Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Samacheer NotesTnpsc

மனித உரிமைகள் Notes 9th Social Science

9th Social Science Lesson 10 Notes in Tamil

10. மனித உரிமைகள்

  • இப்பாடம் மனித உரிமைகளுக்காகப் போராடிய நிறுவனங்களின் வரலாற்றின் ஊடே பயணிக்கிறது. மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பேரறிக்கை (UDHR) மனித உரிமைகளை உறுதி செய்து வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது.
  • இந்திய அரசமைப்பில் இடம்பெற்றுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றியும் தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்கள் பற்றியும் அவற்றின் செயல்பாடுகள் பற்றியும் விளக்குகிறது.
  • குழந்தைகள் உரிமைகள், பட்டியல் இனத்தனர் மற்றும் பழங்குடியினர் உரிமைகள், பெண்கள் உரிமைகள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் போன்ற மனித உரிமை வகைமைகள் பற்றியும் விளக்குகிறது.

1893ஆம் ஆண்டு ஜூன் மாதம் தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரிடோரியா என்னும் இடத்திற்கு தொடர்வண்டியில், முதல் வகுப்பில் வெள்ளையர் அல்லாத ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார். வழியில் வண்டியில் ஏறிய வெள்ளை இனத்தவர் ஒருவர், வெள்ளையரல்லாதவரை முதல் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்புப் பெட்டிக்கு செல்லும்படி கட்டளையிட்டார். முதல் வகுப்பு பயணச் சீட்டை வைத்திருந்த வெள்ளையரல்லாதவர், அவ்வாறு செல்ல மறுத்தபோது, பீட்டர்மரிட்ஸ்பர்க் என்ற இடத்தில் ஓடும் வண்டியிலிருந்து தள்ளிவிடப்பட்டார்.

அவ்விரவு நேர கடுங்குளிரில் அந்நிலையத்தில் குளிர் நடுக்கத்தில் உட்கார்ந்து இருந்தபோது அவரிடம் துளிர்விட்ட சிந்தனை, அவர் வாழ்வின் திசையை மாற்றியது. அந்நொடியிலிருந்து அகிம்சை வழி நின்று இனஒதுக்கல் கொள்கைக்கு எதிராக தன் வாழ்நாள் முழுவதும் போராட அந்த நபர் உறுதி பூண்டார்.

அவர் வேறு யாருமல்ல; நமது தேசத்தந்தை அண்ணல் காந்தியடிகள் தான். தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் உள்ளிட்ட வெள்ளையர் அல்லாதவர்களுக்கு எதிராக நிலவிய இனஒதுக்கல் கொள்கையை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற முக்கியமான முடிவு அவரை அந்நாட்டிலேயே தங்க வைத்தது. அப்போராட்டத்தில் உருவானதுதான் காந்தியின் சத்தியாகிரகம் என்ற தனித்துவமான அமைதி வழிபோராட்டம்.

மனித உரிமைகள் என்றால் என்ன?

  • ஐ.நா. சபை மனித உரிமைகளைப் பின்வருமாறு வரையறுக்கிறது. “இன, பாலின, தேசிய, இனக்குழு, மொழி, மதம் அல்லது வேறு தகுதி அடிப்படையைப் பொருத்து மாறுபடாமல் மனிதர்களாகப் பிறக்கும் அனைவருக்கும் மரபாக இருக்கும் உரிமையே மனித உரிமை ஆகும். எவர் ஒருவருக்கும் இந்த உரிமையை வழங்குவதில் பாரபட்சம் காட்டக் கூடாது.
  • மனித உரிமையின் வரலாற்று வேர்கள், உலகின் பல முக்கிய நிகழ்வுகளில் ஊடுருவி சுதந்திரம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றினை நிலை நிறுத்தியுள்ளன.
  • இரண்டாம் உலகப்போரின் விளைவுகளை சமாளிக்கவும், எதிர்காலத்தில் உலகப்போரின் விளைவுகளை சமாளிக்கவும், எதிர்காலத்தில் உலகப்போ போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுப்பதை நோக்கமாகக் கொண்டும், 1945-ல் ஐ.நா.சபை தொடங்கப்பட்டது.
  • மனித உரிமைகளை நடைமுறைப்படுத்துவதில் உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கை (The Universal Declaration of Human Rights) பெரும்பங்கு வகிக்கின்றது.

உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கை (UDHR)

  • வெவ்வேறு சட்ட மற்றும் பண்பாட்டுப் பின்னணியுடன் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து, கலந்துகொண்ட பிரதிநிதிகளால் தயாரிக்கப்பட்ட உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கை (Universal Declaration of Human Rights) மனித உரிமைகள் வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும்.
  • 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று பாரிசில் நடைபெற்ற ஐ.நா. பொது சபையில் நிறைவேற்றப்பட்ட (பொது சபை தீர்மானம் 217A) இந்தப் பேரறிக்கை, அனைத்துலக நாடுகள் மற்றும் அனைத்துலக மக்களின் பொதுத்தர சாதனை ஆகும்.
  • அடிப்படை மனித உரிமைகள் உலகளவில் பாதுகாக்கப்படவேண்டும் எனும் நோக்கம் கொண்ட முதல் பேரறிக்கையான இது பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.
  • மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பேரறிக்கையில் 30 உறுப்புகள் (articles) உள்ளன.
  • அது சுதந்திரத்திற்கான உரிமையை உறுதி செய்வதோடு குடிமை, அரசியல், சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு உரிமைகளையும் தருகிறது.
  • இவ்வுரிமைகள் இனம், பால், தேசியம் ஆகியவற்றைக் கடந்து அனைத்து மக்களுக்கும் பொருந்தும். ஏனெனில் மனிதர்கள் அனைவரும் சுதந்திரமாகவும், சம உரிமையோடும் பிறக்கின்றனர்.
  • இந்த பேரறிக்கையின் பொது விளக்கமானது சட்டபூர்வமாக பிணைக்கப்பட்ட ஆவணம் அல்ல என்ற போதிலும் அது அரசியல் மற்றும் அறநெறிசார் முக்கியத்துவம் உடையது.
  • மேலும் அதில் இடம்பெற்றுள்ள பெரும்பான்மையான உத்திரவாதங்கள் இக்காலத்தில் தரம்மிக்க விதிமுறைகளாக நிலைபெற்று விளங்குகின்றன.

இறுதிக்கு வந்த இன ஒதுக்கல் கொள்கை

  • இன ஒதுக்கல் (Apartheid) தென்னாப்பிரிக்காவில் காணப்பட்ட இனப்பாகுபாடு ஆகும்.
  • வசிப்பிடங்களும் இனத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டன. குறைந்த எண்ணிக்கையிலான வெள்ளைஇனத்தவர் அதிக எண்ணிக்கையிலான கறுப்பினத்தவரின் மீது ஆதிக்கம் செலுத்திய இந்த இனஒதுக்கல் கொள்கைக்கு எதிராக தென்னாப்பிரிக்க மக்கள் போராடினர்.
  • நெல்சன் மண்டேலா இன ஒதுக்கல் எனப்படும் கொள்கைக்கு எதிராக தொடர்ச்சியாகப் போராடினார். அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தியபோது, சிறையில் தள்ளப்பட்டார்.
  • உள்நாட்டிலும், உலக நாடுகளிடமிருந்தும் அவர் போராட்டத்திற்கு ஆதரவு பெருகியபோது, இனரீதியான உள்நாட்டு போர் ஏற்படுமோ என்ற அச்சத்தினால், தென்னாப்பிரிக்க தலைவர் F.W.டி கிளார்க் 1990-ல் அவரை விடுதலை செய்தார்.
  • மண்டேலா மற்றும் டி கிளார்க் ஆகியோரது கடும் முயற்சியினால் இன ஒதுக்கல் கொள்கை ஒரு முடிவுற்கு வந்தது.
  • 1994ல் பல்லினப்பொதுத் தேர்தல் நடைபெற்றபொழுது, மண்டேலாவின் தலைமையிலான ஆப்பிரிக்க தேசிய காக்கிரஸ் வெற்றி பெற்று, அந்நாட்டின் தலைவரானார்.

சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு உரிமைகள்:

  • சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு உரிமைகள் இரண்டாம் உலகப் போரின் விளைவுகளுக்குப்பின் உருவாக்கப்பட்ட மனித உரிமைகள் சட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • ஒரு சமூகத்தில் முழுமையாகப் பங்காற்றத் தேவைப்படும் உரிமைகளே சமூக உரிமைகள்.
  • ஒவ்வொரு மனிதனும் தனது தேவைகளை நிறைவேற்றக்கூடிய பொருளாதார நிலைக்கு உறுதி அளிப்பவை பொருளாதார உரிமைகள்.
  • ஒரு நாட்டில் சட்டத்திற்கு உட்பட்ட பொருளாதார சமத்துவம் மற்றும் சுதந்திரம் ஆகியன இதனால் பாதுகாக்கப்படுகின்றன.
  • ஒவ்வொருவரும் தமது பண்பாட்டைக் கடைபிடிக்கும் உரிமைகளை உறுதிப்படுத்துபவை பண்பாட்டு உரிமைகள்.
  • பண்பாட்டு மகிழ்வில் சமத்துவம், மனித கண்ணியம், பாகுபாடின்மை ஆகியவற்றையும் இது உள்ளடக்கியுள்ளது.

குடிமை மற்றும் அரசியல் உரிமைகள்

  • அரசு, சமூக நிறுவனங்கள் மற்றும் தனியாரின் அத்துமீறல்களிடமிருந்து ஒரு தனிமனிதனின் சுதந்திரத்தைப் பாதுகாப்பவையே இவ்வுரிமைகள்.
  • ஒருவர் சமூகத்தின் குடிமை மற்றும் அரசியல் வாழ்வில் பங்கேற்கும் திறமையை உறுதி செய்கின்றன.
  • குடிமை உரிமைகள் என்பன ஒவ்வொரு மனிதனுக்கும் இன, தேசிய, நிற, பால், வயது, சமய போன்ற பாகுபாடுகளின்றி, அரசின் சட்டத்தால் தரப்படும் உரிமைகளைக் குறிக்கின்றது.
  • அரசாங்கம் அமைக்கவும், நிர்வாகம் செய்யவும் பயன்படுத்தப்படும் உரிமைகளே அரசியல் உரிமைகள் ஆகும், இவை சட்டத்தின் மூலம் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
  • நாட்டின் நிர்வாகத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ குடிமக்கள் பங்காற்றும் அதிகாரத்தை இவ்வுரிமைகள் அளிக்கின்றன.

இந்தியாவில் அடிப்படை உரிமைகள்

  • ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தேவையான உரிமைகள் அடிப்படை உரிமைகள் எனப்படும்.
  • இவை குடிமக்களுக்கு பேசும் உரிமை, விரும்பிய இடத்தில் வாழும் உரிமை போன்ற மேலும் சில உரிமைகளை வழங்கி மனித வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகின்றன.

அடிப்படை உரிமைகள்

  • சமத்துவ உரிமை
  • சுதந்திர உரிமை
  • சுரண்டலுக்கெதிரான உரிமை
  • சமய மற்றும் மனச்சான்று சுதந்திரத்திற்கான உரிமை
  • சிறுபான்மையினருக்கான பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள்
  • அரசமைப்புச் சட்ட வழி தீர்வுகளுக்கான உரிமை

சமத்துவ உரிமை

  • சட்டத்தின் முன் அனைவரும் சமம், சட்டத்தின் மூலம் அனைவருக்கும் சம பாதுகாப்பு என்பதே இவ்வுரிமை ஆகும்.
  • சமயம், இனம், பாலினம் அல்லது பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் வேறுப்படுத்தலோ, ஒதுக்குதலோ சட்டத்திற்கு புறம்பானதாகும். அவ்வாறு நடத்தப்பட்டால் ஒருவர் நீதிமன்றத்தை அணுகலாம்.

சுதந்திர உரிமை

ஆறு வகையான சுதந்திரங்கள் நமது அரசமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

அவை:

  • பேச்சுரிமை
  • ஆயுதமின்றி கூடும் உரிமை
  • சங்கங்கள் அமைக்கும் உரிமை
  • இந்தியாவில் எந்த பகுதியிலும் வசிக்கும் உரிமை
  • இந்தியா முழுவதும் சுதந்திரமாக நடமாடும் உரிமை
  • எந்த தொழிலையும், வணிகத்தையும் செய்யும் உரிமை

சுரண்டலுக்கெதிரான உரிமை

14 வயதிற்குட்பட்ட சிறுவர்களை சுரங்கங்கள் அல்லது மற்ற அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும். எந்த ஒரு ஒப்பந்ததாரரோ, முதலாளியோ ஒரு தொழிலாளியை அவரது விருப்பத்திற்கு எதிராக ஒரு வேலையில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்த முடியாது.

சமயச் சுதந்திரம் மற்றும் பகுத்தறிவுக்கான உரிமை

குடிமக்கள் தாங்கள் விரும்பிய சமயத்தினை ஏற்கவும் பின்பற்றவும் உரிமை அளிக்கிறது. குடிமக்கள் சில சமய நம்பிக்கைகளை ஏற்று பின்பற்றுவதற்கு அல்லது சமய நம்பிக்கைகளின்றி தங்கள் மனசாட்சிபடி வாழ்வதற்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது.

பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள்

  • அரசமைப்பு கூட்டம் பண்பாட்டினைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் உரிமையை வழங்கியுள்ளது.
  • கல்விக்கூடங்களை அமைக்கவும், நமது பாரம்பரியம், ஊக்குவிக்கவும் நமக்கு உரிமை உள்ளது.
  • சமயச்சார்பு கல்வி அளிக்க மக்கள் மத நிறுவனங்களை நிறுவலாம். அரசு அதற்கு மானியங்களை வழங்குகின்றது.
  • இருப்பினும், சாதி, நிற, இனம் அல்லது சமய வேறுபாட்டினைக் காரணம் கூறி இருக்கும் இவ்வகை நிறுவனங்களில் அனுமதி மறுத்தல் கூடாது.

நீதிப் பேராணை (writ) என்பது ஒரு செயலை செய்யவோ அல்லது அச்செயலை தடுக்கவோ, நீதிமன்றத்தால் அல்லது வேறு சட்ட அமைப்பினால் வழங்கப்படும் எழுத்துப்பூர்வமான உத்தரவு.

மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு இடையிலான வேறுபாடுகள்
மனித உரிமைகள் அடிப்படை உரிமைகள்
மனிதன் தன்மானத்தோடும், சுதந்திரத் தோடும் வாழுகின்ற உரிமைகள் இவை. அரசமைப்பில் காணப்படும் குடிமக்களிம் ஆதார உரிமைகள் அடிப்படை உரிமைகள் எனப்படும். இவை சட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படலாம்.
மனிதனின் வாழ்வில் அடிப்படைத் தேவைகளுக்கான உரிமைகள் இதில் அடங்கியுள்ளன. இவற்றைப் பறிக்க இயலாது. மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு ஆதாரமாக உள்ள உரிமைகளும், அடிப்படை உரிமைகளில் அடங்கும்.
மனித உரிமைகள் பன்னாடு அளவில் அங்கீகரிக்கப்பட்டவை. அடிப்படை உரிமைகள் நமது நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மூலம் உத்திரவாதம் அளிக்கப்படுகின்றன.

ஐ.நா. மனித உரிமைகள் பிரகடனத்தின்படி அரசானது குறைந்தபட்ச உரிமைகளை வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. அது மேலும் அரசு வழிகாட்டி நெறிமுறைகளைப்போல செயல்படுத்தப்பட வேண்டும்.

அரசமைப்பு தீர்வழிக்களுக்கான உரிமை

  • அடிப்படை உரிமைகள் அரசமைப்புச் சட்டத்தினால் உத்திரவாதம் தரப்பட்டவை.
  • ஒரு குடிமகனின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகையில் , அரசமைப்பு தருகின்ற அரசமைப்பு தீர்வழிகளுக்கான உரிமையின்படி அவர் நீதிமன்றத்தை அணுகலாம். நீதிமன்றம் அக்குடிகனுக்குரிய உரிமையை மீட்டளுக்குமாறு அரசுக்கு ஆணையிடுகிறது. இது நீதிப்பேராணை என்று அழைக்கப்படுகிறது.
  • ஒரு செயல் அரசமைப்பு சட்டத்தின்படி ஏதேனும் தவறானதாக கருதப்படின் அதற்கான சரியான தீர்வுகளை அரசமைப்புச் சட்ட தீர்வாணைகள் வழங்குகின்றன.
  • இவ்வாறு, இவ்வுரிமை அனைத்து உரிமைகளுக்கும் பாதுகாப்பாகவும் காவலாகவும் அமைகின்றது.
  • அரசியலமைப்புச் சட்டக்களுக்கான உரிமையின்படி பிரத்திகா யாஷினி நீதிமன்றத்தை அணுகியதின் மூலம் தனது வேலைவாய்ப்பு உரிமையை வென்றார்.

அடிப்படைக் கடமைகள்

  • அடிப்படைக் கடமைகள் என்பவை குடிமக்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் என்ற விதத்தில் அமைந்துள்ளன.
  • 1950 ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமைகள் என்ற பகுதி இடம்பெற்றிருக்கவில்லை.
  • 1976ஆம் ஆண்டு 42வது சட்டதிருத்தத்தின் மூலம் அவை இணைக்கப்பட்டன. அரசமைப்பு கீழ்க்கண்ட 11 அடிப்படைக் கடமைகளைக் குறிப்பிடுகின்றது.
  1. ஒவ்வொரு இந்திய குடிமகனும் இந்திய அரசமைப்புச் சட்டத்தினை மதிப்பதுடன், அரசமைப்புச் சட்ட நிறுவனங்கள், இலட்சியம், தேசியக்கொடி மற்றும் தேசியகீதம் ஆகியவற்றையும் மதிக்க வேண்டும்.
  2. விடுதலைப் போராட்டத்தின்போது புத்துணர்வளித்த உன்னதமான இலட்சியங்களை நினைவிற்கொண்டு பின்பற்ற வேண்டும்.
  3. இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பேணிப் பாதுக்காக்க வேண்டும்.
  4. தேவை ஏற்படின், நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு, நாட்டுப்பணியாற்ற வேண்டும்.
  5. சமய, மொழி, மண்டல அல்லது பிரிவு வேறுபாடுகளைக் கடந்து இந்திய மக்கள் அனைவர் மனதில் சகோதரத்துவமும் இணக்கமும் ஏற்பட பாடுபடவேண்டும். பெண்களை இழிவு செய்யும் செயல்களை விட்டொழிக்க வேண்டும்.
  6. நமது கூட்டுப் பண்பாட்டு மரபினைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.
  7. காடுகள், ஏரிகள், ஆறுகள், விலங்கினங்கள் ஆகியவை உள்ளிட்ட புறச்சூழலைப் பாதுகாத்து மேம்படுத்துவதுடன் உயிரினங்கள் மீதும் கருணை காட்ட வேண்டும்.
  8. அறிவியல் உனர்வு, மனிதநேயம், பகுத்தறிவு மற்றும் சீர்திருத்த உணர்வை வளர்க்க வேண்டும்.
  9. பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்க வன்முறையை வெறுத்து ஒதுக்க வேண்டும்.
  10. தனிப்பட்ட அளவிலும் கூட்டு செயற்பாட்டிலும் மிகச் சிறந்த நிலையை அடைய முயலுவதன் மூலமாக நாட்டின் மேம்பாட்டிற்கு முயல வேண்டும்.
  11. 14 வயது வரை உள்ள குழந்தைகளின் பெற்றோர் அல்லது காப்பாளர் குழந்தைகளின் கல்விக்கான வாய்ப்புக்கு வகை செய்திடல் வேண்டும்.
  • மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் நலன்கள் பராமரிப்புச் சட்டம் 2007-ஆம் ஆண்டில் சட்டமாக இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் பிள்ளைகளுக்கும் வாரிசுகளுக்கும் தங்கள் பெற்றோரை அல்லது மூத்த குடிமக்களைப் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்ளும் சட்டப்பூர்வ வேண்டுகோள் ஆகும்.

இந்திய மனித உரிமைகள் ஆணையம் (National Human Rights Commission)

  • மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 1993 ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் நாள் அமைக்கப்பட்டது தேசிய மனித உரிமைகள் ஆணையம். இது ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
  • இவ்வமைப்பு ஒரு தலைவரையும், சில உறுப்பினர்களையும் கொண்டுள்ளது இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் சர்வதேச உடன்படிக்கையில் உத்திரவாதம் தரப்பட்டுள்ள ஒரு தனி மனிதனின் வாழ்வு, சுதந்திரம், சமத்துவம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றைப் பாதுகாக்கவும் , மேம்படுத்தவும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் பொறுப்பேற்கிறது.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பணிகள்:

  • மனித உரிமை மீறல் அல்லது அத்தகைய மீறல் குறித்து அரசு ஊழியர் அலட்சியம் காட்டுதல் ஆகியவை மீது விசாரணை நடத்திடுதல்.
  • மனித உரிமை மீறல் வழக்குகளில் தன்னை இணைத்துக் கொள்ளுதல்.
  • மனித உரிமைகள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் மற்றும் ஊக்குவித்தல்.
  • சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடையே மனித உரிமைக் கல்வியைப் பரப்புதல்.
  • மனித உரிமைத் துறையில் பணியாற்றும் அரசுசாரா அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் முயற்சிகளை ஊக்குவித்தல்.

மாநில மனித உரிமைகள் ஆணையம் (State Human Rights Commission)

  • இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்க வழி செய்யும் வகையுரை ஒன்று பிரிவு 21, மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் , 1993ல் உள்ளது.
  • மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு ஆகியவை இவ்வாணையத்தின் முதன்மை நோக்கமாகும்.
  • மேலாதிகமாக, எழுத்து மூலமான புகார் பெறாவிட்டாலும் கூட ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தும் வகையிலும், மாநில மனித உரிமை ஆணையங்களின் செயல்பாடுகளை வெளிப்படைத் தன்மையாக்கியது போன்ற ஒழுங்காற்றுவிதிகளை ஆணையம் வகுத்ததன் மூலமாக மாநிலங்களில் ஆணையத்தின் செயல்முறைகள் வலுவாக்கப்பட்டுள்ளது.

மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் பணிகள்

  • மாநில பட்டியல், பொதுப் பட்டியல் ஆகியனவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் குறித்தான மனித உரிமை மீறல்களை விசாரித்தல்.
  • இதன் நோக்கங்களும் பணிகளும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தைப் போன்றே உள்ளன. ஆனால் மாநில எல்லைக்குட்பட்டதாகும். இவ்வாணையத்தில் ஒரு தலைவரும் இரு உறுப்பினர்களும் உள்ளனர்.
  • இவ்வாணையத்திற்கு உரிமையியல் நீதிமன்றத்திற்கு இணையான அதிகாரம் உண்டு. எனவே தொடுக்கப்படும் வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்கலாம்.
  • பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் வழங்க பரிந்துரைகளும் செய்யலாம்.

அரசமைப்பினால் விளக்கப்பட்ட அடிப்படை உரிமைகளைக் கடந்து நாம் வேறு நில உரிமைகளையும் உறுதி செய்தல் வேண்டும்

குழந்தைகளுக்கான உரிமைகள்

  • ஐக்கிய நாடுகள் சபை 18 வயது வரையுள்ள அனைவரையும் குழந்தைகள் என வரையறுக்கிறது. இது உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தின் பிரிவு 25ல் கானப்படுகின்றது.
  • இக்கொள்கைகளின் அடிப்படையில் ஐ,.நா.சபை 1989ஆம் ஆண்டு நவம்பர் 20 அன்று குழந்தைகள் உரிமைகள் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டது.
  • வாழ்வதற்கான உரிமை
  • குடும்பச்சூழலுக்கான உரிமை
  • கல்விக்கான உரிமை
  • சமூகப் பாதுகாப்பு உரிமை
  • பாலியல் தொல்லைகளுக்கு எதிரான உரிமை
  • விற்பது அல்லது க்டத்தலுக்கெதிரான உரிமை
  • குழந்தை உழைப்பு முறை போன்ற மற்ற சுரண்டல்களுக்கெதிரான உரிமை.
  • வாழ்வதற்கான உரிமை

ஒரு குழந்தை பிறப்பிற்கு முன்பே அது வாழத்தகுதி பெறுகின்றது. வாழ்வதற்கான உரிமை என்பது பிறப்புரிமை, அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை மற்றும் கண்ணியமான வாழ்வு வாழும் உரிமை ஆகியனவற்றை உள்ளடக்கியது.

  • குடும்பச் சூழலுக்கெதிரான உரிமை

ஒரு குழந்தைக்கு ஒரு நல்ல குடும்பச் சூழலில், இயல்பான குழந்தைப் பருவத்தினைக் கழிக்க உரிமையுண்டு. ஆதரவற்ற, கைவிடப்பட்ட அல்லது அனாதைக் குழந்தைகளும் வாழ தகுதியுடையவர்கள். இது போன்ற குழந்தைகள், அக்கறையுள்ள குடும்பங்களுக்குத் தத்துக் கொடுக்கப்படலாம்.

  • சமூகப் பாதுகாப்பு உரிமை

உடல் நலமின்மை, இயலாமை அல்லது வயது முதிர்வு காரணமாகப் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களால், குழந்தைகளுக்குத் தரமான வாழ்வைத் தர இயலாது சூழ்நிலையில் அக்குழந்தைகளுக்கு அரசு நிதியுதவி அளிக்க வேண்டும்.

  • கல்விக்கான உரிமை

அரசமைப்பின் பிரிவு 21A ல் உள்ளபடி 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்க 2009ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றம் கல்வி உரிமைச் சட்டத்தினை நடைமுறைப்படுத்தியது.

  • இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (Right of children to free and compulsory education) 2009, ஒவ்வொரு குழந்தையும் தொடக்கக் கல்வி பயில உரிமை உள்ளது என்பதை வலியுறுத்துகின்றது. இவ்வுரிமை, குழந்தைகள் தொடக்கக் கல்வி முடியும் வரை அருகாமையில் உள்ள பள்ளியில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி அளிக்க வழிவகை செய்கிறது. கல்வி பயிலும் குழந்தை எந்த வகையான கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

குழந்தை விற்பனை அல்லது கடத்தலுக்கெதிரான உரிமை

குழந்தைகள் அனைவரும் அடிப்படை மனித உரிமைகள் கோண்ட தனிநபர்கள் எனக் கருதுதல் வேண்டும் அவர்கள் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள். குழந்தைகள் விற்பனை மற்றும் கடத்தல் நடைபெற ஏழ்மை, பாலினப்பாகுபாடு, சிதறிய குடும்பங்கள் ஆகியன முக்கிய காரணங்களாகும்.

குழந்தைகள் பொருளாதாரச் சுரண்டல், பாலியல் சுரண்டல், பாலியல் துன்புறுத்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் குழந்தைத் தொழில் ஆகிய காரணங்களுக்காக விற்பனை அல்லது கடத்தல் செய்யப்படுகின்றனர்.

மலாலா – நோபல் பரிசு வென்றவர் கூறுகிறார்.

“நான் பள்ளியை நேசித்தேன். ஆனால் அடிப்படைவாதிகள் என் வசிப்பிடமாகிய ஸ்வாட் பள்ளத்தாக்கினை ஆக்கிரமித்தபொழுது அனைத்தும் மாறியது.

பெண்கள் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை, மற்ற பெண்களுக்காகவும், எங்களது கல்வி கற்கும் உரிமைக்காவும் 2012 அக்டோபரில், பள்ளியிலிருந்து வீடு திரும்பும்பொழுது, துப்பாக்கி ஏந்திய ஒருவர் எங்கள் பேருந்தில் ஏறி இதில் மலாலா யார்? என்று கேட்டு, என் தலையின் இடது பக்கத்தில் சுட்டான். பத்து நாட்கள் கழிந்து இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாம் என்னுமிடத்தில் உள்ள மருத்துவமையில் கண்விழித்தேன். பல மாதங்கள் அறுவை சிகிச்சைகளிலும், மறுவாழ்வு சிகிச்சையிலும் கழிந்தது. இங்கிலாந்திலுள்ள எனது புது வீட்டில் என் குடும்பத்தினரோடு மீண்டும் சேர்ந்த நான், ஒவ்வொரு பெண் குழந்தையும் பள்ளி செல்லும்வரை என் போராட்டத்தைத் தொடர்வேன் என உறுதி பூண்டேன்.

அனைத்து பெண்களும் 12 வருட இலவச, பாதுகாப்பான மற்றும் தரமான கல்வி பயில வேண்டும் என்பதை உறுதி செய்ய நான் ஒவ்வொரு நாளும் போராடுகிறேன். 130 மில்லியன் பெண்கள் பள்ளியில் பயிலாத இன்றைய சூழலில், நான் செய்ய வேண்டிய வேலைகள் அதிகம் உள்ளன. கல்வி மற்றும் சமத்துவத்திற்காக என்னோடு சேர்ந்து போராடுவீர்கள் என நம்புகிறேன். நாம் இணைந்து, பெண்கள் கல்வி பயின்று, வழிநடத்தும் ஓர் உலகை உருவாக்குவோம்.

ஆபத்து காலத்தில் உதவிட காவலன் SOS செயலி தமிழ்நாடு அரசினால் பொது மக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மட்டுமின்றி, சிக்கலான அல்லது நெருக்கடியான சூழலில் இருக்கும் அனைவரும் மாநில காவல் கட்டுப்பாட்டு அறையினை இச்செயலியின் உதவியோடு எளிதாகவும், நேரடியாகவும், தொடர்பு கொள்ல இயலும்.

பாலியல் தொந்தரவுக்கெதிரான உரிமை

குழந்தைகள் உடலளவிலோ, மனதளவிலோ பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட கட்டாயப்படுத்தப்படும்போது, மாநில அரசு அக்குழந்தைகளைப் பாலியல் சுரண்டலிலிருந்தும் தொல்லைகளிலிருந்தும் பாதுகாக்க வேண்டும்.

POSCO சட்டம் – பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (The Protection of children from sexual offence Act, 2012) ஒவ்வொரு நிலையிலும் குழந்தைகளின் நலனை மையமாகக் கொண்டு செயல்படுகின்றது.

பாஸ்கோ சட்டத்தின் சிறப்பு அம்சங்கள்

  • இச்சட்டம் 18 வயது வரை உள்ளவர்களை குழந்தைகள் என வரையறுக்கிறது; அக்குழந்தைகளின் உடல், மன, அறிவுசார் மற்றும் சமூக வளர்ச்சியினை உறுதி செய்கிறது.
  • பாலியல் வன்கொடுமையில் அதிகாரத்தில் இருப்பவரோ, குடும்ப உறுப்பினரோ, அண்டை வீட்டாரோ அல்லது அறிமுகமானவரோ ஈடுபட்டால் அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும்.
  • குழந்தை என்ன வாக்குமூலம் கூறுகிறதோ, அதை அவ்வாறே பதிவு செய்ய வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட குழந்தையை அடிக்கடி சாட்சி சொல்ல அழைக்கக் கூடாது.
  • பனிரெண்டு வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைச் செய்யப்படும்போது, வன்கொடுமை செய்தவருக்கு மரணை தண்டனை வழங்குவதோடு கடுமையான தண்டனைகள் விதிக்க வகைசெய்யும் சட்டம் 2018 ஏப்ரல் மாதம் கொண்டுவரப்பட்டது.
  • குற்றவியல் சட்ட திருத்தச்சட்டம் 2018. இது இந்திய குற்றவியல் சட்டத்தில் கடுமையான திருத்தங்களைக் கொண்டு வந்தது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் விதிக்கப்படும் அபராதத் தொகையானது பாதிக்கப்பட்டவரின் மருத்துவச் செலவை ஈடுகட்டும் வகையில் இருக்க வேண்டும் என்பதாகும்.

1098

  • 1098 – உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கான உதவி மைய எண் (Childline) இந்தியாவின் முதல் 24 மணிநேர கட்டணமில்லா அவசர தொலைதொடர்பு சேவை ஆகும். குழந்தைத் தொழிலாளர், குழந்தைத் திருமணம் மற்றும் ஏதேனும் வன்கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.
  • குழந்தை உழைப்பு முறை போன்ற மற்ற சுரண்டல்களுக்கு எதிரான உரிமை
  • பல்வேறு தொழிலகங்களில் குழந்தைகள் பணியமர்த்தப்படுகின்றனர். இவர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தினையும், உடல்நலம் மற்றும் கல்வி ஆகியவற்றையும் இழக்கின்றனர்.
  • இது வறுமை மற்றும் தேவைகள் நிறைவேற்றப்படாத வாழ்விற்கு வழிவகுக்கும். இக்குழந்தைகள் கண்ணாடி, தீப்பெட்டி, பூட்டு தயாரிக்கும் தொழிற்சாலைகளிலும், குப்பை பொறுக்குதல், கம்பளம், பீடி தயாரிப்பு, சுரங்கவேலை , கல் குவாரிகள், செங்கல் சூளைகள் மற்றும் தேயிலைத் தோட்டங்கள் ஆகிய இடங்களில் பணியமர்த்தப்படுகின்றனர்.
  • வேலைவாய்ப்புகளில் பாலினப்பாகுபாடு கானப்படுகின்றது. பெண் குழந்தைகள் வீடு சார்ந்த வேலைகளிலும் ஆண் குழந்தைகள் கூலி வேலைகளிலும் பணியமர்த்தப்படுகின்றனர்.
  • இக்குழந்தைகள் விவசாய நிலங்கள், உணவகங்கள், வாகனங்களைப் பழுது பார்க்கும் பட்டறைகள் மற்றும் குடிசைத் தொழில்களில் பணிபுரிவதால், குழந்தை உழைப்பை ஒழிப்பது மிகப் பெரிய சவாலாக உள்ளது.
  • கூறைபாடுகள் உடைய குழந்தைகளே, மற்ற குழந்தைகளை விட 3.4% அதிகமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் என உலகளாவிய ஆராய்ச்சி ஒன்றின் முடிவுகள் குறிப்பிடுகின்றன.
  • பச்பன் பச்சாவ் அந்தோலன் (இளமையைக் காப்பாற்று இயக்கம்) போன்ற பல குழந்தைகள் உரிமை அமைப்புகளின் நிறுவனர் கைலாஷ் சத்யார்த்தி.
  • அவர் குழந்தை உழைப்பு, கொத்தடிமை, கடத்தல் போன்ற பல குழந்தைகளுக்கு எதிரான நடவடிக்கைகளிலிருந்து சுமார் 86,000த்திற்கும் அதிகமான இந்தியக் குழந்தைகள் இவராலும், இவரது குழு உறுப்பினர்களாலும் மீட்கப்பட்டுள்ளனர்.
  • 1998ல் உலக மக்களின் கவனத்தை குழந்தை உழைப்பு முறை மீது திசை திருப்ப, 80,000கி.மீ. நீள குழந்தைக்கு உழைப்புக்கு எதிரான உலகளாவிய அணிவகுப்பை (GlobalMarch against child labour) முன்னின்று நடத்தினார்.

இந்திய அரசமைப்பில் குழந்தைகள் உரிமை

  • பிரிவு 24. பதினான்கு வயதுக்குட்பட்ட எந்த குழந்தையும் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தக்கூடாது.
  • பிரிவு 45. பதினான்கு வயது நிறைவடையும்வரை இலவச மற்றும் கட்டாயக் கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் அளிக்கப்பட வேண்டும்.

குழந்தைகள் தேசத்தின் அடித்தளமாக விளங்குகின்றனர். சிறுவயதிலேயே பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைக்கப்படும்போது குழந்தைப் பருவத்தின் மகிழ்ச்சிகள், கல்வியறிவு, ஆரோக்கியமான வாழ்வு போன்ற பல சலுகைகளை அவர்கள் இழந்து விடுகின்றனர். இதனால் குழந்தைத் திருமணங்கள் சமூகத்தைப் பெருமளவில் பாதிக்கின்றன. எனவே குழந்தைத் திருமணங்கள் அனைத்து விதத்திலும் தடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

பெண்களுக்கான உரிமைகள்

  • இந்தியாவில் பெண்களுக்கான தேசிய ஆணையம் அமைக்கப்பட்டு பெண்களுக்கான அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியிலான பாதுகாப்பினை மீளாய்வு செய்து உறுதிபடுத்துகிறது.
  • பெண்களுக்கான நலவாழ்வு மற்றும் வளர்ச்சி குறித்த அரசின் அனைத்து செயல் திட்டங்கள் மீதான தனது கருத்தையும் மாற்றுக் கருத்துக்களையும் இவ்வாணையம் பரிந்துரை செய்கிறது.
  • குடியரசுத் தலைவர். பிரதமர், நாடாளுமன்ற அவைத்தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், மத்திய அமைச்சர்கள் முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் என இந்தியாவின் முக்கிய பதவிகளில் பெண்கள் பதவி வகிக்கின்றனர்.
  • இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள பெண்கள் உரிமைகளில் சமத்துவம், கண்ணியம் மற்றும் பாகுபாடுகளில் இருந்து சுதந்திரம் ஆகியன அடங்கும். பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் மேலும் பல்வேறு சட்டங்கள் இந்தியாவில் உள்ளன.

பெண்களுக்கு மூதாதையர் சொத்துரிமை

  • தமிழ்நாடு இந்து வாரிசு உரிமை (தமிழ்நாடு திருத்தச்) சட்டம், 1989ஐ நிறைவேற்றி மூதாதையரின் சொத்துகளில் பெண்களுக்கும் சம உரிமை வழங்கியுள்ளது.
  • மத்திய அரசு இந்து வாரிசுரிமைச் சட்டம் 2005-ல் திருத்தங்களை மேற்கொண்டது. இதில் மூதாதையரின் பிரிக்கப்படாத சொத்தில் வரிசு அடிப்படையில் பெண்களுக்கு சம உரிமையினை அளித்தது.

பெண் தொழிலாளர் நலனும் – டாக்டர் பி.ஆர். அம்பேத்கரும்

  • சுரங்கத் தொழிலாளர் பேறுகால நன்மைச் சட்டம், பெண் தொழிலாளர் நல நிதி, பெண்கள் மற்றும் குழந்தைத் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம், பெண் தொழிலாளர்களுக்கான பேறுகால நன்மைகள், நிலக்கரிச் சுரங்கங்களில் சுரங்கப் பணிகளில் பெண்களை ஈடுபடுத்தப்படவதற்கான தடையை மீட்டெடுத்தல் போன்ற சட்டங்கள் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களால் பெண் தொழிலாளர்களுக்காக இந்தியாவில் இயற்றப்பட்டது.

ரோசா – பார்க்ஸ் – சுய மரியாதையின் குறியீடு

  • 1955 – ஆம் ஆண்டு மாண்டகோமெரியிலிருந்து அலபாமா வரை செல்லும் நகரப்பேருந்தில் தனக்கான இடத்தை ஆங்கிலேயருக்கு தர மறுப்பதின் மூலம் ரோசா பார்க் ஐக்கிய அமெரிக்காவில் குடிமை உரிமைகள் இயக்கம் தொடங்குவதற்குக் காரணமாக இருந்தார்.
  • அப்பகுதியைச் சேர்ந்த ஆப்பிரிக்க-அமெரிக்க கறுப்பின மக்களின் மக்களின் தலைவர்கள் ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் பேருந்துப் பயணத்தை புறக்கணிக்கும் இயக்கத்தினைத் தொடங்கினர்.
  • பிரிவினைச் சட்டங்களை மீறியதற்காக ரோசா பார்க்ஸ் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டார்.
  • மார்டின் லூதர் கிங் ஜுனியர் அவர்களால் தலைமை தாங்கி வழி நடத்தப்பட்டப் பேருந்து புறக்கணிப்பு இயக்கமானது ஓராண்டு காலத்திற்கு மேல் நீடித்தது.
  • இக்கால கட்டத்தில் ரோசா பார்க்ஸ் அவரது பணியினை இழந்தார். ஐக்கிய அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் பிரிவினைச் சட்டத்தை அரசியலமைப்பிற்கு எதிரானது என்று சாடிய பிறகே போராட்டம் முடிவுக்கு வந்தது.
  • அடுத்த அரை நூற்றாண்டுகளுக்கு ரோசா பார்க் சுய மரியாதையின் குறியீடாகவும் இன ஒதுக்கலை முடிவுக்கு கொண்டு வந்தவராகவும் அறியப்பட்டார்.

இடஒதுக்கீடு

  • பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் 69% இடஒதுக்கீட்டினைத் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.
  • ஆதிதிராவிடர் பிரிவில் இடம் பெற்றுள்ள அருந்ததியர் வகுப்பினருக்கு முன்னுரிமை அடிப்படையில் சிறப்பு ஒதுக்கீடு வழங்கியுள்ளது.
  • மேலும் பெண்களுக்கு 33%, மாற்றுத் திறனாளிகளுக்கு 4% முன்னுரிமை அடிப்படையில் ஒவ்வொரு பிரிவின்கீழும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
  • தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு ஒவ்வொரு பிரிவின்கீழும் முன்னுரிமை அடிப்படையில் 20% ஒதுக்கப்பட்டுள்ளது.

கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை மூலம் தமிழ்நாட்டின் பல்வேறு வகுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டினைப் பற்றி தெளிவாக புரிந்துகொள்ள இயலும்.

பிரிவுகள் இட ஒதுக்கீடு (சதவீதத்தில்)
பிற்படுத்தப்பட்டோர் 26.5
பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்கள் 3.5
மிகப் பிற்படுத்தப்பட்டோர்/ சீர்மரபினர் 20
ஆதிதிராவிடர் 18
பழங்குடியினர் 3
மொத்தம் 69

தமிழ்நாட்டில் திருநங்கையர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உரிமைகள்

  • பிற மாநிலங்களில் பட்டியல் இனத்தவர் எனவும் தமிழ்நாட்டில் ஆதி திராவிடர் எனவும் குறிப்பிடப்படும் மக்களின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும், அனைத்து வகையான விலக்கல், ஒதுக்குதல், தீண்டாமை மற்றும் பாகுபாடு போன்றவற்றைக் களையவும் சமூக சமத்துவத்திற்கான உரிமையை உறுதிப்படுத்தவும் அரசு பல கொள்கைகள், திட்டங்கள், வரவு செலவுத் திட்டங்கள் மற்றும் செயல்முறைத் திட்டங்களை உருவாக்கி வருகிறது.
  • இவ்வுரிமைகள் ஆதிதிராவிட மக்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கும் அவர்களின் ஜனநாயக் அரசியல் உரிமைகளை வழங்குவதற்கான வழிமுறைகளை எளிதாக்குகின்றன.
  • மேலும் இந்தியாவின் மக்கள்தொகையில் 8.6 சதவிகிதம் பழங்குடியின மக்கள் உள்ளனர். இவர்கள் தொடர்ந்து அவர்களுக்கே உரிய பழக்க வழக்கங்களோடு வாழ்வதோடு மட்டுமல்லாமல் பல நேரங்களில் உலகின் பிற பகுதி மக்கள் அவர்களை எளிதில் அணுக முடியாத நிலையிலும் வாழ்கின்றனர். இதுவே, அவர்களைப் பாதுகாப்பதற்கானச் சட்டங்கள் இயற்றப்படுவதற்கான அடித்தளமாக அமைந்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச்சட்டம்

  • தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஓர் புரட்சிகரமான சட்டமாகும். அரசு நிறுவனங்களின் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவதற்கான இச்சட்டம் இந்தியாவில் 2005 அக்டோபர் மாதம் இயற்றப்பட்டது.
  • இச்சட்டத்தின்படி அரசு நிறுவனங்களில் தேவைப்படும் தகவல்களை எந்த ஒரு சாதாரண குடிமகனும் கோரிப் பெறலாம்.
  • தகவல்கள் 30 நாட்களுக்குள் வழங்கப்படுதல் வேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில் தகவல் வழங்கும் அதிகாரியிடமிருந்து கட்டணமாக ஒரு குறிப்பிட்டத் தொகை வசூலிக்கப்படும்.
  • நாட்டின் வலிமை வாய்ந்த சட்டங்களுள் தகவல் அறியும் உரிமைச் சட்டமும் ஒன்றாகும். இச்சட்டம் மிகவும் எளிமையானதாகவும், சாதாரன மக்களும் பயன்படுத்தக்கூடிய வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இச்சட்டத்தின் வாயிலாக தகவல்களைப் பெற படிக்கத் தெரியாதவர்களுக்கு பொதுத்தகவல் அலுவலர் உதவி செய்யவேண்டும்.
  • அனைத்து அரசு அலுவலகங்கள் அதாவது ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்கள் போன்ற உள்ளாட்சி அமைப்புகள் பல்வெஏறு அரசுத் துறைகள் போன்றவை இச்சட்டத்திற்கு உட்பட்டதாகும்.

தகவல் அறியும் உரிமைச்சட்ட செயலாப்பாட்டாளர்கள்

  • தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஒருவர் அரசு ஆவணங்களான கோப்புகள், அறிக்கைகள், தாள்கள் மற்றும் தனிப்பட்ட ஒருவரின் தகவல்கள் போன்றவைகள் கிடைக்கப்பெறலாம்.
  • நாட்டின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறைகளான எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) , மத்திய சேமக் காவல் படை (CRPR) மற்றும் உளவுத்துறைப் பணியகம் (Intelligence Bureau) ஆகிய அமைப்புகளுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
  • விண்ணப்பத்தில் உங்கள் முழுபெயர், முகவரி எழுதி கையெழுத்திட்டு தேதியுடன் பதிவு தபாலின் குறிப்பிட்ட அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.
  • அனுப்பப்பட்ட அஞ்சலுக்கு 30 நாட்களுக்குள் பதில் பெறப்படவில்லை எனில் 1 விண்ணப்பத்தை மேல்முறையீடுக்கு அனுப்பலாம்.

தொழிலாளர் உரிமைகள்

சமத்துவத்திற்கான உரிமை, பொது வேலைவாய்ப்பில் சமத்துவம், அமைப்புகள் மற்றும் சங்கள் தொடங்குவதற்கான உரிமை, வாழ்வாதார உரிமை, கடத்தலைத் தடுத்தல் மற்றும் கட்டாயத் தொழிலாளர் மற்றும் குழந்தைகள் உரிமைகளை, இந்திய அரசியலமைப்பு உறுதி செய்கிறது. பிரிவு 39பி, இருப்பாலினருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் என்பதை உறுதி செய்கிறது.

தொழிலாளர் நலனில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பங்களிப்புகள்

  • தொழிற்சாலையில் வேலை நேரம் குறைப்பு
  • தொழிற்சங்கங்களின் கட்டாய அங்கீகாரம்
  • இந்தியாவில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அமைத்தல்.
  • தொழிலாளர் காப்பீட்டுக்கழகம் (ESI)
  • தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம்
  • நிலக்கரி மற்றும் மைகா சுரங்கத்தின் வருங்கால வைப்பு நிதி
  • பத்து ஆண்டுகளாக கேரளாவில் உள்ள கடமைகள் மற்றும் வணிக வளாகங்களில் வேலை செய்யும் பெண்கள் ஒரு நாளில் ஏறக்குறைய 12 -14 மணிநேரம் நின்றுகொண்டே வேலை செய்து கொண்டிருந்தனர்.
  • கடைகளிலும், வணிக வளாகங்களிலும் வேலை செய்யும் பெண் பணியாளர் அமர்ந்தோ, சுவரில், சாய்ந்தபடியோ பணியாற்ற அனுமதிக்கப்படவில்லை.
  • ஒரு நாளைக்கு, இருமுறை 5 நிமிடங்கள் மட்டுமே ஓய்வு எடுக்க அனுமதிக்கப்பட்டனர்.
  • பெண்களுக்கு இழைக்கப்படும் இந்த மனித தன்மையற்ற செயலுக்காக நீண்ட நாள்களாக பெருந்தத கண்டனக் குரல்கள் ஒலித்து வந்தன.
  • இப்பிரச்சனையை பரிசீலித்து குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு கேரள அரசு வணிக நிறுவன சட்டத்தில், 2018 ஜுலை மாதத்தில் சட்ட திருத்தம் கொண்டு வந்தது. இதன் மூலம் பெண்கள் இத்துயர் நீங்கி வெற்றி கண்டுள்ளனர்.
  • “ஒரு மனிதனுடைய உரிமை அச்சுறுத்தப்படும்போது, ஒவ்வொரு மனிதனுடைய உரிமையும் குறைக்கப்படுகிறது” என்றார் ஜான். எஃப்.கென்னடி.
  • உலகின் நாகரிகமடைந்த நாடுகள் சமத்துவத்தை வலுயுறுத்துகின்றன. சமத்துவத்தை உறுதி செய்ய, நாடுகள் மனித உரிமைகள் மீது கவனம் செலுத்துகின்றன. இது ஒரு நாட்டின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் முன்னேற்றத்திற்கு உதவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!