Tnpsc

இந்தியாவில் கல்வி வளர்ச்சி Notes 8th Social Science Lesson 11 Notes in Tamil

8th Social Science Lesson 11 Notes in Tamil

11. இந்தியாவில் கல்வி வளர்ச்சி

“அறிவு என்பது மனிதனின் மூன்றாவது கண்”

அறிமுகம்

  • கல்வி என்பது அறிவு, திறன்கள் மற்றும் மதிப்புகளைப் பெறுதலும், பகிர்தலுமான ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும்.
  • கல்வி ஒரு முற்போக்கான சமுதாயத்தின் அடித்தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்குவதில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் வாழும் இந்த உலகமானது தொடர்ச்சியான மாற்றங்களையும், வளர்ச்சியையும் கண்டு வருகிறது. எனவே சவால்களை எதிர்கொள்ளவும் தடைகளை நகர்த்தெறியவும், நாம் நன்கு படித்தவர்களாக இருப்பதுடன் மனிதனை மேம்படுத்தும் செயலில் கல்வி எவ்வாறு பங்காற்றுகிறது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

பண்டைய கால இந்தியாவின் கல்வி

  • தொடக்க காலத்திலிருந்தே பாரம்பரியமாக கற்றல் மற்றும் கற்பித்தல் இந்தியாவில் நடைமுறையில் இருந்ததாக, வரலாற்று ஆதாரங்கள் நமக்கு தகவல்களை வழங்குகின்றன.
  • வேதம் (Veda) என்ற சமஸ்கிருத சொல்லிற்கு அறிவு என்று பொருள். இச்சொல்லானது “வித்” என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் ‘அறிதல்’ என்பதாகும்.
  • நமது பண்டைய கல்வி முறை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே உருவானது. இது தனிநபரின் உள்ளார்ந்த மற்றும் மறைந்திருக்கும் திறன்களை வெளிக்கொணர்வதன் மூலம், அவரின் முழுமையான வளர்ச்சியில் கவனம் செலுத்தியது.
  • இக்கல்வியானது பணிவு, உண்மை, ஒழுக்கம், சுயச்சார்பு மற்றும் அனைத்து படைப்புகளின் மீதும் மரியாதையுடன் இருத்தல் ஆகிய மதிப்புகளை வலியுறுத்தியது.

கற்றலுக்கான ஆதாரங்கள்

  • பாணினி, ஆர்யபட்டா, காத்யாயனா, மற்றும் பதாஞ்சலி ஆகிய பெயர்களை நீங்கள் கட்டாயம் கேள்விப்பட்டிருத்தல் வேண்டும். இவர்களின் எழுத்துக்களும் சரகர் மற்றும் சுஸ்ருதர் ஆகியோரின் மருத்துவ குறிப்புகளும் கற்றலுக்கான ஆதாரங்களாக இருந்தன.
  • வரலாறு, தர்க்கம், பொருள் விளக்கம், கட்டிடக்கலை, அரசியல், விவசாயம் , வர்த்தகம், வணிகம், கால்நடைவளர்ப்பு மற்றும் வில்வித்தை போன்ற பல்வேறு துறைகள் கற்பிக்கப்பட்டன.
  • உடற்கல்வியும் ஒரு முக்கியமான பாடத்திட்டமாக இருந்தது. மாணவர்கள் குழு விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு செயல்பாடுகளில் பங்கேற்றனர்.
  • கற்றலின் அனைத்து அம்சங்களிலும் வல்லுநராவதற்கு குருக்களும், அவரது மாணாவர்களும் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு இணைந்து பணியாற்றினர்.
  • மாணவர்களின் திறன்களை மதிப்பீடு செய்வதற்காக இலக்கிய விவாதங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. கற்றலில் மேம்பட்ட நிலையிலுள்ள மாணவர்கள் இளைய மாணவர்களுக்கு வழிகாட்டினர். சக மாணவர்களுடனான குழுக் கற்றல் முறை நடைமுறையில் இருந்தது.

பண்டைய கால இந்தியாவில் கல்வி முறை:

ஒரு வாழ்க்கை முறை

  • பண்டைய இந்தியாவில் முறையான மற்றும் முறைசாரா கல்வி இரண்டுமே இருந்தன. இல்லங்கள், கோயில்கள், பாடசாலைகள், குருகுலங்கள் ஆகியவற்றில் அப்பகுதிக்கேற்றவாறு கல்வி வழங்கப்பட்டது.
  • வீடுகள், கிராமங்கள் மற்றும் கோயில்களில் இருந்த மக்கள், சிறு குழந்தைகளுக்கு பக்தியுடன் நேர்மையான வாழ்க்கை முறைகளை வாழ ஊக்குவித்தனர்.
  • கல்வி அளிப்பதிலும், கற்றல் மையமாக செயல்படுவதிலும் கோயில்கள் முக்கிய பங்கு வகித்தன.
  • மாணவர்கள் தங்கள் உயர்படிப்புக்காக விகாரங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்குச் சென்றனர். வாய்வழியாகவே கற்பித்தல் இருந்தது.
  • குருகுலங்களில் கற்பிக்கப்பட்டவைகளை மாணவர்கள் நினைவிலும், ஆழ்சிந்தனையிலும் வைத்திருந்தனர். பல குருகுலங்கள் முனிவர்களின் பெயராலேயே அழைக்கப்பட்டன.
  • காட்டில் அமைதியான சூழலில் அமைந்த குருகுலங்களில், நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒன்றாகத் தங்கி கற்றுக் கொண்டனர்.
  • தொடக்க காலத்தில் ஆசிரியரால் (குரு/ஆச்சார்யா) தன்னை சுற்றி இருந்த மாணவர்களுக்கு கல்வி வழங்கப்பட்டது.
  • மேலும் குருவின் வீட்டில் குடும்ப உறுப்பினர் போல வந்து தங்கி கல்வி பயின்றனர். இதுவே குருகுலக் கல்விமுறை எனப்பட்டது. இந்த குருவின் குடும்பமானது வீட்டுப்பள்ளி (அ) ஆசிரமமாக செயல்பட்டது.
  • அந்த காலக்கட்டத்தில், குருக்களும் அவர்களுடைய சீடர்களும் (மாணவர்கள்) ஒன்றாக வசித்து, அன்றாட வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் உதவி செய்தனர்.
  • அக்காலத்தில் முழுமையான கற்றல், ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்தல், ஒருவரின் உள்ளார்ந்த திறமையை உணர்ந்து கொள்ளச் செய்தல் போன்றவையே கல்வியின் முக்கிய நோக்கங்களாக இருந்தது.
  • மாணவர்கள் தங்கள் இலக்குகளை அடையும் சில ஆண்டுகள் வரை தங்கள் வீடுகளை விட்டு விலகி குருகுலங்களில் வாழ்ந்தனர். குறிப்பிட்ட காலத்தில் குருவுக்கும் மாணவனுக்குமிடையேயான உறவு வலுப்பெறும் இடமாகவும் குருகுலம் திகழ்ந்தது.
  • இந்த காலகட்டத்தில் துறவிகள் மற்றும் பெண் துறவிகள் தியானம் செய்வதற்கும், விவாதிப்பதற்கும், அவர்களின் அறிவு தேடலுக்காக கற்ற அறிஞர்களிடம் கலந்து ஆலோசிப்பதற்காகவும் பல மடாலயங்கள் மற்றும் விகாரங்கள் அமைக்கப்பட்டன.
  • இந்த விகாரங்களைச் சுற்றிலும் உயர்கல்வி கற்றுக் கொள்வதற்காக பிற கல்வி மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இத்தகைய கல்வி மையங்கள் சீனா, கொரியா, திபெத், பர்மா,சிலோன், ஜாவா, நேபாளம் மற்றும் பிற தூரதேசத்து மாணர்களையும் கவர்ந்திழுத்தது.
  • பண்டைய இந்திய நகரமாக இருந்த தட்சசீலம் தற்போது வடமேற்கு பாகிஸ்தானில் உள்ளது. இது ஒரு முக்கியமான தொல்பொருள் ஆராய்ச்சிப் பகுதியாகும்.
  • இதனை 1980இல் யுனெஸ்கோ, உலக பாரம்பரியத் தளமாக அறிவித்தது.
  • சாணக்கியர், தனது அர்த்தசாஸ்திரத்தை இப்பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்து தொகுத்ததாக கூறப்படுவது இதன் சிறப்பாகும்.
  • 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் இப்பல்கலைக்கழகத்தின் இடிபாடுகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அலெக்சாண்டர் கன்னிங்காம் கண்டுபிடித்தார்.

பௌத்த சமய காலத்தில் விகாரங்களும் பல்கலைக்கழகங்களும்

  • ஜாதகக் கதைகள், யுவான் சுவாங் மற்றும் இட்சிங் (சீன அறிஞர்கள்) ஆகியோரின் குறிப்புகள் மற்றும் பிற ஆதாரங்களும் அரசர்களும், சமுதாயமும் கல்வியை மேம்படுத்துவதில் அதிக ஆர்வம் செலுத்தியதாக நமக்கு கூறுகின்றன.
  • மடாலயங்கள் மற்றும் விகாரங்கள் மூலமாக பௌத்த சமய அறிஞர்கள் தங்கள் கல்விப் பணியை மேற்கொண்டனர்.
  • இதன் விளைவாக, பல புகழ்பெற்ற கல்வி மையங்கள் தோன்றின. அவைகளுள் தட்சசீலம், நாளந்தா, வல்லபி, விக்கிரமசீலா, ஓடண்டாபுரி மற்றும் ஜகத்தாலா ஆகிய இடங்களில் தோன்றிய பல்கலைக்கழகங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவைகள் ஆகும். இந்தப் பல்கலைக்கழகங்கள் விகாரங்களின் தொடர்புடன் மேம்படுத்தப்பட்டன.
  • பனாரஸ் மற்றும் காஞ்சி ஆகிய இடங்களில் இருந்த பல்கலைக்கழகங்கள் கோயில்கள் தொடர்புடன் மேம்பாடு அடைந்தன. மேலும் அவைகள் அமைந்துள்ள இடங்கள் சமூக வாழ்க்கையின் மையங்களாக மாறின. அந்த நிறுவனங்கள் அறிவார்ந்த மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்தன.
  • அந்த மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் இணைந்து, புகழ்பெற்ற அறிஞர்களிடம் பரஸ்பர கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் மூலம் தங்கள் அறிவை வளர்த்துக் கொண்டனர்.
  • அது மட்டுமல்லாமல், மன்னரால் கூட்டப்பட்ட சபையில் பல்வேறு விகாரங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சார்ந்த அறிஞர்கள் சந்தித்து, விவாதித்து தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

ஆசிரியரின் பங்கு

  • மாணவர்களைத் தேர்ந்தெடுப்பது முதல் அவர்களின் பாடத்திட்டங்களை வடிவமைப்பது வரை அனைத்து அம்சங்களிலும் ஆசிரியர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததா இருந்தது.
  • மாணவர்களின் திறனில் ஆசிரியர் திருப்தி அடையும் போது மட்டுமே அவர்களின் கல்வி நிறைவடைந்ததாக கருதப்பட்டது.
  • அவரது விருப்பத்திற்கேற்ப பல மாணவர்களை சேர்த்துக் கொள்வதுடன், மாணவர்கள் எதை கற்க ஆர்வமாக இருந்தனரோ அதையே கற்றுக் கொடுத்தார்.
  • விவாதங்கள் மற்றும் கலந்தாலோசித்தல் ஆகியன கற்பித்தலின் அடிப்படையான வழிமுறைகளாகும். கல்வியில் மேம்பட்ட நிலையிலிருந்த மாணவர்கள் ஆசிரியர்களுக்கு உதவினர்.
  • பண்டைய காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகம் கி.பி. (பொ.ஆ) 5 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. (பொ.ஆ)12 ஆம் நூற்றாண்டு வரை கற்றலின் மையமாக இருந்தது. தற்போதைய பீகாரில் உள்ள ராஜகிருகத்தில் அமைந்துள்ள நாளந்தா பல்கலைக்கழகம் உலகின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும், நாளந்தா மகா விகாராவின் இடிபாடுகளை ஐ.நா. சபையின் யுனெஸ்கோ ( UNESCO) நிறுவனம் உலக பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளது. தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ள நாளந்தா பல்கலைக்கழகம் நாகரிகங்களுக்கிடையிலான தொடர்பு மையமாக கருதப்படுகிறது.

இடைக்கால இந்தியாவில் கல்வி

  • இந்தியத் துணைக்கண்டத்தில் இஸ்லாமிய கல்வியை அறிமுகப்படுத்தியதன் மூலம் இடைக்காலம் ஒரு மாற்றத்தைக் கண்டது.
  • உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்த படையெடுப்பாளர்களாலும் வணிகர்களாலும் நாடு தாக்குதலுக்குள்ளானது.
  • வணிகர்களும் படையெடுப்பாளர்களும் தங்களது கலாச்சாரங்களை இந்நாட்டு மக்களுடன் ஒன்றிணைத்தனர். அவற்றைத் தவிர சமயம், சமூகம், பண்பாடு மற்றும் கல்வி ஆகியவற்றில் இடைக்கால இந்தியா ஒரு புதிய கண்ணோட்டத்தை அடைந்தது.
  • முஸ்லிம்களின் ஆட்சி காலத்தில் (இடைக்காலம்) அறிவின் ஒளியூட்டமும், விரிவாக்கமும் கல்வியின் நோக்கமாக இருந்தன.
  • 16ஆம் நூற்றாண்டில் முஸ்லிம் ஆட்சியாளர்கள் தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளை நிறுவினர். அக்காலத்தில் இந்திய இஸ்லாமிய பாரம்பரியங்களுக்கிடையே ஒரு சிறந்த தொடர்பு இருந்ததால் இறையியல், சமயம், தத்துவம், நுண்கலை, ஓவியம், கட்டடக்கலை, கணிதம், மருத்துவம் மற்றும் வானியல் ஆகிய துறைகள் ஒரு புதிய கோணத்தில் மேம்பாடு அடைந்தன.
  • இருப்பினும், முஸ்லிம்கள் வருகைக்கு முன்னரே இந்தியாவில் ஒரு மேம்பட்ட கல்விமுறை நடைமுறையில் இருந்தது.
  • முஸ்லிம் ஆட்சியாளர்கள் நூலகங்கள் மற்றும் இலக்கிய சங்கங்களை ஏற்படுத்தி நகர்ப்புற கல்வியை ஊக்குவித்தனர். அவர்கள் நிறுவிய தொடக்கப் பள்ளிகள் மூலம் (மக்தப் – Maktab) மாணவர்கள் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை இஸ்லாமிய வழிபாட்டு முறைகளை கற்றனர்.
  • மேம்பட்ட மொழித்திறன்களை கற்பிக்க இடைநிலைப் பள்ளிகள் (மதரசா – Madrasa) நிறுவப்பட்டன.
  • சுல்தான்கள் மற்றும் பிரபுக்களால் பல மதரசாக்கள் அமைக்கப்பட்டன.
  • மதரசாக்களின் முக்கிய நோக்கம், தகுதியான அறிஞர்களுக்கு குடிமைப் பணிக்கான பயிற்சி அளிப்பதும், கல்வி அளிப்பதுமே ஆகும்.
  • டெல்லியில் ஒரு மதரசாவை நிறுவிய முதல் ஆட்சியாளர் இல்துத்மிஷ் ஆவார். காலப்போக்கில் பல மதரசாக்கள் உருவாயின.
  • இடைக்கால இந்தியாவில் கல்விமுறையானது உலோமாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்தக் காலங்களில், கல்வியானது சமயம் சார்ந்த பயிற்சியுடன் தொடர்புடையதாக இருந்தது. இருப்பினும், மருத்துவம், அரபு இலக்கியம், இலக்கணம் மற்றும் தத்துவம் போன்ற பல்வேறு வகையான பாடங்களும் கற்பிக்கப்பட்டன.
  • இடைக்காலம் மற்றும் நவீன கால முற்பகுதியில் அரபு மற்று மத்திய ஆசிய மக்கள் இஸ்லாமிய அடிப்படையிலான கல்வி முறைகளைக் கொண்டு வந்ததாக வரலாறு கூறுகிறது. இடைக்கால இந்தியாவில் பெண்கல்வி பரவலாகக் காணப்பட்டது.
  • ஜெய்பூரைச் சேர்ந்த ராஜா ஜெய்சிங், அறிவியல் பாடங்களின் கற்றலை ஊக்குவித்தார். இதைத்தவிர மேலும், பல கல்வி நிறுவனங்கள் தனிநபர்களாலும் தொடங்கப்பட்டன.
  • டெல்லியில் உள்ள கியாசுதீன் மதரசா மற்றும் ஷாஜகானாபாத்தில் உள்ள மௌலானா சத்ருதீன் மதரசா ஆகியன இம்முறையில் உருவான நிறுவனங்களே ஆகும்.
  • இடைக்காலத்தின் பிற்பகுதியில் ஆங்கிலேயர்கள், இந்தியாவில் ஆங்கிலக் கல்வியை அறிமுகப்படுத்தினர்.
  • ஐரோப்பிய சமயப்பரப்பு குழுவினரின் வருகையினால், இந்தியாவில் மேற்கத்திய கல்வி நிலையான முன்னேற்றத்தை அடைந்தது.
  • எண்ணற்ற பல்கலைக்கழகங்களும் ஆயிரக்கணக்கான கல்லூரிகளும் அமைக்கப்பட்டதால், கல்வி வளர்ச்சியடைந்தது.
  • இடைக்காலத்தில் பல சமயமடங்களும் மடாலயங்களும் கல்வி வளர்ச்சிக்காக நிறுவப்பட்டன.
  • ஸ்ரீரங்கத்தில் உள்ள அஹோபில மடம் அவற்றுள் ஒன்றாகும். அங்கு ஸ்ரீராமானுஜர் கல்விக்காக தன்னுடைய குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.
  • மடாலயக் கல்வி தவிர, சமணப் பள்ளிகளும் மற்றும் பௌத்த விகாரங்களும் மக்களுக்கு கல்வி வழங்குவதில் முக்கிய பங்காற்றின. அனைத்து துறைகளைச் சார்ந்த புத்தகங்கள் கொண்ட நூலகத்தினை அவைகள் பெற்றிருந்தன.

நவீன கல்வி முறை

  • ஐரோப்பிய குடியேற்றத்தை தொடர்ந்து சமயப்பரப்பு குழுவினரின் வருகையால் இந்தியாவில் நவீன கல்வி முறை தொடங்கியது எனலாம்.
  • அவர்களது முயற்சியின் விளைவாக, இந்தியா முழுவதும் பல கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்நிறுவனங்கள் மேற்கத்திய கல்வியையும் இந்தியக் கல்வியையும் பயிற்றுவித்தன.

கிறித்துவ சமயப்பரப்புக் குழுவின் பங்கு

  • வணிகம் செய்வதற்காக வந்த ஐரோப்பியர்கள் , இந்தியாவில் வர்த்தக நிறுவனங்களை நிறுவினர். அவர்கள் நிலங்களை பெற்று, கோட்டைகளைக் கட்டினர்.
  • பின்னர், அவர்கள் தங்கள் கலாச்சாரத்தையும், சமயத்தையும் இந்திய மக்களிடையே பரப்ப விரும்பினர்.
  • உள்ளூர் மக்களுக்கேற்றவாறு கல்வி வழங்கினால் தான் நிர்வாகத்தையும், சமயக் கருத்துக்களையும் நன்கு புரிந்து கொள்வார்கள் என்று கருதி அவர்கள் கல்வி நிறுவனங்களைத் தொடங்கினர்.
  • இந்தியாவில் நவீன கல்வி முறையை தொடங்கிய முதல் ஐரோப்பியர் போர்ச்சுக்கீசியர்களேயாவர்.
  • இயேசு சங்கத்தின் உறுப்பினரான பிரான்சிஸ் சேவியர் கொச்சியில் ஒரு பல்கலைக்கழகத்தைத் தொடங்கினார். மேலும் பல தொடக்கப் பள்ளிகளும் தொடங்கப்பட்டது.
  • 1575ஆம் ஆண்டு கோவாவில் தொடங்கப்பட்ட முதல் கல்லூரியில், கிறித்துவம், தர்க்கம், இலக்கணம் மற்றும் இசை ஆகியன கற்பிக்கப்பட்டு பட்டங்கள் வழங்கப்பட்டன.
  • ஜான் கிர்னாண்டர் என்பவர் ஆர்வமுள்ள முன்னோடிகளில் இருவராக இருந்தார். அவரின் இவாஞ்சிஸ்டிக் அமைப்பானது கிறித்தவர் அல்லாத குழந்தைகளுக்கு கல்வியை அறிமுகப்படுத்திய முதல் சமயப்பரப்பு அமைப்பாகும்.
  • 1812ஆம் ஆண்டு டாக்டர் C.S.ஜான் என்பவர் தரங்கம்பாடியில் 20 இலவச பள்ளிகளை நிறுவினார்.
  • போர்ச்சுக்கீசியர்களைத் தொடர்ந்து பிரெஞ்சுக்காரர்களும் இந்தியர்களுக்கான கல்வி நிறுவனங்களைத் துவங்கினர். அங்கு இந்திய ஆசிரியர்களைக் கொண்டு வட்டார மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டது.
  • மேல்நிலைப் பள்ளிகள் துவங்கப்பட்டு, அங்கு பிரெஞ்சு மொழிகள் கற்பிக்கப்பட்டன. இரண்டு ஜெர்மன் பிஷப்புகளான சீகன்பால்கு மற்றும் புளுட்ச்சோ ஆகியோர் திருவிதாங்கூரில் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி கல்லூரியைத் தொடங்கினர்.
  • கி.பி. 1600இல் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் வருகைக்குப் பின்னர் ஆங்கிலக் கல்வி வழங்குவதற்காக கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டன.
  • படிப்படியாக மதராஸ் மற்றும் பனாரஸ் ஆகிய இடங்களில் சமஸ்கிருத கல்லூரிகள் துவங்கப்பட்டன.
  • கல்கத்தாவின் முதல் பேராயரான டாக்டர் மிடில்டன் என்பவர் ஒரு மிஷினரி கல்லூரியை கல்கத்தாவில் தொடங்கினார். பின்னர் இது பிஷப் கல்லூரி என்று அழைக்கப்பட்டது.
  • மவுண்ட்ஸ்டுவர்ட் எல்பின்ஸ்டன் என்பவர் தான் வட்டார மொழிக் கல்வியினை தீவிரமாக முன்மொழிந்தார். ஆனால் 1827 இல் அவர் ஓய்வு பெற்ற பின், அவரது ஆர்வலர்கள் நிதி சேகரித்து ஆங்கில கல்வியை வழங்கும் கல்லூரியை பம்பாயில் நிறுவினர். அது பின்னர் எல்பின்ஸ்டன் கல்லூரி எனப் பெயரிடப்பட்டது.
  • இந்தியாவில் கல்வி பரப்புவதற்கும் சமயப்பரப்பு குழுவினர் நன்கு முயன்றனர். அவர்களின் முயற்சியால் பல கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்நிறுவனங்கள் மேற்கத்திய கல்வியையும் இந்தியக் கல்வியையும் வழங்கின.

ஆங்கிலேயரின் ஆட்சியில் கல்வி

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்திய கல்வியின் வரலாற்றை நாம் நான்கு கட்டங்களாகப் பிரிக்கலாம்.

  1. ஆங்கிலேயர் ஆட்சியின் ஆரம்பம் முதல் 1813 வரையிலான காலம்
  2. 1813 முதல் 1853 வரையிலான காலம்
  3. 1854 முதல் 1920 வரையிலான காலம்
  4. 1921 முதல் 1947 வரையிலான காலம்

  • தொடக்க காலங்களில், ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி கல்வியில் அலட்சியம் மற்றும் குறுக்கீடு இன்மை என்ற கொள்கையைப் பின்பற்றியது.
  • ஏனெனில் கல்வியானது அதன் திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை. கிழக்கிந்திய கம்பெனியின் 1813ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட பட்டயச் சட்டம், இந்தியர்களின் கல்விக்கான பொறுப்பை மிகக் குறைந்த அளவில் ஏற்கும்படி கட்டாயப்படுத்தியது. சமயப்பரப்புக் குழுவினரைத் தவிர , வங்காளத்தைச் சேர்ந்த இராஜா ராம்மோகன்ராய், மதராஸின் பச்சையப்பர், டெல்லியைச் சேர்ந்த பிரேசர் போன்ற சமயப்பரப்புக்குழு அல்லாதவர்களும் கல்விக்காக தங்களின் பங்களிப்பைச் செய்தனர்.
  • இரண்டாவது கட்டமானது கல்விக் கொள்கை, பயிற்றுமொழி, கல்வியைப் பரப்பும் முறை ஆகிய பிரச்சனைகளில் மிகப்பெரிய கருத்து வேறுபாடுகள் கொண்ட காலமாக கருதப்பட்டது.
  • முதலாவது பிரிவினரான கீழ்திசைவாதிகள் கீழ்திசை மொழிகளைப் பாதுகாக்கவும், சமஸ்கிருதம் மற்றும் பாரசீக மொழிகளை பயிற்று மொழியாக்கவும் விரும்பினர்.
  • இரண்டாவது பிரிவினரான ஆங்கிலசார்பு கோட்பாடுவாதிகள் ஆங்கில மொழி மூலம் மேற்கத்திய அறிவை பரப்புவதை ஆதரித்தனர். அவர்கள் கீழ்திசைவாதிகளின் கொள்கைகளை எதிர்த்தனர்.
  • மூன்றாவது பிரிவினர், பயிற்று மொழியாக இந்திய மொழிகளைப் பயன்படுத்துவதில் நம்பிக்கை கொண்டவர்கள் ஆவர்.
  • இந்த கருத்து வேறுபாடுகள் 1835ஆம் ஆண்டின் மெக்காலே-வின் குறிப்பினால் ஓரளவு ஓய்ந்தது. உயர் கல்வியில் கீழ்த்திசை மொழியைத் தவிர்த்து, ஆங்கிலக் கல்வியானது உயர் வகுப்பினருக்காக ஊக்கப்படுத்தப்பட்டது.
  • ஒவ்வொரு மாகாணமும் அதற்கேற்ற கல்விக் கொள்கையைப் பின்பற்ற அனுமதிக்கப்பட்டன. இருந்தபோதிலும், 1854 ஆம் ஆண்டு வரை இந்த கருத்து வேறுபாடுகள் தொடர்ந்தன.
  • ஆங்கிலேயரின் செல்வாக்கு மிக்க கல்வியின் மூன்றாம் கட்டத்தை அகில இந்தியக் கல்வி கொள்கையின் காலம் என்றும் அழைக்கலாம்.
  • இது 1854 ஆம் ஆண்டு சர் சார்லஸ் வுட் கல்வி அறிக்கையுடன் தொடங்குகிறது.
  • 1882 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஹண்டர் கல்விக்குழு தொடக்கக் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தது.
  • நான்காவது காலக்கட்டம், மாகாணங்களின் சுயாட்சிக் காலமாகும். 1935 ஆம் ஆண்டு சட்டம் நாடு முழுவதும் கல்வியின் முன்னேற்றத்திற்கான புதிய சகாப்தத்தை உருவாக்கியது.
  • 1929ஆம் ஆண்டின் உலகளாவிய பொருளாதார பெருமந்தத்தால் புதிய திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன,
  • 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் முழுமையான மாகாண சுயாட்சியை அறிமுகப்படுத்தி,மாகாண கல்வி அமைச்சர்களின் நிலையை வலுப்படுத்தியது.
  • இரண்டாம் உலகப் போருக்குப்பின் கல்வி மேம்பாட்டிற்கான மிக முக்கியமான திட்டமான சார்ஜண்ட் அறிக்கை (1944) தயாரிக்கப்பட்டது. இக்கல்விக் கொள்கை சமகால கல்வியின் சிந்தனை மற்றும் செயல்பாடுகளில் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • 1813ல் கிழக்கிந்திய நிறுவனம் இந்தியர்களின் கல்விக்கான பொறுப்பை உறுதிப்படுத்த நிர்பந்திக்கப்பட்டது. 1813ஆம் ஆண்டின் பட்டயச் சட்டம், இந்தியாவில் கல்வியை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் 1 இலட்சம் ரூபாய் தொகையை வழங்குவதற்கான ஏற்பட்டைச் செய்தது.
  • உட்ஸ் கல்வி அறிக்கை (1854) இந்தியாவில் ஆங்கிலக் கல்வியின் “மகாசாசனம்” என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் அனைத்து நிலைகளில் உள்ள மக்களுக்கும் கல்வியை வழங்கும், ஆங்கில கல்விக் கொள்கையின் முதல் அறிக்கை இதுவாகும். ஆனால் இது இந்தியர்களின் கொள்கைகளையும் கலாச்சாரத்தையும் விலக்கி வைத்து மாநிலக் கல்வியின் மீது முழுமையான கட்டுப்பாட்டை ஏற்படுத்தியது.

வார்தா கல்வித் திட்டம் (1937)

  • 1937ஆம் ஆண்டு பிரபலமான அடிப்படைக் கல்வித் திட்டமான வார்தா கல்வித் திட்டத்தை காந்தியடிகள் உருவாக்கினார். காந்தியடிகளின் அடிப்படைக் கல்வித் திட்டத்தின் அச்சாணியாக அகிம்சை கொள்கை இருந்தது.
  • அக்கல்வித் திட்டத்தின் மூலம் அகிம்சைக் கொள்கையை எதிர்கால குடிமக்களிடையே மேம்படுத்த அவர் விரும்பினார். அதன்மூலம் வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்குவது அவசியமென கருதினார்.
  • காந்தியடிகள் இத்திட்டத்தின் மூலம் சுரண்டலையும், சமூக மையப்படுத்துதலையும் நீக்கிவிட்டு வன்முறையற்ற சமூகநிலையை உருவாக்க விரும்பினார்.

சுதந்திர இந்தியாவின் கல்வி வளர்ச்சி

  • 1947ஆம் ஆண்டு பெற்ற சுதந்திரமானது சுதந்திர இந்தியக் கல்வி வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது. அது இந்தியர்களுக்கான ஒரு புதிய நம்பிக்கை, ஒரு புதிய பர்வை, ஒரு புதிய எதிர்காலத்தை கொண்டு வந்தது.
  • பல்கலைக்கழக கல்வி குறித்த அறிக்கை தயாரிக்க 1948ஆம் ஆண்டு டாக்டர் இராதாகிருஷ்ணன் கல்விக்குழு நியமிக்கப்பட்டது. இக்கல்விக் குழுவின் பரிந்துரைகளைப் பின்பற்றி உயர்கல்வியின் தரத்தை நிர்ணயிக்க பல்கலைக்கழக மானியக் குழு அமைக்கப்பட்டது.
  • 1952-53 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இடைநிலைக் கல்விக்குழு, இடைநிலை கல்வித் துறையில் நிகழ்ந்த மிக முக்கியமான நிகழ்வு ஆகும்.
  • அது கல்வியில் புதிய அமைப்பு முறைகளையும், பாடப்புத்தகங்களின் தரம், பாடத்திட்டம் , கற்பித்தல் முறைகளில் முன்னேற்றங்களையும் பரிந்துரைத்தது.
  • 1964இல் இந்திய அரசு டாக்டர் D.S. கோத்தாரி தலைமையில் ஒரு கல்விக்குழுவை நியமித்தது. அக்குழு 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய தொடக்க கல்வியையும் நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி அமைப்பையும் பரிந்துரை செய்தது.

தேசியக் கல்விக் கொள்கை

  • சுதந்திரத்திற்கு பிறகு, 1968 ஆம் ஆண்டின் முதல் தேசியக் கல்விக் கொள்கையானது இந்தியக் கல்வி வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஊக்குவிப்பதோடு, பொதுவான குடியுரிமை, கலாச்சாரம் மற்றும் பொதுவான குடியுரிமை, கலாச்சாரம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டினை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது.
  • 1986ஆம் ஆண்டு இந்திய அரசு புதிய கல்விக் கொள்கையினை அறிமுகப்படுத்தியது. இதன் நோக்கம் ஒரு நிலையான சமுதாயத்தை, மேம்பாட்டுடன் கூடிய துடிப்பான சமுதாயமாக மாற்றுவதாகும்.
  • இக்கல்விக் கொள்கை நாட்டில் விளிம்பு நிலை மக்களுக்கான சமவாய்ப்புகள், உதவித் தொகைகள், வயது வந்தோர் கல்வி, திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் மூலம் குறிப்பாக் கிராமப்புற இந்தியாவில் ஏற்றத்தாழ்வுகளை நீக்குதலை வலியுறுத்தியது.
  • புதிய கல்விக் கொள்கை தொடக்கக் கல்வியில் குழந்தைகளை மையமாகக் கொண்ட அணுகுமுறைக்கு அழைப்பு விடுத்ததுடன், தொடக்கப் பள்ளிகளை தேசிய அளவில் மேம்படுத்துவதற்காக கரும்பலகைத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது.
  • புதிய கல்விக் கொள்கையானது 1992ஆம் ஆண்டு மீண்டும் திருத்தியமைக்கப்பட்டது. இது தேசியக் கலைத்திட்டத்தை வடிவமைத்தல், பணியிடைக் கல்வியை வலியுறுத்துதல், வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் இடைநிலைக் கல்வி நிலையில் மதிப்பீட்டு முறைகளை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றைப் பரிந்துரைத்தது.
  • 1976ஆம் ஆண்டு டிசம்பர் வரை கல்வித்துறை மாநிலப் பட்டியலில் இருந்தது. ஆனால் தற்போது கல்வித்துறை பொதுப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (RMSA)

  • அனைவருக்கும் கல்வி இயக்கம் என்பது இந்திய அரசின் முதன்மைத் திட்டமாகும். இது அனைத்து குழந்தைகளும் தொடக்கக் கல்வியை பெறுவதற்காக 2000 – 01 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • குழந்தைகளின் உரிமையான இலவச மற்றும் கட்டாய கல்வி (RTE – 2009) சட்ட விதிகளை அமல்படுத்துவதற்கான முதன்மை அமைப்பாக இது தற்போது செயல்பட்டு வருகிறது.
  • கல்வி உரிமைச் சட்டமானது (RTE) 6 முதல் 14 வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்க வழிசெய்கிறது.
  • அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA), பள்ளிகள் தொடர்பான பல்வேறு வகையான புதுமைகளையும், செயல்பாடுகளையும் துவக்கி வைத்துள்ளது.
  • சில முக்கிய செயல்பாடுகளான மதிய உணவு வழங்குதல், மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குதல், பள்ளி மேலாண்மைக் குழு அமைத்தல், வகுப்பறைக்கான கற்றல் – கற்பித்தல் உபகரணங்களை வழங்குதல் ஆகியவைகள் இவற்றுள் அடங்கும்.
  • அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (RMSA) பதினோறாம் ஐந்தாண்டுத்திட்ட காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டமாகும். இது இடைநிலைக் கல்வியின் தரத்தினை மேம்படுத்தும், பொதுவான அணுகுமுறைக்கான மத்திய அரசின் நிதி உதவித் திட்டம் ஆகும்.
  • 15 முதல் 16 வயதுக்குட்பட்ட இளம் மாணவர்களுக்கு தரமான, எளிதில் கிடைக்கக் கூடிய, எளிய அணுகுமுறையுடன், அனைவருக்கும் வாய்ப்புகளை உருவாக்கும் இடைநிலைக் கல்வியை அளிப்பதே இதன் (RMSA) நோக்கம் ஆகும்.
  • RMSA திட்டத்தின் மூலம் அறிவியல் ஆய்வகம், நூலகங்கள், ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி, கணினி வழிக் கல்வி, பள்ளி இணைச் செயல்பாடுகள் மற்றும் கற்றல்-கற்பித்தல் உபகரணங்கள் ஆகியவற்றை இந்திய அரசு பள்ளிகளுக்கு வழங்குகிறது.
  • 2018 – 2019 ஆம் ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கை பள்ளிக் கல்வியினை முன்பருவக் கல்வி முதல் 12ஆம் வகுப்பு வரை எவ்வித பாகுபாடுமின்றி முழுமையாக வழங்குவதற்கு முன்மொழிந்தது.
  • சமக்ர சிக்‌ஷாவானது (Samagra Siksha) சமமான வாய்ப்புகள் மற்றும் சமமான கற்றல் விளைவுகளை அளவிடுதல் ஆகிய பள்ளியின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான பரந்தக் குறிக்கோளை அடைய ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது SSA மற்றும் RMSA ஆகிய திட்டங்களை உள்ளடக்கியதாகும்.
  • 2017ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை வரைவதற்கான ஒரு குழு மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டது. இக்குழு தனது அறிக்கையை 2019ஆம் ஆண்டு சமர்ப்பித்தது.

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி

  • தமிழ்நாட்டின் கல்வி முறையானது புத்தகங்களை படிப்பதும், புரிந்து கொள்வதும் மட்டுமல்லாமல் கற்றறிருந்த அறிஞர்களின் வழிகாட்டுதல்களையும் பெறுவதுமாக இருந்தது.
  • திருக்குறள் கல்வியின் தேவையை எடுத்துக் கூறியதுடன், எழுத்தறிவின்மையின் அபாயத்தையும் எச்சரித்தது
  • பண்டைய இந்தியாவில் பள்ளிக் கூடங்கள் பள்ளி (palli) என்றும், ஆசிரியர்கள் கணக்காயர் என்றும் அழைக்கப்பட்டனர்.
  • பல்லவர் காலத்தில் கல்வித்துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்தது. கல்வி நிறுவனங்கள் கடிகை எனப்பட்டன.
  • இக்கல்வி நிறுவனங்களுக்கு மானியங்கள் வழங்கி பல்லவ மன்னர்கள் ஆதரித்தனர்.
  • சைவ மற்றும் வைணவ மடங்கள் அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உண்டு உறைவிட வசதியை வழங்கின.
  • யுவான்சுவாங் என்ற சீனப்பயணியின் குறிப்புகள், காஞ்சி நகரமானது கற்றலின் மையமாக விளங்கியதையும், காஞ்சியில் இருந்த புத்த மையம் பற்றியும் தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது.
  • சோழர்களின் காலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகவும் அறிவார்ந்த மற்றும் புதுமைகளைப் புகுத்திய காலம் எனலாம்.
  • தமிழ்வழிக் கல்வியானது கோயில் மற்றும் சமயத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தது. மக்களுக்கு இலவச கல்வி அளிக்கப்பட்டது.
  • கலைத்திட்டமும் பாடத்திட்டமும் தத்துவத்தின் அடிப்படையைக் கொண்டிருந்தது. அக்கால கல்வெட்டுகளிலிருந்து ஆசிரியர்களின் தகுதிகள், கற்பித்தல் முறைகள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு மற்றும் பள்ளிகளுக்கு அளித்த நிலங்கள் குறித்த பல தகவல்களை அறிந்து கொள்ளமுடிகிறது.
  • இராஜராஜன் சதுர்வேதி மங்கலம் (எண்ணாயிரம் முந்தைய தென் ஆற்காடு மவட்டத்தில் அமைந்திருந்தது) புகழ்பெற்ற வேதக் கல்லூரிக்கு இருப்பிடமாக இருந்தது.
  • திருபுவனையில் (பாண்டிச்சேரியில் உள்ளது) ஒரு வேதக்கல்லூரி செழித்தோங்கியது.
  • திருவிடைக்காளை கல்வெட்டு மருத்துப் பள்ளி பற்றியும் குறிப்பிடுகிறது.
  • பாண்டிய மன்னர்கள் சமஸ்கிருதத்தை ஆதரித்ததை அவர்களின் செப்புத் தகடுகளின் மூலம் அறியலாம். பாண்டியர்களின் காலத்தில் கல்வி நிலையங்கள் கடிகை, சாலை மற்றும் வித்யாசாதனம் என அழைக்கப்பட்டது.
  • ஆசிரியர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன. அவ்வகை நிலங்கள் சாலபோகம் என்றழைக்கப்பட்டது.

(உம். கன்னியாகுமரியிலுள்ள வல்லப பெருஞ்சாலை).

  • பாண்டியர்கள் ஆட்சிக் காலத்தில் காந்தளூர் சாலையில் புகழ்பெற்ற கல்லூரி இருந்தது.
  • கல்வியை மேம்படுத்துவதில் மடங்கள் முக்கியப் பங்கு வகித்தன.
  • விஜய நகர ஆட்சியின் கீழ் கற்றல் செழித்தோங்கியது.
  • விஜயநகர ஆட்சியாளர்களின் ஆதரவால் பல கல்வி நிறு வனங்கள் ஏற்படுத்தப்பட்டன. நாயக்கர்களின் ஆட்சியில் திண்ணைப் பள்ளிக்கூடம் நிறுவப்பட்டது.

தமிழகத்தில் நவீன கால கல்வி

  • வீரப்பநாயக்கர் காலத்தில் மதுரைக்கு வருகை புரிந்த பெர்னாண்டஸ், அங்கு ஒரு தொடக்கப் பள்ளியை நிறுவினார்.
  • மராத்திய ஆட்சியாளர் இரண்டாம் சரபோஜி பண்டைய ஆவணங்களை சேகரித்து அவற்றை தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பாதுகாத்தார்.
  • அவர் தஞ்சாவூரில் தேவநாகரி எழுத்து முறையிலான அச்சுக்கூடத்தை அமைத்திருந்தார்.
  • பிரதான் (Pradran) நாட்டின் உயர் கல்வியின் முக்கிய மையமாக விளங்கியது.
  • மதராஸ் மாகாணத்தில் மேற்கத்திய கல்வியை அறிமுகப்படுத்தியதில் மிகப்பெரிய பங்கு மதராஸ் மாகாண ஆளுநர் சர் தாமஸ் மன்றோவையேச் (1820-27) சாரும். அவர் கல்வியின் நிலை குறித்து அறிய புள்ளிவிவரக் கணக்கெடுப்பு நடத்த ஒரு குழுவை நியமித்தார்.
  • மன்றோவின் கல்விக்குழு ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு முதன்மைப் பள்ளிகளை உருவாக்க பரிந்துரைத்தது (மாவட்ட ஆட்சியர் மற்றும் தாசில்தார் பள்ளிகள்).
  • 1835ஆம் ஆண்டு வில்லியம் பெண்டிங் பிரபு மேற்கத்திய கல்வி முறையை அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்.
  • 1854ஆம் ஆண்டின் சர் சார்லஸ் வுட் கல்வி அறிக்கை மதராஸ் மாகாணத்தில் பொது வழிகாட்டும் துறையை (Department of Public Instruction) ஏற்படுத்தியது.
  • அனைத்து பள்ளிகளுக்கும் கல்வி மானியம் வழங்கப்பட்டன.
  • 1857இல் சென்னை பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. இதுவே ஆங்கிலேய ஆட்சியின் போது தமிழகத்தில் அமைக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகமாகும்.
  • 1882ஆம் ஆண்டு உள்ளூர் வாரியச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.அதன் மூலம் புதிய பள்ளிகளைத் திறக்கவும், அரசாங்கத்திடமிருந்து மானியங்களைப் பெறவும் வாரியத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
  • 1938வாக்கில் பள்ளிகளில் ஆங்கிலமொழிப் பாடம் தவிர அனைத்துப் பாடங்களும் தமிழ் மொழியிலேயே கற்பிக்கப்பட்டன.
  • 1929ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சிதம்பரத்தில் அமைக்கப்பட்டது. இது உயர் கல்வியின் வளர்ச்சியின் அடுத்த கட்டமாகும்.

சுதந்திரத்திற்குப் பின் தமிழகக் கல்வி

  • 1964-65இல் இடைநிலைக் கல்வி அளவில் இலவச கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 1975இல் காந்திகராம கிராமிய கல்லூரி ஏற்படுத்தப்பட்டது. கல்லூரி சென்று படிக்க முடியாதர்களுக்காக தொலைதூரக் கல்வியும் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 1956இல் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் இது பள்ளிகளில் இடை நிற்றலைத் தவிர்க்கும் பொருட்ட்ரு 1982ல் சத்துணவுத் திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது.
  • 1986இல் உருவாக்கப்பட்ட தேசியக் கல்விக் கொள்கை 1992இல் திருத்தி அமைக்கப்பட்டது. அதன் பின்னர் சமூகத்தில் மாறிவரும் சூழ்நிலைகளை எதிர்கொள்ளத் தேவையான பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!