Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

தொழிலகங்கள் Notes 8th Social Science Lesson 20 Notes in Tamil

8th Social Science Lesson 20 Notes in Tamil

20. தொழிலகங்கள்

தொழிற்சாலை

  • மூலப்பொருட்களை இயந்திரங்களின் மூலம் பயன்படுத்த கூடிய பொருட்களாக மாற்றப்படும் இடமே தொழிற்சாலை எனப்படும்.
  • பல்வேறு மூலப் பொருட்களை நேரடியாக மனிதர்களால் நுகர்வு செய்ய இயலாது. எனவே மூலப்பொருட்களை நுகர்வு பொருட்களாக மாற்ற வேண்டியது அவசியமாகிறது.
  • மூலப்பொருட்களை ஒரு வடிவத்திலிருந்து நுகரும் வகையில் மற்றொரு வடிவத்திலிருந்து நுகரும் வகையில் மற்றொரு வடிவத்திற்கு மாற்றுவதே உற்பத்தி தொழிற்சாலையின் சாராம்சம் ஆகும்.
  • தொழிற்சாலைகள், பொருளாதார நடவடிக்கையின் இரண்டாம் நிலை துறையாகும்.
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மேம்பாடு மனிதனுக்கு மூலப்பொருட்களைப் பயன்படும் பொருட்களாக உருவாக்க உதவுகிறது.
  • ஒரு நாட்டின் பொருளாதார வலிமை எப்பொழுதும் உற்பத்தி தொழிற்சாலையின் வளர்ச்சியால் அளவிடப்படுகிறது.
  • எனவே உலகில் உள்ள எந்த ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் தொழிலகங்களின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு மேம்பாடு அடைகிறது.

பொருளாதார செயல்பாடு

உற்பத்தி, விநியோகம், நுகர்வு அல்லது பணிகளில் ஈடுபடும் எந்த ஒரு செயலுமே பொருளாதார நடவடிக்கையாகும்.

பொருளாதார நடவடிக்கைகளின் அடிப்படை

பின்வருவன அனைத்தும் முக்கியமான அடிப்படை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் ஆகும்.

  1. முதன்மை பொருளாதார நடவடிக்கைகள்

(எடுத்துக்காட்டு – கச்சா பருத்தி உற்பத்தி)

  1. இரண்டாம் நிலை பொருளாதார நடவடிக்கைகள்

(எடுத்துக்காட்டு – நூற்பாலைகள்_

  1. சார்புநிலை பொருளாதார நடவடிக்கைகள்

(எடுத்துக்காட்டு – வங்கித்துறை)

  1. நான்காம் நிலை பொருளாதார நடவடிக்கைகள்

(எடுத்துக்காட்டு – நீதித்துறை)

முதன்மை அல்லது முதல் நிலை பொருளாதார நடவடிக்கை (Primary Economic Activity):

  • இவை பழங்காலம் முதலே தோன்றிய பொருளாதார நடவடிக்கைகளாகும்.
  • கால்நடை மேய்த்தல், வேட்டையாடுதல், உணவு சேகரித்தல், மீன் பிடித்தல், விவசாயம், சுரங்கத் தொழில், கல் உடைத்தல் ஆகிய பொருளாதார நடவடிக்கைகளை உள்ளடக்கியது.

இரண்டாம் நிலை பொருளாதார நடவடிக்கை (Secondary Economic Activity):

  • இரண்டாம் நிலை பொருளாதார நடவடிக்கைகள் என்பது மூலப்பொருட்களை முறைப்படுத்துதல் மற்றும் உற்பத்தி மூலம் பயன்படும் பொருட்களாக மாற்றம் செய்வது ஆகும்.
  • எடுத்துக்காட்டாக அடுமனைகளில் மாவுகளை ரொட்டியாக மாற்றுவது. உலோகங்கள் மற்றும் நெகிழிகளை முறைப்படுத்தி வாகனங்களாக மாற்றும் தொழிற்சாலைகள் ஆகும்.

மூன்றாம் நிலை பொருளாதார நடவடிக்கை (Tertiary Economic Activity):

  • மூன்றாம் நிலை பொருளாதார நடவடிக்கைகள் அத்தியாவசிய சேவைகளை அளிக்கிறது. மற்றும் தொழிலகங்கள் இயங்குவதற்கு உதவி புரிகின்றது. இவை சேவைகள் துறை என்று அழைக்கப்படுகிறது.
  • போக்குவரத்து, நிதி பயன்பாடுகள், கல்வி, சில்லரை வர்த்தகம், வீட்டுவசதி, மருத்துவம் மற்றும் பிற சேவைகளை உள்ளடக்கியதாகும்.
  • நாம் பள்ளியின் மூலமாக கல்வி பயில்கிறோம். எனவே பள்ளி சேவைகளை அளிப்பதால் இது மூன்றாம் நிலை பொருளாதார நடவடிக்கைகளின் கீழ் வருகிறது.

மூன்றாம் நிலை பொருளாதார நடவடிக்கைகளை மேலும் இரண்டு துணை பிரிவுகளாக பிரிக்கலாம்.

1. நான்காம் நிலை (Quartenary Economic Activity)

2. ஐந்தாம் நிலை (Quinary Economic Activity)

இவை பொருளாதாரத்தின் சார்பு துறை வணிகத்திற்கான சேவைகளை அளிக்கிறது.

1. நான்காம் நிலை பொருளாதார செயல்பாடுகள்:

  • இச்செயல்பாடு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி உள்ளிட்ட தகவல் உருவாக்கம் மற்றும் பரிமாற்றங்களுடன் தொடர்புடையதாகும். ஆகையால் இத்துறையை தகவல் நுட்பத் தொழிலகங்கள் என்று அழைக்கிறோம்.
  • தகவல் பரிமாற்றம் மற்றும் மின்னணு காட்சியானது தகவல் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் விளைவாக இந்த வியத்தகு நிலையை அடைந்துள்ளது.
  • தொலைக்காட்சி நிலையத்தில் இருந்து ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை காண்பது நான்காம்நிலை பொருளாதார செயல்பாட்டிற்கு சிறந்த உதாரணம் ஆகும்.
  • சேவைத்துறை இந்தியாவின் மிகப்பெரிய துறைகளில் ஒன்றாகும். தற்போது இந்தத் துறையானது இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 53 சதவீதம் பங்களிப்பினை அளிக்கிறது.

2. ஐந்தாம் நிலை பொருளாதார செயல்பாடுகள்:

  • தொழிற்சாலைகள், வணிகம், கல்வி மற்றும் அரசாங்கங்களின் உயர்மட்ட அளவில் முடிவெடுக்கும் நிர்வாகிகளை குறிப்பிடுகின்றன.
  • சுகாதாரம், பல்கலைக்கழகங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் உள்ள உயர்மட்ட அதிகாரிகள் அல்லது நிர்வாகிகள் இவற்றில் அடங்குவர்.
  • உதாராணமாக நம்முடைய பெற்றோர்கள் வீட்டு குடிசார் பண்டம் அல்லது பொருட்கள் வாங்குவதற்கான முடிவினை அவர்களே எடுக்கின்றனர்.
  • அதே போல அமைச்சரவை குழுவினர் ஒரு மாநிலத்தின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைப் பற்றிய முடிவுகளை எடுக்கின்றனர்.

தொழிலக அமைவிட காரணிகள்

  • தொழிற்சாலையின் அமைவிடங்கள் இயற்கையில் சிக்கலானவை. அவை அங்கு கிடைக்கக்கூடிய பல காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன.
  • மூலப்பொருட்கள், நிலம், நீர், தொழிலாளர்கள், மூலதனம், ஆற்றல் வளம், போக்குவரத்து மற்றும் சந்தை இவைகள் தொழிலகங்களின் அமைவிடத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாகும்.

தொழிலக அமைவிட காரணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

  1. புவியியல் காரணிகள் (Geographical Factors)
  2. புவியியல் அல்லாத காரணிகள் (Non- Geographical Factors)

I. புவியியல் காரணிகள்

1. மூலப்பொருட்களின் (Raw Materials):

  • அதிக அளவு மூலப்பொருட்கள் மற்றும் எடை இழக்கும் பொருட்களை நீண்ட தூரத்திற்கு கொண்டு செல்ல முடியாது.
  • எனவே இரும்பு மற்றும் எஃகு மற்றும் சர்க்கரை தொழிலகங்கள் முறையே இரும்புத்தாது மற்றும் கரும்பு கிடைக்கும் இடத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளன.
  • சேலம் இரும்பு எஃகு ஆலையானது இரும்பு தாது கிடைக்கும் கஞ்சமலைக்கு அருகிலேயே அமைந்துள்ளது.
  • சர்க்கரைத் தொழிற்சாலைகள் கரும்பு விளையும் இடங்களுக்கு அருகிலேயே அமைந்துள்ளன.

2. ஆற்றல் வளம் (Power):

  • எரிசக்தி பெரும்பாலான தொழிலகங்களை இயக்குவதற்கு அடிப்படை மற்றும் அவசியமானதாகும்.
  • நிலக்கரி, தாது எண்ணெய் மற்றும் நீர் போன்ற மரபுசார் மூலங்களிலிருந்து எரிசக்தி பெரும்பாலும் உற்பத்தி செய்யப்படுகிறது.
  • எனவே தொழிற்சாலைகளின் மின் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு மேற்கண்ட ஏதேனும் ஒரு வளம் அமைந்துள்ள இடங்களுக்கு அருகாமையில் தொழிற்சாலைகள் அமைக்கப்படுகின்றன.

3. மனித சக்தி (Labour):

  • தொழிலாளர் சார்ந்த தொழில்களுக்கு மலிவான மற்றும் திறமையான தொழிலாளர்கள் அவசியமாகும். எடுத்துக்காட்டு தேயிலை தொழிற்சாலை.

4. போக்குவரத்து (Transport):

  • மூலப்பொருட்களை தொழிலகங்களுக்கு கொண்டு செல்வதற்கும் முடிக்கப்பட்ட பொருட்களை மீண்டும் சந்தைக்கு அனுப்பவும் போக்குவரத்து தேவைப்படுகிறது.
  • எப்பொழுதும் எளிதான போக்குவரத்து தொழிலகங்களின் அமைவிடத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • எனவே நீர்வழிகள், சாலை வழிகள் மற்றும் இருப்புப் பாதைகளின் வலைப்பின்னல் கொண்ட பகுதிகள் சிறந்த தொழில் மையங்களாகத் திகழ்கின்றன.

5. சேமிப்பு மற்றும் கிடங்கு (Storage and Warehousing):

உற்பத்தியின் முடிவில் முடிவுற்ற பொருள்கள் சந்தையைச் சென்றடைய வேண்டும். எனவே முடிக்கப்பட்ட பொருள்கள் சந்தைக்கு கிடங்குகளில் சேமித்து வைக்க வேண்டும்.

6. நிலத்தோற்றம் (Topography)

ஒரு தொழிற்சாலையை நிறுவுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் சமமானதாக இருக்க வேண்டும். இது பல்வேறு போக்குவரத்து சாதனங்களைப் பயன்படுத்தி கொள்ள ஏதுவாக இருக்கும்.

7. காலநிலை (Climate):

  • ஒரு பகுதியில் நிலவும் காலநிலை, தொழிலகங்களின் அமைவிடத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.
  • தொழிற்சாலை வளர்ச்சிக்கு தீவிர காலநிலை பொருத்தமானது அல்ல. மேலும் ஒவ்வொரு தொழிலகங்களுக்குமொரு குறிப்பிட்ட காலநிலை தேவைப்படுகிறது
  • எடுத்துக்காட்டாக பருத்தி நெசவாலை தொழிலுக்கு குளிர்-ஈர்ப்பத காலநிலை சிறந்ததாகும்.
  • எனவே கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் போன்ற பகுதிகளில் இவ்வகையான காலநிலை நிலவுவதால் பருத்தி நெசவு தொழிலகங்கள் இம்மண்டலத்தில் அமைந்துள்ளன.

8. நீர்வளம் (Water Resources):

  • நீர்வளம் தொழிற்சாலைகளின் அமைவிடத்தை நிர்ணயிக்கும் மற்றொரு முக்கிய காரணியாகும். இக்காரணத்தினால் ஆறுகள், கால்வாய்கள் மற்றும் ஏரிகளுக்கு அருகே பல தொழிலகங்கள் நிறுவப்பட்டுள்ளன.
  • இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலை, ஜவுளி தொழிற்சாலை மற்றும் இரசாயன தொழிற்சாலைகளைன் செயல்பாட்டிற்கு ஏராளமான நீர் தேவைப்படுகிறது.

II. புவியியல் அல்லா காரணிகள்

1. மூலதனம் (Capital):

தொழிலகங்கள் நிறுவுவதற்கு மூலதனம் அல்லது அதிக முதலீடு தேவைப்படுகிறது. மூலதனம் இல்லாமல் எந்த ஒரு தொழிற்சாலையையும் நிறுவ முடியாது.

2. கடன் வசதி (Availabllitu of Loans):

பெரும்பாலும் தொழில் முதலீட்டாளர்களுக்கு தொழில் தொடங்க போதுமான நிதி இருக்க வாய்ப்பில்லை. எனவே தொழிற்சாலை தொடங்கும் பொருட்டு முதலீட்டாளர்கள் கடன் வசதியை நாடுவர். எனவே கடன் மற்றும் காப்பீடு வழங்கும் நிறுவனங்களின் சேவை தேவைப்படுகிறது.

3. அரசாங்கக் கொள்கைகள் / விதிமுறைகள் (Government Policies /Regulations):

தொழிலகங்களின் அமைவிடத்தை நிர்ணயிக்கும் மற்றொரு முக்கிய காரணி அரசாங்கக் கொள்கைகள் ஆகும். பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கும் அதிகமான மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்கும் பெருநகரங்களில் மிகுதியான தொழிலகங்களை தவிர்ப்பதற்கும், தொழிற்சாலையை நிறுவுவதற்கும், நிலம் ஒதுக்கீடு செய்வதில் சில கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதிக்கிறது. எனவே அரசாங்கக் கொள்கைகள் மற்றும் விதிமுறைகள் தொழிலகங்களின் அமைவிடத்தை தீர்மானிக்கின்றன.

தொழிலகங்களின் வகைப்பாடு (Classification of Industries)

தொழிலகங்கள் பல்வேறு அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. அவை

1. மூலப்பொருட்களின் அடிப்படையில்

i) வேளாண் சார்ந்த தொழிலகங்கள்:

இவ்வகை தொழிலகங்களுக்கு வேளாண் மற்றும் விலங்கு சார்ந்த பொருட்கள் மூலப்பொருட்களாகப் பயன்படுகின்றன. எடுத்துக்காட்டாக உணவுப் பதப்படுத்துதல், தாவர எண்ணெய் உற்பத்தி, பருத்தி நெசவாலைகள் , பால் உற்பத்திப் பொருட்கள் போன்றவை.

ii) கனிமவளம் சார்ந்த தொழிற்சாலைகள்:

இவ்வகை தொழிலகங்கள் கனிமத் தாதுக்களை மூலப்பொருட்களாக பயன்படுத்துகின்றன. இரும்புத் தாதுவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் இரும்பு கனிம வளம் சார்ந்த தொழிலகத்திற்கு எடுத்துக்காட்டாகும். சிமெண்ட் தொழிற்சாலை, இயந்திரக் கருவி உற்பத்தி போன்றவை கனிமங்கள் சார்ந்த தொழிற்சாலைகளுக்கு மற்ற எடுத்துக்காட்டுகளாகும்.

Iii) கடல்வளம் சார்ந்த தொழிலகங்கள்:

இவ்வகை தொழிலகங்களுக்கு கடல் மற்றும் பெருங்கடலில் இருந்து கிடைக்கப்பெறும் பொருட்கள் மூலப்பொருட்களாகப் பயன்படுகின்றன. எடுத்துக்காட்டு பதப்படுத்தப்பட்ட கடல்சார் உணவு, மீன் எண்ணெய் உற்பத்தி அலகுகள் ஆகும்.

iv) வனவளம் சார்ந்த தொழிலகங்கள்:

இவ்வகை தொழிலகங்களுக்கு வனப்பொருட்கள் மூலப்பொருட்களாகப் பயன்படுகின்றன. எடுத்துக்காட்டாக மரக்கூழ் மற்றும் காகித உற்பத்தி, மரத்தளவாடங்கள் மற்றும் சில மருந்து உற்பத்தி தொழிலகங்களாகும்.

அளவு மற்றும் மூலதனத்தின் அடிப்படையில் வகைபாடு

(Basis of Size and Capital)

i) பெரிய அளவிலான தொழிலகங்கள்:

ரூபாய் ஒரு கோடிக்கும் மேல் மூலதனம் கொண்டு நிறுவப்படும் தொழிற்சாலைகள் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் என்று அழைக்கப்படுகிறது. இரும்பு மற்றும் எஃகு ஆலை, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, சிமெண்ட் தொழிற்சாலை மற்றும் நெசவாலை தொழிலகங்கள் போன்றவை பெரிய அளவிலான தொழிலகங்களுக்கு சிறந்த உதாரணமாகும்.

ii) சிறிய அளவிலான தொழிலகங்கள்:

ரூபாய் ஒரு கோடிக்கும் குறைவான மூலதனத்தைக் கொண்டு நிறுவப்படும் தொழிற்சாலைகளை சிறிய அளவிலான தொழிலகங்கள் என்று அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டு பட்டு நெசவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் சார்ந்த தொழிலகங்கள் இவ்வகையைச் சார்ந்தவை ஆகும்.

மேற்கூறிய தொழிலகங்களைத் தவிர குடிசைத் தொழில்கள் அல்லது வீட்டு உபயோகப் பொருள் உற்பத்தித் தொழில்கள் ஆகியவற்றை சிறிய அளவிலான தொழிலகங்கள் என்பர். இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் கைவினை கலைஞர்களின், குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் தயாரிக்கப்படுகின்றன. இவ்வகை தொழிலகங்கள் சிறு தொழில்கள் அல்லது இதர வகை தொழிற்சாலைகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக கூடை முடைதல், பானை தயாரித்தல், கைவினைப் பொருட்கள் தயாரிப்பு போன்றவை ஆகும்.

இந்தியாவின் டெட்ராய்ட்

அமெரிக்க ஐக்கிய நாட்டில் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள டெட்ராய்ட் நகரம் உலக பாரம்பரிய வாகன தொழில் மையமாக அறியப்படுகிறது. அதேபோல் இந்தியாவில் உள்ள சென்னை மாநகரம் இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் உலகப்புகழ் பெற்ற வாகன தொழிலங்களான ஜி.எம், போர்டு, மஹேந்திரா , ஹூண்டாய் போன்ற தொழிலகங்கள் இங்கு அமைந்துள்ளன. இவற்றைத்தவிர இந்நகரம் நட்டின் வாகன தொழில் ஏற்றுமதியில் 60% பங்கினைக் கொண்டுள்ளது.

உடைமையாளர்கள் அடிப்படையில் தொழிலகங்கள் (Basis Of Ownership)

i) தனியார் துறை தொழிலகங்கள் (Private Sector Industries):

இவ்வகை தொழிலகங்கள் தனிநபர்கள் மற்றும் தனித்த குழுக்களால் நிறுவப்பட்டு செயல்படுத்தப்படுகின்றது. எடுத்துக்காட்டாக பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ் போன்றவையாகும்.

ii) பொதுத்துறை தொழிலகங்கள் (Public Sector Industries):

இவ்வகை தொழிலகங்கள் அரசுக்கு சொந்தமானவை மற்றும் அரசால் இயக்கப்படுபவை. எடுத்துக்காட்டாக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் (HAL), பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) இந்திய இரும்பு எஃகு ஆணையம் (SAIL) ஆகியவை பொதுத்துறை நிறுவனத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

iii) கூட்டுத்துறை தொழிலகங்கள் (Joint Sector Industries):

இவ்வகை தொழிலகங்கள் அரசுத்துறையும் மற்றும் தனிநபர்கள் அல்லது தனி குழுவாகவோ கூட்டாக இணைந்து இயக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு இந்தியன் ஆயில் ஸ்கை டேங்கிங் நிறுவனம், இந்தியன் சிந்தடிக் இரப்பர் நிறுவனம், மாநகர் வாயு நிறுவனம், மாருதி உத்யோக் போன்றவை.

iv) கூட்டுறவுத்துறை தொழிலகங்கள் (Co-Operative Sector):

இவ்வகையிலான தொழிலகங்கள் மூலப் பொருட்களின் உற்பத்தியாளர்கள்/ விநியோகிப்பவர்கள் அல்லது தொழிலாளர்கள் அல்லது இவை இரண்டையும் அளிப்பவர்களால் நிறுவப்பட்டு இயக்கப்படுகிறது. ஆனந்த் பால் ஒன்றிய நிறுவனம் (அமுல்) கூட்டுறவுத்துறை தொழிலகங்களுக்கான சிறந்த எடுத்துக்காட்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!