இந்திய நீதித்துறை Notes 12th Political Science Lesson 4 Notes in Tamil

12th Political Science Lesson 4 Notes in Tamil

இந்திய நீதித்துறை

நீதித்துறை சரியாக இயங்குகிறது என்றால் என்ன?

மக்கள், சட்டமன்றங்கள், ஆட்சித்துறையைவிட நீதித்துறையின் மீதே அதிகம் நம்பிக்கை கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். எப்பொழுதெல்லாம் அவர்களுடைய உரிமைகள் மீறப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் அவர்களுடைய உரிமைகளும், தனிச்சலுகைகளும் பாதுகாக்கப்படும் என நீதித்துறை நோக்கி வருவதால் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.

இந்திய உச்சநீதிமன்றம்

“உச்ச நீதிமன்றம், அனைத்து இந்திய நீதிமன்றமாகும், கட்சி அரசியலில் இருந்தும், அரசியல் கோட்பாடுகளில் இருந்தும் உறுதியாக தனித்து நிற்கும். அது அரசுகள் மாறுவதைக் குறித்து அக்கறை கொள்வதில்லை. நீதிமன்றமானது, நடைமுறையில் இருக்கும் சட்டத்தின்படி, நிற்கிறது. அனைவரின் மீதும் பரிவு, நன்மதிப்பு கொண்டுள்ளது. எனினும் அது யாருடனும் அணி சேர்வது இல்லை”

 • மாண்புமிகு தி ஹரிலால் ஜே.கனியா, இந்திய முதல் தலைமை நீதிபதி.
 • நீதித்துறையானது அரசாங்கத்தின் மூன்று உறுப்புகளின் ஒன்றாகும், மற்ற இரண்டு சட்டமன்றமாகவும், ஆட்சித்துறையாகவும் இருக்கின்றன. நீதித்துறையானது சட்டங்களுக்கு விளக்கம் அளிப்பதையும், அரசமைப்பை பாதுகாப்பதையும் பணியாகக் கொண்டிருக்கிறது. அது நீதித்துறை நிர்வாகத்தை உறுதிப்படுத்துகின்றது.
 • தனி மனித உரிமைகள், முன்னுரிமைகள் ஆகியவற்றின் மீது அரசு மற்றும் தனிமனிதர்களால் மேற்கொள்ளப்படும் மீறல்களில் இருந்து பாதுகாப்பு அளிப்பதை உறுதிப்படுத்துகிறது. சுதந்திரமான மற்றும் பாகுபாடற்ற நீதித்துறையை உருவாக்குவது ஒரு நாகரிக அரசு செயல்படுவதற்கு முன் நிபந்தனையாகும்.
 • இந்தியா போன்ற கூட்டாட்சி அரசு முறை கொண்ட நாடுகளில் கூட்டாட்சியின் பாதுகாவலனாகவும், மத்திய, மாநில அரசாங்கங்களுக்கிடையே எழும் அதிகார வரம்பு கருத்து வேறுபாடுகளுக்குத் தீர்வு காண்பதாகவும் நீதித்துறை விளங்குகிறது.

திருக்குறள்

 1. பிணையாக திருக்குறள் ஒப்புவித்தல்.

கைகலப்பில் ஈடுபட்ட மூன்று கல்லூரி மாணவர்களுக்கு பிணையாக 100 திருக்குறள்களை தொடர்ந்து 10 நாட்கள் அப்பகுதியிலுள்ள குறிப்பிட்ட தமிழாசிரியர் முன்பு ஒப்புவிக்க வேண்டுமென்று நிபந்தனை விதித்து தமிழ்நாடு நீதிமன்றம் பிப்ரவரி 2019 அன்று உத்தரவிட்டது.

ஒரு நபர் மீது தாக்குதல் நடத்தியதாக மூன்று கல்லூரி மாணவர்களுக்கு மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அவர்கள் சார்பில் பிணைக் கோரப்பட்டது. பிணையின் நிபந்தனையாக அப்பகுதி அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியர் முன்பு தினமும் 100 திறக்குறள்கள் ஒப்புவிக்க வேண்டுமென்று நீதிபதி கூறினார்.

இவ்வாறு தொடர்ந்து 10 நாட்கள் திருக்குறள் ஒப்புவித்தப் பின்பு இறுதி நாளில் அந்த மாணாக்கர்களுக்கு சான்றிதழ் வழங்கும்படியும் நீதிபதி அப்போது உத்தரவிட்டார்.

 1. திருக்குறளை அழமாகக் கற்பதற்கு வழிவகுத்த மதுரை உயர் நீதிமன்ற கிளை

சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரை கிளை வழங்கிய தீர்ப்புகளில் தமிழக பள்ளிகளில் திருக்குறளை ஆழமாகக் கற்க வழிவகுத்தது அளித்தத் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். மதுரைகிளை கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறைக்கு அளித்த உத்தரவில் பள்ளிப் பாடத்திட்டத்தில் திருக்குறளின் 133 அதிகாரங்களில் 108 அதிகாரங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. இதன்மூலம் 2017-18 கல்வியாண்டிலிருந்து மாணவர்கள் 1050 திருக்குறள்களையும் கற்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஆணைப் பிறப்பிப்பதற்கு மதுரைக்கிளையின் உத்தரவு வழிவகுத்தது. 6 முதல் 12ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்கள் முன்கூறிய திருக்குறள் பாக்கள் அனைத்தையும் கற்பதுடன் அதன் பொருளினையும் தெளிவாகப் புரிந்து கொள்வதை உத்தரவாதம் செய்யும்படியும் அது கூறியது. இதன்மூலம் தற்போது பள்ளிக் கல்வி மாணவர்கள் திருக்குறள் பாக்களை கற்று ஆழமாகப் புரிந்து வருகிறார்கள்.

தமிழில் பண்டைய இலக்கியங்களில் உலகின் 60-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட இலக்கியம் திருக்குறள் ஒன்றேயாகும்.

இந்திய நீதித்துறையின் பரிணாம வளர்ச்சி

பண்டைய இந்தியாவில் நீதிமுறையமைப்பு

 • இந்தியா பல்வேறு இனங்கள், பண்பாடுகள், மொழிகள் மற்றும் அரசியல், சமூக அமைப்புகளை கொண்ட ஒரு துணைக்கண்டமாக இருக்கிறது. இந்தியாவின் பண்டைய காலத்திலும் மற்றும் இடைக்காலத்திலும் அரசு எந்த ஒரு ஆட்சித்துறையிலிருந்தும் நீதித்துறை பணிகளைப் பிரித்து வைக்கப்படவில்லை.
 • வேதகாலத்தின்போது (குலபா (அ) குலபாடோ), குடும்பத் தலைவனின் அதிகாரமானது மன்னர் வழி குறுக்கீடுகளிலிருந்து பாதுகாக்கப்பட்டிருந்தது; அதேபோல் கிராமா, தோபா, வைசியா, ஜனம் மற்றும் கனம் போன்ற குலவைக்கப்பட்ட மற்றும் இனக்குழு அமைப்புகளும் தன்னாட்சி பெற்றுத் திகழ்ந்தன.
 • பண்டைய இந்திய முடியாட்சிகளில் நீதித்துறை அதிகாரத்தில் அரசரே உயர்நிலையில் இருந்தார். அரசர் நினைத்ததே சட்டமாக இருந்தது, வழக்குகளில் அவர் வார்த்தையே உயர்ந்த நீதியாகவும் இறுதித் தீர்ப்பாகவும் இருந்தது.
 • எனினும், கிராமப்புறங்களில் பெரும்பாலான வழக்குகள் சாதி அமைப்புகள் அல்லது உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளின் சட்டத்திட்டங்களின் மூலமாகவே தீர்க்கப்பட்டு வந்தன.
 • தேசத் துரோகம் போன்ற மிகத் தீவிரமான வழக்குகள் மட்டும் அரசரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு முறையான சட்ட அமைப்பு இருந்ததில்லை.
 • பெரும்பான்மையான நேரங்களில் குற்றம் சாட்டப்பட்டவர், தான் குற்றமற்றவர் என்பதை ஆதாரங்கள், சாட்சியங்கள் மூலமாக நிரூபிக்க வேண்டும். அல்லது தீக்குளித்தல் , தண்ணீரில் மூழ்குதல், விஷம் அருந்துதல் போன்ற கடும் சோதனைகளுக்கு தன்னை ஆட்படுத்திக் கொள்ளுதல் மூலமாக தாம் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும்.
 • தண்டனைகள் மிகவும் கடுமையாக இருந்தது. மேலும், கட்டுமிராண்டித்தனம் கொண்டதாக இருந்தது. இதற்கு பரிகாரம் என்பது வழக்கத்தில் இல்லை.
 • கசையடி, பிரம்படி, முழங்கால்களைத் துண்டித்தல், கழுமரத்தில் ஏற்றுதல், அடிமைப்படுத்துதல், சொத்துக்களை பறிமுதல் செய்தல், நாடு கடத்துதல், தலையை துண்டித்தல், யானை மூலம் தலையை இடரச்செய்தல் மற்றும் மிதிக்கச் செய்தல் போன்ற தண்டனைகள் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டன.
 • அரசுகள் பிராமணர்களின் தாக்கத்தின் கீழ் வந்த பின்னர், ஸ்மிருதிகள் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு, தண்டனைகள் வழங்கப்பட்டன.
 • அக்காலத்தில் மனுஸ்மிருதி, நாரதர் ஸ்மிருதி, யக்ஞவாக்கியர் ஸ்மிருதி போன்றவை இருந்தன, அவற்றுள் “மனுஸ்மிருதி” அடிப்படையாக இருந்தது. இந்த ஸ்மிருதிகள் பொதுவாக வர்ணம்.
 • சாதிபடிநிலைச் சமூக அமைப்பை உயர்த்திப் பிடிப்பதாக இருந்தன. “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்ற கருத்து இருந்ததில்லை. பிராமணர்கள் பெரும்பாலும் தண்டனைகளிலிருந்து பாதுகாக்கப்பட்டிருந்தனர்.
 • எந்தவிதத்திலும் பிராமணர்கள், அவர்கள் கொடிய குற்றங்களை செய்துவிட்டாலும் உடல்ரீதியான துன்புறுத்தல், உறுப்பு நீக்கம் செய்தல், கழுமரத்தில் ஏற்றுவது, மரணதண்டனை ஆகியவற்றில் இருந்து விதிவிலக்கு செய்யப்பட்டிருந்தார்கள்.
 • மற்றொருபுறம் ஒடுக்கப்பட்ட சாதியினரை கடுமையான துன்பங்களுக்கும் மற்றும் உச்சபட்ச தண்டனைகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர். சாதி அடிப்படையிலான தொழில்களை மாற்றிக் கொள்வது என்பது மிகக் கொடிய குற்றமாக (Varna Sangraha) கருதப்பட்டது.
 • அர்த்தசாஸ்திரம் குற்றங்கள் நிகழ்வதை கட்டுப்படுத்துவது என்ற பெயரில் அளவுக்கு அதிகமான தண்டனைகளைப் பரிந்துரைத்தன. குற்றவாளிகள் மீது அபராதங்கள் விதிப்பது, சொத்துக்களை பறிமுதல் செய்வது முதன்மையான அரசு வருமானமாக இருந்தன.
 • ஸ்மிருதிகள் பெண்களை கீழ்நிலை மனிதர்களாகவே நடத்தியது. வாரிசுரிமை விவகாரங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டுடன் தீர்ப்பளித்தனர். சூத்திரர்களும், பஞ்சமர்களும் நியாயமான விசாரணைக்கும், நியாயமான தண்டணைகளுக்கும் தகுதி இல்லாதவர்கள் ஆனார்கள்.
 • வர்த்தகத் தகராறுகள் பெரும்பாலும் வணிகக் குழு மூலம் தீர்க்கப்பட்டன. அதைப்போலவே ஒவ்வொரு கைவினைக் கலைஞர்கள் குழுவும் தங்களுடைய சொந்த பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள கைவினைஞர்கள் சங்கத்தைத் தமக்குள் வைத்து கொண்டனர்.
 • பல்லவர், பாண்டிய, சோழர்கால மகாசபைகள் நீதி விசாரணை நடைமூறைகளிலிருந்து பிராமணர்களைப் பாதுகாத்தன.
 • மகாசபைகளின் வாரியம் (தர்ம வாரியங்கள், நியாய வாரியம்) மகாசபைகளுக்குள் எழும்பிரச்சனைகளை தீர்த்து வைத்தன. உள்ளூர் அமைப்புகளான ஊர், ஊரார், நகரத்தார் போன்றவை அவர்களுக்கு உரிய நீதித்துறை ஏற்பாடுகளைக் கொண்டிருந்தனர்.
 • அசோகப் பேரரசு போன்ற புத்த பேரரசுகள் பெரும்பாலும் ஸ்மிருதி முறைகளை புறம்தள்ளின. நீதி வழக்குகளில் சமூகக் குழுக்களுக்கிடையே ஓரளவுக்குச் சமமாக நடத்தப்பட்டன.
 • அசோகர் கொடிய தண்டனைகளை நீக்கினார். மேலும், அவர் தனது அதிகாரிகளிடம் கைதிகளிடத்தில் மிகவும் மனிதாபிமானம் உடையவர்களாகவும், கருணை உள்ளவர்களாகவும் இருக்கும்படி அறிவுறுத்தினார்.
 • சிலப்பதிகாரத்தில் கோவலன் தூக்கிலிடப்படும் சம்பவமானது நீதித்துறை செயல் முறையிலுள்ள குறைபாடுகளை வெளிப்படுத்துகிறது.
 • நீதித்துறையில் உயர் அதிகாரிகள் அறநெறியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று இலக்கியங்கள் வலியுறுத்தினாலும், நீதி வழக்கு விசாரணைகளில் வரம்பு மீறி நடந்து தண்டனையில் இருந்து விதிவிலக்கு கொடுப்பதோ அல்லது அநீதியான தண்டனைகளை வழங்கியிருப்பதையோ நாம் அடிக்கடி கண்டிருக்கிறோம்.
 • பண்டைய இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி அங்கு இருந்தது இல்லை, ஆனால் அதிகாரம் கொண்டோரின் ஆட்சியையே நாம் காண்கிறோம்.
 • இடைக்கால இந்தியாவில், முஸ்லீம் ஆட்சியாளர்கள் ஒருவித தனித்தன்மை கொண்ட சூழ்நிலைடை எதிர்கொண்டனர். அங்கே அவர்கள் ஆட்சியின் கீழ் வாழ்ந்த மக்கள் பெரும்பான்மையானோர் முஸ்லீமல்லாதவர்கள்.
 • முஸ்லீம் மற்றும் முஸ்லீம் நலன்கள் சார்ந்த வழக்குகளில் இஸ்லாமிய சட்டங்களை பயன்படுத்தினர், அதேநேரம், முஸ்லீம் அல்லாதவர்களின் சமூக-மத விவகாரங்களில் தலையிடா கொள்கைக்கு முன்னுரிமை அளித்தனர்.
 • அங்கெல்லாம் கிராமப்புற பாரம்பரிய விசாரணை முறையை ஏற்றனர். முஸ்லீம் ஆட்சியாளர்கள் குடிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளை மிகவும் சரியாக வேறுபடுத்திக் காட்டியிருந்தனர்.
 • ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட முறைகளைக் கையாண்டனர். எனினும், இறைப்பழி போன்ற வழக்குகளில் மிகவும் கொடிய தண்டனைகளை குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளித்தனர்.

கடும் சோதனைகள்

தராசு முறை: ஒரு தராசில் ஒரு பக்கம் ஒரு பனை ஓலை கட்டு வைத்துவிட்டு இன்னொரு பக்கம் குற்றம் சாட்டப்பட்டவர் அமரும்படியாக செய்யப்பட்டு தராசு சமமாக இருக்கும்படி வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள். வேண்டுதலுக்கு பிறகும் அவர் இருக்கும் தராசின் பகுதி கீழே வந்து வுட்டால் அவர் குற்றம் செய்தவர் என்று அறிவிப்பார்கள்.

நெருப்பு சோதனை

குற்றம் சாட்டப்பட்டவர் தீயின் நடுவே நடந்து வர செய்யப்படுவார். அந்த நபர் எந்த தீ காயமும் அடையவில்லை என்றால் மட்டுமே அவர் குற்றமற்றவராக கருதப்படுவார்.

தண்ணீர்முறை:

தெய்வ சிலையை சுத்தப்படுத்துவதற்கு உள்ள நீரை, குற்றம் கூறினால் குற்றம் சாட்டப்பட்டவர் அதை குடிக்கும்படி செய்யப்படுவார், அதனை தொடர்ந்து வரும் 14 நாட்களுக்குள் குடிக்கும்வரை அவருக்கு எந்த கேடான பாதிப்பும் ஏற்படவில்லை என்றால் அவர் குற்றமற்றவர் என கருதப்படுவார்.

நஞ்சு அருந்தும் சோதனை:

இம்முறையில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு நஞ்சு அருந்தும்படியாக செய்யப்படுவார், அந்த நபருக்கு எந்த தீய விளைவும் ஏற்படவில்லை என்றால் அவர் குற்றமற்றவர் என கருதப்படுவார்.

குலுக்கல் சோதனை:

குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு தொகுப்பில் இருந்து ஒண்றை எடுத்து தரும்படி கேட்டுக் கொள்ளப்படுவார். அதில் அவருக்கு “தர்ம கட்டு” வந்திருந்தால் அவர் குற்றமற்றவராக கருதப்படுவார்.

அரிசி தானிய சோதனை:

இம்முறையில் குற்றம் சாட்டப்பட்டவர் உமி நீக்கப்படாத நெல் தானியத்தை மென்று சாப்பிடும் படியாக செய்யப்படுவார், அவருடைய வாயில் இரத்தக்கறௌ காணப்பட்டால் அவர் குற்றம் செய்தவர் என்று அறிவிக்கப்படுவார்.

ஊற்றுநீர் சோதனை முறை: இங்கு குற்றம் சாட்டப்பட்டவர் நஞ்சு போன்ற நீரை குடிக்கும்படியாக செய்யப்படுவார், அவர் உளறினால் அவர் குற்றம் செய்தவராவார் அல்லது குற்றத்தை அந்த நபர் ஒத்துக் கொண்டவராவார்.

இடைக்காலத்தில் இந்தியாவில் நீதித்துறை அமைப்பு

இடைக்கால இந்தியாவில் பேரரசை நிர்வகிக்கும் சுல்தான்/சுல்தானா ஆகியோரே நீதி நிர்வாகத்தை நிர்வகிக்கும் உச்சபட்ச அதிகாரம் கொண்டவர்கள் ஆவர். அவர்கள் கீழ்க்கண்ட தகுதி நிலைகளில் இருந்து நீதி நிர்வாகத்தை நடத்தினர். அவற்றின் பெயர்கள் பின்வருமாறு;

 • திவான் –இ-குவாசா (நடுவர்),
 • திவான் –இ-மசலிம் (அதிகாரத்துவத்தின் தலைவர் ) மற்றும்
 • திவான் –இ-ரியாசத் (தலைமை தளபதி).
 • இடைக்கால இந்தியாவில் நிர்வாக அமைப்புமுறைகளே நீதித்துறை அமைப்புகளாக வகைப்படுத்தப்பட்டிருந்தன. நீதிமன்றங்களின் அதிகார வரம்பானது தலைநகரம், மண்டலம், மாவட்டம், பர்கானா (வட்டம்) மற்றும் கிராமம் என நிலப்பரப்பு அடிப்படையில் தெளிவாக பிரிக்கப்பட்டிருந்தது. பொதுவாக, சுல்தானத்தின் தலைநகரில் கீழ்க்கண்ட ஆறு வகையான நீதிமன்றங்கள் நிறுவப்பட்டு இருந்தன.
 • மன்னர் நீதிமன்றம்
 • மேல்முறையீட்டு உச்ச நீதிமன்றம் (திவான் –அல்-மசாலிம்)
 • குடிமையியல் வழக்குக்கு உச்ச நீதிமன்றம் (திவாநி-ரிசாலட்)
 • மாநிலத் தலைமை நீதிபதி நீதிமன்றம் (சக்ரே ஜகான் நீதிமன்றம்)
 • தலைமை நீதிபதி நீதிமன்றம்
 • தேசத்துரோக வழக்குகள் நீதிமன்றம் (திவான் –இ-ரியாசட்)
 • மன்னர் நீதிமன்றம் சுல்தானால் தலைமையேற்று நடத்தப்பட்டது. இந்த நீதிமன்றம் அசல் அதிகாரவரம்பு (Original Jurisdiction) மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் என இரண்டும் கொண்ட அமைப்பாகச் செயல்பட்டது.
 • நீதி நிர்வாகத்தைப் பொருத்தவரை இதுவே உச்சபட்ச மேல்முறையீட்டுத் தீர்ப்பாகும். முப்தி (சட்டவல்லுனர்) எனப்படும் சட்டவல்லுனர்கள் சுல்தானுக்கு உதவியளித்தனர்.
 • திவான் -அல்-மசாலிம் மற்றும் திவான் –இ- ரிசாலட் நீதிமன்றங்கள் முறையே தேச துரோக வழக்குகள் மற்றும் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் உச்ச நீதிமன்றங்களாகும்.
 • இந்த நீதிமன்றங்கள் அலுவலக ரீதியாக சுல்தானால் தலைமை தாங்கி நடத்தப்பட வேண்டும் எனினும், அவர் அதிகமாக குற்றவியல் நீதி விசாரணைகளின்போது மட்டுமே கலந்து கொண்டார்.
 • சுல்தான் இல்லாதபோது குவாசி-உல்-குசாட் எனும் அரசின் நீதிமன்ற தலைமை அலுவலர் தலைமை தாங்கி நடத்துவார். ஆனால், பின்னர் சத்ரே ஜகான் எனும் அலுவலர் பதவி உருவாக்கப்பட்டு நீதித்துறையின் உண்மையான தலைமை அலுவலராக செயல்பட்டார்.
 • இந்த சத்ரே ஜகான் நீதிமன்றமும் மற்றும் தலைமை நீதிபதி நீதிமன்றமும் பின்னர் அலாவுதீன் கில்ஜி ஆட்சியில் இணைக்கப்படும்வரை நீண்டகாலமாகத் தனித்தே இயங்கின.
 • தலைமை நீதிபதியின் நீதிமன்றம் குடிமையியல் மற்றும் குற்ற வழக்குகளைக் கையாண்டது.
 • தலைமை நீதிபதியின் கீழ் திறமையான, நேர்மையான, மதிக்கப்பட்ட உதவி நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். முப்தி, பண்டிட், மொக்டாசிப் (அரசு வழக்கறிஞர் தரப்பு) தாத்பாக் (நிர்வாக அலுவலர்) போன்ற அலுவலர்கள் தலைமை நீதிபதியின் நீதிமன்றத்துடன் இணைக்கப்பட்டிருந்த அலுவலர்கள் ஆவர். திவான்-இ- ரியாசத் பெரும் தேச துரோக வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் ஆகும்.

நவீன இந்தியாவில் நீதித்துறை அமைப்பு

 • கிழக்கிந்திய கம்பெனி 1600 ஆண்டு முதலாம் ராணி எலிசபெத்தின் சாசன சட்டத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனி வர்த்தகம் மேற்கொள்ளத் தேவையான ஒழுங்கு முறைகள் மற்றும் அங்கீகாரத்தை அரசு அளித்தது.
 • மதராஸ் நிர்வாகத்தைப் பொருத்தவரை 1661-ஆம் ஆண்டு சாசன சட்டம் ஒரு ஆளுநர் அவருடன் தலா ஒரு குடியேற்றப்பகுதிக்கு ஒரு உறுப்பினர் என்ற அடிப்படையில் ஒரு குழுநியமிக்க வழி வகுத்தது. இக்குழுவே வழக்குகளை விசாரித்தது.
 • கிழக்கிந்திய கம்பெனி குறிப்பாக மதராஸ் பகுதியில் ஒரு ஆளுகை சக்தியாக உருவானது. இங்கு ஏற்கெனவே இயங்கிய உள்ளூர் நீதி நிர்வாக முறையைப் பின்பற்றும் வகையில் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடித்தது.
 • இங்கிலாந்து சட்டத்தின்படி ஆளுநரும் அவருடைய ஆட்சிகுழுவும் குடிமையியல், குற்ற வழக்குகளைத் தீர்மானிப்பதற்கு அதிகாரமளிக்கப்பட்டன.
 • எனினும் உள்நாட்டு வழக்குகளில் உள்ளூர் பாரம்பரிய முறைகளே பின்பற்றப்பட்டன. இங்கிலாந்து அரசால் விசாரிக்கப்பட்ட முதல் வழக்கு அசெண்டினா வழக்கு ஆகும்.
 • 1665-ஆம் ஆண்டு இந்த வழக்கு நடந்தது. அப்போது, பாக்ஸ் க்ராப்ட் ஆளுநராக இருந்தார். 1678-ஆம் ஆண்டு ஸ்டிரெய்ன்ஷாம் மாஸ்டர் என்பவர் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டது, மதராஸ் நீதிமுறை அமைப்பு மறுநீரமைப்பு செய்யப்படுவதற்குக் காரணமானது.
 • ஆளுநரும் அவருடைய குழுவும் சேர்ந்து நீதி வழங்கும் அதிகாரம் கொண்ட உயர் நீதிமன்ற ஆட்சி குழுவாக மாறியது. ஆங்கிலம் நீதிமன்ற மொழியாக அறிவிக்கப்பட்டது.
 • வணிகர்கள் கடலில் மேற்கொள்ளும் குற்றங்களை விசாரிக்க ஒரு கடற்படை நீதிமன்றம் நிறுவ 1683-ஆம் ஆண்டு சாசன சட்டம் வழிவகுத்தது. 1687-ஆம் ஆண்டு சாசன சட்டம் மதராஸ் மாநகராட்சி அமைப்பதற்கு கிழக்கிந்திய கம்பெனிக்கு அதிகாரமளித்தது. அதோடு மேயர் நீதிமன்றம் இணைக்கப்பட்டது. இதுவே மதராஸ் நகரத்தின் நீதிமன்றமாக (வழக்கு மன்றம்) இயங்கியது.
 • பம்பாயின் நீதி நிர்வாகத்தைப் பொருத்தவரை, பாம்பே மீது கிழக்கிந்திய கம்பெனி நீதிதுறை அதிகாரம் செலுத்த 1668 ஆம் ஆண்டு சாசன சட்டம் அதிகாரம் அளித்தது.
 • 1672-ஆம் ஆண்டு பிரகடனம், ஆங்கிலேயச் சட்டத்தை பம்பாயில் அறிமுகப்படுத்தியது. மேலும், பம்பாய் நீதிவழங்கும் அதிகாரம் கொண்ட நீதித்துறை புதிய மத்திய நீதிமன்றத்தை நிறுவியது.
 • ஆங்கில சட்டத்தின் பயன்பாடு என்பது ஐரோப்பியர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் நலன்கள் சார்ந்த விவகாரங்களுக்கு பொருந்தக் கூடியதாகும். இந்த நீதிமன்றமானது குடிமையியல் குற்றவியல் மற்றும் நிரூபிப்பு வழக்குகளில் அதிகாரவரம்பைச் செயற்படுத்தியது.
 • மேலும் குற்றச் சட்டங்களை நிர்வகிக்க அமைதிக்கான நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டனர். அதன்பிறகு சாட்சியங்களை விசாரணை செய்யவும், தொடக்கநிலை விசாரணைகள் செய்யவும், வழக்குகள் நீதிமன்றத்தை நோக்கி கொண்டு செல்லப்பட்டன.
 • எனினும் சித்தி யாக்கூப் எனும் முகலாய கடற்படை தளபதியின் படையெடுப்பு 1690-ஆம் ஆண்டு பம்பாயில் நீதிமன்றம் கலைக்கப்படக் காரணமாகியது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு, 1718 ஆம் ஆண்டு மீண்டும் நீதிவழங்கும் அதிகாரம் கொண்ட நீதிமன்றம் புதுப்பிக்கப்பட்டது. இந்த நீதிமன்றம் குடிமையியல் மற்றும் குற்றவியல் வழக்கு விவகாரங்கள் மீதான விசாரணை நடத்த அதிகாரம் கொண்டதாகும்.
 • இந்த நீதிமன்றமானது வாரத்திற்கு ஒரு முறை கூடினாலும், துரிதமான விசாரணைக்கும் பாகுபாடற்ற தீர்ப்புகளுக்கும் புகழ் பெற்றதாகக் கருதப்படுகிறது.
 • கல்கத்தா மாகாணத்தைப் பொருத்தவரை, ஆளுநருக்கும், அவருடைய ஆட்சிக் குழுவுக்கும் நீதித்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன.
 • குடிமையியல் மற்றும் குற்றவியல் விவகாரங்களைப் பொருத்தவரை, கிழக்கிந்திய கம்பெனியானது ஏற்கனவே வழக்கத்திலிருந்த முகலாய நீதித்துறை நிர்வாக முறையையே பின்பற்றியது.
 • ஆங்கிலேயே மாவட்ட ஆட்சியரால் மூன்றாம் நடுவர் தீர்ப்பாயத்திற்குப் பரிந்துரைக்கப்படும் குடிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளை பாஜ்தாரி நீதிமன்றம் தலைமையேற்று நடத்தியது.
 • கல்கத்தா நீதித்துறை நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியர் மிக முக்கியப் பங்கு வகித்தார். மேலும், அவருடைய அலுவலகம் குடிமையியல், குற்றவியல் மற்றும் வருவாய் வழக்குகளை விசாரிக்கும் அலுவலகமாகவும் இருந்தது.

 • இதேபோல் சாசன சட்டம் 1687 மதராஸ் மாகாணத்தில் பயன்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் 1726-ஆம் ஆண்டு சாசன சட்டம் மூன்று மாகாணங்களிலும் ஒவ்வொரு மேயர் நீதிமன்றங்களை அமைத்தது.
 • 1753-ஆம் ஆண்டு சாசன சட்டம், 1726-ஆம் ஆண்டு சாசனத்தில் நீதி தொடர்பான பகுதிகளை மேலும் சீர்த்திருத்தம் செய்தது. மேலும் இந்த சாசனம் சட்டம் ஐந்து நீதிமன்றங்களை நிறுவியது. அவைகள், முறையே கோரிக்கைகள் நீதிமன்றம், மேயர் நீதிமன்றம், குடியரசுத்தலைவர் நீதிமன்றம், ஆட்சிக்குழு கொண்ட நீதிமன்றம் மற்றும் அரசர் தலைமையிலான நீதிமன்றம் ஆகியனவாகும்.
 • இந்திய நீதித்துறையின் மற்றொரு வரலாற்றுச் சிறப்புமிக்க பரிணாம வளர்ச்சி 1772-ஆம் ஆண்டு வாரன் ஹேஸ்டிங்கின் திட்டமாகும். இது நீதித்துறை நிர்வாகத்தை ஒழுங்குபடுத்துவதாக இருந்தது. 1780-ஆம் ஆண்டுகளில் அவர் , மாகாண நீதிமன்றங்களைச் சீரமைத்தார்.
 • காலனி ஆட்சிக் காலத்தில் நீதித்துறையில் ஏற்பட்ட மிக முதன்மையான மேம்பாடு என்பது உள்ளூர் சட்டங்களை தொகுத்தது ஆகும். முதலாவது கவர்னர் ஜெனரல் பதவி வகித்த வாரன் ஹேஸ்டிங்ஸ் இந்து சட்டங்களைத் தொகுப்பதற்கு காரணமானவர் ஆவார்.
 • அடுத்து கார்ன் வாலிஸ் தொகுத்த சட்டத் தொகுப்பு மற்றொரு முதன்மையான பங்களிப்பாகும். அதைப்போலவே இஸ்லாமிய சட்டங்களும் தொகுக்கப்பட்டு நீதிமன்றங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
 • கல்கத்தாவில் ஒழுங்குமுறைச் சட்டம் 1773-ஆம் ஆண்டு, ஒரு உச்ச நீதிமன்ற நீதி நிர்வாகம் அமைக்க மன்னருக்கு அதிகாரம் அளித்தது; சாசன சட்டம் 1774 உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்புகளை விரிவாக்கம் செய்தது.
 • எனினும், மதராஸ், பம்பாய் உச்ச நீதிமன்றங்கள் உடனடியாக நிறுவப்படவில்லை. 1801 மற்றும் 1824-ஆம் ஆண்டுகளில் முறையே மதராஸ், பம்பாய் உச்ச நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன. 1793-ஆம் ஆண்டில் காரன்வாலிஸ் பிரபு ‘சட்ட விதிகள் தொகுப்பு’ ஒன்றினைத் தயாரித்தார். இதுவே, ‘காரன்வாலிஸ் சட்டத் தொகுப்பு’ எனப் புகழ்பெற்றது. அது குடிமை மற்றும் குற்றவியல் என இரு விசாரணை முறைகளையும் கையாளுவதாக இருந்தது. அவர் குடிமையியல் நீதிமன்றங்களை அங்கீகரித்தார். நீதிமன்றக் கட்டணங்களை ஒழித்தார்.
 • மேலும், குற்றவியல் நீதிமன்றங்களில் சீர்திருத்தம் செய்தார். வங்காளத்தின் கவர்னர் ஜெனரலாக 1807-ஆம் ஆண்டு பதவியேற்ற மின்டோ பிரபு பல்வேறு நீதிமன்றங்களின் அதிகாரங்களையும் , அதிகார வரம்பினையும் அதிகரித்தார்.
 • 1813-ஆம் ஆண்டு ஹாஸ்டிங்ஸ் பிரபு கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். அவர் நாட்டின் குடிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நிர்வாகத்தில் மேலும் பல சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார்.
 • நீதி நிர்வாகத்தில் நிலவும் சிவப்பு-நாடா முறையைத் தடுக்க முயற்சி எடுக்கப்பட்டது. இவரைத்தொடர்ந்து பெண்டிங் பதவியேற்றார். இவர் இந்தியாவின் நீதித்துறை நிர்வாகத்தை மறுசீரமைப்பு மற்றும் தொகுக்கும் பணியை செய்தார். அவர் மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றங்களை மூடினார். அப்பணிகளை மாவட்ட நடுவர் நீதிமன்றங்களுக்கு மாற்றினார்.
 • 1834-1861 காலகட்டத்தில் இங்கிலாந்து மன்னர் நீதிமன்றமும், இந்தியாவில் கம்பெனி நீதிமன்றமும் தனித்தனி அதிகார வரம்புகளைக்கொண்ட இரட்டை நீதி அமைப்பை உருவாக்கி இருந்தது.
 • இந்திய உயர் நீதிமன்ற சட்டம் 1861, கல்கத்தா, மதராஸ், பம்பாய் ஆகிய நகரங்களில் நீதி வழங்கும் அதிகாரம் கொண்ட உயர் நீதிமன்றங்களை அமைக்க மன்னருக்கு அதிகாரம் அளித்தது; இது உச்ச நீதிமன்றமுறை ஒழிப்புக்கு இட்டுச் சென்றது. இதுவே இந்தியாவில் உயர் நீதிமன்றங்கள் தோன்றுவதற்கான வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாகக் கருதப்படுகிறது.
 • பின்னர், இந்திய அரசாங்கச் சட்டம் 1935, இந்திய உயர் நீதிமன்றங்களின் தன்மை, அதிகார வரம்பில் குறிப்பிடத்தக்க மாறுதல்களைச் செய்தது.
 • இந்தியா விடுதலை அடைந்து அரசமைப்பு ஏற்கப்பட்ட காலகட்டத்தில் பஞ்சாப், அசாம், ஒடிசா, ராஜஸ்தான், திருவாங்கூர், மைசூர் மற்றும் ஜம்மு காஷ்மீர் என ஏழு உயர் நீதிமன்றங்கள் நிறுவப்பட்டிருந்தன.
 • பிற உயர் நீதிமன்றங்கள் பின்னர் உருவாயின. இந்திய அரசமைப்பு நடைமுறைக்கு வந்த பின்னர், ஏற்கெனவே இயங்கிய உயர் நீதிமன்றங்கள் அங்கீகரிக்கப்பட்டன.
 • மேலும், அனைத்து மாநிலங்களும், ஒன்றிய ஆளுகைக்குட்பட்டப் பகுதிகளும் உயர் நீதிமன்றம் பெறும் வகையில் ஒவ்வொரு மாநிலம் அல்லது இரண்டும், மூன்று பகுதிகள் இணைத்து உயர் நீதிமன்றங்களை நிறுவ நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.
 • 1976-ஆம் ஆண்டு 42-வது அரசமைப்பு திருத்தச்சட்டம் உயர் நீதிமன்றங்களின் அதிகார வரம்பில் பெருமளவு மாற்றத்தினை கொண்டு வந்தது.
 • இவ்வாறாக, தொடக்கக் காலத்தில், கல்கத்தா, சென்னை , பம்பாய் என மூன்று உயர் நீதிமன்றங்களே அன்று இருந்தன. சுதந்திரத்திற்கு முன் இருந்த சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளில் மட்டுமல்லாமல், , உயர் நீதிமன்றங்கள் அமைப்பு மற்றும் அதிகாரவரம்பிலும் பெயரளவில் மாற்றங்களைக் கொண்டுவந்தன.
 • இதன் மூலம் அவற்றின் சுதந்திரத் தன்மை, பாகுபாடற்றத் தன்மை போன்றவை உறுதி செய்யப்பட்டன. அரசமைப்பை நடைமுறைக்கு கோண்டு வந்த பின்பே உயர் நீதிமன்றங்களின் நிலையானது வலிமையடைந்தது மேலும் குடிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளின் அசல் மற்றும் மேல்மூறையீட்டு நீதிமன்ற என்ற நிலையைக் கடந்து, அரசமைப்பின் பாதுகாவலனாகவும், அரசமைப்பு குறித்து விளக்கமளிக்கும் அதிகாரம் கொண்டதாகவும் வலுவடைந்தது.

இந்திய உச்ச நீதிமன்றத்தை பொருத்தவரை, இந்திய அரசாங்கச் சட்டம் 1935ல்ஒர் மைல்கல் சட்டமாகும். இந்திய அரசாங்கத்தின் அமைப்பை மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி இச்சட்டம், ஒற்றையாட்சி முறையில் இருந்து கூட்டாட்சி முறைக்கு மாறிக் கொண்டிருந்த அத்தருணத்தில் ஒரு கூட்டாட்சிமுறை சார்ந்த நீதிமன்றம் தேவை அதிகரித்தது. எனவே இது தொடர்பாக, அச்சட்டத்தில் ஒரு விதி சேர்க்கப்பட்டது. அதன்படி , 1937-அம் ஆண்டு கூட்டாட்சி முறை சார்ந்த நீதிமன்றம் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த நீதிமன்றம் ஒரு தலைமை நீதிபதியையும் மற்றும் ஆறு நீதிபதிகளையும் கொண்டிருந்தது. 1950-ஆம் ஆண்டு இந்நீதிமன்ரம் இந்தியாவின் உச்ச நீதிமன்றாக ஆனது.

இடைப்பட்ட 12 ஆண்டுகள் எனும் குறுகிய காலத்தில் கூட்டாட்சிமுறை சார்ந்த நீதிமன்றம் இந்திய சட்ட வரலாற்றில் அழியாத விளைவுகளை விட்டுச் சென்றது. தேசிய அதிகார வரம்பு கொண்ட முதல் நீதிமன்றமும் இதுவே ஆகும்.

இந்த கூட்டாட்சி முறை சார்ந்த நீதிமன்றத்தில் இருந்துதான் அதன் நீதிபதிகள் சுதந்திரம், நேர்மை, பாகுபாடற்ற விசாரணை என்ற மரபைப் பெற்றெடுத்தனர்.

மேலும் 1726 மற்றும் 1883-ஆம் ஆண்டுகளுக்கிடையே பிரபுக்களின் நீதிமன்ற மேலவை (Privy Council) ஆற்றிய பங்கு குறித்தும் இங்கு சிறப்பாக குறிப்பிட வேண்டியது தேவையாகிறது. இது இந்திய நீதித்துறை முறைக்கு இன்றியமையாத அளவிற்கு பங்களித்தது, இன்றளவும் நீதிமன்றங்களில் ஒளிவிளக்காக உள்ள அடிப்படையான இந்திய சட்டக் கோட்பாடுகளை வகுத்துக் கொடுத்தது இதுவே ஆகும்.

இந்திய சுதந்திரச் சட்டம் , 1947-ஆம் ஆண்டு மூலம் அரசியல் அதிகாரம் மாற்றப்பட்டது. இந்தியாவில் தனித்த, சுதந்திரமான நீதித்துறை அமைப்பு நிறுவுவதன் தேவையை ஏற்படுத்தியது. இந்த நோக்கத்துடன் கூட்டாட்சிமுறை சார்ந்த நீதிமன்றத்தின் அதிகார வரம்பு இது விரிவாக்கப்பட்டது.

இதையொட்டி, பிரபுக்கள் நீதிமன்ற மேலவை ஒழிப்பு, கூட்டாட்சிமுறை சார்ந்த நீதிமன்ற அதிகார விரிவாக்கம் சட்டம் 1949 இயற்றப்பட்டது.

இதன்படி, இந்தியக் கூட்டாட்சிமுறை சார்ந்த நீதிமன்றம் நாட்டின் உயர்ந்தபட்ச நீதி அதிகார வரம்பு கொண்டதாக வலுவடைந்தது. 4

ஜனவரி 26, 1950-ஆம் ஆண்டு அரசமைப்பு அமலாக்கத்துடன், அரசமைப்பு உறுப்பு 124 இந்திய உச்ச நீதிமன்றத்தை நிறுவ வழி செய்தது.

இவ்வாறு, மெதுவாகவும், சீராகவும் படிப்படியாகவும் இந்திய நீதி அமைப்பு பரிணாமம் அடைந்தது. இது காலத்தோடு பொருந்தி சிறப்பாக வளர்ந்து தன்னை நிரூபித்துக் கொண்டுள்ளது.

சர் ஹரி சிங் கோர்

இறுதிக்கட்ட மேல்முறையீட்டுக்காக பிரிந்து செல்லாமல் இந்தியாவிலேயே மேல்முறையீடு செய்யும் ஒரு அனைத்திந்திய தலைமை நீதிமன்றத்தின் தேவையை இல் உணர்ந்தவர்.

இந்திய உச்சநீதி மன்றம்

இந்திய அரசமைப்பு மூன்று அடுக்கு நீதித்துறை அமைப்பினை வழங்குகிறது. அவை வருமாறு;

 1. இந்திய உச்ச நீதிமன்றம்
 2. அரசமைப்புப்படி உருவாக்கப்பட்ட மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்கள்.
 3. ஒவ்வொரு மாநிலத்திலும் நீதி மாவட்டங்களில் வாரியாக மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றங்கள்.

 • இந்திய அரசமைப்பு நீதித்துறைக்கு சுதந்திரம் வழங்கியுள்ளது. அதாவது, ஆட்சித்துறை சட்டமன்றங்களின் தலையீடுகளில் இருந்து நீதித்துறைக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.
 • இந்தியா போன்ற கூட்டாட்சி மக்களாட்சியில், உச்ச நீதிமன்றமே அரசமைப்பின் காவலன் ஆகும்.
 • மத்திய, மாநில அரசுகளுக்கு இடையில் எழும் சிக்கலுக்கு, தீர்வு காண்பது, மாநிலங்களுக்கு இடையே எழும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பது, குற்றவியல், குடிமையியல் வழக்குகளில் உயர்ந்தபட்ச மேல்முறையீடு நீதிமன்றம் ஆகிய மிகப் பெரிய பொறுப்புகளை நிறைவேற்றுகிறது.
 • அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல் அடிப்படை உரிமைகள் அமலாக்கம் மற்றும் அனைத்து இந்தியக் குடிமக்களின் சுதந்திரம் ஆகிய பெரும் பொறுப்புகளை உச்ச நீதிமன்றம் சுமக்கிறது.
 • எனினும் அமெரிக்க, ஐக்கிய நாடுகளின் கூட்டாட்சி அமைப்பு போன்று (ஒன்று கூட்டாட்சிக்காக மற்றொன்று மாநிலங்களுக்காக) என இரண்டு தொகுப்பு நீதித்துறை அமைப்பினை இந்திய அரசமைப்பு வழங்கவில்லை.
 • இந்தியா ஒரு ஒருங்கிணைந்த நீதித்துறை முறையினை மட்டுமே கொண்டிருக்கீறது. இதன்படி, உச்ச நீதிமன்றம் தலைமை நீதிமன்றமாக (Apex) இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்கள் மீதும் அதிகாரம் செலுத்துகிறது.

சட்ட மூலவளங்கள்:

இந்தியாவில் சட்ட ஆட்சியின் மூல ஊற்றாக அரசமைப்பு அமைந்திருக்கிறது. அரசமைப்பின் அடிப்படைகளுக்கு ஏற்ப நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்கள், ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகளின் சட்டமன்றங்கள் சட்டங்கள் இயற்றிக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. தவிர, உறுப்புகள், ஒழுங்குமுறைகள், நிர்வாக அமைப்புச் சட்டங்கள் என துணைச் சட்டங்கள் இயற்றவும் அனுமதிக்கப்படுகிறது. அதே சமயம், இவை மூன்றாவது சட்ட மூலங்கள் எனக் கருதப்படும்.

ஒருங்கிணைந்த நீதித்துறை

இந்தியக் கூட்டாட்சி, இரட்டை ஆட்சி அமைப்புமுறை கொண்டிருந்தாலும் இரட்டை நீதித்துறை அமைப்பைக் கொண்டிருக்கவில்லை.

உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும், அரசமைப்பின் கீழ் ஒரு ஒருங்கிணைந்த நீதித்துறையாகச் செயல்பட்டு அனைத்து குடிமையியல் அல்லது குற்றவியல் வழக்குகளுக்கு தீர்வு காண்கிறது. தீர்வு வழங்கும் முறையில் வேறுபாடுகளைக் களைவதற்காக இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது.

 • டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பும் அதிகாரங்களும்:

 • உச்ச நீதிமன்றமே அசல், மேல்முறையீட்டு மற்றும் ஆலோசனை வழங்குதல் என மூன்று அதிகார வரம்புகளைக் கொண்டுள்ளது. அசல் நீதி அதிகாரவரம்பு என்பது உச்ச நீதிமன்றங்களில் அனைத்து வழக்குகளுக்கும் மூலாதாரமாகிவிடுகிறது என்பதாகும். இவை மத்திய அரசாங்கங்களுக்கும் அல்லது இதர மாநில அரசுகளுக்கும் இடையே எழும் கருத்து வேறுபாடுகள் அல்லது மாநிலங்களுக்கு இடையே எழுகின்ற சிக்கல்களையும் உள்ளடக்கியது ஆகும். அடிப்படை உரிமைகள் தொடர்புடைய வழக்குகளில் உச்ச நீதிமன்றமானது அசல் நீதித்தூறை, மேல்முறையீட்டு அதிகார வரம்பு என இரண்டு அதிகாரங்களையும் கொண்டிருக்கிறது. மேலும் நீதிப்பேராணைகள் மூறையே, ஆட்கொணர்வு , நெறியுறுத்தும் நீதிப்பேராணை, தகுதிமுறை வினவுதல், தடை, கீழமை நீதிமன்றங்களுக்கு ஆணையிடுதல், விளக்கம் கோரி ஆணையிடுதல் போன்ற ஆணைகளை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கிறது.
 • உச்ச நீதிமன்றம் தான் இந்தியாவில் உள்ள உச்சபட்ச மேல் முறையீட்டு நீதிமன்றமாகும். உயர் நீதிமன்றங்களுக்கு எதிரான மேல்முறையீடுகளை இங்கு தான் செய்ய முடியும் (குடிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகள் இரண்டிற்கும்). குறிப்பிட்ட விவகாரங்களில் வழிகாட்டுதல் வழங்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு உள்ளது.
 • குடியரசுத்தலைவர் உச்ச நீதிமன்றத்திடம் எந்த ஒரு சட்ட விவகாரம் குறித்தும் ஆலோசனை கேட்டு அணுக முடியும். ஆனால் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனைகளை குடியரசுத்தலைவர் ஏற்க வேண்டிய கட்டாயம் இல்லை.
 • உச்ச நீதிமன்றம் இந்திய அரசமைப்பின் பாதுகாவலனாக இயங்குகிறது அரசமைப்புக்கு விளக்கம் அளிப்பதில் உச்ச நீதிமன்றமே இறுதி அதிகாரம் கொண்டுள்ளது.
 • நிர்வாக நடவடிக்கையோ, கீழமை நீதிமன்றங்களின் தீர்புகளோ அரசமைப்பின் அடிப்படை நோக்கங்களுக்கு எதிராக உள்ளது என உச்ச நீதிமன்றம் கருதுமானால் அதனை ரத்து செய்யும் அதிகாரம் கொண்டுள்ளது.

தாமதமாகும் நீதி , மறுக்கப்படும் நீதியே

 • கீழமை நீதிமன்றங்களில் 2.91 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளது; நீதி பரிபாலனம் தாமதம்.
 • 10 ஆண்டுகளுக்கும் அதிகமாக வழக்குகள் அதிகம் தேக்கம் அடைந்துள்ள மாநிலங்களில் மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் மட்டும் 8 கோடி வழக்குகளை நிலுவையாகக் கொண்டு உத்திரப்பிரதேச மாநிலம் முதலிடம் வகிக்கிறது.
 • தேசிய நீதித்துறை தகவல் அமைப்பின்படி, நாடு முழுவதும் மாவட்ட மற்றும் துணை நிலை நீதிமன்றங்களில் 2.91 கோடி வழக்குகள் தேக்கமடைந்துள்ளன. இவற்றில் 21.9 லட்சம் வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் அதிகமாக நிலுவையில் உள்ளன.
 • தேசிய நீதித்துறை தகவல் அமைப்பின்படி, நாடு முழுவதும் மாவட்ட மற்றும் துணை நிலை நீதிமன்றங்களில் 2.91 கோடி வழக்குகள் தேக்கமடைந்துள்ளன. இவற்றில் 21.9 லட்சம் வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் அதிகமாக நிலுவையில் உள்ளன.
 • வழக்குகள் அதிகமாக தேக்கமடைந்த மாநிலங்களில் உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு அடுத்தப்படியாக பீகார் மாநிலத்தில் மூன்று லட்சம் வழக்குகளும் மஹாராட்டிர மாநிலத்தில் இரண்டு லட்சம் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. சிக்கிம் மாநிலத்தில் இரண்டு லட்சம் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. சிக்கிம் மாநிலத்தில் இரண்டு வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளது. அந்தமான் நிக்கோபார் மாநிலத்தில் ஒரு வழக்கும் நிலுவையில் இல்லை.

தாமதமாகும் நீதி மறுக்கப்படும் நீதி என்ற தலைப்பில் மாணவர்களை இருப்பிரிவுகளாகப் பிரித்து உரையாடுவதற்கு ஏற்பாடு செய்யலாம். ஒருக்குழுவினர் தலைப்பிற்கு ஆதரவாகவும் மற்றக் குழுவினர் தலைப்பிற்கு எதிராகவும் வாதிடும்படி கூறலாம்.

உச்சநீதிமன்றம் அமைப்பு

 • உச்ச நீதிமன்றமானது இந்திய அரசமைப்புப்பகுதி 5 அத்தியாயம் 4 மூலம் நிறுவப்பட்டுள்ளது. அரசமைப்பு உறுப்புகள் 124 முதல் 147 வரை இந்திய உச்ச நீதி மன்றத்தின் வடிவம் மற்றும் அதிகார வரம்புகள் குறித்து கூறுகின்றன.
 • அரசமைப்பு ஆரம்பத்தில் ஒரு நீதிபது, ஏழு கீழ்நிலை நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தினை அனுமதித்தது. இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும் நாடாளுமன்றத்திற்கு அரசமைப்பு அதிகாரம் கொடுத்திருந்தது. 2008-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்தது (2019ன் படி 34 நீதிபதிகள், தலைமை நீதிபதி உள்பட).
 • உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமனம் செய்வதற்கு, தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றத்தின் இதர நான்கு மூத்தநீதிபதிகள் கொண்ட “குழு” –வுடன் (Collegium) கலந்தாலோசிக்க வேண்டும்.
 • புதிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறித்து குழு ஒருமித்த கருத்து அடிப்படையில் பரிந்துரைக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் ஒவ்வொரு நீதிபதியும் அமைச்சரவை மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுடன் கலந்தாலோசனை செய்த பின்னர் குடியரசுத்தலைவரால் நியமனம் செய்யப்படுகிறார்.
 • அவ்வாறு நியமனம் செய்யும் உச்ச நீதிமன்ற நீதிபதி 65 வயது அடையும் வரை பதவியில் இருக்கலாம். எந்த ஒரு நீதிபதியாவது பதவி விலக நினைத்தால், தன்னால் கைப்பட எழுதிய பதவி விலகல் கடிதத்தில் கையொப்பமிட்டு குடியரசுத்தலைவருக்கு சமர்ப்பிக்க வேண்டும். ஒரு நீதிபதியை நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலம் பதவி நீக்கம் செய்ய முடியும்.
 • ஒருவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட அவர் இந்தியக் குடியுரிமை பெற்றிருத்தல், உயர் நீதிமன்ற நீதிபதியாக ஐந்து ஆண்டுகள், பணியாற்றிய அனுபவம் அல்லது குறைந்து 10 ஆண்டுகள், தொடர்ந்து ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்பட்ட உயர் நீதிமன்றங்களில் வழக்குரைஞராகப் பணியாற்றிய அனுபவம் இவற்றுடன் நாடாளுமன்றம் விதித்துள்ள தகுதிகளையும் கொண்டிருக்க வேண்டும் அல்லது அத்தகைய ஒரு நபர் கட்டாயம் குடியரசுத்தலைவரின் கருத்தில் தலைசிறந்த சட்ட நிபுணராக இருக்க வேண்டும்.

நியமனங்கள் அனைத்தும் பொதுவாக பணிமூப்பு அடிப்படையில் செய்யப்படுகிறது.

பட்டியலினத்தவர் சமுதாயத்தில் இருந்து ஒருவர் முதல் முறையாக 2000-இல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். அவர் நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் ஆவார். இவர் 2007-இல் பட்டியலினத்தைச் சார்ந்த முதல் தலைமை நீதிபதியாக உயர்ந்தார்.

தற்போதுள்ள அரசமைப்பின் கீழ் இந்திய உச்ச நீதிமன்றம் ஜனவரி 28,1950-ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியது. தொடக்கத்தில் நாடாளுமன்றத்தின் இளவரசர்கள் மாடத்தில் செயல்பட்டது. 1958-ஆம் ஆண்டு தற்போது உள்ள வளாகத்துக்கு மாற்றப்பட்டது.

நீதிபதி ஹரிலால் ஜெ.கனியா உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி ஆவார். அவருடன் நீதிபதிகளாக பதவியேற்றவர்கள் முறையே, நீதிபதி சையத் பாசல் அலி, பதஞ்சலி சாஸ்திரி, நீதிபதி மெகர்சந் மகாஜன், நீதிபதி பிஜன் குமார், நீதிபதி முகர்ஜி மற்றும் நீதிபதி எஸ்.ஆர். தாஸ் ஆகியோர்கள் ஆவர்.

உயர் நீதிமன்றங்கள்

 • உயர் நீதிமன்றங்கள் மாநிலங்களின் தலைமை நீதித்துறை நிர்வாக அமைப்பு ஆகும். அரசமைப்புப்படி ஒவ்வொரு மாநிலமும் ஒரு உயர் நீதிமன்றத்தை பெற்றிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 • இருந்தபோதும், தற்போது நான்கு மாநிலங்கள் ஒன்றுக்கு அதிகமான மாநிலங்களுடன் இணைந்த உயர் நீதிமன்றத்தினைக் கொண்டுள்ளன. ஆறு ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகள் அருகே அமைந்த மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தின் நீதி அதிகார வரம்பின் கீழ் வருகின்றன.
 • ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் டில்லி மட்டுமே தனக்கான உயர் நீதிமன்றத்தினைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு உயர் நீதிமன்றமும் ஒரு தலைமை நீதிபதியையும் இதர நீதிபதிகளையும் கொண்டிருக்கிறது.

 • குறிப்பிட்ட இடைவெளிகளில் குடியரசுத்தலைவர் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்கின்றார். உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியினை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, மாநிலத்தின் ஆளுநர் ஆகியோரை கலந்தாலோசித்து குடியரசுத்தலைவர் நியமனம் செய்கிறார், பிற நீதிபதிகள் நியமனத்தில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் பரிந்துரைகளும் ஆலோசனை கேட்கப்படும்.
 • உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் 62 வயது நிரம்பும் வரை பதவியில் இருப்பார். பதவி நீக்கத்தை பொருத்தவரை உச்ச நீதிமன்ற நீதிபதியின் பதவி நீக்க நடைமுறை போலவே இருக்கும்.
 • உயர் நீதிமன்ற நீதிபதி நியமனத்திற்கு ஒருவர், இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும் 10 ஆண்டுகள் நீதித் துறையில் பணிபுரிந்திருக்க வேண்டும் அல்லது 10 ஆண்டுகள் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி இருக்க வேண்டும்.
 • உயர் நீதிமன்றத்தின் வழக்குகள் மாநில ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் அசல் நீதித்துறை மற்றும் மேல்முறையீட்டு அதிகார வரம்பு ஆகியனவற்றை உள்ளடக்கியது.
 • ஒவ்வொரு உயர் நீதிமன்றமும் தனது கீழ் உள்ள கீழமை நீதிமன்றங்களின் மீது மேலாதிக்க அதிகாரம் கொண்டிருக்கிறது. உயர் நீதிமன்றங்கள் தனித்த, ஒருங்கிணைந்த நீதித்துறை அதிகார அமைப்பாக இருந்தாலும் அவை இன்னும் முழுமையான சுதந்திரமான நீதித்துறை நிறுவனங்கள் எனக் கூறமுடியாது.
 • உச்ச நீதிமன்றம் அவைகளின் மீது நேரடியான நிர்வாக கட்டுப்பாடு எதுவும் கொண்டிருக்கவில்லை, அவை எந்த விதத்திலும் சட்டமன்றத்தாலோ அல்லது மாநில ஆட்சித்துறையாலோ கட்டுப்படுத்தப்படுவதில்லை.
 • ஆனால் அவற்றின் நீதிபதிகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உடனான ஆலோசனைக்கு பிறகு குடியரசுத்தலைவரால் ஒரு உயர் நீதிமன்றத்தில் இருந்து மற்றொரு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட முடியும்.
 • உயர்நீதிமன்றங்களும் கூட அசிப்படை உரிமைகள் தொடர்புடைய வழக்குகளில் நீதிப் பேராணைகள் வழங்கும் அதிகாரங்கள் கொண்டவைகளாகும்.

அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கான சட்ட வழித்தீர்வுகள்

 • உரிமைகள் மீறப்பட்ட நபர்களுக்கு விரைந்து நீதி வழங்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் பார்வையில் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள் இரண்டும் நீதிப் பேராணைகள் இடைக்கால உத்தரவு வழங்கும் அதிகாரங்கள் கொண்டிருக்கின்றன. அவைகள் ஐந்து வகைப்படும்.
 1. ஆட்கொணர்வு நீதிப்பேராணை

இதன் பொருள் ஒரு நபரை உயிருடன் கொண்டு வந்து நிறுத்தும்படி கூறுவதாகும். இந்த நீதிப்பேராணை ஒரு நபர் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு வழக்கிற்கு பொருந்தக் கூடியதாகும். இந்த நீதிப்பேராணையானது ஒவ்வொரு தனிநபரின் , தனிநபர் சுதந்திரத்தைப் பெறுகிறது.

2. நெறியுறுத்தும் நீதிப்பேராணை

இந்த பேராணையானது, சட்டப்படி இயங்கும் படியும், சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும் இடப்படும் ஆணையாகும். இதன் பொருள் எந்த ஒரு அதிகாரம் கொண்டோரையும் அவரின் சட்டபூர்வமான கடமையை செய்ய உத்தரவிடுவதை குறிக்கும். இந்த நெறிமுறையுறுத்தும் நீதிப்பேராணையானது சட்டபூர்வ கடமையை வலியுறுத்துவதுடன், பொது மக்கள் நலன்காக்கும் கடமையை செய்ய மறுக்கும் அதிகாரி, அலுவலர்கள், அரசு என நீதிமன்ற அமைப்புகளுக்கு எதிராகக் கூட ஆணையிடக் கூடியதாகும்.

3. தடை நீதிப்பேராணை

இந்த நீதிப் பேராணையானது உயர்மட்ட நீதிமன்றம், கீழ்நிலை நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயங்கள் தங்களின் அதிகார வரம்பை மீறி நடப்பதைத் தடுக்கும் விதமாக வழங்கப்படுவதாகும். இந்த தடை ஆணை நிதித்துறை சார்ந்த அமைப்புகள் அல்லது பகுதி அளவு மட்டுமே நீதித்துறை அமைப்புகளுக்கு எதிராக மட்டும் வழங்கப்படும் தடை ஆணைகள் ஆகும்.

4. தகுதி முறை வினவும் நீதிப் பேராணை

இதன் பொருள் , எந்த அதிகாரத்தின் அடிப்படையில் அல்லது பணி சான்றிதழ் ஆணை அடிப்படையில் என வினா எழுப்புவதை குறிப்பிடுவதாகும். இதன் பொருள் ஒரு நபர், ஒரு அரசு அலுவலக பதவியில், எந்தத் தகுதியின் அடிப்படையில் அமர்ந்திருக்கிறார் என வினா எழுப்பும் படியான விவகாரத்தில் வழங்கப்படும் நீதிப்பேராணையாகும்.

5. விளக்கம் கோரும் ஆணை

ஒரு பொது அலுவலில் சட்டபூர்வ நிலையை ஒருவர் எதன் அடிப்படையில் அல்லது எந்த அதிகார அமைப்பின் அடிப்படையில் அதில் அமர்த்தப்பட்டார் என்று கேள்விக்கேட்பது ஆகும்.

மேற்கண்ட நீதிப் பேராணைகளோடு, உயர் நீதிமன்றமானது சட்ட உறுப்பு 266-ன் கீழ் பொது மக்கள் நலன்கருதி வழிகாட்டுதல்கள், உத்தரவுகள் பிறப்பதாகும்.

நீதித்துறைச் சீராய்வு பொது நல வழக்கு மற்றும் நீதித்துறை செயல்பாட்டு முறை

நீதித்துறைச் சீராய்வு

 • நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றங்கள் இயற்றும் சட்டங்கள் அரசமைப்பிற்கு முரணாக இருக்குமானால் அச்சட்டம் செல்லாது என்று அறிவிக்கப்படலாம். இந்திய உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு இத்தகைய நீதித்துறை சீராய்வு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 • சட்டம் இயற்றுவது மற்றும் அதனைச் செயல்படுத்துவது என இரண்டின் மீதும் அரசமைப்புப்படி மறு ஆய்வு செய்து தீர்ப்பு வழங்கும் வகையில் இந்த அதிகாரம் விரிவான வரம்புகளைக் கொண்டுள்ளது.
 • இதே அடிப்படையில் ஒரு அரசமைப்புத் திருத்தச்சட்டம் மீதே சீராய்வு மனு தாக்கல் செய்யும் அளவுக்கு நீதித்துறைச் சீராய்வு அதிகார வரம்பு விரிவடைந்ததாகக் காணப்படுகிறது. இந்த வழக்குகள் அரசமைப்பு திருத்தச்சட்டம் இரு அரசமைப்பின் அடிப்படை கோட்பாட்டுக்கு பாதிப்பிற்குள்ளாகிறதா என்று மறு ஆய்வு செய்வதாகும்.
 • உதாரணமாக மதச்சார்பற்றத்தன்மை, மக்களாட்சி, கூட்டாட்சிமுறை போன்றவை மீதான திருத்தச்சட்டம், அரசமைப்பிற்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் கருதினால் அத்திருத்தச்சட்டம் அரசமைப்புக்கு விரோதமானது எனவே செல்லாது என்று அறிவிக்கப்படும்.

பொது நல வழக்கு

பொது மக்கள் நலன் கருதி எந்த ஒரு தனிநபரும் நீதிமன்றத்தை நாடி மனு அளிக்க முடியும். இது பொது நல மனு எனப்படுகிறது. இதன்படி, அரசமைப்பு உறுப்பு 32-ன் கீழ் உச்ச நீதிமன்றத்திலும், அரசமைப்பு உறுப்பு 226-இன் கீழ் உயர் நீதிமன்றங்களிலும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 133-ன்படி நடுவர் நீதிமன்றங்களிலும் பொது நல வழக்கிற்கான மனுவைத் தாக்கல் செய்ய முடியும். மேலும், இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி கீழ்க்கண்ட வகைகளில் பொது நல வழக்குகள் தொடர முடியும்.;

 1. கொத்தடிமை தொழிலாளர்கள் முறை தொடர்பான விவகாரங்கள்.
 2. கைவிடப்பட்ட (ஆதரவற்ற) குழந்தைகள்
 3. குறைந்தபட்ச கூலி வழங்காமை
 4. சிறைச்சாலையில் நிகழ்வும் மரணம், வன்கொடுமைகள் தொடர்பான புகார்கள்; விரைவான நீதி அடிப்படை உரிமை என்பதால் துரித விசாரணை கோருதல்
 5. வழக்குப் பதிவு செய்ய மறுக்கும் காவல்துறை அதிகாரிக்கு எதிராக வழக்கு மனுதாக்கல் செய்தல், வரதட்சனை கோரி பெண் வன்கொடுமை. மணப்பெண் தீவைப்பு, பாலியல் வன்கொடுமை, கடத்தல், கொலை, வதை போன்ற குற்றங்களுக்கு எதிரான புகார்கள்.
 6. பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை புகார்.
 7. சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்புடைய புகார்கள் என வகைப்படுத்துகின்றன.
 • அரமைப்பு உறுப்பு 32-ன் கீழ் உச்ச நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் பொது நல மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளும் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் தமக்குள் இணைத்துக் கொண்டுள்ளது.
 • பொது நல வழக்கு என்பது ஒரு பகைத் தன்மையில் வழக்கு தொடுக்கும் முறையல்ல. மாறாக, ஒடுக்கப்பட்ட மற்றும் பாதிப்புக்குள்ளாகும் சமூகப் பிரிவினர்களுக்கு மனித உரிமைகளை அர்த்தமுள்ளதாகவும், அவர்களுக்கு அரசமைப்பு வழங்கியுள்ள சமூக-பொருளாதார நீதியை உறுதிப்படுத்தவும் அரசு மற்றும் அரசு அதிகாரிகளுக்கு வாய்ப்பு வழங்குவதுடன் அவ்வாறு செயல்படாத அரசு மற்றும் அரசு அதிகாரிகளுக்கு எதிராகவும் விசாரிக்கிறது.
 • மாநில அரசுகள், மத்திய அரசு, மாநகராட்சி ஆகியவற்றிற்கு எதிராக பொது நல வழக்கு தொடர முடியும். ஆனல், தனிநபருக்கு எதிராக பொது நல வழக்கு பதிவு செய்ய முடியாது.
 • அண்மையில் இந்தியாவில் ஏராளமான பொது நல மனுக்கள் நீதிமன்றங்களில் பதிவு செய்யப்படுவதைக் காணமுடிகீறது. உச்ச நீதிமன்றம் 2005-ஆம் ஆண்டு ஒரு வழக்கை பொது நல வழக்காகத் தீர்மானிக்கிறது.
 • பொது நலனுக்கான சமூகம் எதிர் இந்திய அரசு (Common Cause Society Vs Union of India) , என அவ்வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 • பெருகி வரும் சாலை விபத்துகளை கருத்திற்கொண்டு சாலை பாதுகாப்பு சட்டங்களை இயற்றும்படி அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அந்த மனுவே பொது நல வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதேபோல அங்கம்மாள் பாணே எதிர் உத்தரபிரதேச மாநில அரசு என்ற வழக்கில் , உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு, கான்சிராம் நினைவு அரங்கம் அருகே நடைபெறும் கட்டுமானப் பணிகளைக் குறிப்பிட்ட காலத்துக்கு தடைசெய்தது.
 • இதேபோல மக்களாட்சி உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் எதிர் இந்திய அரசு (Peoples’ Union for Democratic Rights vs. Union of India) என்ற வழக்கினையும் உச்ச நீதிமன்றம் பொது நல வழக்காக எடுத்துக்கொண்டது.
 • சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மக்கள் தமக்கான நிவாரணம் கோரி நீதிமன்றங்களை அணுக இயலாத நிலையில் இருப்பதால் இத்தகைய தனிநபர் அல்லது குழுவினருக்கு அரசமைப்பு ரீதியான தீர்வு கோரி ‘பொது ஆர்வம் கொண்ட குடிமக்கள்’ நீதிமன்றத்தை நாடும்போது அதனை பொது நல வழக்காகக் கருதலாம் என்று கூறிய உச்ச நீதிமன்றம் இதனை பொது நல வழக்காக அனுமதித்தது.
 • பொது நல வழக்குகள் என்பவை “பங்களிப்பு நீதி” எனும் செயல்முறையின் ஒரு பகுதியாகும்; குடிமை வழக்குகளாக இவை நீதிமன்றங்களால் தாராளமாக வரவேற்கப்படுகிறது.

 • பரமானந் கட்டாரா எதிர் இந்திய அரசு என்ற வழக்கு (Parmanand Katara Vs.Union of India) பொதுமக்கள் நலனுக்காகப் பாடுபடும் மனித உரிமை செயற்பாட்டாளர் தொடுத்த பொது நல வழக்கு ஆகும்.
 • இதில் மருத்துவ தொழிலில் உள்ள ஒவ்வொரு நபரும், காயமடைந்த எந்த ஒரு குடிமகனுக்கும் வழக்கமான நடைமுறைகளைக் காரணங்காட்டி (Procedural Formalities) காத்திருக்க வைக்காமல் மருத்துவ உதவியினை செய்யவேண்டும் எனும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கியது.
 • சட்டம் இயற்றுதல் என்பது நீதித்துறை செயல்பாட்டு முறை மூலம் (judicial Activism) புதிய பரிணாமத்தை பெற்றிருக்கின்றது.
 • சமூகக் கண்ணோட்டத்தில் சட்டங்களுக்கு விளக்கமளிக்கும் ஆரோக்கியமான போக்கு நீதித்துறையில் காணப்படுகிறது. அமலில் உள்ள சட்டங்களின் அடிப்படையில் அல்லாமல் தனிநபர் அல்லது அரசியல் சக்திகளுக்கு சாதகமாக மேற்கொள்ளப்படும் நீதிமன்ற உத்தரவுகளை நீதித்துறை செயல்பாட்டு முறை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறது. நீதித்துறை செயல்பாட்டு முறை என்பது அரசமைப்பின் விளக்கம், சட்டப்பூர்வ அடித்தளங்கள் மற்றும் அதிகாரப் பிரிவினை ஆகியன தொடர்புடையதாகும்.
 • இந்திய நீதித் துறையானது, அரசின் ஒரு அங்கமாக இருக்கின்றபடியால், அதன் அமெரிக்க நீதித்துறைப் பிரிவைக் காட்டிலும் மிகுந்த செயலாக்கம் மிக்க பணியினை ஆற்றுகிறது.
 • அரசமைப்பில் வழங்கப்பட்டுள்ள கொள்கைகள், கோட்பாடுகளைக் கடைபிடிப்பதன்மூலம் இந்திய சமூகத்தை ஒரு நவீன சமூகமாக மாற்றும் தீர்ப்புகளை வழங்குகின்றன. இந்திய அரசமைப்பு உறுப்பு 21 அடிக்கடி உச்ச நீதிமன்றத்தில் எடுத்தாளப்படுகிறது. இந்த அரசமைப்பு உறுப்பின் மீதான தீர்ப்புகள் யாவும் நீதித்துறை செயல்பாட்டு முறைப் போக்கினை பிரதிபலிக்கின்றன.
 • ஏ.கே. கோபாலன் எதிர் மதராஸ் மாநில அரசு எனும் வழக்கில், ஒரு மனிதனின் வாழ்க்கை அல்லது சுதந்திரம் ஒடுக்கப்பட வேண்டும் என்ற வாதத்தை சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள செயல்முறைகள் அடிப்படையில் மட்டுமல்லாமல் பகுத்தறிவு மற்றும் நீதியின் அடிப்படையிலும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
 • எனினும், அதனைத் தொடர்ந்து மேனகா காந்தி எதிர் இந்திய அரசு என்ற வழக்கில், மேற்கண்ட நியாய வாதத்தினை நீதிமன்ற விளக்கம் மூலம் அரசமைப்பு உறுப்பு 21-ல் துணைப்பிரிவாகச் சேர்க்கப்பட்டது.
 • இது, அரசமைப்பு உருவாக்கத்தின்போது தவிர்க்கப்பட்ட பிரிவாகும். எனினும், அடுத்தடுத்த வழக்குகளில் உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்தும் இருக்கிறது. உதாரணமாக, சாதிக்கு வெளியே திருமணம் செய்து கொண்ட காரணத்திற்காக, ஆண்-பெண் இருவரை கௌரவக் கொலை செய்த பகவான் தாஸ் வழக்கில், (பகவாந்தாஸ் எதிர் தில்லி மாநில அரசு) அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

நீதித்துறை செயல்பாட்டு முறை

மாறிக்கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் நீதித்துறை மேற்கொள்ளும் வீரியமிக்க செயற்பாடுகள் நீதித்துறை செயல்பாட்டு முறை எனப்படுகிறது. அமெரிக்காவில் 1947 ஆம் ஆண்டு ஆர்தர் சன் சிங்கர் ஜூனியர் என்பவர் “உச்ச நீதிமன்றம்” 1947 என்ற தலைப்பிட்ட கட்டுரை ஒன்றில் “Judicial Activism” (நீதித்துறை செயல்பாட்டு முறை) என்ற சொல்லினை அறிமுகப்படுத்தினார். பிளாக்ஸின் சட்ட அகராதி (Black’s Law Dictionary), “Judicial Acrivism” – என்பது ஒரு “நீதித்துறை தத்துவம்” என்று கூறுகிறது. அது நீதிபதிகளை பழமைவாதத்திலிருந்து பிரித்து புதிய முற்போக்கான சமூக கொள்கைகளுக்கு ஆதரவாக ஊக்கப்படுத்துவதாகும்.

ஆஸ்திரேலியா நீதிமன்றம்

ஆஸ்திரேலியா நாட்டின் உயர்நிலை நீதியமைப்பு உயர் நீதிமன்றம் என்றே அழைக்கப்படுகிறது. அங்கு மாநிலத் தலைமை நீதிமன்றங்களே உச்ச நீதிமன்றம் என்றே அழைக்கப்படுகிறது.

அரசமைப்பு, நிர்வாகச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம்

அரசமைப்புச் சட்டம்:

 • அரசமைப்பு என்பது மேலான சட்டமாகும். மற்ற எல்லா சட்டங்களும் அரசமைப்பிற்கு பொருந்தி வர வேண்டும். அரசமைப்பானது அரசு தொடர்புடைய சட்டங்களையும், மக்கள் தொடர்புடைய சட்டங்களையும் உள்ளடக்கியதாகும்.
 • அரசமைப்பு விதிகள் என்பது அரசின் பல்வேறு நிறுவனங்களின் வரையறை, பணிகள், அதிகாரங்கள் மற்றும் அவற்றின் அமைப்புகள் குறித்த தொகுப்பு விதிகள் ஆகும்.
 • அதாவது சட்டமன்றம், ஆட்சித்துறை, நீதித்துறை போன்றவைகள் மற்றும் குடிமக்களின் அடிப்படை உரிமைகள், மத்திய மாநில அரசாங்கங்களுக்கிடையிலான உறவுகள் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகும்.
 • அரசமைப்பு என்பது வலியுறுத்துவதும் வழிகாட்டுவதுமான விதிகளின் , ஒரு தொகுப்பு ஆகும். இது நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரு விதிமுறைகளின் தொகுப்பை முன்மொழிவதன் மூலம் தேசத்தை ஒழுங்குபடுத்துகிறது. அவை நாட்டைச் சரியான திசை வழியில் வழி நடத்துகீறது.
 • அவை பல்வேறு அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், அரசு வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்டவைகள் ஆகும். நாட்டில் நிலவும் அமைப்பு முறையை ஒழுங்குபடுத்துவதற்கு நமக்கு அரசமைப்பு விதிகள் தேவைப்படுகின்றன. நாட்டு மக்கள் அடிப்படை உரிமைகளைக் கடந்து போகாமல் இச்சட்ட விதிகளே நாடு முழுவதும் கண்காணிக்கின்றன.

சட்டத்தின் ஆட்சி

இந்தியாவில் “சட்டத்தின் ஆட்சி” என்ற ஆங்கிலக் கருத்தை காலனி ஆட்சி அறிமுகப்படுத்தியது. சட்டத்தின் ஆட்சியில் மூன்று முதன்மையான சிறப்புகள் உள்ளன.

அவைகள்,

 • சட்டத்தின் முன் அனைவரும் சமம்
 • சட்டத்திற்கு மேல் யாரும் இல்லை
 • சட்டம் அனைவருக்கும் பொருந்தக்கூடியது
 • சட்டத்தின் ஆட்சியானது நீதிவழங்குவதில் குடிமக்களின் சமத்துவத்தை உறுதிப்படுத்துகிறது. சொந்த உறவுகளுக்காகச் சாதகமாக நடப்பது, குறிப்பிட்ட நபருக்குச் சலுகை அளிப்பது நீதித்துறை முறைகேடுகள் ஆகியவற்றை குறைக்கின்றன. இத்துடன் அதிகார, நிர்வாக முறைகேடுகளையும் கட்டுப்படுத்துகின்றன. அரசு நிர்வாகத்தினை ஆளுகை செய்வதுடன் செயல்முறை சட்டங்களும், அரசமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துகிறது.

நிர்வாகச் சட்டம்

 • நிர்வாகச் சட்டம் என்பது பொதுசட்டத்தில் ஒரு பிரிவு ஆகும். அது அரசாங்கத்திற்கும் தனிமனிதனுக்கும் உள்ள உறவு குறித்தும் பேசுகிறது. அது சட்டத்தை அமலாக்கம் செய்யும் அமைப்பைத் தீர்மானிக்கும் உயர்மட்டத்தினர் மற்றும் பகுதியளவு நீதித்துறை அதிகாரம் கொண்டோரை வரையறை செய்கீறது.
 • நிர்வாகச் சட்டமானது முதலாவதாக அதிகாரிகளின் செயல்கள் மற்றும் செயல்முறை ஆகியவற்றையும், நிர்வாக தன்மைக் கொண்ட அமைப்புகளையும் அதற்குரிய கட்டுப்பாடு எந்திரத்திற்குள்ளாக வைக்கப்படும்படியாக செய்வதாகும். இந்தியாவில் நிர்வாகச் சட்டங்கள் வளர்ச்சிப் பெறுவதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன.
 • அரசாங்கத்தின் செயற்பாடுகள் மிகவும் அதிகரித்த காரணத்தால் அவற்றை ஒழுங்குப்படுத்த நிர்வாகச் சட்டப் பிரிவு தோன்றியது. இரண்டாவதாக, சட்டங்கள் இயற்றுவதில் தாமதம் ஏற்படுகிறது.
 • அன்றாடம் மாறிக் கொண்டிருக்கின்ற சமூகத்திற்கு எற்ப சட்டங்களை இயற்ற சட்டமன்றங்களுக்கு போதிய நேரம் இருப்பதில்லை. சட்டம் இயற்றுவதற்கான நடைமுறை நீண்டதாகவும், அதிக காலம் எடுத்துக் கொள்ளும்படியாக இருப்பதால், அவ்வாறு உருவாக்கப்பட்ட விதிகள் யாவும் தேவைக்கு பயன்படுத்தும் போது, மாறிவிடுகின்றன.
 • மூன்றாவது , இந்தியாவில் நீதிமன்ற காலதாமதம் நிலவுகிறது. மந்தமான வேகம், அதிக செலவு மற்றும் சிக்கலான நடைமுறைகள் போன்றவை இதன் காரணங்களாகும். இதனால் நீதி பெறுவதற்கான செயல்முறைகள் தாமதமடைகின்றன.
 • ஏற்கனவே வழக்குகள் தேங்கிக்கிடப்பதால் விரைவான விசாரணை சாத்தியமற்றதாக உள்ளது. இதனால்தான் நிர்வாகத் தீர்ப்பாயங்கள் உருவாகின்றன.
 • நான்காவதாக, நிர்வாகச் சட்டங்கள் என்பவை தொகுக்கப்பட்டவைகள் (Codified) அல்ல. எனவே, அரசு இயந்திரத்தின் தேவைக்கு ஏற்றாற்போல் மாற்றியமைத்துக் கொள்ளும் செயற்பரப்பைக் கொண்டுள்ளன.
 • எனவே, இது மிகவும் நெகிழ்வுத் தன்மைக்கொண்டதாகும். நெகிழ்வற்ற திடமான சட்ட நடைமுறைகளை மீண்டும் மீண்டும் பின்பற்றத் தேவை இல்லை.

நிர்வாகச் சட்டத்திற்கும், அரசமைப்பிற்கும் இடையே வேறுபாடு

 • அரசமைப்பு என்பது இந்த மண்ணின் மேம்பட்ட உயர்வான சட்டமாகும். எந்த ஒரு சட்டமும் அரசமைப்பிற்கு மேலானது இல்லை. எனவே இதர சட்டங்கள் அதன் உறுப்புக்களை நிறைவு செய்வதாக இருக்கவேண்டும். அதனை மீறும்படியாக இருக்கக்கூடாது.
 • எனவே நிர்வாகச் சட்டங்களும் அரசமைப்பிற்குக் கீழான சட்டமே ஆகும். அரசமைப்பானது அரசின் அமைப்பு (Structure) மற்றும் அதன் பல்வேறு உறுப்புகளைப் பற்றிப் பேசுகிறது. நிர்வாகச் சட்டங்கள் என்பவை நிர்வாகத்தைப் பற்றி மட்டுமே செயலாற்றுகிறது (Deals). நிர்வாக அதிகாரிகள் முதலில் அரசமைப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்பதுடன் தொடர்ந்து நிர்வாகச் சட்டங்களின்படி பணியாற்ற வேண்டும்.

இந்திய தண்டனைச் சட்டம்

 • இந்திய தண்டனைச் சட்டம் என்பது இந்தியாவின் குற்றவியல் சட்டமாகும். அது குற்றவியல் சட்டத்தின் உள்ளார்ந்த அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த சட்டமாகும்.
 • 1834-ஆம் ஆண்டு இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் சட்ட ஆணையத்தின் பரிந்துரையின் கீழ் 1860-ஆம் ஆண்டு இச்சட்டம் தயாரிக்கப்பட்டது.
 • இது தொடக்கக்கால பிரிட்டிஷ் இந்திய ஆட்சியின் கீழ் 1862-ல் அமலுக்கு வந்தது. இதன் நோக்கம் இந்தியாவிற்கு ஒரு பொதுத் தண்டனைச் சட்டத் தொகுப்பை அளிப்பதாகும்.
 • இந்திய தண்டனைச் சட்டம் ஒரு அடிப்படையான வடிவத்தைக் கொண்டிருக்கிறது. ஒரு நபர் மேற்கொள்ளும் அனைத்து குற்றங்களுக்கான வழக்குகள், அவற்றுக்கான தண்டனைகள் ஆகியனவற்றின் பட்டியல் கொண்ட ஆவணமாகும். இது அனைத்து குடிமக்களையும் உள்ளடக்கியது. இராணுவத்தினர் மற்றும் இதர படைகளின் வீரர்களை இந்தியக் குற்றவியல் சட்டத்தினை அடிப்படையில் தண்டிக்க முடியாது. அவர்களுக்கு பல்வேறு தனி விதிகள் உள்ளன.
 • இந்திய தண்டனைச் சட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பியல்பானது, இந்திய தண்டனைச் சட்டம் உயர்நிலையில் இருக்கக்கூடிய எந்த ஒரு நபருக்கும் சிறப்பு சலுகை அளீக்கவில்லை. இந்திய தண்டனைச் சட்டம் ஒவ்வொரு அரசு ஊழியர், மற்றும் பொதுமக்கள் ஏன் நீதிபதியைக்கூட உள்ளடக்குவதாக இருக்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துவதையும் தடுக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *