Tnpsc

சுற்றுலா Notes 7th Social Science Lesson 13 Notes in Tamil

7th Social Science Lesson 13 Notes in Tamil

13] சுற்றுலா

அறிமுகம்:

சுற்றுலாப் பயணி என்ற சொல், “டூரியன்” என்ற பழமையான ஆங்கிலச் சொல்லிலிருந்து தோன்றியது. இது 24 மணி நேரத்திற்குக் குறையாமலும், ஓர் ஆண்டிற்கு மிகாமலும் தனது வழக்கமான சூழலிருந்து பயணிப்பதைக் குறிக்கும். மதம், பொழுதுபோக்கு, வாணிகம், வரலாறு மற்றும் பண்பாடு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு பயணிப்பதற்கான காரணங்களாக இருக்கலாம்.

சுற்றுலாவின் அடிப்படை கூறுகள்:

உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் இன்றியமையாத வருவாய் ஆதாரமாகச் சுற்றுலா அமைந்துள்ளது. நாட்டின் சமூக, கலாச்சார, கல்வி மற்றும் பொருளாதாரத் துறைகளிலும் பன்னாட்டுத் தொடர்புகளிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துவதால் சுற்றலா சமுதாயத்தின் ஓர் அவசியமான அங்கமாக உள்ளது.

சுற்றுலாவின் மூன்று முக்கிய கூறுகளாவன:

 • ஈர்ப்புத் தலங்கள் (Attraction).
 • எளிதில் அணுகும் தன்மை (Accessibility).
 • சேவை வசதிகள் Amenities).

இந்த மூன்று கூறுகளையும் இணைக்கும் கோட்பாடு ஆங்கிலத்தில் ‘A3’ என அழைக்கப்படுகின்றது.

ஈர்ப்புத் தலங்கள்:

ஈர்ப்புத் தலங்கள் முக்கியமான இரண்டு வகைககைக் கொண்டுள்ளன.

 • இயற்கை ஈர்ப்புத் தலங்கள்.
 • கலாச்சார ஈர்ப்புத் தலங்கள்

இயற்கை ஈர்ப்புத் தலங்கள் என்பவை, நிலம் மற்றும் கடல் அமைப்பு, கடற்கரைகள், காலநிலை மற்றும் காடுகள் ஆகிய கூறுகள் அடங்கும். கலாச்சார ஈர்ப்புத் தலங்கள் என்பவை, வரலாற்று நினைவுச் சின்னங்களையும், பிற அறிவார்ந்த படைப்புகளையும் உள்ளடக்கியதாகும். இவை தவிர, கண்காட்சிகள் மற்றும் பண்டிகைகளும் கலாச்சார ஈர்ப்புகளில் அடங்கும்.

எளிதில் அணுகும் தன்மை:

எளிதில் அணுகும் தன்மை என்பது சாலை, இரயில், நீர் மற்றும் வான்வழி போன்ற பல்வேறு வகையான போக்குவரத்தின் மூலம், குறிப்பிட்ட ஓர் ஈர்ப்புத் தலத்தை எளிதில் அடைவதாகும். குறிப்பிட்ட ஓர் ஈர்ப்புத் தலத்தை அடைவதற்கான பயணச்செலவையும் நேரத்தையும் போக்குவரத்து தீர்மானிக்கிறது.

சேவை வசதிகள்:

சுற்றுலாப் பயணியின் தேவைகளை அடைவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே சேவை வசதிகள் எனப்படும்.

 1. இடவசதி (Accommodation): தங்குவதற்கான விடுதிகள், சிற்றுண்டிச் சாலைகள் உணவகங்கள் போன்ற தங்குமிடங்கள்.
 2. பயண அமைப்பாளர்கள், சுற்றுலா மேலாளர்கள் மற்றும் பயண முகவர்கள்.
 3. அந்நிய செலவாணி மையங்கள், கடவுச் சீட்டு, விசா மற்றும் முகவர் நிலையங்கள்.
 4. பயணக் காப்பீடு மற்றும் பாதுகாப்புத் தொடர்புடையத் துறைகள்.

சுற்றுலா வகைகள்:

பண்டைய காலங்களிலிருந்தே, பயணம் என்பது மனித குலத்தைக் கவர்ந்து இழுக்கும் செயலாக இருந்து வருகிறது. சுற்றுலா இயற்கை, பயன்பாடு, காலம் மற்றும் பயண தூரத்தின் அடிப்படையில் பின்வருமாறு பிரிக்கப்படுகிறது.

 • சமயச் சுற்றுலா.
 • கலாச்சாரச் சுற்றுலா.
 • வரலாற்றுச் சுற்றுலா.
 • சூழல் சுற்றுலா.
 • சாகசச் சுற்றுலா.
 • பொழுதுபோக்குச் சுற்றுலா.

சமயச் சுற்றுலா Religious Tourism):

சுற்றுலா வகைகளில் ‘சமயச்சுற்றுலா’ மிகப் பழமையானதாகும். இதில் மக்கள் தனித்தனியாகவோ குழுக்களாகவோ புனித யாத்திரையாகக் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் பிற புனிதத் தலங்களுக்குப் பயணம் மேற்கொள்கின்றனர். சமயச் சுற்றுலாவுக்கு எடுத்துக்காட்டுகளாக இந்துக்கள் காசி செல்வதையும் (வாரணாசி) கிறித்தவர்கள் ஜெருசலேம் செல்வதையும் முஸ்லீம்கள் மெக்கா செல்வதையும் குறிப்பிடலாம்.

வரலாற்றுச் சுற்றுலா (Historical Tourism):

இவ்வகைச் சுற்றுலா அருங்காட்சியங்கள், நினைவுச் சின்னங்கள் தொல்பொருள் ஆராய்ச்சிப் பகுதிகள், கோட்டைகள், கோவில்கள் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆகியவற்றினைப் பார்வையிடுவதை மையமாகக் கொண்டுள்ளது. கம்போடியாவின் அங்கோர்வாட், இந்தியாவின் தாஜ்மஹால் மற்றும் எகிப்தின் பிரமிடுகள் ஆகியவற்றை வரலாற்று சுற்றுலாவுக்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.

சூழல் சுற்றுலா (Eco-Tourism):

பொதுவாக, இயற்கைச் சூழலில் தாவரங்களும், விலங்குகளும் செழித்து வளரும் இடங்களுக்குச் செல்வது ‘சூழல் சுற்றுலா’ எனப்படுகிறது. அமேசான் மழைக்காடுகள், ஆப்பிரிக்க வனப்பயணம் (African Forest Safari) மற்றும் இமயமலை சிகரங்களில் மலையேற்றம் ஆகியவை புகழ்பெற்ற சூழல் சுற்றுலா தலங்களாகும்.

சாகசச் சுற்றுலா (Adventure Tourism):

நெடுந்தொலைவிலுள்ள (அல்லது) அந்நிய இடங்களிலுள்ள வெளிப்புற செயல்பாடுகளில் கலந்து கொள்வதற்காகப் பயணப்படுவதே சாகசச் சுற்றுலா எனப்படும். எடுத்துக்காட்டாக, ஆஸ்திரலியாவின் விண்வீழ் விளையாட்டு (Skydive) நியூசிலாந்தின் மலை உச்சிவீழ் இழுவை விளையாட்டு (Bungee jumping) இமயமலையின் சிகரங்களில் மலையேறுதல், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பிரம்மபுத்ரா நதியின் கட்டுமர மிதவை நதி பயணம் ஆகியவற்றைக் கூறலாம்.

பொழுதுபோக்குச் சுற்றுலா (Recreational Tourism):

மகிழ்ச்சி, மனநிறைவு, பொழுதுபோக்கு ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு கேளிக்கை மற்றும் வேடிக்கை விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் தருவது இவ்வகைச் சுற்றுலா. நீர்வீழ்ச்சிகள், மலை வாழிடம், கடற்கரைகள் மற்றும் கேளிக்கை பூங்காக்கள் இவை அனைத்தும் பொழுதுபோக்கு சுற்றுலாவை நோக்கிக் கவர்ந்திழுக்கும் தலங்களாகும். இவை தவிர, சமீப ஆண்டுகளில் சில நவீன சுற்றுலாக்களும் வளர்ச்சியடைந்துள்ளன. அவை:

 • ஆண்டு விடுமுறை சுற்றுலா.
 • தொழில் துறை சுற்றுலா.
 • பருவகாலச் சுற்றுலா.
 • பன்னாட்டுச் சுற்றுலா.
 • குழுச் சுற்றுலா.
 • விளையாட்டுச் சுற்றுலா.
 • நலவாழ்வுச் சுற்றுலா.
 • பண்ணை மற்றும் கிராமப்புறச் சுற்றுலா.

பன்னாட்டுச் சுற்றுலா (International Tourism):

சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பார்வையிடவும், அவற்றின் பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்களைப் பற்றி அறியவும், சேகரிக்கவும் பன்னாட்டுச் சுற்றுலா மேற்கொள்ளப்படுகிறது. இதற்காகக் கடவுச்சீட்டு, விசா, வெளிநாட்டு நாணயம், விமான டிக்கெட், பயணக் காப்பீடு மற்றும் பிற குடியேற்ற விவரங்கள் போன்றவை சுற்றுலா பயணிகளால் முறைப்படி பூர்த்தி செய்யப்பட வேண்டிய சில பயண படிவங்கள் மற்றும் நடைமுறைகள் உள்ளன.

சிங்கப்பூர்

சுற்றுலாவின் அடிப்படை காரணிகள்:

சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய காரணிகள்:

 • இதமான வானிலை.
 • கண்கவர் இயற்கைக் காட்சிகள்.
 • வரலாற்று மற்றும் பண்பாட்டு நினைவுச் சின்னங்கள்.

சுற்றுலாவிற்கான புவியியல் காரணிகள்:

 1. நிலத்தோற்றம்:

மலைகள், பீடபூமிகள், ஆழ்பள்ளத்தாக்குகள், பள்ளத்தாக்குகள், குகைகள், மணல் குன்றுகள், பனியாற்று நாற்காலி (Cirque) பவளப்பாறைகள், ஓங்கல்கள் போன்ற நிலத்தோற்றங்கள்.

 1. நீர்நிலைகள்:

ஆறுகள், ஏரிகள், நீர்வீழ்ச்சிகள் வெந்நீர் மற்றும் கொதி நீர் ஊற்றுகள், பனி மற்றும் பனியாறுகள், நீரோட்டங்கள் ஓதங்கள் மற்றும் அலைகள்.

 1. தாவரங்கள்:

காடுகள், புல்வெளிகள், பெருவெளிகள், பாலைவனங்கள்.

 1. காலநிலை:

சூரிய ஒளி, மேகங்கள், சிறந்த வெப்பநிலை, மழைப்பொழிவு மற்றும் பனி.

 1. விலங்குகள்:

அ. வனவிலங்குகள், பறவைகள் சரணாலயம், வனவிலங்குப் பாதுகாப்புச் சரணாலயம், மிருகக்காட்சி சாலை.

ஆ. வேட்டையாடுதல் மற்றும் மீன்பிடித்தல்.

 1. குடியிருப்புக் காரணிகள்:

அ. நகரங்கள், மாநகரங்கள் மற்றும் கிராமங்கள்

ஆ. வரலாற்று அழிவு எச்சங்கள், நினைவுச் சின்னங்கள்.

 1. கலாச்சாரம்:

மக்களின் வாழ்க்கை முறை, பாரம்பரியம், நாட்டுப்புற வழக்கங்கள், ஓவியங்கள் மற்றும் கைவினைப் பொருட்கள்.

இந்தியாவில் சுற்றுலா ஈர்ப்புத் தலங்கள்:

மனத்திற்கு இதமான விருந்தோம்பலுடன், நறுமணமிக்க காரமான உணவுடன் கூடிய கலாச்சாரத்திற்குப் புகழ் பெற்றது இந்தியா. மனதை ஈர்க்கும் மரபுகள், மாறுபட்ட வாழ்க்கை முறை, கலாச்சார பாரம்பரியத்துடன் வண்ணமயமான கண்காட்சிகள் மற்றும் திருவிழாக்கள் போன்றவை சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் ஈர்க்கின்றன. அனைத்து வகையான நிலத்தோற்றங்கள், பல்வேறு காலநிலை, சுற்றுச்சூழல் மற்றும் சாகச சுற்றுலாவிற்கான செறிந்த வளங்கள் ஆகியவை குறிப்பிடத்தக்க பலதுறை சிறப்புகள் ஆகும். அற்புதமான கலை மற்றும் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த சமய வழிபாட்டுத் தலங்கள், தொழில்நுட்ப பூங்காக்கள், அறிவியல் அருங்காட்சியங்கள் ஆகியவை இந்திய சுற்றுலா பயணிகளுக்கான கூடுதல் ஈர்ப்புச் சக்தியாகும். ஆரோக்கிய தீர்வுக்கான யோகா, ஆயுர்வேதம் மற்றும் இயற்கை மருத்துவம் போன்றவை உலகெங்கிலும் உள்ள உல்லாச பயணிகளைக் கவர்ந்திழுக்கின்றன.

சமயச் சுற்றுலா:

பல சமயங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள இந்தியாவில் சமயச் சுற்றுலா குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகிறது. சமய வழிபாட்டுத் தலங்களைக் காணவும், சமயச் சடங்குகளில் கலந்துக் கொள்வதற்கும் பல்வேறு தொகுப்புச் சுற்றுலா பயணத் திட்டங்கள் இந்தியாவில் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தியாவிலுள்ள புகழ்பெற்ற சமயச் சுற்றுலாத் தலங்கள் பின்வருமாறு:

இராமேஸ்வரம் தமிழ்நாடு
காஞ்சிபுரம் தமிழ்நாடு
வாரணாசி (காசி) உத்திரப்பிரதேசம்
சாரநாத் உத்திரப்பிரதேசம்
வைஷ்ணவி தேவி கோவில் ஜம்மு காஷ்மீர்
செயிண்ட் பிரான்சிஸ் சேவியர் தேவாலயம் கோவா
அமிர்தசரஸ் பஞ்சாப்
லடாக் புத்த மடங்கள் ஜம்மு காஷ்மீர்

சுற்றுலாவில் இயற்கைக் காட்சிகள் மிகவும் முக்கியமான காரணியாகும். இயற்கைக் காட்சிகளான மலைகள், ஏரிகள், நீர்வீழ்ச்சிகள், பனியாறுகள், காடுகள் மற்றும் பாலைவனங்கள் ஆகியவை மக்களைக் கவரும் முக்கிய கூறுகளாகும். அழகு கொட்டிக்கிடக்கும் மலைச்சரிவுகள், ஆழ்பள்ளத்தாக்குகள், பனிபடர்ந்த மலைகள், அடர்ந்த காட்டிலுள்ள பசுமையான புல்வெளி கம்பளங்கள் ஆகியவை இந்தியாவிற்கு இயற்கை அளித்த கொடையாகும்.

இந்தியாவின் மலை வாழிடங்கள்:

இந்தியத் துணைக்கண்டமானது, ஏழு முக்கிய மலைத் தொடர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இவற்றில் மிகப்பெரியது, இந்தியாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள இமயமலை ஆகும். இந்தியாவிலுள்ள இமயமலையின் மலை வாழிடங்களில் அதிகமானவை ஜம்முகாஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்திரகாண்ட், சிக்கிம், மேற்குவங்காளம், அருணாச்சலபிரதேசம், நாகாலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களில் அமைந்துள்ளன. மஹாராஷ்டிரா, கர்நாடகம், தமிழ்நாடு மற்றும் கேரளாவின் மலை வாழிடங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளன. ஆந்திரா மற்றும் ஒடிஸாவின் மலைவாழிடங்கள் கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளன.

கொடைக்கானல் மலைவாழிடம்

இந்தியாவிலுள்ள அழகிய மலைவாழிடங்கள்:

கொடைக்கானல், ஊட்டி – தமிழ்நாடு

நைனிடால் – உத்திரகாண்ட்

டார்ஜிலிங் – மேற்கு வங்காளம்

ஸ்ரீநகர் – ஜம்மு காஷ்மீர்

ஷில்லாங் – மேகாலயா

சிம்லா – இமாசலப்பிரதேசம்

மூணாறு – கேரளா

காங்டாக் – சிக்கிம்

இந்திய நீர்வீழ்ச்சிகள்:

அற்புதமான கண்கவர் நீர்வீழ்ச்சிகள் இந்தியாவின் காடுகளிலும், உயர் பாறைகளிலும் பரவிக் காணப்படுகின்றன. இவற்றுள் சில வற்றாத நீர்வீழ்ச்சிகளாகவும் சில பருவ நீர்வீழ்ச்சிகளாகவும் அமைந்து. மேலும், சில நீர்வீழச்சிகள் பருவமழையைச் சார்ந்து உள்ளன. பருவமழை இத்தகைய நீர்வீழ்ச்சிகளுக்குச் சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் கவர்கின்றது. இந்தியாவின் குறிப்பிடத்தக்க நீர்வீழ்ச்சிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஜோக் நீர்வீழ்ச்சி

வ.எண் நீர்வீழ்ச்சிகள் புவியியல் இருப்பிடம்
தாழையார் நீர்வீழ்ச்சி தமிழ் நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள இந்த நீர்வீழ்ச்சியின் அமைப்பு, குதிரைவால் போன்று அமைந்துள்ளது.
ஜோக் நீர்வீழ்ச்சி பிரிவு நீர்வீழ்ச்சி (ராஜா ராணி மற்றும் இடி) கர்நாடகாவில் உள்ள ஷிமோகோ மாவட்டத்தில் அமைந்துள்ளது.
நோகாளி காய் நீர்வீழ்ச்சி மேகாலயாவில் கிழக்குக் காசி மாவட்டத்தில் அமைந்துள்ள உயரமான, நேரடியாகத் தடையின்றி நீர் விழும் நீர்வீழ்ச்சி
தலக்கோணம் நீர்வீழ்ச்சி ஆந்திராவிலுள்ள உயரமான இந்த நீர்வீழ்ச்சியில் மருத்துவ குணம் நிறைந்த மூலிகைச் செடி கொடிகளில் இருந்து நீர் விழுவது சிறப்பு அம்சமாகும்.
அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி கேரளாவில் திரிச்சூர் மாவட்டத்தில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது இது இந்தியாவின் நயகரா ஆகும்.

வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயம்:

பல்வேறு வகையான காடுகளையும், புல்வெளிகளையும் இந்தியா தன்னகத்தே கொண்டுள்ளது. வேறுபாட்டுடன் கூடிய நிலத்தோற்றங்களால் இந்தியா தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் முக்கிய ஓர் இயற்கை பிரதேசமாக விளங்குகிறது. இந்திய மாநிலங்களிலுள்ள அடர்ந்த இருண்ட வனங்கள், பல்வேறு விலங்குகளும் பறவைகளும் வாழ்வதற்குப் பொருத்தமான இருப்பிடமாக அமையப் பெற்றுள்ளன. இராயல் வங்காளப் புலிகள், இந்தியச் சிங்கங்கள், யானைகள், காண்டாமிருகங்கள், இந்தியச் சிறுத்தைகள் மற்றும் ஊர்வன ஆகியவை காணப்படும் சரணாலயங்கள் முக்கிய சுற்றுலா ஈர்ப்புகள் ஆகும். பறவைகள் சரணாலயத்தில் காணப்படும் செறிந்த பல்வேறு பறவை வகைகள் பயணிகளின் கவனத்தை ஈர்க்கின்றன. இந்திய பிரதேசத்தின் மாறுபட்ட காலநிலை வெகுதூரத்திலுள்ள பறவைகளைக் கூட உணவிற்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும், தங்களுடைய இளம் பறவைகளை வளர்ப்பதற்காகவும், இந்தியாவிற்குள் வரவழைக்கின்றன.

இந்தியாவிலுள்ள வனவிலங்குச் சரணாலயங்கள்:

வ.எண் விலங்குகள் சரணாலயம் மாநிலம் விலங்குகள்
முதுமலை வனவிலங்குச் சரணாலயம் தமிழ்நாடு புலி, யானை, காட்டெருமை, மான்
காசிரங்கா தேசிய பூங்கா அசாம் புலி, மான், எருமை
ராந்தம்பர் தேசிய பூங்கா இராஜஸ்தான் புலி
கான்ஹா தேசிய பூங்கா மத்திய பிரதேசம் சதுப்புநில மான்கள்
சுந்தரவன தேசிய பூங்கா மேற்கு வங்காளம் வங்காளப் புலி
கிர் தேசிய பூங்கா குஜராத் சிங்கம்
பத்ரா வன சரணாயலம் கர்நாடகா காட்டெருமை, சிறுத்தை, காட்டெருது
பெரியார் தேசிய பூங்கா கேரளா யானை, மான்
கார்பெட் தேசிய பூங்கா உத்திரகாண்ட் புலி

இந்தியாவிலுள்ள பறவைகள் சரணாலயங்கள்:

வ.எண். பறவைகள் சரணாலயம் மாநிலம்
கூந்தன்குளம் பறவை சரணாலயம் தமிழ்நாடு
குமரகம் பறவை சரணாலயம் கேரளா
பரத்பூர் பறவை சரணாலயம் இராஜஸ்தான்
மயானி பறவை சரணாலயம் மஹாராஷ்டிரா
உப்பளப்பாடு பறவை சரணாலயம் ஆந்திரப்பிரதேசம்
நல்சரோவர் பறவை சரணாலயம் குஜராத்
நவாப்கஞ்ச் பறவை சரணாலயம் உத்திரபிரதேசம்

கடற்கரைகள்:

7517 கி.மீ நீளமுள்ள கடற்கரை கொண்ட இந்திய நாட்டில், அரபிக்கடலாலும் வங்காள விரிகுடாவாலும் பல்வேறு அழகிய கடற்கரைகள் அமையப் பெற்றுள்ளன. நீர்வாழ் பறவைகளும், விலங்குகளும் நிறைந்த மாறுபட்ட கடற்கரை நிலத்தோற்றங்கள், இந்தியக் கடற்கரைக்கோர் எழிலாகும். கேரளாவின் காயல்களும், உப்பங்கழிகளும், கோவாவின் கண்கவர் கடற்கரைகளான கலங்கட், அகூதா ஆகியவை நீர் விளையாட்டுக்குப் புகழ்பெற்றவை. அழகு மிகுந்த மயங்க வைக்கும் இந்தியக் கடற்கரைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

வ.எண் கடற்கரை மாநிலம் புவியியல் காரணிகள்
தனுஷ்கோடி தமிழ்நாடு நீல ரத்தின நிறத்தில் காணப்படும் கடல்நீர்
வற்கலை கடற்கரை கேரளா சூரியன் மறையும் காட்சியைக் காண ஏதுவான கடல் ஓங்கல் பாறை
தர்கார்லி கடற்கரை மகாராஷ்டிரா பவளப் பாறைகள் நிறைந்த கடல் சாகச விளையாட்டுகளுக்கு ஏற்ற கடற்கரை
ஓம் கடற்கரை கர்நாடகா இரண்டு அரை வட்டக் குகைகள் இணைந்து ஓம் என்ற எழுத்தின் தலைகீழ், வடிவத்தில் அமையப் பெற்ற கடற்கரை
அகுதா கடற்கரை கோவா கடற்கரையின் தென்பகுதியில் பெரிய குன்றானது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
மராரி கடற்கரை கேரளா இரண்டு மணல் திட்டுகள் இடையே தொட்டில் போன்ற அமைப்பில் அமைந்துள்ள கடற்கரை

தமிழ்நாட்டிலுள்ள சுற்றுலா ஈர்ப்புத் தலங்கள்:

சமயத்தலங்கள், ஆன்மீகத் தலங்கள், கடற்கரைகள், மலை வாழிடங்கள், நீர்வீழ்ச்சிகள், வனவிலங்குகள், கலை, கலாச்சாரம், கட்டடக்கலை, கைவினைப் பொருள்கள், பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் போன்ற பல்வேறு சுற்றுலா ஈர்ப்புத் தலங்களைத் தமிழகம் கொண்டுள்ளது. சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உணர்ந்த தமிழக அரசு, நெடுங்காலத்திற்கு முன்பே ஏற்றுக்கொண்டு, அதன் வளர்ச்சியை அனைத்துத் திசைகளிலும் பரவச் செய்துள்ளது.

மருத்துவச் சுற்றுலா மற்றும் சுற்றுலா போன்றவற்றில் புதிய வழிகளை ஆராய்ந்து செயல்பட்டதால் தமிழகச் சுற்றுலாவுக்கு இருபது சதவீதத்திற்கு அதிகமான வருடாந்திர வளர்ச்சியை அடைய வழிவகுத்தது. இந்தியாவில், சுற்றுலாவின் வருமானத்தில் மிகப் பெரிய பங்கைத் தமிழகம் பெற்றுத் தந்துள்ளது.

தமிழ்நாட்டில் சமயச் சுற்றுலா:

தமிழ்நாடு, கோவில்கள் நிறைந்த புகழ்பெற்ற ஒரு மாநிலமாகும். இது உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு ஆன்மீக புத்துயிர் பெறுவதற்கான மிகப்பெரிய ஆதாரமாக விளங்குகின்றது. இந்த மாநிலத்தில் சுமார் 33,000 பழங்காலக் கோவில்கள் உள்ளன. முக்கியமாக திராவிட பாணியிலான கட்டடக்கலைக்கு இவை எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. தமிழ் நாட்டின் உலகப் புகழ் பெற்ற சில சமயச் சுற்றுலா தலங்கள் பின்வருமாறு:

 • தஞ்சைப் பெரிய கோவில்.
 • மதுரை மீனாட்சி கோவில்.
 • இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவில்.
 • காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்கள்.
 • வேளாங்கன்னி மாதா தேவாலயம்.
 • நாகூர் தர்கா.

மதுரை மீனாட்சி கோவில்

தமிழ்நாட்டின் மலைவாழிடங்கள்:

மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் தென்முனையில் அமைந்துள்ள தமிழ்நாடு பல மலை வாழிடங்களுக்குப் புகழ் பெற்றதாகும். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை, உதகமண்டலம் (ஊட்டி), கொடைக்கானல், ஏற்காடு, குன்னூர், வால்பாறை, ஏலகிரி, சிறுமலை, கல்ராயன் மலை மற்றும் பழனி மலை, சேர்வராயன் மலை மற்றும் ஏல மலை. இவை அனைத்தும் அடர்ந்த காடு மற்றும் வனவிலங்குகளின் உறைவிடங்களாகத் திகழ்கின்றன.

மலைவாழிடங்கள் – புனைபெயர்கள்

ஊட்டி – மலைகளின் ராணி

ஏற்காடு – ஏரிக்காடுகள் (ஏழைகளின் ஊட்டி)

ஏலகிரி – 14 கொண்டைஊசி வளைவுகளை உடையது

கொடைக்கானால் – மலைகளின் இளவரசி

கோத்தகிரி – பச்சைமலை

வெள்ளயங்கிரி மலை – தெற்கின் கைலாஷ்

கொல்லி மலை – 70 கொண்டைஊசி வளைவுகளுடன் கூடிய வாகனப்

போக்குவரத்துப் பகுதி

ஆனை மலை – உயர் விளிம்பு

மேக மலை – உயர்ந்த மேகங்கள் குவியும் பகுதி

ஜவ்வாது – இயற்கையின் சொர்க்கம்

தமிழ்நாட்டின் நீர்வீழ்ச்சிகள்:

தமிழ்நாட்டில் மலைகளும் ஆறுகளும் இணைந்து பல அருமையான நீர்வீழ்ச்சிகள் உருவாக்கி உள்ளன. இயற்கையின் அதிசயமான தமிழகத்தின் நீர்வீழ்ச்சிகள், சுற்றுலாப் பயணிகளைக் கவர்கின்றன. அடர்த்தியான பச்சை மரங்களுக்கிடையில் செங்குத்தான குன்றுகளில் மலையேற்றம் செய்வதும் மலைகளிலிருந்து பாயும் நீரில் குளிப்பதும் மிகவும் புத்துணர்ச்சியூட்டுகிறது. தமிழகத்தின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சிகள் கீழே அட்டவணையாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

வ.எண் நீர்வீழ்ச்சிகள் புவியியல் தல அமைவிடம்
ஓகேனக்கல் நீர்வீழ்ச்சி தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் அழகான நீர்வீழ்ச்சி
கும்பக்கரை நீர்வீழ்ச்சி பாம்பார் ஆற்றில் சிற்றருவிகளாக உருவாகி, கொடைக்கானல் மலை அடிவாரத்தில் இந்நீர்வீழ்ச்சி வீழ்கின்றது. இது தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
குரங்கு நீர்வீழ்ச்சி பசுமை மாறாக் காடுகள் சூழ்ந்த இந்நீர்வீழ்ச்சி கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆனைமலைப் பகுதியில் அமைந்துள்ளது.
கிளியூர் நீர்வீழ்ச்சி கிழக்குத் தொடர்ச்சி மலையான சேர்வராயன் குன்றுப் பகுதியில் அமைந்துள்ளது
குற்றாலம் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றால அருவி, மருத்துவம் ஆரோக்கியத்திற்குப் பெயர் பெற்றது.
ஆகாய கங்கை கிழக்குத் தொடர்ச்சி மலையிலுள்ள கொல்லி மலையில் புளியஞ்சோலை என்னுமிடத்தில் இந்நீர்வீழ்ச்சி வீழ்கின்றது. இது நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
சுருளி நீர்வீழ்ச்சி இந்த நீர்வீழ்ச்சி நில நீர்வீழ்ச்சி அல்லது மேகமலை நீர்வீழ்ச்சி என அழைக்கப்படுகிறது. இது தேனி மாவட்த்தில் அமைந்துள்ளது

தமிழ்நாட்டிலுள்ள வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயங்கள்:

தமிழ்நாட்டில் வனவிலங்குச் சரணாலயங்கள், பறவைகள் சரணாலயங்கள் மற்றும் தேசியப் பூங்காக்கள் உள்ளன. தமிழகம், தனது பலவிதமான இயற்கைச் சூழல் பாரம்பரியத்திற்குப் பெயர் பெற்றது. எனவே சுற்றுலாப் பயணிகள், வனவிலங்கு சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள மிகுந்த உற்சாகத்துடன் வருகின்றனர். தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பான 130,058 சதுர கிலோமீட்டரில் 17.6% நிலப்பரப்பு அடர்த்தியான காடுகளைக் கொண்டுள்ளது. ஈரமான பசுமை மாறாக் காடுகள், வறண்ட மற்றும் ஈரமான இலையுதிர் காடுகள், புல்வெளிகள், சதுப்பு நில காடுகள், முட்கள் நிறைந்த புதர்கள் போன்றவை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடங்களாகும். மாறுபட்ட இயற்கைத் தாவரங்களுடன் தமிழ் நாட்டின் மற்றொரு மதிப்பு மிக்க உடைமையாகக் கருதப்படுவது அனைத்துத் தாவரங்களையும், விலங்கினங்களையும் பாதுகாக்கும் வனவிலங்குச் சரணாலயங்கள் ஆகும். இங்கு புலி, யானை, மான், குரங்கு, காட்டெருமை போன்றவற்றிற்கான வனவிலங்குச் சரணாலயங்கள் உண்டு, பாதுகாக்கும் மாநிலத்தின் வனவிலங்குச் சரணாலயங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

வனவிலங்குச் சரணாலயங்கள்:

வ.எண் வனவிலங்குச் சரணாலயம் மாவட்டம்
முதுமலை வனவிலங்குச் சரணாலயம் நீலகிரி
முண்டந்துறை வனவிலங்குச் சரணாலயம் திருநெல்வேலி
கோடியக்கரை வனவிலங்குச் சரணாலயம் நாகப்பட்டினம்
இந்திராகாந்தி வனவிலங்குச் சரணாலயம் கோயம்புத்தூர்
களக்காடு வனவிலங்குச் சரணாலயம் திருநெல்வேலி

பறவைகள் சரணாலயம்:

வ.எண் பறவைகள் சரணாலயம் மாவட்டம்
வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் சிவகங்கை
காரைவெட்டி பறவைகள் சரணாலயம் அரியலூர்
வெல்லோட் பறவைகள் சரணாலயம் ஈரோடு
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் காஞ்சிபுரம்

தமிழ்நாட்டிலுள்ள தேசிய பூங்காக்கள்:

வ.எண் தேசிய பூங்காக்கள் மாவட்டங்கள்
கிண்டி தேசிய பூங்கா சென்னை
மன்னார் வளைகுடா கடற்பூங்கா இராமநாதபுரம்
இந்திரா காந்தி தேசிய பூங்கா கோயம்புத்தூர்
முக்கூர்த்தி தேசிய பூங்கா நீலகிரி
முதுமலை தேசிய பூங்கா நீலகிரி

தமிழ் நாட்டிலுள்ள கடற்கரைகள்:

இந்தியாவின் கடற்கரை மாநிலமான தமிழ்நாடு பல கடற்கரைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இவற்றுள் சில உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாகும். நண்பர்கள், குடும்பங்கள் மற்றும் குழந்தைகளுடன் சுற்றுலா செல்வதற்கு கடற்கரை ஓர் அழகான இடமாகும். இவை அனைத்தும் சூரிய குளியல் மற்றும் நீர் விளையாட்டு போன்ற பொழுது போக்குகளுக்கு ஏற்ற இடமாக உள்ளன.

வ.எண் கடற்கரைகள் புவியியல் காரணிகள்
கோவளம் கடற்கரை காஞ்சிபுரம் சிறிய மீன்பிடி கிராமம்
மெரினா கடற்கரை சென்னை இரண்டாவது மிக அழகிய நீண்ட கடற்கரை
கன்னியாகுமரி கடற்கரை பல வண்ண மணல்களைக் கொண்டது
இராமேஸ்வரம் கடற்கரை அலையற்ற கடற்கரை
எலியட் கடற்கரை சென்னை இரவும், பகலும் மனிதர்களால் நிறைந்த அழகான கடற்கரை
மகாபலிபுரம் கடற்கரை காஞ்சிபுரம் கட்டடக்கலை மற்றும் தொல் பொருள் கடற்கரை
சில்வர் கடற்கரை கடலூர் நீர் விளையாட்டு பொழுது போக்கிற்கான கடற்கரை
முட்டுகாடு கடற்கரை காஞ்சிபுரம் அமைதியான மற்றும் ஆழமற்ற கடற்கரை

சுற்றுலாவின் சுற்றுச்சூழல் பாதிப்பு:

சுற்றுலாவிற்குச் சுற்றுச் சூழலின் தரம் மிக அவசியமாகும். சுற்றுலாத்துறை. சுற்றுச் சூழலில் பல நேர்மறை மற்றும் எதிர் மறையான தாக்கத்தை உருவாக்கியுள்ளது.

நேர்மறையான தாக்கம்:

 • நேரடியான நிதி பங்களிப்பு.
 • அரசாங்க நிதிக்குப் பங்களிப்பு.
 • மேம்பட்ட சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் திட்டமிடல்.
 • சுற்றுச்சூழல் விழிப்புணர்வை அதிகரித்தல்.
 • பாதுகாப்பு மற்றும் பராமரிக்கப்பட்ட சுற்றுச்சூழல்.

எதிர்மறை தாக்கம்:

 1. இயற்கை வளங்கள் சிதைவுறுதல்:
 • நீர் வளங்கள்.
 • உள்ளுர் வளங்கள்.
 • நிலச் சீரழிவு.
 1. மாசுபடுதல் (மாசு, தூய்மைக்கேடு):
 • காற்று மற்றும் ஒலி மாசு.
 • திடக்கழிவு மற்றும் குப்பைகள்.
 • கழிவுநீர்.
 1. சுற்றுச்சூழல் அமைப்பின் அழிவு மற்றும் மாற்றம்:
 • காற்று.
 • நீர்.
 • மண்.

மீள் பார்வை:

 • சுற்றுலாப் பயணி என்ற சொல் ‘டூரியன்’ என்ற பழமையான ஆங்கிலச் சொல்லிலிருந்து பெறப்பட்டது.
 • சுற்றுலாவின் மூன்று முக்கிய கூறுகளாவன:
  • ஈர்ப்புத் தலங்கள்,
  • எளிதில் அணுகும் தன்மை.
  • சேவை வசதிகள்.
 • சுற்றுலாவை இயற்கை, பண்பாடு, காலம் மற்றும் பயண தூரம் அடிப்படையில் பிரிக்கலாம்.
 • நிலத்தோற்றம், காலநிலை, குடியிருப்புகள் மற்றும் கலாச்சாரம் ஆகியவை சுற்றுலாவின் புவியியல் காரணிகளாகும்.
 • தொழில் மயமாக்குதல் மற்றும் நகரமயமாக்குதல் நவீன வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை உருவாக்கியுள்ளன.
 • அனைத்துச் சுற்றுலாப் பயணிகளுக்கும் மனத்திற்கு இதமான விருந்தோம்பல் செய்வதில் புகழ் பெற்றது இந்திய நாடு.
 • இந்தியத் துணை கண்டம் ஏழு முக்கிய மலைத் தொடர்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
 • இயற்கைக் காட்சிகளில் மலைகள், ஏரிகள், நீர்வீழ்ச்சிகள், பனியாறுகள், காடுகள் மற்றும் பாலைவனங்கள் ஆகியவை அடங்கும்.
 • இந்திய மாநிலங்களின் அடர்ந்த இருண்ட காடுகள், வனவிலங்குகள் வாழ்வதற்கேற்ற சூழலை வழங்குகின்றன.
 • பலவிதமான இயற்கைப் பாரம்பரியங்களுக்காக அறியப்படும் மாநிலம். தமிழகம்.

சொற்களஞ்சியம்:

வெந்நீர் ஊற்று Geyser A natural hot spring
அணுகுமுறை Accessibility The Quality of being easily to obtain or use
வசதிகள் Amenities Attractiveness of a place
பொழுதுபோக்கு Recreation The feeling of being relaxed
பொழுதுபோக்கு பூங்கா Amusement park A large outdoor are awith fairground rides, shows and other entertainments
பறவைகள் சரணாலயம் Bird Sanctuary An area of land in which birds are protected and encouraged to breed
விலங்குகள் சரணாலயம் Wildlife sanctuary An area which provides protection and favourable living conditions to the wildlife
நில வளம் குறைதல் Land degradation Loss of natural fertility of soil because of loss of nutrients.

தெரியுமா உங்களுக்கு?

 • ‘காஸ்ட்ரோனமி’ என்பது கலாச்சாரச் சுற்றுலாவின் அம்சத்தை குறிக்கின்றது.
 • உள்வரும் சுற்றுலா-சொந்த நாட்டிற்குள் செல்லும் சுற்றுலா.
 • வெளிச்செல்லும் சுற்றுலா-வெளி நாடுகளுக்கு செல்லும் சுற்றுலா.
 • விசா (VISA) – ஒரு நபருக்கு வழங்கப்படும் ஆவணம் (அல்லது) வெளிநாடு செல்ல விரும்பும் ஒருவரது கடவுச்சீட்டில் குறிக்கப்படும் முத்திரை.

சுற்றுலா விசா (Tourist VISA) – கேளிக்கைக்காகச் சுற்றிப் பார்த்தல்.

மாணவர் விசா (Student VIS) – மேற்படிப்பிற்காகச் செல்லுதல்.

தொழில் விசா (Employment VISA) – ஒரு நாட்டில் வேலை பார்த்தல்

மருத்துவ விசா (Medical VISA) – ஒரு நாட்டிலுள்ள புகழ்பெற்ற மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காகச் செல்லுதல்.

 • வனவிலங்குப் பாதுகாப்புச் சரணாலயம் காட்டு விலங்குகளின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்ட நிலப்பகுதி.

ITC – நிறுவனங்களுக்கான உள்ளடக்கிய குழு சுற்றுலா (Inclusive Tours by Charter)

IATA – பன்னாட்டு வான்வழிப் போக்குவரத்துச் சங்கம் (International Air Transport Association).

IATO – இந்தியப் பயண அமைப்பாளர்கள் சங்கம் (Indian Association of Tour Operators).

TAAI – இந்திய பயண முகவர்கள் சங்கம் (Travel Agents Association of India).

TTTHA – தமிழ்நாடு சுற்றுலா பயணம் மற்றும் விருந்தோம்பல் சங்கம் (Tamil Nadu Tour Travel and Hospitality Association).

TTDC – தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் (Tamil Nadu Tourism Development Corporation).

 • சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றும் காரணி – கௌரவம். சுற்றுலா பயணிகளைக் கவர்ந்து இழுக்கும் காரணி – சேவை வசதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Turnoff the Ad Blocker to view the content