Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Indus Valley Civilization Notes - சிந்து சமவெளி நாகரிகம் பாடக்குறிப்புகள்Tnpsc

பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை Notes 11th History

11th History Lesson 1 Notes in Tamil

1. பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

அறிமுகம்

தொன்மை வாய்ந்த நாகரிகங்களும் பண்பாடுகளும் கொண்ட, வளர்ச்சி பெற்ற நாடு இந்தியா. பழங்கற்காலம் முதலாக இந்தியாவில் பல குழுக்களைச் சேர்ந்த மக்கள் பலமுறை குடிபெயர்ந்து பல்வகைப்பட்ட சூழல்களுக்கு ஏற்றவாறு தங்கள் பண்பாடுகளைத் தகவமைத்துக் கொண்டனர். இதன் விளைவாகப் பன்மைத் தன்மை கொண்ட நம்பிக்கைகளும் வாழ்க்கை முறைகளும் தோன்றின. உணவு சேகரித்தல் எனும் நிலையிலிருந்து கால்நடை மேய்ச்சல் வாழ்க்கை முறைக்குச் சமூகம் நகர்ந்தது, சிந்து வெளியில் குடியேறிய மக்கள் செம்புக் காலத்தில் பெரும் பக்குவமடைந்து ஒரு முதிர்ச்சியடைந்த வாழ்க்கை நிலையை அடைந்தனர்.

இப்பாடம் கற்காலத்தில் மனிதர்கள் முதன்முதலாகக் குடியமர்ந்ததில் தொடங்கி, சிந்து நாகரிகத்தின் வீழ்ச்சி வரையிலான இந்திய வரலாற்றின் மீது முழுக் கவனம் செலுத்துகிறது. புதிய கற்காலப் பண்பாட்டையும் விளக்குகிறது.

சான்றுகள்

  • இந்திய வரலாற்றில் கற்கால வாழ்க்கை முதல் சிந்து நாகரிகம் வரையான நெடுங்காலத்தைப் புரிந்துகொள்ள தொல்லியல் சான்றுகளே பெரிதும் உதவுகின்றன.
  • தொல்லியல் ஆய்விடங்கள், நிலவியல் அடுக்குகள், விலங்குகளின் எலும்புகள், படிமங்கள், கற்கருவிகள், எலும்புக்கருவிகள், பாறை ஓவியங்கள், கைவினைப் பொருள்கள் ஆகியவை இச்சான்றுகளாகும். எழுத்துவடிவச் சான்றுகள் இக்காலத்துக்கு இல்லை.
  • ஹரப்பா மக்கள் ஓர் எழுத்துமுறையைப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் அதன் பொருளை இன்றளவும் அறிய முடியவில்லை.
  • கற்கால மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான உறவைப் புரிந்துகொள்ள விலங்கு (fauna), தாவரங்கள் (flora) வடிவிலான சான்றுகள் இன்றியமையாதவை. கருகிய விதைகள், மகரந்தங்கள், கல்லாகிப்போன தாவரங்கள் (பைட்டோலித்) ஆகிய தாவரச் சான்றுகள் கற்கால மக்கள் மேற்கொண்ட வேளாண்மை சார்ந்த அறிவைப் புரிந்துகொள்ள உதவுகின்றன.
  • வரலாற்றுக் காலத்துக்கு முன்பு நடைபெற்ற மனித இடப்பெயர்ச்சிகள் குறித்து அறிந்துகொள்ள அவர்களுடைய மரபணுக்களும் முக்கியமான சான்றுகளாகும்.
  • மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ. (மரபணு) ஆய்வுகள் கற்கால மனிதர்களின் இடப்பெயர்ச்சிகள் குறித்த தகவல்களை வழங்குகின்றன.
  • வரலாற்றுக்கு முந்தைய கால எலும்பிலிருந்து டி.என்.ஏ-வைப் பிரித்தெடுத்து, மனிதக்கூட்டம் பல்வேறு பகுதிகளுக்குப் பரவியது குறித்துப் புரிந்துகொள்ள அறிவியலாளர்கள் முயற்சி செய்துவருகிறார்கள்.
  • மற்றுமொரு முக்கியமான வரலாற்றுச் சான்று மொழி ஆகும். இந்தோ-ஆரிய, திராவிட, ஆஸ்ட்ரோ-ஆசியாட்டிக், திபெத்தோ-பர்மன் ஆகிய மொழிக்குடும்பங்கள் இந்தியாவில் செழித்து வளர்ந்தன.
  • இந்திய வரலாற்றில் நடைபெற்ற மனித இடப்பெயர்ச்சிகளின் பல்வேறு கட்டங்களில் இம்மொழிகள் தோன்று வளர்ந்தன.

வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய இந்தியா

  • எழுத்துமுறை தோன்றுவதற்கு முந்தைய காலகட்டம் வரலாற்றுக்கு முந்தைய காலம் எனப்படுகிறது. கற்காலம் எனவும் அது குறிக்கப்படுகிறது. கற்காலத்தைக் குறித்துப் பேசும்போது இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்க தேசம் ஆகியவை அடங்கிய தென்கிழக்கு ஆசியா முழுவதையும் ஒரே பகுதியாகக் குறிப்பதே பொருந்தும்.
  • மனித இனத்தின் மூதாதையர் முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றி, பின்னர் உலகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர். இவ்வாறு ஆப்பிரிக்காவை விட்டு முதன்முதலாக வெளியே இடம்பெயர்ந்த மனித இனம் ஹோமோ எரக்டஸ் (homo erectus) ஆகும்.
  • இருபதாம் நூற்றாண்டின் இறுதிவரைக்கும், இந்தியாவில் வரலாற்றுக்கு முந்தைய காலம் 10 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் நிலவியிருக்கலாம் எனக் கருதப்பட்டது.
  • ஆனால் அண்மையில் நடைபெற்ற ஆய்வுகளின்படி, வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய மனிதர்கள் இந்தியாவில் 10 இலட்சம் முதல் 20 இலட்சம் வரையான ஆண்டுகளுக்கு முன்பே இருந்தார்கள் எனத் தெரிகிறது.
  • பொதுவாக, எழுத்து தோன்றுவதற்கு முந்தைய காலம் கற்காலம், வெண்கலக்காலம், இரும்புக்காலம் எனப் பிரிக்கப்படும். அம்மக்கள் பயன்படுத்திய பொருள்கள் (எடுத்துக்காட்டாக, சிந்து), நாகரிகம் நிலவியதாகக் கண்டறியப்பட்ட முதல் இடம் (எடுத்துக்காட்டாக, அச்சூலியன் அல்லது ஹரப்பா) ஆகியவற்றின் அடிப்படையிலேயே அப்பண்பாடுகளுக்குப் பெயர்கள் சூட்டப்படுகின்றன.

வரலாற்றில் மிகவும் தொன்மையான காலம் பழங்கற்காலம் (Palaeolithic) எனப்படுகிறது. இது மூன்றாகப் பிரிக்கப்படுகிறது.

  • கீழ்ப்பழங்கற்காலம் (Lower Palaeolithic)
  • இடைப் பழங்கற்காலம் (Middle Palaeolithic)
  • மேல் பழங்கற்காலம் (Upper Palaeolithic)
  • பழங்கற்காலத்துக்குப் பிந்தைய காலம் இடைக்கற்காலம் எனப்படும். இடைக்கற்காலத்துக்கு அடுத்த காலகட்டம் புதிய கற்காலம் ஆகும்.
  • இக்காலத்தில்தான் விலங்குகளையும் தாவரங்களையும் வளர்க்க மனிதர்கள் கற்றுக்கொண்டார்கள். அது உணவு உற்பத்திக்கு வழிவகுத்தது. பாறைப்படிவியல் (Stratigraphy) ஆய்வுகள், காலவரிசை, கற்கருவிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இத்தகைய பண்பாடுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

கீழ்ப்பழங்கற்காலப் பண்பாடு (Lower Palaeolithic Culture)

  • கற்காலத்தின் தொடக்கத்தைச் சேர்ந்த மனிதர்கள் பயன்படுத்திய பொருள்கள் இந்தியத் துணைக்கண்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கிடைத்துள்ளன.
  • கீழ்ப்பழங்கற்கால கட்டத்தின்போது, மனித மூதாதையர்களான ஹோமோ எரக்டஸ் இந்தியாவில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. பழங்கற்காலத்தைச் சேர்ந்த கருவிகள் முதன்முதலில், சென்னை அருகே உள்ள பல்லாவரத்தில் இராபர்ட் புரூஸ் ஃபூட் என்பவரால் 1863இல் கண்டெடுக்கப்பட்டன.
  • தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அவர் விரிவான ஆய்வுகளை மேற்கோண்டபோது , வரலாற்றுக்கு முந்தைய கால நாகரிகம் நிலவிய பல இடங்களைக் கண்டறிந்தார்.
  • அதிலிருந்து கற்கால மனிதர்கள் வாழ்ந்த பல பகுதிகள் இந்தியா முழுவதும் அடையாளம் காணப்பட்டு, அகழாய்வு செய்யப்பட்டன.

காட்டு உயிரினங்களும் பழக்கப்படுத்தப்பட்ட உயிரினங்களும்:

காட்டுத்தாவரங்களும் விலங்குகளும் பறவைகளும் பிற உயிரினங்களும் இயற்கையாக வளர்பவை. தாவரங்களும் விலங்கினங்களும் மனிதர்களால் பெருமளவில் பழக்கப்படுத்தப்படும் போது, அவற்றின் வாழ்க்கைமுறையும் உடலியல் கூறுகளும் மாற்றம் அடைகின்றன. அவற்றின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக, காட்டில் உள்ள தாவரங்களுடன் ஒப்பிடும்போது, பழக்கப்படுத்தப்பட்ட தாவரங்களின் விதைகள் அளவில் சிறியதாக மாறுகின்றன. விலங்குகளைப் பழக்கப்படுத்தும்போது அவை தங்களின் மூர்க்க குணத்தை இழக்கின்றன.

கற்கருவிகள்

  • வரலாற்றுக்கு முந்தைய காலம் குறித்த ஆய்வுத்துறை பெரும்பாலும் கற்கருவிகளையே சார்ந்துள்ளது. கற்கால மனிதரின் வாழிடங்கள் கல்லாலான கருவிகள் கிடைப்பதை அடிப்படையாகக் கொண்டு அடையாளங் காணப்படுகின்றன.
  • மனித மூதாதையர் கருவிகள் செய்யப் பெரிய கற்பாளங்களையும் கூழாங்கற்களையும் தேர்ந்தெடுத்தனர். அவற்றை மற்றொரு உறுதி வாய்ந்த கல்லால் சீவிக் கருவிகளை உருவாக்கினர். இவ்வாறு கற்களைச் செதுக்கிக் கோடரி, சிறுகோடரி, துண்டாக்கும் கருவி, பிளக்கும் கருவி போன்றவை உருவாக்கப்பட்டன.
  • நன்கு சிந்தித்து உருவாக்கப்பட்ட வடிவமைப்பையும் சீரான தோற்றத்தையும் கொண்ட இக்கருவிகள் கற்கால மனிதர்களின் மேம்பட்ட அறிவாற்றலையும் திறனையும் காட்டுகின்றன.
  • வேட்டையாடுவதற்கும் வேட்டையாடப்பட்ட விலங்குகளின் உடலிலிருந்து தோலை உரிப்பதற்கும் இறைச்சியை வெட்டுவதற்கும் எலும்பின் மஜ்ஜையை பிரித்தெடுப்பதற்கும் எலும்புகளை உடைப்பதற்கும் கிழங்குகளை அகழ்ந்தெடுப்பதற்கும் உணவை பதப்படுத்துவதற்கும் இக்கற்கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
  • பழங்கற்காலக் கற்கருவிகளின் ஆக்கம், அதற்கான உழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அக்காலப்பண்பாடு தொடக்க கால அச்சூலியன், இடைக்கால அச்சூலியன், பிற்கால அச்சூலியன் என மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
  • பன்முகம் கொண்ட கோளவடிவம் கொண்ட பொருள்கள், கோடரி, வெட்டுக்கத்திகள், செதுக்கும் கருவிகள் ஆகியவை தொடக்க கால அச்சூலியன் மரபில் அடங்கும்.
  • மேற்குத்தொடர்ச்சி மலை, கடற்கரைப் பகுதிகள், வடகிழக்கு இந்தியா ஆகிய இடங்களில் அச்சூலிய மரபுக்கான அடையாளங்கள் காணப்படவில்லை. பெருமழை இதற்குக் காரணமாக இருக்கலாம்.
  • பொருத்தமற்ற சூழல், மூலப்பொருள்களின் பற்றாக்குறை ஆகியவை மக்களின் குடியேற்றத்தைத் தடுத்திருக்கலாம். ஒருவேளை வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த மக்களுக்கு இப்பகுதிகளில் குடியேற வேண்டிய தேவை இல்லாமல் போயிருக்கலாம்.
  • இம்மக்கள் வாழ்ந்த இடங்கள் அதிக எண்ணிக்கையில் மத்திய இந்தியாவிலும் இந்தியாவின் தென்கிழக்குப் பகுதியிலும் (சென்னைக்கு அருகில்) கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகள் அதிகளவில் மழையைப் பெறுவதால், பசுமை மாறாமலும் அதிக வளங்களுடனும் உள்ளன.

அச்சூலியன் மரபும் சோகனியன் மரபு

ஆய்வின் அடிப்படையில் பழங்கற்கால மக்களின் தொடக்க காலப் பண்பாடு அவர்கள் பயன்படுத்திய கற்கருவிகளின் அடிப்படையில் இரு மரபுகளாகப் பிரிக்கப்படுகிறது. கைக்கோடரி வகைக் கருவிகளைக் கொண்ட மரபு அச்சூலியன் (Acheulian) என்றும் கூழாங்கல்லைச் செதுக்கி உருவாக்கப்படும் கருவிகளைக் கொண்ட மரபு சோகனியன் (Sohanian) என்றும் அழைக்கப்படுகிறது. அச்சூலியன் மரபு பெருமளவில் கோடாரிகளையும் வெட்டுக்கத்திகளையும் கொண்டது. சோகனிய மரபு துண்டாக்கும் கருவிகளையும் அதைச் சார்ந்த வேலைகளுக்கான கருவிகளையும் மட்டுமே கொண்டது. இன்றைய பாகிஸ்தானில் உள்ள சோகன் ஆற்றின் வடிநீர்ப்பகுதியில் நிலவிய மரபு என்பதால், இது சோகனிய மரபு எனப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற ஆய்வுகளின்போது இதே பகுதியில் அச்சூலியன் மரபு சார்ந்த கருவிகளும் கிடைத்தன. எனவே தனித்தன்மை வாய்ந்த சோகனிய மரபு என்ற ஒன்று இருந்ததாகக் கூற இயலாது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

பரவல்

பழைய கற்காலத்தின் தொடக்கத்தைச் சேர்ந்த கருவிகள் கங்கைச் சமவெளி, தமிழ்நாட்டின் தென்பகுதி, மேற்குத்தொடர்ச்சி மலையின் குன்றுப்பகுதிகள் ஆகியவற்றைத் தவிர்த்து, இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன. சென்னைக்கு அருகில் உள்ள அதிரம்பாக்கம், பல்லாவரம், குடியம், கர்நாடகாவின் ஹன்ஸ்கி சமவெளியில் உள்ள இசம்பூர், மத்தியப்பிரதேசத்தில் உள்ள பெம்பெட்கா ஆகியவை அச்சூலிய கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ள வேறு சில இடங்களாகும்.

காலவரிசை

இந்தியாவில் கீழ்ப் பழங்கற்காலப் பண்பாடு இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகத் தொடங்கியிருக்க வேண்டுமென அண்மைக்கால ஆய்வுகள் மதிப்பிட்டுள்ளன. இப்பண்பாடு 60000 ஆண்டுகள் முன்பு வரை தொடர்ந்தது.

ஹோமினின் மற்றும் விலங்குகளின் புதைபடிவங்கள்

  • தற்கால மனிதனுக்கு நெருக்கமான தோற்றத்தைக் கொண்டிருந்த மனித மூதாதையர் ஹோமினின் (Hominin) என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் வாழ்வதற்கான அடையாளங்கள் ஆப்பிரிக்காவில் அதிகளவில் காணப்படுகின்றன.

  • ஆனால் இந்தியாவில் அவை அரிதாகவே உள்ளன. அதிரம்பாக்கத்தில் ஹோமினின் வாழ்ந்ததற்கான அடையாளமாகக் கொள்ளத்தக்க புதைபடிவத்தின் ஒரு பகுதியை இராபர்ட் ப்ரூஸ் ஃபூட் கண்டெடுத்ததாகச் சொல்லப்படுகிறது.
  • ஆனால் அந்தப் புதைபடிவம் தற்போது எங்கு இருக்கிறது என்று அறிய முடியவில்லை. இந்தியாவில் நன்கு அறியப்பட்ட ஹோமினின் புதைபடிவம் மத்தியப்பிரதேசத்திலுள்ள ஹோசங்காபாத் அருகேயுள்ள ஹத்னோராவில் கண்டுபிடிக்கப்பட்டதாகும்.
  • அது ஒரு மண்டையோட்டின் மேல்பகுதி. இதை ‘நர்மதை மனிதன்’ என்று தொல்லியல் ஆய்வாளர்கல் குறிப்பிடுகிறார்கள். ஆர்க்கைக் ஹோமோ சேப்பியன்ஸ் என்னும் மனித இனம் வாழ்ந்ததற்கான அடையாளமாக இது கருதப்படுகிறது. மனித மூதாதையரின் புதைபடிவகள் என்ற வகையில் தற்போது இந்தியாவில் இருக்கிற ஒரே புதைபடிவம் இது மட்டுமே.
  • கற்காலத்தில் மக்கள் வாழ்ந்த பழைமைச் சூழலை நாம் புரிந்துகொள்ள விலங்குகளின் புதைபடிவங்கள் பயன்படுகின்றன. நர்மதை சமவெளியில் மிகப்பெரிய தந்தங்களையுடைய வரலாற்றுக்கு முந்தைய காலகட்ட யானை , எலிபஸ் நமடிகஸ் (Elephus namadicus), வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த மற்றொரு மிகப் பெரிய யானை வகையான ஸ்டெகோடோன்கனேசா (syegodon ganesa), கட்டுமாடுகள் வகையான போஸ் நமடிகஸ் (Bos namadicus) , குதிரை வடிவம் கொண்ட குதிரையான எக்கஸ் நமடிகஸ் (Equus namadicus) ஆகிய விலங்குகளின் புதைபடிவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • குதிரை வகை விலங்கு (எக்கஸ்)களின் பற்கள், நீல்காவ் மற்றும் நீர் எருமைக்கான சான்றுகள், சில விலங்குகளின் குளம்புத்தடங்கள் ஆகியவை அதிரம்பாக்கத்தில் காணப்பட்டன. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் திறந்த , ஈரப்பதம் வாய்ந்த நிலப்பரப்பு சென்னைக்கு அருகில் இருந்ததை இவை உணர்த்துகின்றன.
  • எக்கஸ் – குதிரை, கழுதை, வரிக்குதிரை ஆகிய விலங்குகளை உள்ளடக்கியப் பேரினம்.

வாழ்க்கைமுறை

  • கீழ்ப்பழங்கற்காலப் பண்பாட்டைச் சேர்ந்த மக்கள் விலங்குகளை வேட்டையாடியும் கிழங்குகள், கொட்டைகள், பழங்கள் ஆகியவற்றைச் சேகரித்தும் வாழ்ந்தனர்.
  • வேட்டை விலங்குகளால் வேட்டையாடப்பட்ட விலங்குகளின் இறைச்சியையும் உண்டனர். திறந்த வெளியிலும் ஆற்றுச் சமவெளிகளிலும் குகைகளிலும் வசித்ததை மத்தியப்பிரதேசத்தில் உள்ள பிம்பெட்கா, சென்னைக்கு அருகில் உள்ள குடியம் ஆகிய இடங்களில் உள்ள சான்றுகளால் அறிந்துகொள்ளலாம்.
  • ஹோமோ எரக்டஸ் இனத்தைச் சேர்ந்த மனிதர்கள் தற்கால மனிதர்களான ஹோமோ சேப்பியன்ஸ்சைப் போல மேம்பட்ட மொழியைக் கொண்டிருக்கவில்லை.
  • அவர்கள் சில ஒலிகள் அல்லது சொற்கள் மூலம் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தியிருக்கலாம். சைகைகளைச் சார்ந்த மொழியையும் பயன்படுத்தியிருக்கலாம்.
  • கருவிகளைச் செய்வதற்குச் சரியான கல்லைத் தேர்வு செய்வதற்கான அறிவு அவர்களுக்கு இருந்தது. பாறைகளைச் செதுக்கவும் அவற்றைக் கருவிகளாக வடிவமைக்கவும் சுத்தியல் போன்ற கற்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

இடைப் பழங்கற்காலம் (Middle Palaeolithic Culture)

  • இன்றிலிருந்து 4,00,000 ஆண்டுகளுக்கு முன்பான காலப்பகுதியில் கற்கள் தொடர்பான தொழில்நுட்பத்தில் மாற்றங்கள் ஏற்பட்டன. மனித மூதாதையர்களிடத்தும் பிரிவுகள் தோன்றின.
  • இக்காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் ஹோமோ எரக்டஸ் வகையினர் ஆவர். மனிதர்கள் தற்போது கொண்டுள்ள உடலமைப்புக் கூறுகளுடன் ஏறத்தாழ மூன்று இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியதாகக் கருதப்படுகிறது.
  • இந்தியாவில் இடைப்பழங் கற்காலக்கட்டத்தை நெவாசா என்னுமிடத்தில் பிரவாரா ஆற்றங்கரையில் ஹெச்.டி.சங்கலியா என்ற தொல்லியலாளர் முதலில் அடையாளம் கண்டார். இதையடுத்து, இடைப்பழங்கற்காலம் நிலவிய பல இடங்களும் அடையாளம் காணப்பட்டன.
  • இக்காலகட்ட மனிதர்கள் வாழ்ந்ததாக அறியப்படும் அதிரம்பாக்கத்தின் காலம் இன்றிலிருந்து 3,85,000 – 1,72,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்டது என அண்மையில் கணிக்கப்பட்டுள்ளது.
  • ஆப்பிரிக்காவில் நிலவிய இடைப் பழங்கற்காலப் பண்பாட்டைப் போலவே இந்தியவின் இடைப்பழங் கற்காலக்கட்டமும் பழமை வாய்ந்ததாக இருக்கலாம்.

கருவி வகைகளும் தொழிற்கூடங்களும்

  • கோடரிகள், பிளக்கும் கருவிகள், துண்டாக்கும் கருவிகள், சுரண்டும் கருவிகள், துளையிடும் கருவிகள், எறிதலுக்கு உட்படும் பொருள்கள் , அரம் போன்ற கருவி , செதுக்குவதற்கான கத்தி ஆகியவை இக்காலக்கட்டத்தில் பயன்படுத்தப்பட்டன.
  • சுரண்டும் கருவி, துளையிடும் கருவி போன்றவற்றை அதிகளவில் சார்ந்திருந்ததால் , இடைப்பழங்கற்கால நாகரிகம் செதுக்கும் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருந்தது எனலாம். மரக்கட்டை, விலங்குத் தோல் ஆகியவற்றைக் கையாளுவதற்குச் சுரண்டும் கருவிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டன.

ஒரு மேல் பழங்கற்கால வழிபாட்டுத்தலம்

மேல் பழங்கற்காலத்தைச் சேர்ந்த ஒரு வழிபாட்டுத்தலமாக இருந்திருக்கலாம் என கருதத்தகுந்த ஒரு சிறு கட்டுமானம் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பாகோர் என்னுமிடத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது. . செதுக்கப்படாத கற்களால் வட்ட வடிவில் சூழப்பட்ட ஒரு மணற்பாறையின் பாளம் இங்கு காணப்படுகிறது. இது தற்கால வழிபாட்டுத்தலங்களை ஒத்திருக்கிறது. இந்தியாவில் வழிபாட்டுத்தலங்களுக்கான தேடலில் கிடைத்த மிகப் பழமையான சான்று இதுதான்.

காலவரிசை

இந்தியாவில் இடைப்பழங்கற்காலப் பண்பாடு பொ.ஆ.மு. 3,85,000 – 40,000க்கு உட்பட்ட காலகட்டத்தில் நிலவியதாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவில் இடைபழங்கற்காலம் ஹோமோ சேபியன்ஸ்களோடு தொடர்புபடுத்தப்படுகிறது. ஐரோப்பாவில் இது நியாண்டர்தால் வகையினரோடு தொடர்புபடுத்தப்படுகிறது. இவ்வகையினரின் புதைபடிவ எச்சங்கள் இந்தியாவில் காணப்படவில்லை.

பரவல்

இடைப்பழங்கற்கால நாகரிகம் பரவியிருந்த இடங்கள் நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா, யமுனை உள்ளிட்ட ஆறுகளின் சமவெளிகளில் காணப்படுகின்றன.

வாழ்க்கைமுறையும் முதன்மையான பண்புகளும்

இடைப்பழங்கற்கால மனிதர்கள் திறந்தவெளியிலும் குகையிலும் பாறைப்படுகைகளிலும் வசித்தார்கள். இவர்கள் வேட்டையாடுபவர்களாகவும் உணவைச் சேகரிப்பவர்களாகவும் இருந்தார்கள். இந்தியாவைச் சேர்ந்த இடைப்பழங் கற்காலப் பண்பாட்டின் முதன்மையான பண்புகள் கீழ்வருமாறு:

  • கருவிகள் சிறியதாயின.
  • ஏனைய கருவிகளோடு ஒப்பிடுகையில் கோடாரியைப் பயன்படுத்தும் பழக்கம் குறைந்தது.
  • கற்கருவிகள் உற்பத்தியில் மூலக்கல்லை தயார் செய்யும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது.
  • செர்ட், ஜாஸ்பர், கால்சிடெனி, குவார்ட்ஸ் ஆகிய கற்களை மூலப்பொருள்களாகப் பயன்படுத்துதல்.

மேல்பழங்கற்காலப் பண்பாடு (Upper Palaeolithic Culture)

  • இடைப்பழங்கற்காலத்தைத் தொடர்ந்து வந்த பண்பாட்டுப்படிநிலை மேல்பழங்கற்காலப் பண்பாடு எனப்படுகிறது. கருவிகளுக்கான தொழில்நுட்பத்தில் புதுமையையும் மனிதர்களின் அறிவாற்றல் திறன்களில் மேம்பட்ட தன்மையையும் இக்காலகட்டத்தில் காண முடிகிறது.
  • ஏறத்தாழ 3 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் ஆப்பிரிக்காவின் சகாரா பாலைவனப்பகுதிக்கு அருகே தோன்றிய நவீன மனிதர்கள் ஏறத்தாழ 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆசியாவின் பல்வேறு பகுதிகளுக்குப் பரவினர் அவர்கள் முந்தைய மக்கள் கூட்டத்தாரை விரட்டிவிட்டு அவர்கள் வசித்த இடங்களில் குடியேறியிருக்கலாம்.
  • இந்தப் புதிய குழுக்கள் இந்தியாவின் மேல்பழங்கற்காலப் பண்பாட்டுக்குக் காரணமாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு.

கற்கருவிகளும் தொழிற்கூடங்களும்

  • இக்காலகட்டத்தைச் சேர்ந்த கற்கருவிகள் கத்தி, வாள் போல வெட்டுவாய் கொண்டவையாகவும் எலும்பால் ஆனவையாகவும் அமைந்திருந்தன.
  • மேல் பழங்கற்காலத்தில் சிறுகற்களில் செய்யப்பட்ட கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றை உருவாக்க சிலிக்கான் செறிந்த மூலப்பொருள்கள் வெவ்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டன.
  • எலும்பினாலான கருவிகளும் விலங்குகளின் எஞ்சிய பகுதிகளும் ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள கர்நூல் குகைகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

காலவரிசை

மேல் பழங்கற்காலத்துக்கான சான்றுகள் இந்தியாவின் பல பகுதிகள் கிடைத்துள்ளன. ஏறத்தாழ இன்றைக்கு முன் 40,000 லிருந்து 10,000 ஆண்டிற்கு உட்பட்ட காலத்தில் மேல் பழங்கற்காலப் பண்பாடு நிலவியிருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது.

பரவல்

  • இம்மக்கள் திறந்தவெளியிலும் குகைகளிலும் வசித்தார்கள். கர்நாடகாவில் உள்ள மெரல்பாவி, தெலுங்கானாவில் உள்ள கர்நூல் குகைகள், கோதாவரிக்காணி, மத்தியப்பிரதேசத்தில் உள்ள சோன் பள்ளத்தாக்கில் உள்ள பாகோர் -1, பாகோர் -3, மகாராஷ்டிராவில் உள்ள பாட்னே ஆகியவை இந்தியாவில் மேல்பழங்கற்காலம் நிலவிய இடங்களாகும்.
  • சிறு கற்களாலான கருவிகளும் நவீன மனிதர்களுக்கு நெருக்கமான தோற்றத்தைக் கொண்டிருந்த ஹோமினின்களின் புதைபடிவங்களும் இலங்கையில் கிடைத்துள்ளன.
  • மெல்லிய கீறல்கள் மூலம் படங்கள் வரையப்பட்ட தீக்கோழியின் முட்டை ஓடுகளும் சங்கு கொண்டு செய்யப்பட்ட மணிகளும் ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள ஜீவாலாபுரம், மகாராஷ்டிராவில் உள்ள பாட்னே, இலங்கையில் உள்ள பாடடோம்பா-லெனா. ஃபாஹியான் குகை ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தீக்கோழி முட்டை ஓடுகள்

இந்தியாவில் வரலாற்றுக்கு முந்தைய காலப் பண்பாடு நிலவிய இடங்களில் தீக்கோழிகள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இப்பறவையின் முட்டை ஓடு மணிகள் செய்யப் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாட்னேயில் கிடைத்த தீக்கோழி முட்டை ஓட்டின் காலம் இன்றைக்கு முன் 25,000 ஆண்டுகள் எனக் கணிக்கப்படுகிறது. பெம்பெட்கா, பாட்னே ஆகிய இடங்களிலும் தீக்கோழி முட்டை ஓடுகள் கிடைத்துள்ளன.

வாழ்க்கை முறைகளும் முக்கியப் பண்புகளும்

மேல் பழங்கற்கால மனிதர்கள் கலை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட்டதற்கான சான்றுகளாகச் சில ஓவியங்கள் கிடைத்திருக்கின்றன. மணிகளும் அணிகலன்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கல்லில் வெட்டுக்கருவிகள் செய்யும் தொழிற்கூடங்கள் இக்காலகட்டத்தில் வளர்ச்சி பெற்றன. வரையப்பட்ட விதம் தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் பிம்பெட்காவைச் சேர்ந்த சில பச்சை நிற ஓவியங்கள் மேல் பழங்கற்காலத்தைச் சேர்ந்தவையாக கணிக்கப்படுகின்றன.

இடைக்கற்காலப் பண்பாடு (Mesolithic Culture)

  • இந்தியாவில் இடைக்கற்காலப் பண்பாட்டோடு தொடர்புடைய இடங்கள் ஒரு சில பகுதிகள் நீங்கலாக இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. கடற்கரைப் பகுதி, மலை, மணற்பாங்கான இடம், வடிநீர்ப் பகுதி, வனப்பகுதி, ஏரிப்பகுதி, பாறை மறைவிடம், மலை சார்ந்த பகுதி, கழிமுகப்பகுதி என எந்த வேறுபாடும் இல்லாமல் அனைத்துத் திணைசார் மண்டலங்களிலும் அவை காணப்படுகின்றன.
  • இந்தியாவில் பயிஸ்ரா (பிகார்), லங்னஜ் (குஜராத்), பாகர் II, சோபனி மண்டோ, சாராய் நகர் ராஜ் மகாதகா, தம்தமா (இவை அனைத்தும் உத்திரப்பிரதேசத்தில் உள்ளன), சனகனகல்லு (ஆந்திரம்), கிப்பன ஹள்ளி (கர்நாடகம்) ஆகிய இடங்கள் இடைக் கற்காலப் பண்பாட்டோடு தொடர்புடையவனவாகும்.
  • மும்பையின் கடற்கரைப் பகுதிகள், தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தின் கிழக்குப் பகுதியிலுள்ள தேரிக் குன்றுகள் (செம்மணற்குன்றுகள்) , விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் நுண்கற்காலச் சான்றுகள் கிடைக்கின்றன.

தேரி

தேரிகள் என்பன மணற்குன்றுகளால் உருவாக்கப்படும் கடற்கரைப் பகுதிகளாகும். இம்மண் வகை புத்துயிரூழியின் இரண்டாம் கட்டத்தில் உருவாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

பருவகாலம்

  • பனியுகத்திற்குப் பின்னர், உலகம் வெப்பமடையத் துவங்கியதிலிருந்து, மனிதர்கள் அடிக்கடி இடம் பெயர்பவர்களாகி, பல்வேறு சூழல்களைக் கொண்ட பகுதிகளில் குடியேறினர். பருவகாலச் சுழற்சி முறை ஏற்கெனவே தோன்றிவிட்டது.
  • சில பகுதிகளில் மழை மிக அதிகமாக இருந்தது. மேற்கு ராஜஸ்தானிலுள்ள தித்வானா என்னும் பகுதியில் இன்றைக்கு முன் 10,000 – 3500க்கு இடைப்பட்ட ஆண்டுகள் நன்னீர் ஏரிகள் இருந்ததாக அறியப்பட்டுள்ளது. இக்காலப் பகுதியைச் சேர்ந்த விலங்குகளின் எலும்புகள், இடைக் கற்காலத்தில் வறண்ட, இலையுதிர் காடுகள் இருந்ததைக் குறிக்கின்றன.

காலவரிசை

  • உலகளவில் இடைக்கற்காலப் பண்பாட்டின் காலம் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. சில குறிப்பிட்ட பகுதிகளில் அது வேளாண்மை காலத்திற்கு முன்பானது என்று சொல்லப்படுகிறது.
  • இடைக்கற்காலப் பண்பாடு கிழக்கு மத்தியத் தரைக்கடல் பகுதியான லெவண்ட்டில் பொ.ஆ.மு. 20,000இலிருந்து 9,500க்குள் நிலவியதாகக் கணிக்கப்படுகிறது. இந்தியாவில் இப்பண்பாடு ஏறத்தாழ பொ.ஆ.மு. 10,000இல் தோன்றியது. கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் இது பொ.ஆ.மு. 1,000 வரை , அதாவது இரும்புக்காலத்தின் தொடக்கம் வரைக்கும் தொடர்ந்தது. இலங்கையில் நுண் கற்கருவிகள் ஏறத்தாழ கடந்த 28,500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றின.

பொருளாதாரம்

  • காட்டு விலங்குகளை வேட்டையாடல், தாவர உணவுகளைச் சேகரித்தல், மீன் பிடித்தல் ஆகியனவே இக்கால மக்களின் முக்கியத்தொழிலாக இருந்தன. இடைக்கற்காலப் பண்பாட்டின் தொடக்க நிலைகளில் வேளாண்மை செய்யப்படவில்லை.
  • ஆனால் இப்பண்பாட்டின் இறுதிப்பகுதியில் மனிதர்கள் விலங்குகளைப் பழக்கப்படுத்தி, புதிய கற்கால வாழ்க்கை முறைக்கு வழிவகுத்தனர். மத்திய இந்தியப் பகுதியில் உள்ள பாறை ஓவியங்களில் வேட்டையாடுதல், கண்ணிவைத்து விலங்குகளைப் பிடித்தல், மீன் பிடித்தல், தாவர உணவுகளைச் சேகரித்தல் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
  • கிடைக்கப்பெற்றுள்ள விலங்குகளின் எச்சங்கள், புதைவடிவச் சான்றுகள் ஆகியன மூலம் இக்காலப் பகுதியைச் சேர்ந்த மக்கள் காட்டெருது, எருமை, சதுப்புநில மான், முள்ளம்பன்றி, சாம்பார் மான், ஒருவகை அழகிய மான், வராக மான், சிறுகொம்புடைய நீல்கைமான், குள்ளநரி , ஆமை, மீன், காட்டு முயல் ,உடும்பு ஆகியவற்றை வேட்டையாடினர் என அறிய முடிகிறது.
  • யானை, காண்டாமிருகம் போன்ற விலங்குகளின் எலும்புகளும் கிடைத்துள்ளன. அவர்கள் ஈட்டி, வில், அம்பு, கண்ணிகள் ஆகியவற்றை பயன்படுத்தியுள்ளனர்.
  • பிம்பெட்கா என்னுமிட்த்திலுள்ள ஓவியம் ஆண்டுகளும் பெண்களும் இணைந்து இது போன்ற விலங்கிகளை வேட்டையாடுவதைக் காட்சிப்படுத்துகிறது.
  • இக்கால மக்கள் நெருப்பைப் பயன்படுத்தினர். உணவை நெருப்பில் சுட்டும் உண்டிருக்கலாம். வெள்ளாடு, செம்மறியாடு , நாய் , பன்றி ஆகியவற்றின் எலும்புகள் மத்திய பிரதேசத்திலுள்ள கானிவால், லோத்கேஸ்வர், ரத்தன்பூர், ஆதம்கார், பிம்பெட்கா ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. கானிவாலில் ஒட்டக எலும்புகளும் கிடைத்துள்ளன.

தற்காலிக வசிப்பிடங்களும் வீடுகளும்

  • இடம்பெயர்ந்துகொண்டே இருப்பது இடைக்கற்கால மக்களின் முக்கியமான பண்பாக இருந்தது. அவர்கள் உணவுக்காக விலங்குகளையும் தாவரங்களையும் தேடி இடம்பெயர்ந்தார்கள். மக்கள் தற்காலிகமான குடிசைகளை உருவாக்கியதுடன் , குகைகளிலும் பாறைக்குடைவுகளிலும் தங்கினார்கள்.
  • தாங்குதூணுக்கான குழியுடன் கூடிய வட்ட வடிவக் குடிசைகள், நாணல் பதிக்கப்பட்ட தடயங்களுடன் கூடிய சுட்ட மண் திண்டுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • பெரும்பாலான குகைகளிலும் பாறை மறைவிடங்களிலும் ஓவியங்கள் காணப்படுகின்றன. பாறை ஓவியங்களில் வட்ட வடிவக் குடிசை வரையப்பட்டுள்ளது.
  • தற்காலிகமான குடிசைகள் விரைவில் அழியக்கூடிய பொருள்களால் கட்டப்பட்டன. முட்டை வடிவ வீடுகள், வட்ட வடிவ வீடுகள் (சுவர்கள் பிரம்பால் வேயப்பட்டு, அவற்றின் மீது மண் பூசிய வீடுகளாக இவை இருந்திருக்க வாய்ப்பு உள்ளது) ஆகியவற்றுக்கான அடையாளங்கள் உத்தரப்பிரதேசத்தில் உள்ள சோப்பானி மண்டோ, தம்தமா, ராஜஸ்தானில் உள்ள பாகோர், தில்வாரா ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இறந்தோரைப் புதைத்தல்

இடைக்கற்கால மக்கள் இறந்தோரைப் புதைத்தனர். இது அவர்களின் நம்பிக்கைகளையும் சம மனிதர்கள் குறித்த சிந்தனைகளையும் நமக்கு உணர்த்துகீறது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள மகாதகா, தம்தமா, சாராய் நகர் ராய் ஆகிய இடங்களில் மண்டை ஓடுகள் கிடைத்துள்ளன. ஓர் ஆணும் பெண்ணும் ஒன்றாகப் புதைக்கப்பட்டிருந்ததற்கான அடையாளம் மகாதகாவில் கிடைத்துள்ளது. ஒரு புதைகுழியில் தந்தத்தாலான பதக்கம் காணப்பட்டது.

கலை

  • கலை என்பது மனித வாழ்க்கையோடு ஒருங்கிணைந்த ஒருபகுதி. பழங்கால மனிதரின் கலை வெளிப்பாடுகள் குறித்த சான்றுகள் ஐரோப்பாவில் பெருமளவில் கிடைத்தாலும், இந்தியாவில் மிகச் சில இடங்களில்தான் கிடைத்துள்ளன.
  • வடிவியல் வேலைப்பாடுகளுடன் கூடிய படிகக்கல் ராஜஸ்தானில் உள்ள சந்திராவதியில் கிடைத்துள்ளது. எலும்பில் செய்யப்பட்ட பொருள்கள் பிம்பட்காவில் காணப்படுகின்றன.
  • வடிவியல் வேலைப்பாடுகளுடன் கூடிய மனிதப்பல்லும் கிடைத்துள்ளது. மத்தியப்பிரதேசத்திலும் மத்திய இந்தியாவிலும் உள்ள பாரைக்குடைவுகளில் ஓவியங்களைக் காண முடிகிறது. மக்கள் வேட்டையாடுவதிலும் கண்ணி வைத்து விலங்குகளைச் சிக்க வைப்பதிலும் மீன் பிடிப்பதிலும் நடனமாடுவதிலும் ஈடுபடுவதை ஓவியங்கள் சித்தரிக்கின்றன.
  • போபால் அருகேயுள்ள பிம்பட்கா, மத்தியப்பிரதேசத்தில் உள்ள தெற்கு மிர்சாபூர் ஆகியவை இத்தகைய சான்றுகள் கிடைக்கும் இடங்களாகும். இரும்பு செறிந்த ஹேமடைட் கல் தேய்க்கப்பட்டதற்கான வழவழப்புத்தன்மையுடன் காணக்கிடைக்கிறது. மக்கள் பூக்களாலும் இலைகளாலும் தங்களை அலங்கரித்துக்கொண்டார்கள்.

வரலாற்றுக்காலத்தைச் சேர்ந்த வேட்டையாடிகள் – சேகரிப்பாளர்கள்

  • நுண்கற்கருவிகளால் வேட்டையாடியும் உணவைச் சேகரித்தும் வாழ்ந்த மனிதர்கள் பிற்காலத்திலும், அதாவது புதிய கற்காலம், இரும்புக்காலம், வரலாற்றுக் காலத்தின் வளர்ச்சிக்குப் பிறகும்கூட அப்படியே தங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்தார்கள்.
  • நகரங்களில் வாழ்ந்த மக்கள் அதிக செல்வத்தை ஈட்டியபோது, இம்மக்கள் விளிம்பு நிலைச் சமூகங்களின் ஒரு பகுதியாக ஆகியிருக்கலாம். இன்றைக்கும் தொலைதூரங்களில் உள்ள காடுகளில் வசிக்கும் மக்களையும் அந்தமான் போன்ற பகுதிகளில் வசிப்பவர்களையும் வேட்டையாடுதல் – சேகரித்தல் வாழ்க்கைமுறையைத் தேர்வு செய்த அத்தகைய சமூகத்தினராகவே நாம் கருதலாம்.
  • 19ஆம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டிலும் அத்தகைய பல குழுக்கள் வாழ்ந்ததாக எட்கர் தர்ஸ்டன் எழுதிய “தென்னிந்தியாவின் சாதிகளும் பழங்குடிகளும்” என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • அவர்களை நாகரிக முதிர்ச்சியற்றவர்களாகக் கருதுவது தவறு. மாறாக, வேட்டையாடுதல் –உணவைச் சேகரித்தல் என்னும் வாழ்க்கைமுறையைத் தேர்வு செய்வதவர்களாகவே அவர்களை நாம் கருத வேண்டும்.
  • சிந்து நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது தமிழ்நாட்டில் நுண்கற்கருவிகளைப் பயன்படுத்தும் வேட்டையாடி – சேகரிப்பாளர்கள் வாழ்ந்தார்கள். புதிய கற்காலத்தில் வேளாண்மை செய்வதும் கால்நடைகளை மேய்ப்பதுமாக இருந்த மக்கள் ஆந்திரா-கர்நாடகா பகுதியில் வசித்தார்கள்.

இடைக்கற்காலப் பண்பாட்டின் சிறப்பியல்புகள்

  • இடைக்கற்காலம் மக்கள் ஓரளவு நிரந்தர மற்றும் தற்காலிகக் குடியிருப்புகளில் வசித்தனர்.
  • குகைகளிலும் திறந்த வெளிகளிலும் வசித்தார்கள்.
  • இறந்தோரைப் புதைத்தார்கள்.
  • அவர்களுக்குக் கலைத்திறன் இருந்திருக்கிறது.
  • விரிவான புவியியல் பகுதிகளில் அவர்கள் பரவியிருந்தனர்.
  • இக்காலகட்டத்திலிருந்து இந்தியாவின் பல பகுதிகளில் பண்பாட்டுத் தொடர்ச்சியைக் காண முடிகிறது.
  • அவர்களின் நுண்கற்கருவிகள் சிறிய விலங்குகளையும், பறவைகளையும் வேட்டையாட உதவின.

தொடக்கநிலைப் புதிய கற்காலப் பண்பாடுகளும் (Early Neolithic Cultures) வேளாண்மையின் தொடக்கமும்

  • வேளாண்மை, விலங்குகளைப் பழக்கப்படுத்துதல் ஆகியவற்றின் தொடக்கமாக புதிய கற்காலம் அமைந்தது. இந்திய வரலாற்றில் இது ஒரு முக்கியமான கட்டமாகும்.
  • புதிய கற்காலப் பண்பாட்டின் பழமையான சான்றுகள் எகிப்தின் செழுமைப்பிறப்பகுதி, மெசபடோமியா, சிந்துப்பகுதி, கங்கைப் பள்ளத்தாக்கு, சீனா ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
  • ஏறத்தாழ பொ.ஆ.மு. 10,000 – 5,000 க்கு இடைப்பட்ட காலத்தில் இவ்விடங்களில் வேளாண்மை தோன்றி, பல பண்பாட்டு வளர்ச்சிகளுக்கு வழிவகுத்தது.
  • தாவரங்களையும் விலங்குகளையும் பழக்கப்படுத்தியதன் மூலமாக உணவு தானியங்கள், கால்நடைத் தீவனங்கள் ஆகியவற்றின் உற்பத்தியும் விநியோகமும் அளவில் அதிகரித்தன.
  • ஆறுகளின் மூலம் படியும் செழிப்பான மண் வேளாண்மையை மேம்படுத்தி, படிப்படியாக தானிய உற்பத்தியில் உபரியின் அளவை அதிகரித்தது. பழம்பெரும் நாகரிகங்களின் தோற்றத்துக்கு உபரி உணவு உற்பத்தி மிக முக்கியமான காரணமாகும்.
  • பெரிய கிராமங்கள் தோன்றின. மட்பாண்டங்கள் செய்யும் தொழில் வளர்ந்தது. நிரந்தர இருப்பிடங்கள் கட்டப்பட்டன. எனவே, இக்காலத்தின் பண்பாட்டு வளர்ச்சிகள் மொத்தமாக “புதிய கற்காலப் புரட்சி” எனப்படுகின்றன.
  • இந்தியாவின் புதிய கற்காலப் பண்பாடு வெவ்வேறு வட்டாரப் பண்பாடுகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை வெவ்வேறு காலகட்டங்களில் வளர்ந்தன. இந்தியாவின் வடமேற்குப்பகுதியிலும் பாகிஸ்தானிலும் தொடக்க காலத்திலேயே தோன்றின.
  • வடகிழக்கு இந்தியாவில் புதிய கற்காலப்பண்பாடுகள் மிகவும் பிந்தைய காலத்திலேயே, அதாவது, ஏறத்தாழ தொடக்க வரலாற்றுக் காலத்தில்தான் தோன்றின.

புதிய கற்காலப் பண்பாடு (Neolithic Culture)

வடமேற்கு இந்தியா

  • மனிதர்கள் தாவரங்களையும் விலங்குகளையும் பழக்கப்படுத்தியதற்கான சான்றுகளைக் கொண்டிருப்பதில் வடமேற்கு இந்தியாவின் புதிய கற்காலப் பண்பாடு மிகப் பழமையானதாகும்.
  • மெஹர்கார், ரானா குண்டாய், சாராய் கால, ஜலில்பூர் ஆகியவை புதிய கற்காலப் பண்பாடு நிலவிய இடங்களாகும். இவ்விடங்கள் தற்போது பாகிஸ்தானில் உள்ளன.
  • ஏறத்தாழ பொ.ஆ.மு. 7000ஐச் சார்ந்ததாகக் கணிக்கத்தகுந்த தொடக்க கற்காலப் பண்பாட்டுக்கான சான்றுகள் மெஹர்காரில் கிடைத்துள்ளன. கோதுமையும் பார்லியும் பயிரிடப்பட்டன.
  • செம்மறியாடு, வெள்ளாடு, கால்நடைகள் ஆகியவை வளர்க்கப்பட்டன. இப்பண்பாடு சிந்து நாகரிகத்துக்கு முந்தையதாகும்.
  • மெஹர்காரில் நிலவிய புதிய கற்காலப் பண்பாட்டின் முதல் பண்பாட்டுக் கலகம் ஏறத்தாழ பொ.ஆ.மு. 7000-5500ஆகக் கணிக்கப்பட்டுள்ளது. இப்பண்பாட்டைச் சேர்ந்தவர்கள் மட்பாண்டங்களைப் பயன்படுத்தவில்லை. அறு வரிசை பார்லி, எம்மர் கோதுமை, எய்ன்கான் கோதுமை, இலந்தை, பேரீச்சை ஆகியவற்றைப் பயிரிட்டார்கள். ஆடுமாடுகளைப் பழக்கப்படுத்தினார்கள்.
  • ஓரளவு நாடோடியாக வாழக்கூடிய , மேய்ச்சலில் ஈடுபடக்கூடிய, எனினும் மையமான தங்குமிடம் கொண்டவர்களாக இருந்தார்கள். இவர்கள் ஓரளவு இடம் விட்டு இடம் குடியெயரக்கூடிய நாடோடி கால்நடை மேய்க்கும் குழுவினராவர்.
  • ஈர மண்ணால் வீடு கட்டினார்கள். இறந்தோரைப் புதைத்தார்கள். சங்கு, சுண்ணாம்புக்கல், நீலவண்ணக்கல், இரத்தினக்கல், வைடூரியம், மணற்கல் ஆகியவற்றில் செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்தார்கள்.
  • மெஹர்கார் புதிய கற்காலப் பண்பாட்டின் இரண்டாம் காலகட்டம் ஏறத்தாழ பொ.ஆ.மு. 5500 – 4800 க்கு உட்பட்டதாகவும் மூன்றாம் காலகட்டம் ஏறத்தாழ பொ.ஆ.மு. 4800- 3500க்கு உட்பட்டதாகவும் கணிக்கப்படுள்ளது. இக்காலகட்டங்களில் மட்பாண்டத் தொழில்நுட்பத்துக்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
  • சுடுமண் உருவங்களும் பளபளப்பான ஒப்பனை மட்பாண்டங்களின் மணிகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. பெண்கள் அணிந்த அணிகலன்களுக்கான சான்றுகளும் கண்டறியப்பட்டுள்ளன. பதக்‌ஷானில் மட்டுமே கிடைக்கக்கூடிய வைடூரியம் இங்குக் கிடைப்பதை நெடுந்தூர வணிகத்துக்கான சான்றாகக் கொள்ளலாம்.
  • சிந்து நாகரிகத்தின் முதிர்ந்த கட்டத்தின் தோற்றத்துக்குப் பிறகு, மெஹர்கார் கைவிடப்பட்ட நகரமானது.

மெஹர்காரில் தொடக்க கால பல்மருத்துவம்

மனித மூதாதையருக்கு மருத்துவக்குணம் கொண்ட மூலிகைகள் குறித்த அறிவு இருந்திருக்கிறது. வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து அவர்களால் தங்களது உடல்நலத்தைப் பாரமரிக்க முடிந்தது. வாழ்க்கைமுறை மாறியபோது புதிய நோய்கள் தோன்றின. அவற்றுக்கான மருந்துகளைக் கண்டறிய வேண்டியிருந்தது.

புதிய கற்காலத்திலிருந்து மக்கள் அரைத்த தானியங்களையும் சமைத்த உணவுகளையும் உண்ணத் தொடங்கினார்கள். இது பல் கோளாறுகளுக்கும் பிற உடல் பிரச்சினைகளுக்கும் வழிவகுத்தது. உயிருள்ள ஒரு மனிதரின் பல்லில் துளையிட்டதற்கான மிகப் பழமையான சான்று மெஹர்காரில் கிடைத்துள்ளது. இது பல்மருத்துவத்துக்கான ஒருமுகவுரையாகத் தோன்றுகிறது. பொ.ஆ.மு. 5000-7000க்கு உட்பட்ட காலத்துக்கு உரிய மண்டையோடுகள் இதற்கான சான்றுகளாக உள்ளன.

புதிய கற்காலப் பண்பாடு

காஷ்மீர்

  • காஷ்மீர் பகுதியில் நிலவிய புதிய கற்காலப் பண்பாடும் ஹரப்பா நாகரிகமும் ஒரே சமகாலத்தவையாகும். இக்காலகட்டத்தைச் சேர்ந்த முக்கியமான ஆய்விடமான பர்சாஹோம், பெருங்கற்காலத்துக்கும் தொடக்க வரலாற்றுக்காலத்துக்கும் சான்றாக உள்ளது.
  • இங்கு மக்கள் குளிரிலிருந்து காத்துக்கொள்ள ஏறத்தாழ 4 அடி ஆழம் கொண்ட குழி வீடுகளில் வசித்தார்கள். முட்டை வடிவம் கொண்ட இவ்வீடுகள் அடிப்பகுதியில் அகலமாகவும் மேல்பகுதியில் குறுகியதாகவும் இருந்தன.
  • இவற்றுக்கு அருகே ஒரு வேயப்பட்ட கட்டுமானத்துக்கான தூண்களை ஊன்றுவதற்கான குழிகளைக் காண முடிகிறது. புதிய கற்காலத்தில் காஷ்மீரில் வளர்ப்பு விலங்குகளாகச் செம்மறியும் வெள்ளாடும் இருந்தன.
  • தாவரங்களைப் பயிரிட்டார்கள். பர்சாஹோமைச் சேர்ந்த புதிய கற்கால மக்கள் ஹரப்பா மக்களோடு வணிகத்தில் ஈடுபட்டார்கள். கையால் வனைட்ந்ஹ மட்பாண்டங்களையும் எலும்பிலான கருவிகளையும் பயன்படுத்தினார்கள். கற்கோடரி, உளி, வாய்ச்சி (மரம் செதுக்கும் கருவி), உலக்கை, மத்து போன்ற கருவிகள் மக்களிடம் இருந்தன.
  • குளிரைத் தாக்குப்பிடிப்பதற்காகத் துணியில் விலங்குகளின் தோலைச் சேர்த்துத் தைப்பதற்குக் குத்தூசிகள் பயன்படுத்தப்பட்டன. தோல்களைக் கோண்டு வேலை செய்ய செதுக்குவதற்கான அல்லது சீவுவதற்கான கருவியை மக்கள் பயன்படுத்தினர்.
  • புதிய கற்காலத்தின் இரு கட்டங்கள் இங்கு அடையாளம் காணப்பட்டுள்ளன. செராமிக், செராமிக் அல்லாதது என அவற்றைப் பிரிக்கலாம். செராமிக் அல்லாதது கட்டத்தில் மட்பாண்டத் தொழில்நுட்பத்துக்கான அடையாளங்கள் இல்லை.
  • செராமிக் கட்டத்தில் மட்பாண்டங்களுக்கான சான்றுகள் கிடைக்கின்றன. இக்கட்டத்தில் மக்கள் சேற்று மண்ணாலான வீடு கட்டினார்கள். செம்பாலான அம்புகளைச் செய்தார்கள்.
  • கறுப்புநிறப் பாண்டங்களையும் அகேட், கார்னிலியன் கல் மணிகளையும் வண்ணம் பூசப்பட்ட பானைகளையும் பயன்படுத்தினார்கள். இங்கு காணப்படும் ஒரு புதைகுழியில் காட்டு நாயின் எலும்பும் மான் கொம்பும் காணப்பட்டன. சூரியன், நாய் ஆகியவை இடம்பெறும் ஒரு வேட்டைக்காட்சி செதுக்கப்பட்டுள்ள ஒரு கல்லும் இங்கு உள்ளது.
  • கோதுமை, பார்லி, பட்டாணி, பருப்பு ஆகியவற்றுக்கான விதைகள் அகழாய்வுகளின்போது கண்டெடுக்கப்பட்டன. கால்நடைகள், செம்மறியாடு, வெள்ளாடு, பன்றி, நாய், சில பறவைகள் ஆகியவை பழக்கப்படுத்தப்பட்டன.
  • சிவப்பு மான், காஷ்மீர் கலைமான், வரையாடு, கரடி, ஓநாய் போன்ற காட்டு விலங்குகளின் எலும்புகள் அவர்கள் வேட்டையிலும் ஈடுபட்டதைக் காட்டுகின்றன்.
  • நினைவுச்சின்னமாகக் குத்துக்கல் எழுப்பப்படும் வழக்கம் பெருங்கற்காலத்தில் இருந்தது. அக்கால மக்கள் சிவப்பு நிற மட்பாண்டங்களையும் உலோகப் பொருள்களையும் பயன்படுத்தினார்கள்.
  • பருப்பு வகை பயன்பாடு அவர்கள்ளுக்கு மத்திய ஆசியாவுடன் இருந்த தொடர்பைக் கூறுகிறது. ஹரப்பா நாகரிகத்துடன் இவர்களுக்குத் தொடர்பு இருந்திருக்கலாம்.

கங்கைச் சமவெளியிலும் மத்திய இந்தியாவிலும் புதிய கற்காலப்பண்பாடு

  • கங்கைச் சமவெளியிலும் மத்திய இந்தியாவிலும் லேகுரதேவா, சோபானி முண்டா ஆகிய இடங்களில் புதிய கற்காலப் பண்பாடு நிலவியதாகத் தெரிகிறது. தொடக்க காலத்திலேயே, அதாவது ஏறத்தாழ பொ.ஆ.மு. 6500 இலேயெ நெல் சாகுபடி நடந்ததற்கான சான்றுகள் லேகுரதேவாவில் கிடைத்துள்ளன.
  • மத்திய இந்தியாவில் புதிய கற்காலப் பண்பாடு நிலவிய இடங்கள் கயிற்றின் தடம் பதிக்கப்பட்ட மட்பாண்டங்களால் அடையாளம் காணப்படுகின்றன. கோல்டிவ, சிரந்த், செனுவார், மககரா ஆகியவை முக்கியமான புதிய கற்கால ஆய்விடங்களாகும்.
  • இந்த இடங்களும் மட்பாண்டங்கள் செய்தல், தாவரம் வளர்த்தல், செயல்பாடுகளுக்கான சான்றுகளுடன் உள்ளன.
  • அறு வரிசை பார்லி, பல வகைப்பட்ட கோதுமை, அரிசி, பட்டாணி, பச்சைப்பயிறு, கொண்டைக்கடலை, கடுகு, ஆளி, பலா ஆகியவை பயிரிடப்பட்டதற்கான முழுமையான சான்றுகள் இங்கெல்லாம் கிடைத்துள்ளன.
  • காட்டு விலங்குகளின் எலும்புகளுடன், செம்மறியாடு, வெள்ளாடு, ஏனைய கால்நடைகள் ஆகியவற்றின் எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • புதிய கற்கால மனிதர்கள் மேல்புறத்தில் கயிற்றின் தடம் பதிக்கப்பட்ட மட்பாண்டங்களைப் பயன்படுத்தினார்கள். நுண்கற்கள், எலும்பு, மான் கொம்பு ஆகியவற்றாலான கருவிகளும் சுடுமண் பொருள்களும் பயன்பாட்டில் இருந்தன. இந்த இடங்கள் ஏறத்தாழ பொ.ஆ.மு. இரண்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரைக்கும் செழிப்புடன் இருந்துள்ளன.

கிழக்கு இந்தியாவில் புதிய கற்காலம்

  • பிகார், மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளின் பல இடங்களில் புதிய கற்காலப் பண்பாடு நிலவியது. பிர்பன்புர், சிரந்த் போன்றவை அத்தகைய இடங்களாகும்.
  • இப்பகுதிகளில் தோள்பட்டைக் கோடரி பயன்படுத்தியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள புதிய கற்கால வளாகங்களுடன் இந்த இடங்களை ஒப்பிடும்போது பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன.
  • மழுங்கிய, திரண்ட முனையுள்ள கோடரி, உளி, தோள்பட்டைக் கோடரி ஆகியவை இந்த இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதே பகுதியில் உள்ள குச்சாய், கோல்பய்சாசன், சங்கர்ஜங் ஆகிய இடங்களும் புதிய கற்காலப் பண்பாடு நிலவிய இடங்களாகும்.

தென்னிந்தியாவில் புதிய கற்காலம்

  • புதிய கற்காலப் பண்பாடு தென்னிந்தியாவில் முக்கியமாக ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாட்டின் வடமேற்குப் பகுதி ஆகியவற்றில் நிலவியதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
  • ஒரு சாம்பல் மேட்டைச் சுற்றிலும் குடியிருப்புகள் சூழ்ந்திருக்கும் கட்டமைப்பு இந்த இடங்களில் காணப்படுகிறது. புதிய கற்கால வளாகத்தின் ஒரு பகுதியாக 200க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • இவை நீராதாரங்களுடன் கூடிய கருங்கல் குன்றுகளுக்கு அருகே அமைந்துள்ளன. இவ்விடங்கள் கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, துங்கபத்திரை, காவிரி சமவெளிகளிலும் , கர்நாடகாவிலுள்ள சங்கனகல்லு, தெக்கலகோடா, பிரம்மகிரி , மஸ்கி , பிக்லிகல், வட்கல், ஹெமிங்கே, கல்லூர் ஆகிய இடங்களிலும் , ஆந்திரப்பிரதேசத்தில் நாகார்ஜூனகொண்டா. ராமாபுரம், வீராபுரம், தமிழ்நாட்டில் பையம்பள்ளி ஆகிய இடங்களிலும் புதிய கற்காலப் பண்பாடு நிலவியுள்ளது.
  • சில தொடக்க காலப் புதிய கற்கால ஆய்விடங்கள் சாம்பல் மேடுகளைக் கொண்டுள்ளன. ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள உட்னுர், பல்வோய், கர்நாடகத்தில் உள்ள கொடெக்கல், குப்கல், புடிதல் ஆகியவை இத்தகைய சாம்பல் மேடுகளைக் கொண்டுள்ளன.
  • மெல்லிய சாம்பலும் நுண்ணுயிர்களால் சிதைக்கப்பட்ட மாட்டுச்சாண அடுக்குகளும் இப்பகுதிகளில் காணப்படுகின்றன. சாம்பல் மேட்டைச் சுற்றிலும் வீடுகளும் புதைகுழிகளும் மனித வாழிடங்களுக்கான சான்றுகளான உள்ளன.

வடகிழக்கு இந்தியாவில் புதிய கற்காலம்

  • வடகிழக்கு இந்தியாவில் புதிய கற்காலப்பண்பாடு மிகப் பின்னாலேயே தோன்றியது. இங்கு இப்பண்பாட்டின் காலம் பொதுவாக பொ.ஆ.மு. 2500-1500 அல்லது அதற்கும் பின்னர் என்று கணிக்கப்படுகிறது.
  • தோளில் வைத்துக்கொள்ளத்தக்க மழுங்கல் முனைக் கோடரிகளும் , முனை நீட்டிச் சாய்வாக்கப்பட்ட மழுங்கல் முனைக் கோடரிகளும் அஸ்ஸாம், மேகாலயா, நாகாலந்து, அருணாசல பிரதேசம் ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • தாஜலி ஹேடிங், சருதரு ஆகியவை அஸ்ஸாமில் புதிய கற்காலப் பண்பாடு நிலவிய இடங்களாகும். இடம்பெயர் வேளாண்மை (shifting cultivation) செய்ததற்கான சான்றுகள் அஸ்ஸாமில் கிடைத்துள்ளன.
  • சேனைக்கிழங்கும் சேப்பங்கிழங்கும் பயிரிடல், இறந்தோருக்குக் கல்லாலும் மரத்தாலும் செய்யப்பட்ட நினைவுச்சின்னங்களைக் கட்டுதல், ஆஸ்ட்ரோ – ஆசிய மொழிகள் பேசப்படுதல் ஆகியவை இக்காலப்பண்பாட்டின் முக்கியக்கூறுகளாகும். இவை இப்பகுதிக்கும் தென்கிழக்கு ஆசியாவுக்குமிடையேயான பண்பாட்டு ஒப்புமைகளை உணர்த்துகின்றன.

சிந்து நாகரிகம்

இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த இடைக்கற்காலம், புதிய கற்காலம் உள்ளிட்ட பல பண்பாடுகள் இந்தியாவின் மற்ற பகுதிகளில் நிலவின.

பெயரிடு முறையும் படிநிலைகளும் காலவரிசையும்

  • இந்தியாவின் வடமேற்குப்பகுதியிலும் பாகிஸ்தானிலும் பொ.ஆ.மு. 3000 கால அளவில் தோன்றிய நாகரிகங்களும் பண்பாடுகளும் மொத்தமாகச் சிந்து நாகரிகம் எனப்படும்.
  • இந்நாகரிகம் அடையாளம் காணப்பட முதல் இடம் ஹரப்பா என்பதால், இது ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • ஹரப்பா நாகரிகம் திடீரென்று ஒரே நாளில் தோன்றிடவில்லை. இப்பகுதியில் புதிய கற்காலக் கிராமங்களின் தொடக்கம் நடைபெற்றது ஏறத்தாழ பொ.ஆ.மு. 7000 (புதிய கற்காலப் பகுதியான கற்காலப் பகுதியான மெஹர்காரின் காலத்தைப் போல) எனக் கணிக்கப்படுகிறது.

ஹரப்பா நாகரிகம் பல்வேறு கட்டங்களகப் (படிநிலைகள்) பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

தொடக்க கால ஹரப்பா பொ.ஆ.மு. 3000 – 2600

முதிர்ச்சி அடைந்த ஹரப்பா பொ.ஆ.மு. 2600 – 1900

பிற்கால ஹரப்பா பொ.ஆ.மு. 1900 – 1700

ஒரு நகரப் பண்பாடிற்கான கூறுகள் முதிர்ச்சி பெற்ற ஹரப்பாவின் காலத்தில் இருந்தது. அதற்குப்பின் அது வீழ்ச்சி அடைந்தது.

  • ஹரப்பாவுக்கு முதன்முதலில் 1826இல் வருகை தந்தவர் சார்லஸ் மேசன் எனும் இங்கிலாந்து நாட்டவர். 1831இல் அம்ரி என்னும் ஹரப்பா பண்பாட்டோடு தொடர்புடைய இடத்திற்கு அலெக்ஸாண்டர் பர்ன்ஸ் வருகை தந்தார்.
  • லாகூரிலிருந்து முல்தானுக்கு ரயில் பாதை அமைப்பதற்காக ஹரப்பா அழிக்கப்பட்டது. இப்பகுதியிலிருந்து ஒரு முத்திரை இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் தூறையின் முதல் அளவையரான அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாமுக்குக் கிடைத்தது.
  • 1853இலும் 1856இலும் 1875இலும் அவர் ஹரப்பாவைப் பார்வையிட்டார். ஆனால் ஹரப்பாவின் முக்கியத்துவத்தையும் அதன் நாகரிகத்தையும் உணர்ந்து, அங்கு ஆய்வு நடத்தக் காரணமாக இருந்தவர் சர் ஜான் மார்ஷல் ஆவார்.
  • இவர் இந்தியத் தொல்லியல் துறையின் இயக்குனராகப் பொறுப்பேற்ற நிகழ்வு, இந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனை எனலாம். இவரது முயற்சிகள் மூலம் ஹரப்பாவில் ஆய்வுகள் தொடங்கப்பட்டன.
  • பிற்காலத்தில் 1940களில் ஆர்.இ.எம். வீலர் ஹரப்பாவில் அகழாய்வுகள் நடத்தினர். இந்தியப் பிரிவினைக்குப் பீறகு, ஹரப்பா நாகரிகப் பகுதியில் பெரும்பாலான இடங்கள் பாகிஸ்தானுக்கு உரியதாகிவிட்டன.
  • எனவே ஆய்வாளர்கள் இந்தியாவில் உள்ள ஹரப்பா நாகரிகப்பகுதிகளைக் கண்டறிய ஆவல் கொண்டனர். ஹரப்பா நாகரிகத்துடன் தொடர்புடைய காலிபங்கன், லோத்தல், ராக்கிகார்ஹி, டோலாவீரா ஆகியவை இத்தகைய முயற்சிகளால் அகழாய்வுக்கு உட்பட்டன.
  • 1950களுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப்பயணங்களும் அகழாய்வுகளும் ஹரப்பா நாகரிகத்தையும் அதன் இயல்பையும் புரிந்துகொள்ள உதவின.

புவியியல் அமைவிடமும் குடியிருப்புகளும்.

  • சிந்து நாகரிகமும் அதன் சமகாலப் பண்பாடுகளும் இந்தியாவிலும் பாகிஸ்தானிலுமாக மொத்தம் 1.5 மில்லியன் சதுரகிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளன.
  • மேற்கில் பாகிஸ்தான் –ஈரான் எல்லையில் அமைந்துள்ள சட்காஜென்டர் குடியிருப்புகள், வடக்கில் ஷார்ட்டுகை (ஆப்கானிஸ்தான்), கிழக்கில் ஆலம்கிர்புர் (உத்தரப்பிரதேசம்) எனச் சிந்து நாகரிகப்பகுதியின் எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
  • இதன் மைப்பகுதிகள் பாகிஸ்தானிலும் இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், ஹரியான ஆகிய மாநிலங்களிலும் உள்ளன.

தொடக்கம்

  • உலகில் வேளாண்மையும் விலங்கு வளர்ப்பும் மிக முன்பே தொடங்கிவிட்ட பகுதிகளில் சிந்து பகுதியும் (மெஹர்கார்) ஒன்று. சிந்து பகுதியின் புதிய கற்காலப் பண்பாடுகளுக்கும் பிற்காலத்து நகர நாகரிகத்துக்கும் தொடர்ச்சி உள்ளதா எனத் தெரியவில்லை.
  • ஹரப்பா நாகரிகத்தின் தொடக்க நிலையில் அப்பகுதி முழுவதும் கிராமங்களும் ஊர்களும் வளர்ச்சி பெற்றன. முதிர்ந்த ஹரப்பா பண்பாட்டுக் கட்டத்தில் நகர மையங்கள் தோன்றின.

திட்டமிடப்பட்ட நகரங்கள்

  • ஹரப்பா (பஞ்சாப், பாகிஸ்தான்) , மொகஞ்சதாரோ (சிந்து, பாகிஸ்தான்), டோலாவிரா (குஜராத், இந்தியா), காலிபங்கன் (ராஜஸ்தான், இந்தியா), லோத்தல் (குஜராத், இந்தியா), பனாவலி (ராஜஸ்தான், இந்தியா), ராக்கிகார்ஹி (ஹரியானா, இந்தியா), சர்கோட்டடா (குஜராத், இந்தியா) ஆகியவை ஹரப்பா கால முக்கிய நகரங்களாகும்.
  • அரண்களால் பாதுகாக்கப்படும் தன்மை, நன்கு திட்டமிடப்பட்ட தெருக்கள், சந்துகள், கழிவுநீர் வசதி ஆகியவை ஹரப்பா நகரங்களின் குறிப்பிடத்தக்க கூறுகள். தகுந்த குடிமை அதிகாரிகளின் கீழ் இத்தகைய திட்டமிடல் நிகழ்ந்திருக்கக் கூடும்.
  • ஹரப்பா மக்கள் கட்டுமானத்துக்குச் சுட்ட, சுசாத செங்கற்களையும் கற்களையும் பயன்படுத்தினர். நகரங்கள் சட்டக வடிமைப்பைக் கொண்டிருந்தன. கழிவுநீர் வடிகால்கள் திட்டவட்டமான ஒழுங்குடன் கட்டப்பட்டன.
  • வீடுகள் சேற்று மண்ணாலான செங்கற்களாலும் கழிவுநீர் வடிகால்கள் சுட்ட செங்கற்களாலும் கட்டப்பட்டன. வீடுகள் ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களைல் கொண்டிருந்தன.
  • மொகஞ்சதாரோ ஓர் உயர்ந்த மேடை மீது நன்கு திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகரம். அது கோட்டைப்பகுதியாகவும் தாழ்வான நகரமாகவும் இரு வேறுபட்ட பகுதிகளைக் கொண்டிருந்தது.
  • வீடுகளில் சுட்ட செங்கற்களால் தளம் அமைக்கப்பட்ட குளியலறையும் சரியான கழிவுநீர் வடிகாலும் இருந்தன. மேல்தளம் இருந்ததை உணர்த்தும் வகையில் சில வீடுகள் படிக்கட்டுகளைக் கொண்டுள்ளன.
  • வீடுகளில் பல அறைகள் இருந்தன. பல வீடுகளில் சுற்றிலும் அறைகளுடன் கூடிய முற்றம் அமைந்திருந்தது.
  • நகரத்தின் கோட்டைப்பகுதி முக்கியத்துவம் வாய்ந்த இருப்பிடத்துக்கான அமைப்புகளுடன் காணப்படுகிறது. இதைப் பொதுமக்களோ, மக்களில் குறிப்பிட்ட சிலரோ பயன்படுத்தியிருக்கலாம். மொகஞ்சதாரோவில் உள்ள ஒரு கட்டிடம் சேமிப்புக்கிடங்காக அடையாளம் காணப்படுகிறது.
  • பெரும் கூளம் (The Great Bath) என்பது முற்றத்துடன் கூடிய ஒரு பெரிய குளமாகும். குளத்தின் நான்கு பக்கங்களிலும் உள்ள நடைபாதை வடக்குப்பக்கத்திலும் தெற்குப்பக்கத்திலும் படிக்கட்டுகளுடன் அமைந்துள்ளது.
  • நடைபாதையின் அருகே பல அறைகளும் உண்டு. சில கட்டுமான அமைப்புகள் தானியக்கிடங்குகளாக அடையாளம் காணப்படுகின்றன. அதன் சுவர்கள் ஜிப்சம் செறிந்த சுண்ணச்சாந்தால் பூசப்பட்டு, நீர் புகாதபடி இருக்கின்றன.
  • அக்கட்டுமானத்தில் கழிவுநீர் வடிகால் வசதி இருந்தது. பெருங்குளம் சடங்குகளுடன் தொடர்புடைய நீராடல் நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

வாழ்வாதாரமும் பொருளாதார உற்பத்தியும்

  • ஹரப்பா மக்கள் நிலையாக வாழ்வதற்கு வேளாண்மை முக்கிய ஆதாரமாக விளங்கியது. கோதுமை, பார்லி, அவரை வகைகள், கொண்டைக்கடலை, எள், வெவ்வேறு தினை வகைகள் உள்ளிட்ட பல்வேறு தினை வகைகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களைப் பயிரிட்டார்கள்.
  • வேளாண்மையில் கிடைத்த உபரி வருவாய் முக்கியமான பல செயல்பாடுகளுக்கு ஆதாரமாக விளங்கியது. ஹரப்பா மக்கள் இரட்டைப்பயிரிடல் முறையைப் பின்பற்றினார்கள்.
  • ஹரப்பா மக்கள் உழவுக்குக் கலப்பையைப் பயன்படுத்தினார்கள். நிலத்தை உழுது, விதைக்கும் வழக்கத்தை அவர்கள் கொண்டிருந்திருக்கலாம். உழுத நிலங்களைக் காலிபங்கனில் காண முடிகிறது. அவர்கள் பாசனத்துக்குக் கால்வாய்களையும் கிணறுகளையும் பயன்படுத்தினார்கள்.
  • தொல்தாவரவியலாளர்கள் (Palaeobotanists) பழமையான வேளாண்மையையும் மனிதருக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையேயான உறவையும் குறித்து ஆய்வு செய்கிறார்கள்.

விலங்குகளைப் பழக்கப்படுத்துதல்

  • ஹரப்பாவில் மேச்சலும் ஒரு முக்கியமான தொழிலாக இருந்தது. செம்மறியாடு, வெள்ளாடு, கோழி உள்ளிட்ட பறவைகளை வளர்த்தர்கள், எருமை, பன்றி, யானை போன்ற விலங்குகள் குறித்த அறிவும் அவர்களுக்கு இருந்தது.
  • ஆனால் ஹரப்பா பண்பாட்டில் குதிரை இல்லை. ஹரப்பாவில் மாடுகள் செபு எனப்பட்டன. பெரிய உடலமைப்பைக் கொண்ட இவ்வகை மாடுகள் அவர்களின் பல முத்திரைகளில் சித்தரிக்கப்பட்டுள்ளன.
  • ஹரப்பா மக்களின் உணவில் மீன், பறவை இறைச்சி ஆகியவையும் இருந்தன. காட்டுப் பன்றி, மான் , முதலை ஆகியவற்றுக்கான சாண்றுகளும் ஹரப்பா நாகரிகப் பகுதிகளில் கிடைத்துள்ளன.

கைவினைத் தயாரிப்பு

  • ஹரப்பா பொருளாதாரத்தில் கைவினைத் தயாரிப்பு ஒரு முக்கியமான பகுதியாகும். மணிகள் மற்றும் அணிகலன் செய்தல், சங்கு வளையல் செய்தல், உலோக வேலைகள் ஆகியவை கைவினைச் செயல்பாடுகளாக இருந்தன.
  • கார்னிலியன் (மணி), ஜாஸ்பர் , கிரிஸ்டல் (படிகக்கல்), ஸ்டீட்டைட் (நுரைக்கல்) ஆகியவற்றிலும் செம்பு, வெண்கலம், தங்கம் ஆகிய உலோகங்களிலும் சங்கு, பீங்கான், சுடுமண் ஆகியவற்றிலும் சங்கு, பீங்கான், சுடுமண் ஆகியவற்றிலும் அணிகலன்களைச் செய்தார்கள்.
  • இந்த அணிகலன்கள் எண்ணற்ற வடிவமைப்பிலும் வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டன. இவை மெடபடோமியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இங்கிருந்து கலைப்பொருள்கள் ஏற்றுமதி ஆன செய்தி மெசபடோமியாவில் நடத்தப்பட்ட அகழாய்வு மூலம் தெரிகிறது.
  • ஹரப்பா நாகரிகப் பகுதிகள் சில குறிப்பிட்ட கைவினைப்பொருள் தயாரிப்பில் தேர்ச்சி பெற்றதாக உள்ளன. அத்தகைய பொருள்களும் அவற்றின் உற்பத்தி மையங்களும் கீழேயுள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
பொருள் நகரம்
சங்கு நாகேஷ்வர், பாலகோட்
வைடூரியம் ஷார்டுகை
கார்னிலியன் (மணி) லோத்தல்
ஸ்டீட்டைட் (நுரைக்கல்) தெற்கு ராஜஸ்தான்
செம்பு ராஜஸ்தான், ஓமன்

மட்பாண்டங்கள்

  • ஹரப்பா மக்கள் அன்றாடத் தேவைகளுக்குப் பலவகைப்பட்ட மட்பாண்டங்களைப் பயன்படுத்தினர். அவை நன்கு சுடப்பட்டவை. மட்பாண்டங்கள் அடர் சிவப்பும் கறுப்பும் கலந்த வண்ணம் பூசப்பட்டிருந்தன.
  • அகன்ற பாத்திரத்தை வைப்பதற்கேற்ற தாங்கி, நீரைச் சேர்த்துவைக்கும் கலன், துளைகளுடன் கூடிய கலன், கையில் ஏந்துவதற்கு ஏற்ப குறுகிய பிடியுடன் உள்ள கோப்பை, நுனி சிறுத்தும் தாங்கும் பகுதி நன்கு அகன்றும் உள்ள கோப்பைகள், தட்டுகள், கிண்ணங்கள் போன்ற பலவகைகளில் மட்பாண்டங்கள் காணப்படுகின்றன.
  • அவற்றில் வரையப்பட்டுள்ள ஓவியங்களில் இலைகள், மீன் செதில், ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளும் வட்டங்கள், கோணல்மாணலான கோடுகள், பக்கவாட்டில் உள்ள பட்டைகள், வைட்வியல் கூறுகள், தாவரங்கள், விலங்குகள் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • ஹரப்பா நாகரிகத்தைச் சேர்ந்த மட்பாண்டங்கள் நன்கு சுடப்பட்டதாகவும் நுட்பமான வேலைப்பாடு கொண்டதாகவும் இருக்கின்றன.

உலோகங்களும் கருவிகளும் ஆயுதங்களும்

  • ஹரப்பா நாகரிகம் வெண்கலக் கால நாகரிகமாகும். அம்மக்கள் செம்பு வெண்கலக் கருவிகள் செய்ய அறிந்தவர்கள். வெண்கலக் கருவிகளைத் தயாரித்தாலும், வேளாண்மைக்கும் கைவினைப்பொருள்கள் உற்பத்திக்கும் பலவகைப்பட்ட கருவிகள் அவர்களுக்குத் தேவைப்பட்டன.
  • ஒருவகைப் படிகக்கலில் செய்யப்பட்ட கத்திகளும் செம்புப்பொருள்களும் எலும்பு மற்றும் தந்தத்தில் ஆன கருவிகளும் பயப்படுத்தப்பட்டன.
  • கூர்முனைக் கருவிகள், உளிகள், ஊசிகள், மீன் பிடிப்பதற்கான தூண்டில், சவரக்கத்திகள் , தராசுத் தட்டுகள், கண்ணாடிகள், அஞ்சனக் கோல்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டன.
  • ரோரிசெர்ட் எனப்படும் படிகக்கல்லில் செய்யப்பட்ட கத்திகளை ஹரப்பா மக்கள் பயன்படுத்தினார்கள். அம்பு, ஈட்டி, கோடரி, மழுங்கல் முனைக் கோடரி ஆகியவை அவர்களின் ஆயுதங்களாக இருந்தன. ஹரப்பா மக்கள் இரும்பை அறிந்திருக்கவில்லை.

ரோரிசெர்ட்: இந்தப் படிவுப்பாறை பாகிஸ்தானில் உள்ள ரோரி பகுதியில் காணப்படுகிறது. ஹரப்பா மக்கள் கத்திகளும் பிற கருவிகளும் செய்வதற்கு இது பயன்பட்டது.

துணிகளும் அணிகலன்களும்

  • ஹரப்பா மக்கள் துணியாலான ஆடைகளை அணிந்தார்கள். கல்லாலும் உலோகங்களாலுமான அணிகலன்களைப் பயன்படுத்தினார்கள். அவர்களுக்குப் பருத்தி , பட்டு ஆகியவை குறித்த அறிவு இருந்தது.
  • ஒரு சுடுமண் பொம்மையில் மதகுரு போல் தோற்றமளிக்கும் உருவம் துணியாலான, பூவேலைப்பாடுகள் கொண்ட மேலாடையை அணிந்துள்ளதைக் காண்கிறோம். மொகஞ்ஜதாரோவில் கண்டெடுக்கப்பட்ட ‘நடனமாடும் பெண்’ சிலையின் , முழங்கையின் மேல்பகுதி வரை வளையல்கள் காணப்படுகின்றன.
  • ஹரப்பா மக்கள் கார்னிலியன், செம்பு, தங்கம் ஆகியவற்றால் ஆன அழகிய வேலைப்பாடுகள் கொண்ட அணிகலன்களை உருவாக்கினர். அவற்றில் சில பொறிக்கப்பட்ட வடிவங்களைக் கொண்டுள்ளன. இவை மெசடோமியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
  • ஒப்பனைப்பாண்டங்கள், கல்லாலான பாத்திரங்கள், சங்கு வளையல்கள் ஆகியவையும் பயன்பாட்டில் இருந்தன. அவர்கள் உருவாக்கிய அணிகலன்கள் வணிக நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக விற்கவோ , பண்டமாற்றம் செய்யவோ பயன்பட்டன.

வணிகமும் பரிவர்த்தனையும்

  • ஹரப்பாவின் பொருளாதாரச் செயல்பாடுகளில் வணிகமும் பரிவர்த்தனையும் முக்கியப்பங்கு வகித்தன. ஹரப்பா மக்களுக்கு மெசபடோமியோவுடன் நெருக்கமான வணிகத்தொடர்பு இருந்தது.
  • அவர்கள் இந்தியாவில் பிற பண்பாடுகளைச் சேர்ந்த மக்களுடனும் தொடர்பு கொண்டிருந்தார்கள். சுமேரிய நாகரிகம் நிலவிய ஓமன், பஹ்ரைன், ஈராக், ஈரான் ஆகிய இடங்களில் ஹரப்பாவைச் சேர்ந்த முத்திரைகளும் பொருள்களும் கிடைத்துள்ளன.
  • க்யூனிபார்ம் கல்வெட்டுக் குறிப்புகள் மெசபடோமியாவுக்கும் ஹரப்பாவுக்கும் இடையேயான வணிகத் தொடர்புகளைக் குறிப்பிடுகின்றன. அவற்றில் காணப்படும் ‘மெலுகா’ என்னும் சொல் சிந்து பகுதியைக் குறிக்கிறது.
  • ஹரப்பாவில் செய்யப்பட்ட ஜாடி ஓமனில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஹரப்பாவைச் சேர்ந்த முத்திரைகள், எடைக்கற்கள், தாயக்கட்டைகள், மணிகள் செடபடோமியாவில் கண்டெடுக்கப்பட்டன.
  • கார்னிலியன், வைடூரியம், செம்பு, தங்கம், பலவகைப்பட்ட மரங்கள் ஆகியவையும் ஹரப்பாவிலிருந்து மெசபடோமியாவுக்கு ஏற்றுமதியாயின. ஹரப்பா மக்கள் இந்தியாவின் வேறு பகுதிகளுடனும் தொடர்பு கொண்டு, மூலப்பொருள்களைப் பெற்று, அவற்றை மேலும் சில செயல்முறைகளுக்கு உட்படுத்தி, உற்பத்தியில் ஈடுபட்டார்கள்.

எடைக்கற்களும் அளவீடுகளும்

  • ஹரப்பாவில் சரியான எடைக்கற்களும் அளவீடுகளும் பயன்படுத்தப்பட்டன. வணிகப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதால், முறையான அளவீடுகளுக்கான தேவையிருந்தது.
  • ஹரப்பா நாகரிகப்பகுதிகளிலிருந்து படிகக்கல்லாலான, கனசதுர வடிவ எடைக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எடையின் விகிதம் இரு மடங்காகும்படி பின்பற்றப்பட்டுள்ளது: 1 : 2 : 4 : 8 : 16 : 32. 16-இன் விகிதம் கொண்ட சிறிய எடை அளவீடு இன்றைய அளவீட்டில் 13.63 கிராம் கொள்ளத்தக்கதாக உள்ளது.
  • ஹரப்பா மக்கள் இன்றைய அளவீட்டில் ஒரு இஞ்ச் = 1.75 செ.மீ. ஆகக் கொள்ளும்விகித்ததில் அளவுகோலையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். எடைக்கற்கள் கனசதுர வடிவத்தில் , படிகக்கல்லில் செய்யப்பட்டிருந்தன.
  • அவர்கள் இரும எண் முறையை (1, 2, 4, 8, 16, 32, …..) பின்பற்றினார்கள். இம்முறை அணிகலன்களையும் உலோகங்களையும் எடை போடப் பயன்பட்டிருக்கலாம்.

முத்திரைகளும் எழுத்துமுறையும்

  • ஸ்டீட்டைட், செம்பு, சுடுமண், தந்தம் போன்றவற்றாலான முத்திரைகள் ஹரப்பா நாகரிகப் பகுதிகளில் அதிகளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஹரப்பா எழுத்துமுறையை இன்றுவரைக்கும் நம்மால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.
  • 5000க்கும் மேற்பட்ட எழுத்துத்தொடர்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஹரப்பாவில் கிடைத்தவற்றில் மிக நீளமானதாகக் கருதப்படும் எழுத்துத்தொடர் 26 குறியீடுகளைக் கொண்டுள்ளது.
  • பல அறிஞர்கள் அது திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்ததாகக் கருதுகிறார்கள். போக்குவரத்துக்கு உட்படும் பொருள்கள் மீது குறியிட்டு அடையாளப்படுத்துவதற்காக முத்திரைகள் பயன்பட்டிருக்கலாம். பொருள்களின் உரிமையாளரைக் குறிப்பதற்கும் அவை பயன்பட்டிருக்கலாம்.

கலையும் பொழுதுபோக்கும்

  • ஹரப்பா நாகரிகப்பகுதிகளிலிருந்து கிடைக்கும் சுடுமண் உருவங்கள், மட்பாண்டங்களில் காணப்படும் ஓவியங்கள், வெண்கல உருவங்கள் ஆகியவை ஹரப்பா மக்களின் கலைத்திறனை உணர்த்துகின்றன.
  • ஸ்டீட்டைட் கல்லில் அமைந்த ‘மத குரு’ , செம்பாலான ‘நடனமாடும் பெண்’ (இவையிரண்டும் மொகஞ்சதாரோவில் கிடைக்கப்பெற்றுள்ளன), ஹரப்பா, மொகஞ்சதாரோ, டோலாவிரா ஆகிய இடங்களில் கிடைத்த கல் சிற்பங்கள் ஆகியவை ஹரப்பாவின் கலைப்படைப்புகளாகும்.
  • பொம்மை வண்டிகள், கிலுகிலுப்பைகள், சக்கரங்கள், பம்பரங்கள், சதுரங்க விளையாட்டில் பயன்படுத்தப்படுவதைப் போன்ற காய்கள், கட்டங்கள் வரையப்பட்ட பலகைகள் ஆகியவை ஹரப்பா மக்களின் பொழுதுபோக்கு விளையாட்டுகளுக்குச் சான்றாகும்.

நம்பிக்கைகள்

  • சிந்து மக்கள் இயற்கையை வழிபட்டார்கள். அரச மரங்கள் வழிபாட்டுக்குரியதாக இருந்திருக்கலாம். சில சுடுமண் உருவங்கள் தாய்த்தெய்வத்தைப் போல் உள்ளன.
  • காலிபங்கனில் வேள்வி பீடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஹரப்பா மக்கள் இறந்தோரைப் புதைத்தனர். புதைப்பதற்கான நடைமுறைகள் விரிவாக இருந்தன. இறந்த உடல்களை எரித்ததற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன. ஹரப்பா புதைகுழிகளில் மட்பாண்டங்கள், அணிகலன்கள், தாமிரக்கண்ணாடி, மணிகள் ஆகியவை கிடைத்துள்ளன. இறப்பிற்கு பின்னரான வாழ்க்கை பற்றிய அவர்களின் நம்பிக்கையை இவை குறிக்கலாம்.

அரசியல்முறை

  • மட்பாண்டங்கள், முத்திரைகள், எடைக்கற்கள், செங்கற்கள் ஆகியவற்றில் காணப்படும் சீரான தன்மை அரசியல் முறை செயல்பட்டதை உணர்த்துகிறது.
  • தீவிரமான வணிக நடவடிக்கைகளுத் தொழிலாளர்களைத் திரட்ட வேண்டிய தேவை இருந்திருக்கும். அதிகாரம் படைத்த ஆட்சியமைப்பால் இத்தேவை நிறைவேற்றப்பட்டிருக்கலாம்.
  • ஹரப்பாவும் மொஹஞ்சதாரோவும் நகர அரசுகளுக்கான ஆட்சியமைப்பின் கீழ் இயங்கியிருக்கலாம். பண்பாட்டுப் பொருள்களிலும் அளவீடுகளிலும் காணப்படும் சீரான தன்மை ஹரப்பா சமூகம் உறுதியான மைய நிர்வாகத்தின் கீழ் இயங்கியிருக்க வேண்டும் என்ற கருத்தை வலுப்படுத்துகிறது.

நாகரிகத்தை உருவாக்கியவர்களும் இந்தியப் பண்பாட்டின் உருவாக்கமும்

  • ஹரப்பா நாகரிகத்தை உருவாக்கியவர்கள் திராவிட மொழிகளைப் பேசியவர்கள் என ஒரு ஆராய்ச்சியாளர் தரப்பு தெரிவிக்கிறது. தங்கள் நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஹரப்பா மக்கள் கிழக்கு நோக்கியும் தெற்கு நோக்கியும் இடம்பெயர்ந்ததைத் தொல்லியல் சான்றுகள் காட்டுகின்றன.
  • அவர்கள் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் குடிபெயர்ந்திருக்கலாம். எனினும் ஹரப்பா எழுத்துகளின் பொருள் விளங்கினால்தான், உறுதியான விடை கிடைக்கும்.

சிந்தி நாகரிகமும் சமகாலப் பண்பாடுகளும்

  • மேய்ச்சல் சமூக மக்கள், வேளாண்மை செய்வோர் , வேட்டையாடிகள் – உணவு சேகரிப்பாளர்கள், வணிகர்கள் போன்றோரை உள்ளடக்கிய பல குழுக்கள் சிந்து பகுதியில் வசித்தன.
  • இப்பகுதியில் கிராமங்களும் பெரிய நகரங்களும் இருந்தன. இத்தகைய எண்ணற்ற சமூகங்களைச் சார்ந்த மக்கள் இக்காலகட்டத்தில் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரையும், குஜராத்திலிருந்து அருணாசல பிரதேசம் வரைக்கும் இருந்திருக்கலாம்.
  • அவர்களின் வரலாறும் இதே அளவு முக்கியமானது, இச்சமூகங்களின் பண்பாடும் சூழலியல் அறிவும் இந்தியப் பண்பாட்டுக்குப் பங்களிப்பு செய்துள்ளன.
  • இந்தியாவின் வடமேற்குப்பகுதியில் சிந்து நாகரிகம் செழிப்புற்றிருந்தபோது, பிற பகுதிகளில் பல்வேறு பண்பாடுகள் வளர்ந்துகொண்டிருந்தன.
  • இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியிலும் (கேரளா) இலங்கையிலும் வேட்டையாடியும் சேகரித்தும் வாழ்ந்த சமூகங்கள் செயல்பட்டன. படகுப்போக்குவரத்து குறித்த அறிவுடன் இருந்த ஹரப்பா மக்கள் தென்னிந்தியாவுடன் தொடர்பு கொண்டிருந்திருக்கலாம்.
  • ஆனால் அதற்குத் தெளிவான தொல்லியல் சான்றுக கிடைக்கவில்லை. தென்னிந்தியவின் வட பகுதி, குறிப்பாகக் கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகியவை புதிய கற்காலப் பண்பாடுகளுடன், மேய்ச்சல் மற்றும் கலப்பை சார்ந்த வேளாண்மையிலும் ஈடுபட்டு வந்தன.
  • புதிய கற்காலப் பண்பாடு காஷ்மீர், கங்கைச் சமவெளி ஆகிய வட இந்தியப் பகுதிகளிலும் மத்திய இந்தியாவிலும் கிழக்கு இந்தியாவிலும் பரவியிருந்தபோது தக்காணத்திலும் மேற்கு இந்தியாவிலும் செம்புக்காலப் பண்பாடு நிலவியது.
  • இவ்வாறு இந்தியா ஹரப்பா நாகரிகக் காலத்தில் பல்வேறு பண்பாடுகளின் கலவை என்று சொல்லத்தகுந்த நிலப்பகுதியாக விளங்கியது.

வீழ்ச்சி

  • ஏறத்தாழ பொ.ஆ.மு. 1900இல் சிந்து சமவெளி நாகரிகம் வீழ்ச்சி அடைந்தது. காலநிலை மாற்றம், மெசபடோமியாவுடனான வணிகத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி, தொடர்வறட்சியின் காரணமாக ஆறுகள் மற்றும் நீர் நிலைகள் காய்ந்து வற்றிப்போதல் ஆகியவை வீழ்ச்சிக்கான காரணங்களாக வரலாற்றாசிரியர்களால் கணிக்கப்படுகின்றன.
  • சிந்து நாகரிகத்தின் அழிவுக்குப் படையெடுப்பு, வெள்ளம், ஆறு தன் போக்கை மாற்றிக்கொண்ட நிகழ்வு ஆகிய காரணங்களும் முன்வைக்கப்படுகின்றன. காலப்போக்கில் இம்மக்கள் சிந்து பகுதியிலிருந்து தெற்கு நோக்கியும் கிழக்கு நோக்கியும் இடம்பெயர்ந்தார்கள்.

சிந்து நாகரிகமும் தமிழ்நாகரிகமும்

இந்திய வரலாற்றில் நிகழ்ந்த முதல் நகரமயமாக்கத்தொன் வெளிப்பாடி சிந்து நாகரிகமாகும்.

சிந்து நாகரிகத்தின் தோற்றமும் தோற்றுவித்தவர்கள் குறித்த செய்திகளும் விவாதத்துக்கு உரியனவாகவே உள்ளன. சிந்து எழுத்துகளின் பொருளை இன்னும் கண்டறிய முடியவில்லை. தென்னிந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட பெருங்கற்காலத் தாழிகளில் மெல்லிய கீறல்களாக எழுதப்பட்ட வாசகங்களும் சில இடங்களின் பெயர்களின் சிந்து நாகரிகத்துக்கும் தமிழ் பண்பாட்டுக்கும் இடையேயான உறவை நிறுவுவதற்கான சான்றுகளாக முன்வைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலும் தென்னிந்தியாவிலும் இடைக்கற்காலத்திலிருந்து தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்து வந்ததற்குப் பல தொல்லியல் சான்றுகள் உள்ளன. இவர்களில் சில சமூகங்கள் சிந்து பகுதியிலிருந்து இடம்பெயர்ந்திருக்கலாம் என்பதை மறுக்க முடியது. எனினும் உறுதியானதொரு முடிவுக்கு வர இன்னும் அதிக ஆய்வுகள் தேவை.

பழந்தமிழகத்தைச் சேர்ந்த ஊர்களான அரிக்கமேடு, கீழடி, உறையூர் போன்றவை இந்தியாவில் நடந்த இரண்டாம் நகரமயமாக்கத்தின் பகுதிகள் ஆகும். இந்த ஊர்கள் சிந்து நகரங்களிலிருந்து மிகவும் வேறுபட்டதாக உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!