Tnpsc

நீதித்துறை Notes 8th Social Science Lesson 22 Notes in Tamil

8th Social Science Lesson 22 Notes in Tamil

22. நீதித்துறை

“நீதித்துறையின் உயர்வே அரசாங்கத்தின் உயர்வைக் காட்டும் அளவீடாகும்”

அறிமுகம்

  • ஒரு நாட்டின் நீதி அமைப்பு அனைவருக்கும் முறையான நீதி கிடைப்பதை உறுதி செய்ய திறனுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.
  • இந்தியா ஒருங்கிணைந்த மற்றும் ஒருங்கிணைந்த நீதித்துறை அமைப்பைக் கொண்டுள்ளது. அரசாங்கத்தின் ஓர் அங்கமாக நிதித்துறை முக்கியப் பங்கு வகிக்கிறது.
  • இது நீதியை நிர்வகித்தல், தகராறுகளை தீர்த்தல், சட்டங்களுக்கு விளக்கம் அளித்தல், அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலனாகவும் விளங்குகிறது.

சட்டம்: இது மக்களை ஆள்வதற்கு ஓர் அரசாங்கத்தாலோ (அ) நிறுவனத்தாலோ விதிக்கப்படும் விதிகளின் அமைப்பு ஆகும்.

நீதித்துறை: சட்டப்படு, ஒரு நாட்டின் பெயரால் நீதியை வழங்குகின்ற நீதிமன்றங்களின் அமைப்பு நீதித்துறை எனப்படுகிறது.

இந்திய நீதித்துறையின் பரிணாம வளர்ச்சி

அ) பண்டைய காலத்தில் நீதித்துறை

  • பண்டைய காலத்தில் நீதி என்ற கருத்து சமயத்துடன் தொடர்புடையதாக இருந்தது. அரசர் நீதியின் மூலாதாரமாக விளங்கினார். பெரும்பாலான அரசர்களின் அவைகளில் தர்மத்தின் அடிப்படையில் (நன்னடத்தை, கடமை) நீதி வழங்கப்பட்டது.
  • இவை மரபார்ந்த சட்டத் தொகுப்புகளாகும். தர்மத்தின் சட்டங்கள் தனிமனிதனை மட்டுமல்லாது சமூகத்தையும் நிர்வகித்தது.
  • கனங்களின் குடியரசுகள் தங்களுக்கென சட்ட அமைப்பைக் கொண்டிருந்தன. இதில் குலிகா எனும் நீதிமன்றத்தை நாம் காணலாம்.
  • வஜ்ஜிகளிடையே குற்ற வழக்குகளை விசாரிக்கும் எட்டு குலிகாக்களைக் கொண்ட வாரியம் எட்டு குலிகாக்களைக் கொண்ட வாரியம் இருந்தது. மேல்முறையீடானது குல நீதிமன்றத்திலிருந்து கன நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டது.

ஸ்மிருதி இலக்கியங்கள்

பண்டைய இந்தியாவில் ஸ்மிருதிகள் தனிமனிதனின் சமூகக் கடமைகளை வரையறுத்தன. அவை மனுஸ்மிருதி, நாரதஸ்மிருதி, யக்ஞவல்கிய ஸ்மிருதி போன்றவையாகும்.

ஆ) இடைக்கால இந்தியாவில் நீதித்துறை

  • துக்ளக் ஆட்சிக்காலத்தில் உரிமையியல் நடைமுறைச் சட்டங்கள் தொகுக்கப்பட்டதைக் காணமுடிகிறது. இது ஃபைகா-இ-பெரோஸ்-ஷாகி என அழைக்கப்பட்டது.
  • இச்சட்டம் பல்வேறு விவகாரங்களில் சட்டம் மற்றும் நடைமுறை விவரங்களை வழங்கியது. இது அரபு மொழியில் எழுதப்பட்டு பின்னர் பாரசீக மொழயில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
  • இது ஔரங்கசீப் காலத்தில் 1670ஆம் ஆண்டு ஃபுட்வா-இ-ஆலம்கிர் என்ற சட்டத்தொகுப்பின்படி மாற்றி அமைக்கப்பட்டது.

இ) நவீன இந்தியாவில் நீதித்துறை

  • இன்று நம் நாட்டில் உள்ள நீதித்துறை அமைப்பு மற்றும் சட்டங்கள் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டவையாகும்.
  • ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியால் மதராஸ், பம்பாய், கல்கத்தா ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட மேயர் நீதிமன்றங்களின் காலத்தில் 1727ஆம் ஆண்டுகளில் இந்த பொது சட்டத்தின் (1726 ஆம் ஆண்டு சாசனச் சட்டத்தின் கீழ்) வரலாறு தொடங்குகிறது.
  • ஒழுங்குமுறைச் சட்டம், 1773 உச்ச நீதிமன்றம் அமைப்பதற்கு வழிவகுத்தது.
  • உச்ச நீதிமன்றம் முதன் முதலாக கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையில் நிறுவப்பட்டது.
  • சர் எலிஜா இம்ஃபே என்பவர் அந்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
  • 1801 மற்றும் 1824ஆம் ஆண்டுகளில் மதராஸ் மற்றும் பம்பாய் ஆகிய இடங்களில் உச்சநீதிமன்றங்கள் மேற்படி இடங்களில் நிறுவப்படும் வரையில் உச்சநீதிமன்றங்களாக செயல்பட்டன.
  • சிவில் வழக்குகளை தீர்ப்பதற்காக ஊரக குடிமையியல் நீதிமன்றத்தையும் (Mofussil Diwani Adalat) குற்றவியல் வழக்குகளை தீர்ப்பதற்காக ஊரக குற்றவியல் நீதிமன்றத்தையும் (Mofussil Fauzdari Adalat) வாரன் ஹேஸ்டிங்ஸ் ஏற்படுத்தினார்.
  • மேற்கண்ட நீதிமன்றங்களின் மேல்முறையீட்டை விசாரிக்க சதர் திவானி அதாலத் (குடிமையியல் மேல்முறையீட்டு நீதிமன்றம்) சதர் நிசாமத் அதாலத் (குற்றவியல் மேல்முறையீட்டு நீதிமன்றம்) ஆகியவை இருந்தன.
  • காரன்வாலிஸ் பிரபு உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதி முறையை மறுசீரமைத்தார்.
  • காரன்வாலிஸ் ஆட்சியில் மாவட்ட குற்றவியல் நீதிமன்றங்கள் நீக்கப்பட்டு கல்கத்தா, டாக்கா, முர்ஷிதாபாத் மற்றும் பாட்னா ஆகிய இடங்களில் மாகான மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
  • வில்லியம் பெண்டிங் கால ஆட்சியில் மேற்கண்ட நான்கு மாகான மேல்முறையிட்டு நீதிமன்றங்களும் நீக்கப்பட்டன.
  • சதர் திவானி அதாலத் மற்றும் சதர் நிசாமத் அதாலத் ஆகிய அலகாபாத்தில் நிறுவப்பட்டன.
  • மெக்காலே என்பவரால் அமைக்கப்பட்ட சட்ட ஆணையம் இந்திய சட்டங்களை நெறிமுறைப்படுத்தியது. இந்த ஆணையத்தின் அடிப்படையில் 1859ஆம் ஆண்டு உரிமையியல் நடைமுறைச் சட்டம், 1860ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டம், மற்றும் 1861ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச்சட்டம் ஆகியவை உருவாக்கப்பட்டன.
  • 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் கூட்டாட்சி நீதிமன்றங்களை உருவாக்கியது. இது இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றம் அல்ல.
  • சில நேர்வுகளில் மேல்முறையீடு இங்கிலாந்தில் உள்ள பிரிவு கவுன்சில் நீதிகுழுவிடம் கொண்டு செல்லப்பட்டது.
  • 1949ஆம் ஆண்டு பிரிவு கவுன்சில் நீதி வரையறை ஒழுப்புச் சட்டத்தின் மூலம் பிரிவு கவுன்சில் நீதிவரையறை நீக்கப்பட்டது.
  • இந்திய உச்சநீதிமன்றம் 1950 ஜனவரி 28ஆம் நாள் தொடங்கப்பட்டது.
  • கல்கத்தா உயர் நீதிமன்றம் நாட்டின் மிகப்பழமையான உயர்நீதிமன்றமாகும். இது 1862ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அதே சமயம் அலகாபாத் உயர் நீதிமன்றம் நாட்டின் மிகப் பெரிய நீதிமன்றமாகும்.

நீதித்துறை மற்றும் அரசியலமைப்புச் சட்டம்

  • இந்தியா , தனக்கென ஒரு அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் உன்னதமான நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்களில் நீதிக்கு உயரிய இடத்தை உருவாக்கியவர்கள் அளித்துள்ளனர்.
  • ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியர்களுக்கென தனிச் சட்டமோ, நீதிமன்றமோ இல்லை. சட்டம் மற்றும் நீதிமன்றங்கள் இரண்டும் காலனி ஆதிக்கத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டிருந்தன.
  • இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் நீதிமன்ற மறு ஆய்வுக்கான முழு அதிகாரத்துடன் நீதிமன்றங்கள் சுதந்திரமாக செயல்படுவதை உறுதி செய்யும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க முனைந்தனர்.
  • அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 145ன்படி 1966ஆம் ஆண்டு நடைமுறை மற்றும் வழிமுறைகள் உச்சநீதிமன்ற விதிகள் ஒழுங்குபடுத்த ஏற்படுத்தப்பட்டன.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காவது அத்தியாயத்தின் கீழ் பகுதி V- (யூனியன்) ன்படி ஒன்றிய நீதித்துறை என்ற பெயரிலும், அத்தியாயம் VI- ன் கீழ் பகுதி VI-ன்படி (மாநிலம்) துணை நீதிமன்றங்கள் என்ற பெயரிலும் நிறுவ வழிவகை செய்கிறது.
  • சட்டப்பிரிவுகள் 124 முதல் 147 வரையிலான அரசியலமைப்புச் சட்டப்பிரிவுகள் இந்திய உச்ச நீதிமன்றத்தின் அமைப்பு மற்றும் அதிகார வரம்பினை வகுத்துக் கூறுகிறது.

இந்தியாவில் நீதிமன்றங்களின் அமைப்பு

  • ஒரு சுதந்திரமான நீதித்துறை என்ற கருத்தை முன்மொழிந்த முதல் அரசியல் தத்துவஞானி மாண்டெஸ்கியூ ஆவார். இவர் புகழ்பெற்ற தத்துவ ஞானி ஆவார். சட்டமன்றம், நிர்வாகம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று பிரிவுகளாக அரசாங்கம் செயல்பட வேண்டும் என்ற அதிகாரப்பகிர்வு கோட்பாட்டில் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார்.

மாவட்ட நீதிமன்றங்கள்: மாவட்ட அளவில் சிவில் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் மாவட்ட நீதிமன்றங்கள் என்றும் அழைக்கப்படுகிறது.

அமர்வு நீதிமன்றங்கள்: குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் அமர்வு நீதிமன்றங்கள் என்று அழைக்கப்படுகிறது.

பஞ்சாயத்து நீதிமன்றங்கள்: கிராம அளவில் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளை பஞ்சாயது நீதிமன்றங்கள் கையாளுகிறது.

வருவாய் நீதிமன்றங்கள்: வருவாய் நீதிமன்றங்கள் நில ஆவணங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கிறது. இது நில வருவாயை நிர்ணயம் செய்து நில உரிமையாளர்களிடமிருந்து அதனை வசூலிக்கிறது.

லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றங்கள்):

  • விரைவான நீதியை வழங்க லோக் அதாலத் அமைக்கப்பட்டது. இது மக்கள் முன்னிலையில் மக்கள் பேசும் மொழியிலேயே பிரச்சனையை விசாரித்து தீர்வு காண்கிறது.
  • ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி, ஒரு சமூக பணியாளர், ஒரு வழக்கறிஞர் ஆகிய மூன்று நபர்கள் கொண்ட அமர்வு இதற்கு தலைமை வகிக்கும்.
  • வழக்குரைஞர்கள் இல்லாமல் வழக்குகள் முன்வைப்படுகின்றன. இந்த வழக்குகள் பரஸ்பர ஒப்புதல் மூலம் தீர்த்து வைப்படுகின்றன. முதல் லோக் அதாலத் 1982ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் உள்ள ஜூனாகத்தில் நடைபெற்றது.

விரைவு நீதிமன்றங்கள்: இந்நீதிமன்றங்கள் 2000ஆம் ஆண்டில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் கீழ் நீதிமன்ற வழக்குகளை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்திற்காக தோற்றுவிக்கப்பட்டன.

தொலைதூர சட்ட முன்னெடுப்பு (Tele Law Initiative):

  • கிராமப்புற மக்களுக்காக சட்ட உதவி மற்றும் சேவைகள் வழங்குவதற்காக சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கூட்டு முயற்சியுடன் இது தொடங்கப்பட்டது.
  • தொழில்நுட்ப இயங்கு தளமான தொலைதூர சட்ட இணைய வழியின் பொதுவான சேவை சட்ட மையத்தில் (CSC) காணொளிக் கலந்துரையாடல் மூலம் வழக்குரைஞர்களிடமிருந்து மக்கள் சட்ட ஆலோசனைகளைப் பெறலாம்.

குடும்ப நீதிமன்றங்கள்:

  • குடும்பம் தொடர்பான சட்ட விவகாரங்களை குடும்ப நீதிமன்றம் கையாளுகிறது. இவைகள் உரிமையியல் நீதிமன்றங்கள் ஆகும்.
  • குழந்தையின் பாதுகாப்பு, மணமுறிவு, தத்தெடுப்பு, சிறார் பிரச்சனைகள் ஆகிய குடும்பம் தொடர்பான பல்வேறு உரிமைகள், கோரிக்கைகளுக்காக இந்நீதிமன்றங்கள் பயன்படுகின்றன.

நடமாடும் நீதிமன்றங்கள் (Mobile Court):

நடமாடும் நீதி மன்றங்கள் கிராமப்புற மக்களுக்கு இடர்களை தீர்க்கும் ஒன்றாய் இருக்கும். இது கிராமப்புற மக்களிடையே நீதி அமைப்பு பற்றி அதிக விழிப்புணர்வை உருவாக்கி, அவர்களது செலவைக் குறைத்து, அவர்களின் வாழிடங்களிலேயே நீதியை வழங்க வகை செய்கிறது.

இ-நீதிமன்றங்கள் (E –Courts):

இ-நீதிமன்றங்கள் திட்டம் 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்படி அனைத்து நீதிமன்றங்களும் கணினி மயமாக்கப்படும். நீதித்துறை சேவை மையம் இ-நீதிமன்றத்தின் ஒரு பகுதியாகும். பொதுமக்கள் மற்றும் வழக்குரைஞர்கள் நேரடியாக வழக்கு நிலை மற்றும் அடுத்த விசாரணை தேதிகளை கட்டணமின்றி கேட்டறியலாம்.

நீதித்துறையின் பங்கு

நீதித்துறையின் செயல்பாட்டினை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

தகராறுகளைத் தீர்வு செய்தல் பின்வருவனவற்றிற்கு இடையே பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான ஒரு இயக்கமுறையை நீதிமன்ற அமைப்பு வழங்குகிறது.

  • குடிமக்கள்
  • குடிமக்கள் மற்றும் அரசாங்கம்
  • இரண்டு மாநில அரசாங்கங்கள்
  • மத்திய, மாநில அரசாங்கங்கள்
நீதிமன்ற மறு ஆய்வு அதிகாரம் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அமைப்பினை மீறுகிறது என நீதித்துறை நம்பும் பட்சத்தில் அச்சட்டத்தினை அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என அறிவிக்கும் அதிகாரம் நீதித்துறைக்கு உள்ளது.
சட்டத்தை நிலைநிறுத்துதல் மற்றும் அடிப்படை உரிமைகளை செயல்படுத்துதல் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தனக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டதாய் நம்பும்பட்சத்தில் அவர் உச்சநீதிமன்றத்தையோ அல்லது உயர் நீதிமன்றத்தையோ அணுகலாம்.

தேசிய சட்ட சேவைகள் அதிகாரம் (NALSA):

இது 1987ஆம் ஆண்டு சட்ட சேவைகள் அதிகார சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. இது சமுதாயத்தின் நலிந்த பிரிவினருக்கு இலவச சட்ட உதவிகள் வழங்குவதோடு பிரச்சனைகளுக்கு இணக்கமான தீர்வு காண லோக் அதாலத்தை ஏற்பாடு செய்கிறது.

இந்திய உச்சநீதிமன்றம்

இந்தியாவின் மிக உயர்ந்த நீதிமன்றம் ஆகும். இது புதுடெல்லியில் அமைந்துள்ளது. இந்திய அரசியலமைப்பின் படி உச்சநீதிமன்றம் அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலராகவும், இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றமாகவும் உள்ளது.

உச்சநீதிமன்றத்தின் அதிகார வரம்பு

அ. முதன்மை அதிகார வரம்பு:

உச்சநீதிமன்றத்தில் மட்டுமே முதன்முறையாக தொடுக்கப்படும் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் பெற்றுள்ளது. இது மத்திய அரசிற்கும் ஒரு மாநிலம் அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கிடையிலான பிரச்சனைகள் ஆகியன முதன்மை அதிகார வரம்புக்குள் அடங்கும்.

ஆ. மேல் முறையீட்டு அதிகார வரம்பு:

உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் பெற்றுள்ளது. அவ்வாறான வழக்குகள் மேல்முறையீட்டுக்கு தகுதியுள்ளது என உயர்நீதிமன்றத்தால் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

இ. ஆலோசனை அதிகார வரம்பு:

குடியரசுத் தலைவரால் குறிப்பிடப்படும் பொது முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி குறித்து ஆலோசனை வழங்கும் அதிகாரத்தினை உச்சநீதிமன்றம் பெற்றுள்ளது.

ஈ. நீதிப் பேராணை அதிகார வரம்பு:

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சட்டப்பிரிவு 32ன் படி உச்சநீதிமன்றமும் நீதிப் பேராணைகளை வழங்குகின்றன.

உ. ஆவண நீதிமன்றம்:

இது நீதிமன்ற நடவடிக்கைகளின் பதிவுகளை பராமரிக்கிறது மற்றும் அதன் முடிவுகள் கீழ்நீதிமன்றங்களைக் கட்டுப்படுத்தும் .

ஊ. சிறப்பு அதிகாரங்கள்:

இது கீழ் நீதிமன்றங்களின் செயல்பாட்டை கண்காணிக்கிறது.

உயர்நீதிமன்றம்

  • உயர்நீதிமன்றம் மாநிலங்களின் மிக உயர்ந்த நீதிமன்றமாகும்.
  • இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு உயர்நீதிமன்றம் உள்ளது. எனினும், இரண்டு அல்லது மூன்று மாநிலங்கள் தங்களுக்கென ஒரு பொதுவான நீதிமன்றத்தைக் கொண்டிருக்கலாம்.
  • எடுத்துக்காட்டாக பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகர் ஆகியவை ஒரு பொதுவான நீதிமன்றத்தைக் கொண்டுள்ளன.
  • உயர்நீதிமன்றம் தனக்கென முதன்மை அதிகார வரம்பு, நீதிப்பேராணை வழங்கும் அதிகார வரம்பு ஆகிய அதிகார வரம்புகளை பெற்றுள்ளது. மாநிலங்களில் உயர்நீதிமன்றத்தின் கீழ் துணை நீதிமன்றங்கள் உள்ளன.

நீதித்துறையின் சுதந்திரமான மற்றும் நடுநிலைமை செயல்பாடு

  • அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் இந்தியாவின் நீதித்துறையினை சுதந்திரம் மற்றும் நடுநிலைத்தன்மையுடன் நிறுவினர்.
  • நியாயமான நீதி கிடைப்பதற்கு நீதித்துறையின் சுதந்திரம் முக்கியமானதாகும். இந்தியா போன்ற மக்களாட்சி நாடுகளில் நீதித்துறை குடிமக்களின் உரிமைகளின் பாதுகாவலனாக உள்ளது.
  • நம் நாட்டிற்கு எவ்வகையான நீதித்துறை வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் நீதித்துறையை வடிவமைத்துள்ளனர்.
  • அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களின் இவ்வெண்ணத்திற்கு டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பின்வரும் பதிலினை அளித்தார்.
  • “நமது நீதித்துறை நிர்வாகத்திடமிருந்து சுதந்திரமாக இருக்க வேண்டும் அதே வேளையும் திறமை மிக்கதாகவும் இருக்கவேண்டும் என்பதில் அமைவில் மாறுபட்ட கருத்து இருக்கமுடியாது. மேலும் வினா என்னவென்றால் எப்படி இந்த இரண்டு நோக்கங்களையும் பாதுகாக்கமுடியும் என்பதே ஆகும்
  • ஒரு திறன்மிக்க நீதித்துறை சுதந்திரமாகவும், பொறுப்புணர்வுடனும் இருக்க வேண்டும்.
  • நீதித்துறையின் சுதந்திரம் என்பது நீதிபதிகள் பாரபட்சமற்ற முறையில் சுதந்திரமாக செயல்படுவதை குறிப்பதாகும். எடுத்துக்காட்டாக எந்தவொரு வெளிப்புறை செல்வாக்கிலிருந்தும் விடுபடுதல்.

வழக்கு செயல்முறை

இந்தியாவில் இரண்டு வகையான சட்டப்பிரிவுகள் உள்ளன. அவை உரிமையியல் சட்டங்கள் மற்றும் குற்றவியல் சட்டங்கள் ஆகும்.

உரிமையியல் சட்டங்கள் குற்றவியல் சட்டங்கள்
  • இது பணம், சொத்து மற்றும் சமூகம் தொடர்பான பிரச்சனைகளைக் கையாளுகிறது. எ.கா. நிலம் தொடர்பான பிரச்சினைகள், வாடகை, திருமணம் தொடர்பான பிரச்சனைகள்
  • உரிமையியல் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்களால் ஒரு புகார் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
  • மனுதாரரின் கோரிக்கையின்படி பணம் செலுத்தும்படியான தண்டனைகள் வழங்கப்படுகிறது.
  • குற்றம் என சட்டம் வரையறுக்கும் நடத்தைகள் அல்லது செயல்களை இது விசாரிக்கிறது. எ.கா, திருட்டு, கொலை, பெண்களைத் துன்புறுத்துதல் ஆகியன.
  • இது வழக்கமாக காவல்துறை விசாரணையுடன் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்வதன் மூலம் தொடங்குகிறது. அதன் பிறகு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
  • குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் தண்டனை வழங்கப்பட்டு குற்றம் சட்டப்பட்டவர் சிறைக்கு அனுப்பப்படுவார்.

பொது நலவழக்கு (Public Interest Litigation):

இது பொதுநலனைப் பாதுகாப்பதற்காக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் வழக்கு ஆகும். உச்சநீதிமன்றம் இந்த முறையை அறிமுகப்படுத்தியது. இது ஒரு நபர் தனது வழக்கு தொடர்பான நீதிமன்றத்தை அணுக அனுமதிக்கிறது. அடிப்படை மனித உரிமைகள் மீறல், சமய உரிமைகள் , மாசுபாடு மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆகியவற்றிற்காக பொது நல வழக்கை எவரும் தாக்கல் செய்யலாம். இது தொடர்பான எழுதப்பட்ட புகார் கடிதம் மூலம் இவ்வழக்கினைப் பதியலாம், பொது நல வழக்கு என்ற கருத்து இந்திய நீதித்துறைக்கு புதிதான ஒன்றாகும்.

முடிவுரை

மக்களாட்சி நாட்டில் நீதித்துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. நீதித்துறை அரசியலமைப்புச் சட்டத்தின் பொறுப்பாளராகவும், அடிப்படை உரிமைகளின் பாதுகாவலராகவும் உள்ளது. உலகின் அதிக எண்ணிக்கையிலான பிரதிநிதிகளைக் கொண்ட மக்களாட்சி நாடான இந்தியா, நன்கு கட்டமைக்கப்பட்ட மற்றும் சுதந்திரமான நீதித்துறை அமைப்பைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!