Tnpsc

4th March 2020 Current Affairs in Tamil & English

4th March 2020 Current Affairs in Tamil & English

4th March 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

4th March 2020 Current Affairs Tamil

4th March 2020 Current Affairs English

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1.கர்ப்பிணிப்பெண்கள் மற்றும் வளரிளம்பருவப்பெண்களுக்கு ஊட்டச்சத்து ஆதரவை வழங்குவதை நோக்கமாகக்கொண்டு, அண்மையில் தொடங்கப்பட்ட திட்டத்தின் பெயரென்ன?

அ. பிரதான் மந்திரி சுபோஷித் யோஜனா

ஆ. சுபோஷித் மா அபியான்

இ. சுபோஷித் ஜனனி யோஜனா

ஈ. சுபோஷித் பேட்டி அபியான்

  • கர்ப்பிணிப்பெண்கள் மற்றும் வளரிளம்பருவப்பெண்களுக்கு ஊட்டச்சத்து ஆதரவை வழங்குவதை நோக்கமாகக்கொண்ட, “சுபோஷித் மா அபியான்” என்ற திட்டத்தை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா சமீபத்தில் தொடங்கிவைத்தார். மக்களவைத்தலைவரின் நாடாளுமன்றத் தொகுதியான இராஜஸ்தான் மாநிலம் கோட்டாவிலிருந்து இத்திட்டம் தொடங்கப்பட்டது. இதன் தொடக்க நிகழ்வில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானியும் கலந்துகொண்டார்.

2.ஆறு தூய்மைப்படுத்தும் நிகழ்வில், நார்வே அமைச்சருடன் இணைந்து பங்கேற்றதற்காக அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் அப்ரோஸ் ஷா, எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராவார்?

அ. கேரளம்

ஆ. மகாராஷ்டிரா

இ. மேற்கு வங்கம்

ஈ. ஒடிசா

  • நார்வேயின் பன்னாட்டு வளர்ச்சி அமைச்சர் டாக்-இங் உல்ஸ்டீன் தனது 3 நாள் இந்திய பயணத்தின் போது, மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச்சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான அப்ரோஸ் ஷாவுடன் இணைந்து ‘மிதி’யாற்றைத் தூய்மைப்படுத்தும் பணியில் பங்கேற்றார். பேரளவிலான கடற்கரை தூய்மைப்படுத்தும் இயக்கத்தை ஏற்பாடு செய்ததற்காக, கடந்த 2016ஆம் ஆண்டில் அப்ரோஸ் ஷாவுக்கு ‘ஐ.நா புவியின் சாம்பியன்’ விருது வழங்கப்பட்டது. இதற்குமுன்பு அவர், கடற்கரையைத் தூய்மை செய்யும் திட்டத்திற்காக நார்வே சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

3. DRDO மற்றும் இந்திய அறிவியல் கழகத்தின் ஆய்வகமான HEMRLஆல் சமீபத்தில் உருவாக்கப்பட்ட ‘RaIDer-X’ என்பது என்ன?

அ. பீரங்கி துப்பாக்கி

ஆ. வெடிபொருள் கண்டறி சாதனம்

இ. துப்பாக்கிச்சூடு நிகழ்விடங்காட்டி

ஈ. குண்டு துளைக்காத கவச உடை

  • ‘RaIDer-X’ என்பது ஒரு புதிய வெடிபொருள் கண்டறி சாதனமாகும். அண்மையில் இது, புனேவில் நடைபெற்ற தேசிய வெடிபொருள் கண்டறிதலுக்கான பயிலரங்கின்போது வெளியிடப்பட்டது. இதனை புனேவில் அமைந்துள்ள DRDO-உயராற்றல் பொருட்கள் ஆராய்ச்சி ஆய்வகமும் (HEMRL) பெங்களூரில் அமைந்துள்ள இந்திய அறிவியல் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ளன.
  • இந்தச் சாதனத்தால் ஒரு குறிப்பிட்ட தொலைவிலிருந்து வெடிபொருட்களை கண்டறியவியலும் என்றும் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் வெடிபொருட்களையும் இதால் கண்டறிய முடியும் எனக் கூறப்படுகிறது. தூய்மையற்ற நிலையில் உள்ள வெடிபொருட்களைக்கண்டறியும் வகையிலும் இந்தச் சாதனத்தை வடிவமைக்க முடியும்.

4.பாதுகாப்பு மற்றும் உத்திசார் ஆய்வுகள் துறையில் முன்மொழியப்பட்டுள்ள, ‘சிறப்பு இருக்கை – Chair of Excellence’க்கு, எந்த இந்திய விமானப்படைத்தலைவரின் பெயர் சூட்டப்படவுள்ளது?

அ. R K S பதாரியா

ஆ. அர்ஜன் சிங்

இ. நார்மன் பிரவுன்

ஈ. பிரதாப் சந்திர லால்

  • பாதுகாப்பு மற்றும் உத்திசார் ஆய்வுகள் துறையில், ‘சிறப்பு இருக்கை’ அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அண்மையில் இந்திய விமானப்படையும் சாவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகமும் கையெழுத்திட்டன. 5 நட்சத்திர தரவரிசைகொண்ட ஒரே IAF அதிகாரி அர்ஜன் சிங்கின் நூற்றாண்டு பிறந்த ஆண்டை நினைவுகூரும் வகையில், புதிதாக உருவாக்கப்பட்ட அவ்விருக்கைக்கு, ‘வான்படை தலைவர் அர்ஜன் சிங் தலைமையின் சிறப்பு இருக்கை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  • IAF அதிகாரிகளுக்கு பாதுகாப்பு & உத்திசார் ஆய்வுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் உயர்கல்வி மற்றும் முனைவர் ஆய்வுகளைத் தொடருவதற்கு இவ்விருக்கை உதவும்.

5.உணவு வணிகநிறுவனங்கள், இணையவழியில், சுகாதார மதிப்பீடற்ற உணவுகளை விநியோகிக்க தடைவிதித்து அண்மையில் உத்தரவிட்ட மாநில அரசு எது?

அ. கேரளம்

ஆ. ஒடிசா

இ. பஞ்சாப்

ஈ. இராஜஸ்தான்

  • உணவு வணிகநிறுவனங்கள், இணையவழியில், சுகாதார மதிப்பீடற்ற உணவுகளை விநியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அண்மையில் அறிவித்தது. இணையவழி உணவு விநியோக ஒருங்கிணைப்பாளர்கள், உணவு வணிகநிறுவனங்களிடமிருந்து மதிப்பீடு இல்லாமல் உணவுகளைக் கொண்டுவருவதையும் அம்மாநில அரசு தடைசெய்துள்ளது.
  • வரும் ஏப்ரல் 30 முதல் ஓராண்டு காலத்திற்கு, இத்தடை உத்தரவுகள் மாநிலத்தில் அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

6.அண்மையில், எந்த நாட்டின் புதிய பிரதமராக முகைதீன் யாசின் பதவியேற்றுக்கொண்டார்?

அ. கத்தார்

ஆ. மலேசியா

இ. ஈரான்

ஈ. சவுதி அரேபியா

  • மலேசியாவின் முன்னாள் துணைப்பிரதமரான முகைதீன் யாசின் சமீபத்தில் நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார். இந்நியமனத்தை மலேசியாவின் மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா அறிவித்தார். முகைதீன் யாசின் சமீபத்தில் புதிய பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.
  • கடந்த வாரம் பிரதம அமைச்சர் பதவியிலிருந்து விலகிய மகாதீர் முகமதுவைத் தொடர்ந்து, முகைதீன் யாசின் அப்பதவிக்கு வந்துள்ளார்.

7. ICAR – இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த, ‘பூசா வேளாண் அறிவியல் விழா – 2020’ஐ நடத்திய நகரம் எது?

அ. லக்னோ

ஆ. புது தில்லி

இ. நாக்பூர்

ஈ. ஹைதராபாத்

  • ‘பூசா வேளாண் அறிவியல் விழா’வானது ICAR-IARIஆல் (இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகம் – இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்) புது தில்லியில் மார்ச் 1-3 வரை ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வு, புது தில்லியில் அமைந்துள்ள ICAR-IARI விழா மைதானத்தில் நடத்தப்பட்டது.
  • ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தைச்சேர்ந்த உழவர் பாரத் பூஷன் (42), இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தால், ‘புத்தாக்க உழவர் விருது’க்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இந்நிகழ்வின்போது புத்தாக்கம் நிறைந்த வேளாண் பெருமக்கள் பாராட்டப்படுகிறார்கள்.

8.கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு-2020இல் வென்ற இந்திய பல்கலைக்கழகம் எது?

அ. சாவித்திரிபாய் புலே புனே பல்கலைக்கழகம்

ஆ. பஞ்சாப் பல்கலைக்கழகம்

இ. மெட்ராஸ் பல்கலைக்கழகம்

ஈ. ஆந்திர பல்கலைக்கழகம்

  • கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க பதிப்பு, மார்ச் 1 அன்று ஒடிசா மாநிலம் புவனேசுவரில் நிறைவடைந்தது. மொத்தம் 46 பதக்கங்களுள் 17 தங்கப்பதக்கங்களை வென்று பஞ்சாப் பல்கலைக்கழகம் சாம்பியனாக முடிசூட்டப்பட்டது.
  • புனேவின் சாவித்திரிபாய் புலே பல்கலைக்கழகம், மொத்தம் 37 பதக்கங்களுடன் இரண்டாமிடத்தைப் பெற்றது. மூன்றாமிடத்தை பஞ்சாபி பல்கலைக்கழகம் பெற்றது. பிரபல தடகள வீராங்கனை டூட்டீ சந்த், 100 மீ., ஓட்டப்பந்தயத்தில் புதிய தேசிய பல்கலைக்கழக சாதனையை படைத்து 100 மீ., மற்றும் 200 மீ., ஓட்டப்பந்தயங்களில் தங்கப்பதக்கம் வென்றார்.

9. ஆண்டுதோறும், ‘பாகுபாடுகள் ஒழிப்பு நாள் – Zero Discrimination Day’ அனுசரிக்கப்படும் தேதி எது?

அ. மார்ச் 1

ஆ. மார்ச் 2

இ. மார்ச் 3

ஈ. மார்ச் 4

  • ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 1 அன்று UNAIDSஆல் உலகம் முழுவதும் ‘பாகுபாடுகள் ஒழிப்பு நாள்’ அனுசரிக்கப்படுகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் எய்ட்ஸை ஒரு பொது சுகாதார அச்சுறுத்தலாக எண்ணி அதனை முடிவுக்குக்கொண்டுவருவதை நோக்கமாகக்கொண்ட ஐ.நா அமைப்புதான் இந்த UNAIDS.
  • இந்நாளில், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாகுபாட்டை முடிவுக்குக்கொண்டுவரவும், சம உரிமைகள், வாய்ப்புகள் மற்றும் சிகிச்சைக்காகவும் UNAIDS அழைப்புவிடுத்துள்ளது. “பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாகுபாடுகள் ஒழிப்பு – Zero Discrimination Against Women and Girls” என்பது இந்த ஆண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

10.அண்மையில் காலமான ரிச்சர்ட் ஜான் பைஸ் தொடர்புடைய துறை எது?

அ. விளையாட்டு

ஆ. இலக்கியம்

இ. அரசியல்

ஈ. வணிகம்

  • மூத்த கொங்கனி மொழி எழுத்தாளரும் நாடக ஆசிரியருமான ரிச்சர்ட் ஜான் பைஸ் (51) அண்மையில் காலமானார். கொங்கனி மொழியில் பல சிறுகதைகள், நையாண்டி கட்டுரைகள் மற்றும் கவிதைகளை அவர் எழுதியுள்ளார். ரிச்சர்டுக்கு அவரது ‘Fathor’ என்னும் இலக்கியப்படைப்புக்காக, ‘T M A பை’ விருது வழங்கப்பட்டது. அவரது பல நாடகங்கள் கொங்கனி நாடக அரங்குகளில் அரங்கேற்றப்பட்டுள்ளன. ‘டைஜிவேர்ல்ட்’ என்ற செய்தித்தளத்தின் தலையங்கத் தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்

Image result for tamilnadu map logo

  • மத்திய சுகாதாரம் & குடும்பநலத்துறை அமைச்சர் Dr. ஹர்ஷ்வர்தன் தலைமையில், இராமநாதபுரத்தில் புதிய அரசு மருத்துவக்கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். விருதுநகரில் புதிய அரசு மருத்துவக்கல்லூரிக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.
  • மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை சார்பில் `2,857 கோடி மதிப்பில், ‘தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்ட’த்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிவைத்தார். இந்தத் திட்டத்திற்கான உலக வங்கியின் பங்கு 1999.902 கோடி ரூபாயாகும்.
  • இத்திட்டத்தின் முக்கியகுறிக்கோள்கள் மேம்படுத்தப்பட்ட தரமான சிகிச்சை, தொற்றாநோய்கள் மற்றும் காயங்களுக்கான மேம்படுத்தப்பட்ட மேலாண்மை, பேறுசார் மற்றும் குழந்தைகள் நலத்திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை நீக்குதல் ஆகியன ஆகும்.
  • இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவ மையங்களிலும், அதாவது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலிருந்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரை மேற்கொள்ளப்படவுள்ளது.
  • மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரைக் கொண்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள 100 ஏரி, குளங்களை நிரப்பும், ‘மேட்டூர் – சரபங்கா நீரேற்ற’ திட்டத்துக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இதன்மூலம் ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள 1,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். வறட்சிக்கு உள்ளான நங்கவள்ளி, மேச்சேரி, தாரமங்கலம், ஓமலூர், கெங்கவல்லி, எடப்பாடி ஆகிய ஒன்றிய பகுதிகளில் உள்ள நிலங்களும் பாசன வசதிபெறும்.
  • கிருஷ்ணகிரியில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு, முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளி பகுதியில், `348 கோடி மதிப்பில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அமையவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!