Samacheer NotesTnpsc

மத்திய அரசு Notes 10th Social Science Lesson 8 Notes in Tamil

10th Social Science Lesson 8 Notes in Tamil

8. மத்திய அரசு

அறிமுகம்

இந்திய நாட்டின் உயர்ந்த அரசாங்கம் அமைப்பு மத்திய அரசு ஆகும். இதன் தலைமையகம் புதுடெல்லியில் அமைந்துள்ளது. இந்திய அரசியலமைப்பின் பகுதி V இல் 52 முதல் 78 வரையிலான சட்டப்பிரிவுகள் மத்திய அரசின் நிர்வாகம் பற்றி குறிப்பிடுகிறது. நமது அரசியலமைப்புச் சட்டம் மக்களாட்சி அடிப்படையிலான அரசாங்கத்தை நமக்கு வழங்குகிறது. இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் இந்தியாவின் பரந்த மற்றும் பன்முகத் தன்மையைக் கருத்தில் கொண்டு இந்தியாவிற்கு கூட்டாட்சி முறையிலான அரசை வழங்கியுள்ளனர்.

மத்திய அரசு மூன்று அங்கங்களைக் கொண்டது. அவை நிர்வாகம், சட்டமன்றம், நீதித்துறை ஆகியனவாகும். மத்திய நிர்வாகம், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதம அமைச்சரைத் தலைவராகக் கொண்ட அமைச்சரவைக் குழு மற்றும் இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் ஆகியோரை உள்ளடக்கியது ஆகும். மத்திய சட்டமன்றம் நாடாளுமன்றம் என்றழைக்கப்படுகிறது. இது இரண்டு அவைகளைக் கொண்டது. அவை மாநிலங்களவை (ராஜ்ய சபா) மற்றும் மக்களவை (லோக் சபா) ஆகியனவாகும். மத்திய நீதித்துறை உச்சநீதிமன்றத்தைக் கொண்டுள்ளது.

இந்தியக் குடியரசுத் தலைவர்

நமது அரசியலமைப்புச் சட்டம் நாடாளுமன்ற முறையிலான அரசாங்கத்தை நமக்கு அளித்துள்ளது. மத்திய அரசின் நிர்வாகத் தலைவர் குடியரசுத் தலைவர் ஆவார். அவர் பெயரளவில் நிர்வாக அதிகாரம் பெற்றவர் ஆவார். அவர் இந்தியாவின் முதல் குடிமகன் ஆவார். அவர் முப்படைகளின் தலைமை தளபதியாகச் செயல்படுகிறார். நீதித்துறையை அமைக்கும் பொறுப்பு அவருக்கு உண்டு. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 53ன் படி குடியரசுத் தலைவர் நேரடியாகவோ அல்லது அவருடைய சார்நிலை அலுவர்கள் மூலமாகவோ மத்திய அரசின் நிர்வாக அதிகாரங்களை அரசியலமைப்பின்படி செயல்படுத்துகிறார்.

குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகள்

குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கான தகுதிகளை அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ளது.

  • இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • 35 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வெஏண்டும்.
  • மத்திய அரசிலோ, மாநில அரசிலோ அல்லது உள்ளாட்சி அமைப்புகளிலோ ஊதியம் பெறும் பதவியில் இருத்தல் கூடாது.
  • மக்களவை உறுப்பினராவதற்கான தகுதியினைப் பெற்றிருத்தல் வேண்டும்.
  • அவரின் பெயரைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வாக்காளர் குழுவிலுள்ள பத்து வாக்காளர்கள் முன்மொழியவும் மேலும் பத்து வாக்காளர்கள் வழிமொழியவும் வேண்டும்.

குடியரசுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்ட மன்ற உறுப்பினராகவோ பதவி வகிக்கக் கூடாது. ஒருவேளை பதவி வகிக்கும் பட்சத்தில் குடியரசுத் தலைவராக அவர் பதவி ஏற்கும் நாளில் அப்பதவி காலியானதாகக் கருதப்படும்.

குடியரசுத் தலைவருக்கானத் தேர்தல்

  • குடியரசுத் தலைவர் ஒற்றை மாற்று வாக்கு மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின் படி வாக்காளர் குழுமத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
  • வாக்காளர் குழுவம் என்பது மாநிலங்களவை மற்றும் மக்களவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், தேசிய தலைநகர் டெல்லி, மற்றும் புதுச்சேரியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாகும்.
  • குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு உறுதிமொழி செய்து வைக்கிறார்.
  • குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாகும். அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட தகுதி உடையவர் ஆவார்.
  • புதுதில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன் – குடியரசுத் தலைவரின் இல்லம் ஆகும். அவருடைய இல்லம் மற்றும் அலுவலகம் இரண்டும் ஒரே கட்டத்தில் அமைந்துள்ளன. இருந்த போதிலும் அவருக்கு இருப்பிடத்துடன் கூடிய அலுவலகங்கள் மேலும் இரண்டு இடங்களில் உள்ளன. அங்கு வருடத்திற்கு ஒருமுறை சென்று தன்னுடைய அலுவலக பணிகளை அவர் மேற்கொள்கிறார். அவைகள் சிம்லாவில் உள்ள ரிட்ரீட் கட்டடம் (The Retreat Building) மற்றுன் ஹைதராபாத்தில் உள்ள ராஷ்டிரபதி நிலையம் ஆகும். இவைகளில் ஒன்று வடக்கிலும் மற்றொன்று தெற்கிலும் அமைந்துள்ளது. இது நாட்டின் ஒற்றுமையையும், மக்களின் பல்வேறுபட்ட கலாச்சாரத்தின் ஒற்றுமையையும் பரைசாற்றுகின்றது.

குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்

குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளைப் பின்வரும் தலைப்புகளின் கீழ் விரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

நிர்வாக அதிகாரங்கள்

  • இந்திய அரசியலமைப்புச் சட்டம் மத்திய அரசின் அனைத்து நிர்வாக அதிகாரங்களையும் குடியரசுத் தலைவருக்கு வழங்குகிறது.
  • அரசியலமைப்பு சட்டப்பிரிவு 77ன் படி மத்திய அரசின் ஒவ்வொரு நிர்வாக நடவடிக்கையும் குடியரசுத் தலைவரின் பெயராலேயே மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • நிர்வாகம் திறம்பட செயல்பட முக்கிய அலுவலங்களுக்கானப் பல நியமனங்களைக் குடியரசுத்தலைவர் மேற்கொள்கிறார்.
  • பிரதம அமைச்சரையும், மற்ற அமைச்சர்களையும் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். அவர் பிரதம அமைச்சரின் ஆலோசனைப் படி அமைச்சரவை உறுப்பினர்களுக்கு துறைகளை ஒதுக்கீடு செய்கிறார்.
  • இந்தியாவின் மிக முக்கிய பதவிகளான மாநில ஆளுநர்கள், உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள், இதர நீதிபதிகள், இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் , தலைமைக் கணக்கு தணிக்கையாளர், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் இதர உறுப்பினர்கள், மற்ற நாடுகளுக்கான தூதர்கள் மற்றும் உயர் ஆணையர்கள் ஆகியோரை குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார்.
  • குடியரசுத் தலைவர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் நிலையை ஆய்வு செய்ய ஓர் ஆணையத்தை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் ஆவார். முப்படைகளின் தலைமை தளபதியான குடியரசுத் தலைவர், இராணுவப்படை, கப்பற்படை, விமானப்படை தளபதிகளை நியமனம் செய்கிறார்.

இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்

  1. திரு. ராஜேந்திர பிரசாத் 1950 -1962
  2. திரு, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1962 – 1967
  3. திரு. ஜாகிர் உசேன் 1967 – 1969
  4. திரு. வி.வி. கிரி 1969 – 1974
  5. திரு. பக்ருதீன் அலி அஹமத் 1974 – 1977
  6. திரு. நீலம் சஞ்சீவ் ரெட்டி 1977 – 1982
  7. திரு. கியானி ஜெயில் சிங் 1982 – 1987
  8. திரு. ஆர். வெங்கடராமன் 1987 – 1992
  9. திரு. சங்கர் தயாள் சர்மா 1992 – 1997
  10. திரு. கே. ஆர். நாராயணன் 1997 – 2002
  11. திரு.ஏ.பி.ஜே. அப்துல்கலாம் 2002 – 2007
  12. திருமதி, பிரதீபா பாட்டீல் 2007 – 2012
  13. திரு. பிரனாப் முகர்ஜி 2012 – 2017
  14. திரு. ராம் நாத் கோவிந்த் 2017 முதல்

சட்டமன்ற அதிகாரங்கள்

  • குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கிறார். பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை இவர் உரையாற்றி துவக்கி வைக்கிறார். மேலும் ஒவ்வொரு ஆண்டின் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் இவருடைய உரையுடன் துவங்குகிறது. குடியரசுத் தலைவர் ஆண்டுக்கு இரண்டுமுறை நாடாளுமன்றத்தைக் கூட்டுகிறார்.
  • அவர் நாடாளுமன்றத்தின் எந்தவொரு அவையிலும் ஒரு சட்ட மசோதா நிலைவையில் இருந்தாலும் அது குறித்து செய்தி அனுப்பலாம்.
  • குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற பின்னரே அனைத்து மசோதாக்களும் சட்டமாகின்றன. நிதி மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்றி நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யமுடியாது.
  • நாடாளுமன்றத்தின் இரு அவைகளையோ அல்லது ஏதேனும் ஒரு அவையின் கூட்டத்தையோ குடியரசுத் தலைவர் முடிவுக்குக் கொண்டுவரலாம்.
  • மக்களவையின் ஐந்து ஆண்டுகாலம் முடியும் முன்னரே அதனைக் கலைக்கும் அதிகாரமும் இவருக்கு உண்டு.
  • கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு மற்றும் சமூகப் பணி ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் 12 நபர்களைக் குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு நியமிக்கிறார். மேலும் ஆங்கிலோ-இந்தியர் சமூகத்தைச் சேர்ந்த 2 நபர்களை மக்களவையில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என்று கருதும்பட்சத்தில் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.

நிதி அதிகாரங்கள்

  • நிதி மசோதாம் குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்குப் பின்னரே நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும். மத்திய அரசின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினைக் குடியரசுத் தலைவரின் அனுமதி பெற்ற பின்னரே மத்திய நிதி அமைச்சர் மக்களவையில் சமர்ப்பிக்கிறார்.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்திய அவசரகால நிதியினைக் குடியரசுத் தலைவரிடம் அளித்துள்ளது. அவரின் பரிந்துரை இன்றி எந்தவொரு மானியக் கோரிக்கையையும் கொண்டுவர முடியாது.
  • இந்தியாவின் அவசர நிதியிலிருந்து அரசின் எதிர்பாரா செலவினங்களை மேற்கொள்ளும் அதிகாரம் அவருக்கு மட்டுமே உண்டு.
  • ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு நிதிக்குழுவினை அமைக்கிறார். அல்லது மத்திய, மாநில அரசுகளின் வருவாயை பகிர்ந்து கொள்ள மாநிலங்கள் கோரிக்கை வைக்கும் பட்சத்தின் முன்கூட்டியே நிதிக் குழுவினை அவர் அமைக்கிறார்.

நீதி அதிகாரங்கள்

  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 72-வது சட்டப்பிரிவு நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஒருவரின் தண்டனையைக் குறைக்கவும், ஒத்திவைக்கவும், தண்டனையிலிருந்து விடுவிக்கவும், மன்னிப்பு வழங்கவும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.
  • நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட அனைத்து தண்டனைகள், மத்திய சட்டத்திற்கு எதிராகச் செயல்பட்டதால் வழங்கப்பட்ட தண்டனைகள், மரண தண்டனைகள் ஆகிய இவற்றுள் அடங்கும். இவர் தன்னுடைய அதிகாரத்தைச் செயல்படுத்துவதில் (நாடாளுமன்றத்தால் அவருக்கு எதிராக அரசியல் குற்றச்சாட்டு கொண்டு வரும் போது தவிர) எந்த நீதிமன்றத்திற்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை.

இராணுவ அதிகாரங்கள்

  • மத்திய பாதுகாப்புப் படையின் தலைமைத் தளபதி என்ற அதிகாரத்தைச் சட்டப்பிரிவு 53(2) குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ளது. அவர் சட்டத்தின்படி இராணுவத்தை வழிநடத்துகிறார்.
  • எனவே அவர் பாதுகாப்புப் படையின் தலைமைத் தளபதி என அறியப்படுகிறார். இதன்மூலம் மற்ற நாடுகளின் மீது போர் அறிவிக்கவும், அமைதியை ஏற்படுத்தவும் அவர் அதிகாரம் பெற்றவர் ஆவார்.

இராஜதந்திர அதிகாரங்கள்

வெளிநாடுகளுக்கான இந்திய தூதர்களைக் குடியரசுத் தலைவர் நியமிப்பதோடு மட்டுமல்லாமல் அவர் இந்தியாவுக்கான வெளிநாட்டுத் தூதர்களையும் வரவேற்கிறார். வெளிநாடுகளுக்கான அனைத்து உடன்படிக்கைகளும் ஒப்பந்தங்களும் குடியரசுத் தலைவரின் பெயராலேயே நடைபெறுகின்றன.

நெருக்கடி நிலை அதிகாரங்கள்

  • நெருக்கடி நிலையை அறிவிக்கும் அதிகாரத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டம் குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ளது. அவைகள் பின்வருவன: போர், வெளிநாட்டு ஆக்கிரமிப்பு, ஆயுதமேந்திய கிளர்ச்சி ஆகிய சூழ்நிலைகளில் குடியரசுத் தலைவர் நெருக்கடி நிலையை அறிவிக்கும் அதிகாரத்தை 352–வது சட்டப்பிரிவு வகுத்துள்ளது.
  • அரசியலமைப்புச் சட்டத்தின் குறிப்பிட்டுள்ளபடி ஒரு மாநில அரசாங்கம் செயல்படவில்லை எனில் அம்மாநிலத்தில் நெருக்கடி நிலையை அறிவித்து, அம்மாநில அரசாங்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் அதிகாரத்தைக் குடியரசுத் தலைவருக்கு 356 வது சட்டப்பிரிவு வழங்குகிறது.
  • இந்தியாவின் நிதி நிலையில் திருப்தியின்மை காணப்பட்டாலும், இந்தியாவின் எந்த ஒரு பகுதியில் ஏதாவது ஒரு காரணத்திற்காக அச்சுறுத்தல் ஏற்படும் பொழுதும் வது பிரிவின்படி குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையை அறிவிக்கிறார்.
  • கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் அதிகபட்சமாக 9 முறை குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் நீக்கம்

  • குடியரசுத் தலைவர் பதவி ஏற்ற நாள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை பதவி வகிப்பார். அவர் தன்னுடைய பணித்துறப்பு கடிதத்தினை துணைக் குடியரசுத் தலைவரிடம் வழங்கலாம். அவர் சட்டப்பிரிவு 61-ன் படி அரசியலமைப்பு மீறிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுவதன் மூலம் பதவி நீக்கம் செய்யப்படலாம்.
  • இவருக்கு எதிரான இக்குற்றச்சாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானமாக கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். மேலும் அவைக்கு வருகை புரிந்தவர்களில் நான்கில் ஒரு பங்கிற்குக் குறையாமல் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
  • குடியரசுத் தலைவர் தனது பதவிக்காலம் முடிந்தாலும் அவருக்குப் பின் ஒருவர் பதவியேற்கும் வரை அப்பதவியில் தொடரலாம்.

குடியரசுத் தலைவரின் தனிச்சலுகைகள்

சட்டப்பிரிவு 36(1) ன் படி குடியரசுத் தலைவர் தன்னுடைய பணி மற்றும் அதிகாரத்தைச் செய்ய வேண்டும் என எண்ணுவதிலும் செயல்படுத்துவதிலும் எந்த நீதிமன்றத்திற்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை.

துணைக் குடியரசுத் தலைவர்

63வது பிரிவின் படி நாட்டின் இரண்டாவது உயர்ந்த பதவியைத் துணைக் குடியரசுத் தலைவர் வகிக்கிறார். அலுவலக முன்னுரிமையின் படி குடியரசுத் தலைவருக்கு அடுத்த தர நிலையில் இவர் உள்ளார். இப்பதவி அமெரிக்க துணைக் குடியரசுத் தலைவரின் பதவியைப் போன்றது. நாட்டின் அரசாங்க நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற இப்பதவி உருவாக்கப்பட்டுள்ளது.

துணைக்குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகள்

இந்திய அரசியலமைப்புச் சட்டம் துணைக்குடியரசுத் தலைவருக்கான தகுதிகளை வகுத்துள்ளது.

  • இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • 35வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
  • மத்திய அரசிலோ, மாநில அரசிலோ அல்லது உள்ளாட்சி அமைப்புகளிலோ ஊதியம் பெறும் பதவியில் இருத்தல் கூடாது.
  • மாநிலங்களவை உறுப்பினராவதற்கான மற்ற தகுதிகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.

துணைக் குடியரசுத் தலைவர் – தேர்தல் மற்றும் பதவிக்காலம்

  • சட்டப்பிரிவு 66(1) ன் படி துணைக் குடியரசுத் தலைவர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாமல் குடியரசுத் தலைவர் போல மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
  • நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்களை உள்ளடக்கிய வாக்காளர் குழுமத்தின் மூலம் இவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். துணைக் குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.
  • பதவிக்காலம் முடியும் முன்னரே பணித்துறப்பு, இறத்தல், பணிநீக்கம் ஆகிய காரணங்களால் அவரது பதவி முடிவுக்கு வரலாம். அவர் மீண்டும் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கும் தகுதி உடையவராவார்.
  • அரசியலமைப்புச்சட்டம் துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கான தொடர் வழிமுறைகளை நமக்கு வழங்கவில்லை. இது போன்ற சூழ்நிலைகளில், துணைக் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் முடிந்தவரையில் விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  • புதிய துணைக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை மாநிலங்களவையின் துணைத் தலைவர் துணைக் குடியரசுத் தலைவரின் பணிகளைச் செய்வார்.
  • குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் பதவிகள் ஒரே சமயத்தில் காலியாக இருக்கும் பட்சத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குடியரசுத் தலைவரின் பணிகளைச் செயலாற்றுவார். 1969ஆம் ஆண்டு இத்தகைய ஒரு நிகழ்வின்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி M.ஹிதயதுல்லா குடியரசுத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

துணைக் குடியரசுத் தலைவர் பதவி நீக்கம்

மக்களவையின் ஒப்புதலுடன், மாநிலங்களைவையில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் துணைக் குடியரசுத் தலைவரைப் பதவியிலிருந்து நீக்கலாம். இத்தகைய தீர்மானம் கொண்டு வர குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு முன்னரே துணைக் குடியரசுத் தலைவருக்கு ஒரு அறிவிப்பை வழங்க வேண்டும்.

துணைக் குடியரசுத் தலைவரின் செயல்பாடுகள்

துணைக் குடியரசுத் தலைவர் அவர் வகிக்கும் பதவியின் நிமித்தமாக மாநிலங்களவையின் தலைவராகச் செயல்படுகிறார். மாநிலங்களவையின் தலைவர் என்கிற முறையில் அவர் பல்வேறு பணிகளை மேற்கொள்கிறார்.

  • மாநிலங்களவையின் நடவடிக்கைகளை முறைப்படுத்துகிறார்.
  • மாநிலங்களவையின் மரபு ஒழுங்கு முறைகளைத் தீர்மானிக்கிறார்.
  • மாநிலங்களவையின் தீர்மானம் அல்லது கேள்விகளை அனுமதிப்பதை முடிவு செய்கிறார்.
  • மிகப்பெரிய பிரச்சனையின்போது அவையின் நடவடிக்கைகளை அவர் ஒத்திவைக்கவும் அல்லது முடிவுக்குக் கொண்டு வரவும் செய்கிறார்.
  • பல்வேறு குழுக்களுக்கு அதனுடைய செயல்பாடுகள் தொடர்பாக அவர் வழிமுறைகளை வழங்குகிறார்.
  • குடியரசுத் தலைவர் உடல்நலக் குறைவால் தனது கடமைகளை ஆற்ற இயலாத போதும் அல்லது நாட்டில் இல்லாத போதும் துணைக் குடியரசுத் தலைவர், குடியரசுத் தலைவரின் பணிகளைக் கவனிப்பார். குடியரசுத் தலைவர் பதவியானது, அவரின் பதவித்துறப்பு, இறப்பு, அரசியலமைப்பை மீறிய குற்றச்சாட்டின் மூலம் பதவி நீக்கம் ஆகிய காரணங்களால் காலியாகும் போது துணைக் குடியரசுத் தலைவர் அதிகபட்சமாக ஆறு மாத காலத்திற்கு அவரின் பணிகளைக் கவனிப்பார்.

முடிவு வாக்கு (Casting Vote)

மாநிலங்களவையில் சட்ட மசோதாவின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பு சமநிலையில் இருக்கும்பட்சத்தில் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 100ன் படி துணைக் குடியரசுத் தலைவர் வாக்கு அளிக்கலாம். இது சட்ட மசோதாவின் ஒப்புதலுக்கு ஒரு வாக்கு மட்டுமே தேவை என்ற நிலையைக் குறிக்கிறது. ஆகையால் அவர் இந்த விருப்புரிமை அதிகாரத்தைச் சட்ட மசோதாவுக்கு ஆதரவாகவோ எதிராகவோ வாக்களிக்கும் அதிகாரம் பெற்றவர் ஆவார். அவருடைய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க எவருக்கும் உரிமை இல்லை.

பிரதம அமைச்சர்

  • அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 74(1) குடியரசுத் தலைவருக்கு உதவிடவும் பிரதம அமைச்சரைத் தலைவராகக் கொண்ட ஒரு மத்திய அமைச்சரவைக் குழு இருக்கும் எனக் குறிப்பிடுகிறது.
  • குடியரசுத் தலைவர் அமைச்சரவை வழங்கும் அறிவுரையை மறு பரிசீலணைச் செய்யச் சொல்லலாம். ஆனால் மறுபரிசீலனைக்குப் பின்னர் அந்த அறிவுரையின்படி அவர் நடந்து கொள்ள கடமைப் பட்டவராவார்.
  • (இங்கிலாந்தின் நாடாளுமன்றம் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனியின் அமைந்துள்ளதால் அவர்களின் நாடாளுமன்ற முறை வெஸ்ட்மினிஸ்டர் முறை என்றழைக்கப்படுகிறது). இந்தியாவின் பிரத அமைச்சர் பதவியானது வெஸ்மின்ஸ்டர் அரசியலமைப்பு ஜனநாயக முறையில் இருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • மக்களைவின் பெரும்பான்மைக் கட்சியின் தலைவரை பிரதம அமைச்சராகக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். மற்ற அமைச்சர்களை பிரதம அமைச்சரின் ஆலோசனையின்படி குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
  • மக்களவையில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை பலம் இல்லையெனில் குடியரசுத் தலைவர் எந்தக்கட்சி அமைச்சரவையை அமைக்கமுடியுமோ அக்கட்சியின் தலைவரை அவர் அழைத்து அரசு அமைக்கக் கூறலாம்.
  • குடியரசுத் தலைவர் அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணமும், இரகசியக்காப்புப் பிரமாணமும் செய்து வைக்கின்றனர்.
  • பிரதம அமைச்சர் மற்றும் மற்ற அமைச்சர்களின் ஊதியங்களையும், படிகளையும் நாடாளுமன்றம் நிர்ணயிக்கிறது.
  • நாடாளுமன்ற உறுப்பினராய் இல்லாதவர் கூட அமைச்சராக நியமிக்கப்படலாம். ஆனால் அவர் 6 மாதங்களுக்குள் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும்.
  • அமைச்சர்கள் தனிப்பட்ட முறையிலும், ஒட்டு மொத்தமாகவும் மக்களவைக்கு பொறுப்புடையவர்களாவர்.

இந்திய பிரதமர்கள் பட்டியல்

  1. திரு. ஜவகர்லால் நேரு 1947 – 64
  2. திரு. லால் பகதூர் சாஸ்திரி 1964 – 66
  3. திருமதி. இந்திரா காந்தி 1966 – 77
  4. திரு. மொரார்ஜி தேசாய் 1977 – 79
  5. திரு. சரண் சிங் 1979 – 80
  6. திருமதி. இந்திரா காந்தி 1980 – 84
  7. திரு. ராஜீவ் காந்தி 1980 – 89
  8. திரு. வி.பி. சிங் 1989 – 1990
  9. திரு. சந்திரசேகர் 1990 – 91
  10. திரு. பி. வி.நரசிவ்வ ராவ் 1991 – 96
  11. திரு. அசல் பிகாரி வாஜ்பாய் மே 1996
  12. திரு. டி.தேவகவுடா 1996 -97
  13. திரு. ஐ.கே. குஜ்ரால் 1997 – 98
  14. திரு. அடல் பிகாரி வாஜ்பாய் 1998 – 2004
  15. திரு. மன்மோகன் சிங் 2004 – 14
  16. திரு. நரேந்திர மோடி 2014 முதல்

பிரதம அமைச்சரின் செயல்பாடுகளும் , கடமைகளும்

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 78 பிரதம அமைச்சரின் கடமைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

  • பிரதம அமைச்சர் அமைச்சர்களின் நிலையை அறிந்து அவர்களுக்கு அரசின் பல்வேறு துறைகளை ஒதுக்கீடு செய்கிறார்.
  • தான் தலைமை வகிக்கும், அமைச்சரவைக் கூட்டத்தின் தேதி, நிகழ்ச்சி நிரல்(Agenda) குறித்து முடிவு செய்வார்.
  • பிரதம அமைச்சரே அமைச்சரவையின் தலைவர் ஆவார். மற்றவர்கள் அரசின் துறைகளைப் பகிர்ந்து கொள்ளும் சம அமைச்சர்கள் ஆவர்.
  • கேபினெட் கூட்டம் நடைபெறாத பொழுது பிரதம அமைச்சர் தனது மூத்த சகாக்கள் இருவர் அல்லது மூவரை இயல்பாகக் கலந்தாலோசிக்கலாம்.
  • பிரதம அமைச்சர் பல்வேறு துறைகளின் பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
  • மத்திய அரசின் விவகாரங்கள் மற்றும் சட்டத்திற்கான முன்மொழிவுகள் போன்ற அமைச்சரவையின் அனைத்து முடிவுகளையும் குடியரசுத் தலைவருசன் விவாதிக்கிறார்.
  • பிரதம அமைச்சர், குடியரசுத் தலைவருக்கும், அமைச்சரவைக்கும் இடையே பாலமாக செயல்படுகிறார்.
  • பிரதம அமைச்சர் நாட்டின் உண்மையான தலைவராவார். அவர் நாட்டின் முக்கிய செய்தித் தொடர்பாளராகவும் செயல்படுகிறார்.
  • சர்வதேச மாநாடுகளான காமன்வெல்த், அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு, சார்க் நாடுகளின் மாநாடு ஆகியவற்றில் இந்திய நாட்டின் பிரதிநிதியாகப் பிரதமர் பங்கு கொள்கிறார்.

அமைச்சரவைக் குழு

தேர்தலுக்குப் பின்னர் பிரதம அமைச்சரின் ஆலோசனையின்படி குடியரசுத் தலைவர் அமைச்சரவையை நியமிக்கிறார். சில சமயங்களில் நாடாளுமண்ற உறுப்பினராய் இல்லாதவர்கூட அமைச்சராக நியமிக்கப்படலாம். ஆனால் அவர் ஆறு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தின் ஏதேனும் ஓர் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஒட்டு மொத்த மக்களவை உறுப்பினர்களில் 15% மட்டுமே அமைச்சரவை உறுப்பினர்களாக (பிரதம அமைச்சர் உட்பட) இருத்தல் வேண்டும் என இந்திய அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ளது.

மத்திய அமைச்சர்களின் வகைகள்

மத்திய அமைச்சர்கள் மூன்று தரநிலைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

  1. கேபினெட் (அ) ஆட்சிக்குழு அமைச்சர்கள்
  2. இராசாங்க அமைச்சர்கள்
  3. இணை அமைச்சர்கள்

கேபினெட் அமைச்சர்கள்

  • நிர்வாகத்தின் மையக் கருவை உருவாக்கும் மூத்த அமைச்சர்களின் முறைசாரா அமைப்பே காபினெட் ஆகும்.
  • காபினெட் அரசாங்கத்தின் பாதுகாப்பு, நிதி, வெளியுறவுக் கொள்கைகள் , உள்துறை ஆகியவற்றின் முக்கிய முடிவுகளை எடுக்கிறது.
  • குடியரசுத் தலைவர் அவசரநிலையைப் பிரகடனம் செய்ய அமைச்சரவை பரிந்துரைக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர அமைச்சரவை ஒரு கருவியாக செயல்படுகிறது.
  • நிதி மசோதாவானது அமைச்சரவையில் இருந்து தொடங்கும். பின்னர் குடியரசுத்தலைவர் பரிந்துரையுடன் மக்களவையில் அறிமுகப்படுத்தப்படும்.
  • அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையை அமைச்சரவை முடிவு செய்வதோடு, சர்வதேச உடன்படிக்கைகளுக்கும் ஒப்புதல் அளிக்கிறது.பல்வேறு நாடுகளுக்கானத் தூதர்களை நியமிப்பதில் அமைச்சரவை முக்கிய பங்கு வகிக்கிறது.

இராசாங்க அமைச்சர்கள்

அமைச்சரவை குழுவின் இரண்டாவது வகையினரே இராசாங்க அமைச்சர்கள் ஆவர். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளின் பொறுப்பு அமைச்சராக செயல்படுகின்றனர். ஆனால் அழைப்பு விடுத்தால் மட்டுமே இவர்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்வர்.

இணை அமைச்சர்கள்

அமைச்சரவையில் மூன்றாவதாக, இணை அமைச்சர்கள் உள்ளனர். காபினெட் அமைச்சர்கள் (அ) இராசாங்க அமைச்சர்களுக்கு ஒப்படைக்கப்பட்ட கடமைகளைச் செயலாற்றுவதில் இவர்கள் உதவி புரிகின்றனர்.

இந்திய நாடாளுமன்றம்

  • மத்திர அரசின் சட்டம் இயற்றும் அங்கமாக நாடாளுமன்றம் திகழ்கிறது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி V இல் 79 முதல் 122 வரை உள்ள சட்டப்பிரிவுகள், இந்திய நாடாளுமன்ற அமைப்பு, உள்ளடக்கம், ஆயுட் காலம், அலுவலர்கள், செயல்முறைகள், சிறப்பு சலுகைகள், அதிகாரங்கள் பற்றி குறிப்பிடுகிறது.

இந்திய நாடாளுமன்றம் மூன்று பகுதிகளைக் கொண்டது. அவைகள்

1. குடியரசுத் தலைவர்

2. ராஜ்ய சபா (மாநிலங்களவை)

3. லோக்சபா (மக்களவை).

  • நாடாளுமன்றமானது மாநிலங்களவை என்னும் மேலவையையும் மக்களவை என்னும் கீழவையயும் கொண்டுள்ளதால் இது ஈரவை சட்டமன்றம் என்றும் அழைக்கப்படுகிறது.

மாநிலங்களவை

  • ராஜ்யசபா என்றழைக்கப்படும் மாநிலங்களவை 250 உறுப்பினர்களைக் கொண்டது. இதில் 238 உறுப்பினர்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் யூனியன் பிரதேச சட்டமன்ர உறுப்பினர்களால் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
  • 12 உறுப்பினர்கள், இலக்கியம், அறிவியல், விளையாட்டு, கலை மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்த அறிவு அல்லது செயல்முறை அனுபவம் கொண்டவர்களைக் குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார்.

மாநிலங்களவை உறுப்பினராவதற்கானத் தகுதிகள்

மாநிலங்களவை உறுப்பினராக ஒருவர் கீழ்க்காணும் தகுதிகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.

  • இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • 30 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
  • அரசாங்கத்தில் ஊதியம் பெறும் பதவியில் இருத்தல் கூடாது.
  • மனநிலை சரியில்லாதவராகவோ அல்லது பெற்றகடனைத் திருப்பித்தர முடியாதவாரகவோ இருத்தல் கூடாது.
  • நாடாளுமன்றத்தால் அவ்வப்போது நடைமுறைப்படுத்தப்படும் தகுதிகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.
  • மக்களவையிலோ (அ) எந்தவொரு சட்டமன்றத்திலோ உறுப்பினராக இருத்தல் கூடாது.

மாநிலங்களவை உறுப்பினரின் பதவிக் காலம்

மாநிலங்களவை ஒரு நிரந்தர அவை ஆகும். அதனைக் கலைக்க முடியாது. மாநிலக்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும். அதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெறுகின்றனர். அதனால் ஏற்படும் காலியிடங்கள் புதிய உறுப்பினர்களால் நிரப்பப்படுகின்றன.

துணைக் குடியரசுத் தலைவர் பதவி வழி மாநிலங்களவையின் தலைவராகச் செயல்படுகிறார். மாநிலங்களவையின் துணைத் தலைவர் அதன் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

தேர்தல்

தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் (MLA’s) ஒற்றை மாற்று வாக்கு மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த தேர்தல் முறை மறைமுக தேர்தல் எனப்படும். இவர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.

மாநிலங்களவையின் செயல்பாடுகள்

  • எந்தவொரு மசோதாவும் (நிதி மசோதா தவிர) சட்டமாவதற்கு மாநிலங்களவையின் ஒப்புதல் தேவை. ஆறு மாதங்களுக்கு மேல் ஒரு மசோதா ஒப்புதல் பெறவில்லை எனில் குடியரசுத் தலைவர் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து மசோதாவின் முடக்கத்தைத் தீர்த்து வைக்கிறார்.
  • அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கான எந்த ஒரு மசோதாவை நிறைவேற்றுவதிலும் மக்களவையைப் போன்றே மாநிலங்களவையும் அதிகாரம் பெற்றுள்ளது.
  • மாநிலங்களவை உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிக்கும் அதிகாரம் பெற்றுள்ளனர். இவர்கள் மக்களவை உறுப்பினர்கள் மற்றும் அனைத்து மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
  • இவர்கள், குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பதவிநீக்க செயல் முறைகளில் அதிகாரம் பெற்றுள்ளனர்.
  • தேசிய முக்கியத்துவம் கருதி மாநில அரசு பட்டியலை உருவாக்கும் அதிகாரத்தை மாநிலங்களைவை பெற்றுள்ளது. மாநிலங்களவையின் 2/3 உறுப்பினர்கள் பெரும்பான்மையுடன் ஒரு தீர்மானம் ஒப்புதல் பெறுகிறது. இதன் 2/3 உறுப்பினர்கள் பெரும்பான்மையுடன் அகில இந்தியப் பணிகளை உருவாக்கவும், நீக்கவும் அதிகாரம் பெற்றுள்ளது.

நிதி மசோதா

நிதி மசோதாவினை திருத்தம் செய்யவோ அல்லது நிராகரிக்கவோ மாநிலங்களவைக்கு அதிகாரம் இல்லை. மக்களவையில் மட்டுமே நிதி மசோதாவினை அறிமுகப்படுத்த முடியும். இம்மசோதா மாநிலங்களவையின் ஒப்புதலுடன் சட்டமாக மாறும். மாநிலங்களவை 14 நாட்களுக்குள் ஒப்புதல் அளிக்கவில்லையெனில், ஒப்புதல் பெறாமலேயே சட்டமாகிவிடும். மாநிலங்களவையின் சட்டத் திருத்தத்திற்கான முன்மொழிவுகளை மக்களவை கருத்தில் கொள்ள வேண்டியதில்லை. எந்த முன்மொழிவுகளையும் மக்களவை நிராகரிக்கலாம்.

மக்களவை

மக்களவையானது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட இந்திய நாடாளுமன்றத்தின் புகழ்மிக்க அவை ஆகும். மக்களவைக்கு அதிகபட்சமாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் 552 அவற்றில் 530 உறுப்பினர்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், 13 உறுப்பினர்கள் யூனியம் பிரதேசகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆங்கிலோ –இந்தியன் சமூகத்திலிருந்து 2 உறுப்பினர்களைக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். தற்சமயம் மக்களவை 545 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

மக்களவை உறுப்பினராவதற்கான தகுதிகள்

  • இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • 25 வயதிற்கு குறைவுடையவராய் இருத்தல் கூடாது.
  • அவரது பெயர் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருத்தல் வேண்டும்.
  • மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் ஊதியம் பெறும் பதவியில் இருத்தல் கூடாது.
  • மனநிலை சரியில்லாதவராகவோ அல்லது பெற்ற கடனை திருப்பி செலுத்த இயலாதவராகவோ இருத்தல் கூடாது.

மக்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம்

பொதுவாக, மக்களவை தன்னுடைய முதல் கூட்டத்திலிருந்து ஐந்து ஆண்டுகள் செயல்படும். அதன் காலம் முடிவதற்கு முன் பிரதம அமைச்சரின் ஆலோசனையின்பேரில் குடியரசுத்தலைவர் மக்களவையைக் கலைக்கலாம். இந்திய அரசியலமைப்பின் நெருக்கடிநிலை சட்டத்தின்படி மக்களவையின் நம்பிக்கை வாக்கெடுப்பில் எந்தவொரு கட்சிக்கோ (அ) கூட்டணிக்கோ பெரும்பான்மை இல்லாத பட்சத்தில் குடியரசுத் தலைவர் மக்களவையைக் கலைக்கலாம்.

தேர்தல்

  • மக்கள் தொகையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ள மக்களால் நேரடியாக மக்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
  • மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள், மேற்பார்வையிடுதல், நடத்துதல் ஆகிய பணிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் செய்கிறது. மக்களவைத் தேர்தலுக்காக நாடு முழுவதும் மக்கள் தொகையின் அடிப்படையில் பல தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
  • மக்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதில் ‘வயது வந்தோர் வாக்குரிமை’ பின்பற்றப்படுகிறது. வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்ட 18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்கள் அனைவரும் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க தகுதியுடையவர் ஆவர்.

மக்களவையின் செயல்பாடுகள்

  • அனைத்து மசோதாக்களையும் மக்களவையில் அறிமுகப்படுத்தவும், நிறைவேற்றவும் முடியும் (நிதி மசோதா உள்பட).
  • குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்ற நீதிபதிகள் போன்றவர்களின் பதவி நீக்க விவகாரங்களில் பங்கேற மாநிலங்களவையைப் போலவே மக்களவையும் அதிகாரம் பெற்றுள்ளது.
  • அரசியலமைப்பு சட்டத்திருத்தத்திற்கான எந்தவொரு மசோதாவை நிறைவேற்றுவதிலும் மாநிலங்களவையைப் போலவே மக்களவையும் சமமான அதிகாரம் பெற்றுள்ளது.
  • மக்களவை உறுப்பினர்கள், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பெற்றுள்ளனர்.
  • நம்பிக்கையிலாத் தீர்மானம் லோக்சபாவில் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும். இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் பிரதம அமைச்சர் உட்பட மற்ற அமைச்சர்களும் தங்களது பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும்.
  • தமிழகத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள்.
  • மாநிலங்களவை – 18 உறுப்பினர்கள்
  • மக்களவை – 39 உறுப்பினர்கள்

சபாநாயகர்

  • மக்களவையைத் தலைமை ஏற்று நடத்துபவர் சபாநாயகர் ஆவார். அவர் மக்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
  • நாடாளுமன்ற மக்களாட்சியில் சபாநாயகரின் பதவி ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. மக்களவை கலைக்கப்பட்டாலும் புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கும் வரை அவர் பதவியில் நீடிப்பார்.
  • நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்திற்கு தலைமை வகிப்பார். அவர் ஒரு மசோதாவை நிதி மசோதாவா அல்லது சாதாரண மசோதாவா என தீர்மானிக்கும் அதிகாரம் ஒஎற்றுள்ளார்.
  • பண மசோதாவை தீர்மானிப்பதில் இவருடைய முடிவே இருதியானது ஆகும்.
  • 1985ஆ,ம் ஆண்டு கட்சித்தாவல் தடைச் சட்டத்தின்படி இந்திய அரசியலமைப்புச் சட்டம் 10ப்வது அட்டவணை அடிப்படையில் ஒரு உறுப்பினர் மக்களவை உறுப்பினர் ஆக தகுதி பெற்றவரா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு.
  • சபாநாயகர் பதவி காலியாக இருக்கும் போது அல்லது வருகை புரியாத போதும் துணை சபாநாயகர் மக்களவைக்குத் தலைமை வகிப்பார்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர்

பட்ஜெட் கூட்டத் தொடர்: பிப்ரவரி முதல் மே வரை

மழைக் (பருவ) காலக் கூட்டத் தொடர்: ஜூலை முதல் செப்டம்பர் வரை

குளிர் காலக் கூட்டத் தொடர்: நவம்பர் மற்றும் டிசம்பர்

நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள்

  • இந்திய நாடாளுமன்றம் சட்டமியற்றுதல், நிர்வாகத்தினை மேற்பார்வையிடுதல் , வரவு –செலவு திட்டத்தினை நிறைவேற்றுதல், பொதுமக்கள் குறைகளைப் போக்குதல், மேலும் வளர்ச்சித் திட்டங்கள், சர்வதேச உறவுகள், உள்நாட்டுக் கொள்கைகள் போன்றவைகளை விவாதித்தல் என பல பணிகளைச் செய்கிறது.
  • நாடாளுமன்றம் குடியரசுத் தலைவர் மீதான அரசியல் குற்றச்சாட்டுகளை (Impeachment) விசாரிக்கவும், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமை தேர்தல் ஆணையர், இந்தியத் தலைமைக் கணக்கு தணிக்கையாளர்வ் ஆகியோரை அரசியலமைப்புச் சட்ட விதிமுறைகளின்படி பதவி நீக்கம் செய்யவும் அதிகாரம் பெற்றுள்ளது.
  • நாடாளுமன்றமானது நிர்வாகத்தினை கேள்விகள், துணைக் கேள்விகள் கேட்பதன் மூலமாகவும், ஒத்திவைப்புத் தீர்மானங்கள், விவாவதங்கள், தீர்மானங்கள் இயற்றுதல், கண்டனத் தீர்மானம் அல்லது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விவாதித்து அவையில் கொண்டு வருதல் போன்றவைகளின் மூலமாகவும் தனது கட்டுப்பாட்டினைச் செலுத்தி வருகின்றது.
  • மாநிலங்களுன் எல்லைகளை மாறி அமைத்திட நாடாளுமன்றத்திற்கே அதிகாரம் உண்டு.

இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்

  • இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 76 இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரை நியமிக்க வழிவகை செய்கிறது. இவர் நாட்டின் உயர்ந்த சட்ட அதிகாரி ஆவார்.
  • இவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். உச்ச நீதிமன்ற நீதிபதியாகத் தேவையான தகுதிகளை இவரும் கொண்டிருக்க வேண்டும்.
  • இவர் இந்தியக் குடிமகனாய் இருத்தல் வேண்டும். அவர் ஏதாவது ஒரு உயர் நீதிமன்றத்தில் ஐந்து ஆண்டுகள் நீதிபதியாகவோ (அல்லது) உயர் நீதிமன்றத்தில் பத்து ஆண்டுகள் வழக்குரைஞராகவோ அல்லது குடியரசுத் தலைவரின் பார்வையில் மேம்பட்ட சட்ட வல்லுநராகவோ இருத்தல் வேண்டும்.
  • குடியரசுத் தலைவர் விரும்பும் வரை இவர் பதவியில் நீடிக்கலாம். எந்த நேரத்திலும் குடியரசுத் தலைவரால் அவர் பதவியிலிருந்து அகற்றப்படலாம் அல்லது அவர் குடியரசுத் தலைவருக்குப் பதவி விலகல் கடிதத்தை அளித்து பதவி விலகலாம்.

இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள்

  • இவர் குடியரசுத் தலைவரால் குறிப்பிடப்பட்ட சட்ட விவகாரங்கள் மீது இந்திய அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவார். குடியரசுத் தலைவரால் ஒதுக்கப்படும் சட்டரீதியிலான மற்ற கடமைகளையும் அவர் மேற்கொள்வார்.
  • அரசியலமைப்புச் சட்டம் அல்லது ஏனைய சட்டத்தின்படி வழங்கப்படும் பணிகளையும் அவர் மேற்கொள்வார். இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்காடும் உரிமை இவருக்கு உண்டு.
  • நாடாளுமன்றத்தின் இரு அவையின் கூட்டத்திலோ வாக்கு அளிக்கும் உரிமை இன்றி உறுப்பினராக இவர் இடம் பெறுவார்.
  • நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குக் கிடைக்ககூடிய அனைத்து சலுகைகளையும், சட்ட விலக்களிப்புகளையும் இவரும் பெறுகிறார்.

நீதித்துறை

மத்திய அரசாங்கத்தின் மூன்றாவது அங்கம் நீதித்துறை ஆகும். குடிமக்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதில் நீதித்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின் விதிகள் ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்வதிலும் , விளக்கமளிப்பதிலும் இது முக்கிய பங்கை வகிக்கிறது.

உச்சநீதிமன்றம்

  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் உச்சநீதிமன்றம் ஆகும். நாட்டின் முதன்மை நீதிமன்றமாக, சுதந்திரமான, ஒருங்கிணைந்த நீதி அமைப்பாக உச்சநீதிமன்றம் நிறுவுவதற்கு நமது அரசியலமைப்பு வழிவகை செய்கிறது.
  • மத்திய, மாநில அரசுகளின் சட்டமன்ற, நிர்வாகப் பிரிவுகளிலிருந்து நீதித்துறை தன்னாட்சி பெற்று விளங்குகிறது.
  • ஒருங்கிணைந்த நீதித்துறை என்பது நாடு முழுவதும் நீதித்துறையானது ஒற்றை அதிகாரப் படிநிலையைக் கொண்டுள்ளதாகும். குடிமக்களின் உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாப்பதில் நீதித்துறை முக்கியப் பங்கு வகிக்கிறது.
  • புதுதில்லியில் அமைந்துள்ள இந்திய உச்சநீதிமன்றம் 1950 ஜனவரி 28ஆம் நாள் துவங்கப்பட்டது. இது 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட கூட்டாட்சி நீதிமன்றத்தைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் அமைப்பு

1950ஆம் ஆண்டு அரசியலமைப்பின் தொடக்கத்தில் ஒரு தலைமை நீதிபது உட்பட 8 நீதிபதிகளை உச்ச நீதிமன்றம் கொண்டிருந்தது. தற்சமயம் உச்ச நீதிமன்றம் ஒரு தலைமை நீதிபதி உட்பட 28 நீதிபதிகளைக் கொண்டுள்ளது.

நீதிபதிகள் நியமனம்

இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியைக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். மற்ற நீதிபதிகளைத் தலைமை நீதிபதியைத் தலைவராகக் கொண்ட மூத்த நீதிபதிகள் குழுவின் (Collegiums) ஆலோசனையுடன் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.

உச்சநீதிமன்ர நீதிபதிக்கான தகுதிகள்

  • அவர் இந்தியக் குடிமகனாய் இருத்தல் வேண்டும். (அல்லது) அவர் ஐந்து ஆண்டுகள் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்திருத்தல் வேண்டும்.
  • அவர் பத்து ஆண்டுகள் உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக செயலாற்றியிருத்தல் வேண்டும்.
  • குடியரசுத் தலைவர் பார்வையில் சிறப்பு மிக்க சட்ட வல்லுநராய் இருத்தல் வேண்டும்.
  • தற்காலிக அடிப்படையில் (ad – hoc basis) உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க அரசியலமைப்புச் சட்டம் வழிவகை செய்கிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட இதர நீதிபதிகள் 65 வயது வரை பதவியில் நீடிப்பர்.
  • உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாக குடியரசுத் தலைவரிடம் பதவி விலகல் கடிதத்தை அளித்து பதவி விலகலாம் அல்லது பெருங்குற்றத்தின் மூலம் உண்டான கண்டனத் தீர்மானத்தின் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளைப் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரத்தினை நாடாளுமன்றம் பெற்றுள்ளது.
  • உச்ச நீதிமன்றத்தின் நிரந்தர தலைமையிடம் புதுதில்லியில் உள்ளது. எனினும் இந்தியக் குடியரசுத் தலைவரின் இசைவு பெற்று இந்தியத் தலைமை நீதிபதியின் முடிவின்படி வேறு எந்த மாநிலத்திலும் அல்லது எந்த ஒரு இடத்திலும் இந்நீதிமன்ற அமர்வு அமையலாம்.

உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்களும், பணிகளும்

நீதித்துறை செயல்பாடுகள்

உச்சநீதிமன்றம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் ஆகும். கீழ்க்கண்டவைகள் உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகளாகும்.

அ) தனக்கேயுரிய நீதி வரையறை

உச்ச நீதிமன்றத்திற்கு நேரடியாக வரும் வழக்குகள் தனக்கேயுரிய நீதிவரையறைக்குட்பட்டவையாகும். அவைகள்

  1. இந்திய அரசிற்கும் ஒரு மாநிலம் அல்லது அதற்கு மேற்பட்டப் மாநிலங்களுக்கு இடையிலான சிக்கல்கள்
  2. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கிடையிலான சிக்கல்கள்
  3. அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக எழும் சிக்கல்கள் ஆகியன உச்ச நீதிமன்றத்தின் தனக்கேயுரிய நீதி வரையறைக்குட்பட்டதாகும்.
  • அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்திட கீழ்க்கண்ட நீதிப்பேராணைகளை உச்சநீதிமன்றம் வழங்குகிறது.
  1. ஆட்கொணர் நீதிப்பேராணை
  2. கீழ் நீதிமன்றங்களுக்கு விடுக்கும் கட்டளை நீதிப்பேராணை
  3. வழக்கு விசாரணைத் தடை நீதிப்பேராணை
  4. தசைமாற்று நீதிப்பேராணை
  5. உரிமை வினவு நீதிப்பேராணை

ஆ) மேல்முறையீட்டு நீதிவரையறை

உச்சநீதிமன்றமே நாட்டின் இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றமாகும். மாநில உயர் நீதிமன்றங்கள் உரிமையியல், குற்றவியல் (Civil and Criminal) அரசியலமைப்பு வழக்குகள் மீதான தீர்ப்புகளுக்கு எதிரான மேல்முறையீய்யு வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரிக்கின்றது. அப்படிப்பட்ட வழக்குகளைத் தீர்க்க அரசியலமைப்புச் சட்டப்படி மேலும் சட்டவிளக்கம் தேவையென உயர் நீதிமன்றம் சான்றிதழ் அளித்தால் மட்டுமே அவ்வழக்குகளை உச்ச நீதிமன்றத்தின் முன் கொண்டு செல்ல முடியும்.

இ) ஆலோசனை நீதிவரையறை

பொது முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு சட்டம் அல்லது உண்மை மீதான உச்ச நீதிமன்றத்தின் கருத்தினைப் பெற அரசியலமைப்புச் சட்டம் குடியரசுத் தலைவருக்கு அதிகாரத்தினை வழங்குகிறது.

ஈ) இதர நீதிவரையறை

உச்ச நீதிமன்றம் கீழ்க்காணும் இதர அதிகாரங்களைப் பெற்றுள்ளது.

  • உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணை இந்தியாவின் அனைத்துப் பகுதியிலுள்ள நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும்.
  • குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று நீதிமன்றத்தின் பொதுவான செயல்முறைகள், வழிமுறைகளை ஒழுங்குப்படுத்தும் விதிகளை உருவாக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
  • உச்ச நீதிமன்றம் தனது பணி அமைப்பின் மீதான முழுக் கட்டுப்பாட்டினையும் கொண்டுள்ளது.

உ) நீதிப்புனராய்வு

ஒரு சட்டத்தினை அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என அறிவிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திடம் உள்ளது இது நீதிப்புனராய்வு (நீதிமன்ற மறுஆய்வு அதிகாரம்) எனப்படும்.

பின்வரும் தனிப்பட்ட நீதிமன்ற மறுஆய்வு அதிகாரங்களை உச்சநீதிமன்றம் பெற்றுள்ளது. அவை

  1. மத்திய, மாநிலங்களுக்கிடையிலான பிரச்சனைகள்
  2. அரசியலமைப்புச் சட்டத்தில் ஏற்படும் சந்தேகங்கள், கருத்து வேற்றுமைகளை விளக்கி தெளிவுபடுத்துதல்.
  3. அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல்
  4. மாநில சட்டமன்றங்கள் இயற்றும் சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என அறிவிக்கும் அதிகாரம் போன்றவைகளை உச்ச நீதிமன்றம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!