தேச கட்டமைப்பின் சவால்கள் Notes 12th Political Science Lesson 7 Notes in Tamil

12th Political Science Lesson 7 Notes in Tamil

தேச கட்டமைப்பின் சவால்கள்

சுதேச அரசுகள் ஒன்றிணைப்பு

இந்தியாவில் சுதேச அரசுகளின் தோற்றம்

 • பெரிய அளவிலான நிர்வாக மாகாணத்தில் ஒரு நிறிய அரசியல் அமைப்பே சுதேச அரசு என்பதாகும். அது பெரும் முடியாட்சியில் நேரடியாகவோ அல்லது துணைக் கூட்டமைப்பாகவோ ஆட்சி செய்வதாகும். இந்த சிறிய நிர்வாகப் பகுதியானது அரசியல், கலாச்சார, மொழி மற்றும் பூகோள அமைப்பு அடிப்படையில் அமைந்திருக்கும் கி.பி. (பொ.ஆ) 200-ல் மத்திய ஆசிய பகுதியிலிருந்து இந்தியக் துணைக் கண்டத்திற்கு புலம் பெயர்ந்து வந்த இராஜபுத்திரர்களால் சுதேச அரசுகள் தொடங்கப்பட்டது.
 • இராஜபுத்திரர்கள் என்றால் அரசர்களின் இளவரசர்கள் என்பது பொருளாகும். எனவே இந்தியாவில் சுதேச அரசுகள் முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் வருகைக்கு முன்னரே ஏற்படுத்தப்பட்டுவிட்டது.
 • இராஜபுத்திரர்கள் அல்லாமல் நவாப் மற்றும் நிஜாம்களாலும் சுதேச ஆட்சிகள் நடைபெற்றன.
 • மைசூர், திருவிதாங்கூர் மற்றும் புதுக்கோட்டை பகுதிகள் உள்ளூர் அரச வம்சங்களால் ஆட்சி செய்யப்பட்டன. இந்த அனைத்து வகை முடியாட்சி முறைகளும் பிரிட்டிஷ் இந்தியாவில் சுதேச அரசுகள் என்றழைக்கப்பட்டன. இந்த வகை அரசுகள் பிரிட்டன் ஆளுகைக்குகீழ் கட்டுப்பட்டது என்பதனை குறிக்க இந்த சுதேச அரசுகள் என்ற சொல் வேண்டுமென்றே கையாளப்பட்டது.

சுதேச அரசுகளை ஒன்றிணைப்பதற்கான முயற்சிகள்

 • முன்பே குறிப்பிட்டது போன்று துண்டுதுண்டாகக் காணப்பட்ட சுதேச அரசுகளை ஒருங்கிணைக்கும் முயற்சி சுதந்திரத்திற்கு முன்பிருந்தே குறிப்பாக காலனிய ஆதிக்கத்திற்கு முன்பே நீண்ட வரலாற்றை கொண்டிருக்கிறது.
 • பல சிறிய அரசுகளை இணைத்து பேரரசுகளாக மாற்றும் முயற்சியானது ஆறாம் நூற்றாண்டிலேயே தொடங்கியது. மகத பேரரசு காலத்தில் பிம்பிசாரர் மற்றும் அஜய்சத்ரு, மௌரியர்கள் காலத்தில் அசோகர் மற்றும் 5ஆம் நூற்றாண்டுகளுக்கு பின்னர் வந்த சந்திரகுப்தர், அவரது மகன் சமுத்திரகுப்தர் போன்றவர்களால் சிற்றரசுகள், தங்கள் பேரரசின் கீழ் செயல்படும் சுதந்திர அரசுகளாக நிர்வகிக்கப்பட்டனர்.
 • பின்னர் பேரரசர்களுக்கும், சிற்றரசர்களுக்கும் இடையே அதிகாரப் போட்டி, பொறாமை மற்றும் வெறுப்புணர்ச்சி ஆகியன நம்பிக்கையின்மையின், விளைவாக அரபு மற்றும் பாரசீக படையெடுப்புகளுக்கு வாய்ப்பளித்தன. வடஇந்திய முழுவதும் முகலாய பேரரசு தனது ஆதிக்கத்தினை நிலைபெறச் செய்துக் கொண்டது.

பிரிட்டிஷ் ஆட்சியில் சுதேச அரசுகள்

அ) குண்டு முழங்கி மரியாதை செய்யும் முறை

 • இம்முறை ஐரோப்பியர்களின் காலனியாதிக்கத்தின் போது ஆங்கிலேயர்கள், போர்த்துகீசியர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்களால் கடைபிடிக்கப்பட்டது. முதலில் தங்கள் வியாபாரத் தொடர்புப் பகுதிகளிலும் பின்பு பிறபகுதிகளிலும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டதற்கான குறியீடாக இதனை பயன்படுத்தினர்.
 • குறிப்பாக இம்மூன்று காலனிய அரசுகளில் பிரிட்டிஷ் அரசானது சில சுதந்திர அரசுகளுக்கான இறைமை உரிமையை தங்கள் மன்னராட்சி முறைக்கு உள்பட்டு வழங்கின.
 • சுதந்திரத்துக்கு முன்னர் இந்தியாவில் சுதேச அரசுகளின் எண்ணிக்கை 565 ஆக இருந்தது. இதன் அதிகாரமானது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் வழங்கப்பட்ட குண்டு முழங்கும் மரியாதை அடிப்படையில் அமைந்திருந்தன. இவை இரண்டு விதமாக காணப்பட்டன. ஒன்று குண்டு முழங்கி மரியாதை செய்யும் சுதேச அரசுகள் என்றும், மற்றொன்று குண்டு முழங்கும் உரிமை அற்ற சுதேச அரசுகள் என்று பிரிந்திருந்தன.

ஆ) குண்டு முழங்கும் மரியாதை பெற்ற அரசுகள்

 • பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தால் குண்டு முழங்கும் மரியாதை வழங்கப்பட்ட சுதேச அரசுகளின் எண்ணிக்கை சுமார் 117-லிருந்து 120-வரை இருக்கலாம். இந்த அரசுகளின் தலைவர்கள், ஆட்சியாளர்கள் அல்லது இளவரசர்கள் அம்மரியாதைக்கு உட்பட்டவர்களாக இருந்தனர். இவர்களுக்கு வழங்கப்படும் இவ்வுரிமையானது முழங்கப்படும் குண்டுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அதன் சிறப்பு நிலை அறியப்பட்டது.
 • மிக அதிக மரியாதைக்குரிய சுதேச அரசுகளுக்கு 21 குண்டுகள் எனவும் அதனிலும் குறைவான சுதேச அரசுகளுக்கு 9 குண்டுகள் எனவும் இது அமைந்திருந்தது. சில சுதேச அரசுகள் 21 குண்டுகளை முழங்கும் உரிமை பெற்று இருந்தன. அவையாவன
 • மாட்சிமை தாங்கிய மகாராஜா குவாலியர் மன்னர் சிந்தியா
 • மாட்சிமை தாங்கிய பரோடா மகாராஜா கேக்வார்
 • மாட்சிமை தாங்கிய ஜம்மு-காஷ்மீர் மகாராஜா
 • மாட்சிமை தாங்கிய மைசூர் மகாராஜா
 • மாட்சிமை தாங்கிய ஐதராபாத் மற்றும் பிரார் நிஜாம்கள்

சில சுதேச அரசுகள் 9 குண்டுகள் முழங்கும் உரிமையை பெற்றிருந்தன. அவையாவன

 • சச்சின் நவாப்
 • பாட்னா மகாராஜா
 • வாத்வான் மகாராஜா
 • லாகரு நவாப்

இ) குண்டு முழங்கும் உரிமை பெறாத சுதேச அரசுகள்

565 சுதேச அரசுகளில் 117 முதல் 120 வரை மட்டுமே குண்டு முழங்கப்படும் உரிமையை பெற்றிருந்தன.

பிற சுதேச அரசுகள் பிரிட்டிஷ் அரசுகளுக்கு கீழ் இருந்தபோதும் குண்டு முழங்கும் உரிமை வழங்கப்படவில்லை. சில சுதேச அரசுகள் எந்தவித குண்டு மரியாதையையும் பெறாமல் இருந்ததற்கான வேறு காரணங்களும் இருந்தன. அவையாவன:

 1. சில சுதேச அரசுகள் இந்த முழங்கும் முறையை ஏற்றுக்கொள்ளவில்லை.
 2. சில சுதேச அரசுகள் இம்முறையை தங்களுக்கான மரியாதைக் குறைவாகக் கருதினர்.
 3. சில சுதேச அரசுகளின் ஆட்சி மாறின. ஆனால் தங்களது அரசப் பட்டங்களையும் ஓய்வூதியத்தையும் பயன்படுத்தினர்.

இந்தியாவில் சுதேச அரசுகள்

 • விடுதலைக்கு முன்பு பல சுதேச அரசுகள் காலனிய பிரிட்டன் அரசின் ஆதரவுடன் இயங்கின. பிரிட்டிஷ் அரசின் கீழ் சுதேச அரசுகளாக இயங்கியதால் இதுவரை பெற்றிருந்த சலுகைகளை விட்டுக் கொடுக்க மனமில்லாமல் சுதேச அரசுகள் ஒருங்கிணைப்பு என்ற யோசனையை அவர்கள் ஏற்கவில்லை.
 • பல அரசர்கள் விடுதலைக்குப் பின்னர் தன்னாட்சியுடன் கூடிய சுதந்திர அரசுகளை அமைத்துக்கொள்ளும் வாய்ப்புக்காக காத்திருந்தனர். இந்த சுதேச அரசுகள் ஒருங்கிணைப்பு என்பது பிரிட்டனின் ஆட்சிக்கு முடிவு கட்டவும்.
 • சுதேச அரசுகள் மற்றும் மாகாணங்கள் கலைக்கப்படுவதுடன் பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக்கு முடிவு கட்டுவதையும் நோக்கமாக கொண்டதாகும். அரசியல், இராஜதந்திர பேச்சு வார்த்தைகள் மற்றும் வன்முறை ஆகியவற்றுக்கு இடையே சுதேச அரசுகள் ஒருங்கிணைப்பு செயல்கள் 1947-இல் நிகழ்ந்தன.
 • பிரிட்டனின் அன்றைய பிரதமர் கிளைமென்ட் அட்லி பொதுச்சபையில் மார்ச் 15, 1946 அன்று உரையாற்றும் போது இந்தியாவிற்கான விடுதலையை அங்கீகரித்தார்.
 • அப்போது விடுதலைப் போராட்டத்தையும், அதில் உயிர்த்தியாகம் செய்தோரையும் நினைவு கூர்ந்தார். மேலும் புதிய இந்தியாவில் அதன் பன்முகப் பண்பாட்டுப் பாரம்பரியத்தைக் கட்டிக்காப்பதில் ஏற்பட உள்ள சவால்களை குறிப்பிட்டு பேசினார்.
 • “இந்தியா பல இனங்கள், மதங்கள் மற்றும் மொழிகள் கொண்ட நாடு என்பதையும் அதனால் உருவாகும் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் நன்கு அறிவேன். ஆனால், இத்தகைய தடைகளை இந்தியர்களே எதிர்கொண்டு வெற்றி பெறவேண்டும். சிறுபான்மையோர் உரிமைகள் எப்போதும் நமது சிந்தனையில் இருக்க வேண்டும். அவர்கள் அச்சம் இல்லாமல் வாழும் சூழ்நிலை உருவாக்கப்படவேண்டும்” என்றார்.
 • இருந்தபோதிலும் தேச கட்டமைப்பு செயல்பாடுகளும் சுதேச அரசுகள் ஒருங்கிணைப்பும் பேச்சுவார்த்தைகளும் ஏப்ரல் 1947-இல் தொடங்கின. தேச கட்டமைப்பின் போது மதக்கலவரம், தேசப் பிரிவினை மற்றும் அகதிகள் பிரச்சனை ஆகிய பிரச்சனைகளை எதிர்கொள்ள நேர்ந்தது.
 • சர்தார் வல்லபாய் பட்டேல் துணை பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் பதவியேற்றவுடன் 565 சுதேச அரசுகளின் ஒருங்கிணைப்பு தொடங்கியது. மூன்று பிரிட்டிஷ் வைசிராய்களுடன் பணியாற்றிய வி.பி.மேனன் பட்டேலின் செயலாளராக பொறுப்பேற்று அதற்கான களப்பணிகளை மேற்கொண்டார்.
 • பட்டேலும், வி.பி.மேனனும் சுதேசி அரசர்களிடம் அரசியல் நிர்ணய சபையில் இணைய செய்தனர். அவர்களின் சுதேச அரசுகளின் சொத்துக்கள் உடமைகள் பரிமுதல் செய்யப்படாது என்று உறுதிமொழி அளிக்கப்பட்டது. பல சுதேச அரசுகள் இந்தியாவுடன் இணைய ஒப்புதல் அளித்தனர். ஜூனாகத், காஷ்மீர் மற்றும் ஐதராபாத் சுதேச அரசர்கள் தனித்திருக்க விரும்பினர்.

ஜூனாகத்

 • ஜூனாகத் நவாப் அல்லது அவரின் திவான் ஷா நவாஸ் (பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஜில்பிகார் அலி பூட்டோவின் தந்தையார்) இணைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. ஜூனாகத்தை சுற்றியுள்ள மற்ற மூன்று அரசுகள் இந்தியாவின் அங்கமாக இருந்தன.
 • நான்காவது பகுதி அரபிக்கடல் அந்த பகுதி மக்கள் பெரும்பாலோர் முஸ்லிம் அல்லாதோர். இருந்தபோதிலும் திவான் பூட்டோ பாகிஸ்தானோடு ஆகஸ்ட், 15 1947 அன்று இணைந்துவிட்டார். இதனைக் கண்டித்து பொதுமக்கள் எதிர்த்து போராட்டங்கள் நடத்தினர். ஜூனாகத் இந்தியாவுடன் இணைய வேண்டும் என்று கோரினார். திவான் தனது குடும்பத்தினருடனும் அரசு கஜானாவுடனும் பாகிஸ்தானின் அன்றைய தலைநகர் கராச்சிக்கு தப்பி சென்று விட்டார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஜூனாகத் இந்தியாவோடு இணைந்தது.

ஐதராபாத்

 • நிஜாம் தலைமையிலான ஐதராபாத் மற்றொரு சுதேச அரசாகும். முஸ்லிம்கள் அல்லாதோர் பெரும்பான்மையினராக இருந்தனர். அவர் தன்னாட்சி உரிமையை எதிர்பார்த்தார்.
 • மவுண்ட்பேட்டன் பிரபு “டொமினியன்” நிலை அளிக்க மறுத்து விட்டார். “டொமினியன்” என்றால் பிரிட்டிஷ் காமன்வெல்த் கூட்டமைப்பில் தன்னாட்சி அரசாக விளங்கும் நிலையைக் குறிப்பதாகும்.
 • உண்மையில் அப்போது காசிம் ரஷ்வி எனும் மதவாதத் தலைவரின் செல்வாக்குக்கு நிஜாம் அடிமைப்பட்டிருந்தார். ஆயுதம் தாங்கிய அமைப்பான இந்தேகத் –உல்-முசுல் மான் எனும் அமைப்பின் தலைவராக ரஷ்வி இருந்தார். இந்த அமைப்பினர் ‘ரசாக்கர்’ என அழைக்கப்பட்டனர்.
 • மேலும் 1943-இல் கம்யூனிஸ்ட் கட்சி மீதிருந்த தடையையும் நீக்கினார் நிஜாம். ராசாக்கார்களும் கம்யூனிஸ்ட்களும் இணைந்து வன்முறையில் முடிந்தது. ரயில் வண்டிகள் தாக்கப்பட்டது.
 • இதன் பின்பு, செப்டம்பர் 1948-இல் இந்திய ராணுவம் ஐதராபாத்திற்குள் நுழைந்து கலவரத்தை அடக்கியது. இந்தியாவுடன் இணைவதாக நிஜாம் அறிவித்தார். நிஜாமுக்கு ஏராளமான செல்வமும் சலுகைகளும் அளிக்கப்பட்டன.

 • தெலங்கானாவில் நில உடைமையாளருக்கு எதிராக கம்யூனிஸ்ட்கள் கிளர்ச்சி செய்தனர். இதன் விளைவாக வினோபாபாவே ஆரம்பித்த பூமி தானம் இயக்கம் தொடங்கப்பட்டது. பூமி தானம் என்றால் அதிகமான நிலம் வைத்திருப்போரிடம் கோரிக்கை வைத்து தானமாக நிலம் பெறுவதாகும். மகாத்மா காந்தியின் சீடரான வினோபாவாவே இவ்வியக்கத்தினை ஆரம்பித்து அதன் மூலம் பல நிலங்கள் பெற்று நிலமற்ற விவசாயிகளுக்கு அளித்தார்.

ஜோத்பூர்

 • ஜோத்பூர் அரசு முதலில் இந்தியாவுடன் இணைவதாக இருந்தது. ஹன்வந்த் சிங் அரசு பொறுப்பேற்றதும் பாகிஸ்தானுடன் இணைய முடிவு செய்தது. பாகிஸ்தான் சார்பில் கராச்சி துறைமுகத்தை சுதந்திரமாக பயன்படுத்திக் கொள்ளவும், ஆயுதங்களை உற்பத்தி செய்து கொள்ளவும் மற்றும் ஆயுதங்களை இறக்குமதி செய்துக் கொள்ளவும் ஹன்வந்த் சிங்க்கு உரிமை வழங்குவதாக முகமது அலி ஜின்னா அறிவித்தார். இதனை அறிந்த பட்டேல், மகாராஜா ஹன்வந்த் சிங்கிற்கு சிறப்பு சலுகைகள் வழங்குவதாக கூறினார்.
 • அச்சலுகைகளின் படி ஆயுதங்கள் இறக்குமதி செய்து கொள்ளவும், ஜோத்பூர் –கத்திவார் இடையே இரயில் போக்குவரத்து அமைத்துக் கொள்ளவும், பஞ்சகாலங்களில் தமது விவசாயிகளுக்கு உணவு தானியங்களை விநியோகித்துக் கொள்ளவும் உரிமைகள் வழங்குவதாக அறிவித்தார், மேலும் இந்துக்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஜோத்பூர் பாகிஸ்தானில் இணைந்தால் மதக்கலவரம் ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாக இந்தியாவிடன் இணைய சம்மதித்தது.

காஷ்மீர்

 • சுதந்திரத்திற்கு பின்பு இந்து மகாராஜா ஹரிசிங் ஆட்சி செய்த காஷ்மீர் மட்டுமே சுதேச அரசாக இருந்தது. காஷ்மீரில் பெரும்பான்மையாக முஸ்லிம் மக்கள் இருந்ததால் அப்பகுதி, தங்கள் நாட்டோடு இணைந்துவிடும் என்று பாகிஸ்தான் நினைத்தது.
 • ஆகஸ்டு 15, 1947 அன்று மகாராஜா ஹரிசிங்கினால் முன்மொழியப்பட்ட நிரந்தர ஒப்பந்தமானது, பாகிஸ்தானில் மக்கள் குடியேறவும், பொருள்களை கொண்டு செல்லவும் அனுமதித்தது. இதனை இந்தியா கண்டித்த போதும், பாகிஸ்தான் அலட்சியம் செய்தது. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறியது. இதனால் பதற்றமான சூழல் உருவாகியது. மகாராஜா ஹரிசிங் இந்தியாவிடம் இராணுவ உதவி நாடினார். இதனை அறிந்த மவுண்ட்பேட்டன் பிரபு பன்னாட்டு சட்டங்களின்படி இந்திய இராணுவத்தை அனுப்புவதற்கு இந்தியாவும், காஷ்மீர் மகாராஜாவும் பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டார்.
 • இதன்படி 1954 அக்டோபர் 26-ம் நாள் ஹரிசிங் உடன்படிக்கை மேற்கொண்டார். அதற்கு மறுநாள் 1954 அக்டோபர் 27-ம் நாள், இந்திய இராணுவம் காஷ்மீருக்கு அனுப்பப்பட்டு அங்கு அமைதி ஏற்படுத்தப்பட்டது.

மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் மறுசீரமைப்பு

விடுதலைக்கு முன்பு

 • விடுதலைப் போராட்ட இயக்கத்தின் போது மக்களைத் திரட்டுவதில் மொழி உணர்வு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தது.
 • எனவே விடுதலைக்கு பின்னர் தேசத்தைக் கட்டியமைப்பதிலும் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதன் இன்றியமையாமையை உணர்ந்து செயல்படுத்தப்பட்டது. அன்னிபெசன்ட் அம்மையார். தன்னாட்சி இயக்கம் (ஹோம் ரூல்) தொடங்கிய போதே தென்னிந்தியாவின் பங்கேற்பு அதிகமாக இருந்தது. மொழி அடிப்படையில் மறுசீரமைப்பு என்பது 1917-ல் காங்கிரஸ் கட்சியால் தொடங்கப்பட்டது.
 • 1920-களில் மாநிலங்கள் மொழி அடிப்படையில் அமைய திட்டமிடப்பட்டது. நிர்வாகத்திற்கும் அடிப்படைக் கல்விக்கும் உள்ளூர் மொழிகளின் தேவை அப்போதே உணரப்பட்டது.
 • பல மாநிலத் தலைவர்கள் மொழிவாரி மாநிலங்களை விரும்பினர். குறிப்பாக, அன்றைய சென்னை மாகாணத்தில் தெலுங்கு தேச மக்களைக் கொண்ட பகுதிகளை இணைத்து தனி ஆந்திர பிரதேச காங்கிரசு குழு அமைக்கவேண்டுமென்று அப்பகுதி காங்கிரசு தலைவர்கள் கோரினார்.
 • மொழிவாரி மாநிலங்களுக்கான கோரிக்கைகள் அதிகரித்ததை கவனத்தில் கொண்டு மொழி அடிப்படையில் மாநிலங்களை மறுசீரமைக்கும் பணிகள் 1927-இல் தொடங்கின. நீண்ட போராட்டத்திற்கு பிறகு 1895-இல் ஒடிசா மாநிலத்திலிருந்து பீகார் தனியாகப் பிரிக்கப்படவேண்டும் என்று போராட்டம் எழுந்தது.
 • நீண்ட போரட்டத்திற்கு பின்னர் ஒரிசா மாகாணத்திலிருந்து பீகார் பிரிக்கப்பட்டது. ஆகவே விடுதலைக்கு முன்பு 1936-ஆம் ஆண்டு மொழி அடிப்படையில் ஒடிசா மாநிலம் அமைக்கப்பட்டது. இதுவே மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்ட முதல் மாநிலமாகும்.
 • லோகமான்ய திலகர், அன்னி பெசன்ட் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோர் மொழிவாரி அடிப்படை மாநிலங்களுக்கு ஆதரவு அளித்தனர்.

விடுதலையின் போது

 • இந்தியா விடுதலை அடைந்த போது, மொழி அடிப்படையில் மாகாணங்கள் அமைந்தால் மதப்பிரச்சினை போன்று இதுவும் பதற்றத்தை உருவாக்கிவிடுமோ என்று அச்சமுற்றனர்.
 • இறுதியில் 1948-ஆம் ஆண்டு அரசியல் நிர்ணய சபையில், மொஇழ்வாரி மாகாண ஆணையம் (LPC) அமைத்து நீதிபதி எஸ்.கே.தர் தலைமையில், மொழிவாரி மாகாண அமைப்புக்கான நடைமுறை குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த ஆணையமே “தர்” ஆணையம் என்றழைக்கப்பட்டது.
 • ஆனால் தேச ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதாலும் நிர்வாக சிக்கல் ஏற்படும் என்பதாலும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதை தர் ஆணையம் ஆதரிக்கவில்லை.
 • ஆனால் இந்த முடிவினை இந்திய மக்கள் ஏற்கவில்லை. குறிப்பாக தனித்த மொழி அடையாளம் உள்ள மாநிலங்கள் இதனை விரும்பவில்லை.
 • இதன் காரணமாக, 1948-ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு ச், சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவரான பட்டாபி சீத்தாராமையா ஆகியோரைக் கொண்ட ஜே.வி.பி. (JVP) குழுவினை உருவாக்கி மொழிவழி மாநில அமைப்பு கோரிக்கை குறித்து பரிசீலிக்க உத்தரவிட்டார்.

ஜே.வி.பி குழு

 • தொடக்கத்தில் இக்குழு மொழிவாரி அடிப்படையிலான மாநிலங்கள் உருவாவதை பிடிவாதமாக எதிர்த்தது. ஒற்றுமை மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை காரம் காட்டியது. ஆனால் மக்கள் ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்பு இயக்கங்களும் எழுந்து 1960-கள் வரை நீடித்தது.
 • ஆகவே இக்குழு பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு இணங்க மொழிவாரி மாநிலங்கள் அமைக்க பரிந்துரைத்து அறிக்கை தயாரித்தது.

முதல் மொழிவாரி மாநிலம்

 • சுதந்திர இந்தியாவில் முதல் மொழிவாரிய மாநிலமாக ஆந்திரபிரதேசம், தெலுங்கு பேசும் மக்களின் விருப்பத்திற்கேற்ப உருவாக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் அமைக்கக் கோரி பொட்டி ஸ்ரீராமலு சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார். போராட்டத்தின் 65-வது நாள் உயிர் நீத்தார். இதன் பிறகு போராட்டம் மேலும் தீவிரமானது. தெலுங்கு பேசும் மக்களின் நெருக்கடிக்கு நேரு பணிந்தார். தெலுங்கு பேசும் மக்களைக் கொண்ட ஐதராபாத், ஆந்திர பகுதிகளை இணைத்து 1956-இல் ஆந்திர மாநிலமாக ஜவஹர்லால் நேரு அறிவித்தார்.

மாநில மறுசீரமைப்பு ஆணையம்

 • மொழிவாரி மாநில கோரிக்கைகளுக்காக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பெரும் கலவரங்களும், எதிர்ப்பு இயக்கங்களும் நடைபெற்ற காரணத்தினால் பிரதமர் ஜவஹர்லால் நேரு, தனி மாநில கோரிக்கைகளை பரிசீலிக்க பசல் அலி தலைவராகவும் ஹெச்.என்.குன்ஸ்ரு மற்றும் கே.எம். பணிக்கர் உறுப்பினர்களாகவும் கொண்ட ஒரு குழுவை அமைத்தார். இக்குழு தனது அறிக்கையை 22.10.1953- அன்று சமர்ப்பித்தது. இக்குழு மொழிவாரி மாநிலம் அமைப்பதற்கு நான்கு அம்சங்களை வரையறுத்தது. இதற்கான பரிந்துரைகள் 1955 செப்டம்பரில் சமர்ப்பிக்கப்பட்டது.
 1. மொழி மற்றும் பண்பாட்டு ஒத்த தன்மை

ஒரே மொழி பேசும் மக்களைக் கொண்ட மாநிலமாக இருப்பின் தனி மாநிலக் கோரிக்கையை நிராகரிக்கலாம். ஏனெனில், ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைப் பேசும் மாநிலங்கள் உள்ளன. மேலும் , பல மாநிலங்களில் ஒரே மொழிப் பேசும் சமூகம் காணப்படுகிறது. உதாரணத்திற்கு, பல வடஇந்திய மாநிலங்களில் இந்தி மொழி பேசப்படுகின்றது.

2. நிதி, பொருளாதார மற்றும் நிர்வாக கருதுகோள்கள்

அரசியல் பொருளாதார மற்றும் நிர்வாக செயல்பாடுகள் அனைத்து பகுதி மக்களும் சரிசமமாக நடத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். ஏனென்றால் இந்திய அரசமைப்பு சட்டம், சம உரிமைகள் மற்றும் அனைவருக்குமான வாய்ப்புகள் என்ற நிலைப்பாட்டினை வலியுறுத்துகிறது.

மொழி நிர்வாகப் பயன்பாட்டில் உதவிகரமானது என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். இருந்தபோதும் பிற நிர்வாக , நிதி மற்றும் அரசியல் போன்ற அம்சங்களைப் புறக்கணித்து விட்டு மொழியை மட்டுமே ஒருங்கிணைப்பு அம்சமாகக் கொள்ளக்கூடாது.

3. தேசத்தின் ஒற்றுமை மற்றும் பாதுகாப்பினை வலுப்படுத்தி பராமரித்தல்

மொழிவாரி மாநிலங்கள் அமைந்தால் குறிப்பிட்ட பிரிவு மீது மட்டும் அனுதாபம் கொள்ளும் நிலை உருவாகும் என்பதையும், நமது தேசிய உணர்வுக்கும், பன்மைத்துவத்துக்கும் எதிரானது என்பதையும் ஒற்றை மொழி பேசும் மாநிலங்கள் புரிந்து கொண்டால் தான் தேசப் பற்றினை ஆழமாக வளர்க்க முடியும்.

 1. ஒரே மொழி பேசுபவர்களோ அல்லது பல மொழி பேசும் சமுதாயத்தினரோ குறிப்பிட்ட நிர்வாகத்தின் கீழ் வசித்தாலும் பல்வேறு மொழிகள் பேசும் சமுதாயங்களின் மக்கள் தகவல் தொடர்பு கல்வி மற்றும் கலாச்சார தேவைகளை மேம்படுத்தும் வகையில் மக்கள் நலத் திட்டங்களை அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒட்டு மொத்த நாட்டின் மக்களிஅயும் கருத்தில் கொள்வதாக இருக்க வேண்டும்.

மாநில மறுசீரமைப்பு ஆணையம்

 • இறுதியாக இந்த ஆணையம் 16 மாநிலங்கள் மற்றும் மூன்று ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட மாநிலங்களை மறுசீரமைப்பு செய்ய பரிந்துரைத்தது. மத்திய அரசாங்கம் சிறு மாற்றத்துடன் இதனை ஏற்றுக்கொண்டு, 1956-இல் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தை இயற்றியது, இச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய பிறகு மத்திய அரசாங்கம் 14 மாநிலங்கள் மற்றும் 6 யூனியன் பிரதேசங்கள் என்ற அளவில் மாநில மறுசீரமைப்பினை நம்பர் 1, 1956 அன்று நடைமுறைப்படுத்தியது.
 • அந்த மாநிலங்கள் வருமாறு, ஆந்திர பிரதேசம், அஸ்ஸாம், பீகார், பம்பாய், ஜம்மு காஷ்மீர், கேரளா, மத்தியப்பிரதேசம், சென்னை, மைசூர், ஒரிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம். 6 யூனியன் பிரதேசங்களான, அந்தமான் நிக்கோபார் தீவுகள் , தில்லி, இமாச்சல பிரதேசம், லட்சத்தீவு –மினிகாய் தீவு – அமிந்திவி தீவுகள், மணிப்பூர் மற்றும் திரிபுரா.

மேலும் உருவான மாநிலங்கள்

1956-க்கு பிறகும் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது தொடர்ந்தது. குறிப்பாக மொழிவாரி அடிப்படையில் மட்டுமல்லாமல் வேறுபல அம்சங்களைக் கருத்தில்கொண்டு நாடாளுமன்றம் பரிசீலித்து புதிய மாநிலங்கள் உருவாக்கியது. 1956-க்குப் பின்னர் உருவான மாநிலங்களின் பெயர்கள் பின்வருமாறு

 • பம்பாய் மறுசீரமைப்புச் சட்டம் 1960. குஜராத் மாநில உருவாக்கம்.
 • நாகாலாந்து மாநிலச் சட்டம் 1962 – நாகாலாந்து மாநிலம் அசாம் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.
 • பஞ்சாப் மறுசீரமைப்புச் சட்டம் 1966 – அரியானா மாநில உருவாக்கம்.
 • புதிய இமாச்சல பிரதேச மாநிலம் சட்டம் 1970.
 • வடகிழக்கு மாநில மறுசீரமைப்புச் சட்டம் 1971 – மணிப்பூர், திரிபுரா, மேகாலயா, மிசோரம் மாநிலங்கள் உருவாக்கம். அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் ஆகிய யூனியன் [பிரதேசங்கள் உருவாக்கம்.
 • சிக்கிம் மாநிலச் சட்டம் 1975.
 • அருணாச்சல பிரதேசம் சட்டம் மற்றும் மிசோரம் மாநிலச் சட்டம் 1986. மிசோரம், அருணாசல பிரதேசம் மாநிலங்கள் உருவாக்கம்.
 • கோவா மாநிலச் சட்டம் 1987.
 • மறுசீரமைப்புச் சட்டம் , 2000 சத்தீஸ்கர் மாநில உருவாக்கம்.
 • மறு சீரமைப்பு சட்டம் 2000, உத்தரகாண்ட் மாநில உருவாக்கம்.
 • பீகார் மறுசீரமைப்புச் சட்டம் 2000, ஜார்கண்ட் மாநில உருவாக்கம்.
 • ஆந்திரப் பிரதேசம் மறுசீரமைப்புச் சட்டம் 2014, தெலங்கானா மாநில உருவாக்கம்.
 • புதிய மாநிலங்கள் அமைப்பது இன்றும் சிக்கல்கள் நிறைந்ததாகவே இருக்கின்றது. பண்பாடு, சாதி, மதம், மொழி, இனம், குறிப்பிட்ட நில அமைப்பு என்று பல வடிவங்களில் சிக்கல்கள் எழுகின்றன. ஆகவே தனி மாநில கோரிக்கைகள் தனித்த அடையாள வெளிப்பாடாகவும், வளங்கள் பயன்பாடு சார்ந்ததாகவும் உள்ளது.

மாநிலங்கள் மறுசீரமைப்புக்கு பிறகு இந்தியா

 1. –க்கும் பின்னர் சுதந்திர இந்தியா
 • பிரிட்டனின் காலனி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இங்கு சுமார் 600 நிர்வாக அமைப்புகள் சுதேச அரசுகள் என்ற பெயரில் இருந்தன. நிலவியல் அமைப்பு, கலாச்சார, மத முன்னுரிமையில் மக்கள் இந்தியாவிலோ அல்லது பாகிஸ்தானிலோ இருந்து கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டது. இதற்கிடையே பூட்டான் போன்ற சில நாடுகள் உருவானது.
 • தற்போது உள்ள நிர்வாக அமைப்பு 1947-க்கும் 1950-க்கும் இடையே அமைக்கப்பட்டதாகும். ஒரு சில பகுதிகள் அதாவது மைசூர், ஹைதராபாத், போபால் ஆகியவை பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்தே தங்களது எல்லைகளை மாற்றம் செய்யாமல் தக்கவைத்துக் கொண்டன.
 • மத மோதல்களுக்கு மத்தியில் விடுதலைக்குப் பின்னர் இந்தியா இரண்டு நாடுகளை அதாவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உருவாவதைக் கண்டன. இந்திய விடுதலை காலனி ஆட்சிக்கு முடிவுகட்டி, மாநிலங்கள் மறுசீரமைப்புக்கு வழிவகுத்தது. அது பெரும்பாலும் மொழி அடிப்படையில் அமைந்தது.
 • நிலவியல் அடிப்படையில், கலாச்சார அடிப்படையிலும் சில மாநிலங்கள் அமைந்தன. இவ்வாறு புதிய இந்தியா மறு கட்டமைக்கப்பட்டு மறு சீரமைப்பும் மேற்கொள்ளப்பட்டது. இதனால் ஆட்சியும், நிர்வாகமும் எளிமைப்படுத்தப்பட்டது.
 • புதிதாக மறுசீரமைக்கப்பட்ட இந்தியா, கலாச்சார பன்முகத்தன்மை, மொழிகள், உன்னத பாரம்பரியம் ஆகியவற்றை பராமரித்து வருகிறது.
 • இந்திய மக்களிடையே, ஒற்றுமை உணர்வையும், இந்த நாடு நமது என்ற மனப்பாங்கினையும் ஊட்டுகின்ற பொறுப்பு இந்திய அரசாங்கத்திற்கு உள்ளது. விடுதலை இயக்கத்தின் போது, மக்களை அணி திரட்ட மாநில/ வட்டார மொழிகள் ஆற்றல் மிக்க சக்தியாகத் திகழ்ந்தன என்பதனை காங்கிரசு இயக்கம் கவனத்தில் எடுத்துக்கொண்டது.
 • காலனிய ஆட்சியில் இந்திய வரைபடமானது உள்ளூர் மொழிகள், வரலாறு மற்றும் கலாச்சார பன்மைத்துவ நிலைப்பகுதியை கணக்கில்கொள்ளாது அமையப்பெற்றிருந்தது. தற்போது மாநிலங்கள் உள்ளாட்சி அரசாங்கத்துடன் சீரமைக்கப்பட்டுள்ளது.
 • மாநிலங்கள் மறுசீரமைப்பு என்பது மாநிலங்களின் சுயாட்சியை பாதுகாப்பதுடன் மத்திய-மாநில அரசுகளுக்கிடையில் அதிகார சமநிலையை நிலவச் செய்தது. இருந்த போதிலும் மொழிவழிப் போராட்டங்கள் பல நடந்ததன் விளைவாக மாநில அரசுகளைக் காட்டிலும் மத்திய அரசு வலிமையானதாக இருக்க வேண்டியிருந்தது. இதனால், தேசக் கட்டமைப்புப் பணிகள் புதிய சோதனையை எதிர் கொண்டது.
 • மாநிலங்கள் அதிக அதிகாரங்களுடன் சுயாட்சி அந்தஸ்துடன் தங்களின் மொழி, இனம், நில எல்லைகள், மொழியை அடிப்படையாகக் கொண்ட அரசியல் ஆகியனவற்றையே விரும்பின.
 • ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல் உள்ளிட்ட தலைவர்கள் தேசக் கட்டமைப்புக்கு வழிவகுத்தனர். நாடு பிரிவினையைத் தொடர்ந்து எழுந்த வேதனைமிக்க சூழ்நிலைகள் அவர்களுக்குக் கடும் வலியை ஏற்படுத்தின. எனவே, நாடு மேலும் துண்டாடப்படுவதை விரும்பவில்லை.
 • ஏனெனில், மேலும் ஒற்றுமை கொண்ட நாட்டினை உருவாக்கும் கனவு கொண்டிருந்தனர். எனவே மொழி, இனம், மதம் அடிப்படையில் மக்கள் மத்தியில் மேலும் பிரிவினையோ , அடையாளப் பிரச்சனையோ உருவாகுவதை விரும்பவில்லை. கடந்த கால அனுபவத்தின் அடிப்படைகளைக் கணக்கில் கொண்டு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
 • முன்பு காலனி ஆட்சிக்கு உட்பட்ட மாகாணங்கள் இன்று தனிச்சிறப்பு வாய்ந்த கலாச்சார அடையாளம், தனித்தன்மை வாய்ந்த மொழி, பொருளாதார, நிலவியல் அமைப்பு, அரசியல் மேம்பாடு, நிர்வாக வசதி பெற்ற மாநிலங்களாக அமைந்துள்ளன.

சவால்களும் பேச்சு வார்த்தைகளும்

 • பல மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பின்பும், சில தனி மாநில கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன. இந்திய அரசியல் மற்றும் நிர்வாக வரலாறானது மாநிலங்கள், மக்களாட்சி பிரதிநிதித்துவப்படுத்தலுக்கான இடத்தினை வழங்குகிறது. அரசமைப்பு சட்டப்படி அரசியல் தன்னாட்சிக்கான சட்ட ரீதியான உரிமையை கொண்டிருக்கிறது.
 • புதிதாக மாநிலங்கள் அமைக்கப்பட்ட பிறகு, வளங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதும் அவ்வளங்களை பெறுவதற்கான உரிமைகளை அடைவதும் முன்னுரிமைப் பணியாக இருந்தன. பல மாநிலங்கள் பெரிதாகவும் , சில மாநிலங்கள் சிறிய அளவிலும் இருந்தன. சில மாநிலங்கள் பெரிதோ, சிறிதோ ஆனால் பிற மாநிலங்களோடு ஒப்பிடும் போது அதிக வலுவுடன் திகழ்ந்தன. வளர்ந்த மாநிலங்களுக்கும், வளர்ச்சி குறைந்த மாநிலங்களுக்கும் இடையே சமநிலைப்படுத்துதலை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டியிருந்தது.
 • மாநிலங்களுக்கான முதலீடு செய்வது, வளர்ச்சி திட்டங்கள், வேலை வாய்ப்புகள் ஆகியவற்றில் முன்னுரிமையுடன் பாரபட்சமாக பகிர்வதன்மூலம் இச்சமநிலை உறுதி செய்யப்பட்டது. இருந்தபோதும் மாநிலங்கள் பல அளவுகளில் இருப்பதால் பெரிய மாநிலங்கள் வளங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முயலும் என்பதால் சிறிய மாநிலங்கள் வளங்களை அணுகும் உரிமைகள் பறிக்கப்படும் என சிறிய மாநிலங்கள் குரல் எழுப்பின.
 • இதனால் ஒருவித வெறுப்புணர்ச்சி, பொருளாதார ஏற்றத்தாழ்வு, வளங்களை பயன்படுத்திக் கொள்வதில் முறையற்ற தன்மை ஆகிய மனப்பான்மை மாநிலங்களுக்கிடையே உருவாகியது.
 • விடுதலைக்குப் பிறகு குறிப்பிட்ட அரசியல் காரணங்களுக்காக சமூக கலாச்சார, அரசியல், பொருளாதார மற்றும் மொழி அடிப்படையில் கட்டமைப்பு செயல்பாடுகள் செயல்படுத்தப்பட்டன. மறு கட்டமைப்பு ஏற்பாடுகள் மொழி அடிப்படையில் மட்டும் செய்யப்படவில்லை.
 • ஏனென்றால் இது தேச ஒருமைப்பாடு வழியில் நின்றது. சில மொழிகள் மற்ற மொழிகளைக் காட்டிலும் சிறப்பு நிலையில் இருந்தது. இது மற்ற மொழிகள் பேசும் மக்களிடையே ஆதிக்கம் செய்யும் நிலையும் இருந்தது. ஆகவே மாநில கட்டமைப்பு நடவடிக்கைகளுக்கு மொழியை அடிப்படையாகக் கொள்வது குறித்த விவாதங்கள் நடைபெற்றன.
 • தேசிய அடையாள மற்றும் மொழி, கலாச்சார அடையாளங்களுக்கிடையே உள்ள நிலை பற்றி இவ்விவாதங்கள் நடைபெற்றன. அஸ்ஸாமின் போட்டோ-வும் கர்நாடக கூர்க்கும் இதற்கு உதாரணமாக கூறலாம்.
 • ஒரே மொழி பேசும் இரண்டு மாநிலம் அருகருகே இருந்தாலும் அம்மாநிலங்களில் இருந்த சாதி, மத மற்றும் இன வேறுபாடுகள் தேசிய அடையாளம் பெறுவதற்கு பிரச்சினைகளாக இருந்தன.
 • எனினும் 1950ஆம் ஆண்டு 12 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டன. பிறகி 22 மொழிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இது மொழி-கலாச்சார சமுதாயங்களின் இடையே அரசியல் அடையாள கோரிக்கைகள் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.

எல்லைகள்

 • விடுதலைக்கு முன்பு இந்த நாடு மாகாணங்கள், சுதேச அரசுகள், ராஜதானிகள் எனப் பிரிக்கப்பட்டிருந்தன. மாநிலங்கள் அமைப்பு அறிவிக்கப்பட்டவுடன் அதன் எல்லைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
 • குறிப்பாக கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா, மற்றும் குஜராத், அரியானா மற்றும் பஞ்சாப், ஒரிசா மற்றும் மேற்கு வங்கம், ஆந்திரா பிரதேசம் மற்றும் சென்னை மாகாணம் ஆகியவற்றிற்கிடையே எல்லைகள் குறித்து பேச்சு வார்த்தைகள் நடந்தன.
 • பல்வேறு வேறுபாடுகளைத் தாண்டி மொழியால் ஆதிக்கம் செலுத்தக் கூடிய சமுதாயங்கள் தங்களுக்கான தனித்த பிராந்திய மற்றும் கலாச்சார வடிவங்களை வலியுறுத்தினர். இந்த கலாச்சார மற்றும் மொழி ரீதியிலான அடையாளங்களை அந்த மாநில மக்கள் ஆதரித்தனர். இங்கே கலாச்சார, மொழி ரீதியிலான சிறுபான்மையினர் பேசும் மொழிகளும் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது.
 • எதிர்பார்க்கப்பட்டதைப் போல மொழி அடிப்படையில் அமைந்த பெரும்பான்மை சமூகம், மொழி சிறுபான்மை சமூகத்தின் மீது நிர்வாகம், கல்வி, வேலைவாய்ப்பு, நீதி மற்றும் பொருளாதார துறைகளில் ஆதிக்கம் செலுத்தியதன் மூலம் பெரும்பான்மை சமுதாய மக்கள் ஆதிக்கம் செலுத்தினர்.
 • கலாச்சார ஆதிக்கமின்மை, மேம்பாடு குறித்த பிரச்சனைகள், மற்றும் வட்டார சமத்துவமின்மை ஆகியன தீர்க்கப்பட வேண்டியிருந்தன. மாநிலங்கள் அனைத்து பகுதி மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு நிரந்தரமான யுக்தியை கையாள வேண்டியிருந்தது. அரசாங்கம் இதனை நீக்க சீரான ஒற்றைத்தன்மை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டதில், மேல்தட்டு மக்கள் சாதாரண பொதுமக்கள் என இரு பிரிவுகள் தோன்றிவிட்டன.

மண்டலக் கட்சிகளின் தோற்றம்

நாடு முழுவதும் மண்டலக் கட்சிகள் தோன்ற ஆரம்பித்தன. ஏனென்றால் தங்களின் சொந்த மண்ணின் மீதான விசுவாசமும் மண்டல அடிப்படையிலான அடையாள இயக்கங்களும் இத்தகைய மண்டலக் கட்சிகள் உருவாகுவதற்கு காரணங்களாக அமைந்தன. பெரும்பாலான கட்சிகள் உள்ளூர் அளவில் பலம் பெற்றன. மண்டலக் கட்சிகளின் தொடக்கம் மத்திய அரசாங்கத்திற்கு பெரும் சவாலாக அமைந்தது. ஏனென்றால் பிரச்சனைகளின் ஆணிவேர் நாடு முழுவதும் ஒரே விதமாக இல்லை.

மாநிலங்கள் உருவாக்கம்

 • அண்மைக்கால பொருத்தப்பாட்டில் ஒரு மாநிலத்தின் குறிப்பிட்ட நிலப்பகுதியைப் பிரிப்பதன்மூலம் நாடாளுமன்றம் புதிய மாநிலங்களை உருவாக்க முடியும். பெயர் மாற்றம் செய்வது, எல்லைகளை மாற்றியமைப்பது உள்ளிட்ட அதிகாரங்கள் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும், இவை நாடாளுமன்றத்தில் முன்வரைவு மூலம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவரின் ஒப்புதலை பெற வேண்டும். இது தொடர்புடைய மாநில அரசாங்கத்தின் கருத்துக்களும், அந்த மாநில அரசாங்கத்தின் சட்டமன்றத் தீர்மானமும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
 • மாநில அரசாங்கம் இது தொடர்பாக முன்வரைவு நிறைவேற்றி குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பும் போது, குடியரசுத்தலைவர் இது தொடர்பான தனி முன்வரைவு ஒன்றினை நாடாளுமன்றத்தில் இயற்ற பரிந்துரை செய்வார். பிறகு நாடாளுமன்றத்தில் முன்வரைவு இயற்றி தனக்கு அனுப்பப்படும் போது குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளிப்பார். பின்பு தான் புதிய மாநிலங்கள் உருவாகும்.
 • ஆந்திரபிரதேசம் இரண்டு மாநிலங்களாக, நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் ஜூன் 2, 2014 அன்று பிரிக்கப்பட்டது. இதன் மூலம் பல பத்தாண்டு கால கோரிக்கை நிறைவடைந்தது.

தேச கட்டமைப்பில் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சவால்கள்

தேச கட்டமைப்பிற்கான சவால்களில் தேசத்திற்கும் அரசுக்கும் உள்ள வேறுபாடுகளை முதலில் ஆராயவேண்டும்.

அரசு

 • நிலப்பரப்பு, மக்கள், அரசாங்கம் மற்றும் இறையாண்மை ஆகிய நான்கு அலகுகளும் இருக்கும் போது அரசு என்பது உருவாகும். அதில் தேசிய உணர்வோ அல்லது நாம் அனைவரும் ஒருவரே என்ற உணர்வோ இல்லாமல் இருக்கலாம். ஆயினும் அது அரசு என்றழைக்கப்படுகிறது.
 • நாட்டு மக்கள் அனைவரும் ஒருவரே என்ற உணர்வு அவர்களுக்கிடையே நிலவும் போது மற்ற வேறுபாடுகள் அனைத்தும் ஒருமைப்பாட்டிற்கு கீழானது என்றாகிவிடும். பொது நலமே மேலானது என்ற நிலை உருவாகும்.

தேசம்

தேசம் என்ற பொருள்படும் “Nation” என்ற சொல் லத்தீன் மொழியிலிருந்து வந்ததாகும். அமைவரும் ஒரு ரத்த பந்தம் உடையவர் என்ற பொருளில் இந்த கருத்துரு உருவாகியது. ஆகவே “Nationem” என்ற லத்தீன் சொல் “இனம்” என்ற பொருளில் தேசத்தை குறிப்பிட்டது. மக்களிடையே நிலவும் ஒற்றுமை என்பதனை குறிக்க இச்சொல் பயன்படுத்தப்பட்டது. பழமை கருத்துப்படி ஒரு தேசம் அரசாக இருக்க வேண்டிய தேவை இல்லை என்பதாகும்.

தேசியம்

 • தேசியம் என்ற கருத்துருவை வரையறுப்பது சுலபம் அல்ல. தனிப்பட்ட ஒரு காரணியை வைத்து ஆராய முடியாது. முக்கியமாக ஒற்றுமை உணர்வு, பலதரப்பட்ட செயல்களின் முடிவு; இனம் மற்றும் மொழிக் குழுமம், பொது அரசியல் விருப்பம் எல்லாவற்றிற்கும் மேலாக வரலாற்று வளர்ச்சி ஆகியன தேசியம் அமைவதற்கு காரணமாகின்றன.
 • தேசமானது குறிப்பாக பொருளியல் வாழ்வு, மொழி மற்றும் நிலப்பரப்பு என பல அலகுகள் ஒருங்கே அமைக்கப்பட்டு தேசம் உருவாகியது என்று எர்ன்ஸ்ட் ரெனான் வாதிக்கிறார். இவரின் கருத்துப்படி “தேசம்” என்பது ஒரு ஆன்மா அது ஒரு ஆன்மீக கோட்பாடு – அதில் இரண்டு விதமான அம்சங்கள் அடங்கி உள்ளது.
 • ஒன்று கடந்த கால அம்சம் ; மற்றொன்று நிகழ்கால அம்சம் என்று விளக்கம் கூறுகிறார். ஒன்று கடந்த கால வளமிக்க மரபுகளின் நினைவுகள் மற்றொன்று நிகழ்காலத்திய நடப்புகள். கூடி வாழ வேண்டும் என்ற விருப்பம், பாரம்பரியத்திற்கு மதிப்பளிக்க வேண்டுமென்ற எண்ணம் ஆகியன தேசிய உணர்வு அமைவதற்கு உள்ள பொது பங்களிப்பாகும்.

சவால்கள்

வழிவகை

 • உற்பத்தியை அதிகரிப்பது மட்டும் பிரச்சனை அல்ல மாறாக வேறுபாடுகளை களைவதும் ஆகும்.
 • நமது மக்களாட்சி மற்றும் கூட்டாட்சி ஆகிய அடிப்படையில் எந்தவித சமரசமும் கொள்ளாமல், திட்டமிட்ட மற்றும் கலப்பு பொருளாதாரம் மூலம் இந்தியாவை ஒரு சுய –சார்பு நவீன நாடாக உருவாக்குவதை ஜவஹர்லால் நேரு தேர்ந்தெடுத்தார்.
 • ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் ஏராளமான நீர்பாசன திட்டங்கள், அடிப்படை தொழில்களை நிறுவினார். விரைவான மின்மயமாக்கல் மற்றும் உள்கட்டுமான வசதிகளை விரிவுபடுத்துதல். மலேரியா போன்ற நோய்களை ஒழித்தல், உணவு உற்பத்தியில் சுய-தேவையை பூர்த்தி செய்தல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மேம்பட்ட நிலையை அடைதல் என்று பலவகை திட்டங்களை நிறைவேற்றினார்.
 • 60-களின் இறுதியிலும் 70-களின் தொடக்கத்திலும் ஒரு மந்தமான சூழ்நிலை உருவாகியது. பல அரசியல் பிரச்சினைகள் எழுந்தன. பாகிஸ்தான் மற்றும் சீனா உடனான போர்கள் இந்தியாவின் பொருளாதாரத்தைப் பாதித்தது.
 • இந்திரா காந்தி மேற்கொண்ட வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்ட நடவடிக்கை, ராஜீவ் காந்தி செய்த மின்னணுவியல் புரட்சி ஆகியன இந்தியாவில் நல்விளைவுகளை ஏற்படுத்தின.
 • 1990-ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியா சந்தைப் பொருளாதாரத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கியது. எனவே தா.த.உ (LPG) என்று சுருக்கமாக அழைக்கப்படுகின்ற தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றுல் உலகமயமாக்கல் கொள்கைகளுக்கு இந்தியாவின் கதவு திறக்கப்பட்டது.

1953- ஆம் ஆண்டு எவரெஸ்ட் பயணம் வெற்றி பெற்றவுடன் தேசியவாதம் குறித்து முதலமைச்சர்களுக்கு நேரு எழுதிய கடிதம்

“எவரெஸ்ட் உச்சியை அடைந்தது மாபெரும் சாதனை ஆகும். அது குறித்து நாம் அனைவரும் பெருமிதம் கொள்ளலாம். இங்கே சில மனிதர்கள் அற்பமான , குறுகிய தேசியவாத கண்ணோட்டத்தினை வெளிப்படுத்துகின்றனர்.

எவரெஸ்டை முதலில் அடைந்த டென்சிங் இந்தியரா அல்லது நேபாளியா என்று கேள்வி எழுப்பப்படுகிறது. மற்றவர் உதவி இன்றி எதையும் செய்து முடிக்க முடியாது.

உண்மையில் இருவரும் இணைந்தே இத்தகைய சாதனையை நிகழ்த்தியுள்ளனர். ஏற்கனவே பெறப்பட்ட அனுபவங்கள், உழைப்பு மற்றும் பயண தியாகங்கள் ஆகியன இவர்களின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தன.

மாபெரும் மனித சாதனைகள் யாவும் எண்ணிலடங்கா மக்களின் கடுமையான தொடர முயற்சியின் விளைவே ஆகும். ஒரு மனிதனின் கடைசி படிக்கட்டு மற்றொருவரின் தொடக்கமாகும் என்பதனை யாரும் மறுக்க முடியாது.

இவ்வாறு விவாதிப்பது இந்த விஷயங்கள் குறுகிய மற்றும் கண்டனத்திற்குரிய தேசியவாதம் ஆகும். இது நமது நாட்டிற்கு பெருமை சேர்க்காது என்பதனை உணர வேண்டும். மேலும் அது மக்களை குறுகிய மனப்பான்மையோடு ஒரு விதமான தாழ்வு மனப்பான்மைக்கு இட்டுச் செல்லும்.

வேளாண்மை

 • 1990-களின் மத்தியில் வேளாண்மை துறையில் பின்தங்கிய நிலை உருவாகியது. ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். ஏற்றுமதி தொடர்பான விவசாயம் கடுமையாக பாதித்தது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தின் விதர்பா பகுதியைச் சேர்ந்தப் பருத்தி விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகினர்.
 • இந்தியாவில் 60 விழுக்காடு மக்கள் விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ளனர். வேளாண்மைத்துறை வளர்ச்சிவீதம் 1996 – 97 முதல் 2004 – 05 வரை 1.65 விழுக்காடு அதிகரித்தது. இந்தியாவில் இரண்டாவது விவசாய நெருக்கடி உருவாக இதுவே காரணம் ஆகும். (முதல் விவசாய நெருக்கடி 1960-களின் தொடக்கத்தில் நிகழ்ந்தது) பணக்கார மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கான மானியம், இலவச மின்சாரம் , ஆதார விலை நிர்ணயம், இலவச பாசனம் மற்றும் இலவச உரம் ஆகியனவற்றுக்கான மானியம் குறைக்கப்படவில்லை, ஆனால் இத்துறையில் அரசு முதலீடு என்பது குறைக்கப்பட்டது.
 • 2008 -09 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அமெரிக்க மதிப்பில் 15 பில்லியன் டாலர் மதிப்பிலான விவசாயிகள் கடன் ரத்து செய்யப்பட்டது. அதே சமயம் 80 சதவிதம் சிறு விவசாயிகளால் விவசாயக் கடன்களைப் பெற முடியவில்லை. 60 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் தரிசாகப் போடப்பட்டதால் பஞ்சம் ஏற்பட்டது. அதே சமயத்தில் அது அளவுக்கதிகமான பொருளாதார இழப்பை ஏற்படுத்தும், விவசாயிகளை மேம்படுத்தும் அரசு உதவி குறைக்கப்பட்டது.
 • மத்திய அரசாங்கத்தின் கல்வி நிலையங்கள் மற்றும் மத்திய அரச்ய் வேலைவாய்ப்புகளில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குமாறு மண்டல் ஆணையம் பரிந்துரை செய்தது.

தொழிற்சாலை

 • தொழில்துறை தகராறு சட்டம் இந்தியாவில் பணியாற்றும் மொத்தத் தொழிலாளர்களில் 10 விழுக்காட்டுக்கும் குறைவான தொழிலாளர்களையே பாதுகாத்துள்ளது. 90 விழுக்காடு தொழிலாளர்கள் அமைப்பு ரீதியாகத் திரட்டப்படாத தொழில்களில் உள்ளனர்.
 • பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தொழிற்சங்கம் அமைத்து கூட்டு பேரம் மூலம் பலனடைகின்றனர். பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைத்துக் கொள்ளவும் கூட்டுப் பேரத்தில் ஈடுபடவும் உரிமைக்கொண்டுள்ளனர்.
 • ஆனால் தனியார் தொழிற் துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுக்கென சங்கம் அமைக்கவும் தங்கள் பிரச்சனைகளுக்காக கூட்டுப்பேரத்தில் ஈடுபடவும் தனியார் நிறுவனங்களின் மேலாண்மை தடுத்து வருகின்றன.
 • இந்திய தொழிற்தூறையானது தொடர்ந்து முதலீட்டு நலன் சார்ந்த தொழிற்துறையாக இருப்பதால் அதிக வேலையில்லா தீண்டாட்டம் நிலவுகிறது. இந்நிலையானது முறைசாரா மற்றும் தற்காலிக பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது.
 • நிலம் கையகப்படுத்துதல் என்பது முக்கியப் பெரும்பிரச்சனையாக உள்ளது. பழங்குடி மக்களை இடம்பெறச் செய்ய முடியவில்லை. தொழிற்சாலை அமைப்பதற்கு தேவையான நிலங்கள் கிடைக்கவில்லை.
 • உள்ளூர் மக்களின் ஒப்புதலில் தான் நிலங்கள் பெற வேண்டிய நிலை உள்ளது. நிலம் கையகப்படுத்துதல் நடவடிக்கைகளைத் தகுந்த இழப்பீடு வழங்குதல் மற்றும் நலத் திட்டங்கள் மூலம் நிறைவேற்ற வேண்டியுள்ளது.
 • தற்போதைய சட்டம், அரசாங்கம் நிலம் கையகப்படுத்துவதற்குப் போதுமான அதிகாரங்களை கொடுத்துள்ளது. சில இடங்களில் வலுக்கட்டாயமாக இதனை செய்யும்போது வன்முறை நிகழ்வு வெடிக்கின்றன.

அரசியல் ரீதியிலான சவால்கள்

 • 1990-ஆண்டுக்கு பின்னர் மாநிலங்களுக்கிடையே சமத்துவமின்மை அதிகரித்தது. மத்திய அரசாங்கத்தின் நிதி மாநிலங்களுக்கு அளிப்பது குறைக்கப்பட்டது. இதனால் மாநில அரசாங்கங்கள் தனியார் நிறுவனங்களை நாடவேண்டியுள்ளது. சில மாநிலங்கள் அன்னிய முதலீட்டை ஈர்க்க முயற்சிக்கின்றன. சில மாநிலங்களால் இதனைச் செய்ய முடியவில்லை. இதனால் மாநிலங்களிடையே ஏற்றத்தாழ்வான வளர்ச்சி உருவானது.

மத்திய – மாநில உறவுகள்

 • வறுமை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதன் மூலம் சாத்தியமாகும். மத்திய மாநில உறவுகள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள், பிராந்திய கட்சிகளின் ஆட்சிக்குட்பட்டுள்ளன. இதனால் மத்திய மாநில உறவுகளில் தடங்கல் வந்துள்ளது.
 • முன்பு மாநிலங்களுக்கிடையேயான குழு அமைந்த அமைப்பில் மாநிலங்கள் தங்களுக்கு அதிக அதிகாரங்கள் கோரின. மத்திய அரசாங்கத்திடமிருந்து அதிக நிதி பங்கீட்டினை கேட்டனர். மத்திய மாநில உறவுகளில் நிதி உறவு மட்டுப்படுத்தப்படுகிறது.

பொருளாதார சவால்கள்

 • இந்தியாவில் வாழும் மக்களில் பெரும்பாலோர் நாள் ஒன்றுக்கு ஒரு டாலருக்கும் கீழ் வருமானம் உள்ளவர்கள் என்பதை டீட்டன் மற்றும் ட்ரெசி சுட்டிக்காட்டியுள்ளனர். இருந்தாலும், இந்தியாவில் வறுமை விகிதம் குறைந்து வருவதாக விவாதிக்கப்படுகிறது.
 • 1993 -94 – 1999-2000 காலகட்டத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு டாலருக்கும் குறைவான வருமானம் ஈட்டுவோர் விகிதம் 36 விழுக்காட்டிலிருந்து 26 விழுக்காடாகக் குறைந்துள்ளதாக ஒரு மதிப்பீடு குறிப்பிடுகிறது. அதாவது இன்னமும் 270 மில்லியன் இந்தியர்கள் ஏழ்மையில் உள்ளதை இது குறிக்கிறது.
 • சீனாவில் 110 மில்லியன் ஏழைகள்தான் உள்ளனர். அடிப்படைக் கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் மனித மேம்பாடு இன்னமும் நிறைவுறாததாக இருக்கிறது. வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்கள் எண்ணிக்கை குறைந்தபோதிலும், உள்இணைக்கும் வளர்ச்சி எனும் செயல்திட்டத்தினை பயன்படுத்தி இன்னும் துரிதமாக வறுமை ஒழிப்பு மேற்கொள்ளப்பட்டிருக்க முடியும்.

உலகமயமாதல்

1990 முதல் தாராளமயமாதல், தனியார்மயமாதல், உலகமயமாதல் (தா.த.உ / LPG) கொள்கைகளுக்கு மாறியதால் ஏற்றத்தாழ்வுகள் மேலும் அதிகரித்து நாட்டின் பல பகுதிகளில் சமூக –அரசியல் பதற்றநிலை எழுவதற்கு வழிவகுத்தது. நாட்டு ஒற்றுமை, சமூக ஒருமைப்பாடு ஆகியனவற்றை உறுதிப்படுத்த இதரபிற்படுத்தப்பட்ட மக்களுடன் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் ஆகிய பிரிவினர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தும் அவசியம் உருவானது.

சமூக சவால்கள்

 • இந்த சீர்திருத்த காலத்தின் போது இந்தியா மேற்கொண்ட பொது உடல்நல ஆரோக்கியத்திட்டம் குறித்த அறிக்கை கவலை அளிக்கக்கூடிய சித்திரத்தை வழங்குகிறது. குழந்தை இறப்பு விகிதம் 1980-களில் 30 சதவீதம் இருந்தது 1990-களில் 12.5 சதவீதமாக குறைந்துள்ளது.
 • இந்தியாவின் (80/1000) குழந்தை இறப்பு விகிதம், பங்களாதேஷ் (91/1000) நாட்டைக்காட்டிலும் குறைவாக உள்ளது. ஆனால் 1999-ஆம் ஆண்டு பங்களாதேஷின் (61/ 1000) குழந்தை இறப்பு விகிதத்தை விட இந்தியா (71 / 1000) பின்னடைந்துள்ளது.

வகுப்புவாதம்

 • பிரிவினைக் காலத்தில் இருந்தே நாடு வகுப்புவாதத்தைச் சந்தித்து வருகிறது. தீய நோக்கம் கொண்ட அரசியல் கட்சிகள், அடிப்படைவாத குழுக்கள், வெறுப்பை உருவாக்கும் வதந்திகளை பல்வேறு சமுதாயத்தினரிடையே பரப்பி வருகின்றனர். இத்தகைய மத வெறுப்பு கட்டுக்கதைகளால் சமூகங்களுக்கு இடையே மோதல்கள் உருவாக்குகின்றன. இதனால் சிறு பான்மையினரே அதிகம் பாதிப்பு அடைவதுடன் தங்களின் வாழ்வாதாரத்தையும் சொத்துக்களையும் இழக்கின்றனர்.

சாதி மற்றும் பால் பாகுபாடு

 • சாதிய மோதல்கள் சாதிய பாகுபாடுகள் தொடர்ச்சியாக தேசக் கட்டமைப்பிற்கு சவாலாக உள்ளன. தீண்டாமைக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இருந்தும் அது இன்றும் தொடர்கின்றது. கலப்பு திருமணம் செய்து கொள்வோர் ஆணவப் படுகொலைகளுக்கு உள்ளாகின்றனர்.
 • நடைமுறையில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக நடத்தப்படுவதில்லை. அரசியலில் அவர்களின் பிரதிநிதித்துவம் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளது. பெண்களுக்கு எதிரான வன்செயல்கள் அதிகரித்துள்ளது. சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
 • அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளன. வளர்ச்சி என்பது அய்யத்துக்கு இடமில்லாமல் வறுமையைக் குறைத்து வாழ்க்கை எஇலையை மேம்படுத்தியுள்ளது என்பது உண்மைதான். இருப்பினும், பலன்கள் ஏழை மக்களிடம் சென்றடைவதைகாட்டிலும் நடுத்தர மற்றும் பணக்கார பகுதி மக்களிடம் தான் அதிகமாகச் சென்றடைகின்றன.
 • தகவல் தொடர்புத் துறை, வங்கிகள், பங்கு சந்தை, விமான போக்குவரத்து, வணிகம் மற்றும் தொழில் கொள்கை ஆகிய துறைகளில் செய்யப்படுகின்ற சீர்திருத்தங்கள், அளவுக்கு வேளாண்மை மற்றும் மனித மேம்பாட்டிற்குச் செல்லவில்லை.
 • மூலவளங்கள் திரட்சியும், அறிவுப்பெருக்கமும் கொண்டு இந்திய தொழில்மயமாக்கல் தொடரும் அதே நிலையில் 250 மில்லியன் மக்கள் நாளொன்றுக்கு ஒரு டாலருக்கும் கீழ் வருமானம் உள்ள நிலையில் வாழ்கின்றனர்.
 • இதே நிலையில் தொடருமானால் இந்தியாவில் வறுமை, கல்லாமை, சரிவிகித உணவின்மை ஆகியவற்றை ஒழிப்பதற்கு மிகநீண்ட காலமாகும். மேலும் மனித மேம்பாட்டுக் கூறுகளான கல்வி மற்றும் பொது சுகாதாரம் போன்ற துறைகளின் வளர்ச்சி மேலும் காலதாமதமாகும்.
 • மேலே விளக்கப்பட்டுள்ள சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சவால்களே தேச கட்டமைப்பின் பெரும் சவாலாக நீடிக்கின்றன.

தமிழ்நாடு மாநிலம் உருவாக்கப்படுதல்

 • 1802-ஆம் ஆண்டு வெல்லெஸ்லி பிரபு சென்னை மாகாணத்தை உருவாக்கினார். 18-ஆம் நூற்றாண்டு இரண்டாவது பகுதி வரை தென்னிந்தியாவை பல்வேறு சிற்றரசர்கள் ஆட்சி செய்து வந்தனர். பிரிட்டிஷாரின் தென்னிந்தியப் படையெடுப்பின் விளைவாக இவைகள் ஒன்றிணைக்கப்பட்டன. பிரிட்டிஷ் இந்தியாவின் கீழ் ஒரு நிர்வாக அமைப்பாக சென்னை மாகாணம் இருந்தது.
 • இந்த நிர்வாக அமைப்பு இன்றைய தமிழகம் , ஆந்திரபிரதேசம் , ஒரிசாவில் சில பகுதிகள், கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத் தீவு ஆகிய பகுதிகளைக் கொண்டிருந்தது. விடுதலைக்கு பிறகு சென்னை மாகாணம் சென்னை மாநிலமாக மாறியது.
 • நவம்பர் 1, 1956-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மொழிவாரி மாநில அமைப்பு நடவடிக்கைக்கு பின்பு தமிழர்களுக்கான தனி மாநிலமாக சென்னை மாநிலம் உருவாக்கப்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு இதன் பெயர் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

மொழி அடிப்படை தேசியவாதம் உருவாக்கம்

 • 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் தேசிய உணர்வு வளர்ந்து வரும் போதே நாட்டொன் பல பகுதிகளில், மாநில மொழிகள் பத்திரிகைகள் மற்றும் வட்டார அடிப்படையிலான அரசியல் இயக்கங்கள் மூலம் வட்டார விழிப்புணர்வு வளரத் தொடங்கியது.
 • தேசிய இயக்கத்தின் முன்னணியில் இருந்த இந்திய தேச காங்கிரசு உருவாக்கிய ‘தேசியம்’ என்று கருதுகோள் பல பிரச்சனைகளை எதிர்கொண்டது. இந்தி மொழிக்கு முன்னுரிமை வழங்கியது முக்கியப் பிரச்சனையானது 20-ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பத்தாண்டுகளில் தமிழ்மொழி துணை தேசியவாதம் வளர்வதற்கு இது காரணமானது.
 • காங்கிரசின் சாதிய கண்ணோட்டம் காரணமாக சாதிப்பிரிவினை, மொழிவாரி தேசியவாதம், வர்க்க போராட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய, பிராமண அல்லாதோர் இயக்கம் தொடங்கியது.

 • டி.மாதவன், தியாகராயர் மற்றும் பல பிராமணரல்லாதோர் தலைவர்கள் தென்னிந்திய நல உரிமை கூட்டமைப்பினை உருவாக்கினர். பிற்காலத்தில் இவ்வியக்கம் “நீதிக்கட்சி” என்ற பெயரில் புகழ் பெற்றது.
 • 1920-ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாணத் தேர்தலில் நீதிக் கட்சி போட்டியிட்டு வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. 1920 முதல் 1937 வரை நடைபெற்ற 5 தேர்தல்களில் நான்கு முறை வென்று அமைச்சரவை அமைத்தது. பின்பு 1937 தேர்தலில் காங்கிரசு கட்சியிடம் தோல்வியுற்றது.
 • பிறகு பெரியார் ஈ.வே.ராமசாமி தலைமையில் சுய மரியாதை இயக்கமாக மாறியது. இந்த இயக்கம் தமிழ் மக்களின் பண்பாடு மற்றும் அரசியல் வாழ்வில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது. தென்னிந்தியாவில் தமிழ் தேசியவாதம் வளர்வதற்கு இவ்வியக்கம் காரணமானது.

திராவிட நாடு சிந்தனை

 • ஒத்துழையாமை இயக்கத்தின் மூலம் காங்கிரசு கட்சி தமிழகத்தில் தன்னை பலப்படுத்தியது. 1937-ஆம் ஆண்டு சென்னை சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. ராஜாஜி முதலமைச்சராக பதவியேற்றார். அவர் இரண்டு அரசு கொள்கைகளை உருவாக்கினார்.
 • முதலாவதாக தீண்டாமை ஒழிப்பு, இரண்டாவது இந்தி மொழியை தேசிய மொழியாக அறிவிப்பது. பள்ளிகளில் இந்தி கட்டாய மொழிப்பாடமாக்கப்பட்டது. இது பிராமணரல்லாத தமிழர் / திராவிடர்களின் சுயமரியாத=தையை இழிவுபடுத்தியதாகக் கருதப்பட்டது. தந்தை பெரியார் மற்றும் பல சுயமரியாதை இயக்கத் தலைவர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தினர்.

 • தமிழறிஞர்களான மறைமலை அடிகள், திரு.வி.க. கல்யாண சுந்தரம் மற்றும் பலர் இந்தி மொழிக்கு எதிராக கண்டனப் பொதுக்கூட்டங்களை நடத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஈ.வே.ரா. பெரியார் இப்போராட்டத்துக்கு தனது மனப்பூர்வமான ஆதரவினை நல்கினார்.
 • “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற முழக்கத்தினை எழுப்பும் அளவுக்கு இப்போராட்டத்தை ஆதரித்தார். 1939-ஆம் ஆண்டு “திராவிட நாடு” மாநாட்டினை நடத்தி “திராவிட நாடு” கோரிக்கையை முன்வைத்தார்.

காமராஜர் மற்றும் இராஜாஜி

 • தமிழர், தெலுங்கர், கன்னடர் மற்றும் மலையாளர் ஆகியோரை உள்ளடக்கிய திராவிடநாடு என்கிற தனி நாடு கோரிக்கை இயக்கம் பிராமணரால்லாதோர் மத்தியில் வளரத் தொடங்கியது.
 • 1944-ஆம் ஆண்டு ஈ.வே.ராமசாமி, நீதிக் கட்சியினை திராவிடர் கழகம் என பெயர் மாற்றம் செய்யும் தீர்மானத்தினை சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றினார்.
 • தமிழர் வாழ்வினை மேம்படுத்துவதற்காக இதைச் செய்வதாகக் கூறினார். பொதுமக்கள் பெரும் அளவில் திரண்டது மற்றும் தொண்டர்களின் போர்க்குணம் இரண்டுக்குமாக சேலம் மாநாடு புகழப்பட்டது.
 • திராவிட நாடு என்பது, சுய ஆட்சியும் அதிக அதிகாரங்களும், சுதந்திர இறையாண்மை உரிமையும் கொண்ட, மொழி அடிப்படையில் நான்கு அலகுகளை மாநில உரிமைகளிடனும் சுயாட்சியுடனும் கொண்ட கூட்டாட்சி குடியரசாக திராவிட நாடாகத் திகழும் என்று கூறப்பட்டது.
 • இருந்தபோதிலும் திராவிட நாடு கோரிக்கை தமிழ் மொழி பேசுவோர் அல்லாத மக்களின் ஆதரவினைப் பெறவில்லை.

தட்சிண பிரதேசம் எனும் மாநிலக்கொள்கை

 • திராவிட கருத்தாக்கத்துக்கு எதிர்நிலையில் இருந்த தென்னிந்தியாவைக் களமாகக் கொண்டு ஒரு புதிய அரசியல் நிலைக்கருத்தினை இராஜாஜி உருவாக்கினார். தட்சிண பிரதேசம் என்பது அதன் பெயர். இது தமிழ்நாடு மற்றும் கேரளாவை உள்ளடக்கியதாகும்.
 • சி.சுப்பிரமணியம், பக்தவச்சலம் போன்ற தனது சீடர்கள் மூலம் இக்கருத்தினைப் பரப்பினார். ராஜாஜியின் இந்த அரசியல் கருத்தினை பெரும்பாலான தென்னிந்திய அரசியல் கட்சியினர் எதிர்த்தனர்.

 • புரட்சிகர சோசலிச கட்சியை சார்ந்த ஸ்ரீகண்டன், கொச்சின் கம்யூனிஸ்ட் கட்சியை அச்சுதமேனன், திருவிதாங்கூர் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த ஏ.கே.கோபாலான் ஆகியோர் “தட்சிண பிரதேச” கோரிக்கையை கடுமையாக எதிர்த்தனர்.
 • விடுதலை பத்திரிகையில் பெரியார் இது குறித்து தலையங்கம் எழுதினார். அனைத்து தமிழர்களும் தட்சிண பிரதேச அமைப்பை எதிர்த்து முதலமைச்சருக்கு தந்தி அனுப்புங்கள் என்று அறைகூவல் விடுத்தார். இதற்கிடையே கர்நாடகாவும் எதிர்த்தது.
 • குறிப்பாக கர்நாடகா மக்கள் கட்சியை சார்ந்த சர்தார் சரனா கவுடா இதனை எதிர்த்தார். இருந்தபோதிலும் 1956-ல் அமிர்தசரசில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் இராஜாஜியும் அவரது ஆதரவாளர்களும் “தட்சிண பிரதேசம்” குறித்து பேசினர். ஆனால் அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் அந்த மாநாட்டிலேயே இக்கருத்தினை கடுமையாக எதிர்த்தார்.
 • தமிழ்நாட்டிலும் தாம் கலந்து கொண்ட அனைத்து பொதுக் கூட்டங்களிலும் தட்சிண பிரதேச கருத்தினை எதிர்த்து முழங்கினார். இது தமிழ் மக்களிடையே பெரும் எழுச்சியை உருவாக்கியது. இக்கருத்திற்கு எதிராக போராடவும் தயாரானார். மக்களும் தட்சின பிரதேசம் உருவாவதற்கு எதிராகப் போராடத் தயாராகினர்.

விடுதலைக்கு பின்பு மொழிவாரி மாநிலங்கள் மறுசீரமைப்பு

 • விடுதலைக்கு முன்பே பிரிட்டிஷாரின் ஆட்சிக் காலத்திலேயே மொழிவாரி மாநிலங்கள் அமைக்கும் கோரிக்கைகள் எழுந்தன. விடுதலைக்கு பின்பு முதல் பத்தாண்டுகளில் (1947 – 1956) தேச கட்டமைப்பு குறித்து இரண்டு விதமான கொள்கை வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டன. ஒன்று அலுவல் மொழி பற்றியது. மற்றொன்று மாநிலங்கள் மறு சீரமைப்பு பற்றியது.
 • அதாவது கூட்டாட்சி மறு கட்டமைப்பு. தேச கட்டுமானம் மற்றும் ஒருங்கிணைப்பு முயற்சியில் மொழி அடிப்படையில் மாநிலங்களை மறுசீரமைப்பு செய்வது விடுதலைக்குபின் முதல் பணியாக ஆனது.
 • இருநூறு ஆண்டுகால பிரிட்டிஷ் ஆட்சியில், 1947-க்கு முன்பு மாகாணங்களில் எல்லைகள் சரிவர நிர்ணயிக்கவில்லை. மொழி மற்றும் பண்பாட்டுக்குக் கவனம் செலுத்தப்படாததால் மாகாணங்கள் பலமொழிகள் பேசக் கூடியதாகவும், பல பண்பாடுகளை உள்ளடக்கியதாகவும் இருந்தன.
 • மொழி என்பது மக்களின் பண்பாடு மரபுகள் ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்புடையது. மட்டுமல்லாமல் பெருமளவிலான கல்வி வளர்ச்சி மற்றும் அதிகளவிலான எழுத்தறிவித்தல் தாய்மொழி கல்வி மூலம் மட்டுமே நிகழ்ந்தன.
 • அதிக மக்கள் பேசும் மொழி அடிப்படையில் மாநிலம் அமைக்கப்பட்டு, அரசியல் மற்றும் ஆட்சித்துறை அல்லது நீதித்துறை செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும்போது மட்டுமே மக்களாட்சி உண்மையிலேயே அடித்தட்டு மக்களுக்கானதாக இருக்கும்.

தமிழ்நாடு மாநிலம் உருவாக்கம்

 • தமிழ்நாடு மாநிலம் அமைக்கப்பட்டது முக்கியமாக அப்போதைய அரசியல் நிகழ்ச்சி போக்கும் மொழிவழி அடிப்படையில் அமைந்த மறுசீரமைப்பும் ஆகும். மாநில மறுசீரமைப்பு ஆணையம் தனது இறுதி அறிக்கையை 1955-ஆம் ஆண்டு சமர்பித்தது. அதில் சென்னை, மைசூர் மற்றும் கேரளா மாநிலங்கள் அமைய பரிந்துரை செய்தது. புதிய சென்னை மாநிலம் நவம்பர் 1, 1956-ல் உருவாக்கப்பட்டது.
 • ஆனால் மறு சீரமைப்பு ஆணையம் இதை ஏற்கவில்லை. பொதுவாக, ஒரு பகுதி வட்டத்தில் எந்த மொழி பேசுபவர்கள் அதிக விழுக்காட்டில் வாழ்கிறார்களோ அந்த மொழி மாநிலத்துடன் அப்பகுதி இணைக்கப்பட வேண்டும் என்பதை ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது.
 • ஆனால், தேவிகுளம் உள்ளிட்ட நான்கு வட்டங்களைப் பொறுத்து வேறு அளவீட்டினைப் பயன்படுத்தியது. நிலப்பரப்பு காரணம் காட்டி அவை திருவிதாங்கூருடனே நீடித்தல் என அறிவித்தது. ஆனால் திருவிதாங்கூர் பகுதியில் தமிழ்மொழி பேசுவோர் சதவீத அடிப்படையில் நான்கு வட்டங்களாக அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம் மற்றும் விளவங்கோடு சென்னை மாநிலத்தோடு சேர்க்க வேண்டுமென கோரினர்.
 • அதே அளவீடு செங்கோட்டை வட்டம் சென்னை மாநிலத்தில் அமைய கோரப்பட்டது. அதிக தமிழ்மொழி பேசும் மக்களிருந்தும் அந்தப் பகுதி சட்டமன்ற பிரதிநிதிகள் தமிழர்களாக இருந்தபோதிலும் புவியியல் காரணங்களுக்காக திருவிதாங்கூர் பகுதிகள் கொச்சின் மாநிலத்தோடு இணைக்கப்பட்டு விட்டன.

தமிழ்நாடு என பெயர் மாற்றப் போராட்டம்

 • தமிழர்களுக்கென தனிமாநிலம் அமைந்த பிறகும் அவர்கள் முழுவதுமாக திருப்தி அடையவில்லை. அவர்கள் தங்கள் மாநிலத்திற்கு சென்னை மாநிலம் என்றிருக்கும் பெயரை “தமிழ்நாடு” என்று மாற்ற விரும்பினர். இந்த பெயர் மாற்றத்திற்கான போராட்டம் பத்தாண்டுகளாக நடைபெற்றது. மாநில மறுசீரமைப்பு ஆணையம் இந்த பெயர் மாற்றத்திற்கு பரிந்துரைக்கவில்லை.
 • ஏராளமான ஆர்ப்பாட்டங்கள் முற்றுகை போராட்டங்கள் சென்னை மாநிலத்தில் நடத்தப்பட்டன. மகாத்மா காந்தியின் சீடரும், சுதந்திர போராட்ட வீரருமான விருதுநகர் சங்கரலிங்கனார் இந்த பெயர் மாற்றக் கோரிக்கைக்காக சாகும் வரை உணா நோன்பினை ஜூலை 27, 1956 அன்று ஆரம்பித்தார் அக்டோபர் 13, 1956 அன்று 76-வது நாள் காலமானார். சங்கடலிங்கனாரின் தியாகம் சென்னை மாநிலத்தின் பல பகுதிகளில் பெரும் எழுச்சியை உருவாக்கியது.
 • கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் வெளிப்படையாக இந்த எழுச்சி இயக்கங்களில் பங்குபெற்றனர். இது சென்னை மாநில அரசியலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் காங்கிரசு கட்சி மக்களிடம் செல்வாக்கினை இழந்தது.
 • இறுதியில் 1967-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தோல்வியை தழுவியது. திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க) அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியது, சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது.

பன்முக கலாச்சாரம், வேற்றுமை மற்றும் தேசக் கட்டமைப்பு செயல்பாடுகள்

 • புதிய இந்திய தேசம், முதல் சுதந்திரப் போருக்கு பிறகான காலனி ஆட்சியில் எழுந்த தேசிய எழுச்சி இயக்கத்தின் மூலம் உருவாகியது. இந்த தேசிய இயக்கமானது கடந்து வந்த பாதைகளின் ஊக்கத்தினாலும், சுதந்திரம், மக்களாட்சி மற்றும் கூட்டாட்சி கருத்துக்களின் அடிப்படையிலும் அமைந்தது. மன்னராட்சி காலமும், மத ஆட்சியும் மறைந்துவிட்டது.
 • சுதந்திரம், மக்களாட்சி, மக்களின் விருப்பம், உரிமைகள் , அவர்களின் மொழி மற்றும் கலாச்சார அடையாளங்கள் மற்றும் அவர்களின் பொருளாதார மேம்பாடு ஆகியன தேச கட்டமைப்புக்கு அடிப்படைகளாகக் கொள்ளப்பட்டன.
 • மாபெரும் தேச கட்டமைப்பாளர்களான மகாத்மா காந்தியும், ஜவஹர்லால் நேருவும் மதவாத கலாச்சார தேசியவாதம் (இந்து தேசியவாதம் அல்லது முஸ்லிம் தேசியவாதம் இரு நாடுகள் கொள்கை) இரண்டுக்கும் எதிராக இருந்தனர். பன்மைச் சமூக அமைப்பை ஏற்றுக்கொண்டனர்.
 • ஆகவே அவர்கள் மக்களாட்சி, தாராளவாத கூட்டாட்சி இந்தியாவிற்காக வாதிட்டனர். ஆனால் பல அறிஞர்கள், இந்தியாவில் மாநிலங்களுக்கு போதிய நிதி மற்றும் அரசியல் அதிகாரங்கள் அளிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
 • அதிகார குவியல், ஒரே தேசிய அலுவல் மொழியாக இந்தியை ஏற்றுக்கொண்டு ஆங்கிலத்தை நீக்கியது. மாநிலங்களின் கலாச்சார மற்றும் மொழி அடையாளங்களை சிதைப்பதாக அமைந்தது.
 • ஜவஹர்லால் நேரு இந்த ஆபத்தை உணர்ந்த காரணத்தினால் இந்தி பேசாத மாநிலங்கள் விரும்புகின்ற வரை இந்தி திணிப்பு இருக்காது. அதுவரை ஆங்கிலமே இணைப்பு மொழியாக இருக்கும் என்ற உறுதிமொழியினை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *