Samacheer NotesTnpsc

அரசாங்கமும் வரிகளும் Notes 10th Social Science Lesson 18 Notes in Tamil

10th Social Science Lesson 18 Notes in Tamil

18. அரசாங்கமும் வரிகளும்

அறிமுகம்

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றம் அடையச் செய்வதற்கு அரசாங்கத்தால் வரி விதிக்கப்படுகிறது. அரசின் வருமானம் நேர்முக மற்றும் மறைமுக வரிகளைச் சார்ந்து உள்ளது. நேர்முக வரி தனி நபரின் வருமானத்திலும் மற்றும் மறைமுக வரிகளைச் சார்ந்து உள்ளது. நேர்முக வரி தனி நபரின் வருமானத்திலும் மற்றும் மறைமுக வரி பண்டங்கள் மற்றும் பணிகள் மீதும் விதிக்கப்படுகின்றன. இதன் மூலம் அரசாங்கம் அதன் “நிதி ஆதாரங்களை” திரட்டுகிறது.

வளர்ச்சிக் கொள்கைகளில் அரசாங்கத்தின் பங்கு

இந்தியாவில் மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி ஆகிய மூன்று நிலையிலான அரசாங்கங்கள் மக்கள் மற்றும் சமூகத்தின் நலனுக்காக பல்வேறு செயல்பாடுகளைச் செய்து வருகின்றன. இவற்றின் பணிகள் எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

  1. பாதுகாப்பு (அ) இராணுவம்

எதிரிகளிடமிருந்து மக்களைப் பாதுகாப்பது இராணுவத்தின் அத்தியாவசியப் பணியாகக் கருதப்படுகிறது. பாதுகாப்பு முறைகளில் தரைப்படை, கப்பல்படை மற்றும் விமானப் படை ஆகிய மூன்று சேவைகள் உள்ளது. நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். பாதுகாப்புப் படைகளை உருவாக்குவதற்கும், பராமரிப்பதற்கும் மத்திய அரசாங்கமே பொறுப்பானதாகும்.

  1. அயல்நாட்டுக் கொள்கை

இன்றைய உலகில், நாம் அனைத்து உலக நாடுகளுடனும் நட்பான உறவைப் பராமரித்தல் அவசியமானதாகும். உலகஅமைதிக்காக இந்தியா உறுதி ஏற்றுள்ளது. ஏற்றூமதி மற்றும் இறக்குமதி செய்வதன் மூலமும், மூலதனம் மற்றும் உழைப்பைப் பரிமாற்றம் செய்வதன் மூலமும் நாம் நல்ல பொருளாதார உறவினை பராமரிக்க முடியும். இந்த சேவையை மத்திய அரசாங்கம் வழங்குகிறது.

  1. அவ்வப்போது தேர்தல்களை நடத்துதல்

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. நாம் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்குப் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கின்றோம். மத்திய அரசு சட்டங்களையும், நிர்வாக அமைப்புகளையும் உருவாக்கி இந்த இரண்டு சட்ட அமைப்புகளுக்கும் தேர்தல்களை நடத்துகிறது. இதேபோல், மாநில அரசுகள் உள்ளாட்சி மன்றங்களுக்குத் தேர்தலை மாநிலத்திற்குள் நடத்துகிறது.

  1. சட்டம் மற்றும் ஒழுங்கு

மத்திய மற்றும் மாநில அரசுகள் நமது உரிமைகள், சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும் , நமது பொருளாதாரம் மற்றும் சமூகத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் ஏராளமான சட்டங்களை இயற்றுகின்றன. மத்தியஅரசு தேசிய, மாநில மற்றும் கீழ் நிலைகளில் உள்ள நீதிமன்றங்களை உள்ளடக்கிய ஒரு துடிப்பான நீதி அமைப்பின்மூலம் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக அமைத்துள்ளது. மேலும், அந்தந்த மாநிலங்களில் காவல் துறையை நிர்வகிக்கும் பொறுப்பை மாநில அரசுகள் ஏற்றுக் கொள்கின்றன.

  1. பொது நிர்வாகம் மற்றும் பொதுப்பண்டங்களை வழங்குதல்

அரசாங்கம் பொதுவாக பல்வேறு துறைகள் மூலம் பொருளாதாரத்தையும் சமூகத்தையும் நிர்வகிக்கிறது. வருவாய்த்துறை, பள்ளிகள், மருத்துவமனைகள், கிராம வளர்ச்சி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி போன்றவைகள் எடுத்துக்காட்டுகளாகும். மத்திய மற்றும் மாநில அரசாங்கத் துறைகளின் அதிகாரவரம்புகளின் பட்டியல் பொதுத் தளத்தில் கிடைக்கிறது. உள்ளூர் அரசாங்கங்கள், உள்ளூர் சாலைகள், வடிகால், குடிநீர், குப்பை சேகரிப்பு மற்றும் அகற்றுதல் போன்ற பொதுப்பண்டங்களை வழங்குகின்றன.

  1. வருமான மறுபகிர்வு மற்றும் வறுமை ஒழிப்பு

முன்னதாக குறிப்பிடப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க அரசாங்கங்கள் பல்வேறான வரிகளை வசூலிக்கின்றன. அதிக வருமானம் உடையவர்கள் ஏழைகளை விட அரசாங்கத்திர்கு அதிக வரி செலுத்தக்கூடிய வகையில் வரி வசூலிக்கப்படுகிறது. நில அடிப்படைத் தேவைகளான உணவு, தங்குமிடம், உடை, கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் மாத வருமானம் போன்றவற்றினை ஏழைகளுக்கு வழங்குவதற்காக அரசாங்கம் பணத்தைச் செலவிடுகின்றது. மேலும், அரசு வரிகளை வசூலிப்பது மற்றும் ஏழைகளுக்கான செலவினைச் செய்வது, அரசு எவ்வாறு வருமானத்தை மறுபகிர்வு செய்கிறது மற்றும் வறுமையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் போன்றவற்றினை செயல்படுத்துகிறது.

  1. பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்துதல்

மத்திய அரசு, பணத்தின் அளிப்பு, வட்டி வீதம், பணவீக்கம் மற்றும் அந்நிய செலாவணி ஆகியவற்றை இந்திய மைய வங்கி மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் விகிதங்களில் அதிக ஏற்ற இறக்கங்களை களைவதே மையவங்கியின் முக்கி நோக்கமாகும். இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனைவாரியம் (SEBI) மற்றும் இந்திய போட்டி ஆணையம் (CCI) போன்ற பல்வேறு முகவர்கள் மூலமாகவும் மத்திய அரசு பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து அரசாங்கங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மலிவுவிலையில் அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளை மக்களுக்கு வழங்குகின்றன.

வரி

  • “வரி” என்ற சொல் “வரிவிதிப்பு” என்பதிலிருந்து உருவானது. இதன் பொருள் மதிப்பீடு என்பதாகும்.
  • வரி விதிப்பு என்பது அரசாங்கம் தனது செலவினங்களுக்காகப் பொது மக்களிடமும், பெரு நிறுவனங்களிடமும் வரிகளை விதித்து வருவாயை உருவாக்கும் ஒரு வழிமுறையாகும்.
  • அரசு இயந்திரங்களின் செயல்பாட்டிற்காக வரியின் மூலம் நிதி திரட்டுவது வரிவிதிப்பின் முக்கிய நோக்கமாகும். வரிவிதிப்பு முறை “நல அரசு” என்ற கருத்தை மையமாகக் கொண்டு செயல்படுகிறது.
  • தற்கால அரசாங்கங்கள் அதன் எல்லைக்குட்பட்ட சட்டம் மற்றும் ஒழுங்குக்கு மட்டுமே கட்டுப்படுவதில்லை. சமீபத்திய ஆண்டுகளில் பொது நிதிக்கு (வரி) முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பெருமளவில் வருவாய் அதிகரித்துள்ளது.
  • வரிகள் என்பது எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி நேரடியாக அரசாங்கத்திற்கு செலுத்துகின்ற கட்டாய கட்டணமேயாகும்.
  • பேராசிரியர் செலிக்மேன் கருத்துப்படி, “வரி என்பது ஒரு குடிமகன் அரசுக்கு கட்டாயமாக செலுத்தும் செலுத்துகையாகும். அரசிடமிருந்து எந்தவித நேரடி நன்மையும் எதிர்பார்க்காமல் கட்டாயமாகச் செலுத்த வேண்டியதே வரி” என வரையறை கூறுகிறார்.

வரிகள் ஏன் விதிக்கப்படுகிறது?

  • வரி விதிப்பு என்பது அரசுக்கு நிதியளிக்க வருவாயை உயர்த்துவதையோ அல்லது தேவையை பாதிக்கும் பொருட்டு விலைகளை மாற்றுவதையோ நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • வரலாற்று காலத்திலிருந்தே நாடுகளும் அதற்கு இணையாக செயல்படும் அரசுகளும் வரிவிதிப்பின் மூலம் பெற்ற நிதியிலிருந்தே பல செயல்களை நிறைவெஏற்றியிருக்கின்றது. அவைகளில் சில பொருளாதார உள்கட்டமைப்புச் செலவுகள், (போக்குவரத்து, துப்புரவு, பொது பாதுகாப்பு, கல்வி, உடல்நலம்) இராணுவம், அறிவியல் ஆராய்ச்சி, கலாச்சாரம், கலைகள், பொதுப்பணிகள், பொதுக் காப்பீடுகள் மற்றும் அரசாங்க செயல்பாடுகள் போன்றவைகளாகும்.
  • வரிகளை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் திரனை ‘நிதித் திறன்’ என்று கூறப்படுகிறது.
  • செலவு, வரி வருவாயை விட அதிகமாக இருக்கும்போது ஒரு அரசாங்கம் கடனை திரட்டுகிறது. வரிகளின் ஒரு பகுதி கடந்த காலப் பணிகளுக்கான கடன்களுக்குப் பயன்படுத்தப்படலாம்.
  • அரசாங்கம் மக்களின் நலனிற்கும் பொது சேவைகளுக்கும் வரிகளைப் பயன்படுத்தினர். இந்த சேவைகளில் கல்வி முறைகள், முதியோருக்கான ஓய்வூதியம், வேலையின்மை சலுகைகள் மற்றும் பொது போக்குவரத்து ஆகியவை அடங்கும். ஆற்றல், நீர் மற்றும் கழிவு மேலாண்மை ஆகியவை மக்களுக்கான பயன்பாடுகளாகும்.
  • பணத்தை உருவாக்கும் கோட்பாட்டின் ஆதரவாளர்களின் கூற்றுப்படி, கேள்விக்குரிய அரசாங்கத்தால் ஒப்புறுதியளிக்கப்பட்ட பணத்தை வழங்க முடியும்வரை அரசாங்க வருவாய்க்கு வரி தேவையில்லை.
  • வரி விதிப்பின் நோக்கம், நாணத்தின் நிலைத்த தன்மையைப் பேணுதல், செல்வத்தைப் பகிர்வது தொடர்பான பொதுக் கொள்கையை வெளிப்படுத்துவது, சில தொழில்கள் அல்லது நெடுஞ்சாலைகள் அல்லது சமூகப் பாதுகாப்பு போன்ற சில பயன்களின் செலவுகளைத் தனிமைப்படுத்துதல் போன்றதாகும்.
  • இந்தியாவில் வரி விதிப்பின் வேர்கள் மனு ஸ்மிருதி மற்றும் அர்த்தசாஸ்திர காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டது. தற்கால இந்திய வரி முறையானது பண்டைய கால வரி முறையை அடிப்படையாகக் கொண்டது.

வரி அமைப்பு

ஒவ்வொரு வகையான வரியும் சில நன்மைகள் மற்றும் தீமைகளைப் பெற்றுள்ளன. எனவே நாம் கொண்டுள்ள வரி அமைப்பு, பல்வேறு வகையான வரிகளின் தொகுப்பாகும். அனைத்து நாடுகளும் பல விதமான வரிகளைப் பயன்படுத்துகின்றன. வரிமுறையை வடிவமைக்கும் போது எவ்வாறு பின்பற்றப்பட வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருதும் வரி முறைகளில் சில பண்புகள் உள்ளன. இந்த பண்புகள் வரி விதிப்பு கொள்கைகள் என அழைக்கப்படுகின்றன. ஆடம் ஸ்மித் முதல் பல பொருளாதார வல்லுநர்கள் வரி விதிப்புக் கொள்கைகளைக் கொடுத்துள்ளனர். அவைகளில் பொதுவான வகைகளை இங்கு நினைவு கூறுவது முக்கியமானதாகும்.

1. சமத்துவ விதி

வரி ஒரு கட்டாயக் கட்டணம் என்பதால், வரி முறையை வடிவமைப்பதில் சமத்துவம் என்பது முதன்மை என்பதை அனைத்து பொருளாதார வல்லுநர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். சமத்துவ கோட்பாடு கூறுகையில். பணக்காரர்கள் ஏழைகளை விட அரசாங்கத்திற்கு அதிக வரி வருவாயை செலுத்தவேண்டும். ஏனென்றால் ஏழைகளை விட பணக்காரர்களுக்கு அதிக வரி செலுத்தும் திறன் உள்ளது. மேலும் வரி செலுத்திய பிறகு பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான பொருளாதார வேறுபாடு குறைக்கப்படுவதை நாம் காண்போம். எந்த வரி சமத்துவ வரிக்கு ஒத்துப்போகிறது என்பதை அறிய நீங்கள் ஒரு பயிற்சியை செய்யலாம்.

2. உறுதி விதி

ஒவ்வொரு வரி செலுத்துவோரும் ஒரு வருடத்தில் எவ்வளவு வரித்தொகையை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என்பதைக் கணக்கிட ஒவ்வொரு அரசாங்கமும் வரிமுறையை முன் கூட்டியே அறிவிக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அரசாங்கம் வரி முறையை அடிக்கடி மாற்றக்கூடாது மற்றும் வரி அமைப்பில் திடீர் மாற்றங்களை அறிவிக்கக் கூடாது.

3. சிக்கன மற்றும் வசதி விதி

இந்த இரண்டு விதிகளும் தொடர்புடையவை. வரி செலுத்துவோர் என்ற வகையில், நமது கணக்குகளைச் செயலாக்குவதற்கும் வரி செலுத்துவதற்கும் ஒரு செலவு செய்யப்படுகிறது. எடுத்துக்காட்டாக கணக்காளர்கள் மற்றும் தணிக்கையாளர்களுக்கு சம்பளம் வழங்குதலாகும். இதே போல் அரசாங்கம் தனக்கு வரி செலுத்துவோருக்கு ஊதியத்தினை வழங்கி பெரிய நிறுவனங்களையும் நடத்துகிறது. வரி எளிமையானதாக இருந்தால், வரி வசூலிப்பதற்கான செலவு (வரி செலுத்துவோர் செலவு + வரி வசூலிப்போர் செலவு) மிகக் குறைவாக இருக்கும். மேலும் , ஒரு நபருக்கு வரி செலுத்தப் போதுமான பணம் கிடைக்கும் நேரத்தில் வரி வசூலிக்கப்பட வேண்டும். இது வசதிக்கான வரி என்று அழைக்கப்படுகிறது. ஒரு வசதியான வரி, வரி வசூலிக்கும் செலவை குறைக்கிறது.

4. உற்பத்தித் திறன் மற்றும் நெகிழ்ச்சி வரி

அரசாங்கம் போதுமான வரி வருவாயைப் பெறக்கூடிய வரிகளை தேர்வு செய்ய வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது நிறைய வரிகளுக்குப் பதிலாக அதிக வரி அதிக வருவாயைப் பெறக் கூடிய சில வரிகளைத் தேர்வு செய்ய வேண்டும். மேலும் அவை ஒவ்வொன்றும் ஒரு சிறிய வரி வருவாயைப் பெறுகின்றன. இது உற்பத்தித் திறன் வரியாகும். மக்கள் தங்கள் வருமானத்திலிருந்து வரி செலுத்துகிறார்கள். எனவே, மக்கள் வருமானம் அதிகரித்தால் தானாகவே அதிக வரி வருவாயை செலுத்தும் வகையில் வரி அமைப்பு வடிவமைக்கப்பட வேண்டும். இது நெகிழ்ச்சி வரி எனப்படுகிறது. ஒரு பரந்த பொருளில், பொருளாதாரம் வளர்ந்து வருவதால் மக்களுக்கு அதிக வருமானம் கிடைப்பதன் விளைவாக வரி முறை நெகிழ்ச்சியாக இருந்தால் அரசாங்கத்திற்கு அதிக வரி வருவாயையும் செலுத்துவார்கள்.

வரிகளின் வகைகள்

நேர்முக வரிகள்

நேர்முக வரி என்பது ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்தின் மீது நேரடியாக விதிக்கப்படுவதாகும். இவ்வரியை மற்றவர் மீது புரட்டிவிட முடியாது. பேராசிரியர் ஜே.எஸ்.மில்லின் கருத்துப்படி, நேர்முக வரி என்பது “யார் மீது வரி விதிக்கப்பட்டதோ அவரே அவ்வரியை செலுத்துவதாகும். வரி செலுத்துபவரே வரிச்சுமையை ஏற்க வேண்டும்”. சில நேர்முக வரிகள்: வரிமான வரி, சொத்து வரி மற்றும் நிறுவன வரி ஆகியனவாகும்.

வருமான வரி

வருமான வரி இந்தியாவில் விதிக்கப்படுகின்ர நேர்முக வரி முறையில் மிக முக்கியமான வரியாகும். இவ்வரி தனிநபர் பெறுகின்ற வருமானத்தின் அடிப்படையில் விதிக்கப்படுகின்றது. இவ்வரி வசூலிக்கப்படும் விகிதம் வருமான அளவைப் பொறுத்து மாறுபடக்கூடியதாகும்.

  • இந்தியாவில் முதன் முதலாக வருமானவரி 1860ஆம் ஆண்டு சர் ஜேம்ஸ் வில்சன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. 1857ஆம் ஆண்டு கலகத்தின் மூலம் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட அரசாங்கத்தின் மூலம் போடப்பட்ட ஆணையே வரி விதிப்பாகும்.

  • இந்தியாவில் அரசாங்கத்தினால் மூன்று அடுக்குகள் வரி வசூலிக்கப்படுகிறது. மத்திய அரசால் எளிதில் வசூலிக்கக்கூடிய வரிகள் உள்ளன. இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து நேரடி வரிகளும் மத்திய அரசால் வசூலிக்கப்படுகின்றன. பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் வசூலிக்கப்படுகிறது. சொத்துக்களான வரி உள்ளூர் அரசாங்கங்களால் வசூலிக்கப்படுகின்றன.
  • இந்தியாவில் நேரடி வரிகளை விட மறைமுக வரி மூலம் அதிக வரி வருவாயை வசூலிக்கின்றோம். இந்தியாவின் முக்கிய மறைமுக வரி சுங்க வரி மற்றும் GST ஆகும். இந்த இரண்டு வரிகளும் வெவ்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளைக் கொண்டுள்ளன.
  • பணக்கார நுகர்வோர் ஏழைகளை விட அதிக வரி செலுத்தும் வகையில் அரசாங்கங்கள் வடிவமைக்க முயற்சிக்கின்றன. இருப்பினும் ஏழைகள் இன்னும் இந்த வரிகளின் மூலம் அதிக பணம் செலுத்துகிறார்கள். எனவே, நாம் மறைமுக வரிகளைக் குறைத்து நேரடி வரி மூலம் வசூலை அதிகரிக்க வேண்டும் என்று பலர் வாதிடுகின்றனர்.
  • இந்திய வரிமுறை வரிவிதிப்புக்கான அனைத்து நியதிகளையும் பின்பற்றுகிறது. ஆனால் பெரும்பாலும் சமத்துவக் கொள்கை சமரசம் செய்யப்படுவதாகவும் ஒரு சிலரின் நன்மைக்காக வரி முறையுடன் நாம் சரி செய்யும் போது உற்பத்தித்திறன் இழக்கப்படும் என்றும் வாதங்கள் உள்ளன.
  • வருடாந்திர வரவு செலத்துத் திட்டத்தில் வருடத்திற்கு ஒரு முறை வரி முறையை அறிவிக்கிறோம். ஆண்டு நடுப்பகுதியில் வரி மாற்றகளை அறிவிப்பதன் மூலம் இது மிகவும் அரிதாகவே மீறப்படுகிறது. எனவே, இந்திய வரி முறை எல்லாவற்றையும் விட உறுதியான நியதியை கடைபிடிக்கிறது.

நிறுவனவரி

இந்த வரி தங்கள் பங்குதாரர்களுடமிருந்து தனி நிறுவனங்களாக இருக்கும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படுகிறது. இது இந்தியாவில் அமைந்துள்ள சிறப்பு உரிமைகளில், மூலதனச் சொத்துக்களின் விற்பனையிலிருந்து வரும் வட்டி இலாபங்கள், தொழில் நுட்ப சேவைகள் மற்றும் ஈவுத் தொகைக்களுக்கான கட்டணம் போன்றவற்றிலிருந்து வசூலிக்கப்படுகிறது.

இந்த வரி வெளிநாட்டு நிறுவனங்கள் பெரும் வருமானத்தின் மீது விதிக்கப்படுகிறது அல்லது இவ்வரியானது இந்தியாவில் தோன்றுவதாக கருதப்படுகிறது.

வருமானம் இந்திய நிறுவனங்கள் அயல்நாட்டு நிறுவனங்கள்
₹50 கோடிக்குள் 25% 40%
₹50 கோடிக்கு மேல் 30% 40%

சொத்து வரி (அ) செல்வ வரி

சொத்து வரி (அ) செல்வ வரி என்பது தனது சொத்திலிருந்து பெறப்பட்ட நன்மைகளுக்கான சொத்தின் உரிமையாளருக்கு விதிக்கப்படுகின்ற வரியாகும். ஒவ்வொரு ஆண்டும் சொத்தின் நடப்பு சந்தை மதிப்பின் அடிப்படையில் விதிக்கப்படுகிறது. இவ்வரி தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் மீது விதிக்கப்படும் வரியாகும்.

மறைமுக வரிகள்

ஒருவர் மீது விதிக்கப்பட்ட வரிச்சுமை மற்றொருவருக்கு மாற்றப்பட்டால் அது “மறைமுகவரி” எனப்படும். வரி விதிக்கப்பட்டவர் ஒருவர், வரி சுமையை சுமப்பவர் வேறு ஒருவராவார். ஆகையால் மறைமுக வரியில் வரியைச் செலுத்துபவர் வரி சுமையை சுமப்பவர் அல்லர்.

சில மறைமுக வரிகளாவன: முத்திரைத் தாள் வரி, பொழுதுபோக்கு வரி, சுங்கத் தீர்வை மற்றும் பண்டங்கள் மற்றும் பணிகள் (GST) மீதான வரிகளாகும்.

முத்திரைத்தாள் வரி

முத்திரைத்தாள் வரி என்பது அரசாங்க ஆவணங்கள் மீது விதிக்கப்படுகிண்ற வரிகளான திருமண பதிவு அல்லது சொத்து தொடர்பான ஆவணங்கள் மற்றும் சில ஒப்பந்தப் பத்திரங்கள் போன்றவைகள் மீது விதிக்கப்படுவதாகும்.

பொழுதுபோக்கு வரி

எந்தவொரு பொழுதுபோக்கு மூலங்களாக இருந்தாலும், அரசாங்கத்தால் விதிக்கப்படுகின்ற வரி பொழுதுபோக்கு வரியாகும். உதாரணமாக திரைப்படங்கள் பார்ப்பதற்காக விதிக்கப்படுகின்ற கட்டணம் , பொழுது போக்கு பூங்காக்கள், கண்காட்சிகள், விளையாட்டு அரங்கம், விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவற்றைப் பார்ப்பதற்காக விதிக்கப்படுகின்ற வரியாகும்.

சுங்கத்தீர்வை (அ) கலால் வரி

சுங்கத் தீர்வை என்பது விற்பனையை விட, உற்பத்தியின் இயக்கத்தில் உள்ள எந்தவொரு உற்பத்திப் பொருட்களின் மீதும் விதிக்கப்படும் வரியாகும். இவ்வரி பொதுவாக விற்பனை வரி போன்ற மறைமுக வரிகளுக்கு கூடுதலாக விதிக்கப்படுகிறது.

பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (GST – Goods and Service Tax)

  • பண்டங்கள் மற்றும் பணிகள் வரி என்பது மறைமுக வரிகளில் ஒன்றாகும். இவ்வரி இந்தியப் பாராளுமன்றத்தில் மார்ச் 29, 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. மேலும் ஜூலை 1, 2017 முதல் அமுல்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் குறிக்கோள் “ஒரு நாடு-ஒரு அங்காடி- ஒரு வரி” என்பதாகும்.
  • GST என்பது, நுகர்வோர் பண்டங்கள் அல்லது பணிகளை வாங்கும்போது விதிக்கப்படும் வரியாகும். இவ்வரி மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் பண்டங்கள் மற்றும் பணிகளுக்கு விதிக்கப்படும் அனைத்து மறைமுக வரிகளையும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பண்டங்கள் மற்றும் பணிகளின் உற்பத்தி மற்றும் வழங்குதல் மீதான வரிகளின் அடுக்கு விளைவுகளை GST நீக்குகிறது. இது மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) போன்று ‘பல முனை வரி’ இல்லாமல் இது ‘ஒரு முனை வரி’ ஆகும்.
  • 1954ஆம் ஆண்டு முதன் முதலில் பண்டங்கள் மற்றும் பணிகள் வரியை அமுல்படுத்திய நாடு பிரான்ஸ் ஆகும். 1970 – 80களில் பல ஐரோப்பிய நாடுகள் பண்டங்கள் மற்றும் பணிகள் வரியை அறிமுகப்படுத்தியது.

வரி எவ்வாறு விதிக்கப்படுகிறது?

வளர்வீத வரி விதிப்பு முறை, விகித வரி விதிப்புமுறை மற்றும் தேய்வுவீத வரி விதிப்பு முறை என அரசாங்கம் வரிகளை விதிக்கின்றன.

வளர்வீத வரி விதிப்பு முறை

  • வளர்வீத வரி விதிப்பு முறையில் வரியின் அடிப்படைத் தளம் அதிகரிக்கும்போது (பெருக்கப்படும்) வரி விகிதமும் (பெருகி) அதிகரிக்கிறது. வரி விகிதத்தை வரி அளவுடன் பெருக்குவதன் மூலம் செலுத்த வேண்டிய வரியின் அளவு கணக்கிடப்படுகிறது.
  • ஒரு வளர்வீத வரியைப் பொறுத்த வரையில் பெருக்கல் (வருமானம்) அதிகரிக்கிறது. வருமானம் அதிகரிக்கும் போது, வரி விகிதமும் அதிகரிக்கிறது. இது வளர்வீத வரி விதிப்பு முறை என்று அழைக்கப்படுகிறது.

பண்டங்கள் மற்றும் பணிகள் வரியின் அமைப்பு (GST)

மாநில பண்டக்கள் மற்றும் பணிகள் வரி (SGST): (மாநிலத்திற்குள்)

மதிப்புக் கூட்டு வரி (VAT) / விற்பனை வரி, கொள்முதல் வரி, பொழுதுபோக்கு வரி, ஆடம்பர வரி, பரிசுச்சீட்டு வரி மற்றும் மாநில கூடுதல் கட்டணம் மற்றும் வரிகள்.

மத்திய பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (CGST): (மாநிலத்திற்குள்)

மத்திய சுங்கத்தீர்வை , சேவை வரி, ஈடுசெய்வரி, கூடுதல் ஆயத்தீர்வை, கூடுதல் கட்டணம், கல்வி கட்டணம் (இடைநிலைக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வி வரி).

ஒருங்கிணைந்த பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (IGST): (மாநிலங்களுக்கு இடையே)

நன்கு முக்கிய GST விகிதங்கள் உள்ளன. 5%, 12%, 18% மற்றும் 28% காய்கறிகள் மற்றும் உணவு தானியங்கள் போன்ற வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசிய தேவைகளுக்கான அனைத்து பண்டங்களுக்கும் இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன.

எடுத்துக்காட்டு

வரி அடிப்படை வரி விகிதம் வரி அளவு
₹10,000 10% ₹1000
₹20,000 15% ₹3000
₹30,000 25% ₹7500
₹40,000 40% ₹16000

விகித வரி விதிப்பு முறை அல்லது விகிதாச்சார வரி விதிப்பு முறை

ஒரு நிலையான அளவில் பண்டங்கள் மற்றும் பணிகளுக்கு விதிக்கப்படும் வரி, விகித வரி விதிப்பு எனப்படுகிறது. அனைத்து வரி செலுத்துவோரும் , தங்கள் வருமானத்தில் அதே விகிதத்தில் பங்களிப்பு செய்கின்றனர். இந்த முறையில் வருமானத்தின் அளவைப் பொருட்படுத்தாமல் வரி விதிப்பு விகிதம் ஒரே மாதிரியானதாகும். பெறப்பட்ட வரித் தொகை வருமானத்தின் அதே விகிதத்தில் மாறுபடும்.

எடுத்துக்காட்டு

வரி அடிப்படை வரி விகிதம் வரி அளவு
₹10,000 10% ₹1000
₹20,000 10% ₹2000
₹30,000 10% ₹3000
₹40,000 10% ₹4000

தேய்வுவீத வரி விதிப்பு முறை

இது அதிக வருமானம் ஈட்டுபவர்களை விட, குறைந்த வருமானம் ஈட்டுபவர்களிடம் அதிகவரி விகிதம் விதிப்பதைக் குறைகிறது. இது வளர்வீத வரி விதிப்பு முறைக்கு நேர் எதிர் மாறானதாகும்.

வளர்வீத வரி விதிப்பு வருமான அதிகரிப்பு வரியும் அதிகரிக்கும் எ.கா. வருமான வரி
விகித வரி விதிப்பு வருமான அதிகரிப்பு வரி குறையும் எ.கா. நிறுவன வரி
தேய்வுவீத வரி விதிப்பு வருமான மாற்றம் எப்போதும் ஒரே வரி எ.கா. விற்பனை வரி

கருப்பு பணம் (Black Money)

கருப்பு பணம் என்பது , கருப்பு சந்தையில் ஈட்டப்பட்ட வருமானம் மற்றும் செலுத்தப்படாத வரிப் பணமாகும். வரி நிர்வாகியிடமிருந்து மறைக்கப்பட்ட, கணக்கிடப்படாத பணம் “கருப்பு பணம்” என்று அழைக்கப்படுகிறது.

கருப்பு பணத்திற்கான காரணங்கள்

கருப்பு பணத்திற்குப் பல ஆதாரங்கள் காரணங்களாக அடையாளம் காணப்படுகின்றன.

1. பண்டங்கள் பற்றாக்குறை

கருப்பு பணம் இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ பண்டங்கள் பற்றாக்குறை ஏற்படுவதற்கு மூலக்காரணமாக உள்ளது. கருப்பு பணத்தை கட்டுப்படுத்துவதற்கு அடுத்தடுத்த தடைகள் அறிமுகப்படுத்தப்படுகிறது.

2. உரிமம் பெறும் முறை

கட்டுப்பாட்டு அனுமதி, ஒதுக்கீடு மற்றும் உரிமங்களின் அமைப்பு, பொருட்களின் குறைவான அளிப்பினால் தவறான விநியோகத்துடன் தொடர்புடையது என்று உறுதியாக நம்பப்படுகிறது. இதன் விளைவாக கருப்பு பணம் உருவாகிறது.

3. தொழில் துறையின் பங்கு

கருப்பு பணம் தோன்றுவதற்கு மிக முக்கியமான பங்கு வகிப்பது தொழில் துறையாகும். உதாரணமாக வரையறுக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுப்பாட்டாளர் பண்டங்களை மிகவும் குறைவான விலைக்கு வாங்க முயற்சி செய்வதுடன், அப்பொருளுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதுடன், அவ்வித்தியாசத்தை தனிப்பட்ட முறையில் காண்பிப்பதில்லை.

இந்தியாவில் கருப்பு பணத்தைக் கட்டுப்படுத்த சமீபத்திய சட்ட முயற்சிகள்

  1. மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் இரண்டு முன்னாள் நீதிபதிகளின் தலைவர் மற்றும் துணைத்தலைவரின் கீழ் கருப்பு பணம் குறித்த சிறப்பு விசாரணைக் குழு (Special Investigation Team) அமைக்கப்பட்டது.
  2. ஒரு விரிவான சட்டத்தை இயற்றுவது – கருப்பு பணம் (வெளியிடப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துக்கள்) மற்றும் வரி விதித்தல் சட்டம், 2015.
  3. பனாமாவில் சமீபத்திய காகித கசிவுகளின் வெளிப்பாடுகளை விசாரிப்பதற்காக மத்திய நேரடி வரி வாரியம் (CBDT), இந்திய ரிசர்வ் வங்கி (RBI) , அமலாக்க இயக்குநரகம் (ED) மற்றும் நிதி புலனாய்வு பிரிவு (FIU) ஆகியவற்றை உள்ளடக்கிய அரசிலமைப்பு அதிகாரிகளைக் கொண்ட பல நிறுவனக் குழு (MAG) அமைக்கப்பட்டது.
  4. இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தங்கள் (DTTAAs) /வரித் தகவல் பரிமாற்ற ஒப்பந்தங்கள் (TIEAs) / பலதரப்பு மாநாடு.
  5. வெளி நாட்டு கணக்கு வரி இணக்கச் சட்டம் (FATCA)
  6. பண மோசடி சட்டம் 2002 மூலம் நிதிச் சட்டம் 2015.
  7. பினாமி பரிவர்த்தனைகள் (தடை) திருத்தச் சட்டம் 2016 தொடக்கம்.
  8. “சுத்தமான பணச்செயல்பாடு” (Operation of Money) ஜனவரி 31, 2017ல் தொடங்கியது.
  9. லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம்.
  10. ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டம் 2016.

4. கடத்தல்

கருப்பு பணத்திற்கு கடத்தல் ஒரு முக்கிய ஆதாரமாகும். இந்தியா கடுமையான பரிமாற்ற முறைகளைக் கொண்டிருந்தபோது விலை உயர்ந்த பொருட்களான தங்கம், வெள்ளி, ஜவுளிகள், மின்னனுப் பொருட்கள் ஆகியவற்றுக்கு சுங்கத் தீர்வை அதிகமாக விதிக்கப்பட்டது. அதிகாரிகளை மீறி இந்தப் பொருட்களைக் கொண்டுவருவது கடத்தலாகும்.

5. வரியின் அமைப்பு

வரி விகிதம் அதிகமாக இருக்கும் போது, பணம் தோன்றக் காரணமாக அமைகிறது.

வரி ஏய்ப்பு (Tax Evasion)

  • தனி நபர்கள், நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் ஆகியவை சட்ட விரோதமாக வரி செலுத்தாமல் இருப்பது வரி ஏய்ப்பு எனப்படும்.
  • வரி ஏய்ப்பு பெரும்பாலும் வரி செலுத்துவோர் தங்கள் வரி பொறுப்பைக் குறைக்க வரி அதிகாரிகளிடம் தங்களின் உண்மையான விவகாரங்களை வேண்டுமென்றே தவறாக சித்தரிப்பதை உட்படுத்துகிறது.
  • மேலும், குறைந்த வருமானம், இலாபங்கள் அல்லது ஆதாயங்களை உண்மையில் சம்பாதித்த தொகையை விட அறிவித்தல் அல்லது விலக்குகளை மிகைப்படுத்துதல் போன்ற நேர்மையற்ற வரி அறிக்கையையும் உள்ளடக்கியது.
  • வரி ஏய்ப்பு என்பது பொதுவாக முறைசார பொருளாதாரத்துடன் தொடர்புடைய ஒரு செயலாகும். வரி ஏய்ப்பு அளவின் ஒரு நடவடிக்கை, பதிவு செய்யப்படாத வருமானத்தின் அளவு, வரி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட வேண்டிய வருமான அளவிற்கும் உண்மையான அறிக்கையிடப்பட்ட தொகைக்கும் உள்ள வித்தியாசமாகும்.

வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் சேர்க்கப்பட்டுள்ளவை

  • வருமானத்தை குறைத்து மதிப்பிடுதல்
  • விலக்குகள் அல்லது செலவுகளை உயர்த்துவது.
  • மறைக்கப்பட்ட பணம்.
  • கடல் கடந்த கணக்குகளில் விவரங்களை மறைத்தல்.

வரி ஏய்ப்பிற்கான காரணங்கள்

  1. கருப்பு பணத்தின் விளைவாக வரி ஏய்ப்பு மத்திய அரசின் வரி திரட்டல் முயற்சிகளைத் தடுக்கிறது. நிதிப் பற்றாக்குறை வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்துவதை சிதைக்கிறது மற்றும் பொதுச் செலவுகள் தவிக்க முடியாததாக இருந்தால், பற்றாக்குறை நிதியுதவியை நாடும்படி அரசாங்கத்தை கட்டாயப்படுத்துகிறது.
  2. இது சேமிப்பு மற்றும் முதலீட்டு முறைகளை சிதைப்பதன் மூலமும், பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளுக்கான வளங்களின் கிடைக்கும் தன்மையினாலும், அரசாங்கத்தின் அறிவிக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளில் தலையிடுகிறது.
  3. வரி ஏய்ப்பு, வரி அமைப்பின் சமத்துவப் பண்புகளை குறை மதிப்பிற்கு உட்படுத்துகிறது. நேர்மையான வரி செலுத்துவோர் விகிதாசார வரிச்சுமையை விருப்பத்துடன் சுமக்கிறார்கள். அவர்களை மனச் சோர்வடையச் செய்து வரி ஏய்ப்பு செய்பவர்களின் முகாமில் சேர ஈர்க்கப்படுகிறார்கள்.
  4. வரி ஏய்ப்பு , வரி அமைப்பின் சமத்துவப் பண்புகளை குறை மதிப்பிற்கு உட்படுத்தப்படுகிறது. நேர்மையான வரி செலுத்துவோர் விகிதாசார வரிச்சுமையை விருப்பத்துடன் சுமக்கிறார்கள். அவர்களை மனச் சோர்வடையச் செய்து வரி ஏய்ப்பு செய்பவர்களின் முகாமில் சேர ஈர்க்கப்படுகிறார்கள்.
  5. வரி ஏய்ப்பு மற்றும் கருப்பு பணம் ஆகியவை நாட்டில் தகுதியற்ற குழுக்களின் கைகளில் பொருளாதார சக்தியைக் குவிப்பதை ஊக்குவிக்கின்றன. இது பொருளாதாரத்தை அதன் வழியில் அச்சுறுத்துதலாகும்.
  6. வரிஏய்ப்பு, வரி நிர்வாகத்தின் நேரத்தினையும், சக்தியினையும் பயன்படுத்தி , வரி ஏமாற்றுக்காரர்களின் சிக்கலான கையாளுதல்களைத் தடுக்கிறது.

வரி ஏய்ப்பும், அபராதமும்

  1. ஒரு நபர் ஏய்ப்பு செயலை முழுமையாகச் செய்தால், அவர் மோசமான குற்றச்சட்டுகளை சந்திக்க நேரிடும். வரி ஏய்ப்பு அபராதங்களில் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அதிக அளவு அபராதமும் அடங்கும்.
  2. பிரதிவாதிகள், வழக்கு விசாரணைக்கான செலவுகளைச் செலுத்த உத்தரவிடப்படலாம்.
  3. பிற வரி ஏய்ப்பு அபராதங்களில் சமூக சேவை, நன்னடத்தை மற்றும் வழக்கின் சூழ்நிலைகளைப் பொறுத்து மறுசீரமைத்தல் ஆகியவை அடங்கும்.
  4. வரி ஏய்ப்பு அபராதம், குற்றத்தின் தன்மை மற்றும் அதன் தீவிரத்தினைப் பொறுத்து மற்றும் அதன் தீவிரத்தினைப் பொறுத்து கடுமையானதாக இருக்கும்.

வரி மற்றும் பிற கட்டணங்கள்

வரி என்பது வரி செலுத்துவோர் நேரடி வருவாய் அல்லது நன்மை என்று எதையும் எதிர்பாராமல் அரசாங்கத்திற்குக் கட்டாயமாக செலுத்திடும் கட்டணமேயாகும்.

வரிக்கும் கட்டணத்திற்கும் உள்ள வேறுபாடுகள்

வ.எண் வரி (Tax) கட்டணம் (Payments)
1 வரி என்பது எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் அரசாங்கத்திற்கு கட்டாயமாக செலுத்துகின்ற செலுத்துகையாகும். கட்டணம் என்பது பணிகளை பயன்படுத்துவதற்காக செலுத்துவதாகும்.
2 பொதுவாக அரசாங்கத்தின் வருமான இனங்களில் ஒன்றாக வரி மேலோங்கியுள்ளது கட்டணம் என்பது ஒரு குறிப்பிட்ட நன்மைகளுக்கான தனிச் சலுமைகளைப் பெற்றிருந்தாலும், பொது நல ஒழுங்கு முறையின் சிறப்பான முதன்மை நோக்கமாகும்.
3 வரி என்பது கட்டாய செலுத்துகை ஆகும். கட்டணம் (Fee) என்பது தன்னார்வக் கட்டணமாகும்.
4 ஒரு தனிப்பட்ட நபரின் மீது வரி விதிக்கப்பட்டால், அதனை அவர் செலுத்த வேண்டும். இல்லையெனில் அவர் தண்டிக்கப்படுவார். மாறாக, பணிகளை பெற விருப்பமில்லை எனில் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
5 வரி செலுத்துபவர்கள் நேரடியாக எவ்வித சலுகைகளையும் எதிர்பார்க்க முடியாது.

உதாரணம்: வருமான வரி, அன்பளிப்பு வரி, சொத்து வரி மற்றும் மதிப்புக் கூட்டு அவரி (VAT).

கட்டணம் செலுத்துவதன் மூலம் நுகர்வோர்கள், நேரடியாக சலுகைகளைப் பெறுகின்றனர்.

உதாரணம்: முத்திரை வரி, ஓட்டுநர் உரிமக் கட்டணம் , அரசாங்க பதிவுக் கட்டணம்.

பொது நிறுவனங்களின் பொருட்கள் மற்றும் பணிகளின் உற்பத்தி மற்றும் பங்கீடு செய்தல் போன்றவற்றிலிருந்து பெறப்பட்ட வருமானம், நிர்வாக நடவடிக்கையிலிருந்து பெறப்பட்ட வருவாய் ஆகியவை கட்டணங்களில் அடங்கும். வரி வருமானம் தவிர்த்து, வரி அல்லாத மூலங்களிலிருந்து பெறக்கூடியவை கட்டணங்கள் ஆகும்.

சில செலுத்துதல்கள், கட்டணங்கள் (Fees), அபராதங்கள், தண்டனைகள் மற்றும் பறிமுதல்கள் ஆகும்.

வரிகளும் முன்னேற்றமும்

பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் வரி விதிப்பின் பங்கு பின்வருமாறு.

1. வளங்களைத் திரட்டுதல்

வரிவிதிப்பு அரசாங்கத்திற்கு கணிசமான அளவிற்கு வருவாய் திரட்டுவதற்கு உதவுகிறது. குறிப்பாக நேர்முக வரிமுறையான தனிநபர் வருமானவரி, நிறுவனவரி மற்றும் மறைமுக வரிகளான ஆயத்தீர்வை, சுங்கவரி ஆகியவற்றின் மூலமாக வரி வருவாய் திரட்டப்படுகிறது.

2. வருமான ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல்

வரியின் மூலம் சமத்துவமுறையை உருவாக்கலாம். குறிப்பாக, நேர்முக வரியில் வளர்வீத வரி முறை பின்பற்றப்படுகிறது. அதேபோல சில மறைமுக வரியான ஆடம்பரப் பண்டங்களின் மீது விதிக்கப்படும் வரி வளர்வீத வரியின் தன்மையுடையதாகும்.

3. சமூக நலன்

வரி விதிப்பு சமூக நலனை உருவாக்குகிறது. சில விரும்பத்தகாத பொருட்களான மதுபானங்கள் போன்ற பொருட்களின் மீது அதிகமாக வரி விதிப்பதன் மூலம் சமூக நலன் பாதுகாக்கப்படுகிறது.

4. அந்நியச் செலாவணி

வரிவிதிப்பு ஏற்றுமதியை ஊக்குவிப்பதுடன் இறக்குமதியைத் தடுக்கிறது. பொதுவாக, வளரும் நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகளும் ஏற்றுமதி பொருட்களுக்கு வரிகளை விதிப்பதில்லை.

5. வட்டார முன்னேற்றம்

வட்டார வளர்ச்சியில் வரி விதிப்பு முக்கியப் பங்கினை வகிக்கிறது. பின் தங்கிய பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் அமைப்பதற்காக வரிச் சலுகையையும், வரி விலக்குகளையும் அளிப்பதன் மூலம், அப்பகுதிகளில் தொழிற்சாலைகளை அமைப்பதற்கு வணிக நிறுவனங்களைத் தூண்டுகிறது.

6. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல்

வரி என்பது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் கருவிகளுள் ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது. அரசாங்கம் பண்டங்கள் மீதான வரி விகிதத்தை குறைப்பதன் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!