Samacheer NotesTnpsc

பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல் Notes 12th Economics Lesson 9 Notes in Tamil

12th Economics Lesson 9 Notes in Tamil

9. பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல்

தவறாக நடைமுறைப்படுத்துவதனால் நன்கு வடிவமைக்கப்பட்டத் திட்டம் தோல்வியடையலாம். ஆனால் சரியாக நடைமுறைப்படுத்துவதனாலேயே தவறாக வடிவமை திட்டம் வெற்றியடைந்துவிடாது.

இன்றைக்கும் என்றைக்கும் உன்னுடைய வேலைகளைத் திட்டமிட்டு பிறகு நடைமுறைப்படுத்து.

  • மார்கரெட் தாட்சர்

முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி குன்றிய பொருளாதாரம் – பொருள்

அறிமுகம்

பொருளாதார “மேம்பாடு” மற்றும் முன்னேற்றம் ஆகிய இரண்டு சொற்களும் ஒரே பொருளைக் குறிக்கக்கூடியவை. பொருளாதார வளர்ச்சி நாட்டு வருமானம் அதிகரித்தலைக் குறிக்கப் பயன்படும் சொல். நாட்டின் பொருளாதார கட்டமைப்பில் நிகழும் நல்ல மாற்றங்களை முன்னேற்றம் எனக் கருதலாம். இரண்டாம் உலகப்போர் வரையில் மூன்றாம் உலக நாடுகள் என்றழைக்கப்படும் ஏழை நாடுகளின் பிரச்சினைகளைப் பற்றி படிக்க யாரும் ஆர்வம் காட்டவில்லை. அதன் பிறகே பொருளியல் வல்லுநர்கள் நாடுகளின் பிரச்சினைகளை ஆய்வு செய்து புதிய முன்னேற்ற மற்றும் வளர்ச்சிக் கோட்பாடுகளையும், மாதிரிகளையும் (Models) உருவாக்க ஆரம்பித்தனர். இன்றைய வளரும் நாடுகள் அனைத்தும் இங்கிலாந்து மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளிடம் அடிமைப்படுத்தப்பட்டிருந்த நாடுகள். விடுதலைக்குப் பிறகு இந்த நாடுகள் துரிதமான பொருளாதார முன்னேற்றமடைவதையே விருப்பமாக கொண்டிருந்தன.

பொருளாதார முன்னேற்றத்தின் அணுகுமுறைகள்

பொருளாதார முன்னேற்றம் இருவகையான அணுகுமுறையை கொண்டு விளக்கப்படுகிறது முறையே

  1. பழமையான அணுகுமுறை மற்றும்
  2. நலம் சார்ந்த புதிய அணுகுமுறை
  3. பழமையான அணுகுமுறை

இந்த அணுகுமுறை பொருளாதார அடிப்படைகளைக் கொண்டு மட்டுமே முன்னேற்றத்துக்கு விளக்கமளிக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்புடன் உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்பில் விவசாயத்தின் பங்கு குறைந்து தொழில் மற்றும் பணித்துறையின் பங்கு உயர்வடைதலையே பழைய அணுகுமுறையில் பொருளாதார முன்னேற்றம் என்கிறது. இது தொழில் துறை வளர்ச்சியை வலியுறுத்தும் அணுகுமுறையாக உள்ளது. தனிநபர் வருமான உயர்வு அடித்தட்டு மக்களின் வருவாயையும் அதிகப்படுத்தும் என்ற எடுகோளின் அடிப்படையில் முன்னேற்றத்துக்கு விளக்கமளிக்கிறது.

  1. நலம் சார்ந்த புதிய அணுகுமுறை

பொருளாதார முன்னேற்றம் 1970 – களில் மறுவரையறை செய்யப்பட்டது. இதன்படி வறுமை, வருமான ஏற்றத்தாழ்வு மற்றும் வேலையின்மை குறைத்தல் மற்றும் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி அதிகப்படுத்துதல் ஆகியவை ஒருநேர நிகழ்வதே பொருளாதார முன்னேற்றமாகும். அந்த காலக்கட்டத்தில் “வளர்ச்சியுடன் கூடிய பங்கீடு” என்பதே புகழ்பெற்ற முழக்கங்கங்களாயின.

மைக்கேல், பி.டொடாரோவின் கருத்தின்படி, “முன்னேற்றத்தை சமூக அமைப்பு, பொது மக்களின் மனநிலை மற்றும் நாட்டின் நிறுவன அமைப்புகள் ஆகியவற்றில் நிகழும் பெரிய மாற்றங்கள் மற்றும் விரைவான வளர்ச்சி, வருவாய் ஏற்றத்தாழ்வினை குறைத்தல் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய அனைத்தையுமே பொருளாதார முன்னேற்றமாக கருத வேண்டும்” என்கிறார்.

பொருளாதார வளர்ச்சிகுன்றிய நாடுகளின் சிறப்பியல்புகள்

அறிமுகம்

  • வளர்ச்சி குன்றிய நாடுகளை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி அறியலாம்.
  • உலக வங்கியின் வளர்ச்சி அறிக்கையின்படி தலாவீத மொத்த நாட்டு வருமானத்தின் அடிப்படையில் நாடுகளை வகைப்படுத்துகிறது.

வளர்ச்சி குன்றிய பொருளாதாரம்

வளர்ச்சி குறைந்த பொருளாதாரம் என்பது ஒரு நாட்டில் குறைவான தலா வருமானம், பரவலான வறுமை, வருவாய் மற்றும் செல்வ பகிர்வில் கடுமையான ஏற்றத்தாழ்வு, அதிக மக்கள் தொகை, குறைவான மூலதன ஆக்கம், அதிக அளவி வேலையின்மை, பழமையான உற்பத்தி முறை, எதிரும் புதிருமான பண்புகள் ஒருசேர நிலவுதல் (Dualism) போன்றவை பண்புகளாகக் கொண்டதாகும்.

வளர்ச்சி குன்றிய பொருளாதாரம் பொருள்

வளர்ச்சி குன்றிய பொருளாதாரம் என்பது ஒரு நாட்டில் , அதிக மக்கள் தொகையினால் உற்பத்தி குறைந்து, அவற்றின் விளைவாக குறைந்த தலா வருமானம் உடைய அதிக மக்களைக் கொண்ட பொருளாதாரமாகும்.

பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றம்

  1. பொருளாதார முன்னேற்றம்

பொதுவாக பார்த்தால், முன்னேற்றம் என்பது பின்தங்கிய நாடுகளின் பிரச்சனைகளையும், வளர்ச்சி என்பது முன்னேறிய நாடுகளின் பிரச்சனைகளையும் கொண்டதாக உள்ளது.

  1. வளர்ச்சியின் இயல்பும் அளவும்

முன்னேற்றம் என்பது தொடர்ச்சியற்றதாகவும் மற்றும் தன்னிச்சையாகவும் நிகழக்கூடிய மாற்றம், வளர்ச்சி என்பது நீண்ட காலத்துக்கும், படிப்படுயாகவும் , நிதானமாகவும் நடைபெறும் மாற்றமாகும்.

  1. மாற்றத்தின் நோக்கம்

வளர்ச்சி என்பது அதிகமான வெளியீட்டைக் குறிக்கிறது. ஆனால் முன்னேற்றம் என்பது உற்பத்தியில் அதன் செயல்திறனைக் குறிக்கிறது. அதாவது, உற்பத்தியில் ஒரு அலகு உள்ளீட்டிற்கான வெளியீட்டின் அளவைக் குறிக்கும். இது வெளியீடு, வளங்களுக்கான ஒதுக்கீடு, வறுமை, சமத்துவமின்மை மற்றும் வேலையின்மை ஆகியவற்றின் கலவை மாற்றங்களை குறிக்கிறது.

  1. மாற்றத்தின் விரிவு

பொருளாதார முன்னேற்றம் (பொருளாதார வளர்ச்சியை விட பெரிய கருத்து) என்பது வளர்ச்சி மற்றும் கட்டமைப்பில் ஏற்படும் மாறுதல்களை உள்ளடக்கியது.

பொருளாதார வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்குமிடையேயான வேற்றுமைகள்
பொருளாதார வளர்ச்சி பொருளாதார முன்னேற்றம்
வளர்ந்த நாடுகளின் பொருளாதார பிரச்சனைகளை கையாளுகிறது. வளரும் நாடுகளின் பிரச்சனைகளைக் கையாளுகிறது.
மாற்றங்கள் படிப்படியாகவும் நிதானமாகவும் நிகழ்கிறது. தொடர்ச்சியற்ற தன்னிச்சையான மாற்றங்கள் நிகழ்கிறது.
அதிக அளவான உற்பத்தியைக் குறிக்கிறது. உற்பத்தி அதிகரிப்பது மட்டுமல்லாமல் உற்பத்தியாகும் பொருட்களின் வகைகளும் மாறுகிறது.
எண்ணிக்க அடிப்படையிலானது (அதாவது) தலா வருமான அதிகரிப்பைக் குறிக்கும். எண்ணிக்கை மற்றும் தர அடிப்படையிலானது
குறுகிய எல்லையுடையது. விரிவான பொருள் கொண்ட சொல் முன்னேற்றம் = வளர்ச்சி + மாற்றம்

பொருளாதார முன்னேற்றத்தை அளவிடுதல்

பொருளாதார முன்னேற்றத்தை நான்கு முறைகளில் அளவிடலாம்.

  • நாட்டின் மொத்த உற்பத்தி (Gross National Product GNP)

ஒரு நாட்டின் புவி எல்லைக்குள் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பணிகளின் சந்தை மதிப்புடன் அந்த நாட்டு மக்கள் வெளிநாடுகளில் ஈட்டிய வருமானத்திற்கும், வெளிநாட்டினர் சம்பாதித்து அவர்கள் நாட்டுக்கு அனுப்பிய வருவானத்திற்குமிடையிலான வேறுபாடுத்தொகையை கூட்டினால் கிடைக்கும் மொத்த மதிப்பே மொத்த நாட்டு உற்பத்தி எனலாம். இந்த கருத்தினைக்கொண்டு ஒரு நாட்டின் பொருளாதார நிலையை மதிப்பிடலாம். மற்றவை மாறாதிருக்கும் போது நாட்டின் மொத்த நாட்டு உற்பத்தி அதிகமாக இருந்தால் அந்நாட்டு உற்பத்தி அதிகமாக இருந்தால் அந்நாட்டு மக்களின் உயர்வான வாழ்க்கைத்தரத்துக்கு வழிவகுக்கும் என கருதப்படுகிறது.

  • தலாவீத மொத்த நாட்டு உற்பத்தி (GNP Per Capita)

ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட ஆண்டின் மொத்த உற்பத்தி மதிப்பை அந்த ஆண்டின் மக்கள் தொகையால் வகுக்கக் கிடைக்கும் ஈவுத் தொகையே தலாவீத மொத்த நாட்டு உற்பத்தியாகும்.

இந்த அளவிடும் முறை நீண்டகாலத்தில் தலா உற்பத்தி மதிப்பு அதிகரித்தலைக் குறிப்பிடுகிறது. தலா வருமானம் அதிகரிக்கும் வேகம் மக்கள் தொகை அதிகரிக்கும் வேகத்தைவிட உயர்வாக இருக்க வேண்டும் என இந்த அளவிடும் முறை வலியுறுத்துகிறது.

  • நலன்:

பண்டங்கள் மற்றும் பணிகளை மக்கள் வாங்கி பயன்படுத்துவது அதிகரிப்பதையே பொருளாதார முன்னேற்றமாக கருதப்படுகிறது. மக்கள் நலன் என்ற கண்ணோட்டத்தில் பொருளாதார முன்னேற்றத்தை மக்களின் சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத்தரத்தில் குறிப்பிடத்தகுந்த அளவு மேம்படுவதாக சார்ந்து வரையறுக்கலாம்.

  • சமூகக் குறியீடுகள் (Social Indicators):

மக்களின் அடிப்படை மற்றும் கூட்டுத் தேவையை நிவர்த்தி செய்வதை சமூக குறியீடுகள் என அழைக்கப்படுகிறது. நேரடியாக வழங்கப்படும் அடிப்படைத் தேவை என்பது மக்களின் சுகாதாரம், கல்வி, உணவு, குடிநீர், துப்புரவு மற்றும் வீட்டு வசதி ஆகியவையாகும். இவற்றைக் கொண்டு சமூக பின்னடைவு தவிர்க்கப்படுகிறது.

பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் காரணிகள்

பல காரணிகள் பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயம் செய்கின்றன. அவற்றை நான்கு வகையாக பிரிக்கலாம். அவையாவன பொருளாதாரன், சமூகம், அரசியல் மற்றும் மதம் சார்ந்த காரணிகள். இவற்றை பொருளாதாரம் மற்றும் பொருளாதாரம் சாராத பிற காரணிகள் என எளிமையாக இரண்டே வகையாகவும் பிரித்து விடலாம்.

பொருளாதாரம் மற்றும் பொருளாதாரம் சாராத காரணிகள்

கீழ்க்கண்ட வரைபடம் பொருளாதாரம் மற்றும் பொருளாதார காரணிகளை எளீமையாக பட்டியலிடுகிறது.

பொருளாதாரம் சார்ந்த காரணிகள்

பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் எட்டு முக்கியமான காரணிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

1. இயற்கை வளங்கள்

ஒரு நாடு பெற்றுள்ள இயற்கை வளங்களின் அளவு அந்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் காரணியாகும். முன்னேற்றத்துக்கு தேவைப்படும் அளவுக்கு ஒரு நாடு இயற்கை வளங்களை பெற்றிருக்க வேண்டும். வளங்கள் பற்றாக்குறையாக உள்ள நாடு விரைவாக முன்னேற இயலாது. ஆனால், ஜப்பான் நாட்டில் வளங்கள் பற்றாக்குறையாக இருந்தாலும் முன்னேறிய நாடாக உள்ளது. ஏனென்றால் தேவையான வளங்களை இறக்குமதி செய்து கொள்ளுகிறது. இந்தியா அதிக அளவில் வளங்களைப் பெற்றிருந்தாலும் முன்னேற்றம் குறைந்த நாடாக உள்ளது.

2. மூலதன உருவாக்கம்

மூலதனம் பொருளாதாரத்தின் அனைத்துச் செயல்பாட்டிற்கும் அடிப்படையானதாகும். ஏற்கனவே உள்ள இருப்புடன் தற்போது கூடும் நிகர அளவு மூலதனமே மூலதன உருவாக்கம் என்பர். இதில் கண்ணுக்கு புலனாகக் கூடிய தொழிற்சாலைகள், இயந்திரங்களும், கண்ணுக்கு புலனாகாத உடல்நலம், கல்வி மற்றும் ஆராய்ச்சி போன்ற இரண்டு இனங்களுமே இதில் உள்ளடங்கும். தொழிலாளர்களின் உற்பத்தி திறனை உயர்த்தி வருமானத்தை அதிகரிக்க மூலதன ஆக்கம் உதவுகிறது. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் இயற்கை வளங்களை நன்முறையில் பயன்படுத்தவும். தொழில்மயமாதலுக்கும், மற்றும் அங்காடி விரிவாக்கத்திற்கும் உதவுகிறது. இதனால் பொருளாதாரம் வளர்ச்சிக்கு முக்கியமானதாகும்.

3. சந்தையின் அளவு

சந்தை அளவானது பெரிய அளவில் இருந்தால் கூடுதலான உற்பத்தி, அதிக வேலைவாய்ப்பு மற்றும் தேசிய தலா வருமான உயர்வு ஆகியவற்றைத் தூண்டும். இவ்வாறு வளர்ந்த நாடுகள் உலக வர்த்தக மையத்தின் வழியாக சந்தை அளவை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வதன் மூலம் பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவுகிறது.

4. கட்டமைப்பு மாற்றம்

கட்டமைப்பு மாற்றம் என்பது பொருளாதாரத்தில் தொழில் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றத்தைக் குறிக்கும். நாட்டின் பொருளாதாரத்தின் மூன்று துறைகளான பிரிக்கப்படுகின்றன. அதில் முதன்மைத் துறையானது வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, காடுகள் போன்றவற்றை உள்ளடக்கியும், இரண்டாம் துறையானது தொழிற்சாலை உற்பத்தி, கட்டுமானப்பணிகள் போன்றவற்றை உள்ளடக்கியும் மற்றும் சார்புத் துறைகளான வாணிபம், வங்கி மற்றும் வர்த்தகம் போன்றவற்றையும் உள்ளடக்கியிருக்கும். எந்த ஒரு பொருளாதாரமும் முழுக்க வேளாண்மையை மட்டும் சார்ந்து இருந்தால் பின்தங்கிய நிலையிலேயே இருக்கும்.

5. நிதியியல் முறை

நிதியியல் முறை என்பது ஒரு நாட்டில் திறமையான மற்றும் சிறந்த முறையில் கட்டமைக்கப்பட்ட வங்கி முறையினைக் கொண்டதாகும். ஒழுங்குற அமைக்கப்பட்ட பண அங்காடியானது தேவையான மூலதனத்தை வழங்குகிறது.

6. விற்பனைக்குரிய உபரி

வேளாண் துறையில் குடும்பத்திற்கான நுகர்வுத் தேவையைவிட கூடுதலாக செய்யப்படும் உற்பத்தியை விற்பனைக்குரிய உபரி என்கிறோம். இந்தக் கூடுதல் விளைப்பொருட்களை விவசாயிகள் சந்தையில் விற்று வருமானம் ஈட்டலாம். இது அவர்களுடைய வாங்கும் திறன் அதிகப்படுத்தும், இதனால் நாட்டில் பொருள் உற்பத்தி அதிகரித்து வேலைவாய்ப்பும், நாட்டு வருமானமும் உயர்ந்து நாடு முன்னேற்றமடையும்.

7. பன்னாட்டு வாணிகம்

பன்னாட்டு வாணிகத்தில் சாதகமான சூழ்நிலை இருந்தால் ஒரு நாடு போதுமான அளவு அந்நிய செலாவணியை கையிருப்பில் வைக்கமுடியும். அந்நிய செலாவணியை கையிருப்பு போதுமானதாக இருந்தால் அந்த நாட்டின் பணமாற்று வீதம் ஏற்ற இறக்கமின்றி நிலைத்திருக்கும்.

8. பொருளாதார அமைப்புமுறை

ஒரு நாடு தடையில்லா பொருளாதாரக் கொள்கையை கடைப்பிடித்தால் கட்டளைப் பொருளாதாரத்தைவிட வேகமான வளர்ச்சி பெறும். இது சில நாடுகளுக்கு மட்டும் பொருந்தும்.

பொருளாதாரம் சாராத காரணிகள்

“மனித வளம் சமுதாயத்தின் மனப்பான்மை, அரசியல் சூழ்நிலைகள் மற்றும் வரலாற்று நிகழ்வுகள் பொருளாதார முன்னேற்றத்தின் மிக அதிக அளவு ஆதிக்கம் செய்கின்றன. முன்னேற்றமடைவதற்கு மூலதனம் அடிப்படையானதே ஒழிய அதுமட்டுமே போதுமானதல்ல” என ராகனர் நர்கஸ் தெளிவுப்படுத்துகிறார்.

1. மனித வளம்

மனித வளம் மனித மூலதனம் எனக் கூறப்படுகிறது. ஏனென்றால், இது உற்பத்தி திறனை அதிகப்படுத்தி நாட்டு வருமானத்தையும் உயர்த்தும் ஆற்றல் பெற்றுள்ளது. மக்களின் முன்னேற்றத்துக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் சுழற்சியான உறவு நிலவுகிறது. ஒரு நாட்டுக்கு கல்வியறிவுள்ள, உடல் நலமுள்ள மற்றும் திறமையான தொழிலாளர்கள் உற்பத்தித் திறன்மிக்க சொத்தாக கருதப்படுகிறார்கள். மக்களின் அறிவு, திறன்கள் மற்றும் உற்பத்தி செய்யும் தகுதி ஆகியவற்றை அதிகரிக்கும் செயலை மனித மூலதன ஆக்கம் எனலாம். பொது சுகாதாரம், கல்வி மற்றும் மக்களுக்கான வசதிகள் மீது செய்யப்படும் செலவுகள் மனித மூலதன ஆக்கத்தை அதிகரிக்கும். திறமைமிக்க மனிதர்கள் உற்பத்திக்கு பங்களித்து முன்னேற்றத்தைத் தீர்மானிக்கிறார்கள். உதாரணம் ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகள்.

2. தொழில் நுட்ப அறிவு

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவு வளரும் பொழுது உயர்வகை உற்பத்தி தொழில் நுட்பங்கள் பிறக்கும். புதிய தொழில் நுட்ப முறைகள் உற்பத்தி திறனை அதிகப்படுத்தும். இது பொருளாதாரம் முன்னேற்றத்துக் காரணமாகிவிடும் என ஜோசப் சும்பீட்டர் கூறுகிறார்.

3. அரசியல் சுதந்திரம்

பொருளாதார முன்னேற்றத்திற்கும் அரசியல் சுதந்திரத்திற்கும் நெருங்கிய தொடர்புடையது. இந்தியாவின் வறுமைக்கு இந்தியாவின் செல்வம் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் எடுத்து செல்லப்பட்டதே காரணம் என தாதாபாய் நவ்ரோஜி தனது “வறுமையும் – இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி முறையும்” (Poverty and un-British Rule in India)’ என்ற நூலில் எழுதியுள்ளார். பிரிட்டிஷ் ஆட்சி முறைதான் இந்தியாவில் வறுமை அதிகரிக்க முக்கியக் காரணமாக இருந்தது.

4. சமூக அமைப்பு

முன்னேற்றத்தின் பலன்கள் சமமாக அனைத்துத் தரப்பினருக்கிடையில் பகிர்ந்தளிக்கப்படும் என்ற நம்பிக்கை இருந்தால் தான், நாடு முன்னேற தூண்டும் செயல்களை செய்ய மக்கள் முன் வருவார்கள். பொருளாதார முன்னேற்றம் துரிதமாக நடைபெற மக்களின் பங்கெடுப்பது என்பது மிகவும் அவசியமானதாகும். குறைபாடுள்ள சமூக அமைப்புமுறையில் ஒரு சில பிரிவினர் மட்டும் முன்னேற்றத்தின் பலன்களை கூடுதலாக பெறுவதை அனுமதித்தால் பெரும்பான்மையான மக்கள் பொருளாதார முன்னேற்ற செயல்பாடுகளில் கலந்து கொள்ளமாட்டார்கள். முன்னேற்றத்தின் பலன் ஒஎரு சிலர் கொண்டு செல்வதை முதலாளித்துவத்தின் தோழமை பொருளாதார அமைப்பு என்கின்றார்.

5. ஊழலற்ற அரசு நிர்வாகம்

பொருளாதாரம் முன்னேற்றமடைதலில் ஊழலும் பொருளாதார நேர்மையின்மையும் எதிர்மறை விளைவை உருவாக்கும் காரணிகளாகும். நாட்டு நிர்வாகத்தில் ஊழலை அகற்றாவிட்டால் முதலாளிகளும், வணிகர்களும் நாட்டின் வளங்களை சுரண்டி விடுவார்கள். இதனால் வரி ஏய்ப்பு அதிகரித்து ஊழல் பெருகி முன்னேற்றமே தடைபடும் நிலை உருவாகிவிடும்.

6. முன்னேற்றம் அடைவதற்கான விருப்பம்

விருப்பமிருந்தால்தான் மக்கள் எந்த ஒரு செயலையும் செய்து முடிப்பார்கள் பொருளாதார முன்னேற்றத்துக்கும் மக்களின் விருப்பம் அவசியம். விதிப்படிதான் எல்லாம் நடக்கும் என்பதை பெரும்பாலான மக்கள் நம்புவதும், வறுமையை தலைவிதியின் விளைவு என்றும் ஏற்றுக் கொண்டுவிட்டால், அந்த நாட்டில் பொருளாதார முன்னேற்றத்துக்கான வாய்ப்புக் குறைவாக இருக்கும்.

7. நீதிபோதனை, அறநெறி மற்றும் சமூக மதிப்புகள்

ஒழுக்க நெறிகளும் அறநெறி பற்றுதலும் சந்தையின் திறன்மிக்க செயல்பாட்டுக்கு அடிப்படைகளாகும். டக்ளஸ் சி.நார்த் “மக்கள் நேர்மையற்றவர்களாக இருந்தால் சந்தை செயல்படாது” என்கிறார்.

8. சூதாட்ட முதலாளித்துவம்

மக்கள் தங்களின் வருமானம் மற்றும் நேரத்தின் பெரும்பகுதியை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில், மது அருந்துவதில், சூதாடுவதில் செலவடித்தால் உற்பத்தி நடவடிக்கை பாதிக்கப்பட்டு பொருளாதார முன்னேற்றம் தடைபடும் என தாமஸ் பிக்கெட்டி எடுத்துரைக்கிறார்.

9. பரம்பரை சொத்துரிமை முதலாளித்துவம்

நிலம் உள்ளிட்ட சொத்து பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு பரம்பரையாக வந்து சேர்ந்தால் குழந்தைகள் கடின உழைப்பை விரும்பமாட்டார்கள். இது உற்பத்தித்திறனை குறைத்துவிடும் என தாமஸ் பிக்கெட்டி கூறுகிறார்.

வறுமை நச்சு சுழற்சி

முன்னேற்றம் குறைவாக உள்ள நாடுகளில் குறைவான முன்னேற்றமே முன்னேற்றத்தைக் கூறைவான அளவிலே தொடர்ந்து நீடிக்க செய்யும் சுழற்சியினை உருவாக்குகிறது. நச்சுச் சுழலானது ஒன்றைத் தொடர்ந்து மற்றொன்று ஏழைநாடுகளை தொடர்ந்து வறுமை நிலையிலேயே வைத்திருக்கும் விதத்தில் செயல்படுவதைக் குறிப்பாக ராகனர் நர்க்ஸ் கூறுகிறார். உதாரணமாக ஒரு ஏழையிடம் உண்பதற்கு போதுமான உணவு இல்லை – குறைவான உணவு அவருடைய உடல் நிலையை பலவீனப்படுத்திவிடும். பலவீனமாக இருப்பவரின் உழைக்கும் தகுதி குறைவாக இருக்கும். உழைக்கும் திறன் குறைவாக இருந்தால் குறைவான வருமானம் ஈட்டுவார் வருமானம் குறைவாக இருப்பதால் அவர் ஏழை. அவர் உண்பதற்கு போதுமான உணவு இருக்காது. இந்த சூழல் தொடர்ந்து கொண்டே செல்லும். இந்த வகையான சூழ்நிலையை ஒருநாட்டுக்கு ஒப்பிட்டுப் பார்த்தால் கீழ்க்கண்ட கருத்துரையாக சுருக்கலாம்” ஒரு நாடு ஏழை ஏனென்றால் அது ஏழைகளின் நாடு”.

வறுமையின் நச்சு சுழற்சி தேவைப்பக்கத்திலிருந்தும் அளிப்பின் பக்கத்திலிருந்தும் செயல்படுகிறது.

அளிப்பின் பக்கத்திலிருந்து பார்த்தால், குறைவான உண்மை வருமானம் காரணமாக சேமிப்பு அளவு குறைகிறது. இது முதலீட்டு அளவைக் குறையச் செய்து மூலதன பற்றாக்குறையை உருவாக்குகிறது. இதனால் உற்பத்தித் திறன் குறைந்து வருமானமும் குறைகிறது. இவ்வாறு அளிப்பு பக்கத்தில் வறுமை நச்சு சுழற்சி செயல்படுகிறது.

தேவைப் பக்கத்திலிருந்து பார்த்தால், குறைவான உண்மை வருமானம் காரணமாக தேவையும் குறைவாக இருக்கும். இது முதலீட்டைக் குறைக்கச் செய்யும், இதனால் மூலதன பற்றாக்குறை ஏற்பட்டு உற்பத்தி குறைந்து வருமானத்தை குறைக்கும்.

வறுமையின் நச்சு சுழற்சியை உடைத்தல்

அளிப்பு பக்கத்தில் வறுமையின் நச்சு சுழற்சி குறைவான சேமிப்பு மற்றும் குறைவான முதலீட்டினால் இயங்கத் துவங்குகிறது. ஆகவே பின்தங்கிய நாடுகளில் முதலீட்டையும் மூலதன ஆக்கத்தையும் அதிகரிக்கும் போது நுகர்வு அளவு குறையாமல் இருக்க வேண்டும். இதற்கு கடந்த கால சராசரி சேமிப்பு விகிதத்தை விட இறுதிநிலை சேமிப்பு அளவை அதிகமாக இருக்குமாறு செய்ய வேண்டும்.

தேவைப் பக்கத்தில் வறுமை நச்சு சுழற்சியை உடைத்தெரிய, நர்க்ஸ் சரிசம வளர்ச்சி உத்தியை பரிந்துரை செய்கிறார். ஒரே நேரத்தில் பலவகைத் தொழில்களில் ஒரு நாடு முதலீடு செய்தால் தொழிலாளர்களுக்கு அந்தத் தொழில்களில் வேலை கிடைக்கும். அவர்கள் மற்றத் தொழில்களில் உற்பத்தி செய்த பொருட்களுக்கு நுகர்வோர்களாக மாறுவார்கள். இவ்வாறு ஒவ்வொரு தொழிலிலும் வேலை கிடைத்த தொழிலாளர்கள் தங்களின் வருமானத்தை வேறு தொழிலிலும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை வாங்கும்போது சரிநிகர் சமமான வளர்ச்சியின் மூலம் தேவையின் பக்கத்தில் இயங்கும் வறுமையின் நச்சு சுழற்சியைத் தடுக்க முடியும்.

திட்டமிடல்

திட்டமிடலின் பொருள்

மைய திட்டமிடல் ஆணையத்தால் நன்கு வடிவமைக்கப்பட்ட, முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட குறிக்கோள்களையும், நோக்கங்களையும் அடைவதற்கான வழிமுறையே திட்டமிடல் ஆகும். பொருளாதாரம், அரசியல், சமூக அல்லது ராணுவ நோக்கங்களை திட்டமிடல் மூலம் அடைவதற்கான இலக்குகளாக இருக்கலாம்.

திட்டமிடலின் இலக்கணங்கள்

பொருளாதாரத் திட்டமிடல் என்பது ‘தனியார் உற்பத்தி மற்றும் விநியோக நடவடிக்கைகளை கூட்டாக கட்டுப்படுத்துவது அல்லது ஒடுக்குவதை குறிப்பதாகும்”

  • ராபின்ஸ்

“பொருளாதாரத் திட்டமிடல் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளை அடைய உரிய பொறுப்பில் உள்ளவர்கள் நிதானமாக சிந்தித்து, இருக்கக்கூடிய பொருளாதார வளங்களை அதிக அளவில் பயன்படுத்த சுட்டிக்காட்டும் வழிமுறைகளே ஆகும்”.

  • டால்ட்டன்

இந்தியாவில் திட்டமிடல்

  • ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அடைய வேண்டிய இலக்குகளை, முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட பொருளாதார நோக்கங்களையும், வழிகாட்டுதல்களையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட முடிவுகளையும் திட்டங்களையும் உள்ளடக்கிய வரைபடமே பொருளாதார திட்டமிடல் ஆகும்.
  • தற்போதைய பொருளாதார திட்டமிடல் சிந்தனை மிகவும் புதியது, ஆனால் மார்க்சிச சோசலிசத்தில் அடிப்படையில் ஓரளவு வேரூன்றியுள்ளது. 20 ஆம் நூற்றாண்டில், அறிஞர்கள், கோட்பாட்டாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் ஐரோப்பாவின் நிலையை முன்னிருத்தி, முதலாளித்துவத்தையும், சமூகத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வினையும் நிறுத்த அரசின் தலையிடுதல் அவசியம் என்றனர்.
  • சோவியத் ஒன்றியம் திட்டமிடலை 1928-ல் செயல்படுத்தத் துவங்கியது. பொருளாதாரத் திட்டமிடலே சோவியத் நாட்டை வல்லரசு நாடாக மாற்ற உதவியது.
  • 1930-களில் ஏற்பட்ட பொருளாதாரப் பெருமந்தம் அமெரிக்காவில் மக்களின் வாங்கும் திறனைக் குறைத்து சிக்கலான சூழ்நிலையை உருவாக்கியதால், பொருளாதாரத் திட்டமிடலின் அவசியம் என்னும் கருத்து வலுவடைந்தது. நாட்டின் வளங்கள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் சிறப்பாக ஒதுக்கீடு செய்ய இரண்டாம் உலகப்போரினால் ஏற்பட்ட சூழல் நிர்பந்தத்தை உருவாக்கியது. போரின் விளைவுகளை சமாளிக்க திட்டமிடல்தான் சரியான தீர்வு என்ற சிந்தனை பரவத் தொடங்கியது.
  • இந்திய விடுதலைக்குப்பிறகு 1948-ல் தொழில் கொள்கை அறிவிக்கப்பட்டது. இதில் மையத் திட்டக்குழு மற்றும் கலப்புப் பொருளாதார அமைப்பு முறை ஆகிய இரண்டையும் அமைக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
  • இந்திய அரசியலமைப்பு சட்டம் ஜனவரி 26, 1950 அன்று நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. திட்ட குழு மார்ச் 15, 1950-ல் அமைக்கப்பட்டது. ஏப்ரல் 1, 1951ல் முதல் திட்ட காலம் துவங்கியது. இதில் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலமாக 1951 முதக் 1956 வரை ஏற்படுத்தப்பட்டது. இந்தியாவில் திட்டமிடுதலின் பரிணாம வளர்ச்சியை கீழ்க்கண்ட நிகழ்வுகளிலிருந்து புரிந்துக்கொள்ளலாம்.
  1. சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா (1934) புகழ்பெற்ற பொறியியல் வல்லுநரும் அரசியல்வாதியுமான எம்.விஸ்வேஸ்வரய்யா 1934-ல் இந்தியாவில் திட்டமிடுதலுக்கான அடித்தளத்தை அமைத்தார். அவர் தனது ஆலோசனையாக பத்தாண்டுத் திட்டமொன்றை அவர் எழுதிய “இந்திய பொருளாதார திட்டமிடல்” என்ற புத்தகத்தில் விளக்கியுள்ளார்.
  2. ஜவஹர்லால் நேரு (1938) : “தேசியத் திட்டக் குழு” ஒன்றை அமைத்தார். அன்றைய அரசியல் சூழ்நிலை காரணமாகவும், இரண்டாம் உலகப்போர் ஆரம்பித்தாலும் நேருவின் முயற்சிகள் நின்றுவிட்டன.
  3. பாம்பே திட்டம் (1940) மும்மையின் முன்னனி தொழிலதிபர்கள் பாம்பே திட்டம் என்ற திட்டத்தை 1938-ல் முன்மொழிந்தனர். இது பதினைந்து ஆண்டுகளுக்கான தொழில் முதலீட்டுத் திட்டமாகும்.
  4. எஸ்.என் அகர்வால் (1944) என்பவர் “காந்தியத் திட்டம்” என்ற திட்டத்தை 1944-ல் வழங்கினார். இது வேளாண்மை மற்றும் கிராமியப் பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டமாகும்.
  5. எம்.என்.ராய் (1945) மக்கள் திட்டம் என்பதை வடிவமைத்தார். இது வேளாண்மை உற்பத்தி மற்றும் விநியோகத்தை இயந்திர மயமாக்குவதையும் நுகர்வுப் பொருட்களை அரசே விநியோகம் செய்யவேண்டும் என்பதையும் வலியுறுத்தியது.
  6. ஜெயப்பிரகாஷ் நாராயணன் (1950): “சர்வோதயத் திட்டம்” ஒன்றை முன்மொழிந்தார். இது காந்தி மற்றும் வினோபா பாவே ஆகியோரின் கருத்துக்களின் உத்வேகத்தால் தயாரிக்கப்பட்டத் திட்டமாகும். விவசாயம் மட்டுமல்லாமல் சிறு மற்றும் குடிசைத் தொழில்களுக்கு ஊக்கமளிக்கும் கூறுகளைக் கொண்டத்திட்டமாகும்.

இந்த ஆறுத் திட்டங்களையும் கவனமாக ஆராய்ந்து திட்டக்குழுவை அமைத்து ஐந்தாண்டுத் திட்டங்களாக செயல்படுத்த ஜவஹர்லால் நேரு முடிவெடுத்தார். அவரே இந்திய அரசின் திட்டக் குழுவின் முதல் தலைவராவார்.

திட்டமிடலுக்கு ஆதாரவான கருத்துக்கள்

கீழ்க்கண்ட வகைகளின் திட்டமிடல் வலியுறுத்தப்படுகிறது

  1. நாட்டின் சந்தைகளின் இயக்கத்தை முடுக்கிவிடுதலும் உறுதியாக்குதலும்:

பின்தங்கிய நாடுகளில் சந்தை சக்திகள் சரிவர இயங்காததற்கு அறியாமையும், பிரபலமும் இல்லாததே ஆகும். நாட்டில் பெரும்பாலான பகுதியில் பணமாற்ற பரிமாற்றம் நடைபெறுகிறது. பொருட்கள், உற்பத்திக் காரணிகள், பணம் மற்றும் மூலதன அங்காடிகள் அமைப்புமுறை ஆகியவை ஒழுங்குற அமைக்கப்படவில்லை. எனவே, திட்டமிட்ட பொருளாதாரமே அங்காடிப் பொருளாதாரத்திற்கு சிறந்த மாற்றாக கருதப்படுகிறது.

2. வேலையின்மையை அகற்றுதல்

மூலதன குறைவும், தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பும் ஏற்படுவதால் அதிகரித்துவரும் தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வேலை வாய்ப்பை உருவாக்குவது அரசுகளுக்கு சவாலாக உள்ளது. பின்தங்கிய நாடுகளில் வேலையின்மை மற்றும் மறைமுக வேலையின்மையை அகற்ற திட்டமிடுதல் அவசியமாகும்.

3. சமமான முன்னேற்றம் ஏற்படுத்துதல்:

பொருளாதாரத்தின் பல துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள போதுமான பெரிய நிறுவனங்கள் இல்லாத சூழ்நிலையில் திட்டக்குழுவே சரிசம முன்னேற்றத்தை ஏற்படுத்த உதவும். பின்தங்கிய நாடுகளில் வேளாண்மை, தொழில், சமூகக் கட்டமைப்பு, உள்நாட்டு மற்றும் பன்னாட்டி வாணிகம் ஆகியத் தூறைகளின் முன்னேற்றம் நாட்டின் பொருளாதார முன்னேற்றம் விரைவாக நடைபெறத் தேவைப்படுகிறது.

i) வேளாண் துறை மற்றும் தொழில்துறை முன்னேற்றம்:

வேளாண்துறையும் தொழில்துறையும் ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பதால் வேளாண் துறையும், தொழில் தூறையும் சேர்ந்து முன்னேற்றமடைய வேண்டியுள்ளது. வேளாண்துறையை சீர்படுத்தும்போது அதில் உள்ள உபரியான தொழிலாளர்களை தொழில் துறை ஈர்த்துக்கொள்ளும். வேளாண் துறையின் வளர்ச்சியினால் தொழில் துறைக்கு தேவையான இடுபொருள் கிடைக்கும். இதனால் வேளாண்மையுடன் தொழில்துறையும் வளரும்.

ii) கட்டமைப்பு முன்னேற்றம்: வேளாண்துறை மற்றும் தொழில்தூறையின் முன்னேற்றம் என்பது பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்பு இல்லாமல் முன்னேற்றம் பெறமுடியாது. பாசனக் கால்வாய்கள், சாலைகள், தொடர்வண்டிப்பாதைகள், ஆற்றல் வளம் போன்றவற்றை ஏற்படுத்துதல் என்பது வேளாண் மற்றும் தொழில் துறைக்கு மிக முக்கியமானதாகும். கட்டமைப்பு அமைக்க அதிகமான மூலதனம் மற்றும் நீண்ட பலந்தரும் சில காலங்கள் எடுக்கும், மேலும் குறைவான வெளியீடுகளைத் தரக்கூடியவை. அரசு மட்டுமே வலிமையான கட்டமைப்பை திட்டமிடல் மூலம் ஏற்படுத்த முடியும்.

iii) பண மற்றும் மூலதன அங்காடியின் முன்னேற்றம்: உள்நாட்டு மற்றும் பன்னாட்டு வாணிபங்கள் வளர்ச்சி பெற வேளாந்துறை, தொழில் துறை, சமூக, பொருளாதார கட்டமைப்புகளில் பங்களிப்பும் மட்டுமல்லாது நிதி நிறுவனங்களின் பங்களிப்பு அவசியமானதாகும். பண மற்றும் மூலதன அங்காடி பின்தங்கிய நாடுகளில் குறைவாக உள்ளது. இது தொழில் மற்றும் வாணிப வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. எனவே உறுதியான பணம் மற்றும் மூலதன அங்காடியை உருவாக்க திட்டமிடல் என்பது அவசியமாகும்.

4. திட்டமிடல் வறுமையையும் ஏற்றத்தாழ்வையும் குறைக்கும்:

திட்டமிடல் என்பது மட்டுமே பின்தங்கிய நாடுகள், நாட்டு வருமானம் மற்றும் தலா வருமானத்தை அதிகரிக்கவும், வறுமையும் ஏற்றத்தாழ்வுகளை குறைக்கவும் வேலைவாய்ப்பினை அதிகரிக்கவும் செய்கிறது. இந்த 65 ஆண்டுகளில் இவை நடந்ததா?

எனவே ஆர்தர் லூயிஸ், “பின்தங்கிய நாடுகளில் தேசிய வருவாயை உயர்த்துவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகள் மிகவும் அவசியம், இதற்கு திட்டமிடல் என்பது வழிகளையும், வழிமுறையையும் கொண்ட ஒரு சாதனமாக திகழ்கிறது”

திட்டமிடலுக்கு எதிரான வாதங்கள்

சந்தை இயங்காமல் தோல்வியடைந்ததால் அரசு திட்டமிடல் மூலம் தலையிடும் அவசியம் உருவானது. பொருளாதாரத் திட்டமிடுதலின் முக்கிய நோக்கம் வளர்ந்த நாடுகளில் பொருளாதார நிலைத்தன்மையை அடைவது, பின்தங்கிய நாடுகளில் வளர்ச்சியைப் பெறுவதாகும். திட்டமிடுதல் குறைகளற்ற பொருளாதாரக் கொள்கை எனவும் கருதிவிட முடியாது. இவை தனியார் முயற்சியை தடுக்கும், தேர்ந்தெடுத்தலின் உரிமையை முடக்கவும், நிர்வாகச் செலவு அதிகரிக்கவும், தானாகவே விலை நிர்ணய முறையை சரிசெய்வதை நிறுத்தவும் செய்கிறது. திட்டமிடலுக்கு எதிரான வாதங்களையும் குறைகளையும் கீழே புரிந்து கொள்வோம்.

  1. தன் விருப்பம்போல் செயல்பட இயலாமை

தன் விருப்பம் போல் செயல்பட இயலாததால் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது. திட்டமிடல் கட்டுப்பாடுகளையும் வழிமுறைகளையும் விதித்து நாட்டிற்கு முதுகெலும்பாக உள்ளது. தலையிடா பொருளாதாரத்தில் நுகர்வு, பணியை தேர்வு செய்தல், உற்பத்தி செய்தல் மற்றும் விலை நிர்ணயம் செய்தல் ஆகியவற்றில் தன்விருப்பம் போல் முடிவெடுக்க உள்ள அனுமதி உள்ளது. ஆனால் திட்டமிட்ட பொருளாதாரத்தில் சிக்கலான முடிவுகளை மத்திய திட்டக்குழு எடுக்கிறது. இது நுகர்வோர், உற்பத்தியாளர் மற்றும் பணியாளர்களின் கட்டுப்படுத்துகிறது. ஹேயக் எழுதிய “அடிமைத்தனத்திற்கான பாதை” என்னும் நூலில் மையப்படுத்தப்பட்ட திட்டமிடலில் மக்களில் பொருளாதார விடுதலைக் கட்டுப்படுத்தி நாட்டை மந்தநிலைக்கு இட்டுச் செல்லும், என கருத்து தெரிவிக்கிறார். அரசின் முடிவுகள் அனைத்தும் எப்பொழுதும் சரியாக இருப்பதில்லை. ஆனால் தனியார் உற்பத்தியாளர்களுக்கு சுதந்திரம் வழங்கும்போது, அதனை தவறாக பயன்படுத்தப்பட்டு, மக்களின் நலன் புறக்கணிக்கப்பட்டு, இலாபம் ஒன்றுக்கே மிக முக்கியத்துவம் வழங்கப்படும்.

2. தன் முனைப்புக் குறைதல்

மையப்படுத்தப்பட்டத் திட்டமிடலில் நடவடிக்கைகளில் ஊக்கப்படுத்துதல் மற்றும் புதுமைகளை புகுத்துதல் ஆகியவற்றுக்கு ஊக்கமிருக்காது. திட்டமிடுதலானது வழக்கமான செயல்முறைகளைப் பின்பற்றி வளர்ச்சியில் தேக்கத்தை உண்டுபண்ணும். இது வளர்ச்சியைக் கீழ்க்கண்ட வழிகளில் தடுக்கிறது.

அ. தனியார் உரிமை இல்லாதது, இலாப நோக்கை குறைத்து தொழில் முனைவோர் திறம்பட முடிவு எடுப்பதையும், இடர் எதிர்நோக்குதலையும் குறைக்கிறது. அபரிதமான இலாபமே புதிய வழிமுறைகளைத் தேடவும், அதனை செயல்படுத்தவும், அதில் வரும் இடர் தாங்கி புதுமையை புகுத்தி இலாபத்தை பெற தூண்டும். ஆனால் திட்டமிடுதலில் இந்தத் தூண்டுதல் இல்லை.

ஆ. திட்டமிடல் பொருளாதாரத்தில் அனைவருக்கும் அவர்களது முயற்சி, திறமை மற்றும் உற்பத்தி திறன் ஆகியவற்றை கணக்கில் கொள்ளாமல் சமமான பலன்கள் வழங்கப்படுவதால், எவரும் இடர்பாடுகளை ஏற்று புதிய நிறுவனத்தை துவக்க முன் வரமாட்டார்கள்.

இ. உயர் பதவியில் உள்ள அலுவலர்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் போக்கு திட்டமிடலில் தவிர்க்க இயலாத ஒன்றாக உள்ளது. சமவுடைமை பொருளாதார நாடுகள் திட்டமிடலில் சந்திக்கும் பிரச்சனை இது. அரசுப் பணிகளைப் பயன்படுத்துவதில் கால விரயமாகிறது. இது பொருளீட்டும் நடவடிக்கையையே சீர்குலைக்கிறது.

3. அதிகமான நிர்வாக செலவு

திட்டமிடலின் நோக்கமென்னவோ தொழில்மயமாக்கல், சமூக நீதி, நாட்டு நிலைமையை சமப்படுத்துதல் போன்ற உயர்வானவை ஆனால் அதற்கு நாடு செலவிடும் தொகை அடையவுள்ள பலனைவிட அதிகமாக இருக்கும். புள்ளிவிவரங்களை சேகரித்து, தொகுத்து திட்டங்களைத் தயாரித்து செயல்படுத்தி நிர்வகிப்பதில் தேவைப்படும் பணியாளர் எண்ணிக்கை மிக அதிகம். லூயிஸ் இதைப்பற்றி குறிப்பிடும்பொழுது “திட்டமிடல் சிறப்பாக அமையவேண்டுமானால் கூடுதலான திட்டமிடல் நிபுணர்கள் தேவை என்கிறார்”. சரியான புள்ளிவிவரம் இல்லாமை, தவறாக கணிப்பது, திட்டமிடுதலை சரிவர செயல்படுத்தாது போன்றவை வளங்களை வீணடித்து உபரி அல்லது பற்றாக்குறை நிலைக்கு கொண்டு செல்லும்.

4. முன்கணிப்பதில் உள்ள சிரமங்கள்

அரசு தடையில்லாத நாட்டில், விலை இயக்க முறையில், விலை, தேவை மற்றும் அளிப்பு ஆகியவை தானாக இயங்கி ஒன்றையொன்று சரி செய்து கொள்கிறது. உற்பத்தியாளர்கள் தங்களது அளிப்பையும், நுகர்வோர்கள் தங்களது தேவைகளையும் விலை மாற்றத்துக்கேற்றவாறு சரிசெய்து கொள்வார்கள். திட்டமிடல் நாடுகளில் இப்படி ஒரு வசதி இல்லை. நுகர்வு மற்றும் உற்பத்தி அளவுகளை துல்லியமாக முன்கூட்டியே நிர்ணயிப்பது கடினம். உபரி அளிப்போ, உபரித் தேவையோ அங்காடிப் பொருளாதாரத்தில் ஏற்படலாம். அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகளில் இது போன்று ஏற்பட்டுள்ளது.

திட்டமிடலின் குறைகளனைத்தும் மையப்படுத்தப்பட்ட திட்டமிடல் முறையின் குறைகளாகும். பரவலாக்கப்பட்டத் திட்டமிடல் முறை மற்றும் கலப்புப் பொருளாதார நாடுகளில் தனியார் மற்றும் அரசுத்துறைகளுக்கு சமமான இடம் கொடுத்து சிறப்பாக செயல்படுகிறது. திட்டமிட்டப் பொருளாதாரம் சந்தைப் பொருளாதாரத்தைவிட திறம்பட செயல்படுவதாகவே தோன்றுகிறது. எனவே பொருளாதார முன்னேற்றத்துக்காகத் திட்டமிடுவதா வேண்டாமா என்பதல்ல பிரச்சனை. அரசு தலையிடுதலையும் , சந்தை இயங்குதலையும் சரியான விகிதத்தில் கலந்து அனுமதிப்பதால் துரிதமான அதேநேரத்தில் நிலையான பொருளாதார முன்னேற்றத்தையும், சமூக சமத்துவத்தையும் திட்டமிடுதல் மூலம் சாதிக்க முடியும் என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.

திட்டமிடலின் வகைகள்

பொருளாதார முன்னேற்ற இலக்குகளை ஒரு குறிப்பிட்டக்கால வரம்புக்குள் அடைய மேற்கொள்ளப்படும் முயற்சிகளைக் குறிக்கும் செயல்பாடே பொருளாதாரத் திட்டமிடலாகும். திட்டமிடல் கோட்பாடு மற்றும் செயல்படுத்தப்படும் விதங்களின் அடிப்படையில் பலவகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

  1. மக்களாட்சி மற்றும் சர்வாதிகாரத் திட்டமிடல் (Democratic vs Totalitarian Olanning)
  • திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் செயல்படுத்துதலில் உள்ள அனைத்து நிலைகளிலும் மக்கள் பங்கெடுத்துக்கொள்ளும் திட்டமிடலே மக்களாட்சித் திட்டமிடல். அரசு, தனியார் மற்றும் பொது மக்களை உள்ளடக்கிய மிகப்பரவலான ஆலோசனைகளை பெற்றுத் தயாரிக்கப்பட்டு, அவர்களாலேயே செயல்படுத்தப்படும் திட்டமிடல் முறையாகும்.
  • திட்டக்குழுவினால் தயாரிக்கப்பட்ட திட்ட வழிமுறைகளை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. இதனை அந்நாட்டின் பாராளுமன்றம் ஏற்கவோ அல்லது மறுக்கவோ அல்லது மாற்றியக்கவோ செய்யும்.
  • சர்வாதிகாரத் திட்டமிடலில் பொருளாதார நடவடிக்கைகள் மத்திய கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டுதலின் படி ஒரே ஒரு திட்டமாக இருக்கும். நுகர்வு, பரிவர்த்தனை மற்றும் விநியோகம் ஆகிய அனைத்துமே அரசு கட்டுப்பாட்டிலிருக்கும். திட்டக்குழுவே அதிகாரமிக்க அங்கமாகும். இலக்குகள், செயல் முறைகள், ஒதுக்கீடுகள் மற்றும் செயல்படுத்துதல் ஆகியவை திட்டக் குழுவால் முடிவு செய்யப்படும்.

சர்வாதிகார திட்டமிடல்

மையத் திட்டக் குழு ஒரு திட்டத்தை கையில் வைத்துக் கொண்டு நாட்டின் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தி, விரும்பிய திசையில் நடைபெற வைப்பதே சர்வாதிகாரத் திட்டமிடல்.

2. மையப்படுத்தப்பட்ட திட்டமிடல் மற்றும் பரவலாக்கப்பட்ட திட்டமிடல் (Centralized Vs Decentralized Planning)

  • மையப்படுத்தப்பட்ட திட்டமிடலில், அனைத்து நிலைகளிலும் திட்டம் தொடர்புடைய நடவடிக்கைகள் மையத் திட்டக்குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
  • திட்டக்குழுவே திட்டம் தீட்டுதல், நோக்கங்களை நிர்ணயித்தல், இலக்குகளைக் கண்டறிதல் மற்றும் தீர்மானித்தல் ஆகியவற்றை செய்கிறது. ‘மேலிருந்து திட்டமிடல்’ என்றும் இதைக் கூறலாம்.
  • பரவலாக்கப்பட்ட திட்டமிடுதலில் மைய அமைப்புகளின் கட்டுப்பாடுகளின்றி, உள்ளூர் அமைப்புகள் மற்றும் உள்ளூர் நிறுவனங்கள், திட்டங்களைத் தீட்டுதல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றை செய்யும். எனவே இதை ‘கீழிருந்து திட்டமிடல்’ எனவும் அழைக்கலாம்.

3. வழிகாட்டும் திட்டமிடல் மற்றும் தூண்டும் திட்டமிடல்

  • திட்டக்குழு வழிகாட்டுதல் வழங்கி, திட்டம் தயாரித்து மேலும் திட்டத்தை ஆணையிடுதல் மூலம் செயல்படுத்தினால் அது வழிகாட்டுதல் திட்டமிடல் ஆகும். முன்பே முடிவு செய்யப்பட்ட இலக்குகள் மற்றும் முன்னுரிமைகள் அடிப்படையில் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • திட்டக்குழு நிர்ணயம் செய்த இலக்குகளை பல்வேறு நிதியியல் மற்றும் பணவியல் வழிமுறைகள் மூலம் ஊக்கங்கள் அளித்து, அதன் நடவடிக்கைகளை மக்களால் மேற்கொள்ளப்படுவதே தூண்டும் திட்டமிடல் என்கிறோம்.
  • மானியம் போன்ற சலுகைகள் கொடுத்து ஒரு பொருளை உற்பத்தி செய்ய வைக்க முடியும். தூண்டும் திட்டமிடுதலில் தனிமனித விடுதலையைக் குறைக்காமல் அதே பலனை பெற வைக்கும் தன்மைக் கொண்டது.

4. சுட்டிக்காட்டும் திட்டமிடலும் கட்டாயமானத் திட்டமிடலும் (Indicative Vs Imperative Planning)

  • கலப்பினப் பொருளாதார நாடுகளுக்கு பொருத்தமான திட்டமிடல் முறையாக “மோனட் திட்டம்” என்ற பெயரில் பிரான்ஸ் நாடானது 1947 லிருந்து 1950 வரை செயல்படுத்தியது. திட்டக்குழு இலக்குகளை அடையும் வழிமுறைகளை குறிப்புரைகளாக தயாரித்தது, தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் தொழிற்சங்கத் தலைவர்கள், நுகர்வோர் குழுக்கள் நிதி நிறுவனங்கள் மற்றும் பிற துறை நிபுணர்களிடம் கலந்து ஆலோசித்து செயல்படுத்தும் திட்டமிடலே சுட்டிக்காட்டும் திட்டமிடல் ஆகும்.
  • அரசு பொருளாதார நடவடிக்கைகளை செயல்படுத்த, இலக்குகளை நிர்ணயம் செய்து, அவற்றை தனியார் நிறுவனங்கள் அடைவதற்கு தேவையான வசதிகளை அமைத்துக்கொடுத்து, ஒருங்கிணைக்கும் பணியை மட்டும் மேற்கொள்ளும் வகையில் திட்டமிடல் அமைந்திருக்கும்.
  • கண்டிப்பானத் திட்டமிடல் முறையில், திட்டம் தயாரித்தல் மற்றும் செயல்படுத்துகளில் அரசு அதிகாரமிக்கது. திட்டம் தயாரித்து முடித்துவிட்டால் எவ்வித தடைகளுமின்றி திட்டங்கள் செயல்படுத்தப்படும். ரஷ்யாவின் அப்போதைய குடியரசுத் தலைவர் ஸ்டாலின் “நமது திட்டம் நமக்கான அறிவுரைகளாகும்” என்பதை பயன்படுத்தினார்.
  • அனைத்து வளங்களும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும். இங்கு நுகர்வோர் இறையான்மை இருக்காது. அரசின் கொள்கைகளும் வழிமுறைகளும் மாறாது நிலையாக இருக்கும். சீனாவும், ரஷ்யாவும் இந்த திட்டமுறைகளை கடைப்பிடிக்கும் நாடுகளாகும்.

5. குறுகிய கால, நடுத்தரக் கால மற்றும் நீண்டகாலத் திட்டமிடல்

  • ஓராண்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறுகியகாலத் திட்டங்களாகும். “கட்டுப்படுத்தும் திட்டம்” , “ஆண்டுத் திட்டம்” எனவும் அறியப்படுகிறது.
  • மூன்றிலிருந்து ஏழு ஆண்டு காலத்தில் முடிவடையும் திட்டங்கள் நடுத்தரக் காலத்திட்டங்கள் ஆகும். பொதுவாக ஐந்தாண்டுத் திட்டங்களாகவே செயல்படுத்தப்படுகின்றன, நிதி மட்டுமல்லாமல் கட்டமைப்பு வளங்களும் இத்திட்டமிடல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
  • பத்திலிருந்து முப்பது ஆண்டுகளுக்கு தீட்டப்படும் திட்டங்கள் நீண்டகாலத் திட்டமிடல். இவை ‘முன்னோக்குத் திட்டங்கள்’ எனவும் அழைக்கப்படுகிறது. பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றங்களை கொண்டுவருவதே நீண்டகால திட்டத்தின் அடிப்படையாகும்.

6. நிதித்திட்டமிடல் மற்றும் உருவப் பொருள் திட்டமிடல் (Financial Vs physical planning)

திட்டத்தை செயல்படுத்தத் தேவையான நிதியை பண மதிப்பில் ஒதுக்கீடு செய்யும் திட்டமிடலே நிதித்திட்டமிடலாகும். உருவப்பொருள் திட்டமிடல் என்பது மனித வளம், இயற்கை வளம் மற்றும் இயந்திரங்கள் போன்ற பருமப் பொருட்களை ஒதுக்கீடு செய்யும் திட்டமிடல் முறையாகும்.

7. பணிகள் திட்டமிடல் மற்றும் கட்டமைப்புத் திட்டமிடல் (Functional Vs Structural Planning)

ஒரு நாடு பெற்றுள்ள பொருளாதார மற்றும் சமூக அமைப்பு முறையை மாற்றாமல் பொருளாதார சீர்கேடுகளை நீக்குவதற்கு வழிகாட்டுதல்கள் மட்டுமே செய்யும் திட்டமிடல், பணிகள் திட்டமிடலாகும்.

பொருளாதார அமைப்புமுறையில் பொருத்தமான மாற்றங்களை செய்து இலக்குகளை அடையும் திட்டமிடலே கட்டமைப்புத் திட்டமிடலாகும். இவ்வகையான திட்டமிடல் பெரும்பாலும் பின்தங்கிய நாடுகளில் இது காணப்படுகிறது.

8. விரிவான மற்றும் பகுதித் திட்டமிடல்

நாட்டின் அனைத்துப் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான திட்டமிடல் விரிவான திட்டமிடலாகும். ஒரு சில துறைகளுக்கு மட்டுமே இலக்கு நிர்ணயம் செய்து அதை அடைய தீட்டப்படும் திட்டம் பகுதித் திட்டமாகும்.

நிதி ஆயோக் (NITI Aayog)

  • National Institution for Transforming India என்பதன் சுருக்கமே நிதி ஆயோக் என்பதாகும். இதனை இந்தியாவை உருமாற்றம் செய்வதற்கான தேசிய நிறுவனம் என புரிந்துக் கொள்ளலாம்.
  • இதனை ஆகஸ்டு 13, 2014-ல் திட்டக்குழுவுக்கு பதிலாக இந்த நிறுவனத்தை உருவாக்கும் முடிவை இந்திய அரசு எடுத்தது. இதன்படி ஜனவரி 1, 2015 அன்று அமைச்சரவைக் குழுவின் தீர்மானத்தின் மூலமாக நிதி ஆயோக் அமைக்கப்பட்டது.
  • இந்தியப்பிரதமரே நிதி ஆயோக்கின் தலைவர். மத்திய அமைச்சர்கள் உறுப்பினர்கள் ஆவர். இதன் துணைத்தலைவரே நிர்வாகத் தலைவராவார். அரவிந்த பனகரியா இதன் முதலாவது துணைத்தலைவராக செயல்பட்டு வருகிறார்.

நிதி ஆயோக்கின் பணிகள்

நிதி ஆயோக்கின் பணிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

1. கூட்டுறவு மற்றும் போட்டி அடிப்படையிலான கூட்டாட்சி

மாநிலங்கள் நாட்டின் கொள்கை வடிவமைப்பதில் துடிப்புடன் பங்கெடுக்கத் தேவையானவற்றை செய்வது

2. நாட்டின் நிகழ்வுகளின் மாநிலங்களைப் பங்கெடுக்க வைத்தல்

நாட்டின் முன்னேற்றத்திற்கான முன்னுரிமைகள் மற்றும் உத்திகளில் மாநிலங்களையும் இணைத்துக் கொள்ளுதல்

3. பரவலாக்கப்பட்டத் திட்டமிடல்

திட்டமிடல் நடைமுறையை கீழிருந்து மேல் என்ற முறையில் மாற்றம் கொண்டுவருதல்

4. தொலை நோக்கு மற்றும் காட்சித் திட்டமிடல்

நாட்டின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு இடைக்கால மற்றும் நீண்டகால தொலை நோக்கு கட்டமைப்பை வடிவமைத்தல்.

5. நிபுணர்களின் கூட்டமைப்பை உருவாக்குதல்

அரசின் கொள்கைகள் வடிவமைப்பதிலும், திட்டங்களை செயல்படுத்துவதிலும் அரசுக்கு வெளியில் உள்ள நிபுணர்கள் ஒன்றிணைந்து பங்குபெற வைத்தல்.

6. உகந்ததாக்குதல்

அரசின் பல படிநிலைகளில் பணியாற்றுபவர்களை குறிப்பாக பலதுறைகள் ஒன்றிணைந்து செயல்படுமிடங்களில் ஏற்படும் பிரச்சனைகளை களைய தொடர்பு கொள்ளுதல், ஒருங்கிணைத்தல், கைகோர்த்தல் மற்றும் கூட்டிணைத்தல் மூலம் உகந்த பணியை நிதி ஆயோக் செய்கிறது.

7. சச்சரவுத் தீர்த்தல்

அரசுத் திட்டங்களை வேகமாக செயல்படுத்த மாநில மைய அரசுகளுக்கு இடையில், மாநிலங்களுக்கிடையில், அரசுத் துறைகளுக்கிடையில் மற்றும் பிற துறைகளுக்கிடையில் நிலவும் சச்சரவுகளுக்குத் தீர்வுகான ஒரு தளத்தை அமைத்துக் கொடுக்கிறது.

8. வெளியுலகத் தொடர்பை ஒருங்கிணைத்தல்

வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனைகளையும் பன்னாட்டு நிறுவனங்களிலிருந்து கிடைக்கும் நிதி வளங்களையும் நாட்டின் முன்னேற்றத்துக்குப் பயன்படும் வகையில் பெற்றுத்தரும் பொறுப்பு அலுவலகமாக நிதி ஆயோக் செயல்படும்.

9. உள்நாட்டு ஆலோசனை வழங்குதல்

கொள்கைகள் மற்றும் திட்டங்கள் வகுக்க மாநில மற்றும் மைய அரசுகளுக்கு ஆலோசனைகளை வழங்குகிறது.

10. திறன் உருவாக்குதல்

அரசுத் துறைகளில் திறனை வளர்க்கவும் தொஇழ்ல் நுட்பத்தை மேம்படுத்தவும், உலக அளவில் தற்போது நடைமுறையில் உள்ள தர அளவுகோள்களை கொண்டும், மேலாண்மை நுட்பங்கள் வழியாகவும் திறன் உருவாக்கும் பணியையும் நிதி ஆயோக் செய்கிறது.

11. கண்காணித்தல் மற்றும் மதிப்பிடுதல்

அரசு செயல்படுத்தும் திட்டங்களை நிதி ஆயோக் கண்காணித்து அதன் விளைவுகளை மதிப்பீடும் செய்கிறது.

அடல் புத்தாக்க கொள்கை, ஆயூஸ்மான் பாரத் அணுகுமூறை ஆகியவை தண்ணீர் வளங்களை பாதுகாக்கும் விதமாகவும், இந்திய மருத்துவ கழகத்திற்கு தேசிய மருத்துவ வாரியம் என பெயர் மாற்றம் செய்வதற்கும் நாடாளுமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது நிதி ஆயோக்.

நிதி ஆயோக் பொறுப்புணர்வையும் உருவாக்குகிறது. இதன் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அலுவலகம் அரசின் பல்வேறு துறைகளின் அலுவலகங்களில் புள்ளி விவரத்தை சேகரித்து அவற்றின் செயல்பாட்டை கண்காணிக்கிறது. மாநிலங்களையும் வரிசைப்படுத்தி போட்டியடிப்படையிலான கூட்டாட்சி உணர்வை வளர்க்கிறது. நிதி ஆயோக்கின் வெற்றியை குறிப்பிட்ட காலங்களுக்குப் பிறகே கணிக்க முடியும்.

தொகுப்புரை

இந்த அத்தியாயத்தின் முதல் பகுதியில், 20ம் நூற்றாண்டில் பொருளாதார வளர்ச்சியின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தது. பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் என்ற கருத்து ஒன்றுபோல் இருந்தாலும் சிறு வித்தியாசம் உள்ளதை எடுத்துரைத்தது. பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிக்கும் பல காரணிகளை பொருளாதாரம் சார்ந்த காரணிகள், பொருளாதாரம் சாரா காரணிகள் என வகைப்படுத்தப்பட்டது. பொருளாதார முன்னேற்றம் தடைபடுவதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் வறுமை நச்சு சுழற்சி முக்கிய காரணியாக காணப்படுகிறது. அத்தியாயத்தின் இரண்டாம் பகுதி திட்டமிடுதலை எடுத்துரைக்கீறது. அங்காடி அமைப்பின் தோல்விதான் திட்டமிடுதலுக்கு வழிவகுத்தது. இவை ரஷ்யா மற்றும் இந்தியா போன்ற கலப்பு பொருளாதார நாடுகளுக்குப் பரவியது. பலகாரணங்களும், விவாதங்களும் திட்டமிடலுக்கு சாதகமாகவும் சில காரணங்கள் பாதகமாகவும் செயல்படுகின்றது. திட்டமிடும் முறைகள் அரசின் கட்டுப்பாடு அடிப்படையில் பல்வேறு வகைகளாக காணப்படுகிறது. இது சமவுடைமை நாடுகளில் சர்வாதிகார முறையும், பிரான்ஸ் போன்ற நாடுகளில் மக்களாட்சி மற்றும் சுட்டிக்காட்டும் திட்டமிடலும் உள்ளது. இந்தியத் திட்டக்குழுவை நீக்கிவிட்டு நிதி ஆயோக் என்ற புதிய நிறுவனம் துவங்கப்பட்டதையும் இந்த பாடத்தில் கற்றுக்கொண்டோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!