பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள் Notes 11th History

11th History Lesson 6 Notes in Tamil

6. பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள்

அறிமுகம்

வரலாற்றின் தொடக்க காலத்தில் மூன்று வலிமை வாய்ந்த மரபுவழி அரசர்கள் தமிழகத்தை ஆட்சி செய்தனர். சங்க இலக்கியம் மூவேந்தர்கள் என்று அவர்களைக் குறிப்பிடுகிறது. பல சங்கப் பாடல்கள் சோழ அரசர்களின் மரபு பற்றிக் குறிப்பிடுகின்றன. எனினும், சங்க காலத்திற்குப் பின், பொ.ஆ.9ஆம் நூற்றாண்டு வரை சோழர் குறித்த சான்றுகளை அறியமுடியவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட அசைவியக்கங்கள் இப்பகுதியில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்பட வழிவகுத்தன. அம்மாற்றங்கள் முடியாட்சி தோன்றி நிலைத்திருக்கக் காரணமாயின. அவற்றுள் ஒன்றுதான் பிற்காலச் சோழப் பேரரசு ஆகும்.

பிற்காலச் சோழரின் தோற்றத்துக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் ஒன்று வேளாண்மை விரிவாக்கம் ஆகும். இந்த விரிவாக்கம் ஆற்று வடிநிலங்களில் ஏற்பட்டது. இதன்மூலம் வேளாண் உற்பத்தி பன்மடங்கு பெருகியது. இந்த வேளாண் பெருவளர்ச்சி அபரிதமான உபரி தானிய உற்பத்திக்கு இட்டுச் சென்றது. ஆனால் இந்த உபரி சமமற்ற செல்வப் பகிர்வுக்கும் காரணமாயிற்று. தொடக்க காலத்தில் இருந்ததைப் போல் அல்லாமல் , சமூகம் படிப்படியாகப் பெரிய அளவில் வேறுபாடுகளுக்கு உள்ளானது. இதே காலகட்டத்தில், இந்தியாவின் வட பகுதியிலிருந்து அறிமுகமான மதங்கள், அவை சார்ந்த கோயில்கள் போன்ற நிறுவனங்களும் சிந்தனைப் போக்குகளும் புதிய சக்திகளாக வடிவெடுத்தன. பக்தி இயக்கத்துக்குத் தலைமை தாங்கிய நாயன்மார்களும், ஆழ்வார்களும் தமது கருத்தியலை பரப்புரை செய்தனர். இதேபோன்று, வடஇந்தியாவில் உருவான அரசியல் சிந்தனைகளும் நிறுவனங்களும் விரைவில் தெற்கில் பரவின. இம்மாற்றங்களின் ஒட்டுமொத்த விளைவாக இங்கு அரசு உருவானது. முடியாட்சி முறையைக் கொண்ட இவ்வரசுக்குப் பண்டைய சோழ மன்னனின் வழிவந்தவர்களாகத் தங்களை பறைசாற்றிக் கொண்டோர் தலைமையேற்றனர்.

சோழப் பேரரசு செல்வாக்கு இழந்ததும், வைகை ஆற்று வடிநிலமான மதுரை பகுதியில் பாண்டியர் ஆட்சி செய்யத் தொடங்கினர். பதினான்காம் நூற்றாண்டுவாக்கில் பண்டியரின் ஆட்சி வலிமை பெற்றது. சோழர் போலவே பாண்டியர்களும் வேளாண்மை, வணிகம் மூலம் பெரும் வருவாய் ஈட்டினர். இக்கால கட்டத்திலும் கடல் கடந்த வாணிபத்தின் விரிவாக்கம் தொடர்ந்தது. பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்த திருநெல்வேலியிலிருந்து மலபார் கடற்கரைப்பகுதிக்குத் தானியங்களும் பருத்தியும் பருத்தித்துணிகளும் காளைகளும் ஏற்றுமதி செய்யப்பட்டன. மேற்கு, தென்கிழக்கு ஆசியா பகுதிகளுடனும் வணிகத் தொடர்பு மேற்கொள்ளப்பட்டது. பாண்டிய மன்னர்கள் மத, பண்பாட்டு, அரசியல் கூறுகளைத் தொகுத்து உருவாக்கிய பண்பாட்டு மரபானது குப்த அரசர்கள் செவ்வியல் காலத்தில் உருவாக்கியதாகக் கருதப்படும் ஒற்றைப் பரிமாணப் பண்பாட்டில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாகும்.

I – சோழர்

சோழப் பரம்பரையின் தோற்றம்

 • சங்க காலத்துக்குப் பிறகு கிடைக்கும் ஆவணங்களின்படி, காவிரிப்பகுதியில் சோழர் பல்லவருக்குக் கீழ்நிலை ஆட்சியாளர்களாக இருந்துள்ளார்கள் எனத் தெரிகிறது. விஜயாலயன் (பொ.ஆ. 850-871) முத்தரையர்களிடமிருந்து காவிரி ஆற்றின் கழிமுகப்பகுதிகளை வென்றார். அவர் தஞ்சாவூர் நகரைக் கட்டமைத்து, 859இல் சோழ அரசை நிறுவினார்.
 • எனவே, வரலாற்றாய்வாளர்கள் இச்சோழர்களை பிற்காலச் சோழர் என்றும் பேரரசுச்சோழர் என்றும் குறிப்பிடுகிறார்கள். விஜயாலயனுக்குப் பின் வந்த சோழ அரசர்கள் தாங்கம் சங்க காலத்தின் புகழ்பெற்ற சோழ அரசனான கரிகாலனின் மரபில் வந்தவர்கள் எனச் செப்பேடுகளில் குறிப்பிட்டுள்ளனர்.
 • அவர்கள் தமது மரபு வழிப்பட்டியலில் ‘சோழ’ என்ற பெயருடைய அரசரைத் தமது மூதாதையராகக் குறிப்பிட்டுள்ளார்கள். கிள்ளி, கோச்செங்காணன், கரிகாலன் எனும் பெயர்களைக் கொண்ட சோழ அரசர்கள் தங்கள் கொடிவழியைச் சேர்ந்தவர்கள் என இச்செப்பேடுகளில் குறிப்பிட்டுள்ளார்கள்.
 • விஜயாலயகுக்குப் பின்வந்தோரில் முதலாம் பராந்தகன் (907 – 955) முதல் மூன்றாம் குலோத்துங்கன் வரையான அரசர்கள் சோழருக்குப் பெருமையும் புகழும் சேர்த்தனர்.
 • பராந்தகச் சோழன் நாட்டின் எல்லையை விரிவுபடுத்தினார். ஆட்சிமுறையின் அடித்தளத்தையும் விரிவாக்கினார்.
 • முதலாம் இராஜராஜனும் அவருடைய மகன் முதலாம் இராஜேந்திரனும் தங்கள் முன்னோடிகள் மூலம் ஏற்பட்டிருந்த வளர்ச்சிகளை ஒருங்கிணைத்து, தீபகற்ப இந்தியாவில் சோழரின் மேலாதிக்கத்தை நிறுவினர்.

சான்றுகள்

 • சோழர் தங்களது பரந்து விரிந்த பேரரசை ஆள்வதற்கு வலுவான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கியதுடன், பிற்கால வரலாற்றாய்வாளர்களுக்கு உதவும்வண்ணம் பெரும் எண்ணிக்கையிலான வரலாற்றுச் சான்றுகளையும் விட்டுச் சென்றுள்ளனர்.
 • செப்பேடுகளிலும் கல்லிலும் 10,000-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் சோழர் வரலாற்றுக்கான முதல்நிலைச் சான்றுகளாக உள்ளன. இந்த வரலாற்று ஆவணங்களில் பெரும்பான்மையானவை அரசர்களும் பிறரும் கோயில்களுக்கு வழங்கிய கொடை குறித்த தகவல்களாகவே உள்ளன.
 • அவற்றின் உள்ளடக்கத்தில் நிலப் பரிமாற்றங்கள், வரிகள் (விதிக்கப்பட்ட வரிகள், விலக்கப்பட்ட வரிகள்) ஆகியன குறித்த தகவல்களே அதிகம். ஆனால், பிற்காலக் கல்வெட்டுகள் சமூக வேறுபாடுகள் குறித்துக் குறிப்பிடுகின்றன.
 • அவை சமூகத்தில் சாதிகள், துணைச்சாதிகள் இருந்ததைக் காட்டுகின்றன. இவற்றின் வாயிலாக அன்றைய சமூகக் கட்டமைப்பு குறித்த தகவல்களை அறிய முடிகிறது. இவற்றுடன் செப்பேடுகளிலும் அரசர் ஆணைகள் காணப்படுகின்றன.
 • அவற்றிலும் குலவரலாறு போர்கள் வேற்றிகள் நிர்வாகப் பிரிவுகள், உள்ளாட்சி அமைப்பு, நில உரிமைகள், பல்வேறு வரிகள் குறித்த செய்திகள் உள்ளன. சோழர் ஆட்சியில் இலக்கியங்களும் செழித்தன. சைவ வைணவ நூல்கள் தொகுத்து முறைப்படுத்தப்பட்டன.
 • இது சோழர் காலத்தில் நடந்த முக்கியமான் சமய இலக்கியப் பணியாகும். பெருங்காவிய நூலான கம்ப இராமாயணம் இலக்கிய வடிவிலான வரலாற்று நூல்களான கலிங்கத்துப்பரணி, குலோத்துங்கச் சோழன் பிள்ளைத்தமிழ், மூவருலா, ஆகியனவும் இக்காலத்தில் இயற்றப்பட்டன.
 • நன்னூல், நேமிநாதம், வீரசோழியம் ஆகியவை இக்காலத்தில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க இலக்கண நூல்கள் ஆகும். பாண்டிக்கோவை, தக்கயாகப்பரணி ஆகியவை பிற முக்கிய இலக்கியப் படைப்புகளாகும்.

ஆட்சிப்பகுதி

 • தமிழ்நாட்டில் சோழ அரச மரபின் கீழ் இருந்த ஆட்சிப் பகுதி சோனாடு அல்லது சோழ நாடு எனப்படுகிறது.
 • சோழ மண்டலம் எனப்படும் காவிரி ஆற்றின் கழிமுகப்பகுதி சோழ அரசின் மையப்பகுதியாக விளங்கியது. சோழ மண்டலம் என்ற சொல் ஐரோப்பியர் நாவில் ‘கோரமண்டல்’ எனத் திரிபடைந்தது .
 • தற்போது இச்சொல் தென்னிந்தியாவின் கிழக்குப் பகுதி முழுவதையும் குறிக்கின்றது. தமது படைவலிமையைப் பயன்படுத்தி, தற்போதைய புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களையும் தற்போதைய மேற்குத் தமிழ்நாட்டின் கொங்குப் பகுதியையும் இணைத்துச் சோழப் பேரரசை விரிவுப்படுத்தினார்கள்.
 • பதினொன்றாம் நூற்றாண்டு வாக்கில் படையெடுப்புகள் மூலம் தொண்டை நாடு , பாண்டிய நாடு, தெற்குக் கர்நாடகத்தைச் சேர்ந்த கங்கைவாடி, மலைமண்டலம் என்ற கேரளம் ஆகிய பகுதிகள் வரை விரிவுப்படுத்தினார்கள்.
 • கடல் கடந்த விரிவாக்கத்தின்போது, சோழர் இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளைக் கட்டுப்படுத்தியும், அப்பகுதிகளை ‘மும்முடிச்சோழ மண்டலம்’ என்றும் அழைத்தார்கள்.

பேரரசு உருவாக்கம்

 • சோழ அரசர்களில் மிகவும் போற்றப்படுபவர் முதலாம் இராஜராஜன். அவரது கடல் கடந்த படையெடுப்புகள் மேற்குக்கடற்கரை, இலங்கை ஆகியவற்றில் வெற்றியைப் பெற்றுத்தந்தன.
 • அவர் இந்தியப்பெருங்கடலில் மாலத் தீவுகளைக் கைப்பற்றியதும் இதில் சேரும். இலங்கையை வென்றதன் மூலம் அதன் வடக்கு கிழக்குப் பகுதிகள் சோழ அரசின் நேரடிக் கட்டுப்பட்டின்கீழ் வந்தன.
 • புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளை நிர்வகிப்பதற்கு ஒரு தமிழ் தளபதியை இராஜராஜன் நியமித்ததுடன், அங்கு ஒரு கோயில் கட்டவும் ஆணை பிறப்பித்தார். அக்கோயில் ‘சிவ-தேவாலே’ (சிவாலயம்) எனப்படுகிறது. இவரால் ‘மகாதிட்டா’ என்ற இடத்தில் கட்டப்பட்ட கோயில் ‘இராஜராஜேஸ்வரம்’ என அழைக்கப்படுகிறது.
 • இராஜாராஜன் தன் மகன் முதலாம் இராகேந்திரனை வாரிசாக அறிவித்தார். இருவரும் இரு ஆண்டு காலம் இராஜேந்திரன் தன் தந்தையின் படையெடுப்புகளின் பங்கேற்று, மேலைச்சாளுக்கிரைத் தாக்கி, சோழ அரசில் எல்லையைத் துங்கபத்திரை ஆறு வரை விரிவுபடுத்தினார்.
 • இராஜராஜன் மதுரை மீது தாக்குதல் தொடுத்தபோது பாண்டியர் தங்கள் மணிமுடி மற்றும் அரச நகைகளுடன் தப்பி, இலங்கையில் அடைக்கலம் புகுந்தார்கள். எனவே முதலாம் இராஜேந்திரன் இலங்கையை வென்று, பாண்டியரின் மணிமுடியையும் பிற அரச உடைமைகளையும் கைப்பற்றினார்.
 • முதலாம் இராஜேந்திரம் அரசராகப் பொறுப்பேற்ற பின் 1023இல் வட இந்தியாவின் மீது மிகத் தீவிரமான ஒரு படையெடுப்பை நிகழ்த்தினார். இதற்காகப் படைகளைக் கோதாவரி ஆறு வரை அவரே வழிநடத்திச்சென்றார்.
 • கோதாவரியைக் கடந்த பிறகு படைக்குத் தலைமையைத் தனது தளபதியிடம் ஒப்படைத்தார். அத்தளபதியின் தலைமையில் படையெடுப்பு தொடர்ந்தது. முதலாம் இராஜேந்திரனுக்கு வட இந்தியாவில் கிடைத்த வெற்றிகளின் நினைவாகக் கங்கை கொண்ட சோழபுரம் கட்டப்பட்டது.
 • தமிழர்களின் கடல்வழிச் சாதனைகள் சோழர் காலத்தில் உச்சத்தை எட்டின. சோழர் சோழ மண்டலக் கடற்கரையோடு, மலபார் கடற்கரையையும் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். வங்காள விரிகுடாப் பகுதியில் சோழரின் செல்வாக்குச் சில பத்தாண்டு காலத்திற்கு நீடித்தது.
 • இராஜேந்திரனின் கடற்படை ஸ்ரீவிஜயா (தெற்கு சுமத்ரா) மீது தக்குதல் தொடுத்தது. தென்கிழக்கு ஆசியாவில் 700க்கும் 1300 க்கும் இடையே செழித்து வளர்ந்த நாடுகளுள் ஸ்ரீவிஜயாவும் ஒன்றாகும். இது வலிமையான கடற்படை கொண்டதாகவும் வணிகத்தில் சிறந்ததாகவும் இருந்தது.
 • இதேபோன்று குறுநில மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்த கெடாவும் (கடாரம்) இராஜேந்திரனால் தோற்கடிக்கப்பட்டது. எனவே, இராஜேந்திரனுக்கு ‘கடாரம் கொண்டான்’ என்ற பட்டம் சூட்டப்பட்டது.
 • மேலைச் சாளுக்கிய அரசின் மீது 1003இல் முதலாம் இராஜராஜன் தொடுத்த போரும் 1009இல் முதலாம் இராஜேந்திரன் தொடுத்த போரும் அவர்களுக்கு வெற்றியைத் தந்தன.
 • சாளுக்கியரின் தலைநகரான கல்யாணியைத் தகர்ப்பதற்கு இராஜேந்திரன் தன் மகனை அனுப்பினார். அங்கிருந்து கொண்டுவரப்பட்ட துவாரபாலகர் (வாயிற்காப்போன்) சிலையைக் கும்பகோணத்திலுள்ள தாராசுரம் கோயிலில் இன்றும் காணலாம். இராஜேந்திரன் முடிகொண்ட சோழன், கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், பண்டித சோழன் போன்ற பட்டங்கள் சூடிக்கொண்டார்.

சோழர் நிர்வாகம்

அரசர்

 • சோழ அரசின் தன்மை குறித்து வரலாற்றாய்வாளர்களிடையே பலவிதக் கருத்துகள் உள்ளன. சோழ அரசு மரபுவழிப்பட்ட முடியாட்சியை அடிப்படையாகக் கொண்டிருந்தது என்பது தெளிவாகிறது.
 • அரசர் பற்பல பெருமைகளுக்கு உரியவராக அக்காலத்தைச் சேர்ந்த இலக்கியங்களிலும் கல்வெட்டுக் குறிப்புகளிலும் புகழப்படுகிறார். கடவுளுக்கு இணையாகப் பெருமான் அல்லது பெருமகன், உலகுடைய பெருமாள், உலகுடைய நாயனார் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.
 • பிற்காலத்தில் சக்கரவர்த்தி (பேரரசர்), திருபுவன சக்கரவர்த்தி (மூன்று உலகங்களுக்கானப் பேரரசர்) போன்ற பட்டங்களை சோழ அரசர்கள் சூடிக்கொண்டனர்.
 • அரசராகப் பட்டம் சூட்டும் விழாவின்போது அவரது பெயருக்குப் பின் ‘தேவன்’ என்ற சொல்லைப் பின்னோட்டாகச் சேர்க்கும் நடைமுறை இருந்தது. அரசர்கள் தங்களைக் கடவுளின் நண்பன் (தம்பிரான்தோழன்) என்று உரிமை கோரித் தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்தினர்.
 • சோழ அரசர்கள் தங்கள் ஆன்மீக வழிகாட்டி அல்லது இராஜ குருக்களாகப் பிராமணர்களை நியமித்தார்கள். முதலாம் இராஜராஜனும் முதலாம் இராஜேந்திரனும் தங்களுடைய இராஜ குருக்களாக முறையே ஈசான சிவன், சர்வ சிவன் ஆகியோரைக் கல்வெட்டுக் குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளனர்.
 • அவர்கள் தங்கள் சமூக மதிப்பையும் அதிகாரத்தையும் உயர்த்திக்கொள்வதற்கான ஒரு வழிமுறையாகவே பிராமணர்களை ஆதரித்தனர். அதன் பொருட்டு பிராமணர்களுக்குப் பிரம்மதேயம், சதுர்வேதி மங்கலம் என்ற பெயரில் பெரும் நிலப்பரப்புகளைக் இறையிலியாக அளித்தனர்.

மண்டலங்கள்

 • முன்னரே குறிப்பிடப்பட்டது போல் சோழ அரசின் எல்லை விஜயாலயன் காலத்திலிருந்தே சீராக விரிவடைந்து வந்தது. திறை செலுத்துபவர்கள் என்றும் வரலாற்று ஆசிரியர்களால் விளக்கமளிக்கப்படும் சிற்றரசர்கள் அல்லது குறுநில மன்னர்களுடனான போர்களுக்குப் பின்னர் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதிகள் சோழ அரசுடன் இணைத்துக்கொள்ளப்பட்டன.
 • முதலாம் இராஜராஜன் இப்பகுதிகளையெல்லாம் மண்டலங்களாக ஒன்றிணைத்து, ஒவ்வொரு மண்டலத்திலும் ஓர் ஆளுநரை நியமித்தார். பாண்டிய நாட்டில் சோழ பாண்டியர், இலங்கையில் சோழ இலங்கேஸ்வரர் (இது, பின்னர் மும்முடி சோழ மண்டலம் என்று அழைக்கப்பட்டது) , தெற்கு கர்நாடகத்தின் கங்கைவடி பகுதியில் சோழ கங்கர் என ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர்.
 • மேலும், இருக்குவேளிர், இளங்கோ வேளிர், மழவர்கள், பானர்கள் போன்ற சிற்றரசர்கள் ஆட்சி செய்த முக்கியத்துவம் குறைந்த பகுதிகளும் பின்னர் சோழ அரசுடன் இணைத்துக் கொள்ளப்பட்டன. இந்தச் சிற்றரசர்களும் சோழ ஆட்சி நிர்வாகத்தின் பல்வேறு பொறுப்புகளில் அமர்த்தப்பட்டனர்.

படை

 • சோழப்பேரரசு நிரந்தரப் படையைக் கொண்டிருந்தது. இப்படை மரபுவழிப்பட்டிருந்த மூன்று பிரிவுகளை உள்ளடக்கியிருந்தது: காலாட்படை, குதிரைப்படை (குதிரைச்சேவகர்), யானைப்படை (யானையாட்கள்), வில் வீரர்கள் (வில்லாளிகள்), வாள் வீரர்கள் (வாளிலர்), ஈட்டி வீரர்கள் (கொண்டுவார்) ஆகியோரும் படையில் இருந்தனர்.
 • படைப்பணிகளில் இரு படிநிலைகள் குறிப்பிடப்படுகின்றன. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சீனப் புவியியலாளர், “சோழரிடம் 60 ஆயிரம் போர் யானைகள் இருந்தன. அவற்றின் முதுகில் வீடு போன்ற அமைப்பு இருக்கும். அதில் வீடு போன்ற அமைப்பு இருக்கும். அதில் வீரர்கள் நிறைந்திருப்பார்கள். போரில் இவர்கள் நீண்ட தொலைவில் உள்ள இலக்குகளின் மீது அம்பு எய்வார்கள். அருகில் உள்ள பகைவர்களுடன் யானையின் மீதிருந்தபடியே ஈட்டியால் சண்டையிடுவார்’ எனக் குறிப்பிடுகிறார்.
 • சோழர் கடல்கடந்து சென்று நடத்திய போர்கள் மிகவும் புகழ்பெற்றவை. சோழர்களிடம் ‘எண்ணற்ற’ கப்பல்கள் இருந்தன என வரலாற்றாய்வாளர்கள் அவர்களின் கடற்படையை வியந்து குறிப்பிடுமளவுக்கு அதன் பலம் இருந்தது.
 • படை வீரர்களுக்குப் ‘படைப்பற்று’ என்ற உரிமை வழங்கப்பட்டிருந்தது. தலைநகரில் படை முகாம் இட்டிருந்த இடம் ‘படைவீடு’ எனப்பட்டது. புதிதாகச் சேர்க்கப்படும் பகுதிகளில் அமைக்கப்பட்ட புறக்காவல் படைகள் ‘நிலைப்படைகள்’ எனப்பட்டன.
 • ஒரு படைப்பிரிவின் தலைவர் ‘நாயகம்’ என்றும் பின்னாட்களில் ‘படைமுதலி’ என்றும் அழைக்கப்பட்டார். படைத்தளபதி ‘சேனாபதி’, ‘தண்டநாயகம்’ என்றறியப்பட்டார்.

உள்ளாட்சி அமைப்பு

 • சோழர் காலத்தில் பல்வேறு உள்ளாட்சிக் குழுக்கள் சிறப்பாக இயங்கியுள்ளன. அவை, ஊரார், சபையார், நகரத்தார், நாட்டார் ஆகியவை அத்தகு குழுக்கள் ஆகும். இவை ஒப்பீட்டளவில் தன்னாட்சி உரிமை கொண்டவையாக இயங்கின. இந்த அடித்தளத்தின் மீதுதான் சோழப் பேரரசு கட்டமைக்கப்பட்டது.

ஊரார்

 • வேளாண்மை விரிவாக்கத்தைத் தொடர்ந்து கிராமப்புறங்களில் வேளாண் குடியிருப்புகள் அதிகளவில் தோன்றின. அவை ‘ஊர்’ என அழைக்கப்பட்டன. அந்த ஊர்களில் நில உடமையாளர்களே ஊரின் பிரதிநிதிகளாகச் செயல்பட்டார்கள். அவர்களே ஊரார் என அழைக்கப்பட்டார்கள்.
 • கோயில்களின் நிர்வாகத்தையும் குளங்களின் பராமரிப்பையும் இவ்வூரார் மேற்கொண்டனர். குளங்களிலிருந்த நீரை ஊரின் தேவைகளுக்குப் பயன்படுத்துவதையும் ஊரார் கவனித்துக்கொண்டார்கள். இவை தவிர, வரி உள்ளிட்ட வருவாய்களை வசூலிப்பது, சட்ட ஒழுங்கைப் பாதுகாப்பது, அரசரின் கட்டளையை நிறைவேற்றுவது ஆகிய நிர்வாகப் பொறுப்புகளையும் இவர்கள் மேற்கொண்டனர்.

சபையார்

 • ஊர் என்பது நில உடைமை சார்ந்தோரின் குடியிருப்பு ஆகும். இது வேளாண்வகை கிராமம் என அழைக்கப்பட்டது, பிரம்மதேயம் என்பது பிராமணர்களின் குடியிருப்பாகும்.
 • பிரம்மதேயத்தின் மையமாக விளங்கிய கோயில்கள், அவற்றின் சொத்துக்கள் ஆகியவற்றை நிர்வகிப்பது, பிரம்மதேய குடியிருப்புகளைப் பராமரிப்பது ஆகிய பணிகளை ‘சபை’கள் மேற்கொண்டன.
 • கோயில் நிலங்களுடன் இணைக்கப்பட்டிருந்த பாசனக்குளங்களின் பராமரிப்புக்குச் சபை பொறுப்பாக இருந்தது. ஊரைப் போலவே சபையும் அரசின் பிரதிநியாகச் செயல்பட்டது. நிர்வாகம் , நிதி, நீதி ஆகிய துறைகள் சார்ந்த பணிகளையும் சபை மேற்கொண்டது.

நகரத்தார்

 • நகரம் வணிகர்களின் குடியிருப்பாக விளங்கியது. தங்கம் உள்ளிட்ட உலோகப் பொருள்கள், கைவினைப் பொருள்கள், நெசவு, பானை வனைதல் ஆகியவற்றில் திறமை பெற்ற கைவினைஞர்களும் நகரத்தில் வசித்தர். நகரத்தின் பிரதிநிதிகளாக இருந்தவர்கள் நகரத்தார் எனப்பட்டனர். இவர்களின் நிதியுதவி கோயில்களுக்குத் தேவைப்பட்டது. கோயில்களின் நிர்வாகத்துடன் நகரத்தார் சீரான தொடர்பில் இருந்தனர்.
 • முதலாம் இராஜராஜனின் ஆட்சியில் மாமல்லபுரம் ‘மாநகரம்’ என்ற குழுவால் நிர்வகிக்கப்பட்டது. உள்ளூர் பொருள்கள் நகரங்களில் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டன. பட்டு, பீங்கான், கற்பூரம், கிராம், சந்தனக்கட்டை, ஏலக்காய் போன்றவை இவ்வாறு பரிமாற்றம் செய்யப்பட்டதாகச் சீன வரலாற்றுக்குறிப்புகள் கூறுகின்றன.
 • உள்நாட்டிலும் கடல் கடந்தும் வணிகத்தை ஊக்குவிப்பதற்காகக் குலோத்துங்கன் சுங்கவரிகளை நீக்கினார். எனவே அவர் ‘சுங்கம் தவிர்த்த சோழன்’ எனப்படுகிறார்.

நாட்டார்

 • பிரம்மதேயங்கள் நீங்கலாகப் பல ஊர்களின் தொகுப்பு நாடு எனப்பட்டது. கால்வாய்கள், குளங்கள் போன்ற பாசன ஆதாரங்களைச் சுற்றி இவை உருவாக்கப்பட்டிருந்தன.
 • வேளாண் வகை கிராமங்களில் நிலம் வைத்திருந்தவர்களின் மன்றம் நாட்டார் எனப்பட்டது. சோழ அரசக்கட்டமைப்பின் அடிப்படை உறுப்புகளாக நாட்டார் செயல்பட்டனர்.
 • அரசுக்கான நிர்வாகம், நிதி, நீதித்துறை சார்ந்த பணிகளை இவர்கள் மேற்கொண்டனர். நாட்டார்களுக்கு மரபுவழி நில உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன. தாங்கள் சார்ந்த நாட்டிலிருந்து வரி சேகரித்துக் கொடுக்கும் பொறுப்பும் அவர்களுக்கு இருந்தது.
 • நாட்டார்களுக்கு மரியாதை செலுத்தும் நோக்கில் ஆசுடையான் (நில உரிமையாளர்), அரையான் (வழிநடத்துவோர்), கிழவன் (தலைவர்) போன்ற பட்டங்கள் அளிக்கப்பட்டன.
 • நாட்டுக்கணக்கு, நாட்டு வையவன் எனும் பணியாளர்கள் நாட்டாரின் நிர்வாகப் பணிகளை ஆவணப்படுத்தினர்.

உள்ளாட்சித் தேர்தல்களும் உத்திரமேரூர் கல்வெட்டுகளும்

பிரம்மதேயங்களில் (பிராமணர்களுக்கு வரிவிலக்குடன் அளிக்கப்பட்ட நிலம்) ஒன்றாக இருந்த உத்திரமேரூரில் (உத்தரமல்லூர் சதுர்வேதி மங்கலம்) கிடைத்த இரு கல்வெட்டுக் குறிப்புகள் (பொ.ஆ. 919இலும் 921இலும் அறிவிக்கப்பட்டவை) மூலம் சோழர் கால உள்ளாட்சித் தேர்தல் முறையை அறிய முடிகிறது. இவை ஒரு பிராமணக் குடியிருப்புக்கான பணிகளை மேற்கொள்வதற்க்கு வெவ்வேறு குழுக்களைச் சேர்ந்த உறுப்பினரைத் தேர்வு செய்யும் முறையைத் தெரிவிக்கின்றன. அதன்படி, கிராமம் 30 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவுக்கும் ஓர் உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்வானவர்கள் அனைவரும் சேர்ந்து வெவ்வேறு குழுக்களை உருவாக்குவார்கள். அவை பொதுப்பணிக்குழு, குளங்களுக்கான குழு, தோட்டங்களுக்கான குழு, பஞ்ச நிவாரணக் குழு, தங்கம் தொடர்பான குழு ஆகியவாகும்.

உறுப்பினராகப் போட்டியிடுவோரின் தகுதிகள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன: ஆண்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும். போட்டியாளர்கள் 35 வயதுக்கு மேலும் 75 வயதுக்குக் கீழும் உள்ளவராக இருக்க வேண்டும். சொத்தும் சொந்த வீடும் உடையவராக இருக்க வேண்டும். வேதங்களிலும் பாஷ்யங்களிலும் தேர்ந்தவராக இருக்க வேண்டும்.

ஒரு பிரிவில் போட்டியிடக்கூடிய அனைவருடைய பெயர்களும் தனித்தனிப் பனையோலைகளில் எழுதப்பட்டு, அவை ஒரு பானையில் இடப்படும் (குடவோலை). சபையில் வயதில் மூத்தவர் ஒரு சிறுவனை அழைத்து, பானையிலிருந்து ஓர் ஓலையை எடுக்கும்படி கூறுவார். அந்தச் சிறுவன் எடுக்கும் ஓலையில் உல்ல பெயருக்குரியவரே உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆவார்.

பொருளாதாரம்

வேளாண்மை

 • சோழர் காலகட்டத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய வளர்ச்சிகளில் ஒன்று, வேளாண்மை விரிவாக்கம் ஆகும். வளமான ஆற்றுச் சமவெளி பகுதிகளில் மக்கள் குடியேறினர். ஆறுகள் இல்லாத பகுதிகளிலும் குளம், கிணறு, கால்வாய் ஆகிய நீர்ப்பாசன வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இதனால் உணவு தானிய உற்பத்தி உபரிநிலையை எட்டியது. இதனால் சமூக ஏற்றத்தாழ்வுகள் உருவாகின.
 • வேளாண்மையில் கிடைத்த கூடுதல் வருவாய் நில வரியாகச் சோழ அரசுக்கு வலுவூட்டியது. நில வருவாய் நிர்வாகத்துக்கெனத் தனியாக ஒரு துறை ‘புறவுவரித்திணைக்களம்’ என்ற பெயரில் இயங்கியது. அதன் தலைவர் ‘புளவு வரித்திணைக்கள நாயகம்’ எனப்பட்டார்.

நில வருவாயும் நில அளவையும்

 • வரிகளை மதிப்பிடுவதற்காகச் சோழர் விரிவாக முறையில் நில அளவை செய்வதிலும் தீர்வை விதிப்பதிலும் ஈடுபட்டார்கள். முதலா, இராஜராஜன் (1001), முதலாம் குலோத்துங்கன் (1086), மூன்றாம் குலோத்துங்கன் (1226) ஆகிய சோழ அரசர்கள் நிலங்களை வகைப்படுத்தி, அளவீடு செய்து அதற்கேற்றவாறு வரிகளை விதித்தனர்.
 • நில அளவீட்டுப் பணியில் ஈடுபட்டவர்கள் ‘நாடு வகை செய்கிற’ என்று குறிப்பிடப்பட்டார்கள். இவர் நில உடமைச் சமூகத்தைச் சேர்ந்தவர்களே ஆவர்.
 • நில அளவீடு செய்ய குழி, மா, வேலி, பட்டி, பாடகம் முதலிய அலகுகள் வழக்கில் இருந்தன. பெரும்பாலும் வரிகள் பொருள்களாகவே வசூலிக்கப்பட்டன. இறை, காணிகடன், இறை கட்டின காணிகடன், கடமை உள்ளிட்ட பல வரிகள் விதிக்கப்பட்டன. அவற்றில் முக்கியமான ஒரு வரி குடிமை வரி ஆகும்.
 • நிலத்தைக் குத்தகைக்குப் பெற்று வேளாண்மை செய்தவர்கள் அரசுக்கும் நில உடமையாளர்களுக்கும் செலுத்திய வரி குடிமை வரி எனப்படும். இந்நில உடமையாளர்கள் உடையான், அரையன், கிழவர் போன்ற மரியாதைக்குரிய பட்டங்களைப் பெற்றிருந்தனர்.
 • நிலத்தின் வளம், நில உடைமையாளரின் சமூக மதிப்பு ஆகியவற்றைப் பொறுத்து வரி நிர்ணயிக்கப்பட்டது. அரசரும் உள்ளூர்த்தலைவர்களும் ‘ஒப்படி’ என்ற வரியை வசூலித்தனர்.
 • கோயில்களுக்கும் பிராமணர்களுக்கும் வரி செலுத்துவதிலிருந்து விலகு அளிக்கப்பட்டது. விளைபொருளாகச் செலுத்தப்பட்ட வரி ‘இறை கட்டின நெல்லு’ எனப்பட்டது.
 • இவ்வரிகள் அனைத்தும் பெரும்பாலும் காவிரிச்சமவெளிப் பகுதியில்தான் நடைமுறையில் இருந்தன. ஏனைய தொலைதூரப் பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஊர் மட்டத்தில் வரிகளை வசூலித்து, அரசுக்குச் செலுத்தும் பொறுப்பு ஊராரின் பொறுப்பு ஆகும். நாடு மட்டத்தில் நாட்டார் இப்பொறுப்பை நிறைவேற்றினர்.
 • வரியாக வசூலிக்கப்பட்ட நெல் ‘களம்’ என்ற அலகின் அடிப்படையில் வசூலிக்கப்பட்டது. ஒரு களம் என்பது 28 கிலோ ஆகும். முதலாம் ராஜராஜன் வரி வசூலை முறைப்படுத்தினார். ஒரு வேலி (6.5 ஏக்கர்) நிலத்திற்கு 100 களம் வரியாக வசூலிக்கப்பட்டது. வேலியின் அளவு என்பது மண்வளம், போகங்கள் ஆகியவற்றைப் பொருத்து மாறுபடுகிறது.

பாசனம்

 • சோழர் நடைமுறையில் இருந்த நீர் பாசன முறையை மேம்படுத்தும் வழிமுறைகளை மேற்கொண்டார்கள். சோழ நாடு வேளாண்மை மூலம் அதிக வருவாய் ஈட்டும் அரசாக இருந்ததால், நீராதாரங்களை நிர்வகிப்பதில் அதிகக் கவனத்தைச் செலுத்தியது.
 • வடி, வாய்க்கால் என்ற குறுக்கு மறுக்கான கால்வாய்கள் மழைநீரைச் சேமித்து வைப்பதற்குக் காவிரி வடிநிலப்பகுதியில் பயன்பட்ட மரபுவழி முறை. ‘வடி’ என்பது நீர் வடக்கு தெற்காக ஓடுவதாகும். ‘வாய்க்கால்’ என்றால் கிழக்கு மேற்காக ஓடுவதாகும்.
 • வடி என்பது வடிகாலாக நீரை வெளியேற்றுவதையும், வாய்க்கால் என்பது நீரைக் கொண்டுவருவதையும் குறிக்கும். ஒரு விளைநிலத்துக்கு வாய்க்கால் வழியே வரும் நீர் வடிக்குத் திருப்பப்பட்டு, மற்றொரு வாய்க்காலுக்குச் செல்லும். மழைநீர் கால்வாய் என்பது இயற்கையாக உருவாவதாகும்.
 • பல பாசனக்கால்வாய்கள் இத்தகைய இயற்கையான கால்வாய்களை மாற்றியமைத்துக் கொண்டு உருவாக்கப்பட்டவைதான். இவ்வாறு சேமிக்கப்படும் மழை நீர் வடி வழியாகவும் வாய்க்கால் வழியாகவும் சுற்றுமுறையில் பயன்படுத்தப்பட்டது. இந்த அமைப்புமுறை அனைத்து நிலங்களுக்கும் நீர் சீராகச் செல்வதற்கு உதவியது.
 • பல கால்வாய்களுக்கு அரசர்கள், அரசிகள், கடவுளரின் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தன. எடுத்துக்காட்டாக, உத்தமச் சோழ வாய்க்கால், பஞ்சவன் மாதேவி வாய்க்கால், கணவதி வாய்க்கால் போன்றவற்றைக் கூறலாம்.
 • ஊர் வாய்க்கால் என்பது நில உரிமையாளர்கள் பலரால் கூட்டாகப் பயன்படுத்தப்பட்டது. நாடு வாய்க்கால் எனப்தே நாட்டு வாய்க்கால் எனப்பட்டது.
 • சுழற்சி முறையில் நீரை விடுவது வழக்கில் இருந்தது. சோழர் கல்வெட்டுக் குறிப்புகள் சில பெரிய பாசன ஏரிகளைக் குறிப்பிடுகின்றன. சோழ வாரிதி, கலியநேரி, பல்லவர்களால் உருவாக்கப்பட்ட வைரமேகத் தடாகம், பாகூர் பெரிய ஏரி, இராஜேந்திர சோழ பேரேரி போன்றவை சில எடுத்துக்காட்டுகள்.
 • ஏரிகளை அனைத்து பருவங்களிலும் பராமரிக்கும் வகையிலும், மராமத்து பணிகளில் ஈடுபடும் வகையிலும் மக்கள் ஊதியமில்லா உழைப்பைத் தரும் வழக்கம் இருந்தது.
 • கங்க கொண்ட சோழபுரத்தில் இராஜேந்திர சோழன் மேற்கொண்ட பாசனப்பணி குறிப்பிடத்தக்கது. அங்குள்ள ஏரியில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் 16 மைல் நீளமுள்ள ஓர் உறுதியான கட்டுமானத்தை அவர் எழுப்புள்ளார். அதை இராஜேந்திர சோழன் ‘ஜலமய ஜெயஸ்தம்பம்’ என்ற்று குறிப்பிடுகிறார். அதற்கு, ‘நீரில் கிடைத்த வெற்றியின் நினைவாக எழுப்பிய தூண்’ என்று பொருள். 100 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இடத்துக்கு வந்த அரேபிய வரலாற்றாசிரியரான அல்பெரூனி இக்கட்டுமான அமைப்பைக் கண்டு வியப்படைவார்கள். ஆனால், அதனை அவர்களால் கட்டவும் முடியாது” என்று அல்பெரூனி பதிவு செய்துள்ளார். சான்று: ஜவஹர்லால் நேரு, Glimpses of World History.

நீர் மேலாண்மை

 • பல வகையான நீர் உரிமைகள் நிலவின. ஏரிகளில் இருந்தும், கிணறுகளில் இருந்தும் பெறப்படும் நீரின் பங்கினை இந்த உரிமைகள் முறைப்படுத்தின. கால்வாய்களைனாழப்படுத்துதல், அகலப்படுத்துதல், பாசன அமைப்பைப் பழுதுபார்த்தல் ஆகிய பொறுப்புகளும் இந்த உரிமைகளில் அடக்கம்.
 • நீரைப் பங்கீடு செய்வது ‘நிற்கின்றவாறு’ (பங்கீடு செய்யப்பட்டபடியான நீரின் அளவு) என்று குறிக்கப்பட்டது. குமிழ் (மதகு). தலைவாய் (தலைமடை) ஆகியன வழியாக நீர் திறந்துவிடப்பட்டது.
 • நீர் உரிமைகளை மீறுவதும் பிரம்மதேயங்களுக்குக் கொடையளிக்கப்பட்ட நீராதாரங்களை ஆக்கிரமிப்பதும் அரசுக்கு எதிரான செயல்கள் என்று அரசு ஆணைகள் எச்சரித்தன.
 • ஊருக்குப் பொதுவான குளம் ‘எங்கள் குளம்’ என்று அழைக்கப்பட்டது. நன்கொடையாகவும் மானியமாகவும் நடைபெற்ற நிலப்பரிமாற்றங்களில் நீர் மீதான உரிமைகளும் இணைக்கப்பட்டிருந்தன.
 • சோழர் காலத்தில் , கிராம சபைகள் பாசனக்குளங்களைப் பழுதுபார்க்க ஏரி ஆயம் என்ற வரி வசூலிக்கப்பட்டது. சில சமயங்களில் அரையன் போன்ற உள்ளூர் தலைவர்கள் புயலில் சேதமடைந்த குளங்களைப் பழுதுபார்த்துப் புதுப்பித்தனர்.
 • கிராம மக்களும் கோயில்களும் குளத்து நீரைப் பகிர்ந்துகொண்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன. குளங்களிலும் ஆறுகளிலும் இருந்து மதகு அல்லது தலைமடை வழியாக நீரைத் திறந்துவிடுவதற்குத் தலைவாயர், தலைவாய்ச்சான்றார், ஏரி அரையர்கள் போன்ற சிறப்புக்குழுக்கள் இருந்துள்ளன. குளத்துக்குப் பொறுப்பான மக்கள் குழு குளத்தார் எனப்பட்டது.
 • பிற்காலத்தில், பாசன ஆதாரங்களை நிர்வகிக்கும் பொறுப்புகள் கோயில்களுக்கு வழங்கப்பட்டன. வெட்டி, அமஞ்சி ஆகிய வடிவங்களில் ஊதியமில்லா உழைப்பு செயல்படுத்தப்பட்டது.

சமூகமும் அதன் கட்டமைப்பும்

 • சோழர் காலச் சமூகம் பெருமளவில் வேளாண்மையைச் சார்ந்திருந்ததால் , நிலம் வைத்திருப்பது சமூக மதிப்பையும் அதிகாரப் படிநிலையையும் நிர்ணயிக்கும் ஒரு முக்கியக் காரணியாக விளங்கியது.
 • பிரம்மதேய குடியிருப்புகளில் உயர்தகுதி நிலையில் இருந்த நில உடமையாளர்கள் ‘பிரம்மதேய-கிழவர்’ என்று அழைக்கப்பட்டனர். இவர்களுக்கு நில வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது இதைத் தொடர்ந்து அங்கிருந்த உள்ளூர் விவசாயிகள் ‘குடிநீக்கம்’ (குடிநீக்கி) செய்து இடம்பெயரச் செய்யப்பட்டனர்.
 • நிலக்கொடை அளிக்கப்பட்ட கோயில்கள் ‘தேவதானம்’ என்று அழைக்கப்பட்டன. இவற்றுக்கும் பிரம்மதேயம் போன்றே வரிவிலக்கு வழங்கப்பட்டன. இக்காலகட்டத்தில் கோயில்களே பல்வேறு செயல்பாடுகளின் இணைப்பு மையமாக மாறியிருந்தன.
 • சமூகப்படிநிலையின் அடுத்த இடத்தில் வேளாண்வகை கிராமங்களைச் சேர்ந்த நில உடமையாளர்கள் இடம் பெற்றனர். இவர்களின் நிலங்களிலும் பிராமணர்களின் நிலங்களிலும் ‘உழுகுடி’ என்ற குத்தகைதாரர்கள் வேளாண் வேலைகளை மேற்கொண்டனர். இவர்களுக்குச் சொந்தமாக நிலங்கள் இல்லை.
 • நில உடமையாளர்கள் விளைச்சலில் மேல்வாரத்தையும் (அதிக பங்கு) உழுகுடிகள் கீழ்வாரத்தையும் (குறைவான பங்கு) எடுத்துக்கொண்டனர். சமூகப்படி நிலையில் அடிமட்டத்தில் உழைப்பாளிகளும் (பணிசெய் மக்கள்) அடிமைகளும் இருந்தார்கள்.
 • இந்த வேளாண் சமூகத்துக்கு வெளியே ஆயுதம் தரித்த வீரர்களும் கைவினைஞர்களும் வணிகர்களும் இருந்தனர், மக்கள்தொகையில் குறிப்பிடத்தக்க அளவில் இருந்திருக்கக்கூடிய கால்நடை வளர்ப்போர் குறித்துச் சில ஆவணங்கள் கூறுகின்றன. அக்காலத்தில் பழங்குடிகளும், காட்டில் வசித்த மக்களும் இருந்துள்ளனர். ஆனால், அவர்கள் குறித்து நமது அறிதல் குறைவானதாகும்.

மதம்

 • சிவன், விஷ்ணு முதலான புராணக் கடவுளர்கள் சோழர் காலத்தில் பிரபலம் அடைந்தனர். இக்கடவுள்களுக்காக அதிக எண்ணிக்கையில் புதிய கோயில்கள் கட்டப்பட்டன. இக்கோயில்களுக்குப் பெருமளவில் நிலக் கொடைகள் வழங்கப்பட்டன. பெருமளவிலான மக்கள் இக்கோயில்களின் செல்வாக்கின் கீழ் கொண்டுவரப்பட்டனர்.
 • சோழ அரசர்கள் தீவிர சைவர்கள் ஆவர். முதலாம் பராந்தகனும் உத்தமச் சோழனும் (907 -970) சைவ சமயத்தை வளர்க்க நிதியுதவியும் நிலக்கொடையும் அளித்தார்கள்.
 • தஞ்சை பிரகதீசுவரர் (பெருவுடையார்) கோயிலில் உள்ள ஒரு சுவரோவியத்தில் முதலாம் இராஜராஜனும் அவருடைய மனைவியரும் சிவனை வணங்குவதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
 • சிவபாத சேகரன் என்பது அவருக்குரிய பட்டங்களுள் ஒன்று. சிவனுடைய பாதங்களை இறுகப் பற்றியவன் என்பது, இதற்குப் பொருள்.
 • முதன்மைக் கடவுளான சிவன் இரு வடிவங்களில் வணங்கப்பட்டார். இக்காலகட்டத்தில், மிகவும் மேம்பட்ட தத்துவமாக சைவ சித்தாந்தம் உருவானது. இத்தத்துவத்தின் அடிப்படை நூலான சிவஞானபோதம் மெய்கண்டரால் இயற்றப்பட்டது. பிற்காலத்தில் பல சைவ மடங்கள் தோன்றி இத்தத்துவத்தை வளர்த்தன.
 • லிங்கோத்பவர் என்ற குறியீட்டு வடிவத்திலும் நடராஜர் என்ற மனித வடிவத்திலும் சிவ வழிபாடி நடைபெற்றது.
 • காவிரி சமவெளியில் அமைந்த இக்கோயில் மையங்களைக் கொண்டு ஒரு நில வரைபடம் தயாரித்தால், அது, இடம், காலம் தொடர்பான ஓர் வேளாண்-அரசியல் புவியியல் வரைபடத்தை நமக்கு வழங்கும்.
 • சிற்பங்கள், ஓவியங்களில் ‘திரிபுராந்தகன்’ (அசுரர்களின் மூன்று மாய நகரங்களை அழித்தவராகப் புராணங்களில் கூறப்படுபவர்) என்னும் வடிவத்தில் சிவன் மீண்டும், மீண்டும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவது, அவருக்குப் போர் வீரருக்குரிய ஒரு கூறினை வழங்கியது. இதன்மூலம் அரசர் தமது அரசப் பதவிக்குச் சட்ட அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டார்.
 • நடராஜன் அல்லது ஆடல் வல்லான் (நடனங்களின் அரசர்) ஆகிய வடிவங்களிலும் சிவன் சித்தரிக்கப்பட்டார். இது, நாயன்மார்கள் எழுதிய பாடல்களோடு இணைந்து தமிழ் இசை, நடனம் , நாடகம் ஆகியவற்றின் மையக் கருவானது. சிவனைப் போற்றிப் பாடிய இப்பாடல்கள் அவரின் திளைவிளையாடல்களை சித்தரிக்கின்றது. இவை சமூகத்தின் பல பிரிவுகளை சித்தரிக்கின்றது. இவை சமூகத்தின் பல பிரிவுகளைச் சார்ந்த மக்களை ஈர்ப்பதாக அமைந்தன.
 • நம்பியாண்டார் நம்பி சைவ சமய நூல்களை மீட்டெடுத்து, திருமுறை என்ற பெயரில் தொகுத்து, வரிசைப்படித்தினார். கோயில்களில் தினமும் திருமுறைகளை ஒதுக்குவதற்கு ஓதுவார், பதிகம் பாடுவோர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.
 • பாடல்களைப் பாடுவோர் ‘விண்ணப்பம் செய்வோர்’ என்று அழைக்கப்பட்டனர். இசைக்கருவிகளை இசைப்பவர்களும் நியமனம் செய்யப்பட்டனர். கடவுளுக்குத் தொண்டு செய்ய பெண்கள் அர்ப்பணிக்கப்பட்டனர். இசைக்கருவிகளை இசைப்பவர்களும் நியமனம் செய்யப்பட்டனர். கடவுளுக்குத் தொண்டு செய்ய பெண்கள் அர்ப்பணிக்கப்பட்டனர். அவர்களைப் பயிற்றுவிக்க இசை ஆசிரியர்களும் நடன ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர்.
 • காலப்போக்கில் சைவம் மீதான சோழ அரசர்களின் பக்தி மிகையான ஆர்வமாக மாறியது. இரண்டாவது குலோத்துங்கனிடம் இத்தகைய தன்மையைக் காண முடியும்.
 • அரச சமயமான சைவத்துக்கும் வைணவத்துக்கும் இடையே நடந்துவந்த சமய மோதல்களில் வைணவம் ஒதுக்கப்பட்டது. இவை , வைணவ்த் திருத்தொண்டரான ஸ்ரீ ராமானுஜர் சோழ நாட்டை விட்டு வெளியேறி கர்நாடகத்தில் உள்ள மேல்கோட்டைக்குச் சென்ற நிகழ்வுக்கும் இட்டுச் சென்றது/

கோயில்கள்

 • சோழர் தமது காலத்தில் அதிக எண்ணிக்கையிலான கோயில்களை எழுப்பி ஆதரித்தனர். தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம் , தாராசுரம் ஆகிய இடங்களில் அரசர்களால் எழுதப்பட்ட கோயில்கள் சோழர்கால கட்டுமானம், ஓவியம், சிற்பம், சிலைவடித்தல் ஆகிய கலைகளின் களஞ்சியமாக விளங்குகின்றன.
 • கோயில்களின் சமூகம், பொருளாதாரம், பண்பாடு மற்றும் அரசியல் ஆகிய செயல்பாடுகளின் மையங்களாக மாறின. அரசர், அதிகாரிகள், நடன கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், பாடகர்கள் , அவர்களின் ஆசிரியர்கள் , இவர்களுக்குத் தலைமை தாங்கும் மதகுரு என கோயில்களின் அமைப்பு அப்படியே அரச சபையை எதிரொளித்தது.
 • இவர்கள் கோயிலின் பிரிக்க முடியாத உறுப்புகளாகவே செயல்பட்டார்கள். தொடக்க கட்ட சோழர்கால கோயில்கள் கட்டுமான நோக்கில் எளிமையாக இருந்தன. அரசர்கள் புதைக்கப்படும் இடங்களில் கோயில் (பள்ளிப்படை) எழுப்பும் வழக்கமும் இருந்தது.

சமூக நிறுவனமாகக் கோயில்

 • சோழர் காலத்தில் கோயில்கள் சமூகத் திருவிழாக்களுக்கான ஒரு களமாக மாறி சமூக நிறுவனங்களாக இயங்கின. சமூகம், அரசியல் , பொருளாதாரம், பண்பாடி நடவடிக்கைகளுக்கான மையங்களாகக் கோயில்கள் விளங்கின.
 • கோயிரமர், கோயில் கணக்கு (கோயில் கணக்காளர்), தேவ –கன்னி(கடவுளின் பிரதிநிதி), ஸ்ரீ வைஷ்ணவர், கண்டேசர் (கோயில் மேலாளர்), மற்றும் பிறர் முதல்நிலைக் கோயில் அதிகாரிகள் ஆவர்.
 • கல்வி, நடனம், இசை, ஓவியம், நாடகம் ஆகியவற்றின் வளர்ச்சியை அவர்கள் ஊக்குவித்தனர். முதலாம் இராஜராஜனின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் இராஜராஜ நாடகம் என்ற நாடக நிகழ்ச்சி தஞ்சாவூர் கோயிலில் நிகழ்த்தப்பட்டிருக்கிற சித்திரைத் திருவிழா, கார்த்திகை, ஐப்பசி விழா ஆகிய விழாக்கள் கொண்டாடப்பட்டிருக்கின்றன.
 • கோயில்களில் பாடப்பட்ட வழிபாட்டுப் பாடல்கள் வாய்மொழிக் கல்வியை வளர்த்ததாகக் கூறப்படுகிறது. குடக்கூத்து, சாக்கைக்கூத்து போன்ற மரபு நடனங்கள் சிற்ப-ஓவிய வடிவங்களாகக் கீழப்பழுவூர், திருவொற்றியூர் கோயில்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன.
 • தஞ்சாவூர் பெரிய கோயில் நிருத்யம், கர்ணம் போன்ற நடன நிலைகள் சிற்ப வடிவில் காட்டப்பட்டுள்ளன். தமிழ் மரபு இசைக்கருவிகளும் இதேபோல் சித்தரிக்கப்பட்டுள்ளன.
 • மேய்ச்சலைத் தொழிலாகக் கொண்ட மக்களும் தங்கள் பக்தியை வெளிப்படுத்தும் விதமாகக் கோயில்களின் அணையா விளக்குகளைப் பராமரிப்பதற்குக் கால்நடைகளைக் கொடையாக வழங்கினர். அவர்களது கொடைகள் பதிவு செய்யப்பட்டதன் மூலம் அம்மக்களின் பெயர்களும் அரச கோயில்களின் கல்வெட்டுகளில் இடம்பெற்றன. இதன் மூலம் அவர்கள் அரச குடும்பத்தின் நெருக்கத்தினைப் பெற்றனர்.
 • எண்ணெய் ஆட்டுபவர்கள் சங்கர பாடியார் என அழைக்கப்பட்டனர். இவர்கள் கோயில்களுக்கு எண்ணெய் வழங்கினர், இதன் மூலம் கோயில்களின் அன்றாட நிகழ்வுகளின் அங்கமாயினர். பஞ்ச காலத்தில் இவர்களில் சிலர் தங்களைத் தாமே கோயில் அடிமைகளாக விற்றுக்கொண்டனர்.
 • கடன் வழங்குதல், அறக்கொடைகளையும், நன்கொடைகளையும் வழங்குதல், பெறுதல் ஆகிய செயல்பாடுகளில் ஈடுபட்டதால் கோயில்கள் வங்கிகள் போன்று இயங்கின.
 • வேதம் , இசை, கலைகள் ஆகியவற்றில் பயிற்சி அளித்ததால் கோயில் ஒரு கல்வி நிறுவனமாகவும் விளங்கியது. சிற்ப வேலைகளும் உலோக வேலைகளும் ஊக்குவிக்கப்பட்டன. கோயிலின் வரவு செலவுக் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன. தணிக்கையாளர் ‘கோயில் கணக்கு’ என அழைக்கப்பட்டார்.

கங்கைகொண்ட சோழபுரம்

 • முதலாம் இராஜேந்திர சோழனின் வட இந்திய வெற்றியின் நினைவாகத் தஞ்சாவூர் பெரிய கோயில் போன்றே கங்கைகொண்ட சோழபுரத்தில் ஒரு கோயிலைக் கட்டினார்.
 • இராஜேந்திரன் சோழ கங்கம் என்ற புதிய பாசன ஏரியையும் தலைநகர் அருகே உருவாக்கினார், இது ஜல தம்பம் (நீர்த்தூண்) என அழைக்கப்படுகிறது. கங்கை கொண்ட சோழபுரம் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் சோழ அரசர்கள் முடிசூட்டும் இடமாகவும் ஆனது.
 • கங்கை கொண்ட சோழபுரம் கோயில் கருவறையின் வெளிப்புறச் சுவர் மாடங்களில் இடம் பெற்றுள்ள அர்த்தநாரீசுவரர், துர்கா, விஷ்ணு, சூரியன், சண்டேச அனுக்கிரக மூர்த்தி ஆகிய கடவுளரின் சிலைகள் சிறப்புமிக்கவை.

பெருவுடையார் (பிரகதீசுவரர்) கோயில்

இராஜராஜேஸ்வரம் , பிரகதீசுவரர் கோயில் என்று அழைக்கப்படும் தஞ்சாவூர் பெரிய கோயில் கட்டடக்கலை ஓவியம், சிற்பம், சிலை வடித்தல் ஆகிய கலைகளுக்குத் தன்னிகரற்ற எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இராஜராஜனின் ஆட்சி அதிகாரத்துக்கு இக்கோயில் அழுத்தமான சட்ட அங்கீகாரமாக உள்ளது. இக்கோயிலின் கருவறை மீது அமைக்கப்பட்ட விமானம் 80 டன் எடைகொண்ட ஒரே கல்லால் ஆனது.

கருவறையின் வெளிச்சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ள இலட்சுமி, விஷ்ணு, அர்த்தநாரீசுவரர், பிச்சாடனர் (பிச்சை ஏற்கும் கோலத்தில் உள்ள சிவன்) ஆகிய உருவங்கள் சிறப்பு அம்சங்கள் ஆகும். புராணங்களிலும் காவியங்களிலும் காணப்படும் காட்சிகள் சுவரோவியங்களாகவும் குறும் சிற்பங்களாகவும் இக்கோயில் சுவர்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சோழ ஆட்சியாளர்களின் சமயக் கருத்தியலை இவை வெளிப்படுத்துகின்றன. நடனப் பெண்கள், இசைக்கலைஞர்கள், இசை ஆசிரியர்கள் இவை நாடு என்ற பகுதிகளைச் சேர்ந்த பல குடியிருப்புகளிலிருந்து தேர்வு செய்யப்பட்டுக் கோயில்களோடு இணைக்கப்பட்டனர். கோயில்களில் பக்திப்பாடல்களைப் பாடுவதற்காகப் பாடகர்கள் நியமிக்கப்பட்டனர்.

தாராசுரம் கோயில்

இரண்டாம் இராஜராஜனால் (1146 – 1172) கட்டப்பட்ட தாராசுரம் கோயில் சோழர் காலக் கட்டுமானக் கலைக்கு மற்றொரு சிறந்த உதாரணம் ஆகும். இக்கோயிலின் கருவறைச்சுவரின் தளத்தில் ‘பெரிய புராண’ நிகழ்வுகள் குறுஞ்சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. நாயன்மார்களில் முதல் நால்வரில் ஒருவரான சுந்தரரின் கதையைச் சித்தரிக்கும் சுவரோவியமும் இங்குள்ளது. அரசு நிர்வாகத்தில் சேக்கிழார் செல்வாக்குப் பெற்றிருந்ததை இந்த ஓவியம் ஏற்பளிப்பு செய்வதாக உள்ளது.

வணிகம்

 • வேளாண் உற்பத்தி அதிகரிப்புடன் கைவினைத் தொழில்கள் நடவடிக்கைகளாலும் உற்பத்திப்பொருள் அதிகரித்து, பண்டமாற்று முறை வணிக வளர்ச்சிக்கு இட்டுச்சென்றது.
 • இந்த வணிக நடவடிக்கைகளில் , தென் இந்தியாவின் தொடக்ககாலத்தில் அறிந்திராத விலை, லாபம், சந்தை போன்ற கருத்தாக்கங்கள் இப்போது ஈடுபடுத்தப்பட்டன.
 • அஞ்சுவண்ணத்தார் , மணிக்கிராமத்தார் ஆகிய இரு வணிகக்குழுக்கள் பற்றி அறியமுடிகின்றது. அஞ்சுவண்ணத்தார் குழு யூதர்கள், கிறிஸ்தவர்கள், இசுலாமியர்கள் உள்ளிட்ட மேற்கு ஆசியர்களைக் கொண்டிருந்தது. இவர்கள் கடல்வழி வணிகர்கள் ஆவர்.
 • மேற்குக்கடற்கரையின் துறைமுக நகரங்களில் இவர்கள் குடியேறியிருந்தார்கள். உள்நாட்டு வணிகம் செய்தவர்கள் மணிக்கிராமத்தார் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் கொடும்பாளூர், உறையூர், கோவில்பட்டி, பிரான்மலை போன்ற நாட்டின் உட்புற நகரங்களில் வசித்தனர்.
 • காலப்போக்கில் இந்த இரு வணிகக்குழுவினரும் ஒன்றாகி, ஐநூற்றுவர், திசை ஆயிரத்து –ஐநூற்றுவர், வளஞ்சியர் போன்ற பெயர்களுடன் இயங்கினர். இவர்களது தலைமை வணிகக் குழு கர்நாடகத்திலுள்ள ஐஹோல் என்ற இடத்தில் இயங்கியது. ஐநூற்றுவர் வணிகக் குழு மேற்கொண்ட கடல் கடந்த வணிகம் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நடைபெற்றது.
 • முனைச்சந்தை (புதுக்கோட்டை), மயிலாப்பூர், திருவொற்றியூர் (சென்னை), நாகப்பட்டினம் , விசாகப்பட்டினம் , கிருஷ்ணப்பட்டினம் (தெற்கு நெல்லூர்) ஆகிய இடங்கள் கடல் வணிகக்குழுக்களின் மையங்களாக மாறின.
 • உள்நாட்டு வணிகம் விலங்குகள், படகுகள் வழியாக மேற்கொள்ளப்பட்டன. சோழநாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்கள் சந்தனம், அகில், சுவையூட்டும் பொருள்கள், விலையுயர்ந்த ரத்தினங்கள் , மிளகு, எண்ணெய், நெல், தானியங்கள், உப்பு ஆகியவை ஆகும்.
 • கற்பூரம், செம்பு, தகரம், பாதரசம் போன்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. பாசன நடவடிக்கைகளில் வணிகர்களும் ஆர்வம் கொண்டனர். வளஞ்சியர் குழு வெட்டிய ஐநூற்றுவப்பேரேரி என்ற பாசன ஏரி புதுக்கோட்டையில் உள்ளது.

கல்விப் புரவலர்களாக சோழர்

 • சோழ அரசர்கள் கல்விப்புரவலர்களாக விளங்கினார்கள். அறக்கட்டளைகளை நிறுவி , சமஸ்கிருதக் கல்விக்குப் பெரும் ஆதரவளித்தார்கள். அப்போது எழுத்தறிவு பரவலாக இருந்தது என்பதைக் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகீறது.
 • முதலாம் இராஜேந்திரன் தென் ஆற்காடு பகுதியில் உள்ள எண்ணாயிரத்தில் வேதக் கல்லூரி ஒன்றை நிறுவினார். இக்கல்லூரியில் மாணவர்கள் பயின்றார்கள். ஆசிரியர்கள் பணியாற்றினர். வேதம், இலக்கணம், வேதாந்தம் ஆகியவை இங்குக் கற்பிக்கப்பட்டன. அவருக்குப் பின்வந்த அரசர்களும் அவரைப் பின்பற்றினார்கள்.
 • இதன் விளைவாக, மேலும் இரு சமஸ்கிருதக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இவை 1048இல் புதுச்சேரிக்கு அருகிலுள்ள திருபுவனியிலும், 1061இல் செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள திருமுக்கூடலிலும் அமைந்தன.
 • இந்த சமஸ்கிருதக்கல்வி மையங்களில் வேதங்கள், சமஸ்கிருத இலக்கணம், சமயம், தத்துவங்கள் ஆகியவை கற்றுத்தரப்பட்டன. ஆசிரியர்களுக்கான ஊதியமாக அவர்களின் பணிக்காலத்திற்கு ஏற்ப நிலம் வழங்கப்பட்டது. பெரும் இலக்கியப் படைப்புகளாக கம்ப இராமாயணம், பெரிய புராணம் ஆகியன இக்காலகட்டத்தைச் சேர்ந்தவை ஆகும்.

சோழ ஆட்சியின் முடிவு

 • ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை சோழ அரச மரபு நிலையாக இருந்தது. 12ஆம் நூற்றாண்டின் இறுதியில் அங்குள்ள குடித்தலைமை ஆட்சியாளர்கள் எழுச்சி அடையத் தொடங்கினர். இது மைய அரசின் வலிமையைக் குறைத்தது.
 • அடிக்கடி நிகழ்ந்த பாண்டியரின் தொடர் படையெடுப்புகளால் ஒரு காலத்தில் வலிமை பெற்று விளங்கிய சோழ அரசு, தன்னை விட வலிமையில் குறைந்த ஹொய்சால அரசைச் சார்ந்திருக்குமளவிற்கு வலுவிழந்தது.
 • 1264இல் பாண்டிய மன்னன் முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் சோழர் தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்தைக் கைப்பற்றினார். அதற்கு முன்னரே காஞ்சிபுரத்தைத் தெலுங்குச் சோழர் கைப்பற்றியிருந்தனர்.
 • எஞ்சிய பகுதிகள் பாண்டியரின் ஆளுகைக்குச் சென்றன. 1279இல் முதலாம் மாறவர்மன் குலசேகரப்பாண்டியன் கடைசி சோழ அரசரான மூன்றாம் இராஜேந்திர சோழனைத் தோற்கடித்தார். இத்துடன் சோழரின் ஆட்சி முடிவுக்கு வந்து, பாண்டியரின் ஆட்சி தொடங்கியது.

சம்புவராயர்கள்

சம்புவராயர்கள் ராஜாதிராஜன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகிய சோழ அரசர்களின் ஆட்சிக்காலத்தில் வடஆற்காடு, செங்கல்பட்டு பகுதிகளில் வலிமை படைத்த குறுநில மன்னர்களாக விளங்கினர். தாங்கள் சார்ந்திருந்தன பேரரசுகளுக்கு ஆதரவாக போர்களில் ஈடுபட்டனர். பல சமயங்களில் தங்களுக்குள்ளும் போரிட்டுக் கொண்டனர். பதிமூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து பாண்டியர் ஆட்சியின் இறுதி வரை சம்புவராயர்கள் பாலாறு பகுதியில் அரசியல் செல்வாக்குடன் விளங்கினர். அவர்களின் அரசு இராஜ கம்பீர ராஜ்யம் எனப்பட்டது. அதன் தலைநகரம் படைவீட்டில் அமைந்திருந்தது. வீர சோழ சம்புவராயனின் கல்வெட்டுகள் (1314 – 1315) பல கண்டெடுக்கப்பட்டுள்ளன. சம்புவராயர்கள் உயர்ந்த பட்டங்களைச் சூட்டிக்கொண்டனர். எடுத்துக்காட்டாக, சகலலோக சக்ரவத்தி(ன்) வென்று மண்கொண்ட சம்புவராயன் (1322-1323), சகல்லோக சக்ரவர்த்தின்(ன்) இராஜநாராயணன் சம்புவராயன் (1337 – 1338) ஆகியோரைக் கூறலாம். சகலலோக சக்ரவத்தி(ன்) இராஜநாராயணன் சம்புவராயன் 20 ஆண்டுகள் ஆட்சி செய்து, பின்னாட்களின் விஜயநகரத்தின் குமார கம்பணரால் தோற்கடிக்கப்பட்டார். இந்த முறியடிப்புக்குப் பிறகுதான் குமார கம்பணர் தெற்கு நோக்கி மதுரை வரை படையெடுத்துச் சென்றார். குமார கம்பணர் மதுரை சுல்தானைத் தோற்கடித்து முழுவெற்றி பெற்றார்.

II – பாண்டியர்

 • தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் நவீன காலத்துக்கு முன்புவரை இந்தியாவின் தென்பகுதியை ஆட்சி செய்து வந்த மூவேந்தர் மரபினரில் பாண்டியரும் அடங்குவர். அசோகர் தன் கல்வெட்டுகளில் சோழர், சேரர், பாண்டியர் சத்தியபுத்திரர் ஆகியோரைத் தென் இந்தியாவின் ஆட்சியாளர்களாகக் குறிப்பிடுகிறார்.
 • முத்துக்குளித்தல் தொழிலோடு வரலாற்றுப்பூர்வமாக இணைந்த கொற்கை பாண்டியரின் தொடக்க காலத் தலைநகரமாகவும் துறைமுகமாகவும் இருந்தது. பிற்காலத்தில் அவர்கள் மதுரைக்கு இடம்பெயர்ந்தனர்.
 • மதுரையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாண்டியர்களின் தொடக்க காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் மடிரை என மதுரை குறிப்பிடப்பட்டுள்ளது.
 • தமிழ் செவ்விலகியங்கள் மதுரையைக் கூடல் எனச் சுட்டுகின்றன. இச்சொல்லுக்குக் கூடுகை என்று பொருளாகும். பாண்டிய நாட்டைச் சேர்ந்த புலிமான் கோம்பை என்ற கிராமத்தில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் கூடல் என்ற சொல் குறிப்பிடப்பெற்றுள்ளது.
 • பத்துப்பாட்டு நூல்களிலான பட்டினப்பாலையிலும், மதுரைக்காஞ்சியிலும் கூடல் பாண்டியர் தலைநகரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எட்டுத்தொகை நூல்களிலும் இச்சொல் காணப்படுகிறது.
 • வரலாற்றுப்பூர்வமாகவே மதுரை, கூடல் ஆகிய சொல்லாடல்கள் ஒன்றுக்கொன்று மாற்றுச்சொல்லாகவே கையாளப்பட்டு வந்திருக்கின்றன.

சான்றுகள்

 • சங்ககாலப் பாண்டியர் வரலாறு ஏறத்தாழ பொ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் பொ.ஆ.மூன்றாம் நூற்றாண்டு வரை எனக் குறிப்பிடப்படுகிறது.
 • பெருங்கற்கால ஈமப் பொருள்அள் கண்டுபிடிப்பு, தமிழ் பிராமி கல்வெட்டுகள், சங்க இலக்கியப் பாடல்கள் போன்ற பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் மூலம் சங்க காலப் பாண்டியர் வரலாறு மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
 • பொ.ஆ. ஆறாம் நூற்றாண்டின் இறுதிவாக்கில் தென் தமிழ்நாட்டில் பாண்டியர் தம் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தினர். ஏழாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தது குறித்த தகவல்களைச் சில செப்பேடுகள் உறுதிப்படுத்துகின்றன.
 • அவற்றுள் நெடுஞ்சடையானின் வேள்விக்குடி மானியம் முக்கியமானதாகும். அரசானைகள், பாண்டிய அரசர்களின் மரபுவழி வரிசை, வெற்றிகள், அரசர்கள் எழுப்பிய கோயில்கள், உருவாக்கிய பிரம்மதேயங்கள் ஆகியவற்றுக்கு அரசர்கள் வழங்கிய மானியங்கள் , அறக்கொடைகள் ஆகியன குறித்து செப்பேடுகள் தெரிவிக்கின்றன.
 • குடைவரைக் கோயில்களை உருவாக்கியவர்கள், பாசன ஏரிகள், கால்வாய்கள் போன்றவற்றை உருவாக்கியவர்கள் குறித்த செய்திகளைக் கல்வெட்டுகள் அளிக்கின்றன.
 • மார்க்கோ போலோ, வாசஃப் , இபின் பதூதா போன்ற பயணிகள் எழுதியுள்ள வரலாற்றுக் குறிப்புகள் அக்காலகட்ட அரசியல், சமூக, பண்பாட்டு வளர்ச்சிகள் குறித்து அறிய உதவுகின்றன.
 • மதுரைத் தலை வரலாறு, பாண்டிக்கோவை , மதுரை திருப்பணி மாலை ஆகிய இலக்கியங்கள் மதுரையை ஆண்ட பிற்காலப் பாண்டியர் குறித்த செய்திகளை வழங்குகின்றன.
 • பொ.ஆ. ஏழாம்/எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த ‘இறையனார் அகப்பொருளில் ‘சங்கம்’ என்ற சொல் கலைக்கழகம் என்ற பொருளில் இடம்பெற்றுள்ளது.
 • ஆனால், பல்லவர்களுக்கு முந்தை இலக்கியங்களில் சங்கம் என்ற சொல் இப்பொருளில் குறிப்பிடவில்லை. திருவிளையாடல் புராணம், பெரிய புராணம் ஆகிய பிந்தைய இடைக்கால நூல்களில் சங்கம் என்ற சொல் கலைக்கழகம் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது.
 • மணிமேகலையை இயற்றிய சீத்தலைச்சாத்தனார் மதுரையைச் சேர்ந்தவர் ஆவார்.

ஆட்சிப்பகுதி

 • பாண்டியரின் ஆட்சிப்பகுதி பாண்டி மண்டலம், தென் மண்டலம், பாண்டி நாடு என்று அழைக்கப்படுகிறது. வைகை, தாமிரபரணி ஆகிய ஆறுகளால் வளம் பெறும் சில பகுதிகள் நீங்களாகப் பெரும்பாலும் பாறைகளும் குன்றுகளும் மலைத்தொடர்களும் நிறைந்த பகுதியே பாண்டிய நாடு ஆகும்.
 • புதுக்கோட்டை வழியே ஓடும் வெள்ளாறு பாண்டிய நாட்டின் வட எல்லையாகும். இந்தியப் பெருங்கடல் தென் எல்லையாகும். மேற்குத்தொடர்ச்சி மலைகள் மேற்கு எல்லையாகவும் வங்காள விரிகுடா கிழக்கு எல்லையாகவும் அமைந்திருந்தன.

பாண்டியரின் மறுமலர்ச்சி (600-920)

 • களப்பிரரின் மறைவுக்குப் பின் பாண்டியரின் மறு எழுச்சி ஏற்பட்டதாகத் தெரிகிறது. ஒருகாலத்தில் மலைவாழ் பழங்குடிகளாக இருந்த களப்பிரர்கள் விரைவிலேயே சமவெளியில் குடியேறினர். அவர்கள் புத்த, சமண சமயங்களை ஆதரித்தனர்.
 • களப்பிரரிடமிருந்து பாண்டியர் பகுதியைக் கடுங்கோன் மீட்டதாகச் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது. அவரைத் தொடர்ந்து இரு அரசர்கள் அடுத்தடுத்து ஆட்சி செய்துள்ளனர். அவர்களில் சேந்தன் என்பவர் போர் முறையில் சிறந்தவராக இருந்துள்ளார்.
 • சேரரை வென்றதால் அவர் வானவன் என்ற பட்டம் பெற்றார் எனச் செப்பேடுகள் கூறுகின்றன. அடுத்து வந்த தொடக்க காலப் பாண்டிய அரசர்களில் சிறந்தவரான அரிகேசரி மாறவர்மன் (624 – 674) 642இல் பதவி ஏற்றார் என்பதை வைகை ஆற்றுப்பகுதி கல்வெட்டுகள் கூறுகின்றன.
 • இவர் முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்ம வர்மன் ஆகியோருக்குச் சம காலத்தவர் ஆவார். அவர் தமது காலத்தைச் சேர்ந்த சேர, சோழ, பல்லவ சிங்கள அரசர்களை வெற்றி கொண்டதாக அக்கல்வெட்டுக் குறிப்புகளும் செப்பேடுகளும் கூறுகின்றன. சமணர்களைக் கழுவெற்றிய கூன் பாண்டியனே அரிகேசரி என்று அடையாளம் காணப்படுகிறார்.
 • அரிகேசரியைத் தொடர்ந்து கோச்சடையான் இரணதீரனும் (700 – 730) , அவருக்குப் பின் மாறவர்மன் இராஜசிம்மனும் (730 -765) ஆட்சி செய்தனர். அவர்களுக்குப் பின் ஜதில பராந்தக நெடுஞ்சடையன் (முதல் வரகுணன்) (756 – 815) ஆட்சிப்பொறுப்பை ஏற்றார்.
 • இவரே புகழ்பெற்ற வேள்விக்குடி நிலக்கொடை அளித்தவர் ஆவார். பாண்டிய அரச மரபில் மிகச் சிறந்தவரான இவர் பல்லவர்களையும் சேரர்களையும் வெற்றிகரமாக எதிர்கொண்டார்.
 • பாண்டிய அரசைத் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளுக்கு விரிவுபடுத்தினார். பல விஷ்ணு கோயில்களைக் கட்டிய பெருமையும் இவருக்கு உண்டு.
 • இவருக்கு அடுத்த அரசரான ஸ்ரீமாற ஸ்ரீவல்லபர்(815 – 862) இலங்கைக்குப் படையெடுத்து, அங்கு தன் அதிகாரத்தை நிலைநிறுத்தினார். எனினும் பல்லவ மன்னன் மூன்றாம் நந்தி வர்மனிடம் (846 -869) தோற்றார்.
 • அடுத்ததாக ஆட்சிக்கு வந்த இரண்டாம் வரகுணன் திருப்புறம்பியம் போரில் அபராஜித பல்லவனால் (885 – 903) தோற்கடிக்கப்பட்டார். இவருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த பராந்தக வீரநாராயணன், இரண்டாம் இராஜசிம்மன் ஆகியோரால் முதலாம் பராந்தகனின் தலைமையில் தோன்றிய சோழரின் எழுச்சிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. முதலாம் பராந்தகனிடம் தோற்ற இரண்டாம் இராஜசிம்மன் 920இல் நாட்டை விட்டே ஓடினார்.

 • சைவத் துறவியான திருஞானசம்பந்தர் அரிகேசரியை சமண மதத்திலிருந்து சைவ மதத்துக்கு மாற்றினார்.

மீண்டும் பாண்டிய எழுச்சி (1190 – 1310)

 • பன்னிரெண்டாம் நூற்றாண்டின் இறுதிக் கால்பகுதியில் ஆதி இராஜேந்திரனின் மறைவுக்குப் பிறகு, சோழ அரசில் வெற்றிடம் ஏற்பட்ட நிலையில் பாண்டியப் பகுதிய நிர்வகித்த ஆளுநரும் வலுவிழந்தார்.
 • இதைச் சாதகமாகப் பயப்படுத்திக்கொண்ட பாண்டியக் குடித்தலைமை மன்னர்கள் தங்களை நிலைநிறுத்திக்கொண்டு தமது சுதந்தர ஆட்சியை நிறுவ முயன்றார். இரண்டாம் இராஜராஜசோழனுடன் போரிட்ட ஸ்ரீவல்லப பாண்டியன் தன் மகனைப் போரில் பறிகொடுத்தார்.
 • ஐந்து பாண்டியக் குறுநில மன்னர்கள் இச்சூழலைப் பயன்படுத்திக்கொண்டு முதலாம் குலோத்துங்கனுடன் (1070-1120) போரிட்டார்கள். [போரில் அவர்களுக்குத் தோல்வியே கிடைத்தது.
 • 1190இல் சடையவர்மன் ஸ்ரீவல்லபன் முதலாம் குலோத்துங்கனுடைய அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டு, பாண்டிய நாட்டில் ஆட்சியைத் துவக்கினார். சடையவர்மன் ஸ்ரீவல்லபன் மதுரையில் நடைபெற்ற பட்டம் சூட்டு விழாவில் அரசராக முடிசூடி, செங்கோல் ஏந்தி, அரியணையில் அமர்ந்தார்.
 • இந்த நிகழ்வின் நினைவாகச், சுந்தரசோழபுரம் என்ற வேளாண் குடியிருப்புப் பகுதியைச் சுந்தரசோழசதுர்வேதிமங்கலம் என்று பெயர் மாற்றி இறையிலியாகப் பிராமணர்களுக்கு வழங்கினார்.
 • சோழரின் வீழ்ச்சிக்குப் பிறகு, பதின்மூன்றாம் நூற்றாண்டில் பாணிட்யர் செல்வாக்குமிக்க அரச மரபினராக மாறினார்கள். மதுரை அவர்களின் தலைவராக இருந்தது.
 • காயல் அவர்களுக்கான பெருந்துறைமுகமாக விளங்கியது. வெனீஸைச் சேர்ந்த புகழ்பெற்ற பயணி மார்க்கோ போலோ 1288இலும் 1293இலுமாக இருமுறை காயலுக்கு வந்துள்ளார். அப்போது காயல் துறைமுகம் முழுவதும் அரேபிய, சீன கப்பல்களால் நிறைந்திருந்ததாகவும் காயல் நகரில் வணிக நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெறுவதாகவும் மார்க்கோ போலோ கூறுகிறார்.

சடையவர்மன் சுந்தரபாண்டியன்

 • இரண்டாம் பாண்டிய அரசின் சிறப்புமிக்க ஆட்சியாளர் சுந்தரபாண்டியன் (1251 – 1268) ஆவார். அவர் தமிழ்நாடு முழுவதையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்ததுடன் , ஆந்திராவில் உள்ள நெல்லூர் வரை தனது அரசியல் அதிகாரத்தைச் செலுத்தினார். இவர் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்சியன் என்று அழைக்கப்படுகிறார்.
 • அவருடைய ஆட்சிக்காலத்தில்தான் பாண்டிய அரசு வலிமையின் உச்சத்தில் இருந்தது. அப்போது ஹொய்சாளர்கள் அடக்கிவைக்கப்பட்டார்கள். பல கல்வெட்டுக்கள் அவரை மிகவும் உயர்வாகப் போற்றப்படுகின்றன.
 • சுந்தரபாண்டியன் சேர அரசரான மலைநாட்டுத் தலைவரை அடக்கி, தனக்குக் கப்பம் செலுத்த வைத்தார்.
 • சோழரின் வீழ்ச்சி மால்வா பகுதியை ஆட்சி செய்த போஜ அரசன் வீர சோமேஸ்வரனுக்குச் சுந்தரபாண்டியனை சவாலுக்கு அழைக்கும் துணிச்சலைக் கொடுத்தது. இருவருக்குமிடையே கண்ணனூரில் நடந்த போரில் சுந்தர-பாண்டியன் வீர சோமேஸ்வரனை வென்று, மால்வா பகுதியைச் சூறையாடினார்.
 • சேந்தமங்கலத்தையும் கட்டுக்குள் கொண்டுவந்தார். கடலூரை மையமாகக் கொண்டு வட தமிழகத்தில் செல்வாக்குடன் ஆட்சி நடத்திய காடவர்களையும் அடக்கிய சுந்தரபாண்டியன் அவர்களைக் கப்பம் செலுத்தப் பணித்தார்.
 • அவர் மேற்குப்பகுதியையும் தற்கால ஆற்காடு பகுதிக்கும் சேலத்துக்கும் இடைப்பட்ட பகுதியையும் கைப்பற்றினார். போரில் காஞ்சிபுரம் அரசனைக்கொன்று அதையும் எடுத்துக்கொண்டார். கொல்லப்பட்ட காஞ்சிபுரம் அரசரின் சகோதரர் பாண்டிய மன்னருக்கு அடிபணிந்ததன் மூலம் காஞ்சிபுரம் ஆட்சியை கவனித்துக்கொண்டார்.
 • கப்பம் செலுத்தவும் சம்மதித்தார். எனினும் அவர் தனி ஒருவராக ஆட்சி செய்யும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. சுந்தரபாண்டியன், வீர பாண்டியன் ஆகிய இருவருடன் சேர்ந்து ஆட்சி புரியும்படி செய்தார். வீரபாண்டிய ஈழம், கொங்கு, சோழ மண்டலம் (சோழ நாடு) ஆகியவற்றை வெற்றிகொண்டதாக அவர் குறித்த ஓர் ஆவணம் (1253 – 1256) கூறுகிறது.
 • பாண்டிய நாட்டுக்கு வருகை தந்த வெனீஸிய (இத்தாலி) பயணி மார்க்கோ போலோ நேர்மையான நிர்வாகத்துக்காகவும் வெளிநாட்டு வணிகர்களைச் சிறந்த முறையில் நடத்தியதற்காகவும் பாண்டிய அரசரைப் பாராட்டியுள்ளார். உடன்கட்டை ஏறும் வழக்கம், அரசர்கள் பின்பற்றிய பலதார மணமுறை ஆகியவை மார்க்கோ போலோவின் பயணக் குறிப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மாறவர்மன் குலசேகரன்

 • சுந்தரபாண்டியனுக்குப் பிறகு மாறவர்மன் குலசேகரன் நாற்பது ஆண்டுகள் பாண்டிய நாட்டை வெற்றிகரமாக ஆட்சிபுரிந்தார். அவரது ஆட்சியில் அமைதியும் வளர்ச்சியும் நிலவின.
 • அவர் 1268இல் அரியணை ஏறி, 1312 வரை ஆட்சி செய்தார். அவருக்கு இரு மகன்கள், மூத்தவர் சுந்தர பாண்டியன்; இளையவர் வீரபாண்டியன்.
 • 1302 இல் இளைய மகன் வீரபாண்டியனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டப்பட்டது. இதனால் கோபமடைந்த மூத்த மகன் சுந்தர பாண்டியன் தன் தந்தையைக் கொன்று உள்நாட்டுப் போரில் வீரபாண்டியன் வென்று ஆட்சியைப் பிடித்தார்.
 • சுந்தர பாண்டியன் தில்லிக்குத் தப்பிச் சென்று அலாவுதின் கில்ஜியிடம் அடைக்கலமானார். இந்த நிகழ்வுகளே மாலிக்காபூர் தமிழகப் படையெடுப்பு வழிவகுத்தன.

மாலிக் காபூர் படையெடுப்பு

 • மாலிக் காபூர் 1311இல் மதுரையை அடைந்தபோது, அங்கே யாரும் இல்லை. வீரபாண்டியன் ஏற்கனவே தப்பியோடியிருந்தார். இந்த மதுரை படையெடுப்பு குறித்து அலாவுதின் கில்ஜியின் அரசவைக் கவிஞர் அமிர் குஸ்ருவின் கணிப்பின்படி, அங்கிருந்து 512 யானைகள், 5,000 குதிரைகள், 500 மூட்டைகளில் வைரம், முத்து, மரகதம், மாணிக்க நகைகள் மாலிக் காபூரால் எடுத்துச்செல்லப்பட்டன எனத் தெரிகிறது.
 • அமிர் குஸ்ரு மிகைப்படுத்தி எழுதக்கூடியவர், இருப்பினும் சொக்கநாதர் கோயிலை இடித்து ஏராளமான விலை மதிக்க முடியாத பொருள்களை மாலிக் கபூர் எடுத்துச்சென்றார் என்பது உண்மையே. இச்செல்வத்தைப் பயன்படுத்தி அலாவுதீன் கில்ஜி தனது எதிரிகளை தன் பக்கம் ஈர்த்து தனது பலத்தை அதிகரித்துக் கொண்டார்.
 • மாலிக் காபூரின் படையெடுப்புக்குப் பிறகு , பாண்டிய அரசின் ஆட்சிப்பொறுப்பு பாண்டிய அரசக் குடும்ப உறுப்பினர்களால் தனித் தனியாகப் பிரித்துக்கொள்ளப்பட்டன.
 • மதுரையில் தில்லி சுல்தானிய அரசுக்குக் கட்டுப்பட்ட ஓர் அரசு உருவாகியது. இது 1335 வரை தான் நீடித்தது. மதுரையை ஆட்சிசெய்த ஆளுநர் ஜலாலுதீன் அஸன் ஷா டெல்லி சுல்தானுக்குக் கட்டுப்படாமல் 1335இல் மதுரை அரசராகத் தன்னை அறிவித்துக்கொண்டார்.

அரசு

 • பாண்டிய அரசர்கள் தொடர்ந்து மதுரையையே தங்கள் தலைநகராகக் கொண்டார்கள். பாண்டிய அரசர்களைக் கூடல்கோன், கூடல் நகர் காவலன் , மதுரபுர பரமேசுவரன் என்று போற்றுவது மரபாக இருந்தது.
 • தொடக்க காலப் பாண்டியருக்கான பட்டங்கள்: பாண்டிய அதியரசன், பாண்டிய மகராசன், மன்னர் மன்னன், அவனிப சேகரன் , ஏக வீரன், சகலபுவன சக்கரவர்த்தி போன்றவை ஆகும்.
 • பிற்காலப் பாண்டியருக்குச் சமஸ்கிருதத்தில் அமைந்த பட்டங்கள்: கோதண்ட ராமன் , கோலாகலன் , புவனேகவீரன், கலியுக ராமன் போண்றவை ஆகும்.
 • தூய தமிழில் அமைந்த பட்டங்கள்: செம்பியன், வானவன், தென்னவன் போன்றவை.
 • பாண்டியர் தம்முடன் நெடிய வணிக பண்பாட்டுத் தொடர்பு கொண்டிருந்த அரபு நாடுகளிலிருந்து குதிரைகளை இறக்குமதி செய்தனர். இக்குதிரைகளைக் கொண்டு ராணுவத்தைப் பலப்படுத்திக்கொண்டனர். இதன்மூலம் பாண்டியர் தங்கள் ராணுவ வலிமையைத் தக்கவைத்துக் கொண்டனர்.

அரண்மனையும் அரியணையும்

 • பாண்டியர் அரண்மனை திருமாளிமை, மனபரணன் திருமாளிகை என்று அழைக்கப்பட்டன. அரசர்கள் நீளமான, ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் அமரும் இட வசதிகொண்ட அரியணையில் அமர்ந்தபடி நிர்வாகம் செய்தனர்.
 • குறுநில மன்னர்கள் மீது அரசர்களின் சட்டப்பூர்வ மேலாளுமையைக் காட்டும் விதத்திலும் அரியணைகளுக்குப் பெயரிடும் வழக்கம் இருந்தது. அத்தகைய அரியணைகளின் பெயர்கள் முன்னைய தரையன், பாண்டியத்தரையன், கலிங்கத்தரையன் ஆகும்.
 • அரசர்கள் அரியணைகளில் இருந்தபடிதான் அரசக்கட்டளைகளை வாய்மொழியாகப் பிறப்பித்தார்கள், அவை ‘திருமந்திர ஓலை’ என்று அழைக்கப்பட்டன.

அரச அதிகாரிகள்

 • அதிகாரிகள் குழு அரச கட்டளைகளை நிறைவேற்றியது. முதன்மை அமைச்சர் உத்தர மந்திரி எனப்பட்டார். மாணிக்கவாசகர், குலச்சிறையார், மாறன்கரி போன்ற ஆளுமைகள் பாண்டிய அமைச்சர்களாக இருந்துள்ளனர்.
 • அரச தலைமைச் செயலகம் எழுத்துமண்டபம் எனப்பட்டது. அக பரிவார முதலிகள் என்பவர்கள் அரசரின் தனிப்பட்ட உதவியாளர்களாக இருந்தனர். மாறன் எயினன், சதன் கணபதி, ஏனாதி சதன் , திரதிரன், மூர்த்தி எயினன் போன்றவை உயர்ந்த மதிப்பிற்குரிய அரச பதவிகளாக இருந்தன.
 • படைத்தளபதிகளுக்குப் பள்ளி வேலன், பராந்தகன் பள்ளி வேலன், மாறன் ஆதித்தன், தென்னவன் தமிழவேள் ஆகிய பட்டங்கள் சூட்டப்பட்டன.

அரசியல் பிரிவுகள்

 • பாண்டிய மண்டலம் என்பது பல வளநாடுகளைக் கொண்டது. ஒரு வளநாடு பல நாடுகளாகவும் கூற்றங்களாகவும் பிரிக்கப்பட்டது.
 • நாடு, கூற்றம் ஆகியன மங்கலம், நகரம், ஊர், குடி ஆகிய குடியிருப்புகளைக் கொண்டவையாக இருந்தன. பாண்டிய மண்டலத்தில் குளக்கீழ் என்ற ஒரு தனிச்சிறப்பான அரசியல் பிரிவு இருந்தது.
 • பாசன ஏரிக்குக் கீழேயிருக்கும் பகுதி என்று இதற்குப் பொருளாகும். எடுத்துக்காட்டாக, மதுரை நகரம் ‘மடக்குளக்கீழ் மதுரை’ என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 • வேளாண் நிலங்களின் தன்மைகளை மதிப்பிட்டு, வரிகளை விதிப்பது நாட்டாரின் வேலையாகும். நில அளவீடுகளின்போது 14 மற்றும் 24 அடி நீளமுள்ள கழிகளைப் பயன்படுத்தினர். பின்னர் அவற்றைக் கொடையாக வழங்கினர்.
 • சாலபோகம் நிலம் பிராமணர்களுக்கு ஒதுக்கப்பட்டது. இரும்பு உலோக வேலை செய்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் ‘தட்டார் காணி’ எனப்பட்டது.
 • மரவேலை செய்பவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் ‘தச்சர் மானியம்’ எனப்பட்டது. கல்வி கற்பிக்கும் பிராமணக் குழுவிற்கு வழங்கப்பட்ட நிலம் பட்ட விருத்தி எனப்பட்டது.

நிர்வாகமும் சமயமும் : 7 முதல் 9ஆம் நூற்றாண்டு வரை

 • 800-ஐச் சேர்ந்த மானூர் (திருநெல்வேலி மாவட்டம்) கல்வெட்டு கிராம நிர்வாகத்தைப் பற்றிய செய்திகளைக் கூறுகிறது. அதன்படி , பாண்டியர் கிராம நிர்வாகமும் கிராமசபைகள், குழுக்கள் எனச் சோழர் ஆட்சியின் உள்ளாட்சி முறை போன்றே அமைந்திருந்தது.
 • குடிமை அதிகாரங்கள், இராணுவ அதிகாரங்கள் ஒரே நபரிடமே இருந்துள்ளன. இக்காலகட்ட பாண்டிய அரசர்கள் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளையும் ஆதரித்தனர். சைவ, வைணவ அடியார்கள் (நாயன்மார்களும் ஆழ்வார்களும்) தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் தங்கள் பங்களிப்பை அளித்தர்.
 • இக்காலகட்டம் கடுமையான மத மோதல்கள் நிகழ்ந்த காலகட்டமாகக் குறிக்கப்படுகிறது. பக்தி இயக்கத்தின் எழுச்சி வேற்று மத அறிஞர்களை விவாதங்களுக்கு அழைத்தது. இத்தகைய விவாதங்களில் புத்த, சமண மதங்கள் தோல்வி அடைந்ததாக பக்தி இலக்கியங்கள் கூறுகின்றன.

பொருளாதாரம்

சமூகம்

அரசர்களும் குறுநில மன்னர்களும் பாசன வசதிகளுடன் கூடிய குடியிருப்புகளை உருவாக்கி மங்கலம், சதுர்வேதிமங்கலம் என்ற பெயரிட்டு பிராமணர்களுக்கு வழங்கினர். இக்குடியிருப்புகளுக்கு அரசனின் பெயர்களும் கடவுளரின் பெயர்களும் சூட்டப்பட்டன. செல்வாக்குமிக்க பிராமணர்கள் பிரம்மாதிராஜன் , பிரம்மராஜ்யன் ஆகிய உயர் தகுதிநிலை பட்டங்களைக் கொண்டிருந்தனர்.

வணிகம்

 • இசுலாமியர்களைத் தமிழ்நாட்டுக்குள் முதன்முதலாக வரவழைத்தது மாலிக் காபூரின் படையெடுப்பு அல்ல. ஏழாம் நூற்றாண்டிலேயே தென்னிந்தியாவின் மேற்குக்கடற்கரையில் அரபுக்குடியிருப்புகள் தோன்றிவிட்டன.
 • இதன்மூலம் தங்கள் வணிகத்தை கிழக்குக் கடற்கரையிலிருந்த தமிழர்களுடன் விரிவுபடுத்திக் கொண்டனர். இதன் காரணமாக கிழக்குக் கரையில் இருந்த அரசுகள் இந்த அரபு வணிகர்கள் மீது மிகவும் தாராளமாக கொள்கைகளைத் தளர்த்தி ஆதரவு அளித்துள்ளனர்.
 • இதனால் அவ்வணிகர்களுக்குத் துறைமுகக் கட்டணங்கள், சுங்க வரி ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டன. காயல் துறைமுக நகரில், அரபுத்தலைவன் மாலிக்கு இஸ்லாம் ஜமாலுதின் என்பவரால் ஒரு முகவர் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.
 • இந்த நிறுவனம் பாண்டியர்க்குக் குதிரைகளை இறக்குமதி செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ளது.
 • நிகமத்தோர், நானாதேவி, திசை ஆயிரத்து ஐநூற்றுவர், ஐநூற்றுவர் , மணிக்கிராமத்தார், பதினென் விஷயத்தார் என்று வணிகர்கள் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறார்கள். அவர்களது வணிக குழுக்கள் கொடும்பாளூர், பெரியகுளம் ஆகிய இடங்களில் நிறுவப்பட்டன.
 • மிளகு, முத்து, விலையுயர்ந்த கற்கள், குதிரைகள், யானைகள், பறவைகள் ஆகியன வணிகத்தில் ஈடுபடுத்தப்பட்டன. பதிமூன்று-பதினான்காம் நூற்றாண்டுகளில் குதிரை வணிகம் விறுவிறுப்பாக நடைபெற்றது.
 • விழாக்கள், போர்களில் பயன்படுத்த குதிரைகள் அதிக அளவில் தேவைப்பட்டதால் பாண்டிய அரசர்கள் குதிரைகளில் அதிக முதலீடு செய்தனர் என்று மார்க்கோ போலோ, வாசாஃப் ஆகியோர் குறிப்பிடுகிறார்கள்.
 • குதிரை வணிகம் செய்வோர் குதிரைச்செட்டி எனப்பட்டனர். இவர்கள் கடல்வழி வணிகத்திலும் ஈடுபட்டனர். பாண்டியர் காலத்தில் முழு வீச்சில் இயங்கிய துறைமுக நகரம் காயல்பட்டினம் (தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது) ஆகும்.
 • வணிகத்தில் பரிமாற்றத்துக்கான ஊடகமாக தங்கம் விளங்கியதால், தங்க நாணயங்கள் அதிகமாகப் புழக்கத்தில் இருந்தன. அவை காடு, பழங்காசு, அன்றாட நற்பழங்காசு, கனம், கழஞ்சு, பொன் எனப் பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்பட்டன.
 • வணிகர்களின் கடவுளர் அவர்களுக்கான பட்டப்பெயர்களுடன் கூடிய பெயர்களுடன் அமைந்திருந்தன. எடுத்துக்காட்டாக, ஆயிரத்து ஐநூற்றுவார் உடையார், சொக்கநாயகி அம்மன் போன்ற பெயர்களைக் கூறலாம். சீரான கால இடைவெளியில் நடத்தப்பட்ட பொருட்காட்சிகள் தவளம் எனப்பட்டன. வணிகர்களின் குடியிருப்புப் பகுதி ‘தெரு’ எனப்பட்டது.
 • பாண்டியர் கால குதிரை வணிகம் குறித்து வாசாஃப் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்: “காயல் மற்றும் இந்தியாவின் பிற துறைமுகங்களில் ஏறத்தாழ 10,000 குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றில் 1,400 குதிரைகள் ஜமாலுதீனுக்குச் சொந்தமானவை. குதிரையின் சராசரி விலை 220 செம்பொன் தினார்களாகும்”.

பாசனம்

 • பாண்டிய அரசர்கள் பெரும் எண்ணிக்கையிலான பாசன வளங்களை உருவாக்கினர். அவை அரசக் குடும்ப உறுப்பினர்கள் பெயர்களில் அறியப்படுகின்றன.
 • வாசுதேவப்பேரேரி, வீரபாண்டியப்பேரேரி, ஸ்ரீ வல்லபப் பேரேரி, பராக்கிரமப்பாண்டியப்பேரேரி போன்றவை ஆகும்.
 • ஏரிகள் திருமால் ஏரி, மாறன் ஏரி, கலியன் ஏரி, காடன் ஏரி என்று பெயரிடப்பட்டன. வைகை, தாமிரபரணி ஆகிய ஆறுகளின் இரு கரைகளிலும் அவற்றின் நீரைப் பாசனக் குளங்களுக்குக் கொண்டுசெல்லும் கால்வாய்கள் வெட்டப்பட்டன.
 • சேந்தன் மாறன் காலகட்டத்தைச் சேர்ந்த வைகை , தாமிரபரணி ஆகிய ஆறுகளின் இரு கரைகளிலும் அவற்றின் நீரைப் பாசனக் குளங்களுக்குக் கொண்டுசெல்லும் கால்வாய்கள் வெட்டப்பட்டன.
 • சேந்தன் மாறன் காலகட்டத்தைச் சேர்ந்த வைகை ஆற்றுப்படுகைக் கல்வெட்டுகளில் அவரால் நிறுவப்பட்ட ஆற்று மதகு குறிப்பிடப்படுகிறது.
 • ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் வெட்டிய ஒர் பெரிய ஏரி இன்றும் பயன்பாட்டில் உள்ளது. வட மாவட்டங்களில் பல்லவர்கள் மேற்கொண்டதைப் போன்றே தென் மாவட்டங்களிலும் பாணிட்யர் பாசனத் தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்தனர்.
 • ஏரிகளின் கரைகளை அமைக்கும்போது பண்டைய கட்டுமானக் கலைஞர்கள் கரை மட்டத்தைச் சமமாகப் பராமரிக்க நூல் பயன்படுத்தினர். கரைகளின் உட்பகுதியை வலுவூட்ட கல் அடுக்குகளைப் பயன்படுத்தியது பாண்டிய பாசனத் தொழில்நுட்பங்களில் ஒன்றாகும். பிற்காலப் பாண்டியர் காலத்தில் (ஏறத்தாழ 1212) திருவண்ணாமலை கோயில் நிலங்கள் பாசன வசதி பெற, பெண்ணை ஆற்றிலிருந்து வாய்க்கால் அமைத்துத் தந்துள்ளார்.
 • வறட்சிப்பகுதியான இராமநாதபுரத்தில் பல ஏரிகள் வெட்டப்பட்டன. இத்தகைய பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகள், உள்ளூர் தலைவர்கள், அதிகாரிகள் ஆகியோர் மேற்பார்வையில் பாசன வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. பாசன நீர்நிலைகளின் பராமரிப்பு பணிகள் பெரும்பாலும் உள்ளாட்சி அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டன. சில சமயங்களில் வணிகர்களும் பாசன ஏரிகளை வெட்டினார்கள்.
 • இருப்பைக்குடி கிழவன் என்ற உள்ளூர்த்தலைவர் பல ஏரிகளை வெட்டியதுடன், அவற்றைப் பழுதுபார்க்கும் வேலையிலும் ஈடுபட்டார். நில உடமையாளர்கள் பூமிபுத்திரர் எனப்பட்டனர். வரலாற்று நோக்கில் இவர்கள் உள்ளூர் குடிகளாக இருந்ததால் , நாட்டு மக்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இவர்களின் சமுதாயக் குழு சித்திர மேழி பெரிய நாட்டார் எனப்பட்டது.

எழுத்தறிவு

 • பாண்டியர் ஆட்சியில் எழுத்தறிவைப் பரப்பும் பணிகள் பல்வேறு வழிகளில் மேற்கொள்ளப்பட்டன. கோயில்களில் பக்திப்பாடல்கள் பாடப் பாடகர்கள் நியமிக்கப்பட்ட செயல்பாடுகளை, எழுத்தறிவை ஊக்குவிக்கும் செயல்பாடுகளாகக் காணமுடியும்.
 • அரங்குகளில் நாடகங்கள் இதே நோக்கில் அரங்கேற்றப்பட்டன. சமஸ்கிருதக் கல்வியை ஊக்குவிக்கப் ‘பட்ட விருத்தி’, ‘சாலபோகம்’ ஆகிய பெயர்களில் அறக்கொடைகள் வழங்கப்பட்டன.
 • கடிகை, சாலை, வித்யா ஸ்தானம் ஆகிய நிலையங்களில் பிராமணர்கள் சமஸ்கிருதம் பயின்றனர். பன்னிரண்டாம் நூற்றாண்டில் மடங்கள் உருவாகி மத ஆர்வத்தில் கல்வி கற்பிக்கும் நோக்கத்துடன் சோயில்களுடன் இணைக்கப்பட்டன.
 • தமிழை வளர்க்கவும் மகாபாரதத்தை மொழிபெயர்க்கவும் ஒரு கலைக்கழகம் அமைக்கப்பட்டதாக ஒரு செப்பேடு கூறுகிறது.
 • பாண்டியர் ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்ட முக்கியமான இலக்கிய நூல்கள் திருப்பாவை, திருவெம்பாவை, திருவாசகம் , திருக்கோவை மற்றும் திருமந்திரம் முதலியன ஆகும்.

மதம்

 • பாண்டியர் தொடக்கத்தில் சமணர்களாக இருந்து, சைவ மதத்துக்கு மாறியவர்கள் என்று கூறப்படுகிறது. கோயில் கல்வெட்டுகளும் சிற்பங்களும் அதற்குச் சான்று பகர்வதாக உள்ளன.
 • குடைவரை-குகை கோயில்கள் இக்காலகட்டத்தில் மதம் –கட்டடக்கலை ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்களின் வெளிப்பாடுகளாகக் காணப்படுகின்றன.
 • இடைக்காலப் பாண்டியரும் பிற்காலப் பாண்டியரும் பல கோயில்களைப் பழுதுபார்த்து, அவற்றுக்குத் தங்கம் , நிலம் ஆகியவற்றை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
 • திருவரங்கம், சிதம்பரம் ஆகிய கோயில்களின் கருவறை மீதுள்ள விமானங்கள் தங்கத் தகடுகளால் வேயப்பட்டன. சடையவர்மன் சுந்தர பாண்டியன் திருவரங்கம் கோயிலில் பட்டம் சூட்டினார். அதன் நினைவாக அக்கோயிலுக்கு ஒரு விஷ்ணு சிலையை நன்கொடையாகக் கொடுத்தார். இக்கோயிலின் உட்சுவர்களும் பிற மூன்று விமானங்களும் தங்கத்தகடுகள் பொருத்தப்பட்டவை ஆகும்.
 • பாண்டியர் வேத நடைமுறைகளுக்கும் தங்கள் ஆதரவை விரிவுபடுத்தினார்கள். பல வேதச் சடங்குகளைச் செய்த பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி சங்க காலத்தைச் சேர்ந்த பாண்டிய அரசர் ஆவார்.
 • ஒவ்வொரு பெரிய பாண்டிய அரசரும் அசுவமேத யாகம், ஹிரண்ய கர்பா, வஜபேய யக்னா ஆகிய சடங்குகளை மேற்கொண்டதாக வேள்விக்குடி செப்பேடும் பிற கல்வெட்டுகளும் கூறுகின்றன.
 • அரசரள் சைவத்தையும் வைணவத்தையும் சமமாக நடத்தியதைக் கல்வெட்டுக் குறிப்புகளில் காணப்படும் கடவுள் வாழ்த்துப்பகுதிகள் தெரிவிக்கின்றன. சில அரசர்கள் தீவிர வைணவச் சமயத்தவராகவும் சில அரசர்கள் தீவிர வைணவச் சமயத்தவராகவும் இருந்துள்ளனர்.
 • எனினும் இரு பிரிவைச் சேர்ந்த கோயில்களும் ஆதரிக்கப்பட்டன. சிலக்கொடைகள், வரி விலக்கு, புதிப்பிக்கும் பணி, கூடுதலாகக் கோபுரம் கட்டுவது, அதிக இட வசதி உள்ள மண்டபங்களைக் கட்டுவது போன்ற அறக்கொடைகள் மூலம் கோவில்கள் சிறப்பாக ஆதரிக்கப்பட்டன.

கோயில்கள்

 • பாண்டியர் பல்வேறு மாதிரிகளில் கோயில்கள் கட்டினார்கள். அவை கல்லறைக்கோயில்கள் (சுந்தரபாண்டிசுவரம்), குடைவரைக்கோயில்கள், கட்டமைப்புக் கோயில்கள் ஆகும். இடைக்காலப் பாண்டியர்கள்ம் பிற்காலப் பாண்டியர்களும் புதிதாகக் கோயில்களைக் கட்டவில்லை.
 • மாறாக, புதிய கோபுரங்கள் எழுப்புவது, பிரகார வீதிகள் அமைப்பது, மண்டபங்கள் கட்டுவது ஆகிய விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டனர். தொடக்க காலப் பாண்டியர் கோயில்கள் எளிமையாகவும் சிறியதாகவும் இருந்தன.
 • இக்கோயில்களில் சிவன், விஷ்ணு, கொற்றவை, கணேசன், சுப்பிரமணியர் , சூரியன் , பிரம்மன் ஆகிய கடவுளர் சிலைகள் சிறப்பாக வடிக்கப்பட்டிருந்தன. பாண்டியர் காலத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் கூடுதல் அக்கறையுடன் பராமரிக்கப்பட்டது. கூடுதல் கோபுரங்கள், மண்டபங்கள் என கோயில் பரப்பை விரிவாக்கிக் கொண்டேயிருந்தனர்.
 • பண்டைய பாண்டியர்களால் உருவாக்கப்பட்ட குடைவரைக்கோயிலின் பிள்ளையார்பட்டி, துருமயம், குன்றக்குடி, திருச்செந்தூர், கழுகுமலை, கன்னியாகுமரி, சித்தன்னவாசல் ஆகிய இடங்களில் காணப்படுகிண்றன.
 • சித்தன்னவாசல், அரிட்டாபட்டி, திருமலைபுரம், திருநெடுங்கரை ஆகிய கோயில்களில் ஓவியங்கள் காணப்படுகின்றன. சித்தன்னவாசல் குகைக்கோயிலில் காணப்பட்ட ஒன்பதாம் நூற்றாண்டு கல்வெட்டு அந்தக் குகை இளம் கௌதமர் என்பவரால் உருவாக்கப்பட்டது என்று கூறுகிறது.
 • அதே காலகட்டத்தைச் சேர்ந்த இன்னொரு கல்வெட்டு ஸ்ரீ மாறன் ஸ்ரீவல்லபன் இக்கோயிலைப் புதுப்பித்தார் என்று கூறுகிறது. கோயிலின் சுவர்களிலும் கூரைகளிலும் தூண்களிலும் காணப்படும் ஓவியங்கள் சிறந்த கலைப்படைப்புகளாகும்.
 • இந்த ஓவியங்கள் நடனமாடும் பெண், அரசன், அரசி போன்றோரைச் சித்தரிக்கின்றன. ஒரு குளத்தைச் சித்தரிக்கும் ஓவியத்தில் சில நீர்வாழ் உயிரினங்களும் பூக்களும் பறவைகளும் சில பாலூட்டிகளும் இடம்பெற்றுள்ளன.
 • இந்தியாவின் கடல் சார்ந்த வரலாறு பாண்டியர்களின் வரலாறு இன்றி முழுமை பெறாது. பாண்டியர்களின் காலத்தில் கிழக்குக்கடற்கரை நெடுகிலும் துறைமுக நகரங்கள் இருந்தன. பாண்டியர் தென்கிழக்கு ஆசிய அரச மரபுகளில் திருமண உறவுகளும் செய்து கொண்டார்கள்.
 • கடல்வழி வணிக நடவடிக்கைகளில் பாண்டியர் ஓர் அழுத்தமான தடத்தை விட்டுச் சென்றுள்ளனர்.

சிந்தாமணி, மயிலாப்பூர், திருவொற்றியூர், திருவாடனை, மகாபலிபுரம் ஆகியவை சுறுசுறுப்பான கடல் வணிக மையங்களாக இருந்தன என்பதை கல்வெட்டுகள் வாயிலாக அறிகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *