Tnpsc

இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள் Notes 11th Economics

11th Economics Lesson 3 Notes in Tamil

3. இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள்

“சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம்”

அறிமுகம்

  • இந்தியா 1947-ல் சுதந்திரம் அடையும் போது, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலே இருந்தது. அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்களில் பின்தங்கிய நிலையில் இருந்ததால் தொழில்மயமாதல் மிகக் குறைவாகவும், உறுதியின்றியும் இருந்தது. விவசாயத்துறை நிலப்பிரபுக்களின் கையில் இருந்தது. எனவே, அங்கு உற்பத்தித்திறன் மிகவும் குறைவாக இருந்தது.
  • போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு பின்தங்கிய நிலையிலே காணப்பட்டன. கல்வி மற்றும் சுகாதார வசதிகள் போதுமானதாக் இல்லை. மேலும் சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள் கானல் நீராகவே இருந்தது.
  • சுருங்க்க்கூறின், வறுமையும், வேலையின்மையும் நாட்டின் இரண்டு மிகப்பெரிய பிரச்சனைகளாக இருந்தது. இதன் காரணமாக மக்களின் வாழ்க்கைத்தரம் பின் தங்கிய நிலையில் இருந்தது.
  • சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் 1991-ஆம் ஆண்டு, இந்திய பொருளாதாரத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. ஒரு பெரிய பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்தித்தது. வெளிநாட்டு வாணிபக் கணக்கில் பேரிழப்பு ஏற்பட்டு இருந்தது. எனவே இந்தியா புதிய பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டுவர வேண்டியிருந்தது.
  • இந்திய பொருளாதார அமைப்பில் பெரும்பாலன மாற்றங்களைக் கொண்டு வர வேண்டியிருந்தது. நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்தும் கொள்கைகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் பொருளாதார நெருக்கடிகளுக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைத்தது.
  • இந்த கொள்கைகள் தொழிற்சாலை, வணிகம், நிதி மற்றும் வேளாண்மை போன்ற பொருளாதாரத்தின் பல துறைகளின் பலவீனத்தையும், முட்டுக்கட்டையாக உள்ள கடுமையான தடைகளை மாற்றுவதையும் முக்கிய நோக்கமாக கொண்டிருந்தது.

தாராளமயம், தனியார்மயம் மற்றும் உலகமயமாதல் என்பதன் பொருள் (LPG)

தாராளமயம், தனியார்மயம் மற்றும் உலகமயமாதல் என்ற கருத்துருக்கள் புதிய பொருளாதாரக் கொள்கையின் மூன்று முக்கிய தூண்களாக இருந்தன.

தனியார் மயமாதல்

தனியார்மயமாக்குதல் என்பது பொதுத்துறையின் நிர்வாகம் மற்றும் உரிமையை தனியாருக்கு மாற்றுவதைக் குறிக்கும். அரசின் நாட்டுடைமையாக்குதலின்மை, அரசு முதலீடுகள் குறைப்பு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் துறைக்கு மாற்றியமைத்தல் போன்றவையே தனியார்மயமாதலின் சாராம்சம் ஆகும்.

உலகமயமாதல்

உள்நாட்டுப் (இந்தியா) பொருளாதாரத்தையும் ஏனைய உலக பொருளாதாரத்தையும் இணைப்பது உலகமயமாதல் எனப்படும். சுங்க வரிக் குறைப்பு மற்றும் சுங்க வரி தவிர்ப்பு போன்ற செயல்பாடுகளின் மூலம் இறக்குமதியை எளிமைப்படுத்துதல், அயல்நாட்டு நேரடி முதலீடு (FDI) மற்றும் அயல்நாட்டு தொகுப்பு முதலீடுகளுக்கான (FPI) கதவுகளைத் திறந்து வைப்பது போன்ற ஒரு சில நடவடிக்கைகள் உலகமயமாக்குதலின் அளவீடுகள் ஆகும்.

LPGக்கு ஆதரவான கருத்துகள்

அ) இந்தியாவில் பொருளாதார நடவடிக்கைகளை எளிதாகத் துவங்க இயலாத அளவுக்கு கட்டுப்பாடுகள் இருந்தன. அரசு உரிமைக்கொள்கைகளைச் சற்றே தளர்த்துவது அவசியமாக இருந்தது.

ஆ) பொருளாதார வளர்ச்சியில் தனியார் துறைக்குப் போதுமான வாய்ப்புகளை வழங்கப்படவில்லை என்ற கருதப்பட்டதால் தனியார்மயமாதல் அவசியமானது.

இ) வளர்ச்சி குன்றிய நாடுகளின் உதவியின்றி வளர்ந்த நாடுகள் மேலும் வளர முடியாது. இதற்கு உலகமயமாதல் அவசியமாகிறது. வளரும் நாடுகளின் இயற்கை மற்றும் மனித வளங்கள் முழுவதையும் வளர்ந்த நாடுகள் சுரண்டிக்கொள்கின்றன. வளர்ந்த நாடுகள் தங்களது உற்பத்திப் பண்டங்களை சந்தைப்படுத்தும் அங்காடியாக வளரும் பொருளாதார நாடுகளைப் பயன்படுத்திக் கொள்கின்றன. வளர்ந்த நாடுகள் தங்களுடைய உபரி முதலீட்டை பின்தங்கிய நாடுகளில் அதிகமாக செய்கின்றன. பழைய வழக்கொழிந்த தொழில்நுட்பங்களை வளர்ச்சி குன்றிய நாடுகளுக்கு விற்பதன் மூலம் வளர்ந்த நாடுகள் முன்னேறுகின்றன. முடிவாக, பணக்கார நாடுகள் வளரும் நாடுகளின் பொருளாதாரத்தினால் மேலும் வளர்கின்றன.

LPGற்கு எதிரான கருத்துகள்

அ) தாராளமயமாக்கும் கொள்கை வெளிநாட்டில் உள்ள பெரிய நிறுவனங்களுக்கு வசதியாகிவிட்டது. வெளிநாட்டு பெரிய நிறுவனங்களை எதிர்க்க இயலாத உள்நாட்டு நிறுவனங்கள் பாதிப்பிற்குள்ளாயின.

ஆ) தனியார் மயமாக்குதல் பெரிய நிறுவனங்களின் முற்றுரிமைச் சக்தியினை வளர்க்கும் என்ற வாதம் உள்ளது. ஆதிக்கம் நிறைந்த நிறுவனங்கள் மட்டுமே தொழில் நீடித்திருக்க முடியும். இதில் சமூகநீதியை எதிர்பார்க்கவோ, நிலைநாட்டவோ முடியாது. எனவே மக்களிடையேயும், வட்டார அளவிலும் வேறுபாடுகள் அதிகரித்து வருகின்றன.

இ) உலகமயமாக்குதல் அனைத்து நாடுகளையும் ஒன்றிணைந்து ஒரே குடையின்கீழ் கொண்டு வந்தது. உலகமயமானது பொருளாதார சக்திகளை உலக அளவில் மறுபகிர்வு செய்ய வழிவகை செய்கிறது. ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் பொருளாதாரச் சிக்கல்கள் வாணிகத்தின் வாயிலாக வளரும் நாடுகளுக்குப் பரவின.

1991-க்குப்பின்னர் இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள்

  1. வெளிநாட்டுச் செலாவணியின் கையிருப்பு அதிகரிக்கத் துவங்கியது.
  2. தொழில்மயமாதல் விரைவாக நடைபெற்றது.
  3. நுகர்வு முறை மேம்படத் துவங்கியுள்ளது.
  4. விரைவு நெடுஞ்சாலைகள், மெட்ரோ ரயில், மேம்பாலங்கள், விமான நிலையங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் பெருகி வருகிண்றன. ( இந்த வசதிகள் ஏழைகளுக்கு எட்டப்படவில்லை)
  • சில துறைகளின் வளர்ச்சியின் பலன்கள் சமுதாயத்தில் விளிம்புநிலை மக்களுக்கு சென்றடையவில்லை. தவிர சமூக, பொருளாதார , அரசியல், மக்கட்தொகை மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மற்றும் சவால்களை அவை தோற்றுவிக்கின்றன.
  • துறைகளின் முன்னேற்றம் நன்மைகளை கொண்டு வருகிறது. ஆனால் அது எந்த பிரிவினரைச் சென்றடைகிறது என்பது சமூக, பொருளாதார நிலையைச் சார்ந்தது. இந்தியப் பொருளாதாரத்தில் இத்தகைய அனைத்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், வறுமை, வேலையின்மை, பேதங்காட்டுதல், சமுதாய புறக்கணிப்புகள், வளம்குன்றிய நிலை, பின்தங்கிய பொருளாதாரம், பணவீக்கம் அதிகரித்தல், வேளாண்மையில் தேக்கம், உணவு பாதுகாப்பின்மை மற்றும் தொழிலாளர்கள் இடப்பெயர்ச்சி ஆகிய அடிப்படைப் பொருளியல் பிரச்சினைகளை பெருமளவு இந்திய மக்கள் எதிர்கொள்கின்றனர்.
  • இவற்றுக்கு அரசின் கொள்கைகளை மட்டுமே குறைகூறக் கூடாது. தனிநபர்களின் மதிப்புகள், நம்பிக்கைகள், விதிமுறைகள் ஆகியவையும் காரணமென புதிய நிறுவனப் பொருளியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.

முதலீட்டு விலக்கல் (DISINVESTMENT)

முதலீட்டு விலக்கல் என்பது பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை பிற தனியார் நிறுவனங்கள் அல்லது வங்கிகளுக்கு விற்பது. முதலீட்டு விலக்கம் முழுவதுமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்திய பொருளாதாரத்தின் நிலைமை

(குறிப்பிட்ட காலத்தில் இந்திய பொருளாதாரத்தின் நிலைமை இங்கு சுருக்கமாக குறிப்பிடப்படுகிறது. ஆனாலும் மாற்றங்கள் தவிர்க்கப்பட முடியாதவை.)

  • பன்னாட்டு பண நிதியத்தின் (IMF) கணிப்புப்படி, 2016-ல் இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் (GDP) அளவு (நடப்பு விலையில்) 2251 பில்லியன் அமெரிக்க லாடராக இருந்தது. நாணய மாற்று வீதத்தின் அடிப்படையில் உலக மொத்த GDP மதிப்பில் இந்தியாவின் பங்கு 2.99 விழுக்காடு ஆகும். ஆனாலும் இந்தியா உலக மக்கள் தொகையில் சுமார் 17.5 சதவீதத்தையும் , உலக நிலப்பரப்பில் 2.4 சதவீதத்தையும் கொண்டுள்ளது.
  • ஆசிய நாடுகளில் , மொத்த உற்பத்தியில் சீனா (CHINA) ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அடுத்து இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. 2016-ல் மொத்த ஆசியாவின் GDP-அளவில் 8.50 சதவீதமாக இந்தியாவின் பங்காக உள்ளது.

தொழில் துறைச் சீர்திருத்தங்கள்

  • புதிய தொழிற்கொள்கையை ஜூலை 24, 1991-ல் பிரதமர் அறிவித்தார். புதிய கொள்கை தொழில்துறையில் கணிசமாக கட்டுப்பாடுத் தளர்த்தியது.
  • தொழிற்கொள்கையின் முதன்மையான நோக்கங்கள் அதிகாரத்தின் பிடியில் இருக்கும் பல தொழில்களை முன்னேற்றுவது , வெளிநாட்டு நேரடி முதலீடுகளில் உள்ள கட்டுப்பாடுகளை ஒழிப்பது. ,RTP – சட்டக் கட்டுப்பாடுகளிலிருந்து உள்நாட்டு நிறுவனங்களை தளர்த்துவது, உற்பத்தித் திறனிலும், வேலைவாய்ப்பிலும் நீடித்த வளர்ச்சியைப் பராமரிப்பது மற்றும் சர்வதேச போட்டிகளை எதிர்கொள்வது ஆகியனவாகும்.

தொழிற்கொள்கையில் அரசு எடுத்த முக்கிய முயற்சிகள்

தொழிற்கொள்கை பின்வரும் மாற்றங்களை தொழில் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.

  1. தொழில் உரிமங்கள் விலக்கம் செய்யப்பட்டன.
  2. தொழில் துறையில் உள்ல ஒதுக்கீட்டை நீக்குதல்.
  3. பொதுத்துறைக் கொள்கை (கட்டுப்படுகள் நீக்கம் மற்றும் சீர்திருத்தங்கள்) கொண்டுவரப்பட்டது.
  4. MRTP – சட்டம் ஒழிப்பு
  5. அந்நிய முதலீட்டுக் கொள்கை மற்றும் அந்நிய தொழில்நுட்பக் கொள்கை கொண்டுவரப்பட்டது.

  1. தொழில் உரிம விலக்களித்தல் அல்லது சிவப்பு நாடாமுறை ஒழிப்பு

1991-ன் புதிய தொழிற்கொள்கையின் மிக முக்கிய அம்சம் என்னவெனில், தொழிலுக்கு உரிமம் பெறுவதிலிருந்து விலக்களித்தல் மற்றும் சிவப்பு நாடா முறையை முடிவுக்கு கொண்டுவருதலாகும். தொழில் உரிமைக் கொள்கையின் கீழ்தனியார் துறை தொழில் துவங்க உரிமம் பெறவேண்டியிருந்தது.

  1. தொழிற்துறையில் உள்ள ஒதுக்கீட்டை நீக்குதல்

முன்னதாக மூலதன தொழிற்சாலைகளும், முக்கிய தொழிற்சாலைகளும் பொதுத்துறைக்கென ஒதுக்கப்பட்டது. தற்போது தொழிற் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு பெரும்பாலான தொழில்கள் தனியார் துறைக்கு திறந்துவிடப்பட்டது. புதிய தொழிற் கொள்கையின் கீழ் அணுசக்தி, சுரங்கம் மற்றும் இரயில்வே ஆகிய மூன்று துறைகள் மட்டுமே பொதுத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த மூன்று துறை தவிர ஏனைய தூறைகள் தனியார் துறைக்கு திறந்துவிடப்பட்டது.

  1. பொதுத்துறை தொடர்பான சீர்திருத்தங்கள்

பொதுத்துறை சீர்திருத்தங்கள் என்பது திறமையாக இயங்கும் நிறுவனங்களுக்கு தன்னாட்சி வழங்குவதாகும். பொதுத்துறையில் எந்தெந்த துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பஹை அரசு அடையாளம் காண்கிறது. தனது முதலீட்டுக் குறைப்புக்கொள்கை மூலம் பொதுத்துறையை மாற்றியமைக்கிறது. நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்க வழிவகுக்கப்பட்டுள்ளது.

  1. முற்றுரிமை வாணிப கட்டுப்பாட்டுச் சட்டத்தை (MRTP) ஒழித்தல்

1991-ம் ஆண்டைய புதிய தொழிற்கொள்கை முற்றுரிமை வாணிப கட்டுப்பாட்டுச் சட்டத்தை அகற்றியது. 2010-ல் போட்டிக்குழு ஏற்படுத்தப்பட்டது. இது பொருளாதாரப் போட்டி நடைமுறைகளைக் கண்காணிக்கும். இக்கொள்கை தனியார் தூறையில் போட்டியை ஏற்படுத்தவும், குறித்த எண்ணிக்கையிலான வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்கவும் செய்தது.

  1. வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை

பொருளாதர சீர்திருத்தத்தின் மற்றொரு முக்கிய அம்சம் வெளிநாட்டு முதலீட்டிற்கும் மற்றும் வெளிநாட்டு தொழில் நுட்பத்திற்கும் சிவப்புக் கம்பள வரவேற்பு தருவதாகும். இந்த நடவடிக்கை நாட்டில் தொழில்துறையில் போட்டியை ஏற்படுத்தி வணிகச் சூழலை மேம்படுத்தியுள்ளது. அயல்நாட்டு நேரடி முதலீடு (FDI) மற்றும் அயல்நாட்டு தொகுப்பு முதலீடு (FPI) ஆகியவற்றிற்கு இலகுவான வழி திறந்துவிடப்பட்டது. 1991-ல் சில உயர் தொழில்நுட்பம் மற்றும் பேரளவு முதலீடு தேவைப்படும் முக்கிய தொழிற்சாலைகளுக்கு அனுமதியளித்தது. இதில் 51-சதவீத பங்குகள் வரை அயல்நாட்டு நேரடி முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டது. இதன் அளவு பல நிறுவனங்களுக்கு 74 சதவீதமாகவும், பின்னர் 100- சதவீதமாகவும் மாற்றியமைக்கப்பட்டது. இதனால் பல புதிய நிறுவனங்கள் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் நேரடி வெளிநட்டு முதலீடு செய்ய பன்னாட்டு நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளவும், வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கவும், வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் (FIPB) அமைக்கப்பட்டது.

வேளாண் துறையில் சீர்திருத்தங்களின் தாக்கம்

  • பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளின் தொடக்கத்திலிருந்தே, இந்தியப் பொருளாதாரம், தொழில்துறை மற்றும் சேவைத்துறைகளில் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது. இருந்தாலும், இவ்வளர்ச்சி வேளாந்துறை வளர்ச்சியைத் தடைசெய்தது.
  • (1984 -85-ல் 3.62 சதவீதமாக இருந்த வளர்ச்சி, 1995-96 முதல் 2004- 05 வரை 1.97 சதவீதமாகக் குறைந்தது) வேளாந்துறையில் விளைச்சல் மற்றும் உற்பத்தித் திறனில் ஒரு பெரிய இடைவெளியைப் பதிவு செய்துள்ளது, இதனால் பணப்பயிர்ப் பயிரிடுதலுக்கு விவசாயிகள் இடம்பெயர்ந்தனர். மேலும், கடன் சூழல்களால் பல்வேறு விவசாயக் குடும்பங்கள் வறுமைக்கும், தற்கொலை போன்ற கொடூர முடிவுகளைக் கையிலெடுக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

பயிர் காப்பீடு

18 பிப்ரவரி 2016-ல், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (The Pradhan Mantri Fasal Bima) அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி விவசாயிகள் கோடைகாலப் பயிர்களுக்கு 2%, மற்றும் குறுவை சாகுபடி பயிர்களுக்கு 1.5% என்ற ஒரே சீரான சந்தாத் தொகை கட்ட உதவுகிறது. தோட்டப்பயிர்கள் மற்றும் பணப்பயிர்களுக்கு வருடாந்திர சந்தா 5% ஆக இருக்கும்.

குளிர்பதன சேமிப்புக் கிடங்கு

  • பழங்களின் உற்பத்தியில், இந்தியா உலக அளவில், மிகப் பெரிய உற்பத்தியாளராகவும், காய்கறிகள் உற்பத்தியில் இரண்டாவது மிகப் பெரிய உற்பத்தியாளராகவும் விளங்குகிறது. இருந்தபோதிலும், அறுவடைக்குப் பின்னால் ஏற்படும் 25% முதல் 30% வரையிலான இழப்புகளினால், தனிநபருக்குக் கிடைக்கக்கூடிய பழங்கள் மற்றும் காய்கறிகளின் அளவு மிக்க்குறைவாகவே உள்ளது.
  • அது தவிர நுகர்வோரை அடையும் நேரத்தில் பண்டத்தின் தரம் கனிசமான அளவில் குறைகிறது. விரைவில் அழுகும் தன்மையுடைய பழங்கள் மற்றும் காய்கறிகளை சந்தைப்படுத்துவதில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
  • இது அதிக வியாபாரச் செலவுகள், சந்தைகளில் தேக்கம் , விலையில் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பல பிரச்சனைகளுக்கும் காரணமாக அமைகிறது. இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க, இந்திய அரசு மற்றும் வேளாண் அமைச்சகம், 1955ஆம் ஆண்டு அத்தியாவடியப் பொருட்கள் சட்டத்தின் மூன்றாவது பிரிவின்படி, “குளிர்பதன கிடங்கு ஆணை 1964” Cold Storage Order, 1964”, என்பதை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும் இன்றவும் குளிர்பதன சேமிப்பு கிடங்கு வசதி போதிய அளவில் இல்லை.

உழவர் கடன் அட்டைத்திட்டம்

  • உழவர் கடன் அட்டை, கிஷான் கிரெடிட் கார்ட் (KCC) என்பது கடன் தேவைப்படுகிற ஒரு விவசாயியின் தகுதிக்கேற்ப கடன் மிக எளிதாக மற்றும் சரியான நேரத்தில் வழங்குவதற்கான ஒரு ஏற்பாடாகும்.
  • இது 1998-ம் ஆண்டில் இந்திய மைய வங்கி மற்றும் “விவசாய மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கு” (National Bank for Agricultural and Rurul Development, NABARD) ஆகியவற்றால் தொடங்கப்பட்டது.
  • விவசாயிகள் கடனுக்காக முறைசாரா வங்கிகளைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதே அதன் நோக்கமாகும்.
  • முறைசாரா வங்கிகளில் கடன் பெறுவது எளிது; ஆனால் வட்டி வீதம் அதிகம். இந்த கடன் அட்டையை பிராந்திய, கிராமப்புற, கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகள் வழங்குகிறது. மேலும் அரசு KCC- கடன் அட்டையை மின் தகவல் கடன் அட்டையாக (Smart card cum debit card) அட்டையாக மாற்றி வழங்க அறிவுறுத்தியுள்ளது.

அறுவடைக்குப் பின் எடுக்கப்படும் நடவடிக்கைகள்

  • இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (Indian council of Agricultural Research – ICAR), 2012-13ஆம் ஆண்டுக்கான விபரங்களைக்கொண்டு, 2014-ல் ஆம் ஆண்டு மொத்த விற்பனை விலையில் வேளாண்மையில் அறுவடைக்குப்பின் ஓராண்டுக்கான இழப்பீடு, ரூ.92,651 கோடியாகவுள்ளதாக கணித்துள்ளது.
  • விவசாய விளை பொருட்களின் விரயங்களைக் குறைப்பதற்காகவும் மற்றும் அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்புகளைக் குறைப்பதற்கும், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளின் அமைச்சகம் (MOFPI), மத்திய அரசுத் திட்டங்களின் பல்வேறு கூறுகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.
  • பெரிய உணவுப்பூங்கா, ஒருங்கிணைந்த குளிர் இணைப்பு (அறுவடை இடத்திலிருந்து பாதுகாப்பு பெட்டகம் வரும்வரை குளிர்பதன வசதி), மதிப்புக் கூட்டி பாதுகாக்கும் கட்டமைப்பு, நவீன இறைச்சி வதைக் கூடங்கள்.
  • தர உத்திரவாதத் திட்டம்; தரக் குறியீடு (அறிவியல் பூர்வமான தரக் குறியீடு) ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் பிற முன்னேற்ற நடவடிக்கைகள், மேலும் தோட்டக்கலை மற்றும் தோட்டக்கலை அல்லாத பொருட்களின் அறுவடைக்குப் பின் நேரிடும் இழப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, விளைநிலங்களிலிருந்து நுகர்வோரை அல்லது உற்பத்திப் பகுதியிலிருந்து அங்காடி வரையிலான ஒருங்கிணைந்த குளிர்பதன மற்றும் பதப்படுத்தும் கட்டடைப்பு வசதிகளை இந்திய அரசு செய்துள்ளது.
  • 2008-09 ஆம் ஆண்டு முதல் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும் முன்னேற்றம் என்பது கண்கூட தெரியவில்லை.
உணவுப்பொருள் கழிவுகள் (%)
பயிர்கள் கூட்டு விரயங்கள் (சதவீதங்களில்)
தானியங்கள் 5-6
பருப்பு வகைகள் 6-8
எண்ணெய் வித்துக்கள் 3-10
பழங்கள் மற்றும் காய்கறிகள் 5 – 16
பால் 1
மீன் வளம் (நிலத்தில்) 5
மீன் வளம் (கடலில்) 10
இறைச்சி 3
கோழி 7
(ஆதாரம் : மூல உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளின் அமைச்சகம் – இந்திய அரசு 2016)

விவசாய பொருட்களுக்கான அங்காடி குழு Agricultural Produce Market Committee (APMC)

விவசாய பொருட்களுக்கான அங்காடிக்குழு, வேளாண்மை அல்லது தோட்டக்கலை அல்லது கால்நடைப் பொருட்களை வர்த்தகம் செய்வதற்கு மாநில அரசாங்கத்தால் உருவக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வமான அமைப்பு ஆகும்.

APMC ன் செயல்பாடுகள்

APMCன் பணிகள் பின்வருமாறு

  1. வேளாண் சந்தைகளில் பொது மற்றும் தனியார்களிடையே கூட்டுறவை வளர்ச்சி பெறச் செய்தல்.
  2. சந்தை சார்ந்த விரிவாக்க சேவைகளை விவசாயிகளுக்கு வழங்குதல்.
  3. விலை நிர்ணயம் மற்றும் அங்காடிப் பரிமாற்றங்களில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருதல்.
  4. விவசாய உற்பத்திகளை விற்பனை செய்த அதேநாளில் விவசாயிகளுக்குப் பணம் செலுத்துவதை உறுதி செய்தல்.
  5. வேளாண் நடவடிக்கைகளை ஊக்குவித்தல்.
  6. வேளாண் பொருட்களின் வரவு மற்றும் விலை தொடர்பான புள்ளி விவரங்களை அவ்வப்போது காட்சிப்படுத்துதல்.

சீர்திருத்தங்களுக்குப் பிந்தைய விவசாய நெருக்கடிகள்

அ) இடுபொருட்களின் செலவு உயர்வு

விதைகளே விவசாயிகளுக்கான முகப்பெரிய உள்ளீடு ஆகும். தாராளமயமாக்கப்படுவதற்கு முன் நாடு முழுவதும் விவசாயிகள் மாநில அரசாங்க நிறுவனங்களிலிருந்து விதைகளைப் பெற்று வந்தனர். இந்நிறுவனங்கள் விதைகளை தாங்களே உற்பத்தி செய்து தரம் மற்றும் விலை நிர்ணயித்துக்கு முழுப் பொறுப்பாக இருந்தன. தாராளமயமாக்கல் மூலம் இந்தியாவின் விதைகள் சந்தை உலகளாவிய வேளாண் தொழிலுக்கு திறந்து வைக்கப்பட்டது. மேலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் 2003 –ஆம் ஆண்டு பல மாநில அரசு நிறுவனங்கள் மூடப்பட்டன. இது விவசாயிகளை இரட்டிப்பாகப் பாதித்தது. விலைகள் உயர்வு மற்றும் போலி விதைகள் உருவாக்கம் போன்ற பிரச்சனைகளை மேலும் பூதாகரமாக்கியது.

ஆ) வேளாண்மை மானியக் குறைப்பு

ஏற்றுமதி நோக்கத்துடன் மிளகாய், பருத்தி மற்றும் புகையிலை போன்ற பணப்பயிர்களை பாரம்பரியப் பயிர்களோடு ஊடு பயிர் வளர்ப்பதற்கு விவசாயிகளை ஊக்குவித்தனர். தாரளமயமாக்கல் கொள்கைகள், பூச்சிக்கொல்லி மற்றும் உர மானியத்தைக் குறைத்து விட்டதால் உரங்களின் விலைகள் 300% அதிகரித்தன மற்றும் மின் கட்டணங்களும் அதிகரித்துள்ளன. ஆனால் விவசாயப் பொருட்களின் விலை அந்தளவுக்கு உயரவில்லை.

இ) இறக்குமதிச் சுங்கவரி குறைப்பு

உலகமயமாக்குதலின் விளைவாக இறக்குமதி மேல் விதிக்கப்பட்ட வரிகள் குறைக்கப்பட்டன. அத்துடன் 2001-ல் 1500க்கும் மேற்பட்ட பொருட்கள் மீதான இறக்குமதிக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டன. இதன் விளைவாக இறக்குமதி மலிந்து, பொருட்கள் சந்தையில் குவிந்தன. இதனால் பருத்தி மற்றும் மிளகு போன்ற பயிர்களின் விலை சரிந்தன.

ஈ) கடன் வசதிகளை நிறுத்தி வைத்தல்

1991-க்குப் பின்னர் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உட்பட வணிக வங்கிகளின் கடனளிப்பு முறையில் ஏற்பட்ட பெரும் மாற்றத்தால் விவசாயத்திற்குப் போதுமான கடனுதவி அளிக்க இயலவில்லை. இது விவசாயிகளை அதிக வட்டி வசூலிக்கக்கூடிய வட்டிக்கடைக்காரரைச் சார்ந்திருக்கக் கட்டாயப்படுத்தியது.

வர்த்தகக் கொள்கைச் சீர்திருத்தங்கள்

1991 முதல் செயல்பட்டு வரும் புதிய வர்த்தகக் கொள்கையின் முக்கிய அம்சங்களாவன

சுதந்திரமான இறக்குமதி மற்றும் ஏற்றுமதி

1991-க்கு முன், இந்திய இறக்குமதியானது ஒழுங்குபடுத்தப்பட்டு காணப்பட்டது. 1992-லிருந்து இறக்குமதியானது வரையறுக்கப்பட்ட எதிர்மறைப் படியல் மூலம் ஒழுங்குபடுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஏப்ரல் 1, 1992 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வர்த்தகக் கொள்கையின்படி ஏறத்தாழ அனைத்து இடைவினை மற்றும் மூலதனப் பண்டங்களுக்கான இறக்குமதி சுதந்திரமாக்கப்பட்டது. 71 பொருட்கள் மட்டுமே தடைசெய்யப்பட்ட பட்டியலில் உள்ளன.

சுங்க கட்டண அமைப்பு மற்றும் அளவுக் கட்டுப்பாடுகளை நீக்குதல்

செல்லையா குழு அறிக்கையானது, இறக்குமதிக்கான தீர்வைகளை பெருமளவு குறைக்கப் பரிந்துரை செய்துள்ளது. உச்ச அளவாக 50 சதவிகிதம் குறைக்க பரிந்துரைத்துள்ளது. இந்தத் தீர்வைகளைப் படிப்படியாகக் குறைப்பதன் முதல் முயற்சியாக, 1991-92ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கையில் இறக்குமதி வரி 300 சதவீதத்திலிருந்து 150 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த நிதி அறிக்கைகளில், சுங்க வரியைப் படிப்படியாகக் குறைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஏற்றுமதி – இறக்குமதிக் கொள்கை

இந்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம், 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று 2015-2020 வரையிலான காலத்திற்கான புதிய அயல்நாட்டு வாணிபக் கொள்கையை அறிவித்தது.

ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கை (2015 – 2020):

ஏற்றுமதி சூழல்களை மேம்படுத்துதல், உற்பத்தி அதிகரிப்பு மற்றும் “இந்தியாவில் தயாரிப்பு” (Make in India) மற்றும் “மின்னணு இந்தியா” (Digital India) போன்ற திட்டங்களுக்கு ஆதரவளித்தலே இக்கொள்கையின் முதன்மையான நோக்கமாகும்.

சிறப்பம்சங்கள்:

  • ஏற்றுமதி உதவிகளை சதவீத அளவு குறைக்கவும், இந்தியப் பொருட்களை ஊக்குவிக்கவும் “இந்திய தயாரிப்பு” என்ற கருத்து உருவாக்கப்பட்டது.
  • டிஜிட்டல் இந்தியா முறைப்படி, வரித்தாக்கல், முத்திரைத்தாள் கட்டணம் செலுத்துதல் போன்றவற்றிற்கான கைபேசி செயலி மற்றும் பட்டயக் கணக்காளர், கணக்குக்காசாளர் போன்றோரால் (CA/CS/Cost Accountant) மின்னணு முறையில் கையொப்பமிடப்பட்ட ஆவணங்கள் தயாரிக்கப்படுகின்றது.
  • ஏற்றுமதியாளர்/ இறக்குமதியாளர் சுயவிவர ஆவணங்களின் அசல் நகல்களை மீண்டும் மீண்டும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
  • பாதுகாப்பு, இராணுவக்கிடங்கு , விண்வெளி மற்றும் அணுசக்தி போன்றவை தொடர்பான ஏற்றுமதிக் கோரிக்கைகளுக்கு கால அளவு மாதங்களாகும்.
  • தற்போது உலக வர்த்தகத்தில் 3% மாக இருக்கிற இந்தியாவின் பங்கை 2020-க்குள் , ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கை (2015-2020) இரு மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (Special Economic Zones)

  • அனுமதி வழங்குவதில் பெருகியிருந்த கட்டுப்பாடுகள், உள்கட்டமைப்பு வசதியின்மை, குறைவான நிதி போன்ற குறைபாடுகளைச் சமாளிக்கவும், நேரடி முதலீட்டை ஈர்க்கவும் 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிறப்பு பொருளாதார மண்டலக் கொள்கை உருவாக்கப்பட்டது.
  • பொருளாதாரச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக வணிக மற்றும் தொழில் காரணங்களுக்கான அரசாங்க நிலங்களை கையப்படுத்தும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. 2005-ம் ஆண்டின் சிறப்புப் பொருளாதார மண்டலக் கொள்கையின்படி 400 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அறிவிக்கப்பட்டன.
  • இக்கொள்கையினால் பெரும்பாலன விவசாயிகள் தங்கள் விளைநிலங்களையும் வாழ்வாதாரங்களையும் இழக்க வேண்டிய சூழ்நிலை வந்தது.
  • உலகமயமாதலோடு கூடிய ஏற்றுமதி முன்னேற்றம் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சியை அடைவதற்காக, பல நாடுகளில் SEZ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  • ஏற்றுமதி செயலாக்க மண்டல மாதிரிகளின் (Export Processing Zone – EPZ) பயன்பாட்டை உணர்ந்த நாடுகளில் முதன்மையானது இந்தியாவாகும்.
  • 1965ஆம் ஆண்டில் கண்ட்லாவில் முதல் ஏற்றுமதி செயலாக்க மண்டலம் அமைக்கப்பட்டது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் பல மண்டலங்களை உள்ளடக்கியுள்ளன.
  • எடுத்துக்காட்டாக, சுதந்திர வர்த்தக மண்டலங்கள், ஏற்றுமதி செயலாக்க மண்டலங்கள், தொழில் பூங்காக்கள், பொருளாதார மற்றும் தொழில் நுட்ப முன்னேற்ற மண்டலங்கள், உயிர் தொழில் நுட்ப மண்டலங்கள், அறிவியல் மற்றும் புதுமைப் பூங்காக்கள், இலவசத் தூறைமுகங்கள், நிறுவன மண்டலங்கள் போல இன்னும் பல.

SEZ-ன் முக்கிய நோக்கங்கள்

  1. அந்நிய முதலீட்டை அதிகரிக்க, முக்கியமாக அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்து, நம் நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) யை அதிகரித்தல்.
  2. பன்னாட்டு வியாபாரத்தில்/ உலக ஏற்றுமதியில் நமது பங்கினை அதிகரித்தல்.
  3. கூடுதல் பொருளாதார நடவடிக்கைகளை உருவாக்குதல்.
  4. வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்.
  5. கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல்.
  6. உலக அங்காடித் தொழில் நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளுதல்.

SEZ-ன் முக்கிய இயல்புகள்

  1. பாதுகாப்புடன் கூடிய நிலப்பகுதிகள்.
  2. தனி அமைப்பல் நிர்வகிக்கப்படுவது.
  3. நெறிமுறைப்படுத்தப்பட்ட நடைமுறைகள்.
  4. தனிப்பட்ட விருப்பப் பகுதியைக் கொண்டது.
  5. தாராளமய பொருளாதார சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
  6. இதில் அமையப்பெற்ற நிறுவனங்களுக்கு அதிக அளவு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அரசின் சட்டதிட்டங்களையும், கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை.

இதனால் சமூக மற்றும் சுற்றுப்புறச் சூழல்கள் பாதிக்கப்படுகின்றன.

நிதி சீர்திருத்தங்கள்

  • நிதி ஒழுங்கு மிக முக்கியம் என்பதில் ஐயமில்லை. இந்த நிதிப் பற்றாக்குறை (FISCAL DEFICIT) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்ற ஒரு வழிகாட்டுதலை பன்னாட்டு பண நிதியம் கொண்டு வந்தது.
  • இந்த வழியில் அரசானது வரவு செலவுத் திட்டத்தில் செலவுகளை இலக்காகக் கொண்டு வருவாயைப் பெருக்கும். நேரடி வரி அளவை மாற்றயமைப்பதால் ஆடம்பர நுகர்வு குறையும். எனவே பொதுநிதியைக் கூட்டுவதிலும் பொதுச் செலவைக் குறைப்பதிலும் அரசாங்கம் மிகக் குறியாக இருந்தது.
  • செலவைக் குறைக்கும் முகத்தான் உர மானியம் மற்றும் சர்க்கரை மானியங்கள் குறைக்கப்பட்டன. வருவாயை அதிகப்படுத்த பொதுத்துறைச் சொத்துக்கள் விற்கப்பட்டன. அரசு நலத்திட்டங்களுக்கான நிதியை படிப்படியாக குறைத்தது. தொழில்துறை நிறுவனங்கள் மீதான வரியைக் குறைத்தது, இதனால் ஏழை மக்களின் மீதான வரி அதிகரித்தது.

பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (GOODS AND SERVICES TAX: GST)

  • பண்டங்கள் மற்றும் பணிகள் வரி என்பது நுகர்வோர் நுகரும் பண்டங்கள் மற்றும் பணிகள் மீது விதிக்கப்படும் வரியாகும். விரிவான மறைமுக வரியாக, உற்பத்தி, விற்பனை மற்றும் நுகர்வு மீது விதிக்க இது முன்மொழியப்பட்டது. இது மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் அனைத்து மறைமுக வரிக்கு மாற்றாக கொண்டுவரப்பட்டது. இது உற்பத்தி மற்றும் பண்டங்கள் பணிகள் மீதான அடுக்குவரி பாதக விளைவை நீக்கும். இந்த வரி ஒரு முனை வரியாகும். மதிப்புக் கூட்டப்பட்ட வரி (VAT )- என்பது பலமுனை வரியாகும்.
  • பண்டங்கள் மற்றும் சேவைகள் மீதான வரி 29.03.2017-அன்று பாராளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு, 2017ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் முதல் நாளன்று நடைமுறைக்கு வந்தது.

தற்போதைய வரி விகிதங்கள்

GST-யின் நன்மைகள்

  • அடுக்குவரி விளைவுகளை நீக்கியது.
  • ஒருமுனை வரியாக உள்ளது.
  • பதிவுக்கான வாசலாக உள்ளது
  • சிறிய நிறுவனங்களுக்கான கலவை திட்டங்கள் உள்ளது.
  • இணையவழி வசதி மூலம் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
  • மின்னணு வணிகம் வரையறுக்கப்பட்டுள்ளது.
  • தளவாடங்களின் திறன் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
  • அமைப்பு ரீதியற்ற துறையை ஒழுங்குபடுத்துகிறது.

பணம் மற்றும் நிதித்துறைச் சீர்திருத்தங்கள்

இச்சீர்திருத்தங்கள் வங்கியமைப்பை மிகுந்த திறனுடையதாய் மாற்ற முயற்சித்தன. வட்டி வீதங்களில் காணப்பட்ட வேறுபாடுகளைக் களைய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பணவியல் மற்றும் நிதித்துறை சீர்திருத்தங்கள்:

இச்சீர்திருத்தங்கள் வங்கியமைப்பை மிகுந்த திறனுடையதாய் மாற்ற முயற்சித்தன. வட்டி வீதங்களில் காணப்பட்ட வேறுபாடுகளைக் களைய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அவற்றுள் சில

அ) ரொக்க இருப்பு வீதம்

1991ஆம் ஆண்டு நரசிம்ம குழு பரிந்துரைப்படி, சட்ட ரீதியான நீர்மை விகிதம் ( (Statutory Liquidity Ratio SLR) மற்றும் ரொக்க இருப்பு வீதம் (Cash Reserve Ratio) குறைக்கப்பட்டது. 1991ஆம் ஆண்டில் மத்தியில் SLR மற்றும் CRR விகிதங்கள் மிக அதிகமாக இருந்தன, மூன்றாண்டு கால அளவில் SLR விகிதத்தை 38.5% லிருந்து 25% ஆகக் குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதே போன்று , CRR விகிதத்தையும் நான்கு ஆண்டுகளில் , 3.5% ஆகக் குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆ) வட்டி விகிதத் தளர்வு:

முன்னர் ,

  1. வைப்புக்களுக்கான வட்டி வீதம் மற்றும்
  2. வங்கிக் கடன்களுக்கான வட்டி போன்றவற்றை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கட்டுப்படுத்தி வந்தது. தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.
  3. பொதுத்துறை, தனியார்துறை மற்றும் அயல்நாட்டு வங்கிகளுக்கிடையேயான அதிகப்படியான போட்டியை சமாளிக்க நிர்வாகத்தில் இருந்த தடைகள் நீக்கப்பட்டன.
  4. செயல்பாட்டிலிருக்கும் வங்கிகளின் வலையமைப்பைப் பரவலாக்க வங்கிக் கிளைகளுக்கான உரிமம் வழங்குதல் தளர்த்தப்பட்டது.
  5. புதிய கிளைகளைக் கண்டறிய மற்றும் சிறப்புக் கிளைகளைத் திறக்க வங்கிகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது.
  6. புதிய தனியார் துறை வங்கிகள் தொடங்குவதற்காக வழிமுறைகள் வழங்கப்பட்டன.
  7. நரசிம்மம் குழு அறிக்கையின்படி வாராக்கடன் மற்றும் சொத்து மதிப்பினைக் கணக்கிட புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டன.

தொகுப்புரை

புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைக்குப்பின், இந்தியப் பொருளாதாரத்தின் வியத்தகு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதில் ஐயமில்லை. ஒரு நாட்டுப் பொருளாதாரத்தின் அளவே அந்நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார பலத்தை நிர்ணயிக்கும் எனிலிந்தியா 1991 முதல் உண்மையாக வளர்ந்துள்ளது. இந்திய GDP 2015-16 ஆம் ஆண்டில் 2 டிரில்லியன் டாலரைக் கடந்துள்ளது. GDPஐப் பொறுத்து நமது நாடு தற்போது ஒன்பதாவது இடத்தில் உள்ளது. ஒருமுறை Dr. இராஜ்கிருஷ்ணா அவர்களால் பயன்படுத்தப்பட்ட “இந்து வளர்ச்சி வீதம்” என்பதன் அடிப்படையில் குறைவான பொருளாதார வளர்ச்சியுடைய நாடு என்று வர்ணிக்கப்பட்ட இந்தியா தற்போது உலகில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சி கணக்கியல் அமைப்பு மாற்றங்கள் காரணமாக உள்ளது. அதனால்தான் அதிகரித்த மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் பொதுமக்களின் துன்பங்களைத் தணிக்க தவறிவிட்டது. சமூக, பொருளாதார மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலைகளில் சமனற்ற நிலை ஏற்பட்டது. வேலையின்மை, வறுமை, உடல்நலக்குறைவு போன்ற அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமலேயே உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!