தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி Notes 11th History

11th History Lesson 4 Notes in Tamil

4. தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி

அறிமுகம்

பொ.ஆ. 6 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரையிலான தென்னிந்திய அரசியல் வரலாற்றில், வாதாபி (பாதாமி) சாளுக்கியருக்கும் (மேலைச் சாளுக்கியர்) காஞ்சி பல்லவருக்கும் இடையிலான மோதல்கள் முதன்மை பெறுகின்றன. அதே வேளையில் இக்காலகட்டம் பண்பாடு, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான முன்னேற்றங்களைக் கண்டது. கலை, கட்டடக்கலை ஆகிய துறைகளிலும் அதுவரையிலும் அறியாத புதிய சாதனைகள் செய்யப்பட்டன. இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பக்தி இயக்கம் இக்காலப்பகுதியில்தான் தமிழகத்திலிருந்து தோன்றியது.

சான்றுகள்

 • கோயில் சுவர்களிலும் தூண்களிலும் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளும் செப்புப் பட்டயங்களுமே இக்காலகட்ட வரலாற்றுக்கு முக்கியச் சான்றுகளாகும். பிராமணர்களுக்கு இறையிலியாக வழங்கப்பட்ட நிலங்களைப் பதிவு செய்யவும், மத நிறுவனங்களுக்கு அரச கும்பத்தைச் சரந்தவர்களும் பிறரும் கொடுத்த கொடைகளைப் பதிவு செய்யவும், சாளுக்கிய அரசர்கள் கன்னடம், தெலுங்கு, தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் வெளியிட்ட கல்வெட்டுகளும், பல்லவ அரசர்கள் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் வெளியிட்ட கல்வெட்டுகளும் முக்கியச் சான்றுகளாகும்.
 • இரண்டாம் புலிகேசியினுடைய அவைக்களப் புலவரான ரவிகீர்த்தி என்பவர் சமஸ்கிருதத்தில் எழுதிய ஐஹோல் கல்வெட்டு சாளுக்கியக் கல்வெட்டுகளிலேயே மிக முக்கியமானதாகும்.
 • கன்னட மொழியில் எழுதப்பட்ட இலக்கண நூலான ‘கவிராஜமார்கம்’, ‘பம்ப-பாரதம்’, ‘விக்கிரமார்ஜுன விஜயம்’, நன்னையாவால் தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட மகாபாரதம் ஆகிய நூல்கள் முக்கிய வரலாற்றுச் செய்திகளை முன்வைக்கின்றன.
 • இருந்தபோதிலும் இவையனைத்துக்கும் மேலான் இடத்தை வகிப்பது தமிழ் இலக்கியங்களேயாகும். தமிழ்நாட்டில் தோன்றிய பக்தி இயக்கத்தின் விழுமிய வெளிப்பாடுகள் ஆழ்வார்களும் நாயன்மார்களும் இயற்றிய பாடல்களில் மிளிர்ந்தன.
 • வைணவ ஆழ்வார்களின் பாடகள் தொகுக்கப்பட்டு நாலாயிர திவ்வியப்பிரபந்தம் எனப் போற்றப்பட்டது. சைவ இலக்கியங்கள் பன்னிரு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன.
 • அப்பர் (திருநாவுக்கரசர்), சம்பந்தர் (திருஞானசம்பந்தர்), சுந்தரர் ஆகியோர் இயற்றிய தேவாரம், மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம் ஆகியவை முக்கிய நூல்களாகும். அவை இன்று வரை புனிதமான இலக்கியங்களாகப் போற்றப்படுகின்றன.
 • பிற்காலத்தில் சேக்கிழாரால் எழுதப்பட்ட பெரியபுராணமும் பல வரலாற்றுச் செய்திகளை முன்வைக்கின்றது. முதலாம் மகேந்திரவர்மன் எழுதிய மத்தவிலாச பிரகாசனம் பல்லவர்கால வரலாற்றிற்கு ஒரு முக்கியச் சான்றாகும்.
 • சமுத்திர குப்தருடைய அலகாபாத் தூண் கல்வெட்டு, சாளுக்கிய அரசர் இரண்டாம் புலிகேசியின் ஜஹோல் கல்வெட்டு உள்ளிட்ட பல கல்வெட்டுகள் பல்லவ –சாளுக்கிய மோதல்கள் குறித்த விவரங்களை வழங்குகின்றன.
 • பரமேஸ்வரவர்மனின் கூரம் செப்பேடுகள், மூன்றாம் நந்திவர்மனின் வேலூர்பாளையம் செப்பேடுகள் அவ்வரசர்களின் போர்வெற்றிகளைப் பதிவு செய்கின்றன. நாணயங்களும் இக்காலப் பொருளாதார நிலையைப் புரிந்துகொள்ள உதவுகின்றன.
 • பாலி மொழியில் எழுதப்பட்ட பௌத்த நூல்களான தீபவம்சம், மகாவம்சம், சீனப்பயணிகளான யுவான் சுவாங், இட்சிங் ஆகியோரின் பயணக் குறிப்புகள் ஆகியன பல்லவர்காலச் சமூக, மத பண்பாட்டு நிலைகள் குறித்த விவரங்களை வழங்குகின்றன.
 • ஒன்பது, பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த அரபு நாடுகளைச் சேர்ந்த பயணிகளும் மற்றும் புவியியலாளர்களுமான சுலைமான், அல்மசூதி, இபின் கவ்கா போன்றோரின் பயணக்குறிப்புகள் இக்காலகட்ட இந்தியாவின் அரசியல், சமூக, பொருளாதார நிலைகளைப்பற்றி நமக்குக் கூறுகின்றன.
 • ஐஹோல், வாதாபி, பட்டாடக்கல் ஆகிய இடங்களைச் சேர்ந்த கோயில்களிலுள்ள சிற்பங்கள் இக்காலகட்டப் பண்பாட்டைப் பிரதிபலிக்கின்றன.
 1. சாளுக்கியர்களும் பல்லவர்களும்

சாளுக்கியர்

 • இரண்டு சாளுக்கிய அரச குடும்பங்கள் உள்ளன. ஒன்று வாதாபி சாளுக்கியர்; மற்றொன்று கல்யாணி சாளுக்கியர். இப்பாடம் வாதாபி சாளுக்கியரைப் பற்றியதாகும். சாளுக்கிய அரசவம்சம் அதனை உருவக்கிய முதலாம் புலிகேசி (சுமார் கி.பி. (பொ.ஆ) 543 – 566) வாதாபிக்கு அருகேயுள்ள ஒரு குன்றினைச் சுற்றி கோட்டையைக் கட்டியதோடு வலுவான சக்தியாக உதயமானது.
 • கடம்பரின் மேலாதிக்கத்தின் கீழிருந்த அவர், தன்னை சுதந்திர அரசராக பிரகடனப்படுத்திக்கொண்டார். அவர் யக்ஞங்களை நடத்தியதாகவும் அஸ்வமேத யாகம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
 • தலைநகர் வாதாபி கீர்த்திவர்மனால் (566 – 597) நிறுவப்பட்டது. முதலாம் புலிகேசியின் பேரன் இரண்டாம் புலிகேசி (609 – 642) அரசர் மங்களேசனைத் தோற்கடித்த பின்னர் தன்னை அரசராகப் பிரகடனப்படுத்திக் கொண்டார். இந்நிகழ்வு ஐஹோல் கல்வெட்டில் விவரிக்கப்பட்டுள்ளது.
 • இரண்டாம் புலிகேசியின் போர் வெற்றிகளில் குறிப்பிடத்தக்கது. நர்மதை நதிக்கரையில் ஹர்ஷரை வென்றதாகும். மாளவம், கலிங்கம் மற்றும் தக்காணத்தின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த அரசர்கள் இவரின் அரசியல் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டனர்.
 • பனவாசியின் கடம்பர்களையும் மைசூரின் கங்கர்களையும் இவர் வெற்றி கண்டார். இவர் காஞ்சிபுரத்தின் மீது மேற்கொண்ட தாக்குதலைப் பல்லவ அரசன் முதலாம் மகேந்திரவர்மன் முறியடித்தார். இது சாளுக்கியருக்கும் பல்லவருக்கும் இடையே இரு நீண்ட காலப் போருக்கு இட்டுச்சென்றது.
 • பல்லவ அரசன் முதலாம் நரசிம்மவர்மன் (630 – 668) வாதாபியைத் தாக்கிக் கைப்பற்றினார். இப்போரில் இரண்டாம் புலிகேசி உயிர்துறந்தார். இதனைத் தொடர்ந்து வாதாபி சாளுக்கியப் பேரரசின் கிழக்குப் பகுதிகளின் மீதான பல்லவர்களின் கட்டுப்பாடு பல ஆண்டுகள் நீடித்தது. எட்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் வாதாபி சாளுக்கியர்கள் ராஷ்டிரகூடர்களால் வெற்றிகொள்ளப்பட்டனர்.

சாளுக்கியரின் நிர்வாகம்

அரசு

 • அரசரே நிர்வாகத்தின் தலைவர். ஒரு அரசருக்குப் பிறகு, அவருடைய மூத்த மகனே அரசராக வேண்டும் என்ற மரபு முழுமையாகப் பின்பற்றப்படவில்லை.
 • பொதுவாக ஓர் அரசர் ஆட்சி புரிகையில் அவருடைய மூத்த மகன் ஆளுநராக (யுவராஜாவாக) அமர்த்தப்படுவார். இந்த ஆளுநர் இலக்கியம், சட்டம், தத்துவம், போர்க்கலைகள் முதலானவற்றில் பயிற்சி பெறுவார். சாளுக்கிய அரசர்கள் தர்ம சாஸ்திரம் , நீதி சாஸ்திரம் ஆகியவற்றின்படி ஆட்சிபுரிவதாகக் கூறினர்.
 • முதலாம் புலிகேசி மனுசாஸ்திரம், புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றில் சிறந்து விளங்கினார். தொடக்க காலத்தில் சாளுக்கிய அரசர்கள் மகாராஜன், சத்யசிரயன், ஸ்ரீபிருத்திவல்லபன் எனும் பட்டங்களைச் சூடிக் கொண்டனர்.
 • ஹர்சவர்தனரை வென்ற பின்னர் இரண்டாம் புலிகேசி பரமேஸ்வரன் எனும் பட்டத்தைச் சூட்டிக்கொண்டார். விரைவில் பத்ரகாரன், மகாராஜாதிராஜன் எனும் பட்டங்களும் பிரபலமாயின.
 • பல்லவ அரசில், அரசர்கள் , தர்ம மகாராஜாதி ராஜா, மகாராஜாதி ராஜா, தர்ம மகாராஜா, மகாராஜா எனும் உயர்வாக ஒலிக்கும் பட்டங்களைச் சூட்டிக்கொண்டனர்.
 • ஹிரகடஹள்ளி செப்புப்பட்டயத்தில், அக்னிஸ்தோம, வாஜ்பேய, அஸ்வமேத வேள்விகளை நடத்தியவர் என்று அரசர் அறிமுகம் செய்யப்படுகிறார்.
 • காட்டுப் பன்றியின் உருவமே சாளுக்கியரின் அரச முத்திரையாகும். இது விஷ்ணுவின் வராக அவதாரத்தைக் குறிப்பதாகும். சிவபெருமானின் வாகனமான காளை (நந்தி) பல்லவர்களின் அரச முத்திரையாகும்.

அரசகுல மகளிர்

 • முதலாம் ஜெயசிம்மனின் வழிவந்த சாளுக்கிய வம்சாவளியினர்அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை மாநில ஆளுநர்களாக நியமித்தனர். விஜயபத்திரிகா என்னும் பெயரைக் கொண்ட சாளுக்கிய இளவரசி கல்வெட்டாணைகளைப் பிறப்பித்துள்ளார்.
 • பல்லவ அரசிகள் அரசு நிர்வாகத்தில் நேரடியாகப் பங்கேற்கவில்லை. ஆனால் அவர்கள் பல கோயில்களை எழுப்பினர். பல கடவுள்களின் உருவங்களை அங்கே நிறுவினர். கோயில்களுக்குக் கொடை வழங்கினர். ராஜசிம்மனின் அரசி ரங்கபதாகாவின் உருவம், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலுள்ள கல்வெட்டில் காணப்படுகிறது.

இரண்டாம் புலிகேசியின் ஜஹோல் கல்வெட்டு

ஜஹோல் (கர்நாடகா) மேகுடி கோயில் ஒரு குன்றின் மேலுள்ளது. இச்சமணக் கோயிலின் கிழக்குச் சுவரில் 19 வரிகளைக் கொண்ட சமஸ்கிருதக் கல்வெட்டு ஒன்று உள்ளது. (சக வருடம் 556 : கி.பி. 634 – 635 காலத்தைச் சார்ந்தது). இக்கல்வெட்டுச் செய்திகளை எழுதியவர் ரவிகீர்த்தி என்ற கவிஞர் . இக்கல்வெட்டு சாளுக்கிய அரசர்களைக் குறிக்கும் மெய்கீர்த்தியாகும். குறிப்பாக அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த இரண்டாம் புலிகேசி ‘சத்யஸ்ராய’ (உண்மையின் உறைவிடம்) என்று குறிப்பிடப்பட்டுள்ளான். இக்கல்வெட்டு சாளுக்கியரின் அரசவம்ச வரலாற்றை, இரண்டாம் புலிகேசி தன் பகைவர்கள் அனைவரையும் குறிப்பாக ஹர்சவர்தனரைத் தோற்கடித்ததைக் கோடிட்டுக் காட்டுகிறது.

கூரம் செப்பு பட்டயத்தில் இருந்து……

(வரி : 12) கிழக்கு மலையில் இருந்து சூரியனும் சந்திரனும் எழுதுவது போல, தனது இன அரசு வம்சாவளியில் இருந்து (தோன்றிய) நரசிம்மவர்மனின் பேரன்; அவர் இளவரசர்களின் மகுடங்களுக்கெல்லாம் மணிமகுடம்; அவர் தலை எதற்கும் (எங்கும்) பணிந்ததில்லை; எதிரி அரசர்களின் யானைப் படைகளை எதிர்த்து விரட்டிய சிங்கம், நரசிம்மாவால் ஆசிர்வதிக்கப்பட்ட தோற்றமுடையவர்; அவரே இளவரசராக (பூமிக்கு) வந்திருக்கிறார்; சோழர்கள், சேரர்கள் , களப்பிரர்கள், பாண்டியர்களை மீண்டும் மிஈண்டும் தோற்கடித்துள்ளார். அவர் ஆயிரகரமுடையான் (ஆயிரம் கரமுடைய காத்தவராயன் போல), நூற்றுக்கணக்கான போர்களில் ஆயிரம் கரங்கள் கொண்டு போரிட்டது போல் செயல்பட்டவர்; பரியாலா, மணிமங்கலம், சுரமாரா போர்களின் வெற்றிச் சொல்லின் ஒவ்வொரு எழுத்தையும் புலிகேசியின் முதுகில் பொறித்து புறமுதுகிட்டு ஓடச் செய்தார்; குடமுனி (அகத்தியர்) அரக்கன் வாதாபியை அழித்தது போல் வாதாபி நகரை அழித்தார்.

அரசரும் அமைச்சர்களும்

 • சாளுக்கிய அரசில் அதிகாரங்கள் அனைத்தும் அரசரின் கரங்களில் வழங்கப்பட்டிருந்தன. அமைச்சரவை பற்றிக் கல்வெட்டுகளில் குறிப்பாக எதுவும் சொல்லப்படவில்லை. ஆனால் அவை மகா-சந்தி-விக்கிரகிக என்னும் அதிகாரியை குறிப்பிடுகின்றன.
 • நான்கு அமைச்சர்களைக் குறித்து கல்வெட்டுகள் பேசுகின்றன. அவர்கள் பிரதான (முதலமைச்சர்), மகாசந்தி-விக்கிரகிக (வெளிவிவகாரத்துறை அமைச்சர்), அமத்யா (வருவாய்த துறை அமைச்சர்), சமகர்த்தா (அரசு கருவூல அமைச்சர்) ஆகியோராவர்.
 • நிர்வாக வசதிக்காகச் சாளுக்கியர்கள் நாட்டைப் பல பிரிவுகளாகப் பிரித்திருந்தனர். அவை விஷ்யம், ராஷ்ட்ரம், நாடு, கிராமம் என்பவனவாகும்.
 • கல்வெட்டுகள் விசயாபதி, சமந்தா, கிராமபோகி, மபத்ரா என்னும் அதிகாரிகள் குறித்துப் பேசுகின்றன. விசயாபதி அரசரின் கட்டளைப்படி அதிகாரங்களைக் கையாண்டார்.
 • சமந்தா என்போர் நிலப்பிரபுக்களாவர். இவர்கள் அரசாங்கத்தின் கட்டுப்பட்டின் கீழ் செயல்பட்டனர். கிராம்போகி., கிராமகூடர் ஆகியோர் கிராம அளவிலான அதிகாரிகள், மகாத்ரா என்போர் கிராமத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களாவர்.

மாகாண மற்றும் மாவட்ட நிர்வாகம்

 • பொதுவாக அரசர்கள் தங்களின் மகன்களை மாகாண ஆளுநர்களாக அமர்த்தினர். மாகாண ஆளுநர்கள் தங்களை ராஜமார்க்க ராஜன் என்றும், ராஜாதித்ய ராஜ பரமேஸ்வரன் என்றும் அழைத்துக் கொண்டனர்.
 • இவர்களில் சிலர் மகா –சமந்தா என்னும் பட்டத்தைப் பெற்றிருந்தனர். இவர்கள் படைகளை வைத்துப் பராமரித்தனர். விஷ்யாவின் தலைவர் விசாயபதியாவார். இவ்விஷயாக்கள் மீண்டும் புக்திகளாகப் பிரிக்கப்பட்டன. புக்தியின் தலைவர் போகபதி ஆவார்.

கிராம நிர்வாகம்

 • கிராமங்களில் பாரம்பரியமாக வருவாய் அலுவலர்களாகப் பணியாற்றியவர் நல-கவுண்ட என்றழைக்கப்பட்டனர். அரசரால் நியமிக்கப்பட்ட கமுண்டர்ட் அல்லது போகிகன், கிராம நிர்வாகத்தின் மையப் புள்ளியாக இருந்தார்.
 • கிராமக் கணக்கர் கரணா ஆவார். இவர் கிராமணி எனவும் அழைக்கப்பட்டனர். கிராம அளவில் கிராம மக்களைக் கொண்ட “மகாஜனம்” என்னும் குழுவின் கைகளில் சட்டம் ஒழுங்கு நிர்வாகம் இருந்தது.
 • “மகாபுருஷ்” என்னும் சிறப்பு அதிகாரி கிராமத்தில் அமைதியைப் பாதுகாக்கும் பணியை மேற்கொண்டார். நகரபதி, புறபதி ஆகியோர் சிறுநகரங்களின் அதிகாரிகளாவர்.

மதம்

 • சைவம் வைணவம் ஆகிய இரு மதங்களையும் சாளுக்கியர் ஆதரித்தனர். சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் கோயில்களை எழுப்பினர். இக்கோயில்களில் முறையான வழிபாடுகளும் சடங்குகளும் விழாக்களும் நடத்தப்படுவதற்காக கங்கைப் பகுதிகளிலிருந்து பிராமணர்கள் அழைத்துவரப்பட்டு குடியமர்த்தப்பட்டனர்.
 • சாளுக்கிய அரசர்களில் குறிப்பிடத்தகுந்தன் அரசர்களான முதலாம் கீர்த்திவர்மன் (566 -594) , மங்களேசன் (594 – 609) , இரண்டாம் புலிகேசி (609 – 642) ஆகியோர் வேள்விகளை நடத்தினர்.
 • அவர்கள் பரம-வைஷ்யண, பரம-மஹேஸ்வர என்னும் பட்டங்களையும் தரித்துக்கொண்டனர். போர்க் கடவுளான கார்த்திகேயனுக்கு முக்கியத்துவம் அளித்தனர். சைவ மடங்கள் சைவத்தைப் பரப்பும் மையங்களாயின. சாளுக்கியர் ஆசீவக மதப்பிரிவுகளையும் ஆதரித்தனர்.
 • சமண மத மையங்களுக்கு மிகத் தாராளமாக நிலங்களை வழங்கினர். கவிஞர் என இரண்டாம் புலிகேசியால் புகழ்மாலை சூட்டப்பட்ட ரவிகீர்த்தி ஒரு சமண அறிஞர் ஆவார். இரண்டாம் கீர்த்திவர்மனின் ஆட்சியின்போது (744 – 745) சமண மதத்தைச் சேர்ந்த கிராம அதிகாரி ஒருவர் அனெகெரி என்ற இடத்தில் ஒரு சமணக் கோவிலைக் கட்டினார்.
 • இளவரசர் கிருஷ்ணா (756 – 775) குணபத்ரா என்ற சமணத் துறவியை தனது ஆசிரியராகக் கொண்டிருந்தார். விஹயாதித்தனின் (775 – 772) சமகாலத்தவரும் ஜெய்னேந்திரிய வியாகரணம் என்னும் நூலை இயற்றியவருமான பூஷ்யபட்டர் ஒரு சமணத் துறவியாவார்.
 • சீனப் பயணி யுவான் சுவாங் சாளுக்கியப் பகுதிகளில் பல பௌத்த மையங்கள் இருந்ததாகவும் அவற்றில் மகாயான, ஹீனயான பிரிவுகளைப் பின்பற்றும் 5000 பௌத்தர்கள் வாழ்ந்ததாகவும் கூறுகிறார்.

இலக்கியமும் கல்வியும்

 • ஐஹோல் , மகாகூடம் தூண் கல்வெட்டுகளைச் சாளுக்கியர் சமஸ்கிருதத்தில் பொறித்துள்ளனர். வாதாபியிலுள்ள ஒரு சாளுக்கிய அரசனின் ஏழாம் நூற்றாண்டுக் கல்வெட்டு கன்னட மொழியை ‘உள்ளூர் பிராகிருதம்’ அதாவது மக்களின் மொழியென்றும், சமஸ்கிருதத்தைப் பண்பாட்டின் மொழி என்றும் குறிக்கின்றது.
 • இரண்டாம் புலிகேசியின் தளபதி ஒருவன் ‘சப்தாவதாரம்’ எனும் இலக்கணநூலை சமஸ்கிருத மொழியில் எழுதினார்.

சாளுக்கியரின் கட்டடக்கலை

வரலாற்று ரீதியில் தக்காணத்தில் சாளுக்கியர்களே முதன்முறையாக, சற்றே மிருதுவான மணற்கல் (sans stone) பயன்படுத்திக் கோயில்களை எழுப்பினர். வாதாபியில் நான்கு விதமான கோயில்கள் காணப்படுகின்றன. இரண்டு கோயில்கள் விஷ்ணுவுக்கும் ஒரு கோயில் சிவனுக்கும் மற்றொன்று சமண தீர்த்தங்கரர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. இவர்களின் கோயில்களைக் குடைவரைக் குகைக்கோயில்கள், கட்டுமானக் கோயில்கள் எனப்பிரிக்கலாம். வாதாபி, குடைவரைக் குகைக் கோயில்கள், கட்டுமானக் கோயில்கள், கட்டுமானக் கோயில்கள் ஆகிய இரண்டுக்கும் பெயர்பெற்றது. பட்டாடக்கல் , ஐஹோல் ஆகியவை கட்டுமானக் கோயில்களுக்கு பெயர்பெற்றவையாகும்.

ஐஹோல்

 • 634இல் உருவாக்கப்பட்ட ஐஹோல் இடைக்காலத்தில் புகழ் பெற்றிருந்த ஐயாவொளே எனும் வணிக மையமுமாகும். ஐஹொலில் ஏறத்தாழ எழுபது கோயில்கள் உள்ளன.
 • காலத்தால் முந்தைய கற்கோயில் லட்கான் கோயிலாகும். இதனுடைய தனித்தன்மை இங்குள்ள வட இட்ந்ஹிய பாணியிலிருந்து வேறுபட்ட சிகரத்தைக் கொண்ட, அழகான, நேர்த்தியான மென்சாந்து மேற்பூச்சைக் கொண்ட தூணாகும்.
 • துர்க்கைக்கு அர்ப்பணிக்கப்பட்ட மற்றொரு கோயில் , புத்த சைத்ய பாணியில் அமைந்துள்ளது. சற்றே மேடான தளத்தின் மேல் அரை வட்டவடிவில் இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
 • இதேபோன்று துர்க்கைக்கு அர்ப்பணிக்கப்பட்ட குசிமல்லிகுடி எனும் மற்றொரு துர்க்கைக் கோயில் செவ்வக வடிவத்தில் அமைந்துள்ளது. சாளுக்கியர் சமணக் கோயில்களையும் கட்டினர்.
 • மேகுடியிலுள்ள சமணக்கோயில், சாளுக்கியர் காலத்திய கட்டடக்கலையின் பரிணாம வளர்ச்சிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். மண்டப பாணியில் அமைக்கப்பட்டுள்ள குகைகள் ஐஹொலில் பாதுகாக்கப்படுகின்றன.

வாதாபி (பாதாமி)

வாதாபியில் நான்கு குகைகள் உள்ளன. மங்களேசன் கட்டிய மிகப்பெரிய குகைக்கோயில் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பாம்புப் படுக்கையில் சயனக் கோலத்திலுள்ள விஷ்ணு, நரசிம்மர் சிற்பங்கள் சாளுக்கியரின் கலை மேன்மைக்கு நேர்த்திமிகுந்த எடுத்துக்காட்டுகளாகும். மதவேறுபாடுகளின்றிக் கட்டடக்கலை அமைப்புகள் ஒரே பொதுவான பாணியைக் கொண்டுள்ளன. இது தொழில்நுட்பத்தையும், புரவலர், கட்டடக் கலைஞர்களின் மதச்சார்பற்ற தன்மையையும் வெளிப்படுத்துகிறது.

பட்டாடக்கல்

 • கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டத்திலுள்ள பட்டாடக்கல் எனும் அமைதியான சிறிய கிராமம் கலையழகும் நேர்த்தியும் மிக்க கோயில்களுக்குப் பெயர்பெற்றதாகும். பட்டாடக்கல் அரச சடங்குகள் நடத்துவதற்கான இடமாகும்.
 • இரண்டாம் விக்கிரமாதித்தன் காஞ்சிப்புரத்தைக் கைப்பற்றியதன் நினைவாக அவனுடைய மனைவி லோகமாதேவியின் ஆணைப்படி விருப்பாக்சர் கோயில் கட்டப்பட்டது.
 • பல்லவ அரசன் ராஜசிம்மன் மாமல்லபுரத்தின் எழுப்பிய கடுமானக் கோயில்களின் தனித்தன்மைகளைத் தழுவி இக்கோயில் அமைந்துள்ளது. பொதுவாக நினைவுச்சின்னங்கள் அவற்றைக் கட்டிய அரசர்களோடு தொட்ரபுடையனவாக இருக்கும். சிற்பிகளின் பெயர் அறியப்படாமல் போய்விடும். ஆனால் இங்கே இக்கோயிலின் வடிவத்தைத் திட்டமிட்ட கட்டடக் கலைஞர் அதை உருவாக்கிய நிபுணத்துவம் பெற்ற கலைஞர்கள் ஆகியோரின் கையெழுத்தும் இடம் பெற்றுள்ளன.
 • விருப்பாக்சர் கோயிலின் கிழக்கு வாசலில் இடம் பெற்றுள்ள ஒரு கன்னடக் கல்வெட்டு இக்கோவிலை வடிசமைத்த கட்டடக் கலைஞரை வெகுவாகப் பாராட்டுகின்றது.
 • அக்கட்டடக்கலைஞருக்குத் “திரிபுவாசாரியா” (மூன்று உலகையும் உருவாக்கியவன்) என்ற பட்டமும் சூட்டப்பட்டது. கோயில் சுவரில் இடம் பெற்றுள்ள பல சிற்பங்கள் அவற்றைச் செதுக்கிய சிற்பங்களின் கையொப்பத்தையும் கொண்டுள்ளன.
 • இக்கிராமத்தின் தென்கிழக்கு மூலையில் பாபநாத கோயில் அமைந்துள்ளது. விருபாக்சர் கோவிலைப் போன்ற அடித்தள கட்டுமானத் திட்டத்தின்படி கட்டப்பட்ட இக்கோயில் வட இந்திய பாணியிலான சிகரத்தைக் கொண்டுள்ளது.
 • வெளிப்புறச் சுவர்கள் ராமாயணக் கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் சித்தரிக்கும் தொடர் சிற்பங்களால் நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. கோயிலின் கிழக்குச் சுவரிலுள்ள ஒரு சிறிய கன்னடக் கல்வெட்டு கருவறையை வடிவமைத்தவரி பெயர் ‘ரேவதி ஓவஜா’ என்று குறிப்பிடுகின்றது.
 • பட்டாடக்கல் லில் சாளுக்கியர் பத்துக்கும் மேற்பட்ட கோயில்களை எழுப்பியுள்ளார்கள். இவை சாளுக்கியக் கட்டடக் கலையின் பரிணாம வளர்ச்சியைக் காட்டுகின்றன. கட்டப்பட்ட பாணியின் அடிப்படையில் இக்கோயில்களை இந்தோ-ஆரியன், திராவிட கட்டடக் கலை என இரண்டாகப் பிரிக்கலாம்.

ஓவியம்

வாதாபியில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட குகைக்கோயிலில் சில ஓவியங்கள் காணப்படுகின்றன. ஓவியக்கலையில் சாளுக்கியர் வாகடகர்களின் பாணியைப் பின்பற்றினர். அவ்வாறான ஓவியங்களில் பெரும்பாலானவை விஷ்ணுவின் அவதாரங்களைப் பற்றியதாகும். சாளுக்கிய ஓவியங்களில் மிகப் பிரபலமானது. அரசன் மங்களேசனால் (597 – 609) கட்டப்பட்ட அரண்மனையில் உள்ளது. அக்காட்சி நடன நிகழ்ச்சி ஒன்றை அரச குடும்ப உறுப்பினர்களும் மற்றவரும் கண்டுகளிப்பதாய் அமைந்துள்ளது.

பல்லவர்

 • பல்லவர்களின் தோற்றம் குறித்து அறிஞர்களிடையே கருத்தொற்றுமையில்லை. தொடக்ககால அறிஞர்கள் சிலர் பார்த்தியர் எனும் அரச மரபின் மற்றொரு பெயரான ‘பஹல்ப’ என்ற சொல்லின் திரிபே ‘பல்லவ’ ஆகும் என்ற கருத்தைக் கொண்டிருந்தனர்.
 • பொ.ஆ. இரண்டாம் நூற்றாண்டில் சாகர், சாதவாகனர்க்கிடையே போர்கள் நடைபெறுகையில் மேற்கிந்தியாவிலிருந்து தீபகற்பத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளுக்குப் பார்த்தியர் குடி பெயர்ந்தனர்.
 • ஆனால் இன்றைய அறிஞர் பலர் பார்த்தியரைத் தென்னிந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் அல்லது வட இந்தியரோடு ரத்தக்கலப்பு கொண்டவர்கள் என்றும் கருதுகின்றனர்.
 • பல்லவர்கள் வடபெண்ணை ஆற்றுக்கும், வட வெள்ளாற்றுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பான தொண்டை மண்டலத்தோடு தொடர்புடையவராவர். சிம்மவர்மனின் மகனான சிம்மவிஷ்ணு காவேரி வரை முன்னேறு சோழர்களுக்குச் சொந்தமான பகுதிகளைக் கைப்பற்றி, தன் தந்தை தொடங்கிய பல்லவ வம்ச ஆட்சியை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்டார்.
 • களப்பிரர்களை முற்றிலும் அழித்தொழித்து காவேரி வரை முன்னேறி அவர்களின் பகுதிகளைக் கைப்பற்றியபோது பாண்டியர்களோடு மோத வேண்டியதாயிற்று.
 • சிம்மவிஷ்ணுவைத் தொடர்ந்து அவரது மகன் முதலாம் மகேந்திரவர்மன் (பொ.ஆ. 590 – 630) அரியணை ஏறினார். சமண மதத்தைப் பின்பற்றிய இவறை அப்பர் சைவராக மாற்றினார்.
 • லைகளை ஆதரித்த மகேந்திரவர்மன் கவிஞனும் இசை வித்தகனுமாவார்.
 • மகேந்திரவர்மனின் ஆட்சிக்காலத்தில் இரண்டாம் புலிகேசி, பல்லவ அரசினுடைய வடபகுதிகளைக் கைப்பற்றித் தலைநகர் காஞ்சிபுரம் வரை முன்னேறினார். இதனைத் தொடர்ந்து முதலாம் நரசிம்மவர்மனின் ஆட்சிக்காலத்தில் (630 – 668) பதிலடி கொடுக்கும் விதத்தில் பல்லவர்கள் சாளுக்கியர்களுக்கு எதிராகப் பல வெற்றிகளை ஈட்டினர்.
 • இப்போர்களில் பல்லவர்களுக்கு மானவர்மன் எனும் இலங்கை இளவரசர் உதவினர். இவ்விளவரசரே பின்னர் இலங்கையின் அரசராகப் பதவியேற்றார். இப்போர்களின் உச்சகட்டமாக நரசிம்மவர்மன் சாளுக்கிய அரசின் தலைநகரான வாதாபியைக் கைப்பற்றினார்

 • இரண்டாம் புலிகேசி இப்போரில் கொல்லப்பட்டார். நரசிம்மவர்மன் சேர சோழர்களையும் களப்பிரர்களையும் வெற்றி கொண்டதாகக் கூறுகிறார். இலங்கை அரசன் மானவர்மனுக்கு ஆதரவாக இருமுறை அனுப்பப்பட்ட கப்பற்படைகள் வெற்றி பெற்றன. இருந்தபோதிலும் இலங்கை அரசர் தனது பதவியினை இழந்தார்.
 • பல்லவ சாளுக்கியப் பகைமையும் மோதல்களும் தொடர்ந்தன. இடையிடையே அமைதியும் நிலவியது. பல்லவ அரசன் முதலாம் பரமேஸ்வரவர்மனின் ஆட்சியின்போது (670 – 700) சாளுக்கிய அரசர் விக்கிரமாதித்யன் பல்லவ நாட்டின்மீது படையெடுத்தார்.
 • முதலாம் பரமேஸ்வரவர்மன் கங்கர் பாண்டியர் ஆகியோரின் உதவியோடு விக்கிரமாதித்தனை எதிர்த்துப் போரிட்டார். இதன் விளைவாகப் பின்னர் தெற்கில் பல்லவருக்கும் பாண்டியருக்குமிடையேமோதல்கள் ஏற்பட்டன.
 • ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில், தண்டிவர்ம பல்லவனின் ஆட்சியின்போது காஞ்சிபுரம் ராஷ்ட்டிரகூட அரசர் மூன்றாம் கோவிந்தனின் தாக்குதலுக்கு உள்ளானது.
 • தண்டிவர்மனின் மகன் மூன்றாம் நந்திவர்மன், மேலைக் கங்கர் சோழர் ஆகியோரின் ஆதரவோடு பாண்டியரை ஸ்ரீபிரம்பியம் அல்லது திரும்புறம்பியம் போரில் தோற்கடித்தான்.
 • மூன்றாம் நந்திவர்மனின் பேரனான அபராஜிதன் தொண்டை மண்டலப்பகுதியின் மீது படையெடுத்து வந்த முதலாம் ஆதித்த சோழனோடு போர்புரிந்து மடிந்தார். இத்துடன் பல்லவரின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இதன் பின்னர் தொண்டை மண்டலம் சோழர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

சேரர் குறிப்பு

பொ.ஆ. ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை கேரளா, சேர பெருமாள் அரசர்களால் ஆளப்பட்டிருந்தாலும் ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை அவர்களது வரலாறு குறித்து ஓரளவே தெரியவந்துள்ளது.

பல்லவ நிர்வாகம்

 • பல்லவர் காலத்தில் அரச பதவியானது தெய்வீக உரிமையென்றும், அப்புரிமையானது வம்சாவளியாகத் தொடர்வது என்றும் கருதப்பட்டது. பல்லவ அரசர்கள் பெரும் பட்டங்களைச் சூட்டிக்கொண்டனர்.
 • அவற்றுள் ‘மகாராஜாதிராஜா’ என்பன போன்ற சில வடஇந்திய மரபிலிருந்து பெறப்பட்டவை. அமைச்சர் குழுவொன்று அரசருக்கு உதவியது. பிற்காலப் பல்லவர் காலத்தில் இவ்வமைச்சர் குழுவானது அரசின் கொள்கை முடிவுகளில் முக்கியப் பங்காற்றியது.
 • ஒருசில அமைச்சர்கள் ஓரளவுக்கு உயர்ந்த பட்டங்களைச் சூட்டிக் கொண்டனர். இவ்வமைச்சர்களில் பலர் நிலவுடைமையாளர்களிலிருந்து நியமிக்கப்பட்டனர்.
 • அமத்யா என்பவருக்கும் ‘மந்திரி’ என்பவருக்குமிடையே சில வேறுபாடுகளிருந்தன. மந்திரி என்றால் பொதுவாக ராஜதந்திரி எனப் புரிந்துகொள்ளப்படுகிறது.
 • அமத்யா என்பவர் ஆலோசகராவார், ‘மந்திரி மண்டல’ என்பது அமைச்சர் குழுவாகும். ரகஸ்யதிகிரதா என்பவர் அரசரின் அந்தரங்கச் செயலாளர். மாணிக்கப் பண்டாரம் காப்பான் என்னும் அதிகாரி கருவூலத்தைக் காப்பவராவார். (மாணிக்க-விலைமதிப்பில்லா; பண்டாரம் – கருவூலம்; காப்பான் – காவல் புரிபவர்).
 • கொடுக்காப்பிள்ளை என்பவர் நன்கொடைகளுக்கான அதிகாரிகளாவார். அவர்கள் பல்லவ அரசர்களின் கீழ் மைய அதிகாரிகளாகப் பணியாற்றிய அதிகாரிகளாவர்.
 • கோச-அதீயட்சா என்பவர் மாணிக்கப் பண்டாரம் காப்பாளர்களை மேற்பார்வை செய்பவர். நீதிமன்றங்கள் அதிகர்ண மண்டபம் என்றும், நீதிபதிகள் தர்மாதிகாரி என்றும் அழைக்கப்பட்டனர்.
 • நந்திவர்ம பல்லவனின் காசக்குடி செப்பேடுகளில் அபராதங்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. மேல்நிலை நீதிமன்றங்களில் விதிக்கப்படும் அபராதங்கள் கர்ணதண்டம் ஆகும். கீழ்நிலை நீதிமன்றங்களில் விதிக்கப்படும் அபராதங்கள் அதிகர்ண தண்டமாகும்.
 • மாநில ஆளுநர்களுக்கு மாவட்ட அளவிலான அதிகாரிகள் ஆலோசனை வழங்கி, உதவிகள் செய்தனர். இவ்வதிகாரிகள் உள்ளூர் அளவிலான தன்னாட்சி பெற்ற அமைப்புகளோடு ஆலோசகர்கள் என்ற நிலையில் இணைந்து செயல்பட்டனர்.
 • இவ்வமைப்புகள் உள்ளூர் அளவிலான சாதி, கைவினைஞர், தொழில் குழுக்கள் (நெசவாளர், எண்ணெய் ஆட்டுவோர் போன்றோர்), சேவை செய்வோர், மாணவர் அர்ச்சகர்கள், துறவிகள் ஆகியோர்களின் உறவுகளின் அடிப்படையில் கட்டப்பட்டவையாகும்.
 • கிராமங்களில் மக்கள் பங்குபெறும் மன்றங்கள் இருந்தன. மாவட்டப் பிரதிநிதிகளும் இருந்தனர். இவ்வமைப்புகளின் பொதுக்குழுக் கூட்டங்கள் ஆண்டிற்கு ஒருமுறை கூட்டப்பட்டது. அளவில் சிறியதான குழுக்களின் கூட்டங்கள் அடிக்கடி நடத்தப்பட்டன. கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது இச்சிறிய அமைப்புகளின் பொறுப்பாகும்.

நிலமானியங்கள்

 • நிலவுடைமை உரிமை அனைத்தும் அரசரிடமே இருந்தது. அவர் அதிகாரிகளுக்கு வருவாய் மானியங்களையும் பிராமணர்களுக்கு நில மானியங்களையும் வழங்கினார் அல்லது நிலப்பிரபுக்கள், சிறு விவசாயிகள் மூலம் நிலத்தை சாகுபடி செய்ய வைத்தார்.
 • இரண்டாவதாகச் சொல்லப்பட்டதே பெரும்பாலும் பின்பற்றப்பட்ட முறையாகும். அரசருக்குச் சொந்தமான நிலங்கள் குடியானவர்களுக்குக் குத்தகைக்கு விடப்பட்டன. குத்தகைக்கான கால அளவைப் பொறுத்து கிராமங்களின் தகுதி நிலைகள் மாறுபடும்.
 • பல்வேறு சாதிகளைச் சேர்ந்த மக்களைக் கோண்ட கிராமங்கள் நிலவரி செலுத்தின. பிரம்மதேய கிராமங்கள் ஒரு பிராமணருக்கோ அல்லது சில பிராமணர்களைக் கொண்ட ஒரு குழுவுக்கோ கொடையாக வழங்கப்பட்டன.
 • வரி செலுத்த வேண்டியதில்லை என்பதால் இக்கிராமங்கள் ஏனைய கிராமங்களைக் காட்டிலும் செழிப்பாக இருந்தன. கோயில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட கிராமங்கள் தேவதான கிராமங்களாகும்.
 • இவற்றின் வருவாயை கோயில் நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனரேயன்றி அரசு பெறவில்லை. கோயில் பணிகளில் வேலைவாய்ப்பு வழங்கி, கோயில்கள் கிராமங்களுக்கு உதவின.
 • பின்வந்த காலங்களில் கோயில்கள் கிராமம் சார்ந்த வாழ்க்கையின் மையமாக மாறியபோது தேவதான கிராமங்கள் தனி முக்கியத்துவம் பெற்றன. பல்லவர் ஆட்சியில் முதலாவதாக குறிப்பிட்டுள்ள இருவகை கிராமங்களே (தேவதான கிராமங்கள் தவிர) பெரும்பான்மையாய் இருந்தன.
 • 1879இல் புதுச்சேரிக்கு அருகே உருக்காட்டுக்கோட்டம் என்னுமிடத்தில் இருபுறமும் இணைக்கப்பட்டு லிங்கம், நந்தி ஆகியன (பல்லவர்களின் முத்திரை) பொறிக்கப்பட்ட செப்பு வளையத்தில் கோர்க்கப்பட்ட பதினோரு செப்புப் பட்டயங்கள் கண்டறியப்பட்டன. அரசன் ந்ந்திவர்மனின் (பொ.ஆ. 753) இருத்திரண்டாவது ஆட்சியாண்டில், மானியமாகத் தரப்பட்ட ஒரு கிராமம் குறித்த செய்திகள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் உள்ளடக்கம் அரசரைப் பற்றிய சமஸ்கிருத மொழியில் புகழ்வதில் தொடங்கி மானியத்தைப் பற்றிய விவரங்களைத் தமிழில் கூறி இறுதியில் சமஸ்கிருத செய்யுளோடு முடிவடைகிறது.

கிராம வாழ்க்கை

 • கிராம அளவில் அடிப்படையான அமைப்பு ‘சபை’ ஆகும். அறக்கட்டளைகள், நிலம், நீர்ப்பாசனம், வேளாண்மை, குற்றங்களுக்கான தண்டனை, மக்கள் தொகை உள்ளிட்ட தேவைப்படும் ஏனைய ஆவணங்களைப் பாதுகாத்தல் ஆகியன போன்ற கிராமத்தோடு தொடர்புடைய அனைத்து செயல்பாடுகளிலும் சபை அக்கறை செலுத்தியது.
 • கிராம நீதிமன்றங்கள் சிறிய குற்றவியல் வழக்குகளை விசாரித்துத் தீர்ப்புகள் வழங்கின. சிறுநகரங்களிலும் நகரங்களிலும் அரசரை மேலான நடுவராகக் கொண்டு அதிகாரிகளின் தலைமையில் நீதிமன்றங்கள் செயல்பட்டன.
 • சபை என்பது நிர்வாகமுறையைச் சேர்ந்த அமைப்பாகும். கிராமத்தவர் அனைவரும் பங்கேற்கும் நிர்வாகமுறை சாராத மக்கள் மன்றமான ‘ஊரார்’ என்ற அமைப்போடு இது இணைந்து செயல்பட்டது.
 • இதற்கு மேலான மாவட்ட குழு ‘நாடு’ அல்லது மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து செயல்பட்டது. பிராமணர்கள் மட்டுமே வாழ்ந்த அல்லது பிராமணர்கள் அதிகமாக வாழ்ந்த கிராமங்கள் இவ்வமைப்புகளின் செயல்பாடுகள் தொடர்பான ஆவணங்களைப் பாதுகாத்தன.
 • கிராம அளவிலான இவ்வமைப்புகளுக்கும் அரசு நிர்வாகத்திற்குமிடையே பாலமாக செயல்பட்டவர் கிராமத்தலைவர் ஆவார்.

ஏரி நீர்ப்பாசனம்

 • ஏரிப்பட்டி அல்லது ஏரிநிலம் எனும் சிறப்புவகை நிலத்தை தென்னிந்தியாவில் மட்டுமே அறிகிறோம். தனிப்பட்ட மனிதர்கள் கொடையாகக் கொடுத்த இந்நிலங்களிலிருந்து பெறப்படும் வரி கிராமத்து ஏரிகளைப் பராமரிப்பதற்காகத் தனியாக ஒதுக்கி வைக்கப்படும்.
 • இந்த ஏரிகளின் மழைநீர் சேகரிக்கப்படும். இந்த ஏரிகளில் மழைநீர் சேகரிக்கப்படும். அந்நீரைக் கொண்டு வருடம் முழுவதும் வேளாண்மை செய்ய முடிந்தது.
 • வறட்சியான கால நிலையிலும் வேளாண்மை செய்யலாம். ஏரிகள் அனைத்தும் கிராம மக்களின் கூட்டுழைப்பில் கற்களாலும் செங்கற்களாலும் கட்டப்பட்டன. ஏரி நீரை அனைத்து விவசாயிகளும் பகிர்ந்துகொண்டனர்.
 • ஏரிகளைப் பராமரிப்பைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. ஏரிகளுக்கு அடுத்த நிலையில் கீணறுகள் முக்கியமானவை. வாய்க்கால்கள் வழியாக நீர் விநியோகிக்கப்பட்டது.
 • நீர் பகிர்வினை முறைப்படுத்தவும், அளவுக்கு அதிகமாகச் சேர்ந்த நீரை வெளியேற்றவும் மதகுகள் அமைக்கப்பட்டிருந்தன. கிராமத்தாரால் நியமிக்கப்பட்ட ஏரிக்குழு எனும் அமைப்பு நீர் பகிர்வை மேற்பார்வையிட்டது.
 • ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமான நீரைப் பயன்படுத்தி வேளாண்மை செய்வோர்மீது வரி விதிக்கப்பட்டது.

வருவாயும் வரிவிதிப்பும்

 • செப்புப்பட்டயங்களில் பதிவு செய்யப்பட்ட நிலமானியங்களே முக்கியமாக நில வருவாய், வரிவிதிப்பு ஆகியன குறித்தும் விரிவான தகவல்களை முன்வைக்கின்றன. வருவாயானது முதன்மையாக கிராம ஆதாரகளிலிருந்தும், வணிக மற்றும் நகரங்களைச் சேர்ந்த வணிக மற்றும் நகரங்களைச் சேர்ந்த நிறுவனங்களிடமிருந்தும் பெறப்பட்டது.
 • கிராமங்களின் மீது இருவகைப்பட்ட வரிகள் விதிக்கப்பட்டன. வேளாண் மக்கள் விளைச்சலில் ஆறில் ஒரு பங்கில் தொடங்கி பத்தில் ஒரு பங்கு வரை வரியாக அரசுக்குச் செலுத்தினர்.
 • இவ்வரியை கிராமமே வசூல் செய்து அரசின் வசூல் அதிகாரியிடம் கட்டியது. இரண்டாவது வகைப்பட்ட வரிகள் உள்ளூர் அளவில் வசூலிக்கப்பட்ட வரிகளாகும்.
 • ஆனால் இவ்வரிகள் அந்தக் கிராமத்தின் சேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன. இவ்வரிப் பணம் நீர்ப்பாசன அமைப்புகளைப் பழுதுபார்த்தல், கோயில்களுக்கு விளக்கேற்றுதல் போன்றவற்றிற்கே செலவிடப்பட்டன.
 • நிலவரியின் மூலமாகப் பெறப்படும் வருவாய் போதுமானதாக இல்லையெனில் அரசு கால்நடை வளர்ப்போர், கள் ஈறக்குவோர், திருமண வீட்டார், மட்பாண்டம் செய்வோர், தங்க வேலை செய்வோர், சலவை செய்வோர், நெய் தயாரிப்போர், இடைத்தரகர்கள் ஆகியோரிடம் வரிவசூலித்து பற்றாக்குறையைச் சரிசெய்து கொள்ளும்.
 • போர்களின்போது சூறையாடப்பட்ட பொருள்களும் படைவீரர்களால் கைப்பற்றப்பட்ட செல்வமும் அரசு வருவாயோடு சேர்க்கப்பட்டன.
 • பல்லவ அரசர்கள் போர்களை மிக முக்கியமானதாகக் கருதினார்கள். காஞ்சிபுரம் வைகுண்டப் பெருமாள் கோயிலில் நந்திவர்மன் காலத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகள், குறிப்பாகப் பல்லவப் படைகள் ஒரு கோட்டையைத் தாக்குவது போண்ற போர்க்களக் காட்சிகள், தொடர் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.
 • அக்கோட்டை உயரமான மதிற் சுவர்களை கொண்டதாயும், வீரர்கள் அதைத் தாக்குவது போலவும் அருகில் யானைகள் நிற்பது போலவும் அக்காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

பல்லவப் படைகள்

 • அரசர் நிலையான படையொன்றைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டிருந்தார். அரசு வருவாயில் பெரும்பகுதி படைகளைப் பராமரிப்பதற்கே செலவானது.
 • படைகள் காலாட்படை, குதிரைப்படை, சிறிய அளவிலான யானைப்படை ஆகியவற்றைக் கொண்டிருந்தன. இக்காலத்தில் தேர்ப்படைகள் பெரும்பாலும் பயன்பாட்டிலில்லை.
 • பெரும்பாலுமான போர்கள் குன்றுகள் நிறைந்த நிலப்பரப்புகளில் நடைபெற்றதால் தேர்ப்படைகளால் பயனுள்ள வகையில் செயல்பட இயலவில்லை.
 • குதிரைப் படைகள் வெற்றிகரமான விளைவுகளை ஏற்படுத்த முடியுமென்றாலும் குதிரைகளை இறக்குமதி செய்யவேண்டியதிருந்ததால் பெருஞ்செலவு பிடிப்பதாக அமைந்தது. பல்லவர்களிடம் கப்பல்படையும் இருந்தது.
 • அவர்கள் மாமல்லபுரத்தில் நாகப்பட்டினத்திலும் கப்பல் தளங்களைக் கட்டினட். இருந்தபோதிலும் பின்வந்த சோழர்களின் கப்பற்படை வலிமையோடு ஒப்பிட்டால் பல்லவர்களின் கப்பற்படை சிறியதேயாகும்.

