோப்பியப் படைவீரனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
 • திப்புவை அகற்றியதும் உடையார் வம்சத்தினரை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியதும் தென்னிந்தியாவில் கம்பெனி ஆட்சியின் உண்மையான தொடக்கமாக அமைந்தன.
 • திப்புவின் மகன்கள் முதலில் வேலூரில் சிறைவைக்கப்பட்டார்கள். 1806இல் வேலூர் கிளர்ச்சிக்குப் பிறகு கல்கத்தாவுக்கு மாற்றப்பட்டார்கள். இவ்வாறு ஆங்கிலேயருக்கு எதிரான மைசூர் சுல்தான்களின் வீரம் செறிந்த மோதல்கள் முடிவுக்கு வந்தன.

தென்னகப் பாளையக்காரர்களின் தொடக்ககால எதிர்ப்பு

பாளையங்களின் தோற்றம்

 • விஜயநகரப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, அரசப்பிரதிநிதியாக மதுரைக்கு வந்த நாகம நாயக்கரும் அவருடைய மகன் விஸ்வநாத நாயக்கரும் மதுரை, திருநெல்வேலி ஆகியவற்றின் சுதந்திரமான ஆட்சியாளர்களாகத் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டனர்.
 • தளவாய் அரியநாத முதலியாரின் திறமையான வழிகாட்டுதலின் கீழ் முன்னாள் பாண்டியப் பேரரசின் அனைத்து சிற்றரசுகளும் வகைப்படுத்தப்பட்டு, 72 பாளையங்களாக மாற்றப்பட்டன.
 • விஸ்வநாத நாயக்கர் மதுரையைச்சுற்றி வலிமை மிகுந்த ஒரு கோட்டையை எழுப்பினார். அதில் 72 அரண்கள் இருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தலைமையின் கீழ் இருந்தன.
 • பாளையக்காரர் அரசருக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகையைக் கப்பமாக்கச் செலுத்துவதற்கும் தேவையானபோது படைவீரர்களை அனுப்புவதற்கும் பாளையத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கும் கடமைப்பட்டவர்.
 • இந்தக் கடமைகளையும் பிற பணிகளையும் செய்வதற்குத் தேவையான நிதியாதாரத்தைப் பெற சில கிராமங்கள் அவருக்கு வழங்கப்பட்டிருந்தன. அக்கிராமங்களில் அவர் வரிவிதித்து நிதி திரட்டினார்.
 • இத்துடன் கூடுதலாகப் பல பட்டங்களும் சிறப்புரிமைகளும் பாளையக்காரர்களுக்கு வழங்கப்பட்டன. பாளையத்துக்கு உட்பட்ட பகுதியில் குடிமையியல் பிரச்சனைகளிலும் குற்றவியல் பிரச்சனைகளிலும் விசாரணை நடத்தி நீதி வழங்கும் அதிகாரமும் அவருக்கு உண்டு.
 • புவியியல் அடிப்படையில் , பரவியிருந்த பாளையங்களை மேற்குப் பாளையங்கள், கிழக்குப் பாளையங்கள் எனப் பிரிக்கலாம். மறவர் குறுநில மன்னர்களிடமிருந்த பாளையங்கள் பெரும்பாலும் திருநெல்பேலியின் மேற்குப்பகுதியில் அமைந்திருந்தன. கிழக்குப் பகுதியில் உள்ள கரிசல் நிலப்பரப்புகளில் தெலுங்கு பேசுவோர் குடியேறியிருந்தார்கள். அவை பாளையக்கார நாயக்கர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன.
 • பாளையக்காரர் முறை 1530களில் தோன்றியது. வாராங்கலை ஆண்டுவந்த காகதிய அரசில் இந்த முறை பின்பற்றப்பட்டு வந்ததாக கருதப்படுகிறது. அரசருக்குத் தேவையானபோது போரில் வீரர்களுடன் பங்கேற்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஒரு பாசறையையும் பெரும் நிலப்பரப்பையும் வைத்திருப்பவரையே பாளையக்காரர் என்ற சொல் குறிக்கிறது. இந்த முறை தோன்றுவதற்கு முன்னால், சேர்வைக்காரர்களும் தலையாரிகளும் காவல் பணிகளுக்காக வரி வசூலித்து வந்தனர். பாளைய முறை அறிமுகமான பிறகு, பாளையக்காரர்கள் சேர்வைக்காரர்கள், தலையாரிகளைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார்கள்.

பாளையக்காரர்களின் கிளர்ச்சி

 • தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிராமங்களை அடகு வைத்து ஏராளமாகக் கடன் வாங்கியிருந்த ஆற்காடு நவாப் அங்கெல்லாம் நிலவரி வசூல்செய்யும் உரிமையை கம்பெனிக்கு அளித்தார். கான் சாகிப் என்று அழைக்கப்பட்ட யூசுப்கான் கிழக்கிந்திய கம்பெனி படையில் இந்திய வீரர்களுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவருக்குப் படைத் தலைமையுடன் வரி வசூலிக்கும் பொறுப்பும் வழங்கப்பட்டது.
 • ஆற்காடு நவாபின் வேண்டுகோளின்படி, 1755இல் அவருக்கு உதவி செய்ய 500 ஐரோப்பியரும் 200 சிப்பாய்களும் அடங்கிய படை மதுரை, திருநெல்வேலி பகுதிகளுக்குள் நுழைய உத்தரவிடப்பட்டது. பாளையக்காரர்களின் அதிகாரத்தில் கம்பெனி நிர்வாகத்தின் குறுக்கீடு கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தியது.
 • மாபுஸ்கான் (ஆற்காடு நவாபின் மூத்த அண்ணன்) இந்தப் பகுதிகளில் நவாபின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். மாபுஸ்கான் கர்னல் ஹெரானுடன் திருநெல்வேலிக்குப் படயெடுத்துச் சென்றார். அவர்கள் மதுரையை எளிதாகக் கைப்பற்றினர்.
 • பாஞ்சாலக்குறிச்சி பாளையத்தை ஆட்சி செய்த கட்டபொம்மனின் அதிகாரத்தைக் குறைப்பதற்காகச் சிறப்புக்குழு அனுப்பி வைக்கப்பட்டு, பிறகு அது திரும்ப வரவழைக்கப்பட்டது.
 • ஹெரான் ஊர் திரும்பும் வழியில் நெற்கட்டும் செவல் கோட்டை மீது திடீர் தாக்குதல் தொடுக்க உத்தரவு வந்தது. அந்தப் பாளையத்தை ஆட்சி செய்த புலித்தேவர் மேற்குப் பாளையக்காரர்களிடையே பெரும் செல்வாக்கு பெற்றிருந்தார்.
 • பீரங்கி உள்ளிட்டவற்றின் பற்றாக்குறை, படைவீரர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டிய தேவை ஆகிய காரணங்களால் ஹெரானின் தக்குதல் கைவிடப்பட்டது. அவரது படை மதுரைக்குத் திரும்பியது.
 • நவாப் சந்தா சாகிப்பின் பிரதிநிதிகளான மியானா , முடிமய்யா, நபிகான் கட்டக் ஆகிய பதான் இனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மதுரையையும் திருநெல்வேலியையும் கண்காணித்து வந்தனர். அவர்கள் ஆற்காடு நவாப் முகமது அலிக்கு எதிராகத் தமிழ்ப் பாளையக்காரர்களை ஆதரித்தனர்.
 • அவர்களுடன் புலித்தேவருக்கு நெருக்கமான உறவு இருந்தது. ஊற்றுமலை, சுரண்டை, தலைவன்கோட்டை, நடுவக்குறிச்சி, சிங்கம்பட்டி, ஊர்க்காடு, சேத்தூர், கொல்லம்கொண்டான், வடகரை ஆகிய பாளையங்களின் ஆட்சியாளர்களும் புலித்தேவரின் கூட்டமைப்பில் சேர்ந்த்தனர்.
 • திருவிதாங்கூருக்குக் களக்காடு திரும்பத் தரப்படும் என்ற வாக்கூறுதி மூலமாகப் புலித்தேவர் திருவிதாங்கூரின் ஆட்சியாளரையும் தன் கூட்டமைப்பில் சேர்த்திருந்தார்.
 • இன்னொரு பக்கம் ஆற்காடு நவாப் மாபுஸ்கானுக்குக் கூடுதல் படைப்பிரிவை அனுப்பினார். நவாபின் வலுப்படுத்தப்பட்ட படை திருநெல்வேலியை நோக்கிப் பயணித்தது.
 • கம்பெனியைச் சேர்ந்த 1000 வீரர்களுடன், நவாப் மூலம் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்ட 600 வீரர்களும் இப்போது மாபுஸ்கானிடம் இருந்தார்கள். கூடவே, கர்நாடகத்திலிருந்து குதிரைப்படையினரும், காலாட்படை வீரர்களும் வந்ததால் மாபுஸ்கானின் படைபலம் அதிகரித்தது.
 • அவர் தன் படையினரைக் களக்காட்டுக்கு அருகே நிறுத்திவைப்பதற்கு முன்பே திருவிதாங்கூரிலிருந்து வந்த 2000 வீரர்கள் புலித்தேவர் படையுடன் சேர்ந்துகொண்டார்கள். களக்காட்டில் நடைபெற்ற போரில் மாபுஸ்கானின் படை தோற்றது.
 • புலித்தேவரும் பிற பாளையக்காரர்களும் கூட்டாக, சிறப்பான திட்டமிடலுடன் காட்டிய எதிர்ப்பு ஆங்கிலேயரைத் திருநெல்வேலி விவகாரங்களில் நேரடியாகத் தலையிட வைத்தது.
 • 1756இலிருந்து 1763 வரைக்கும், திருவிதாங்கூரிலிருந்து கிடைத்த சீரான ஆதரவுடன், புலித்தேவர் தலைமையிலான பாளையக்காரர்கள் ஆற்காடு நவாபுக்கு எதிரான கிளர்ச்சியில் நீடித்து நின்றார்கள்.
 • கம்பெனியால் அனுப்பப்பட்ட யூசுப் கான் திருச்சிராப்பள்ளியிலிருந்து பீரங்கிகளும் வெடிமருந்துகளும் வந்துசேரும் வரை புலித்தேவரைத் தாக்கத் துணியவில்லை. பிரெஞ்சுக்காரர், ஹைதர் அலி, மராத்தியர் ஆகியோருடன் ஆங்கிலேயர் போர்களில் ஈடுபட்டுவந்ததால், 1760 செப்டம்பரில் தான் பீரங்கிகள் வந்துசேர்ந்தன.
 • யூசுப் கான் நெற்கட்டும் செவல் கோட்டையை இடிக்கும் நோக்கத்துடன் தாக்குதலை நடத்தினார். இது ஏறத்தாழ இரு மாதங்கள் நீடித்தது. 1761மே 16இல் நெற்கட்டும் செவல், வாசுதேவநல்கூர், பனையூர் ஆகிய இடங்களில் இருந்த முக்கியமான கோட்டைகள் யூசுப் கான் வசமாயின,
 • புதுச்சேரியை ஆங்கிலேயர் கைப்பற்றியதால் பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து உதவிகள் வரமுடியாத காரணத்தால், பாளையக்காரர்களின் ஒற்றுமை குலையத் தொடங்கியது.
 • திருவிதாங்கூர், சேத்தூர், ஊற்றுமலை, சுரண்டை ஆகிய பாளையங்களைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலேய அணிக்கு மாறினர். கம்பெனி நிர்வாகத்துக்குத் தெரிவிக்காமல் பாளையக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த யூசுப் கான் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, 1764இல் தூக்கிலிடப்பட்டார்.
 • கோட்டைகளை யூசூப் கான் கைப்பற்றிய பிறகு, எங்கோ தஞ்சம் புகுந்த புலித்தேவர் தனது பாளையத்துக்குத் திரும்பி, மீண்டும் ஆங்கிலேயருக்கு எதிராகப் பாளையக்காரர்களைத் திரட்டத் தொடங்கினார்.
 • இம்முறை ஆங்கிலேயர் அனுப்பிய கேப்டம் கேம்பெல் நெற்கட்டும் செவல் கோட்டையை முற்றுகையிட்டு 1767இல் கைப்பற்றினார். புலித்தேவரின் இறுதிநாட்கள் குறித்த உறுதியான செய்திகள் கிடைக்கப்பெறவில்லை.
 • யூசுப் கானின் இயற்பெயர் மருதநாயகம். அவர் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். புதுச்சேரியில் இருந்தபோது, இசுலாம் சமயத்தைத் தழுவினார். 1752இல் கிளைவ் தலைமையிலான கம்பெனிப் படையில் சேர்ந்த யூசுப் கான் 1752 – 54இல் நடைபெற்ற திருச்சிராப்பள்ளி முற்றுகையில் பங்கேற்றார். ஆற்காடு நவாபுக்குச் சொந்தமானதாக இருந்தாலும், கம்பெனி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு 1756 முதல் 1761 வரை ஆளுநராகப் பொறுப்பு வகித்தார். யூசுப்கான் ஹைதர் அலியைத் தோற்கடித்து, சோழவந்தானைக் கைப்பற்றினார். லாலியின் மதராஸ் முற்றுகை (1758 – 59) யின்போது யூசுப்கானின் பங்களிப்பு சிறப்பானதாக இருந்தது. அவர் நிர்வாகப்பொறுப்பில் இருந்தபோது மதுரையில் நெசவுத்தொழிலை ஊக்குவித்தார். மதுரை கோயில்களில் வழிபாடு நடத்துவதற்குக் குறிப்பிட்ட தொகையை வழங்கினார். மதகுருக்கள் வசமிருந்த கோயில் நிலங்களை மீட்டெடுத்தார். ஆங்கிலேயர் அவரை ஆற்காடு நவாபுக்கு பணிசெய்ய ஆணையிட்டதால், அவர் கிளர்ச்சியில் இறங்கினார்.

வேலு நாச்சியார்

 • இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களாக இன்று அறியப்படும் பகுதியைச் சேதுபதி மன்னர்கள் ஆட்சி செலுத்தினர். வேலு நாச்சியார் இராமநாதபுரம் அரசரான செல்லமுத்து சேதுபதியின் மகள் ஆவார். அவர் சிவகங்கை அரசரான முத்துவடுகர் பெரியஉடையாரை மணந்தார். அவர்களுக்கு வெள்ளச்சி நாச்சியர் என்ற மகள் இருந்தார்.
 • வேலு நாச்சியாரின் கணவர் நவாபின் படைகளால் கொல்லப்பட்டதும், அவர் தன் மகளுடன் தப்பித்து, திண்டுக்கல் அருகே விருப்பாச்சியில் ஹைதர் அலியின் பாதுகாப்பில் எட்டு ஆண்டு காலம் இருந்தார். இக்காலகட்டத்தில் வேலு நாச்சியார் ஒரு படையைக் கட்டமைத்தார்.
 • ஆங்கிலேயரைத் தாக்கும் நோக்கத்துடன் கோபால நாயக்கர், ஹைதர் அலி ஆகியோருடன் கூட்டணி அமைத்தார். 1780இல் இவ்விருவரின் துணையோடு ஆங்கிலேயருடன் போரிட்டு வென்றார்.
 • ஆற்காடு நவாப் வேலு நாச்சியாருடைய படை முன்னேறி வருவதைத் தடுக்கப் பல தடைகளை ஏற்படுத்தினார். எனினும் நாட்டியார் அனைத்துத் தடைகளையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு சிவகங்கைக்குள் நுழைந்தார்.
 • ஆற்காடு நவாப் தோற்கடிக்கப்பட்டு, சிறைவைக்கப்பட்டார். சிவகங்கையை மீண்டும் கைப்பற்றிய நாச்சியார் மருது சகோதரர்களின் துணையுடன் இராணியாக முடிசூடினார்.
 • சின்ன மருது நாச்சியாரின் ஆலோசகராகவும் பெரிய மருது படைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டனர். 1783இல் ஆங்கிலேயர் சிவகங்கைக்கு மீண்டும் படையெடுத்து வந்தனர்.
 • இம்முறை மருது பாண்டியர் சில இராஜதந்திர நடவடிக்கைகளால் சிவகங்கையின் பாதுகாப்பை உறுதிசெய்தனர். பிற்காலத்தில் ஆங்கிலேயரின் சமரச உடன்பாட்டின்படி வேங்கண் பெரிய உடைய தேவர் சிவகங்கை அரசர் ஆனார். 1790இல் இவருக்கு மணம் முடித்துவைக்கப்பட்ட வெள்ளச்சி நாச்சியார் சந்தேகத்துக்கிடமான முறையில் இறந்தார். வேலு நாச்சியார் நோயுற்று 1796இல் இறந்தார்.
 • வேலு நாச்சியார் ஒரு பெண்கள் படையை உருவாக்கியிருந்தார். அவர் ஆங்கிலேயரின் வெடிமருந்துக்கிடங்குகளைக் கண்டுபிடிப்பதற்குத் தன் உளவாளிகளைப் பயன்படுத்தினார். நாச்சியாரின் படையில் இருந்த குயிலி தன் மீது நெருப்பு வைத்துக்கொண்டு, ஆங்கிலேயரின் வெடிமருந்து கிடங்கில் நுழைந்து அதை அழித்தார். நாச்சியாரின் படையிலிருந்த இன்னொரு உளவாளி அவரால் தத்தெடுக்கப்பட்ட உடையாள் ஆவார். இவர் ஆங்கிலேயரின் ஓர் ஆயுதக்கிடங்கை வெடிக்கச் செய்வதற்காகத் தன்னையே அழித்துக்கொண்டார்.

வீரபாண்டிய கட்டபொம்மன்

 • வேலு நாச்சியார் இராமநாதபுரத்திலும் சிவகங்கையிலும் ஆங்கிலேயருக்கு சவாலாக இருந்தபோது, வீரபாண்டிய கட்டபொம்மனின் எதிர்ப்பு வளர்ந்துகொண்டிருந்தது. கட்டபொம்மன் ஓட்டப்பிடாரத்துக்கு அருகில் உள்ள பாஞ்சாலங்குறிச்சியை ஆட்சி செய்த பாளைக்காரர் ஆவார்.
 • கட்டபொம்மன் நாயக்கர் என்பது அவரது குடும்பப் பட்டமாகும். கட்டபொம்மனின் தாத்தா ஜெகவீர கட்டபொம்மன் கர்னல் ஹெரான் காலத்தில் குறுநிலமன்னராக இருந்தார். 1760.இல் பிறந்த வீரபாண்டிய கட்டபொம்மன் தனது தந்தையின் இறப்புக்குப் பின் பாஞ்சாலங்குறிச்சி பாளையத்துக்குப் பொறுப்பேற்றார். கம்பெனிக்கும் தென்சீமை பாளையத்தாருக்கும் தொடர்ந்து மோதல் இருந்ததால், கம்பெனிக்கு அவர்கள் கப்பம் செலுத்துவது ஒரு பிரச்சனையாகவே நீடித்தது.
 • 1798 செப்டம்பர் மாதத்துக்கான கப்பமும் செலுத்தப்படாததால், கலெக்டர் ஜாக்சன் அவருக்கே உரிய ஆணவத்துடன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்குக் கடிதம் அனுப்பினார்.
 • நாட்டில் கடுமையான வறட்சி ஏற்பட்டதால் வரி வசூலிப்பது மிகக்கடினமான வேலை ஆனது. கலெக்டர் ஜாக்சன் வீரபாண்டிய கட்டபொம்மனைத் தண்டிக்கும் நோக்குடன் ஒரு படையை அனுப்ப விரும்பினாலும், சென்னை நிர்வாகம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
 • திருநெல்வேலியிருந்த படைவீரர்களை மைசூரில் திப்பு சுல்தானுக்கு எதிராகப் போரிடுவதற்காகக் கம்பெனி ஏற்கனவே அனுப்பியிருந்தது. இந்த நிலையில் மிகவும் தொலைவிலிருந்த தெற்குப்பகுதியில் போர் செய்வது ஆபத்து எனக் கம்பெனி கருதியது. அது பிரச்சனையில் தொடர்புடைய பாளையக்காரரை இராமநாதபுரத்துக்கு வரவழைத்து, கலந்தாலோசனை செய்யும்படி கலெக்டருக்கு உத்தரவிட்டது. அதன்படி, 1798 ஆகஸ்ட் 18 அன்று ஜாக்சன் இரு வாரங்களுக்குள் தன்னை இராமநாதபுரத்துக்கு வந்து சந்திக்கும்படி வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உத்தரவு பிறப்பித்துவிட்டு, திருநெல்வேலி சுற்றுப்பயணத்தைத் துவக்கினார். பாளையக்காரர்களிடமிருந்து கப்பம் வசூலிப்பதற்காகச் சொக்கம்பட்டி, சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகிய இடங்களில் அவர் தங்கியிருந்தபோது வீரபாண்டியக் கட்டப்பொம்மன் அவரைச் சந்திக்க முயன்றார். ஆனால் இராமநாதபுரத்தில்தான் கலெக்டரைச் சந்திக்க முடியும் என அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.
 • இந்த அவமதிப்பையும் மீறி, கட்டபொம்மன் 23 நாட்களில் 400மைல் தூரம் கலெக்டரைச் சளைக்காமல் பின்தொடர்ந்து, செப்டம்பர் 19ஆம் நாள் இராமநாதபுரத்தை அடைந்தார்.
 • கலெக்டரைச் சந்திப்பதற்கான வாய்ப்பு அன்றே தரப்பட்டது. கட்டபொம்மன் சரியாக நடந்துகொண்டதாகவும் இதன் மூலம் அவர் தன்னை அழிவிலிருந்து காத்துக்கொண்டதாகவும் ஜாக்சன் திருப்தியுடன் கூறினார்.
 • கட்டபொம்மன் கம்பெனிக்குச் செலுத்த வேண்டிய கப்பத்தொகையில் பெரும்பகுதியைச் செலுத்திவிட்டதையும் 1080 வராகன் மட்டுமே பாக்கி இருப்பதையும் கணக்குகளைச் சரிபார்த்து அவர் அறிந்துகொண்டாட்.
 • இந்தச் சந்திப்பின்போது ஆணவக்குணம் கொண்ட ஜாக்சன் முன்னால் கட்டபொம்மனும் அவருடைய அமைச்சர் சிவசுப்பிரமணிய பிள்ளையும் நின்றபடி உரையாட வேண்டியிருந்தது.
 • சந்திப்பின் இறுதியில் ஜாக்சன் இருவரையும் இராமநாதபுரம் கோட்டையில் தங்கும்படி கூறினார். அங்கி திடீரென வந்த வீரர்கள் கட்டபொம்மனைக் கைது செய்யவே வந்திருந்தார்கள் என்பது வெளிப்படையாகவே தெரிந்தது.
 • கட்டபொம்மனும் அமைச்சரும் தப்ப முயன்றனர். கோட்டைவாசலில் நடந்த மோதலில் லெப்டினெண்ட் க்ளார்க் உள்ளிட்ட சிலர் கொல்லப்பட்டார்கள். சிவசுப்பிரமணிய பிள்ளை கைது செய்யப்பட்டார். கட்டபொம்மன் மட்டுமே தப்ப முடிந்தது.
 • பாஞ்சாலங்குறிச்சிக்குத் திரும்பிய கட்டபொம்மன் தன்னிடம் ஜாக்சன் நடந்துகொண்ட முறையே இராமநாதபுரத்தில் நடந்த மோதலுக்குக் காரணம் என்று சென்னை கவுன்சிலுக்குக் கடிதம் அனுப்பினார்.
 • இதற்கிடையே ஆளுநர் எட்வர்டு கிளைவ் கம்பெனி நிர்வாகத்திடம் கட்டபொம்மன் சரணடையும்படி அறிசிப்பு வெளியிட்டார். இவ்வாறு கட்டபொம்மன் சரணடைந்தால் நேர்மையான விசாரணை நடைபெறும் என்றும் இதற்கு உடன்படாவிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
 • அதன்படி, கட்டபொம்மன் கம்பெனி விசாரணைக்குழுவிடம்நேரில் சென்று விளக்கம் அளித்தார். கலகக் குற்றச்சாட்டுகளிலிருந்து கட்டபொம்மனை விடுவிடுத்த குழு, கலெக்டர் நடந்துகொண்ட விதத்துக்காக அவரைக் கண்டித்தது. லூஷிங்டன் புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டார். இறுதியில் ஜாக்சன் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
 • எனினும் கட்டபொம்மன் தனது பிரச்சனை இன்னும் தீரவில்லை என்ற கொதிப்புடந்தான் இருந்தார். இந்தச் சூழலில் மருது பாண்டியர்கள் திண்டுக்கல் கோபால நாயக்கருடன் ஆனைமலை யாதுல் நாயக்கருடனும் இணைந்து ஆங்கிலேயருக்கு எதிரான கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் இருந்தார்கள். இதே விருப்பத்துடன் இருந்த கட்ட்பொம்மனும் மருது பாண்டியரும் நெருக்கமானார்கள்.
 • கட்டபொம்மன் சிவகிரி பாளையக்காரருடனும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். பாஞ்சாலங்குறிச்சி திறந்த சமவெளிப்பகுதியில் எளிதாகத் தாக்குதலுக்குள்ளாகும் வித்ததில் அமைந்திருந்தது.
 • சிவகிரிக்கோட்டை மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் வலுவான அரண்களுடன் மிகப் பாதுகாப்பாக தாக்குதல், எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளுதல் ஆகிய இரு நடவடிக்கைகளுக்கும் பொருத்தமானதாக இருந்தது.
 • கட்டபொம்மனின் நிலையைப் பலப்படுத்துவதற்காகச் சிவகிரி பாளையக்காரரின் மகன் வீரபாண்டியன் தன் வீரர்களுடன் கூட்டணியில் இருந்த பிற தலைவர்களுடனும் தளவாய் குமாரசாமி நாயக்கரின் தலைமையில் மேற்கு நோக்கி அணிவகுத்துச் சென்றார்.
 • சிவகிரிபாளையம் கம்பெனிக்குக் கட்டுப்பட்டதாக இருந்ததால், வீரபாண்டியனின் இந்நடவடிக்கையை சென்னைக் கம்பெனி அரசு தனக்கு விடுக்கப்பட்ட சவாலாகக் கருதி தாக்குதலுக்கு உத்தரவிட்டது.
 • 1799 மே மாதத்தில் வெல்லெஸ்லி பிரபு திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் , மதுரை ஆகிய இடங்களில் இருந்த படைகளை திருநெல்வேலிக்கு அனுப்ப உத்தரவு பிறப்பித்தார்.
 • திருவனந்தபுரம் அரசரின் படையும் ஆங்கிலேயருடன் இணைந்தது. மேஜர் பானர்மேன் அதிக ஆற்றல் கொண்ட போர்த்தளவாடங்களுடன் படைகளை வழி நடத்தினார்.
 • 1799 ஜூன் 1 அன்று கட்டபொம்மன் 500 ஆட்களுடன் சிவகங்கைக்குச் சென்றார். பழையனாறு என்ற இடத்தில் மருதுவுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, சிவகங்கையிலிருந்து ஆயுதம் தரித்து வந்த 500 பேருடன் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சிக்குத் திரும்பினார்.
 • நாகலாபுரம், மன்னர்கோட்டை, பாவாலி, கோலார்பட்டி, செந்நல்குடி ஆகிய பாளையங்களின் தலைவர்கள் மருது சகோதரர்களின் முயற்சியால் ஏற்கனவே ஒன்று சேர்ந்திருந்தார்கள்.
 • அவர்கள் கம்பெனியின் ஆட்சிப்பகுதிகளிலிருந்த சில குறிப்பிட்ட கிராமங்களில் வரி வசூலிக்கும் உரிமையை உறுதிப்படுத்தியிருந்தார்கள், கட்டபொம்மன் தன் செல்வாக்கையும் நிதியாதாரங்களையும் முன்னிறுத்தி, இந்த அணியில் சேர்ந்து அதன் தலைவர் ஆனார்.
 • இக்கூட்டமைப்பை ஏற்படுத்த சாப்டூர், ஏழாயிரம்பண்ணை, காடல்குடி , குளத்தூர் ஆகியவற்றின் பாளையக்காரர்களையும் அதில் சேரும்படி வலியுறுத்தினார்.
 • 1799 செப்டம்பர் 1 அன்று மேஜர் பானர்மேன் தன்னைக் கட்டபொம்மன் பாளையங்கோட்டையில் சந்திக்கும்படி இறுதி எச்சரிக்கை விடுத்தார். கட்டபொம்மன் சந்திப்பைத் தவிர்த்ததால், பானர்மேன் போர் தொடுக்க முடிவெடுத்தார். செப்டம்பர் 5ஆம் நாள் கம்பெனி படை பாஞ்சாலங்குறிச்சியைச் சென்றடைந்தது.
 • கட்டபொம்மனின் கோட்டை 500 அடி நீளத்திலும் 300 அடி அகலத்திலும் முழுவதும் மண்ணினால் கட்டப்பட்டிருந்தது. ஆங்கிலேயப்படை கோட்டையின் தகவல்தொடர்புக்கான வழிகளைத் துண்டித்தது.
 • கட்டபொம்மனின் வீரர்கள் கம்பீரத்துடனும் வீரத்துடனும் போரிட்டார்கள். அவர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டன. கர்னல் வெல்ஷ் என்பார் தனது நினைவுக் குறிப்புகளில், கட்டமொப்பனது படைவீரர்களின் வீரத்தைப் பதிவிட்டுள்ளார்.
 • கம்பெனிப் படைக்குக் கூடுதல் எண்ணிக்கையில் வீரர்கள் தேவைப்பட்டனர். செப்டம்பர் , 16அன்று ஆங்கிலேயருக்குக் கூடுதல் வலு சேர்ப்பதற்கான உதவிகள் பாளையங்கோட்டையிலிருந்து வந்து சேர்ந்தன.
 • அவர்களின் தொடர்ச்சியான தாக்குதலால் சுவர்கள் உடைந்து கோட்டை பலவீனம் அடைந்ததால், கோட்டைக்கான காவற்படை வெளியேறி காடல்குடியை அடைந்தது. கோலார்பட்டியில் நடந்த மோதலில் கட்டபொம்மனின் அமைச்சர் சிவசுப்பிரமணிய பிள்ளை பிடித்துவைக்கப்பட்டார். நாலாபுறமும் எதிர்ப்பைக் காட்டிய தலைவர்களுக்குரிய பிற பாதுகப்பு அரண்கள் அனைத்தும் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டுக்கு வந்தன. ஆங்கிலேயப்படையைக் கண்டதும், மேற்குப் பாளையத்தாரும் சரணடைந்தனர்.
 • புதுக்கோட்டை மன்னர் விஜய ரகுநாத தொண்டைமான் களப்பூர் காட்டிலிருந்த கட்டபொம்மனைப் பிடித்து, ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தார். கட்டபொம்மனின் ஆதரவாளர்கள் மருது சகோதரர்கள், கோபால நாயக்கர் ஆகியோருடன் இணைவதற்குச் சிவகங்கைக்கும் திண்டுக்கல் மலைக்குன்றுகளுக்கும் விரைந்தனர்.
 • 1799 அக்டோபர் 16 அன்று பானர்மேன் கட்டபொம்மனைக் கயத்தாறு என்னுமிடத்தில் பாளையக்காரர்கள் கூடியிருந்த அவையில் விசாரணை செய்தார். அது கேலிக்கூத்தான விசாரணையாகவே இருந்தது. கட்டபொம்மன் மரணத்தைப் பற்றிக் கவலைப்படாமல், தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒத்துகொண்டார். அவர் சிவகிரிக்கு எதிராக ஆயுதந்தரித்த வீரர்களை அனுப்பியதையும் பாஞ்சாலங்குறிச்சிப் போரில் ஆங்கிலேயப்படைகளுக்கு எதிராகப் போரிட்டதையும் ஒத்துக்கொண்டார். அக்டோபர் 16ஆம் நாளில் கட்டபொம்மன் கயத்தாறு பழைய கோட்டைக்கு அருகில் தூக்கிலிடப்பட்டார். கட்டபொம்மனுடைய வீரச்செயல்களைக் கருப்பொருளாகக் கொண்ட நாட்டுப்புறப்பாடல்கள் மக்களிடையே அவரது நினைவை இன்றுவரை உயிர்ப்புடன் வைத்துள்ளன.

மருது சகோதரர்களும் 1801 தென்னிந்தியக் கிளர்ச்சியும்

 • ஆற்காடு நவாப் 1772ஆம் ஆண்டு உடன்படிக்கை மூலம் ஸ்தலக்காவல்., தேசக்காவல் ஆகியவற்றுக்கான உரிமைகளை கம்பெனிக்குக் கொடுத்திருந்தார். இது பாளையக்காரர்கள், பாளையக்காரர்கள் அல்லாதோர் ஆகிய இரு தரப்பினரின் ஆட்சிப்பகுதிகளிலுமிருந்த காவல் தலைவர்களைப் பாதித்தது.
 • அதிருப்தியடைந்த காவல்காரர்களும் அவர்களின் தலைவர்களும் நவாபுக்கும் கம்பெனிக்கும் எதிராகப் பாளையக்காரர்களுடன் சேர்ந்தார்கள். சிவகங்கை பெரிய உடைய தேவர், நவாப் படைக்கு எதிரான சண்டையில் உயிரிழந்ததால் நிர்வாகப் பொறுப்பை எடுத்துக்கொண்ட சின்ன மருதுவும் பெரிய மருதுவும் நவாப் படையை வெளியேறினார்கள். பெரிய உடைய தேவர், வேலுநாச்சியார் ஆகியோரின் மகளான வெள்ளச்சி நாச்சியாரை சிவகங்கையின் இராணியாக அறிவித்தனர். அவர்கள் அமைச்சர் பொறுப்புகளை ஏற்றனர். அன்றைய சிவகங்கைக் காட்டின் நடுவில் இருந்த காளையார்கோவில், கிளர்ச்சியாளர்கள் கூடுமிடமாகவும் அவர்களது அடையாளமாகவும் இருந்தது.
 • வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதும், அவருடைய சகோதரர் ஊமைத்துரை கமுதியைச் சென்றடைந்தார். அங்கிருந்து அவரைச் சின்ன மருது சிவகங்கையின் தலைநகரான சிறுவயலுக்கு அழைத்துச் சென்றார்.
 • நவாப் முகமது அலி முத்துராமலிங்கத் தேவரைச் சிறையிலிருந்து விடுவித்து, அவரை இராமநாதபுரத்தின் சேதுபதியாக முடிசூட்டினார். ஆனால் கிளர்ச்சியாளர்கள் முத்துக்கருப்பத் தேவதைத் தங்கள் ஆட்சியாளராக அறிவித்தனர். மேலும் அரசின் தெற்குப் பகுதியையும் வடக்குப் பகுதியையும் ஆக்கிரமித்தனர்.
 • கிளர்ச்சியாளர்களின் வீரர்கள் மதுரைக்குள்ளும் நுழைந்தனர். ஜூலையில் ஊமைத்துரைதன் ஆதரவாளர்களுடன் மதுரையில் உள்ள பழையநாடு என்னும் பகுதியைக் கைப்பற்றினார்.
 • 1801இல் சின்ன மருதுவின் மகன் செவத்த தம்பியின் தலைமையில் சிவகங்கை , இராமநாதபுரம் ஆகிய இரு பகுதிகளைச் சேர்ந்த படைகளும் இணைந்து, கடற்கரை வழியாகத் தஞ்சாவூரில் இருந்த பாதிக்கப்பட்ட விவசாயிகளும் செவத்த தம்பியின் படையில் சேர்ந்தனர்.
 • தஞ்சாவூர் ஸ்தானிகர் ஆக இருந்த கேப்டன் வில்லியம் ப்ளாக்பர்ன் படைகளைத் திரட்டி , மங்குடி அருகே செவத்த தம்பியை வென்றார். தஞ்சாவூர் ராஜா சரபோஜி ஆங்கிலேயருக்குத் தூணையாக நின்றார்.
 • இருப்பினும் வீரர்கள் ஆங்கிலேயர் படை பின் தொடர்தலிலிருந்து தப்பித்து, கடந்து சென்ற பகுதிகளை எல்லாம் அழித்து நாசமாக்கி சென்றனர்.

தென்னிந்தியக் கிளர்ச்சி (1801)

 • திப்புவையும் கட்டபொம்மனையும் ஆங்கிலேயர் வென்ற பின்னர், அவர்களின் படைகள் பல்வேறு முனைகளிலிருந்து திரும்பி இராமநாதபுரத்திலும் சிவகங்கையிலும் கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்ள முடிந்தது.
 • சிவகங்கையின் முன்னாள் ஆட்சியாளரின் வழித்தோன்றல் படமாத்தூர் ஒய்யாத்தேவரின் ஆதரவையும் கிழக்கிந்தியக் கம்பெனி பெற முடிந்தது. அவர் சிவகங்கையின் ஆட்சியாளராகக் கம்பெனியால் அங்கீகரிக்கப்பட்டார். இந்தப் பிரித்தாளும் தந்திரம் அரசரின் ஆதரவாளர்களிடையே பிளவை ஏற்படுத்தி, இறுதியில் கிளர்ச்சியாளர்களை மனந்தளர வைத்தது.
 • 1801 மே மாதத்தில் அக்னியு தலைமையிலான ஒரு படைப்பிரிவு தன் நடவடிக்கைகளைத் துவங்கியது. இப்படை மானாமதுரை, பார்த்திபனூர் வழியாகப் பயணித்து, கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த பரமக்குடி அரண்களை ஆக்கிரமித்தது. மோதலின் போது இரு தரப்பிலும் பெரும் சேதம் ஏற்பட்டது.
 • ஆனால் கிளர்ச்சியாளர்களின் அடங்காத எதிர்ப்பும் மருது சகோதரர்களின் வீரம் செறிந்த சண்டைகளும் ஆங்கிலேயரின் நடவடிக்கையை மிகவும் கடினமாக்கியது. முடிவில், ஆங்கிலேயரின் படை வலிமையும் தளபதிகளின் திறமையுமே வெற்றி பெற்றன.
 • ஆங்கிலேயர் ஊமைத்துரையைக் கைது செய்ததைத் தொடர்ந்து, மருது பாண்டியரைச் சிங்கம்புணரி குன்றுகளிலும் செவத்தையாவை வத்தலகுண்டு பகுதியிலும் வெள்ளை மருதின் மகன் துரைசாமியை மதுரைக்கு அருகிலும் கைது செய்தனர்.
 • சின்ன மருதுவும் அவருடைய சகோதரர் வெள்ளை மருதுவும் 1801 அக்டோபர் 24இல் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர். ஊமைத்துரையும் செவத்தையாவும் அவர்களின் ஆதரவாளர்கள் பலரும் பாஞ்சலங்குறிச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டு 1801 நவம்பர் 16 ஆம் நாள் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். 73 கிளர்ச்சியாளர்கள் 1802 ஏப்ரல் மாதத்தில் மலேயாவில் பினாங்குக்கு நாடு கடத்தப்பட்டார்கள்.

தீரன் சின்னமலை

 • சேலம், கோயம்புத்தூர் , கரூர், திண்டுக்கல் ஆகியவை அடங்கிய கொங்குநாடு, மதுரை நாயக்கர் அரசின் ஒரு பகுதியாக இருந்தது. அதை மைசூர் உடையார்கள் கைப்பற்றித் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.
 • உடையார்களின் வீழ்ச்சிக்குப் பிறகு மைசூருடன் இந்த ஆட்சிப்பகுதிகள் மைசூர் சுல்தான்களால் கட்டுப்படுத்தப்பட்டன. மூன்றாம், நான்காம் மைசூர் போர்களின் வி/லைவாகக் கொங்குப் பகுதி முழுவதும் ஆங்கிலேயர் வசமாயின.
 • தீரன் சின்னமலை ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்த்துப் போரிட்ட கொங்குநாட்டுப் பாளையக்காரர் ஆவார். இவர் பிரெஞ்சுக்காரர்களாலும் திப்புவாலும் பயிற்சியளிக்கப்பட்ட பாளையக்காரர்களில் ஒருவர்.
 • சின்னமலை கோயம்புத்தூரில் இருந்த ஆங்கிலேயரின் கோட்டை மீது தாக்குதல் நடத்தும் முயற்சியில் (1800) இருந்தபோது, மருது பாண்டியரின் உதவியைப் பெற முயன்றார்.
 • கம்பெனியுடன் போரிடுவதற்காக விருபாட்டி கோபால நாயக்கர், பரமத்திவேலூர் அப்பச்சிக் கவுண்டர், சேலம் ஆத்தூர் ஜோனி ஜான் கஹன், பெருந்துறை குமராள் வெள்ளை, ஈரோடு வாரணவாசி ஆகியோருடன் கூட்டணி சேர்ந்தார்.
 • தனது படையை வலுவூட்டுவதற்குத் தேவையான உதவிகளை மருது சகோதரர்களிடமிருந்து பெறுவதைக் கம்பெனி தடுத்துவிட்டதால் சின்னமலையின் திட்டங்கள் பலிக்கவில்லை. அவரும் தன் திட்டத்தை மாற்றிக்கோண்டு, திட்டமிட்டதற்கு ஒரு நாள் முன்னதாகவே கோட்டையைத் தாக்கினார்.
 • கம்பெனிப் படை 49 பேரைத் தூக்கிலிடுவதற்கு இது வழிவகுத்தது. சின்னமலை ஆங்கிலேயரிடம் சிக்காமல் தப்பினார். 1800இலிருந்து அவர் தூக்கிலிடப்பட்ட 1805 ஜூலை 31 வரை கம்பெனிக்கு எதிராகப் போராடிக்கொண்டே இருந்தார்.
 • சின்னமலையின் போர்களில் முக்கியமானவை மூன்று: காவிரிக்கரையில் நடைபெற்ற 1801 போர், 1802 ஆம் ஆண்டு ஓடநிலையில் நடந்த போர்; 1804இல் நடந்த அரச்சலூர் போர் ஆகும். அவரது இறுதிப் போர் 1805இல் நடைபெற்றதாகும். இப்போரில் சின்னமலை அவருடைய சமையல்காரரால் துரோகம் இழைக்கப்பட்டார். தீரன் சின்னமலை சிவகிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.

வேலூர் புரட்சி

 • அரிணையை இழந்த அரசர்கள், குறுநில மன்னர்கள் ஆகியோரின் சந்ததியினர் ஆங்கிலேய ஆட்சி சுமத்திய அடிமைத்தளையைத் தகர்க்கத் தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டனர். அவற்றின் மொத்த விளைவுதான் 1806ஆம் ஆண்டில் ஏற்பட்ட வேலூர் புரட்சி ஆகும்.
 • மருது சகோதரர்களின் கிளர்ச்சி ஒடுக்கப்பட்ட பின்னர், அவர்கள் வேலூரை மையமாகக் கொண்டு செயல்பட்டனர். எண்ணிக்கையில் 3000க்குக் குறையாத திப்பு சுல்தானின் விசுவாசிகள் வேலூரிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் குடியேறியிருந்ததால், ஆங்கிலேய எதிர்ப்புக்கூட்டமைப்பின் அமைப்பாளர்கள் அங்கு தங்கள் இரகசிய நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டனர்.
 • ஆங்கிலேயரால் பதவியோ, சொத்தோ பறிக்கப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கியிருந்தனர். இதுபோல் பாதிக்கப்பட்ட பலரை வேலூர் கோட்டையின் படைமுகாம் உள்ளடக்கியிருந்தது. இவ்வாறு வேலூர் கோட்டை தென்னிந்தியாவின் புரட்சியாளர்கள் சந்தித்துக்கொள்ளுமிடமாக ஆனது. சிப்பாய்களும் வேலூருக்கு இடம்பெயர்ந்தவர்களும் கோட்டையில் அடிக்கடி கூடித் தீவிராமாகக் கலந்தாலோசித்தனர். அவற்றில் திப்பு மகன்களின் பிரதிநிதிகளும் பங்கேற்று வந்தனர்.

உடனடிக் காரணம்

 • இடைப்பட்ட காலத்தில் ஆங்கிலேயர் தங்கள் படையில் உள்ள சிப்பாய்ப்பிரிவில் சில புதுமைகளை நடைமுறைக்குக் கொண்டுவந்தார்கள். சிப்பாய்கள் சாதி அல்லது மதத்தின் அடையாளமாகத் தங்களது நெற்றியில் அணிந்த அனைத்து விதமான குறியீடுகளும் தடை செய்யப்பட்டன.
 • சிப்பாய்கள் தங்கள் மீசையை ஒரே மாதிரியான முறைக்குப் பொருந்தும்படி வெட்டுவதற்கு அறிவுறுத்தப்பட்டனர். துணை ஜெனரல் அக்னியு சிப்பாய்களுக்கான ஒரு புதிய தலைப்பாகையை வடிவமைத்து, தனது நேரடிக் கண்காஇப்பில் அதனை அறிமுகம் செய்தார்.
 • இந்தியர்களின் பார்வையில், இந்தத் தலைப்பாகையில் இடம்பெற்றிருந்த அருவருக்கத்தக்க அம்சம் , அதன் மீதிருந்த ரிப்பன் மற்றும் குஞ்சம் ஆகும். இது மிருகத் தோலில் செய்யப்பட்டிருந்தது.
 • பன்றித்தோல் முஸ்லீம்களுக்கு வெறுப்பூட்டும் பொருள் ஆகும். இந்துக்கள் பசுத்தோலில் செய்யப்பட்ட எந்தப் பொருளையும் விலக்க வேண்டியதாகக் கருதினர். இந்த மாற்றங்களுக்கான எதிர்ப்பை இந்தியர்களிடையே இன்னும் அதிகரிக்கச் செய்யும் வகையில், சிப்பாய்கள் அணியும் சீருடையின் முன்பக்கம் சிலுவை பொறிக்கப்பட்டிருந்தது.
 • மீசை, சாதி அடையாளங்கள், கடுக்கன் ஆகியவை தொடர்பான உத்தரவு இந்து, மூஸ்லீம் ஆகிய இரு சமயங்களைச் சேர்ந்த சிப்பாய்களின் சமய வழக்கங்களை மீறுவதாக இருந்தாலும் , இத்தகைய அடையாளங்களை வெளிப்படுத்துதல் இந்த உத்தரவுக்கு முன்பு முறையான உத்தரவால் தடை செய்யப்படாமலிருந்தாலும் , அணிவகுப்பில் இவ்வாறு தோன்றும்படி எந்த ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட படையிலும் வழக்கத்தில் இருந்ததில்லை என்று இம்மாற்றங்களுக்கு நியாயம் கற்பிக்கப்பட்டது.
 • முதல் எதிர்ப்பு 1806 மே மாதத்தில் நிகழ்ந்தது. வேலூரிலிருந்த 4ஆம் ரெஜிமெண்ட்டின் 2ஆம் படைப்பிரிவு வீரர்கள் புதிய தலைப்பாகையை அணிய மறுத்தனர். இந்தப் பிரச்சனை படைமுகாமின் தளபதியான கவர்னர் ஃபேன்கோர்ட்டுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் கிளர்ச்சியாளர்களை உடனிருந்து கண்காணிக்கும்படி 19ஆம் குதிரைப்படைப்பிரிவுக்கு உத்தரவிட்டார். இவர்கள் மீதான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
 • 4ஆம் ரெஜிமெண்ட்டின் 2ஆன் படைப்பிரிவுக்குப் பதிலாக வாலாஜாபாத்திலிருந்த 23ஆம் ரெஜிமென்ட்டின் 2ஆம் படைப்பிரிவு பொறுப்பை ஏற்றது. தலைமையின் உத்தரவை எதிர்த்தமைக்காகப் படையின் கீழ்நிலைப் பொறுப்பிலிருந்த 21 வீரர்கள் இராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார்கள். அவர்கள் 10 மூஸ்லீம்களும் 11 இந்துக்களும் இருந்தார்கள்.
 • நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும்பொருட்டு இரு வீரர் (ஒரு முஸ்லீம், ஒரு இந்து)களுக்குத் தலா 900 தசையடிகள் கொடுக்கப்பட்டு, அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள்.
 • இந்திய வீரர்களிடமிருந்து கிளம்பிய எதிர்ப்புகளை மிஈறி, அவர்களின் மனக்குறைகளைப் பொருட்படுத்தாமல் அரசு தான் முன்வைத்த மாற்றங்களைச் செயல்படுத்த முடிவெடுத்தது. ‘புதிய தலைப்பாகையை அணிவதற்கு விருப்பமில்லாத உணர்வு வீரர்களிடையே மிக பலவீனமாக இருப்பதாக’வே கவர்னர் வில்லியம் பெண்டிங்க் நம்பினார்.
 • வேலூர் கோட்டையில் 1806 ஜூலை 9ஆம் நாள் இரவின்போது பணீயிலிருந்த இராணுவ அதிகாரிகள் வழக்கத்துக்கு மாறாக எதையும் கவனிக்கவில்லை என முதலில் கூறப்பட்டது.
 • எனினும், அன்றைக்குப் பொறுப்பிலிருந்த ஆங்கிலேய அதிகாரி பார்வையிடும் தனது வேலையை அன்று செய்யவில்லை என்றும் தனக்குப் பதிலாக ஜமேதார் ஷேக் காசிம் என்ற இந்திய அதிகாரியை அனுப்பினார் என்றும் பின்னர் தெரிய வந்தது.
 • வேலூர் புரட்சிக்குப் பிறகு, அவர் முதன்மைக் குற்றவாளிகளில் ஒருவராக அடையாளம் காணப்பட்டார். ஜூலை 10 அதிகாலையில் பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டிய படைப்பிரிவின் தலைவர்கள் ஜூலை 9ஆம் நாள் இரவே கோட்டையில் தூங்குவதற்கு அதைச் சாக்காகப் பயன்படுத்தினர். இந்தத் துணை இராணுவ அதிகாரி கோட்டைக்குள் பாதுகாவலர்களாகத் தன்னால் இயன்றவரை தன்னுடைய ஆதரவாளர்களையே நியமித்தார்.
 • வேலூர் புரட்சியில் முக்கியப் பங்கு வகித்த்தாகக் கருதப்படுபவர் ஜமாலுதீன் ஆவார். இவர் திப்புக் குடும்பத்தின் இளவரசர்களில் ஒருவர். அவர் ஷேக் காசிம் போன்ற இந்திய அதிகாரிகளிடமும் வீர்ர்களிடமும் இரகசியப் பேச்சுவார்த்தைகளின்போது, அவர்கள் வேலூர் கோட்டையை எட்டு நாட்களுக்குத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்படியும் அதற்குள் ஆயிரம் ஆதரவாளர்கள் உதவிக்கு வந்து விடுவார்கள் என்றும் கூறி வந்தார்.
 • உரிமை பறிக்கப்பட்ட பாளையக்காரர்களின் உதவியைக் கேட்டு அவர்களுக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளதையும் அவர் தெரிவித்தார். திப்பு சுல்தானிடம் பணிபுரிந்த ஏராளமான அதிகாரிகள் திப்புவின் முன்னாள் அமைச்சரான அதிகாரிகள் திப்புவின் முன்னாள் அமைச்சரான புர்னியாவுடன் தொடர்பில் இருப்பதாகும் அவர்கள் தக்க நேரத்தில் கைகொடுப்பார்கள் என்றும் ஜமாலுதீன் கூறினார்.

வேலூர் கிளர்ச்சி

 • வேலூர் கோட்டையில் ஜூலை 10ஆம் நாள் காலை 2 மணிக்கு முதன்மை பாதுகாப்புத்தளத்திலிருந்த காவலாளியிடமிருந்து கார்ப்பரல் பியர்ச்சிக்கு ஒரு செய்தி தெரிவிக்கப்பட்டது. படைவீரர் குடியிருப்புக்கு அருகில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது என்பதே அச்செய்தி. பியர்சி பதில் நடவடிக்கையில் இறங்கும் முன்னரே , சிப்பாய்கள் ஆங்கிலேயப் பாதுகாவலர்கள் மீதும், படைவீரர் குடியிருப்பு, அதிகாரிகள் குடியிருப்பு ஆகியவற்றின் மீதும் ஏறக்குறைய ஒரே நேரத்தில் தக்குதல் தொடுத்தனர். பியர்சியும் கடுமையான காயங்களுக்கு உள்ளானார்.
 • ஐரோப்பியக் குடியிருப்புகளில் கோடை வெக்கையைச் சமாளிக்கக் கதவுகள் இரவிலும் திறந்து வைக்கப்பட்டிருந்தன. கிளர்ச்சியாளர்கள் படுக்கைகளில் பாதுகாப்பின்றி உறங்கிக்கொண்டிருந்த ஐரோப்பியரைச் சன்னல் வழியாக எளிதில் சுட முடிந்தது. ஐரோப்பியக் குடியிருப்புக்குத் தீ வைக்கப்பட்டது. ஐரோப்பிய அதிகாரிகளின் குடியிருப்புகளைக் கண்காணித்து, வெளியே வரும் எவரையும் சுவதற்குத் தனிப்படைப்பிரிவு நியமிக்கப்பட்டது.
 • வெடிமருந்துகளும் துப்பாக்கி ரவைகளும் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கை முதலாம் ரெஜிமெண்ட்டின் ஒரு பிரிவு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. அதே ரெஜிமெண்ட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரு குழு குடியிருப்புகளில் உள்ள ஐரோப்பியரைக் கொல்வதற்குத் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்தது. ஏராளமான ஐரோப்பிய ஒழுங்குமுறை நடத்துனர்களுடன் , 13 அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இராணுவக்குடியிருப்பில் 82 கீழ்நிலை இராணுவ வீரர்கள் இறந்தார்கள். 91 பேர் காயமடைந்தனர்.
 • உள்ளூர் வீரர்கள் அடங்கிய 16ஆம் காலாட்படையைச் சேர்ந்த மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங் துப்பாக்கிச் சத்தம் கேட்டபோது கோட்டைக்கு வெளியே பல்லக்கில் சென்று கொண்டிருந்தார். அவர் பல்லக்கிலிருந்து இறங்கி, கோட்டையின் சரிவான பகுதிக்குச் சென்று விசாரித்தார். அதற்குப் பதில் போல் பாதுகாப்பு அரணிலிருந்து சரமாரியாகப் பொழிந்த குண்டுமழை உடனடியாக அவரது உயிரைப் பறித்தது.
 • கோட்டைக்கு வெளியே பணியிலிருந்த மேஜர் கோட்ஸ் கிளர்ச்சியைப் பற்றிக் கேள்விப்பட்டு கோட்டைக்குள் நுழைய முயன்றார். அவரால் உள்ளே செல்ல முடியாததால், ஆற்காட்டில் குதிரைப்படை முகாமுக்குப் பொறுப்புவகித்த கில்லஸ்பிக்குக் கடிதம் எழுதி, அதைக் கேப்டன் ஸ்டீவன்சன் என்பவரிடம் கொடுத்தனுப்பினார்.
 • அந்தக் கடிதம் வேலூருலிருந்து 25கி.மீ தொலைவில் இருந்த ஆற்காட்டுக்குக் காலை 6 மணி அளவில் சென்றடைந்தது. கர்னல் கில்லஸ்பி உடனே வேலூருக்குப் புறப்பட்டார். தன்னுடன் கேப்டன் யங் தலைமையில் 19ஆம் குதிரைப்படையைச் சேர்ந்த ஒரு பிரிவையும் லெப்டினெண்ட் உட் ஹவுஸ் தலைமையில் அதற்குத் துணைநிற்கும் 7ஆம் குதிரைப்படையிலிருந்து ஒரு வலுவான பிரிவையும் அழைத்துச் சென்றார். அவர் குதிரைப்படையில் மீதமுள்ள வீரர்களுடன் தன்னைப் பின்தொடர்ந்து வரும்படி கர்னல் கென்னடியிடம் அறிவுறுத்திவிட்டு, ஆற்காடு படைமுகாமைப் பாதுகாப்பவும் தன்னுடன் தகவல்தொடர்பில் இருக்கவும் ஒரு தனிப்பிரிவை விட்டுச்சென்றார்.
 • வேலூர் கோட்டைக்குக் காலை 9 மணிக்கு வந்தடைந்த கில்லஸ்பி தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்துகொண்டிருந்ததால், பீரங்கிகள் தங்கள் பாதுகாப்புக்கு வந்துசேரும்வரை காத்திருக்க முடிவு செய்தார். விரைவிலேயே ஆற்காட்டிலிருந்து பின்தொடர்ந்து வந்த கென்னடி தலைமையிலான குதிரைப்படை 10 மணி அளவில் வந்துசேர்ந்தது.
 • லெப்டினெண்ட் ப்ளாகிஸ்டன் தலைமையில் 19ஆம் குதிரைப்படையின் பீரங்கியால் கோட்டையின் வெளிவாசல் கதவு தகர்க்கப்பட்டது. கேப்டன் ஸ்கெல்ட்டன் தலைமையிலான குதிரைப்படையின் ஒரு பிரிவு கோட்டைக்குள் நுழைந்தது.
 • கில்லஸ்பியின் வீரர்கள் கடுமையான துப்பாக்கிச்சூட்டை எதிர்கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற தாக்குதலில் கர்னல் கில்லஸ்பியும் காயங்களுக்கு உள்ளானார். கிளர்ச்சி யில் ஈடுபட்ட சிப்பாய்கள் பின்வாங்கினார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் கோட்டையின் சுவர்கள் மீது ஏறித் தப்பித்தனர் அல்லது ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு கருணைக்காகக் கெஞ்சினர். குதிரைப்படைப்பிரிவுகள் அனைத்தும் அணிவகுப்பு மைதானத்தில் ஒன்றுகூடின. கோட்டையின் திட்டிவாசல் மூலம் கிடைத்த குறுகலான பாதை வழியே தப்பியோடிய சிப்பாய்களைப் பிந்தொடர்ந்து சென்று பிடிக்க முடிவெடுக்கப்பட்டது.
 • தப்பியோடிய சிப்பாய்களை வழிமறித்துப் பிடிக்கச் சில உள்ளூர் குதிரைக்காரர்களுடன் ஒரு குதிரைப்படைப்பிரிவு கிளம்பியது. கோட்டையின் அனைத்துக் கட்டிடங்களிலும் தேடுதல் வேட்டை நடந்தது. அங்கு ஒளிந்திருந்த கிளர்ச்சியாளர்கள் இரக்கமின்றிக் கொல்லப்பட்டார்கள். கில்லஸ்பியின் ஆட்கள் கிளர்ச்சிக்குத் திட்டம் தீட்டிய திப்புவின் மகன்களைப் பழிவாங்க விரும்பினார்கள். ஆனால் லெப்டினெண்ட் கர்னல் மர்ரியாட் இதை எதிர்த்தார்.
 • கர்னல் கில்லஸ்பி வேலூர் கோட்டையை 15 நிமிடங்களுக்குள் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகக் கூறப்படுகிறது. கர்னல் ஹர்கோர்ட் (வாலஜாபாத் படைக்குப் பொறுப்பு வகித்தார்) ஜூலை 11இல் வேலூர் படையின் தற்காலிகப் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
 • ஜூலை 13இல் ஹர்கோர்ட் படைமுகாமின் பொறுப்பாளராகப் பதவியேற்று, இராணுவச் சட்ட ஆட்சியை அமல்படுத்தினார். கர்னல் கில்லஸ்பியின் விரைவான, சிறந்த திட்டமிடலுடன் கூடிய நடவடிக்கையே, கோட்டையைச் சில நாட்களுக்குள் கைப்பற்றி, அடுத்ததாக மைசூரிலிருந்து வரவிருந்த 50 ஆயிரம் வீரர்களின் ஆதரவைப் பெறுவதற்குத் திட்டமிட்ட கிளர்ச்சியாளர்களின் கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்ததாகக் கருதப்படுகிறது.
 • படைவீரர்கள் எதிர்ப்பு தெரிவித்த அருவருப்பான மாற்றங்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டன. விசாரணைக் குழுவின் கூற்றுப்படி, மைசூர் இளவரசர்கள் கிளர்ச்சிக்கு உடந்தையாக இருந்தார்கள் என்பது நிறுவப்படாததால், அவர்களைக் கல்கத்தாவுக்கு அனுப்பிவைக்கும்படி உத்தரவிடப்பட்டது.
 • உயர்மட்டத் தீர்ப்பாயங்கள் கவர்னர், தலைமைப் படைத்தளபதி, துணை உதவி ஜெனரல் ஆகியோரை இந்தக் குளறுபடிக்குப் பொறுப்பாக்கி அவர்கலைத் திரும்ப அழைத்துக்கொள்ள உத்தரவிட்டன.
 • வேலூர் நிகழ்வின் தாக்கம் ஹைதராபாத், வாலஜாபாத், பெங்களூர், நந்திதுர்கம், பாளையங்கோட்டை, பெல்லாரி, சங்கரிதுர்கம் ஆகிய இடங்களிலும் பரவியது.
 • 1857ஆம் ஆண்டு நடைபெற்ற பெரும் கிளர்ச்சிக்கான அனைத்து முன்னறிகுறிகளும் வேலூர் கிளர்ச்சியில் இருந்தன.
 • பெருங்கிளர்ச்சியில் இடம்பெற்ற கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள் என்ற சொல்லுக்கு மாற்றாக வேலூர் நிகழ்வில் இட்மபெற்ற பாட்ஜ் என்பதையும் பகதூர் ஷா, நானா சாகிப் ஆகியோருக்கு மாற்றாக மைசூர் இளவரசர்களையும் நம்மால் பொருத்திப் பார்க்க முடியும்.
 • கில்லஸ்பியின் வன்கொடுமைகளை நேரில் பார்த்த ஜே.பிளாக்கிஸ்டன் , 800க்கும் மேற்பட்ட உடல்கள் கோட்டையிலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்டதாக கூறுகிறார். டபிள்யூ.ஜே.வில்சனின் மதிப்பீட்டின்படி கிளர்ச்சியில் பங்கேற்றதற்காக 378 பேர் சிறை வைக்கப்பட்டனர். 516 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டாலும் சிறைத் தண்டனை விதிக்கப்படவில்லை. விசாரணைக்குழுவிடம் அளிக்கப்பட்ட வாக்குமூலங்களின்படி, இராணுவ நீதிமன்றம் சில தனிப்பட்ட நபர்களுக்கு மரண தண்டனை விதித்தது. சிலரை நாடு கடத்தியது. இத்தண்டனைகள் வேலூர் பொறுப்பதிகாரியால் 1806 செப்டம்பர் 23 அண்று நிறைவேற்றப்பட்டது.

முதலாம் ரெஜிமெண்ட்டின் முதல் படைப்பிரிவு

பீரங்கி –முனையில் கட்டிச் சுடப்பட்டவர்கள் – 1 ஹவில்தார், 1 நாயக்

சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் – 1 நாயக், 4 சிப்பாய்கள்

தூக்கிலிடப்பட்டவர்கள் – 1 ஜமேதார், 4 சிப்பாய்கள்

நாடு கடத்தப்பட்டவர்கள் – 3 ஹவில்தார்கள், 2 நாயக்குகள், 1 சிப்பாய்

23ஆம் ரெஜிமெண்ட்டின் 2ஆம் படைப்பிரிவு

பீரங்கி வாயில் கட்டிச் சுடப்பட்டவர்கள் – 2 சுபேதார்கள், 2 லஸ்கார்கள்

தூக்கிலிடப்பட்டவர்கள் – 2 ஹவில்தார்கள், 1 நாயக்

விவசாயிகள், பழங்குடிகள் ஆகியோரின் கிளர்ச்சிகள்

 • பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் கம்பெனி அரசாங்கத்தின் நில உரிமையும் வருவாய் ஈட்டும் மூறையும் இந்தியக் கிராமியச் சமூகத்தை மிகக் கடுமையாகப் பாதித்தன. விவசாயிகளை அதற்கு முன்னில்லாத அளவுக்கு வருத்தியது.
 • வருவாய் ஈட்டும் வேளாண்மூறையின் தொடக்க காலத்தில் விவசாயிகள் அவர்களுக்கு அதிகளவிலான வருவாய் இலக்கை நிர்ணயித்தது, அநியாயமாக அதை வசூலித்த ஒப்பந்ததாரர்களாலும் கம்பெனி அதிகாரிகளாலும் நசுக்கப்பட்டனர். இதற்குத் தீர்வு காணும்படி விவசாயிகள் தொடக்கத்தில் கம்பெனி அரசாங்கத்துக்குப் புகார் அனுப்பினார்கள்.
 • ஆனால் அவர்களின் கோரிக்கை செவிசாய்க்கப்படாமல் போனபோது, அவர்கள் அணி திரண்டு, நேரடி நடவடிக்கையில் இறங்கினர். விவசாயிகள் உள்ளூர் கச்சேரி (வருவாய் வசூலிக்கும் அலுவலகம்)களைத் தாக்கினார்கள்; தானியச் சேகரிப்புக்கிடங்குகளைக் கொள்ளையடித்தார்கள்; வரியைச் செலுத்த மறுத்தார்கள்.
 • 1840களிலும் 1850களிலும் செயல்பட்ட விவசாயிகள் இயக்கம் மலபார் கிளர்ச்சியாக வெளிப்பட்டது. இப்பகுதியில் குடியேறி, மலபார் பெண்களைத் திருமணம் செய்துகொண்ட அரபு வணிகர்களின் சந்ததியினர் (மாப்பிள்ளைகள்) ஆவர்.
 • படிப்படியாக மாப்பிள்ளைமார்கள் விவசாயத்தைச் சார்ந்தவர்களாகி, நிலத்தை வாடகைக்கு எடுத்து விவசாயம் செய்வோராகவும் நிலமற்ற உழைப்பாளர்களாகவும் சில்லறை வணிகர்களாகவும் மீனவர்களாகவும் மாறினர்.
 • 1792ஒல் ஆங்கிலேயர் மலபாரைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தபோது, அவர்கள் நில உடைமை விவகாரங்களைச் சீரமைக்க முடிவெடுத்தார்கள் . நிலத்துக்கான தனிநபர் உரிமையாளர் முறையை உருவாக்குவது அவர்கள் கொண்டுவந்த மாற்றமாகும்.
 • முன்பிருந்த மரபுமுறை, நிலத்திலிருந்து கிடைக்கும் மொத்த விளைச்சலை ஜன்மி (ஜன்மம் என்ற உரிமை பெற்றவர்), கனம்தார் (கனம் என்ற உரிமை பெற்றவர்) , விவசாயி ஆகியோர் சரிசமமாகப் பகிர்வதற்கு வாய்ப்பளித்தது.
 • ஆங்கிலேயர் கொண்டுவந்த புதிய முறை ஜன்மிகளை நிலத்தின் முழு உரிமையாளர்களாக்கி, குத்தகை விவசாயிகளை வெளியேற்றும் அதிகாரத்தையும் கொடுத்தது. இந்த நடைமுறை அதற்கு முன்பு இல்லாததாகும். இது விவசாயிகளை மிகவும் பாதித்தது. இவற்றுடன், மிகையாக மதிப்பிடுதல், சட்டத்துக்குப் புறம்பான வரிகளைச் சுமத்துவது, நீதிமன்றமுன்ம் காவல்துறையும் நில உரிமையாளருக்கு மட்டுமே ஆதரவாக நடந்துகொள்வது ஆகியவை விவசாயிகளை வறுமையின் உச்சத்தில் வாழும் நிலைக்குத் தள்ளியது.
 • தாங்கள் நசுக்கப்படுவதைச் சகித்துக்கொள்ள முடியாத விவசாயிகள் எதிர்வினை புரிந்த நிகழ்வுகள் மலபாரில் பத்தொன்பதாம் நூற்றாண்டு முழுவதும் நடந்தன.
 • அவற்றில் 1849 ஆகஸ்ட் மாதத்தில் மஞ்சேரியிலும், 1851 ஆகஸ்ட் மாதத்தில் குளத்தூரிலும் (இந்த இரு இடங்களும் தெற்கு மலபாரில் உள்ளவை) 1852 ஜனவரி மாதத்தில் வடக்கில் உள்ள மட்டனூரிலும் நிகழ்ந்த கிளர்ச்சிகள் மிகவும் தீவிரமானவையாகும்.
 • ஆங்கிலேய ஆயுதப்படைகள் கிளர்ச்சியை அடக்க அனுப்பப்பட்டன. இங்கெல்லாம் அமைதியை ஏற்படுத்த ஆங்கிலேயர் கையாண்ட அடக்குமுறை நடவடிக்கைகள் இருபது ஆண்டுகளுக்குமேல் நீடித்தன. ஆனால் மாப்பிள்ளைகள் 1870இல் மீண்டும் எழுச்சி பெற்றனர். மீண்டும் கிளர்ச்சிகள் நடந்தன.
 • 1857க்கு முந்தைய இந்தியாவில் நடைபெற்றவற்றில் சில கிளர்ச்சிகள் பழங்குடியினரால் நடத்தப்பட்டன. உள்ளூர் வளங்கள் மீதான அவர்களின் தன்னாட்சியும் கட்டுப்பாடும் ஆங்கிலேயெ ஆட்சியாலும் பழங்குடி அல்லாதவரின் வருகையாலும் பாதிக்கப்பட்டதே இதற்குக் காரணமாகும்.
 • இப்பழங்குடிகள் இந்தியாவின் பெரும்பகுதிக்குப் பரவி, 19ஆம் நூற்றாண்டில் நூற்றுக்கணக்கான தீவிர மோதல்களையும் கிளர்ச்சிகளையும் ஏற்படுத்தினார்கள்.

கோல்களின் கிளர்ச்சி (1831 – 32)

 • கோல் (Kol) என்ற பழங்குடி இனத்தினர் பீகாரிலும் ஒரிசாவிலும் சோட்டா நாக்பூர் , சிங்பும் ஆகிய பகுதிகளில் வாழ்ந்தனர். சோட்டா நாக்பூர் ராஜா பல கிராமங்களைப் பழங்குடி அல்லாதோருக்குக் குத்தகைக்கு விட்டதே கோல்களின் கிளர்ச்சிக்கு உடனடிக்காரணமாகும்.
 • சோன்பூர், தமர் ஆகிய பகுதிகளில் வசித்த கோல்கள் திக்காடர்களுக்கு (வரி வசூலிப்போர்) எதிரான கிளர்ச்சியை நடத்துவதற்கு முதல் முயற்சியை எடுத்தனர்.
 • வெளியாருடைய சொத்துகளைத் தாக்குவதை இவர்களின் கிளர்ச்சி உள்ளடக்கியிருந்தது. கோல்கள் உயிர்ச்சேதம் ஏற்படுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை.
 • கொள்ளையடிப்பதும் சொத்துக்களுக்கு தீவைப்பதும் அவர்களது கிளர்ச்சியில் முக்கிய வழிமுறைகளாக இருந்தன.
 • 1831 டிசம்பர் 20ஆம் நாளில் சோட்டா நாக்பூரில் உள்ள சோனிப்பூர் பர்கானா எழுநூறு கிளர்ச்சியாளர்கள் அடங்கிய குழுவால் தாக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டது. 1832 ஜனவரி 26க்குள் கோல்கள் சோட்டா நாக்பூர் முழுவதையும் தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்துவிட்டார்கள். இவர்களின் கிளர்ச்சி ஆங்கிலேயருக்கு எதிரான ஒரு போருடன் முடிவுக்கு வந்தது.
 • மிகத் தீவிராமாக ஒரு குறுகிய பரப்புக்குள் நடந்த சண்டையில் கோல் கிளர்ச்சியின் தலைவரான புத்த பகத் கொல்லப்பட்டார். துண்டிக்கப்பட்ட அவரது தலையை ஆட்சியாளர்களிடம் ஒப்படைத்ததற்காக அதிகாரிகள், இராணுவ வீரர்கள் ஆகியோருக்கு ஓராயிரம் ரூபாய் விநியோகிக்கப்பட்டது. கிளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருந்த பிந்த்ராய் மன்கி 1832 மார்ச் 19ஆம் நாள் சரணடைந்ததும், கோல்களின் போராட்டம் ஒரு துயரமான முடிவுக்கு வந்தது.

சந்தால் கிளர்ச்சி (1855 – 56)

 • பழங்குடிகளான சந்தால்கள் வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு காட்டுப்பகுதிகளில் அங்கங்கே பரவியிருந்தபடி வாழ்ந்தார்கள். மஞ்சி என்றும் அவர்கள் அறியப்பட்டார்கள்.
 • தங்களின் தாய்மண்ணிலிருந்து துரத்தப்பட்ட சந்தால்கள் ராஜ்மகல் குன்றுகளைச் சுற்றியுள்ள பகுதியைத் திருத்தி, அதை டாமின் –இ-கோ (சந்தால்களின் நிலம்) என்று அழைத்தார்கள். பழங்குடி நிலங்கள் சந்தால் அல்லாத ஜமீன்தார்களுக்கும் வட்டிக்கடைக்காரர்களுக்கும் குத்தகைக்கு விடப்பட்டதால் , சந்தால்கள் படிப்படியாகக் கையறுநிலையில் வாழ வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டார்கள்.
 • இத்துடன், உள்ளூர் காவல்துறையினராலும் அப்பகுதிகளில் தொடர்வண்டிப்பாதை அமைப்பதில் ஈடுபட்ட ஐரோப்பிய அதிகாரிகளாலும் அடக்குமுறைக்குள்ளானார்கள். டிக்குகளின் (எளியிலிருந்து வந்தோர்) இத்தகைய ஊடுருவல் சந்தால் சமூகத்தை நிலை தடுமாறச் செய்தது. இது அவர்கள் இழந்த பகுதியை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட வைத்தது.
 • 1855 ஜூலையில் சந்தால்கள் ஜமீன்தார்களுக்கும் அரசாங்கத்துக்கும் விடுத்த இறுதி எச்சரிக்கை செவிமடுக்காமல் போனவுடன், ஆயிரக்கணக்கிலான சந்தால்கள் வில்லும் அம்பும் ஏந்திக்கொண்டு வெளிப்படையான கிளர்ச்சியைத் துவக்கினார்கள்.
 • தமது கிளர்ச்சி தம்மை ஒடுக்குபவர்களான ஜமீன் ]தார்கள் , வட்டிக்கைடைக்கரார்கள், அரசாங்கம் ஆகிய மூன்று தரப்பினரின் புனிதமஆற்ற கூட்டுக்கு எதிரானது என்று அவர்கள் குறிப்பிட்டார்கள். மகேஷ்பூர் போரில் மஞ்சிகளில் பெரும்பாலானவர்கள் சிவப்பு நிற உடையை அணிந்திருந்தார்கள்.
 • பின்னாட்களில் இது அதிகாரத்துக்கு உரிமைகோரும் அடையாளத்துக்கான ஆடை ஆனது. கிளர்ச்சியின் முதல் வாரத்தில் பத்து பேர் அடங்கிய ஒரு குழு மோங்கபர்ரா என்னும் கிராமத்தைத் தாக்கித் தீக்கிரையாக்கியது. கிளர்ச்சியாளர்களில் பெண்களும் இருந்தார்கள்.
 • தொடக்கத்தில் சித்தோ சந்தால்களின் தலைவராக இருந்தார். அவர் கைது செய்யப்பட்ட பின்னர் கானு கிளர்ச்சியை நடத்தினர். கிளர்ச்சியின் பிற்பகுதியில் விவசாயிகள் சேர்ந்துக்கொண்டார்கள்.
 • ஆயிரக்கணக்கான விவசாயிகள் சார்லஸ் மசேக் அவுரித் தொழிற்சாலையைத் தாக்கிக் கொள்ளையடித்தார்கள். இதன் விளைவாக, கிளர்ச்சியை ஒடுக்க ஆங்கிலேயர் தரப்பிலிருந்து மிருகத்தனமான நடவடிக்கைகள் தொடங்கின.
 • இராணுவம் குவிக்க்ப்பட்டு , சந்தால் கிராமங்கள் பழிக்குப் பழியாக ஒன்றன் பின் ஒன்றாகத் தீக்கிரையாக்கப்பட்டன. ஒரு கணக்கீட்டின்படி, கிளர்ச்சி இறுதியாக ஒடுக்கப்படும் முன்பு, 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரையான கிளர்ச்சியாளர்களில் 15 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டார்கள் எனத் தெரிகிறது.

முண்டா கிளர்ச்சி

 • பிர்சா முண்டா வழிநடத்திய முண்டாக்களின் கிளர்ச்சி (உல்குலன்) 1899-1900 காலகட்டத்தில் நடைபெற்றது. முண்டாக்கள் பீகார் பகுதியில் முக்கியத்துவம் வாய்ந்த பழங்குடிகள் ஆவர். ஆங்கிலேயரின் ஆட்சியில் அவர்களின் பொதுநில உரிமை முறை அழிக்கப்பட்டது.
 • முண்டாக்களுக்குச் சொந்தமான நிலங்களை ஜாகீர்தார்களும் திக்காடர்களும் (பெரும் விவசாயி) வட்டிக்கடைக்காரர்களும் பறித்துக்கொண்டனர். பிர்சா முண்டா குத்தகைக்குப் பயிரிடும் விவசாயிகளின் குடும்பத்தில் 1874இல் பிறந்தார். ஆங்கிலேயரை விரட்டிவிட்டு,. முண்டாக்களின் ஆட்சியை நிறுவ வந்த புனிதத்தூதர் என அவர் தன்னை அழைத்துக்கொண்டார்.
 • பழங்குடிகளின் நிலங்களைப் பழங்குடி அல்லாதோர் ஆக்கிரமிப்பதை இவரது தலைமையில் முண்டாக்கள் எதிர்த்தார்கள். முண்டா இனத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஜமீன்தார்களுக்கு வாடகை செலுத்த வேண்டாம் என பிர்சா முண்டா வலியுறுத்தினார்.
 • பிர்சா முண்டா சோட்டா நாக்பூர் பகுதியில் கிளர்ச்சியைத் துவக்கினார். சாயில் ரகப் என்னுமிடத்தில் முண்டா சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் கண்மூடித்தனமாகக் கொல்லப்பட்டார்கள். சாயில் ரகப் படுகொலை பிர்சா ஆதரவாளர்களைத் தடுத்து நிறூத்தவில்லை. ஆங்கிலேய அதிகாரிகளின் பிர்சாவைக் கைது செய்ய உத்தரசு பிறப்பித்ததுடன் , அவரைப் பிடித்துத் தருபவர்களுக்குப் பரிசளிப்பதாகவும் அறிவித்தார்கள். இத்தனைக்குப் பிறகும் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு தொடர்வதைக் காண முடிகிறது. ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்ட பிர்சா 1900அம ஆண்டு ஜூன் 9ஆம் நாளில் தியாகி ஆனார். அவருடைய பெயர் தொடர்ந்து அப்பகுதியின் மழைவாழ் மக்களை ஈர்ப்பதாக உள்ளது.

1857 பெருங்கிளர்ச்சி

அறிமுகம்

 • 1857ஆம் ஆண்டு பெருங்கிளர்ச்சி ஆங்கிலேய, இந்திய வரலாற்று அறிஞர்களிடையே பெரும் விவாதத்திற்குரிய பொருளாக உள்ளது. ஆங்கில ஏகாதிபத்திய வரலாற்றாசிரியர்கள் இவ்வெழுச்சியை இராணுவக் கலகம் என்றும் இராணுவ வீரர்களின் கோபத்தின் வெளிப்பாடு என்று கூறி சாதாரணமாகப் புறந்தள்ளுகின்றனர்.
 • இந்திய வரலாற்றறிஞர்கள் ராணுவப் புரட்சியைப் பெருங்கிளர்ச்சியாக மாற்றியதில் மக்கள் வகித்த பாத்திரம் பற்றி ஆய்வு மேற்கொண்டு இரண்டு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
 • அக்கேள்விகளுக்கு ஏகாதிபத்திய வரலாற்றறிஞர்களிடம் பதிலில்லை. இது ஒரு இராணுவக் கலகம் மட்டுமே என்றால், முகாம்களில் இருந்த சிப்பாய்கள் புரட்சி செய்வதற்கு முன்பாகவே, மக்கள் கிளர்ச்சி செய்ததை எப்படி விளக்குவது? எழுச்சிக்கு உடந்தையாக இருந்தார்கள் என்று சொல்லி மக்களை அபராதம் விதித்து தூக்கிலிட்டுத் தண்டிக்க வேண்டிய அவசியமென்ன? வங்காளப் படையின் ஆங்கிலத் தளபதியான கர்னல் மல்லீசன் “The Making of the Bengal Army” வங்காளப்படையின் உருவாக்கம் எனும் சிறு ஏட்டில் “ஒரு இராணுவ வீரர்களின் கலகம் ….. விரைவாக தனது குணாதியத்தை மாற்றிக் கொண்டு தேசீய எழுச்சியாக மாறியது” என்று குறிப்பிடுகிறது.
 • வரலாற்றறிஞர் கீன் (Keen) இக்கிளர்ச்சிக்குக் காரணமாகச் செயல்பட்ட பல விஷயங்களை முன்வைக்கிறார். டல்ஹௌசியின் இணைப்புக் கொள்கைகளாலும் சீர்திருத்த வேகத்தாலும் பாதிப்புள்ளான இளவரசர்கள் , இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களின் குமுறல்கள் என ஏற்கனவே குவித்து வைக்கப்பட்டிருந்த எரிபொருளை கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள் தீப்பொறியை ஏற்படுத்திப் பற்றி எரியச் செய்தன.
 • எட்வர்டு ஜான் தாம்சன் இந்நிகழ்வை “பெருமளவில் உண்மையான விடுதலைப் போராட்டம்” என விளக்கியுள்ளார். 1909இல் வெளியான சாவர்கரின் The War of Indian Independence (இந்திய விடுதலைப் போர்) எனும் தனது நூலில் ஆங்கிலேயரால் இதுவரை வெறும் இராணுவப் புரட்சியே என்று வர்ணிக்கப்பட்ட இந்நிகழ்வு உண்மையில் அமெரிக்க சுதந்திரப் போரைப் போன்ற ஒரு விடுதலைப் போரே என வாதிடுகின்றனர்.
 • ஆங்கிலம் படித்த மத்தியதர மக்கள் இவ்வெழுச்சியில் எந்த ஒரு பங்கையும் வகிக்காவிட்டாலும் தேசிய வரலாற்றறிஞர்கள் இவ்வெழுச்சியை இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என்றே கூறுகின்றனர்.

பெருங்கிளர்ச்சிக்கான காரணங்கள்

நாடுகளை ஆக்கிரமித்தல்

 • டல்ஹௌசி வாரிசு உரிமை இழப்புக் கொள்கையின் மூலமாக அவத்தையும் ஜான்சியையும் இணைத்ததும், கடைசி பேஷ்வாவின் தத்தெடுக்கப்பட்ட மகனான நானா சாகிபை அவமானகரமாக நடத்தியதும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தின.
 • முறையான உரிமம் இல்லாமல், குத்தகை இல்லாத நிலங்களை வைத்திருப்போர் பற்றி விசாரிக்க நிலங்களை வைத்திருப்போர் பற்றி விசாரிக்க பம்பாய் அரசு அமைத்த இனாம் கமிஷனின் (1852) அறிக்கையின்படி 21,000க்கும் மேற்பட்ட தோட்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
 • இணைக்கப்பட்ட பகுதிகளில் குறிப்பாக அவத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலவருவாய் ஏற்பாடுகள் தாலுக்தாரின் நலன்களுக்குப் பாதகமாக அமைந்ததால் அவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகத் திரும்பினர்.
 • மேலும் அவத்தில் அரச குடும்பத்தின் ஆதரவை நம்பியிருந்த ஆயிரக் கணக்கான மக்களும், விலையுயர்ந்த ஆடைகள், அலங்கரிக்கப்பட்ட காலணிகள், அதிக விலையுள்ள நகைகள் ஆகியவற்றைத் தயாரிப்போரும் வாழ்விழந்தனர். இவ்வாறு டல்ஹௌசி தன்னுடைய விரிவாக்கக் கொள்கையின் மூலமாக பெருவாரியான மக்களுக்குத் துன்பத்தை விளைவித்தார்.

பெருஞ்சுமையான நிலவருவாய் முறை

 • இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட நிலவருவாய் ஏற்பாடுகளில் இருந்ததைக் காட்டிலும் தற்போது நிலவரி மிக அதிகமாக இருந்தது. ஆங்கிலேயருக்கு முன்னர் இருந்த இந்திய அரசுகள் விளைந்த நிலங்களுக்கு மட்டுமே வரி வசூலித்தனர்.
 • ஆங்கிலேயர் நிலவருவாயை வரியாகக் கருதாமல் வாடகையாகக் கருதினர். இதன்படி நிலத்தில் விவசாயம் செய்தாலும் செய்யாவிட்டாலும் அதே அளவு வரி வசூலிக்கப்பட்டது.
 • பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் விவசாயப் பண்டங்களின் விலைகள் கடுமையாக வீழ்ச்சியுற்றன. காலனியரசு கடனைக் குறைக்கவோ நிவாரணம் வழங்கவோ முன்வராத சூழலில் சிறு விவசாயிகளும் குத்தகைதாரர்களும் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாயினர்.

முஸ்லீம் உயர்குடியினரும் கற்றறிந்தோரும் ஒதுக்கப்படுதல்

 • முஸ்லீம்கள் பெரும்பாலும் அரசுப் பணிகளையே சார்ந்திருந்தனர். கம்பெனியின் ஆட்சிக்கு முன்னர் முந்தைய அரசுகளில் மதிப்புமிகுந்த பணிகளில் அவர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர். குதிரைப்படைத் தளபதிகளாகச் சிலர் உயர்ந்த ஊதியம் பெற்று வந்தனர்.
 • ஆனால் கம்பெனியின் ஆட்சியில் அவர்கள் துயரத்திற்கு ஆளாயினர். ஆங்கில மொழியும் மேலைக்கல்வியும் முஸ்லீம் அறிவுஜீவிகளை முக்கியமற்றவர்களாக ஆக்கியது. நீதிமன்றங்களில் பொதுப்பணித் தேர்வுகளில் பாரசீக மொழியின் பயன்பாடு ஒழிக்கப்பட்டது அரசுப் பணியில் முஸ்லீம்கள் சேர்வதற்கான வாய்ப்புகளைக் குறைத்தது.

மத உணர்வுகள்

 • 1856ஆம் ஆண்டு சட்டமானது வங்காளப் படையில் உயர் ஜாதியினரும் சேர்ந்துகொள்ள வழிவகை செய்தது. சாதிப்பற்றை, கைவிட்டு அவர்கள் படைகளில் சேரவேண்டும் அல்லது இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி முன்னேறும் வாய்ப்பைக் கைவிட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.
 • மேலும் சதிஒழிப்புச் சட்டம், விதவை மறுமணத்தை சட்டப்பூர்வமாக்கியது, பெண் குழந்தைகள் கொல்லப்படுவதற்கு எதிரான சட்டம் ஆகியவை சமய நம்பிக்கைகளில் ஆங்கில அரசு தலையிடுவதாகக் கருதப்பட்டது.
 • 1850இல் இயற்றப்பட்ட லெக்ஸ் லோசி (Lex Loci Act) சட்ட கிறித்தவர்களாக மதம் மாறியவர்களுக்கும் மூதாதையரின் சொத்துக்களில் உரிய பங்கினைப் பெறும் உரிமையை அளித்தது. இது வைதீக இந்துக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியது.
 • மேலும் துப்பாக்கித் தோட்டாக்களில் பசுவின் கொழுப்பும் பன்றியின் கொழுப்பும் தடவப்பட்டுள்ளது என்ற செய்தி பரவியபோது இந்து முஸ்லீம் படைவீரர்களின் மத உணர்வுகள் புண்பட்டன. இத்தோட்டாக்களை புதிதாக அறிமுகமான என்பீல்டு துப்பாக்கிகளுக்குள் செலுத்துவதற்கு முன்பாக அதைப் படை வீரர்கள் கடிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. இது கிறித்தவ மதத்திற்கு மாற்றம் செய்யும் முயற்சியாக கருதப்பட்டது.
 • ஆகவே அனைத்து வித்த்திலும் 1857ஆம் ஆண்டு, பெருங்கிளர்ச்சி கனிந்த ஆண்டாகும். கொழுப்பு தடவிய தோட்டா பிரச்சனை கிளர்ச்சி எனும் வெடிமருந்தில் வைக்கப்பட்ட தீப்பொறியாகும். பதவி பறிக்கப்பட்ட அதிருப்தி கொண்ட ராஜாக்கள், ராணிகள், ஜமீன்தார்கள், குத்தகைதாரர்கள் கைவினைஞர்கள், தொழிலாளர்கள் , முஸ்லீம் அறிவு ஜீவிகள் , இந்து பண்டிதர்கள் குருமார்கள் ஆகிய அனைவரும் இவ்வெழுச்சியைத் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளும் வாய்ப்பாகக் கருதினர்.

பெருங்கிளர்ச்சியின் போக்கு

 • இப்பெருங் கிளர்ச்சி கல்கத்தாவுக்கு அருகேயுள்ள பரக்பூரில் இராணுவக் கலகமாகவே தொடங்கியது. மங்கள் பாண்டே தனது இராணுவ மேலதிகாரியை சுட்டுக் கொன்றார். தொடர்ந்து அங்கு இராணுவக் கலகம் வெடித்தது.
 • அடுத்த மாதம் மீரட் நகரில் தோட்டாக்களைப் பெற வேண்டிய 90 வீரர்களில் ஐவர் மட்டுமே உத்தரவுக்கு அடிபணிந்தனர்.
 • மே மாதம் 10 ஆம் நாளில் மூன்று ரெஜிமெண்டுகளைச் சேர்ந்த சிப்பாய்கள் கிளர்ச்சியில் இறங்கி தங்கள் உயர் அதிகாரிகளைக் கொன்று, சிறையில் அடைக்கப்பட்டிருந்த வீரர்களை விடுதலை செய்தனர். மறுநாள் தில்லியை அடைந்த அவர்கள் ஐரோப்பியர் பலரைக் கொன்று நகரைக் கைப்பற்றினர் கிளர்ச்சியாளர்கள் இரண்டாம் பகதூர்ஷாவை பேரரசராகப் பிரகடனம் செய்தனர்.

 • ஜுன் மாதத்தில் கிளர்ச்சி ரோகில்கண்ட் பகுதிக்குப் பரவியது. ஒட்டுமொத்த கிராமப்புறமும் கிளர்ச்சியில் ஈடுபட்டது. கான் பகதூர் கான் தன்னைப் பேரரசருடைய வைஸ்ராயாக அறிவித்துக் கொண்டார்.
 • புந்தேல்கண்ட் பகுதியும் ஆற்றிடைப்பகுதி முழுவதும் ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்தியது. ஜான்சியில் ஐரோப்பியர் கொல்லப்பட்டு 22 வயதான லட்சுமிபாய் அரியணை ஏற்றப்பட்டார். கான்பூரில் நானா சாகிப் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.
 • பெண்களும் குழந்தைகளும் உட்பட சுமார் 125 ஆங்கிலேயர்களும் ஆங்கில அதிகாரிகளும் கொல்லப்பட்டு அவர்களது உடல்கள் ஒரு கிணற்றுக்குள் வீசப்பட்டன. கான்பூர் படுகொலை என்றறியப்பட்ட இந்நிகழ்வு ஆங்கிலேயரைக் கோபம் கொள்ளச் செய்தது. நிலைமைகளை எதிர்கொள்ள அனுப்பப்பட்ட தளபது ஹென்றி ஹேவ்லக் படுகொலைக்கு மறுநாளே நானா சாகிப்பைத் தோற்கடித்தார். ஆங்கில இராணுவ அதிகாரி நீல் கொடூரமான பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.
 • படுகொலைக்குக் காரணமானவர்கள் எனக் கருதப்பட்டோர் அனைவரும் கொல்லப்பட்டனர். நவம்பர் மாத இறுதியில் தாந்தியா தோபே கான்பூரைக் கைப்பற்றினார். ஆனால் அது விரைவில் காம்ப்பெல் என்பவரால் மீட்கப்பட்டது.
 • ஹென்றி லாரன்சால் பாதுகாக்கப்பட்ட லக்னோ ஆளுநர் மாளிகை கிளர்ச்சியாளர்களின் வசமானது. நானா சாகிப்பை ஹேவ்லக் தோற்கடித்த பின்னர் லக்னோவைக் கைப்பற்ற விரைந்தார். ஆனால் அவர் திரும்ப நேர்ந்தது. ஜூலை மாத இறுதியில் ஜான் லாரன்ஸால் தில்லிக்கு அனுப்பப்பட்ட ஜான் நிக்கல்சன் அதைக் கைப்பற்றுவதில் வெற்றி பேற்றார்.
 • முகலாயப் பேரரசர் இரண்டாம் பகதூர்ஷா சிறைக் கைதியானார். அவருடைய இரண்டு மகன்களும் பேரனும் சரணடைந்த பின் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
 • அவத்தில் மட்டும் தாலுக்தார்களும் விவசாயிகளுடன் பங்கு கொண்டதால் கீளர்ச்சி நீடித்தது. தாலுக்தார்களில் பலர் அவத் நவாபின் விசுவாசிகளாவர். ஆகவே அவர்கள் லக்னோவில் பேகம் ஹஸ்ரத் மஹாலோடு (நவாப் வஜித் அலியின் மனைவி) சேர்ந்து ஆங்கிலேயரை எதிர்த்தனர்.
 • பெரும்பாலான வீரர்கள் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஆதலால் விவசாயிகள் பாதிக்கப்பட்டபோது இவர்களும் பாதிப்புக்குள்ளாயினர். நீண்ட காலத்திற்கு வங்காளப்படைகளுக்கு அவத் நாற்றங்காலாக இருந்தது. அவத்தை சேர்ந்த வீரர்கள் கூறைந்த ஊதியம் குறித்தும் விடுமுறை பெறுவதிலுள்ள இடர்ப்பாடுகள் பற்றியும் புகார் செய்தனர். அவர்கள் அனைவரும் பேகம் ஹஸ்ரத் மஹாலின் பின் அணி திரண்டனர். ராஜா ஜெய்லால் சிங்கின் தலைமையில் அவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்டு லக்னோவைக் கைப்பற்றினர்.
 • ஹஸ்ரத் மஹால் தன் மகன் பிர்ஜிஸ் கத்ராவை அவத்தின் அரசராக அறிவித்தார். கான்பூரில் பழிதீர்த்துக் கொண்ட நீல் லக்னோவில் தெருச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார். 1858 மார்ச் மாதத்தில்தான் லன்கோனை ஆங்கிலேயரால் கைப்பற்ற முடிந்தது.
 • ஹஜ் ரோஸ் ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் ஜான்சியை முற்றுகையிட்டு தாந்தியா தோபேயைத் தோற்கடித்தார். இருந்தபோதிலும் லட்சுமிபாய் துணிச்சலுடன் போரிட்டு குவாலியரைக் கைப்பற்றினார்.
 • ஆங்கிலேயருக்கு ஆதரவான குவாலியர் அரசர் சிந்தியா தப்பியோடினார். ரோஸ் தன்னுடைய படைகளோடு லட்சுமிபாயுடன் நேரடியாக மோதினார். வியப்பூட்டும் வகையில் லட்சுமிபாய் போரில் பங்கேற்றுவீரமரணமடைந்தார். கிளர்ச்சியாளர்களில் லட்சுமிபாய் மிகச் சிறந்த தைரியம் மிக்க தலைவரென லட்சுமிபாயைப் பற்றி ரோஸ் குறிப்பிட்டுள்ளார்.
 • குவாலியர் விரைவில் மீட்கப்பட்டது. 1858இல் கானிங் இராணுவப் புரட்சி ஒடுக்கப்பட்டு அமைதி மீட்கப்பட்டதாக அறிவித்தார். தாந்தியா தோபே கைது செய்யப்பட்டு 1858 ஏப்ரல் மாதம் கொல்லப்பட்டார்.
 • இரண்டாம் பகதூர்ஷா செப்டம்பர் 1857இல் கைது செய்யப்பட்டு குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ரங்கூனுக்கு (மியான்மர்) நாடு கடத்தப்பட்டார். அங்கேயே அவர் நவம்பர் 1862 இல் தனது 87வது வயதில் மரணமடைந்தார். அவருடைய இறப்போடு முகலாய அரசவம்சம் முடிவுக்கு வந்தது.
 • சென்னை மௌன்ட் ரோட்டில் வைக்கப்பட்டிருந்த நீல் சிலை இந்திய தேசியவாதிகளைக் கோபம் கொள்ளச் செய்தது. அதை அப்புறப்படுத்த காங்கிரஸ் சத்தியாகிரகம் செய்தது. ராஜாஜியின் காங்கிரஸ் அமைச்சரவை (1937 – 39) இச்சிலையை அகற்றி சென்னை அருங்காட்சியகத்தில் வைத்தது.

பெருங்கிளர்ச்சியின் விளைவுகள்

அலகாபாத்தில் 1858 நவம்பர் 1இல் அரசு தர்பார் கூட்டப்பட்டது. விக்டோரியா ராணி வெளியிட்ட பேரறிக்கை தர்பார் மண்டபத்தில் கானிங்பிரபுவால் வாசிக்கப்பட்டது. அவரே இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலும் முதல் வைஸ்ராயுமாவார்.

 • இதன் பின்னர் இந்தியா ஆங்கிலேய முடியரசின் பெயரால் அரசுச் செயலர் மூலம் ஆளப்படும். பதினைந்து உறுப்பினர்களைக் கொண்ட இந்தியா கவுன்சில் எனும் அமைப்பு அரசு செயலருக்கு உதவி செய்யும். இதன் விளைவாகக் கிழக்கிந்தியக் கம்பெனியின் இயக்குநர் குழுவும், கட்டுப்பாட்டுக் குழுவும் ஒழிக்கப்பட்டன. ஆங்கிலேய முடியரசும் நாடாளுமன்றமும் அரசியல் அமைப்பின் அடிப்படையில் இந்தியாவை ஆளும் பொறுப்பை ஏற்றுக் கொள்வர். கிழக்கிந்தியக் கம்பெனியின் படை கலைக்கப்பட்டு இங்கிலாந்து அரசின் படைகளோடு இணைக்கப்படும்.
 • ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி இந்திய அரசர்களோடு மேற்கொண்ட உடன்படிக்கைகளை இப்பேரறிக்கை ஏற்றுக் கொண்டது. அவர்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் கௌரவத்தையும் மதிப்பாகவும் உறுதியளித்தது. மேலும் இந்தியாவில் உள்ள ஆங்கிலேயருக்குச் சொந்தமான பகுதிகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கம் இல்லை எனவும் அறிவித்தது.
 • 1853ஆம் ஆண்டு சட்டமன்றம் ஐரோப்பியர்களை மட்டுமே உறுப்பினர்களாக கொண்டிருந்ததால் அவர்கள் இந்தியரின் கருத்துக்களைத் தெரிந்துகொள்ள அக்கறை இல்லாமல் இருந்ததே இச்சிக்கலுக்கு காரணம் என்று கூறிய அறிக்கை 1861இல் அமைக்கப்படும் சட்ட மன்றத்தில் இந்தியப் பிரதிநிதிகள் நியமிக்கப்படுவர் எனக் கூறியது.
 • வாரிசு உரிமை இழப்புக் கோள்கையும் நாடிணைப்புக் கொள்கையும் கைவிடப்படும். ஆங்கிலேயரை நேரடியாகக் கொன்ற கிளர்ச்சியாளர்களைத் தவிர மீதமுள்ள கிளர்ச்சியாளர் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படும்.
 • கல்வி, பொதுப்பணித் திட்டங்கள் (சாலைகள் இருப்புப்பாதை, தந்தி, நீர்ப்பாசனம்) ஆகியவை முடுக்கிவிடப்படும்.
 • கடந்த காலம் மீண்டும் வரும் எனும் நம்பிக்கை மங்கியது. இந்தியச் சமூகத்தின் மரபு சார்ந்த கட்டமைப்பு உடையத் துவங்கியது. மேற்கத்தியமயமான ஆங்கிலக் கல்வி பயின்ற நடுத்தர வர்க்கம் தேசிய சிந்தனைகளோடு உருவானது.

காலக்கோடு

மதராஸ் உடன்படிக்கை 1769

இரண்டாம் மைசூர் போர் ஆரம்பம் 1780

ஹைதர் அலியின் இறப்பு 1782

பாரிஸ் உடன்படிக்கை 1783

மங்களூர் உடன்படிக்கை 1784

வேலூர் கிளர்ச்சி 1806

இந்தியப் பெருங்கிளர்ச்சி 1857

விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை 1858

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *