Tnpsc

19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் Notes 10th Social Science Lesson 1 Notes in Tamil

10th Social Science Lesson 1 Notes in Tamil

1. 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

அறிமுகம்

  • எழுத்தர்களை உருவாக்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஆங்கிலக் கல்வி ஒரு புதிய ஆங்கிலக் கல்வி பயின்ற நடுத்தரவர்க்கத்தை உருவாக்கியது. இவ்வர்க்கம் மேற்கத்தியக் கருத்துக்களின், சிந்தனைகளின் தாக்கங்களுக்குள்ளானது.
  • கல்வியறிவு பெற்ற இந்நடுத்தர வர்க்கம் எண்ணிக்கையில் சிறியதாக இருந்தாலும் அரசியலிலும், சீர்திருத்த இயக்கங்களிலும் தலைமைவகிக்கத் தொடங்கியது. இருந்தபோதிலும் இந்தியச் சீர்திருத்தவாதிகள் தங்களுடைய பழைய கருத்துக்களையும் பழக்கவழக்கங்களையும் விமர்சனபூர்வமான ஆய்வுக்கு உட்படுத்தப் பெரிதும் தயங்கினர்.
  • அதற்குப்பதிலாக அவர்கள் இந்தியப் பண்பாட்டிற்கும் மேலைப் பண்பாடுகளுக்குமிடையே இணக்கத்தை ஏற்படுத்த முயன்றனர். இருந்தபோதிலும் அவர்களுடைய கருத்துகளும் செயல்பாடுகளும் உடன்கட்டை ஏறுதல் (சதி) பெண் சிசுக்கொலை, குழந்தைத் திருமணம் போன்ற அனைத்து வகையான கண்மூடித்தனமான மதநம்பிக்கைகள் மற்றும் சமூகத்தீமைகளைக் கட்டுப்படுத்த உதவியது.
  • 19ஆம் நூற்றாண்டின் சமயம் சார்ந்த சீர்திருத்த இயக்கங்களை இரண்டாக வகைப்படுத்தலாம். பிரம்ம சமாஜம், பிரார்த்தனை சமாஜம், அலிகார் இயக்கம் போன்ற சீர்திருத்த இயக்கங்கள் ஒருவகை, ஆரியசமாஜம், ராமகிருஷ்ணா மிஷன், தியோபந்த் இயக்கம் போன்ற சமயப் புத்தெழுச்சி மீட்டெடுப்பு இயக்கங்கள் மற்றொருவகை.
  • இவைகளைத்தவிர ஒடுக்குமுறைப்பாங்குடைய சமூகக்கட்டமைப்பை எதிர்க்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. புனேயில் ஜோதியா பூலே, கேரளாவில் நாராயணகுரு, அய்யங்காளி, தமிழகத்தில் ராமலிங்க அடிகள், வைகுண்ட சுவாமிகள், அயோத்திதாசர் ஆகியோர் இவ்வகைப்பட்டோராவர்.

வங்காளத்தில் தொடக்கக் கால சீர்திருத்த இயக்கங்கள்

அ) ராஜா ராம்மோகன் ராய், பிரம்ம சமாஜம்

  • ராஜா ராம்மோகன் ராய் (1772 – 1833) மேலைநாட்டுக் கருத்துக்களால் கவரப்பட்டு, சீர்திருத்தப்பணிகளை முன்னெடுத்த தொடக்ககாலச் சீர்திருத்தவாதிகளில் ஒருவராவார்.
  • பெரும் அறிஞரான அவர், தனதுத் தாய்மொழியான வங்காள மொழியில் புலமை பெற்றிருந்ததோடு சமஸ்கிருதம், அரபி, பாரசீகம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார்.
  • ராஜா ராம்மோகன் ராய் பொருளற்ற சமயச்சடங்குகளையும், கேடுகளை விளைவிக்கும் சமூக மரபுகளையும் எதிர்த்தார். இருந்தபோதிலும் கடந்த காலத்துடனான தொடர்பை அவர் பாதுகாக்க விரும்பினார். தன்னுடைய சமய, தத்துவ சமூகப்பார்வையில் அவர் ஒருகடவுள் கோட்பாடு, உருவவழிபாடு எதிர்ப்பு போன்ற கருத்துக்களின் தாக்கத்தைப் பெற்றிருந்தார்.
  • உபநிடதங்களுக்குத் தான்கொடுத்த விளக்கங்களின் அடிப்படையில் இந்துக்களின், மறைநூல்கள் அனைத்தும் ஒருகடவுள் கோட்பாட்டை அல்லது ஒரு கடவுளை வணங்குவதை உபதேசிப்பதாகக் கூறினார்.
  • சமூகத்தில் நிலவிவரும் உடன்கட்டை ஏறுதல் (சதி) குழந்தைத் திருமணம், பலதார மணம் போன்ற மரபு சார்ந்த பழக்கங்கள் குறித்து பெரிதும் கவலை கொண்ட அவர், அவற்றிற்கு எதிராகச் சட்டங்கள் இயற்றும்படி ஆங்கில அரசாங்கத்திற்கு விண்ணப்பித்தார்.
  • விதவைப்பெண்கள் மறுமணம் செய்துகொள்ள உரிமை உடையவர்கள் எனும் கருத்தை முன்வைத்தார். பலதார மணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமென்றார். அவருடைய கருத்துகளைப் பழமைவாத இந்துக்கள் எதிர்த்தனர்.
  • மக்களைப் பகுத்தறிவோடும், பரிவோடும், மனிதப் பண்போடும் இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். கல்கத்தாவின் இடுகாடுகளுக்குச் சென்று விதவைகளின் உறவினர்களிடம் உடன்கட்டை ஏறும் வழக்கத்தைக் கைவிடும்படி வேண்டிக் கேட்டுக்கொண்டார்.
  • 1829இல் தலைமை ஆளுநர் வில்லியம் பெண்டிங் ‘சதி’ எனும் உடன்கட்டையேறும் பழக்கத்தை ஒழித்துச் சட்டம் இயற்றியதில் ராஜாராம் மோகன் ராய் முக்கிய பங்கு வகித்தார்.
  • ராம்மோகன் ராய் பெண்ணடிமைத்தனத்தைக் கண்டனம் செய்தார். ஆண்களை பெண்களை கீழானவர்களாக நடத்தும் அன்றையகால நடைமுறையை எதிர்த்தார்.
  • பெண்களுக்குக் கல்வி வழங்கப்படவேண்டும் எனும் கருத்தை வலுவாக முன்வைத்தார். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆங்கிலக்கல்வியும் மேலை நாட்டு அறிவியலும் அறிமுகம் செய்யப்படுவதை முழுமையாக ஆதரித்தார்.
  • உபநிடதங்கள் எல்லையற்ற ஆதி அந்தமில்லாத தெய்வீகமான பிரம்மம் குறித்த செய்திகளைப் பேசுகையில், தனது அன்றாட வாழ்வில், தம்மைச் சுற்றித் தான்பார்க்கும் இந்துமதம் உபநிடதங்களின் போதனைகளிலிருந்து முரண்பட்டிருப்பதை அவர் உணர்ந்தார்.
  • ராஜா ராம்மோகன் ராய் 1828 பிரம்ம சமாஜத்தை நிறுவி ஆகஸ்டு 20ஆம் நாள் கல்கத்தாவில் ஒரு கோவிலை நிறுவினார்.
  • அக்கோவிலில் திருவுருவச் சிலைகள் எதுவும் வைக்கப்படவில்லை. இங்கு எந்த ஒரு மதத்தையும் ஏளனமாகவோ, அவமானமாகப் பேசக்கூடாது அல்லது மறைமுகமாகக் குறிப்பிடப்படலாகாது என எழுதிவைத்தார்.
  • பிரம்ம சமாஜம் உருவவழிவாட்டை தவிர்த்ததோடு பொருளற்ற சமயச் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் எதிர்த்தது.
  • இருந்தபோதிலும் தொடக்கம் முதலாக பிரம்ம சமாஜத்தின் கருத்துக்கள் கற்றறிந்த மேதைகள், கல்வியறிவு பெற்ற வங்காளிகள் என்ற அளவில் மட்டுமே செயல்பட்டது.
  • சமூகத்தின் கீழ்த்தட்டு மக்களைத் தன்பால் ஈர்ப்பதில் சமாஜம் தோல்வியடைந்தாலும், நவீன வங்காளப் பண்பாட்டு மற்றும் நடுத்தர வர்த்தகத்தின் மீதான அதனுடைய தாக்கம் மிகவும் போற்றுதலுக்குரியதாகும்.

ஆ) மகரிஷி தேவேந்திரநாத் தாகூர்

  • ராஜா ராம்மோகன் ராய் 1833இல் இயற்கையெய்திய பின்னர் அவர் விட்டுச்சென்றப் பணிகளை, கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் தந்தையரான தேவேந்திரநாத் தாகூர் (1817 – 1905) தொடர்ந்தார். அவர் நம்பிக்கை பற்றிய நான்கு கொள்கைக்கூறுகளை முன்வைத்தார்.
  1. தொடக்கத்தில் எதுவுமில்லை, எல்லாம் வல்ல ஒரு கடவுள் மட்டுமே உள்ளார். அவரே இவ்வுலகத்தைப் படைத்தார்.
  2. அவர் ஒருவரே உண்மையின் எல்லையற்ற ஞானத்தின் , நற்பண்பின் சக்தியின் கடவுளாசார். அவரே நிலையானவர், எங்கும் நிறைந்திருப்பவர். அவருக்கிணையாருமில்லை.
  3. நம்முடைய வீடுபேறு, இப்பிறவியிலும் அடுத்தபிறவியிலும் அவரை நம்புபவரையும் அவரை வணங்குவதையும் சார்ந்துள்ளது.
  4. அவரை நம்புவதென்பது, நேசிப்பதிலும் அவர் விருப்பத்தைச் செயல்படுத்துவதிலும் அடங்கியுள்ளது.

இ) கேசவ் சந்திர சென்னும் இந்தியாவின் பிரம்ம சமாஜமும்

  • தேவேந்திரநாத் மிதவாதச் சீர்திருத்தவாதியாவார். ஆனால் சமாஜத்தில் அவருடன் பணியாற்றிய இளையவர்கள் விரைவான மாற்றங்களையே விரும்பினர்.
  • அவர்களுள் மிக முக்கியமானவரான கேசவ் சந்திர சென் (1838 – 84), 1857 இல் சபையில் இணைந்தார்.
  • கிறித்தவமதத்தால் பெருமளவில் கவரப்பட்ட அவர் கிறித்தமதத்தின் சாரத்தை நம்பினார். 1886இல் பிரம்மசமாஜத்தின் உறுப்பினர்களிடையே பிளவு ஏற்பட்டதால் கேசவ் சந்திர சென் சமாஜத்திலிருந்து விலகி புதிய அமைப்பொன்றை உருவாக்கினார்.
  • இதன் பின்னர் தேவேந்திரநாத் தாகூரின் அமைப்பு ‘ஆதி பிரம்ம சமாஜம்’ என அழைப்படலாயிற்று. குழந்தைத் திருமணத்தை சமாஜம் கண்டனம் செய்திருந்தபோதும் அதற்குமாறாக கேசவ் சந்திரசென் தனது 14 வயது மகளை இந்திய இளவரசன் ஒருவருக்குத் திருமணம் செய்து கொடுத்தபோது குழந்தைத் திருமணத்தை எதிர்த்தோர் இந்தியாவின் பிரம்ம சமாஜத்திலிருந்து விலகி சாதாரண சமாஜ் எனும் அமைப்பை நிறுவினர். இவ்வமைப்பு கிறித்தவ எதிர்ப்பு மனப்பாங்கினை வளர்த்தது.

ஈ) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்

  • வங்காளத்தைச் சேர்ந்த மற்றொரு முதன்மையான சீர்திருத்தவாதி ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் (1820 – 1891) ஆவார்.
  • ராஜா ராம்மோகன் ராயும் மற்றவர்களும் சமூகத்தைத் திருத்துவதற்கு மேலைநாட்டுப் பகுத்தறிவுச் சிந்தனைகளின் துணையை நாடியபோது வித்யாசாகர் இந்து மறை நூல்களே முற்போக்கானவை என வாதிட்டார்.
  • விதவைகளை எரிப்பதும் விதவை மறுமணத்தைத் தடைசெய்வதும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பற்கு மறை நூல்களிலிருந்தே சான்றுகளை முன்வைத்தார்.
  • அவர் தனது கருத்துக்களுக்கு ஆதரவான வாதங்களைக் கொண்ட சிறுநூல்களை வெளியிட்டார். அவர் நவீன வங்காள உரைநடையின் முன்னோடியாவார்.
  • பெண்கல்வியை மேம்படுத்துவதில் முக்கியப்பங்காற்றிய அவர் பெண்களுக்கான பள்ளிகள் நிறுவப்பட உதவிகள் செய்தார்.
  • இந்து சமூகத்தில் குழந்தைப் பருவத்திலேயே விதவைகளான சிறுமிகளின் வாழ்வை மேம்படுத்துவதற்காகவே தனது முழுவாழ்வையும் அர்ப்பணித்தார்.
  • பண்டித ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் தலைமையேற்ற இயக்கத்தின் விளைவாய் 1856இல் மறுமண சீர்திருத்தச் சட்டம் (விதவைகள் மறுமணச் சட்டம்) இயற்றப்பட்டது.
  • இச்சட்டம் குழந்தை விதவைகளின் நிலையை மேம்படுத்துவதையும் நிரந்தரமாக விதவையாய் இருக்கவேண்டிய ஆபத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.
  • 1860இல் முதல்முறை திருமண வயதுச் சட்டம் இயற்றப்பட்டது. அப்பெருமை ஈஸ்வர் சந்திர வித்யாசாகரையேச் சாரும். திருமணத்திற்கான வயது 10 என்று நிர்ணயம் செய்யப்பட்டது. அது 1891இல் பன்னிரெண்டாகவும், 1925இல் பதிமூன்றாகவும் உயர்த்தப்பட்டது.
  • ஆனால் கவலைக்குரிய விதத்தில் திருமண வயது ஒப்புதல் கமிட்டி (1929) கூறியபடி இச்சட்டம் காகிதத்தில் மட்டுமேயிருந்தது.
  • நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் ஒருசில படித்த மனிதர்களுமே அதனைப் பற்றிய அறிவைப் பெற்றிருந்தனர்.

உ) பிரார்த்தனை சமாஜம்

  • மகாராஷ்டிரப் பகுதியானது சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவு கிடைக்கப்பெற்ற மற்றொரு பகுதியாகும்.
  • பிரம்ம சமாஜத்துக்கிணையாக பம்பாயில் 1867இல் நிறுவப்பட்ட அமைப்பே பிரார்த்தனை சமாஜம். இதனை நிறுவியர் ஆத்மராம் பாண்டுரங் (1825 – 1898) ஆவார்.
  • இந்த சமாஜத்தின் இரண்டு மேன்மைமிக்க உறுப்பினர்கள் R.C.பண்டர்கர், நீதிபதி மகாதேவ் கோவிந்த் ரானடே ஆகிய இருவருமாவர்.
  • இவ்விருவரும் சாதிமறுப்பு, சமபந்தி , சாதிமறுப்புத் திருமணம், விதவை மறுமணம், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் போண்ற நடவடிக்கைகளுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களாவர்.
  • மகாதேவ் கோவிந்த் ரானடே (1842 – 1901) விதவை மறுமணச் சங்கம் (1861) புனே சர்வஜனிக் சபா(1870) தக்காணக் கல்விக்கழகம் (1884) ஆகிய அமைப்புகளை நிறுவினார்.
  • மேற்குறிப்பிட்டுள்ள சீர்திருத்தவாதிகள் மேல்சாதியினர்க்கிடையேப் பணியாற்றிய அதேவேளையில் ஜோதிபா பூலே ஒடுக்கப்பட்ட மக்களின், பெண்களின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றினார். அவருடைய புத்தகமா குலாம்கிரி (அடிமைத்தனம்) ஒரு முக்கிய நூலாகும். அந்நூல் சாதிய ஏற்றத்தாழ்வுகளைக் கண்டனம் செய்தது.

இந்து புத்தெழுச்சி இயக்கம்

அ) சுவாமி தயானந்த சரஸ்வதி மற்றும் ஆரியசமாஜம் 1875

  • பஞ்சாபில், ஆரியசமாஜம் சீர்திருத்த இயக்கங்களுக்குத் தலைமையேற்றது. இவ்வமைப்பு மேலைகங்கைச்சமவெளியில் அலைந்துதிரிந்து கொண்டிருந்த சுவாமி தயானந்த சரஸ்வதி (1824 -83) என்பவரால் நிறுவப்பட்டது.
  • சுவாமி தயானந்தர் பின்னர் தனது கருத்துகளைப் போதிப்பதற்காகப் பஞ்சாபில் தங்கினார். அவருடைய நூலான ‘சத்யார்த்தபிரகாஷ்’ பெரும்பாலோரால் படிக்கப்பட்டது.
  • குழந்தைத் திருமணம், விதவை மறுமணத்திற்கு மறுப்பு போன்ற பழக்கங்களும் அயல்நாடு சென்றால் தீட்டு என்று சொல்லப்படுதலும் மறைநூல்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என அறிவித்தார்.
  • அவர் முன்வைத்த நேர்மறையான கொள்கைகள் கட்டுப்பாடான ஒருகடவுள் வழிபாடு, உருவ வழிபாட்டை நிராமரித்தல், பிராமணர் மேலாதிக்கம் செலுத்தும் சடங்குகள், சமூகநடைமுறைகள் ஆகியவற்றை மறுத்தல் என்பனவாகும்.
  • ஆரியசமாஜம் இந்துமதத்திலிருந்த மூடநம்பிக்கைகளைக் குறிப்பாகப் புராண இலக்கியங்களை மறுத்தது. அதனுடைய முழக்கம் ‘வேதங்களுக்குத் திரும்புவோம்’ என்பதாகும்.
  • ஆரியசமாஜம் பிரிட்டிஷ் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த மதமாற்ற நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. அதன் முக்கியக் குறிக்கோள் ‘எதிர்மத மாற்றம் என்பதாகும்’.
  • ஏற்கனவே இஸ்லாமுக்கும் கிறித்தவ மதத்திற்கும் மாறிய இந்துக்களை மீண்டும் இந்துக்களாக மாற்றம் ‘சுத்தி (Suddhi) எனும் சுத்திகரிப்புச் சடங்கை சமாஜம் வகுத்துக்கொடுத்தது.
  • 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியில் பிரிக்கப்படாத பஞ்சாபில் குழப்பமான இந்து, இஸ்லாம் கிறித்தவ சமயங்களிடையேத் தீவிரமான சர்ச்சைகள் நடந்த காலப்பகுதியாக விளங்கியது.
  • ஆரியசமாஜம் சமூக சீர்திருத்தக்களத்திலும் கல்வியைப் பரப்பும் பணியிலும் முக்கிய சாதனைகள் புரிந்தது. சமாஜம் பல தயானந்தா ஆங்கிலோ-வேதப் பள்ளிகளையும் கல்லூரிகளையும் உருவாக்கியது.
  • 1893இல் இவ்வியக்கம் தூய்மைக்கோட்பாடு குறித்தக் கருத்து முரண்பட்டால் இரண்டாகப் பிரிந்தது. தயானந்த சரஸ்வதிக்குப் பின்னர் பொறுப்பேற்ற வசீகர ஆளுமை கொண்ட சுவாமி ஸ்ரத்தானந்தா (1857 – 1926) DAV பள்ளிகளை நடத்திக்கொண்டிருந்த குழுவினரை நிறுவனரின் தத்துவத்தைப் புறக்கணித்து மிக அதிகமான அளவில் மேற்கத்திய சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகக் குற்றம்சாட்டினார். 1900 முதலாக அவரேப் பல பள்ளிகளை (குருகுலம்) நிறுவினார். வெளித்தோற்றத்தில் அவை பண்டைய இந்துக்கல்விக்கூட பானியில் இருந்தன. அங்கு வேதக்கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது.

ஆ) இராமகிருஷ்ண பரமஹம்சர்

  • நாம் ஏற்கனவே பார்த்தவாறு, கிறித்தவர்களின் பகுத்தறிவுவாதிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக பிரம்ம சமாஜம் உருவ வழிபாட்டையும் இந்துக்களின் ஏனையப் பழமையான நடைமுறைகளையும் விமர்சனம் செய்தது.
  • கல்கத்தாவுக்கு அருகேயிருந்த தட்சிணேசுவரம் என்னும் ஊரைச்சார்ந்த எளிய அர்ச்சகரான ராமகிருஷ்ண பரமஹம்சர் (1836 – 1886) பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பெற்ற புகழ் இதற்கான வேறொரு பதிலாகும்.
  • பஜனைப்பாடல்களை மனமுருகிப் பாடுவதைப்போன்ற வழிமுறைகள் மூலம் பேரின்ப நிலையை அடைந்து அந்நிலையில் ஆன்மரீதியாக கடவுளோடு ஒன்றிணைவதற்கு அவர் முக்கியத்துவம் கொடுத்தார்.
  • புனிதத்தாயான கடவுள் காளியின் தீவிர பக்தரான அவர் அக்கடவுளின் திருளையாடல்கள் முடிவற்றவை என அறிவித்தார்.
  • அவருடைய கருத்தின்படி அனைத்து மதங்களும் உலகளாவிய, எல்லோருக்குமான மூலக்கூறுகளைக் கொண்டுள்ளன.
  • அவற்றைப் பின்பற்றினால் அவை வீடுபேற்றுக்கு இட்டுச்செல்லும். ‘ஜீவன்’ என்பதே ‘சிவன்’ எனவும் அவர் கூறினார் (வாழ்கின்ற அனைத்து உயிர்களும் இறைவனே).
  • பின்னர் அவைகளின் மேல் இரக்கம் காட்டுங்கள் என யார்சொல்வது? இரக்கம் தேவையில்லை; சேவையே தேவை; மனிதர்களுக்குச் செய்யப்படும் சேவையே கடவுளுக்குச் செய்யப்படும் சேவையாகும் என்றார்.

ராமகிருஷ்ணா மிஷன்

  • ராமகிருஷ்ணருடைய முதன்மையான சாதனையே, பிரம்மசமாஜம் போன்ற சீர்திருத்த அமைப்புகள் முன்வைத்தப் பகுத்தறிவுக் கருத்துகளின்பால் அதிருப்தியுற்ற கல்வியறிவு பெற்ற இளைஞர்களைத் தன்பால் ஈர்த்ததுதான்.
  • 1886இல் அவர் இயற்கை எய்திய பின்னர் அவருடைய சீடர்கள் தங்களை ஒரு மதம்சார்ந்த சமூகமாக அமைத்துக்கொண்டு ராமகிருஷ்னரையும் அவரின் போதனைகளையும் இந்தியாவிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் பரப்பு நிறுவனங்களின் நிர்வாகக் கட்டமைப்பைப் பின்பற்றி விவேகானந்தர் ராமகிருஷ்ணா மிஷனை நிறுவினார்.
  • ராமகிருஷ்ணா மிஷன் சமயச் செயல்பாடுகளோடு மட்டும் தனதுப்பணிகளை நிறுத்திக்கொள்ளவில்லை.
  • மக்களுக்குக் கல்வியறிவு வழங்குவது. மருத்துவ உதவி, இயற்கைச் சீற்றங்களின்போது நிவாரணப்பணிகளை மேற்கொள்வது போன்ற சமூகப்பணிகளிலும் செயலூக்கத்துடன் ஈடுபட்டது.

இ) சுவாமி விவேகானந்தர்

  • பின்னாளில் சுவாமி விவேகானந்தர் என்றழைக்கப்பட்ட நரேந்திரநாத் தத்தா (1863 – 1902) ராமகிருஷ்ன பரமஹம்சருடைய முதன்மைச்சீடராவார்.
  • படித்த இளைஞரான அவர் ராமகிருஷ்ணரின் கருத்துகளால் கவரப்பட்டார். மரபுசார்ந்த தத்துவ நிலைப்பாடுகளில் மனநிறைவு பெறாத அவர், நடைமுறை வேதாந்தமான மனிதகுலத்திற்குத் தொண்டுசெய்தல் எனும் கோட்பாட்டைப் பரிந்துரைத்தார்.
  • மதத்தோடு தொடர்புடையது எனும் ஒரே காரணத்திற்காக அனைத்து நிறுவனங்களையும் பாதுகாக்கும் மனப்பாங்கினை அவர் கண்டனம் செய்தார்.
  • பண்பாட்டுத் தேசியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த அவர் இந்து சமூகத்திற்குப் புத்துயிரளிக்க இந்திய இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.
  • அவருடைய சிந்தனைகள், பொருள் உற்பத்தியில் மேலைநாடுகள் செய்திருந்த சாதனைகளைக் கண்டு தாழ்வுமனப்பான்மை கொண்டிருந்த இந்தியர்களுக்கு தன்னம்பிக்கையூட்டுவதாய் அமைந்தது.
  • 1893இல் சிகாகோவில் நடைபெற்ற இலக சமய மாநாட்டில் இந்து சமயம் பற்றியும் பக்திமார்க்கத் தத்துவம் குறித்தும் அவராற்றிய சொற்பொழிவுகள் அவருக்குப் பெரும்புகழ் சேர்த்தது.
  • இந்து சமயச்சடங்குகளில் கலந்துகொள்ளக் கூடாதென ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒடுக்கப்பட்ட மக்களும் அதுபோன்ற சடங்குகளில் கலந்துகொள்ளக் கட்டாயம் அனுமதிக்கப்படவேண்டும் என்றார்.
  • விவேகானந்தரின் செயலாக்கமிக்க கருத்துகள் மேற்கத்தியக் கல்வி பயின்ற வங்காள இளைஞர்களிடையே அரசியல் மாற்றங்களுக்கான நாட்டத்தை ஏற்படுத்தியது.
  • வங்கப்பிரிவினையைத் தொடர்ந்து நடைபெற்ற சுதேசி இயக்கத்தின்போது இளைஞர்களில் பலர் விவேகானந்தரால் ஊக்கம் பெற்றனர்.

ஈ) பிரம்மஞான இயக்கம்

  • 19ஆம் நூற்றாண்டில் இந்துசமயமும் பண்பாடும், குறிப்பாகக் கிறித்தவ சமயப்பரப்பு நிறுவனங்களின் பரப்புரைகளால் ஐரோப்பாவில் மதிப்பிழந்து கொண்டிருந்தன.
  • இச்சந்தர்ப்பத்தில் ஒருசில மேலைநாட்டு அறிவுஜீவிகள் பொருள் சார்ந்த மேலை உலக வாழ்க்கைக்குத் தீர்வாக ஆன்மீக முக்திக்காகக் கிழக்கை எதிர்நோக்கினர்.
  • இதில் மேடம் H.P. பிளாவட்ஸ்கி (1831 – 1891) மற்றும் கர்னல் H.S. ஆல்காட் (1832 – 1907) ஆகியோரால் நிறுவப்பெற்ற பிரம்மஞானசபை முக்கியப்பங்கு வகித்தது.
  • 1875இல் அமெரிக்காவில் நிறுவப்பட்ட இவ்வமைப்புப் பின்னர் 1886இல் இந்தியாவில் சென்னை அடையாறுக்கு மாற்றப்பட்டது.
  • பிரம்மஞானசபை இந்து செவ்வியல் நூல்களைக் குறிப்பாக உபநிடதங்கள், பகவத்கீதை ஆகியவற்றைப் படிப்பதற்கு உற்சாகமூட்டியது.
  • இந்தியாவில் பௌத்தம் புத்துயிர் பெறுவதில் பிரம்மஞானசபை முக்கியப் பங்காற்றியது. இந்து மறைநூல்களின் மீது மேலைநாட்டவர் காட்டிய ஆர்வம், படித்த இந்தியர்களிடையே தங்கள் பாரம்பரியம், பண்பாடு குறித்த அளப்பரியப் பெருமிதத்தை ஏற்படுத்தியது.

அன்னிபெசன்ட்டின் பங்களிப்பு

  • ஆல்காட்டின் மறைவுக்குப் பின்னர் இவ்வமைப்பின் தலைவராக அன்னிபெசன்ட் (1847 – 1933) தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்வியக்கம் மேலும் செல்வாக்குப் பெற்றது.
  • இந்திய தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்ற அவர் தன்னாட்சி இயக்கச் சங்கத்தை அமைத்து அயர்லாந்திற்கு வழங்கப்பட்டதைப்போல இந்தியாவிற்கும் தன்னாட்சி வழங்கப்பட வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்.
  • அன்னிபெசன்ட் பிரம்மஞானக் கருத்துக்களைத் தன்னுடைய நியூ இந்தியா (New India), காமன்வீல் (Commonweal) எனும் செய்தித்தாள்கலின் மூலம் பரப்பினார்.

சாதி எதிர்ப்பு இயக்கங்கள்

அ) ஜோதிபா பூலே

  • ஜோதிபா பூலே 1827இல் மகாராஷ்டிராவில் பிறந்தார். முக்கியமாக அவர் பிராமண எதிர்ப்பியக்கத்தின் தொடக்ககாலத் தலைவரென்றே அறியப்படுகிறார்.
  • அவர் 1852ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளிடை புனேயில் திறந்தார்.
  • சத்தியசோதக் சமாஜ் (உண்மையை நாடுவோர் சங்கம், Truth Seekers Societyy) எனும் அமைப்பை, பிராமணரல்லாத மக்களும் சுயமரியாதையோடும், குறிக்கோளோடும் வாழத் தூண்டுவதற்காய் நிறுவினார்.
  • பூலே குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார். விதவை மறுமணத்தை குறிப்பாக மறுமணம் மறுக்கப்பட்ட உயர்சாதி இந்துக்களின் மறுமணத்தை ஆதரித்தார்.
  • ஜோதிபாவும் அவருடைய மனைவி சாவித்திரிபாயும் ஒடுக்கப்பட்ட மக்களின், பெண்களின் முன்னேற்றத்திற்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.
  • ஜோதிபா பெற்றோரில்லா குழந்தைகளுக்கென்று விடுதிகளையும் விதவைகளுக்கென்று விடுதிகளையும் விதவைகளுக்கென காப்பகங்களையும் உருவாக்கினார்.
  • தன்னுடைய சமகால தேசியவாதிகளைப் போலல்லாமல் பூலே ஆங்கிலேய ஆட்சியையும் சமயப் பரப்பாளர்களின் செயல்பாடுகளையும் ஆதரித்தார்.
  • அவை ஒடுக்கப்பட்ட சாதியினரைப் பிராமணர்களின் மேலாதிக்கத்தை எதிர்க்கத் துணைநிற்கும் எனும் நிலைப்பாட்டை வரவேற்றார். மிக முக்கியமாக அவர் எழுதிய நூலான ‘குலாம்கிரி’ (அடிமைத்தனம்) அவருடையப் பெரும்பாலான தீவிரக்கருத்துக்களைச் சுருக்கிக் கூறுகிறது.

ஆ) நாராயண குரு

  • 1854இல் கேரளாவில் ஏழைப்பெற்றோர்க்கு மகனாகப் பிறந்த நாராயண குரு (1854 – 1928) மலையாளம், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளில் அறிஞராகவும் கவிஞராகவும் திகழ்ந்தார்
  • அந்நாட்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் கோவில்களுக்கும் மக்கள் வாழும் தெருக்களுக்கும் செல்லமுடியாது. பொது நீர்நிலைகளிலோ, கிணறுகளிலோ நீரெடுக்க முடியாது.
  • ஒடுக்கப்பட்ட சாதிகளைச்சேர்ந்த ஆண்களும் பெண்களும் மேலாடை அணிய அனுமதிக்கப்படவில்லை.
  • பயங்கரமான சாதிக் கொடுமைகளையும், ஒடுக்கப்பட்ட மக்கள்படும் துயரங்களையும் கண்டு மனம்வெதும்பிய அவர் அம்மக்களின் மேம்பாட்டிற்காகத் தனது வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்தார்.
  • அவர்களின் மேம்பாட்டிற்ப் பணியாற்றுவதற்காக ஸ்ரீநாராயண தர்ம பரிபாலன யோகம் எனும் அமைப்பை உருவாக்கினார்.
  • அருவிபுரம் எனும் ஊரில் ஒரு பெரிய கோவிலைக்கட்டிய அவர் அதை அனைவருக்கும் அர்ப்பணித்தார். அவருடைய இயக்கம் கேரள சமூகத்தில் குறிப்பாக ஈழவர்களுக்கிடையில் பெரும்மாற்றங்கள் நிகழ உந்து சக்தியாய்த் திகழ்ந்தது.
  • குமாரன் ஆசான், டாக்டர் பால்பு போன்ற சிந்தனையாளர்களும் கவிஞர்களும் இவருடைய சிந்தனைகளால் தூண்டப்பெற்று இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றனர்.

இ) அய்யன்காளி

  • 19ஆம் நூற்றாண்டில் கேரளம் படுமோசமான சாதியப்பாகுபாடுகளால் பீடிக்கப்பட்டிருந்தது. ஒரு சில சமூகக்குழுக்கள் தீண்டத்தகாதவராகவும் காணத்தகாதவராகவும் கூறி ஒடுக்கப்பட்டனட்.
  • இந்நிலையில் நாராயணகுரு, அய்யன்காளி (1863 – 1941) போன்ற சிந்தனையாளர்களால், பெருமளவில் அரசியல், பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில், அவர்களால் நடத்தப்பட்ட வலுவான இயக்கங்கள் வியப்பூட்டும் சமூக மாற்றங்களைக் குறிப்பாகக் கட்டமைப்பில் ஏற்படுத்தியது.
  • அய்யன்காளி 1863இல் திருவனந்தபுரத்திலுள்ள வெங்கனூரில் பிறந்தார். அப்போது அப்பகுதி திருதாங்கூர் அரசரின் ஆட்சிப்பகுதியாகும்.
  • குழந்தையாய் இருக்கும்போதே அவர் சந்தித்த சாதியப்பாகுபாடு அவரை சாதி எதிர்ப்பியக்கத்தின் தலைவராக மாற்றியது.
  • பின்னர் அவர் பொது இடங்களுக்குச் செல்லுதல், பள்ளிகளில் கல்வி கற்க இடம்பெறுதல் போன்ற அடிப்படை உரிமைகளுக்காகப் போராடினார்.
  • ஆடை அணிவது உட்பட, பல மரபுசார்ந்த பழக்கங்களை அவர் எதிர்த்தார். ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு மட்டும் மறுக்கப்பட்ட, உயர்சாதியினர் மட்டுமே அணியும் ஆடைகளை இவர் அணிந்தார்,
  • உயர்சாதியினர் பயன்படுத்தியதும் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு மறுக்கப்பட்டிருந்ததுமான பொதுச் சாலைகளில், சவால்விடும் வகையில் காளைகள் பூட்டப்பெற்ற வண்டியில் அவர் பயணம் செய்தார்.
  • ஸ்ரீநாராயணகுருவால் ஊக்கம்பெற்ற அய்யன்காளி 1907இல் சாது ஜன பரிபாலன சங்கம் (ஏழை மக்கள் பாதுகாப்புச் சங்கம் – Association for the protection of the Poor) எனும் அமைப்பை நிறுவினார்.
  • கீழ்சாதியாகக் கருதி ஒடுக்கப்பட்ட புலையர் சமூகமக்களின் கல்விக்காக இவ்வமைப்பு இயக்கம் நடத்தி நிதிதிரட்டியது.

இஸ்லாமிய சீர்திருத்தங்கள்

  • 1857ஆம் ஆண்டுப் பெரும்புரட்சி ஒடுக்கப்பட்ட பின்னர் இந்திய மூஸ்லீம்கள் மேற்கத்தியப் பண்பாட்டைச் சந்தேகக் கண்கொண்டு பார்த்தனர்.
  • மேற்கத்தியக் கல்வி, பண்பாடு, மேற்கத்திய சிந்தனைகள் ஆகியவை தங்கள் மதத்திற்கு ஆபத்தாய் அமையுமோ என அச்சமூகம் அஞ்சியது. ஆகையால் முஸ்லீம்களில் ஒரு சிறிய பிரிவினரே மேற்கத்தியக் கல்விபயில முன்வந்தனர்.
  • இதன்விளைவாக இந்தியமுஸ்லீம்கள், ஒப்பீட்டளவில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த செல்வாக்குப் பெற்றிருந்த இந்துக்களைவிட ஒருசமூகம் என்றளவில் பின்தங்கியிருந்தனர்.

சர் சையத் அகமத்கான்

  • கல்வி, அரசுப்பணிகள், தேசியஅளவில் தலைமைவகித்தல் ஆகியவற்றில் தங்கள் இடங்களைப்பெரிதும் இழந்துவிட்ட இந்திய முஸ்லீம்கள் தங்கள் சமூகம் முன்னேற்றப் பாதையில் செல்லவேண்டிமானால் ஆங்கிலக்கல்வியை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு மாற்று இல்லை என்று புரிந்துகொண்டனர்.
  • இப்புரிதலுக்கு உயிரும் உணர்வும் கொடுத்தவரே சர் சையத் அகமத்கான் (1817 – 1898).
  • டெல்லியில் உயர்குடி முஸ்லீம் குடும்பத்தில் பிறந்த சையத் அகமத்கான் படிப்பறிவின்மையே குறிப்பாக, நவீன கல்வியறிவின்மையே இஸ்லாமியர்களுக்குப் பெருந்தீங்கு விளைவித்து, அவர்களைக் கீழ்நிலையில் வைத்துவிட்டது எனக்கருதினார்.
  • மேலைநாட்டு அறிவியலையும், அரசுப்பணிகளையும் ஏற்றுக்கொள்ளும்படி அவர் இஸ்லாமியர்களை வற்புறுத்தினார்.
  • அறிவியல்கழகமொன்றை நிறுவிய அவர் ஆங்கிலநூல்களைக் குறிப்பாக அறிவியல் நூல்களை உருதுமொழியில் மொழியாக்கம் செய்தார்.
  • மேலெழுந்துவரும் தேசிய இயக்கத்தில் இணைவதைக் காட்டிலும் ஆங்கில அரசுடன் நல்லுறவு மேற்கொண்டால் இஸ்லாமியர் நலன்கள் பேணப்படும் என அவர் நம்பினார்.
  • எனவே அவர் இஸ்லாமியருக்கு ஆங்கிலக்கல்வியைப் பயிலும்படியும் அதில் கவனம் செலுத்தும்படியும் அறிவுரை கூறினார்.

அலிகார் இயக்கம்

  • சர் சையத் அகமத்கான் 1875ஆம் ஆண்டு அலிகார் நகரில் அலிகார் முகமதிய ஆங்கிலோ –ஓரியண்டல் கல்லூரியை (Aligarh Mohammedan Anglo – Oriental College) நிறுவினார்.
  • அலிகார் இயக்கம்’ எனப்பட்ட அவரது இயக்கம் இக்கல்லூரியை மையப்படுத்தி நடைபெற்றதால் அப்பெயரைப் பெற்றது.
  • இந்திய முஸ்ளீம்களின் கல்விவரலாற்றில் இக்கல்லூரி ஒரு மைல் கல்லாகும். 1920இல் இக்கல்லூரி தரம் உயர்த்தப்பட்டு பல்கலைக்கழகமானது.
  • அலிகார் பல்கலைக்கழகம் தொடர்ந்துவந்த சந்ததியினரைச் சேர்ந்தோரை ஒரு கற்றறிந்த மேதைகளின் கூட்டமாக உருவாக்கியது. அவர்களனைவரும் பொதுவாழ்க்கையில் முக்கியப் பங்கு வகித்தனர்.

தியோபந்த் இயக்கம்

  • தியோபந்த் இயக்கம் ஒரு மீட்பியக்கமாகும். இவ்வியக்கம் பழமைவாத முஸ்லீம் உலேமாக்களால், இரு முக்கியக் குறிக்கோள்களுடன் தொடங்கப்பெற்றது.
  • அக்குறிக்கோள்கள், குரான் மற்றும் ஷரியத்தின் உண்மையான போதனைகளைப் பரப்புரை செய்தல், இஸ்லாமல்லாத அயல்கூறுகளுக்கு எதிராகப் புனிதப்போர் செய்யும் உணர்வுகளை ஊக்குவித்தல் என்பனவாகும்.
  • இவ்வுலேமாக்கள் முகமது குவாசிம் நானோதவி (1832 – 1880), ரஷித் அகமத் கங்கோத்ரி (1826 – 1905) ஆகியோரின் தலைமையில் 1866இல் உத்திரப்பிரதேசத்தில் சகரன்பூரில் ஒரு பள்ளியை நிறுவினார்.
  • இப்பள்ளியின் பாடத்திட்டம் ஆங்கிலக்கல்வியையும் மேலைநாட்டுப் பண்பாட்டையும் புறக்கணித்தது. உண்மையான இஸ்லாமியமதம் இப்பள்ளியில் கற்றுத்தரப்பட்டது.
  • இதன் நோக்கம் இஸ்லாமிய சமூகத்தின் ஒழுக்கத்தையும் மதத்தையும் மீட்டெடுப்பதாய் அமைந்தது. தியோபந்த் பள்ளி தனது மாணவர்களை அரசுப்பணிகளுக்குத் தயார் செய்யவில்லை. மாறாக இஸ்லாம் மத நம்பிக்கையைப் பரப்புரை செய்யத் தயார்செய்தது.
  • அரசியல் களத்தில், தியோபந்த் பள்ளி 1885இல் அகில இந்திய தேசியக் காங்கிரஸ் உருவாக்கப்பட்டதை வரவேற்றது. 1888இல் தியோபந்த் உலேமா, சையத் அகமத்கானுடைய அமைப்புகளான ‘தி யுனைடெட் பேட்ரியாட்டிக் அசோசியேசன்’ (The United Patriotic Association) , ‘முகமதன் ஆங்கிலோ-ஓரியண்டல் அசோசியேஷன்’ (The Mohammedan Anglo-Oriental Association) ஆகியவற்றிற்கு எதிராக சமயஆணையைப் (fatwa) பிறப்பித்தது.
  • சர் சையத் அகமத்கானுடைய நடவடிக்கைகளை எதிர்ப்பது என்ற அவர்களின் உறுதிப்பாடே தியோபந்த் உலேமாக்களை இயக்கியது எனச் சொல்லப்பட்டது.
  • மௌலானா முகத் –உல்-ஹசன் தியோபந்தின் புதிய தலைவரானார். அவரின் தலைமையில் இயங்கிய ஜமைத்-உல்-உலேமா (இறையியலாளர்களின் அவை) ஹசனுடைய கருத்துக்களான, இந்திய ஒற்றுமை எனும் ஒட்டுமொத்தச் சூழலில் முஸ்லீம்களின் அரசியல், சமய உரிமைகளின் பாதுகாப்பு என்பது குறித்த உறுதியான வடிவத்தை முன்வைத்தது.

பார்சி சீர்திருத்த இயக்கம்

  • 19ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் படிப்பறிவு பெற்றிருந்த பார்சிகளின் (சமயக்கொடுமைகளிலிருந்து தப்பிக்கும் பொருட்டு இரானிலிருந்து 10ஆம் நூற்றாண்டில் குடிபெயர்ந்து வந்த ஜொராஸ்டிரியர்கள்) சீர்திருத்த இயக்கம் பம்பாயில் தொடங்கப்பட்டது.
  • 1851இல் பர்துன்ஜி நௌரோஜி என்பார் “ரஹ்னுமாய்மஜ்தயாஸ்னன் சபா” (பார்சிகளின் சீர்திருத்தச் சங்கம்) எனும் அமைப்பை ஏற்படுத்தினார்.
  • ராஸ்ட் கோப்தார் (உண்மை விளம்பி) என்பதே அதன் தாரகமந்திரமாக இருந்தது. இவ்வமைப்பின் தலைவர்கள் திருமண நிச்சயம், திருமணம், இறந்துபோதல் ஆகிய சந்தர்ப்பங்களில் செய்யப்படும் விரிவான சடங்குகளை விமர்சனம் செய்தனர்.
  • குழந்தைத் திருமணம், சோதிடத்தைப் பயன்படுத்துதல் ஆகிய இரண்டையும் எதிர்த்தனர்.
  • பம்பாய் பார்சி சமூகத்தைச் சேர்ந்த பெர்ரம்ஜி மல்பாரி என்பார் குழந்தைத் திருமணப் பழக்கத்திற்கு எதிரான சட்டம் இயற்றப்பட வேண்டுமென இயக்கம் நடத்தினர்.
  • இச்சமூகம் பெரோசா மேத்தா, தீன்சா வாச்சா போன்ற சிறந்த தலைவர்களை உருவாக்கியது. அவர்கள் தொடக்ககால காங்கிரஸில் முக்கியப் பங்கு பணியாற்றினார்.

சீக்கியர் நீர்திருத்த இயக்கம் (நிரங்கரிகள், நாம்தாரிகள்)

  • சீர்திருத்த இயக்கத்தின் அலைகள் எந்தச் சமூகத்தையும் நனைக்காமல் விட்டுவைக்கவில்லை.
  • பஞ்சாப் சீக்கியச் சமூகத்திலும் சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
  • நிரங்கரி இயக்கத்தின் நிறுவனரான பாபா தயாள்தாஸ் நிரங்கரி (உருவமற்ற) இறைவனை வழிபட வேண்டுமென வலியுறுத்தினார்.
  • சிலைவழிபாடு, சிலைவழிபாட்டோடு தொடர்புடைய சடங்குகள் ஆகியவற்றை மறுத்தல், குருநானக்கின் தலைமையையும் ஆதிகிரந்தத்தையும் மதித்தல் ஆகியன அவருடைய போதனைகளின் சாரமாக விளங்கின.
  • மது அருந்துவதையும், மாமிசம் உண்பதையும் கைவிடும்படி வலியுறுத்திக் கூறினார்.
  • பாபாராம் சிங் என்பவரால் தொடங்கப் பெற்ற நாம்தாரி இயக்கம் சீக்கியரிடையே நடைபெற்ற மற்றுமொரு சமூக, சமயச் சீர்திருத்த இயக்கமாகும்.
  • நாம்தாரி இயக்கம் சீக்கியர்களின் அடையாளங்களை (வாளைத் தவிர) அணிய வற்புறுத்தியது. வாளுக்குப் பதிலாகத் தனது சீடர்களை லத்தியை வைத்துக் கொள்ளும்படி ராம்சிங் கூறினார். இவ்வியக்கம் ஆணும் பெண்ணும் சமம் எனக் கருதியது.
  • விதவை மறுமணத்தை ஆதரித்தது. வரதட்சணை முறையையும் குழந்தைத் திருமணத்தையும் தடைசெய்தது.
  • ஆரியசமாஜம், கிறித்தவ சமயப்பரப்பு நிறுவனங்கள் ஆகியவற்றின் செல்வாக்கு வளர்ந்து கொண்டிருந்த ஒரு சூழலில் சிங்சபா எனும் அமைப்பு அமிர்தசரசில் நிறுவப்பட்டது.
  • சீக்கியமதத்தின் புனிதத்தை மீட்டெடுப்பதை சபாவின் முக்கியக் குறிக்கோளாக அமைந்தது. ஆங்கிலேயரின் ஆதரவும் அமிர்தரஸில் சீக்கியர்களுக்கென கால்சா கல்லூரி உருவாக்கப்பட்டது. சிங்சபாவே அகாலி இயக்கத்தின் முன்னோடி அமைப்பாகும்.

தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்தவாதிகள்

அ) இராமலிங்க சுவாமிகள்

  • வள்ளலார் எனப் பிரபலமாக அறியப்பட்ட, ராமலிங்க சுவாமிகள் அல்லது ராமலிங்க அடிகள் (1823 – 1874) சிதம்பரத்திற்கு அருகேயுள்ள மருதூர் எனும் கிராமத்தில் பிறந்தார்.
  • தந்தையாரின் மறைவுக்குப் பின்னர் அவரது குடும்பம் சென்னையிலிருந்த அவருடைய சகோதரரின் இல்லத்திற்குக் குடிபெயர்ந்தது.
  • முறையான கல்வியை அவர் பெற்றிராவிட்டாலும் அளப்பரியப் புலமையைப் பெற்றிருந்தார்.
  • உயிர்களிடையே நம்பிக்கை, இரக்கம் எனும் பிணைப்புகள் இருக்கவேண்டுமென்றார்.
  • “துயரப்படும் உயிரினங்களைப் பார்த்து இரக்கம் கொள்ளாதவர்கள் கல் நெஞ்சக்காரர்கள், அவர்களின் ஞானம் மேகங்களால் மூடப்பட்டிருக்கும்” எனும் கருத்தினை முன்வைத்தார்.
  • அவர் தன்னுடைய அன்பையும் இரக்கத்தையும் செடிகொடிகள் உட்பட அனைத்து உயிரினங்களிடமும் காட்டினார். இதை அவர் ஜீவகாருண்யம் என்றார்.
  • 1856இல் சமரச வேத சன்மார்க்க சங்கம் எனும் அமைப்பை நிறுவினார். பின்னர் அது சமரசசுத்த சன்மார்க்க சத்ய சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
  • 1866இல் தென்னிந்தியாவில் ஏற்பட்ட கொடிய பஞ்சத்தைக் கணக்கில் கொண்டு 1867இல் சாதி எல்லைகளைத் தாண்டி அனைத்து மக்களுக்குமான இலவச உணவகத்தை வடலூரில் நிறுவினார்.
  • அவர் இயற்றிய ஏராளமான பாடல்கள் திருவருட்பா என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டன. அவருடைய தீவிரமான சிந்தனைகள் பழமைவாத சைவர்களை ஆழமாகப் புண்படுத்தியதால் அவர்கள் வள்ளலாரின் பாடல்களை ‘மருட்பா’ (அறியாமையின் பாடல்கள்) எனக் கண்டனம் செய்தனர்.
  • நாட்டில் நிலவிய பசிக்கும் வறுமைக்கும் ராமலிங்கர் சாட்சியாய் இருந்தார். “பசியினால் இளைத்துப்போன, மிகவும் சோர்வுற்ற ஏழைமக்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்லுவதை நான் பார்த்தே. இருந்தும் அவர்களின் பசி போக்கப்படவில்லை என் இதயம் கடுமையாக வேதனைப்படுபவர்களை எனக்கு முன்பாகப் பார்க்கிறேன். எனது இதயம் நடுங்குகிறது. ஏழைகளாகவும் இணையில்லா நன்மதிப்பையும் களைப்படைந்த இதயத்தையும் கொண்டுள்ள அம்மக்களை நான் பார்க்கிறேன், நான் பலவீனம் அடைகிறேன்”.

ஆ) வைகுண்ட சுவாமிகள்

  • தென்னிந்தியாவின் தொடக்கக்காலச் சமூகத்தின் போராளிகளில் ஒருவரான வைகுண்ட சுவாமிகள் (1809 – 1851) கன்னியாகுமரிக்கு அருகில், இன்று சாமித்தோப்பு என்றழைக்கப்படும் சாஸ்தாகோவில்விளை எனும் கிராமத்தில் பிறந்தார்.
  • அவருடைய இயற்பெயர் முடிசூடும் பெருமாள். இப்பெயருக்கு உயர்சாதி இந்துக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் அவரின் பெற்றோர் அவருடைய பெயரை முத்துக்குட்டி என மாற்றினார். முத்துக்குட்டிக்கு முறையான பள்ளிக் கல்வியைப் பெறும் வாய்ப்புக் கிட்டவில்லை.
  • ஆனாலும் பல சமயநூல்கள் குறித்த புலமையை அவர் பெற்றிருந்தார். திருவிதாங்கூர் அரசின், உயர்சாதியினரின் கடுமையான எதிர்ப்புகளிடையே அனைவரும் சமம் எனும் கருத்தினைப் போதித்தார். அடித்தட்டு மக்களின் உரிமைகளை ஆதரித்தார்.
  • திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்றிருந்த அவர் தெய்வீக அனுபவம் ஒன்றைப்பெற்றார். வைகுண்டர் என தன்னை அழைத்துக் கொண்ட அவர் வழிபாட்டின் போது பின்பற்றும் தேவையற்ற சடங்கு சம்பிரதாயங்களைக் கைவிடும்படி மக்களைக் கேட்டுக்கொண்டார்.
  • நடைமுறையிலுள்ள சமயநெறிமுறைகளுக்கு எதிரான அவருடைய போதனைகள், ஒடுக்கப்பட்ட மக்களின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
  • 1833ஆம் ஆண்டு சாதிவேற்றுமைகளை ஒழிப்பதற்காகவும் சமூக ஒருங்கிணைப்புக்காகவும் சாமித்தோப்பில் தனது தியானத்தை துவக்கினார். அந்நாட்களில் துறவியைப் போன்றதொரு வாழ்க்கையை வாழ்ந்தார்.
  • தெற்கு திருவிதாங்கூரில் ஒடுக்கப்பட்ட மக்கள் எவற்றை அணியலாம்; எவற்றை அணியக் கூடாது என்பது உட்பட பல கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகியிருந்தனர்.
  • சமூகத்தின் சில குறிப்பிட்டப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் தலைப்பாகை அணியக்கூடாது என்றிருந்த நிலையில் வைகுண்டர் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் அம்மக்களைத் தலைப்பாகை அணியும்படி கூறினார். இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சுதந்திர உணர்வை வழங்கியதோடு அவர்களுக்குச் சுயமரியாதை சார்ந்த ஊக்கத்தையும் கொடுத்தது. அவரைப் பின்பற்றுவோரின் மனங்களில் புதிய நம்பிக்கை ஊன்றப்பட்டது.
  • 19ஆம் நூற்றாண்டில் அரங்கேறிய ஏனைய சமகாலச் சீர்திருத்த இயக்கங்களைப் போலவே வைகுண்டசுவாமிகளும் உருவவழிபாட்டை எதிர்த்தார்.
  • ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் தெய்வங்களுக்கெனக் கோவில்களைப் பெற்றிருக்கவில்லை. தங்கள் தெய்வங்களை மேன்மைப்படுத்தும் பொருட்டு களிமண்ணால் அல்லது செங்கல்லால் சிறியப் பிரமிடுகளைக்கட்டி அவற்றுக்குச் சாந்துபூசி வெள்ளையடித்து வைத்திருந்தனர்.
  • அவ்வடிவங்களை வழிபடுவது அநாகரிகமான பழக்கம் என வைகுண்டர் கருதினார். விலங்குகளை வணங்குவதையும் அவர் நிராகரித்தார். வழிபாட்டின்போது மக்கள் ஆடுகள், சேவல்கள், கோழிகள் ஆகியவற்றை பலி கொடுக்கும் சமயச்சடங்குகளைக் கண்டனம் செய்த வைகுண்டசுவாமிகள் விலங்குகளைப் பலியிடுவதற்கு எதிராக இயக்கம் நடத்தினார்.
  • பல்வேறு சாதிகளைச்சேர்ந்த மக்களை ஒருங்கிணைப்பதற்காக வைகுண்டசுவாமிகள் சமத்துவ சமாஜம் எனும் அமைப்பை நிறுவினார்.
  • அந்நோக்கத்தில் வெற்றிபெறுவதற்காக அனைத்துச் சாதிமக்களும் சேர்ந்துண்ணும் சமபந்தி விருந்துகளை நடத்தினார்.
  • திருவிதாங்கூர் அரசரால் சிறையில் அடைக்கப்பட்ட போதும் அவர் தனது கொள்கைகளை விட்டுத்தரவில்லை.
  • அவரைப் பின்பற்றியவர்கள் அவரை மிக்க மரியாதையுடன் அய்யா (தந்தை) என அழைத்தனர்.
  • அவருடைய சமயவழிபாட்டு முறை ‘அய்யாவழி’ என்றறியப்பட்டது. அவருடைய அறிவுரைகள் நீதிக்குப்புறம்பான சமூகப்பழக்க வழக்கங்களிலிருந்தும் மூடநம்பிக்கைகளிலிருந்தும் மக்களை விடுவித்தது.
  • அவருசைய கருத்துக்கள் ஒரு நூலாகத் திரட்டப்பட்டுள்ளது. அந்நூலின் பெயர் ‘அகிலத்திரட்டு’ என்பதாகும்.
  • வைகுண்டசுவாமிகள் ஆங்கில ஆட்சியையும் திருவிதாங்கூர் அரசரின் ஆட்சியையும் முறையே “வெள்ளைப் பிசாடுகளின் ஆட்சியென்றும்” “கறுப்புப் பிசாசுகளின் ஆட்சியென்றும்” விமர்சித்தார்.

இ) அயோத்திதாசர்

  • பண்டிதர் அயோத்தி தாசர் (1845 – 1914) ஒரு தீவிரத் தமிழறிஞரும் சித்தமருத்துவரும் பத்திரிக்கையாளரும் சமூக அரசியல் செயல்பாட்டாளரும் ஆவார்.
  • சென்னையில் பிறந்த அவர் தமிழ், ஆங்கிலம், சமச்கிருதம், பாலி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். சரளமாகப் பேசக் கூடியவர்.
  • அது வரையிலும் உயர் சாதியினரின் ராஜ்ஜியமாக விளங்கிய அச்சிட்டு வெளியிடும் இதழியலைத் தனது கருவியாகக் கொண்டு அயோத்திதாசர் ஒரு புதிய அறிவைப்பரப்பும் முறையை முன்னெடுத்தார்.
  • சமூகநீதிக்காக இயக்கம் நடத்திய அவர், சாதியத்தின் கொடிய பிடியிலிருந்து ஒடுக்கப்பட்டோர் விடுதலைபெறப் பாடுபட்டார்.
  • சாதிகளற்ற அடையாளத்தை நிறுவமுயன்ற அவர் சாதிய மேலாதிக்கத்திற்கும் தீண்டாமைக்கும் எதிராகக் கண்டனக்குரல் எழுப்பினார்.
  • கல்வியை வலிமை பெறுவதற்கான கருவியாகக் கருதிய அவர் தமிழகத்தில் ஒடுக்கப்பட்டோருக்கென பல பள்ளிகள் உருவாக்கப்படுவதற்கு உந்துசக்தியாகத் திகழ்ந்தார்.
  • ஒடுக்கப்பட்டோரின் கோவில்நுழைவுக்கு ஆதரவாகக் குரல் எழுப்புவதற்காகப் பண்டிதர் அயோத்திதாசர் அத்வைதானந்தா சபா எனும் அமைப்பை நிறுவினார்.
  • 1882இல் அயோத்திதாசரும் ஜான் திரவியம் என்பவரும் “திராவிடர்க் கழகம்” எனும் அமைப்பை நிறுவினர். மேலும் 1885இல் “திராவிட பாண்டியன்” எனும் இதழையும் தொடங்கினார்.
  • “திராவிட மகாஜனசபை” என்ற அமைப்பை 1891ல் நிறுவிய அவர் அவ்வமைப்பின் முதல் மாநாட்டை நீலகிரியில் நடத்தினார்.
  • 1907இல் “ஒரு பைசா தமிழன்” என்ற பெயரில் ஒரு வாராந்திரப் பத்திரிக்கையைத் தொடங்கி அதை 1914இல் ஆவர் காலமாகும் வரையிலும் தொடர்ந்து வெளியிட்டார்.
  • பண்டிதர் அயோத்திதாசர் சாதியத்தைப் பரப்புறை செய்யவும் அதை நியாயப்படுத்தவும் அடித்தளமாக விளங்கிய இந்துதர்மத்தின்பால் மனக்கசப்புற்றார்.
  • பிரம்மஞான சபையை நிறுவியவர்களின் ஒருவரான கர்னல் H.S. ஆல்காட் ஏற்படுத்தியத் தாக்கத்தின் விளைவாக 1898இல் இலங்கை சென்ற அவர் அங்கே பௌத்தத்தைத் தழுவினார்.
  • அதே ஆண்டில் பௌத்தமதத்தின் வழியே பகுத்தறிவின் அடிப்படையிலான சமய்த்தத்துவத்தைக் கட்டமைப்பதற்காக “சாக்கிய பௌத்த சங்கம்” எனும் அமைப்பை சென்னையில் நிறுவினார்.
  • பிராமணியத்தால் ஒடுக்கப்பட்டவர்களே உண்மையான பௌத்தர்கள் என அவர் வாதிட்டார்.
  • பௌத்தசமய நிலைப்பாட்டிலிருந்து தமிழ் இலக்கியங்களுக்கும் நாட்டார் வழக்காற்றியல் மரபுக்கும் புதிய விளக்கங்கள் கொடுத்த அவர் ஒரு மாற்றும் வரலாற்றைக் கட்டமைத்தார்.
  • மேலும் பௌத்தசமய மீட்பின் வழியாக இந்துசமயத்தைப் பிடித்திருக்கும் சாதியக்கொடுமைகளிலிருந்து மக்களை விடுவிக்க இயலுமென உழைத்தார்.
  • ஒடுக்கப்பட்டவர்களை சாதி பேதமற்ற திராவிடர் என அழைத்த அவர் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது அவர்களைச் சாதியற்ற திராவிடர்கள் எனப் பதிவுசெய்யுமாறு வற்புறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!