Samacheer NotesTnpsc

ஊரக பொருளாதாரம் Notes 11th Economics

11th Economics Lesson 4 Notes in Tamil

4. ஊரக பொருளாதாரம்

இந்தியா கிராமங்களில் வாழ்கிறது. – மகாத்மா காந்தி

முன்னுரை

ஊரக பொருளாதாரம் பொருளாதார கொள்கைகளை பயன்படுத்தி, ஊரக பகுதிகளை வளர்ச்சியடையச் செய்வதைக் குறிக்கிறது. ஊரக பகுதி என்பது நகரங்கள் மற்றும் மாநகரங்களுக்கு வெளியே அமைந்துள்ள பகுதி ஆகும். இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஊரக பகுதிகளுக்கு அடிப்படை அலகாக அமைவது வருவாய் கிராமம் ஆகும். ஊரக பொருளாதாரம் என்பது கிராமங்களையும், ஊரக சமுதாயம் என்பது கிராமங்களில் வாழும் மக்களையும் குறிக்கும். ஊரக பகுதிகளில் பல பிரச்சனைகள் உள்ளன. அவை வேளாண்மையில் பின் தங்கிய நிலை, குறைந்த வருமானம் , குறைவான வேலைவாய்ப்புகள், வறுமை, குறைந்த உள்கட்டமைப்பு வசதிகள், குறைவான எழுத்தறிவு, குறைவான தொழிலாளர் உற்பத்தித்துறன், வேளாண் பொருட்களுக்கு குறைந்த விலை, கடன்கள் ஆகியவை சிலவாகும். உபரி தொழிலாளர்கள், அதிக மக்கள் தொகை, அதிக அளவு இடப்பெயர்ச்சி, இயற்கை மற்றும் இயற்கை வளங்களை அதிகமாக சார்ந்திருத்தல் ஆகியனவாகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 6,40,867 கிராமாங்கள் உள்ளன. 121 கோடியாக உள்ள மொத்த மக்கள் தொகையில், 68.84 சதவீத மக்கள் ஊரகங்களில் வசிக்கின்றனர்.

ஊரக பொருளாதாரத்தின் இயல்புகள்

ஊரக பொருளாதாரத்தின் முக்கிய பண்புகளாவன

  1. ஊரகம் ஒரு நிறுவனம்: கிராமம் என்பது முதன்மை நிறுவனமாக செயல்பட்டு, ஊரக சமுதாயத்தின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. ஊரக மக்கள் அங்கு வசிக்கும் பிறருடன் தம் மக்கள் அங்கு வசிக்கும் பிறருடன் தம் மக்கள் என்று ஒருவருக்கொருவர் உணர்வு பூர்வமாகவும், ஒற்றுமையுடனும் இருப்பர்.
  2. வேளாண்மையை சார்ந்திருத்தல்: ஊரக பொருளாதாரம் இயற்கையையும், வேளாண் நடவடிக்கைகளையும் சார்ந்துள்ளது. வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த செயல்களே ஊரக மக்களின் முக்கிய தொழிலாகும்.
  3. ஊரக மக்களின் வாழ்க்கை முறை: ஊரக மக்களின் வாழ்க்கை முறை மிக எளிமையானது. பொது பணிகளான கல்வி, வீட்டு வசதி, உடல்நலம் மற்றும் சுகாதாரம், போக்குவரத்து, தகவல் தொடர்பு, வங்கி செயல்பாடு, சாலைகள் மற்றும் அங்காடி வசதிகள் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருக்கிறது. ஊரக மக்கள் மூடநம்பிக்கைகள் மற்றும் பாரம்பரிய கலாச்சார நடைமுறைகளை சார்ந்துள்ளனர். ஊரக பகுதிகளில் வாழும் பொரும்பான்மையான மக்களின் வாழ்க்கைத்தரம் ஏழ்மை நிலையிலும், பரிதாபகரமாகவும் உள்ளது. ஊரக மக்கள் உற்பத்தி முறைகளிலும், சமூக அமைப்பிலும் , அரசியல் சூழலிலும் நலிவடைந்த மற்றும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்லனர். சமீப ஆண்டுகளில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
  4. மக்கள் தொகை அடர்த்தி: ஒரு சதுர கி.மீ. நிலப்பரப்பில் வாழும் மக்களின் எண்ணிக்கை மக்கள் தொகை அடர்த்தி மிகவும் குறைவாகவும், வீடுகள் கிராமம் முழுக்க பரவிக் காணப்படுகின்றன.
  5. வேலைவாய்ப்பு: வேலையின்மை, பருவகால வேலையின்மை மற்றும் குறை வேலையுடைமை ஆகியன கிராமப்புறங்களில் நிலவுகின்ரன. வேலையின்மை என்பது தொழிலாளர்கள் வேலை செய்ய தகுதியும் விருப்பமும் இருந்தும் வேலை கிடைக்காமல் இருப்பது ஆகும். குறை வேலையுடைமை என்பது மறைமுக வேலையின்மையைக் குறிக்கும். தேவைக்கு அதிகமாக மிகுதியான தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது மறைமுக வேலையின்மை. மறைமுக வேலையின்மை என்பது தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டாலும் உற்பத்தியளவு அதிகரிக்காத நிலையை குறிக்கும். இவ்விரண்டு சூழ்நிலைகளும் பொதுவாக கிராமப்புறங்களில் நிலவுகிறது.
  6. வறுமை: வறுமை என்பது அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றை பூர்த்தி செய்ய முடியாத நிலையாகும். 2011 -12 ன் மதிப்பீட்டின்படி ஊரகப் பகுதிகளில் சுமார் 22 கோடி மக்கள் ஏழையாகவும், வறுமைக் கோட்டிற்கு கீழும் வசிக்கின்றனர்.
  7. கடன் சுமைகள்: ஊரக மக்களின் அதிக கடன் சுமைக்கான காரணங்கள் வறுமையும், குறைவேலையுடைமையும், விவசாய நிலம் சார்ந்த மற்றும் நிலம் சாரா வேலைவாய்ப்புகளில் தேக்கநிலை, குறை ஊதிய வேலை, பருகால உற்பத்தி, குறைந்த அங்காடி வசதிகள் போன்றவைகளாகும். புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் சர் மால்கம் டார்லிங் (1925) கூற்றுப்படி, “ஓர் இந்திய உழவன் கடனிலே பிறந்து கடனிலே வாழ்ந்து, கடனிலேயே இறந்து அவன் சந்ததிக்கும் கடனையே விட்டுச் செல்கின்றான்”. முறையான கடன் வசதிகள் கிராமப்பகுதிகளில் கிடைக்காததால் அவர்கள் வட்டிக்கு பணம் தரும் உள்ளூர்வாசிகளை சார்ந்துள்ளனர். வட்டிக்குப் பணம் தருபவர்கள் கடன் பெற்ற கிராமங்களை அட்டையாக உறிஞ்சிவிடுகின்றனர். எனவே, கிராம மக்களை கடனில் மூழ்கி தற்கொலைக்கு ஆளாகின்றனர்.
  8. ஊரக வருமானம்: ஊரக பொருளாதாரம் ஊரக மக்களுக்கு போதுமான வருமானத்தை ஈட்டித்தரும் வேலைவாய்ப்புகளையோ, சுய வேலைவாய்ப்பு வாய்ப்புகளையோ தர இயலவில்லை. பெரும்பாலான தொழிலாளர்களும் மற்றும் திறமை வாய்ந்தவர்களும் மிகவும் குறை வேலையுடையவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் வருமானத்தை பெருக்குவதற்கான வாய்ப்பு குறைவு.
  9. சார்ந்திருத்தல்: ஊரகப் பகுதிகளில் வசிப்பவர்கள் நகரத்தில் வேலை செய்யும் தமது குடும்ப நபர்களின் வருவாய் மற்றும் சமூக நிதி உதவிகளையும் பெருமளவு சார்ந்துள்ளனர்.
  10. இரட்டைத் தன்மை: எதிரிடையான இரண்டு அம்சங்கள் நிலவுவதே இரட்டைத் தன்மை ஆகும். வளர்ந்த மற்றும் பின் தங்கிய நிலை; அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத நிலை; பாரம்பரிய மற்றும் நவீன நிலை; ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் ஒழுங்கு படுத்தப்படா நிலை; ஏழை மற்றும் பணக்காரர்; திறமைமிக்கவும் மற்றும் திறமையற்றவர் போன்ற முரண்பாடான சூழல்கள் ஊரக பகுதிகளில் நிலவுகின்றன.
  11. ஏற்றத்தாழ்வு: ஊரக பகுதிகளில் வருமானம், சொத்து மற்றும் செல்வம் ஆகியவற்றின் பகிர்வு ஊரக மக்களிடையே ஏற்றத்தாழ்வுடன் காணப்படுகிறது. சமூக, பொருளாதார அரசியல் மற்றும் வரலாற்றுக் காரணங்களினால் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. நிலக்கிழார்களும் நில உரிமையாளர்களும் கிராமப்புற நடவடிக்கைகளில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். நிலம், கால்நடை மற்றும் பிற சொத்துக்கள் சிலரிடம் மட்டுமே உள்ளது.
  12. குடிப்பெயர்ச்சி: ஊரக மக்கள் தமது வாழ்வாதாரத்திற்காக வேலை தேடி கிராமங்களிலிருந்து நகர்புறத்திற்கு இடம் பெயரும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்த நிலை நகரங்கள் பெருகுவதற்குக் காரணமாகின்றன. பகைமை மற்றும் அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாமை, கிராம மக்களை நகர்புறத்திற்கு இடம் பெயர வைக்கிறது. ஒருபுறம் கிராமங்கள் நெரிசலாகவும் உள்ளன. இதையே “இரட்டை நஞ்சாக்கல்” என சுமாசர் (Schumacher) குறிப்பிடுகிறார். தற்போதைய வளர்ச்சி வகை முறை அபாயகரமானது என்று அவரின் ‘சிறியது அழகு’ என்ற நூலில் விளக்குகிறார்.

ஊரக மேம்பாடு : பொருள்

  • ஊரக மேம்பாடு என்பது ஊரக மக்களின் சமூக நலம் மற்றும் வாழும் சூழ்நிலையை மேம்படுத்துதல், போன்ற ஒட்டு மொத்த முன்னேற்றத்தைக் குறிப்பதாகும்.
  • உலக வங்கியின் கூற்றுப்படி , “ஊரக மேம்பாடு என்பது குறிப்பிட்ட ஊரக மக்களின் பொருளாதார மற்றும் சமூக வாழ்க்கை முறையை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட உத்தி” ஆகும்.
  • சுருக்கமாக ஊரக வளர்ச்சி என்பது ஊரக பகுதிகள், ஊரக மக்கள், ஊரக வாழ்க்கை ஆகியவற்றை மேம்படுத்தும் முறையாகும்.

ஊரம மேம்பாட்டிற்கான தேவை

இந்தியபொருளாதாரத்தில் ஒட்டுமொத்த மற்றும் முன்னேற்றத்திற்கு ஊரக மேம்பாடு என்பது மிக இன்றியமையாத ஒன்றாகும். அதற்கான காரணங்கள் பின்வருமாறு:

  1. பெரும்பான்மையான மக்கள் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். அவர்களின் முன்னேற்றம் மற்றும் பங்களிப்பு நாட்டின் கட்டமைப்பு நடவடிக்கைகளில் துணை நிற்கின்றன. ஊரக பகுதியின் முன்னேற்றம் இன்றி நாட்டின் முன்னேற்றம் அமையாது.
  2. நகர்ப்புறத்திற்கு தேவையான குடிநீர், பால், உணவு மற்றும் கச்சா பொருட்கள் கிராமப்புறத்தில் இருந்து அளிக்கப்படுகின்றன. ஆகவே கிராமப்புறங்களின் பின்தங்கிய நிலைமை நாட்டின் ஒட்டு மொத்த முன்னேற்றத்தை அடிவதற்கும் தடையாக அமைகிறது.
  3. ஊரக மக்களுக்கு முறையான கல்வி, மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகளை அளிப்பதன் மூலம் நகப்புறங்களில் காணப்படும் பிச்சையெடுத்தல், குப்பை பொறுக்குதல், சாலையோர குடிசைவாசிகள் போன்ற மக்களின் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கலாம்.
  4. வேளாண்மை மற்றும் அதன் சார்புடைய தொழில்களை முன்னேற்றுவதன் மூலம், ஊரக பகுதிகளில் இலாபகரமான வேலைவாய்ப்புகளையும், ஒட்டுமொத்த உணவு உற்பத்தியையும் பெருக்க இயலும்.
  5. கிராமங்களை முன்னேற்றுவதன் மூலம் வேலைவாய்ப்பை தேடி திறமைசாலிகள் இடம்பெயர்தல் மற்றும் கிராமங்களில் இருந்து நகர்புற பகுதிகளுக்கு குடிப்பெயர்ச்சி ஆகியவற்றை தடுக்கலாம்.
  6. ஊரக பகுதிகளை முன்னேற்றுவதன் மூலம் பயன்படுத்தாத மற்றும் குறைவாக பயன்படுத்தி வரும் இயற்கை வளங்களை முழுமையாக பயன்படுத்த இயலும்.
  7. கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கு இடையேயுள்ள வேறுபாட்டினை குறைக்க முடியும். கிராமப்புறங்களில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை கிராமப்புறங்களில் ஏற்படுத்த வேண்டும். இதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் – அவர்கள் PURA என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
  8. மனித மேம்பாட்டுக் குறியீடு (HDI), மகளிர் வல்லமைக் குறியீடு (WEI), பாலின வேறுபாட்டுக் குறியீடு (GDI), இயல் தர வாழ்க்கைக் குறியீடு (PQLI), மொத்த தேசிய மகிழ்ச்சிக் குறியீடு (GNHI) போன்ற பொருளாதாரக் குறியீடுகளை மேம்படுத்துவதன் மூலம் உலக அரங்கில் இந்தியாவின் நிலையை மேம்படுத்த இயலும்.

ஊரக பொருளாதாரத்தில் உள்ள பிரச்சனைகள்

ஊரக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பின்வருமாறு

  1. மக்கள் சார்ந்தவை
  2. வேளாண்மை சார்ந்தவை
  3. உள்கட்டமைப்பு வசதிகள் சார்ந்தவை
  4. பொருளாதாரம் சார்ந்தவை
  5. சமூக மற்றும் கலாச்சாரம் சார்ந்தவை
  6. தலைமை சார்ந்தவை
  7. நிர்வாகம் சார்ந்தவை

  1. மக்கள் தொடர்புடைய பிரச்சினை:

எழுத்தறிவின்மை, போதிய தொழில்நுட்ப அறிவின்மை, நம்பிக்கை குறைவு, பற்றுகள் மற்றும் நம்பிக்கைகள் இவற்றை சார்ந்து வாழ்க்கைத்தரம் அமைதல் ஆகியன ஊரக மக்களின் பிரச்சினைகள்.

  1. வேளாண்மை சார்ந்த பிரச்சனைகள்:

வேளாண்மை சார்ந்த பிரச்சனைகள் கீழ்க்கண்டவற்றை உள்ளடக்கியது.

  1. எதிர்பார்த்த அளவில் விழிப்புணர்வு, வேளாண் அறிவு, திறன் மற்றும் மனப்போக்கு போன்றவை இன்மை.
  2. உள்ளீடுகள் கிடைக்கப்பெறாமை.
  3. அங்காடிப்படுத்தும் வசதிகள் கூறைவு
  4. பற்றாக்குறையான பணியாளர்கள் மற்றும் சேவைகள்
  5. பன்முக திறன் கொண்ட பணியாளர்கள் இன்மை
  6. நிலங்கள் தூண்டாடப்பட்டு சிறிது சிறிதாக இருத்தல்
  7. சிறு நிலங்கள் மற்றும் சிறு சிறு துண்டுகளாக்கப்பட்ட நிலவுடைமைகள்
  8. ஊரக பகுதிகளில் தங்கி பணியாற்றுவதற்கு போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இன்மை
  9. பழமையான தொழில்நுட்ப முறைகள் மற்றும் நவீன தொழில் நுட்பங்களை குறைவாக பயன்படுத்துதல்
  10. குறைவான அரசு முதலீடு மற்றும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விளைபொருட்களுக்கு விலையை நிர்ணயம் செய்ய இயலாமை.
  11. உள்கட்டமைப்பு சார்ந்த பிரச்சனைகள்:

ஊரக பகுதிகளில் உள் கட்டமைப்பு வசதிகளான நீட், மின்சாரம், போக்குவரத்து, கல்வி நிறுவனங்கள், தகவல் தொடர்பு, ,மருத்துவ வசதி, வேலைவாய்ப்பு, பண்டக சேமிப்பு வசதி, வங்கி மற்றும் காப்பீடு போன்ற வசதிகள் போதுமானதாக இல்லை.

  1. பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகள்:

அதிகச் செலவு பிடிக்கும் தொழில் நுட்பங்கள் மற்றும் உள்ளீடுகளை பயன்படுத்த இயலாமை, நலிவடைந்த ஊராக தொழிற்சாலைகள், குறைவான வருமானம், கடன்சுமை, நிலவுடைமை மற்றும் சொத்துகளில் உள்ள ஏற்றத்தாழ்வு ஆகியவை ஊரக பகுதிகளில் காணப்படும் பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகளாக உள்ளது.

  1. தலைமை சார்ந்த பிரச்சனைகள்:

ஊரக பகுதிகளில் தலைமை தொடர்பான பிரச்சனைகள் உள்ளன. அவை: தகுதியற்ற மற்றும் செயல்படாத நபர்கள் தலைமை பொறுப்பை வகிப்பது; சுய விருப்புடன் செயல்படும் தலைவர்கள்; நடுவுநிலைமை அற்ற தலைவர்கள்; குறைந்த பேர சக்தி ஆற்றல் மற்றும் திறமையை மறுத்தல் மற்றும் அரசியல் தலைவர்களின் தலையீடு.

  1. நிர்வாகம் சார்ந்த பிரச்சனைகள்: அரசியல் தலையீடு, ஊக்கமின்மை, ஆர்வமின்மை, குறைந்த கூலி, வரவு செலவுகளை சரிவர முறையாக பயன்படுத்தாமை, மேலாண்மையின்மை, ஊரக வளர்ச்சி திட்டகளை மேற்பார்வையிடுவதற்கு சரியான கண்காணிப்பு இன்மை மற்றும் நடைமுறைபடுத்தாமை ஆகியவை ஊரக பகுதிகளில் காணப்படும் நிர்வாகச் சிக்கல்கள் ஆகும்.

கிராமப்புற வறுமை, கிராமப்புற வேலையின்மை கிராமப்புற தொழிற்சாலைகள், சிறு நிதி, ஊரக நலம் மற்றும் சுகாதாரம் மற்றும் ஊரக உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான பிரச்சனைகள் விரிவான விதாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

ஊரக வறுமை

  • கிராமங்களில் காணப்படும் வறுமையை ஊரக வறுமை எனலாம். இந்தியாவில் வறுமை என்பது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தேவையான வருமானத்தை ஈட்ட முடியாத நிலையாகும்.
  • வறுமைக்கோடு என்பது மக்களின் வருமானம் அல்லது நுகர்வு நிலையை பொறுத்து வறுமை கோட்டிற்கு மேல் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்லவர்கள் என அனுமானிக்கும் கோடு ஆகும்.
  • பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச் சத்து உணவு எடுத்துக்கொள்ளுதல் அளவு அடிப்படையில் கிராமங்களில் வாழும் மக்கள் நாள் ஒன்றுக்கு 2,400 கலோரி அளவு மற்றும் அதற்குக் குறைவாக எடுத்துக்கொள்பவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் ஆவர்.
  • திட்டக்குழுவின் கணக்கீட்டின்படி 2009 – 2010-ல் ஊரக பகுதியில் வறுமையில் உள்ள மக்கள் சதவீதம் 54.10 சதவீதம் இருந்தது. 2009-10-ல் மொத்த வறுமை சதவீதம் 33.80.
  • ஊரக பகுதிகளில் உள்ள தாழ்த்தப்பட்டோர் மற்று பழங்குடியினரிடையே வறுமை மிகுந்து காணப்படுகிறது. 2005-ஆம் ஆண்டில் இப்பிரிவினரில் 80 சதவீதம் பேர் ஊரக வறுமையில் இருந்தனர். இது மொத்த ஊரக மக்களின் பங்கினைக் காட்டிலும் குறைவாகும்.
  • இந்தியாவில் 2015-ஆம் ஆண்டில் 80 கோடி மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர். அவர்களில் கால்பகுதி கிராமமக்கள் (22 கோடி மக்கள்) வறுமைகோட்டிற்கு கீழ் வசிக்கின்றனர். உலக ஏழை மக்களின் தொகையில் 22% இந்தியாவில் உள்ளனர். மக்கட்தொகை வளர்ச்சிவீதத்தைக் காட்டிலும் ஏழைகளின் அளவு வீதத்தை குறைப்பதில் வெற்றி பெற்றுள்ளோம்.

ஊரக வறுமைக்கான காரணங்கள்

ஊரக் வறுமையை தீர்மானிக்கும் பல்வேறு காரணங்கள்

  1. நிலங்கள் சரியாக பிரிக்கப்படாமை: ஊரக நிலப் பகுதிகள் ஒரு சிலரிடமே குவிந்து காணப்படுகிறது. பெரும்பான்மை கிராம மக்கள் தங்கள் குடும்ப தேவைகளுக்கான அந்நிலங்களில் கூலிக்கு வேலை செய்கின்றனர்.
  2. பண்ணை சாராத தொழில்களில் வேலைவாய்ப்பின்மை : அதிகரிக்கும் உழைப்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பண்ணை சாராத தொழில்கள் வளர்வில்லை. மிகுதியான தொழிலாளர்கள் ஊரகப்பகுதிகளில் உள்ளபடியால் குறைவான கூலியையே பெறுகின்றனர். இது வறுமைக்கு வழி வகுக்கிறது.
  3. பொதுத்துறைகளில் முதலீடு இன்மை: மனித வளத்தை மேம்படுத்துவதற்கான முதலீடு நமது நாட்டில் மிகக் குறைவாக உள்ளதால், வறுமைக்கு அடிப்படையான காரணமாக உள்ளது.
  4. பணவீக்கம்: பொருட்களின் விலை அதிகரிப்பதால் ஊரக மக்களின் வாங்கும் சக்தி குறைந்து ஊரக வறுமைக்கு வழிவகுக்கிறது.
  5. குறைந்த உற்பத்தித் திறன்: ஊரக தொழிலாளர்கள் மற்றும் பண்ணைகளின் குறைந்த உற்பத்தித்திறன், வறுமைக்கு காரணமாக அமைந்தது.
  6. வளர்ச்சியின் நன்மைகளில் உள்ள சமனற்ற நிலை: பொருளாதார வளர்ச்சியினால் ஏற்படும் நன்மைகளை நகர்புற பணக்காரர்களே அனுபவிப்பதால், சொத்துக்கள் அவர்களிடமே குவிந்து உள்ளன. குறைபாடுள்ள பொருளாதார அமைப்புகள் மற்றும் கொள்கைகளால், வளர்ச்சியின் நன்மைகள் ஏழை மக்களை சென்றடைவது இல்லை. அதை போல ஏழை மக்களின் பங்களிப்பையும் சரியாகக் கணக்கிடப்படவில்லை.
  7. பெரிய தொழிற்சாலைகளுக்கே முக்கியத்துவம் : இந்தியாவில் பெரிய தொழிற்சாலைகளில் செய்யப்படும் அதிக முதலீடு நகர்ப்புறத்தின் நடுத்தர மற்றும் உயர் வருமான பிரிவினரின் தேவைகளையே பூர்த்தி செய்கிறது. இந்த தொழிற்சாலைகள் இயந்திரங்களையே அதிகமாக பயன்படுத்துவதால் வேலைவாய்ப்பு உருவாக்கம் குறைவாகவே உள்ளது. ஆதலால் கிராமப்புற மக்கள் வேலைவாய்ப்பினை பெற முடியாத நிலையிலும், வறுமையிலிருந்து மீள முடியாமலும் உள்ளனர்.
  8. சமூக குறைபாடுகள் : சமுதாயத்தில் நிலவும் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் போன்றவை ஆக்கமற்ற உற்பத்தி செலவை அதிகரிக்கிறது.

ஊரக வறுமையை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

  • ஊரக வேலையின்மையும், ஊரக வறுமையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதால் வேலைவாய்ப்பினை உருவாக்குதல் மூலமாக வறுமையை ஒழிக்கலாம்.
  • வறுமை ஒழிப்புத் திட்டகள் மற்றும் செயல்பாடுகள் காலத்திற்கு ஏற்ப நடைமுறைப்படுத்தல், தொகுக்கப்படுதல் மற்றும் விரிவாக்கம் செய்தல் ஆகியன நடைபெறுகிண்றன.
  • ஆனாலும் , வேலையின்மை, பிச்சையெடுத்தல், குப்பை பொறுக்குதல் மற்றும் குடிசைகளில் வாழ்வோர் போன்ற நிலைகள் தொடர்கிறது. வேலை வாய்ப்பின்றி ஏழை மக்களின் வறுமையை ஒழிக்க முடியாது.
வறுமை ஒழிப்புத் திட்டங்கள்
திட்டங்கள் தொடங்கப்பட்ட ஆண்டு
20 அம்ச திட்டம் 1975
ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித்திட்டம் (IRDP) 1976
ஊரக இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு பயிற்சி (TRYSEM) 1979
வேலைக்கு உணவுத்திட்டம் (FWP) 1977
தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டம் (NREP) 1980
ஊரக நிலமற்றோர் வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் (RLEGP) 1983
ஜவஹர் வேலைவாய்ப்புத்திட்டம் (JRY) 1989
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் (MGNREGS) 2006
மபிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் சதக் யோஜனா (PMAGSY) 2010
பாரத் நிர்மான் யோஜனா 2005
இந்திரா ஆவாஸ் யோஜனா 1985 – 1986
ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மறுசீரமைப்பு திட்டம் (JNNURM) 2005
ராஜீவ் ஆவாஸ் யோஜனா (RAY) 2009
தேசிய ஊரக நலத்திட்டம் 2005
தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் 2011
தேசிய உணவுப் பாதுகாப்புத்திட்டம் 2013

ஊரகவேலையின்மை

  • வேலையின்மை என்பது நடைமுறையிலுள்ள ஊதிய விகிதத்தில், தனி நபரால் வேலை செய்ய விருப்பப்பட்டும் கிடைக்கப் பெறாத நிலையாகும். இதனால் மனிதவளம் மிகவும் வீணாகிறது மற்றும் குறைவாக பயன்படுத்தப்படுகிறது. வேலையின்மை நிலவுகின்ற வரை சமூக பிரச்சினைகளை தடுக்க முடியாது; பொருளாதாரம் முன்னேற்ற இலச்சினை அடைய முடியாது.
  • 2016, அக்டோபர் 4, நிலவரப்படி, ஊரக வேலையின்மை 7.8 சதவீதமாகும். இது நகர்ப்புற வேலையின்மையை (10.1%) விட குறைவு ஆகும். இந்திய மொத்த வேலையின்மை 8.5% ஆகும்.

பணிக்கான படிப்பு (Jobs Study) என்ற ஆய்விற்காக பீட்டர் டயமண்ட், டேல் மார்டின்கன் மற்றும் கிறிஸ்டோர் பிசாரிட்ஸ் ஆகிய பொருளாதார அறிஞர்கள் 2010-ம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசினை பகிர்ந்து கொண்டனர். இவர்கள் உருவாக்கிய முறைக்கு அல்லது கோட்பாட்டிற்கு DMP முறை எனப்படும். பொருளாதார கொள்கைகள் மற்றும் ஒழுங்கு முறைகள் எப்படி வேலையின்மை, வேலைக்கான காலியிடங்கள் மற்றும் கூலி ஆகியவற்றை பாதிக்கிறது என அறிந்துகொள்ள DMP முறை உதவுகிறது.

ஊரக வேலையின்மை என்பது மூன்று வகைப்படும்

  1. வெளிப்படையான வேலையின்மை
  2. மறைமுக வேலையின்மை அல்லது குறை வேலையுடைமை
  3. பருவகால வேலையின்மை

வெளிப்படையான வேலையின்மை என்பது வேலைக்குத் தயாராக இருந்தும் எந்த வேலையும் கிடைக்காமல் வேலையில்லாத நிலையில் இருப்பது ஆகும். விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஊரக கைவினைஞர்கள் மற்றும் கற்றவர்கள் ஆகியோர் இப்பிரிவைச் சார்ந்தவர்கள்.

மறைமுக வேலையின்மையில் தகுதிக்கு குறைந்த வேலையில் ஈடுபட்டுள்ளவர்களை அடையாளம் காண்பது கடினம். உபரியான வேலையாட்கள் நியமிக்கப்படுதல், மறைமுக வேலையின்மைக்குக் காரணமாகும். வேலையிலிருந்து சிலரை நீக்கினாலும் உற்பத்தியின் அளவு குறையாது. ஏனென்றால் அவர்களின் இறுதிநிலை உற்பத்தித் திறன் ஒன்றுமில்லை. இதுவே மறைமுக வேலையின்மை அல்லது குறைவேலையுடைமை எனப்படும். சிறு மற்றும் குறு விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் கிராமப்புற கைவினைஞர்கள் ஆகியோரிடையே குறைவேலையுடைமை காணப்படுகிறது. இவ்வகை வேலையின்மை நகர்புறத்தைவிட, ஊரக பகுதிகளிலேயே அதிக மோசமாக காணப்படுகிறது. ஊரக பகுதிகளில் மறைமுக வேலையின்மை 25 முதல் 30 விழுக்காடு வரை காணப்படுகிறது.

பருவகால வேலையின்மையில் இயற்கை சூழல் பொறுத்து ஒரு குறிப்பிட்ட பருவ காலத்தில் ஊரக மக்கள் வேலைவாய்ப்பினை பெறுகிறார்கள். எஞ்சியுள்ள காலகட்டத்தில் வேலையின்றியோ அல்லது பகுதி நேர வேலையிலோ ஈடுபட்டுள்ளனர். உழுதல், விதைத்தல், களைஎடுத்தல் மற்றும் அறுவடை செய்தல் போன்ற பருவங்களில் வேலைக்கு ஆள் பற்றாக்குறை நிலவுகிறது. ஆண்டின் பிற பருவங்களில் ஆட்களுக்கு வேலை கிடைப்பதில்லை. ஒரு விவசாயி வருடத்திற்கு ஒரு பயிரை மட்டும் பயிரிடும் போது, கிட்டத்தட்ட 5 முதல் 7 மாதங்கள் வேலையின்றி தவிக்கும் பரிதாபமான சூழலுக்கு தள்ளப்படுகிறார்.

வேளாண்தொழிலாளர் விசாரணைக்குழு அறிக்கையின்படி , 84 சதவீத வேளாந்தொழிலாளர்கள் குறை வேலையுடமையில் உள்ளனர். அவர்கள் சராசரியாக ஆண்டுக்கு 82 நாட்கள் வேலையின்று உள்ளனர்.

ஊரக வேலையின்மைக்கான காரணங்கள்

இந்தியாவில் ஊரக வேலையின்மைக்கான பல்வேறு காரணங்களை விவாதிக்கலாம்

  1. திறன்மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் இன்மை:

ஊரகப்பகுதிகளில் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பதற்கு அரசு போதிய பயிற்சிகள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் இருப்பதே முக்கிய காரணமாகும்.

  1. வேளாண்மை பருவக்காலம் சார்ந்தது: வேளாண் செயல்பாடுகள் பருவகால மாற்றங்களான இயற்கை மற்றும் மழையளவு ஆகியவற்றை சார்ந்துள்ளது. பருவகாலம் அற்ற நேரங்களில் உழைப்பிற்கான தேவை மிகவும் குறைவாக உள்ளது. எனவே வேளாண் சாரா வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
  2. துணை தொழில்களின்மை: போதிய முதலீட்டு நிதிவசதி மற்றும் அங்காடி வசதிகள் இல்லாததால், ஊரக மக்கள் கோழி வளர்ப்பு, கயிறு திரித்தல் மற்றும் பன்றி வளர்த்தல் போன்ற துணைத்தொழில்களை மேற்கொள்ள இயலவில்லை. இவை ஊரக வேலைவாய்ப்பு மற்றும் குடும்ப வருமானத்தைக் குறைக்கிறது. ஊரக மக்களுக்கு தேவையான நிதிவசதியை அரசு ஏற்படுத்தித்தர வேண்டும். முறையான அமைப்புகளிடமிருந்து பணத்தை கடனாக பெற முடியாததால் உள்ளூரில் அதிகவட்டிக்கு பணம் கடன் பெறுகின்றனர்.
  3. வேளாண்மையை இயந்திரமயமாக்கல்: வேளாண் தொழிலாளர்கள் வேலைக்காக நிலக்கிழார்களையே முழுமையாக நம்பியுள்ளனர். வேளாண் செயல்பாடுகளான உழுதல், நீர்பாய்ச்சுதல், அறுவடை செய்தல், கதிர் அடித்தல் போன்றனவற்றில் இயந்திரங்களை பயன்படுத்துவதால் வேளாண் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு குறைகிறது.
  4. மூலதன செறிவு தொழில்நுட்பம்: நகர்ப்புறங்களில் விரிவடைந்து வரும் தனியார் தொழில் துறை மூலதன செறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால், கூடுதல் வேலைவாய்ப்பை ஏற்படுத்த முடியவில்லை. அரசாங்கம், தொழில் நிறுவனங்களை நிறுவுவதன் மூலம் உபரி தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவக்க வேண்டும்.
  5. கல்விமுறையில் உள்ள குறைபாடுகள்: தற்போதைய கல்வி முறை ஊரக வேலையின்மை பிரச்சனையை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. சமூப ஆண்டுகளில் பட்டதாரிகளை உருவாக்கும் கல்வி நிலையங்கள் ஏராளம். மேலும் மாணவர்களும் பட்டம் பெறுவதை மட்டுமே விரும்புகின்றனர். அவர்கள் தமது திறமைகளை வளர்த்துக்கொள்ள விரும்பவில்லை. திறன் அடிப்படையில் பட்டங்கள் வழங்கப்பட வேண்டும். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அவர்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ள போதிய வாய்ப்புகள் எஏற்படுத்தப்பட வேண்டும்.

ஊரக வேலையின்மைக்கான தீர்வுகள்

நாட்டில் ஊரக வேலையின்மையை குறைப்பதற்கு பல்வேறு நிலைகளில் ஒருங்கிணைந்த முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். சில தீர்வுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

  1. துணை தொழில்கள்: பருவகால வேலையின்மையை தவிர்க்க ஊரக மக்களை, துணை தொழில்களை தொடங்குவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும். கடன் வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும். உற்பத்தி செய்த பண்டங்களை சந்தைப்படுத்துவதற்கான வசதிகளையும் செய்து தர வேண்டும்.
  2. ஊரக வேலைத்திட்டம்: சாலைவசதி, வடிகால்கள், கால்வாய்கள் தோண்டும் பணிகள் போன்ற ஊரக சமுதாய ஆக்கப்பணிகள் செய்தல் மற்றும் பராமரித்தல் போன்ற பணிகளை திட்டமிட்டு வேளாண் பருவகாலம் அல்லாத நேரங்களில் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வேலையற்றவர்களுக்கு ஆக்கப்பூர்வமான வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம்.
  3. நீர்ப்பாசன வசதிகள்: போதிய மழையளவு இல்லாததால் , நீர்ப்பாசன வசதியினை பயன்படுத்தி பலவகை பயிர்களை பயிர் செய்யும் முறையினை கையாள வேண்டும். தீவிர பயிர்சாகுபடி முறைகளை அதிகரிப்பதன் மூலம் தொழிலாளர்களுக்கான தேவை அதிகரிக்கும்.
  4. ஊரக தொழில் மயமாக்கல்: வேலைவாய்ப்பினை உருவாக்க ஊரக பகுதிகளில் புதிய தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும். இது புதிய துறைகளில் வேலைவாய்ப்பினையும் மற்றும் ஊரக மக்களின் அணுகுமுறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் . அரசாங்கம் இதற்கான நடவடிக்கைகளின் ஈடுபடவேண்டும். தனியார்துறைக்கு இத்தகைய பொறுப்புகள் ஏதும் இல்லை.
  5. தொழில்நுட்ப கல்வி: பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், வேலை வாய்ப்பு சார்ந்த படிப்புகளை உருவக்கி அதன் மூலம் கற்ற இளைஞர்களை சுயமாக தொழில் துவக்க வழிவகை செய்ய வேண்டும்.

ஊரக தொழிற்சாலைகள்

ஊரக பகுதிகளில், ஊரக மக்களால் நடத்தப்படும் அனைத்து தொழிற்சாலைகளும் ஊரக தொழிற்சாலைகள் ஆகும். உள்ளூரில் கிடைக்கும் கச்சாப் பொருட்கள், திறன்கள் மற்றும் சிறிய அளவிலான முதலீடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தொழிற்சாலைகள் பலவகைப்படும்.

அவை

  1. குடிசைத்தொழில்கள்
  2. ஊரகத் தொழில்கள்
  3. சிறு தொழில்கள்
  4. குறுந்தொழில்கள் மற்றும்
  5. வேளாண் சார்ந்த தொழில்கள்

குடிசைத் தொழில்கள்: பொதுவாக குடிசைத் தொழில்கள் விவசாயத்தையே சார்ந்துள்ளன. இதன் மூலம் ஊரக மக்கள் முழு நேர மற்றும் பகுதிநேர வேலைவாய்ப்பினை பெறுகிறார்கள்.

குடிசைத் தொழில்களின் முக்கிய சிறப்பியல்புகள்

  1. கைவினை தொழிலாளர்கள் தங்கள் சொந்த பொறுப்பில் வீட்டிலேயே குடும்ப வருமானத்திற்காக பொருட்களை தயாரிக்கின்றனர். வேறு ஒரு நிரந்தர பணியினை செய்து கொண்டே குடிசைத் தொழிலை மேற்கொள்பவர்களும் உள்ளனர்.
  2. குடிசைத்தொழிலில் உழைக்க வெளியிலிருந்து நபர்களை அமர்த்துவதில்லை. பொதுவாக குடும்ப உறுப்பினர்களே தேவையான உழைப்பினை தருகின்றனர்.
  3. குடிசைத்தொழில்கள் பாரம்பரியமானது மற்றும் பரம்பரைபரம்பரையாகவும் செய்துவரும் தொழிலாகும்.
  4. மின்சாரத்தின் உபயோகமின்றி தயாரிக்கப்படுகின்றன அல்லது குறைந்த அளவு மின்சாரம் உபயோகப்படுத்தப்படுகின்றது.
  5. வழக்கமாக உள்ளூர் சந்தையிலேயே பொருட்கள் விற்கப்படுகின்றன. பொதுவாக பிற தொழிற்சாலைகளுக்கு தேவையான உதிரிபாகங்களை வழங்குகின்றன.

பாய், கயிறு திரித்தல் மற்றும் கூடை முடைதல் ஆகியன உதாரணங்களாகும். இந்தியாவின் முதன்மை குடிசைத்தொழிலாக விளங்குபவை கைத்தறி, நெசவு (பருத்தி, பட்டு, சணல் முதலியன ………….) மட்பாண்டம் செய்தல், கைகளால் சோப்பு தயாரித்தல், சங்கு தொழில், கைகளால் காகிதம் தயாரித்தல், கொம்பு பொத்தான், முத்துச் சிப்பி பொத்தான், வீட்டு உபயோகக் கருவிகள் செய்தல், பூட்டு மற்றும் சாவி தயாரிக்கும் தொழிற்சாலைகள்.

கிராமத் தொழிற்சாலைகள்: கிராமத் தொழிற்சாலைகள் இயற்கை பாரம்பரியமானது மற்றும் உள்ளூர் மூலப் பொருள்களை சார்ந்தது. அவை உள்ளூர் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. கிராமத் தொழிற்சாலைகளுக்கு எடுத்துக்காட்டு சர்க்கரை மற்றும் வெல்லம் தயாரித்தல், பிரம்பு மற்றும் மூங்கில் கூடை செய்தல், காலணி தயாரித்தல் மட்பாண்டங்கள் மற்றும் தோல் பதனிடுதல் முதலியன. இவை அனைத்தும் குடிசைத் தொழில்கள் போன்றே அமைந்துள்ளன.

சிறு தொழில்கள் (SSIs): நகர்ப்புற மையங்களுக்கு அருகிலேயே பெரும்பாலான தொழில் நிறுவனகள் அமைந்துள்ளன. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அங்காடிகளுக்கு பண்டங்களை உற்பத்தி செய்கின்றன. சிறுதொழில் நிறுவனங்களுக்கு எடுத்துக்காட்டு: விளையாட்டு உபகராங்கள் தயாரித்தல், சோப்பு தயாரித்தல், மின்விசிறி தயாரித்தல், காலணிகள் தயாரித்தல், தையல் இயந்திரங்கள் மற்றும் கைத்தறி நெசவு உற்பத்தி முதலியன ஆகும்.

SSIs என்பது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) ஆகும். குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிச் சட்டம் 2006-ன்படி இவை வகைப்படுத்தப்படுகின்றன. இச்சட்டத்தின்படி உற்பத்தி தொழிற்சாலைகள் முதலீட்டின் அடிப்படையிலும் , சேவை சார்ந்த தொழிற்சாலைகள் கருவிகள் மீதான முதலீட்டின் அடிப்படையிலும் பிரிக்கப்படுகின்றன.

வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள்: வேளாண் உற்பத்தி பண்டங்களை நுகர்வுக்குரிய பொருட்களாக மாற்றுகின்ற பணியில் வேளாண்மை சார்ந்த தொழிற்சாலைகள் ஈடுபடுகின்றன. வேளாண்சார்ந்த தொழில்கள் குடிசைத்தொழில், சிறுதொழில் மற்றும் ஆலைத்தொழிலாகவும் உள்ளன. நிரந்தர பணியில் அதிக அளவு பணியாளர்கள் தொழிற்சாலைகளில் பணிபுரிவதால் அதனருகிலேயே குடியேற்றங்கள் பெருகுகின்றன. எ.கா. ஜவுளி தொழிற்சாலை, சர்க்கரை ஆலை, காகித ஆலை, தாவர எண்ணெய் ஆலை, தேயிலை மற்றும் காபி தொழிற்சாலைகள்.

ஊரக கடன்சுமை

  • ஊரக கடன்சுமை என்பது கிராம மக்கள் குறிப்பிட்ட காலத்தில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த இயலாமல் கடனின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையைக் குறிக்கும்.
  • இந்தியாவின் நிதி கட்டமைப்பு பலவீனமாக இருப்பதனால் உதவி தேவைப்படும் விவசாயிகள், நிலமற்ற விவசாயிகள் மற்றும் வேளாண் கூலி தொழிலாளர்களின் கடன்சுமை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் குறைந்த வாழ்க்கைத் தரம், குறைந்த உற்பத்தித் திறன், தற்கொலைகள் போன்ற தீய விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
  • வேளாண்மை செய்யவும், வேளாண்மை இல்லாத காலங்களில் குடும்ப செலவிற்காகவும், கருவிகள் வாங்குவதற்காகவும், குடும்பவிழா கொண்டாட்டங்கள் , மதுபான நுகர்வு மற்றும் மருத்துவச் செலவு போன்ற காரணங்களுக்காகவும் வரம்பின்றி விவசாயிகள் கடன் பெறுகின்றனர்.
  • வருமானம் குறைவாக உள்ளதால் அவர்கள் பெற்ற கடன்களையும், வட்டியையும் திருப்பி செலுத்த இயலாத நிலையில் கிராம மக்கள் உள்ளனர்.
  • தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு (NSSO, 2002 – 2003) புள்ளிவிவரப்படி 30% ஏழைகள் மட்டுமே அரசுடைமை வங்கிகளில் கடன் பெறுகின்றனர்.
  • அகில இந்திய கடன் மற்றும் முதலீட்டு ஆய்வு (AIDIS 2002) – ன் படி 1991-ல் 66.3% ஆக இருந்த அமைப்புக்கடன் 2002-ல் 57.1% ஆக குறைந்தது. இந்தக் குறைவு அமைப்புசாரா கடன்களின் அதிகரிப்பை காட்டுகிறது (RBI 2006).

“இந்தியாவில் 2015 ஆம் ஆண்டு சமூக பொருளாதார மற்றும் சாதி ரீதியான கணக்கீட்டின்படி, 73% மக்கள் ஊரக பகுதிகளில் வசிக்கின்றனர். இதில் 18.5% மக்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள், 11% மக்கள் பழங்குடியினர்.

ஊரக கடன்சுமைகளின் இயல்புகள்

இந்தியாவில் ஏறக்குறைய 4ல் 3 பகுதி ஊரக குடும்பங்கள் கடனில் மூழ்கி உள்ளனர். சிறு விவசாயிகளுக்கு கடன் சுமை அதிகம். விவசாய தொழிலாளர்கள் மற்ற தொழிலாளர்களைக் காட்டிலும் மிகுந்த கடனாளிகளாக உள்ளனர். பெரும்பாலான கடன்கள் குறுகிய கால கடன்கள் மற்றும் உற்பத்தி இயல்பற்றவை. அதிக வட்டிக்கு கடன் வாங்குபவர்களின் சதவிகிதமே அதிகமாக உள்லது. பெரும்பான்மையான கிராம மக்கள் தனியார் நிறுவனங்களிடமிருந்தும், அதிகவட்டிக்கு பணம் கொடுப்பவர்களிடமிருந்தும் கடன் பெறுகிறார்கள்.

ஊரக கடன்களுக்கான காரணங்கள்

ஊரக கடன்களுக்கான காரணங்கள் பின்வருமாறு

  1. விவசாயிகளின் ஏழ்மைநிலை:

வறுமை கெடும் சூழலானது நுகர்விற்காகவும், விவசாயத் தொழிலை மேற்கொள்வதற்காகவும் மற்றும் குடும்பவிழாக்களுக்காகவும் விவசாயிகளை கடன் பெறத் தூண்டுகிறது. ஏழ்மை நிலை, கடன் மற்றும் கடனுக்கான அதிக வட்டி முதலியன விவசாயிகளைக் கடன் கொடுப்பவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கிறது.

  1. பருவமழை பொய்த்தல்: அடிக்கடி பருவமழை பொய்த்துப் போவது விவசாயிகளுக்கு சாபமாக அமைகிறது. இயற்கை பொய்த்துப் போவதால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர், ஆதலால் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த இயலாமல் அவதிப்படுகின்றனர், விவசாயம் எப்போது சிறக்கும், கடன்களை அடைக்கலாமென அவர்களால் கணிக்க முடியவில்லை.
  2. வழக்குகள்: நிலங்கள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தின் இருப்பதால் அதற்காக செலவிட அதிக கடன் பெறுகிறார்கள். அவர்களின் கல்வியறிவின்மையாலும் அறியாமையாலும் வழக்குகள் நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டு அவர்கள் சேமிப்பு மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படுகிறது.
  3. வட்டிக்குகடன் தருவோர் மற்றும் அதிக வட்டி வீதம்:

உள்ளூரில் வட்டிக்கு கடன் கொடுப்பவர்கள் அதிக வட்டி வசூலித்தல் மற்றும் அசலுடன் வட்டியைச் சேர்த்து அதிகரித்துக்கொண்டே செல்வதால் விவசாயிகள் கடனிலேயே மூழ்கும் நிலை உள்ளது.

ஊரகக் கடன்களை தீர்ப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

  • ஊரக கடன்களைத் தீர்ப்பதற்கு பல்வேறு வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவை வட்டிக்கு கடன் கொடுப்பவர்களை ஒழுங்குபடுத்துதல், ஊரக வங்கிகளை மேம்படுத்துதல், வட்டார ஊரக வங்கிகள் (RRBs) தொடங்கிதல், நுண்கடன்கள் வழங்குதல், சுய உதவிக் குழுக்களை அமைத்தல் (SHGs), தொடக்க கூட்டுறவு வங்கிகள் மற்றும் நில வங்கிகள் தொடங்குதல், பயிர் கடன் வழங்குதல், முன்னோடி வங்கித்திட்டங்கள், சிறிய அலகு முன்னேற்ற மற்றும் மறு நிதியளிப்பு முகவர் வங்கி (MUDRA) தொடங்குதல், தூணை தொழில்களை உருவாக்குதக், விவசாயம் சாரா தொழில்களை உருவாக்குத, திறன் மேம்பாடு பயிற்சிகள் அளித்தல்.
  • இருப்பினும் ஏழைகள் மற்றும் சுய உதவிக்குழுவினருக்கு வட்டி வீதங்கள் மற்றும் போக்குவரத்து செலவினங்கள் வசதிமிக்கவர்களுக்கு கிடைப்பதைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.
  • எடுத்துக்காட்டாக மகிழ்வுந்துக்கான கடனைவிட கல்விக்கடன் வட்டி அதிகமாக உள்ளது.

வட்டார ஊரக வங்கிகள் (RRBs)

  • இந்திய அரசாங்கம் 1975 ஆம் ஆண்டு ஊரக வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து ஆராய, ஊரக வங்கிகளில் பணிபுரிந்தவர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின்படி, வட்டார ஊரக வங்கிகள் (Regional Rurual Banks) செயல்படுத்தப்பட்டன.
  • சிறு மற்றும் குறு விவசாயிகள், வேளாண் தொழிலாளர்கள், கிராம கைவினைஞர்கள் மற்றும் சிறு நிறுவனங்களுக்கு கடன் மற்றும் பிற உதவிகளை வழங்குவதன் மூலம் ஊரகப் பொருளாதாரம் மேம்பாடு அடைய வட்டார ஊரக வங்கிகள் பரிந்துரைக்கப்பட்டன.
  • மத்திய மாநில அரசுகள் மற்றும் வணிக வங்கிகளின் கூட்டு முயற்சியால் உருவானதே வட்டார ஊரக வங்கிகள் ஆகும்.
  • தற்போது இந்தியாவில் 64 வட்டார ஊரக வங்கிகள் உள்ளன. பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு மட்டுமே RRBs –கடன் வழங்குகிறது. மற்றும் வங்கியின் வட்டி வீதமானது கூட்டுறவு சங்கங்களின் வட்டி வீதத்தைப்போல் இருக்கும்.

குறுநிதி (Micro Finance)

  • குறுநிதி என்பது குறுகடன்களைக் குறிக்கும். இந்த நிதிச்சேவையானது கடன்கள் , சேமிப்புகள், தொழில் முனைவோர்க்கான காப்பீடு வசதிகள், பாரம்பரிய மூலதன ஆதாரம் இல்லாத சிறு தொழில் முனைவோர் ஆகியோர்க்கு வங்கி அல்லது முதலீட்டாளர் போல செயல்படுவதாகும்.
  • சிறுதொழில்புரிவோருக்கு தேவையான நிதியை வழங்கி அவர்களை தொழில் அல்லது வணிகத்தில் முதலீடு செய்யவைப்பதே இதன் நோக்கமாகும்.
  • குறு நிதியானது குறுங்கடன் வழங்கும் நிறுவனங்கள் மூலம் வழங்கப்படுகிறது. இதில் சிறிய , இலாப நோக்கமில்லாத நிறுவனங்களிலிருந்து பெரிய வங்கிகள் வரை அடங்கும்.
  • அரசு சாராத நிறுவனகள் (NGOs) இவ்வகைக் கடன் வழங்குவதில் முன்னோடியாக விளங்குகின்றன. இந்தியாவில் இந்த குறுங்கடன் வழங்கும் முறைகள் கடந்த 20 வருடங்களாக அதிக வளர்ச்சியடைந்துள்ளன.
  • இந்தியாவில் 2009ஆம் ஆண்டில் குறு கடன் வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 150 ஆக இருந்தது. (திரிபாதி 2014).

சுய உதவிக்குழுக்கள்

  • “சுயஉதவிக்குழு” என்பது ஒரே மாதிரியான சமூக பொருளாதாரப் பின்னணி கொண்ட 20 பெண்கள் வரை (சராசரியாக 14 பேர்) கொண்ட தன்னிச்சையான அமைப்பு ஆகும்.
  • இவற்றின் உறுப்பினர்கள் சுயஉதவி மற்றும் பரஸ்பர உதவி மூலம் பொதுவான பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள முயல்கின்றனர். சுயஉதவிக் குழுக்கள் உறுப்பினர்களின் சிறு சேமிப்பை அதிகரிக்க உதவுகின்றன. அவர்கள் மாதந்தோறும் சிறுதொகையான ரூ. 10 முதல் ரூ.50 ரூபாய் வரை வங்கியில் சேமிக்கின்றனர்.
  • தொடர்ந்து இவ்வாறு 6 மாதங்கள் சேமித்த பிறகு சிறிய தொகைகளாக குழுவிலுள்ள தேவைப்படும் உறுப்பினர்களுக்கு வட்டிக்கு வழங்குகின்றனர். செயல்பாடுகளை வைத்து சுயஉதவிக் குழுக்கள் வங்கி இணைப்பு திட்டத்தில் சேர்க்கப்படுகிறார்கள் (SBLP). இது 1992-ல் ஆரம்பிக்கப்பட்டது.
  • இத்திட்டம் சுய வேலைவயப்பை ஏற்படுத்துவதற்கும், ஊரக ஏழை மக்களை இணைப்பதற்கும் மற்றும் அவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும், செயல்பாடுகளை திட்டமிடுவதற்கும், உள்கட்டமைப்பு வசதியை உருவாக்குவதற்கும், தொழில்நுட்பவசதி, கடன் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகிய அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கும் உருவாக்கப்பட்ட நல்ல திட்டமாகும்.
  • இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது, வங்கிக்கடன் மற்றும் அரசாங்க மானியம் வழங்கி வருவாய் ஆதாரங்களை பெருக்கி, பயனாளிகளை ஏழ்மை கோட்டிற்கு மேல் முன்னேற்றமடைய செய்வதாகும்.
  • NABARD வங்கியின் கணக்கீட்டின்படி 2.2 மில்லியன் சுயஉதவிக் குழுக்கள் இந்தியாவில் உள்ளன. அதில் 33 மில்லியன் உறுப்பினர்கள் வங்கி இணைப்புத் திட்டத்தின் கீழ் வங்கிக்கடன் பெற்றுள்ளனர்.
  • SHGs வங்கி இணைப்புத் திட்டம் தொடக்கம் முதலே சில மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தென் மாநிலங்களான ஆந்திரபிரதேசம், தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா போன்றவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.
  • வங்கிகள் அதிக நிதியினை திரட்ட சுயஉதவிக் குழுக்கள் உதவின. வங்கிகள் வாகன கடனுக்கான வட்டி வீதத்தை விட சுயஉதவிக் குழுக்கான வட்டி வீதம் அதிகமாக உள்ளது.
  • 2009-10 ஆம் ஆண்டின்படி 1.59 மில்லியன் புதிய சுய உதவிக் குழுக்கள் இக்கடன் பெறும் வசதியோடு இணைக்கப்பட்டன. மற்றும் வங்கிகள் மூலம் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 14,453 கோடி கடனாக வழங்கப்பட்டது. 2010 மார்ச் முடிவில் 6.95 மில்லியன் சுய உதவிக் குழுக்கள் வங்கிகளில் சேமிப்பு கணக்கை வைத்திருந்தனர்.
  • NABARD ன் SHG வங்கி இணைப்பு திட்டத்தின்படி உறுப்பினர்கள் கடனை சரியாக திருப்பி செலுத்திய பதிவை வைத்திருக்கும் சுய உதவிக்குழுக்கள் வங்கியில் கடன் பெற இயலும். 2005-2006 ஆண்டில் தென் மாநிலங்களான ஆந்திரபிரதேசம் , தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகியவை வெற்றிகரமாக செயல்பட்டுள்ளன. இம்மாநிலத்தில் 60% சுய உதவிக் குழுக்கள் வங்கி இணைப்பு கடன் வசதியை பெற்றுள்ளன. (தருணா மற்றும் யாதவ், 2016)

சுயஉதவிக் குழுக்களின் முக்கிய இயல்புகள்

  1. சுய உதவிக் குழுவின் உறுப்பினர்கள் பொதுவாக ஒரே மாதிரியான பொருளாதார நிலையில் உள்ளவர்கள். குழுவினரிடையே உள்ள புரிந்துணர்வின் அடிப்படையில் உறுப்பினர்களை சுயமாகத் தேர்ந்தெடுக்கின்றனர்.
  2. பெரும்பாலான சுயஉதவிக் குழுக்கள் 10 முதல் 20 பெண் உறுப்பினர்களைக் கொண்டவை.
  3. SHGs தமக்கென்று வடிவமைக்கப்பட்டச் சட்டங்களையும், விதிமுறைகளையும் கொண்டுள்ளன. தொடர்ச்சியாக கூட்டம் நடத்துதல் மற்றும் மூறையாக பதிவேடுகளைப் பராமரித்தல், சேமிப்பு மற்றும் கடன் வழங்குதல் ஆகிய ஒழுங்கினை அவை கடைபிடிக்கின்றன.
  4. SHG-ன் முழு பங்கேற்பினை அளித்து, அனைவரும் கலந்தாலோசித்து முடிவெடுப்பதுடன் தங்களை தாங்களே நிர்வகித்துக்கொள்கின்றனர்.

சிறிய அலகு முன்னேற்றம் மற்றும் மறுநிதியளிக்கும் முகவர் வங்கி (MUDRA)

இது பொதுத்துறை சார்ந்த நிதி நிறுவனம் ஆகும். இது சிறு, குறு நிதி நிறுவனங்களுக்கும், வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கும் மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் (MSMEs) கடன் வழங்குகிறது. இது ஏப்ரல் 8, 2015ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.

  • குறு அலகுகள் வளர்ச்சி மற்றும் மறுநிதியாக்கம் நிறுவனம்.
  • குறி நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தவும் மறு நிதியாக்கம் செய்யவும் ஏற்படுத்தப்பட்டது.

முத்ரா வங்கியின் முதன்மை நோக்கங்கள்

  1. குறுங்கடன் வாங்குபவரையும், பெறுபவரையும் ஒழுங்குபடுத்துதல் மற்றும் குறுங்கடன் வழங்குவதில் நிலைத்த தன்மையை ஏற்படுத்தல்.
  2. சிறு தொழில் புரிபவர்கள், சில்லறை வியாபாரிகள், சுயஉதவிக்குழுக்கள் மற்றும் தனிநபர்களுக்கு கடன் வழங்கும் சிறு நிதி நிறுவனங்களுக்கு, மேலும் நிதி மற்றும் கடன் வசதியை ஏற்படுத்தி தருதல்.
  3. அனைத்து சிறு நிதி வழங்கும் நிறுவனங்களை பதிவு செய்தல் மற்றும் அதன் செயல்பாடுகளை தரம் நிர்ணயம் செய்தல் மற்றும் முறையான ஒப்புதல் வழங்குதல்.
  4. சிறு தொழில்களை மேற்கொள்வதற்கு வழங்கப்படும் கடன்களுக்கு உத்திரவாதம் வழங்குவதற்காக கடன் உத்திரவாத திட்டம் (CGS) ஆரம்பித்தல்.
  5. கடன் வழங்குதல், கடன் பெறுதல் மற்றும் பகிர்ந்தளிக்கப்படும் மூலதனத்தை மேற்பார்வையிடல் ஆகியவற்றுக்கு பொருத்தமான தொழில்நுட்ப உதவிகளை அறிமுகப்படுத்துதல்.

ஊரகநலம் ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம்

சிறந்த வாழ்வினை வாழ்வதற்கு உடல்நலம் மிக முக்கியம்.

  • இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான ஏழை மக்கள் வாழ்வாதாரத்திற்காகவும் , உடல் நலத்திற்காகவும் நம்பிக்கையற்றுப் போராடி தோற்றுவருகின்றனர்.
  • இந்திய ஊரகப் பகுதி மக்கள் பல்வேறு தொற்று நோய்களான பெரியம்மை, காலரா, மலேரியா, டைபாய்டு, டெங்கு , சிக்கன்குன்யா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • போதிய மருத்துவ வசதியின்மை, அறியாமை மற்றும் ஏழ்மை நிலையே இதற்கு காரணம் ஆகும். தங்கள் மக்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் வழங்குதலும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதலும் மற்றும் மக்களின் உடல்நலத்தை மேம்படுத்துதலுமே அரசின் முதன்மையான கடமையாகும் என்று இந்திய அரசியலமைப்பு தெளிவாக வலியுறுத்துகிறது.
  • இந்த அரசியலமைப்பின் வழிகாட்டுதலை நிறைவேற்றுவதகாக ஊட்டச்சத்தினை மேம்படுத்துவதற்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
  • இவற்றில்ம் இணை உணவு வழங்கும் திட்டங்களான மதிய உணவு திட்டம், செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக ஊட்டச்சத்து கல்வி, உணவில் அயோடின் உப்பினை சேர்ப்பதை வலியுறுத்தல் போன்றவையாகும்.
  • இந்தியாவைவிட இலங்கை உடல் நலதரத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளது இந்தியாவை பொறுத்தவரையில் கேரளா மாநிலம் தமிழ்நாட்டை விட சிறப்பாக உள்ளது.

தேசிய ஊரக நல அமைப்பு

  • தேசிய ஊரக அமைப்பு (NRHM) 12, ஏப்ரல் 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. நலிவடைந்த ஊரக மக்களுக்கான குறைந்த விலையில் எளிதில் பெறக்கூடிய தரமான ஆரோக்கிய வசதிகளை ஏற்படுத்தி தருவது இதன் நோக்கம்.
  • உடல் நலத்தை தீர்மானிக்கும் காரணிகளான குடிநீர், சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்து சமூக மற்றும் பாலின சமத்துவம் போன்றவற்றை அடைவதற்காக சிறப்பாக செயல்படும் சமூகத்ததைப் பரவலாக்கப்பட, நல விநியோக முறையை ஏற்படுத்துவதே இந்த அமைப்பின் மிக முக்கியமான நோக்கமாகும்.
  • இனப்பெருக்கம் , தாய்மைப்பேறு, சிசு மற்றும் குழந்தை மற்றும் வளர் இளம் பருவத்தினரின் (RMNCH +A) நலனுக்காக பல்வேறு பணிகளை NRHM மேற்கொள்கிறது. மகப்பேறு மற்றும் குழந்தை நலன் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்குகிறது.

ஊரக உள்கட்டமைப்பு

ஊரக வீட்டுவசதி

  • வீடு என்பது ஒவ்வொரு குடும்பத்தின் அடிப்படைத்தேவைகளுள் ஒன்றாகும். சிறந்த வீட்டு வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் உழைப்பின் உற்பத்தித்திறன் அதிகரிக்கும். இப்பொழுது அனைவரும் தனிக் குடும்பமாக வசிக்க முனைவதால் வீட்டுமனை, வீடுகள் பெறுவதில் பிரச்சனைகள் அதிகரிக்கின்றது.
  • வீடுகளை ஏற்படுத்தி தருவது என்பது வீட்டினை வழங்குவது மட்டுமின்றி முறையான குடிநீர் வசதி, நல்ல சுகாதார வசதி, முறைப்படி கழிவுகளை அப்புறப்படுத்தும் வழி வகைகள் போன்றவற்றையும் ஏற்படுத்தித்தருவதாகும்.
  • வீட்டுமனை பெறுவதில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க குறைந்த செலவு தொழில்நுட்பத்தில் வீடு கட்டுவது, போதுமான வீட்டுக் கடன் வசதியை ஏற்படுத்தித் தருவது, மற்றும் ஊரக பகுதியிலுள்ள நிலமற்ற தொழிலாளர்களுக்கு வீட்டு மனையை அளிப்பது போன்ற வழிமுறைகளின் மூலம் வீட்டுமனை பெறுவதில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்கலாம்.

ஊரக அங்காடி

  • ஊரகப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களை வாங்கவோ அல்லது விற்கவோ ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்பு ஊரக அங்காடியாகும்.
  • நகர்ப்புறம் மற்றும் இதர பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட இதர பொருட்கள் ஆகியவற்றை வாங்கவும் ஊரக அங்காடிகள் பயன்படுகின்றன.
  • விவசாயிகளிடம் பேரம் பேசும் ஆற்றல் குறைவு. இடைத்தரகர்கள், அங்காடி அமைப்பில் காணப்படும் குறைபாடுகள் , சேமிப்பு கிடங்கு வசதிகள் பற்றாக்குறை, போக்குவரத்து வசதிகள் குறைவு, பண்டங்களை தரம் பிரித்தல் இன்மை, வேளாண் சார்ந்த தகவல் பற்றாக்குறை மற்றும் மோசமான அங்காடி அமைப்பு முறைகள் முதலியன ஊரக அங்காடியில் காணப்படும் குறைபாடுகளாகும்.
  • NSSO புள்ளி விவரத்தின் படி 38 சதவீத குடும்பங்கள் ஓர் அறையையே வீடாகக் கொண்டும் மற்றொரு 36 சதவீத குடும்பங்கள் இரண்டு அறைகள் கொண்ட வீட்டிலும் வாழ்கின்றனர்.
  • இந்தியாவின் ஊரக சாலை பகுதி 26.50 இலட்சம் கி.மீ ஆகும். இதில் 13.5 சதவீதம் பகுதிகளில் மட்டுமே சாலைகள் போடப்பட்டுள்ளன.
  • இந்தியாவின் சாலை தொடர்பு வசதி அமைப்புகள் உலகிலேயே பெரிய அமைப்புகளுள் ஒன்றாகும். 1950 – 51ல் 4 இலட்சம் கி.மீட்டர் நீளமாக இருந்த இந்தியச் சாலைகளின் நீளம் தற்போது 2018-ல் 34 இலட்சம் கி.மீட்டர் ஆகும்.

ஊரக சாலைகள்

  • போக்குவரத்து முறைகளில் சாலை போக்குவரத்து மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஊரக பொருளாதாரத்தில் ஊரக சாலைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
  • ஊரக பகுதிகளில் நன்கு அமைக்கப்பட்ட சாலைகள், தொலைதூர கிராமங்களை பிற நகர்புற மையங்களோடு இணைப்பதற்கும், வேளாண் இடுபொருட்களின் போக்குவரத்து செலவைக் குறைப்பதற்கும், ஊரக உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும் உதவுகின்றன.
  • ஊரக விவசாயிகளின் உற்பத்தியை நகர்ப்புற அங்காடிகளில் சந்தைப்படுத்துவதற்கும், தொலைதூர அங்காடிகளுக்கு செல்ப்வதற்கும், பிற பணிகளை பயன்படுத்திக் கொள்வதற்கும் உதவுகிறது.

ஊரக மின்மயமாக்கல்

ஊரக மின்மயமாக்குதல் என்பது ஊரக பகுதிகளுக்கு மின் வசதியை ஏற்படுத்தித்தருவதாகும்.

ஊரக மின்மயமாக்குதலின் முக்கிய நோக்கங்கள்:

  • வேளாண் செயல்பாடுகளுக்கு மின் வசதியை அளிப்பதன் மூலம் வேளாண் உற்பத்தித் திறனை பெருக்குவது; பயிரிடும் நிலப்பரப்பை அதிகரிப்பது, ஊரக தொழிற்சாலைகளை மேம்படுத்துவது மற்றும் ஊரக பகுதிகளுக்கு மின்வசதியை ஏற்படுத்துதல் ஆகியன ஆகும். வேளாண் உற்பத்தியை அதிகப்படுத்த இந்தியாவின் பல மாநிலங்களில் மின்வசதி இலவசமாக வழங்கப்படுகிறது மற்றும் ஊரக பகுதிகளில் மின் கட்டண வீதம் மிகக் குறைவாக உள்ளது.
  • 2017 மார்ச் முடிவில் இந்தியாவின் 99.25 சதவீதம் கிராமங்கள் முழுமையாக மின் தொடர்பைப் பெற்றிருந்தன. 31.03.2017 ன் படி கீழ்க்கண்ட 20 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் முழுமையான அதாவது 100 சதவீத மின்வசதி அடையப்பட்டுள்ளது அவை சண்டிகர், டெல்லி, ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் டாமன் மற்றும் டையூ, தாத்ரா மற்றும் நாகர் ஹவேளி, கோவா, குஜராத், மஹாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம், கேரளா, லட்சத்தீவு, புதுச்சேரி, தமிழ்நாடு, தெலுங்கானா, அந்தோமான் நிக்கோபர் தீவுகள், சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகியவை ஆகும்.

இந்தியாவில் ஊரக பகுதிகளில் மின்மயமாக்கிகளைப் பாதிக்கும் காரணிகள்

  1. நிதிப்பற்றாக்குறை: மின்சாரம் உற்பத்திக்கும் அதனை விநியோகிப்பதற்கும் அதிக செலவு ஏற்படுகிறது இதற்கான நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவு.
  2. மாநிலங்களுக்கிடையேயுள்ள பிரச்சனைகள்: மின் திட்டங்களை நிர்வகிப்பதில் மாநிலங்களுக்கிடையே பிரச்சனைகள் நிலவுவதால் மின்சார விநியோகம் பாதிக்கப்படுகிறது.
  3. சீரற்ற நிலப்பரப்பு: கிராமப்புற பகுதிகள் சமமற்று இருப்பதால் (குண்டுகள், மலைகள்) முறையான மின்இணைப்பு வழங்குவது கடினமாகவும், புதிதாத மின் இணைப்பு கம்பிகள் அமைப்பற்கு கடினமாகவும் அதிக செலவும் ஆகிறது.
  4. மின் அனுப்புகையில் ஏற்படும் இழப்பு: ஊரக பகுதிகளுக்கு மின் அனுப்புகையில் ஏற்படும் இழப்பானது 25 சதவீதம் ஆகும்.
  5. மின் திருட்டு: வசதி படைத்த மக்கள் முறையற்ற வழிகளில் மின்சாரத்தைப் பயன்படுத்துதல் வேறுபயன்பாட்டுக்கு மாற்றுதல் போன்றவைகள் ஊரக பகுதிகளில் மின்மயமாக்குதலுக்கு தடையாக உள்ளன.

ஊரக முன்னேற்றத்திற்கான தேவைகள்

  1. விவசாயம் மற்றும் விவசாயம் சாரா துறைகளில் ஊரக உண்மை வருமானம் உருவாக்கும் முயற்சிகள் தேவை. வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருமானம் உண்டாக்குதக், ஊரக தொழில்மயமாக்குதல், உடல்நல மற்றும் ஊட்டச்சத்து கல்வி வசதி, வீட்டுவசதி மற்றும் பல்வேறு மக்கள் நில பணிகளை மேற்கொள்வதற்கு முயற்சிகள் தேவை.
  2. அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக தேவைத் திட்டங்கள் மேம்படுத்துவதற்கு முதலீடுகளை அதிகரிக்க செய்தல் வேண்டும்.
  3. தற்போதுள்ள பிரச்சனையை தீர்க்க ஒருங்கிணைக்கப்பட்ட திட்டங்களை தீட்டுவதுடன் அதன் மூலம் நிலையான வளர்ச்சியினை பெறுவதற்கும் வழிவகுக்க வேண்டும்.
  4. வளர்ச்சி திட்டங்களை வகுக்கும் போது ஊரக பகுதி மக்களின் பிரச்சனைகளை பற்றி அறிந்த நபர்களையோ அல்லது தலைவர்களையோ மற்றும் தொலை நோக்கு பார்வையுள்ள சிந்தனையாளர்களையோ கலந்தாலோசிக்க வேண்டும்.

ஸ்லேட்டரின் கிராமங்கள்: கிரில்பெர்ட் ஸ்லேட்டர் என்பவர் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் முதல் பொருளாதார பேராசிரியர். இவர் தனது மாணவர்களைக் கொண்டு சில கிராமங்களை ஆய்வு செய்தார். வடமலைபுரம் (ராமநாதபுரம்), கங்கை கொண்டான் (திருநெல்வேலி), பாலக்குறிச்சி (தஞ்சாவூர்) மற்றும் துசி (வடஆற்காடு) ஆகிய தமிழ்நாட்டில் உள்ள சில கிராமங்களை ஆய்வு செய்து 1918-ம் ஆண்டு சில தென்னிந்திய கிராமங்கள் என்ற புத்தகத்தை வெளியிட்டார். இதனை தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சி குழுவினரும் இதனை 1930, 1950 மற்றும் 1960-ஆம் ஆண்டுகளில் ஆய்வு செய்தனர். இதில் இரண்டு கிராமங்கள் மட்டும் 21-ம் நூற்ராண்டுக்கு முந்தைய கால கட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டதாகும். இந்த மறு ஆய்வில் முக்கியமான வரலாற்றுப் பதிவுகள் காணப்படுகின்றன. இந்த கிராமங்களை ஆய்வு செய்யும் பிற ஆராய்ச்சியாளர்களுக்கு வழிகாட்டியாக அமைகிறது. மற்றும் பிற்கால ஆராய்ச்சியாளர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது. இந்த ஆய்வின் மூலம் ஊரக பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை பற்றி நாம் அறிந்து கொள்ளலாம்.

தொகுப்புரை

பல்வேறு கொள்கைகளின் அடிப்படையில், ஊரகப் பொருளாதாரத்தை திடப்படுத்தும் முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், கட்டமைப்பு, கல்வி, சிறு வணிகம் ஆகியவற்றின் முதலீடு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வருங்காலங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நடவடிக்கைகள் திறம்பட செயல்படுத்த நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. ஊரகப் பகுதிகளில் நகர்ப்புற வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கு (PURA – Provision of Urban facilities for Rural Areas) முக்கியத்துவம் தர வேண்டும். அதன் மூலம் இந்திய கிராமங்களை ஒளிரச் செய்ய முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!