TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 22nd April 2024

1. புதிய லான்செட் ஆணையத்தின் 2024 – அறிக்கையின்படி, 2040ஆம் ஆண்டுக்குள் மார்பகப் புற்றுநோயால் நிகழும் வருடாந்திர இறப்புகளின் எண்ணிக்கை என்னவாக இருக்கும்?

அ. 1 மில்லியன்

ஆ. 2 மில்லியன்

இ. 3 மில்லியன்

ஈ. 4 மில்லியன்

  • புதிய லான்செட் ஆணையத்தின் 2024 – அறிக்கையின்படி, மார்பகப் புற்றுநோயானது 2040ஆம் ஆண்டில் பத்து இலட்சம் இறப்புகளை ஏற்படுத்தும் எனக் கணிக்கப்பட்டுள்ளது; இது 2020ஆம் ஆண்டை ஒப்பொடும்போது சுமார் 50%க்கும் அதிகமாகும். 2015 – 2020 வரை 7.8 மில்லியன் பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அதே காலப்பகுதியில் 6,85,000 பெண்கள் அந்நோய் காரணமாக மரணித்துள்ளனர் எனவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. அண்மையில், ‘குற்றவியல் நீதி அமைப்பின் நிர்வாகத்தில் இந்தியாவின் முன்னேற்றம்’ என்ற தலைப்பிலான மாநாட்டை ஏற்பாடு செய்த அமைச்சகம் எது?

அ. பாதுகாப்பு அமைச்சகம்

ஆ. வெளியுறவு அமைச்சகம்

இ. பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்

ஈ. சட்டம் மற்றும் நீதி அமைச்சகம்

  • பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, மற்றும் பாரதிய சாக்ஷ்ய ஆதினியம் ஆகிய மூன்று சட்டங்கள், தொன்மையான காலனித்துவ சட்டங்களுக்குப் பதிலாக, 2024 ஜூலை.01 முதல் நடைமுறைக்கு வரும். சட்டம் மற்றும் நீதி அமைச்சகமானது, ‘குற்றவியல் நீதி அமைப்பு நிர்வாகத்தில் இந்தியாவின் முன்னேற்றம்’ என்ற தலைப்பில் மாநாட்டை நடத்துகிறது. புது தில்லியில் நடைபெறும் இம்மாநாட்டுக்குத் தலைமை நீதிபதி DY சந்திரசூட் முதன்மை விருந்தினாராக இருப்பார். இந்த நிகழ்வு புதிய சட்டங்களை தெளிவுபடுத்துவதையும், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்ட அமலாக்கத்துறை மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பங்குதாரர்களிடையே உரையாடலை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

3. அண்மையில், பையோல்ஜி-1-2 என்ற வானூர்தி-எதிர்ப்பு ஏவுகணையை சோதித்த நாடு எது?

அ. உக்ரைன்

ஆ. ஈரான்

இ. வட கொரியா 

ஈ. எகிப்து

  • 2024 ஏப்ரல்.20 அன்று வட கொரியா கொரியாவின் மேற்குக்கடலில், ‘Pyoljji-1-2’ என்ற வானூர்தி-எதிர்ப்பு ஏவுகணை மற்றும் Hwasal-1 Ra-3 என்ற எறிகணையையும் சோதித்துப் பார்த்ததாக அறிவித்தது. இந்தச் சோதனை தென் கொரியா மற்றும் அமெரிக்கா இடையே பதட்டத்தை அதிகரித்துள்ளது. அணு ஆயுதங்களை சுமந்துசெல்லும் திறன்கொண்டதாகும் ‘Hwasal-1 Ra-3’ எறிகணை.

4. அண்மையில், தேசிய பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. நயி பங்கஜ் குமார்

ஆ. சுரேஷ் சந்த் யாதவ்

இ. கஜேந்தர் சிங்

ஈ. நளின் பிரபாத்

  • மூத்த இகாப அதிகாரியான நளின் பிரபாத், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கடத்தல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான இந்தியாவின் தேசிய பாதுகாப்புப் படையின் (NSG) தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜம்மு மற்றும் காஷ்மீரில் CRPF கூடுதல் தலைமை இயக்குநராக பணியாற்றிய அவர், ஆந்திர பிரதேசத்தின் 1992 ஆம் ஆண்டு பணித் தொகுதியைச் சார்ந்த இகாப அதிகாரி ஆவார். 2028 ஆகஸ்ட்.31 வரை அமைச்சரவையின் நியமனக்குழுவால் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள அவர், NSGஇன் கூடுதல் பொறுப்பை வகித்து வந்த தல்ஜித் சிங் சௌத்ரியை அடுத்து இப்பதவிக்கு வந்துள்ளார்.

5. அண்மையில், ‘ஆதர்ஷீலா’ என்ற தலைப்பில் தொடக்கநிலை குழந்தைப் பருவ பராமரிப்பு மற்றும் கல்விக்கான தேசிய பாடத்திட்டம் – 2024ஐ வெளியிட்ட அமைச்சகம் எது?

அ. தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

ஆ. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

இ. உள்துறை அமைச்சகம்

ஈ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் 

  • பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமானது 2024ஆம் ஆண்டிற்கான தொடக்கநிலை குழந்தைப் பருவ பராமரிப்பு மற்றும் கல்விக்கான தேசிய பாடத்திட்டத்தை, ‘ஆதர்ஷீலா’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது தேசிய கல்விக்கொள்கை, 2020உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த 48 வார பாடத்திட்டம் அங்கன்வாடிகளில் மூன்று முதல் ஆறு வயது வரையுள்ள குழந்தைகளுக்கானதாகும். பல்வேறு அமைச்சகங்கள், NCERT மற்றும் சிவில் சமூக அமைப்புகள் அடங்கிய குழுவால் உருவாக்கப்பட்ட இது, அடிப்படைக் கற்றலை வலியுறுத்துகிறது.

6. Euvichol-S என்ற தடுப்பூசியுடன் தொடர்புடைய நோய் எது?

அ. வயிற்றுப்போக்கு

ஆ. காலரா

இ. மலேரியா

ஈ. டெங்கு

  • வாய்வழி செலுத்தப்படும் காலரா தடுப்பூசியான Euvichol-Plusஇன் எளிமைப்படுத்தப்பட்ட மற்றும் செலவு குறைந்த பதிப்பான, ‘Euvichol-S’ என்ற தடுப்பூசிக்கு முன்கூட்டியே அனுமதி அளித்துள்ளது உலக சுகாதார அமைப்பு (WHO). குறைவான உள்ளீட்டுப்பொருள்களைக் கொண்டுள்ள இது, மலிவானதுவும் விரைவாக உற்பத்தி செய்ய முடிந்ததும் ஆகும். விப்ரியோ காலரா என்ற பாக்டீரியாவால் ஏற்படும் காலரா, அசுத்தமான உணவு அல்லது தண்ணீரின்மூலம் பரவுகிறது. பெரும்பாலான பாதிப்புகள் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன. 2023 ஜூலை வரை 132 பாதிப்புகள் இந்தியாவில் பதிவாகியுள்ளன.

7. ஷோம்பென் பழங்குடியினர் முதன்மையாக வசிக்கின்ற பகுதி எது?

அ. டையூ தீவு

ஆ. நேத்ராணி தீவு

இ. இலட்சத்தீவுகள்

ஈ. கிரேட் நிக்கோபார் தீவுகள்

  • குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுவான ஷோம்பென், அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக வாக்களித்தனர். கிரேட் நிக்கோபார் தீவின் அடர்ந்த வெப்பமண்டல மழைக்காடுகளில் வசிக்கும் அவர்கள் மங்கோலாய்டு குழுவைச் சார்ந்தவர்களாவர். 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 229 ஷோம்பென் மக்கள் அங்கு உள்ளனர். அவர்கள் வேட்டையாடிகளாகவும் சேகரிப்பாளர்களாகவும், அரை-நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

8. ஆண்டுதோறும், ‘தேசிய குடிமைப் பணிகள் நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. ஏப்ரல்.20

ஆ. ஏப்ரல்.21

இ. ஏப்ரல்.22

ஈ. ஏப்ரல்.23

  • தேசத்தின் நிர்வாக முதுகெலும்பான அரசு ஊழியர்களை கௌரவிப்பதற்காக இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல். 21 அன்று தேசிய குடிமைப்பணிகள் நாள் கொண்டாடப்படுகிறது. இது சர்தர் வல்லபாய் படேல், 1947இல் தகுதிகாண் அதிகாரிகளுக்கிடையே ஆற்றிய உரையின் நினைவாக கொண்டாடப்படுகிறது. அவ்வுரையின்போது வல்லபாய் படேல், அரசு ஊழியர்களை, ‘இந்தியாவின் எஃகு சட்டகம்’ என்று வர்ணித்தார். இந்த நாளில் அரசு ஊழியர்களை அங்கீகரித்து ஊக்கப்படுத்துதல், துறைசார் செயல்பாடுகளை மதிப்பீடு செய்தல், பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கான விருதுகள் வழங்குதல், குடிமக்களுக்குச் சேவை செய்வதில் அவர்களின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

9. 2023-24 நிதியாண்டில் மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதியில் முதலிடம் பிடித்த இந்திய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கர்நாடகா

இ. மகாராஷ்டிரா

ஈ. கேரளா

  • 2023-24 நிதியாண்டில் $9.56 பில்லியன் மதிப்புக்கு மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி செய்து இந்தியாவிலேயே மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. 2024ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து செய்யப்படும் அனைத்து மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதியில் இது 30% ஆகும். தமிழ்நாடு வன்பொருள், தோல் பொருட்கள், ஜவுளி மற்றும் தானியங்கி உள்ளிட்ட பல்வேறு மின்னணுப் பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது.

10. அண்மையில், உலகளாவிய நிதி நிலைத்தன்மை அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ. பன்னாட்டு செலவாணி நிதியம்

ஆ. உலக வங்கி

இ. உலக வர்த்தக அமைப்பு

ஈ. உலக சுகாதார அமைப்பு

  • பன்னாட்டு செலவாணி நிதியமானது (IMF) அதன் அண்மைய உலகளாவிய நிதி நிலைத்தன்மை அறிக்கையை வெளியிட்டது. இவ்வறிக்கையானது உலக நிதிச்சந்தைகளின் நிலைப்புத் தன்மை மற்றும் வளர்ந்து வரும்-சந்தை நிதியுதவியை மதிப்பிடும் ஓர் ஈராண்டுகால மதிப்பீடாகும். ஏப்ரல் மற்றும் அக்டோபரில் வெளியிடப்பட்ட இவ்வறிக்கை தற்போதைய நிதி நிலைமைகளை ஆராய்கிறது; நிதி மற்றும் கட்டமைப்பு மண்டலங்களில் ஏற்றத்தாழ்வுகள் போன்ற சாத்தியமான இடர்களை எடுத்துக்காட்டுகிறது. இது உலகளாவிய நிதி நிலைப்புத் தன்மைக்கான அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்வதையும், வளர்ந்துவரும் சந்தை நாடுகளுக்கான நிதியுதவிக்கான அணுகலை மதிப்பிடுவதையும் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

11. அண்மைய அறிக்கையின்படி, இந்தியாவில் சாகுபடி செய்யக்கூடிய நிலப்பரப்பில் எத்தனை சதவீதம் அமில மண் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது?

அ. 30%

ஆ. 40%

இ. 20%

ஈ. 10%

  • இந்தியாவில் 30% வேளாண் நிலங்கள் அமிலத்தன்மை கொண்ட மண்ணால் பாதிக்கப்பட்டு தாவர வளர்ச்சியைத் தடுக்கிறது என்று ஓர் அண்மைய அறிக்கை வெளிப்படுத்துகிறது. காலப்போக்கில் மண்ணின் pH தன்மை குறையும் ஒரு செயல்முறையான அமிலமயமாக்கல், வேளாண் நடவடிக்கைகள் காரணமாக அதிகரித்து வருகிறது. இது மேற் பரப்பு மற்றும் நிலத்தடிமட்டம் என இரண்டையும் பாதிக்கிறது. ஈரப்பதமிகுந்த தென்மேற்கு, வடகிழக்கு மற்றும் இமய மலைப்பகுதிகளில் அமில மண் அதிகமாக உள்ளது. அதிகப்படியான அம்மோனியம் அடிப்படையிலான நைட்ரஜன் உரங்கள், நைட்ரேட் நைட்ரஜனின் கசிவு மற்றும் அறுவடையின்போது காரத்தன்மைகொண்ட தாவரங்களை களைதல் ஆகியவை இதற்குப் பங்களிக்கும் காரணிகளாகும்.

12. பன்ஹாலா கோட்டை அமைந்துள்ள மாநிலம் எது?

அ. மகாராஷ்டிரா

ஆ. கர்நாடகா

இ. கோவா

ஈ. மத்திய பிரதேசம்

  • இந்திய தொல்லியல் துறையானது (ASI) மகாராஷ்டிர மாநிலம் மும்பை வட்டத்தில் உள்ள பன்ஹாலா கோட்டையில் உலக பாரம்பரிய நாளைக் கொண்டாடியது. பாரம்பரியமாக பராசர முனிவருடன் இணைத்துப் பேசப்படுகிறத இந்தக் கோட்டை, வர்த்தக வழிகளில் உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. 11ஆம் நூற்றாண்டில் ஷிலஹாரா ஆட்சியாளர் போஜாவால் கட்டப்பட்ட இக்கோட்டை, யாதவர்கள், பாமினி, அடில்ஷாஹி, மராட்டியர்கள் மற்றும் முகலாயர்கள் உட்பட பல்வேறு வம்சங்களைப் பார்த்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!