Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Samacheer NotesTnpsc

பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Notes 6th Social Science

6th Social Science Lesson 21 Notes in Tamil

21] பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்

இப்பாடம் பல்வேறு இயற்கை பேரிடர்கள் மற்றும் மனிதனால் ஏற்படக்கூடிய பேரிடர்களை விளக்குகிறது. மேலும் உயிர் , உடைமைகள் சேதத்தைத் தவிர்க்க எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் ஆயத்த செயல்பாடுகள் பற்றி விவரிக்கிறது.

மனித சமுதாயத்தில் பேரிடர் என்பது மிகவும் பொதுவான நிகழ்வாகும் நீண்ட காலமாகவே சந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அந்நிகழ்வுகள் பல வடிவங்களில் இருந்தாலும் அது சமூகத்திற்கு ஒரு சவாலாகவே இருந்து வருகிறது.

பேரிடர்கள் நிகழ்வும் அதன் தீவிரமும் சமீபகாலமாக அதிகரித்திருப்பதாக உலகப் பேரிடர் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. உலகில் அதிகமாகப் பேரிடர்கள் நிகழக்கூடிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலகின் மிகத் தீவிர வறட்சி, பஞ்சம் , சூறாவளிகள், நிலநடுக்கம், இரசாயனப் பேரிடர்கள், ரயில் விபத்துகள் மற்றும் சாலை விபத்துகள் போன்ற பேரிடர்கள் இந்தியாவில் நிகழ்ந்துள்ளன. மக்கள்தொகை அடர்த்தி அதிகம் உள்ள வளரும் நாடுகளில், குறிப்பாகக் கடற்கரைப் பகுதிகளில் வாழும் மக்கள் இயற்கை பேரிடரால் பாதிக்கப்படுகின்றனர். அடிக்கடி நிகழும் பேரிடரான வெள்ளம், சூறாவளி மற்றும் புயல்களால் மிகவும் ஆபத்திற்கு உள்ளாகின்றன.

பேரிடர்

ஒரு சமுதாயத்தின் செயல்பாட்டில் மனித உயிர் மற்றும் உடைமைக்கு ஆபத்தை விளைவிக்கும்படியான தொடர்ச்சியான இடையூறுகளே பேரிடர் எனப்படுகிறது. இயற்கை பேரிடர் மற்றும் மனிதனால் உண்டாகும் பேரிடர்கள் என இருபெரும் பிரிவுகளாகப் பேரிடரைப் பிரிக்கலாம்.

இயற்கை பேரிடர்

நிலநடுக்கம்

சிறிய கால அளவில் திடீரென்று பூமியில் ஏற்படக்கூடிய அதிர்வு நிலநடுக்கம் ஆகும். நிலநடுக்கமானது சில வினாடிகளில் இருந்து சில நிமிடங்கள் வரை நீடிக்கலாம். எந்தப் புள்ளியில் நிலநடுக்கம் தோன்றுகிறதோ இப்புள்ளி நிலநடுக்கம் மையம் (focus) எனப்படுகிறது. நிலநடுக்க மையத்திலிருந்து செங்குத்தாகப் புவிப்பரப்பில் காணப்படும் பகுதி மையப்புள்ளி (epicentre) ஆகும்.

எரிமலை

புவியின் உட்பகுதியிலிருந்து சிறிய திறப்பு வழியாக, லாவா சிறிய பாறைகள் மற்றும் நீராவி போன்றவை புவியின் மேற்பரப்பிற்கு உமிழப்படுவதே எரிமலை எனப்படும்.

சுனாமி

நிலநடுக்கம், எரிமலை வெடிப்புகள் மற்றும் கடலடி நிலச்சரிவுகளால் தோற்றுவிக்கப்படும் பேரலையே சுனாமி ஆகும்.

சூறாவளி

அதிக அழுத்தம் உள்ள காற்றால் சூழப்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதியிலிருந்து சூறாவளி உருவாகும்.

வெள்ளம்

மழை பெய்யும் பகுதிகளில் இயல்பான அளவையும் மீறி மிக அதிக அளவில் நீர் வழிந்தோடுவது வெள்ளம் எனப்படும்.

நிலச்சரிவு

பாறைகள், பாறைச் சிதைவுகள் மண் போன்ற பொருள்கள் சரிவை நோக்கி மொத்தமாகக் கீழே நகர்வது.

பனிச்சரிவு

பெரும் அளவிலான பனி மற்றும் பனிப்பாறை மிக வேகமாக சரிவை நோக்கி வருவது பனிச்சரிவு ஆகும்.

இடி மற்றும் மின்னல்

வளிமண்டல காலநிலையினால் திடீரென்று தொடர்ச்சியாக மின்சாரம் வெளிப்படும் நிகழ்வு இடி ஆகும். இதனால் திடீர் ஒளியும், அதிரும் ஒலி அலைகளும் ஏற்படுகிறது. இது மின்னல் என்றும் இடி என்றும் அழைக்கப்படுகிரது.

மனிதனால் உண்டாகும் பேரிடர்கள்

நெருப்பு

மனிதர்களின் கவனக்குறைவாலும், மின்னல், வறட்சி மற்றும் அதிக வெப்பத்தாலும் மேலும் பிற நடைமுறை காரணிகளாலுல் மிகப் பரந்த அளவில் தீ உண்டாகிறது.

கட்டடங்கள் இடிந்து போதல்

மனிதனின் செயல்பாடுகளால் கட்டடங்கள் இடிந்து விழுகின்றன.

தொழிற்சாலை விபத்துக்கள்

மனிதத் தவறுகளால் தொழிற்சாலைகளில் ஏற்படும் வேதியியல், உயிரியல் சார்ந்த விபத்துகள் நிகழ்கின்றன. (எ.கா. போபால் விஷவாயு கசிவு)

போக்குவரத்து விபத்துகள்

சாலைவிதிகளை மீறுவதாலும், கவனக் குறைவினாலும் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன.

தீவிரவாதம்

சமூக அமைதியின்மை அல்லது கொள்கை வேறுபாடுகள் போன்றவைகள் தீவிரவாதத்திற்கு வழிவகுக்கின்றன.

கூட்ட நெரிசல்

ஓரிடத்தில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவதால் ஏற்படும் நெரிசலை, கூட்ட நெரிசல் என்கிறோம். இதனால் ஏற்படும் மிதிபடுதல் மற்றும் மூச்சுத்திணரல் காரணமாக காயமடைதலும் மரணமும் ஏற்படுகின்றது.

சுனாமி மற்றும் வெள்ளம்

தெகிழக்கு ஆசியாவில் கி.பி. (பொ.ஆ) 2004 டிசம்பர் 26ஆம் நாள் ஆழிப் பேரலை எனப்படும் சுனாமி தாக்கியது. இந்தோனேசிய தீவான சுமித்ரா தீவுக்கருகில் புவி அதிர்வு மையம் கொண்ட நிலநடுக்கம் 9.1 முதல் 9.3 ரிக்டராகப் பதிவானது. உலகம் இதுவரை கண்டறியாத சுனாமியாக இது அமைந்தது. இதனால் ஏற்பட்ட அலைகள் 30மீட்டர் உயரம் வரை எழும்பியது. 2,00,000 க்கும் மேற்பட்ட ஆசிய மக்களைக் கொன்றது. இந்தியாவில் 10,000 மக்கள் கொல்லப்பட்டார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 1,705பேர் இறந்து போனார்கள். அனைத்து கடற்கரையோர மாவட்டங்களும் பாதிக்கப்பட்டன.

நாகப்பட்டினம் மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. மீனவர்கள், சுற்றுலாப் பயணிகள், காலை நடைப்பயணம் செய்பவர்கள், மணலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள், கடற்கரையில் இருந்த மக்கள் என யாவரும் இவ்வலைகளை எதிர்கொள்ள முன்தயாரிப்பு இன்றி இருந்தனர். ஆகவே அவர்கள் அனைவரும் இறந்து விட்டனர். கடற்கரையிலிருந்து 500 மீட்டர் வரையுள்ள சொத்துக்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இந்திய அரசு கி.பி. 2007ஆம் ஆண்டு ஐதராபாத்தில் INCOIS (Indian National Centre for Ocean Information Services) என்ற அமைப்பானது சுனாமி முன்னறிப்பு செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சுனாமியின்போது செய்யக்கூடியவை

  • உனது பள்ளி, வீடு போன்றவை சுனாமி தாக்கத்திற்கு உட்பட்ட கடற்கரை பகுதியில் உள்ளதா என்பதை அறிய வேண்டும்.
  • உனது தெரு கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு உயரத்தில் உள்ளது என்பதை அறிய வேண்டும்.
  • மீட்பு வழிகளைத் திட்டமிடுதல் மற்றும் மீட்பு முறைகளைப் பயிற்சி செய்து பார்த்தல்.
  • சுனாமி பற்றி உனது குடும்பத்தினருடன் கலந்துரையாடுக முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு முறைகளைப் பற்றி விளக்கிக்கூறுக.
  • கடல்நீர் உங்களை நோக்கி முன்னேறி வரும்போது உடனடியாகக் கடற்கரை பகுதியிலிருந்து வெளியேறி உயரமான இடத்திற்குச் செல்ல வேண்டும்.
  • சுனாமியை வேடிக்கை பார்க்கவோ அல்லது உலாவுவதற்கோ கடலோரப் பகுதிகளுக்குச் செல்லக்கூடாது.
  • சுனாமி பற்றிய தகவல்களை நன்றாக அறிந்திருக்க வேண்டும்.

வெள்ளப் பெருக்கு

அளவுக்கு அதிகமாக வழிந்தோடும் நீரையே வெள்ளப்பெருக்கு என்கிறோம். இஃது அவற்றின் கரைகளை அல்லது சிற்றாறுகளின் கரைகளைக் கடந்து வழிந்தோடிப் பள்ளமான பகுதிகளை மூழ்கடிக்கின்றது.

வெள்ளப் பெருக்கின் வகைகள்

திடீர் வெள்ளப் பெருக்கு,

அதிக மழைப் பொழிவின் போது ஆறு மணி நேரத்திற்குள் ஏற்படும் வெள்ளப்பெருக்கு திடீர் வெள்ளப்பெருக்காகும்.

ஆற்று வெள்ளப்பெருக்கு

ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் ஏற்படும் அதிகமான மழைப் பொழிவு அல்லது பனிக்கட்டி உருகுதல் அல்லது இரண்டும் சேர்ந்த சூழல் ஆற்று வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துகிறது.

கடற்கரை வெள்ளப்பெருக்கு

சில சமயங்களில் வெள்ளப் பெருக்கானது, சூறாவளி, உயர் ஓதம் மற்றும் சுனாமி ஆகியவற்றோடு தொடர்புபடுத்தப்பட்டு கடற்கரை சமவெளிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.

வெளப்பெருக்கிற்கான காரணங்கள்

  • அடைமழை
  • ஆற்றின் கரைகளை மீறி ஆறு பாய்ந்து செல்லுதல்.
  • ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதிகளில் அதிகமான மழைப்பொழிவு
  • போதுமான பொறியியல் தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்படாத கால்வாய்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் தடுப்பணைகள்.

வெள்ளப்பெருக்கின் தாக்கம்

  • கழிவுநீர் வடிகால் அமைப்பு அழிக்கப்படுதல்.
  • நீர் மாசுபடுதல்
  • மண் அரித்தல்
  • நீர் தேங்குதல்
  • வேளாண்மை நிலங்கள் மற்றும் கால்நடைகள் அழிக்கப்படுதல்
  • உயிர்ச்சேதங்கள் ஏற்படுதல் மற்றும் தொற்று நோய் பரவுதல்.

வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன் செய்ய வேண்டியவை

  • குடியிருப்புப் பகுதி வெள்ளப் பாதிப்பிற்கு உட்படும் தன்மையானதா என்பதைக் கண்டறிய வேண்டும்.
  • எடுத்துச் செல்லத்தக்க வானொலிப் பெட்டி, டார்ச் மற்றும் கூடுதல் பேட்டரிகள், குடிநீர் , உலர் உணவு வகைகள், உப்பு மற்றும் சர்க்கரை போன்றவற்றை வைத்திருக்க வேண்டும். விலைமதிப்பு மிக்க பொருள்கள், துணிகள், தீப்பெட்டி, மெழுகுவர்த்தி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அவசியமான பொருட்களைப் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.
  • குடை மற்றும் மூங்கில் கம்பு வைத்திருக்க வேண்டும்.
  • முதலுதவிப் பெட்டி, மற்றும் பொருட்களைக் கட்டுவதற்குத் திடமான கயிறு ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.
  • வேளாண் நிலங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளிலிருந்து நீர் வழிந்தோடக் கால்வாய்கள் வெட்ட வேண்டும். மணல் மூட்டைகள் வைத்திருக்க வேண்டும். மேலும் சில.

செய்யக் கூடாதவை

  • துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை உடனே இணைத்தல் கூடாது.
  • வண்டிகளை இயக்குதல் கூடாது.
  • வெள்ளத்தில் நீந்த முயற்சித்தல் கூடாது.
  • வெள்ளப் பெருக்கு காலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளக் கூடாது.
  • வெள்ளப் பெருக்கு எச்சரிக்கையை அலட்சியப்படுத்துதல் கூடாது.

வெள்ளப் பெருக்கின் போது செய்ய வேண்டியவை

  • மின்சாரம் மற்றும் சமையல் எரிவாயு இணைப்பினைத் துண்டிக்க வேண்டும்.
  • கழிப்பிடத் துளை மீதும், கழிவுநீர் வெளியேறும் துளை மீதும் மணல் மூட்டைகளை வைக்க வேண்டும்.
  • பரிந்துரைக்கப்பட்ட அல்லது நன்கு தெரிந்த பாதையில் உடனடியாக வெளியேற வேண்டும்.
  • குடிநீரைக் காய்ச்சிக் குடித்தல் வேண்டும்.
  • பிளிச்சிங் பவுடர் கொண்டு சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
  • எரிவாயுக் கசிவு ஏதும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே, தீக்குச்சி மற்றும் மெழுவர்த்தியைப் பயன்படுத்த வேண்டும்.
  • வயிற்றுப்போக்கு இருந்தால் அதிக அளவில் உணவு உண்ணக் கூடாது.
  • நீரில் மிதந்து வரும் பொருட்களை எடுக்க முயற்சிக்கக்கூடாது.

சென்னை வெள்ளம் – 2015

இந்தியாவின் பெரும் நகரங்களில் ஒன்றான சென்னை இந்தியாவின் தென்கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ளது. இஃது ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவக்காற்றாலும், வெப்ப மண்டல புயலாலும் பெரும் தாக்கத்திற்கு உள்ளாகின்றது. 2015 ஆம் ஆண்டு, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் பெய்த பெரும் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சென்னை மற்றும் தமிழகத்தின் சில பகுதிகள் பேரழிவைச் சந்தித்தன. இதில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் பெருமளவில் பொருட்சேதமும் ஏற்பட்டது. மனித உயிர்களைக் காப்பாற்றவும் மக்களின் துயர் துடைக்கவும் மத்திய அரசு மற்றும் தமிழக அரசு ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டன.

பேரிடர் இடர் வாய்ப்பு குறைப்பு: (Disaster Risk Reduction)

பேரிடருக்கான பொதுவான காரணங்களைப் பகுத்தறிந்தும் அதற்கான திட்டமிட்ட முயற்சிகளைக் கையாண்டும் பேரிடர் இடர் வாய்ப்பைக் கூறைக்க இயலும். பேரிடர் இடர் வாய்ப்பு குறைப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படும் நான்கு முக்கிய காரணிகளாவன: பரப்புரை செய்தல், பங்கேற்பு கற்றல், முறைசாராக் கல்வி மற்றும் பள்ளியில் முறைசார்ந்த தலையீடு ஆகியவையாகும்.

முன்னறிவிப்பு செய்தல் மற்றும் ஆரம்ப எச்சரிக்கை : (Forecasting and Early Warning)

  • வானிலை முன்னறிவிப்பு, முறையான சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு, புயல் முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை ஆகியவை பேரிடரின் போது இடர் வாய்ப்பு குறைப்பிற்கு மிகவும் பயனுடைய தகவல்களைத் தருகின்றன.
  • பள்ளி பேரிடர் மேலாண்மை குழு, கிராம பேரிடர் மேலாண்மை குழு, மாநில மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை அலுவலகங்கள் ஒன்றிணைந்து பேரிடர் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.
  • செய்தித்தாள்கள், வானொலி, தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்கள் மேம்படுத்தப்பட்ட தகவல்களைத் தருகின்றன மற்றும் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளைப் பற்றி எச்சரிக்கை தருகின்றன. இடர்கள், முன்னேற்பாடு நடவடிக்கைகள் மற்றும் மருந்துப் பொருள்கள் உள்ளிட்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்து விவரங்களைத் தருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!