Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

காந்தவியல் Book Back Questions 8th Science Lesson 7

8th Science Lesson 7

7] காந்தவியல்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

இரும்பின் தாதுக்கள் மூன்று வகைப்படும். அவை: ஹேமடைட் (69% இரும்பு), மேக்னடைட் (72.4% இரும்பு) மற்றும் சிட்ரைட் (48.2% இரும்பு), மேக்னடைட் என்பது இரும்பின் ஆக்சைடு தாது ஆகும். அதன் வாய்ப்பாடு Fe3O4. இரும்பின் தாதுக்களுள் மேக்னடைட் அதிகமான காந்தப் பண்பினைப் பெற்றுள்ளது.

வில்லியம் கில்பர்ட் காந்தவியல் எனும் அறிவியல் பிரிவு உருவாகக் காரணமானவர். பூமி மிகப்பெரிய காந்தம் என்பதனை அவர் வலியுறுத்தினார். 1544ஆம் ஆண்டு, மே மாதம் 24ஆம் தேதி வில்லியம் கில்பர்ட் பிறந்தார். இவரே முதன்முதலில் காந்தக் கல் (காந்தத்தின் இரும்புத் தாது) குறித்த முறையான ஆய்வினை மேற்கொண்டார் தனது கண்டுபிடிப்புகளை ‘தி மேக்னடைட்’ எனும் நூலில் வெளியிட்டார்.

ஒரு காந்தத் திசைகாட்டியில் மிகச்சிறிய காந்தம் ஒன்று எளிதாகச் சுழலும் வகையில் திசைகாட்டியின் மையத்தில் கிடைமட்டத் தளத்தில் குறிமுள் வடிவத்தில் உள்ளது. இது காந்த ஊசி என்றும் அழைக்கப்படுகிறது. காந்த ஊசியின் முனைகள், தோராயமாக புவியின் வட மற்றும் தென் திசையை நோக்கியே இருக்கின்றன.

எந்த ஒரு வெப்பநிலையில் ஃபெர்ரோ காந்தப்பொருள் பாரா காந்தப் பொருளாக மாற்றமடைகிறதோ அந்த வெப்பநிலை கியூரி வெப்பநிலை என்று அழைக்கப்படுகிறது.

புறக் காந்தப்புலத்தில் ஒரு பொருளினை வைத்து, அதனை நிலையான அல்லது தற்காலிகக் காந்தமாக உருவாக்கும் முறையே காந்தமாக்கல் எனப்படும். இது செயற்கைக் காந்தங்களை உருவாக்கும் முறைகளுள் ஒன்றாகும்.

பால்வழி விண்மீன் திரளில் அமைந்துள்ள மேக்னிட்டார் என்று அழைக்கப்படும் காந்த நியூட்ரான் விண்மீனே நடைமுறையில் காணப்படும் அதிக திறன் மிகுந்த காந்தமாகும். மேக்னிட்டார், 20 கிலோ மீட்டர் விட்டமும், சூரியனைப் போன்று 2 அல்லது 3 மடங்கு நிறையும் கொண்டது. இதன் மிக அதிக காந்தப்புலம் ஊறு விளைவிக்கக் கூடியது. அதன் நிலையிலிருந்து ஓர் உயிரி 1000 கி.மீ. தூரத்தில் இருந்தாலும் கூட அந்த உயிரியின் இரத்த ஓட்டத்திலுள்ள அனைத்து இரும்பு அணுக்களையும் (ஹீமோகுளோபின்) உறிஞ்சும் திறன் கொண்டது.

கால்நடைகள் புல் மேயும் போது கூர்மையான இரும்புக்கம்பி மற்றும் பிற இரும்புப் பொருள்களையும் உண்பதால் செரிமானப் பகுதி காயமடைகிறது. அல்நிக்கோ எனப்படும் பசுக்காந்தங்கள் இத்தகைய பொருள்களைக் கவர்ந்திழுத்து கால்நடைகளைப் பாதுகாக்கின்றன.

குளிர் பதனிகளில் பயன்படுத்தப்படும் காந்தத்தைவிட புவிக்காந்தமானது 20 மடங்கு அதிக திறன் கொண்டதாகும்.

புறாக்கள் அசாதரணமாக நீண்ட தூரம் பயணித்துத் திரும்பும் திறன் கொண்டுள்ளன. இதுவரை சென்றிறாத பகுதிகளில் கொண்டு சென்று விட்டாலும் அவை தங்களது இருப்பிடத்திற்கே வரக்கூடியவை புவியின் காந்தப்புலத்தினை அறிந்திடும் மேக்னடைட் என்னும் காந்தப்பொருள் அவற்றின் அலகுகளில் இருப்பதால் புவியின் காந்தப்புலத்தை அறியும் ஆற்றலை அவை பெற்றுள்ளன. அத்தகைய காந்த உணர்வு (magneto-reception) காந்த ஏற்கும் பண்பு என்று அழைக்கப்படுகிறது.

மெக்லிவ் (Maglev) தொடர் வண்டிக்கு (காந்த விலக்கத் தொடர்வண்டி) சக்கரங்கள் கிடையாது. கணினி மூலம் கட்டுப்படுத்தப்படும் மின்காந்தங்கள் மூலம் வலிமையான காந்த விசையானது கொடுக்கப்படுவதால் தண்டவாளங்களுக்கு மேலே இது மிதந்து செல்லும். இது உலகிலேயே மிகவும் வேகமான தொடர் வண்டியாகும். இது தோராயமாக 500 கி.மீ/மணி. வேகத்தில் செல்லக்கூடியது.

கடன் அட்டை/பற்று அட்டைகளின் பின்புறத்தில் ஒரு காந்த வரிப் பட்டை உள்ளது. இது பெரும்பாலும் ‘மாக்ஸ்ட்ரைப்’ என்று அழைக்கப்படுகிறது. மாக்ஸ்ட்ரைப் என்பது இரும்பிலிருந்து பெறப்பட்ட காந்தத் துகள்களால் ஆன மெல்லிய நெகிழிப் படலம் ஆகும். ஒவ்வொரு துகளும் ஒரு அங்குல நீளத்தில் 20 மில்லியனில் ஒரு பங்கு கொண்ட சிறிய சட்ட காந்தமாகும்.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. பின்வருவனவற்றுள் காந்தத்தால் கவரப்படும் பொருள் _________

அ) மரப்பொருள்கள்

ஆ) ஏதேனும் ஓர் உலோகம்

இ) தாமிரம்

ஈ) இரும்பு மற்றும் எஃகு

2. கீழ்க்காணும் ஒன்று நிலைத்த காந்தத்திற்கு எடுத்துக்காட்டாகும்.

அ) மின்காந்தம்

ஆ) முமெட்டல்

இ) தேனிரும்பு

ஈ) நியோடிமியம்

3. ஒரு சட்டக் காந்தத்தின் தென்முனையும், U வடிவ காந்தத்தின் வடமுனையும் __________

அ) ஒன்றையொன்று கவரும்

ஆ) ஒன்றையொன்று விலக்கும்

இ) ஒன்றையொன்று கவரவோ, விலக்கவோ செய்யாது

ஈ) மேற்கண்டவற்றுள் எதுவுமில்லை

4. கற்பனையான புவிக் காந்தப்புலம் எந்த வடிவத்தினைப் போன்றது?

அ) U வடிவ காந்தம்

ஆ) மின்னோட்டத்தைக் கடத்தும் நேர்க்கடத்தி

இ) வரிசுருள்

ஈ) சட்டக்காந்தம்

5. MRI என்பதன் விரிவாக்கம் ____________

அ) Magnetic Resonance Imaging

ஆ) Magnetic Running Image

இ) Magnetic Radio Imaging

ஈ) Magnetic Radar Imaging

6. காந்த ஊசி ___________ பயன்படுகிறது.

அ) காந்தவிசைக் கோடுகளை வரைய

ஆ) காந்தப்புலத்தின் திசையை அறிய

இ) கடல் பயணத்திற்கு

ஈ) மேற்காண் அனைத்தும்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. காந்தத்தின் வலிமை அதன் முனைகளில் ____________

2. ஒரு காந்தம் ___________ முனைகளைக் கொண்டது.

3. மின்சார உற்பத்திக்குப் பயன்படும் காந்தங்கள் ____________

4. கனமான இரும்புப் பொருள்களை உயர்த்தப்பயன்படுவது ___________

5. தடையின்றி தொங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதும் __________ வட, தென் முனைகளை நோக்கி இருக்கும்.

III. பொருத்துக:

1. மேக்னடைட் – அ. காந்த விசைக்கோடுகள்

2. ஒரு சிறு சுழலும் காந்தம் – ஆ. இயற்கைக் காந்தம்

3. கோபால்ட் – இ. காந்த ஊசிப்பெட்டி

4. வளைபரப்புகள் – ஈ. ஃபெர்ரோ காந்தப் பொருள்கள்

5. பிஸ்மத் – உ. டயா காந்தப் பொருள்கள்

IV. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

(அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.

(ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.

(இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் தவறு.

(ஈ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் தவறு.

1. கூற்று: இரும்புத் துருவல்களின் செறிவு காந்தத்துருவப் பகுதிகளில் அதிகம்.

காரணம்: காந்தங்கள் மிகவும் கூர்மையானவை.

2. கூற்று: புவியின் காந்தப்புலம் அதன் உள்ளகத்தில் உள்ள இரும்பினால் உருவாகிறது.

காரணம்: உயர் வெப்ப நிலையில் ஒரு காந்தமானது அதன் காந்தப் பண்பினை இழக்கும்.

விடைகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. இரும்பு மற்றும் எஃகு, 2. நியோடிமியம், 3. ஒன்றையொன்று கவரும், 4. சட்டக் காந்தம், 5. Magnetic Resonance Imaging, 6. மேற்கண்ட அனைத்தும்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. அதிகம், 2. இரண்டு, 3. டைனோமோக்கள், 4. மின்காந்தம், 5. புவியின்

III. பொருத்துக:

1. ஆ, 2.இ, 3.ஈ, 4. உ, 5.அ

IV. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று சரியானது. ஆனால் காரணம் தவறு.

2. கூற்று தவறு. ஆனால் காரணம் சரியானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!