வணிகம்

 • பல்லவர் காலத்தில் காஞ்சிபுரம் முக்கியமான வணிக மையமாக இருந்தது. வணிகர்கள் தங்கள் பொருள்களைச் சந்தைப்படுத்துவதற்கு அரசிடம் உரிமம் பெற வேண்டும்.
 • பொதுவாகப் பண்டமாற்று முறையே நடைமுறையில் இருந்தது. ஆனால் பின்னர் பல்லவர்கள் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை வெளியிட்டனர். வணிகர்கள் தங்களுக்கென ‘மணிக்கிராமம்’ போன்ற அமைப்புகளைக் கொண்டிருந்தனர்.
 • வெளிநாட்டு வணிகத்தில் நறுமணப் பொருள்கள், பருத்தி ஆடைகள், விலையுயர்ந்த கற்கள், மூலிகைகள் ஆகியவை ஜாவா, சுமத்ரா, கம்போடியா, இலங்கை, சீனா, மியான்மர் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. மாமல்லபுரம் ஒரு முக்கியத் துறைமுகமாக விளங்கியது.
 • வணிகர்கள் தங்களுக்கெனத் தனிக்குழுக்களை (guild) சுதேசி, நானாதேசிகர், ஐநூற்றுவர் என்ற பெயர்களில் அமைத்துக் கொண்டனர். அவர்களின் முக்கிய அமைப்பு ஐஹோல் நகரினை மையமாகக் கொண்டு செயல்பட்டது.
 • வெளிநாடுகளோடு வணிகம் மேற்கொண்ட வணிகர்களின் குழு நானாதேசி ஆகும். இவ்வமைப்பு மையப்பகுதியில் காளையின் வடிவத்தைக் கொண்ட தனிக் கொடியைக் கொண்டிருந்தது. வீரசாசனம் என்ற பிரகடனங்களை வெளியிடும் உரிமையையும் பெற்றிருந்தது. நானாதேசியின் செயல்பாடுகள் தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் விரிந்து பரந்திருந்தது.
 • இதன் தலைவர் பட்டன்சாமி, பட்டணக்கிழார், தண்டநாயகன் என்ற பெயர்களில் கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதன் உறுப்பினர்கள் ஐஹோல் பரமேஸ்வரியார் என்றழைக்கப்பட்டனர்.

கடல்வழி வாணிபம்

 • வேளாண்மை செய்வதற்கேற்ற விரிந்து பரந்த நிலப்பரப்பைக் கொண்டிருந்த கங்கைச் சமவெளியைப் போலல்லாமல் பல்லவர், சமவெளியைப் போலல்லாமல் பல்லவர், சாளுக்கியர் ஆகியோர் குறைந்த அளவிலான வேளாண்மை நிலத்தையே கொண்டிருந்ததால் நிலத்தின் மூலம் அரசு பெற்ற வருவாயும் குறைவாகவே இருந்தது.
 • நாட்டின் பொருளாதாரத்திற்கு அதிக வருவாயைத் தேடித்தரும் வகையில் வணிகப் பொருளாதாரமும் வளர்ந்திருக்கவில்லை. தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு கடல் கடந்த வணிகத்தில் பல்லவர் ஈடுபட்டிருந்தனர்.
 • அப்பகுதியில் இக்காலத்தில் காம்போஜா (கம்போடியா), சம்பா (ஆனம்), ஸ்ரீவிஜயா (தெற்கு மலேசிய தீபகற்பமும் சுமத்ராவும்) மூன்று முக்கிய அரசுகள் இருந்தன.
 • மேற்குக் கடற்கரையில் மேலை நாடுகளுடனான வணிகத் தொடர்பில் இந்திய வணிகரைக் காட்டிலும் வெளிநாடுகளைச் சேர்ந்த வணிகர்களே, குறிப்பாக அராபிய வணிகர்களே முன்னிலை வகித்தனர்.
 • அயல்நாடுகளுக்குச் சரக்குகளைச் சுமந்து சென்ற இந்திய வணிகர்கள் நாளடைவில் ஏனைய வெளிநாட்டு வணிகர்களுக்குச் சரக்குகளை வழங்குபவர்களாக மாறினர்.
 • மேலை நாடுகளுடனான செய்தித் தொடர்பு நேரடியாக இல்லாமல் அராபியாவின் வழியாக அமைந்தது. அத்தொடர்புகளும் வணிகத்தோடு மட்டுமே நின்றுவிட்டன.

சமூகம்

 • இலக்கியம், வானியல் , சட்டம் முதலான துறைகளில் கற்றறிந்த அறிஞர்களாய் இருந்ததால் பிராமணர்கள் அரசின் ஆலோசகர்களாகச் செயல்பட்டனர். ஆசிரியப் பணி மட்டுமல்லாமல் வேளாண்மை, வணிகம், போரிடுதல் ஆகிய பணிகளையும் அவர்கள் மேற்கொண்டனர்.
 • வரி கொடுப்பதிலிருந்தும், மரண தண்டனையிலிருந்தும் அவர்களுக்கு விலக்கு வழங்கப்பட்டிருந்தது. அடுத்த முக்கியத்துவம் வாய்ந்த சமூகப்பிரிவினர் நட்டையாண்ட சத்-சத்திரியர்களாவர். அனைத்துச் சத்திரியர்களும் போர் செய்பவர்களாக இல்லை
 • அவர்களில் சிலர் வணிகத்திலும் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் வேதங்களைப் படிப்பதற்கான உரிமையைப் பெற்றிருந்தார்கள். அவ்வுரிமை சமூகத்தின் அடித்தளத்திலிருந்த மக்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது.
 • வணிகர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வீரர்களைப் பராமரித்தனர். வணிகக் குழுக்களையும் உருவாக்கிக் கொண்டனர். சமூகத்தின் கீழ்மட்டத்தில் இருந்தவர்கள் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, கைவினைப் பொருள் உற்பத்தி போன்ற தொழில்களை மேற்கொண்டனர்.
 • தூய்மைப் பணி, மீன்பிடித்தொழில் , சலவைத் தொழில் , மூங்கில் பொருள்கள் செய்தல், தோல் பொருள் செய்தல் ஆகிய தொழில்களில் ஈடுபட்ட மக்கள் வர்ண அமைப்புக்கு வெளியே நிறுத்தப்பட்டனர்.
 • பல்லவர் காலத்தில் ஆரியமயமாதலும் வடஇந்திய கருத்துப் போக்குகளின் செல்வாக்கும் தென்னிந்தியாவில் மிகுந்தது என்று பெரும்பாலான அறிஞர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.
 • நிலக்கொடை வழங்கியபோது அரசர்கள் வெளியிட்ட ஆணைகளே அதற்குச் சான்றாகும். சாதியமைப்பு வலுவாக நிறுவப்பட்டது. சமஸ்கிருதம் பெரும் முக்கியத்துவம் பெற்றது.
 • காஞ்சிபுரம் முக்கியம் வாய்ந்த கல்வி மையமாயிற்று. வேத மதங்களைப் பின்பற்றுவோர் சிவனை வழிபட்டனர்.
 • மகேந்திரவர்மனே முதன்முதலாக தனது ஆட்சிக் காலத்தின் இடைப்பகுதியில் சமண மதத்திலிருந்து விலகி சைவத்தைத் தழுவினார். சமணத்தின் மீது சகிப்புத்தன்மை அற்றவராய் அவர் சில சமண மடாலயங்களை அழித்தார்.
 • பௌத்தமும் சமணமும் தங்க செல்வாக்கை இழந்தன. யுவான் சுவாங் காஞ்சிபுரத்தில் நூறு பௌத்த மடாலயங்களையும் மகாயான பௌத்தத்தைச் சேர்ந்த 10,000 குருமார்களையும் தான் கண்டதாகப் பதிவு செய்துள்ளார்.
 • மதிப்புமிக்க கவிஞர்களாயிருந்த அடியார்களான நாயன்மார்களும் ஆழ்வார்களும் இக்காலத்தில் வாழ்ந்தனர்.

பிராமணியத்தின் வளர்ந்து வந்த செல்வாக்கு

 • தென்னிந்தியப் பகுதிகளில் ஆரியப் பண்பாடு செல்வாக்குப் பெற்றுவிட்டதைத் தெளிவாகக் காட்டும் அடையாளம் பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒப்புயர்வற்ற இடமாகும்.
 • அளவில் அதிகமான நிலங்களைக் கொடையாகப் பெற்றதால் அவர்கள் செல்வச் செழிப்படைந்தனர். பல்லவ நாட்டில் கல்வி நிலையங்களின் தோற்றமும் ஆரியமயமாகிவிட்டதின் ஓர் அடையாளமாகும்.
 • இக்காலகட்டத்தின் தொடக்கத்தில் கல்வி பௌத்தர்கள் மற்றும் சமணர்களின் கட்டுப்பாட்டின் கீழிருந்தது. ஆனால் படிப்படியாக பிராமணர்கள் அவர்களைப் புறந்தள்ளி விட்டு அவ்விடத்தை கைப்பற்றிக் கொண்டனர். சமஸ்கிருத, பிராகிருத மொழிகளில் எழுதப்பட்ட மத நூல்களைக் கொண்டு வந்த சமணர்கள் நாளடைவில் தமிழைப் பயன்படுத்தத் தொடங்கினர்.
 • சமணமதம் பெரிய அளவில் பிரபலமான மதமாக இருந்தது. ஆனால் பின்னர் வந்த நூற்றாண்டுகளில் சைவ, வைணவ மதங்களின் போட்டியினால் சமண மதத்தை ஆதரிப்போரின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்தது.
 • இதோடு மகேந்திரவர்மனும் சமண மதத்தின் மீது கொண்டிருந்த பற்றை இழந்து சைவ மதத்தைப் பின்பற்றத்தொடங்கினார். அதனால் சமணர்கள் அரச ஆதரவை இழந்தனர்.
 • காஞ்சியிலும் மதுரையிலும் சமணர்கள் சில கல்வி நிலையங்களையும் கர்நாடகாவிலுள்ள சரவணபெலகோலாவில் உள்ளதைப் போன்று சமணமத மையங்களையும் நிறுவினர்.
 • ஆனால் சமணத் துறவிகளில் பெரும்பாலோர் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு காடுகளிலும் குன்றுகளிலும் உள்ள குகைகளில் வாழவே விருப்பம் கொண்டனர்.

மடங்களும் மடாலயங்களும்

 • காஞ்சிப் பகுதியிலும் கிருஷ்ணா கோதாவரி நதிகளுக்கிடைப்பட்ட பகுதிகளிலும் பௌத்தத் தூறவி மடாலயங்கள் அமைந்திருந்தன. இவையே இக்காலகட்டத்தில் வேத வைதீகப் பிரிவினருக்கும், அவைதிக பிரிவுகளுக்குமிடையே தீவிர மோதல்கள் நடந்து கொண்டிருந்ததால் பௌத்த மையங்கள் பௌத்த மதத்தைக் கற்பதில் அக்கரைக்காட்டின.
 • வேதவதங்களுக்கு கிடைத்த அரச ஆதரவு, பௌத்த மதத்திற்கு இல்லாத நிலை, வேத மதங்களின் வளர்ச்சிக்கு உத்வேகம் கொடுத்தது.
 • நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு இணையான புகழைப் பெற்றிருந்த காஞ்சி பல்கலைக்கழகத்தைத் தவிர வேறு சில சமஸ்கிருதக் கல்லூரிகளும் செயல்பட்டு வந்தன.
 • சமஸ்கிருதம் அங்கீகரிக்கப்பட்ட ஊடக மொழியாகவும், அரசசபையின் அலுவலக மொழியாகவும் இருந்ததால் இலக்கிய வட்டாரங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ‘எட்டாம் நூற்றாண்டில் மடங்கள் பிரபலமாயின. மடங்கள் ஓய்வில்லங்களாவும், உணவுச் சாலைகளாகவும், கல்வி கற்பதற்கான இடமாகவும் ஒரே நேரத்தில் செயல்பட்டன. இவ்வியல்பு இம்மடங்களோடு தொடர்புடைய பிரிவினருக்கு மறைமுகமாக விளம்பரத்தைத் தேடித்தருவதாயும் அமைந்தது.

சமஸ்கிருத மொழி பிரபலமாதல்

 • இக்காலத்தில் சமஸ்கிருத மொழிக்குப் பெரும் அரச ஆதரவு இருந்தது. முதலாம் மகேந்திரவர்மன் மத்தவிலாச பிரகசனம் என்ற நூலை சமஸ்கிருதத்தில் எழுதினார்.
 • தென்னிந்தியாவில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வியக்கத்தக்க இரு நூல்கள் சம்ஸ்கிருத இலக்கியத்திற்கான தர அளவுகளை உருவாக்கின. அவை பாரவியின் கீர்த்தர்ஜூன்யம், தண்டியின் தசகுமாரசரிதம் ஆகிய நூல்களாகும்,
 • மிகச் சிறந்த அணி இலக்கணமாகிய ‘காவிய தர்சா’ என்னும் நூலை இயற்றிய தண்டி பல்லவ அரசவையை சில ஆண்டுகள் அலங்கரித்ததாகத் தெரிகிறது.

பல்லவரின் குடைவரைக் கோயில்கள்

 • பல்லவர் பகுதிகளில் குடைவரைக் கோயில்களை அறிமுகம் செய்த பெருமை முதலாம் மகேந்திரவர்மனைச் சேரும். பிரம்மா, ஈஸ்வரா, விஷ்ணு ஆகியோருக்கு, தான் கட்டிய கோயில்கள், கோயில் கட்டுவதற்குப் பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் செங்கல், மரம், உலோகம் , சாந்து ஆகியன கொண்டு கட்டப்படவில்லை என முதலாம் மகேந்திரவர்மன் தனது மண்டகப்பட்டுக் கல்வெட்டில் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.
 • மகேந்திரவர்மனின் குடைவரைக் கோயில்கள் வழக்கமாக மண்டப பாணியில் தூண்களைக் கொண்ட ஒரு மண்டபத்தைக் கொண்டிருக்கும்; அல்லது முதலில் ஒரு மண்டபத்தையும் அதற்குப் பின்புறமோ, பக்கவாட்டிலோ ஒரு கருவறையைக் கொண்டிருக்கும்.

 1. எல்லோரா – அஜந்தா – மாமல்லபுரம்
 • மகாராஷ்டிர மாநிலத்தின் ஔரங்காபாத் மாவட்டத்தில் எல்லோரா, அஜந்தா என்னுமிடங்களில் திரளாகக் குகைகளும் கோயில்களும் அமைந்துள்ளன. எல்லோரா குகைக் கோயில்கள் அவற்றின் சிற்பங்களுக்காகப் பெயர்பெற்றவை.
 • அஜந்தா குகைக் கோயில்கள் அவற்றின் ஓவியங்களுக்காகப் புகழ் பெற்றவை. இக்கோயில்களின் காலம் சுமார் பொ.ஆ. 500 -950 ஆகும். ஆனால், குகைக்கோயில்களை உருவாக்கும் நடவடிக்கை இதற்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.
 • முதல் குகைக்கோயில் ஆசிவகர்ளுக்காக உருவாக்கப்பட்டது. சில கோயில்கள் முற்றுப்பெறாதவையாகும்.

எல்லோரா

 • எல்லோராவிலுள்ள குடைவரைக் கோயில்களில் 34 குகைகள் சரணத்ரி மலையில் அமைந்துள்ளன. கோணவில், கட்டுமானத் தொழில்நுட்பம் , உலோகவியல் ஆகிய துறைகளைப் பற்றிய அறிவு இந்தியக் கட்டடக்கலையாளர்களுக்கு இல்லாமல் இருந்திருந்தால் இவை போன்ற நேர்த்தியான பெருங்கட்டடங்களை உருவாக்கியிருக்க முடியாது.
 • இக்குகைத் தொகுப்புகளை உருவாக்கியோர் சாளுக்கியரும் ராஷ்டிரகூடரும் ஆவர். இவ்வாறான புதிய பாணியில் கோயில்களைக் கட்டுவதை முதலில் மேற்கொண்டவர்கள் அவைதீக மதத்தவர்களே. பின்னர்தான் வைதீக மரபைச் சார்ந்தவர்களும் தங்கள் மதம் சார்ந்த சித்தாத்தங்களைப் பரப்புவதற்கு இந்த ஊடகத்தைக் கைக்கொண்டனர்.
 • இவ்வாறு ஆசீவகமும் சமணமும் பௌத்தமும் பிராமணீயமும் இக்கோயில்களை எழுப்பின. தொடக்ககாலக் கோயில்கள் எளிமையாகவும் அளவாகவும் கலை தொடர்பான உள்ளடக்கத்தைக் கொண்டிராமலும் இருந்தன.
 • எல்லோராவில் ஐந்து குகைகளில் சுவரோவியங்கள் காணப்படுகின்றன. ஆனால் கைலாசநாதர் கோயிலில் உள்ளவை மட்டும் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளன.
 • சமணர் கோயில்களில் உள்ள சில சுவரோவியங்களும் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளன. விலங்குகள், பறவைகள், மரங்கள், பூக்கள் ஆகியவை நேர்த்தியாக எழிலோடு தீட்டப்பட்டுள்ளதோடு ஆசை, அன்பு, பரிவு ஆகிய மனித இயல்புகளின் வெளிப்பாடும் தொழில் வல்லமையுடன் தீட்டப்பட்டுள்ளன.
 • எல்லோரா குகைகளை 1983இல் உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

அவைதீக மதக் கோயில்கள் I

பௌத்தக் குகைகள்

 • எல்லோரோவில் மொத்தம் 12 பௌத்தக் குகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்துவம் கொண்ட கட்டடக்கலைப்பாணியைக் கொண்டுள்ளது. அவற்றில் சில அளவில் சிறியன. மற்றவை இரண்டு அல்லது மூன்று அடுக்குகளைக் கொண்டவை.
 • பௌத்தத் தூறவிகள் தங்கியிருந்து சீடர்களுக்கு மத நூல்களில் பயிற்சி வழங்கும் மையமாகச் செயல்படும் விதத்தில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. மத்தியிலுள்ள பெரிய அறையும் பக்கவாட்டில் அமைந்துள்ள சிறிய அறைகளும் தூறவைகள் கல்வி வழங்குவதற்காகவும் போதனைகள் செய்வதற்கும் பயன்பட்டுள்ளன.
 • ஆறாவது குகையில் ஒரு மேசையின் மீதுள்ள கையெழுத்துப் பிரதியை ஒரு மனிதன் வாசிப்பதைப் போன்று செதுக்கப்பட்டுள்ள சிற்பம் இதை உறுதி செய்கின்றது. சுவர்களில் உள்ள சதுர, செவ்வகக் கட்டங்களில் புத்தரின் வாழ்க்கையில் நடைபெற்ற பல நிகழ்வுகள் காட்சிகளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.
 • இக்குகைகளில் இடம்பெற்றுள்ள சிற்பங்களைக் கொண்டு மூன்று வகைப்பட்ட தனிப் பண்புக்கூறுகளை அடையாளம் காணலாம். மிக முக்கியமானதும் மையமானதும் புத்தரின் மூன்று வகைத் தோற்றங்களே;
 1. தியான புத்தர் (தியான முத்ரா)
 2. போதனை செய்யும் புத்தர் (வியாக்கியான முத்ரா)
 3. வலது கை ஆள்காட்டி விரலால் பூமியைத் தொடும் புத்தர் (பூமி ஸ்பர்ஸ முத்ரா).

பெண் கடவுள்கள்

 • பௌத்த குகைகளில் தாரா, கதிரவாணிதாரா, சுந்தா, வஜ்ரத்தீஸ்வரி, மகாமயூரி, சுஜாதா, பன்தாரா, பிரிகுட்டி ஆகிய பெண் தெய்வங்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
 • குகை எண் 12இல் பெரிய உருவம் கொண்ட பெண்மணி, இடையில் ஒட்டியாணத்துடன் , நாகப்பாம்பினால் ஆன தலைப்பாகையுடன் காட்சியளிக்கும் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. அதே குகையில் காதிரிவாணி-தாரா என்னும் பெண் தெய்வம் கையில் ஒரு நாகப்பாம்பைப் பிடித்தபடி நிற்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது.

அவைதீக மதக் கோயில்கள் II

சமணக் குகைகள்

எல்லோரோவில் சில சமணக் குகைகளும் காணப்படுகின்றன. இவை மற்றவற்றிலிருந்து வேறுபட்டு தனித்தன்மையுடன் காணப்படுகின்றன. ஆனால் அவை முற்றுப்பெறாத நிலையில் உள்ளன. பணியாட்கள் சூழ யக்ச-மாதாங்கா, மகாவீரர், பார்சவநாதர், கோமதீஸ்வரர் ஆகியோரின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

வேதமதக் குகைகள்

 • இங்குள்ள குகைகளில் காலத்தால் முந்தியவை ஓரளவு சிறியதாகவும் எளிமயாகவும் உள்ளன. கைலாசநாதர் குகையைத் தவிர மற்றவை அனைத்தும் சதுர வடிவம் கொண்டவை.
 • கைசலாசநாதர் குகை (16) மட்டும் மிகப் பெரிய ஒற்றைக் கல்லிலான வடிவமாகும். இது உறுதியான ஒரே பாறையிலிருந்து செதுக்கப்பட்டதாகும். இக்கோயில் இரண்டு அடுக்குகளைக் கொண்டது.
 • இது சிவபெருமானின் இருப்பிடமான கைலாயத்தைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. அவற்றின் மேலுள்ளது கைலாசநாதர் கோயிலாகும்.
 • கீழ் அடுக்கில் யானை வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. பார்ப்பதற்கு அக்கோவிலை இந்த யானைகள் தாங்கியிருப்பதைப் பார்ப்பதற்கு அக்கோவிலை இந்த யானைகள் தாங்கியிருப்பதைப் போல் உள்ளது.
 • கோயிலின் வெளிப்பகுதி மிக நன்றாகச் செதுக்கப்பட்ட சாளரங்களையும் இந்துப் புராணங்களில் குறிப்பிட்டுள்ளன தெய்வங்களின் வடிவங்களையும் காதல் மோகத்தை வெளிப்படுத்துகின்ற ஆண் பெண் மிதுன வடிவங்களையும் கொண்டுள்ளது.
 • கோயில் நுழைவாயிலின் இடப்பக்கம் இடம்பெற்றுள்ள கடவுள் வடிவங்கள் பெரும்பாலும் சைவக் கடவுள்களாகவும் வலப்பக்கம் உள்ளவை வைணவக் கடவுள்களாகவும் உள்ளன.
 • முன்பகுதியிலுள்ள முற்றம் மிகப்பெரிய கொடிக்கம்பங்களையும் நந்தி மண்டபமொன்றையும் கொண்டுள்ளது. சிவன் – பார்வதி திருமண விழாக் காட்சி, இராவணன் கைலாய மலையைத் தூக்குவதற்கு முற்படுதல், மகிசாசுரனை துர்காதேவை வதம் செய்தல் ஆகியவை அழகிய சிற்பங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
 • தெய்வங்களின் கைகளிலுள்ள ஆயுதங்கள், இசைக்கருவிகள் ஆகியவை கோயில் சுவர்களில் சதுர செவ்வகக் கட்டங்களில் தொடர்சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.
 • பெண் நீர்த் தெய்வமான கங்கை ஒரு முதலையின் மீது அமர்ந்திருப்பதும் யமுனை ஆமையொன்றின் மீது அமர்ந்திருக்கும் காட்சியும் கருத்தைக் கவரும்வண்ணம் செதுக்கப்பட்டுள்ளது.

அஜந்தா

 • மகாராஷ்டிரா மாநிலம் ஔரங்காபாத் நகரத்திற்கு வடக்கே 100 கிலோமீட்டர் தொலைவில் அஜந்தா குகைகள் அமைந்துள்ளன. எரிமலைப் பாறைகளிலிருந்து மொத்தம் 30 குகைகள் குடைந்தெடுக்கப்பட்டுள்ளன.
 • இவை சுவரோவியங்களுக்குப் பெயர்பெற்றனவாக இருந்தாலும் இங்குச் சிற்பங்களும் உள்ளன. ஹீனயான பௌத்த மதப் பிரிவினைச் சேர்ந்தவர்களே முதன்முதலில் அஜந்தா குகைகளை அமைக்கத் துவங்கினர்.
 • பொ.ஆ.மு. 200 பொ.ஆ. 200 வரையில் தக்காண பீடபூமிப் பகுதிகளை ஆண்ட அரசர்கள் இம்முயற்சிகளுக்கு ஆதரவளித்தனர். அரசர்களில் துவங்கி வணிகர்கள் வரை ஆதரவு வழங்கியோரைப் பற்றிக் கல்வெட்டுகள் பேசுகின்றன.
 • முதற் கட்டக் குகைகள் பொ.ஆ.மு. 200 –பொ.ஆ. 200 காலகட்டத்தைச் சேர்ந்தவையாகும். இரண்டாவது கட்டக் குகைகள் சுமார் பொ.ஆ. 200 – பொ.ஆ. 400 காலப்பகுதியைச் சேர்ந்தனவாகும்.

ஓவியம்

 • அஜந்தா குகைகள் சிறப்பு வாய்ந்த சுவரோவியங்களின் கருவூலமாகும். முதல் கட்ட ஓவியங்கள் பெரும்பாலானவை குகை எண் ஒன்பதிலும் பத்திலும் காணப்படுகின்றன. இவை சாதவாகனர் காலத்தைச் சேர்ந்தனவாகும்.
 • அஜந்தா குகையோவியங்களைத் தீட்டியவர்கள் அறிவுநுட்பத்துடன் திட்டமிட்ட தொழில்நுட்பங்களைப் பின்பற்றியுள்ளனர். முதலில் பாறைச் சுவரின் மீது தாவரங்களின் நார், நெல் உமி, மணல் மற்றும் கல்பொடி கலந்து செய்த மென்சாந்தைப் பூசினார்கள்.
 • இதன் மீது சுண்ணாம்பு ஒரு மெல்லியப் பூச்சாகப் பூசப்பட்டுள்ளது. இப்பூச்சு வண்ணங்களை உள்வாங்கும் தன்மை உடையது. வண்ணங்களைப் பூசுவதற்காக இப்பரப்பின்மீது துணி விரித்து ஒட்டப்பட்டுள்ளதும் அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது.
 • வண்ணங்கள் இயற்கைப் பொருள்களிலிருந்தும் தாதுக்களிலிருந்தும் எடுக்கப்பட்டன. கறுப்பு, சிவப்பு, வெள்ளை, மஞ்சள் , நீலம், பச்சை ஆகியவையே முக்கிய வண்ணங்கள்.
 • ஓவியங்களில் அழகியல் கூறுகள், மாலைகள், காது வளையங்கள், தலைப்பாகைகள், கழுத்தணிகள், மனிதக் கைகளின் மிகச் சரியான அசைவுகள் ஆகியன வெளிப்படுகின்றன.
 • கதைகளைச் சொல்லும் சுவரோவியங்கள் கருத்தைக் கவர்வதாயும் செய்திகளைக் கூறுவதாயும் அமைந்துள்ளன. ஜாதகக் கதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில காட்சிகள் புத்தரின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சில முக்கியப் பகுதிகள் ஆகியனவே ஓவியங்களின் மையக் கருவாக உள்ளன.
 • வானுலகவாசிகளான கின்னரர்கள் வித்யாதாரர்கள், கந்தர்வர்கள் ஆகியோர் சிற்பங்களிலும் ஓவியங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். பிற்காலத்தைச் சேர்ந்த ஓவியங்களில் போதிசத்துவர் அளவில் பெரிதான புடைப்போவியமாக காண்பிக்கப்பட்டுள்ளார்.
 • பல்வகைப்பட்ட மனித உணர்வுகள் ஓவியங்களாக வடிக்கப்பட்டிருந்தாலும் பரிவு, இரக்கம், அமைதி ஆகிய உணர்வுகளே அதிகம் இடம்பெற்றுள்ளன.
 • ஒளியும் நிழலும் அறிவுக் கூர்மையுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு வண்ணங்களில் மனித உருவங்கள் வரையப்பட்டுள்ளமைக்கு வெவ்வேறு இனக்குழுக்களைச் சார்ந்த மக்களைக் குறிப்பதாகப் பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது.

கட்டடக் கலையும் சிற்பமும்

 • கட்டடக்கலை நோக்கில் அஜந்தா குகைகளை இரு குழுக்களாகப் பார்க்கலாம். ஒன்று சைத்தியங்கள்; மற்றொன்று விகாரங்கள், சைத்தியா பல வளைவுகள் ஒருங்கிணையும் முகடுகளையும் நீண்ட அறைகளையும் கொண்டுள்ளது.
 • அறையின் ஒரு கோடியில் புத்தருடைய சிலை மரபார்ந்த பாணியில் உள்ளது. புத்தருடைய சிற்பங்கள் அன்பும், ஆதரவின் ஒட்டுமொத்த உருவாக உள்ளன.
 • பெரிய தோற்றமும் அதிக எடையும் சிற்பங்களின் பொது இயல்பாக உள்ளது. குழந்தைகளோடு காணப்படும் யக்சிகள் , ஹரிதி ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.
 • போதிசத்துவர் தனியாகச் செதுக்கப்பட்டுள்ளதும் மற்றொரு சிறப்பம்சமாகும். போதிசத்துவர் அவலோகிதேஸ்வரர் ஓவியங்களிலும் சிற்பங்களிலும் சித்தரிக்கப்பட்டுள்ளார்.

மாமல்லபுரம்

 • பல்லவர்களின் அடையாளமாகக் கருதப்படும் மாமல்லபுரம் (மகாபலிபுரம்) கடற்கரைக் கோயில் ராஜசிம்மனின் (700 – 728) ஆட்சிக் காலத்தில் எழுப்பியதாகும். இக்கோயில் மூன்று கருவறைகளைக் கொண்டுள்ளது. அவற்றில் முக்கியமானவை சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் படைத்தளிக்கப்பட்டுள்ளன.
 • இக்கோயிலின் வெளிப்புறச் சுவர் விஷ்ணுவிற்குப் படைத்தளிக்கப்பட்டுள்ளது. எல்லைச் சுவற்றின் உட்பக்கம் விரிவான செதுக்கு வேலைப்பாடுகளையும் சிற்பங்களையும் கொண்டுள்ளது. தென்னிந்தியாவில் கட்டுமானக் கோயில்களில் இது முதன்மையானதாகும்.
 • இப்பகுதியிலுள்ள ஏனைய கோயில் கட்டடங்களைப் போலின்றி இக்கடற்கரைக் கோயில் பாறையில் செதுக்கப்பட்ட ஐந்து அடுக்குகளைக் கொண்ட கோவிலாகும். ஒரே கல்லில் செதுக்கப்பட்ட விமானங்கள் மாமல்லபுர பல்லவர் கோயில்களின் சிறப்புப் பண்பாகும்.

 • இங்குள்ள ஒற்றைக்கல் தேர்கள் பஞ்சபாண்டவர் ரதம் என அறியப்படுகின்றன. அர்ச்சுன ரதத்தில் கலை நுணுக்கத்தோடு செதுக்கப்பட்ட சிவன், விஷ்ணு, மிதுனா, துவாரபாலக சிலைகள் உள்ளன. இவ்வைந்து ரதங்களில் மிக நேர்த்தியானது தர்மராஜ ரதமாகும்.
 • இது சதுர வடிவிலான அடித்தளத்தையும் மூன்றடுக்கு விமானத்தையும் கொண்டுள்ளது. பீம ரதம் செவ்வக வசிவ அடித்தளத்தையும் அழகான ஹரிஹரர், பிரம்மா, விஷ்ணு, ஸ்கந்தர், சிவன், அர்த்தநாரிஸ்வரர் , கங்காதரர் ஆகியோரின் சிற்பங்களையும் கொண்டுள்ளது.
 • மாமல்லபுரத்தில் செதுக்கப்பட்டுள்ள கலை வெளிப்பாட்டில் மிக முக்கியமானது கங்கை நதி ஆகாயத்திலிருந்தும் இறங்கிவரும் ஆகாய கங்கை காட்சியாகும். (இது பாகீரதன் தவம், அர்ஜூனன் தவம் என்றும் அறியப்படுகிறது.)
 • புராண உருவங்களை பிரபலமான உள்ளூர் கதைகளோடு இணைத்து சிற்பங்களாகக் காட்சிப்படுத்துவது மனித மற்றும் விலங்குகளின் வாழ்க்கைக்கூறுகளை சீராகக்கலக்கும் கலைஞனின் திறமையைப் பறைசாற்றுகின்றன.
 • கிருஷ்ண மண்டபச் சுவர்களில் மிக அழகாகவும் கலை நுணுக்கத்தோடும் செதுக்கப்பட்டுள்ள பசுக்கள், பசுக் கூட்டங்கள் போன்ற கிராமத்து காட்சிகள் ரசிப்பதற்கான மற்றுமொரு கலை அதிசயமாகும்.

முடிவுரை

பல்லவர் காலத்தில் குடைவரைக் கோயில்கள் என்பன இயல்பான ஒன்றாகும். தக்காணப் பகுதியில் ஐஹோல், வாதாபி ஆகிய இடங்களிலும் காஞ்சிபுரம் மாமல்லபுரம் ஆகியவற்றிலும் உள்ள கட்டுமானக் கோயில்களும் தனித்து நிற்கும் கோயில்களும் இக்காலத்தில் நிகழ்த்தப்பட்ட கட்டடக்கலை மேன்மைகளுக்குச் சான்றுகளாகும்.

தக்காண பாணியிலான சிற்பங்கள், குப்தக் கலையோடு கொண்டிருந்த ஒப்புமை இதில் காணப்படுகிறது. பல்லவச் சிற்பங்கள் பௌத்த மரபுகளுக்குப் பெரிதும் கடமைப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் தக்காணம் மற்றும் தமிழ்நாட்டு கட்டடக்கலையும் சிற்பக்கலையும் வடஇந்திய மரபிலிருந்து பிறந்தவை அல்ல. அவை சுயமானவை. பண்டைய மரபுகளிலிருந்து தங்களது அடிப்படை வடிவத்தைப் பெற்றவை. மற்றவற்றிலிருந்து வேறுபட்டவை, தனித்து அடையாளம் காணக் கூடியவை. தனது மக்களின் அறிவுக் கூர்மையை தெளிவாகப் பிரதிலிப்பவை.

 1. பக்தி இயக்கமும் இலக்கியமும்

தமிழ் பக்தி இயக்கம்

 • தென்னிந்தியாவில் தோன்றிய பிராந்திய அரசியல் , சித்தாந்தத்தை அடித்தளமாகக் கொண்ட அரசுகள் நிறுவப்படுவதை அவசியமாக்கியது.
 • இத்தருணத்தில் மதம் மட்டுமே மக்களை ஒன்று கூட்டும் புள்ளியாக இருந்திருக்கிறது. தமிழகத்தின் வடபகுதியில் காஞ்சிப் பல்லவரும் தென்பகுதியில் மதுரைப் பாண்டியரும் அதிகரமும் பொருளாதார வளமும் பெற்றிருந்த வணிக வர்க்கத்தால் தலைமையேற்கப்பட்ட மதம் சார்ந்த பக்தி இயக்கத்திற்கு ஆதரவளித்தனர்.
 • உள்ளூர் கோயில் இவ்வியக்கத்தின் மையமாக மாறியது. பக்தி மக்களின் மனங்களை உணர்வுபூர்வமாகத் தொட்டு அவர்களை அணி திரட்டும் கருவியானது.
 • பக்தி இயக்கம் ஒரு மதம் சார்ந்த இயக்கமாக இடைக்காலத் தமிழகம் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்து வைத்தது. தமிழ் பக்தி இயக்கத்தின் வலுவான அலை பொ.ஆ. ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை நாடு முழுவதும் வீசியது.
 • நாயன்மார், ஆழ்வார் ஆகியோர் இயற்றிய பாடல்களே தமிழ் பக்தி இயக்கத்தின் அடிப்படையாகும். இச்சைவ வைணவ அடியார்கள் தங்கள் பாடல்களோடு இசையைக் கலந்து அதன் பயன்பாட்டை எளிமைப்படுத்தினர்.
 • அவர்கள் உள்ளூர், பிராந்தியம் சார்ந்த பல பண்பாட்டு இயல்புகளை மைய நீரோட்டத்திற்குக் கொண்டுவந்தனர். பன்னிரு ஆழ்வார்களும் அறுபத்து மூன்று நாயன்மார்களும் தமிழ்ச் சமூகத்தின் கைவினைஞர்கள், வேளாண்குடியினர் போன்ற பல பிரிவுகளிலிருந்து வந்தவராவர்.
 • இவர்களுள் ஆண்டாள் போன்ற பெண் அடியாரும் அடங்குவர். ஆண்டாள் பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். கவிஞர் காரைக்கால் அம்மையார், பாண்டிய அரசி மங்கையற்கரசியார் ஆகியோர் பெண் நாயன்மார்கள் ஆவர்.
 • பக்தி இயக்க அடியார்களால் மறுவடிவம் செய்யப்பட்ட சைவமும் வைணவமும் பௌத்த சமண மதங்களுக்கு வலுவான சவாலாக அமைந்தன. சற்றே கூர்ந்து நோக்கினால் பக்தி இயக்கத்தின் தாக்கத்தை நாம் இன்றும் தமிழகத்தில் காணமுடியும்.

சான்றுகள்

தேவாரம், நாலாயிரத்திவ்வியபிரபந்தம், திருத்தொண்டர்தொகை, மாணிக்கவாசகரின் திருவாசகம், பெரியபுராணம் முதலான பக்தி இயக்கப் பாடல்களே பக்தி இயக்க வரலாற்றிற்கான முக்கியச் சான்றுகளாகும். கோயில்களும் கோயில் கல்வெட்டுகளும் சுற்றுப்பிரகாரங்களிலுள்ள சிறிய சிற்பங்கள், ஓவியங்கள் ஆகியவையும் சான்றுகளாகப் பயன்படுகின்றன.

பக்தி எனும் கருத்தியல்

 • பக்தி என்னும் சொல் பல துணைப் பொருளைக் கொண்டது. சேவை, நம்பிக்கை, வழிபாடு மதப்பற்று போன்ற பொருள்களை அது தருகின்றது. அது மனித உணர்வுகளால், அழகியலால், மாறுபடும் எண்ணங்களால் வடிவமைக்கப்படும் சட்டமாகும்.
 • பக்திப் பாடல்கள் மூன்று முக்கிய கருப்பொருள்களைக் கொண்டுள்ளன. கடவுளிடம் பேரன்பு கொள்வதே முதலாவதும் முக்கியமானதுமாகும். தெய்வீக அமைதியையும் முக்தியையும் அடையும் வழிகள் தங்களுக்கு மட்டுமே என்கிற வைதீக பிராமணிய மனப்பாங்கை எதிர்த்தல் இரண்டாவதாகும். மூன்றாவது நேரடியாக பௌத்தத்தையும் சமணத்தையும் மதப்பற்று இல்லாதவர்கள் என வன்மையாகக் கண்டிப்பதாகும்.

பக்தியும் கலைகளும்

 • கிராமிய நடனங்களின் தோற்றம் பெற்று கோயில் நடனங்களின் ஆடற்கலை ஒழுங்குகள் மாறி மதம் சார்ந்த விஷயங்களைக் கருவாகக் கொண்டு இறுதிநிலையை எட்டியது.
 • பல்லவர்காலம் கலைஞர்களைக் கொண்ட குழுக்கள் செல்வச் செழிப்பு மிக்க கோயில்களால் பராமரிக்கப்பட்டன. புராணங்கள் இதிகாசங்கள் ஆகியவற்றில் இடம் பெற்ற முக்கியக் காட்சிகள் கோயில் சுவர்களில் சிற்பங்களாக செதுக்கப்பட்டன. கல்லிலும் செம்பிலும் சிலைகளாக வடிக்கப்பட்டன..
 • இதனைத் தொடர்ந்து இசை, நடனம் போன்ற கவின்கலைகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் கலைஞர்கள் அரசின் ஆதரவுடன் கோயில்களோடு இணைக்கப்பட்டனர்.
 • மதப் பாடல்களும் இசையும் மதத்தொண்டர்களால் பிரபலமாயின. கோயில் விழாக்களின்போது இப்பாடல்களைப் பாடுவது இரு முறையாகவே ஆனது.
 • யாழ் அடிக்கடி பயன்படுத்தப்பட்ட இடைக் கருவியாக இருந்திருக்க வேண்டும். பொ.ஆ. 5ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யாழுக்குப் பதிலாக வீணை பயன்பாட்டிற்கு வந்தது.

ஆழ்வார்கள், நாயன்மார்கள்

ஆழ்வார்கள்

 • ஆழ்வார்கள் வைணவப் பாடல்களை இயற்றினர். ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இப்பாடல்கள் அனைத்தையும் (நான்காயிரம்) நாலாயிர திவ்வியபிரபந்தமாக நாதமுனி தொகுத்தார்.
 • நாதமுனி திருவரங்கம் ரங்கநாதர்கோயிலில் அர்ச்சகராகப் பணியாற்றியவர். ஒன்பதாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபனின் ஆட்சிக் காலத்தில் திருவில்லிபுத்தூரில் வாழ்ந்தவர் பெரியாழ்வார்.
 • கண்ணணின் குழந்தைப் பருவமே அவருடைய பாடல்களின் கருவாயிருந்தது. ஆண்டாள் பாடல்கள் அவர் கண்ணனின் மீது கொண்டிருந்த காதலை வெளிப்படுத்துகின்றன.
 • நம்மாழ்வார் ஆழ்வார்களில் தலைசிறந்தவராகக் கருதப்படுகிறார். அவர் இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குருகூரைச் (ஆழ்வார்திருநகரி) சேர்ந்தவர். திருவாய்மொழி உட்பட நான்கு நூல்களை அவர் எழுதியுள்ளார்.
 • அவருடைய பாடல்கள் நான்கு வேதங்களின் சாரத்தை வடித்தெடுத்து எழுதப்பட்டதென்பது வைணவ நம்பிக்கை. பன்னிரண்டாம் நூற்றாண்டு முதலாக வைணவப் பாடல்களுக்கு விரிவான புலமையுடன் கூடிய விளக்கவுரைகள் எழுதப்பட்டன.

நாயன்மார்கள்

 • சைவக் கவிஞர்களில் முக்கியமானவர்கள் திருநாவுக்கரசர் (அப்பர்), திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆவர்.
 • பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் நம்பியாண்டார்நம்பி இவர்களின் பாடல்களைத் திருமுறைகளாகத் தொகுத்தார்.
 • தேவாரம் என்றறியப்படும் முதல் ஏழு நூல்களில் உள்ள பாடல்கள் சம்பந்தர் (1-3) அப்பர் (4 – 6) சுந்தரர் (7) ஆகியோரால் இயற்றப்பட்டனவாகும். எட்டாம் திருமுறை மாணிக்கவாசகரின் பாடல்களைக் கொண்டதாகும்.
 • சேக்கிழாரின் பெரியபுராணத்தோடு சேர்த்து பன்னிரண்டு நூல்கள் உள்ளதாலும் இவை பன்னிரு திருமுறை என்று போற்றப்படுகின்றன.
 • பெரியபுராணம் சோழர் காலத்தில் இயற்றப்பட்டதாகும். இது அறுபத்துமூன்று நாயன்மார்களின் வரலாற்றைச் சொல்லுவதோடல்லாமல் அவர்தம் வாழ்வில் நடந்த அதிசய சம்பவங்கள் குறித்தும் பெரியபுராணம் கூறுகிறது.

தாக்கம்

 • பக்தி இயக்கம் மாபெரும் சமூக மாற்றங்களை ஏற்படுத்தியது. அதன் உச்சகட்டமாக பல கோயில்கள் நிறுவப்பட்டன. அக்கோயில்கள் தமிழ் நிலப்பரப்பில் பிரதான இடத்தை வகித்தன.
 • பிற்காலச் சோழர் கோலத்தில் கோயில்கள் பெரும் சமூகப் பொருளாதார நிறுவனங்களாகின. அரசியல் தளத்தில் பக்தி இயக்கம் வடஇந்தியத் துணைக் கண்டத்திலிருந்து பிராமணர்களை அழைத்துவந்து அவர்களுக்குக் குடியேற்றங்களை ஏற்படுத்திக் கொடுக்க அரசர்களைத் தூண்டியது.
 • அரச குடும்பத்தினரும், உள்ளாட்சி அமைப்புகளும் தனிப்பட்ட நபர்களும் கால ஒழுங்கில் கோயில்களில் விழாக்கள் கொண்டாடுவதைத் தொடங்கி வைத்தனர்.
 • அவ்விழாக்களின் செலவுகளைச் சந்திக்க அவர்களே அறக்கட்டளை நிறுவினர். தமிழ்நட்டில் அரசு என்னும் அமைப்பு உருவாவதை இது துரிதப்படுத்தியது. மேலும் கோயில் போன்ற நிறுவனங்களின் மூலம் பல்வகைப்பட்ட சமூகக் குழுக்களை மதத்தின் கீழ் ஒருங்கிணைத்தது.
 • நூற்றாண்டுகளின் போக்கில் பக்தி இயக்கம் இந்தியா முழுவதும் பரவி இந்து மதத்தில் பல மாற்றங்களை விளைவித்தது.

ஆதிசங்கரர் (788 – 820)

 • பக்தி இயக்கம் சமூகத்தின் பல்வேறு பிரிவினரைத் தொண்டு, சரணடைதல், தியாகம் என்னும் குறிக்கோள்களின் மூலம் ஒன்று திரட்டி மைய நீரோட்ட அரசியலோடு ஒருங்கிணைத்தது.
 • படிப்பறிவில்லாதவரும் கூட இக்குறிக்கோள்களை எளிதில் புரிந்துகொள்வார்கள். ஏனெனில் பக்தி இலக்கியங்கள் எளிய தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் பொருட்செறிவோடு இசைபட கருத்துகளை முன்வைத்தன.
 • ஆதிசங்கரரின் வருகயோடு இக்கருத்துக்கள் குறித்த விவாதங்கள் சமஸ்கிருத மொழியில் பேசப்பட்டதால் ஒரு சிலர் மட்டுமே புரிந்துகொள்ளும் நிலை ஏற்பட்டது.

ஆதிசங்கரரின் வருகை

 • இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய அரச வம்சங்களுக்கு அரசு என்ற ஒன்றை உருவாக்க ஒரு சித்தாந்தம் தேவைப்பட்டதின் பின்னணியில் ஒரு புதிய கோட்பாடு கேரள மாநிலம் காலடியைச் சேர்ந்த சங்கரர் என்பவரால் முன்வைக்கப்பட்டது.
 • மாயை கோட்பாடு குறித்துப் பல்வேறு மதப் பிரிவுகளைச் சார்ந்தவர்களோடு விவாதம் செய்து வென்றார். அடிப்படையில் ஆதிசங்கரரின் அத்வைதக் கோட்பாடு வேதாந்தம் அல்லது உபநிடதத் தத்துவங்களில் வேரூன்றி இருந்தது.
 • பௌத்த மதத்தை வேரறுத்துவிட்டு ஸ்மார்த்த மடங்களை நிறுவ அவர் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாய் சிருங்கேரி, துவாரகை, பத்ரிநாத், பூரி ஆகிய இடங்களில் மடங்கள் உருவாயின.
 • பிராமண மடாதிபதிகள் அவற்றிற்குத் தலைமை தாங்கினர். சங்கரர் சைவ, வைணவ வழிபாடுகளைச் சம அளவில் முக்கியத்துவம் கொண்ட வேத மதத்தின் கூறுகளாகவே கருதினர்.
 • சங்கரரின் சிந்தனைப்பள்ளி, துறவற அமைப்புகளை ஏற்படுத்துதல், சமஸ்கிருத நூல்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கியது.

ஸ்ரீராமானுஜர் (1017 – 1138)

 • ஸ்ரீபெரும்புதூரில் பிறந்த ஸ்ரீராமனுஜர் காஞ்சிபுரத்தில் சங்கரரின் கோட்பாட்டை ஏற்றுக்கொண்ட யாதவபிரகாசரிடம் தத்துவப்பயிற்சி பெற்றார். தனது குருவின் கருத்துக்களை ஏற்க மறுத்த இளம் ராமானுஜர் யமுனாச்சாரியாரின் திருரங்கத் தத்துவப் பள்ளியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார்.
 • ராமானுஜரை ஒருமுறை பார்த்த யமுனாச்சாரியார் அவரை திருவரங்கத்திற்கு வரவேற்றார். ராமானுஜர் திருவரங்கத்திற்குச் சென்ற சில நாட்களில் யமுனாச்சாரியார் இயற்கை எய்தினார்.
 • இதனைத் தொடர்ந்து ராமனுஜரே திருவரங்கம் மடத்தின் தலைவராக அறிவிக்கப்பட்டார். கோவிலையும் மடத்தையும் தனது கட்டுப்பாட்டின்கீழ் கோண்டுவந்த அவர் பல பிரிவினரை ஒருங்கிணைத்தார்.
 • கோயில் சடங்குகளை மாற்றியமைத்தார். ராமானுஜர் ஓர் சிறந்த ஆசிரியர். சீர்திருத்தவாதி, திட்டமிட்டு செயல்பட்டார். அவர் ஆதிசங்கரரின் அத்வைதக் கோட்பாட்டை மறுத்தார்.
 • வைணத்தின் சமூகத்தளத்தை விரிவடையச் செய்யும் நோக்கில் பிராமணர் அல்லாதோரையும் இணைத்துக் கொண்டார். அத்வைதத்திற்கு மாற்றாக அவர் முன்வைத்த விசிஷ்டாத்வைதம் சிந்தனையாளர்களிடம் செல்வாக்குப் பெற்று தனிமரபாக வளர்ச்சி பெற்றது.
 • அவருடைய இறப்பிற்கு நூறு ஆண்டுகளுக்குப் பின் அவரை பின்பற்றுவோரிடம் கோட்பாட்டின் அடிப்படையில் முரண்பாடு ஏற்பட்டு வேதாந்த தேசிகர், மணவாள மாமுனிகள் ஆகியோரின் தலைமையில் இரு பிரிவுகள் தோன்றின.
 • ராமானுஜர் வர்ணாசிரம அமைப்புக்கு வெளியே இருந்தோரிடமும் பக்திக் கோட்பாட்டைப் பரப்புவதில் ஆர்வம் கொண்டார். கோயில் நிர்வாகிகள் சிலர் உதவியோடு அதன் மூலம் வர்ணாசிரம அமைப்புக்கு வெளியே இந்தோரையும் ஆண்டிற்கு ஒருமுறையாவது கோயில்களில் நுழைய அனுமதிக்கச் செய்தார்.
 • தங்கள் மதநம்பிக்கைகளுக்கும் இருப்புக்கும் ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக இராமானுஜர் தனது வசிப்பிடத்தை விட்டு வெளியேற நேர்ந்தது என நம்பப்படுகிறது.

முடிவுரை

இக்குறிப்பிட்ட காலகட்டத்தில் தென்னிந்தியாவில் ஏற்பட்ட வளர்ச்சி வடஇந்திய தென்னிந்திய மரபுகள் ஒன்றிணைவதற்கு உதவியதோடு ஒரு கலப்பிந்தியப் பண்பாடு உருவாவதற்கும் வழிவகுத்தது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட பக்தி இயக்கத்தின் பக்தி இயக்கத்திலிருந்தே தொடங்கின. இது துணைக் கண்டத்தின் பல பகுதிகளில் ஒத்த இயல்புடைய பெரும்பான்மையோர் ஒருங்கிணையத் தொடங்கிவிட்டதை சுட்சிக்காட்டியது. எம்.ஜி.எஸ். நாராயணன், கேசவன் வேலுதாட் ஆகியோரின் சொற்களில் பக்திக் கோட்பாட்டின் முக்கியத்துவத்தைச் சொல்வதென்றால் “பக்தியெனும் ஒருங்கிணைக்கும் சக்தி அரசர்களையும் பிராமண குருமார்களையும் சாதாரண மக்களையும் முரண்பாடில்லாத விதத்தில் ஒருங்கிணைத்து சாதிய அமைப்பைக் கொண்ட புதிதாக நிறுவப்பட்ட இந்து அரசுகளின் ஆட்சியை வலிமைப்படுத்தியது”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *