Samacheer NotesTnpsc

தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் Notes 12th History Lesson 2 Notes in Tamil

12th History Lesson 2 Notes in Tamil

தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும்

அறிமுகம்

  • பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் இந்திய தேசிய காங்கிரசுக்குள்ளே மிதவாத அரசியலுக்கு எதிராக வெளிப்படையான வெறுப்பு நிலவியது.
  • இவ்வெறுப்பு முடிவில் ஒரு புதியப் போக்காகத் தோற்றம் பெற்று அது தீவிர தேசியவாதப் போக்கெனக் குறிப்பிடப்பட்டது. இத்தீவிர தேசியவாதிகள் அல்லது முற்போக்காளர்கள் அல்லது போர்க்குணமிக்கவர்கள் என நாம் அழைக்க விரும்பும் இக்குழுவினர் மிதவாத தேசியவாதிகளின் கவனமான அணுகுமூறை, ஆகிலேயரிடம் மன்றாடுதல், மனுச் சமர்ப்பித்தல் போன்ற அவர்களின் “இறைஞ்சுதல் கொள்கைகளை” கடுமையாக விமர்சித்தனர்.
  • மகாராஷ்டிராவில் பாலகங்காதர திலகர், வங்காளத்தில் பிபின் சந்திரபால், பஞ்சாபில் லாலா லஜபதி ராய் ஆகியோரின் தலைமையில் இப்போர்க்குணம் வளர்ச்சி பெற்றது.
  • இத்தகையப் போக்கு வளர்ச்சி பெற்றதற்கான அடிப்படைக் காரணங்கள்: காங்கிரசுக்குள் உருவான உட்குழுக்கள், மிதவாத தேசியவாதிகளின் அரசியல் நடவடிக்கைகளால் ஏற்பட்ட மனச்சோர்வு, வங்காளத்தைப் பிரித்ததற்காக கர்சன் மீது ஏற்பட்ட கோபம்.
  • ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கைக்கு முதன்மையான எடுத்துக்காட்டு 1905 ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையாகும். அது காலனிய எதிர்ப்பு, சுதேசி, தேசியம் வளர்வதற்கு வினையூக்கியாய் அமைந்தது.
  • பிரிவினைத் திட்டம் முதன்முதலில் மிதவாத தேசியவாதிகளால் எதிர்க்கப்பட்டது. ஆனால் இயக்கத்திற்கான பல உத்திகள் முன்னெடுக்கப்பட்டன.
  • அந்நியப் பொருட்களைப் புறக்கணிப்பது, அரசால் நிர்வகிக்கப்படும் கல்வி நிலையங்களைப் புறக்கணிப்பது ஆகியன சுதேசி இயக்கத்தின் ஆக்கப்பூர்வமானத் திட்டங்களாக இருந்தன.
  • இவ்வியக்கமே (1905 – 1911) காந்தியடிகளின் சகாப்தத்திற்கு முந்தைய இந்திய தேசிய இயக்கத்தின் மிக முக்கியக் கட்டமாகும்.
  • ஏனெனில் இவ்வியத்தின் போக்கில் இந்திய தேசிய இயக்கத்தின் போக்கில் இந்திய தேசிய இயக்கத்தின் இயல்பில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் ஏற்பட்டன. அது முன்வைத்த நோக்கங்கள், போராட்ட வழிமுறைகள், அதன் சமூக ஆதரவுத் தளம் ஆகியன மாற்றம் பெற்றன.
  • ஆங்கில அரசாட்சியின் கீழ் சமூகத்தின் பல்வேறு பிரிவினர் எதிர்கொண்ட பிரச்சனைகள், அவர்களனைவருடைய வாழ்வின் பொது அம்சமாகிவிட்ட காலனியச் சுரண்டல் ஆகியவை வெளிக் கொணரப்பட்டதால் இயக்கத்தின் சமூக ஆதரவுத்தளம் விரிவடைந்தது.
  • இந்திய தேசிய இயக்கத்தின் வரலாற்றில் முதன்முதலாக பெண்களும், தொழிலாளர்களும், விவசாயிகளும், விளிம்பு நிலை மக்களும், நவீன தேசியச் சிந்தனைகளையும் அரசியலையும் அறிந்து கொண்டனர்.
  • இக்காலப்பகுதியில்தான் முதன்முதலாக உயர்குடியினர் முழுமுயற்சி மேற்கொண்டு சாமானிய மக்களிடம் பேசி அவர்களையும் அரசியலில் இணைந்து கொள்ள அழைத்தனர்.
  • மேலும் இந்தியாவின் பலபகுதிகளில் வட்டார மொழிப் பத்திரிகைகள் பெற்ற வளர்ச்சி சுதேசி இயக்கத்தின் முக்கியச் சாதனையாகும். இக்கால கட்டத்தில் வட்டார மொழிப் பத்திரிகைகள் பெற்ற வளர்ச்சி சுதேசி இயக்கத்தின் முக்கியச் சாதனையாகும்.
  • இக்கால கட்டத்தில் வட்டார மொழிப் பத்திரிகைகளின் தேசியத்தன்மை மிகத் தெளிவாகவே புலப்பட்டது. தமிழ்நாட்டில் சுதேசமித்திரன், மகாராஷ்டிராவில் கேசரி, வங்காளத்தில் யுகந்தர் ஆகிய பத்திரிகைகளின் பங்களிப்பு ஒரு சில எடுத்துக்காட்டுகளாகும்.
  • சுதேசி இயக்கம் மக்களிடையே பெரும் ஆதரவைப்பெற்ற நிலையில், தேசிய இயக்க நடவடிக்கைகளை, அவை எத்தகையதாக இருந்தாலும் அவற்றை நசுக்கும் பொருட்டு ஆங்கில அரசு, பொதுக்கூட்டங்கள் சட்டம் (1907), வெடி மருந்துச் சட்டம் (1908), செய்தித்தாள் சட்டம், தூண்டுதல் குற்றச் சட்டம் (1908), இந்தியப் பத்திரிகைச் சட்டம் (1910) என பல அடக்குமுறைச் சட்டங்களை வரிசையாய் இயற்றியது.
  • பொதுச்கூட்டங்களைக் கண்காணிப்பதும், பதிவு செய்வதும் அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாகும். (பேச்சுகளைப் பதிவு செய்வதற்காக முதன்முறையாக காவல் துறையினர் சுருக்கெழுத்து முறையைப் பயன்படுத்தினர்).
  • இப்பாடத்தில் வங்காளத்திலும் தேசிய அளவிலும் நடைபெற்ற நிகழ்வுகளை விவாதிக்கும்போதே, தமிழ்நாட்டில் நடத்தப்பெற்ற சுதேசி இயக்கத்தையும் விவாதிக்க உள்ளோம்.
  • குறிப்பாக வ.உ.சிதம்பரம், வ.வே,சுப்ரமணியம், சுப்ரமணிய சிவா, சுப்ரமணிய பாரதி ஆகியோர் வகித்த பாத்திரத்தின் மீது தனிக்கவனம் செலுத்துகிறோம்.

வங்கப்பிரிவினை

  • 1899 ஜனவரி 6 இல் புதிய தலைமை ஆளுநராகவும் இந்தியாவின் அரசப் பிரதிநிதியாகவும் கர்சன் பிரபு பணி நியமனம் செய்யப்பட்டார்.
  • தொடர்ந்து ஏற்பட்டப் பஞ்சங்கள், பிளேக் நோய் ஆகியவை ஏற்படுத்தியத் தாக்கத்தின் விளைவாய் ஆங்கிலேயரின் செல்வாக்கு மேன்மேலும் குறைந்து கோண்டிருந்த காலமது.
  • கற்றறிந்த இந்திய மக்கள் பிரிவினரின் கருத்துகளை மாற்றுவதற்கு கர்சன் சிறியளவிலான முயற்சிகளை மேற்கொண்டார்.

  • கற்றறிந்த தேசியவாத அறிஞர்களோடு ஈடுபாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்கு மாறாக அவர் வரிசையாகப் பல அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டார்,
  • எடுத்துக்காட்டாக கல்கத்தா மாநாராட்சிக் குழுவிக் அங்கம் வகித்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்தார் (1899). 1904இல் இயற்றப்பட்டப் பல்கலைக்கழகச் சட்டத்தின்படி கல்கத்தா பல்கலைக்கழகம் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் வைக்கப்பட்டது.
  • இந்தியச் செய்திப் பத்திரிகைகளின் தேசியவாதத் தன்மையைக் குறைப்பதற்காக அலுவலக ரகசியச் சட்டத்தில் (1904) திருத்தம் கொண்டுவரப்பட்டது.
  • இறுதியாக வங்காளத்தைப் பிரிக்க 1905இல் ஆணை பிறப்பித்தார். இப்பிரிவினை இந்தியா முழுவதும் பரவலான எதிர்ப்புக்கு இட்டுச் சென்று இந்திய தேசிய இயக்கத்தில் ஒரு புதிய கட்டத்தைத் தொடங்கி வைத்தது.
  • ஒரு நிர்வாகப் பிரிவு எனும் பொருளில் வங்காள மாகாணம் உண்மையிலேயே மேலாண்மை செய்ய இயலாத வகையில் வடிவத்தில் பெருதாக இருந்தது.
  • பிரிக்கப்பட வேண்டுயதின் அவசியம் தொடர்பாக 1860ஆம் ஆண்டு முதலாக விவாதங்கள் நடைபெற்று வந்தன. மார்ச் 1890இல் பிரிவினைக்கானத் திட்டத்திற்குப் புத்துயிர் அளிக்கபட்டது.
  • கர்சன் அசாம் சென்றிருந்த போது ஐரோப்பியப் பெரும் பண்ணையார்கள் அவரிடம் ஒரு வேண்டுகோள் வைத்தனர். கல்கத்தாவிற்கு அருகே தங்களுக்கு ஒரு கடல் வழியை ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்கள் அசாம்-பெங்கால் இருப்புப்பாதையைச் சார்ந்திருப்பதை ஓரளவு தவிர்த்துக் கொள்ள முடியும் என வேண்டினர்.
  • இதனைத் தொடர்ந்து டிசம்பர் 1903இல் தன்னுடைய இந்தியாவின் பிரதேச மறுவிநியோகம் தொடர்பான குறிப்புகளில் ஒரு திட்டத்தை கர்சன் தீட்டியிருந்தார். அதுவே பின்னர் திருத்தம் செய்யப்பட்டு ரீஸ்லி அறிக்கை (Risely Papers) என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
  • இவ்வறிக்கை பிரிவினைக்கு ஆதரவாக இரண்டு காரணங்களை முன்வைத்தது. அவை: வங்காளத்திற்கு சுமை கூறைவு, அசாமின் முன்னேற்றம் ஆகியனவாகும். எப்படியிருந்தபோதிலும் இத்திட்டம் எவ்வாறு ஆங்கிலேய அதிகாரிகளின், ஐரோப்பிய வணிகர்களின் வசதிக்கேற்றவாறு உண்மையிலே தீட்டப்பட்டது என்பது பற்றிய செய்திகள் மறைக்கப்பட்டன.
  • தொடக்கத்தில் வங்காளத்தின் சில பகுதிகளை மாற்றுவது அல்லது ஏனைய பகுதிகளை மாற்றியமைப்பது என்றிருந்த எண்ணம் டிசம்பர் 1903 முதல் 1905க்குள் பிரிவினைக்கான முழுத்திட்டமாக மாற்றப்பட்டது.
  • வங்காளம் இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட வேண்டும். புதிய கிழக்கு வங்காளமும் அசாமும் சிட்டகாங், டாக்கா, திப்பேராவிலுள்ள ராஜஷாகி மலையின் சில பகுதிகள், அசாம் மாகாணம் மற்றும் மால்டா ஆகியவற்றை உள்ளடக்கியதாய் இருக்கும்.

இந்து முஸ்லிம்களைப் பிரிக்கும் நோக்கம்

  • ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வங்காளத்தில் நடைபெறும் அரசியல் நடவடிக்கைகளை அடக்கி இந்து –முஸ்லிம் மக்களிடையே பிரிவினையை உருவாக்குவது என்பதே கர்சனுடைய நோக்கமாகும்.
  • குடிமைப் பணியாளர்கள் முன்வைத்த மாற்றுத் திட்டங்களைக் குறிப்பாக, வங்காளத்தை மொழி அடிப்படையில் பிரிப்பது எனும் கருத்து வேண்டுமென்றே புறந்தள்ளப்பட்டது. இத்திட்டம் வங்காள அரசியல்வாதிகளை மேன்மேலும் ஒருங்கிணைத்துவிடும் என்பதால் கர்சன் இத்திட்டத்தை ஏற்க மறுத்தார்.
  • கர்சன் பிடிவாதமாக, பிரிக்கப்பட்ட வங்காளம் தெளிவாகத் தனித்தனியாய் பிரிக்கப்பட்ட இந்து- முஸ்லிம் மக்களைக் கொண்டிருக்க வேண்டுமென விரும்பினார்.
  • புவியியல் அடிப்படையில் பாகீரதி ஆறு இயற்கையாகவே வங்காளத்தைப் பிரிப்பதாக அமைந்திருந்தது. தனக்கு முன்னர் பணியாற்றியவர்களைப் போலவே கர்சனும் இதனை அறிந்திருந்தார்.
  • கிழக்கு வங்காளத்தில் முஸ்லிம்கள் அதிகம் இருந்தனர். மேற்கு வங்காளத்தில் இந்துக்கள் பெரும்பான்மையினராக இருந்தனர். மத்திய வங்கத்தில் இரு சமூகத்தினரும் சமஅளவில் வாழ்ந்து வந்தனர்.
  • முஸ்லிம் மக்களின் நன்மதிப்பைப்பெறும் உள்நோக்கத்தோடு அவர்களை நயந்து செல்லும் போக்கை ஆங்கில நிர்வாகம் கடைபிடித்தது.
  • முந்தைய முஸ்லிம் ஆட்சி முதலாக முஸ்லிம் மக்கள் ஒருபோதும் அனுபவித்திராத ஓர் ஒற்றுமையைப் புதிய மாகாணமான கிழக்கு வங்காளத்தில் அனுபவிப்பார்கள் என பிப்ரவரி 1904இல் டாக்காவில் கர்சன், முஸ்லிம்களுக்கு உறுதியளித்தார்.
  • வங்கப்பிரிவினை வங்காள மக்களை மதத்தின் அடிப்படையில் பிரிப்பதற்குப் பதிலாக அவர்களை ஒன்றுபடுத்தியது.
  • இனம் , வர்க்கம், சமயம், வட்டாரம் ஆகியத் தடைகளைத் தாண்டி மக்களிடையே வளர்ந்து கொண்டிருந்த வங்காளிகள் எனும் அடையாளத்தை ஆங்கில நிர்வாகம் ஒருவேளை குறைத்து மதிப்பிட்டிருக்கலாம்.
  • பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சமூகத்தின் பெரும்பகுதியினரிடையே வங்காள ஒற்றுமை எனும் வலுவான எண்ணம் வளர்ந்து விட்டது.
  • ரவீந்திரநாத் தாகூரை மையமாகக் கொண்டு வங்க மொழி இலக்கிய மதிப்பைப் பெற்றுவிட்டது. வட்டாரமொழிப் பத்திரிகைகளின் வளர்ச்சி ஒற்றுமை தொடர்பான கதை வடிவிலான விவரிப்புகளைக் கட்டமைப்பதில் பங்காற்றியது.
  • இதைப்போலவே மீண்டும் மீண்டும் தோன்றிய பஞ்சங்கள், வேலையின்மை, பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட சறுக்கல் ஆகியவை காலனிய எதிர்ப்பு உணர்வுகளைத் தோற்றுவித்தன.

பிரிவினை எதிர்ப்பு இயக்கம்

  • டிசம்பர் இல் வங்கப்பிரிவினை அறிவிக்கப்பட்டதில் இருந்தே தீவிர தேசியவாதிகள், மிதவாத தேசியவாதிகள் ஆகிய இருதரப்பினரும் அதை விமர்சனம் செய்தனர்.
  • ஆனால் சுரேந்திரநாத் பானர்ஜி, K.K.மித்ரா, பிரித்விஸ் சந்திர ரே போன்றவர்களின் எதிர்வினையானது வேண்டுகோள் விடுப்பது மனுச்செய்வது என்ற அளவோடு சுருங்கிப் போனது.
  • பிரிவினைக்கு எதிராக இங்கிலாந்து மக்களின் கருத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது எனும் அளவில் அதன் நோக்கமும் கட்டுக்குள்ளேயே இருந்தது. எப்படியிருந்தபோதிலும், பரவலான எதிர்ப்புகளுக்கிடையே 1905 ஜூலை 19இல் வங்கப் பிரிவினை அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

  • வங்கப் பிரிவினையைத் தடுப்பதில் ஏற்பட்ட தோல்வி, பிபின் சந்திர பால், அஸ்வின் குமார் தத்தா, அரவிந்தகோஷ் போன்ற தலைவர்கள் கொடுத்த அழுத்தம் ஆகியவற்றால் மிதவாத தேசியவாதிகள் தங்கள் உத்திகள் குறித்து மறுபரிசீலனை செய்து புதிய எதிர்ப்பு முறைகளைக் கண்டறிய வற்புறுத்தப்பட்டனர்.
  • அவைகளுள் ஒன்றுதான் ஆங்கிலப் பொருட்களைப் புறக்கணிப்பது. எஈண்ட விவாதத்திற்குப் பின்னர் இந்திய தேசிய காங்கிரசின் மிதவாத தேசியத் தலைமை இதனை ஏற்றுக் கொண்டது.
  • முதன்முறையாக மிதவாத தேசியவாதிகள் தங்களின் மரபு சார்ந்த அரசியல் முறைகளை மீறினர். 1905 ஜூலை 17இல் கல்கத்தாவில் நடைபெற்ற கூட்டமொன்றில் எதிர்ப்பை மக்களிடையே விரிவுபடுத்துவது என்று முடிவுசெய்யப்பட்டது.
  • அதே கூட்டத்தில் ஆங்கிலப்பொருட்களையும் நிறுவனங்களையும் புறக்கணிக்க சுரேந்திரநாத் பானர்ஜி அறைகூவல் விடுத்தார். ஆகஸ்டு 7இல் கல்கத்தா நகர அரங்கில் (TownHall) நடைபெற்ற மற்றொரு கூட்டத்தில் சுதேசி இயக்கம் முறையாகப் பிரகடனம் செய்யப்பட்டது.
  • இருந்தபோதிலும் சுதேசி இயக்கத்தின் நிகழ்ச்சி நிரலானது வங்கப்பிரிவினையை ரத்து செய்யப் போதுமான அளவிற்கு கட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தது.
  • மேலும் மிதவாத தேசியவாதிகள், இவ்வியக்கத்தைப் பயன்படுத்தி முழு அளவிலான அமைதி வழியில் எதிர்ப்பைத் தொடங்குவதற்கு முற்றிலும் எதிராக இருந்தனர்.
  • ஆனால் தீவிர தேசியவாதிகள் இவ்வியக்கம் ஏனைய மாகானங்களுக்கு விரிவுபடுத்தப்படவும் முழு அளவிலான வெகுஜன இயக்கத்தைத் துவங்குவதற்கும் ஆதரவாக இருந்தனர்.

இயக்கத்தின் பரவல்

  • தலைவர்களின் திட்டமிடப்பட்ட முயற்சிகளுக்கும் மேலாக வங்கப்பிரிவினைக்கும் எதிராகத் தன்னெழுச்சியான எதிர்ப்புகள் ஏற்பட்டன. குறிப்பாக மாணவர்கள் பெருமளவில் பங்கேற்றனர். பிரிவினைக்கு எதிரானப் போராட்டத்தில் மாணவர்களின் பங்கேற்பு அதிகம்.
  • இதன் எதிர்வினையாக ஆங்கில அதிகாரிகள் நேரடி நடவடிக்கை நிகழ்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் மானியங்களும் நிறுத்தப்படும் எனப் பயமுறுத்தினர்.
  • இதற்கு எதிர்வினையாக தேசிய கல்வி நிறுவனங்களை, பள்ளிகளை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதெனவும் முடிவு செய்யப்பட்டது. வங்காளம் முழுமையிலும் நகரங்களிலும் கிராமங்களிலும் ஆயிரக்கணக்கில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பெற்றன.
  • மத விழாக்களான துர்காபூஜை போன்றவற்றை புறக்கணிப்புப் பற்றிய வேண்டுகோள் விடுப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டன.
  • அதிகாரபூர்வமாக வங்காளம் பிரிக்கப்பட்ட நாளான 1905 அக்டோபர் 16 துக்கதினமாக கடைபிடிக்கப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டது.
  • ஆயிரக்கணக்கில் மக்கள் கங்கையில் நீராடி வந்தே மாதரம் பாடலைப் பாடிக்கொண்டு வீதிகளில் ஊர்வலமாகச் சென்றனர்.

புறக்கணித்தலும், வங்காளத்தில் சுதேசி இயக்கமும் (1995 – 1911)

  • திட்டமிடப்பட்ட, தன்னெழுச்சியான போராட்ட முயற்சிகள், ஆங்கிலேயருக்கு எதிரான ஒரு நீண்டகாலப் போராட்டத்திற்கு அடித்தளம் அமைத்தன. புறக்கணிப்பும் சுதேசியமும் எப்போதும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டதாகவும் இந்தியாவைத் தன்னிறைவு பெற்ற நாடாக ஆக்குவதும் இவ்விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
  • சென்னையைச் சேர்ந்த தேசியவாதியான G.சுப்பிரமணியம் சுதேசி இயக்கத்தின் குறிக்கோள் குறித்து “தேசிய வாழ்வின் அனைத்து தளங்களிலும் தங்களின் சார்பு நிலைக்கு எதிரான புரட்சி” எனச் சுருக்கமாக விளக்கினார்.
  • கோபால கிருஷ்ண கோகலேயின் வார்த்தைகளில் சுதேசி இயக்கமானது நம்முடையத் தொழில்களின் முன்னேற்றத்திற்கானது மட்டுமல்ல; நமது தேசிய வாழ்க்கை சார்ந்த அனைத்துத் துறைகளின் மேம்பாட்டிற்குமானது.
  • இயக்கத்தின் வளர்ச்சியோடு சுதேசி இயக்கம் குறித்த பல விளக்கங்கள் முன்வைக்கப்பட்டன.
  • எப்படியிருந்த போதிலும் சுதேசி இயக்கமும் புறக்கணிப்புப் போராட்டங்களும் வாழ்வில் சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் பெறுவதற்கான சாத்தியமான வழிமுறையாக அல்லாமல் காலனிய எதிர்ப்புப் போராட்டமாகவே நடத்தப்பெற்றது.. இவ்விளக்கம் பின்னர் மகாத்மா காந்தியடிகளின் வருகையோடு உட்புகுந்தப்பட்டது.

சுதேசி சிந்தனையின் பரிணாம வளர்ச்சி

விடுதலைப் போராட்டத்தின்போது சுதேசி இயக்கம் என்ற எண்ணம் முதன்முதலாக 1905இல் ஒரு நில காங்கிரஸ் தலைவர்களாலும், பின்னர் 1920களில் மகாத்மா காந்தியடிகளின் தலைமையிலும் ஒரு தத்துவமானது.

‘சுதேசி’ என்பதன் பொருள் ‘ஒருவரது சொந்தநாடு’ என்பதாகும். இத்தத்துவத்தின் தோற்றமானது 1872இல் பூனாவில் மகாதேவ் கோவிந்த் ரானடே தனது தொடர் சொற்பொழிவுகளின் மூலம் இச்சிந்தனையைப் பிரபலப்படுத்தியதிலிருந்துத் தொடங்குகிறது. ரானடேயின் கருத்துப்படி ஒருவரது சொந்த நாட்டில் உற்பத்திசெய்யப்படும் பொருட்களுக்கு அப்பொருட்களின் பயன்பாடு குறைவான மனநிறைவைக் கொடுத்த போதிலும் முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்.

1920 களில் காந்தியடிகள் இதை அனைத்து இந்தியர்களிம் தாங்கள் பிறந்த நாட்டிற்குச் செய்யவேண்டிய கடமைகளோடு இணைத்துச் சுதேசி சிந்தனைக்குப் புதிய பொருளைக் கொடுத்தார். காந்தியடிகளைப் புதிய பொருளைக் கொடுத்தார். காந்தியடிகளைப் பொருத்தமட்டில் சுதேசி என்பது ஒருவர் தனது சொந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை மட்டும் பயன்படுத்துவது என்பது மட்டுமல்ல. அவர் பின்வரும் வார்த்தைகளில் சுதேசியை விளக்குகிறார். சுதேசி என்பது நமக்குள்ளிருக்கும் ஆன்மபலம் அது வெகு தொலைவிலிருந்து கிடைப்பனவற்றை ஒதுக்கி வைத்து நமக்கு வெகு அருகேயுள்ள சுற்றுப்புறத்திலிருந்து கிடைக்கும் பயன்களையும் சேவைகளையும் பயன்படுத்துவதும் வண்ணம் இங்கு உள்ளவர்களால் தயார் செய்யப்படும் பொருட்களை மட்டுமே நாம் பயன்படுத்த வேண்டும். அப்படியான தொழில்கள் எங்கு தேவைப்படுகின்றனவோ அங்கே அவைகள் திறம்படவும் முழுமையாகவும் செயல்படச் சேவை செய்ய வேண்டும்.

அ) ஆக்கபூர்வமான சுதேசி

  • ஆக்கப்பூர்வமான சுதேசி திட்டம் பெருமளவு சுய உதவிக்கு முக்கியத்துவம் கொடுத்தது. அது ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டிலிருந்து முழுவதுமாக விடுதலை பெற்ற, சுயாட்டிக்கான மாற்று நிறுவனங்களைக் கட்டமைப்பதில் கவனம் செலுத்தியது.
  • மக்கள் தங்களைச் சுயவலிமை உள்ளவர்களாக ஆக்கிக் கொள்ளவேண்டிய தேவைக்கு முக்கியத்துவம் வழங்கியது. அதுவே அரசியல் போராட்டங்களை நடத்துவதற்கு முன்பாக அதற்குத் தகுதியான குடிமக்களை உருவாக்கும்.
  • தனிச்சிறப்புடையவர்களில் ஒருவரான ரவீந்திரநாத் தாகூர் தனது எழுத்துகள் மூலம் இக்கருத்துகளைப் பிரபலமடையச் செய்தார். சுயஉதவி (ஆத்ம சக்தி) எனும் ஆக்கத் திட்டத்தினை அவர் கோடிட்டுக் காட்டினார்.
  • தாகூர் சுய பொருளாதார வளர்ச்சிக்கு அழைப்பு விடுத்தார். கல்வியானது தாய்ன்மொழியில் வழங்கப்பட வேண்டுமென வற்புறுத்தினார். சுயஉதவி (ஆத்ம சக்தி) எனும் செய்தியை மக்களிடம் பரப்புவதற்கு மேளாக்கள் எனும் திருவிழாக்களைப் பயன்படுத்த அவர் அழைப்பு விடுத்தார்.
  • இதுவே ஒட்டு மொத்த வங்காளத்தின் தாரக மந்திரமாகி அதன் விளைவாக அனைத்து இடங்களிலும் ஜவுளி, கைத்தறித் துணிகள், சோப்புகள், மட்பாண்டங்கள், தீப்பெட்டி , தோல் பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்யும் சுதேசி விற்பனை நிலையங்கள் பெருகின.
  • 1905 நவம்பர் 5இல் விடிவெள்ளிக் கழகத்தின் முன்னெடுப்பில் கல்விக்கான தேசிய கழகம் உருவாக்கப்பட்டது. ஆகஸ்ட் 1906இல் வங்காள தேசியக் கல்லூரியும் பள்ளியும் நிறுவப்பட்டன.
  • அடிமை நிறுவனங்களிலிருந்து வெளியே வரும்படி சதிஷ் சந்திரா மாணவர்கட்கு ஒரு உணர்ச்சிகரமான வேண்டுகோள் விடுத்தார். இந்தபோதிலும் இவ்வாறான முயற்சிகள் வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம் எதுவும் இல்லாததால் தோல்வியடைந்தன.
  • வட்டார மொழியில் கல்வி, எனும் கருத்து சுதேசி இயக்கத்திற்கு வெகு முன்னரே 1902இல் சதிஷ் சந்திர முகர்ஜியால் விடிவெள்ளிக் கழகம் (Dawn Society) நிறுவப்பட்ட போதே உருவாகி விட்டது.

ஆ) சமிதிகள்

  • பெருவாரியான மக்களை ஒன்று திரட்ட மேற்கொள்ளப்பட்ட மற்றொரு வெற்றிகரமான முறை சமிதிகள் (தொண்டர் படைகள்) எனும் அமைப்புகள் உருவாக்கப்பட்டமையாகும். உறுப்பினர்களுக்கு உடற்பயிற்சி அளித்தல், அறநெறிகளைக் கற்றுக் கொடுத்தல், பஞ்சங்களின்போதும் நோய்களின் தாக்கத்தின்போதும் சேவையாற்றுதல், விழாக்காலங்களில் சுதேசி செய்தியைப் பரப்புரை செய்தல் , உள்ளூரளவில் பள்ளிகளையும் நடுவர் நீதிமன்றங்களையும் உருவாக்குதல் போன்ற பணிகளில் இச்சமிதிகள் ஈடுபடுத்தப்பட்டன .
  • தனது இயல்பான அமைதிவழிப் போராட்டத்தின் மூலம் ஆங்கில அரசு நிர்வாகத்திற்கு ஒத்துழைப்புத் தராமல் இருப்பதே அதன் நோக்கம்.
  • மக்களைப் பெருமளவில் ஒன்றுதிரட்ட மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சிகள் முஸ்லிம் விவசாயிகள், ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகியோரிடையே தனது தளத்தை விரிவுபடுத்த இயலாமல் போனதால் செழித்தோங்க இயலவில்லை.
  • சமிதிகளின் தொண்டர்களில் பெரும்பாலோர் கற்றறிந்த மத்தியதர வர்க்கத்திலிருந்தும் இந்து உயர் வர்க்கத்திலிருந்தும் அணி திரட்டப்பட்டிருந்தனர்.
  • தவிரவும் சுதேசி இயக்கவாதிகள் பல சமயங்களில் சமூக ரீதியாகவும் உடல் ரீதியாகவும் வலுக்கட்டாயமான முறைகளைக் கையாண்டனர்.
  • எடுத்துக்காட்டாக அந்நியப் பொருட்களை வாங்குவோரைச் சமூகப் புறக்கணிப்பு செய்வது சாதாரணமாக நடைபெற்றது.
  • அந்நடவடிக்கைகள் சாதி அமைப்புகளின் மூலமாகவும் ஏனைய தேசியவாத அமைப்புகளின் வழியாகவும் மேற்கொள்ளப்பட்டன.

இ) சாத்வீக செயலாற்ற எதிர்ப்பு

  • வங்கப்பிரிவினையை ரத்து செய்வதற்கான அறிகுறிகள் தென்படாத நிலையில் 1906-லிருந்து சுதேசி இயக்கம் முக்கிய மாற்றம் பெற்றது. பெரும்பாலான தலைவர்கள் இவ்வியக்கத்தைப் பயன்படுத்தி நாடு முழுவதும் அரசியல் சுதந்திரம் அல்லது சுயராஜ்ஜியம் எனும் கருத்தைப் பரப்ப வேண்டுமெனக் கருதினர். ஆக்கச் சார்பான சுதேசிச் செயல்பாடுகள் அரவிந்தகோஷ், பிபின் சந்திரபால் போன்ற தலைவர்களாலும் ஏனைய தீவிர தேசியவாதத் தலைவர்களாலும் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டன. அவர்களின் புதிய வழிகாட்டுதலின் கீழ் சுதேசி நிகழ்ச்சி நிரலில் பின்வருவன இணைத்துக் கொள்ளப்பட்டன.
  • அவை அந்நியப் பொருட்களைப் புறக்கணிப்பது, அரசுப் பள்ளிகளையும் கல்லூரிகளையும் புறக்கணிப்பது, நீதிமன்றங்களைப் புறக்கணித்தல், பட்டங்களைத் துறந்து விடுதல், அரசுப் பணிகளைக் கைவிடுதல் , ஆங்கிலேயரின் அடக்குமுறை தாங்க இயலாத அளவிற்குச் சென்றால் ஆயுதப் போராட்டத்தைக் கைக்கொள்வது.
  • இத்தகைய இயல்புகளைக் கொண்ட போராட்டங்களுக்கு மிகப்பெருமளவிலான மக்களைத் திரட்டுவது அவசியமாயிற்று. மதத்தோடு பண்டைய பாரம்பரியப் பெருமைகளையும் இணைத்துக் கொள்வது இவ்வியக்கங்களின் மிக முக்கியக் கூறுகளானது.

தீவிர தேசியவாதம்

  • முன்னரெ குறிப்பிட்டவாறு லாலா லஜபதி ராய் , பாலகங்காதர திலகர், பிபின் சந்திர பால் (அடிக்கடி லால்-பால்-பால்) (Lal – Bal – Pal) எனக் குறிப்பிடப்படும் முப்பெரும் தலைவர்கள்) ஆகியோரின் இயக்க நடவடிக்கைகளின் விளைவாக மகாராஷ்டிரம், வங்காளம், பஞ்சாப் ஆகிய மூன்றும் சுதேசி இயக்கக் காலப்பகுதியில் தீவிர தேசியவாதத்தின் மையப்புள்ளிகளாகத் திகழ்ந்தன.
  • தீவிரதேசியவாதத் தலைவர்களில் மற்றுமொரு செல்வாக்குப் பெற்ற ஆளுமையாக இருந்தவர் அரவிந்த கோஷ் ஆவார். தொடக்ககால இந்திய தேசியவாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வகைப்பட்ட தேசியவாதம் மிகவும் உறுதியுடையதாய் இருந்தது.
  • மிதவாத தேசியவாதிகள், தீவிர தேசியவாதிகள் ஆகிய இரு குழுவினருமே ஆங்கில ஆட்சியின் தீமைகளை நன்கறிந்தவர்கள் ஆவர். மிதவாத தேசியவாதிகள் பேச்சுவார்த்தைகள், விண்ணப்பங்கள் மூலம் ஆள்வோரைச் சமாதானம் செய்து இந்தியாவைச் சீர்திருத்திவிடலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் செயல்பட்டனர்.
  • மாறாகத் தீவிர தேசியவாதிகள் காலனிய ஆட்சியாளர்கள் பேரரசுக்குச் சாதகமானவற்றை விட்டுத்தர விரும்பமாட்டார்கள்; அதனால் அவர்கள் ஒருபோதும் காரணங்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் எனக் கருதினர்.
  • தீவிர தேசியவாதம் அதுவரை தந்துகொண்டிருந்த அரசியல் நெருக்கடியின் தன்மையை மாற்றியது. கற்றறிந்த இந்திய மக்களிடையே பொதுக்கருத்து வழங்கிய நெருக்கடி என்பது வெகுஜனங்களின் எதிர்ப்பு ஏற்படுத்திய நெருக்கடியாக மாறியது.
  • இத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்தபோதும் தீவிர தேசியயவாதம் அறவழிப் போராட்ட முறைகளில் கட்டுண்டு கிடந்ததிலும் இத்தன்மை வெளிப்பட்டது. இருந்தபோதிலும் மக்களின் தேசப்பற்று உணர்வுகளை மதத்தின் அடையாளங்கலைப் பயன்படுத்தித் தூண்டினர்.

1905இல் ஒரு சமயம் அரவிந்த கோஷிடம் ஒருவர் எவ்வாறு நாட்டுப்பற்று உடையவராக ஆவது? எனக் கேட்டார். சுவரில் தொங்கிய இந்திய வரைபடத்தைப் பார்க்கிறாயா? அது ஒரு வரைபடமல்ல மாறாக பாரத மாதாவின் உருவப்படம் அதனுடைய நகரங்களும் மலைகளும் ஆறுகளும் காடுகளும் அவளுடைய உடலை உருவாக்கியுள்ளன/. அவளுடைய குழந்தைகளே அவளுடைய பெரிதும் சிறியதுமான நரம்புகள்… பாரதத்தை வாழ்கின்ற தாயாக நினைத்து கவனம் செலுத்தி ஒன்பது மடங்கு அதிக பக்தியுடன் அவளை வழிபடு” என பதிலுரைத்தார்.

சுயராஜ்ஜியம் அல்லது அரசியல் சுதந்திரம்

  • தீவிர தேசியவாதத் தலைவர்களின் பொதுவான குறிக்கோள்களில் ஒன்று சுயராஜ்ஜியம் அல்லது சுயாட்சி என்பதாகும். ஆனால் சுயராஜ்ஜியத்தின் பொருள் குறித்து தலைவர்கள் வேறுபட்டனர்.
  • திலகருக்கு சுயராஜ்ஜியம் என்பது நிர்வாகத்தின் மீதான இந்தியர்களின் கட்டுப்பாடு அல்லது சொந்த மக்களின் நிர்வாகம் என்பது நிர்வாகத்தின் மீதான இந்தியர்களின் கட்டுப்பாடு அல்லது சொந்த மக்களின் நிர்வாகம் என்பது மட்டுமே தவிர இங்கிலாந்துடனான உறவுகள் அனைத்தையும் துண்டித்துக் கொள்வதல்ல. பிபின் சந்திரபாலின் கருத்துப்படி சுயராஜ்ஜியம் என்பது அந்நியர் ஆட்சியிலிருந்து முற்றிலுமாக விடுதலையடைதல் என்பதாகும்.
  • வங்காளம், பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகியப் பகுதிகளி, வளர்ந்து வந்த புரட்சிகர தேசியவாதம் குறித்து தீவிர தேசியவாதிகள், மிதவாத தேசியவாதிகள் புரட்சிகரவாதிகளைப் பற்றி குறைகூறி விமர்சனம் செய்தனர். ஆனால் தீவிர தேசியவாதிகள் அவர்களின் மேல் அனுதாபம் கொண்டனர். ஆனால் அவர்களின் அரசியல் படுகொலைகளையும் தனிநபர் பயங்கரவாதத்தையும் தீவிர தேசியவாதிகள் அவர்களின் மேல் அனுதாபம் கொண்டனர். ஆனால் அவர்களின் அரசியல் படுகொலைகளையும் தனிநபர் பயங்கரவாதத்தையும் தீவிர தேசியவாதிகள் அங்கீகரிக்கவில்லை. தேசபக்த புரட்சியாளர்களின் நோக்கங்களோடு தங்களை இணைத்துக் கொள்வதில் தீவிர தேசியவாதிகள் மிக்க கவனமுடன் இருந்தனர்.
  • இந்து மத நம்பிக்கைகளால் முலாம் பூசப்பட்டு வலியுறுத்திச் சொல்லப்பட்ட தேசப்பற்றை முஸ்லீம்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தங்களின் முந்தையத் தலைவர்களைப் போலவே சுதேசி இயக்கத் தலைவர்கள் சமூகத்தின் பெரும்பகுதி மக்களை ஊடுருவத் தவறினர். 1908 முதல் தீவிர தேசியவாதம் சரியத் தொடங்கியது. 1907இல் ஏற்பட்ட சூரத் பிளவு அதன் வீழ்ச்சிக்கான மற்றுமொரு காரணமாகும்.

சூரத் பிளவு

  • 1906இல் மிண்டோ பிரபு இந்திய அரசப்பிரதிநிதியாகப் பணியமர்த்தப்பட்டதிலிருந்து மிதவாத தேசியவாதிகளுக்கும் தீவிர தேசியவாதிகளுக்கும் இடையில் நிலவிய கருத்து வேற்றுமை மேலும் தீவிரமடைந்தது.
  • வேற்றுமைகள் வளர்ந்து கொண்டிருந்த நிலையில் 1906இல் கல்கத்தா மாநாட்டில் மிதவாத தேசியவாதிகளின் கோரிக்கையை ஏற்று தாதாபாய் நௌரோஜி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் பிளவு தவிர்க்கப்பட்டது.
  • பெரோஸ்ஷா மேத்தாவின் தலைமையிலான பல மிதவாத தேசியவாதிகள் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டனர். சுதேசி, புறக்கணிப்பு, தேசியக் கல்வி, சுயாட்சி ஆகியவை தொடர்பான நான்கு தீர்மானங்களைத் தீவிர தேசியவாதிகள் ஒருவாறு நிறைவேற்றினர்.

  • காங்கிரசின் அடுத்த மாநாடு தீவிர தேசியவாதிகளின் கோட்டை எனக் கருதப்பட்ட பூனாவில் நடைபெற்றத் திட்டமிடப்பட்டது. கல்கத்தா மாநாட்டு முடிவுகளால் அச்சம் கொண்டிருந்த மிதவாத தேசியவாதிகள் மாநாடு நடைபெறுமிடத்தைச் சூரத் நகருக்கு மாற்றினர்.
  • காங்கிரசின் அடுத்த தலைவர் பொறுப்புக்கு மிதவாத தேசியவாதிகளின் வேட்பாளரான ராஷ்பிகாரி கோஷ் என்பாருக்கு எதிராகத் தீவிர தேசியவாதிகள் லாலா லஜபதி ராயின் பெயரை முன்மொழிந்தனர்.
  • இயக்கத்தில் பிளவு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக லாலா லஜபதி ராய் போட்டியிட மறுத்தார். 1906இல் கல்கத்தா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங்களைப் பின்பற்றுவதா? இல்லையா என்ற கேள்வியை ஒட்டி நிலைமை கொதிநிலையை எட்டியது.
  • பெரோஸ்ஷா மேத்தாவின் குழு இந்த தீர்மானங்களை நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்கப்பட வேண்டுமெனக் கோரியது.
  • பெரோஸ்ஷாவின் இத்தகைய திட்டத்தை எதிர்கொள்ளத் தீவிர தேசியவாதிகள் ராஷ் பிகாரி கோஷ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதை எதிர்க்க முடிவு செய்தனர் மாநாடு குழப்பத்தில் முடிந்தது.
  • டிசம்பர் 1885இல் உருவாக காங்கிரஸ் இப்போது மிதவாத தேசியவாதிகள், தீவிர தேசியவாதிகளென இரு குழுக்களாகப் பிரிந்தது. சூரத் பிளவுக்குப் பின் உருவான காங்கிரஸ் முன்பிருந்ததைக் காட்டிலும் ஆங்கிலேயரிடம் அதிக விசுவாசத்துடன் நடந்துகொண்டது. தீவிர தேசியவாதிகள் இல்லாத புதிய காங்கிரஸ் “மேத்தா காங்கிரஸ்” என அழைக்கப்பட்டது. 1908இல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மிதவாத தேசியவாதிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.
  • அவர்கள் ஆங்கிலாரசின் மீதான தங்கள் விசுவாதசத்தை மீண்டும் வலியுறுத்தினர்.
  • ஆங்கில ஆட்சிக்கு சவாலாக இருக்கும் எண்ணமில்லாத காங்கிரஸ் ஓர் வலிவற்ற அரசியல்சார்ந்த அமைப்பாயிற்று.
  • தீவிர தேசியவாதிகளினால் அதுபோன்ற அரசியல் சார்ந்த அமைப்பை உருவாக்க இயலவில்லை. முக்கியத் தலைவர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்த அரசின் அடக்கு முறையை அதற்கான முக்கியக் காரணமாகும்.

புரட்சிகர தேசியவாதம்

  • 1908இல் தீவிர தேசியவாதம் சரிவுற்று புரட்சிகரச் செயல்பாடுகள் மேலெழுந்தன. வன்முறை சாராத நடவடிக்கைகளிலிருந்து வன்முறையை நோக்கி, எனும் மாற்றத்தை அது சுட்டிக்காட்டியது.
  • மேலும் ஆங்கில ஆட்சிக்கு வெகுஜனங்களின் எதிர்ப்பு என்பதற்குப் பதிலாக சமூகத்தின் உயர்மட்டத்தைச் சார்ந்தோரின் எதிர்ப்பு என்ற மாற்றத்தையும் அது உணர்த்தியது.
  • வங்காளத்தில் புரட்சிகர பயங்கரவாதமானது முன்னதாகவே வளர்ந்துவிட்டது. 1870களில் விவேகானந்தர் விளக்கியவாறு எஃகினாலான உடலையும் நரம்புகளையும் வளர்ப்பதற்காக பல்வேறு இடங்களில் அக்காரா எனப்படும் உடற்பயிற்சி நிலையங்கள் நிறுவப்பட்டன.
  • பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் ஆனந்மத் (ஆனந்த மடம்) எனும் நாவலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்நாவல் வங்காளத்துப் புரட்சிகர தேசியவதிகளால் பரவலாகப் படிக்கப் பெற்றது.
  • அந்நாவலின் ஒருபகுதியான வந்தே மாதரம் பாடல் சுதேசி இயக்கத்தின் கீதமாயிற்று.
  • சுதேசி இயக்கத்தின்போது தனிநபர் வன்முறை எழுச்சி பெறுவதற்கு மூன்று காரணிகள் பங்களிப்புச் செய்தன.
  • அந்நிய அடக்குமுறை ஆட்சியின் கீழ் வெகுவாகப் பொறுமை இழந்து கொண்டிருந்த இளைஞர்கள் அரசியலற்ற ஆக்கசார் செயல்பாடுகளை ஓரளவே ஏற்றுக் கொண்டனர்.
  • இளம் வயது மக்களுக்குத் தலைமையேற்று அவர்களை ஒரு நீண்டகால வெகுஜனப் போராட்டத்தில் ஈடுபடுத்துவதில் தீவிர தேசியவாதிகள் தோல்வியடைந்து தனிநபர் செயல்பாடுகள் வளர்வதற்குக் காரணமாயிற்று.
  • புரட்சிகர செயல்பாடானது இந்திய தறுகாண்மையை (வீரத்தை) மீட்டெடுக்கவும் குறியீட்டு முயற்சியின் ஒரு பகுதியாகவும் கருதப்பட்டது. அத்தன்மையை ஆங்கிலேயர் அடிக்கடி எதிர்ப்பதாயும் இகழ்வதாயும் புரட்சிகர தேசியவாதிகள் நம்பினர்.

இவ்வாறான நடவடிக்கைகள் ரஷ்யாவில் நடந்ததைப் போல திட்டமிடப்பட்ட ஒரு புரட்சிக்கு இட்டுச் செல்லவில்லை. பெரும்பாலுமான புரட்சிகர நடவடிக்கைகள் சில குறிப்பிட்ட அடக்கியாளும் ஆங்கில அதிகாரிகளைக் கொலைசெய்யும் முயற்சிகளாகவே அமைந்தன.

அ) அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கு

  • வங்காளத்தில் 1902இல் பல ரகசிய சங்கங்கள் நிறுவப்பட்டதிலிருந்தே புரட்சிகர தேசியவாதத்தின் கதை தொடங்குகிறது. அவைகளுள் ஜதிந்தரநாத் பானர்ஜி, அரவிந்த கோஷின் சகோதரரான பரீந்தர்குமார் கோஷ் ஆகியோரால் கல்கத்தாவில் நிறுவப்பெற்ற அனுசீலன் சமிதி மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
  • இதைப்போலவே புலின் பிகாரி தாஸ் என்பவரின் முயற்சியினால் டாக்கா அனுசீலம் சமிதி 1906இல் உருவானது. இதன் தொடர்ச்சியாக புரட்சிகர வார இதழான யுகாந்தர் தொடங்கப்பெற்றது. கல்கத்தா அனுசீலன் சமிதி விரைவில் தன்னுடைய செயல்பாடுகளைத் துவங்கியது. இது நிதி திரட்டுவதற்காக ஆகஸ்ட் 1906இல் ரங்பூரில் முதல் சுதேசிக் கொள்ளையை நடத்தியது.
  • அதே ஆண்டில் ஹேம்சந்திர கனுங்கோ இராணுவப் பயிற்சி பெறுவதற்காக பாரிஸ் சென்றார். 1908இல் நாடு திரும்பிய அவர் மணிக்தலா எனுமிடத்திலிருந்த ஒரு பண்ணை வீட்டில் ஒரு மதச்சார்புப் பள்ளியோடு குண்டுகள் தயாரிப்பதற்கான ஒரு தொழிற்கூடத்தையும் நிறுவினார். அதே பண்ணை விடுதியில் தங்கியிருந்தோர் பல்வேறு உடற்பயிற்சிகளைப் பெற்றனர். இந்து செவ்வியல் நூல்களையும், உலகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற புரட்சிகர இயக்கங்கள் குறிந்த நூல்களையும் வாசித்தனர்.
  • சுதேசி போராட்டக்காரர்களை கொடூரமாக நடத்திய டக்ளஸ் கிங்ஸ்போர்டு எனும் ஆங்கில அதிகாரியை கொல்வதற்கான திட்டமும் அங்கு தீட்டப்பட்டது.
  • கொலை செய்யும் பொறுப்பு இளம் புரட்சிவாதிகளான 18 வயது நிரம்பிய குதிராம் போஸ், 19 வயதான பிரஃபுல்லா சாக்கி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
  • 1908ஏப்ரல் 30இல் அவர்கள் தவறுதலாக ஒரு சாரட் வண்டியின் மீது குண்டை வீச கிங்ஸ் போர்டுக்குப் பதிலாக வேறு இரண்டு ஆங்கிலப் பெண்கள் அதில் கொல்லப்பட்டனர்.
  • பிரஃபுல்லா சாக்கி தற்கொலை செய்து கொள்ள, குதிரம் போஸ் கைது செய்யப்பட்டு பின்னர் கொலைக் குற்றத்திற்காகத் தூக்கிலிடப்பட்டார்.
  • அரவிந்த கோஷ், அவரின் சகோதரர் பரீந்தர் குமார் கோஷ் அவர்களுடன் ,மேலும் முப்பத்தைந்து நபர்கள் கைது செய்யப்பட்டனர். சித்தரஞ்சன் தாஸ் இவ்வழக்கில் புரட்சிகர தேசியவாதிகளுக்காக வாதாடினார். இது அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கு எனப்படுகிறது.
  • ஆங்கில ஆட்சிக்கு எதிராக அரவிந்த கோஷ் சதியில் ஈடுப்பட்டார் என்பதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை என வழங்கப்பட்ட தீர்ப்பால் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார்.
  • பரீந்தர் கோஷ், உல்லாஸ்கர்தத் ஆகியோருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது (பின்னர் அது ஆயுட்கால நாடு கடத்தல் தண்டனையாக மாற்றப்பட்டது) ஏனையோர் ஆயுட்காலத்திற்கும் நாடு கடத்தப்பட்டனர்.
  • ஒரு வருடகாலம் நடைபெற்ற அலிப்பூர் வெடிகுண்டு வழக்கு மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பொதுமக்களுக்கு முன்னர் புரட்சிகர தேசியவாதிகளை கதாநாயகர்களாகச் சித்தரித்தது.

விசாரணையும் பின்விளைவுகளும்

  • அரவிந்த கோஷ் விடுதலைக்குப் பின்னர் ஒரு ஆன்மிகப் பாதையை தேர்ந்தெடுத்து தனது இடத்தைப் பாண்டிச்சேரிக்கு மாற்றிக் கொண்டு 1950இல் தான் இயற்கை எய்தும் வரை அங்கேயே தங்கியிருந்தார்.
  • ஒரு ஆயுதமேந்தியப் புரட்சியை முன்னெடுப்பது எனும் அரவிந்தரின் கருத்து நிறைவேறவேவில்லை. அரசு அடக்குமுறை மக்களின் மறுப்பு ஆகிய இரு காரணங்களும் இணைந்து வங்காளத்தில் புரட்சிகர இயக்கம் படிப்படியாக வீழ்ச்சியடையக் காரணமாயிற்று.
  • புரட்சிகர இயக்கத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலோர் பிராமணர், காயஸ்தர், வைசியர் ஆகிய மூன்று உயர்வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்ததால் புரட்சிகர பயங்கரவாதம் சில சமூகம் தொடர்பான பாதிப்புக்குள்ளானது.

ஆ) ஆங்கிலேயரின் அடக்குமுறை

  • டிசம்பர் 1908இல் மிண்டோ-மார்லி அரசியல் அமைப்புச் சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டன. சீர்திருத்தங்களை மிதவாத தேசியவாதிகள் வரவேற்றனர். ஆனால் அதிகாரங்கள் எதுவும் மாற்றப்படவில்லை என்பதை அவர்கள் விரைவில் உணர்ந்தனர்.
  • ஆனால் மிண்டோ மேற்கொண்ட நடவடிக்கைகள் பிரிவினைகளை ஏற்படுத்துவதாக அமைந்தன. அது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை நிறிவனப்படுத்தி இந்து, முஸ்லிம்களைப் பிரித்தது. மேலும் சில அடக்கு முறைச் சட்டங்களையும் காலனிய அரசு அறிமுகம் செய்தது.
  • 1908 செய்தித்தாள் சட்டம் (குற்றம் செய்யத் தூண்டுதல்). இச்சட்டம் ஆட்சேபனைக்குரிய வகையிலான செய்திகளை வெளியிடும் அச்சக்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்யும் அதிகாரத்தை நீதிபதிகளுக்கு வழங்கியது. இதனால் ஆங்கிலேய ஆட்சியை விமர்சிக்கும் எதையும் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது.
  • 1910 இந்தியப் பத்திரிக்கைச் சட்டம் அச்சக உரிமையாளர்களும் வெளியீட்டாளர்களும் பிணைத்தொகை கட்டுவதைக் கட்டாயமாக்கியது. விரும்பத்தகாத தீங்கு விளைவிக்கக்கூடிய செய்திகளை அவர்கள் வெளியிட்டால் அத்தொகை எடுத்துக் கொள்ளப்படும்.
  • இந்தியக் குற்றவியல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தம் விசாரணையின்றி முடிவுகளை மேற்கொள்ள அனுமதித்தது. மேலும் பொது அமைதிக்கு ஆபத்தான அமைப்புகளைத் தடை செய்தது.

அடக்குமுறை நடவடிக்கைகள் பரந்த அளவில் மேற்கொள்ளப்பட்டாலும் இந்திய தேசிய இயக்க கட்சியிலிருந்து புரட்சிகர தேசியவாத செயல்பாடுகளின் வசீகரம் மறையவேயில்லை. செயல்பாடுகளின் மையம் வங்காளத்திலிருந்து பஞ்சாபிற்கும் உத்திரப்பிரதேசத்திற்கும் நகர்ந்தது.

தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம்

  • தமிழ்நாட்டில் அதிலும் குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ர சுதேசி இயக்கம் பெரும் கவனத்தையும் ஆதரவையும் பெற்றது. ஆங்கில ஆட்சிக்கு எதிராக ஒன்று திரண்ட கோபத்தைப் பொதுச் சரடாகக்கொண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற சுதேசி இயக்க அனைத்திந்திய பண்புகளைப் பெற்றிருந்தது.
  • அதே சமயம் அது தமிழ் உணர்வாலும் பெருமையாலும் ஆதரிக்கப்பட்டது. தமிழ்நாட்டுக் காங்கிரசில் மிதவாத தேசியவாதிகளுக்கும் தீவிர தேசியவாதிகளுக்கும் இடையே ஆழமானப் பிரிவு இருந்தது.

அ) வட்டாரமொழி சொற்பொழிவுக் கலையின் வளர்ச்சி

  • தொடக்கத்தில் இவ்வியக்கம் பெருமளவில் வங்கப்பிரிவினைக்கு எதிரான எதிர் வினையாகவே இருந்தது. வங்கப்பிரிவினைக்கு எதிராகக் கூட்டங்கள் வழக்கமாக நடைபெற்றன.
  • இவ்வறான கூட்டங்களில் தலைவர்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள், தொழிலாளர்கள் என அச்சமயம் கூடியிருப்போரிடம் வட்டார மொழியில் சொற்பொழிவாற்றினர்.
  • ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றுவதென்பதிலிந்து வட்டார மொழியில் சொற்பொழிவு நிகழ்த்துவது என ஏற்பட்ட மாற்றம் இக்காலத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும். இது தமிழ்நாட்டின் வெகுஜன அரசியலின் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • மெரினாக் கடற்கரையில் சுதேசி கூட்டங்கள் நடைபெறுவது வழக்கமாகக் காணக்கூடிய காட்சியாயிற்று. இவ்வாறான கூட்டங்கள் நடைபெறும் மற்றொரு இடம் மூர்மார்க்கெட் வளாகமாகும். 1905 – 1907 காலப் பகுதியைச் சேர்ந்த காவல்துறை அறிக்கைகள் மாணவர்களை ஆபத்தானவர்கள் , அவர்களின் நடவடிக்கைகள் ஆட்சிக்கு எதிரானவை எனவும் குறிப்பிட்டன.
  • பொது இடங்களில் ஐரோப்பியர்கள் மாணவர்களால் “வந்தேமாதரம்” எனும் முழக்கத்துடன் வாழ்த்தப்பட்டனர்.
  • 1907இல் சென்னைக்கு வருகை தந்த பிபின் சந்திர பால் சென்னைக் கடற்கரையில் ஆற்றிய உரைகள் பார்வையாளர்களிடையே உத்வேகத்தை ஏற்படுத்தின. அவருடைய வருகை தமிழகம் முழுவதிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • தமிழில் ஆற்றப்பட்ட பொதுச் சொற்பொழிவுகள் தமிழ்நாட்டின் அரசியல் செயல்பாடுகள் கருக்கொள்ளத் தொடங்கிய காலத்தில் காணப்படாதப் புதிய பார்வையாளர்களை உருவாக்கியது.

ஆ) வ.உ.சி.யும் சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனியும் (SSNC)

1906இல் வ.உ. சிதம்பரம் ஆங்கிலேயரின் கடற்பயண முற்றுரிமைக்கு எதிராகச் சுதேசி கப்பல் கம்பெனி ஒன்றை ஏற்படுத்தும் கருத்தை வெளிப்படுத்தியபோது தமிழ்நாட்டின் சுதேசி இயக்கம் தேசத்தின் கவனத்தைப் பெற்றது.

  • 1906இல் வ.உ.சி. சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனி (Swadeshi Steam Navigation Company – SSNC) எனும் கூட்டுப்பங்கு நிறுவனத்தைப் பதிவு செய்தார்.
  • மொத்த முதலீடான ₹10 லட்சம் 40,000 பங்குகளாகப் பிரிக்கப்பட்டு ஒரு பங்கு ₹25 வீதம் இந்தியர்கள், இலங்கையைச் சேர்ந்தவர்கள், ஆசிய நாடுகளைச் சேர்ந்தோருக்கு மட்டும் விற்பனை செய்யப்பட்டது.
  • வ.உ.சி. S.S.கலியா, S.S.லாவோ என்னும் இரண்டு நீராவிக் கப்பல்களை வாங்கினார். நாட்டின் ஏனையப் பகுதிகளில் சுதேசிச் செயல்பாடுகள் என்பது மெழுகுவர்த்தி செய்வது, வளையல்கள் செய்வது போன்ற குறிப்பிணர்த்தும் அடையாள நடவடிக்கைகளாக இருந்தபோது, சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனியை உருவக்குவது என்ற எண்ணம் உண்மையில் கண்ணையும் கருத்தையும் கவர்வதாக அமைந்தது.
  • வ.உ.சி. அப்பகுதியின் வளமான வரலாற்றையும் இந்தியாவின் பண்டையகாலக் கடற்பயணப் பெருமைகளையும் துணையாகக் கொண்டார். சுதேச இயக்கத்திற்கு ஆதரவாக மக்களின் கருத்தைத் தூண்டுவதற்கு மீண்டும் மீண்டும் அவற்றைக் குறிப்பிட்டார்.
  • வ.உ.சி. யின் சுதேசி இயக்க முன்னெடுப்பு தேசியத் தலைவர்களால் பாராட்டப் பெற்றது. சுதேசி கப்பல் நிறுவனத்தின் வெற்றி கூறித்து லோகமான்ய திலகர் தன்னுடைய கேசரி, மராட்டா பத்திரிகைகளில் எழுதினார்.
  • அரவிந்த கோஷும் சுதேசி முயற்சிகளைப் பாராட்டி கம்பெனியின் பங்குகள் விற்பனையாவதற்கு உதவினார். பாண்டித்துரையும் , ஹாஜி பக்கீர் முகமதுவும் பெரிய பங்குதாரர்களில் இருவராவர்.
  • தொடக்கத்தில் ஆங்கில நிர்வாகம் சுதேசிக் கப்பல் கம்பெனியைக் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தியது. நாளடைவில் சுதேசிக் கப்பல் கம்பெனிக்கான ஆதரவு பெருகியபோது ஐரோப்பிய அதிகாரிகள் ஒருதலைபட்சமாகவும் இன வேற்றுமை உணர்வுடனும் நடந்து கொண்டனர்.

இ) கோரல் நூற்பாலை வேலை நிறுத்தம்

  • சூரத் மாநாட்டில் பங்கேற்ற பின்னர் ஊர் திரும்பிட வ.உ.சி. ஓர் அரசியல் அமைப்பைத் தொடங்குவதற்கானப் பணிகளைச் செய்யத் திட்டமிட்டார். ஒரு நல்ல பேச்சாளரை அவர் தேடிக் கொண்டிருந்த தருணத்தில் சுதேசி இயக்கத்தைப் போதித்து வந்த சுப்ரமணிய சிவாவைச் சந்தித்தார்.
  • 1907இல் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இருவடும் தூத்துக்குடிக் கடற்கரையில் தினந்தோறும் பொதுக் கூட்டங்களில் பேசினர். மக்களுக்குச் சுதேசி குறித்தும் புறக்கணித்தல் பற்றியும் கற்றுக் கொடுத்தனர். ஆயிரக்கணக்கில் மக்கள் இக்கூட்டங்களில் கலந்து கொண்டனர். இப்பொதுக்கூட்டங்களை அரசு உன்னிப்பாகக் கண்காணித்தது.
  • 1908இல் கோரல்மில் தொழிலாளர்களின் படுமோசமான வேலை , வாழ்க்கைச் சூழல்கள் வ.உ.சி., சிவா ஆகியோரின் கவனத்தைக் கவர்ந்தது. தொடர்ந்து வந்த சிலநாட்களில் தலைவர்கள் இருவரும் தொழிலாளர்களிடம் உரையாற்றினர். அவ்வுரைகளால் தூண்டப்பெற்று கோரல் பருத்தி நூற்பாலைத் தொழிலாளர்கள் மார்ச் 1908இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தொடக்ககால வேலை நிறுத்தங்களில் இதுவும் ஒன்றாகும்.
  • தேசிய செய்திப் பத்திரிகைகள் நுஊற்பாலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை முழுமையாக ஆதரித்தன. இருந்தபோதிலும் ஆலை உரிமையாளர்கள் அசைந்து கொடுக்கவில்லை.
  • வேலை நிறுத்தத்தை ஒடுக்க நினைத்த அரசு ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக இருந்தது. தொழிலாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் தலைவர்கள் தூத்துக்குடி நகரினுள் கூட்டங்கள் நடத்தத்தடை விதிக்கப்பட்டது.
  • முடிவில் ஆலை முதலாளிகள் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடிவு செய்தனர்.
  • தொழிலாளர்களின் வெற்றி வங்காளத்து தீவிர தேசியவாதிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. வங்காளத்துச் செய்திப் பத்திரிகைகள் இவ்வெற்றியை வாழ்த்தின. இவ்வெற்றி “கற்றறிந்த மக்களுக்கும் பொதுமக்களுக்குமிடையே ஒரு இணைப்பை உருவாக்கியுள்ளது. அதுவே சுயராஜ்ஜியத்தை நோக்கி எடுத்து வைக்கப்பட்ட உன்னதமான முதல் அடியாகும். இந்தியத் தொழிலாளியின் ஒவ்வொரு வெற்றியும் நாட்டிற்குக் கிடைத்த வெற்றி…” என அரவிந்த கோஷின் வந்தே மாதரம் புகழாரம் சூட்டியது.

ஈ) சுப்ரமணிய பாரதி : கவிஞர் மற்றும் தேசியவாதி

  • ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியான செய்திப் பத்திரிக்கைகளின் வளர்ச்சி தமிழகத்தில் சுதேசி இயக்கத்திற்குத் துணை நின்றது. செய்திப் பத்திரிகையை பயன்படுத்தி தேசியவாதச் செய்திகளை விரிந்துபட்ட பார்வையாளர்களிடையே பரப்புரை செய்த தலைவர்களுள் முதன்மையானவர் G. சுப்ரமணியம். அவர் வேறு ஐந்து நபர்களுடன் இணைந்து தி இந்து (The Hindu) மற்றும் சுதேசமித்திரன் (தமிழில் வெளியிடப்பட்ட முதல் தினசரி) எனும் பத்திரிகைகளை நிறுவினார்.
  • 1906இல் பர்சால் காங்கிரஸ் மாநாட்டின்போது ஆங்கிலேயர்கள் மெஏற்கொண்ட நடவடிக்கைகளை விமர்சித்து அவர் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். சுதேசமித்திரன் தேசியவாதிகளின் செயல்பாடுகள் குறித்து குறிப்பாக வ.உ.சி. தூத்துக்குடியில் ஆற்றிய உரைகள் பற்றி விரிவான செய்திகளை வெளியிட்டது.
  • இந்திய தேசியவாதம் ஒரு புதிய வழிகாட்டுதலை எதிர்பார்த்துக் கொண்டிருந்த காலப்பகுதியில் (1904) சுப்ரமணிய பாரதி சுதேசமித்திரன் பத்திரிகையின் துணையாசிரியராகப் பணியமர்த்தப்பட்டார்.
  • பாரதி சக்ரவர்த்தினி எனும் மாத இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். அது பெண்களின் மேம்பாட்டிற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பத்திரிகையாகும்.
  • இரு நிகழ்வுகள் சுப்ரமணிய பாரதியின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தினை ஏற்படுத்தின. அயர்லாந்து நாட்டுப் பெண்மணியும் விவேகானந்தரின் சீடருமான சகோதரி நிவேதிதாவை அவர் 1905இல் சந்தித்தது முதலாவதாகும்.
  • குருமணி (ஆசிரியர்) என அவரால் குறிப்பிடப்பட்ட அப்பெண்மணி அவரின் தேசியவாதச் சிந்தனைகளுக்கு ஊக்கமளித்தார்.
  • ஆங்கிலேய ஆட்சியை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து காங்கிரசுக்குள் நிலவிய கருத்துக் குழப்பம் மற்றொன்றாகும்.
  • இப்பாடத்தில் முன்னர் விவாதிக்கப்பட்டது போல் சட்டத்திற்கு உட்பட்ட முறைகளைப் பின்பற்ற விரும்பிட மிதவாத தேசியவாதிகளை ‘யாசிப்பவர்கள்’ என தீவிர தேசியவாதிகள் ஏளனம் செய்தனர்.
  • ஆங்கில ஆட்சி புதிய அணுகுமுறையில் எதிர்கொள்ளப்பட வேண்டும் என நினைத்த பாரதியாருக்கு தீவிர தேசியவாதிகளின் வழிமுறைகள் அதிகம் ஏற்புடையனவாய் இருந்தன.
  • எடுத்துக்காட்டாக காங்கிரசின் சூரத் மாநாட்டிற்குப் (1907) பின்னர் திலகர் மீது அவர் கொண்டிருந்த ஆர்வமும் பற்றும் மேலும் பெருகியது.
  • திலகரின் Tenets of New party எனும் நூலை பாரதி தமிழில் மொழியாக்கம் செய்தார். மேலும் 1907இல் ‘சூரத் சென்று வந்த பயணம் சென்னை மாகாணத் தீவிர தேசியவாதிகள் குறித்து’ எனும் சிறு புத்தகமொன்றை வெளியிட்டார். பாரதி ஆசிரியராகப் பணியாற்றிய இந்தியா என்ற வார இதழ் தீவிர தேசியவாதிகளின் குரலாக மாறியது.

உ) வ.உ.சி., சுப்ரமணிய சிவா கைதும் சிறை வாசமும்

  • ஆறுமாத காலச் சிறை தண்டனைக்கு பின்னர் பிபின் சந்திர பால் 1907 மார்ச் 9இல் விடுதலை செய்யப்பட்டார். அந்நாளை தமிழ்நாட்டுச் சுதேசி இயக்கத் தலைவர்கள் ‘சுதேசி தினமாக’ திருநெல்வேலியில் கொண்டாட முடிவு செய்தனர்.
  • அரசு நிர்வாகம் அனுமதி மறுத்ததையும் மீறி வ.உ.சி., சுப்ரமணிய சிவா, பத்மநாபட் ஆகியோர் செயல்பட்டனர். அவர்கள் 1908 மார்ச் 12இல் தேச துரோகக் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டனர்.
  • முக்கியமான சுதேசி இயக்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதால் சினம் கொண்ட உள்ளூர் மக்கள் எதிர்வினையாக வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
  • எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கடையடைப்பு நடத்தப்பெற்றது. திருநெல்வேலியில் நகரசபைக் கட்டடமும் காவல் நிலையமும் தீ வைக்கப்பட்டன. மிக முக்கியமாக சுதேசித் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து நூற்பாலைத் தொழிலாளர்கள் பெருவாரியான எண்ணிக்கையில் ஆலையை விட்டு வெளியே வந்தனர்.
  • எதிர்ப்புத் தெரிவித்தக் கூட்டத்தாரோடு ஏற்பட்ட சில மோதல்களுக்குப் பின்னர் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நால்வர் கொல்லப்பட்டனர்.
  • 1908 ஜுலை 7 இல் வ.உ.சி.ம் யும்., சுப்ரமணிய சிவாவும் குற்றம் செய்தனர் என அறிவிக்கப்பட்டு தேச துரோகக் குற்றத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டனர். அரசுக்கு எதிராகப் பேசிய குற்றத்திற்காகச் சிவாவும் 10 ஆண்டுகள் நாடு கடத்துதல் தண்டனையும் அவருக்கு உடந்தையாக இருந்ததற்காக வ.உ.சி. க்கு ஆயுள் தண்டனையும் (20 ஆண்டுகள்) விதிக்கப் பெற்றது.
  • வ.உ.சி. அரசை எதிர்த்துப் பேசிய குற்றத்திற்காக மேலும் ஒரு ஆயுள் தண்டனை விதிக்கப்பெற்றார். திருநெல்வேலியில் போராட்டங்களை எந்த அளவிற்கு அரசு தீவிரத்துடன் நோக்கியது என்பதை இக்கொடூரமான தண்டனைகள் உணர்த்துகின்றன.
  • இந்நிகழ்ச்சியின் பின்விளைவாக ஆங்கிலேய அரசின் அடக்குமுறையானது ஒரு சில தலைவர்களைக் கைது செய்ததோடு நின்றுவிடவில்லை. உண்மையில் செயலூக்கத்துடன் எதிர்ப்பியக்கத்தில் கலந்து கொண்ட மக்களும் தண்டிக்கப்பட்டனர். திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளைச் சேர்ந்த மக்களிடம் காவல்துறை தண்டனையால் வரியும் வசூலிக்கப்பட்டது.

பேரரசருக்கு எதிரான வ.உ.சி., சுப்ரமண்ய சிவா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் சில பகுதிகள் (நவம்பர் 4, 1908)

ஆட்சிக்கு எதிராக மக்களைத் தூண்டுவது அது எப்போதானும் சரி மிக மோசமான குற்றமென்றே எனக்குத் தோன்றுகிறது. இம்மாகாணத்தில் இவ்வகைப்பட்ட வழக்குகளில் இதுவே முதல் வழக்கு என்பது உண்மை. ஆனால் இக்குற்றம் கால் ஊன்றுவதற்கு எந்த மாகாணங்களிலெல்லாம் இட்த்தைப் பெற்றுவிட்டதோ, அவைகளில் நிலவும் இப்போதைய நிலைமைகள், மிதமான தண்டனைகளான சில மாதங்கள் சிறை தண்டனை அல்லது ஒன்று அல்லது இரண்டாண்டுகள் சிறை தண்டனைகளானது தகுதியற்றோர்க்கு வழங்கப்பெற்ற சலுகைகள் எனச் சுட்டிக்காட்டிவதாய்த் தோன்றுகிறது. தண்டனையின் குறிக்கோளானது குற்றவாளிக்கு மட்டுமல்ல, அவருடைய முன்னுதாரணத்தை பின்பற்ற விழையும் மற்றவர்க்கும் அச்சமூட்டுவதாய் அமைய வேண்டும். ஏறத்தாழ ஒரு புரட்சியாக முடிந்து விட்ட ஒரு அரசு எதிர்ப்பியக்கத்தைக் கையாள வேண்டியுள்ளது. கலகங்களை அடக்கும் போது இழக்கப்பட்ட உயிர்களுக்கு தார்மீக அடிப்படையில் இவர்களே பொறுப்பாவர் என்பது அவர்களைக் கைது செய்தலில் உறுதியாகிவிட்டது.

ஊ) ஆஷ் படுகொலை

  • தூத்துக்குடியில் சுதேசி முயற்சிகள் அடக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுதேசி இயக்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு அவமானப்படுத்தப்பட்டது ஆகியவை இளைஞர்களிடையே பெரும் கோபத்தை உருவாக்கின.
  • திருநெல்வேலி நிகழ்வுக்குப் பழி வாங்குவதற்காக ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டது. ஆங்கிலேயரின் அடக்குமுறை குறித்து பத்திரிகைகள் தொடர்ந்து பரப்புரை செய்தது. நிர்வாகத்திற்கு எதிராக மக்களிடையே கோபத்தை உண்டாக்குவதில் தீர்மானகரமானப் பங்கை வகித்தது.
  • திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ராபர்ட் ஆஷ், ஜுன் 1911இல் மணியாட்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்டார். 1880இல் திருவாங்கூர் அரசின் பகுதியில் பிறந்த வாஞ்சிநாதன் அவ்வரசின் ஆட்சியிலிருந்த புனலூரில் வனத்துறையில் காவலராகப் பணியாற்றினார். ‘பாரத மாதா’ என்ற புரட்சிகர தேசியவாதக் குழுவில் அவரும் ஒரு உறுப்பினராவார். ஐரோப்பிய அதிகாரிகளைக் கொல்வதன் மூலம் இந்தியர்களைப் புரட்சிக்குத் தூண்டுவதே இவ்வமைப்பின் குறிக்கோளாகும். இச்செயல்பாடுகள் சுயராஜ்ஜியத்திற்கு இட்டுச்செல்லும் என அவர்கள் நம்பினர். திட்டத்தின் ஒரு பகுதியாக வாஞ்சிநாதனுக்கு கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தும் பயிற்சியை வ.வே.சுப்ரமணியம் பாண்டிச்சேரியில் வழங்கினார்.
  • மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷை சுட்ட பின்னர் வாஞ்சிநாதன் அதே துப்பாக்கியால் தன்னைச் சுட்டுக் கொண்டார். அவர் பையில் இருந்த கடிதம் வாஞ்சிநாதன் போன்ற தேசபக்த புரட்சியாளர்களுடைய ஆவேசத்தின் இழைகளைப் புரிந்து கொள்ள நமக்கு உதவுகின்றது.

படுகொலையின் பின்விளைவுகள்

  • விசாரணையின்போது ஆஷ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் பாண்டிச்சேரியில் தலைமறைவாய் இருக்கும் வ.வே. சுப்ரமணியரும் ஏனையோரும் நெருக்கமாக இருந்து இணைந்து செயல்பட்டுள்ளனர் என்பதை ஆங்கிலஅரசு மெய்ப்பித்தது. பாண்டிச்சேரி குழுவினர் குறித்தும் அவர்களது நடவடிக்கைகள் பற்றியும் காலனிய அரசு பெரும் சந்தேகம் கொண்டது. இத்தகையதோர் சூழ்நிலை தேசியவாதக் கருத்துகளைப் பரப்புரை செய்யவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இயலாத நிலையை ஏற்படுத்தியது. கொலையின் பின்விளைவாக காலனியரசு மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகளின் விளைவாகத் தமிழ்நாட்டில் தேசிய இயக்கம் செயல்வேகம் குறைந்த, மந்தகதியிலான ஒரு காலகட்டத்தை எதிர்கொண்டது. 1916இல் தன்னாட்சி இயக்கத்தையொட்டி அது ஒருவகையான புத்துயிர்ப்பைப் பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!