BlogTnpsc

இந்தியாவின் சர்வேத உறவுகள் Notes 10th Social Science Lesson 21 Notes in Tamil

10th Social Science Lesson 21 Notes in Tamil

21. இந்தியாவின் சர்வேத உறவுகள்

“ஒரு மோசமான அண்டை நாடு ஒரு துரதிஷ்டம்; அதுவே ஒரு நல்லது நாடாக அமையுமேயானால் அதைவிட ஆசிர்வாதம் வேறு இல்லை”– ஹெசாய்ர்ட்

அறிமுகம்

சுதந்திர இந்தியா தொடர்ந்து உலக அமைதியையும் சர்வதேச ஒற்றுமையையும் நிலைநிறுத்த ஊக்கமளிக்கிறது. இந்தியா வெளிப்படையாக ராணுவக் கூட்டணியைக் கைவிட்டாலும், அமைதி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக மற்ற நாடுகளுடன் ஒத்துழைப்பதிலும் ஒருங்கிணைப்பதிலும் மிகவும் ஈடுபட்டுடன் செயல்படுகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு கூறியது போல “நாம் ஒருவரை முற்றிலும் சார்ந்தோ அல்லது தனித்தோ இருக்க முடியாது. ஆனால் இவ்வுலகில் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கிறோம்”.

இந்தியா தனது தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ற வகையில் அமைதியான வளமான அண்டை நாடுகளுடனான உறவை விரும்புகிறது. இந்தியா எப்பொழுதும் அமைதியை விரும்பும் நாடாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உலக அமைதிக்குத் தொடர்ந்து கடுமையாகப் போராடி வருகிறது. ஒரு நாடு வளர்ச்சியில் போதிய அளவு முன்னேற்றம் அடைவதற்குச் சர்வதேச உறவுகளைப் பராமரிப்பது என்பது முக்கியமான ஒரு பகுதி ஆகும். இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்தாலும் ஏராளமான அண்டை நாடுகளுடன் சூழப்பட்டிருப்பதால் அந்நாடுகளுடன் மரபுரீதியாக நட்புறவு மற்றும் நல்ல உறவினைப் பராமரித்து வருகிறது.

இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும்

அண்டை நாட்டுறவைப் பொருத்த வரையில் இந்தியா ஒரு உன்னத நிலையைக் கொண்டுள்ளது. இந்திய துணைக்கண்டத்தில் கடந்த 5000 ஆண்டுகளாக நிலவி வந்த ஒரே மாதிரியான பண்பாட்டின் ஒரு பகுதியாக அண்டை நாடுகள் விளங்குகின்றன.

  • மிகப்பரந்த இந்தியாவின் வட மேற்கில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான்
  • வடக்கில் சீனா, நேபாளம், பூடான்
  • கிழக்கில் வங்காளதேசம்
  • தூரக்கிழக்கில் மியான்மர்
  • தென்கிழக்கில் இலங்கை, தென்மேற்கில் மாலத்தீவு போன்ற இந்தியாவிற்கு மிக அருகில் அமைந்துள்ள இரு நாடுகளும் இந்தியப் பெருங்கடலால் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா இந்த அண்டை நாடுகளுடன் வரலாற்று ரீதியாகவும், சமய, பொருளாதார, இன மற்றும் மொழியின் அடிப்படையிலும் நல்லுறவைப் பேணுகிறது. அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.
  • சீனாவும் ரஷ்யாவும் அதிக எண்ணிக்கையிலான அண்டை நாடுகளுடன் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.

இந்தியாவும் ஆப்கானிஸ்தானும்

  • இந்தியா, ஆப்கானிஸ்தான் உறவு போர்த்திறம் சார்ந்த பங்களிப்பு ஒப்பந்தம் (Strategic Partnership Agreement) மூலம் வலிமை பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தம் ஆப்கானிஸ்தானின் உள்கட்டமைப்பை மறுசீரமைக்கவும், நிறுவனங்கள், வேளாண்மை, நீர், கல்வி, சுகாதாரம் மற்றும் வரியில்லாமல் இந்திய சந்தையை எளிதாக அடைதல் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை நல்கவும் வழிகோலுகிறது.
  • ஹீரட் மாகாணத்திலுள்ள சல்மா அணையைக் கட்ட ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புப் படையில் பணிபுரிந்து உயிரிழந்த வீரர்களின் குழந்தைகள் 500 பேருக்கு இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயில்வதற்கான உதவித்தொகையை இந்தியா அறிவித்துள்ளது.
  • மேலும் ஆப்கானிஸ்தானின் பொது சுகாதாரம் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக இந்தியா ஆதரவு அளித்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் முதலீடு செய்வதில் முன்னணியில் இந்தியா இருப்பதோடு, பொதுத்துறை மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த இந்திய நிறுவனங்கள் ஆப்கானிஸ்தானில் சுரங்கத் தொழிலில் அதிக அளவில் முதலீடு செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
  • இந்தியா தனது விளையாட்டுத் திறமையைப் பறைசாற்றும் விதமாக காந்தகார் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தைக் கட்டியுள்ளது. இந்தியாவின் மகளிர் சுய வேலை வாய்ப்புச் சங்கம் நிலையான வாழ்வாதாரம் மற்றும் தன்னம்பிக்கை பெறுவதற்குமான பயிற்சியை ஆப்கானிஸ்தானில் அளிக்கிறது.
  • இந்தியா இவ்விதமாக ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்கு நிதி உதவி மற்றும் கடனுதவி அளித்துப் பங்காற்றி வருகிறது.
  • சிந்துவெளி நாகரிகம் முதல் சந்திரகுப்த மௌரியர் ஆட்சி வரையிலான காலத்தில் இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் பன்முகத்தன்மையையும் மிக ஆழமான நட்புறவையும் கொண்டிருந்தன. கனிஷ்கருடைய ஆட்சியின்போது ஏராளமான இந்திய சமய பரப்புக் குழுக்கள் சீனா, மத்திய ஆசியா மற்றும் ஆப்கான்ஸ்தான் போன்ற நாடுகளுக்குத் தங்கள் மதத்தைப் பரப்பச் சென்றனர்.
  • பலுசிஸ்தான் (தற்காலத்திய பாகிஸ்தானின் எல்லைப்புற மாகாணம்) பகுதிய்சிச் சார்ந்த கான் அப்துல் கபார்கான் இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்தின் முக்கியத் தலைவரும் இந்திய தேசிய காங்கிரசின் தீவிர ஆதரவாளரும் ஆவார்.

இந்தியாவும் வங்காளதேசமும்

  • வங்காளதேசத்தின் (முந்தைய கிழக்கி பாகிஸ்தான்) சுதந்திரத்தை அங்கீகரித்த முதல் நாடு இந்தியா ஆகும்.
  • இந்தியாவும் வங்கதேசமும் 4,096.7 கி.மீ நீளம் கொண்ட மிக நீண்ட நிலப்பரப்பை எல்லையாகப் பகிர்ந்து கொள்கின்றன. அகர்தலாவிற்கும் (இந்தியா) அகவுராவிற்கும் (வங்காளதேசம்) இடையேயான ரயில் போக்குவரத்து இணைப்பிற்கான முன்மொழிவை செயல்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
  • இந்தியாவின் பகுதிகளான கொல்கத்தாவில் இருந்து அகர்தலாவிற்கு டாக்கா வழியாக செல்வதற்கான சாலை வழியினை BBN – MVA (வங்காளதேசம், பூடான், இந்தியா, நேபாளம் மோட்டார் வாகன ஒப்பந்தம்) ஒப்பந்தத்தின் கீழ் அமைக்க இந்தியாவிற்கு வங்காளதேசம் அனுமதி வழங்கியுள்ளது.
  • கங்கை நீரைப் பகிர்ந்து கொள்ள 1977 இல் கையெழுத்தான பராக்கா ஒப்பந்தம் ஒரு வரலாற்று ஒப்பந்தமாகும். இந்தியாவிற்கும் வங்காள தேசத்திற்கும் பொதுவானதாக உள்ள 54 நதிகளிலிருந்து அதிகபட்ச நலனைப் பெறுவதற்காக இரு நாட்டுக் கூட்டு நிதி ஆணையம் செயல்படுகிறது.
  • இந்திய அரசாங்கம் ‘வங்காளதேசத்திர்கான உதவி’ என்ற திட்டத்தின் கீழ் கட்டடங்கள் கட்டவும், ஆய்வுக்கூடங்கள், மருந்தகங்கள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கவும் மானியம் வழங்கி உதவுகிறது.
  • மேலும் இந்திய பண்பாட்டு உறவுகளுக்கான குழுவின் (ICCR) மூலம் வங்காளதேச மாணவர்களுக்கு ஆண்டுதோறும் உதவித்தொகை அளிக்கப்படுவதோடு டாக்கா பல்கலைக்கழகத்தில் ‘தாகூர் இருக்கை’ ஏற்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • (மேற்குவங்காளம்) சிலிகுரி – பர்பதிபூர் (வங்காளதேசம்) ஆகிய இடங்களுக்கிடையே 130 கிலோ மீட்டர் நீளம் கொண்ட நட்புறவுக் குழாய் போக்குவரத்தை அமைக்கும் பணியை இரு நாடுகளும் இணைந்து தொடங்கி வைத்தன.
  • இந்தியாவிற்குச் சொந்தமான டீன்பிகா (Teen Bigha) என்ற பகுதி மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசத்திற்கு இடையேயான எல்லையில் உள்ளது. குறுகலான இப்பாதை 2011ஆம் ஆண்டு வங்காளதேசத்திற்குக் குத்தகைக்கு விடப்பட்டது.

இந்தியாவும் பூடானும்

  • பூடான் இமயமலையில் உள்ள ஒரு சிறிய அரசு ஆகும். ‘இடி மின்னல் நிலம்’ என்று அறியப்படும் இது உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகும்.
  • இந்தியா மற்றும் பூடான் இடையேயான இராஜதந்திர உறவுகள் 1968ஆம் ஆண்டில் இந்திய பிரதிநிதி ஒருவரைத் திம்புவில் நியமித்ததிலிருந்து தொடங்கியது. பூடான் நிலங்களால் சூழப்பட்ட நாடாகும். அதனால் கடல் சார்ந்த தொடர்புகளுக்கு இந்தியாவையே பெரிதும் சார்ந்துள்ளது.
  • ஒபூடானின் பொருளாதார மேம்பாட்டிற்கு இந்தியா முதன்மைப் பங்காற்றுகிறது. இந்தியா ‘பாரத் முதல் பூடான் வரை’ (B2B) என்று அறியப்படும் இருதரப்பு வணிக உறவினை அறிவித்தது.
  • பூடான் மாணவர்கள் புகழ் பெற்ற நிறுவனங்களில் உயர் கல்வி பெறுவதற்கு இந்தியா உதவித்தொகை அளிப்பதோடு பூடானில் ஒரு டிஜிட்டல் நூலகம் அமைத்திடவும் உதவியுள்ளது.
  • மதிப்புமிக்க நேரு-வாங்சுக் கல்வி உதவுத்தொகை தகுதியும் திறமையும் கொண்ட பூடான் நாட்டினருக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட முதன்மையான இந்திய கல்வி நிறுவனங்களில் கல்வி பயில வாய்ப்பு அளிக்கிறது.
  • இந்தியா மற்றும் பூடான் இடையே இரு தரப்பு ஒத்துழைப்பிற்கு நீர்மின்சக்தித் துறை ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
  • இதுவரை இந்திய அரசங்கம் மூன்று நீர்மின்சக்தி (சுக்கா, குரிச்சி, தலா) திட்டங்களைப் பூடானில் அமைத்துள்ளது.
  • பூடான் நாட்டில் தொலைத் தொடர்பு வசதியை ஏற்படுத்தவும் மருத்துவமனைகள், சாலைகள் மற்றும் பாலங்கள் ஆகியவற்றைக் கட்டுவதற்கும் அந்நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தவும் இந்தியா உதவியுள்ளது.
  • குரு பத்மசம்பவா எனும் புத்த துறவி இந்தியாவிலிருந்து பூடானுக்குச் சென்றார். அங்கு தனது செல்வாக்கை ஏற்படுத்தி புத்த சமயத்தைப் பரப்பியதன் மூலம் இரு நாட்டு மக்களிடையே பாரம்பரியத்தை உறுதிப்படுத்தினார்.

இந்தியாவும் சீனாவும்

  • புவியியல் அமைப்பு, மக்கள்தொகை, திறன் கொண்ட மனித ஆற்றல் மற்றும் நாகரிகத்தொன்மை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவுடன் ஒப்பிடுவதற்குத் தகுதி வாய்ந்த நாடு சீனா மட்டுமே.
  • உலகில் உள்ள உற்பத்தி மண்டலங்களில் ஒன்றாக இருக்கும் சீனா, இந்தியாவிற்கு மிக முக்கியமான நாடாகும். இந்தியாவும் சீனாவும் உலக வர்த்தக நிறுவனம், சர்வதேச காலநிலை மாற்றம் குறித்த பேச்சுவார்த்தைகள், உலகவங்கி சீர்திருத்தம் ஆகியவற்றில் ஒத்த கருத்தைக் கொண்டுள்ளன.
  • சீனாவால் துவங்கி வைக்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்புக் கூட்டமைப்பில் (Shanghai Coorperation) இந்தியாவிற்குப் பார்வையாளர் தகுதியை வழங்கியுள்ளது. அதேபோன்று சார்க் (SARRC) அமைப்பில் பார்வையாளர் தகுதி சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இருநாடுகளும் பல்வேறு மாறுபட்ட துறைகளில் பேச்சுவார்த்தை நடத்திட வழிகளை ஏற்படுத்தியுள்ளன.
  • இருதரப்பு வணிகம் மகத்தான வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்தியாவும் சீனாவும் கல்வி பரிமாற்றத் திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதன்படி இரு நாடுகளிலும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி பயில தலா 25 மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

மக்மகான் எல்லைக்கோடு – இந்தியா, சீனா மற்றும் பூடானின் கிழக்குப் பகுதி ஆகிய பகுதிகளுக்கு இடையேயான எல்லைக்கோடு ஆகும். இது 1914ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்தியா, திபெத் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. பிரிட்டிஷ் இந்தியாவின் சார்பில் இந்தியாவிற்கான செயலாளர் ஆர்தர் ஹென்றி மக்மகான் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்தியாவும் மாலத்தீவும்

  • மாலத்தீவு இந்தியப் பெருங்கடலில் இலட்சத்தீவுகளுக்குத் தெற்கில் அமைந்துள்ளது. இதன் அமைவிட முக்கியத்துவத்தினாலும் அருகாமையில் அமைந்திருப்பதாலும் மாலத்தீவினுடனான உறவு இந்தியாவிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
  • இந்தியாவும் மாலத்தீவும் இனம், மொழி, பண்பாடு, சமயம் மற்றும் வணிகத் தொடர்பு ஆகிய பல பரிமாணத் தொடர்புகளைப் பழங்காலத்திலிருந்தே சுமூகமாகப் பேணி வருகின்றன.
  • இரு நாடுகளுக்கிடையே வணிகம் மற்றும் சுற்றுலா மேம்பட்டு இருக்கின்றன. இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஒருங்கிணைந்த ரோந்து மற்றும் வான்வழி கண்காணிப்புத் தகவல் பரிமாற்றம் ஆகியவற்றின் மூலம் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பை நல்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

இந்தியாவின் மியான்மரும்

  • இந்தியா தன் இரண்டாவது மிக நீளமான எல்லையை மியான்மர் நாட்டோடு பகிர்ந்து கொண்டுள்ளது (1989ஆம் ஆண்டு வரை பர்மா என அறியப்பட்டது).
  • இந்தியாவின் நான்கு வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர், மிசோரம் ஆகியவை மியான்மர் நாட்டுடன் தங்கள் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.
  • இந்தியா தென் கிழக்காசியாவிற்குள் செல்வதற்கான நுழைவு வாயிலாக மியான்மர் இருக்கிறது. கொல்கத்தாவை மியான்மரில் உள்ள சிட்வேயுடன் இணைப்பதற்காகச் சாலை – நதி-துறைமுகம் – சரக்குப் போக்குவரத்துத் திட்டமான கலடன் பன்முக மாதிரி போக்குவரத்துத் திட்டமான கலடன் பன்முக மாதிரி போக்குவரத்துத் திட்டத்தினை (KaladanMultiModel Transit Transport) இந்தியா உருவாக்கி வருகிறது. தென்கடலில் பொருளாதார மண்டலத்தை உருவாக்குவதற்காகக் கொல்கத்தா நகரை ஹோசிமின் உடன் இணைக்கும் நோக்கம் கொண்ட ஒரு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • மியான்மர், கம்போடியா வியட்நாம் வழியே சாலைப் போக்குவரத்தையும் கொண்ட இத்திட்டத்தின் ஒரு பகுதியாகக் கவுகாத்தியுடன் மாண்டலேவை இணைக்கும் முதற்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
  • நமது எரிபொருள் தேவைகளான பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றில் முக்கியப் பங்குதாரராக மியான்மர் உள்ளது. சில இந்திய நிறுவனங்களான எஸ்சார் (ESSAR), கெயில் (GAIL), ஓஎன்ஜிசி (ONGC), விதேஷ் லிமிடெட் (Videsh Ltd.,) ஆகிய நிறுவனங்கள் மியான்மரின் எரிசக்தித்துறையில் முதலீடு செய்துள்ளன.

இந்தியாவும் நேபாளமும்

  • இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இயற்கையாக அமைந்த இடைப்படு நாடு நேபாளம் ஆகும். நேபாளம் நிலப்பகுதிகள் சூழப்பட்ட நாடாக இருப்பதால் பொருளாதார உதவிக்கும் வழித்தடங்களுக்கும் இந்தியாவையே சார்ந்துள்ளது.
  • இந்தியாவின் ஐந்து மாநிலங்களான சிக்கிம், மேற்குவங்காளம், பீகார், உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகியவை நேபாள எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.
  • இரு நாட்டின் எல்லை மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் தங்களிடையே ஆழமான பண்பாட்டுப் பிணைப்பினைக் கொண்டுள்ளனர். நேபாளத்தின் பெரிய முதலீட்டாளராக இந்தியா திகழ்கிறது.
  • அடிப்படைக் கட்டமைப்பு , நீர்ப்பாசனம், சுகாதாரம், ஆற்றல் திட்டங்கள் மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட மேம்பாட்டிற்கு இந்தியா உதவுவதோடு, நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளையும் அளித்து வருகிறது.
  • இந்தியாவையிம் காதமண்டுவையும் இணைப்பதற்கான 204 கிலோ மீட்டர் நீளமுள்ள மகேந்திர ராஜ் மார்க் (Mahendra Raj Marg) என்னும் இணைப்பை இந்தியா கட்டியுள்ளது.
  • நேபாளம் மிக வேகமாக ஓடும் ஆறுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளதால் நீர் மின்சக்தி நிலையங்களை நிறுவுவதற்கு அதன் நிலப்பரப்பு ஏற்றதாக உள்ளது.

  • 18 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒப்பந்தமான 5600 மெகாவாட் பஞ்சேஷ்வர் திட்டப்பணிகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.
  • இந்தியா மற்றும் நேபாள மக்கள் ஆன்மீக பயணங்களுக்காக இரு நாடுகளுக்கும் சென்று வருகின்றனர். நேபாளத்தில் பசுபதி, ஜனக்பூர் ஆகிய பாரம்பரியமிக்க மையங்கள் உள்ளன.
  • அதேபோல இந்தியாவில் வாரணாசி மற்றும் நான்கு தாம்ஸ் (Four Dhaams – பத்ரிநாத், பூரி, துவாரகை மற்றும் இராமேஸ்வரம்) ஆகிய முக்கியமான புனிதத் தலங்களும் உள்ளன.
  • நேபாள மொழியை, இந்தியா அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் சேர்ந்துள்ளது ஒரு நாடுகளுக்கும் இடையேயான நட்புப் பிணைப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
  • சாரதா ஆற்றின் குறுக்கே ஒரு கூட்டு மின்சக்தித் திட்டம் கட்டப்பட்டு வருகிறது. இத்திட்டம் முறையே மின்சார உற்பத்தி, நீர்ப்பாசன வசதிகள் ஆகியவை இந்தியா மற்றும் நேபாளத்திற்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.
  • சுற்றுச்சூழல் நோக்கில் இந்தியா, நேபாலம் எல்லையோரம் பல்வேறு எண்ணிக்கையிலான புலிகள் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • இந்தியா மற்றும் நேபாள அரசு இரட்டை நகரங்களான காத்மண்டு –வாரணாசி, லும்பினி – புத்தகயா மற்றும் ஜனக்பூர் – அயோத்தி ஆகிய மூன்று சகோதரி நகர் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

இந்தியாவும் பாகிஸ்தானும்

  • 1947ஆம் ஆண்டு இந்திய – பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் பல்வேறு முக்கிய விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே வேறுபாடு காரணமாக நெருடலான உறவு இருந்து வருகிறது.
  • பாகிஸ்தானுடனான உறவில் தீவிரவாதமே தொடர்ந்து நமது முக்கியக் கவலையாக உள்ளது. இந்தியாவுடனான உறவுகளைப் பராமரிப்பதில் பாகீஸ்தான் விரோத மனப்பான்மையுடனே இருந்து வருகின்றது.
  • ஆனால் இந்தியா, உறவுகளை மேம்படுத்தவும் நிலைநிறுத்தவும் தீவிரமாக முயன்று வருகிறது. எல்லை தாண்டிய துப்பாக்கிச் சண்டை மற்றும் தீவிரவாதிகள் தாக்குதல் ஆகியவை காஷ்மீர் மக்களின் உயிர்களைக் காவு கொண்டது.
  • மேலும் அம்மக்கள் ஏழ்மை நிலை மற்றும் மனித உரிமை மீறல் ஆகியவற்றால் அவதியுறுகின்றனர்.
  • இந்தியா பாகீஸ்தானிடையே காஷ்மீர் முக்கிய விவகாரமாக இருந்து வருவதோடு இரு நாடுகளும் வெளிப்படையாகவே மோதிக்கொள்ளும் நிலையினை பல்வேரு சமயங்களில் ஏற்படுத்தியுள்ளது.
  • எல்லை தாண்டிய பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும். சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் பிரகடனம் ஆகியவற்றின் மூலம் இரு நாடுகளுக்குமிடையேயான நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வரவும் இந்தியா முயன்றுள்ளது.

கட்டுப்பாடுக் கோடு

1949ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்ட போர் நிறுத்தக்கோடு 1972ஆம் ஆண்டிற்குப் பின்னர் எல்லைக் கட்டுப்பாடுக் கோடு என அழைக்கப்பட்டது. இது 1972ஆம் ஆண்டின் சிம்லா ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லையாகும். இக்கோடு பிரிவினை செய்யப்பட்டபோது ராட்க்ளிஃப் கோடு (RadCliffe Line) என்று அழைக்கப்பட்டது. (ராட்க்ளிஃப் என்பவர் எல்லை ஆணையத்தின் தலைவராக இருந்தார்) இக்கோடு தற்போது கட்டுப்பாடுக் கோடு என அழைக்கப்படுகிறது.

இந்தியாவும் இலங்கையும்

  • இந்திய நாடு பண்பாடு, கலாச்சார, வரலாறு மற்றும் சமய உறவுகளை இலங்கையுடன் கொண்டுள்ளது. பாக் ஜலசந்தியால் பிரிக்கப்பட்டுள்ள இந்தியாவும் இலங்கையும் சிறந்த வணிக உறவுகளைத் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்வதோடு இருதரப்பு ஒப்பந்தங்கள் மட்டுமல்லாமல் சார்க் அமைப்பின் மூலமும் மேம்பாட்டிற்கு ஒருங்கிணைந்து செயலாற்றி வருகின்றன.
  • இந்தியா மற்றும் இலங்கை உறவு நட்பு ரீதியாக அமைந்திருக்கிறது எனினும் தமிழ் இனப்பிரச்சினை தொடர்பான காலகட்டத்தில் சிறிது காலத்திற்கு மட்டும் உறவில் பின்னடைவு ஏற்பட்டது.
  • இரு நாடுகளும் மரபுரீதியாக ஒன்றுக்கொன்று நெருங்கிய நிலையில் இருந்து வருகின்றன. இலங்கையில் முதலீடு செய்துள்ள நாடுகளில் இந்தியா முன்னணியில் இருப்பதோடு, பெட்ரோலியம், சில்லரை வணிகம், தகவல் தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட், தொலைத் தொடர்புகள் மற்றும் சுற்றுலா போன்ற பல்வேறு துறைகளில் இந்தியா முதலீடு செய்துள்ளது.
  • இலங்கையின் முதலீடுகள் இந்தியாவில் சரக்கு சேவை மற்றும் தளவாடத்துறை ஆகியவற்றைத் தவிர பிராண்டிக்ஸ் (Brandix) (தயாரிக்கப்பட்ட ஆடை/ விசாகப்பட்டினத்தின் ஆடை நகரம்) எம்.ஏ.எஸ். ஹோஸ்டிங்ஸ் (MAS Holdings), ஜான் கீல்ஸ் (John Keels), ஹேலேஸ் (Hayleys) போன்றவற்றிலும் செய்துள்ளது.
  • இந்தியா தகுதியுள்ள இலங்கை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை ஆண்டுதோறும் அளித்து வருகிறது. இந்தியாவின் நாளந்தா பல்கலைக்கழகத் திட்டத்தில் இலங்கை ஒரு பங்குதாரர் ஆகும்.
  • அசோகர் புத்த மதத்தைப் பரப்புவதற்காக அவரது மகன் மகிந்தாவையும் மகள் சங்கமித்திரையையும் இலங்கைக்கு அனுப்பினார். சோழ அரசர்களான முதலாம் இராஜராஜன் மற்றும் முதலாம் ராஜேந்திரன் ஆகியோர் இலங்கையின் வடபகுதியைக் கைப்பற்றினர்.

வளர்ச்சியடைந்த நாடுகளுடனான இந்தியாவின் உறவுகள்

ஒரு வளர்ந்த நாடு என்பது இறையாண்மை கொண்ட நாடாகும், இது மிகவும் வளர்ந்த பொருளாதாரம் மற்றும் குறைந்த தொழில்மயமான தேசத்துடன் ஒப்பிடும்போது மேம்பட்ட தொழில்நுட்ப உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளதும் ஆகும். இந்தியா வல்லரசு நாடுகளுடன் மிக கவனத்துடன் தன்னைச் சமநிலைப்படுத்தி உள்நாட்டு வளர்ச்சிக்கான அதிகப் பலனைப் பெறுவதற்கு முயன்று வருகிறது.

அ. அமெரிக்க ஐக்கிய நாடுகள்

  • அமெரிக்காவும் இந்தியாவும் புதிய தலைமுறை இராணுவக் கூட்டாண்மைக்கு வழிவகுக்கும் தகவல் தொடர்பு, இணக்கத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் (Communication Compatibility and Security Agreement – COMCASA) கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் 10 ஆண்டுகள் காலவரையறை கொண்டதாகும்.
  • இதன்படி அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு உபகரணங்களில் பயன்படுத்தப்படும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தைப் பெறுவதற்கான வழிவகை ஏற்படுவதோடு, இரு நாடுகளின் இராணுவங்களுக்கிடையே நிகழ்நேரத் தகவல் பகிர்வுக்கும் அனுமதியளிக்கிறது.

ஆ. ஐரோப்பிய நாடுகள்

  • அனைத்து விவகாரங்களிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருந்து வருவதோடு குறிப்பாகப் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, அணுசக்தி ஆற்றல், விண்வெளி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றம் அதிகரித்து வருகிறது.
  • பிரான்ஸ் நாட்டின் விண்வெளி ஏவுதளங்கள் இந்தியாவின் இஸ்ரோ (ISRO) அமைப்பினால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
  • பிரான்ஸ் நாடு இந்தியாவில் உள்ள சண்டிகர், நாக்பூர் மற்றும் பாண்டிச்சேரி போன்ற நகரங்களை திறன்மிகு நகரங்களாக மேம்படுத்த இந்தியாவோடு கூட்டாக ஒத்துழைக்கிறது.
  • இந்தியாவும் பிரான்சும் சர்வதேச சூரியசக்தி கூட்டணியை (International Solar Alliance) அறிமுகப்படுத்தி கடகரேகை மற்றும் மகரரேகை ஆகியவற்றிற்கு இடையே உள்ள நாடுகளைச் சூரிய ஆற்றலுக்கான ஒத்துழைப்பில் ஒன்று சேர்கின்றன.

இ. ஆஸ்திரேலியா

  • இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் நம்பிக்கைக்குரிய திட்டங்களைப் பல ஆண்டுகளாக மெதுவாகவும் படிப்படியாகவும் ஏற்படுத்தி வருகின்றன. ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் ஒருங்கிணைந்து இந்திய ஆஸ்திரேலிய கடற்படை பயிற்சி (AUSINDEX) ஒத்திகையின் மூலம் கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்த உறுதி பூண்டுள்ளன.
  • ஆஸ்திரேலியா இந்தியா கவுன்சில் இரு நாடுகளுக்கு இடையே உறவை விரிவுபடுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி பரிமாற்றங்களை ஊக்குவித்து வருகிறது.

ஈ. ஜப்பான்

  • ஜப்பான் நாட்டின் ஷிங்கன்சென் (Shinkansen) முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்த முடிவு செய்தது. இது பாதுகாப்பு மற்றும் துல்லியத் தன்மை கொண்ட உயர்தர அதிவேக ரயில் அமைப்பு ஆகும்.
  • டெல்லி மெட்ரோ ரயில் ஜப்பானிய ஒத்துழைப்பில் உருவான வெற்றிகரமான எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும். மும்பை, அகமதாபாத் இடையேயான அதிவேக ரயில் போக்குவரத்து (MAHSR) இருநாட்டு ஒத்துழைப்பின் மற்றுமொரு முயற்சியாகும்.
  • ஜப்பானிய அரசாங்கம் இந்தியக் குடிமக்களுக்கு இந்திய ரயில்வே துறையில் பணிபுரியும் வகையில் ஜப்பானியப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பைப் படிக்க ஆண்டுதோறும் 20 இடங்களை வழங்கி வருகிறது.
  • உற்பத்தித் துறையில் உற்பத்தி மற்றும் திறன் இந்தியா (Make in India, Skill India) திட்டங்களில் பங்களிக்கவும் ஜப்பானிய உற்பத்தித் திறன்களை வழங்கி இந்தியாவின் உற்பத்தித் தொழில்துறை தரத்தை மேம்படுத்தவும் 30,000 இந்திய மக்களுக்குப் பயிற்சி வழங்க ஜப்பான் இந்திய உற்பத்தி நிறுவனம் (Japan India Institute of Manufacturing ) அறிவித்துள்ளது.
  • 2017 ஆம் ஆண்டு குஜராத், கர்நாடகம், ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகிய 4 மாநிலங்களில் ஜப்பான் –இந்தியா உற்பத்தி நிறுவனம் (JIM) ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு ஜப்பானிய மானியம் மூலமான படிப்புகள் (Japanese Endowed Courses) ஆந்திரப்பிரதேச பொறியியல் கல்லூரிகளில் தொடங்கப்பட்டுள்ளன.
  • தகவல் தொழில்நுட்பங்கள் தொடர்பான (இணையதள பொருள்கள், செயற்கை நுண்ணறிவு, பெருமளவு தரவு பகுப்பாய்வு) மூன்று இந்திய – ஜப்பான் கூட்டு ஆய்வகங்களை நிறுவுவது சமீபத்திய முயற்சிகளில் அடங்கும்.

இந்தியாவும் மேற்கு ஆசியாவும்

  • மேற்கு ஆசியா என்பது எகிப்து, அரேபிய தீபகற்பம், துருக்கி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியது ஆகும். இந்தியாவும் மேற்கு ஆசிய நாடுகளும் வரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்தே உறவுகளைக் கொண்டிருக்கின்றன.
  • சிந்துவெளி மற்றும் மெசபடோமியா நகரங்களுக்கு இடையே வணிக உறவு ஏற்படுத்தப்பட்டிருந்தது.
  • மேற்கு ஆசியா பொருளாதார அடிப்படையில் குறிப்பிடத்தக்க பகுதியாக இந்தியாவிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. நிலத்தால் சூழப்பட, எண்ணெய் வளமிக்க மத்திய ஆசியாவிற்கு ஒரு நுழைவு வாயிலாக அமைந்துள்ளது.
  • புதிய நூற்றாண்டு தொடங்கியதிலிருந்து இந்தியா மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (Gulf Cooperation Council) இடையிலான உறவில் அசாதாரணமான திருப்பம் ஏற்பட்டுள்ளது.
  • சபஹார் ஒப்பந்தம் எனப்படும் முக்கூட்டு ஒப்பந்தம் இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • இதன்படி சபஹார் துறைமுகத்தைப் பயன்படுத்தி மூன்று நாடுகளிலும் போக்குவரத்து வழிதடங்கள் ஏற்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • இத்துறைமுகம் பாகிஸ்தானைத் தவிர்த்து ஆப்கானிஸ்தான் மற்றும் ஆசியா ஆகிய சந்தைகளை இந்தியா அணுக ஒரு நுழைவு வாயிலாக இருக்கும்.

உலகின் மிகப் பழமையான கடல் வர்த்தக பாதைகளில் ஒன்று சுமேரியாவில் இருந்து பஹ்ரைன் வழியாக மெலுக்கா என்று அழைக்கப்பட்ட சிந்துவெளி நாகரிகம் வரை அமைக்கப்பட்டிருந்தது.

பிரபல அறிஞரான எம்.எஸ்,அக்வானி, “இடைக்காலத்தில் இந்தியர்களின் மருத்துவம் கணிதம் மற்றும் வானியல் திறமைகளை அரேபிய மற்றும் ஈரானிய அறிஞர்கள் பெரிதும் மதித்ததோடு, இறுதியில் அவர்களது அறிவுசார் பாரம்பரியத்தின் பகுதியாவும் ஆனது” என்றும் குறிப்பிடுகிறார்.

இந்தியா மற்றும் சர்வதேச அமைப்புகள்

  • இந்தியா ஒரு வலிமை வாய்ந்த வல்லரசாகும். வளர்ந்து வரும் உலகளாவிய செல்வாக்கை அனைத்து நாடுகளிலும் பெற்றுள்ளது.
  • புதிதாக தொழில்மயமாக்கப்பட்ட நாடாக இருப்பதால் பல்வேறு நாடுகளுடன் ஒத்துழைக்கும் சிறந்த வரலாற்றைக் கொண்டுள்ளது.
  • பல்வேறு சர்வதேச அமைப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பினராக இந்தியா செயல்படுவதோடு, அவற்றில் சிலவற்றின் நிறுவன உறுப்பினராகவும் இருந்து வருகிறது.
  • இந்திய முறைப்படி அமைக்கப்பட்ட அமைப்புகளான ஐ.நா.சபை. அணிசேரா இயக்கம், சார்க் , ஜி-20 மற்றும் காமன்வெல்த் போன்றவைகளில் உறுப்பினராக உள்ளது.
  • இராணுவ மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவது மற்றும் நாடுகளிடையே அமைதி மற்றும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவது போன்ற ஐ.நா.சபை எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் இந்தியா உதவுகிறது.

பிரிக்ஸ் (BRICS)

  • பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் பிராந்திய அளவில் மற்றும் சர்வதேச அளவில் வளர்ந்து வரும் பொருளாதார, அரசியல் சக்திகள் ஆகும்.
  • பிரிக்ஸ் அமைப்பின் தலைமையகம் சீனாவின் ஷாங்காய் நகரில் அமைந்துள்ளது, உலகின் வடபகுதியில் உள்ள நாடுகளின் சவால்களை எதிர்கொள்ளும் விதமாகத் தென்பகுதியில் உள்ள நாடுகளுக்கு நல்வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
  • இந்தியா, இக்கூட்டமைப்பில் ஒரு தீவிர உறுப்பினராக இருப்பதோடு உலகளவில் தன்னை வடிவமைக்கவும் இது வழிவகுக்கிறது.

பிரிக்ஸ் கூட்டமைப்பு உருவாவதற்கான காரணம்

  • உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு ஒரு மாற்றாகவும், அமெரிக்க மேலாதிக்கத்திற்குப் போட்டியாகவும் பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.
  • உறுப்பு நாடுகளிடையே பொருளாதார வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றவும், சொந்த மற்றும் சுயமாக நிரூபிக்கும் விதமாக இக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்தியா பொருளாதாரத் துறையில் தீவிரமாகச் செயல்பட்டு வருவது கீழ்க்காணும் பல்வேறு பொருளாதார கூட்டமைப்புகளின் ஒரு பகுதியாக இந்தியா இருப்பதிலிருந்தே நன்கு புலனாகிறது.

உலகளாவிய குழுக்களின் பெயர்கள் உறுப்பினர் நாடுகள் குறிக்கோள்கள்
ஐ.பி.எஸ்.எ (IBSA) இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா வேளாண், கல்வி, ஆற்றல், வர்த்தகம், கலாச்சாரம் மற்றும் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது
பி.சி.ஐ.எம் (BCIM) வங்காளதேசம், சீனா, இந்தியா, மியான்மர் இயற்கைப் பேரழிவுகள் மற்றும் தரவு மீறல்கள் போன்ற அச்சுறுத்தல்களை சமாளிக்கவும் வணிக நலன் பாதுகாப்பிற்கும்
எம்.ஜி.சி (MGC) (மீகாங்- கங்கா ஒத்துழைப்பு) இந்தியா, கம்போடியா, லாவோஸ் மக்கள் ஜனநாயக குடியரசு, மியான்மர், தாய்லாந்து, வியட்நாம் கங்கா-மீகாங் தாழ்நிலத்தில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல்
பிம்ஸ்டெக் (BIMSTEC) வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார கூட்டுறவிற்கான முயற்சி வங்காளதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான் மற்றும் நேபாளம் தொழில்நுட்ப பொருளாதார ஒத்துழைப்பு, சர்வதேச வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடு ஆகியவற்றை வலுப்படுத்தவும் மேம்படுத்தவும்
ஆர்.சி.இ.பி. (RCEP) ஒருங்கிணைந்த வர்த்தக மண்டலம் ஆஸ்திரேலியா, புருனே , கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், கொரியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், நியூசிலாந்து, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம் பொருள்கள் வர்த்தகம், சேவை வர்த்தகம், முதலீடுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, தீர்வு மற்றும் பல பிரச்சனைகளுக்கு உயர் தரமான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் வகையிலான ஒப்பந்தத்தை ஏற்படுத்த
ஈ.எ.எஸ் (EAS) கிழக்கு ஆசிய உச்சிமாநாடு 10 ஆசிய நாடுகள் மற்றும் ஐக்கிய அமெரிக்கா, சீனா, இந்தியா, ஜப்பான் உள்பட முக்கிய எட்டு நாடுகள் அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவிக்க
ஜி.சி.சி (GCC) வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் பஹ்ரைன் , குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், இந்தியா பொதுவான நோக்கங்கள் மற்றும் ஒத்த அரசியல் மற்றும் கலாச்சார அடையாளங்களின் அடிப்படையில் ஒற்றுமையை அடைய
பி.பி.ஐ.என்(BBIN) வங்காளதேசம், பூடான், இந்தியா, நேபாளம் எரிசக்தி ஆற்றலுக்காக
ஷாங்காய் ஒத்துழைப்பு நிறுவனம் (SCO) இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பது, எல்லை பிரச்சினைகளைத் தீர்ப்பது நுண்ணறிவு பகிர்வு மற்றும் பயங்கரவாதத்தை எதிர்கொள்வது

பிரிக்ஸின் நோக்கங்கள்

  • பிராந்திய வளர்ச்சியை அடைவது
  • வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இடையே பாலமாக செயல்படுவது
  • மனித மேம்பாட்டிற்கு மிகப்பரந்த அளவில் பங்களிப்பு செய்தல்
  • அதிக சமத்துவம் மற்றும் நியாயமான உலகத்தை ஏற்படுத்துதல்
  • வணிக ஒத்துழைப்பை அதிகரிக்க பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே உள்நாட்டு நாணயங்கள் மூலம் வணிகம் மேற்கொள்வதை ஊக்குவித்தல் மற்றும் நடப்பு சர்வதேச சிக்கல்களை எதிர்கொள்ளுதல்
  • உறுப்பு நாடுகளிடையே தகவல் தொழில்நுட்பங்களைப் பரிமாறிக் கொள்வதை ஊக்குவித்தல், உறுப்பு நாடுகளில் வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு பொருளாதார மாற்றங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல்.
  • பிரிக்ஸ் (BRICS) என்ற சொல் ஜிம் ஓ’நேய்ல் (Jim O’Neill) என்ற பிரபலமான பிரிட்டிஷ் பொருளாதார நிபுணரால் உருவாக்கப்பட்டது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் 2050ஆம் ஆண்டு வாக்கில் ஆறு தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளைவிட டாலர் மதிப்பில் பெரிய நாடுகளாக உருவாகும் என்றும் கடந்த 300 ஆண்டுகளின் அதிகாரப் போக்கு முற்றிலும் மாறுபடும் என்றும் அவர் ஊகித்தார்.

பிரிக்ஸ் நிதி கட்டமைப்பு

  • புதிய மேம்பாட்டு வங்கி (NDB) என்பது பல துறை வளர்ச்சி வங்கி ஆகும். அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களுக்குக் கடன் வழங்குவதே இதன் முதன்மைச் செயலாகும்.
  • தேசிய அளவில் ஏற்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களான சமூக சுற்றுச்சூழல் மற்றும் நீடித்த பொருளாதாரத் திட்டங்களுக்குப் பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை மேம்படுத்தும் திட்டங்களுக்கு இது முன்னுரிமை வழங்குகிறது.
  • அவசரகால நிதி ஒதுக்கீடு ஏற்பாடு (CRA) நாணய விவகாரங்கள் உள்ளிட்ட உலக அளவிலான பண நெருக்கடியில் இருந்து பாதுகாத்திட அடிப்படைத் திட்டம் வழங்க வகை செய்கிறது.

பிரிக்ஸ் பணம் செலுத்தும் திட்டம்

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளின் அமைச்சர்கள் பணம் செலுத்தும் முறை தொடர்பான ஆலோசனைகளைத் தொடங்கினர். இது உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி, செய்திப் பரிமாற்ற அமைப்பிற்கு (SWIFT – Society for Worldwode Interbank Financial Telecommunication System) மாற்றாக இருக்கும்.

உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பை அதிகரிக்கும் காரணிகள்

  • முதலாவதாக வளரும் நாடுகளிடையே தற்போதைய சூழ்நிலையைப் பிரதிபலிக்கும் ஒரு பொருளாதார ஒழுங்கை உருவாக்குவதற்கு பிரிக்ஸ் அமைப்பு முயற்சிகளைத் தூண்டும்.
  • இது தொடர்பாக மாற்றங்களை வரையறுப்பதற்கான புதிய வளர்ச்சி வங்கி (NDB) மற்றும் அவசர ஒதுக்கீடு ஏற்பாடு (CRA) ஆகியவற்றின் யோசனையானது பொருளாதாரம் மற்றும் அரசியலில் மிகுந்தத் தாக்கத்தை ஏற்படுத்தும்.
  • இரண்டாவதாக உலக நிர்வாகத்தில் பிரிக்ஸ் நாடுகளின் மாற்று யோசனை இதர நாடுகளின் ஆதரவை ஈர்க்கும்.
  • மூன்றாவதாக மற்ற துறைகளுடனான பிரிக்ஸ் தொடர்புகளின் விரிவாக்கம் அதை மேலும் வலுவான கூட்டாண்மையாக உருவாக்கும்.

பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு (OPEC)

  • பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள்) ஈராக்கில் பாக்தாத் நகரில் நிறுவப்பட்ட ஒரு அரசு அமைப்பாகும்.
  • இதன் தலைமையகம் ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் உள்ளது. ஒபெக் நிறுவன உறுப்பினர்கள் ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் ஆகும்.
  • இவ்வமைப்பில் மூன்று வகையான உறுப்பினர்கள் முறையே நிறுவன உறுப்பினர்கள், குழு உறுப்பினர்கள், இணை உறுப்பினர்கள் உள்ளனர்.
  • தற்போது இவ்வமைப்பில் 15 உறுப்பினர்கள் உள்ளனர். தற்போது இவ்வமைப்பில் 15 உறுப்பினர்கள் உள்ளனர். (தென் அமெரிக்காவில் 2, மத்திய கிழக்கில் 6, ஆப்பிரிக்காவில் 7).
  • கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் மற்றும் அமைப்பின் நோக்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் எந்த ஒரு நாடும் ஒபெக் அமைப்பில் உறுப்பினராகலாம்.

OPEC இலச்சினை

இது 1969 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு சர்வதேச வடிவமைப்புப் போட்டியின் மூலம் இச்சின்னமானது தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆஸ்திரிய வடிவமைப்பாளர் ஸ்வோபோடா இதை வடிவமைத்து போட்டியில் வென்றார். இது இந்த அமைப்பினுடைய பெயரின் வெவ்வேறு எழுத்துக்களை (OPEC) ஒரு வட்டமான வடிவமைப்பில் காணலாம்.

பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பின் திட்டம்

  • அதன் உறுப்பு நாடுகளுக்குள் எண்ணெய் கொள்கைகளை ஒருங்கிணைத்தல்
  • எண்ணெய் சந்தையை நிலைநிறுத்த உதவுதல்
  • பெட்ரோலிய உற்பத்தியாளர்களுக்கு நியாயமான நிலையான வருவாய் கிடைப்பதை ஊறுதி செய்தல்
  • எண்ணெய் நுகர்வு செய்யும் நாடுகளுக்குத் திறமையான, சிக்கனமான, வழக்கமான, விநியோகத்தை அளித்தல்
  • பெட்ரோலியத் தொழிலில் முதலீடு செய்பவர்களுக்கு மூலதனத்திற்கு நியாயமான வருவாய் கிடைக்கச் செய்தல்

ஒபெக் எவ்வாறு பிற நாடுகளுக்கு உதவி செய்கின்றன?

பெட்ரோலிய ஏற்றுமதி செய்யும் நாடுகளின் சர்வதேச மேம்பாட்டு நிதி (OPID) என்பது குறைந்த வட்டி வீதத்தில் கடன் அளிக்கும் நிதி நிறுவனம் ஆகும். இது சமூக மற்றும் மனிதாபிமானத் திட்டங்களுக்கு மானியங்களை வழங்குகிறது.

புத்தகங்கள், அறிக்கைகள், வரைபடங்கள், பெட்ரோலிய எரிசக்தி மற்றும் எண்ணெய் சந்தை தொடர்பான மாநாட்டு நடவடிக்கைகள் உள்பட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கொண்ட ஒரு தகவல் மையத்தை ஒபெக் கொண்டுள்ளது. இத்தகவல் மையம் பொதுமக்களாலும் பெரும்பாலும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களாலும் அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஒபெக் நாடுகளுடனான இந்தியாவின் உறவு

  • கச்சா எண்ணெய் அதிக அளவில் நுகர்வு செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒண்று. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் தங்களுடைய ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன.
  • 86 சதவிகித கச்சா எண்ணெய், 70 சதவிகித இயற்கை எரிவாயு ஆகியவற்றை இந்தியா ஒபெக் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அதிக எண்ணெய் தேவையினால் இந்தியா ஒரு சிறந்த பங்காளராக ஒபெக் நாடுகளால் அடையாளம் காணப்படுகிறது.
  • இந்தியாவில் போதுமான எண்ணெய் வள இருப்பு இல்லை. இதனால் எண்ணெய்யை இந்தியா உற்பத்தி செய்ய முடியாது. அதனால் இந்தியா விவசாயம் மற்றும் தொழில்துறை உற்பத்தியில் வலுவான கவனம் செலுத்துகிறது.

முடிவுரை

இந்தியா பொருளாதாரம் மற்றும் வணிக ஒத்துழைப்பு தவிர ஒரு நட்பான நீடிக்கப்பட்ட உறவினை தனது அண்டை நாடுகளுடன் ஏற்படுத்திக் கொள்ள விரும்புகிறது. மேலும் கல்வி, சுகாதாரம், தீவிரவாத எதிர்ப்பு, பேரிடர் மேலாண்மை, குடிமக்களுக்கான வேலைவாய்ப்பு, குற்றங்களைக் கட்டுப்படுத்தல், தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைக்க விரும்புகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!