Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Samacheer NotesTnpsc

மராத்தியர்கள் Notes 11th History

11th History Lesson 10 Notes in Tamil

10. மராத்தியர்கள்

அறிமுகம்

முகலாயரின் வீழ்ச்சியில் மராத்தியர் முக்கியப் பங்கு வகித்தனர். 18ஆம் நூற்றாண்டின் மத்தியில் இந்தியாவின் மையப்பகுதியில் மராத்திய மாமன்னர் சிவாஜியின் தலைமையில் முகலாய ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதில் வெற்றி பெற்றனர். தஞ்சாவூரில் நாயக்க மன்னரின் ஆட்சி முடிவடைந்த உடன் மராத்தியத் தளபதி வெங்கோஜி (சிவாஜியின் ஒன்றுவிட்ட சகோதரர்) தமிழகத்தில் மராத்திய ஆட்சியை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டார். தஞ்சாவூரில் 1674ஆம் ஆண்டு தொடங்கிய மராத்தியரின் ஆட்சி 1832ஆம் ஆண்டு இரண்டாவது சரபோஜி மன்னர் மரணம் வரை நீடித்தது.

மராத்தியரின் எழுச்சிக்கான காரணங்கள்

அ) மக்களின் இயல்பும், புவியியல் கூறுகளும்

  • மராத்தியர் வாழ்ந்த குறுகலான நிலப்பகுதி கொங்கணம் என்று அழைக்கப்பட்டது.
  • செங்குத்தான மலைகளும், எளிதில் அணுகமுடியாத பள்ளத்தாக்குகளும், பாதுகாப்பு அரண்களாகத் திகழ்ந்த மலைக்கோட்டைகளும் இராணுவ பாதுகாப்புக்கு உகந்தவையாக இருந்தன.
  • போர்ச் செயல்பாடுகளில் நீண்ட மரபைக் கொண்ட மராத்தியர் விசுவாசம், வீரம், ஒழுக்கம், தந்திரம், எதிரிகளை தாக்கும் ஆற்றல் ஆகியவற்றில் சிறந்து விளங்கினார்கள்.
  • முன்னதாக பாமினி சுல்தான்களின் கீழ் செயல்பட்ட மராத்தியர், சிவாஜி மறைவுக்குப் பிறகு அகமதுநகர், பீஜப்பூர், கோல்கொண்டா, பீடார், பீரார் ஆகிய சுல்தான்களின் கீழ் செயல்பட்டனர்.
  • வலிமை மிகுந்த காலாட்படையும் ஆபத்தான ஆயுதங்களையும் கொண்டிருந்த முகலாய இராணுவத்துடன் நேரடியாக மோதுவதை மராத்தியர் தவிர்த்தனர்.
  • கொரில்லா தாக்குதல் முறை அவர்களின் வலிமையாகத் திகழ்ந்தது.
  • இரவு நேரங்களில் திடீரென மின்னல் வேகத்தில் தாக்குதல்களைத் திட்டமிடுவதிலும் நடத்துவதிலும் திறமை கொண்டிருந்தனர்.மேலும் மேலதிகாரியின் உத்தரவுக்குக் காத்திருக்காமல் போர்ச்சூழலைக் கருத்தில் கொண்டு வழிமுறைகளை மாற்றிச் செயல்படுத்தும் திறனையும் அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.

ஆ) பக்தி இயக்கமும் அதன் தாக்கமும்

  • பக்தி இயக்கம் பரவியதன் மூலமாக மராத்தியரிடம் ஒற்றுமை உணர்வு மேலோங்கியது.
  • துக்காராம், ராம்தாஸ், ஏகநாதர், ஆகியோர் பக்தி இயக்கத்தின் முன்னோடிகளாகத் திகழ்ந்தனர். மராத்தி மொழியில் பாடப்பட்ட பக்தி பாடல்கள் சமூகத்தில் வாழ்ந்த மக்களிடையே பிணைப்பை ஏற்படுத்தின.

  • “(மராத்திய நாட்டில்) மத எழுச்சி என்பது பிராமணச் சமயம் சார்ந்ததாக இல்லை. அமைப்புகள், சடங்குகள், வகுப்பு வேறுபாடுகள், ஆகியவற்றுக்கு எதிரான தனது போராட்டத்தைப் பொறுத்த அளவில் வழக்கத்தில் உள்ள கொள்கைக்கு மாறானதாக அது அமைந்தது. துறவிகள் பெரும்பாலும் பிராமண வகுப்பைச் சாராமல் சமூகத்தின் அடிநிலையைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். ” – நீதிபதி ரானடே

இ) பிற காரணங்கள்

  • பீஜப்பூர், கோல்கொண்டா அரசுகள் கலைந்த சூழலில் மராத்தியர் ஒன்றிணைந்து தங்களுடைய வாழ்க்கைக்காகப் போராட வேண்டிய உந்துதலைப் பெற்றனர்.
  • பீஜப்பூர், கோல்கொண்டா, அகமதுநகர் ஆகிய சுல்தான்களுக்கு எதிராக நடந்த தக்காணப் போர்களின் காரணமாக முகலாயர்களின் கருவூலம் காலியானது.
  • தக்காணப் பகுதியில் சிதறிக் கிடந்த மராத்தியரைத் தனது தலைமையின் கீழ் ஒன்றுதிரட்டி சிவாஜி ஒரு வலுவான அரசை நிறுவினார். அந்த அரசுக்கு ராய்கர் தலைநகராக விளங்கியது.

சிவாஜி (1627-1680)

  • ஜூன்னார் என்ற இடத்திற்கு அருகே ஷிவ்னர் என்ற பகுதியில் ஷாஜி போன்ஸ்லே மற்றும் அவரது முதல் மனைவி ஜீஜாபாய்க்கு மகனாக சிவாஜி பிறந்தார்.
  • தாய் வழியில் தேவகிரியை ஆண்ட யாதவ மன்னர்களின் வழித்தோன்றலாகவும் தந்தை வழியில் மேவாரின் சிசோடியாக்களின் வழித்தோன்றலாகவும் ஷாஜி போன்ஸ்லே விளங்கினார்.
  • அகமதுநகர், அகமது ஷாவின் அபிசீனிய அமைச்சரராகவும், முன்னாள் அடிமையாகவும் இருந்த மாலிக் அம்பர் (1548-1626) என்பவரின் கீழ் ஷாஜி போன்ஸ்லே சேவை புரிந்தார்.
  • மாலிக் அம்பர் மறைவுக்குப் பின்னர் அரசியலில் ஈடுபட்ட ஷாஜி போன்ஸ்லே அகமது நகர் முகலாயர்களால் இணைக்கப்பட்ட பிறகு பீஜப்பூர் சுல்தானிடம் தன் பணியைத் தொடர்ந்தார்.
  • பூனாவில் இருந்த ஷாஜி போன்ஸ்லேவின் ஜாகிர்தாரான தாதாஜி கொண்டதேவ் என்பவரின் பராமரிப்பில் சிவாஜியும் அவரது தாயும் விடப்பட்டனர். (இராணுவ மற்றும் நிர்வாக சேவைகளுக்கான அங்கீகாரமாக வழங்கப்பட்ட நிலம் ஜாகீர் ஆகும்.)

  • பூனாவைச் சுற்றி இருந்த மலைப்பாங்கான பகுதிகளில் அனுபவமும் அறிவும் வலிமையும் கொண்ட மாவலியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் தலைவர்களின் நன்மதிப்பை சிவாஜி பெற்றார். மதத் துறவிகளாக விளங்கிய ராம்தாஸ், துக்காராம் ஆகியோரும் சிவாஜியிடம் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள்.
  • துறவி ராம்தாஸ் அவர்களை சிவாஜி தனது குருவாக ஏற்று மரியாதையை செலுத்தினார்.

இராணுவ வெற்றிகள்

  • சிவாஜி தமது 19ஆவது வயது முதல் இராணுவத்தில் ஈடுபாடு காட்டத் தொடங்கினார். 1646 இல் தோர்னா கோட்டையை பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கைப்பற்றினார். தோர்னாவில் இருந்து ஐந்து மையில் தொலைவில் இருந்த ராய்கர் கோட்டையையும் கைப்பற்றி மீண்டும் முழுமையாக அதனைக் கட்டினார்.
  • 1647 இல் தாதாஜி கொண்டதேவ் மறைந்த பிறகு தமது தந்தையின் (ஜாகீர்) நிலத்தை நிர்வகிக்கும் பொறுப்பை சிவாஜி ஏற்றார். அதனைத் தொடர்ந்து பாராமதி, இந்தபுரம்,புரந்தர்,கொன்டானா ஆகிய கோட்டைகளும் அடுத்தடுத்து அவரது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. அந்தப் பகுதியில் இருந்த கல்யாண் என்ற முக்கிய நகரையும் மராத்தியர் முன்பே கைப்பற்றி இருந்தார்கள்.
  • பீஜப்பூர் சுல்தான், சிவாஜியின் தந்தையை சிறுமைப்படுத்திச் சிறையில் அடைத்தார். தக்காணத்தின் முகலாய அரசப்பிரதிநிதியாக இருந்த இளவரசர் மூராத் உடன் பேச்சுவார்த்தை நடத்திய அவர் முகலாய சேவையில் சேர விருப்பம் தெரிவித்தார்.
  • 1649ஆம் ஆண்டு சில நிபந்தனைகளின் அடிப்படையில் பீஜப்பூர் சுல்தான் ஷாஜியை விடுதலை செய்தார்.1649 முதல்1655 வரை இராணுவச் செயல்பாடுகளில் ஈடுபடுவதிலிருந்து சிவாஜி விலகிருயிந்தார். இந்தக் காலகட்டத்தில் அவர் தனது அதிகாரத்தையும் நிர்வாகத்தையும் ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்தினார்.
  • 1656ஆம் ஆண்டு முதல் சிவாஜி, தனது இராணுவச் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கினார். சதாரா மாவட்டத்தில் ஜாவ்லி என்ற இடத்தைக் கைப்பற்றினார். இந்தக் குறிப்பிடத்தக்க வெற்றியால் அவர் மராத்தியரின் மத்தியில் பிரபலம் அடைந்தார். இளைஞர்கள் அவரது இராணுவத்தில் இணைந்தனர். ஜாவ்லி என்ற இடத்திலிருந்து மேற்கே இரண்டு மைல் தொலைவில் பிரதாப்கர் என்ற புதிய கோட்டை கட்டப்பட்டது.

பீஜப்பூருக்கு எதிரான மோதல்

  • 1656 நவம்பர் மாதம் பீஜப்பூரின் முகமது அடில்ஷா மரணமடைந்தார். பதினெட்டு வயதே நிரம்பிய இளைஞர் இரண்டாம் அடில்ஸா அடுத்துப் பொறுப்பேற்றார்.
  • 1657ஆம் ஆண்டு பீடார், கல்யாணி, புரந்தர் ஆகியவற்றை ஔரங்கசீப்புடன் சமரசம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் ஷாஜகான் நோய்வாய்ப்பட்டார்.தில்லியில் அவரைத் தொடர்ந்து யார் ஆட்சிக்கு வருவது என்பதில் போட்டி நிலவியது. ஔரங்கசீப் ஆட்சியைக் கைப்பற்றி தில்லி வந்தார்.இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட சிவாஜி வடக்கு கொங்கணம் மீது போர் தொடுத்து கல்யாண், பிவாண்டி, மாகுலி கோட்டைகளைக் கைப்பற்றினார்.

சிவாஜி மற்றும் அஃப்சல்கான், 1659

  • முகலாயரிடமிருந்து எந்த ஆபத்தும் இல்லை என்பதால் பீஜப்பூர் சுல்தான் சிவாஜி மீது தாக்குதல் நடத்த முடிவு செய்தார். அஃப்சல்கான் பெரும்படையுடன் அப்பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.
  • “மலையில் ஒழிந்து கொண்டு இருக்கும் எலியை“ சங்கிலியில் கட்டி இழுத்துக்கொண்டு வருவதாக அவர் சூளுரைத்தார். ஆனால் மலைப்பாங்கான பகுதியில் சண்டையிடுவது அவருக்கு சிரமமாக இருந்தது. சூழ்ச்சி மூலமாக சிவாஜியை வீழ்த்த நினைத்தார்.ஆனால் அதிலும் தோல்வியே கிடைத்தது.
  • தெற்கு கொங்கணம் மற்றும் கோல்ஹாபூர் மாவட்டங்களைத் தாக்கிய மராத்தியப் படைகள் பன்ஹலா கோட்டையை கைப்பற்றின. பீஜப்பூர் சுல்தான் தாமே இந்தப் படைகளுக்குத் தலைமை தாங்கினார். இந்தப் போர் சுமார் ஓராண்டுக் காலம் நீடித்தது.ஆனாலும் எந்தப் பகுதியையும் வெல்ல முடியவில்லை. இறுதியாக, பேச்சுவார்த்தைக்குப் பிறகு சிவாஜி, தமது ஆளுகையின் கீழுள்ள பகுதிகளின் ஆட்சியாளராக அங்கீகரிக்கப்பட்டார்

சிவாஜி மற்றும் முகலாயர்.

  • 1658 ஜூலை மாதம், ஔரங்கசீப் மாமன்னராக அரியணை ஏறினார். சிவாஜியை அடக்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு 1660ஆம் ஆண்டு செயிஷ்டகான் தக்காணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். சிவாஜி ஒரு தைரியமான திட்டத்தை வகுத்தார். ஓர் இரவு நேரத்தில், பூனாவுக்கு 400 படை வீரர்களுடன் திருமணக் குழுவினர் போல் சென்ற அவர் செயிஷ்டகானின் இல்லம் மீது தாக்குதல் நடத்தினார். இதனால் 1663 டிசம்பர் மாதம் ஔரங்கசீப் செயிஷ்டகானை தக்காணத்திலிருந்து திரும்ப அழைத்துக்கொண்டார்.

சிவாஜி மற்றும் ஜெய்சிங்

  • அரபிக் கடல் பகுதியில் முகலாயரின் முக்கியத் துறைமுகமாக விளங்கிய சூரத் நகரைக் குறிவைத்து 1664ஆம் ஆண்டு சிவாஜி தாக்குதல் நடத்தினார்.
  • அவரது படை வீரர்கள் அவரைச் சூறையாடினார்கள். சிவாஜியை வீழ்த்துவதற்காகவும் பீஜப்பூரை இணைப்பதற்காகவும் ரஜபுத்திரத் தளபதி ராஜா ஜெய்சிங் தலைமையில் ஒரு இராணுவத்தை ஔரங்கசீப் அனுப்பினார்.
  • அப்போது இளவரசர் மூவாசம் (பின்னர் முதலாம் பகதூர் ஷா என அழைக்கப்பட்டவர்.) தக்காணத்தின் ஆளுநராக பதவி வகித்தார்.அனைத்துத் தரப்புக்களிலிருந்தும் சிவாஜியைச் சுற்றி வளைக்க ஜெய்சிங் விரிவான திட்டம் வகுத்திருந்தார்.ராய்கர் கோட்டையும் அச்சுறுத்தலுக்கு உள்ளானது.
  • 1665 ஜுன் மாதம் புரந்தர் கோட்டையைப் படைகள் சுற்றி வளைத்தன. சிவாஜியின் தீரமான வீரதீர தற்காப்பு பலன் தரவில்லை. இதை உணர்ந்த சிவாஜி பேச்சுவார்த்தை மேற்கொள்ள முடிவு செய்தார்.1665 ஜுன் 11ஆம் தேதி ஏற்பட்ட புரந்தர் உடன்படிக்கையின் படி சிவாஜிக்கு அவர் கைப்பற்றிய கோட்டைகளை வைத்துக்கொள்ள அனுமதி கிடைத்தது. மன்சப்தாராகச் செயல்பட்டு பீஜப்பூரைக் கைப்பற்ற முகலாயருக்கு உதவ ஒப்புக்கொண்டார்.

.

ஆக்ரா பயணம்

  • முகலாய அரசவையை பார்வையிடுமாறு சிவாஜியிடம் ஜெய்சிங் வற்புறுத்தினார். சிவாஜியிடம் அதிக நம்பிக்கை வார்த்தைகளைக் கூறிய ஜெய்சிங், தலைநகரில் சிவாஜியின் பாதுகாப்புக்குத் தாமே உறுதியளித்தார். 1666 மே மாதம் சிவாஜியும் அவரது மகன் சாம்பாஜியும் ஆக்ராவை அடைந்தனர். ஆனால் அவர்களுக்கு அவமரியாதை காத்திருந்தது. சிறுமைபடுத்தப்பட்ட அவர் கொதித்தெழுந்து மன்னரை கண்டித்துப் பேசினார். சிறையில் அடைக்கப்பட்ட சிவாஜி பழக்கூடை ஒன்றில் ஒளிந்துகொண்டு அங்கிருந்து தப்பியதாக கூறப்படுகிறது.
  • 1660ஆம் ஆண்டு முதல் சிவாஜி தீவிர போர்க் கொள்கையைக் கடைப்பிடிக்கலானார். அதனால் மராத்திய வீரர்கள் புதிய வெற்றிகளைப் பெற்றனர். வடமேற்கே ஆப்கன் எழுச்சி காரணமாக அதில் கவனம் செலுத்திய முகலாயருக்கு சிவாஜியை சமாளிக்க முடியவில்லை.
  • தனது உள் நிர்வாகத்தை மறுசீரமைப்பு செய்வதில் சிவாஜி ஈடுபாடு காட்டினார். இளவரசர் மூவாசம், தக்காணத்தின் அரசப் பிரதிநிதி (வைஸ்ராய்) மிகவும் வலுகுறைந்தும் சோம்பலுடனும் இருந்தார். ராஜா ஜஸ்வந்த் சிங் சிவாஜியுடன் நட்பு பாராட்டினார். மன்சப்தார் ஐந்தாயிரம் என்ற படிநிலையில் சாம்பாஜி நியமிக்கப்பட்டார்.

முகலாயருடன் மோதல் (1670)

  • பீராரில் சிவாஜிக்கு முன்னர் கொடுக்கப்பட்ட ஜாகீர் நிலத்தின் ஒரு பகுதியை ஔரங்கசீப் எடுத்துக்கொண்டார். இதனால் கோபமடைந்த சிவாஜி முகலாயர் சேவையிலிருந்த தனது படைகளைத் திரும்ப அழைத்துக்கொண்டார். புரந்தர் உடன்படிக்கையால் தான் இழந்த கோட்டைகளைத் திரும்பவும் மீட்டுக்கொண்டார்.
  • 1670ஆம் ஆண்டு மேற்குக் கடற்கரையோரத்தின் முக்கியத் துறைமுகமான சூரத்தை அவர் மீண்டும் கைப்பற்றினார்.1672 ஆம் ஆண்டு சூரத்திலிருந்து சௌத் எனப்படும் நான்கில் ஒரு பங்கு வருமானத்தை வருடாந்திர கப்பமாக மராத்தியர் பெற்றனர்.

அரியணை ஏறுதல்

  • 1674 ஜூன் 6 ஆம் தேதி சிவாஜி ராய்கர் கோட்டையில் வேத முறைப்படி அரியணை ஏறினார். “சத்ரபதி” (supreme king) என்ற பட்டத்தைச் சூடினார்.

தக்காணப் போர் முயற்சிகள்

  • 1676 ஆம் ஆண்டு தெற்குப் பகுதியில் சிவாஜி தனது வெற்றியை துவக்கினார். கோல்கொண்டா சுல்தானுடன் இரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதற்குக் கைமாறாக சிவாஜி சில பகுதிகளைத் தருவதாக உறுதியளித்தார். செஞ்சி, வேலூர் ஆகியவற்றைக் கைப்பற்றிய அவர், அடுத்திருந்த தனது தந்தை ஷாஷிக்குச் சொந்தமான பகுதிகளையும் சேர்த்துக்கொண்டார்.சகோதர உறவிலான வெங்கோஜியை அல்லது இகோஜி, தஞ்சாவூரை நிர்வகிக்குமாறு அவர் பணித்தார்.
  • மதுரை நாயக்கர்களுக்குப் பெரும் தொகையைக் கப்பமாக தரவும் உறுதியளித்தார். கர்நாடக முற்றுகை முயற்சிகள் சிவாஜிக்கு பெருமையையும் புகழையும் கொடுத்தன. புதிதாகக் கைப்பற்றிய செஞ்சி அவருக்குப் பிறகு பொறுப்பேற்றவர்களுக்கு இரண்டாம் கட்டப்பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தது.

சிவாஜியின் கடைசி நாட்கள்

  • சிவாஜியின் கடைசி நாட்கள் மகிழ்ச்சியானவையாக இல்லை. அவரது மூத்த மகன் சாம்பாஜி அவரைக் கைவிட்டுவிட்டு முகலாய முகாமில் இணைந்தார். சாம்பாஜி திரும்பும் போது ஔரங்கசீப்பால் சிறைப்பிடிக்கப்பட்டு பன்ஹலா கோட்டைக்கு அனுப்பப்பட்டார்.
  • அடுத்தடுத்த போர்கள் சிவாஜியின் உடல்நலத்தைப் பாதித்தன. அவர் தனது 53 ஆவது வயதில் 1680 ஆம் ஆண்டு காலமானார். அவரது மறைவின் போது மேற்குத்தொடர்ச்சி மலைகள், கல்யாண், மற்றும் கோவா இடையேயான கொங்கணப்பகுதி ஆகியன சிவாஜி அரசின் கீழ் இருந்தன. தெற்கில் பெல்காம் தொடங்கி துங்கபத்திரை நதிக்கரை வரை மேற்கு கர்நாடகாவை உள்ளடக்கிய பகுதிகள் அவரது கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. அவரது மரணத்தின் போது வேலூர், செஞ்சி மற்றும் இதர சில மாவட்டங்கள் பற்றிய விஷயத்தில் தீர்வு காணப்படவில்லை.

சிவாஜிக்குப் பிறகு மராத்தியர்

  • சிவாஜி மறைந்து ஓராண்டுகளுக்குப் பிறகு அவரது மூத்த மகன் சாம்பாஜி மராத்திய இராணுவத்திற்கு தலைமை ஏற்று முகலாயப்பகுதிக்குள் நுழைந்து பீராரில் பகதூர்பூரைக் கைப்பற்றி அங்கிருந்த சொத்துக்களைக் கைப்ப்ற்றினார். இதனால் ஆத்திரமடைந்த ஔரங்கசீப் மேவாரைச் சேர்ந்த ரஜபுத்திரர்களுடன் சமரசம் மேற்கொண்டு தக்காணப் பகுதிக்குள் படைகளை வழிநடத்திச் சென்றார்.
  • 1686 இல் பீஜப்பூரும் 1687 இல் கோல்கொண்டானாவும் வெல்லப்பட்டன. தன்னுடன் மல்லுக்கட்டும் தனது மகன் இளவரசர் இரண்டாம் அக்பருக்குப் பாதுகாப்பு கொடுத்ததற்காக சாம்பாஜிக்கு தண்டனைக் கொடுப்பதே ஔரங்கசீப்பின் அடுத்த இலக்காக இருந்தது.1689 இல் முகலாயப் படை சாம்பாஜியைச் சிறைபிடித்துக் கொன்றது.
  • சாம்பாஜியின் மறைவு மராத்தியரை முடக்கிவிடவில்லை.அவரது இளவல் ராஜாராம் செஞ்சிக்கோட்டையிலிருந்து சண்டையைத் தொடங்கினார். இந்த மோதல் பல ஆண்டுகள் நீடித்தது. ராஜாராம் 1700 இல் மரணமடைந்த பிறகு அவரது மனைவி தாராபாய் தலைமையில் போராட்டம் தொடர்ந்தது.
  • கைக்குழந்தை சார்பாக செயல்பட்ட தாராபாய் 50 ஆயிரம் வீரர்கள் அடங்கிய குதிரைப்படை மற்றும் காலாட்படையை ஹைதராபாத் அரசுக்கு எதிராகப் போர்தொடுக்க பணித்தார். அதன் விளைவாகத் தலைநகர் சூறையாடப்பட்டது. இதன் காரணமாக அருகிலிருந்த மசூலிப்பட்டினம் துறைமுகத்தில் வர்த்தகம் பல ஆண்டுகளுக்கு பாதிக்கப்பட்டது. 1707 இல் ஔரங்கசீப் மறைந்த போது மராத்தியர் பல கோட்டை, கொத்தளங்களை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்.
  • ஔரங்கசீப்பின் மரணத்துக்குப் பிறகு சாம்பாஜியின் மகன் சாஹூ விடுதலையாகி மராத்தியரின் அரியணையை அலங்கரித்தார். தாராபாய் இதை எதிர்த்தார். அதன்பின் உள்நாட்டு கலகம் வெடித்தது. அதில் சாஹூ வெற்றி பெற்று 1708 இல் அரியணையில் அமர்ந்தார்.
  • அரியணை ஏறிய பிறகு, பாலாஜி விஸ்வநாத் அவருக்கு ஆதரவாக இருந்தார். அதற்கு நன்றிக்கடனாக பாலாஜி விஸ்வநாத்தைப் பேஷ்வாவாக 1713 இல் நியமித்தார். பின்னர் சாஹூ சதாராவுக்கு ஓய்வெடுக்கச் சென்றார். பூனாவில் இருந்து பேஷ்வா ஆட்சி செய்யத் தொடங்கினார்.
  • கோல்ஹாபூரைத் தலைநகராகக் கொண்டு தாராபாய் ஒரு மாற்று அரசாங்கத்தை நடத்தினார். ராஜாராமின் இரண்டாவது மனைவி ராஜாபாய், அவரது இரண்டாவது மகன் சாம்பாஜி, தாராபாய் மற்றும் அவரது மகன் ஆகியோரை 1714ஆம் ஆண்டு சிறைப்பிடித்தனர். இரண்டாம் சாம்பாஜி கோல்ஹாபூரில் அரியணை ஏறினார்.
  • சாஹூவின் அதிகாரத்தை அவர் ஏற்கவேண்டியிருந்தது. சாஹூ 1749இல் மறைந்த பிறகு ராமராஜா அரியணை ஏறினார். அவர் பேஷ்வாவுக்களுடன் ஒப்பந்தத்தை எட்டியதால் தலைமைப் பொறுப்பை அடைந்தார்.தாராபாய் இதனால் ஏமாற்றம் அடைந்தார்.1761 இல் தாராபாய், 1777 இல் ராமராஜா ஆகியோர் மரணமடைந்தனர்.

  • ராமராஜாவின் தத்துப்புதல்வரான இரண்டாவது சாஹூ1808 இல் மரணமடையும் வரை பெயருக்கு மன்னராக ஆட்சியில் இருந்தார். அவரது மகன் பிரதாப் சிங் அடுத்து அரியணை ஏறினார். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டி, 1839 ஆம் ஆண்டு அவரை பிரிட்டிஷ் அரசு ஆட்சியில் இருந்து நீக்கியது.
  • பிரதாப் சிங் ஒரு சிறைக்கைதியாக 1847 இல் மரணமடைந்தார். அவரது இளவல் ஷாஜி 1839 ஆம் ஆண்டு அரசராக பிரிட்டிஷ் அரசால் பதவியில் அமர்த்தப்பட்டார். தனக்குப்பின் ஆள்வதற்கு ஒருவருமற்ற நிலையில் இரண்டாம் ஷாஜி 1848 இல் மரணமடைந்தார்.

சிவாஜி ஆட்சியில் மராத்திய நிர்வாகம்

மத்திய அரசு

சிவாஜி பெரிய போர்வீரர் மட்டுமல்ல ஒரு சிறந்த நல்ல நிர்வாகியும்கூட. அன்றாட நிர்வாகத்தில் தனக்கு உதவுவதற்காக ஓர் ஆலோசனை சபையை அவர் வைத்திருந்தார். ”அஷ்டபிரதான்” என அழைக்கப்பட்ட இந்தச் சபையில் எட்டு அமைச்சர்கள் இடம் பெற்று இருந்தனர். அந்தச் சபையின் செயல்பாடு ஆலோசனை கூறுவதாகவே அமைந்திருந்தது

  • முக்கிய பிரதான் அல்லது பேஷ்வா அல்லது பிரதமமந்திரி. நாட்டின் பொதுநலன்கள் மற்றும் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவது இவரது முக்கியக்கடமை.
  • அமத்யா அல்லது நிதி அமைச்சர். அரசின் அனைத்துப் பொதுக்கணக்குகளையும் ஆராய்ந்து ஒப்புதல் கையொப்பமிடுவது இவரது வேலை.
  • வாக்கியநாவிஸ் அல்லது மந்திரி, அரசரின் நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை ஆவணங்கள் வடிவில் பராமரித்தார்.
  • சுமந்த் அல்லது டாபிர் அல்லது வெளியுறவுச் செயலர், மன்னருக்குப் போர் மற்றும் அமைதி குறித்த அனைத்து விஷயங்களிலும் ஆலோசனைகளை வழங்கினார். பிற நாடுகளின் தூதர்களையும் பிரதிநிதிகளையும் வரவேற்கும் பொறுப்பையும் ஏற்றிருந்தார்.
  • சச்சிவ் அல்லது சுருநாவில் அல்லது உள்துறை செயலர், அரசரின் அன்றாட கடிதப்போக்குவரத்தை கவனித்து கொண்டதோடு வரைவுகளைத் திருத்தும் அதிகாரமும் கொண்டிருந்தார். பர்னாக்களின் கணக்குகளையும் அவர் சரிபார்த்தார்.
  • பண்டிட் ராவ் அல்லது தனத்தியாக்சா அல்லது சதர் அல்லது முதாசிப் அல்லது மதத்தலைவர் என்பவர் மதம் தொடர்பான சடங்குகளுக்கும் தானதர்மங்களுக்கும் பொறுப்பேற்றிருந்தார். சமூகத்திட்டங்கள் மற்றும் பொது ஒழுக்க நடைமுறைகளை நெறிப்படுத்துவதற்கு அவர் நீதிபதியாக இருந்தார்.
  • நியாயதீஷ் அல்லது தலைமை நீதிபதி குடிமை மற்றும் இராணுவ நீதிக்குப் பொறுப்பேற்றிருந்தார்.
  • சாரிநௌபத் அல்லது தலைமைத் தளபதி இராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு,அமைப்பு ரீதியாக பராமரிப்பது, இராணுவத்தை நிர்வகிப்பது ஆகியவற்றைக் கவனித்துக் கொண்டார்.
  • நியாயதிஷ் மற்றும் பண்டிட்ராவ் தவிர அமைச்சர்கள் அனைவரும் இராணுவத்தை வழிநடத்துவதற்கு தலைமை ஏற்பதோடு, பயணங்களுக்கும் தலைமை ஏற்க வேண்டும். அனைத்து அரசுக் கடிதங்கள், ஆவணங்கள், ஒப்பந்தங்கள் ஆகியன அரசர், பேஷ்வா ஆகியோரின் இலச்சினையையும் மற்றும் தனத்தியாக்சா, நியாயதிக்சா,சேனாதிபதி தவிர்த்த நான்கு அமைச்சர்களின் ஒப்புதலையும் பெற வேண்டும். பல அமைச்சர்களின் கீழ் 18 அரசு துறைகள் இருந்தன.

மாகாண அரசு

  • நிர்வாக வசதிக்காக சிவாஜி தனது அரசை நான்கு மாகாணங்களாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு வைஸ்ராய் எனப்படும் அரசப்பிரதிநிதியை அமர்த்தினார்.
  • மாகாணங்கள் பிராந்த் (pranths) எனப்படும் பல பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டன. ஜாகீர் வழங்கும் நடைமுறை ஒழிக்கப்பட்டு அனைத்து அதிகாரிகளுக்கும் ரொக்கமாகப் பணம் வழங்கப்பட்டது.
  • ஒரு குறிப்பிட்ட பகுதியின் வருவாய் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பும் எந்த ஒரு அதிகாரிக்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும் சொத்துகள் மூலமாகக் கிடைத்த வருவாய் மட்டுமே அவருக்கு உரியது. அதனுடன் தொடர்புடைய மக்களுடன் அந்த அதிகாரிக்கு எந்தத் தொடர்பும் இருந்ததில்லை.
  • எந்தப் பதவியும் பரம்பரையானதில்லை. பிராந்தியத்தின் செயல்பாடுகளுக்கான மையமாகக் கோட்டை அமைந்திருந்தது. பாரம்பரியப்படி கிராமம் என்பது நிர்வாக நடைமுறையின் கடைசி அலகாக இருந்தது.

வருவாய் நிர்வாக அமைப்பு

  • சிவாஜியின் வருவாய் நிர்வாகம் நியாயமானதாக, உற்பத்தியாளர்களுக்குச் சாதகமாக அமைந்திருந்தது. நிலம் அளவீடு செய்யப்பட்டு மதிப்பிடப்பட்டது. மொத்த உற்பத்தியில் அரசின் உரிமையாக 30 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு அது பணமாகவோ பொருளாகவோ செலுத்தப்பட்டது.
  • பின்னர் இந்த வரி 40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. செலுத்த வேண்டிய வரித் தொகை தெளிவாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. பஞ்சகாலத்தில் அரசு பணத்தையும் உணவுதானியங்களையும் உழவர்களுக்கு முன்பணம் அல்லது முன்பொருளாகக் கொடுத்தது. பின்னர் அவற்றை அவர்கள் தவணைகளில் திரும்பச் செலுத்தவேண்டும். விவசாயிகள் கால்நடை வாங்க, விதைப்புக்காக, இன்னபிற தேவைகளுக்காகக் கடன்கள் வழங்கப்பட்டன.

சௌத் மற்றும் சர்தேஷ்முகி

  • அரசு வசூலிக்கும் வருவாய், தேவைகளுக்குப் போதுமானதாக இல்லாத நிலையில் சௌத், சர்தேஷ்முகி என இரண்டு வரிகளைத் தனது சாம்ராஜ்யத்தின் அண்டை பகுதிகளான முகலாய மாகாணங்களிடமிருந்தும் பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கைப்பற்றப்பட்ட பகுதிகளிடமிருந்தும் சிவாஜி வசூலித்தார். மராத்தியர் கைப்பற்றிய மாவட்டத்தின் வருவாயில் நான்கில் ஒரு பங்கு ”சௌத்” என வசூலிக்கப்பட்டது.
  • சர்தேஷ்முக் என்ற தகுதியின் காரணமாக சிவாஜி தனது கூடுதல் வருவாயில் 10%-ஐ சர்தேஷ்முகி என்னும் வரி மூலம் பெற்றார். தேசாய்கள் தேஷ்முக்குகளின் பிரதம தலைமையாக சர்தேஷ்முக் திகழ்ந்தார். மரபு வழியாகத் தனது நாட்டின் சர்தேஷ்முக் ஆக சிவாஜி விளங்கினார்.

இராணுவ அமைப்பு

  • சிவாஜி நிலையான இராணுவத்தைக் கொண்டிருந்தார். ஜாகீர்களை வழங்குவதையும் மரபுவழியாகச் செய்யப்படும் நியமனங்களையும் அவர் ஊக்கப்படுத்தவில்லை. படைவீரர்களுக்கு வீடு வழங்கப்பட்டது. அவர்களுக்கு முறைப்படி ஊதியமும் வழங்கப்பட்டது.
  • காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, ஆயுதப்படை, என இராணுவத்தில் நான்கு பிரிவுகள் இருந்தன. கொரில்லா போர் முறையில் வீரர்கள் சிறந்து விளங்கியபோதிலும் பாரம்பரியப் போர்முறையிலும் அவர்கள் பயிற்சி பெற்றனர்.
  • காலாட்படை ரெஜிமெண்டுகள், பிரிகேடுகள் எனப் பிரிக்கப்பட்டது. ஒன்பது வீரர்களைக் கொண்ட சிறிய படைப்பிரிவுக்கு நாயக் (கார்ப்பரல்) தலைமை வகித்தார். ஒவ்வொரு படைப்பிரிவிலும் 25 குதிரைப் படை வீரர்கள் சார்ஜண்ட் தகுதிக்கு இணையான தகுதியில் ஹவில்தார் செயல்பட்டனர்.
  • பத்து ஜமால்தார்களின் தலைவராக ஒரு ஹஜாரி திகழ்ந்தார். சாரிநௌபத் குதிரைப்படையின் தலைமைத்தளபதி ஆவார். ஒவ்வொரு குதிரைப்படையும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
  • அரசு மூலமாகக் குதிரை வழங்கப்பட்ட படைவீரர்கள் பர்கிர்கள் என்றும், கூலிக்கு வேலை செய்யும் வீரர்கள் ஷைலேதார்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இதுதவிர நீர் கொண்டு செல்லும் குதிரைப்படைவீரர்களும் குதிரைகளுக்கு லாடம் கட்டுபவர்களும் இருந்தனர்.

நீதி

  • நீதி நிர்வாகம் மரபுவழிப்பட்டதாக இருந்தது. நிரந்தரமான நீதிமன்றங்களோ நீதிவழிமுறைகளோ இல்லை. விசாரணைமுறை அனைவருக்கும் பொதுவாக இருந்தது. கிராமங்களில் பஞ்சாயத்து நடைமுறை இருந்தது. கிரிமினல் வழக்குகளை பட்டேல்கள் விசாரித்தனர். சிவில் கிரிமினல் வழக்குகளுக்கான மேல்முறையீடுகளைத் தலைமை நீதிபதி நியாயதிஷ், ஸ்மிருதிகளின் ஆலோசனையோடு விசாரித்தார். ”ஹாஜிர்மஜ்லிம்” இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றமாக இருந்தது.

பேஷ்வா ஆட்சி (1713-1818)

  • பேஷ்வா அல்லது பிரதம மந்திரி என்பவர் சிவாஜியின் அமைச்சரவையான அஷ்டபிரதான் அமைப்பில் முதன்மையானவர். பதினெட்டாம் நூற்றாண்டில் பேஷ்வாக்கள் அதிக அதிகாரங்களைப் பெற்று ஆட்சிபுரிந்தனர். பாலாஜி விஸ்வநாத் என்பவர் ஆற்றல் மிகுந்த முதல் பேஷ்வா ஆவார்.

பேஷ்வா என்ற பாரசீக சொல்லின் பொருள் “முதன்மையான” அல்லது “பிரதம அமைச்சர்” என்பதாகும்.

பாலாஜி விஸ்வநாத்( 1713-1720)

  • உள்நாட்டுப் போரால் சிக்கலிலிருந்த அரசைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர சாஹூவுக்கு பாலாஜி விஸ்வநாத் உதவினார். மேற்குக் கரையோரத்தில் கனோஜி ஆங்கிரே அதிக அதிகாரம் படைத்த கடற்படைத் தளபதியாகத் திகழ்ந்தார்.
  • உள்நாட்டுப்போரின் போது கனோஜி ஆங்கிரே தாராபாய்க்கு ஆதரவு தெரிவித்திருந்தார். ஐரோப்பியரால் ஏற்படும் ஆபத்தைப் பற்றி அவருக்கு எடுத்துரைத்த பேஷ்வா சாஹூவிடம் தனக்குள்ள விசுவாசத்தை உறுதிசெய்தார். ஜாகீர்களை வழங்கும் நடைமுறை மீண்டும் வழக்கத்திற்குக் கொண்டுவரப்பட்டது. பேஷ்வாவின் பதவி மரபுசார்ந்ததாக ஆனது.

முதலாம் பாஜிராவ் (1720-1740)

  • பாலாஜி விஸ்வநாத்துக்குப் பிறகு அவரது மகன் முதலாம் பாஜிராவ் 1720இல் மன்னர் சாஹூவால் பேஷ்வாவாக நியமிக்கப்பட்டார். ஹைதராபாத் நிஜாம், மால்வாவின் ரஜபுத்திர ஆளுநர், குஜராத் ஆளுநர் ஆகியோரை வீழ்த்தி மராத்திய சாம்ராஜ்யத்தின் அதிகாரத்தை பாஜிராவ் மேம்படுத்தினார். முகலாயரின் கட்டுப்பாட்டிலிருந்து பந்தேல்கண்டை அவர் விடுவித்தார்.
  • அதனால் மராத்தியருக்கு அதன் ஆட்சியாளரிடமிருந்து மூன்றில் ஒரு பங்கு பகுதிகள் தாரை வார்க்கப்பட்டது. பேஷ்வாவுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய தலைமைத் தளபதி திரிம்பக்ராவ் 1731இல் பரோடா அருகே தபாய் என்ற இடத்தில் நடந்த போரில் தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.தலைமைத்தளபதியின் பதவியையும் பேஷ்வா ஏற்றுக்கொண்டார்.
  • 1731 எட்டப்பட்ட வார்னா ஒப்பந்தத்தின்படி சாஹூவின் இறையாண்மையை ஏற்குமாறு கோல்ஹாபூரின் சாம்பாஜிக்கு நெருக்குதல் அளிக்கப்பட்டது.
  • தானே, சால்செட், பேசின் ஆகிய பகுதிகள் 1738இல் போர்ச்சுக்கீசியரிடமிருந்து கைப்பற்றப்பட்டு அவர்கள் கொங்கணக் கடற்கரைப் பிரதேசத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.அதே நேரத்தில் மராத்தியருடன் ஆங்கிலேயர் நட்புறவை ஏற்படுத்தியதன் மூலம் தக்காணப்பகுதியில் தடையில்லா வணிகம் செய்யும் உரிமையைப் பெற்றார்கள்

பாலாஜி பாஜி ராவ் (1740 -1761)

  • முதலாம் பாஜிராவ் மறைவுக்குப் பிறகு பாலாஜி பாஜி ராவ் பதவியேற்றார். நானா சாகிப் என்று அழைக்கப்பட்ட அவர் நல்ல நிர்வாகியாகவும் நிதி தொடர்பான விஷயங்களில் வல்லுநராகவும் விளங்கினார்

கர்நாடகத் தாக்குதல்கள்

  • ஆற்காடு நவாபின் மருமகன் சந்தா சாகிப் திருச்சிராப்பள்ளியைக் கைப்பற்றிய பிறகு தஞ்சாவூரை முற்றுகை இடப்போவதாக அச்சுத்தினார்.1739இல் தஞ்சாவூரை ஆண்ட மராத்திய ஆட்சியாளர் சாஹூவிடம் உதவி கோரினார். இந்தக் கோரிக்கையை ஏற்ற பேஷ்வா, தனது மைத்துனர் ரகோஜி போன்ஸ்லேவைத் தஞ்சாவூருக்கு அனுப்பினார்.
  • 1740ஆம் ஆண்டு ரகோஜி போன்ஸ்லே ஆற்காடு நவாப் தோஸ்த் அலியை வீழ்த்திக் கொன்றார். திருச்சிராப்பள்ளி கைப்பற்றப்பட்டு சந்தா சாகிப் சிறையில் அடைக்கப்பட்டார். புந்தேல்கண்ட் மற்றும் வங்காளத்தில் நடந்த இராணுவத் தாக்குதல்களில் பேஷ்வா ஈடுபட்டிருந்ததால் அடுத்து வந்த நவாப் முகமது அலி 1743இல் ஆற்காட்டை எளிதாகக் கைப்பற்றியதோடு திருச்சிராப்பள்ளியையும் மீட்டார்.
  • இதனால் பேஷ்வா தனது உடன் பிறவா சகோதரரான சதாசிவ ராவை கர்டநாடகத்துக்கு அனுப்பினார். மராத்தியரின் அதிகாரம் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டபோதிலும் அவர்களால் திருச்சிராப்பள்ளியை மீட்க முடியவில்லை.

உத்கிர் போர், 1760

  • 1748இல் நிஜாம் ஆசப்ஜாவின் மறைவுக்குப் பிறகு வாரிசுப் போட்டி வெடித்தது. நிஜாமின் மூத்த மகனுக்குப் பேஷ்வா தனது ஆதரவைத் தெரிவித்தார். சதாசிவ ராவ் தலைமையில் பேஷ்வா அனுப்பிய இராணுவம் 1760இல் நடந்த உத்கிர் போரில் எதிரிகளை வீழ்த்தியது.
  • மராத்தியரின் இராணுவ பலத்துக்குக் கடைசி கட்டமாக இந்த வெற்றி அமைந்தது. பீஜப்பூர், ஔரங்கபாத், தௌலதாபாத், அகமது நகர், பர்கான்பூர் ஆகிய பகுதிகளைப் பேஷ்வா கைப்பற்றினார்.
  • ரஹபுனத்தா (1741 முதல் 1748 வரை) ஆறு தாக்குதல் முயற்சிகளுக்குப் பிறகு மராத்தியர் தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தார்கள்.1751இல் வங்காள நவாப் ஒரிஸ்ஸாவைக் கைவிட்டு மராத்தியருக்கு கப்பம் கட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
  • முகலாயரின் ஆட்சியைக் குறிவைத்தே மராத்தியர் செயல்பட்ட காரணத்தால் அவர்கள் 1752இல் தில்லியில் ஆப்கனியரையும் ரோகில்லாக்களையும் விரட்டியடித்தார்கள். மராத்தியரின் உதவியோடு வைஸ்ராயாகப் பொறுப்பேற்ற இமாத் உல் முல்க் அவர்களின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு செயல்படும் பொம்மையானார்.
  • பஞ்சாபைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகு ஆப்கானிஸ்தானில் தூரணி சாம்ராஜ்யத்தை நிறுவிய அகமதுஷா அப்தாலியின் பிரதிநிதியை அங்கிருந்து அகற்றினார்கள். இதனால் அகமது ஷா அப்தலியுடனான பெரிய சண்டையைத் தவிர்க்க இயலவில்லை.
  • வடமேற்கிலிருந்த அதிகார மையங்களிலும் மராத்தியர் தங்கள் கூட்டாளிகளை உருவாக்க முனைந்தனர். ஆனால் மராத்தியரின் முந்தைய செயல்பாடுகளால் வடமேற்கு அவர்களுக்கு எதிரான மனநிலையைக் கொண்டிருந்தது.
  • சீக்கியர், ஜாட் தலைவர்கள், முஸ்லீம்கள் ஆகியோர் மராத்தியரை நம்பத் தயாராக இல்லை.1757இல் நடந்த பிளாசி போரில் சிராஜ் உத் தௌலாவுக்கு மராத்தியர் உதவவில்லை. அதனால் வங்காளத்திலும் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் பேஷ்வா எடுத்த முயற்சிகளின் விளைவாக அவர்களால் மேலும் முன்னேறமுடியாமல் போனது. தில்லி மீதான பேஷ்வாவின் தேவையற்ற ஆர்வம் பல பிரதேச ஆட்சியாளர்களின் .எதிர்ப்பைச் சம்பாதித்தது.1761இல் அகமதுஷா அப்தலி பெரும் இன்னலை பானிப்பட் போர்க்களத்தில் உருவாக்கினார்

மூன்றாவது பானிப்பட் போர்,1761

இந்திய வரலாற்றில் 1761இல் நடந்த மூன்றாவது பானிப்பட் போர் முக்கிய முடிவைக் கொடுத்ததாகும்.இந்தப் போரில் மராத்தியர்க்கும் முகலாயருக்கும் கிடைத்த மிகப் பெரிய தோல்வி இந்தியாவில் ஆங்கிலேய அரசு காலூன்ற வழி வகுத்தது.

சூழ்நிலைகள்

  • பலவீனமான முகலாய அரசு வடமேற்கு எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பை உறுதிசெய்யத் தவறிவிட்டது. இதனால் அப்போது ஆப்கானிஸ்தானை ஆண்ட நாதிர் ஷா போர் தொடுக்க நேரிட்டது. மீண்டும் அளித்த வேண்டுகோள்களுக்குப் பிறகு முகலாய ஆட்சியாளர் முகம்மது ஷா ஆப்கன் நாட்டுக் கிளர்ச்சியாளர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார். இதனால் 1739இல் நாதிர் ஷாவின் தாக்குதல்கள் தொடங்கின. தில்லி சூறையாடப்பட்டது. கோகினூர் வைரம், மதிப்புமிகு மயிலாசனம் ஆகியவற்றை அவர் கைப்பற்றிச் சென்றார்.
  • 1747 இல் நாதிர் ஷா கொல்லப்பட்ட பிறகு அவரது இராணுவ தளபதிகளில் ஒருவரான அகமதுஷா அப்தாலி ஆப்கானிஸ்தானின் ஆட்சியாளராக மாறினார். தனது நிலையை உறுதிப்படுத்திய அவர் பின்னர் இராணுவத் தாக்குதல்களைத் தொடங்கினார். முல்தான் மற்றும் பஞ்சாபைத் அவருக்குத் தாரை வார்த்த முகலாய மாமன்னர் அமைதியை நிலைநிறுத்தினார்.
  • பஞ்சாப் ஆளுநராக முகலாய மாமன்னரால் நியமிக்கப்பட்ட மீர்மன்னு, அகமது ஷா அப்தலியின் முகவர் போலவே செயல்பட முடிந்தது. மீர்மன்னுவின் மரணத்துக்குப் பிறகு அவரது மனைவி தில்லி வசீர் இமாத் உல் முல்க்கின் துணையோடு பஞ்சாப் ஆளுநராக மீர் முனிமை அப்தலியின் ஒப்புதலின்றி நியமித்தார். இதனால் ஆத்திரமடைந்த படையெடுத்து வந்து பஞ்சாபைக் கைப்பற்றினார். மீர் முனிம் தில்லிக்குத் தப்பினார். அவரைத் தொடர்ந்து துரத்திய அப்தலி தில்லியைக் கைப்பற்றினார்.
  • 1757ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தில்லி சூறையாடப்பட்டது. மதுராவும் பிருந்தாவனமும் சிதைக்கப்பட்டன. தில்லியை விட்டு வெளியேறும் முன் அப்தலி தில்லியில் தனது பிரதிநிதியாக மீர் பக்சியை நியமித்தார். அவரது மகன் தைமூர் ஷா லாகூரின் (வைஸ்ராயாக) அரசப்பிரதிநிதியாக ஆக்கப்பட்டார். அப்தலி தில்லியிலிருந்து வெளியேறிய பிறகு மல்ஹர் ராவ் ஹோல்கர், ரகுநாத ராவ் ஆகியோரின் தலைமையின் கீழ் தாக்குதல் நடைபெற்றது,
  • தில்லியில் அப்தலி நியமித்த பிரதிநிதியை அவர்கள் அகற்றினார்கள். பின்னர் தங்களுக்கு பிடித்த ஒருவரை வசீராக நியமித்தனர். 1758இல் சர்கிந்த் மற்றும் லாகூரை அவர்கள் கைப்பற்றினார்கள். ஆப்கன் படைகள் வீழ்த்தப்பட்டு தைமூர் ஷா ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார்.
  • 1759 அக்டோபர் மாதம் அப்தலி பஞ்சாபை மீட்டார். லாகூர், முல்தான், சர்கிந்த் ஆகிய பகுதிகளிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமைக்கு மராத்தியர் தள்ளப்பட்டனர். பஞ்சாபின் நிலைமையைச் சீராக்குவதற்காக மகாதாஜி சிந்தியாவின் சகோதரரான தத்தாஜி சிந்தியாவை பேஷ்வா அங்கு அனுப்பினார். ஆனால் 1760இல் நடந்த போரில் அப்தலி அவரை வீழ்த்திக் கொன்றார். சிகந்தராவில் மல்ஹர் ராவ் ஹோல்கரும் தோல்வி கண்டார். அதன் பிறகு சதாசிவ ராவின் தலைமையில் பெரும்படையைப் பேஷ்வா உருவாக்கினார்.
  • ரோகில்கண்டின் நஜீப் உத் தௌலா மற்றும் அயோத்தியின் ஷூஜா உத் தௌலா ஆகியோருடன் கூட்டணி அமைத்து அப்தலி பதிலடி கொடுத்தார். வடக்கு அதிகார மையங்களில் மராத்தியருக்குக் கூட்டாளிகள் கிடைக்கவில்லை. அயோத்தி நவாப், சீக்கியர், ஜாட் தலைவர்கள் ஆகியோரைப் பகைத்துக்கொண்ட மராத்தியர், ரஜபுத்திரர்களின் நம்பிக்கையயும் இழந்தனர்.
  • பேஷ்வாவின் இளைய புதல்வர் விஸ்வாஸ் ராவின் ஒட்டுமொத்த தலைமையின் கீழ் மராத்திய இராணுவம் இருந்தது. இந்தப் படைகளுக்கு சதாசிவ ராவ் உண்மையான தளபதியாகத் திகழ்ந்தார். வழியில் ஹோல்கர், சிந்தியா, கெய்க்வாட் ஆகியோரை இணைத்துக்கொண்டனர்
  • இந்த நேரத்தில் முகலாய மன்னர் இரண்டாம் ஆலம்கீர் கொல்லப்பட்டார். அவரது இளைய மகன் .இரண்டாம் ஷா ஆலம் தானே முடி சூடிக்கொண்டார். இந்தப் படுகொலையைத் திட்டமிட்ட வசீர் மூன்றாம் ஷாஜகானுக்கு முடி சூட்டினார். இதில் தலையிட்ட சதாசிவ ராவ் மூன்றாம் ஷாஜகானை ஆட்சியிலிருந்து அகற்றிவிட்டு இரண்டாம் ஷா ஆலம் என்பவரை மன்னராக அறிவித்தார்.
  • அப்தலியின் படைகள் மீது தாக்குதல் நடத்துவதற்குப் பதிலாக சதாசிவ ராவ் உணவுப்பற்றாக்குறை ஏற்படும் வரை நீண்ட காலம் அனுமதிகாத்தார். தட்டுப்பாடின்றி உணவு கிடைக்கக்கூடிய பசுமையான ஆற்றிடைப் பகுதிகளில் அப்தலி தனது படைகளை நிறுத்தினார்

பானிப்பட் போரின் விளைவுகள்.

  • 1761 ஜனவரி 14ஆம் தேதி மூன்றாவது பானிப்பட் போர் நடந்தது. மராத்தியரின் இராணுவம் முற்றிலுமாக அழிந்தது. பேஷ்வாவின் மகன் விஸ்வாஸ் ராவ், சதாசிவ ராவ், மற்றும் எண்ணற்ற மராத்திய தளபதிகள் கொல்லப்பட்டனர்.போர்க்களத்தில்28,000 பேரின் உடல்கள் கிடந்தன
  • ஹோல்கர் தப்பியோடினார். சிந்தியாவின் படைகள் அவரைத் துரத்தின. இந்தத் துயர செய்தி கேட்டு பேஷ்வா அதிர்ச்சி அடைந்தார். இதயம் நலிவடைந்த பேஷ்வா 1761 ஜூனில் மரணமடைந்தார்.
  • பானிப்பட் போருக்குப் பிறகு அப்தலி இரண்டாம் ஷா ஆலத்தை தில்லியின் மன்னராக அங்கீகரித்தார். ஆண்டொன்றுக்கு நான்கு மில்லியன் கப்பம் கிடைத்தது. முதலில் கடுமையான அதிர்ச்சியைச் சந்தித்த மராத்தியர் பத்து ஆண்டுகளுக்குள் முகலாய மன்னர் ஷா ஆலத்தின் பாதுகாவலராக உருவாகி வடக்கே தங்களுடைய அதிகாரத்தை நிலைநிறுத்த முயன்றனர்

பேஷ்வா முதலாம் மாதவ் ராவ் (1761-1772) மற்றும் அவரது வழித்தோன்றல்கள்

  • 1761 ஆம் ஆண்டு பாலாஜி பாஜி ராவின் மகன் மாதவ் ராவ், பேஷ்வாவின் இளைய சகோதரர் ரகோபாவின் ஆட்சியில் பேஷ்வா ஆகப் பதவியேற்றார். பானிப்பட் போரில் இழந்த மராத்திய அதிகாரத்தை மீட்க மாதவ் ராவ் முயன்றார்.
  • 1763 ஆம் ஆண்டு ஹைதராபாத் நிஜாமுடன் கடும் சண்டை நடந்தது. மைசூரை ஆண்ட ஹைதர் அலிக்கு எதிராக 1765-1767 க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் அவர் நடத்திய தாக்குதல்கள் வெற்றி பெற்றன. எனினும் தான் இழந்த அனைத்துப் பகுதிகளையும் ஹைதர் அலி விரைவாக மீட்டார். ஆனால் மாதவ் ராவ் 1772 ஆம் ஆண்டு மீண்டும் அவற்றை மீட்டார். அதன் காரணமாக தர்மசங்கடமான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடும் நிர்பந்தம் ஹைதர் அலிக்கு ஏற்பட்டது.
  • ரோகில்லாக்களை (பதான்கள்) வீழ்த்தி ரஜபுத்திர அரசுகளையும் ஜாட் தலைவர்களையும் அடிமைப்படுத்தி வட இந்தியா மீதான தனது கட்டுப்பாட்டை அவர் உறுதி செய்தார். தப்பியோடிய மன்னரான இரண்டாம் ஷா ஆலம் அலகாபாத்தில் ஆங்கிலேயரின் பாதுகாப்பிலிருந்தார்.
  • 1771 இல் அவரை மராத்தியர் மீண்டும் தில்லிக்கு அழைத்து வந்தனர். கோரா, அலகாபாத் ஆகிய இடங்களை மன்னர் ஷா ஆலம் மராத்தியருக்குத் தாரை வார்த்தார். ஆனால் 1772ஆம் ஆண்டு பேஷ்வாவின் தீடீர் மரணம் அவரது சிறப்புமிக்க ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
  • முதலாம் மாதவ் ராவுக்கு வாரிசு இல்லாத காரணத்தால் அவரது இளைய சகோதரர் நாராயண ராவ் 1772இல் பேஷ்வா ஆகப் பொறுப்பேற்றார். ஆனால் அடுத்த ஆண்டே அவர் படுகொலை செய்யப்பட்டார்.
  • அவரது மகன் சவாய் மாதவ் ராவ் (இரண்டாம் மாதவ் ராவ்) பிறந்து 40 நாட்களே ஆன நிலையில் பேஷ்வா ஆக முடிசூடப்பட்டார். இரண்டாம் மாதவ் ராவின் மரணத்துக்குப் பிறகு ரகுநாத் ராவின் மகன் இரண்டாம் பாஜி ராவ் பதவியை ஏற்றார். அவரே கடைசி பேஷ்வா ஆவார்.

ஆங்கிலேய-மராத்தியப் போர்கள்

(அ) முதலாவது ஆங்கிலேய-மராத்தியப் போர்(1775 -1782)

  • நானா பட்னாவிஸ் ஆட்சியில் மாதவ் ராவ் நாராயண் பேஷ்வா சிறுவனாக இருந்ததால் முன்னாள் பேஷ்வாவான முதலாம் மாதவ் ராவின் மாமா ரகுநாத் ராவ் அதிகாரத்தைக் கைப்பற்றினார்.
  • இது குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் வேலையைப் பார்க்க கம்பெனி நிர்வாகத்துக்கு வாய்ப்புக் கொடுத்தது.சால்செட்,பேசின் ஆகிய பகுதிகளை ரகுநாத் ராவ் திரும்பப் பெற பம்பாயிலிருந்த கம்பெனி நிர்வாகம் ஆதரவாக இருந்தது.
  • மகாதஜி சிந்தியாவும் நாக்புரின் போன்ஸ்லேயும் ஆங்கிலேய ஆதரவாளர்களாக ஆனதை அடுத்து மராத்தியர் சால்செட், தானே ஆகிய பகுதிகளை ஆங்கிலேயருக்குத் தாரை வார்க்க நேரிட்டது.
  • சால்பை உடன்படிக்கையின் படி 1782இல் ரகுநாத் ராவ் கட்டாய ஓய்வு பெற வைக்கப்பட்டார். இதனை அடுத்து கம்பெனிக்கும் மராத்தியருக்கும் இடையே சுமார் இருபது ஆண்டுகளுக்கு அமைதி நிலவியது.

(ஆ) இரண்டாம் ஆங்கிலேய-மராத்தியப் போர்(1803 -1806)

  • நானா பட்னாவிஸ் மறைவு அவரது பெரும் சொத்துக்கள் சிதற வழி வகுத்தது. ரகுநாத் ராவ் ஆட்சியிலிருந்து இறக்கப்பட்டார். அந்தச் சூழ்நிலையில் இரண்டாம் பாஜி ராவுக்கு ஆங்கிலேயரின் உதவியை ஏற்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போதைய கவர்னர் ஜெனரலாக இருந்த வெல்லெஸ்லி பிரபு பேஷ்வா மீது துணைப்படைத் திட்டத்தைத் திணித்தார்.
  • 1802 இல் பேசின் ஒப்பந்தம் கையெழுத்தானது. 2.6 லட்சம் வருமானம் ஈட்டக்கூடிய நிலப்பகுதி கொடுக்கப்பட வேண்டும். முன்னணியிலிருந்த மராத்திய அரசுகள் பல இந்த மோசமான ஒப்பந்தத்தை ஒதுக்கித் தள்ளின.
  • அதனால் இரண்டாவது ஆங்கிலேய-மராத்தியப் போர் மூண்டது. மராத்தியர் கடும் எதிர்ப்பைக் காட்டியபோதிலும் மராத்தியத் தலைவர்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டனர். துணைப்படைத் திட்டம் ஏற்கப்பட்டது. ஆங்கிலேயருக்கு தோஆப் (ஆற்றிடைப்பகுதி).அகமதுநகர், புரோச், மலைப்பகுதிகள் ஆகியன முழுமையாக கிடைத்தன.

(இ) மூன்றாம் ஆங்கிலேய-மராத்தியப் போர்(1817 -1819)

  • பரோடாவின் ஆட்சியாளர் (கெய்க்வாட்) முதன்மை அமைச்சர் கங்காதர் சாஸ்திரி பேஷ்வாவின் விருப்பத்துக்கு உகந்த திரிம்பக்ஜியால் கொல்லப்பட்டதை அடுத்து பேஷ்வா இரண்டாம் பாஜி ராவ் ஆங்கிலேயருக்கு எதிராக மாறினார். பூனேயில் வசித்த மவுண்ட் ஸ்டூவர்ட் எல்பின்ஸ்டோனின் வற்புறுத்தலில் திரிம்பக்ஜி சிறையில் அடைக்கப்பட்டார்.
  • எனினும் பேஷ்வாவின் உதவியோடு கொலையாளி சிறையிலிருந்து தப்பி விட்டார். மராத்தியக் கூட்டமைப்பை உருவாக்க ஆங்கிலேயருக்கு எதிராக சிந்தியா, போன்ஸ்லே, ஹோல்கர் ஆகியோருடன் சதித்திட்டம் தீட்டியதாகப் பேஷ்வா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. எனவே 1817ஆம் ஆண்டு பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஆட்சியாளர்களை ஆங்கிலேயர்கள் வற்புறுத்தினார்கள்.

அதன்படி

  • மராத்தியக் கூட்டமைப்பின் தலைமையிலிருந்து பேஷ்வா பதவி விலகினார்.
  • கொங்கணப் பகுதியை ஆங்கிலேயருக்கு வழங்கியதோடு கெயிக்வாரின் சுதந்திரம் அங்கீகரிக்கப்பட்டது.

தனக்கு நேர்ந்த அவமானத்தை பாஜி ராவால் ஏற்கமுடியவில்லை. எனவே பிண்டாரிகளை அடக்குவதில் தீவிரமாக ஆங்கிலேயர்கள் ஈடுபட்டிருந்த வேளையில் பூனா அரசக்குடியிருப்பை இரண்டாம் பாஜி ராவ் தீயிட்டுக் கொளுத்தினார். பூனாவுக்கு உடனடியாக விரைந்த ஜெனரல் ஸ்மித் அதனைக் கைப்பற்றினார். சதாராவுக்குப் பேஷ்வா தப்பியோடிய நிலையில் அதனையும் ஜெனரல் ஸ்மித் கைப்பற்றினார். ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாஜி ராவ் ஓடிக் கொண்டே இருந்தார். அவரது படைகளை அஸ்தா, கிர்க்கி, கோர்கான் ஆகிய பகுதிகளில் ஜெனரல் ஸ்மித் வீழ்த்தினார்.1818ஆம் ஆண்டு பாஜி ராவ் எல்பின்ஸ்டன்னிடம் சரணடைந்தார்.

மூன்றாம் ஆங்கிலேய-மராத்தியப் போரின் விளைவுகள்

  • பேஷ்வா முறையை ரத்து செய்த ஆங்கிலேயர்கள் அனைத்து பேஷ்வா பகுதிகளையும் இணைத்துக் கொண்டனர். உரிமைப்படி ஜாகீர்களைக் கொண்டிருந்தவர்களின் நிலம் அவர்களுக்கே வழங்கப்பட்டது.
  • இரண்டாம் பாஜி ராவ் 1851 இல் மரணமடையும் வரை வருடாந்திர ஓய்வூதியத்தின் கீழ் சிறைக்கைதியாகவே விளங்கினார்.
  • சிவாஜியின் வழித்தோன்றலான பிரதாப் சிங் சதாராவிலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு சிறிய அரசாங்கத்துக்கு அரசாக உருவாக்கப்பட்டார்.
  • முதலாம் பாஜி ராவால் உருவாக்கப்பட்ட போன்ஸ்லே, ஹோல்கர், சிந்தியா ஆகியோரின் பகுதிகளை உள்ளடக்கிய மராத்திய கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.
  • பூனாவின் அரசபிரதிநிதியாக இருந்த மவுண்ட் ஸ்டூவர்ட் எல்பின்ஸ்டோன் பம்பாய் ஆளுநராக ஆனார்.

பேஷ்வாக்களின் கீழ் மராத்திய நிர்வாகம் (1714-1818)

  • பேஷ்வா (முதன்மை அமைச்சர்) என்பவர் சிவாஜியின் அஷ்டபிரதானக் கட்டமைப்பில் ஒருவர். இது வாரிசு முறையில் மரபு வழியாகக் கிடைப்பது அல்ல. அரசரின் அதிகாரமும் பெருமையும் குறைந்த நிலையில் பேஷ்வாக்கள் முக்கியத்துவம் பெற்றனர்.
  • பாலாஜி விஸ்வநாத்தின் புத்திக்கூர்மை (1713-1720) பேஷ்வாவின் பதவியைச் சிறப்புமிக்கதாகவும் மரபுவழி சார்ந்ததாகவும் மாற்றியது. அரசரின் அதிகாரங்களைப் பயன்படுத்தி முழு நிர்வாகத்தையும் பேஷ்வாக்கள் கட்டுப்படுத்தினார்கள். அரசின் மதத் தலைமையாகவும் அவர்கள் அங்கீகரிக்கப்பட்டனர்.

மத்திய தலைமைச் செயலகம்

  • மராத்திய நிர்வாகத்தின் மையம் பூனாவிலிருந்த பேஷ்வா தலைமைச் செயலகமாகும். அனைத்து மாவட்டங்களின் வரவுசெலவுகளையும் இந்த மையம் கவனித்துக் கொண்டது. கிராமம் மற்றும் மாவட்ட அதிகாரிகள் சமர்ப்பித்த கணக்குகளையும் அது ஆராய்ந்து.
  • அனைத்து நிலைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் உரிமைகள், சிவில், இராணுவம் மற்றும் மதத்தலைவர்களின் வரவு செலவுகளும் கையாளப்பட்டன.
  • அனைத்து வருவாய்கள், அனைத்து மான்யங்கள், ஆளுகையின் கீழிருந்த வெளிநாட்டுப் பகுதிகளிலிருந்து வசூலிக்கப்பட்ட தொகை அனைத்தும் தினசரி பதிவேட்டில் பராமரிக்கப்பட்டன.

மாகாணங்கள்

  • பேஷ்வாக்களின் கீழ் மாகாணங்கள் பல்வேறு அளவுகளில் இருந்தன. பெரிய மாகாணங்கள்”சர்-சுபாஷ்தாரர்கள்” என்றழைக்கப்பட்ட மாகாண ஆளுநர்களின் கீழ் இருந்தன.
  • மாகாணங்களின் கீழ் இருந்த மண்டலங்கள் சுபாக்கள் மற்றும் பிராந்துகள் என்று அழைக்கப்பட்டன. மம்லத்தார், காமாவிஸ்தார் ஆகியோர் மாவட்டங்களில் பேஷ்வாக்களின் பிரதிநிதிகளாக விளங்கினார்கள்.
  • ஒவ்வொரு மாவட்டத்தின் நிர்வாகமும் அவர்களின் பொறுப்பில் இருந்தது. தேஷ்முக், தேஷ்பாண்டே ஆகியோர் மாவட்ட அளவில் கணக்குகளைக் கவனித்துக்கொண்ட அதிகாரிகளாகவும், மம்லத்தார்கள், காமாவிஸ்தார்கள் ஆகியோரின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பவர்களாகவும் விளங்கினார்கள். கணக்குகளைச் சரிவரக் கண்காணிக்கும் நடைமுறைச் செயல்பாட்டில் இருந்தது.
  • பொதுப் பணம் தவறாக கையாளப்படுவதைத் தடுக்கும் வகையில் மராத்திய அரசு பெரும் தொகையை ரசத் என்ற பெயரில் முன் பணமாக மம்லத்தார்கள் மற்றும் இதர அதிகாரிகளிடமிருந்து வசூலித்தது. மாவட்டத்தில் முதன்முறையாக நியமனம் பெற்ற உடன் இது வசூலிக்கப்பட்டது. இரண்டாவது பாஜி ராவின் காலகட்டத்தில் இந்த அலுவலுகங்கள் ஏலத்துக்கு விடப்பட்டன. எழுத்தர்களுக்கும் இதர அடிநிலை ஊழியர்களுக்கும் ஆண்டில் 10 அல்லது 11 மாதங்கள் ஊதியம் வழங்கப்பட்டது.

கிராம நிர்வாகம்

  • நிர்வாகத்தின் அடிப்படைப் பிரிவாகக் கிராமம் திகழ்ந்தது. அது தன்னிறைவும் சுயசார்பும் உடையதாக இருந்தது. பட்டேல் தலைமை கிராம அதிகாரியாக விளங்கினார். அவர் அரசின் வருவாயை மத்திய அரசுக்கு அனுப்பும் பொறுப்பை ஏற்றிருந்தார். அவருக்கு அரசு ஊதியம் தரவில்லை. ஆனால் அவரது பதவி மரபுவழி சார்ந்ததாக இருந்தது.
  • பட்டேலுக்கு உதவியாகக் குல்கர்னி அல்லது கணக்காளர் மற்றும் ஆவணக்காப்பாளர் இருந்தார். மதச்சடங்குகளை நடத்த வேண்டிய மரபுவழியாக வந்த கிராம சேவகர்களாக அவர்கள் விளங்கினார்கள். தச்சர், கொல்லர் மற்றும் இதர தொழில் சார்ந்த்தவர்கள் கட்டாய வேலையைச் (பேகர்) செய்தனர்.

நகர நிர்வாகம்

  • நகரங்களிலும் மாநகரங்களிலும் தலைமை அதிகாரி கொத்வால் என்று அழைக்கப்பட்டார்.
  • சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது, விலைவாசியை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது, சிவில் வழக்குகளைத் தீர்த்துவைப்பது, மாதாந்திரக் கணக்குகளை அரசுக்கு அனுப்பிய வைப்பது ஆகியன அவரது முக்கியப் பணிகளாக இருந்தன. நகரக் காவல்துறையின் தலைவராகவும் நீதிபதியாகவும் அவர் செயல்பட்டார்.

வருவாய் ஆதாரங்கள்

  • நில வருவாய் தான் முக்கிய வருவாயாக இருந்தது. சிவாஜியின் ஆட்சியில் பின்பற்றப்ப்ட்ட, விவசாய உற்பத்திப் பொருள்களைப் பகிர்ந்து கொள்ளும் எடைமுறையைப் பேஷ்வாக்கள் கைவிட்டனர்.
  • நில வரியை வசூலிக்க குத்தகை நடைமுறையைப் பின்பற்றினார்கள். அரசுக்கு ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகை என்ற வகையில் நிலம் வழங்கப்பட்டிருந்தது. நிலத்தின் உற்பத்தித் திறன் சார்ந்து வரிகள் நிர்ணயம் செய்யப்பட்டன. காடுகளிலிருந்து வருவாய் கிடைத்தது. கட்டணத்தின் பேரில் மரங்களை வெட்டுவதற்கும்,மேய்ச்சல் வெளிகளைப் பயன்படுத்தவும் உரிமங்கள் வழங்கப்பட்டன. புல், மூங்கில், எரிபொருள், தேன் போன்ற பொருட்களை விற்பதன் மூலமும் வருவாய் கிடைத்தது.
  • சரியான புள்ளி விவரங்கள் அடிப்படையில் கவனத்துடன் வருவாய் மதிப்பீடு செய்யப்பட்டது. பயிர்வகைகள், நீர்ப்பாசன வசதிகள், நிலத்தின் உற்பத்தித் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நிலம் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டது. கிராமத்தினர் பூர்வக்குடிகளாக இருந்தனர். அவர்களின் வசம் காடுகள் இருந்தன. அவர்களிடமிருந்து நிலத்தைப் பிரிப்பது முடியாத செயல். உயர் நிர்வாகத்திடம் அவர்களின் உரிமைகளை எடுத்துரைக்கப் பட்டேல் மூலமாக மட்டுமே முடிந்தது.
  • சௌத் மற்றும் சர்தேஷ்முகி ஆகியன இதர வருவாய் ஆதாரங்களாக விளங்கின. சௌத் என்பது கீழ்க்கண்ட வகையில் பிரிக்கப்பட்டிருந்தது.
  • ஆட்சியாளருக்கு 25 சதவீதம்
  • மராத்திய அதிகாரிகள் மற்றும் படைகளைப் பராமரிப்பதற்காக இராணுவத் தளபதிகளுக்கு 66 சதவீதம்
  • பிறப்பில் பிராமணராகவும் தலைவராகவும் உள்ள பண்டிட் சச்சீவுக்கு 6 சதவீதம்
  • வரி வசூல் செய்வோருக்கு 3 சதவீதம்
  • சுங்கம், கலால் வரி, வனப்பொருட்களின் விற்பனை, ஆகியன மூலமாகவும் வருவாய் கிடைத்தது. அரசுக்குக் காப்புரிமைத் தொகை செலுத்தி அதற்கான உரிமத்தைப் பெற்ற பிறகு பொற்கொல்லர் நாணயங்களை உருவாக்கித் தந்தார்கள்.
  • ஒரு குறிப்பிட்ட தரநிலையைப் பராமரித்தனர். தரநிலை பின்பற்றப்படுவதில் முறைகேடுகள் இருந்ததால் அனைத்துத் தனியார் நாணயத் தொழிற்சாலைகளும் 1760இல் மூடப்பட்டு ஒரே ஒரு மத்திய நாணயத் தொழிற்சாலை உருவாக்கப்பட்டது. வேறு வரிகளும் வசூலிக்கப்பட்டன.
  1. தேஷ்முக்கு, தேஷ்பாண்டே வைத்திருந்த நிலத்தின் மீதான வரி.
  2. கிராம மகர்கள் வைத்திருந்த நிலத்தின் மீதான வரி.
  3. கிணற்றுப்பாசன வசதி கொண்ட நிலத்தின் மீதான வரி
  4. பிராமணர்கள் மற்றும் கிராம அதிகாரிகள் தவிர்த்து மற்றவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வீட்டு வரி
  5. எடைக் கற்கள் மற்றும் அளவைகளைச் சோதிப்பதற்கான வருடாந்திரக் கட்டணம்
  6. விதவைகள் மறுமணத்துக்கான வரி
  7. செம்மறி ஆடு, எருமை மாடு மீதான வரி
  8. மேய்ச்சல் நில வரி
  9. நதிக் கரையோரங்களில் பூசணி விவசாயத்துக்கான வரி
  10. வாரிசு உரிமை வரி
  • குதிரைகளை விற்பதற்கான வரி மற்றும் பல மராத்திய அரசு நிதிச்சிக்கலிலிருந்த போது அனைத்து நில உடைமையாளர்களுக்கும் வரி விதித்தது. வரி செலுத்துபவரின் ஒரு வருட வருமானத்துக்குச் சமமான வரியாக குர்ஜா பட்டி அல்லது தஸ்தி பட்டி வசூலிக்கப்பட்டது நீதி பரிபாலனமும் வருவாயை ஈட்டித்தந்தது.பணப்பத்திரங்களின் மீது 25 சதவீத கட்டணம் வசூலிக்கப்பட்டது. தகாத உறவில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அல்லது சந்தேகத்துக்கு உட்பட்ட நபர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது. சொந்தப் பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீதான தீர்வையிலிருந்து பிராமணர்களுக்கு விலக்கு அளிக்கபட்டது.

காவல்துறை கட்டமைப்பு

  • ‘மகர்கள்’ காவலர்களாக ஒவ்வொரு கிராமத்திலும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் குற்றங்கள் அதிகரித்தபோது ஆயுதங்களைப் பயன்படுத்தி குற்றங்களைக் கட்டுப்படுத்த காலாட்படையை அரசு அனுப்பியது.
  • ஆயுதப்படைகளைப் பராமரிப்பதற்கான செலவுகளை மேற்கொள்வதற்காக குடியிருப்பு வாசிகளுக்குக் கூடுதலாக வீட்டு வரி விதிக்கப்பட்டது. குற்றவாளிகளைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்வதற்காகக் கூடுதலாகக் காவல்துறை அதிகாரிகளை இரண்டாம் பாஜி ராவ் நியமனம் செய்தார்.
  • நகர பகுதிகளில் கொத்வாலுக்கு நீதி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன. விலைகளைக் கண்காணிப்பது, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, சிவில் வழக்குகளை விசாரிப்பது, அரசுக்குத் தொழிலாளர்களை வழங்குவது, காவல்துறை கண்காணிப்பாளர் அல்லது நகர்காவுக்கு தங்களது பணிகளை மேற்கொள்ள கட்டணங்களை விதிப்பது ஆகியன கொத்வாலின் கூடுதல் பணிகளாகும்.

நீதித்துறை

  • நீதித்துறை முறைப்படுத்தப்பட்டதாக இல்லை. முறைப்படுத்திய சட்டம் ஏதும் இல்லை. பின்பற்றப்பட வேண்டிய சட்ட வழிமுறைகளும் இல்லை.
  • சமரசப் பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை தரப்பட்டது. அது தவறினால் அந்த வழக்கு கிராமத்தில் பட்டேல் மற்றும் நகரங்களில் முன்னணி வர்த்தகர்கள் அடங்கிய பஞ்சாயத்தின் முடிவுக்கு விடப்பட்டது.
  • பஞ்சாயத்து என்பது மிகவும் சக்திவாய்ந்த நிறுவனமாகும். மறுவிசாரணையும் நடந்தது. மம்லத்தாரிடம் மேல்முறையீடுகள் செய்யப்பட்டன. கிரிமினல் வழக்குகளில் நீதித்துறை அதிகாரிகளின் படிநிலை இருந்தது.
  • ராஜா, சத்ரபதி தலைமைப் பொறுப்பிலும் அவருக்குக் கீழ் பேஷ்வா, துணை சுபாதார், பட்டேல், மம்லதார் ஆகியோர் இருந்தனர். சாட்டையால் அடிப்பது, துன்புறுத்துவது ஆகியவற்றைப் பயன்படுத்தி குற்றம் ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டது.

இராணுவம்

  • பேஷ்வாக்களின் கீழ் மராத்திய இராணுவ அமைப்பு முகலாய இராணுவ அமைப்பைப் போன்று அமைக்கப்பட்டது. ஆட்சேர்ப்பு, ஊதியம் வழங்குவது, படைவீரர்களின் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களை வழங்குவது, குதிரைப்படைக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் ஆகியன முகலாய இராணுவ அமைப்பைப் போன்று இருந்தது. சிவாஜி பின்பற்றிய இராணுவ அமைப்பின் முக்கிய அம்சங்களைப் பேஷ்வாக்கள் பின்பற்றவில்லை.
  • மராத்திய பகுதிகளிலிருந்து சிவாஜி படைவீரர்களைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் பேஷ்வாக்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அனைத்து வகுப்புகளிலிருந்தும் (பழங்குடியினர் உட்பட) படைவீரர்களைச் சேர்த்தனர்.
  • அராபியர், அபிசீனியர், ரஜபுத்திரர், சீக்கியர் ஆகியோர் பேஷ்வாவின் இராணுவத்தில் இடம்பெற்றிருந்தனர். பேஷ்வாக்களின் இராணுவத்தில் பழமையான தலைவர்களின் படைவீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.
  • எதிரி தலைவர்களுக்குக் கொடுக்கப்பட்ட இடம் அந்த பகுதியிலேயே இருந்ததால் அதிக அளவில் உட்குழப்பங்கள் இருந்தன. இதனால் மராத்திய அரசின் மக்களிடையேயான இறையாண்மை பாதிக்கப்பட்டது.

குதிரைப்படை

  • மராத்திய இராணுவத்தின் முக்கிய பலமாகக் குதிரைப்படை இயல்பாகவே அமைந்தது. ஒவ்வொரு ஜாகீர்தாரும் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் குதிரைப்படை வீரர்களைப் பொதுச் சேர்க்கைக்குக் கொண்டு வரவேண்டும். அவர்கள் வைத்திருந்த குதிரைகளின் தரத்தை வைத்து மூன்று வகைகளாக அவர்கள் பிரிக்கின்றனர்.

காலாட்படையும் ஆயுதப்படையும்

  • குதிரைப்படையில் சேவை புரிய மராத்தியர் அதிக ஆர்வம் காட்டினார்கள். எனவே, காலாட்படைக்கு நாட்டின் இதரப் பகுதிகளிலிருந்து ஆட்சேர்ப்பு செய்யப்பட்டது.
  • மராத்திய வீரர்களுடன் ஒப்பிடுகையில் மராத்திய காலாட்படையிலிருந்த அராபியர், ரோகில்லாக்கள், சீக்கியர், சிந்திக்கள் ஆகியோருக்கு அதிக ஊதியம் வழங்கப்பட்டது. மராத்திய ஆயுதப்படையில் பெரிதும் போர்த்துகீசியரும் இந்தியக் கிறித்தவர்களும் இடம் பெற்றிருந்தனர். பிறகு ஆங்கிலேயர்களும் இடம்பெற்றனர்.

கடற்படை

  • மராத்தியத் துறைமுகங்களைப் பாதுகாக்கும் பொருட்டு மராத்திய கடற்படை உருவாக்கப்பட்டது. கடற்கொள்ளையைக் கட்டுப்படுத்துவது, கப்பல் போக்குவரத்தில் சுங்க வரிகளை வசூலிப்பது ஆகியனவும் மேற்கொள்லப்பட்டன.
  • பாலாஜி விஸ்வநாத் கொங்கணம், கண்டேரி, விஜயதுர்க் ஆகிய இடங்களில் கடற்படைத் தளங்களைக் கட்டினார். கப்பல் கட்டவும் சீர்செய்யவும் வசதிகள் மேம்படுத்தப்பட்டன.

தமிழ்நாட்டில் மராத்தியரின் ஆட்சி

நிறுவப்படுவதற்கான சூழ்நிலைகள்

  • கிருஷ்ணதேவராயர் தனது ஆட்சிக்காலத்தில் (1509 – 1529) நயங்காரா அமைப்பை உருவாக்கினார். இதன்படி தமிழகம் செஞ்சி, தஞ்சாவூர், மதுரை என மூன்று மிகப்பெரிய முறைப்படி துணைத் தலைவர்கள் பாளையக்காரர்களாக நியமிக்கப்பட்டனர்.
  • பாளையங்கள் அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்தன. சோழ சாம்ராஜ்யத்தின் பகுதியாக முதலிலிருந்த தஞ்சாவூர் பிறகு பாண்டிய அரசின் பகுதியாக உருவானது. பின்னர் இது மதுரை சுல்தானியத்தின் பகுதியாக உருவெடுத்தது. கடைசியில் நாயக்கர் கைகளுக்குச் சென்றது.
  • மதுரை நாயக்கர் மற்றும் தஞ்சாவூர் நாயக்கரிடையே நிலவிய பகை கடைசியில் 1673இல் தஞ்சாவூரில் நாயக்க ஆட்சியை முடிவுறச் செய்தது.
  • தஞ்சாவூரில் 1676இல் மராத்திய தளபதி வெங்கேஜி தன்னை அரசராக அறிவித்தார். இவ்வாறாக மராத்தியர் ஆட்சி தஞ்சாவூரில் துவங்கியது.
  • கர்நாடகத்தின் மீது 1677இல் படையெடுத்த சிவாஜி வெங்கோஜியை அகற்றிவிட்டுத் தனது ஒன்றுவிட்ட சகோதரர் சந்தாஜியை அப்பதவியில் அமர்த்தினார். ஆனால் வெங்கோஜி மீண்டும் தஞ்சாவூரைக் கைப்பற்றினார்.
  • அவரது மறைவுக்குப் பிறகு அவரது மகன் ஷாஜி தஞ்சாவூரை ஆண்டார். ஷாஜிக்கு வாரிசு இல்லாததால் அவரது சகோதரர் முதலாம் சரபோஜி அடுத்த ஆட்சியாளராக அமர்ந்தார். 1712 முதல் 1728 வரை 16 ஆண்டுகளுக்கு அவர் ஆட்சியில் இருந்தார். அவருக்குப் பிறகு துக்கோஜி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார்.
  • அவரைத் தொடர்ந்து 1739 முதல் 1763 வரை பிரதாப் சிங் ஆட்சி புரிந்தார். பின்னர் அவரது மகன் துஜாஜி 1787இல் ஆட்சியில் அமர்ந்தார். அந்த ஆண்டில் பத்து வயதான இரண்டாவது சரபோஜியின் மீது ஒப்பந்தம் ஒன்றை திணித்தனர்.
  • அதன் அடிப்படையில் இரண்டாம் சரபோஜி தனது அரசு நிர்வாகத்தை ஆங்கிலேயர் வசம் ஒப்படைக்க நேரிட்டது. இரண்டாம் சரபோஜி தஞ்சாவூரை ஆண்ட மராத்தியரின் போன்ஸ்லே சாம்ராஜ்யத்தின் கடைசி ஆட்சியாளராவார்.

ராஜா தேசிங்கு:

மராத்திய அரசர் ராஜாராம் முகலாயப் படைகளின் அச்சுறுத்தல் காரணமாக ராய்கரிலிருந்து தப்பியோடி செஞ்சியில் அடைக்கலம் புகுந்தார். படைத்தளபதி சுல்பிகர்கான் தலைமையிலும், பின்னர் தாவுத்கான் தலைமையிலும் அவரைத் தொடர்ந்து சென்ற முகலாயப் படைகள் செஞ்சியைக் கைப்பற்றின. செஞ்சிக்கு எதிரான முகலாயத் தாக்குதலில் பன்டேலா ரஜபுத்திர தலைவர் சுவரூப் சிங் செஞ்சிக்கோட்டையின் (கோட்டை இராணுவத்தின் தலைவர்) கிலாதாராக 1700இல் பணியில் அமர்த்தப்பட்டார். அதன் பிறகு சுவரூப் சிங் செஞ்சி முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் கோண்டுவந்தார். 1714இல் அவர் மறைந்த பிறகு அவரது மகன் தேஜ் சிங் (தேசிங்கு) செஞ்சியின் ஆளுநராக பொறுப்பேற்றார். முகலாய மன்னருக்குக் கப்பம் கட்டமறுத்ததை அடுத்து நவாப்-உல்-லா கானின் கோபத்திற்கு ஆளானார். அதனைத் தொடர்ந்து நடந்த சண்டையில் 22 வயதே ஆன ராஜா தேசிங்கு கொல்லப்பட்டார். அவரது இள வயது மனைவி உடன்கட்டை ஏறினார். ராஜா தேசிங்கு நவாபுக்கு எதிராக வெளிப்படுத்திய வீரம் மக்களிடையே கதைப் பாடல்களாக உருவெடுத்தது.

இரண்டாம் சரபோஜி

  • இரண்டாம் சரபோஜி ஒரு தலைசிறந்த அரசர். ஜெர்மானிய சமய பரப்புக் குழுவை சேர்ந்த ஃப்ரெட்ரிக் ஸ்வார்ட்ஸ் மூலமாகக் கல்வி பயின்றபோதிலும், பலரும் எதிர்பார்த்தபடி, அவர் கிறித்தவ மதத்தை தழுவவில்லை.
  • அதேபோல மேற்கத்திய அறிவியல் மற்றும் மருத்துவத்தைக் கையாளும் மருத்துவராக சரபோஜி திக்ழந்தார். எனினும் இந்தியப் பாரம்பரியத்தை சிரத்தையுடன் அவர் பின்பற்றினார். பல ஐரோப்பிய மொழிகளைக் கற்று நிபுணத்துவம் பெற்ற அவர் அனைத்து துறைகளைச் சார்ந்த புத்தகங்களைக் கொண்ட மிகப் பிரபலமான நூலகத்தை வைத்திருந்தார்.

  • ஒரு அச்சகத்தை நிறுவுவது சரபோஜியின் நவீனத் திட்டங்களில் ஒன்றாக இருந்தது. (இதுவே மராத்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளுக்கான முதலாவது அச்சகமாகும்).
  • சரஸ்வதி மஹால் நூலகத்தை மேம்படுத்துவதும் அவரது திட்டங்களில் ஒன்றாக இருந்தது. அவரது அரசவை மூலம் நவீனப் பொதுப் பள்ளிகளை நிறுவி ஆங்கிலம் மற்றும் பிரதேச மொழிகளில் பாடங்கள் இலவசமாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்பதுதான் அவரது அதிநவீனத் திட்டமாக இருந்தது.
  • அவர் காலத்தில் வாழ்ந்த தரங்கம்பாடி சமய பரப்புக்குழுவைச் சேர்ந்த அறிஞர் சி.எஸ்.ஜான் என்பவரைக் கல்வித் துறையின் முன்னோடியாக மன்னர் சரபோஜி கருதினார்.
  • ஜான், கல்வித் துறையில் புதிய பரிசோதனைகளையும் சீர்திருத்தங்களையும் மேற்கொண்டார். பாடத்திட்டம் மற்றும் கல்விப்பயிற்றும் முறைகளில் அவர் நவீன முறைகளையும் மாணவர்களுக்கு உறைவிடப்பள்ளி முறையை அறிமுகம் செய்தார்.
  • 1812இல் ஆங்கிலேய காலனி அரசுக்கு அவர் சமர்ப்பித்த முக்கியத் திட்டத்தில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் இந்திய மாணவர்களுக்கு இலவசப் பள்ளிகளை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
  • கிறித்தவர் அல்லாத மாணவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வி கிடைக்காத சூழல் நிலவிய காலகட்டம் அதுவாகும்.
  • சென்னை ஆளுநர் தாமஸ் மன்றோ 1820ஆம் ஆண்டில் தொடக்கப் பொதுப்பள்ளிகளுக்கான ஒரு திட்டத்தை யோசனையாக கூறினார். ஆனால் கம்பெனி அரசு 1841ஆம் ஆண்டு வரை நவீனப் பள்ளிகளை உள்ளூர் குழந்தைகளுக்காகச் சென்னையில் ஏற்படுத்தவேவில்லை.
  • இதற்கு மாறாக ஜெர்மானிய சமயப்பரப்புக்குழு ஆங்கில வழி மற்றும் வட்டார மொழிப்பள்ளிகள் பலவற்றைத் தெற்கு மாகாணங்களில் 1707 ஆம் ஆண்டு முதல் நடத்தியுள்ளனர்.
  • சரபோஜி, சமயப்பரப்புக்குழு மற்றும் காலனி அரசுக்கு முன்னோடியாக 1803ஆம் ஆண்டிலேயே தஞ்சாயூரில் கிறித்தவர்கள் அல்லாத உள்ளூர் குழந்தைகளின் கல்விக்காக முதலாவது நவீனப் பொதுப்பள்ளிகளை நிறுவினார்.
  • உயர்கல்வி நிறுவனங்களை இந்திய அரசர்கள் நடத்திய போதிலும் அவர்கள் தொடக்கப் பள்ளிகளை நடத்தியதில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
  • ஆதரவற்றவர்கள் மற்றும் ஏழை மாணவர்களுக்கு எனத் தஞ்சாவூர் மற்றும் இதர மாணவர்களுக்கு எனத் தஞ்சாவூர் மற்றும் இதர அண்டை இடங்களில் இலவச தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை நிறுவி நிர்வகித்தது மன்னர் சரபோஜியின் மிக முக்கியமான முன்முயற்சியாகும்.
  • அனைத்து நிலைகளிலான பள்ளிகள், நன்கொடைப் பள்ளிகள், கல்லூரிகள், சமஸ்கிருத உயர் கல்விக்கான பாடசாலைகள் ஆகியன அவற்றில் அடங்கும். அரசவை மேன்மக்கள், வேத அறிஞர்கள், ஆதரவற்றோர், ஏழைகள் ஆக அனைவருக்கும் இந்தப் பள்ளிகள் சேவை புரிந்தன.
  • புதிய அல்லது நவீன கல்வி முறைக்காக ‘நவவித்யா’ முறையை அரசவை நடத்திய இந்தப் பள்ளிகளில் அறிமுகம் செய்தது மற்றொரு முக்கிய முன்முயற்சியாகும்.
  • 1803ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட முக்தாம்பாள் சத்திரம் அரசரின் விருப்பமான அன்ன சத்திரமாகும். அங்கு 1822 ஆம் ஆண்டில் இரண்டு வகுப்பறைகளில் காலையும் மாலையும் 15 ஆசிரியர்கள் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மொத்தன் 464 மாணவர்களுக்குக் கற்பித்தனர்.
  • மதப்பரப்பாளர்கள் கண்ணந்தன்குடியில் நடத்திய ஏழைக் கிறித்தவ மாணவர்களுக்கான

பள்ளியையும் சரபோஜி ஆதரித்தார். அவரது வள்ளல் தன்மைக்குச் சான்றாக ஆதரவற்றோருக்கான பள்ளி விளங்கியது.

  • மனிதர்களுக்காகவும் விலங்குகளுக்காகவும் மூலிகை மருந்துகளைத் தயாரித்த ‘தன்வந்திஅரி மஹால்’ என்ற ஆராய்ச்சி நிறுவனத்தை சரபோஜி நிறுவினார்.
  • நோயாளிகளின் ஆவணங்களைப் பராமரிக்கும் முறையும் அறிமுகம் செய்யப்பட்டது. நவீன மருத்துவர்கள், ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவம் ஆகியவற்றின் மருத்துவர்கள் மருத்துவச் சிகிச்சைக்கான மருந்துகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
  • 18 தொகுதிகள் அடங்கிய ஆராய்ச்சி புத்தகத்தையும் சரபோஜி மன்னர் உருவாக்கினார். பிரத்யேகமான கை ஓவியங்கள் மூலமாக முக்கிய மூலிகைகள் பற்றியத் தகவல்களை சரபோஜி பட்டியலிட்டுப் பாதுகாத்தார்.
  • நவீனக் கல்வி முறை தொடர்பான சரபோஜியின் புதிய முன்முயற்சிகள் தஞ்சாவூர் மேன்மக்களுக்கு அப்போதைய காலனி ஆதிக்கச் சமூக மற்றும் பொருளாதார முறைமைக்குள் நுழையவும் பயன்பெறவும் வழி செய்தன.
  • அரசவை அதிகாரிகள் பெரும்பாலும் பிராமணர்களுக்கு ஐரோப்பிய பயன்பாட்டி அறிவு, தொழில்நுட்பங்கள், கலைகள், ஆகியவற்றில் பயிற்சி கிடைத்து அவர்கள் காலனி கால நவீனத்துவத்தின் முன்னணி முகவர்களாக மாறினார்கள்.
  • ஆங்கிலக் கல்வி கற்ற துபாஷிகள் , எழுத்தர்கள், ஐரோப்பிய மற்றும் இந்திய அரசவைகளுக்கு இடையே மத்தியஸ்தம் செய்த இந்து மற்றும் கிறித்தவ மொழிபெயர்ப்பாளர்கள் பல பொறுப்புக்களை ஏற்க முடிந்தது.
  • சரபோஜி அரசவையின் இரண்டு பண்டிதர்கள் கிழக்கிந்தியக் கம்பெனி நடத்திய புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியில் மொழிபெயர்ப்பு மற்றும் அச்சுக் கலாச்சாரத்தின் தலைவர்களாகத் திகழ்ந்தார்கள்.
  • சரபோஜி, ஜான் ஆகியோரின் வாழ்வியல் திட்டங்கள் காலனியாதிக்கத் தமிழகத்தில் ஏற்பட்ட மாற்றங்களின் வரலாற்றில் தனிநபர்களும், டேனிய-தமிழ் மீன்பிடி கிராமங்களைப் போண்ற இடங்களும், மராத்திய –தமிழ் இளவரசர் ஆட்சிப்பகுதியும் வகித்த பாத்திரத்தை படம்பிடித்துக் காட்டுகின்றன.
  • பாரம்பரிய இந்தியக் கலைகளான நடனம் மற்றும் இசையை ஆதரிப்பதில் பெரும் கொடையாளராக சரபோஜி விளங்கினார். குமாரசம்பவ சம்பு, தேவேந்திர குறவஞ்சி, முத்ரராக்சஸ்யா ஆகிய புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார்.
  • கர்நாடக இசையில் மேற்கத்திய இசைக்கருவிகளான கிளாரினட் , வயலின் ஆகிய கருவிகளை அவர் அறிமுகம் செய்தார். தஞ்சாவூர் ஓவியத்தைப் பிரபலப்படுத்தும் பணிகளை அவர் செய்தார். ஓவியம் வரைதல், தோட்டமிடுவது, நாணயங்களைச் சேகரிப்பது, தற்காப்புக் கலைகள், ரதப் போட்டிகள், வேட்டை, எருதுச் சண்டை ஆகியவற்றைப் பிரபலப்படுத்துவதில் சரபோஜி ஆர்வம் கொண்டிருந்தார். தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் தமிழ்நாட்டின் முதலாவது வன உயிரியல் பூங்காவை அவர் அமைத்தார்.
  • 1832இல் மார்ச் 7ஆம் தேதி ஏறக்குறைய 40 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு சரபோஜி மரணமடைந்தார். அவரது அரசு சார்ந்த அனைத்து பகுதிகளிலும் அவரது மறைவு குறித்து துக்கம் அனுசரிக்கப்பட்டது.
  • அவரது இறுதி யாத்திரையில் 90 ஆயிரம் பேருக்கும் அதிகமாக கலந்துகொண்டனர். அவரது ஈறுதி ஊர்வலத்தில் சமயப்பரப்பாளரான அருட்தந்தை பிஷப் ஹீபர் இவ்வாறு கூறினார்.

“முடிசூடிய பல தலைவர்களை நான் பார்த்து இருக்கிறேன். ஆனால் இவர் தவிர எவரிடமும் அது இளவரசத் தன்மையோடு அலங்கரித்ததில்லை”.

சரஸ்வதி மஹால் நூலகம் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டு இரண்டாம் சரபோஜி மன்னரால் செறிவூட்டப்பட்டது. மராத்திய அரசவையின் அன்றாட அலுவல்கள், 18ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு-மராத்தியர் இடையே நடந்த கடிதப்போக்குவரத்து ஆகிய மோடி எழுத்துவடிவ ஆவணங்களாக அமைந்துள்ளன. மராத்தி மொழியில் அமைந்த ஆவணங்கள் மோடி எழுத்து வடிவில் எழுதப்பட்டன.

  • ஆளுநர் மன்றோவின் கல்விக் கணக்கெடுப்புக்காக உருவாக்கப்பட்ட 1823ஆம் ஆண்டின் அறிக்கைப்படி தஞ்சாவூர் முழுவதும் இருந்த 44 பள்ளிகளில் அரசவை மூலமாக 21 இலவச பள்ளிகள் நடத்தப்பட்டன. சமயப் பரப்பாளர்கள் 19 பள்ளிகளையும், ஆலய நிர்வாகம் ஒரு புள்ளியையும் நடத்தின. ஆசிரியர்கள் தாங்களாகவே இலவசமாக மூன்று பள்ளிகளை நடத்தினார்கள். மிக முக்கியமான புனிதத்தல வழித்தடங்களில் அமைந்திருந்த பதிமூன்று சத்திரங்கள் மூலமாக யாத்ரிகர்களுக்கும் ஏழைகளுக்கும் உணவும் உறைவிட வசதியும் செய்து கொடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!