Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

மாநில அரசு Notes 10th Social Science Lesson 9 Notes in Tamil

10th Social Science Lesson 9 Notes in Tamil

9. மாநில அரசு

அறிமுகம்

இந்திய அரசியலமைப்பு மத்திய, மாநில அரசுகளுக்கான தனித்தனி நிர்வாக முறைகளைக் கொண்ட கூட்டாட்சி அரசாங்கத்தை வழங்குகிறது. இக்கூட்டாட்சியில் , தேசிய தலைநகரான டெல்லி, 6 யூனியன் பிரதேசங்கள் மற்றும் 29 மாநிலங்கள் உள்ளன. மத்திய –மாநில அரசுகளுக்கான ஒரு சீரான நிர்வாக அமைப்பினை ஏற்படுத்த அரசியலமைப்பு வழிவகுக்கிறது. அரசியலமைப்பின் பகுதி VI இல் 152 முதல் 327 வரையிலான சட்டப்பிரிவுகள் அனைத்து மாநிலங்களுக்கான சீரான அமைப்பினைப் பற்றி குறிப்பிடுகிறது. ஆனால் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கியுள்ளது. மத்திய அரசைப் போன்று மாநில அரசுகளும் நிர்வாகத்துறை, சட்டமன்றம், நீதித்துறை என்ற மூன்று பிரிவுகளின் கீழ் இயங்குகின்றன.

  • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், ஜம்மு – காஷ்மீர் அரசியலமைப்பு 1957-ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் நாள் ஏற்கப்பட்டு, 1957-ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் நடைமுறைக்கு வந்தது. இந்திய அரசியலமைப்பின் அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள் மற்றும் அடிப்படை உரிமைகள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குப் பொருந்தாது. இந்திய அரசியலமைப்பு நீக்கிய அடிப்படை உரிமைகளில் ஒண்றான சொத்துரிமை ஜம்மு – காஷ்மீரில் இன்றும் நடைமுறையில் உள்ளது.

நிர்வாகத் துறை

ஆளுநர்

  • மாநில நிர்வாகத்தின் அரசியலமைப்புத் தலைவர் ஆளுநர் ஆவார். மாநில ஆளுநரின் பெயரில் மாநில நிர்வாகம் செயல்படுகிறது.
  • பொதுவாக ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் ஆளுநர் இருக்கிறார். ஆனால் நிர்வாகச் சூழலின் காரணமாக ஒரு மாநிலத்தின் ஆளுநர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் ஆளுநராகவும் நியமிக்கப்படலாம்.
  • . அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 154 மாநில ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தைப் பற்றி கூறுகிறது. சட்டப்பிரிவு 154(1)-ன் படி மாநில ஆளுநரின் நிர்வாக அதிகாரம் ஆளுநரிடம் இருக்க வேண்டும்.
  • இந்த அதிகாரம் அவரால் நேரடியாகவோ அல்லது அவரின் கீழுள்ள அலுவலர்களாலோ, அரசியலமைப்பின்படி செயல்படுத்தப்பட வேண்டும்.

ஆளுநர் நியமனம்

  • மாநில ஆளுநர், குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுகிறார். வழக்கமாக, அவரது பதவிக்காலம் 5 ஆண்டுகள். ஆனால் குடியரசுத் தலைவரின் விருப்பத்தின் பேரில் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம்.
  • பொதுவாக, ஒருவர் தனது சொந்த மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்படமாட்டார். மேலும் அவர் குடியரசுத் தலைவரால் ஒரு மாநிலத்திலிருந்து வேறொரு மாநிலத்திற்கு மாற்றப்படலாம்.
  • குடியரசுத் தலைவருக்குத் தனது பணித்துறப்பு கடிதத்தைக் கொடுப்பதன் மூலம் ஆளுநர் எந்நேரத்திலும் பதவி விலகலாம்.
  • மாநில சட்டமன்றமோ அல்லது உயர் நீதிமன்றமோ ஆளுநரின் பதவி நீக்கத்தில் பங்கு பெற முடியாது.
  • ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் ஆளுநராக நியமிக்கப்படலாம். ஒருவரை ஒரு மாநில ஆளுநராக நியமனம் செய்யப்படுவதில் இரண்டு மரபுகள் பின்பற்றப்படுகின்றன. அவை:

ஆளுநராக நியமிக்கப்படும் ஒருவர் தான் எந்த மாநிலத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட உள்ளாரோ அந்த மாநிலத்தில் வசிப்பவராக இருத்தல் கூடாது. மேலும் ஆளுநராக நியமிக்கப்படும் ஒருவரை மத்திய அரசு, மாநில அரசுடன் கலந்தாலோசித்து அவரது பெயரை முன்மொழிய வேண்டும்.

  • அரசியலமைப்பு சட்டப்பிரிவு 158(3A) –ன் படி ஒருவர், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் ஆளுநராக நியமிக்கப்படும் பொழுது, குடியரசுத் தலைவர் ஓர் ஆணையின் மூலம், ஆளுநரின் ஊதியம் மற்றும் படிகளை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்து வழங்க தீர்மானிக்கலாம்.
  • மத்திய – மாநில அரசுகளின் உறவுகளைக் குறித்து ஆராய அமைக்கப்பட்ட சர்க்காரியா குழு ஆளுநர் நியமனம் குறித்த பல ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அவை:
  1. மாநில சட்டமன்ர குழுவால் தயாரிக்கப்பட்ட பட்டியலிலிருந்து அல்லது
  2. முதலமைச்சரின் ஒப்புதலுடன் மாநில அரசால் தயாரிக்கப்படும் பட்டியலிலிருந்து அல்லது
  3. முதலமைச்சருடன் நடத்தப்படும் கலந்துரையாடல் ஆகியவற்றின் மூலம், ஆளுநர் நியமனம் நடைபெறும்.

ஆளுநராவதற்கான தகுதிகள்

இந்திய அரசியலமைப்பின் 157 மற்றும் 158வது சட்டப்பிரிவுகள் ஆளுநர் பதவிக்குத் தேவையான பின்வரும் தகுதிகளைக் கூறுகின்றன.

  • அவர் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
  • நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ இருத்தல் கூடாது. அவ்வாறு இருப்பின் அவர் ஆளுநராக பதவியேற்கும் பொழுது தாமாகவே அப்பதவி காலியாகிவிடும்.
  • மேலும் அவர், இலாபம் தரும் எந்த தொழிலிலு,ம் ஈடுபடக்கூடாது.

ஆளுநரின் அதிகாரங்கள் மற்றும் பணிகள்

  • ஆளுநர், மாநில நிர்வாகத்தின் தலைவராக செயல்படுவது மட்டுமல்லாமல் ஏராளமான அதிகாரங்கள் பெற்றவராகவும் திகழ்கிறார்.
  • சட்டப்பிரிவு 163-ன் படி, முதலமைச்சரின் தலைமையிலான அமைச்சரவையின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி ஆளுநர் குறிப்பிட்ட சில நிகழ்வுகளைத் தவிர மற்ற அதிகாரங்களைச் செயல்படுத்துகிறார்.
  • மாநில நிர்வாகத் தலைவராக ஆளுநர் பின்வரும் அதிகாரங்களைப் பெற்று பணிகளைச் செய்கிறார்.

நிர்வாக அதிகாரங்கள்

  • இந்திய அரசியமைப்பு , மாநில நிர்வாகத்தின் அனைத்து அதிகாரங்களையும் ஆளுநருக்கு வழங்குகிறது. இவற்றை ஆளுநர் நேரடியாகவோ அல்லது அவரின் கீழுள்ள அலுவலர்கள் மூலமோ செயல்படுத்தலாம். ஆளுநரே மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவர். அவரது பெயராலே அனைத்து நிர்வாகமும் நடைபெறுகின்றன.

ஆளுநரின் நிர்வாக அதிகாரங்கள் மற்றும் பணிகளாவன:

  • மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெறும் கட்சியின் தலைவரை முதலமைச்சராக ஆளுநர் நியமனம் செய்கிறார்.
  • முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் அமைச்சரவையின் மற்ற உறுப்பினர்களை நியமனம் செய்கிறார்.
  • மாநிலத்தின் அரசு வழக்கறிஞரை நியமனம் செய்து அவரது ஊதியத்தையும் நிர்ணயம் செய்கிறார். ஆளுநர் விரும்பும் வரை அரசு வழக்குரைஞர் அவரது பதவியைத் தொடரலாம்.
  • அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்கிறார். இருப்பினும் ஆளுநரால் இவர்களை பணிநீக்கம் செய்ய முடியாது. குடியரசுத் தலைவரால் மட்டுமே பணி நீக்கம் செய்ய முடியும்.
  • மாநில தலைமை தேர்தல் ஆணையரை நியமனம் செய்து, அவரது பணிக்காலம், பணியின் தன்மையைத் தீர்மானிக்கிறார். இருந்தபோதிலும், உயர்நீதிமன்ற நீதிபதியைப் பதவி நீக்கம் செய்யும் அதே முறையைப் பின்பற்றியே மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கம் செய்யலாம்.
  • ஆளுநர், மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுவதுடன், துணை வேந்தர்களையும் நியமனம் செய்கிறார்.
  • குடியரசுத் தலைவரின் அவசரநிலை பிரகடனம் செய்யப்படும் பொழுது, குடியரசுத் தலைவரின் பெயரில் இவரே மாநிலத்தை நேரடியாக ஆட்சி செய்கிறார்.

சட்டமன்ற அதிகாரங்கள்

ஆளுநர் மாநில சட்டமன்றத்தின் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாவார். ஆனால், அவர் சட்டமன்றத்தின் உறுப்பினராக இல்லை. ஆளுநர் பின்வரும் சட்டமன்ற அதிகாரங்களைப் பெற்றுள்ளார்.

  • ஆளுநர் சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டவும் ஒத்திவைக்கவும் சட்ட மன்றத்தைக் கலைக்கவும் உரிமைப் பெற்றுள்ளார்.
  • பொதுத் தேர்தல் முடிந்து முதலமைச்சர் மற்றும் மற்ற அமைச்சர்களின் நியமனத்திற்குப் பிறகு நடைபெறும் சட்டமன்றக்கூட்டத்தின் முதல் கூட்டத்தில் உரை நிகழ்த்துகிறார்.
  • நிலுவையிலுள்ள மசோதா குறித்து சட்டமன்ற அவைகளுக்கு ஆளுநர் செய்தி அனுப்பலாம்.
  • சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பணியிடம் காலியாக இருக்கும்பொழுது சட்டமன்றத்தை தலைமை ஏற்று நடத்த எந்த சட்டமன்ற உறுப்பினரை வேண்டுமானாலும் ஆளுநர் நியமனம் செய்யலாம்.
  • ஆங்கிலோ – இந்தியன் வகுப்பினரிலிருந்து ஓர் உறுப்பினரை மாநில சட்டமன்றத்திற்கு நியமனம் செய்யலாம்.
  • கலை, இலக்கியம், அறிவியல், கூட்டுறவு இயக்கம் மற்றும் சமூக சேவை போன்றவற்றில் சிறந்து விளங்கும் நபர்களைத் தேர்ந்தெடுத்து மாநில சட்டமேலவையின் 6 இல் 1 பங்கு இடங்களுக்கு அவர்களை நியமனம் செய்கிறார்.
  • சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதியின்மை குறித்து தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசித்து முடிவு செய்கிறார்.
  • மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு மசோதாவும் ஆளுநர் கையொப்பமிட்ட பின்னர் மட்டுமே சட்டமாகும். ஆனால், சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் பொழுது ஆளுநர் கையொப்பமிடலாம் அல்லது நிறுத்தி வைக்கலாம் அல்லது மீண்டும் மறு பரிசீலனைக்காக சட்டமன்றத்திற்கே திருப்பி அனுப்பலாம்.
  • மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட எந்த ஒரு மசோதாவும் மாநில உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்குத் தீங்கு விளைவிக்கும் நிலையில் இருக்குமாயின், அதனைக் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக நிறுத்துவைக்கலாம்.
  • அரசியலமைப்பு சட்டப்பிரிவு 213-ன் கீழ் ஆளுநர் மாநில சட்டமன்றம் நடைபெறாத பொழுது அவசர சட்டத்தைப் பிறப்பிக்கலாம். ஆனால் அந்த அவசரச்சட்டம், 6 மாதத்திற்குள் மாநில சட்டமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அவசரச்சட்டத்தை எந்நேரத்திலும் ஆளுநர் திரும்பப் பெறலாம்.
  • மாநிலத்தின் ஆண்டு நிதிநிலை அறிக்கை, அரசுப்பணியாளர் தேர்வாணையக் குழுவின் அறிக்கை, அரசின் தணிக்கைக்குழு அறிக்கைகளை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கின்றார்.

நிதி அதிகாரங்கள்

  • மாநிலத்தின் ஆண்டு வரவு செலவு திட்டத்தினை தயார் செய்து சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யும் கடமையை ஆளுநருக்கு அரசியலமைப்பு வழங்குகிறது. தேவைப்பட்டால், துணை வரவு செலவு திட்டத்தையும் அறிமுகம் செய்யலாம்.
  • ஆண்டு நிதிநிலை அறிக்கையை (வரவு செலவு திட்டம்) சட்டமன்றத்தில் அறிமுகம் செய்ய காரணமாகிறார்.
  • மாநில சட்டமன்றத்தில் மாநில நிதியமைச்சர் மூலம் துணை வரவு செலவு திட்டத்தை தேவைப்பட்டால் சமர்ப்பிக்கின்றார்.
  • ஆளுநரின் முன் அனுமதியுடன்தான் பண மசோதாவை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியும்.
  • ஆளுநரின் பரிந்துரையின்றி நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது.
  • அரசின் எதிர்பாராச் செலவினங்களுக்காக ஆளுநர் அவசர நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்ய முடியும்.
  • பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளின் நிதிநிலையை ஆய்வு செய்ய ஒவ்வொரு ஐந்தாண்டிற்கு ஒருமுறை நிதி ஆணையம் ஒன்றை அமைக்கிறார்.

நீதித்துறை அதிகாரங்கள்

  • மாநில அரசின் தலைமை வழக்குரைஞரை நியமனம் செய்கிறார்.
  • கீழ் நீதிமன்றங்களின் நீதிபதிகளை நியமனம் செய்கிறார்.
  • உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையின் பேரில் மாவட்ட நீதிபதிகளின் நியமனம் மற்றும் பதவி உயர்வு போன்ற பணிகளை மேற்கொள்கிறார்.
  • ஆளுநரின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமனம் செய்கிறார்.
  • குற்றவாளிகளின் கருணை மனு அடிப்படையில் குற்றவாளிகளை மன்னிக்கலாம் அல்லது குற்றவாளிகளின் தண்டனையைக் குறைக்கலாம் அல்லது நிறுத்தி வைக்கலாம்.

விருப்புரிமை அதிகாரங்கள்

  • குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக ஆளுநர் ஒரு மசோதாவை நிறுத்தி வைக்க முடியும்.
  • மாநிலத்தில், குடியரசுத் தலைவரின் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை செய்கிறார்.
  • மாநில நிர்வாகம் மற்றும் சட்டமன்ற செயல்பாடுகள் தொடர்பானச் செய்திகளை முதலமைச்சரிடமிருந்து ஆளுநர் பெறுகிறார்.
  • மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில் எந்த கட்சியும் அறுதி பெரும்பான்மையைப் பெறாத போது, ஆளுநர் எந்தக் கட்சி தலைவரையும் ஆட்சி அமைக்க அழைக்கலாம்.
  • சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் பொழுது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனால் அமைச்சரவையை ஆளுநர் கலைக்க முடியும்.
  • அமைச்சரவை பெரும்பான்மையை இழந்தால், சட்டமன்றத்தை ஆளுநர் கலைக்கமுடியும்.

அவசரகால அதிகாரங்கள்

மாநில அரசு அரசியலமைப்பு விதிகளுக்கேற்ப செயல்படவில்லை என்று ஆளுநர் உறுதியாக நம்பினால் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356-ன் கீழ் மாநில அரசை கலைக்க குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யலாம். மாநில அரசு கலைக்கப்பட்டவுடன், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வரும். ஆளுநர் குடியரசுத் தலைவரின் பிரதிநிதியாக மாநிலத்தை நிர்வாகம் செய்கிறார்.

ஆளுநரின் சிறப்புரிமைகள்

சட்டப்பிரிவு 361(1) ஆளுநருக்கான கீழ்க்காணும் சிறப்புரிமைகளை வழங்குகின்றது.

அ) தனது பணிகள் மற்றும் அதிகாரத்தைச் செய்ய வேண்டும் என எண்ணுவதிலும் செயல்படுத்துவதிலும் எந்த நீதிமன்றத்திற்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை.

ஆ) ஆளுநரின் பதவிக்காலத்தில் அவர் மீது குற்றவியல் நடவடிக்கைகளை அவருக்கு எதிராக எந்த நீதிமன்றத்திலும் தொடர முடியாது.

இ) ஆளுநரின் பதவி காலத்தில் அவர் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தவோ அல்லது அவரை கைது செய்யவோ எந்த நீதிமன்றமும் உத்தரவு பிறப்பிக்க முடியாது.

ஈ) மாநில ஆளுநருக்கு எதிராக உரிமையியல் வழக்குகளைத் தொடர முடியாது.

முதலமைச்சர்

அரசியலமைப்பால் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற முறையில் அமைந்த அரசில், ஆளுநர், மாநிலத்தின் பெயரளவு நிர்வாகியாகவும் முதலமைச்சர் உண்மையான நிர்வாகியாகவும் உள்ளனர். வேறு வகையில் கூற வேண்டுமாயின் ஆளுநர் மாநிலத்தின் அரசின் தலைவர் முதலமைச்சர் அரசாங்கத்தின் தலைவர் ஆவார்.

முதலமைச்சரின் நியமனம்

  • முதலமைச்சர் மாநில ஆளுநரால் நியமனம் செய்யப்படுகிறார். சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவர் அல்லது பெரும்பான்மை பெற்ற கூட்டணிக் கட்சியின் தலைவர் முதலைச்சராக நியமிக்கப்படுகிறார்.
  • ஒருவேளை எந்த கட்சியும் முழுமையான பெரும்பான்மை பெறாத பொழுது அல்லது பெரும்பான்மை பெற்றவர்கள் தங்களது தலைவரைத் தேர்ந்தெடுக்க தவறும் பொழுது ஆளுநர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அடுத்ததாக பெரும்பான்மை பெற்ற பெரிய கட்சியை அமைச்சரவை அமைக்க அழைப்பார்.
  • அவ்வாறு அழைக்கப்படும் தலைவர், ஆளுநரால் வழங்கப்படும் கால அவகாசத்திற்குள் சட்டமன்றத்தில் அவரது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
  • முதலமைச்சரின் பதவிக்காலம் நிர்ணயிக்கப்பட்ட ஒன்றல்ல. சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு எவ்வளவு காலத்திற்கு தொடர்கிறதோ அதுவரை அவர் முதலமைச்சராக நீடிக்கலாம்.
  • சட்டமன்றத்தில் எப்பொழுது அவர் பெரும்பான்மையை இழக்கிறாரோ அப்பொழுது தனது பதவியை இராஜினாமா செய்கிறார்.
  • சட்டமன்றத்தில் மற்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் போலவே முதலமைச்சரின் பதவிக்காலமும் 5 ஆண்டுகள் ஆகும்.

1947 – லிருந்து பதவி வகித்த தமிழக முதலமைச்சர்கள்

திரு. O.P.இராமசாமி 1947 – 49

திரு. P.S.குமாரசாமி ராஜா 1949-52

திரு. C. இராஜகோபாலாச்சாரி 1952- 54

திரு.K.காமராஜர் 1954 – 63

திரு. M.பக்தவச்சலம் 1963 – 67

திரு.C.N.அண்ணாதுரை 1967 – 69

திரு.M.கருணாநிதி 1969 – 76

திரு. M.G.இராமச்சந்திரன் 1977 – 87

திருமதி. ஜானகி இராமச்சந்திரன் ஜனவரி 1988

திரு.M. கருணாநிதி 1989 – 91

செல்வி. J. ஜெயலலிதா 1991- 96

திரு. M.கருணாநிதி 1996 – 2001

செல்வி. J.ஜெயலலிதா 2001

திரு. O. பன்னீர் செல்வம் 2001 – 02

செல்வி. J.ஜெயலலிதா 2002 -06

திரு.M.கருணாநிதி 2006 – 11

செல்வி.J. ஜெயலலிதா 2011 – 14

திரு.O.பன்னீர்செல்வம் 2014-15

செல்வி. J.ஜெயலலிதா 2015 – 16

திரு.O. பன்னீர்செல்வம் 2016 – 17

திரு. எடப்பாடி. K.பழனிசாமி 2017 முதல்

முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகள்

மாநில நிர்வாகத்தின் உண்மையான தலைவர் முதலமைச்சர் ஆவார். முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளாவன.

  • அமைச்சரவை தொடர்பானவை
  • ஆளுநர் தொடர்பானவை
  • சட்டமன்றம் தொடர்பானவை
  • இதர பணிகள் மற்றும் அதிகாரங்கள்

அமைச்சரவை தொடர்பானவை

அமைச்சரவையின் தலைவரான முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளாவன.

  • முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் அமைச்சர்களை நியமிக்கிறார்.
  • அமைச்சர்களுக்குத் துறைகளை ஒதுக்கீடு செய்கிறார்.
  • தனது அமைச்சரவையை மாற்றியமைக்கிறார்.
  • ஓர் அமைச்சருடன் கருத்து வேறுபாடுகள் எழும்பொழுது, இராஜினாமா செய்யும்படி கேட்கிறார் அல்லது பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்குப் பரிந்துரை செய்கிறார்.
  • அமைச்சரவைக் கூட்டத்தைத் தலைமை ஏற்று நடத்தி முடிவுகளை எடுக்கிறார்.
  • அமைச்சரவையின் குழப்பத்தைத் தனது இராஜினாமா மூலம் முடித்து வைக்கிறார்.
  • அமைச்சர்கள் அனைவரையும் கட்டுப்படுத்தி, வழிநடத்தி, இயக்கி, அவர்களது நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறார்.

ஆளுநர் தொடர்பானவை

ஆளுநருக்கும் அமைச்சரவைக்குமிடையே செய்தித்தொடர்புகளில், முதலமைச்சர் முதன்மையாக விளங்குகிறார். கீழ்க்காணும் அலுவலர்களின் நியமனங்கள் தொடர்பாக ஆளுநருக்கு ஆலோசனை வழங்குகிறார்.

  • மாநில அரசு வழக்குரைஞர்
  • மாநில தேர்தல் ஆணையர்
  • அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
  • மாநில திட்டக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
  • மாநில நிதிக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்

சட்டமன்றம் தொடர்பானவை

  • சட்டமன்ற கூட்டத்தொடரை ஆரம்பிக்கவும் ஒத்திவைக்கவும் ஆளுநருக்கு முதலமைச்சர் ஆலோசனை வழங்குகிறார்.
  • சட்டமன்றத்தில் அரசின் கொள்கைகளை அறிவிக்கிறார்.
  • சட்டமன்றத்தில் மசோதாக்களை அறிமுகப்படுத்துகிறார்.
  • எந்நேரத்திலும் சட்டமன்றத்தைக் கலைக்க ஆளுநருக்குப் பரிந்துரை செய்கிறார்.

இதர அதிகாரங்கள் மற்றும் பணிகள்

  • ஆளுங்கட்சியின் தலைவராக முதலமைச்சர் கட்சியைக் கட்டுப்படுத்தி அதன் ஒழுக்கத்தை மேம்படுத்துகிறார்.
  • மாநிலத்தின் தலைவராகப் பல்வேறுபட்ட மக்களின் தேவைகளை உற்று நோக்குகிறார்.
  • மாநிலத்தின் அரசியல் தலைமையாக பல்வேறு பணிகளைக் கட்டுப்படுத்தி, மேற்பார்வையிட்டு, பல்வேறு துறை செயலர்களின் பணிகளை ஒருங்கிணைக்கிறார்.
  • மாநில அரசு சுமூகமாக இயங்க மத்திய அரசுடன் இணக்கமான உறவை வைத்துக்கொள்கிறார்.

அமைச்சரவை

  • அமைச்சரவை மாநில சட்டமன்றத்திற்குக் கூட்டாகப் பொறுப்பானது. அமைச்சரவைக்குழுவின் அமைச்சர்கள் அனைவரும் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.
  • சட்டமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவர் அமைச்சராக பதவியேற்றால் 6 மாத காலத்திற்குள் அவர் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும்.
  • முதலமைச்சரின் தலைமையின் கீழ் அமைச்சர்கள் அனைவரும் ஒரு குழுவாக செயல்பட வேண்டும். முதலமைச்சர் எவ்வளவு காலம் பதவியில் நீடிக்கிறாரோ அதுவரை அமைச்சரவை தொடரும்.
  • சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டால் மாநில அமைச்சரவை இராஜினாமா செய்ய வேண்டும்.
  • அரசியலமைப்பு சட்டப்பிரிவு 163 ஆளுநருக்கு ஆலோசனைகள் வழங்க அமைச்சரவையை உருவாக்க வழிவகை செய்திருக்கிறது.
  • சட்டப்பிரிவு 163(1)-ன் படி, முதலமைச்சரை தலைவராகக் கொண்ட அமைச்சரவை ஆளுநருக்கு தேவைப்படும் பொழுது உதவி செய்யவும் ஆலோசனை வழங்கவும் வேண்டும்.

அமைச்சர்களுடனான மற்ற விதிகள்

  • சட்டப்பிரிவு 164(1), ஆளுநரால் முதலமைச்சர் நியமிக்கப்படுவதைக் கூறுகிறது. மற்றும் முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் மற்ற அமைச்சர்களையும் நியமிக்க வகை செய்கிறது.
  • ஆளுநர் விரும்பும் வரை முதலமைச்சர் பதவியில் தொடரலாம். முதலமைச்சர் உட்பட மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 விழுக்காட்டை தாண்டக்கூடாது என சட்டப்பிரிவு 164(1) கூறுகிறது.

அமைச்சரவையின் அதிகாரங்கள் மற்றும் பணிகள்

  • மாநில அரசிற்கான கொள்கைகளை உருவாக்கி அவற்றை திறம்பட நடைமுறைப்படுத்துகிறது.
  • சட்டமன்ற நிகழ்ச்சிகளை முடிவு செய்து எல்லா முக்கியமான மசோதாக்களுக்கும் ஆதரவளிக்கிறது.
  • நிதிக்கொள்கையைக் கட்டுப்படுத்துவதுடன் மாநில பொது நலனுக்கான வரிக்கொள்கையை முடிவு செய்கிறது.
  • சமூக, பொருளாதார மாற்றங்களுக்கான நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்களை உருவாக்கி அதன்படி மாநில அரசின் தலைமையில் பல்வேறு தொடர்புடைய துறைகள் உருவாக்கப்படுகின்றன.
  • முக்கியமான துறைத் தலைவர்களின் நியமனங்களைச் செய்கிறது.
  • மற்ற மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி மேற்கொள்கிறது.
  • கீழ் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்களில் ஆளுநருக்கு ஆலோசனை வழங்குகிறது.
  • மாநிலத்திற்கான செலவுகளைச் சமாளிக்க திட்ட அறிக்கையை உருவாக்குகிறது.
  • ஒரு மசோதா சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் போது அது சாதாரண மசோதாவா அல்லது நிதி மசோதாவா என்று தீர்மானிக்கிறது.
  • அமைச்சரவையின் ஒவ்வொரு அமைச்சரின் பணிகளைக் கட்டுப்படுத்தி, கண்காணித்து ஒருங்கிணைக்கின்றது.
  • ஆண்டு வரவு செலவு திட்டம் (Budget) அமைச்சரவையால் இறுதி செய்யப்படுகிறது.

மாநில சட்டமன்றம்

  • இந்திய அரசியலமைப்பு ஒவ்வொரு மாநிலத்திற்கு ஒரு சட்டமன்றம் ஏற்பட வகை செய்கிறது.
  • பெரும்பாலான மாநிலங்கள் ஓரவையைக் கொண்ட சட்டமன்றங்களை மட்டும் பெற்றுள்ளன.
  • சில மாநிலங்கள் ஈரவை சட்டமன்றங்களைக் கொண்டுள்ளன. (எடுத்துக்காட்டு: பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா மற்றும் ஜம்மு-காஷ்மீர்).
  • கீழவையானது மாநில மக்களின் பிரதிநிதிகளைக் கொண்டது. மேலவையானது ஆசிரியர்கள், பட்டதாரிகள் மற்றும் உள்ளாட்சி உறுப்பினர்கள் ஆகியோர்களைப் பிரதிநிதிகளாகக் கொண்டது.
  • தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையின் படி (234 உறுப்பினர்கள்) அமைச்சர்களின் எண்ணிக்கை 36 வரை இருக்கலாம். அதாவது 234-ல் 15 விழுக்காடு.

சட்டமன்றப் பேரவை (கீழவை)

  • மாநில சட்டமன்றம் பிரபலமான ஓர் அவை ஆகும். இதுவே மாநில அதிகாரத்தின் உண்மையான அதிகார மையமாகும்.
  • இது வயது வந்தோர் வாக்குரிமையின் அடிப்படையில் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டது.
  • சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, மக்கள் தொகையைப் பொறுத்து மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது.
  • இருப்பினும், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 500க்கு மிகாமலும் குறைந்த பட்சம் 60க்கு குறையாமலும் இருக்க வேண்டும்.
  • சட்டமன்றத்தின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இருப்பினும் 5 ஆண்டுகள் முடியும் முன்னரே சட்டமன்றம் கலைக்கப்படலாம்.
  • சட்ட மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அம்மாநில சட்டமன்ர கீழவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 3-ல் 1-பங்குக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆனால் மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 40க்கு குறையாமல் இருக்க வேண்டும் (ஜம்மு- காஷ்மீர் தவிர).
  • நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் காஷ்மீர் சட்ட மேலவையில் 36 உறுப்பினர்களே உள்ளனர்.
  • சட்டமேலவை உறுப்பினர்கள் மாநில சட்டமன்றத்தால் அவ்வப்போது நிறைவேற்றப்படும் சட்டங்கள் மூலம் தங்களது ஊதியம் மற்றும் படிகளைப் பெறுகின்றனர்.

சட்டமன்றத்தின் அமைப்பு

  • தமிழக சட்டமன்றம் 235 உறுப்பினர்கலைக் கொண்டது. இவர்களில் 234 உறுப்பினர்கள் வயது வந்தோர் வாக்குரிமையின் அடிப்படையில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
  • ஆங்கிலோ- இந்தியன் வகுப்பினரில் ஒருவர் ஆளுநரால் நியமனம் செய்யப்படுகிறார். அட்டவணைப்படுத்தப்பட்டோர் (தாழ்த்தப்பட்டோர்) மற்றும் பழங்குடியினருக்கு சட்டமன்றத் தேர்தலில் தனித் தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன.
  • அமைச்சரவை மற்றும் அமைச்சரவைக் குழுக்கள் அமைச்சரவை (Cabinet) என்ற சிறிய அமைப்பானது அமைச்சரவையின் உட்கரு ஆகும். இது காபினெட் அமைச்சர்களை மட்டும் உள்ளடக்கியது. இதுவே மாநில அரசின் உண்மையான அதிகார மையமாக விளங்குகிறது.
  • அமைச்சரவைக் குழுக்கள் எனப்படும் வெவ்வேறு குழுக்கள் மூலம் காபினெட் செயலாற்றுகிறது. அவற்றில் இரண்டு வகைகள் உள்ளன. அவை: ஒன்று நிரந்தரமானது மற்றொன்று தற்காலிகமானது ஆகும்.

சபாநாயகர்

  • சட்டமன்றம் உறுப்பினர்களிடையே சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
  • சபாநாயகர் தனது பதவியை இராஜினாமா (பதவி துறப்பு) செய்தால் சட்டமன்ற உறுப்பினராக தொடர முடியாது.
  • சபாநாயகர் எந்நேரத்திலும் இராஜினாமா (பதவி துறப்பு) செய்யலாம். சட்டமன்றம் ஒரு தீர்மானத்தின் மூலம் 14 நாட்கள் அறிவுப்பு கொடுத்த பிறகு சபாநாயகரைப் பதவி நீக்கம் செய்யலாம்.
  • அதற்கு முன் சபாநாயகரைப் பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடக்கும் நேரத்தில் அவைக்கு வந்த பெரும்பாலான உறுப்பினர்கள் வாக்களித்து தீர்மானித்தை நிறைவேற்ற வேண்டும்.
  • சட்டமன்றம் கலைக்கப்படும்பொழுது சபாநாயகர் தமது பதவியை இழக்க மாட்டார். மேலும், புதிய சட்டமன்றத்தின் முதல் கூட்டம் வரை தனது பதவியைத் தொடர்கிறார். சபாநாயகர் இல்லாதபோது அவரது பணியைத் துணை சபாநாயகர் மேற்கொள்கிறார்.

சட்டமன்ற மேலவை (சட்ட மேலவை)

  • சட்ட மேலவை என்பது மாநில சட்டமன்றத்தின் மேலவையாகும். இது ஒரு நிரந்தர அவையாகும்.
  • சட்ட மேலவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை அம்மாநில சட்டமன்ற பேரவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் 3-ல் 1-பங்குக்கு மிகாமலும் குறைந்தபட்ச எண்ணிக்கை 40-க்கு குறையாமலும் இருக்க வேண்டுமென அரசியலமைப்பு சட்டபிரிவு 171(1) கூறுகிறது.
  • சட்டமேலவை (விதான் பரிஷத்) இந்திய மாநில சட்டமன்றங்களில் ஓர் அங்கமாக செயல்படுகிறது.
  • இந்தியாவின் 29 மாநிலங்களில் 7 மாநிலங்களில் சட்ட மேலவை உள்ளது. ஈரவை சட்டமன்றத்தில் மறைமுகத் தேர்தலால் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாற்றுகின்றனர்.
  • ஏனென்றால், இதனை கலைக்க முடியாது. சட்ட மேலவை உறுப்பினர்களின் பதவிக் காலம் 6 ஆண்டுகள் ஆகும்.
  • அதன் இரண்டாண்டிற்கும் மூன்றில் 1 –பங்கு உறுப்பினர்கள் ஓய்வு பெறுவர். ஒருவர் சட்ட மேலவை உறுப்பினராவதற்கு அவர் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • தெளிவான மனநிலை உடையவராக இருத்தல் வேண்டும். பெற்ற கடனைத் திரும்ப செலுத்த முடியாதவராக இருத்தல் கூடாது மற்றும் எந்த மாநிலத்தில் போட்டியிடுகிறாரோ அம்மாநில வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும்.

சட்ட மேலவைக்கான தேர்தல்

  • மூன்றில் 1 பங்கு உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
  • பன்னிரெண்டில் 1 பங்கு (1/12) உறுப்பினர்கள் பட்டதாரிகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
  • பன்னிரெண்டில் 1 பங்கு (1/2) உறுப்பினர்கள் பட்டதாரி ஆசிரியர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
  • மூன்றில் 1 பங்கு (1/3) உறுப்பினர்கள் சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
  • ஆறில் 1 பங்கு உறுப்பினர்கள் (1/6) கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவை மற்றும் கூட்டுறவு இயக்கம் இவற்றில் சிறந்து விளங்குபவர்களை ஆளுநர் நேரடியாக நியமனம் செய்கிறார்.

தலைவர்

மேலவைத் தலைவர் (Chairman) மேலவை கூட்டத்தைத் தலைமையேற்று நடத்துகிறார். மேலவை உறுப்பினர்களிடையே தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தலைவர் இல்லாதபோது துணைத்தலைவர் கூட்டத்தைத் தலைமையேற்று நடத்துகிறார்.

சட்டமேலவை உருவாக்கம் அல்லது நீக்கம்

சட்ட மேலவை உருவாக்கம் அல்லது நீக்கம் பற்றி சட்டப்பிரிவு 169 விவரிக்கிறது. இப்பிரிவின்படி, சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் 2 பங்கு (2/3) உறுப்பினர்கள் வாக்களித்து தீர்மானத்தை நிறைவேற்றி சட்டமேலவையை உருவாக்கவோ அல்லது நீக்கவோ நாடாளுமன்றத்தைக் கேட்டுக் கொண்டால் நாடாளுமன்றம் ஒரு சட்டத்தின் மூலம் மேலவையை உருவாக்கும் அல்லது நீக்கும்.

  • 1986-ல் இயற்றப்பட்ட தமிழ்நாடு சட்ட மேலவை (நீக்கம்) மசோதா மூலம் தமிழ்நாட்டில் சட்ட மேலவை நீக்கப்பட்டது. இச்சட்டம் 1986 நவம்பர் முதல் நாளன்று நடைமுறைக்கு வந்தது.

சட்டமன்றத்தின் செயல்பாடுகள்

சட்டமன்றத்தின் அதிகாரங்களும் செயல்பாடுகளும் பெரும்பாலும் நாடாளுமன்றத்தைப் பின்பற்றியே உள்ளன.

சட்டமன்ற அதிகாரங்கள்

அரசியலமைப்பின்படி மாநிலப் பட்டியலிலுள்ள அனைத்துத் துறைகள் மீதும் சட்டமன்றம் சட்டத்தை நிறைவேற்றலாம். பொதுப்பட்டியலிலும் சட்டமன்றம் சட்டம் இயற்றலாம். ஆனால் அதே சட்டத்தை மத்திய அரசு இயற்றும்பொழுது மாநில அரசின் சட்டம் செயலற்றதாகி விடும். மத்திய நாடாளுமன்ற நடைமுறையைப் போன்றே மாநில சட்டமன்றத்தின் மசோதாவும் சட்டமாக நிறைவேற்றுகிறது. ஒவ்வொரு மசோதாவும் சட்டமன்றத்தில் மூன்று நிலைகளுக்குப் பிறகே நிறைவேறுகிறது. ஆளுநரின் ஒப்புதலுக்குப் பின்பு அம்மசோதா சட்டமாகிறது.

நிதி அதிகாரங்கள்

சட்டமன்றம் மாநிலத்தின் நிதி நிலையைக் கட்டுப்படுத்துகிறது. சட்டமன்றக் கீழவையானது மேலவையைக் காட்டிலும் பண நடவடிக்கைகளில் அதிக அதிகாரத்தைப் பெற்றுள்ளது. பண மசோதா கீழவையில் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும். சட்டமன்றக் கீழவையின் அனுமதியின்றி புதிய வரிகளை விதிக்க முடியாது.

நிர்வாகத் துறையின் மீது கட்டுப்பாடுகள்

சட்டமன்றம் நிர்வாகத் துறையைக் கட்டுப்படுத்துகிறது. அமைச்சரவையானது சட்டமன்றத்திற்குப் பொறுப்பானது. சட்டமன்றம் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டும். அமைச்சரவைக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டால் அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவர்.

பரந்த அதிகாரங்கள்

சட்டமன்றம் ஈரவைகளைப் பெற்றிருக்கும் பொழுது மேலவையைக் காட்டிலும் சட்டமன்றக் கீழவை அதிக அதிகாரங்களுடன் விளங்குகிறது. சட்டமன்றப் பேரவை மாநில நிதிநிலையை முற்றிலும் கட்டுப்படுத்துகிறது. மேலவை நிதி சார்ந்த நடவடிக்கையில் வாக்களிக்க முடியாது.

மாநில நீதித்துறை

உயர் நீதிமன்றங்கள்

  • 1862-ல் உயர் நீதிமன்றங்கள் கல்கத்தா, பம்பாய் மற்றும் சென்னையில் தோற்றுவிக்கப்பட்டன. காலப்போக்கில் பிரிட்டிஷ் இந்தியாவின் மாகாணமும் ஓர் உயர் நீதிமன்றத்தைக் கொண்டிருந்தது.
  • 1950-க்குப் பிறகு தோற்றுவிக்கப்பட்ட உயர் நீதிமன்றங்கள் அண்மை மாநிலங்களுக்கும் உயர் நீதிமன்றமாக விளங்கியது.
  • மாநில அளவில் உயர் நீதிமன்றங்களே மிக உயர்ந்த நீதிமன்றங்களாகும். இருப்பினும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் மேற்பார்வையின் கீழ் உயர் நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் உயர் நீதிமன்றத்தைத் தோற்றுவிக்க வழிவகுக்கிறது. ஆனால் 1956-ஆம் ஆண்டு ஏழாவது திருத்தச்சட்டம், இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களுக்கென்று ஒரு பொதுவான உயர் நீதிமன்றத்தை நிறுவ நாடாளுமன்றத்திற்கு அங்கீகாரம் வழங்கியது.
  • எடுத்துக்காட்டாக பஞ்சாப், ஹரியானா மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகர் ஆகிய பகுதிகளுக்குச் சண்டிகரிலுள்ள உயர் நீதிமன்றம் பொது நீதிமன்றமாக உள்ளது.
  • இதேபோன்று கவுகாத்தியிலுள்ள உயர் நீதிமன்றம் ஏழு வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், மேகாலயா, திரிபுரா மற்றும் அருணாச்சலப் பிரதேசம் போன்றவைகளுக்கு பொது நீதிமன்றமாக உள்ளது.
  • டெல்லி ஒரு மாநிலமாக இல்லாத போதும் தனக்கென்று சொந்தமாக ஓர் உயர் நீதிமன்றத்தைக் கொண்டுள்ளது.
  • ஒவ்வொரு நீதிமன்றமும் தலைமை நீதிபதி மற்றும் பல நீதிபதிகளைக் கொண்டுள்ளது.
  • உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை குடியரசுத் தலைவரால் தீர்மானிக்கப்படுகிறது.
  • தற்போது இந்தியாவில் 29 மாநிலங்கள் (2019 ஜனவரியில் தோற்றுவிக்கப்பட்டு அமராவதியில் இயங்கும் ஆந்திரப்பிரதேசத்தின் புதிய உயர்நீதிமன்றத்தையும் சேர்த்து) மற்றும் 7 யூனியன் பிரதேசங்களுக்கும் சேர்த்து 25 உயர் நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.
  • 1862-ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் நாளில் விக்டோரியா மகாராணி வழங்கிய காப்புரிமை கடிதத்தின் மூலம் சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகிய மாகாணங்களில் உயர் நீதிமன்றங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இவற்றில் சென்னை உயர் நீதிமன்ற வளாகம் உலகிலேயே இலண்டனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய நீதித்துறை வளாகமாகும்.

நீதிபதிகளின் நியமனம்

சட்டப்பிரிவு 216-ன் படி ஒவ்வொரு உயர்நீதிமன்றத்திற்கும் , தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளை குடியரசுத் தலைவர் காலத்திற்கேற்றவாறு நியமனம் செய்கிறார்.

உயர் நீதிமன்ற நீதி வரையறை மற்றும் அதிகாரங்கள்

தற்போது உயர் நீதிமன்றம் பின்வரும் அதிகாரங்களைக் கொண்டுள்ளது.

தனக்கேயுரிய நீதிவரையறை

  • சென்னை, பம்பாய், கல்கத்தா நீதிமன்றங்கள் தங்களுக்கான நீதிவரையறை அதிகாரங்களுடன் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரங்களையும் பெற்றுள்ளன.
  • அதேவேளையில் மற்ற நீதிமன்றங்கள் பெரும்பாலும் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரங்களை மட்டுமே பெற்றுள்ளனர்.
  • முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள், உயில், திருமணம் சார்ந்த வழக்குகள் மற்றும் நீதிமன்றம் அவமதிப்பு வழக்குகள் ஆகியவற்றை மட்டும் நேரடியாக விசாரிக்கும் அதிகாரங்களை இவை பெற்றுள்ளன.
  • மாகாண நீதிமன்றங்கள் தன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரூபாய் 2000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகை மதிப்புடைய குற்றவியல் வழக்குகளை தனக்கே உரிய நீதிவரையறையை பயன்படுத்தி மாகாண நீதிபதிகள் விசாரிக்க முடியும்.

மேல்முறையீட்டு நீதிவரையறை

  • உயர் நீதிமன்றங்கள் தங்களிடம் வரும் மேல்முறையீட்டு வழக்குகளையும் கீழ் நீதிமன்றங்களிலிருந்து வரும் மேல்முறையீட்டு வழக்குகளையும் (உரிமையியல், குற்றவியல்) விசாரிக்கின்றன.
  • நாட்டின் இராணுவ தீர்ப்பாயங்களின் கீழ்வரும் ஆயுதம் சார்ந்த வழக்குகளை விசாரிக்க இவைகளுக்கு அதிகாரம் இல்லை.

பேராணை அதிகாரங்கள்

  • இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 226, அடிப்படை உரிமைகளுக்காக மட்டுமின்றி மற்ற நோக்கங்களுக்காவும் பேராணைகளை வெளியிடும் அதிகாரங்களை உயர் நீதிமன்றங்களுக்கு வழங்குகிறது.
  • சட்டப்பிரிவு 32-ன் கீழ் உச்ச நீதிமன்றம் வழங்கும் நீதிப்பேராணைகள், ஆணைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் போன்றே உயர்நீதிமன்றமும் அவைகளை வழங்க அதிகாரம் பெற்றுள்ளது.
  • இந்த சட்டப்பிரிவுகளின் கீழ் நீதிப்பேராணைகளை வெளியிட உயர் நீதிமன்றங்களுக்கு வழங்கிய அதிகாரம் பெரியதாகும். அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால் மட்டுமே உச்ச நீதிமன்றம் இவைகளை வெளியிடுகிறது.
  • உயர் நீதிமன்றம் இது போன்ற வழக்குகளில் மட்டுமின்றி சாதாரண சட்டமீறலுக்கும் நீதிப்பேராணைகளை வெளியிட முடியும்.

ஆட்கொணர்வு நீதிப் பேராணை (Habeas Corpus)

தவறாக ஒருவர் காவலில் வைக்கப்பட்டால் நீதிமன்ற காவலில் வைத்த அதிகாரிக்கோ அரசாங்கத்திற்கோ ஆணை வழங்கி காவலில் வைக்கப்பட்டவரை நீதிமன்றத்தின் முன் கொண்டுவரச் செய்வதாகும். காவலில் வைக்கப்பட்டது சட்டத்திற்குப் புறம்பானது என நிரூபிக்கப்பட்டால் நீதிமன்ற ஆணை மூலம் விடுவிக்கப்படுவார்.

கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை (Mandamus )

கீழ் நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் இடும் ஆணை (Mandamus) ஆகும். ஓர் அரசு அலுவலர் அல்லது ஒரு கழகம் அல்லது மற்ற நிறுவனங்கள் பணியை விரைந்து நிறைவேற்றுமாறு கீழ் நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பிக்கிறது. இதனால் தடைப்பட்ட பணிகள் விரைந்து முடிக்கப்படுகின்றன.

தடையுறுத்தும் நீதிப்பேராணை (Prohibition)

கீழ் நீதிமன்றங்கள் தனது அதிகார எல்லையைத் தாண்டி செயல்படாமல் இது தடுக்கிறது.

தகுதி வினவும் நீதிப்பேராணை (Quo Warranto)

பொதுப்பதவிக்கு தவறாக வரும் ஒருவரை இது தடுக்கிறது. இதன்படி ஒருவர் அவர் எந்த அடிப்படையில் குறிப்பிட்டப் பதவியை வகிக்கிறார் என்பதை தெளிவுபடுத்திக் கோரும் நீதிப்பேராணை ஆகும்.

ஆவணக் கேட்பு பேராணை (Certiorari)

கீழ் நீதிமன்றங்களிடமிருந்து வழக்கு சம்பந்தமான ஆவணங்கள், ஆதாரங்கள், கோப்புகள் ஆகியவற்றை உயர் நீதிமன்றங்கள் கேட்டுப்பெறும் ஆணை. இதன்மூலம் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்படுகின்றன.

மேற்பார்வை அதிகாரம்

இராணுவ நீதிமன்றங்களைத் தவிர மற்ற அனைத்து சார்பு நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களின் பணிகளை மேற்பார்வையிடும் அதிகாரத்தை உயர் நீதிமன்றம் பெற்றுள்ளது.

அ) கீழ் நீதிமண்றங்களில் கொடுக்கப்பட்ட அதிகாரங்களை திரும்ப பெறும் அதிகாரம்.

ஆ) பொதுச் சட்டங்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட படிவங்கள் மூலம் பயிற்சி மற்றும் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த ஓர் ஆணையை வெளியிடச் செய்தல்.

இ) பரிந்துரைக்கப்பட்ட முறைகளில் கீழ் நீதிமன்றங்கள் புத்தகங்கள், பதவிகள், கணக்குகளைப் பராமரித்தல்.

ஈ) ஹெரிப், எழுத்தர்கள், அலுவலர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் ஆகியோருக்கான கட்டணத்தைச் செலுத்துதல் போன்றவை குறித்துத் தீர்மானித்தல்.

கீழ் நீதிமன்றங்களைக் கட்டுப்படுத்துதல்

உயர் நீதிமன்றம் கீழ் நீதிமன்றங்களைக் கட்டுப்படுத்தவும் மேலும் மற்ற அதிகாரங்களையும் பெற்றுள்ளன.

அ) மாவட்ட நீதிபதிகளின் நியமனம் மற்றும் பதவி உயர்வு குறித்து ஆளுநரால் ஆலோசிக்கப்படுகிறது. மாவட்ட நீதிபதிகளைத் தவிர, மற்ற நீதிப்பணிகளுக்கு நியமனம் செய்வது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

ஆ) உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பதவி, நியமனம், பதவி உயர்வு, விடுமுறை, இடமாற்றம் மற்றும் ஒழுங்கு குறித்து விவரிக்கிறது. (மாவட்ட நீதிபதிகள் நீங்கலாக).

இ) சார் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கினை உயர் நீதிமன்றம் விசாரித்து கணிசமான கேள்விகளைக் கேட்டு குறுக்கு விசாரணை செய்வதால் வழக்கு தாமாகவே முடிவுக்கு வரும் அல்லது வழக்கின் தீர்ப்புடன் மீண்டும் சார் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும்.

ஈ) உச்ச நீதிமன்றம் இந்தியாவின் அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்துவது போல் உயர் நீதிமன்றம் சார் நிலை நீதிமன்றங்களை தனது ஆணையினால் கட்டுப்படுத்துகின்றது.

ஆவணங்களின் பாதுகாப்புப் பெட்டகம்

உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட அனைத்து முடிவுகள் மற்றும் தீர்ப்புகள் அச்சடிக்கப்பட்டு சான்றாதாரமாக பாதுகாக்கப்படுகின்றன. எதிர்காலத்தில் எழும் கேள்விகளுக்கு தீர்வாக கடந்த கால தீர்ப்புகள் உதவுகின்றன. இதனால் உயர்நீதிமன்றம் பதிவேடுகளின் நீதிமன்றமாக செயல்படுகிறது.

நீதிப்புனராய்வு அதிகாரம்

நீதிப்புனராய்வு என்பது மத்திய-மாநில அரசுகள் இயற்றும் சட்டங்கள் அரசியலமைப்புக்கு உட்பட்டதா அல்லது முரண்பட்டதா என்பதை ஆராய உயர் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட ஓர் அதிகாரமாகும். நீதிப்புனராய்வு என்ற சொல் இருப்பினும் அரசிலமைப்பில் பயன்படுத்தப்படவில்லை. 226 மற்றும் 227 –வது சட்டப்பிரிவுகள் உயர் நீதிமன்றத்தின் நீதிப்புனராய்வு அதிகாரம் பற்றி வெளிப்படையாக கூறுகிறது.

1976ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 42 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் உயர் நீதிமன்ற நீதிமன்ற நீதிப்புனராய்வு அதிகாரத்தைக் குறைத்தது மற்றும் தடை செய்தது. இருப்பினும் 1977ஆம் ஆண்டு 43வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் மீண்டும் உயர் நீதிமன்றத்திற்கு நீதிப்புனராய்வு அதிகாரத்தை வழங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!