இந்தியப் பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் Notes 11th Economics

11th Economics Lesson 2 Notes in Tamil

2. இந்தியப் பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும்

சுதந்திரம் எந்த விலைக்கும் ஈடாகாது. சுதந்திரம் வாழ்வின் சுவாசம். வாழ்வதற்காக மனிதன் எதைக் கொடுக்க மாட்டான்?

 • டெய்லர் கோவன் (Tyler Cowen)

அறிமுகம்

இந்த பாடம் சுதந்திரத்திற்கு முன் பின் இந்தியாவின் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை பற்றி விவாதிக்கிறது. இந்தியா நீண்ட காலமாக காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. காலனித்துவம் என்பது இரண்டு நாடுகளுக்கிடையேயான சமூக மற்றும் பொருளாதார தொடர்புகளில் ஒரு நாடு அதிகாரம் செலுத்தும் நிலையிலும், மற்றொரு நாடு அடிமையாக இருப்பதையும் குறிக்கும். அதிகார நிலையில் உள்ள நாடு தான் அதிகாரம் செலுத்தும் நாட்டின் மீது அரசியல் கட்டுப்பாடு மட்டுமில்லாமல் பொருளாதார கொள்கைகளையும் தீர்மானிக்கிறது. அடிமை நாட்டு மக்கள் தங்கள் நாட்டின் வளங்களை பயன்படுத்துவதிலும் முக்கிய பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் தன்னிச்சையான முடிவுகளை மேற்கொள்ள முடியாமல் இருப்பார்கள். காலனி ஆதிக்கத்தின் கசப்பான அனுபவத்தை இந்தியா பெற்றுள்ளது.

ஆங்கிலேயர் காலத்தில் இந்திய பொருளாதாரம்

 • வாஸ்கோடகாமா இந்தியாவிலுள்ள கோழிக்கோட்டிற்கு மே 20, 1948ல் வந்ததற்குப் பின்னரே இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுடனான கடல் வாணிகம் ஆரம்பித்தது.
 • போர்ச்சுகீசியர்கள் 1510லிருந்து கோவாவுடன் வாணிகம் செய்து வந்தனர். 1601ல் கிழக்கிந்தியக் கம்பெனி ஆரம்பிக்கப்பட்டவுடன் ஆங்கிலேயர்கள் இந்தியப் பெருங்கடல் வழி வாணிகத்தைத் தொடங்கினர்.
 • 1614ல் சர் தாமஸ் ரோ ஜஹாங்கீரிடமிருந்து தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி பெறுவதில் வெற்றி பெற்றதுடன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை மெதுவாக ஆக்கிரமிப்பு செய்தார்.
 • பிளாசிப் (PLASSEY) போருக்கு நூறு ஆண்டுகளுக்குப் பின் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தது. 1858-ல் ஆங்கிலப் பாராளுமன்றம், இந்தியாவை ஆளும் அதிகாரத்தை கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து ஆங்கிலேயருக்கு மாற்றி, ஒரு சட்டம் இயற்றியது. கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து அதிகாரம் ஆங்கிலேயருக்கு மாற்றப்பட்ட போது இந்திய பொருளாதார நிலைமையை முழுவதுமாக மாற்ற இயலவில்லை.

 • பிரிட்டன் நாடு, இந்தியாவைக் காலனி ஆதிக்கத்தின் கீழ் 200 ஆண்டுகளுக்கும் மேலாக சீரழித்து வந்தது. காலனி ஆதிக்க சிதைப்பின் அடிப்படையில் முழு காலத்தையும் வரலாற்றுப் பொருளியல் வல்லுநர்கள் மூன்று கட்டங்களாகப் பிரித்தனர். அவை, வணிக மூலதனக் காலம், தொழில் மூலதனக் காலம், நிதி மூலதனக் காலம்.

வணிக மூலதனக் காலம்

 • 1757 லிருந்து 1813 வரையிலான காலம் வணிக மூலதனக் காலம் ஆகும்.
 • கிழக்கிந்தியக் கம்பெனியின் முக்கிய நோக்கம் இந்திய மற்றும் கிழக்கிந்தியப் பொருட்களை ஒருவர் முற்றுரிமையாக வாணிபம் செய்து இலாபம் ஈட்டுவதேயாகும்.
 • இக்காலத்தில் பிரிட்டனில் தொழில் மூலதனத்தை முன்னேற்ற இந்தியா ஒரு மிக முக்கியமான சுரண்டல் பிரதேசமாக கிழக்கிந்தியக் கம்பெனி கருதப்பட்டது.
 • 1750 மற்றும் 1760 களில் வங்காளமும், தென்னிந்தியாவும் கிழக்கிந்தியக் கம்பெனியின் அரசியல் நெருக்கடிக்கு உள்ளான போது முற்றுரிமை வணிகத்தின் (அல்லது வாணிபத்தின்) நோக்கம் நிறைவேற்றியது.
 • உபரிகளை இங்கிலாந்திற்கு கடத்துவதில் இந்நிர்வாகம் வெற்றி பெற்றது. இந்தியத் தலைவர்கள் இப்பிரச்சினையை சுரண்டலுடன் ஒப்பிட்டனர்.
 • எல்லாவற்றிற்கும் மேலாக இக்கம்பெனியின் அலுவலர்கள் அனைவரும் நேர்மையற்று, ஊழல் நிறைந்தவர்களாக இருந்தனர்.

தொழில் மூலதனக் காலம்

 • 1757 லிருந்து 1813 வரையிலான காலம் வணிக மூலதனக் காலம் ஆகும்.
 • 1813 முதல் 1858 வரையிலான காலம் தொழில் மூலதனக் காலமாகும்.
 • பிரிட்டிஷ் துணிமணிகளின் சந்தையாக இந்தியா விளங்கியது.
 • இந்தியாவிலிருந்து மலிவு விலையில் பெறப்பட்ட கச்சாப் பொருட்கள் இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு முழுமை பெற்ற பொருட்கள் இந்தியாவிற்கு அதிக விலையில் இறக்குமதி செய்யப்பட்டன. இவ்வாற்ய், இந்தியர்கள் வஞ்சிக்கப்பட்டனர்.
 • இந்தியாவின் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் தூக்கி எறியப்பட்டன.

நிதி மூலதனக் காலம்

 • 19ஆம் நூற்றாண்டின் இறுதி வருடங்களிலிருந்து சுதந்திரம் அமைந்த வரையிலான காலம் மூன்றாவது கட்டமான நிதி மூலதனக் காலமாகும். இக்கால கட்டத்தில் வியாபார நிறுவனங்கள், செலாவணி ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்கள் மாற்று வங்கிகள் மற்றும் சில மூலதன ஏற்றுமதிகளில் நிதி ஏகாதிபத்தியம் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தத் தொடங்கியது.
 • இந்திய மூலதனத்தைக் கொள்ளையடித்து இந்தியாவில் இருப்புப் பாதை , சாலை வட்திகள், அஞ்சலகத்தூறை, பாசனம், ஐரோப்பிய வங்கி முறை மற்றும் கல்வியில் குறிப்பிட்ட பகுதிகளில் பெரிய அளவில் முதலீடு செய்ய பிரிட்டன் முடிவு செய்தது. இதனால் சில பயன்களும் விளைந்தன என்பதை மறுக்க முடியாது.
 • பிரிட்டன் இரயில்வே கட்டமைப்புக் கொள்கையானது கற்பனை செய்ய முடியாத பொருளாதாரப் பயனில்லாக் கொள்கையாகும். இந்தியாவின் வரிசெலுத்துவோர் இருப்புப்பாதை நிர்மாணத்திற்கு நிதி செலுத்தக் கட்டாயப்படுத்தப்பட்டனர். 1858ஆம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனி தனது அரசியல் அதிகாரத்தை பிரிட்டிஷ் அரசிடம் ஒப்படைத்தது.

இந்தியக் கைவினைப் பொருட்கள் நசிவுக் காலம்

 • இந்தியக் கைவினைப் பொருட்களுக்கு உலக அளவில் மிகுந்த வரவேற்பு இருந்தது. மிகுந்த வரவேற்பு இருந்தது. இந்திய ஏற்றுமதியில் கையால் நெய்யப்பட்ட பருத்தி, பட்டு ஆடைகள் , காலிகோக்கள் அலங்காரப் பொருட்கள் மற்றும் மரச்சிற்பங்கள் முதன்மையானவையாக இடம்பெற்றிருந்தன.

 • பாகுபாடான சுங்க வரிக்கொள்கை மூலம் பிரிட்டீஷ் அரசு வேண்டுமென்றே இந்தியக் கைவினைப் பொருட்களை அழித்தது.
 • நவாப் மற்றும் அரசர்கள் காலம் முடிவுக்கு வந்தவுடன், இந்தியக் கைவினைப் பொருட்களைக் காப்பாற்ற எவருமில்லாத நிலை ஏற்பட்டது.
 • இந்தியக் கைவினைப் பொருட்களால் இயந்திரத் தயாரிப்புப் பொருட்களுடன் போட்டியிட முடியவில்லை.
 • இந்தியாவில் இரயில்வே அறிகமுகமான பின் பிரிட்டிஷ் பொருட்களுக்கான உள்நாட்டு சந்தை அதிகரித்தது.

இந்தியா நில உடைமை முறைகள்

நில உடைமை முறை என்பது நிலங்களுக்கான உரிமை மற்றும் நிர்வகித்தல் பற்றியதாகும். பிற முறைகளிலிருந்து நில உடைமை முறை பின்வரும் விதங்களில் வேறுபடுகிறது.

அ) நிலம் யாருக்கு சொந்தமானது?

ஆ) நிலத்தில் யார் அறுவடை செய்வது?

இ) நிலவருவாயை அரசுக்கு செலுத்துவதற்குப் பொறுப்பானவர் யார்?

மேற்கண்ட வினாக்களின் அடிப்படையில் சுதந்திரத்திற்கு முன் மூன்று விதமான நில உடைமை முறைகள் இருந்தன. அவை ஜமீன்தாரி முறை ஆகும்.

ஜமீன்தாரி முறை அல்லது நிலச்சுவான்தாரா முறை

 • லார்டு காரன் வாலிஸ் 1793-ல் நிரந்தர சொத்துரிமைச் சட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு ஜமீன்தாரி முறையை ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி உருவக்குகியது.
 • இம்முறையில் நிலச்சுவான்தாரர்களும், ஜமீன்தாரர்களும் நிலத்தின் சொந்தக்காரர்களாக அறிவிக்கப்பட்டு நில வருவாயை அரசுக்குச் செலுத்த வேண்டிய முழுப்பொறுப்பும் அவர்களிடமே வழங்கப்பட்டது.
 • வசூலிக்கப்பட்ட நிலவருவாயில் 11-ல் 10-பங்கு அரசுக்குச் செலுத்தப்பட வேண்டும் என்றும் மீதத்தொகை ஜமீன்தார்களுக்கான ஊதியமாகவும் அறிவிக்கப்பட்டது.

மஹல்வாரி முறை அல்லது இனவாரி முறை

 • இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் மத்தியப்பிரதேசம் மற்றும் பஞ்சாபிற்கும் விரிவுபடுத்தப்பட்டது. இம்மூறையில் கிராம மக்களாலான குழுவினர் நிலச் சொந்தக்காரர்களாக இருந்து நிர்வாகம் செய்தனர்.
 • அக்குழுவினர் நிலத்தை விவசாயிகளிடம் பிரித்துக் கொடுத்து அவர்களிடமிருந்து வருவாயைப் பெற்று அரசுக்குச் செலுத்தினர்.

இரயத்துவாரி முறை அல்லது சொந்த சாகுபடி முறை

இம்முறை முதன்முதலில் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டு பின்னர் மகாராஷ்டிரா, குஜராத், அஸ்ஸாம், கூர்க், கிழக்கு பஞ்சாப் மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இம்முறையில் நிலத்தைச் சொந்தம் கொண்டாடும் உரிமை மற்றும் நிலத்திற்கான கட்டுபாடு, நில உரிமையாளரிடமே இருந்தது. உரிமையாளர்களிடம் நேரடியான உறவு இருந்தது. சுதந்திரத்திற்கு முன்னர் இம்முறை குறைந்த அடக்குமுறை உடையதாக இருந்தது.

தொழில் மற்றும் காலனித்துவ முதலாளித்துவம்

இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் தொழில் மாற்ற செயல்பாடு பொதுவாக இரண்டு வகைகளாகும்.

அ) 19ஆம் நூற்றாண்டில் தொழில் வளர்ச்சி

19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய முதலீட்டாளர்கள் தாங்கள் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில், பல முன்னோடி தொழில் நிறுவனங்களை இந்தியாவில் ஆரம்பித்தனர். ஆங்கிலேய நிறுவனங்களுக்கு நிலையான ஆதரவு கிடைத்தது. 19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் தொழில் புரட்சிக்கு வித்திட்ட போதும் அவர்கள் இலாபத்தை ஈட்டுவதையே முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர்; இந்திய பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் ஆர்வமில்லாமல் இருந்தனர். 19-ம் நூற்றாண்டின் இறுதியில் 36 சணல் ஆலைகளும், 194 பருத்தி ஆலைகளும் அதிக எண்ணிக்கையிலான தொழில் பூங்காக்களும் இருந்தன. நிலக்கரி உற்பத்தி ஆண்டுக்கு 6 மில்லியன் டன்களாக உயர்ந்தது.

ஆ) 20ஆம் நூற்றாண்டில் தொழில் முன்னேற்றம்

 • 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சுதேசி இயக்கம் இந்தியாவில் தொழில் மயமாதலை ஊக்குவித்தது. 1914 ஆம் ஆண்டில் முதல் உலகப் போர் வெடிக்கும் வரை இந்தியாவின் பழைய – புதிய நிறுவனங்கள் மெதுவான மற்றும் நிலையான வளர்ச்சியைப் பராமரித்து வந்தன.
 • இக்காலத்தில் 70க்கும் மேற்பட்ட பருத்தி ஆலைகளும், 30க்கும் மேற்பட்ட பருத்தி ஆலைகளும், 30க்கும் மேற்பட்ட சணல் ஆலைகளும் அமைக்கப்பட்டன. நிலக்கரி உற்பத்தி இரு மடங்கானது.
 • இரும்பு எஃகு தொழிற்சாலைகளுக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. இரயில்வே அமைப்பு விரிவுபடுத்தப்பட்டது.
 • 1924 முதல் 1939 வரையிலான கால கட்டத்தில் பல்வேறு பெரிய நிறுவனங்களான இரும்பு, எஃகு, பருத்தி நெசவாலைகள், சணல், தீப்பெட்டி, சர்க்கரை, காகித மற்றும் காகித கூழ் நிறுவனங்கள் போன்றவை பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன.
 • இது இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட தொழில்கள் விரிவடைய வழிவகுத்தது. இவ்வாறு பாதுகாக்கப்பட்ட தொழில்கள் முழுமையாக இந்தியச் சந்தையைக் கைப்பற்றி அயல்நாட்டுப் போட்டிகளை முழுவதுமாக முறியடித்தன.
 • ஆரம்பத்தில் ஆங்கிலேய அரசு இந்தியப் பொருளாதாரத்தை கச்சாப் பொருட்கள் உருவாக்குவதாக உருமாற்றி, தங்கள் நட்டின் பொருட்களுக்கான சந்தையாக இந்தியாவை ஆக்க முயற்சி செய்தது.
 • இதன் மூலம் பல வரிகளில் இந்தியப் பொருளாதாரத்தை நசுக்க முயற்சித்தது. ஆங்கிலேய முதலீட்டாளர்கள், சாதகமான இந்தியப் புவியியல் காரணிகளைப் பயன்படுத்தி படிப்படியாக சணல், தேயிலை, காபி, பருத்தி நெசவு, காகிதம், காகிதக்கூழ் , சர்க்கரை போன்ற பல்வேறு தொழிற்களை இந்தியாவில் உருவாக்கினார்கள் ஆனால் இந்தியத் தொழிலார்களை பெருமளவில் உறிஞ்சினார்கள்.

ஆங்கிலேயர் ஆதிக்கத்தால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள்

 1. ஆங்கில ஆதிக்கம் இந்தியத் தொழில்களை முடக்கியது.
 2. ஆங்கிலப் பொருளாதாரக் கொள்கைகள் இந்தியாவின் மூலதன ஆக்கத்தைக் குன்றச் செய்து வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தியது.
 3. நம்மிடமிருந்து சுரண்டப்பட்ட சொத்துக்கள் ஆங்கிலேயர்களின் மூலதன முன்னேற்றத்திற்கு நிதியுதவு செய்தன.
 4. இந்தியாவின் பெரும்பாமையான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு வேளாண்மையை சார்ந்து இருந்தபோதும், இந்திய வேளாண்மைத் தொழில் தேக்கமடைந்து நலிவுற்றது.
 5. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆதிக்கம் நவீன தொழில் துறை வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க எவ்விதப் பங்களிப்பும் வழங்காமல், இந்தியாவின் கைவினைத் தொழில் நிறுவனங்கள் இருந்தது.
 6. ஆங்கில காலனி ஆதிக்கத்தால் தோட்டக்கலை, சுரங்கங்கள், சணல் ஆலைகள் வங்கிகள் மற்றும் கப்பல் போக்குவரத்து போன்ற தூறைகளில் முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் முதலாளித்துவ நிறுவனங்களை ஊக்குவித்தது. அதை வெளிநாட்டவர்கள் நிர்வகித்தார்கள். இத்தகைய இலாப நோக்க நடவடிக்கைகளால் இந்திய வளங்கள் மேலும் சுரண்டப்பட்டன.

1991க்கு முந்தைய முக்கிய தொழிற்கொள்கைகள்

ஆசியாவின் மூன்றாவது முக்கியப் பொருளாதாரம் இந்தியாவாகும். 70 ஆண்டு கால சுதந்திர வாழ்க்கை இந்தியாவின் சமூகப்பொருளாதார முன்னேற்றத்தில் சொரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 • ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் குறிப்பாக தொழில் மயமாதலைச் சார்ந்துள்ளது. சுதந்திரம் அடைந்த போது இந்தியா பலவீனமான தொழில் அடிப்படையைப் பெற்றிருந்தது.
 • ஆகையால், சுதந்திரம் பெற்றதற்குப் பிந்தைய காலத்தில், இந்திய அரசு வலிமையான தொழில் அமைப்பை உருவாக்குவதற்கான சிறப்பு வலியுறுத்தல்களை மேற்கொண்டது. 1948 மற்றும் 1956ஆம் ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட தொழிற்கொள்கை தீர்மானங்கள் சிறு மற்றும் பெரிய அளவிலான நிறுவனங்களை முன்னேற்றுவதற்கான அவசியத்தை எடுத்துக்கூறியன.

1948ன் தொழிற்கொள்கை தீர்மானம்

இந்திய அரசு தொழில் மயமாதலின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை உணர்ந்தது. ஆகையால் 1948 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 அன்று தனது முதல் தொழிற்கொள்கையை அறிவித்தது. இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கம் இந்தியாவில் கலப்புப் பொருளாதாரத்தை அறிமுகப்படுத்துதலாகும்.

 1. இந்தியத்தொழில்கள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டன. அவை பொதுத்துறை (மூலத்தொழில்கள்), பொது மற்றும் தனியார்துறை (முக்கிய தொழில்கள்), கட்டுப்படுத்தப்பட்ட தனியார் துறை மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள்.
 2. இக்கொள்கை குடிசைத் தொழில்கள் மற்றும் சிறிய அளவிலான தொழில்களைப் பாதுகாக்க முயற்சி மேற்கொண்டது.
 3. இருப்புப் பாதைகள் மற்றும் இரும்புத்தாது முதலான கனிம வளங்களுக்கான பிரத்தியேக உரிமையில் மாநில மற்றும் மத்திய அரசுகள் ஏகபோகம் பெற்று இருந்தன (ஆனால் இப்போது நிலைமை மாறிக்கொண்டு வருகிறது)
 4. இந்திய அரசு, பிற நாடுகளிலிருந்து கிடைக்கக் கூடிய வெளிநாட்டு முதலீட்டின் முக்கியத்தை ஊக்குவித்தாலும் அதன் முழுக் கட்டுப்பாடு இந்தியர்களின் கரங்களிலேயே இருக்க வேண்டும் என்று முடிவு செய்தது.

1956 தொழிற்கொள்கை தீர்மானம்

 1. 1956ஆம் ஆண்டு தொழிற்துறை தீர்மானக் கொள்கை, பொதுத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்தது. அதே நேரத்தில் தனியார் துறையும் நியாயமான முறையில் வழி நடத்தியது.
 2. அரசாங்கம் குடிசைத் தொழில் மற்றும் சிறு தொழில்களை ஊக்குவித்து நேரடி மானியம் அளித்தது, பெருமளவு உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்தியை கட்டுப்படுத்த பல்வேறு விதமான வரிகளையும் அரசு விதித்தது.
 3. வளர்ச்சிகளாக் வட்டார வேற்றுமையைக் குறைக்க இந்த தொழிற் கொள்கை வலியுறுத்தியது.
 4. இந்திய முதலீடுகளின் தேவையை அரசு புரிந்திருந்தது.

பசுமைப்புரட்சி

பசுமைப்புரட்சி என்பது வேளாண் துறையில் தொழில்நுட்ப மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 1960-க்கு பிறகு பாரம்பரிய வேளாண் முறைகள் சிறிது சிறியதாக மாற்றப்பட்டு, புதிய தொழில் நுட்பத்தை வேளாண் முறைகள் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டன. இதற்கு ஆரம்பமாக 1960-61ல் ஏழு மாவட்டங்களில் “வழிநடத்தும் திட்டம்” புதிய தொழில் நுட்பத்தை வேளாண் துறையில் பயப்படுத்தும் முயற்சி எடுக்கப்பட்டது. இது அதிக விளைச்சல் தரும் ரகங்களை உற்பத்தி செய்வதற்கான திட்டம் (HYVP) ஆகும்.

பசுமைப்புரட்சியின் சாதனைகள்

 1. புதுமையான யுக்திகளின் பெரிய சாதனை முதன்மைப் பயிர்களான கோதுமை மற்றும் நெல் போன்ற பயிர்களின் உற்பத்தி பன்மடங்காகப் பெருகியது ஆகும்.
 2. அதிக விளைச்சல் தரக்கூடிய வகைகளான நெல், கோதுமை, மக்காச்சோளம் மற்றும் சோளம் போன்ற பயிர்களுக்கு மட்டுமே பசுமைப்புரட்சி முக்கியத்துவம் கொடுத்தது.
 3. இப்புது யுக்தி வணிகப்பயிர்கள் அல்லது பணப்பயிர்களான கரும்பு, பருத்தி, சணல் எண்ணெய் வித்துக்கள் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவற்றின் உற்பத்தியை அதிகரிக்க உதவியது.
 4. சிறந்த விதைகள் மூலமாக அனைத்துப் பயிர்களின் உற்பத்தித் திறனும் பெருகியது.
 5. வேளாண்மைக்குத் தேவையான கருவிகளான டிராக்டர்கள், இயந்திரங்கள், கதிரடிப்பான்கள் மற்றும் பம்ப் செட்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் தொழில்கள் வளர்வதற்கு பசுமைப்புரட்சி நேரடிக் காரணமாக விளங்கியது.
 6. கிராமப்புற மக்களுக்கு பசுமைப்புரட்சி செழிப்பை வழங்கியது. அதிகமான உற்பத்தி கிராமப்புற மக்களுக்கு அதிக வேலை வாய்ப்பை வழங்கியது. இதன் காரணமாக அவர்களது வாழ்க்கைத் தரம் உயர்வடைந்தது.
 7. பல்வகைப் பயிர் வளர்ப்புமுறை மற்றும் அதிக அளவில் வேதி உரங்களைப் பயன்படுத்தியதால் உடைப்பிற்கான தேவை அதிகரித்தது.
 8. வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலமாக நிதி ஆதாரங்கள் வழங்கப்பட்டன. இந்த வங்கிகள் விவசாயிகளுக்கு எளிமையான முறைகளில் கடன்களை வழங்கின.
 • புதிய வேளாண் புத்தியை பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. புதிய வேளாண் தொழில் நுட்பம், விதை – உரங்கள் – தண்ணீர் தொழில்நுட்பம் அல்லது எளிதாக பசுமை புரட்சி என அழைக்கப்படுகிறது.

பசுமைப்புரட்சியின் பலவீனங்கள்

 1. பருவ மழைகளை நம்பியிருக்கும் நிலைமை இன்னும் மாறவில்லை. இதனால் , இந்திய வேளாண்மையில் இன்று வரை ஒரு நிச்சயமற்ற நிலைமை நிலவுகிறது.
 2. விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் தண்ணீருக்காக பேரளவு மூலதனம் தேவைப்படுகிறது.
 3. பெரு, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு இடையேயான வருமான இடைவெளி அதிகரித்தது நீர்ப் பாசனம் மற்றும் மழைப் பொழிவை நம்பியிருக்கும் பகுதிகளுக்கு இடையே ஏற்றத்தாழ்வு அதிகரித்தது இக்கருத்துக்கு மாற்றுக் கருத்தும் உள்ளது.
 4. பண்ணைகள் இயந்திரமயமாக்கப்பட்டதால் பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் சில பகுதிகளைத் தவிர பிற கிராமப்புறங்களில் விவசாயத் தொழிலாளர்களுக்கான வேலையின்மை அதிகரித்தது.

இரண்டாவது பசுமைப்புரட்சி

 • அதிக வேளாண்மை வளர்ச்சிக்காக இந்திய அரசு இரண்டாவது பசுமைப் புரட்சியை செயல்படுத்தியது. இந்த இரண்டாவது புரட்சியின் முக்கிய நோக்கம், 2006-2007 இல் 214 மில்லியன் டன்களாக இருந்த உணவுப்பயிர் உற்பத்தியை 2020ல் 400 மில்லியன் டன்களாக உயர்த்துதலாகும்.
 • வேளாண்மையின் வளர்ச்சி விகிதத்தை அடுத்து 15-ஆண்டுகளில் 5%-லிருந்து 6-மாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

இரண்டாவது பசுமைப் புரட்சிக்கான தேவைகள்

 1. ஒரு ஏக்கருக்கான உற்பத்தியை இரண்டு மடங்காகத் தரக்கூடிய மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை அறிமுகம் செய்தல்.
 2. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை சந்தைப்படுத்த தனியார் துறையின் பங்களிப்பை உறுதி செய்தல்
 3. பாசன வசதிகளைத் துரிதப்படுத்துவதிலும் நீர் ஆதாரங்களை நிர்வகிப்பதிலும் அரசு முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.
 4. நதி நீர் இணைப்பின் மூலம் உபரி நீரை பற்றாக்குறையுள்ள பகுதிகளுக்கு பரிமாற்றம் செய்ய வேண்டும்.

பெரிய அளவிலான தொழிற்சாலைகள்

 • பெரிய அளவிலான தொழிற்சாலை என்பது பெரிய உள் கட்டமைப்பு அதிக மனிதசக்தி, அதிக மூலதன சொத்துக்களை உள்ளடக்குவதாகும். இது பல தொழிற்சாலைகளை கண்காணித்து ஒரே தொழிற்சாலையின் கீழ் உள்ளடக்குவதாகும்.
 • இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலை, நெசவு தொழிற்சாலை, ஆட்டோமொபைல் தொழிற்சாலை போன்ற கனரக தொழிற்சாலைகள் அனைத்தும் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் ஆகும்.
 • கடந்த சில வருடங்களாக தகவல் தொழில் தொழிலின் அபரிமித வளர்ச்சி மற்றும் அதன் அதிக வருமான உருவாக்கம் போன்ற காரணங்களினால், தகவல் தொழில்நுட்ப தொழில்களும் பெரிய அளவிலான தொழில்களின் வகையில் சேர்க்கப்பட்டுள்ளது.
 • இந்திய பொருளாதாரமானது பொருளாதார வளர்ச்சி வெளிநாட்டு பண உருவாக்கம், அதிக நபருக்கு வேலை வாய்ப்பு வழங்குதல் ஆகியவற்றிற்குபெரும் தொழிற்சாலையை பெரிதும் நம்பியுள்ளது.
 • பெரும் நிறுவனங்களோ அதிக இலாபம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கோண்டிருக்கும் என பொருளியல் கோட்பாடுகள் கூறியுள்ளன பின்வருபவை பெரிய அளவிலான தொழிற்சாலையானவை ஆகும்.
 1. இரும்பு எஃகு தொழிற்சாலை

 • முதல் எஃகு தொழிற்சாலை ஜாரியாவிலுள்ள குல்டி என்னுமிடத்திலும் மேற்கு வங்காளத்தில் உள்ள “வங்காள இரும்பு தொழில்” கம்பெனி 1870 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
 • 1907-ல் பெரிய அளவிலான இரும்பு எஃகு தொழிற்சாலை (TISCO) ஜாம்ஷெட்பூரிலும், அதனை தொடர்ந்து JJSCO தொழிற்சாலை 1919 பான்பூரிலும் தொடங்கப்பட்டன. இவை இரண்டும் தனியார் துறை ஆகும்.
 • முதன் முதலில் நிறுவப்பட்ட பொதுத்துறை நிறுவனம் பத்ராவதியில் உள்ள விஸ்வேஸ்ரய்யா இரும்பு எஃகு தொழில் ஆகும்.

பொதுத்துறையில் எஃகு நிறுவனம்

இடம் உதவி
ரூர்கேலா (ஒரிசா) ஜெர்மனி
பிலாய் (மத்திய பிரதேசம்) ரஷ்யா அரசு
துர்காபூர் (மேற்குவங்காளம்) இங்கிலாந்து அரசு
பொகாரோ (ஜார்கண்ட்) ரஷ்ய அரசு
பர்னபூர் (மேற்கு வங்காளம்) தனித்துறையிலிருந்து பெறப்பட்டது.
விசாகப்பட்டினம் (ஆந்திரா) ரஷ்ய அரசு
பெர்ன்பூர் மேற்கு வங்காளம்) தனியார் துறையிடமிருந்து 1976-ல் பெறப்பட்டது.
சேலம் (தமிழ்நாடு) இந்திய அரசு (வெளிநாட்டு உதவி இல்லை)
விஜய் நகர் ( கர்நாடகா) இந்திய அரசு
பத்ராவதி (கர்நாடகா) நாட்டுடைமையாக்கப்பட்ட விஸ்வேஸ்ரயா இரும்பு எஃகு நிறுவனம் (மத்திய மாநில அரசுக்கு சொந்தம்)
 • மேற்கூறப்பட்ட அனைத்தும் SAIL ஆல் நிர்வகிக்கப்படுகின்றன தற்போது , TIGCO தவிர மற்ற அனைத்து முக்கிய இரும்பு எஃகு நிறுவனங்கள் பொதுத்துறையின் கீழ் இயங்குகின்றன.
 • இந்திய எஃகு நிறுவனம் (SAIL) 1974-ல் நிறுவப்பட்டது. மற்றும் எஃகு துறையை மேம்படுத்தும் பொறுப்பும் அதற்கு அளிக்கப்பட்டது.
 • தற்போது இந்திய எஃகு உற்பத்தியில் உலக அளவில் எட்டாவது உயரிய இடத்திலுள்ளது.
 1. சணல் தொழில்
 • இந்தியா போன்ற நாட்டிற்கு சணம் தொழில் மிக முக்கியமானதாகும் காரணம் இத்தொழில் மூலம் வெளிநாட்டு செலவாணி ஈட்டப்படுகிறது. மேலும் இத்தொழில் கணிசமான வேலை வாய்ப்பை அளிக்கிறது.
 • 1855-ல் மேற்கு வங்க மாநிலத்திலுள்ள ரேஷ்ரா எனும் ஊரில் நவீனமயப்படுத்தப்பட்ட தொழிற்சாலை முதல்முறையாக உருவாக்கப்பட்டது.
 • இந்தியாவின் சணல் தொழில், பாரம்பரியமாக ஏற்றுமதி செய்து வருகிறது. உலக அளவில் இந்தியா கச்சா சணல் உற்பத்தியிலும் சணல் பொருட்கள் தயாரிப்பிலும் முதலிடத்திலும் சணல் பொருட்கள் ஏற்றுமதியில் இரண்டாமிடத்தில் உள்ளது.
 1. பருத்தியும் நெசவுத் தொழிலும்
 • இந்தியாவில் நெசவுத் தொழில் மிகப் பழமையானதாகும். அதிக தொழிலாளர்களையும் கொண்ட துறையாகும்.
 • இத்துறையானது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட பெரிய அளவிளானதும் பரந்துபட்ட அளவிலும் வளர்ந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4%ம், மதிப்புக் கூட்டப்பட்ட உற்பத்தில் 20%ம் ஏற்றுமதி வருவாயில் மூன்றில் ஒரு பங்கும் இத்துறையின் மூலம் கிடைக்கிறது.
 • கொல்கத்தாவிற்கு அருகிலுள்ள குளோஸ்டர் துறைமுக நகரில் 1818-ல் முதல் நவீன தூணி உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டது. ஆயினும் இவ்வாலை சிறப்பாக இயங்கவில்லை.
 • அடுத்ததாக 1854-ல் மும்பையில் கே.ஜி.என் டேபேர் (DABER) என்பவரால் “மும்பையின் நூற்பு மற்றும் நெசவு கம்பெனி (MUMBATS SPINING AND WEAVING CO) உருவாக்கப்பட்டது.
 1. சர்க்கரை தொழில்
 • இந்தியாவில் வேளாண் சார்புத் தொழில்களில் பருத்தி தொழிலுக்கு அடுத்தபடியாக சர்க்கரைத் தொழில் உள்ளது.
 • உலக அளவில் இந்தியா பெரிய அளவிலான சர்க்கரை உற்பத்தியாளராகவும் பெரிய அளவிலான நுகர்வோராகவும் இருக்கிறது. சர்க்கரை உற்பத்தியில் இந்திய அளவில் மூன்றில் ஒரு பங்கு அளவை மகாராஷ்டிரா மாநிலம் மட்டுமே. அடுத்தபடியாக உத்திரபிரதேச மாநிலம்.
 1. உரத்தொழில்

இந்தியாவில் நைட்ரஜனை பயன்படுத்தி தயாரிக்கும் உரத்தொழிலானது உலகின் மூன்றாவது பெரிய தொழிலாகும்.

 1. காகித்தொழில்
 • 1812-ல் வங்கத்திலுள்ள செராம்பூர் ஊரில் இயந்திரத்தால் செயல்படும் காகித ஆலை உருவாக்கப்பட்டது.
 • உலகிலுள்ள காகித தொழிற்சாலைகளின் பட்டியலில் இந்தியா 15-வது இடத்தில் உள்ளது.
 1. பட்டுத்தொழில்
 • இயற்கையான பட்டுத் தயாரிப்பில் இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது சீனா முதலிடம். தற்போது உலக அளவில் 16% உற்பத்தியை இந்தியா கொண்டுள்ளது.
 • இந்தியா மட்டுமே கீழ்க்கண்ட வணிக அடிப்படையிலான 5 வகையான பட்டுத்துணிகளை உற்பத்தி செய்கிறது. அதாவது மல்பெரி பட்டு, வெப்ப மண்டல டஸ்சர் பட்டு, ஓக் டஸ்ஸர், பட்டு ஏரி மற்றும் முகா பட்டு ஆகியன.
 1. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு
 • அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள டிக்பாய் (DIGBOI) எனும் ஊரில் 1889-ல் வெற்றிகரமாக முதல்முறையாக எண்ணெய் கிணறு தோண்டப்பட்டது.
 • தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் எண்ணெய் இருப்பிடங்கள் அடையாளம் காணப்பட்டு எண்ணெய்யை வெளியில் எடுப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
 • இத்தகைய எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை எடுப்பதற்காக உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள டெஹ்ராடூன் (DEHRADUN) நகரில் 1956-ல் எண்ணெய் பரிவாயுக் கழகம் ONGC உருவாக்கப்பட்டது.

சிறிய அளவிலான தொழிற்சாலைகள்

இந்திய பொருளாதார முன்னேற்றத்தில் சிறு தொழில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மொத்த புத்தாங்களின் 60 முதல் 70 சதவீதம் சிறு தொழில்கள் மூலமாக கிடைத்தவையே. இன்றைய பெரிய தொழில்களில் பெரும்பான்மையான தொழில்கள் சிறு தொழில்களாக உருவாக்கப்பட்டு பின் வளர்ந்து பெரிய தொழில்களாக மாறியுள்ளன. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் சிறு தொழில்களின் பங்கு கீழே காண்போம்.

பொருளாதார முன்னேற்றத்தில் சிறுதொழில்களின் பங்கு

 1. சிறு தொழில்கள் மூலம் வேலை வாய்ப்பு
 • சிறு தொழில்கள் அதிக தொழிலாளர்களை பயன்படுத்தும் உத்தியை பயன்படுத்துகின்றன. இதனால் அதிக வேலைவாய்ப்பு கொடுக்கும் துறையாக உள்ளது. இதன் மூலமாக வேலையில்லா திண்டாட்டம் பெரிய அளவில் குறைகிறது.
 • கைவிஞர்கள், தொழில்நுட்ப பயிற்சி பெற்றவர்கள் தொழில் முனைபவர்கள் பாரம்பரிய கலைஞர்கள், கிராமப்புற மக்கள் மற்றும் அமைப்பும் சாரா நிறுவனங்களுக்கு வேலை வாய்ப்பை சிறு தொழில் துறை அளிக்கிறது.
 • சிறு தொழில்துறையில் உழைப்பு முதலீட்டு விகிதம் அதிகம்.
 1. சிறு தொழில் தரும் சமமான மண்டல வளர்ச்சி
 • சிறு தொழில்கள் பெரும்பாலும் பின்தங்கிய பகுதிகளிலும், கிராமப்புறப் பகுதிகளிலும் அமைவதால் இவற்றின் தாக்கம் பரந்துபட்ட வளர்ச்சியை அளிக்கிறது.
 • கிராமம் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் தொழில் வளர்ச்சி வேற்றுமைகளை களைய உதவி செய்கிறது.
 • சிறு தொழில்களின் வளர்ச்சியினால், மக்கள் தொகை நெருக்கம் சேரிகளின் வளர்ச்சி, சுகாதாரமின்மை, மாசுபாடு ஆகியவை குறைகிறது.
 • இவை இந்தியாவின் புறநகர் பகுதி மற்றும் கிராமப்புற பகுதிகளிலும் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறது.
 • இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொழில் முனைவோர் உருவாகவும் அவர்கள் திறமை வெளிப்படவும் வாய்ப்பாகிறது. அதோடு வருமானம் குறிப்பிட்ட ஒரு சில வணிக் குடும்பங்களிடம் மட்டும் குவியாமல் பலரது கைகளில் பரவ வாய்ப்பளிக்கிறது.
 1. உள்ளூர் வளங்களை பயன்படுத்த சிறுதொழில் உதவி செய்கிறது
 • சிறு சேமிப்பு, தொழில் முனைவோர் திறமை போன்ற உள்ளூர் சார்ந்த வளங்கள் பயன்பாடற்று வீணாகாமல் அது வெளிப்படவும் பலருக்கும் பயன்படவும் சிறு தொழில் காரணமாகிறது.
 • கைவினைப் பொருட்கள் தயாரிப்போரின் பாரம்பரிய குடும்பத் திறன்களை வளர்க்க சிறு தொழில் உதவுகிறது. வளர்ந்த நாடுகளில் கைவினைப் பொருட்களுக்கு மிகுந்த வரவேற்பு பொருட்களுக்கு மிகுந்த வரவேற்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 • இந்தியாவின் கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் உள்ள உள்ளூர் தொழில் முனைவோர்களையும் சுய தொழில் செய்வோர்களையும் வளர்த்தெடுக்க சிறு தொழில் உதவுகிறது.
 • இந்தியாவின் கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் உள்ள உள்ளூர் தொழில் முனைவோர்களையும் சுய தொழில் செய்வோர்களையும் வளர்த்தெடுக்க சிறு தொழில் உதவுகிறது.
 1. மூலதன பயன்பாடு முழுமைபெற்ற சிறு தொழில் வழி வகுக்கிறது
 • சிறு தொழில் மூலதனத்தின் தேவை குறைவே இத்துறையில் செய்த முதலீட்டிற்கு காத்திருப்புக் காலம் (gestation period) மிக கூறைவாக இருக்குமாதலால் வருமானம் விரையில் வர வாய்ப்பு உள்ளது. திருப்பிச் செலுத்தல் காலமும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு மிக குறுகியதாக உள்ளது.
 • அதிக வெளியீடு மூலதன விகிதத்தையும் அதிக வேலைவாய்ப்பு மூலதன விகிதத்தையும் நிலைப்படுத்தும் சக்தியாக சிறுதொழில் முறை உள்ளது.
 • கிராமப்புற மக்களையும் சிறு நகர் வாழ் மக்களையும் சேமிப்பின் பக்கம் திருப்பவும் தொழில் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடவும் சிறு தொழில் துறை ஊக்கப்படுத்துகிறது.
 1. சிறுதொழில்துறை ஏற்றுமதியை உருவாக்குகிறது.
 • சிறுதொழில்துறைக்கு அதிநவீன இயந்திரங்கள் தேவையில்லை. எனவே வெளிநாட்டிலிருந்து இயந்திரங்களை இறக்குமதி செய்ய அவசியமில்லை. அதே வேலையில்லை. அதே வேளையில் சிறு தொழில்துறையின் பொருட்களுக்கு அதிக தேவை உள்ளது. இது நாட்டின் அந்நிய செலவாணி மீதான அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. ஆனாலும் பெருந்தொழில்களின் அளவிற்கு விளம்பரம் செய்ய இயலாமலும் மூலதனம் திரட்ட இயலாமலும் சிறுதொழில்கள் சிதைந்து வருவதையும் காணமுடிகிறது.
 • இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்வதன் மூலம் சிறு தொழில்கள் கணிசமான அந்நிய செலவாணியை ஈட்டுகிறது.
 1. பெரிய அளவிளான தொழில்களுக்கு சிறு தொழில் நிறுவனங்களின் பங்கு
 • சிறு தொழில் நிறுவனங்கள் பெரிய தொழில்களின் வளர்ச்சிக்கு ஆதரவு தருகின்றன.
 • பெரிய அளவிலான தொழிற்சாலைகளுக்கு அருகில் அமைந்து சிறுதொழில் நிறுவனங்கள் உதிரிபாகங்கள் உட்கூறுகள் மற்றும் பெரிய தொழில்களுக்குத் தேவையான அனைத்துப் பாகங்களையும் தயாரித்து வழங்கி உதவுகின்றன.
 • பெரிய நிறுவனங்களுக்குத் துணை நிறுவனங்களாக செயல்படுகின்றன.
 1. சிறு தொழில் நிறுவனங்கள் நுகர்வோர் தேவைகளை நிறைவேற்றுகின்றன (சந்திக்கின்றன)
 • இந்தியாவில் நுகர்வோருக்குத் தேவையான பல்வேறு பொருட்களை சிறு தொழில் நிறுவனங்கள் தயாரிக்கின்றன.
 • அன்றாடத் தேவைகளுக்கான பொருட்களைத் தயாரிப்பதால் பற்றாக்குறையும் பணவீக்கமும் குறைக்கப்படுகின்றன.

சிறு தொழில் நிறுவனங்கள் தொழில் முனைவோர்களை உருவாக்குகின்றன.

 • சமூகத்தில் தொழில் முனைவோர் வர்க்கம் உருவாக சிறுதொழில் நிறுவனங்கள் உதவுகிண்றன. வேலை தேடுவோரை வேலைவாய்ப்பை வழங்குவோராக மாற்றுகின்றன.
 • மக்கள் சுயவேலைவாய்ப்பு மற்றும் தற்சார்பு நிலையை அடைய உதவுகின்றன.
 • பல்வேறு வகைகளில் இந்தியாவின் தனிநபர் வருமானம் அதிகரிக்க உதவுகின்றன.
 • சமூகத்தின் பின்தங்கிய பகுதிகள் மற்றும் ஏழை மக்களை முன்னேற்ற உதவுகின்றன.
 • சமூகத்தின் பல்வேறு வகையான பங்கேற்பாளர்களுக்கு தேசிய வருமானத்தை மிகத் திறம்படவும் சமமாகவும் பங்கிடுவதில் சிறுதொழில் நிறுவனங்கள் திறமையானவை.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs)

தற்போதைய காலத்தில் பல்வேறு வகையான தொழில் பிரிவுகளை வகைப்படுத்த பின்வரும் பண முதலீட்டு எல்லைகள் பயன்படுத்தப்படுகின்றன. இருந்தாலும், இவை காலத்திற்கேற்றாற் போல் மாறக்கூடியவை.

உற்பத்தி நிறுவனங்கள்

அ) குறு உற்பத்தி நிறுவனங்கள்: தொழிற்சாலை மற்றும் உபகரணங்களுக்கான முதலீடு ரூபாய் 25 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஆ) சிறு உற்பத்தி நிறுவனங்கள்: தொழிற்சாலை மற்றும் உபகரணங்களுக்கான முதலீடு ரூபாய் இருப்பத்தைந்து இலட்சத்திற்கு அதிகமாகவும் ஐந்து கோடிக்கு மிகாமலும் இருக்க வேண்டும்

இ) நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள்: தொழிற்சலை மற்றும் உபகரணங்களுக்கான முதலீடு ரூபாய் ஐந்து கோடிக்கு அதிகமாகவும் ரூபாய் கோடிக்கும் மிகாமலும் இருக்கவேண்டும்.

சேவை நிறுவனங்கள்

ஆ) குறுசேவை நிறுவனங்கள்:

உபகரணங்களுக்கான முதலீடு ரூபாய் பத்து இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஆ) சிறு சேவை நிறுவனங்கள்:

உபகரணங்களுக்கான முதலீடு ரூபாய் பத்து இலட்சத்தை விட அதிகமாகவும், இரண்டு கோடிக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

இ) நடுத்தர சேவை நிறுவனங்கள்:

உபகரணங்களுக்கான முதலீடு ரூபாய் இரண்டு கோடியை விட அதிகமாகவும் ஐந்து கோடிக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள்

பொதுத்துறை வங்கிகள்

 • அரசாங்கத்தின் பங்குகள் பெரும்பான்மையாகக் கொண்ட வங்கிகள் பொதுத்துறை வங்கிகளாகும். எடுத்துக்காட்டாக பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஒரு பொதுத்துறை வங்கியாகும்.
 • இவ்வங்கியில் அரசு 58.60% பங்குகளைக் கொண்டுள்ளது. 58.87% அரசாங்கப் பங்குகளுடன் கூடிய பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) ஒரு பொதுத்துறை வங்கியாகும்.
 • வழக்கமாக பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்கு 50 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும், இதில் மாற்றங்களும் வரலாம். பொதுத்துறை வங்கிகள் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. அவையாவன:
 1. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்
 2. மாநில வங்கிகள் மற்றும் அவற்றின் கூட்டு நிறுவனங்கள்

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் நிறுவனச் செயல்பாடுகளை அரசாங்கம் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துகிறது. எடுத்துக்காட்டாக, பாரத ஸ்டேட் வங்கி (SBI) பஞ்சாப் நேசனல் வங்கி (PNB) பாங்க் ஆஃப் பரோடா (BOB) ஓரியண்டல் வணிக வங்கி (OBC) அலகாபாத் வங்கி மற்றும் பல இருந்தபோதிலும் பொதுத்துறை வங்கிகள் பங்குகளை விற்கும்போது தனது பங்குகளின் எண்ணிக்கையை அரசு தொடர்ந்து குறைத்து வருகிறது. இதன் காரணமாக இவ்வங்கிகளில் அரசாங்கம் சிறுபான்மை பங்குதாராக மாறவும் வாய்ப்புள்ளது. இதற்கான காரணம் தனியார் மயமாக்கல் கொள்கையாகும்.

தனியார் துறை வங்கிகள்

 • இவ்வங்கிகளில் பெரும்பான்மையான பங்குகள், அரசு சாராத தனியார் நிறுவனங்கள், பெருநிறுவனங்கள், கார்ப்பரேசன் மற்றும் தனிநபர் வசம் உள்ளன. இவ்வங்கிகள் தனியார் நிர்வாகிகளால் நிர்வகிக்கப்படுகின்றன.
 • இந்தியாவிலுள்ள மொத்த வங்கிகளில், 72.9% வங்கிகள் பொதுத்துறை வங்கிகளாகவும் உள்ளன.
 • எண்ணிக்கை அடிப்படையில் 27 பொதுத்துறை வங்கிகளும் , 22 தனியார் வங்கிகளும் உள்ளன.
 • தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி (RBI), தன்னுடைய வெவ்வேறு வங்கி ஆட்சியின் மூலம் வங்கிகளுக்கு பணம் வழங்குதல் மற்றும் சிறிய அளவிலான நிதி வங்கிகளுக்கு உரிமம் வழங்குதல் (SFB) ஆகிய பணிகளைச் செய்ய அனுமதி அளித்துள்ளது.
 • இது அரசாங்கத்தின் நிதி ஆதாரத்தைப் பெருக்கும் முயற்சிக்கான ஒரு ஊக்கியாகும். இதன் விளைவாக ஏர்டெல் பணம் செலுத்தும் வங்கி மற்றும் பே.டி.எம். பணம் செலுத்தும் வங்கி (PAY TM) போன்றவை உருவாகியுள்ளன. இப்போக்கு எந்தளவுக்கு நாட்டு மக்களுக்கு நல்லவை பயக்கும் என்பதைப் பொறுத்திருப்பதுதான் பார்க்கவேண்டும்.

வங்கிகள் தேசியமயமாக்கப்படல்

 • சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியா ஒரு திட்டமிட்ட பொருளாதார மேம்பாட்டுக் கொள்கையைக் கையாண்டது. இதற்காக 1951ஆம் ஆண்டிலிருந்து ஐந்தாண்டுத் திட்டங்கள் உருவாயின.
 • பொருளாதாரத் திட்டமிடலின் முதன்மை நோக்கம் சமூக நலமாகும். சுதந்திரத்திற்கு முன்னர் வணிகவங்கிகள் தனியார் வசமிருந்தன. இவ்வங்கிகள் அரசாங்கம் திட்டமிடலுக்கான சமூக இலக்குகளை அடைவதற்கு உதவி செய்யத்தவறின.
 • ஆகையால் அரசு 14 பெரிய வணிக வங்கிகளை ஜூலை 19, 1969 அன்று தேசியமயமாக்க முடிவு செய்தது. 1980ஆம் ஆண்டில், அரசு மேலும் 6 வணிக வங்கிகளை தேசியமயமாக்கியது.

தேசியமயமாக்கலின் நோக்கங்கள்

 1. பின்வௌம் நோக்கங்களை அடைவதற்காக இந்திய அரசு வணிக வங்கிகளை தேசியமயமாக்கியது.
 2. தேசிய மயமாக்கலின் முதன்மையான நோக்கம் சமூக நலத்தை அடைவதேயாகும். வேளாண்மை, சிறு தொழில் மற்றும் குடிசைத் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பை விரிவுபடுத்துவதற்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் நிதி தேவைப்பட்டது.
 3. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தனியார் முற்றுரிமையைக் கட்டுப்படுத்துவதற்கும் சமூகத்தில் தேவையான பகுதிகளுக்கு இலகுவாகக் கடன் அளிப்பதற்கும் பேருதவியாக இருந்தன.
 4. இந்தியாவில் ஏறத்தாழ 70% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்ந்து வருகின்றனர். எனவே, கிராமப்புற மக்களிடையே வங்கிச் செயல்பாடுகளை ஊக்குவித்தல் மிகுந்த அவசியமாயிருந்தது.
 5. வங்கி வசதிகள் இல்லாத இடத்தில் வட்டாரங்களிடையே இருந்த ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உதவுகின்றன.
 6. சுதந்திரத்திற்கு முன் இருந்த வங்கிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. தேசிய மயமாக்கப்பட்ட பிறகு கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் பல புதிய வங்கிக் கிளைகள் தொடங்கப்பட்டன.
 7. தேசிய மயமாக்கப்பட்ட பின் வேளாண்துறை மற்றும் அதைச் சார்ந்த பிற துறைகளுக்குத் தேவையான கடன்களை வங்கிகள் கொடுக்க ஆரம்பித்தன.
 8. 1991ஆம் ஆண்டின் புதிய தொழிற் கொள்கைக்குப் பிறகு, இந்திய வங்கித்துறை பன்முகப் போட்டித் திறமை மற்றும் உற்பத்தித் திறன் போன்ற பல்வேறு முகங்களை எதிர்நோக்கி வருகிறது. மேற்கூரிய முன்னேற்றங்கள் இருந்தும், கிராமம் மற்றும் குடிசைப் பகுதியில் வாழும் மக்கள் தங்களின் கடன் தேவைக்கு, உள்ளூரில் கடன் வழங்குபவர்களைச் சார்ந்திருக்க வேண்டி உள்ளது.

இந்திய ஐந்தாண்டுத் திட்டங்களின் சாதனைகள்

 • பொருளாதார திட்டமிடலின் நோக்கம் வரையறுக்கப்பட்ட அளவிலான வளங்களைத் திறம்படப் பயன்படுத்தி விரும்பிய இலக்குகளை அடைதலாகும்.
 • ஐந்தாண்டுத் திட்டங்கள் வாயிலாகப் பொருளாதாரத் திட்டமிடலை மேற்கொள்ளும் முறை ரஷ்யாவிடமிருந்து [முன்னால் சோவியத் ரஷ்யா (USSR)] தருவிக்கப்பட்டது. இதுவரை இந்தியா 12 ஐந்தாண்டுத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.
 • பனிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்டமே (2012 – 2017) இறுதியான ஐந்தாண்டுத் திட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 • இந்திய அரசு ஐந்தாண்டுத் திட்டங்களை நிறுத்தி விட்டு அதற்கு பதிலாக நிதி ஆயோக் (National institution for Transforming India) மூலம் திட்டமிட முடிவு செய்துள்ளது.

முதல் ஐந்தாண்டுத்திட்டம் (1951 – 1956)

 • இது ஹாரேட் டாமர் (Harrod –Domar) மாதிரியை அடிப்படையாகக் கொண்டது.
 • இதன் முதன்மை நோக்கம் நாட்டின் வேளாண்மை முன்னேற்றமாகும்.
 • இத்திட்டம் 3.6% வளர்ச்சி வீதத்துடன் (இலக்கை விட அதிகம்) வெற்றி பெற்றது.

இரண்டாவது ஐந்தாண்டுத்திட்டம் (1956 – 1961)

 • இத்திட்டம் PC மஹலநோபிஸ் (P.C.Mahalanobis) மாதிரியை அடிப்படையாகக் கொண்டது.
 • இதன் முதன்மை நோக்கம் நாட்டின் தொழில் முன்னேற்றத்தை மேம்படுத்துவதாகும்.
 • இத்திட்டம் 4.1% வளர்ச்சியுடன் வெற்றி பெற்றது.

மூன்றாவது ஐந்தாண்டுத்திட்டம் (1961 -1966)

 • இத்திட்டம் “காட்கில் திட்டம்” (Gadgil) என்றும் அழைக்கப்பட்டது.
 • இத்திட்டத்தின் முதன்மை நோக்கம் சுதந்திரமான பொருளாதாரம் மற்றும் சுய முன்னேற்ற நிலையை ஏற்படுத்துதல் ஆகும்.
 • சீன-இந்தியப்போரின் காரணமாக இலக்கு வளர்ச்சியான 5.6%ஐ அடைய இயலவில்லை.

திட்ட விடுமுறை காலம் (1966 -1969)

 • இந்தியா பாகிஸ்தான் போர் மற்றும் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் தோல்வியே இத்திட்ட விடுமுறைக்கான முதன்மைக் காரணமாகும்.
 • இக்கால கட்டத்தில் ஓராண்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு வேளாண்மை, வேளாண் சார் துறைகள் மற்றும் தொழில் துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
 • நான்காம் ஐந்தாண்டுத் திட்டம்
 • இத்திட்டத்தின் இரண்டு முக்கிய நோக்கங்கள் நிலையான வளர்ச்சி மற்றும் தற்சார்பு நிலையை அடைதலாகும்.
 • இத்திட்டம் அதன் இலக்கினை 5.7% வளர்ச்சியை எட்டாமல் 3.3% வளர்ச்சியை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.

ஐந்தாம் ஐந்தாண்டுத்திட்டம் (1974 -1979)

 • இத்திட்டத்தில் வேளாண்மை தொழில் துறை மற்றும் சுரங்கத் தொழிலுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.
 • ஒட்டுமொத்தமாக நோக்குகையில் இலக்கு வளர்ச்சியான 4.4% ஐ விட அதிகமாக 4.8% வளர்ச்சி பெற்று இத்திட்டம் வெற்றி பெற்றது.
 • இத்திட்டத்திற்கான முன் வரைவு D.P. தார் (DHAR) அவர்களால் தயாரிக்கப்பட்டது. இத்திட்டம் 1978 ஆம் ஆண்டு (ஓராண்டுக்கு முன்பே) கைவிடப்பட்டது.

சுழல் திட்டம்

1978-79ஆம் ஆண்டு ஒரு வருட காலத்திற்காக இச்சுழல் திட்டம் தொடங்கப்பட்டது. இது ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தை நீக்கிய பிறகு தொடங்கியது.

ஆறாம் ஐந்தாண்டு திட்டம் (1980 – 1985)

 • இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம் வறுமை ஒழிப்பு மற்றும் தொழில்தூறை தற்சார்பு ஆகும். “வறுமை ஒழிப்பு” (GARIBI HATAO) என்பதே இதன் இலட்சியமாகும்.
 • இது முதலீட்டு திட்டத்தை அடிப்படையாக கொண்டது.
 • இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 5.2% ஆனால் 5.7% வளர்ச்சி எட்டப்பட்டது.

ஏழாம் ஐந்தாண்டுத்திட்டம் (1985 – 1990)

 • இத்திட்டத்தின் நோக்கம் தன்னிறைவுப் பொருளாதாரத்தை உருவாக்குதல் மற்றும் ஆக்கப்பூர்வமான வேலைவாய்ப்பை வழங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
 • முதன்முறையாக பொதுத்துறைக்கும் மேலாக தனியார்தூறைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இது தனியார் துறையின் வெற்றியாக அமைந்தது.
 • இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 5.0% ஆனால் 6.0% வளர்ச்சி காணப்பட்டது.

ஆண்டுத் திட்டங்கள்

மைய அரசில் நிலையற்ற அரசியல்சூழல் நிலவியதால் எட்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த இயலவில்லை. எனவே 1990 -91 மற்றும் 1991-92ஆம் ஆண்டுகளுக்கு இரு ஓராண்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன.

எட்டாம் ஐந்தாண்டுத் திட்டம் (1992 – 1997)

 • இத்திட்டத்தில் வேலைவாய்ப்பு, கல்வி, சமூகநலம் போன்ற மனிதவள மேம்பாடு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது.
 • இத்திட்ட காலத்தில் இந்தியாவிற்கான புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது.
 • இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 5.6%. ஆனால் 6.8% ஆண்டு வளர்ச்சி எட்டப்பட்டது.

ஒன்பதாம் ஐந்தாண்டுத்திட்டம் (1997 – 2002)

 • சமூக நீதியுடன் கூடிய சமமான வளர்ச்சிக்கு இத்திட்டத்தில் முக்கிய கவனம் கொடுக்கப்பட்டது.
 • இத்திட்டகால வளர்ச்சி இலக்கான 7% வளர்ச்சி எட்டப்படவில்லை. இந்தியப் பொருளாதாரம் 5.6% வளர்ச்சியை மட்டுமே அடைந்தது.

பத்தாம் ஐந்தாண்டுத்திட்டம் (2002 – 2007)

 • இத்திட்டம் அடுத்த பத்தாண்டுகளில் தலா வருவாயை இரு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயித்தது.
 • இத்திட்டம் 2012ஆம் ஆண்டில் வறுமை விகிதத்தை 15% ஆக குறைக்கும் குறிக்கோளைக் கொண்டிருந்தது.
 • இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 8.0%. ஆனால் 7.2% மட்டுமே எட்டப்பட்டது.

பதினொன்றாம் ஐந்தாண்டுத்திட்டம் (2007 – 2012)

 • இதன் முக்கிய நோக்கம் “விரைவான மற்றும் அதிகமான உள்ளடக்கிய வளர்ச்சியாகும்”.
 • இதன் வளர்ச்சி இலக்கு 8.1%. ஆனால் எட்டப்பட்டது 7.9% மட்டுமே.

பனிரெண்டாம் ஐந்தாண்டுத்திட்டம் (2012 – 2017)

 • இதன் முதன்மை நோக்கம் “விரைவான அதிகமான உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சியே” ஆகும்.
 • இதன் வளர்ச்சி இலக்கு 8% ஆகும்.

சுதந்திரம் அடைந்ததிலிருந்து இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தில் ஐந்தாண்டு திட்டங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன என கொள்ளலாம். பற்றக்குறையான வளங்களைப் பயன்படுத்தி, எவ்வாறு அதிகபட்ச பொருளாதாரப் பலன்களைப் பெறலாம், என்று இத்திட்டங்கள் வழிகாட்டியுள்ளன. இந்திய அரசு ஐந்தாண்டுத் திட்டங்கள் முறையை சோவியத் ரஷ்யாவிடமிருந்து எடுத்துக்கொண்டது என்று தெரிந்து கொள்வது மிக அவசியமாகும்.

நிதி ஆயோக்

திட்டக்குழு என்பதற்கு மாற்றாக நிதி ஆயோக் என்னும் அமைப்பு 2015-ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி ஏற்படுத்தப்பட்டது. இது நீடித்த நிலையான வளர்ச்சியை மேற்பார்வையிடவும், ஒருங்கிணைக்கவும் மற்றும் செயல்படுத்தவும் செயல்படும். நிதி ஆயோக் என்பது இந்திய அரசின் திட்டங்களையும் கொள்கைகளையும் கண்காணிக்கும் அறிவு மையமாகும். தேசிய மற்றும் சர்வதேச பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நடைமுறைகளையும், புதிய கொள்கைகளையும் ஏற்படுத்தவும், தனிப்பட்ட பிரச்சினைகளுக்கான ஆதரவையும் தரும். இது சார்ந்த சாதனைகளை புரிந்து கொள்ள தனிப்பட்ட ஆராய்ச்சியை மேற்கொள்ளவேண்டும்.

மேம்பாட்டுக் குறியீடு

மனித மேம்பாட்டுக் குறியீடு (HDI)

1990முதல் ஐக்கிய நாடுகள் முன்னேற்றக் கூட்டமைப்பு ஒவ்வொரு ஆண்டும் மனித மேம்பாட்டு அறிக்கையைப் பிரசுரம் செய்கிறது. இக்குறியீடு கீழ்க்கண்ட மூன்று குறியீடுகளை அடிப்படையாக கொண்டது. இக்குறியீடு நாடு , மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் தற்போது தயாரிக்கப்படுகிறது. அரசாங்கத்திற்கு மக்களின் உண்மையான வாழ்க்கைத் தரத்தைக் கண்டறிய HDI பயன்படுகிறது.

 1. வாழ்நாள் (ஆயுட்காலம்) என்பது பிறப்பின் போது வாழ்நாள் எதிர்பார்ப்பின் மூலம் கணக்கிடப்படுகிறது.
 2. கல்வி அடைவுகள்
 3. வாழ்க்கைத்தரமானது வாங்கும் சக்தியின் அடிப்படையிலான தனிநபர் வருமானத்தைக் கொண்டு கணக்கிடப்படுகிறது.
 • மனித மேம்பாட்டுக் குறியீட்டைக் கணக்கிடுவதற்கு முன் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச மதிப்புகள் ஒவ்வொரு குறியீட்டிலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
 • ஒவ்வொரு பரிமாணத்திலும் அதன் செயல்பாடுகள் 0-க்கும் 1-க்கும் இடையிலான மதிப்பில் கீழ்க்கண்ட முறையில் கணக்கிடப்படுகிறது.

பரிமாணக்குறியீடு =

 • திட்டக்குழுவின் 2011ஆம் ஆண்டு மனித மேம்பாட்டு அறிக்கையின்படி மனித வளர்ச்சிக் குறியீடு 1980 முதல் 2011 வரை குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறியுள்ளது. அதாவது மனித மேம்பாட்டுக் குறியீடு 1981-ல் 0.302 லிருந்து 2011-ல் 0.472ஆக உயர்ந்துள்ளது.
 • ஐக்கிய நாடுகள் முன்னேற்ற சபையின் சமீபத்திய மனித முன்னேற்ற அறிக்கையின்படி (2016), 188 நாடுகளில் இந்தியா 131-வது இடத்திலுள்ளது. 188 நாடுகளில் இந்தியா நடுத்தர அளவிலான மனித மேம்பாட்டு வளையத்துக்குள் உள்ளது.
 • 2016 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டு அறிக்கையின்படி, இந்தியாவில் உடல் நலம் மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றில் காணப்படும் வட்டார வேறுபாடுகளினால் இந்தியாவிற்கான மனித மேம்பாட்டு குறியீட்டில் 27% சரிவதற்குக் காரணமாகவுள்ளன. இந்தியாவிற்கான மனித மேம்பாட்டுக் குறியீடு 2010-ல் 0.580 ஆக இருந்தது 2015-ல் 0.624 ஆக உயர்ந்துள்ளது. 2014ஆம் ஆணிலும் இந்தியாவின் தரவரிசை 131 ஆகவே இருந்தது.
 • மனித மேம்பாட்டுக் குறியீட்டுக்கான கணக்கீடானது மனித வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்களை புறக்கணித்துள்ளது என்று பிஸ்வஜித்குஹா (BISWAJEET GUHA) கூறியுள்ளார்.
 • அவர் HDI1, HDI2, HDI3 மற்றும் HDI4 என்ற நான்கு விதமான மனித மேம்பாட்டுக் குறியீடுகளை உருவக்கியுள்ளார். HDI1 என்பது ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்தின் மனித மேம்பாட்டுத் அறிக்கையினை பொறுத்துள்ளது. வாழ்க்கைத்தரம், வறுமை ஒழிப்பு மற்றும் நகரமாதல் போன்ற மூன்று பரிணாமங்களைச் சேர்ப்பதன் மூலம் அவர் மனித மேம்பாட்டுக் குறியீட்டுக்கான எல்லையை விரிவுபடுத்தியுள்ளார்.
 • இந்தியா உட்பட்ட பல்வேறு நாடுகள் மனித மேம்பாட்டு கணக்கிடத் தேவையான புள்ளி விவரங்களை மேம்படுத்தவும் குறியீட்டை விரிவுபடுத்தவும் குறியீட்டை விரிவுபடுத்துவதற்கும் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

மனித மேம்பாட்டுக் குறியீடு (HDI)

HDI- என்பதை பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த பொருளியல் அறிஞர் மஹபூப் உல் ஹக் (Mahbul ul Haq) – என்பவரும், இந்தியாவைச் சேர்ந்த அமர்த்தியா குமார் சென் அவர்களும் 1990-ல் மேம்படுத்தினர். இதனை ஐக்கிய நாடுகள் முன்னேற்ற திட்டம் (UNDP) வெளியிட்டது. இது எதிர்பார்க்கப்படும் வாழ்நாள் குறியீடு, கல்விக் குறியீடு மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் அமைக்கப்பட்டது.

முதல் மூன்று நாடுகள் (HDI)

நார்வே (0.949)

ஆஸ்திரேலியா (0.939)

சுவிட்சர்லாந்து (0.939)

வாழ்க்கைத் தரக் குறியீட்டெண் (PQLI)

 • வாழ்க்கைத்தரக் குறியீட்டெண்ணை (PQLI) மோரிஸ் டி.மோரிஸ் (MORRIS DMORRIS) உருவாக்கினார். இது ஒரு நாட்டின் வாக்கைத் தரத்தினை அளவிடப்பயன்படுகிறது.
 • இதற்காக அவர் எதிர்பார்ப்பு ஆயுட்காலம், குழந்தை இறப்பு வீதம் மற்றும் எழுத்தறிவு வீதம் போன்ற மூன்று குறியீடுகளைப் பயன்படுத்தினார். ஒவ்வொரு குறியீட்டெண்ணின் அளவும் 1லிருந்து 100 வரையிலான எண்களுக்குள் இருக்கும் எண் 1 என்பது ஒரு நாட்டின் மோசமான செயல்பாட்டைக் குறிக்கும் 100 என்பது மிகச்சிறப்பான செயல்பாட்டைக் குறிக்கும்.
 • எடுத்துக்காட்டாக, எதிர்பார்க்கப்படும் ஆயுளுக்கான குறியீட்டில், மேல் எல்லையான 100 என்பது 77 வருட ஆயுளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இக்குறியீட்டை ஸ்வீடன் நாடு 1973ஆம் ஆண்டே அடைந்து விட்டது. 1 என்ற கீழ் எல்லையானது 28 வருட ஆயுளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை கயனா –பிசாவு (GUINEA – BISSAU) நாடு 1960 ஆம் ஆண்டு பெற்றுள்ளது.
 • PQLI-க்கும் HDIக்கும் ஒரு வேறுபாடு உள்ளது. HDI யில் வருமானம் சேர்க்கப்படுகிறது. PQLI லிருந்து வருமானம் நீக்கப்படுகிறது. உடல் மற்றும் பணம் சார்ந்த மேம்பாட்டை HDI குறிப்பிடுகிறது. PQLI உடல் சார்ந்த மேம்பாட்டை மட்டுமே குறிக்கிறது.

தொகுப்புரை

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு நல்ல ஆட்சியை வழங்குவதை விட இந்தியர்களிடமிருந்து பணத்தைப் பறிப்பதையே தங்கள் நோக்கமாகக் கொண்டிருந்தனர் என்பது பலரின் கருத்தாக இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது சில சாதகமான செயல்பாடுகளும் நிகழ்ந்தன. அவர்கள் “சதி” (உடன் கட்டை ஏறும் வழக்கம்) போன்ற மூடப்பழக்கங்களை ஒழித்தனர். தொடர்வண்டி சேவை, ஆங்கில மொழி, கல்வி மற்றும் முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கு தேவையான பல்வேறு கொள்கைகளை இந்திய அரசு ஐந்தாண்டுத் திட்டங்களின் உதவியோடு உருவாக்கியது. ஆனாலும் மோசமான உடல்நலம், பெண் சிசுக் கொலை, குழந்தைப் பாலின விகிதம், கழிவறை உபயோகித்தல் குறைவு மற்றும் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் போன்றவை முக்கிய சவால்களாக இன்றும் தொடர்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *