பாமினி – விஜயநகர அரசுகள் Notes 11th History

11th History Lesson 7 Notes in Tamil

7. பாமினி – விஜயநகர அரசுகள்

அறிமுகம்

14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தில்லி சுல்தானியம் தெற்கே விரிவாக்கத்திற்குத் தயாரனபோது தக்காண தென்னிந்தியாவின் நான்கு அரசுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அவை தேவகிரியின் யாதவர் (மேற்குத் தக்காணம் / தற்போதைய மகாராஷ்டிரா), துவாரசமுத்திரத்தின் ஹொய்சாலர் (கர்நாடகா), வாரங்கலின் காகதியர் (தற்போதைய தெலங்கானாவின் கிழக்குப்பகுதி), மதுரையின் பாண்டியர்(தென் தமிழ்நாடு) ஆகும். 1304 1310 ஆகிய ஆண்டுகளில் மாலிக் காபூரின் இரு படையெடுப்புகளில் இந்தப் பழைய அரசுகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தோற்கடிக்கப்பட்டன; சேர்த்துவைக்கப்பட்டிருந்த தங்கள் செல்வங்களின் பெரும் பகுதியையும் தில்லி சுல்தானியத்தின் படையெடுப்பின்போது இழந்தன. துக்ளக் அரச வம்சம் தனது படைத்தளபதிகளின் மூலம் தென்னிந்தியப் படையெடுப்புகளைத் தொடர்ந்து நடத்தியது. முகம்மது பின் துக்ளக் (1325 -1351) பரந்த தன் அரசை சிறப்பாக ஆட்சி புரிவதற்கென தலைநகரைக்கூட தேவகிரிக்கு மாற்றினார் (தௌலதாபாத் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது) . ஆனால் அம்முயற்சிகள் தோல்வியடைந்து மக்கள் பெருந்துயரத்திற்கு ஆளாயினர். மீண்டும் தன் தலைநகரை தில்லிக்கு மாற்றியபோது அவரின் தென்பகுதி மாகாண ஆளுநர்கள் தங்களை சுதந்திர அரசர்களாக அறிவித்தனர். இதன் காரணமாக 1333இல் மதுரையில் சுதந்திரமான மதுரை சுல்தானியம் உருவானது. 1345இல் வடக்குக் கர்நாடகாவில் ஜாபர்கான் தன்னைச் சுதந்திர அரசராக அறிவித்துக்கொண்டு தன் தலைநகரை தேவகிரியிலிருந்து குல்பர்காவிற்கு மாற்றினார். அவர் பாமன் ஷா என்ற பட்டத்தைச் சூடி பாமினி அரசவம்சத்தைத் (1347 – 1527) தோற்றுவித்தார். இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக 1336ஆம் ஆண்டு விஜயநகர அரசு சங்கம வம்ச சகோதரர்களான ஹரிஹரர், புக்கர் ஆகியோரால் துங்கபத்ரா நதிக்கரையில் விஜயநகரைத் தலைநகராகக் கொண்டு (தற்போதைய ஹம்பி) தோற்றுவிக்கப்பட்டது. அடுத்த நூற்றாண்டிகளில் இவ்வரசுகள் தங்களுக்குள் வளமான ரெய்ச்சூர் ஆற்றிடைப் பகுதியைக் கட்டுப்படுத்தவும் இவர்களின் இராணுவத்திற்குத் தேவைப்படும் குதிரைகளை இறக்குமதி செய்யவும், மேற்குக் கடற்கரையிலுள்ள கோவா, ஹோனாவர் துறைமுகங்களைக் கட்டுப்படுத்தவும் இடைவெளியில்லாமல் கடுமையாகப் போரிட்டனர்.

ஆதாரங்கள்

 • இக்காலப் பகுதியைப் பற்றி அறிய இலக்கியம், கல்வெட்டு, தொல்பொருள் போன்ற பலவகை ஆதாரங்கள் கிடைக்கின்றன. பாமினி அரசவையிலிருந்த வரலாற்றாசிரியர்கள், பாமினி, விஜயநகர அரசுகளுக்கிடையிலான மோதல்கள் பற்றிப் பாரசீக மொழியில் எழுதிய பல குறிப்புகள் உள்ளன.
 • அவற்றில் சில சார்புத் தன்மையோடு மிகைப்படுத்திய தகவல்களைக் கொண்டிருந்தாலும், அவை போர்கள், அரண்மனைச் சதிகள், இருதரப்புக்களை சார்ந்த மக்களின் வாழ்க்கை, துயரங்கள் ஆகியன பற்றிய போர்களைக் கண்ணால் கண்ட சாட்சியங்களைக் கொண்டுள்ளன. கல்வெட்டுகளில் அது போன்ற செய்திகள் இல்லை.
 • விஜயநகர அரசவையின் ஆதரவில் எழுதப்பட்ட மனுசரிதம், சாளுவபையுதயம் போன்ற இலக்கியங்கள் விஜயநகர அரசின் வம்சாவளி , அரசியல் மற்றும் சமூகம் பற்றிய தகவல்களைத் தருகின்றன.
 • தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட இலக்கியமான ராயவாசகமு கிருஷ்ணதேவராயரின் கீழ் இருந்த நாயங்காரர் முறை பற்றிய ஆர்வமூட்டக்கூடிய தகவல்களைத் தருகின்றது.
 • 14 முதல் 16ஆம் நூற்றாண்டு வரை தென்னிந்தியாவிற்கு வந்த பல அயல்நாட்டுப் பணிகள் தங்கள் பயணங்களைப் பற்றி எழுதியுள்ளனர். அவை அரசியல், சமூகம், பண்பாடு ஆகிய அம்சங்களின் முக்கியத்துவத்தை அறிய உதவுகிறது. மொராக்கோ நாட்டைச் சேர்ந்த பயணியான இபன் பதூதா(1333 – 45) , பாரசீகப் பயணியான அப்துர் ரசாக் (1443 – 45). ரஷியப் பயணியான நிகிடின் (1470 – 74), போர்த்துகீசிய நாட்டு வணிகர்களாக டோமிங்கோ பயஸ், நூனிஸ் (1520 – 37) ஆகியோரின் குறிப்புகள் குறிப்பிடத் தகுந்த முறையில் அதிகமான செய்திகளை முன்வைக்கின்றன.
 • கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளிலுள்ள ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளும் சமஸ்கிருத மொழியிலுள்ள பல செப்புப் பட்டயங்களும் இலக்கியச் சான்றுகள் தரும் செய்திகளோடு அதிகச் செய்திகளை வழங்குகின்றன.
 • கோவில்கள், அரண்மனைகள், கோட்டைகள், மசூதிகள் என வளமான தொல்லியல் சான்றுகளும் உள்ளன. நாணயச் சான்றுகளும் அதிக அளவில் கிடைக்கின்றன.
 • விஜயநகர அரசர்கள் ‘வராகன்’ என்று குறிப்பிடப்பட்ட தங்க நாணயங்களை அதிக எண்ணிகையில் வெளியிட்டனர். (இது தமிழில் பொன் என்றும் கன்னடத்தில் ஹொன்னு என்றும் குறிப்பிடப்பட்டது) இந்தத் தங்க நாணயங்கள் வெவ்வேறு இந்து தெய்வங்களின் உருவங்களையும் காளை, யானை, கண்ட பெருண்டா என்ற கற்பனைப் பறவை (இரட்டைக் கழுகு வடிவத்தில் உள்ள இந்த உருவம் தனது அலகிலும் நகத்திலும் யானையைக் கொத்திக்கொண்டிருப்பதாகக் காணப்படுகிறது) ஆகிய விலங்கு உருவங்களையும் தாங்கியுள்ளன. நாணயத்தில் அரசனுடைய பெயர் நகரி அல்லது கன்னட எழுத்து வடிவத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

பாமினி அரசு

அலாவுதீன் ஹசன் பாமன்ஷா (1347 – 1358)

 • கிருஷ்ணா, துங்கபத்ரா நதிகளுக்கிடையிலான வளமான ரெய்ச்சூர் பகுதியைக் கைப்பற்றுவதில் பாமினி, விஜயநகர அரசுகளிடையே ஏற்பட்ட போட்டி பாமினி அரசின் தொடக்க கால வரலாற்றைக் குறிப்பதோடு மட்டுமல்லாமல் இரு நூற்றாண்டுகளுக்கு நீடித்த அம்சமாக இருந்தது.
 • வாரங்கல்லின் கிழக்குப் பகுதி மற்றும் ஒரிசா ஆட்சியாளர்களுக்கு எதிராக பாமன்ஷா தன் போராட்டத்தைத் தொடங்கினார். சுமூகமான நிர்வாகத்திற்காக தில்லி சுல்தானியர் முறையைப் பின்பற்றிய இவர் தன் ஆட்சிப் பகுதியை நான்கு பிரிவுகளாகப் பிரித்தார். அப்பகுதிகள் தராப்ஸ் எனப்பட்டன.
 • பிரிக்கப்பட்ட நான்கு பகுதிகளுக்கும் ஒவ்வொரு ஆளுநர் நியமிக்கப்பட்டார். அவர்களே அப்பகுதியின் படைகளையும் வழிநடத்தினர். குல்பர்கா, தௌலதாபாத், பீடார், பெரார் ஆகியவை அந்த நான்கு மாகாணங்களாகும்.
 • மாகாண ஆளுநர்கள் மாகாண நிர்வாகம், வரி வசூல் போன்றவற்றிற்கு முழுப்பொறுப்பாவர். வலிமையான அரசர்களின் கீழ் நன்கு செயல்பட்ட இம்முறை, திறமை குன்றிய அரசர்களின் காலத்தில் ஆபத்தாக மாறியது.
 • 11 ஆண்டுகள் பாமன்ஷா தன் அரசியல் எதிரிகளை அடக்கி சிறப்பாக ஆட்சி செய்தார். வாரங்கல் மற்றும் ரெட்டி அரசுகளான ராஜமுந்திரி, கொண்டவீடு ஆகியவற்றிடமிருந்து வருடம்தோறும் கப்பம் பெற அவர் மேற்கொண்ட முயற்சி பல போர்களுக்கு இட்டுச் சென்றது. அனைத்திலும் அவர் வெற்றிபெற்றார். இவர் தான் பெற்ற வெற்றிகளை நினைவு கூரும் வகையில் தன் நாணயங்களில் தன்னுடைய பெயரை இரண்டாம் அலெக்டாண்டர் என்று பொறித்துக்கொண்டார்.

முதலாம் முகமது (1358 – 1375)

 • பாமன்ஷாவிற்குப் பின் ஆட்சிக்கு வந்தவர் முதலாம் முகம்மது. விஜயநகர அரசுடன் நீண்டகாலப் போர்களை அவர் மேற்கொண்டார். அவற்றில் பல ரெய்ச்சூர் ஆற்றிடைப் பகுதியோடு தொடர்புடையதாகும்.
 • இருதரப்பிலும் பலத்த உயிர் சேதம் ஏற்பட்டாலும் யாரும் அப்பகுதியை முழுமையாக கட்டுப்படுத்த இயலவில்லை. இவர் மேற்கொண்ட இரண்டு கடுமையான போர்களால் பலன் ஏதும் இல்லை.
 • 1363இல் வாரங்கல் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றினார். வாரங்கல் போர் நஷ்டஈட்டை வாரி வழங்கியது. கோல்கொண்டா கோட்டை அவர் வசமானது. அங்கிருந்த கருவூலங்கள், ரத்தினக்கற்கள் பாமினி அரசின் வசமாயின, அங்கிருந்த ரத்தினச் சிம்மாசனம் பாமினி அரசின் சிம்மாசனமாயிற்று.
 • முதலாம் முகமது சிறந்த அரசு முறை நிர்வாகத்தைப் பின்பற்றினார். தில்லி சுல்தானிய அரச முறையைப் பின்பற்றிச் சிறப்பாக இவர் செய்த நிர்வாக முறை பிற்காலத்தில் மராட்டிய ஆட்சியாளர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தது.
 • அவர் எட்டு அமைச்சர்கள் கொண்ட குழுவை ஏற்படுத்தினார். அதன் படி
 1. வகில் –உஸ்-சுல்தானா: படைத்தலைவர்; அரசருக்கு அடுத்த நிலையில் உள்ளவர்
 2. வசீர்-இ –குல் : மற்ற அமைச்சர்களின் பணிகளை மேற்பார்வையிடுபவர்
 3. அமீர்-இ-ஜும்லா: நிதியமைச்சர்
 4. வசீர் –இ-அஷ்ரப் : வெளியுறவு அமைச்சர், அரசு விவகாரத்துறை அமைச்சர், அரசு விழாக்களை முன்னுன்று நடத்தும் பொறுப்புடையவர்
 5. நசீர் : நிதித்துறை இணையமைச்சர்
 6. பேஷ்வா : அரசப் படைகளின் பொறுப்பாளர்
 7. கொத்வால் : காவல்துறைத் தலைவர், தலைநகரின் நீதிபதி
 8. சதர் –இ-ஜஹான்; தலைமை நீதிபதி; சமய அறநிலையத்துறை அமைச்சர்
 • வழிப்பறி கொள்ளையர்களுக்கு எதிராக அவர் கடுமையான நடவடிக்கை எடுத்தார். நிறுவன மற்றும் புவியியல் ரீதியில் முகமது ஷா ஏற்படுத்திய இருங்கிணைப்பே அவர் அரசுக்கு திடமான அடித்தளத்தை உருவாக்கியது.
 • அவர் குல்பர்காவில் இரு மசூதிகளை எழுப்பினார். அதில் ஒரு மசூதி 1367ஆம் ஆண்டில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது. அது சிறந்த கட்டடமாகும்.
 • முதலாம் முகமது ஷாவிற்குப் பின் சில சுல்தான்கள் ஆட்சி செய்தனர். அவர்கள் திறமையற்றவர்கள்.
 • தென்பகுதி ஆட்சியாளர்களுடன் அவர்கள் அடிக்கடி போரிட்டனர். 1425இல் வாரங்கல் மற்றும் அதன் கிழக்கிலிருந்த பகுதிகளை ஒரிசாவின் ஆட்சியாளர்கள் கைப்பற்றினர்.
 • இந்நிலையில் தலைநகரம் குல்பர்காவிலிருந்து 1429இல் பீடாருக்கு மாற்றப்பட்டது. அதன் பின் ஆட்சிக்கு வந்த மூன்றாம் முகமது (1463 – 1482) காலத்தில் சிறந்த அமைச்சராக விளங்கிய முகமது கவான் சிறந்த அரசியல் இராஜதந்திரியாவார்.
 • ஆகாச நீல வண்ணத்திலுள்ள ரத்தினக்கற்கள் ஓரளவு விலை மதிப்புள்ள கற்களாகும். இம்மாணிக்கக் கற்களினால் இழைக்கப்பட்ட அரியணை பாரசீக அரசர்களின் ஒரு சிம்மாசனமாக இருந்தது என பிர்தௌசியின் ஷாநாமா குறிக்கின்றது.

முகமது கவான்

 • பாரசீகத்தில் பிறந்த முகமது கவான் புகழ்பெற்ற இஸ்லாமிய சமய வல்லுநராகவும், பாரசீக மொழியில், கணிதத்தில் புலமை பெற்றவராகவும் எழுத்தாளராகவும் விளங்கினார்,.
 • பீடாரில் ஒரு மதரசாவை நிறுவிய அவர் அதில் ஒரு பெரிய நூலகத்தையும் அமைத்தார். அந்நூலகத்தில் 3000 கையெழுத்து நூல்கள் இருந்தன. இவை இவருடைய புலமையை உணர்த்த வல்லன.
 • மூன்றாம் முகம்மதுவின் தலைசிறந்த பிரதம மந்திரியாக விளங்கிய கவான் சிறந்த நிர்வாகத் திறனுடன் பாமினி அரசின் வளர்ச்சிக்கு முக்கியமான காரணமாகத் திகழ்ந்தார்.
 • கொங்கணம், ஒரிசா, விஜயநகர மன்னர்களுக்கு எதிராக வெற்றிகரமாகப் போரை நடத்தினார். சிறந்த நிர்வாக நுணுக்கங்களை அறிந்திருந்த இவர் பாரசீக வேதியியல் வல்லுநர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் வெடிமருந்தைப் பயன்படுத்தினார்.
 • மாகாண ஆளுநர்களின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்திச் சிறப்பான ஆட்சி அமைப்புக்கு கவான் அடித்தளமிட்டார். பாமினி அரசை நிர்வகிக்க வசதியாக நாட்டை எட்டு மாகாணங்களாகப் பிரித்தார்.
 • ஒவ்வொரு பகுதியும் தனித்தனியே எல்லை வரையறை செய்யப்பட்டு அவற்றிற்கெனத் தனித்தனியே ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். சில மாவட்டங்களை கவானே தன் நேரடிக் கட்டுப்பாட்டில் கோண்டுவந்தார்.
 • ஆளுநர்களின் ராணுவ அதிகாரத்தை குறைத்தார். ஒரு ஆளுநருக்கு ஒரு கோட்டையே அனுமதிக்கப்பட்டது. மற்ற கோட்டைகள் சுல்தானின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன. அரசு அதிகாரிகளுக்கு ஊதியத்திற்குப் பதில் நிலங்கள் தரப்பட்டன.
 • கவான் அறிமுகப்படுத்திய நிர்வாகச் சீர்திருத்தங்கள் அரசின் நிலையை உயர்த்தின. ஆனால் மாகாணத் தலைவர்களுக்குத் தரப்பட்ட அதிகாரங்கள் குறைக்கப்பட்டன.
 • அவர்களில் பலர் தக்காணத்தை சேர்ந்தவர்களாவர். தக்காணத்தில் அவர்களுக்கிடையே இரு பிரிவுகள் உண்டாயின. அவ்விரு பிரிவினர்
 1. தக்காண முஸ்லீம்கள்
 2. வெளிநாட்டிலிருந்து வந்த மூஸ்ளீம்கள் ஆவர்.
 • அவ்விரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலால் நிர்வாகச் சீர்குலைவும் வீழ்ச்சியும் ஏற்பட்டன. இந்தப் போட்டியில் கவான் பலியானார்.
 • கவானின் வளர்ச்சியால் பொறாமை கொண்ட அவர்கள் கவான் சுல்தானுக்கு எதிராக சதி செய்கிறார் என்னும் போலிக் கடிதத்தை தயாரித்து சுல்தானின் கைகளில் கிடைக்குமாறு செய்தனர்.
 • ஏற்கனவே கவான் தன் மீது ஆதிக்கம் செலுத்துவதாக எண்ணிய சுல்தான் அவர்மீது அதிருப்தி கொண்டார். சுல்தானுடன் இருந்த விரிசலைச் சரி செய்ய கவான் அவரிடம் மன்னிப்பு கோரினார். ஆனால் சுல்தான் மன்னிக்கத் தயாராக இல்லை.
 • அரசனுக்கெதிராகச் செயல்பட்டதாக கவான் கொல்லப்பட்டார். சுல்தான் மூன்றாம் முகம்மதுவின் ஆட்சியின் வீழ்ச்சிக்கு கவானின் மறைவு காரணமாயிற்று. மூன்றாம் முகம்மது இறந்தபின் பாமினி அரசு வீழ்ச்சியடையத் தொடங்கியது. அதன்பின் அவரது வம்சத்தைச் சார்ந்த 5 மன்னர்கள் ஆட்சி செய்தனர்.
 • அரசும் நான்கு சுதந்திர அரசுகளாகப் பிரிந்தது (பீஜப்பூர், அகமது நகர், பெரார், கோல்கொண்டா). அதன்பின் ஐந்தாவதாக பீடார் உருவாக்கப்பட்டது. பிற்காலத்தில் பீஜப்பூர் வலிமையான அரசானது, பீடார், பெரார் போன்றவை அதில் இணைக்கப்பட்டன. அதே நேரத்தில் அகமது நகர், கோல்கொண்டா போன்றவை சுதந்திர அரசுகளாயின. ஆனால் பொது எதிரியான விஜயநகர அரசை எதிர்க்கும் வகையில் ஐந்து அரசுகளும் ஒரே கூட்டணியாக இணைந்து 1565இல் தலைக்கோட்டைப் போரில் (ராக்சஷி தங்கடி போர்) விஜயநகர அரசைத் தோற்கடித்தன. ஆனால் தலைக்கோட்டைப் போருக்குப் பின் தக்காண சுல்தானியங்கள் முகலாய அரசுடன் இணைக்கப்பட்டன.

II. விஜயநகரப் பேரரசு

தோற்றமும் விரிவாக்கமும்

 • விஜயநகரப் பேரரசின் உருவாக்கம் தொடர்பாக பல மரபுசார்ந்த செய்திகள் உள்ளன. சமகாலக் கல்வெட்டுச் சான்றுகளின் அடிப்படையில், பொதுவாக ஏற்கப்படும் கருத்து யாதெனில் சங்கமரின் இரு புதல்வர்களான ஹரிஹரர், புக்கர் ஆகியோர் ஹொய்சாள அரசரிடம் சில காலம் பணி செய்த பின்னர் தங்களை சுதந்திர அரசர்களாக நிலைநிறுத்திக் கொண்டு 1336இல் புதிய அரசுக்கான அசித்தளத்தை அமைத்தனர்.
 • இந்நிகழ்வு ஹொய்சாளர் அரசர் மூன்றாம் பல்லாலர், மதுரை சுல்தானால் கொல்லப்பட்ட பின்னர் நடைபெற்றிருக்க வேண்டும். தொடக்கத்தில் துங்கபத்திரை நதியின் வடக்குக் கரையில் அனகொண்டி அருகே தலைநகர் அமைந்திருந்தது.
 • ஆனால் விரைவில் ஆற்றின் தென்கரையில் அமைந்திருந்த ஹொய்சாள நகரமான ஹொசபட்னா (ஹம்பிக்கு அருகே) என்னும் இடத்திற்கு மாற்றபட்டது. தலைநகம் விரிவுபடுத்தப்பட்ட பின்னர் வெற்றியின் நகரம் என்ற பொருளில் விஜயநகரம் எனப் புதிய பெயர் சூட்டப்பட்டது. இதன் பின்னர் அவர்கள் தங்களை விஜயநகர அல்லது கர்நாடக-விஜயநகர அரசர்களாகப் பிரகடனப்படுத்திக் கொண்டனர்.
 • 1346ஆம் ஆண்டு ஹரிஹரரின் முடிசூட்டுவிழா கொண்டாடப்பட்டது. வரலாற்றறிஞர்கள் ஹரிஹரர், புக்கர் தொடங்கிய இவ்வரச வம்சத்தை அவரின் தந்தையாரின் பெயரில் அல்லது மூதாதையரின் பெயரில் சங்கம வம்சம் என அழைத்தனர்.
 • விஜயநகர அரசர்கள், சாளுக்கியரின் முத்திரையான பன்றி (வராகம்) உருவத்தைத் தங்களது அரச முத்திரையாகக் கொண்டனர்.
 • விஜயநகர அரசு நான்கு அரச வம்சத்து அரசர்களால் முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆளப்பட்டது. சங்கம வம்சம் (1336 – 1485), சாளுவ வம்சம் (1485 – 1505), துளுவ வம்சம் (1505 – 1570), ஆரவீடு வம்சம் (1570 – 1650) என இவ்வரசின் வரலாற்றை நான்கு கட்டங்களாக விவரிக்கலாம்.
 • தொடக்கத்தில் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் உள்ளூர் தலைவர்களால் ஆளப்பட்டு வந்த பல சிற்றரசுகளைப் போலவே விஜயநகர அரசும் இருந்தது. பதிமூன்றாம் நூற்றாண்டின் பெரிய அரசுகளான தமிழ்நாட்டில் பாண்டியர், கர்நாடகத்தைச் சேர்ந்த ஹொய்சாளர், ஆந்திர காகத்தியர் ஆக்கிய மூன்று அரசுகளும் பதினான்காம் நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டுகளில் தில்லி சுல்தானியத்தின் படையெடுப்புகளால் அழிவுற்று பெரும் அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்தியது.
 • குழப்பமும் கொந்தளிப்பும் நிறைந்த இச்சூழலை சங்கம வம்சத்தை சேர்ந்த ஹரிஹரர் முதலான ஐந்து சகோதரர்களுக்கு தங்கள் பகுதிகளை ஒருங்கிணைக்கவும் விரிவாக்கம் செய்யவும் வாய்ப்பினை வழங்கியது.
 • மேலும் சற்றே முன்னதாக உருவாக்கப்பட்ட மதுரை சுல்தானியமும், 1347இல் உருவான பாமினி அரசும் தில்லியின் பிடியிலிருந்து விடுபட்டு சுதந்திர அரசுகளாயின. தில்லி சுல்தானியமே பலவீனம் அடைந்ததால் அது தென்னிந்தியாவின் மேல் அதிக ஆர்வம் காட்டவில்லை.
 • விஜயநகர அரசு உருவான நாற்பதாண்டுகளுக்கு உள்ளாகவே ஐந்து சகோதரர்களும் வெவ்வேறு மேற்கொண்ட படையெடுப்புகளின் விளைவாகக் குறுநில அரசு என்ற நிலையிலிருந்து பெரிய அரசாக மாறியது.
 • முதலில் கர்நாடாவில் ஹொய்சாள அரசின் இதயமாக இருந்த பகுதிகள் விஜயநகரோடுஇணைக்கப்பட்டன. தொடர்ந்து கர்நாடகாவின் கடற்கரைப் பகுதிகள் கைப்பற்றப்பட்டன. அவை இறுதிவரை நாட்டின் முக்கியப் பகுதியாகவே இருந்தன.
 • பல துறைமுகங்களைச் சென்றடையும் வாய்ப்பினை இப்பகுதி கொண்டிருந்ததால் இப்பகுதியின் பிரதானிகள் அல்லது ஆளுநர்கள் இப்பகுதியின் நிர்வாகத்தில் அக்கறை செலுத்தினர்.
 • முதலாம் புக்கரின் ஆட்சியின்போது தமிழகத்தின் தொண்டை மண்டலப் பகுதியின் மீது கவனம் திரும்பியது. தமிழகத்தின் வட மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டலப் பகுதியை சம்புவராயர் ஆண்டு வந்தனர்.
 • இளவரசர் கம்பணர்-ஆல்(வழக்கமாக குமார கம்பணர் என்பர்) தன் நம்பிக்கைக்குரிய தளபதி மாரையா நாயக்கரின் உதவியுடன் இப்பணியை வெற்றிகரமாக முடித்தார்.
 • மேலும் மதுரை சுல்தானை 1370இல் கொன்றதன் மூலம் மதுரை சுல்தானிய ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்த பெருமையும் குமார கம்பண்ணாவைச் சாரும். இச்செய்தி குமார கம்பண்ணாவின் மனைவி கங்காதேவி சமஸ்கிருத மொழியில் எழுதிய ‘மதுரா விஜயம்’ எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 • ஆனால் மதுரை உள்ளிட்ட பாண்டிய நாடு அப்போது அரசோடு இணையவில்லை. நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் 500 வாக்கில் பாண்டிய நாடு விஜயநகர அரசின் ஒரு பகுதியானது.
 • அதுவரையிலி, தமிழகத்தின் வடபகுதிகளும் காவேரி வடிநிலப் பகுதி வரையிலான மத்தியப் பகுதிகளுமே சங்கம – சாளுவவம்ச அரசுகளின் நேரடி நிர்வாகத்தின் கீழிருந்தன.
 • சில மரபுக் கதைகளின்படி புகழ்பெற்ற சைவத் துறவியும், சமஸ்கிருத அறிஞருமான வித்யாரண்யரின் அறிவுறுத்தலுக்கு இணங்க ஹரிஹரரும் புக்கரும் சுல்தான் துக்ளக்கிடம் செய்துவந்த பணியிலிருந்து விலகி, சுல்தானால் சிறை பிடிக்கப்பட்டபோது முஸ்லீம் மதத்திற்கு மாறியிருந்த இவர்கள் மீண்டும் இந்துக்களாக மாறினர் என்று கூறப்படுகிறது. விஜயநகரப் பேரரசு நிறுவியதில் வித்யாரண்யர் முக்கியப் பங்காற்றினார். ஆனால் இது சந்தேகத்திற்குரியது என்பர். ஏனெனில் சில கல்வெட்டுச் சான்றுகளின்படி வித்யாரண்யர் பதினான்காம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்தவர். அதாவது விஜயநகரப் பேரரசு உருவான அறுபது ஆண்டுகளுக்குப் பின்னர் வாழ்ந்தவர்.

விஜயநகர் – பாமினி மோதல்

 • தொடக்கத்திலிருந்தே பாமினி விஜயநகர அரசுகள் தொடர்ந்து மோதிக் கொண்டன. இடங்களைக் கைப்பற்றுதல், கப்பம் வசூலித்தல், குதிரை வாணிகத்தின் மேலான கட்டுப்பாடு ஆகியவற்றில் ஏற்பட்ட போட்டியே மோதல்களுக்கான முக்கியக் காரணங்களாகும்.
 • கிருஷ்ணா, துங்கபத்திரை நதிகளுக்கு இடைப்பட்ட வளம் மிக்க ரெய்ச்சூர் பகுதியை இணைத்துக்கொள்ளவும், மேலாதிக்கம் செலுத்தவும் இருவருமே விரும்பினர். ஆனால் இருவராலும் முழுமையான வெற்றியைப் பெற இயலவில்லை.
 • நிலையற்ற சிறிய வெற்றிகளுக்காகப் பெருமளவில் ரத்தம் சிந்தப்பட்டது. சில வரலாற்று ஆய்வாலர்கள் இந்து விஜயநகரத்திற்கும் இஸ்லாமிய பாமினி அரசுகளுக்கு இடையே நிலவிய மதப் பகைமையே தொடர்ந்த போர்களுக்கான அடிப்படைக் காரணமென்று கருதுகின்றனர்.
 • ஆனால் உண்மையில் விஜயநகர அரசர்கள் முஸ்லீம்கள் அல்லாத இந்து அரசுகளான வாராங்கல், கொண்டவீடு, ஒரிசா ஆகியவற்றுடன் போரிட்டபோது முஸ்லீம் அரசுகள் சில சமயம் விஜயநகருக்கு ஆதரவாகவும் சில சமயம் எதிர்தரப்புக்கு ஆதரவாகவும் பங்கேற்றனர்.
 • கோவா மற்றும் ஏனைய துறைமுகங்கள் வழியாக நடைபெற்ற குதிரை வாணிகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதில் ஏற்பட்ட போட்டி இப்போர்களுக்கு மற்றொரு காரணமாகும்.
 • தொடர்ந்து போரிட்டுக்கொண்டாலும் கிருஷ்ணா நதியே ஏறக்குறைய இவ்விருவரையும் பிரிக்கும் எல்லைக் கோடாக அமைந்திருந்தது.
 • ஆந்திராவின் கடற்கரைப் பகுதிகளில் அதிகாரத்திற்கான போட்டி ஒரிசாவைச் சேர்ந்த கஜபதி அரசுக்கும் விஜயநகருக்குமிடையே நடைபெற்றது.
 • இரண்டாம் தேவராயர் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்வரை இப்பிரச்சனையில் விஜயநகரால் பெரும் வெற்றி என எதையும் பெற இயலவில்லை.
 • இரண்டாம் தேவராயர் (1422 – 46) ஒரியர்களைச் சில போர்களில் தோற்கடித்தார். இப்போர்கள் அனைத்தும் கப்பம் வசூல் செய்வதற்காகவே நடைபெற்றன. இடங்கள் கைப்பற்றப்பட்டு இணைக்கப்படவில்லை. சங்கம வம்ச அரசர்களுள் மிகச் சிறந்த அரசர் இரண்டாம் தேவராயர் ஆவார்.
 • தன்னுடைய குதிரைப் படையின் வலிமையைப் பெருக்குவதற்காகப் பயிற்சி பெற்ற முஸ்லீம் குதிரைப்படை வீரர்களைத் தனது படைகளில் சேர்த்துக் கொண்டார்.
 • இரண்டாம் தேவராயரின் காலத்தில் இங்கு வந்த பாரசீக நாட்டின் தூதுவர் அப்துர் ரஸாக் கொச்சி சாமரின் அரசவைக்கும் விஜயநகரத்திற்கும் வருகை தந்தார். இரண்டாம் தேவராயர் மிகப்பெரும் பகுதியைக் கட்டுப்படுத்தினார் என்று குறிப்பிடுகின்றார். இரண்டாம் தேவராயர் இலங்கை அரசனிடமிருந்தும் கப்பம் பெற்றார்.
 • இரண்டாம் தேவராயருக்குப் பின்னர் பிரச்சனைகள் தலைதூக்கின. வாரிசுரிமைச் சண்டைகளும் திறமையற்ற அரசர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதின் விளைவாக கஜபதி அரசர்கள் ஆந்திராவின் கடற்கரைப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தினர்.
 • 1460-65க்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் கஜபதி படைகள் பலமுறை தாக்குதல்களை மேற்கொண்டன. மேலும் திருச்சிராப்பள்ளி வரை வெற்றிகரமாகப் படையெடுத்து வந்த கஜபதி படைகள் பெரும் அழிவுகளை ஏற்படுத்தியதோடு கோவில்களின் செல்வத்தையும் கொள்ளையடித்தன.
 • இச்சூழலை சாதகமாகப் பயன்படுத்திய குறுநில மன்னர்கள் சுதந்திர அரசர்களாயினர். சாளுவ வம்ச அரசர்களின் எழுச்சி வரை தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி பகுதிகளில் திருமலைத்தேவர், கோனேரித்தேவர் போன்ற குறுநில மன்னர்கள் ஒரு நில பத்தாண்டுகள் சுதந்திர அரசர்களைப் போல ஆட்சி நடத்தினர்.
 • காலத்தின் நகர்வில் அரசியல் அதிகாரம் நம்பிக்கைக்குரிய தளபதி சாளுவ நரசிம்மரின் கைகளுக்குச் சென்றது. அவர் கஜபதிகளிடமிருந்து நாட்டைக்காத்து, ஆந்திரக் கடற்கரை பகுதிகளை மீட்டார்.
 • 1485 இல் அரசாட்சியைக் கைப்பற்றி தன்னையே அரசரென அறிவித்து, குறுகிய காலமே ஆட்சி செய்து சாளுவ வம்சத்தின் ஆட்சியைத் தொடங்கி வைத்தார். அவருடைய தளபதியும் மாபெரும் போர்வீரருமான நரச நாயக்கர் அவருக்குத் துணை நின்றார். அவர் தென்பகுதியில் கலகத்தில் ஈடுபட்ட உள்ளூர் தலைவர்களை அடக்க முயன்றார். 1491இல் சாளுவநரசிம்மர் மரணமடைந்தார்.
 • அதற்கு முன்பாக தனது இளம் வயது மகன்களை நரச நாயக்கரின் பாதுகாப்பில் விட்டுச் சென்றார். உண்மையான ஆட்சி அதிகாரம் தனது கைகளுக்கு வரப்பெற்ற நரச நாயக்கர் தனது மரணம் வரையிலும் நாட்டைப் பாதுகாக்க மேற்கொண்டார்.
 • 15056இல் அவருடைய மூத்த மகன் வீரநரசிம்மர் துளுவ வம்சத்தின் ஆட்சியைத் தொடங்கி வைத்தார். சிறிது காலமே ஆட்சி செய்தாலும் அவரது ஆட்சிக் காலம் முக்கிய நிகழ்வுகளைக் கொண்டதாய் அமைந்தது. அவரைத் தொடர்ந்து அவருடைய தம்பி கிருஷ்ணதேவராயர் அரியணை ஏறினார்.

கிருஷ்ணதேவராயர் (1509 – 1529)

 • கிருஷ்ணதேவராயர் விஜயநகர அரசர்களில் மகத்தானவராகக் கருதப்படுகிறார். தனது தந்தையும் அண்ணனும் அமைத்துக் கொடுத்த வலுவான ராணுவ அடித்தளத்தின் மீது அவர் ஒரு பேரரசைக் கட்டினார்.
 • தனது நாட்டின் பெருமைக்குக் குறை ஏற்படாமலிருக்கப் பல படையெடுப்புகளை மேற்கொண்டார். தனது ஆட்சியின் தொடக்கத்தில் மைசூருக்கு அருகேயிருந்த கலக மனப்பான்மை கொண்ட உம்மத்தூர் குறுநில மன்னனைத் தோற்கடித்துப் பணியச் செய்தார்.
 • இதனைத் தொடர்ந்து அவர் இரு முனைகளில் போரிட வேண்டியிருந்தது. ஒன்று பரம்பரை எதிரிகளான பாமினி சுல்தான்களுடன், மற்றொன்று ஒரிசாவின் கஜபதி அரசர்களுடன். அவருடைய கிழக்குத்திசை படையெடுப்பின்போது கஜபதி அரசர்களின் வசமிருந்த உதயகிரி கோட்டையைப் போன்று பல கோட்டைகள் கைப்பற்றப்பட்டதைப் பற்றிப் பல கல்வெட்டுகள் தெளிவாக விளக்குகின்றன. முடிவில் அவர் தனது வெற்றித் தூணை சிம்மாச்சலத்தில் நிறுவினார்.
 • பாமினி படைகளை முறியடிப்பதற்காகக் கிருஷ்ணதேவராயர் ஒன்றுக்கும் மேற்பட்ட படையெடுப்புகளை ஆண்டுதோறும் மேற்கொள்ள நேர்ந்தது. ஏனெனில் ஆண்டுக்கு ஒருமுறை என்ற கணக்கில் பாமினிப் படைகள் விஜயநகரை ஊடுருவின.
 • ஒரு சில படையெடுப்புகளின் போது, மலபார், கொங்கணக் கடற்கரைப் பகுதிகளில் தங்களுடைய அதிகாரத்தை நிறுவுதற்கு முயன்றுகொண்டிருந்த போர்த்துகீசியர் விஜயநகருக்கு இராணுவ உதவிகளைச் செய்தனர்.
 • மேலும் பத்கல் என்னும் இடத்தில் கோட்டை கட்டிக்கொள்ளும் உரிமையைப் பெற்றனர். அவர் மிகப்பெரும் வெற்றியாளராக இருந்தபோதிலும் கிருஷ்ணதேவராயர் பெற்ற வெற்றிகள், தங்களுக்கிடையே தொடர்ந்து போர் செய்து கொண்டிருந்த தக்காண சுல்தானிய அரசுகளை ஒற்றுமை கொள்ளச் செய்தன.
 • கிருஷ்ணதேவராயர் விஜயநகர அரசின் மகத்தான அரசர் எனப் போற்றப்படுவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. ஸ்ரீசைலம், திருப்பதி, காளஹஸ்தி, காஞ்சிபுரம், திருவண்ணாலமல், சிதம்பரம் ஆகிய இடங்களிலுள்ள சைவ, வைணவக் கோவில்களுக்கு பெருமளவில் கொடையளித்தார். பல கோவில்களில் அவர் எழுப்பிய கோபுரங்கள் இன்று வரை உள்ளன.

 • விஜயநகருக்கு வருகை தந்த சமகாலத்து வெளிநாட்டுப் பயணிகளான நூனிஸ், பயஸ் போன்றோர் அவருடைய ஆளுமை குறித்தும் விஜயநகரத்தின் உயர்நிலை , செல்வச் செழிப்பு ஆகியன பற்றியும் பாராட்டுகளை விட்டுச் சென்றுள்ளனர்.
 • அவருடைய அரசவையை அல்லசானி பெத்தண்ணா, நந்தி திம்மண்ணா போன்ற தலைசிறந்த புலவர்கள் அலங்கரித்தனர். கிருஷ்ண தேவராயரே பெரும் அறிஞராக கருதப்படுகிறார். ஆமுக்தமால்யதா (ஆண்டாளின் கதை) எனும் நூலை இயற்றியுள்ளார். ஆனாலும் அவருடைய தலைசிறந்த சாதனை, ஒரு மதிநுட்பம் மிக்க நிர்வாகியாக அவர் நாயக்கர் அல்லது அதற்கு சட்ட அங்கீகாரத்தையும் கொடுத்ததாகும். அது நிர்வாக முறை என்ற தலைப்பின் கீழ் விளக்கப்பட்டுள்ளது.

தலைக்கோட்டைப்போர் (1565)

 • கிருஷ்ணதேவராயர் இறந்தபோது அவருடைய மகன் குழந்தையாக இருந்ததால் அவருடைய சகோதரர் அச்சுததேவராயர் ஆட்சிப் பொறுப்பேற்றார். ஆனால் விரைவிலேயே வாரிசு உரிமைப் பிரச்சனை தலை தூக்கியது.
 • கிருஷ்ணதேவராயரின் மருமகனான ராமராயர் அச்சிறு வயது இளவரசனுக்குப் பட்டம் சூட்டுவதன் வழியாக அரசியல் மேலாதிக்கம் செலுத்த விரும்பினார்.
 • இருந்தபோதிலும் அச்சுதராயருக்கு செல்லப்பா (சாளுவநாயக்கர் என்றும் அறியப்படுபவர்) என்பாரின் ஆதரவு இருந்தது. அக்கால கட்டத்தில் சிறப்பிடம் வகித்த இவர் தமிழகத்தின் பெரும்பகுதியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
 • காலப்போக்கில் இவரே கிளர்ச்சியில் ஈடுபட அச்சுதராயர் பெரும்படையோடு தென்னகம் வந்து இவரை அடக்கினார். அச்சுத தேவராயர் பாமினி சுல்தான்களோடும் சில போர்களை மேற்கொண்டார்.
 • 1542இல் அவர் மரணமடைந்தபோது அவருடைய ஒன்றுவிட்ட சகோதரர் அரச பதவியேற்று ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் ஆண்டார் (1542 -70). ஆனால் உண்மையான அதிகாரம் ராமராயரின் கைகளில் இருந்தது.
 • பல நெருங்கிய உறவினர்களின் (ஆரவீடு வம்சாவளியினர்) ஆதரவு அவருக்கு இருந்தது. அரசின் பல முக்கியப் பொறுப்புகளில் அவர் தன் உறவினர்களை அமர்த்தினார்.
 • சிறந்த வீரரும் ராணுவ வல்லுநருமான ராமராயர் பாமினி சுல்தான்களை ஒருவரோடு ஒருவரை மோதச் செய்யும் திறமை பெற்றிருந்தார். போர்த்துகீசியரோடு ஒப்பந்தம் மேற்கொண்டதன் மூலம் பீஜப்பூர் அரசருக்குக் குதிரைகள் அனுப்பப்படுவதை நிறுத்தினார்.
 • சில காலம் கழித்து கோல்கொண்டா, அகமதுநகர் சுல்தான்களுக்கு எதிராக பீஜப்பூரோடு கைகோர்த்தார். இத்தகைய பிரித்தாளும் சூழ்ச்சி விஜயநகருக்கு எதிராக இறுதிப்போர் புரிய கைகோர்த்தனர்.
 • 1565இல் தலைக்கோட்டை அல்லது ராக்சஷி-தங்கடி போர் நடைபெற்றது. தனது வயது முதிர்வையும் பொருட்படுத்தாது ராமராயரே படைப்பிரிவுகளுக்குத் தலைமை ஏற்று தனது சகோதரர்கள் , ஏனைய உறவினர்களோடு போர்க்களம் புகுந்தார்.
 • போரின் இறுதிக் கட்டத்தில் விஜயநகரம் தோல்வியடைந்தது. ராமராயர் கைது செய்யப்பட்டு உடனடியாகக் கொல்லப்பட்டார். வெற்றிபெற்ற பாமினிப் படைகள், தங்களது வரலாற்றில் முதன்முறை விஜயநகரத்துக்குள் புகுந்தன. பல மாதங்கள் அந்நகரைக் கொள்ளையடித்துச் சூறையாடி பாழ்படுத்தின.
 • பொதுவாக இப்போர் விஜயநகர் அரசின் முடிவின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அரசர் சதாசிவராயரும் அவருடைய வீரர்களும் பெனுகொண்டாவுக்குத் தப்பிச் சென்றனர்.
 • ராமராயரின் சகோதரர் திருமலை 1570இல் தன்னை அரசராக அறிவித்து நான்காவது அரசமரபான ஆரவீடு வம்சத்தின் ஆட்சியைத் தொடங்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து அவருடைய மகன்களும் பேரன்களும் அளவில் சுருங்கிய அரசை இருதலைமுறை காலத்திற்கு 1630 வரை ஆட்சி புரிந்தனர்.
 • வேறுசில அரசர்கள் நிரந்தரத் தலைநகரமில்லாமல் நாடோடிகளாகத் திரிந்து 1670 வரை ஆட்சி புரிந்தனர். பல நாயக்கத் தலைவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உண்மையான அதிகாரத்தோடு ஆட்சி புரிந்தனர். அவர்களில் சிலர் அரசரை ஆதரித்தனர். வேறுசிலர் அரசரை எதிர்த்தனர். இவ்விரு பிரிவுகளுக்கிடையே சில போர்கள் நடைபெற்றனர்.
 • 1601இல் அரசு விசுவாசிகள் பெரும்பேடு என்னும் ஊரைச் சேர்ந்த யச்சம நாயக்கர் தலைமையிலும் எதிர் தரப்பினர் வேலூர் நாயக்கர் (வேலூர்) தலைமையிலும் உத்திரமேரூரில் கடுமையான போரில் ஈடுபட்டனர். இப்போரில் சுதந்திர அரசுகளாக மாறிவிட்ட தஞ்சாவூர், மதுரை, செஞ்சி நாயக்க அரசுகள் வேலூர் நாயக்கரை ஆதரித்தனர்.

நிர்வாகம்

 • அரசரே அனைத்து அதிகாரங்களையும் பெற்றவராவார். அவரே படைத்தளபதியும் ஆவார். அவருக்குப் பல உயர்மட்ட அதிகாரிகள் உதவி செய்தனர். முதலமைச்சர் மகாபிரதானி எண்றழைக்கப்பட்டார்.
 • தளவாய் (தளபதி), வாசல் (அரண்மனைப் பாதுகாவலர்), ராயசம் (செயலர்/ கணக்கர்), அடைப்பம் (தனி உதவியாளர்), காரிய கர்த்தா (செயல் முகவர்) போன்ற கீழ்நிலை அதிகாரிகளுக்கு இவரே தலைமையாவார்.
 • முதலாம் ஹரிஹரரும் அவரைத் தொடர்ந்து ஆட்சி செய்தவர்களும் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை ஒருங்கிணைத்து அவற்றில் நிர்வாக அமைப்புகளை உருவாக்க முயன்றனர்.
 • ராஜ்யா என்னும் மண்டலங்களாக நாடு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு ராஜ்ஜியத்திற்கும் ஒரு பிரதானி (ஆளுநர்) நியமிக்கப்பட்டார். ஹொய்சாள, ராஜ்யா, அரகா, பரகூர் , மங்களூர், முளுவாய் ஆகியன முக்கியமான ராஜ்யாக்களாகும்.
 • புதிய பகுதிகள் கைப்பற்றப்பட்டு இணைக்கப்பட்ட போது புதிய ராஜ்யாக்கள் உருவாயின. 1400இல் தமிழகப் பகுதிகளில் சந்திரகிரி, படைவீடு, வலுதலம்பட்டு, திருச்சிராப்பள்ளி, திருவாரூர் என ஐந்து ராஜ்யங்கள் இருந்தன.
 • பிரதானி அரசவை உறுப்பினராகவோ அல்லது ராணுவ அதிகாரியாகவோ இருப்பார். இவர் அரச குடும்பத்திற்கு உறவினர் அல்ல. நிர்வாகத்தில் அவருக்கு உதவி செய்யக் கணக்கர்களும் ராணுவ அதிகாரிகளும் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.
 • ஒவ்வொரு ராஜ்யமும் சீமை, ஸ்தலம், கம்பனா எனும் சிறிய நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. மிகச்சிறிய நிர்வாக அலகு கிராமமாகும். துளுவ வம்சத்தைச் சேர்ந்த கிருஷ்ணதேவராயரால் நாயக்கர் முறை அறிமுகமானபோது ராஜ்யங்கள் தங்களது நிர்வாக, வருவாய் முக்கியத்துவத்தை இழந்தன.

நாயக்க முறை

 • நாயக்க என்னும் சொல் தெலுங்கு, கன்னடப் பகுதிகளில் பதிமூண்றாம் நூற்றாண்டிலிருந்தே இராணுவத்தலைவர் அல்லது இராணுவவீரர் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு வந்தது.
 • பதிமூன்றாம் நூற்றாண்டில் காகத்திய அரசில் ஒரு நாயக்கின் இராணுவ சேவைக்குப் பதிலாக ஒரு குறிப்பிட்ட பகுதியின் வருவாயை வழங்கும் முறை நடைமூறையில் இருந்தது, இது தில்லி சுல்தானியத்தில் பின்பற்றப்பட்ட ‘இக்தா’ முறையைப் போன்றதாகும்.
 • ஆனால் விஜயநகர அரசில் இராணுவ சேவைக்குப் பதிலாக வருவாய் ஈட்டித்தரும் நிலப்பகுதிகளை வழங்கும் முறை அல்லது அதற்குச் சற்று முன்னதாகவே தொடங்கிற்று. கல்வெட்டுகள் இம்முறையைத் தமிழில் நாயக்கட்டணம் எனவும், நாயக்தானம் என கன்னடத்திலும், நாயன்கரமு எனத் தெலுங்கிலும் குறிப்பிடுகின்றன. இம்முறையானது கிருஷ்ணதேவராயர், அச்சுததேவராயர் ஆகியோரின் ஆட்சியின்போது நிறுவன வடிவம் பெற்றது.
 • கல்வெட்டுச் சான்றுகளும் நூனிச், பயஸ் போன்ற வெளிநாட்டவரின் பயணக் குறிப்புகளும் இதை உறுதி செய்கின்றன.
 • விஜயநகர அரசு இருநூற்றுக்கும் மேற்பட்ட நாயக்குகளாக[ப் பிரிக்கப்பட்டிருந்ததாகவும் அந்நாயக்குகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் குதிரை, காலாட்படை வீரர்களைப் பராமரித்து தேவைப்படும் நேரத்தில் அரசருக்கு இராணுவச் சேவை செய்ய வற்புறுத்தப்பட்டார்கள் எனவும் நூனிஸ் குறிப்பிடுகின்றார்.
 • மேலும் அவர்கள் ஒவ்வொரு ஆண்டிலும் சில குறிப்பிட்ட ஒன்பது நாள் இராமநவமித் திருவிழா போன்ற சமயங்களில் அரசருக்குக் குறிப்பிட்ட அளவு வருவாயை வழங்க வேண்டும். நூனிஸின் கூற்றை ‘ராயவாசகமு’ என்னும் தெலுங்கு நூல் உறுதிப்படுத்துகிறது. இந்நூல் கிருஷ்ணதேவராயரின் காலத்தில் இம்முறை நடைமுறையில் இருந்ததைக் கூறுகிறது.
 • பிற்காலத்தைச் சேர்ந்த பாளையக்காரர்களின் வம்சாவளிகள் (அவர்களில் பெரும்பாலோர் பழைய நாயக்கர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்) இந்நாயக்க முறையானது கிருஷ்ணதேவராயர் காலத்தில் நிறைவு பெற்றது எனக் குறிப்பிடுகின்றன.
 • பெரும்பாலான நாயக்கர்கள் கன்னடம், தெலுங்கு பேசுபவர்கள், இவர்கள் போர்த்தளபதிகளாகவும் இருந்தனர். உள்ளூர்த் தலைவர்களாகவும் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.
 • நாயக்குகள் பிராமண, பிராமணர் அல்லாத பல சாதிகளைச் சேர்ந்தவர்களாயிருந்தனர். பிராமணரல்லாத நாயக்குகள் பல்வேறு சமூகப் பின்னணியைக் கொண்டிருந்தனர். போர்புரியும் மரபினைச் சார்ந்தவர்களாகவும், மேய்ச்சல் தொழில் செய்பவர்களாகவும், வனங்களில் வாழும் குலத்தோராகவும் (யாதவர், பில்லமர்), விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர்களாகவும் (ரெட்டி) வணிகர்களாகவும் (பலிஜா) இருந்தனர்.
 • கிருஷ்ணதேவராயரிடம் பணிபுரிந்த செல்லப்பா போன்ற மிகச்சிறந்த நாயக்குகள் பிராமணர்கள் ஆவர்.
 • கிருஷ்ணதேவரைப் போன்ற வலிமையான அரசர்கள் இருந்தவரை இம்முறை சிறப்பாகச் செயல்பட்டது. இந்நாயக்குகள் நாயக்தானம் எனப்பட்ட தங்களின் பகுதிகளில் உற்பத்தியைக் கட்டுப்படுத்தினர். ‘பேட்டை’ எனும் வணிக மையங்களை நிருவினர்.
 • விவசாயிகளையும் கைவினைஞர்களையும் தங்கள் பகுதிகளில் குடியேற ஊக்குவித்து வரிச் சலுகைகள் வழங்கினர். நீர்ப்பாசன வசதிகளை உருவாக்கிப் பராமரித்தனர். அவர்களில் பலர் உயர்மட்டப் பணிகளில் (ஆளுநர், படைத்தளபதி, கணக்கர்) அமர்த்தப்பட்டு அரசரின் பிரதிநிதிகளாகச் செயல்பட்டனர்.
 • தலைக்கோட்டை போருக்குப் பின்னர் பெரும்பாலான நாயக்குகள் சுதந்திரமாகச் செயல்படத் துவங்கினர். அவர்களில் மதுரை, தஞ்சாவூர், இக்கேரி போன்ற நாயக்குகள் வலுவான அரசுகளை உருவாக்கிக் குறுநிலத் தலைவர்களைக் கட்டுப்படுத்தினர். பதினேழாம் நூற்றாண்டு பெரும் நாயக்க அரசுகளின் நூற்றாண்டாகும்.

சமூகமும் பொருளாதாரமும்

 • தொடர் போர்களும் அவற்றின் விளைவாக ஏற்பட்ட அளவிலாத் துயரங்களும் தொடக்ககால, இடைக்கால சமூகங்களின் பொதுவான அம்சங்களாகும். பாமினி விஜயநகர் அரசுகளின் காலமும் இதற்கு விதிவிலக்கல்ல.
 • கண்களால் பார்த்த சாட்சியங்களின் குறிப்புகள் அதிக அளவில் கிடைப்பதால் இவ்வம்சம் பெரியதாகவே தெரிகிறது. மற்றொரு முக்கியமான, நூற்றாண்டுகளைக் கடந்து நீடித்திருக்கும் விளைவு மக்கள் இடம் விட்டு இடம் சென்றதும் புலம் பெயர்ந்ததுமாகும். இப்பாடத்தில் நாம் காணும் மூன்று நூற்றாண்டு காலப்பகுதியில் அனைத்து இடங்களிலும் இதுபோன்ற குடிபெயர்வைக் காணமுடிகிறது.
 • பாமினி அரசவையில் நடைபெற்ற மோதல்களுக்குத் தக்காணப் பகுதிகளில் துருக்கியர், ஆப்கானியர், பாரசீகர் ஆகியோர் குடியேறியதே காரணமாயிற்று. விஜயநகரப் பகுதிகளைப் பொறுத்த அளவில் கன்னட., தெலுங்கு போர் மரபுச் சமூகங்களும் அவர்களைச் சேர்ந்தோரும் தமிழகப் பகுதிகளிலும் ஏனைய பகுதிகளிலும் குடியேறினர்.
 • பெரும்பாலான நாயக்கத் தலைவர்கள் இவ்விரு மொழியினரே. மற்றொரு முக்கிய விளைவு ஆளும் வர்க்கத்தினருக்கும் ஆட்சி செய்யப்பட்டவர்களுக்கும் இருந்த மிகப் பெரிய இடைவெளியாகும். அனைத்து அயல்நாட்டு பயணிகளும் அரசர்கள், அரசு அதிகாரிகள், சமூகத்தின் மேல்மட்டத்தில் உள்ளவர்கள், விஜயநகரம்., பீஜப்பூர் போன்ர நகரங்களில் வாழ்ந்தோரின் செல்வச் செழிப்பையும் ஆடம்பர வாழ்வையும் குறிப்பிடும்போதே பெருவாரியான மக்கள் வறுமையில் வாடியதையும் குறிப்பிட்டுள்ளனர். அடிமைமுறை நிலவியதையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 • மக்களின் மீது வரிவிதிப்பின் மூலமே அரசு வருமானத்தைப் பெற்றது. சங்கம வம்ச அரசர்களின் காலத்தில் விஜயநகரத்தின் ஆட்சி புதிய பகுதிகளுக்குப் பரவியபோது வரிவசூல் அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டதால் உழைக்கும் மக்கள் கிளர்ச்சி செய்ததாகத் தெரிகிறது.
 • அப்படிப்பட்ட ஒரு கிளர்ச்சி 1430இல் தமிழ்நாட்டின் மையப்பகுதிகளில் நடைபெறவுள்ளது. இக்கீளர்ச்சியில் அடிப்படை உற்பத்தியாளர்கள் தங்கள் சாதி வேறுபாடுகளைப் புறந்தள்ளி ஒன்றுபட்டிருந்தனர்.
 • அரசு பிரதானி (ஆளுநர்) அவருடைய படைவீரர்கள் மற்றும் நிலப்பிரபுக்கள் உட்பட நியாயத்திற்குப் புறம்பாக அதிக வரி கட்டும்படி மக்களை வற்புறுத்தியதன் காரணமான இக்கிளர்ச்சி ஏற்பட்டது. விஜயநகர இளவரசர் இது விஷயத்தில் நேரடியாகத் தலையிட்டு மக்களைச் சமாதானப்படுத்தி வரித் தொகையைக் குறைத்ததாகக் கூறப்படுகிறது. பதினாறாம் நூற்றாண்டில், நாயக்க நிர்வாக முறையில் நாயக்குகள் நெசவு போன்ற கைவினைத் தொழில்களை வளர்ப்பதற்காக அவ்வப்போது வரிச்சலுகை வழங்கினர்.
 • விஜயநகர அரசின் காலத்தில் வேளாண் சாராத கைவினைத் தொழில் உற்பத்தி வியத்தகு வளர்ச்சியை அடைந்தது. பதிமூன்றாம் நூற்றாண்டு வரை பொருளாதாரம் பெருமளவில் வேளாண்மையைச் சார்ந்திருந்தது.
 • பணப் பொருளாதாரத்தின் தொடக்கத்தோடு, நாணயப் பணத்தின் பயன்பாடும், அதன் செலாவணியும் பலமடங்காகப் பெருகியது. சமூகத்தில் நெசவு செய்வோர் உலோக வேலை செய்வோர். கட்டடக் கலைஞர்கள் போன்ற கைவினைஞர்கள் முக்கியத்துவம் பெற்றனர்.
 • வேளாண் அல்லாத பிரிவுகளைச் சார்ந்த ‘பட்டடை’ அல்லது ‘காஸய-வர்க்கம்’ என்றழைக்கப்பட்ட இவர்கள் வரிகளைப் பணமாகவே வழங்கினர்.
 • தமிழகத்தின் வடபகுதி, ராயலசீமை, ஆந்திரக் கடற்கரைப்பகுதி ஆகியவற்றில் பெரும் எண்ணிக்கையில் வணிகமையங்களும் நெசவு மையங்களும் உருவாயின. இயல்பாகவே தென்னிந்தியத் துறைமுகங்களிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பண்டங்களில் ஜவுளி முக்கியப் பண்டமாக விளங்கியது.
 • பதினாறாம் நூற்றாண்டிலிருந்து ஜவுளி வணிகமானது இந்தியாவிற்கு வந்த போர்த்துகீசியர் மற்றும் ஏனைய ஐரோப்பிய வணிகர்களைப் பெரிதும் ஈர்த்த ஒன்றாகும்.

இராமநாதபுரம், புதுக்கோட்டை சிற்றரசுகள்

இராமநாதபுரம் சிற்றரசு மதுரை நாயக்க அரசர் முத்துகிருஷ்ணப்ப நாயக்கரால் பதினேழாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் துவங்கிவைக்கப்பட்டது. போர் புரியும் மரபினைக் கொண்டிருந்த இப்பகுதி வாழ் மக்கள் பாண்டிய சோழ விஜயநகர அரசர்களிடம் படை வீரர்களாகப் பணியாற்றினர். மேலும் திருநெல்வேலி, தென் தமிழகப் பகுதி ஆகியவற்றிலும் பரவினர். நாயக்க மன்னர்களின் படைகளிலும் பணியாற்றிய இவர்கள், பரம்பரைக் காவல்காரர்களாக கிராமங்கள், கோவில்கள் ஏனைய நிறுவனங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கும் பணியையும் செய்து வந்தனர். இராமேஸ்வரம் கோவில், உடையான் சேதுபதி (இராமேஸ்வரத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான நீர் இணைப்பின் அல்லது பாலத்தின் தலைவர் என்று பொருள்) என்பவரின் பாதுகாப்பின் கீழிருந்தது.

புதுக்கோட்டை ஒரு சிறிய சிற்றரசாக மதுரை மற்றும் தஞ்சாவூர் நாயக்க அரசுகளின் இடையில் அமைந்திருந்தது. முந்தைய காலத்தில் சோழ பாண்டிய அரசுகளுக்கிடையே இடைப்படு நாடாக இருந்துள்ளது. இராமநாதபுரம் பகுதி வாழ் மக்களைப் போலவே புதுக்கோட்டை பகுதி வாழ் மக்களும் போர் புரியும் மரபை சார்ந்தவர்களாவர். இதன் காரணமாகவே தொண்டைமான்களின் தலைமையில் இப்பகுதி ஒரு சிற்றரசு என்னும் மதிப்பைப் பெற்றது. இத்தொண்டைமான்கள் சேதுபதி, மதுரை, தஞ்சை நாயக்க அரசர்களின் அரண்மனைகளின் முக்கியப் பணிகளில் பணியாற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *