மனித குடியிருப்புகள் Notes 12th Geography Lesson 2 Notes in Tamil

12th Geography Lesson 2 Notes in Tamil

2] மனித குடியிருப்புகள்

அறிமுகம்:

முகப்பிலுள்ள படத்தில் காணப்படும் பாலைவனச் சோலையைப் பாருங்கள்.

இது பெரு நாட்டில் இகா (Ica) நகரிலுள்ள ஹீவாகாசினா (Huacachina) பாலைவனச்சோலை. இது லிமா (Lima) நகருக்கு 300 கிலோ மீட்டர் தெற்கில் உள்ளது. இது இங்குள்ள ஏரியைச் சுற்றி வாழும் 96 மக்களுக்கான குடியிருப்பாக உள்ளது.

எளிமையாகக் கூற வேண்டுமானால் குடியிருப்பு என்பது தனித்த வீடு முதல் பெரிய மாநகரம் வரை ஏதேனும் ஒரு வடிவில் இருக்கும் மனித வாழிடமாகும்.

ஏறக்குறைய நிரந்தர வசிப்பிடத்தை குடியிருப்பு என்கிறோம். இது நாம் வாழக்கூடிய அல்லது பயன்படுத்தக்கூடிய கட்டிடங்கள் மற்றும் பயணம் செய்யும் தெருக்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இது வேட்டைக்காரர்கள் மற்றும் மேய்ச்சல்காரர்களின் தற்காலிக முகாம்களையும் உள்ளடக்கியது. மனிதக் குடியிருப்பு என்பது சில வசிப்பிடங்களை கொண்ட குக்கிராமங்களையும் கட்டிடங்களின் தொகுப்பைக் கொண்ட மாநகரங்களையும் உள்ளடக்கியது.

குடியிருப்புகளின் தோற்றம் மற்றுறும் வளர்ச்சி:

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவின் பெரும் பிளவுப் பள்ளத்தாக்குப் பகுதியில் மனிதர்கள் தோன்றினர் என்று பெரும்பாலான மானுடவியலாளர்கள் நம்புகிறார்கள். அங்கிருந்து அவர்கள் மத்திய கிழக்கு ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஓசியானிவிற்குப் பரவினர்.

புதிய கற்காலப்புரட்சி (விவசாயப்புரட்சி) மெசபடோமியாவில் தோன்றியது. வேட்டையாடபவர்களாகவும், உணவு சேகரிப்பவர்களாகவும், நாடோடிகளாகவும் இருந்த மக்கள் விலங்குகளை வீட்டு விலங்குகளாகப் பழக்கப்படுத்துபவர்களாக மாறினர். மக்கள் தொகை விரைவாக வளர்ச்சி அடைந்தது. சில இடங்களில் நகர்ப்புற மக்களின் தோற்றமும் உருவாகியது. பெரும்பாலும் நைல், கங்கை, யாங்சிகியாங் ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் விவசாயம் செழிப்படைந்தது. இந்த இடங்களில் ஆண்டுதோறும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக மண் வளம் மிகுந்திருந்ததால் அறுவடை மிகுதியாகக் காணப்பட்டது. உலகின் முதல் நகரங்கள் இப்பகுதிகளில் தோன்றின. விவசாயம் அல்லாத நகர்ப்புற மக்களுக்கு உணவளிக்க இப்பகுதி மக்கள் மிகுதியான உணவை உற்பத்தி செய்தனர். இதன் விளைவாக பல்வேறு துறைகளில் சிறப்புப் பயிற்சி பெற்ற மக்கள் தோன்றினர். மதகுருக்கள், உரை எழுதுபவர்கள், கட்டிடக் கலைஞர்கள், விவசாயிகள், வீரர்கள் வணிகர்கள் மற்றும் கொல்லர்கள் ஆகியோர் இங்கே குடியேறினர்.

தலம் மற்றும் சூழலமைவு:

ஒரு குடியிருப்பின் தலம் அது அமைந்துள்ள இடத்தின் இயற்கையமைப்பை விவரிக்கிறது. நீர் அளிப்பு, கட்டுமானப் பொருட்கள், மண்ணின் தரம், காலநிலை, இருப்பிடம் மற்றும் பாதுகாப்பு போன்ற காரணங்களைக் கருத்தில் கொண்டே குடியிருப்புகள் முதலில் உருவாகின. எடுத்துக்காட்டாக, ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி நகரத்தின் தலம் அங்குள்ள இயற்கைத் துறைமுகம் மற்றும் சுற்றியுள்ள வளமான விவசாய நிலத்தைச் சாதகமாக பயன்படத்தியுள்ளது.

தோற்றம் மற்றும் தங்குமிடம்:

குடியிருப்பின் அமைவிடத்தைத் தீர்மானிக்கும் இரண்டு முக்கியக் காரணிகள் தோற்றம் (Aspect) மற்றும் தங்குமிடம் (Shelter). தோற்றம் என்பது நிலம் அமைந்திருக்கும் திசையோடு தொடர்புடையது. வட அரைக்கோளத்தில் தெற்கு நோக்கிய சரிவுகள்தான் குடியிருப்புகள் அமைய சிறந்தது. இங்கு அதிக சூரிய ஓளி கிடைப்பதால் விவசாயத்திற்கு ஏற்றதாகும். தெற்கு நோக்கிச் சரிவு கொண்டுள்ள குடியிருப்புகளை ஆல்ப்ஸ் பள்ளத்தாக்கில் தெளிவாக காணலாம்.

தங்குமிடமும் மிகவும் முக்கியமானது. குறிப்பாக ஐக்கிய நாடுகளில் (UK) வீசும் குளிர்ந்த வடக்குக் காற்றுகள் மற்றும் தென்மேற்குக் காற்றுகள் ஆகியவற்றிலிருந்து காத்துக்கொள்ளப் பாதுகாப்பான தங்குமிடம் அவசியம். இயற்கைச் சூழல்களினாலேயே பாதுகாக்கப்படும் குடியிருப்புகளுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு வட மற்றும் தெற்கு டவுன்ஸ் (Downs) பகுதியிலுள்ள சுண்ணாம்புப் பாறையின் வன்சரிவுகளை அடிப்படையாகக் கொண்ட ஸ்ப்ரிங் லைன் (Spring Line) குடியிருப்புகளாகும். இக்குடியிருப்புகள் சிறந்த நீர் ஆதாரத்தினாலும் அருகிலுள்ள வளமான வேளாண் நிலத்தினாலும் பயனடைந்திருக்கின்றன.

நீர் அளிப்பு (Water Supply) :

ஒரு குடியிருப்பு அமைய வேண்டும் என்று தீர்மானிப்பதில் நீர் அளிப்பு மிக முக்கியமான காரணியாகும். ஆறுகள் தூய குடிநீர் அளிப்பதோடு மட்டுமல்லாமல் மீன் பிடித்தல் மூலம் உணவு ஆதாரமாகவும் மற்றும் போக்குவரத்து வழியாகவும் உள்ளன. உலகின் மிகப்பெரிய நகரங்களில் பெரும்பாலானவை ஆறுகளின் கரையோரங்களில் அமைந்துள்ளன. நகரங்கள், குறிப்பாக, ஆறுகள் கடலோடு கலக்குமிடங்களில் அமைந்துள்ளன. இங்குதான் கண்டுபிடிப்பாளர்கள் முதன் முதலாகக் காலடி எடுத்து வைத்தனர்.

வறண்ட இடங்கள் (Dry Point Sites) :

வறண்ட இடம் என்பது சுற்றியுள்ள நிலத்தைக் காட்டிலும் சற்று உயரத்தில் அமைந்துள்ள இடமாகும். வெள்ளத்தினால் குறைந்த அளவே பாதிப்புக்குள்ளாகும் பகுதி எனப்பொருள் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ்ஷயரில் காணப்படும் ஏலி (Ely) என்ற இடமாகும்.

நீர் நிலையை ஒட்டிய இடங்கள் (Wet Point Sites):

எளிதில் நீரை அடையக்கூடிய தலம் நீர் நிலையை ஒட்டிய இடம் எனப்படும். வழக்கமாக இது நதிக் கரையையொட்டி இருக்கும். நகரங்கள் அவற்றின் கரையோரமாக அமையலாம் அல்லது ஆறு கடலில் கலக்குமிடத்தில் தொகுப்பாக அமையலாம். எடுத்துக்காட்டாக, வெல்ஷ் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள நகர மற்றும் கிராமியத் தலங்களைக் கூறலாம். இவை பள்ளத்தாக்கின் வன்சரிவுகளில் அமையாமல் சமதளப் பகுதியில் அமைந்திருக்கும். இங்கிலாந்திலுள்ள வடக்கு மற்றும் தெற்கு டவுன்ஸ் (Downs)இல் உள்ள ஸ்ப்ரிங் லைன் குடியிருப்புக்கள் நீர் நிலையை ஒட்டிய இடங்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

பாதுகாப்பு:

இடைக்காலத்தில் பாதுகாப்பு என்பது குடியிருப்பின் தலத்தை நிர்ணயிக்கும் காரணிகளில் மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. ஓரிடத்தின் நிலத்தோற்றமே மிகச் சிறந்த பாதுகாப்பு அம்சமாக இருந்தது என நிரூபிக்கப்பட்டுள்ளது. எடின்பர்க் கோட்டை ஒரு பனிப் பகுதியின் உச்சியிலமைந்துள்ளது. இது எதிரிகளுக்கு சிறிதும் இடம் கொடுக்கா வண்ணம், தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் மிகச் சரியான நிலையில் அமைந்துள்ளது. இத்தாலியில் ஏராளமான குன்றின் மேல் சுற்றுச்சுவர் எழுப்பப் பட்ட கிராமங்கள்

உள்ளன. நியூசிலாந்தில் உள்ள மாவோரிஸ் (Maoris) மக்கள் தங்கள் குடியிருப்புகளை (“பா” (Pa’s) என்றழைக்கப்படுவது) தாக்குதலுக்கு ஆளாகாதவாறு செங்குத்தான குன்றுகளில் மேல் அமைத்துள்ளனர். இந்தியாவில் மேற்கு வங்காளத்திலுள்ள பார்க்பூரியில் உள்ள இச்சாபூர் (Ichhapur) பாதுகாப்புப் பேட்டையானது கணக்கெடுக்கும் நகரமாகும்.

மற்றொரு பொதுவான, இயற்கையான பாதுகாப்பு அம்சம் நீராகும். குறிப்பாக, ஷ்ரூஸ்பரி மற்றும் டர்ஹாம் ஆகிய நகரங்கள் ஆற்று வளைவினால் (Meander) உருவாக்கப்பட்ட நிலப்பரப்பில் அமைந்து, மூன்று புறமும் நீரால் சூழப்பட்டுள்ளது. இது அவர்கள் பாதுகாக்க வேண்டிய ஒரு மெல்லிய கழுத்துப்பகுதி போன்ற நிலமே ஆதலால் இரு நகரங்களுக்கும் மிகச் சிறந்த பாதுகாப்பை அளிக்கிறது.

வளங்கள்:

வளங்கள் எனப்படும் கருத்து ஏராளமானவற்றை உள்ளடக்கியது. ஆரம்பகாலத்தில் குடியிருந்தவர்களுக்கு மிக முக்கியமான வளங்களாக இருந்தவை எரிபொருள், கட்டுமானப் பொருட்கள் மற்றும் உணவு, மரங்கள் எங்கு அதிகம் கிடைத்தனவோ அங்கு குடியிருப்புகள் வளர்ச்சியடைந்தன. அதேபோல் கற்கள் கிடைத்த இடங்களிலும், விவசாயத்திற்கேற்ற நல்ல மண் வளம் கிடைத்த பகுதிகளிலும் குடியிருப்புகள் வளர்ச்சியடைந்தன.

குடியிருப்பின் ஆரம்ப காலங்களிலிருந்தே நகர்ப்புறங்கள் வளர்ச்சியடைய பலவிதமான வளங்கள் மையப்புள்ளிகளாக இருந்துள்ளன.

சுரங்கத்தொழில்:

தெற்கு வேல்ஸ்பகுதியின் நிலக்கரிச் சுரங்கங்கள், கார்ன்வால் பகுதியின் தகரச் சுரங்கங்கள், வடக்கு பிரேசிலிலுள்ள காரஜாஸ் (Carajas) பகுதியின் பெரிய சுரங்கத் திட்டங்கள் குடியிருப்புகளின் விரைவான வளர்ச்சியை ஊக்குவித்ததோடு தொழிலாளர்களைக் குடியமர்த்துதல் மற்றும் அவர்களின் தேவைகள் அனைத்தையும் வழங்குதல் போன்றவற்றைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தன.

விலைமதிப்பற்ற உலோகங்கள்:

தென்னாப்பிரிக்காவில் விலைமதிப்பற்ற தங்கம் போன்ற உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு குடியிருப்புகள் வளர்ச்சியடைந்தன. கி.பி. 1849ல் கலிபோர்னியாவில் ஏற்பட்ட “தங்கத்திற்கான ஓட்டத்திற்கு” (Gold Rush) பிறகு தங்கத்தின் கண்டுபிடிப்பினால் வளர்ச்சியடைந்த மிகவும் பிரசித்தி பெற்ற குடியிருப்பு சான் பிரான்ஸிஸ்கோ ஆகும்.

பாதை மையங்கள் (Route Centres):

பாதை மையங்கள். சந்திக்கும் புள்ளிகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இவை இரண்டு பள்ளத்தாக்குகள் சந்திப்பதால் ஏற்படுகின்றன. ஆனால் தற்பொழுது இரண்டு முக்கிய சாலைகள் சந்திக்குமிடங்களில் குடியிருப்புகள் வளர்ச்சியடைகின்றன. ஐக்கிய நாடுகளில் யார்க் பாதை மையத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். பர்மிங்ஹாம் பல சாலைகள் சந்திக்கும் மிகச் சிறந்த இடத்தில் அமைந்துள்ளது. இதுவே அதன் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகும். இது ஐக்கிய நாடுகளின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

இணைப்பு மையங்கள் (Bridging Points) :

குடிப்பதற்கும், மீன்பிடிப்பதற்கும், நீர்ப்பாசனத்திற்கும் மற்றும் நீர்போக்குவரத்திற்கும் நீர் எவ்வாறு அவசியமோ அதுபோல ஆற்றைக் கடந்து செல்லும் திறனும் அவசியமானது. எங்கு பெரிய ஆறுகளை மிக எளிதாகக் கடக்க முடிந்ததோ அம்மையங்களில் பல நகரங்களும் மாநகரங்களும் வளர்ச்சியடைந்துள்ளன. எடுத்துக்காட்டாக, எக்ஸெட்டர். இது இங்கிலாந்தில் எக்ஸே ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது.

இருப்பினும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்று பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரமாகும். சீன்

ஆற்றின் மத்தியிலுள்ள ஐல்டெலாசைட் என்னும் சிறிய தீவில்தான் முதல் நகரம் அமைக்கப்பட்டது. ஆற்றின் குறுக்கே நீண்ட பெரிய பாலம் ஒன்று கட்டுவதற்கு பதிலாக இரண்டு சிறிய பாலங்கள் கட்ட இந்தத் தீவு உதவியது. தற்பொழுது பாரிஸ் நகரம் தனது அபரிமிதமான வளர்ச்சியினால் அத்தீவு முழுவதையும் ஆக்கிரமித்து விட்டாலும் தற்பொழுதும் பல பாலங்கள் அத்தீவை நோக்கிச் செல்கின்றன. இங்குதான் நோட்ரேடேன் கதீட்ரல் (Notre Dame Catchedral) தேவாலயம் கட்டப்பட்டுள்ளது.

ஆறுகளின் சங்கமம்:

இரண்டு பள்ளத்தாக்குகள் அல்லது சாலைகள் எவ்வாறு குடியிருப்பின் வளர்ச்சிக்கு சந்திப்புப் புள்ளிகளாக இருக்கின்றனவோ அதுபோல இரண்டு ஆறுகள் இணையும் இடங்களும் அமைகின்றன. சூடான் நாட்டில் நீல மற்றும் வெள்ளை நைல் நதிகள் சந்திக்குமிடத்தில் அமைந்துள்ள கார்ட்டூம் (Khartoum) ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்தியாவில் கங்கையும், யமுனையும் கூடுமிடத்தில் அலகாபாத் அமைந்துள்ளது. பவானி நகரம் (தமிழ்நாடு) காவேரியும், பவானியும் சந்திக்குமிடத்தில் அமைந்துள்ளது.

சூழலமைவு:

ஒரு குடியிருப்பு மற்ற குடியிருப்புகளோடும், இயற்கை நிலத்தோற்றங்களோடும் கொண்டுள்ள தொடர்பை விளக்குவதே குடியிருப்பின் சூழலமைவு எனப்படும். ஒரு குடியிருப்பு பெரிய நகரமாக மாறுகிறதா அல்லது சிறிய நகரம் அல்லது கிராமமாகவே இருக்கிறதா என்பதை முடிவு செய்யும் காரணிகளில் மிக முக்கியமானது குடியிருப்பின் சூழலமைவாகும்.

ஐக்கிய நாடுகளில் பர்மிங்ஹாம் மிகச்சிறந்த சூழலமைவு கொண்ட நகரத்திற்கு எடுத்துக்காட்டாகும். இது நாட்டின் மத்தியில் அமைந்துள்ளதோடு அருமையான சாலை வழிகளால் வடக்கு மற்றும் தெற்கு இலண்டன் மாநகரத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.

நகரங்கள் பல்வேறு செயல்பாடுகளை நிறைவேற்றத் தொடங்கும்போது அதன் முக்கியத்துவம் கூடவோ குறையவோ செய்யும். அதன் செயல்பாடுகளில் எவை நடைபெறும் என்று தீர்மானிப்பதில் சூழலமைவு முக்கியப் பங்கு வகிக்கிறது.

இது உண்மையான குடியிருப்பின் இடத்தைக் குறிக்கிறது. ஒரு குடியிருப்புகான தலத்தை முதலில் தேர்ந்தெடுப்பது என்பது அதன் அன்றாடத் தேவைகளான நீர் அளிப்பு, வேளாண் திறன் மிக்க நிலம், கட்டுமானப் பொருட்கள் மற்றும் எரிபொருட்கள் ஆகியவற்றைச் சார்ந்தது.

குடியிருப்புகளை இரு வகைகளாகப் பிரிக்கலாம். அவையாவன, கிராமிய மற்றும் நகரக் குடியிருப்புகள் ஆகும். பொதுவாக கிராம மற்றும் நகர்ப்புறத்திற்கான வேறுபாடுகளை அறிவோம்.

  1. கிராமத்திற்கும், நகரத்திற்மிடையேயுள்ள மிகப்பெரிய வேறுபாடு அதன் செயல்பாடாகும். கிராமப்புறத்தில் முதன்மைத் தொழிலான விவசாயம் முக்கியமாக உள்ளது. நகர்புறத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைத் தொழில்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் சேவை செய்யும் துறைகளும் காணப்படுகின்றன.
  2. பொதுவாக நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் மக்களடர்த்தி குறைவாக உள்ளது.
  3. நகர்ப்புறக் குடியிருப்புகளை வரையறை செய்பவை மேம்பட்ட குடியிருப்பு வசதிகள், கல்விக்கான வாய்ப்புகள், போக்குவரத்து வசதிகள், வர்த்தக மற்றும் சமூகத் தொடர்புகள் மற்றும் ஒட்டு மொத்த தரமான வாழ்க்கைத் தரம் போன்றவை ஆகும். இந்த வசதிகள் அனைத்தும் கிராமப்பகுதிகளில் குறைவாகவே காணப்படுகின்றன.
  4. நகர்ப்புறங்களைப் பாதிக்கக்கூடிய மாசடைதல் அல்லது போக்குவரத்துப் பிரச்சனைகள் கிராமப்புறங்களில் இல்லை.
  5. கிராமப்புற சமூகங்களில் வேலை வாய்ப்பு சார்ந்த இடம்பெயர்வுக்கு மிகக் குறைந்த வாய்ப்பே உள்ளது. நகர்ப்புறத்தில் ஏராளமான பணிகள் உள்ளதால் பணி நிமித்தமான இடப்பெயர்வு அதிகமாக உள்ளது.
  6. கிராமப்புற மக்கள் குறைந்த அளவே இடம்பெயர்ந்து செல்வதால் அவர்களுக்கிடையிலான சமூக உறவு நெருக்கமாக இருக்கும். நகர்ப்புறங்களில் வாழ்க்கை முறை சிக்கலாகவும், துரிதமாகவும் இருப்பதால் சமூக உறவுகள் சம்பிரதாயமாக (Formal) இருக்கும்.

கிராமப்புறக் குடியிருப்பின் வடிவம் (Patterns of Rural Settlement):

கிராமப்புறக் குடியிருப்புகள் அவற்றின் அமைப்புகள் மற்றும் வடிவங்களின் அடிப்படையில் நேரியல், செவ்வக, வட்ட, நட்சத்திர வடிவ கிராமம், T – வடிய கிராமம், Y – வடிவ கிராமம், நெருக்கமான, சிதறிய, திட்டமிட்ட கிராமம் என வகைப்படுத்தப்பட்டள்ளன.

ஒரு சாலை, இருப்புப்பாதை, ஆறு, பள்ளத்தாக்கின் சரிவு அல்லது தடுப்பணை ஆகியவற்றிற்கு அருகில் கட்டப்பட்ட வீடுகளின் தொகுப்பு நேரியல் வகைக் குடியிருப்பு எனப்படும்.

செவ்வக வடிவில் கட்டப்படும் குடியிருப்புகள் செவ்வக வகைக் குடியிருப்பு எனப்படும். இவ்வகையான குடியிருப்புகள் சமவெளிப்பகுதிகள் மற்றும் மலைகளுக்கிடையே உள்ள பள்ளத்தாக்குகளில் காணப்படுகின்றன.

வட்ட வடிவில் கட்டப்பட்ட குடியிருப்புகள் வட்ட வடிவக் குடியிருப்பு என்று அறியப்படும். இத்தகைய குடியிருப்புகள் ஏரிகள், குளங்கள் அல்லது திட்டமிட்ட கிராமங்களைச் சுற்றிக் காணப்படுகின்றன.

நட்சத்திர வடிவில் கட்டப்பட்ட குடியிருப்புகள் நட்சத்திர வடிவக் குடியிருப்புகள் எனப்படும். இவ்வகையான குடியிருப்புகள் பல சாலைகள் ஒன்றையொன்று கடந்து செல்லும் மையங்களில் நட்சத்திர வடிவில் காணப்படுகின்றன.

கால்நடைகளை அடைத்து வைக்கும் இடங்களைச் சுற்றி அமைந்திருக்கும் வீடுகளின் தொகுப்பு க்ரால் (Kraal) எனப்படும் அல்லது இத்தகைய அமைப்புகளைக் கொண்ட சமூக அலகு ஆப்பிரிக்கா, குறிப்பாக தென்னாப்பிரிக்க மக்களின் வாழ்க்கை முறை எவ்வாறு க்ராலுடன் தொடர்புடையது என்பதை விளக்க இவ்வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. க்ரால் என்பது மாட்டுத் தொடுவத்தைச் சுற்றி வட்ட வடிவில் அமைக்கப்பட்ட குடிசைகளைக் கொண்டது. பலதார மணம் இங்கு பொதுவானது. க்ராலில் ஒவ்வொரு மனைவிக்கும் ஒரு குடிசையிருக்கும். க்ராலின் தலைவர் தனது பல மனைவிகளின் வீடுகளோடு கூடிய உடைமைக்கு பாதுகாவலராக இருப்பார்.

சாலைகளின் முச்சந்திகளில் (Tri-Junctions) கட்டப்பட்ட குடியிருப்புகள் T வடிவம் கொண்ட குடியிருப்புகள் ஆகும். ஒரு சாலை மற்றொரு சாலை முடியுமிடத்தில் அதனைச் சந்திக்கும் வழியில் அமைந்துள்ள குடியிருப்புகள் T வடிவக் குடியிருப்புகள் ஆகும். (இவ்வமைப்பில் நேராகச் செல்லும் சாலை முடிவடையுமிடத்தில் அது இடப்புறமாகவும் வலப்புறமாகவும் இரண்டாகப் பிரிகிறது. நேர் செல்லும் சாலையில் கட்டப்பட்ட வீடுகளைக் கொண்ட குடியிருப்பு Y வடிவக் குடியிருப்பாகும். அது மேலும் இரு சாலைகளாகப் பிரிந்து செல்லும். ( ‘Y’ வடிவம் போல)

கிராமப்புறக் குடியிருப்பின் வகைகள் (Classification of Rural Settlements):

வடிவங்களின் அடிப்படையில் குடியிருப்புகளைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

1. நெருக்கமான அல்லது குழுமிய குடியிருப்புகள்:

நெருக்கமான குடியிருப்புகளில் வீடுகள் அருகருகே அமைந்துள்ளன. வழக்கமாக, வளமையான சமவெளிப்பகுதிகள் இத்தகைய நெருக்கமான அல்லது குழுமிய குடியிறுப்புகளைக் கொண்டுள்ளன.

2. சிதறிய குடியிருப்புகள்:

இவ்வகைக் குடியிருப்புகளில் வீடுகள் இடைவெளி விட்டுக் காணப்படுவதுடன் வயல்வெளிகளோடு கலந்திருக்கும். இருப்பினும் சந்தை மற்றும் பிற செயல்பாடுகள் மையப்படுத்தப்பட்டு இருப்பதால் மக்கள் ஒன்று சேர்ந்து பங்கெடுப்பார்கள்.

நகர குடியிருப்புகள் (Urban Settlements) :

1991ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகைக் கணக்கீடு வரையறுப்பதாவது “மாநகராட்சி நகராட்சி, இராணுவக்குடியிருப்பு வாரியம் அல்லது அறிவிக்கப்பட்ட நகர்ப்புறக் குழுவைக் கொண்டதும், குறைந்தது 5000 மக்கள் தொகையைக் கொண்டதும் குறைந்தது 75 சதவீத ஆண் தொழிலாளிகள் விவசாயமல்லாத பிற தொழில்களில் ஈடுபட்டிருப்பதும் மக்கள் அடர்த்தி ஒரு ச.கி. மீட்டருக்கு குறைந்தது 400 பேரைக் கொண்ட எல்லாப் பகுதிகளும் நகர்ப்புறக் குடியிருப்புகளாகும்.

நகர்ப்புறக் குடியிருப்புகளின் பரிணாமம் (Evolution of Urban Settlement):

பொ.ஆ.1810ல் 1 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டிருந்த இலண்டன் மாநகரமே முதல் நகரக் குடியிருப்பாகும். 1982ல் உலகில் ஏறக்குறைய 175 நகரங்கள் 1 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட நகரங்களாகும். 1800ஆம் ஆண்டில் உலகின் 3 சதவீத மக்களே நகர்ப்புறக் குடியிருப்புகளில் வாழ்ந்தனர் என்பதை ஒப்பிடும்பொழுது தற்பொழுது 48 சதவீத மக்கள் நகர்ப்புறக் குடியிருப்புகளில் வாழ்கின்றனர்.

நகர்ப்புறக் குடியிருப்பின் நிலைகள் (Stages of Urban Settlement):

அளவு மற்றும் கிடைக்கப்பெறும் சேவைகள் மற்றும் அளிக்கப்படும் செயல்பாடுகள் ஆகியவற்றைப் பொருத்து நகர்ப்புறமையங்கள் நகரம், மாநகரம் மில்லியன் நகரம், இணைந்த நகரம், மீப்பெருநகர் என அழைக்கப்படுகின்றன.

நகரம் (Town) (5000க்கும் மேலான மக்கள்)

“கிராமம்” என்ற சொற்குறிப்பை வைத்து “நகரம்” என்ற கருத்தை சிறப்பாகப் புரிந்து கொள்ளலாம். மக்கள்தொகை மட்டுமே ஒரு அளவுகோல் ஆகாது. கிராமத்திற்கும் நகரத்திற்குமுள்ள செயல்பாட்டு முரண்பாடுகள் எப்போதும் தெளிவாக இருப்பதில்லை. ஆனால் சில குறிப்பிட்ட செயல்பாடுகளான உற்பத்தித் தொழில், சில்லறை மற்றும் மொத்த வியாபாரம் மற்றும் தொழில் சார் சேவைகள் போன்றவை நகரங்களில் காணப்படுகின்றன.

மாநகரம் (City) (1,00,000க்கும் அதிகமான மக்கள்தொகை):

மாநகரம் என்பது முன்னணி நகரமாகும். மாநகரங்கள் நகரங்களைக் காட்டிலும் அளவில் பெரியதாகவும், பொருளாதாரச் செயல்பாடுகளை அதிக எண்ணிக்கையில் கொண்டதாகவும் இருக்கின்றன. இவை போக்குவரத்து முனையங்களையும், பெரிய நிதி நிறுவனங்களையும் வட்டார நிர்வாக அலுவலகங்களையும் கொண்டுள்ளன. மக்கள் தொகை 1 மில்லியனைக் கடந்து விட்டால் இது மில்லியன் நகரம் என அமைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் மிக விரைவாக வளரம் நகரம்!

திருப்பூர் வடக்கில் 11.1075 டிகிரி முதல் கிழக்கில் 77.3398 டிகிரி வரை அமைந்துள்ளது. இது நொய்யல் ஆற்றங்கரையில் சராசரியாக 295 மீட்டர் (967 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இது 159.6 கிலோமீட்டர்-2 (சதுர கிலோமீட்டர்) பரப்பளவு கொண்டது.

திருப்பூர் ஒரு நீர்ப்பாசனம் பெறும் வேளாண் நகரமாக இருந்தது. 1970களில் விவசாயிகள் ஜவுளித் தொழிலோடு தொடர்புடைய பிரிவுகளுக்குச் சொந்தக்காரர்கள் ஆயினர். ஜவுளித் தொழிலில் ஏற்பட்ட திடீர் வளர்ச்சி சிறு தொழில்களை ஒன்றிணைத்து நகர்ப்புற வளர்ச்சிக்கு உதவிதோடு பெரிய ஜவுளி மையம் உருவாகவும் வழிவகுத்தது. ஆக்ஸ்போர்டு பொருளாதாரம் நடத்திய அண்மைக்கால ஆய்வுகளிலிருந்து உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் மாநகரங்களில் இந்திய மாநகரங்கள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன என்று தெரிய வருகிறது. இந்தியாவில் திருப்பூர் மிக வேகமாக வளர்ந்து வரும் மாநகரங்களில் 6வது இடத்தைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளியும், சென்னையும் உள்ளன.

இணைந்த நகரம் (Conurbation) (2 அல்லது அதற்கு மேற்பட்ட நகரங்களின் ஒருங்கிணைந்த மக்கள் தொகை) :

இணைந்த நகரம் (Conurbation) என்ற சொல் பற்றி பேட்ரிக் கேட்ஸ் (Patrick Geddes) என்பவரால் 1915ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. உண்மையில் தனித்தனிப் பிரிவுகளாக இருந்த நகரங்கள் அல்லது மாநகரங்கள் இணைந்து அதன் மூலம் நகர வளர்ச்சி பெற்ற பெரும்பகுதியைக் குறிக்க இச்சொல்லை அவர் பயன்படுத்தினார். இலண்டன் மாநகரம், மான்செஸ்டர், சிகாகோ மற்றும் டோக்கியோ போன்றவை சில எடுத்துக்காட்டுகளாகும். இந்தியாவில் ஹைதராபாத் மற்றும் கொச்சி ஆகியவை இணைந்த நகரங்களுக்கு உதாரணங்களாகும்.

மீப்பெரு Megalopolls (10 மில்லியனுக்கும் மேலான மக்கள் தொகை):

“பெரிய நகரம்” என்னும் பொருள் கொண்ட மெகாலோபோலிஸ் என்ற கிரேக்க வார்த்தை ஜீன்காட் மேன் (Jean Gott Man-1957) என்பவரால் பிரபலமானது. இது இணைந்த நகரங்கள் சேர்வதால் பரந்து விரிந்த “பெரிய பெரு நகரப் பகுதியை குறிக்கிறது” (Super Metro Politan).

அமெரிக்க ஐக்கிய நாட்டில் வடக்கில் பாஸ்டன் முதல் தெற்கில் வாஷிங்டன் வரையுள்ள நகர்ப்புற நிலப்பகுதி மீப்பெர நகருக்கு சிறந்த உதாரணமாகும்.

மில்லியன் நகரம் (1 மில்லியனுக்கு மேல்):

1 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரம் மில்லியன் நகரம் எனப்படும். உலகில் மில்லியன் நகரங்களின் எண்ணிக்கை என்றுமில்லாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. இலண்டன் மாநகரமானது 1800ல் மில்லியன் நகரமானது. அதைத் தொடர்ந்து பாரிஸ் 1850லும் நியூயார்க் 1860லும் மில்லியன் நகரங்களாயின 1950ல் 80 மாநகரங்கள் மில்லியன் நகரங்களாக உருவெடுத்தன. ஒவ்வொரு 30 ஆண்டுகளுக்கும் மில்லியன் நகரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வீதம் மூன்று மடங்காக இருந்துள்ளது. இரு 1975ல் 160, 2005ல் 438ஆக இருந்தது.

நகர்ப்புற ஒருங்கிணைப்பு:

நகர்ப்புற ஒருங்கிணைப்பில் ஒரு மைய நகரமோ அல்லது ஒருங்கிணைப்பில் அங்கம் வகிக்கும் நகரங்களில் குறைந்தது ஒன்றாவது அங்கீகரிக்கப்பட்ட நகரமாக இருக்க வேண்டும். மேலும் ஒருங்கிணைப்பிலுள்ள அனைத்து நகரங்களில் மொத்த மக்கள் 20,000க்கும் குறையாமல் (1991 கணக்கீடு) இருக்க வேண்டும் என்று 2001ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி முடிவெடுக்கப்பட்டது.

நகர்ப்புற ஒருங்கிணைப்பு என்பது தொடர்ச்சியான நகர்ப்புற பரவலாகும். ஒரு நகரம் அல்லது அதனுடன் இணைந்த நகரத்தின் வெளிப்புற வளர்ச்சி (OGS – out Grouths) அல்லது 2 அல்லது அதற்கு மேல் வெளிப்படையாகத் தெரியும் (Physical) தொடர் நகரங்களின் தொகுப்பு மற்றும் அந்நகரங்களோடு இணைந்த நகரத்தின் வெளிப்புற வளர்ச்சியே நகர்ப்புற ஒருங்கிணைப்பாகும். வெளிப்புற வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டுகள் இரயில்வே குடியிருப்புகள், பல்கலைக்கழக வளாகங்கள், துறைமுகப் பகுதி, இராணுவ முகாம்கள் போன்றவையாகும். இவை அங்கீகரிக்கப்பட்ட நகரம் அல்லது மாநகரத்திற்கருகில் வந்திருந்தாலும், ஒரு கிராமம் அல்லது ஒரு நகரம் அல்லது மாநகரத்தோடு தொடர்ச்சியாக வந்த கிராமங்கள் இவற்றின் வருவாய் எல்லைக்குள் அடங்கியவை. இந்த இரண்டு அடிப்படைக் காரணிகளும் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில், கீழ்காணும் வேறுபட்ட சூழ்நிலைகள்தான் நகர்ப்புற ஒருங்கிணைப்பு ஏற்படக் காரணமாய் இருக்கலாம்.

  1. தொடர்ச்சியான வெளிப்புற வளர்ச்சி கொண்ட ஒரு மாநகரம் அல்லது நகரம்.
  2. வெளிப்புற வளர்ச்சி கொண்ட அல்லது வெளிப்புற வளர்ச்சி இல்லாத ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இணைந்த நகரங்கள்.
  3. தொடர்ச்சியான பரவலை ஏற்படுத்தக்கூடிய ஒரு மாநகரம் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இணைந்த நகரங்கள் மற்றும் அதனோடு கூடிய வெளிப்புற வளர்ச்சிகள் அனைத்தும்.

நிலையான நகர்ப்புற பகுதி:

1971 மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்காக ஒரு புதிய கருத்து உருவாக்கப்பட்டது. இது சில நகர்புறத் தகவல்களை அட்டவணைப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டது. இதுவே நிலையான நகர்ப்புறப் பகுதியாகும்.

நிலையான நகர்ப்புற பகுதியின் முக்கிய அம்சங்கள்:

i) குறைந்தது 50,000 மக்கள் தொகை கொண்ட முக்கிய நகரமாக இருத்தல் வேண்டும்.

ii) நகர்ப்புற மற்றும் கிராமப்புற நிர்வாகக் குழுக்களைக் கொண்ட தொடர் பகுதிகள் முக்கிய நகரத்தோடு நெருக்கமான, பரஸ்பர, சமூக பொருளாதாரத் தொடர்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.

iii) 2 அல்லது 3 பத்தாண்டுகளில் இந்த முழுப்பகுதியும் நகரமயமாகலாம்.

நகரமயமாக்கப்பட்டப் பகுதிக்குத் தேவையான ஒப்பீட்டு தகவல்கள் தொடர்ச்சியாக முப்பது ஆண்டுகளுக்கு வழங்கப்படும் பொழுதுதான் நிலையான நகர்ப்புற பகுதியைப் பற்றிய ஒரு சரியான கருத்து கிடைக்கும். இந்த தெளிவற்ற “நிலையான நகர்ப்புறப் பகுதி” என்ற மாற்றுக் கருத்து 1961 கணக்கெடுப்பில் உருவானது. நகரக்குழுக்கள் சுயேச்சையான (independent) நகரப் பகுதிகளைக் கொண்டிருந்தன. இந்த நகரக் குழுக்களுக்கான தகவல்கள் ஒரு கணக்கெடுப்பிலிருந்து மற்றொரு கணக்கெடுப்பிற்கு ஒப்பிட முடியாதவாறு இருந்தது. ஏனெனில் நகரங்களின் எல்லைகள் மாறிவிட்டன. இடையிலிருந்த பகுதிகள் கணக்கெடுப்பிலிருந்து விடுபட்டுப் போயின. 1968ஆம் ஆண்டு சர்வதேச புவியியல் சங்கத்தின் கருத்தரங்கு ஒன்றில் இக்கருத்து விமர்சனத்துக்குள்ளானது. எனவே நிலையான நகர்ப்புறப் பகுதி என்ற கருத்து உருவாக்கப்பட்டு 1971ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நிலையான நகர்ப்புறப்பகுதி பற்றிய தகவல்கள் தொடர்ந்து 2 அல்லது 3 கணக்கெடுப்புகளில் கிடைத்தால் நகர்ப்புற மையக் கருத்துக்களைச் சுற்றிக் காணப்படும் நகரமயமாதல் பற்றித் தெரிந்து கொள்ளத் தேவையான, அர்த்தமுள்ள விளக்கம் கிடைக்கும்.

உலகமாநகரம் (Ecumeno polis) என்பது (இகுமினோ என்பது உலகத்தையும் போலீஸ் என்பது மாநகரத்தையும் குறிக்கும்) உலக முழுமையும் தன்னுள் அடக்கிய ஒரே மாநகரமாகும். எதிர்காலத்தில் இது ஏற்பட வாய்ப்புள்ளது.

நகர்புறக் குடியிருப்பு வகைப்பாட்டிற்கான அடிப்படை:

நகர்ப்புறப் பகுதியின் வரையறையானது நாட்டிற்கு நாடு வேறுபடுகிறது. நகர்புறக் குடியிருப்புகளை வகைப்படுத்த சில பொதுவான அடிப்படைகளான மக்கட்தொகையளவு, தொழில் அமைப்பு மற்றும் நிர்வாக அமைப்பு ஆகும்.

மக்கள் தொகையளவு:

இந்தியாவில் மக்கள் தொகை அளவு, ஒரு ச.கி. மீட்டருக்கு 400 பேர் என்ற மக்களடர்த்தி, விவசாயமற்ற தொழில் செய்வோரின் பங்கு ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

தொழில் அமைப்பு:

இந்தியாவில் 50% பொருளாதார உற்பத்தித் திறன் கொண்ட மக்கள் விவசாயமற்ற தொழில்களில் ஈடுபடுதல்.

நிர்வாக அமைப்பு:

இந்தியாவில் நகராட்சி, இராணுவக் குடியிருப்பு அல்லது அறிவிக்கப்பட்டப் பகுதிக்குழு ஆகியவை எந்த அளவில் இருந்தாலும் அவை நகர்ப்புறம் என்று வரையறுக்கப்படுகிறது.

நகர்ப்புறக் குடியிருப்புகளின் வகைப்பாடு:

நகர்ப்புறக் குடியிருப்பின் செயல்பாடுகளைப் பொறுத்து நகரங்கள் நிர்வாக நகரங்கள், வணிக நகரங்கள், கலாச்சார நகரங்கள், பொழுதுபோக்கு நகரங்கள் மற்றும் தொழில்துறை நகரங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. நிர்வாக நோக்கத்திற்காக அல்லது நிர்வாகச் செயல்பாட்டிற்காக நிறுவப்பட்ட குடியிருப்புகள் நிர்வாக நகரங்கள் எனப்படுகின்றன. எ.கா. வாஷிங்டன், புதுடெல்லி, கான்பெரா, பாரிஸ், பீஜிங், அடிஸ் அபாபா மற்றும் லண்டன்.

வர்த்தக வாய்ப்புகளை எளிதாக்கும் குடியிருப்புகள் வணிக மற்றும் வர்த்தக நகரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஆக்ரா, லாகூர், பாக்தாத் போன்ற முக்கிய போக்குவரத்து முனையங்கள் மான்செஸ்டர் மற்றும் செயின்ட் லூயிஸ் போன்ற உள்நாட்டு மையங்கள். வின்னிபெக் மற்றும் கான்சாஸ் மாநகரம் போன்ற வேளாண் சந்தை நகரங்கள், பிராங்க்பர்ட் (Frankfurt) மற்றும் ஆம்ஸ்டர்டாம் போன்ற வங்கி மற்றும் நிதி மையங்கள் ஆகும்.

மத ஈடுபாடு காரணமாக நிறுவப்பட்ட குடியிருப்புகள் கலாச்சார அல்லது மத நகரங்கள் என்றழைக்கப்படுகின்றன. எ.கா.ஜெருசலேம், மெக்கா, ஜகந்நாத் பூரி, மதுரை மற்றும் வாரணாசி போன்றவை.

பொழுதுபோக்கு நோக்கத்திற்காக நிறுவப்பட்ட நகரங்கள் பொழுதுபோக்கு நகரங்கள் எனப்படும். எ.கா.மியாமி (அமெரிக்க ஐக்கிய நாடுகள்) பனாஜி (இந்தியா) போன்றவை. தொழில்துறை வளர்ச்சி காரணமாக நிறுவப்பட்ட நகரங்கள் தொழில்துறை நகரங்கள் என அழைக்கப்படுகின்றன. எ.கா. பிட்ஸ்பர்க் (அமெரிக்க ஐக்கிய நாடுகள்) ஜாம்ஷெட்பூர் (இந்தியா) போன்றவை.

மைய மண்டல கோட்பாடு (Concentric Zone Theory)

இந்த கோட்பாடு எர்னெஸ்ட் பர்கேஸ் (Ernest Burgess) என்பவரால் 1925ல் வெளியிடப்பட்டது. இவர் மைய மண்டலத்தில் உள்ள ஒரு மையத்திலிருந்து ஒரு சிற்றலையைப் போன்று வெளிப்புறமாக வளர்ச்சியடையும் நகரத்தைப் பற்றி விளக்குகிறார். இவர் கீழ்க்கண்ட அனுமானங்களை உருவாக்கினார்.

அ. ஆறுகள் அல்லது குன்றுகள் போன்ற இயற்கைத் தடைகள் இவற்றைக் குறுக்கிடாதவரை ஒரு நகரமானது ஐந்து மைய மண்டலங்கள் அல்லது வளையங்களிலிருந்து வெளிப்புறமாக வளர்ச்சியடைகிறது.

ஆ. ஒரு நகரம் ஒரே ஒரு மையத்தைக் கொண்டுள்ளது.

இ. நகரமானது ஒவ்வொரு மண்டலமாக வெளிப்புறத்தை நோக்கி வேறொரு மண்டலமாக வளர்ச்சியடைகிறது.

ஐந்து மண்டலங்களின் தன்மைகள் கீழே தனித்தனியாக விவரிக்கப்பட்டுள்ளன.

மண்டலம் – A: மத்திய வணிக மையம் (CBD)

இது வணிக சமூகத்தின் மையப்பகுதியாகும். இங்கு வணிக, சமூக மற்றும் குடிமை செயல்பாடுகள் குழுமிக் காணப்படுகின்றன. மத்திய வணிக மையத்தின் மையப்பகுதி அலுவலகக் கட்டிடங்கள். வணிகக் கடைகள், திரையரங்குகள், உணவகங்கள், வங்கிகள், குடிமை அரசு கட்டிடங்கள் போன்றவற்றைக் கொண்டுள்ளபோது இதன் வெளிப்புறப் பகுதி பண்டக சாலைகள் மற்றும் இலகுரக தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது.

மண்டலம் – B: மத்திய வணிக மையத்திற்கு அடுத்துள்ள மாற்றநிலை மண்டலம்:

இங்கு வணிக செயல்பாடுகளும் தொழிற்சாலைகளும் இணைந்து காணப்படுகின்றன. இது பழைய குடியிருப்புப் பகுதிகளை ஆக்கிரமிக்கிறது. இது குடியிருப்பு சிதைவு மண்டலம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு குறைவான வாடகையும் பணிபுரியுமிடதிற்கு செல்ல போக்குவரத்து செலவும் குறைவாக இருப்பதால் புதிதாக குடியேறுகிறார்கள். ஆகவே, இது நகரக் குடிசைகள் ஆகும்.

மண்டலம் – C: தனியாக பணிபுரியும் ஆண்களின் தங்குமிடங்கள்:

இந்தப் பகுதி இரண்டாம் தர குடியேற்றக்காரர்களான நீலக் கழுத்துப்பட்டை பணியாளர்கள் தங்கும் இடங்களாகும். வணிக மையப் பகுதிக்கு வெளியே இவர்களால் சொந்தமாக வீடு வைத்துக்கொள்ளும் திறன் இருந்தாலும் பணிபுரியும் இடங்களுக்கு செல்ல ஏற்றதாக இது இருப்பதால் இங்கு தங்கியிருக்கிறார்கள். குடும்ப குழுக்கள் அதிகமாக காணப்படுகின்றன. குற்ற விகிதங்கள் மிகவும் குறைவாகக் காணப்படுகிறது.

மண்டலம் – D: வசதியான குடியிருப்புகளைக் கொண்ட மண்டலம்:

இது நடுத்தர மற்றும் உயர் வர்க்க குடியிருப்புகளைக் கொண்டுள்ளது. மண்டலம் 1 லிருந்து 15 – 20 நிமிடங்களில் போது வாகனங்கள் மூலம் வீட்டிற்கு செல்லும் தூரத்தில் அதைந்துள்ளது.

மண்டலம் – E: பயணிகள் மண்டலம்:

இந்த மண்டலம் நகரத்தைச் சுற்றிக் காணப்படுகிறது. இது தொடர்ச்சியான குடியிருப்புப் பகுதிகளுக்கு அப்பாலும் காணப்படுகிறது. பெரும்பாலான இப்பகுதி நகர எல்லைக்கு அப்பால் திறந்த வெளியில் காணப்படுகிறது. திறந்த வெளியில் காணப்படும் சிறிய கிராமங்கள் நாளடைவில் புற நகர் பகுதிகளாக வளர்ச்சியடைகின்றன. இந்த பகுதிகுள் வசிப்போர் மத்திய வணிக மையத்தில் பணிபுரிவதால் பயணிகள் மண்டலம் ஒரு மணிநேர பயண தூரத்திலேயே அமைந்துள்ளது.

நகரின் வெளிப்புற வளர்ச்சியானது இந்த மண்டலம் நிலையற்றது என்பதைக் குறிப்பதாக பர்கேஸ் கூறுகிறார். வணிக வளர்ச்சி மாற்றநிலை மண்டலத்தை நோக்கி விரிவடைவதால் குறைந்த வருமான குழுக்களை இது வெளியேறச் செய்கிறது. இந்த குழுக்கள் நடுத்தர மற்று உயர் வர்க்கத்தினரை வெளிப்புறத்தை நோக்கி இடம்பெயரச் செய்கின்றன.

நகரமயமாதல் – உலகம் மற்றும் இந்தியா:

நகரமயமாதல் என்பது கிராமப்புறத்திலிருந்து நகரக் குடியிருப்புகளை நோக்கி மக்கள் இடம் பெயர்ந்து நகர மக்களின் சதவிகிதம் படிப்படியாக அதிகரித்து மாறும் சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றி கொள்வது போன்றவற்றைக் குறிப்பதாகும். மையப் பகுதிகளில் வசித்து பணிபுரியும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் நகரங்களும் மற்றும் மாநகரங்களும் பெரிய அளவில் உருவாகும் ஒரு செயல் முறையே நகரமயமாதல் ஆகும். நகரமயமாதலும் மற்றும் நகர வளர்ச்சியும் மாறி மாறி பயன்படுத்தப்பட்டாலும் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபடுத்தப் பட வேண்டும். நகரம் என வரையறுக்கப்பட்ட பகுதியில் வாழும் மொத்த தேசிய மக்களின் சதவிகிதமே நகரமயமாதலாகும். மாறாக, நகர வளர்ச்சி என்பது நகரம் என வரையறுக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களின் அறுதி எண்ணிக்கையாகும். 2008ஆம் ஆண்டு இறுதியில் உலக மக்கள் தொகையில் பாதிக்கு மேல் நகரப் பகுதியில் வசிப்பார்கள் என ஐ.நா. சபை மதிப்பிட்டுள்ளது. 2050ஆம் வருடத்திற்குள் 64 சதவிகித வளரும் நாடுகளும் 86 சதவிகித வளர்ந்த நாடுகளும் நகரமயமாக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரத்திற்கு பிறகு கலப்புப் பொருளாதாரத்தை ஏற்றுக் கொண்ட பிறகே இந்தியாவில் நகரமயமாதல் துரிதப்படுத்தப்பட்டது. கலப்புப் பொருளாதாரம் தனியார் துறை வளர்ச்சிக்கு வித்திட்டது. இந்தியாவில் நகரமயமாதல் அதிவேகமாக நடைபெறுகிறது.

1901 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நகரப்பகுதியில் வசிப்போர் 11.4 சதவிகிதமாக இருந்தனர். இது 28.53 சதவிகிதமாக 2001ல் உயர்ந்து 30 சதவிகிதத்தை கடந்து 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 31.16 சதவிகிதத்தில் உள்ளது. ஐ.நா. சபை மக்கள் தொகை அறிக்கை 2007த்தின் படி 2030க்குள் 40.76 சதவிகித மக்கள் நகரப்பகுதியில் வசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறார்கள். உலக வங்கியின் ஆய்வுப்படி, சீனா, இந்தோனேசியா, நைஜீரியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகியவற்றோடு இந்தியாவும் சேர்ந்து 2050ல் உலக நகர மக்கள்தொகை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும். மும்பை 20ஆம் நூற்றாண்டில் பெரிய அளவிலான கிராமப்புற – நகர்புற இடம்பெயர்தலை கண்டது. மும்பை 2018ல் 22.1 மில்லியன் மக்கள் தொகையுடன் இந்தியாவின் மிகப் பெரிய மாநகரமாக விளங்குகிறது.

அதைத்தொடர்ந்து டெல்லி 18.6 மில்லியன் மக்கள் தொகையுடன் இரண்டாவது பெரிய மாநகரமாகும். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி அதிவேக நகரமயமாதல் வளர்ச்சியைக் கொண்டு டெல்லி மக்கள்தொகை 4.1 சதவிகிதமாக உயர்கிறது. அதைத் தொடர்ந்து மும்பை 3.1 சதவிகிதத்திலும் கொல்கத்தா 2 சதவிகிதத்திலும் வளர்ச்சியடைந்துள்ளது.

நகர்புற விளிம்பு:

நகர்ப்புற விளிம்பு என்பது நன்கு அறியப்பட்ட நகர்புறப் பயன்பாடுகள் காணப்படும் நிலத்திற்கும் வேளாண் தொழிலுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்திற்குமிடையில் உள்ள மாற்றம் (transition) நிகழும் பகுதியாகும். இப்பகுதியில் கிராம மற்றும் நகர நிலப் பயன்பாடுகள் கலந்திருப்பதோடு கிராம நிலப்பயன்பாடு நகர நிலப்பயன்பாடாகவும் மாறி வருகிறது. நகர விளிம்பானது குடியிருப்புகள் மற்றும் வர்த்தக மையங்களைக் கொண்டு ஒரு முறையான மாநகரம் போன்று தோற்றமளித்தாலும், ஒரு மாநகரத்திற்கு தேவையான சேவைகளான குழாய் நீர் விநியோகம், கழிவுநீர் மற்றும் குப்பை அகற்றும் வசதிகள் போன்றவை இருக்காது. முக்கிய மாநகரத்தோடு அதன் தொடர்ச்சியான நகராட்சி நகரங்கள் மற்றும் முழுவதும் நகரமயமான வருவாய் கிராமங்கள் ஆகியவை நகர விளிம்பில் அடங்கும்.

நகர்புற விரிவாக்கம் அல்லது புறநகர் விரிவாக்கம்:

நகர்ப்புற விரிவாக்கம் அல்லது புறநகர் விரிவாக்கம் என்பது மத்திய நகர்ப்புறப் பகுதிகளிலிருந்து அடர்த்தி குறைந்த ஒரே ஒரு நிலப்பயன்பாடு கொண்ட மற்றும் பொதுவாக மோட்டார் வாகனத்தை மட்டும் சார்ந்த குழுக்கள் வாழும் பகுதியில் மக்கள் தொகை விரிவாக்கம் நடைபெறுவதை விவரிக்கிறது. இச்செயல்முறை புறநகர் விரிவாக்கம் என்றும் அழைக்கப்படும். நகரமயமாதலின் ஒரு வடிவத்தை விளக்க முற்படுவதோடு நகர்ப்புற விரிவாக்கம் என்ற சொல் வளர்ச்சியின் காரணமாக ஏற்படும் சமூக, சுற்றுச்சூழல் விளைவுகளை விளக்குகிறது. இது போன்ற இயக்கங்களையும், நிகழ்வுகளையும் விளக்க “நகர்ப்புறமயமாக்கல் (Peri Urbani Station) என்ற சொல் ஐரோப்பாக் கண்டத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனாலும் ஐரோப்பிய சுற்றுச்சூழல் நிறுவனம் தற்போது நகர்ப்புற விரிவாக்கம் என்ற சொல்லைப் பயன்படுத்தி வருகிறது. விரிவாக்கம் என்பதில் எவற்றை சேர்ப்பது மற்றும் அவற்றை எவ்வாறு எண்களால் கணக்கிடுவது என்பதில் கருத்து வேறுபாடுள்ளது. எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு ஏக்கருக்கு சராசரியாக எத்தனை குடியிருப்புப் பகுதிகள் உள்ளன என்பதை வைத்து மட்டுமே சில வர்ணனையாளர்கள் விரிவாக்கத்தை அளவிடுகின்றனர் மற்றும் சிலர் விரிவாக்கத்தைப் பரவலாக்கலுடன் (Decentralization) தொடர்புபடுத்துகின்றனர். (ஒரு தெளிவான மையமின்றி மக்கள் தொகை பரவியிருத்தல்), தொடர்ச்சியின்மை (தவளைப் பாய்ச்சல் வளர்ச்சி) பயன்பாடுகளை வகைப்படுத்துதல் போன்றவை.

நகர்ப்புற விரிவாக்கத்துக்கான காரணங்கள்:

நகர்புற விரிவாக்கம் பல காரணிகளால் ஏற்படுகின்றன. அவையாவன:

குறைவான நில வீதங்கள்:

குறைந்த விலையில் நிலமும், வீடுகளும் புறநகர்ப் பகுதிகளில் கிடைக்கின்றன. நகர்ப்புற வளர்ச்சி மையங்கள் மக்களை அங்கு தங்கவிடாமல் செய்வதால் மக்கள் வெளியேற விரும்புகின்றனர்

வாழ்க்கைத்தரம் உயர்தல்:

வாழ்க்கைத் தரமும் சராசரி குடும்ப வருமானமும் உயர்ந்து இருப்பதால் மக்கள் தொலை தூரத்திலுள்ள பணியிடங்களுக்கு செல்லவும், வீட்டுக்குத் திரும்பி வரவும் தேவையான பணத்தை செலவிடும் திறன் பெற்றவர்களாக உள்ளனர்.

நகர்புறத் திட்டமின்மை:

குறைவான போக்குவரத்து நெரிசல் மற்றும் அமைதியான சூழல் ஆகியவற்றை மக்கள் விரும்புவதால் அவர்கள் விளிம்பை நோக்கி நகருகிறார்கள். கட்டுக்கடங்காத வளர்ச்சி, மரங்களை வெட்டுதல், பசுமைப் பரப்பு இழப்பு, நீண்ட போக்குவரத்து நெரிசல்கள், மோசமான உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவை மக்களைப் புதிய இடங்களுக்குச் செல்ல கட்டாயப்படுத்துகின்றன.

குறைவான வீட்டு வரி வீதங்கள்:

மாநகரங்களில் வழக்கமாக சொத்துவரிகள் அதிகமாக இருப்பதால் இதைத் தவிர்க்க மக்கள் புறநகர் பகுதிகளில் வாழ முற்படுகின்றனர். ஏனெனில் அங்கு வரிகள் குறைவு.

மக்கள்தொகை வளர்ச்சி அதிகரிப்பு:

விரிவாக்கத்திற்கு மற்றொரு காரணம் மக்கள் தொகை வளர்ச்சி அதிகரிப்பாகும். ஒரு மாநகரத்தின் மக்கள்தொகை அதன் தாங்கும் திறனைவிட அதிகமாக உள்ளதால் அங்கு வாழும் உள்ளுர் சமூகங்கள் மாநகரின் மையத்திலிருந்து மேலும் மேலும் தூரமாகச் செல்கின்றன.

நுகர்வோரின் விருப்பங்கள்:

அதிக வருவாய் பெறும் வகுப்பிலுள்ள மக்கள் பெரிய வீடுகள், அதிக எண்ணிக்கையில் படுக்கையறைகள், பெரிய பால்கனிகள் மற்றும் பெரிய புல் தரைகள் ஆகியவற்றை அதிகம் விரும்புகின்றனர். மிகுந்த மக்கள் தொகை கொண்ட மாநகரங்களில் இத்தகைய வசதிகள் இல்லாததால் நகர்ப்புற விரிவாக்கம் ஏற்படக் காரணமாகிறது. மக்களின் விருப்பத்திற்கேற்ப எங்கு வீடு கிடைக்கிறதோ அத்தகைய குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட குடியிருப்புப் பகுதிகளையே மக்கள் பொதுவாகத் தேடிச் செல்கின்றனர்.

நகரமயமாதலால் ஏற்படும் பிரச்சனைகள்:

சீனாவிற்கு அடுத்தபடியாக உலகிலேயே இரண்டாவது அதிக நகர்ப்புற மக்கள் கொண்ட நாடு இந்தியாவாகும். இந்தியாவில் நகர்ப்புற மக்கள் தொகையானது (மொத்த மக்கள் தொகையில் சுமார் 28%) கிட்டத்தட்ட அமெரிக்க ஐக்கிய நாட்டின் மொத்த மக்கள் தொகைக்குச் சமமானதாகும். நகர்ப்புற வளர்ச்சி விகிதம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பெரிய எண்ணிக்கையில் மக்கள் மிகப்பெரிய மற்றும் பெரிய நகரங்களுக்கு (Metropolitan) வருவதால் நகர்ப்புற இந்தியாவின் மக்கள் தொகை வருடத்திற்கு 5 சதவீதத்திற்கும் மேலாக அதிகரிக்கிறது. மக்கள் தொகையின் இந்த பிரம்மாண்டமான வளர்ச்சி பல சமூகப் பொருளாதார சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்குக் காரணமாகிறது. நகர்ப்புற இந்தியாவில் காணப்படம் சில முக்கியப் பிரச்சனைகள் கீழே சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

1. இடம் மற்றும் குடியிருப்பு வசதி பற்றாக்குறை:

இயற்கை மற்றும் புவியியல் தடைகளால் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்குத் தேவையான அதிக இடம் எளிதில் கிடைப்பதில்லை. இடப்பற்றாக்குறை காரணமாக நிலத்தின் விலை அதிகரிப்பதுடன், அலுவலகம் மற்றும் குடியிருப்புகளின் வாடகை அதிகரிக்கிறது. மக்களால் அதிக வாடகை கொடுக்க முடியாததால் நகரக் குடிசைகளின் தேவையற்ற வளர்ச்சி ஏற்படுகிறது.

ஒரு மதிப்பீட்டின்படி இந்திய நகரங்களில் வருடத்திற்கு சுமார் 2 மில்லியன் வீடுகளின் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் குறைந்த வருவாயுள்ள மக்கள் குழுக்கள் நகரக் குடிசைகளிலும், நடைபாதைகளிலும் வாழும் நிலைமைக்குத் தள்ளப்படுகின்றனர். இந்தியாவின் பெரிய நகரங்களில் நகரக் குடிசைகள் மற்றும் நடைபாதைகளில் வாழ்பவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

2. சமூக அடிப்படை வசதிகளின் பற்றாக்குறை:

இந்தியாவின் பெரும்பான்மையான மாநகரங்களில் வளர்ச்சி காணப்படகிறது. ஆனால் நகரமயமாதல் நடைபெறவில்லை. உண்மையில், மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள வேளையில் உட்கட்டமைப்பு வசதிகளும், குடிமை வசதிகளும் போதுமானதாக இல்லை. நகர்ப்புற இடங்களில் மக்கள் குவிந்துள்ளதால் சமூக அடிப்படை வசதிகளான வீடு, மின்சாரம், குடிநீர், போக்குவரத்து, சுகாதாரம், கழிவு அகற்றுதல், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் போன்றவை அதிக அழுத்தத்திற்கு ஆளாகின்றன.

3. வேலையின்மை:

வேலையின்மை என்பத கட்டாயாமாக வேலையற்று இருப்பதாகும். இந்தியாவில் வருடத்திற்கு 3 சதவீதத்திற்கும் அதிகமான நகர்ப்புற வேலையின்மை படிப்படியாக உயர்ந்து வருகிறது. ஒரு மதிப்பீட்டின்படி சுமார் 25% நகர்ப்புறத் தொழிலாளர்கள் வேலையின்றி இருக்கின்றனர். அதிக அளவு வேலையின்மை மற்றும் தகுதிக்குக் குறைவான வேலை போன்றவை குற்ற விகிதம் அதிகரிக்கக் காரணமாகியுள்ளது.

4. போக்குவரத்து பிரச்சனை:

போக்குவரத்துச் சிக்கல்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகியவை இந்திய மாநகரங்களின் முக்கியப் பிரச்சனையாகும். ஒரு நகரம் பெரியதாக வளர வளர அதன் செயல்பாடுகளும் மிக முக்கியமானவை. தொழிலாளிகளுக்கும் பயணிகளுக்கும் அதிக போக்குவரத்து வசதிகள் தேவை. எதிர்பாராதவிதமாக, பெரிய நகரங்களில் குறிப்பாகப் பழைய நகரங்களில் சாலைகள் குறுகலாக காணப்படுகின்றன. எனவே பயணிகளின் அதிகரித்து வரும் தேவையை சமாளிக்க முடியவில்லை. தனியார் வாகனங்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக போக்குவரத்து நெரிசல், தாமதம், எரிச்சல் மற்றும் பதற்றம் போன்றவை ஏற்படுகிறது. சாலைகளை அகலப்படுத்தாமல், சாலைகளின் தரத்தை மேம்படுத்தாமல் வாகனங்களின் எண்ணிக்கையைத் தற்போதுள்ள வீதத்தில் அதிகரிக்க அனுமதித்தால் முக்கிய மாநகரங்களில் உள்ள போக்குவரத்து அமைப்பு முழுவதும் சரிவடையும்.

5. எரிசக்தி நெருக்கடி:

எரிசக்தி நெருக்கடி தொழிற்சாலைப் பொருட்களின் உற்பத்தியையும் விநியோகத்தையும் பாதிக்கிறது. உண்மையில் எரிசக்தியானது தொழில் வளர்ச்சி, போக்குவரத்துத் திறன் மற்றும் மனித வசதியைச் சார்ந்துள்ளது. பெருநகரங்கள், மில்லியன் மற்றும் முதல் நிலை நகரங்கள் ஆகியவற்றில் உச்சகட்ட மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதற்கேற்றவாறு எரிசக்தியின் அளிப்பு தேவையை பூர்த்தி செய்யும் நிலையில் இல்லை.

6. நீர் அளிப்புப் பற்றாக்குறை:

மனித வாழ்க்கையின் முதல் மற்றும் முன்னணித் தேவை நீர். உண்மையில் நீரே வாழ்க்கை. மனிதன் நீர் இல்லாமல் வாழ முடியாது. கொல்கத்தாவில் சராசரி தனிநபரின் நீர் நுகர்வு 250 லிட்டர். மும்பையில் 175 லிட்டர், டில்லியில் 80 லிட்டர் மட்டுமே. ஆனால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இது 1200 லிட்டர், சிக்காகோவில் 1100 லிட்டர் ஆகும்.

இந்தியாவில் நகர்ப்புறப் பகுதிகளில் கடுமையான நீர்ப் பற்றாக்குறை உள்ளது என்பதை சென்னை, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜோத்பூர், நாக்பூர், சிம்லா, சோலன், சூரத், உதய்பூர், வதோதரா போன்ற நகரங்களில் நாளொன்றுக்கு ஒன்று முதல் இரண்டு மணி நேரமே நீர் வழங்கப்படுகிறது என்ற உண்மையிலிருந்து அறிந்துகொள்ளலாம். தேசிய தலைநகர் புதுடெல்லியும் நீர் அளிப்பு நாளொன்றுக்கு சுமார் 4 மணி நேரம் என்று முறைப்படுத்தியுள்ளது.

7. சுற்றுச்சூழல் மாசுபடுதல்:

சுற்றுச்சூழல் மாசுபடுதலானது அனைத்து மில்லியன் மற்றும் பெரு நகரங்களின் தீவிரப் பிரச்சினையாகும். வாகனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளிலிருந்து வெளியேறும் புகையினால் காற்று மாசுபடுவதுபோல நீர் மற்றும் ஒலி மாசடைதாலும் அதற்கிணையாக தீவிரமான ஒன்றாகும். குப்பை சேகரிக்கும் இடங்களின் பற்றாக்குறை கிராம-நகர விளிம்பை சுகாதாரமற்றதாக ஆக்குவதுடன் மக்கள் உடல் நலத்திற்குப் பாதகமாகவும் ஆகிறது. குப்பை அகற்றும் பிரச்சனை (அபாயகரமான பிளாஸ்டிக், உலோகம் மற்றும் பொட்டலம் கட்டும் பொருட்கள்) இந்தியாவில் பெரும்பாலான மாநகரங்களிலும். நகர்ப்புறப் பகுதிகளிலும் தீவிரமான பிரச்சினையாக உள்ளது. எதிர்பாராத விதமாக பெருமளவில் குப்பைகள் ஆறுகளிலோ அவற்றின் கரைகளிலோ கொட்டப்படுகின்றன. மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற மாநகரங்களில் குப்பைகளின் பெரும்பகுதி தொடர்ந்து கடலில் கொட்டப்படுகின்றன.

8. குற்றம் அதிகரித்தல்:

அதிகரிக்கும் நகர்ப்புறக் குற்றங்கள் நவீன நகரங்களின் அமைதியைக் குலைக்கின்றன. சமூகவியலாளர்கள் கூற்றுப்படி வேலையின்மை நகர்ப்புற பகுதிகளில் குற்றங்களுக்கு முக்கிய காரணமாகும். வேலையில்லாத இளைஞர்கள் கடத்தல், பணம் பறித்தல், குழந்தை கடத்தல், கொலை, வழிப்பறி செய்தல் (பாக்கெட் பிக்கிங்), கற்பழித்தல், கொள்ளையடித்தல் மற்றும் திருடுதல் போன்ற குற்றங்களில் ஈடுபடுகின்றனர். நகரக் குடிசைகள் வேலையில்லாத குற்றவாளிகளால் நிறைந்திருக்கின்றன. இவர்கள் காலப்போக்கில் குற்றத் தொழிலையே வழக்கமாகக் கொண்டவர்களாக மாறுகின்றனர். பொருள் கலாச்சாரம், வளர்ந்து வரும் நுகர்வுத்தன்மை, சுயநலம், கடினமான போட்டி, ஆடம்பரமாக செலவு செய்யும் பழக்கம், அதிகரித்து வரும் சமூகப் பொருளாதார வேற்றுமைகள், அதிகரித்து வரும் வேலையின்மை மற்றும் தனிமை ஆகியவை இப்பிரச்சனைக்குச் சில முக்கியக் காரணங்களாகும்.

கலைச்சொற்கள்:

1. பாலைவனச் சோலை: பாலைவனத்தில் ஒரு பசுமையான இடம்.

2. நகர்ப்புற விரிவாக்கம்: நாட்டுப்புறமாக இருந்த பகுதியில் நகர்ப்புறக் கட்டிடங்களும் வீடுகளும் பரவுதல்.

3. ஒருங்கிணைப்பு: மத்தியப் பகுதியின் கட்டப்பட்ட பகுதி மற்றும் ஏதாவது புறநகர் ஆகியவற்றை உள்ளக்கிய நகர்புறத்தின் நீட்டிப்பு மற்றும் தொடர்ந் நகர்ப்புறப்பகுதி மூலம் தொடர்புபடுத்தப்பட்டது.

4. குற்றம்: ஒரு செயலைச் செய்தல் அல்லது செய்யாதிருத்தல் குற்றத்தை ஏற்படுத்துகிறது. இது சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படக்கூடியது.

5. ஆற்றல் சிக்கல்: பொருளாதாரத்திற்குத் தேவையான சக்தி வளங்களைத் தருவதில் ஏற்படும் முக்கியமான சிக்கல்.

6. ஸ்மார்ட் சிட்டி (Smart City): ஒரு நகர்ப்புற பகுதி பலவிதமான மின்னணு தகவல்களைச் சேகரிக்கும் நுண்ணுணர்வுகளைப் (Sensors) பயன்படுத்தி தகவல் அனுப்பி, சொத்துக்களையும், வளங்களையும் திறமையாகக் கையாளும் பகுதி.

7. வேலையின்மை: வேலையற்ற நிலை.

8. தலம்: புவியின் மேற்பரப்பின் காணும் இடம்.

9. மானுடவியலாளர்: மானுடவியல் பற்றிய பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஒரு மனிதர்.

10. இணைந்த நகரம்: இரண்டு மாநகரங்களின் இணைப்பினால் உருவான நகர்ப்புற வளர்ச்சிப் பரப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *