1957 ஆம் வருட தமிழக சட்டமன்றத் தேர்தல்

1957 ஆம் வருட தமிழக சட்டமன்றத் தேர்தல்

1957 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோது சென்னை மாகாணத்தின் நிலப்பரப்பு பலவகைகளில் மாறியிருந்தது. 1957ஆம் ஆண்டுத் தேர்தல் நெருங்கியபோது சென்னை மாகாணத்தின் நிலப்பரப்பு பலவகைகளில் மாறியிருந்தது. 1953ல் ஆந்திரப்பிரதேசம் தனி மாநிலமாக உருவானபோது, சென்னை மாகாணத்தின் தெலுங்கு பேசும் மாவட்டங்கள் அதனுடன் சென்றன. பிறகு, கன்னடம் பேசும் பகுதிகள் மைசூருடன் இணைந்தன.

1956ல் மாநில மறுசீரமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தபோது, மலபார் கேரளாவுடன் இணைக்கப்பட்டது. கன்னியாகுமரி, செங்கோட்டை ஆகியவை தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டன. இதனால் 375 இடங்களைக் கொண்டிருந்த சென்னை மாகாண சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை, 205ஆகக் குறைந்தது. அதாவது, மொத்தம் 167 சட்டப்பேரவை தொகுதிகள். இவற்றில் 38 தொகுதிகள் இரட்டை உறுப்பினர் தொகுதிகள். ஆகவே மொத்தமாக 205 தொகுதிகள்.

தமிழக முதல் சட்டமன்ற தேர்தல் 1951 – 1952

முதலாவது சட்டமன்ற தேர்தல் முடிந்ததும், 1952ல் ராஜாஜி முதல்வராகியிருந்தார். ஆனால், குலக்கல்வித் திட்டம் என்று எதிர்கட்சிகளால் விமர்சிக்கப்பட்ட ‘அரை நாள் பள்ளி – அரை நாள் வேலை திட்டம்’ அவருக்கு பெரும் எதிர்ப்பை கொண்டு வந்து சேர்த்திருந்தது.

கட்சிக்கு வெளியில் மட்டுமல்லாமல், கட்சிக்குள்ளேயும் எதிர்ப்புகள் தீவிரமாகியிருந்தன. இதையடுத்து 1954ல் அவர் பதவியைவிட்டு விலகிவிட, கு. காமராஜர் முதலமைச்சராக பதவியேற்றார்.

தான் முதல்வராகப் பதவியேற்றவுடன் அரை நாள் கல்வித் திட்டத்தை நீக்கியதோடு, சில இடங்களில் அமல்படுத்தப்பட்டிருந்த பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டமும் அவருக்கு பெரும் செல்வாக்கைச் சேர்த்திருந்தன. தவிர, திராவிடர் கழகத் தலைவர் பெரியாரும் காமராஜரை ஆதரித்தார். அவரது நாளிதழ் வழியாக பிரசாரமும் செய்தார்.

1949ல் கட்சியைத் துவங்கியிருந்த தி.மு.க. 1952ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிடவில்லை. அதற்கு அடுத்து வரவிருந்த பொதுத் தேர்தலில் போட்டியிட கட்சியில் பலரும் விரும்பினர்.

இதையடுத்து 1956ஆம் ஆண்டு மே மாதம் திருச்சியில் நடந்த தி.மு.க. மாநாட்டில், தேர்தலில் போட்டியிடலாமா, வேண்டாமா எனக் கேட்டு வாக்கெடுப்பு நடத்தியது அக்கட்சி. அந்த வாக்கெடுப்பில் அதிக உறுப்பினர்கள் போட்டியிடலாம் என வாக்களித்தனர். ஆகவே, தேர்தல் களத்தில் குதிக்க முடிவெடுத்தது தி.மு.க.

காங்கிரஸ், தி.மு.க. தவிர, ராஜாஜியின் ஆதரவைப் பெற்ற காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஃபார்வர்ட் பிளாக், பிரஜா சோஷலிஸ்ட் கட்சி, சோஷலிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இந்தத் தேர்தலில் களத்தில் இருந்தன. இதில், காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டி, கம்யூனிஸ்ட் கட்சி, ஃபார்வர்ட் பிளாக் ஆகிய கட்சிகள் தங்களுக்குள் ஒரு புரிதலை ஏற்படுத்திக்கொண்டு வேட்பாளர்களை நிறுத்தின.

தமிழக முதல் சட்டமன்ற தேர்தல் 1951 – 1952

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தனது சாதனைகளை முன்வைத்து வாக்குகளைக் கோரியது. தி.மு.கவின் திராவிட நாடு கோரிக்கையை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் கடுமையாக விமர்சித்தன. காங்கிரஸ் இந்தத் தேர்தலில் வலுவாகக் காட்சியளிக்க, கடந்த தேர்தலில் எதிர்க்கட்சி நிலையில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மிகவும் பலவீனமான நிலையில் இருந்தது.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் 204 இடங்களில் போட்டியிட்டது. கம்யூனிஸ்ட் கட்சி 58 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியது. பிரஜா சோஷலிஸ்ட் கட்சி 23 இடங்களில் போட்டியிட்டது. தி.மு.கவின் சார்பில் 124 பேர் போட்டியிட்டனர். 1957 மார்ச் மாதத்தில் மக்களவைத் தேர்தலோடு சேர்த்து சென்னை மாகாண சட்டப்பேரவைக்கும் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது, ஆசுவாசமும் ஆச்சரியமும் காத்திருந்தன. கடந்த தேர்தலில் பெரும்பான்மையைப் பெறாத காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலில் 151 இடங்களில் வெற்றிபெற்று அறுதிப் பெரும்பான்மை பெற்றிருந்தது. கடந்த தேர்தலில் 62 வெற்றிபெற்றிருந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. ஆனால், அக்கட்சிக்கு ஆதரவாக இருந்த பகுதிகள் ஆந்திராவோடு பிரிந்து சென்றுவிட, இந்த முறை வெறும் 4 இடங்களிலேயே அது வெற்றி பெற்றது. காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டி, பிரஜா சோஷலிஸ்ட் கட்சி, ஃபார்வர்ட் பிளாக், சோஷலிஸ்ட் கட்சி ஆகியவை இணைந்து, 15க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடித்திருந்தன.

போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தி.மு.கவின் சார்பில் 15 உறுப்பினர்கள் வெற்றிபெற்றிருந்தனர். சி.என். அண்ணாதுரை, மு. கருணாநிதி, அன்பழகன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் வெற்றிப் பட்டியலில் இருந்தனர். எல்லா வேட்பாளர்களுக்கும் பொதுவான சின்னம் கிடைக்காத நிலையிலும் கிடைத்த இந்த வெற்றி, அரசியல் களத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.

முதலமைச்சரான காமராஜர் சாத்தூர் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றிருந்தார். தி.மு.க. பொதுச் செயலாளர் சி.என். அண்ணாதுரை காஞ்சிபுரத்திலிருந்து வெற்றிபெற்றிருந்தார். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம். கல்யாணசுந்தரம் திருச்சி இரண்டு தொகுதியிலிருந்தும் எம். பக்தவத்ஸலம் திருப்பெரும்புதூரிலிருந்தும் சாத்தான்குளத்திலிருந்து சி.பா. ஆதித்தனாரும் மேலூரிலிருந்து பி. கக்கனும் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் திருவில்லிபுத்தூர் நாடாளுமன்றத் தொகுதி ஆகியவற்றிலிருந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரும் வெற்றி பெற்றிருந்தனர்.

வெற்றிக்குப் பிறகு காமராஜர் அமைத்த அமைச்சரவையில், அவரைத் தவிர ஏழு பேர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். எம். பக்தவத்ஸலம் உள்துறைக்கும் சி. சுப்ரமணியம் நிதித் துறைக்கும் பொறுப்பேற்றனர். கக்கன் பொதுப்பணித் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.

தமிழக முதல் சட்டமன்ற தேர்தல் 1951 – 1952

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *