TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 25th and 26th May 2024

1. ‘கோள்களின் சீரமைப்பு’ என்றால் என்ன?

அ. இது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களின் நிலைப்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்

ஆ. கருந்துளை சம்பந்தப்பட்ட ஓர் அரிய வானியல் நிகழ்வு

இ. பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தூரத்தை விவரிக்கும் சொல்

ஈ. மேற்கண்ட எதுவுமில்லை

 • அடுத்த மாதம், ஜூன்.03ஆம் தேதியன்று புதன், செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய ஆறு கோள்கள் வானில் ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கும். இதனை பூமியிலிருந்து வெறும் கண்களாலேயே பார்க்க இயலும். செவ்வாய் மற்றும் சனி ஆகிய கோள்களை வெறும் கண்களாலும், யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்களை தொலைநோக்கிகள்மூலமும் பார்க்கலாம்.
 • புதன் மற்றும் வியாழன் ஆகியவை சூரியனுக்கு அருகில் இருப்பதால் வெறும் கண்ணுக்குத் தெரிவது சிரமமாக இருக்கும். ‘கோள்களின் சீரமைப்பு’ என்பது கோள்கள் நேர்கோட்டில் வருவதைக்காட்டிலும் ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்திலிருந்து காணும்போது விண்வெளியில் ஒரு கோட்டை உருவாக்கும் மாய நிகழ்வைக் குறிக்கிறது.

2. ஆண்டுதோறும், ‘பேறுகால வலிப்பு குறித்த விழப்புணர்வு ஏற்படுத்தும் உலக நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. 22 மே

ஆ. 23 மே

இ. 24 மே

ஈ. 25 மே

 • பேறுகால வலிப்பு குறித்த விழப்புணர்வு ஏற்படுத்தும் உலக நாளானது, மே.22 அன்று, உயிருக்காபத்தான பேறுகால சிக்கல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. பேறுகாலத்தின் 20ஆவது வாரத்திற்குப் பிறகோ / பேறுகாலத்தின் பின்னோ ஏற்படும் பேறுகால வலிப்பு, ஆபத்தான உயர் குருதியழுத்தம் மற்றும் உறுப்பு சிக்கல்களை உள்ளடக்கியது. இது நஞ்சுக்கொடிசார்ந்த பிரச்சினைகளிலிருந்து உருவாகிறது. உயர் குருதியழுத்தம், சிறுநீரில் புரதம் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். தாய் மற்றும் கரு இரண்டுக்கும் இடரை ஏற்படுத்துகிற இது, முன்கூட்டிய பிறப்பு அல்லது இறப்புக்கு வழிவகுக்கிறது.

3. அண்மையில், மீயொலியில் செல்லும், ‘ASMPA’ சீர்வேக ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்த நாடு எது?

அ. ரஷ்யா

ஆ. பிரான்ஸ்

இ. ஜப்பான்

ஈ. சீனா

 • அணுவாயுதங்களை சுமந்துசெல்லும் திறன்கொண்ட, ‘ASMPA’ – மீயொலியில் செல்லும் சீர்வேக ஏவுகணையை அண்மையில் பிரான்ஸ் வெற்றிகரமாக பரிசோதித்தது. ‘ASMP/ASMP-A’ என்பது பிரான்ஸ் நாட்டின் மீயொலியில் செல்லும் நிலத்தாக்குதல் சீர்வேக ஏவுகணை ஆகும். 2009 முதல் செயல்பட்டு வருகிற ASMP-A, 500 கிலோ மீட்டர் வரம்பையும் 300 kt அணு வெப்பாற்றல் சார்ந்த வெடியுளையையும் கொண்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட, ‘ASMPA-R’ பதிப்பானது, தூர வரம்பு மற்றும் வெடியுளை திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

4. ‘ஃபெரோப்டோசிஸ் – Ferroptosis’ என்றால் என்ன?

அ. ஆக்கிரமிப்பு தாவரம்

ஆ. ஒரு வகை வைரஸ்

இ. ஒழுங்குபடுத்தப்பட்ட உயிரணு இறப்பின் ஒரு வடிவம்

ஈ. ஒரு வகை நீர்மூழ்கிக்கப்பல்

 • ஃபெரோப்டோசிஸ் COVID-19 நுரையீரல் நோயை உண்டாக்குகிறது என அண்மைய ஆய்வு வெளிப்படுத்துகிறது. அப்போப்டொசிஸிலிருந்து வேறுபடும் ஃபெரோப்டோசிஸ், செல் (உயிரணு) சவ்வுகளில் லிப்பிட் பெராக்சைடு படிவதால் ஏற்படுகிறது. இரும்பைச் சார்ந்துள்ள இந்த வடிவ செல் இறப்பானது, குளுதாதயோனின் அளவைக் குறைப்பதோடு குளுதாதயோன் பெராக்சிடேஸ் செயல்பாட்டைக் குறைத்து லிப்பிட் பெராக்சிடேஷனைப் பெருக்குகிறது. ஃபெரோப்டோசிஸைப் புரிந்துகொள்வது என்பது COVID-19 நுரையீரல் பாதிப்பை எதிர்த்துப் போராடுவதற்கான நுண்ணறிவுகளை வழங்கும்.

5. மிருகவாணி தேசியப்பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தெலுங்கானா

ஆ. மகாராஷ்டிரா

இ. இராஜஸ்தான்

ஈ. கேரளா

 • சில்கூரில் அமைந்துள்ள மிருகவாணி தேசியப்பூங்காவின் பரப்பளவு 80 ஹெக்டேர் அளவுக்குக் குறைந்துள்ளதாக தெலுங்கானா வனத்துறை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்குத் தகவல் அளித்துள்ளது. சுற்றுச்சூழல் வளம்மிகுந்த மண்டலத்தின் வழியாக கூடுதல் உயரழுத்த மின்னிணைப்புகள் செல்வது தொடர்பான வழக்கை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரித்து வந்தது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அமைந்துள்ள மிருகவாணி தேசியப்பூங்கா, தேக்கு, மூங்கில் மற்றும் சந்தனம் உள்ளிட்ட வெப்பமண்டல இலையுதிர் காடுகளைக் கொண்டுள்ளது. அங்குள்ள விலங்கினங்களில் புள்ளிமான், இந்திய முயல், காட்டுப்பூனை, புனுகுப்பூனை, இந்திய சாரைப் பாம்பு, கண்ணாடி விரியன், சிறுத்தை மற்றும் பூக்கொத்திப்பறவை ஆகியவை அடங்கும்.

6. அண்மையில், தூர்தர்ஷன் தனது DD கிசான் தொலைக்காட்சி அலைவரிசையில் அறிமுகப்படுத்திய செயற்கை நுண்ணறிவு (AI) அறிவிப்பாளர்களின் பெயர் என்ன?

அ. காவேரி மற்றும் சரயு

ஆ. விகாஸ் மற்றும் ஃபசல்

இ. கிருஷ் மற்றும் பூமி

ஈ. கங்கா மற்றும் விருக்ஷ்

 • இந்தியாவின் பொது ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷனின் DD கிசான் தொலைக்காட்சி அலைவரிசை கிருஷ் மற்றும் பூமி என இரு AI அறிவிப்பாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஐம்பது மொழிகளில் ஒளிபரப்பப்படும் இந்தத் தொலைக்காட்சி அலைவரிசை, வேளாண் சார்ந்த அறிவிப்புகள், வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் ஆராய்ச்சி செய்திகளுக்கு AI அறிவிப்பாளர்களைப் பயன்படுத்துகிறது. மனிதர்களை ஒத்திருக்கும் இக்கணினி அடிப்படையில் இயங்கும் அறிவிப்பாளர்கள் சோர்வின்றி தொடர்ந்து இயங்கவல்லன. 2018இல் AI செய்தி அறிவிப்பாளர்களை சீனா அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, 2023இல் ஆஜ் தக்கில் இந்தியா AI அறிவிப்பாளர்களை அறிமுகப்படுத்தியது.

7. அண்மையில், ‘அமல் குளூனி பெண்கள் அதிகாரமளித்தல்’ விருதைப் பெற்ற ஆர்த்தி, உத்தர பிரதேச மாநிலத்தின் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்?

அ. உன்னாவ்

ஆ. ரேபரேலி

இ. பஹ்ரைச்

ஈ. சஹரன்பூர்

 • உத்தர பிரதேச மாநிலத்தின் பஹ்ரைச் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது இ-ரிக்ஷா ஓட்டுநரான ஆர்த்தி, பக்கிங்ஹாம் அரண்மனையில் அரசர் மூன்றாம் சார்லஸிடம் இருந்து அமல் குளூனி மகளிர் அதிகாரமளிக்கும் விருதைப் பெற்றார். உத்தர பிரதேச மாநிலத்தின், ‘மிஷன் சக்தி’ திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட தனது பிங்க் இ-ரிக்ஷாவில் அவர் விருது பெற வந்தார். இளவரசர் அறக்கட்டளையின் நிதியுதவியுடன் வழங்கப்படும் இந்த விருது, சவால்களுக்கு மத்தியிலும் சாதிக்கும் இளம்பெண்களின் சாதனைகளை அங்கீகரிக்கிறது.

8. உலக எஃகு சங்கத்தின் கூற்றுப்படி, 2024 ஏப்ரலில், உற்பத்தியில் வளர்ச்சியைக் கண்ட உலகின் முன்னணி எஃகு உற்பத்தி செய்யும் நாடுகளில் இடம்பெற்ற ஒரே நாடு எது?

அ. சீனா

ஆ. இந்தியா

இ. ரஷ்யா

ஈ. ஜப்பான்

 • 2024 ஏப்ரலில் வளர்ச்சியை வெளிப்படுத்தும் முதல் ஐந்து கச்சா எஃகு உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா தனித்து நிற்கிறது; கடந்த 2023 ஏப்ரலுடன் ஒப்பிடும்போது 3.9% அதிகரித்து 12.1 மில்லியன் டன்களை இந்தியா எட்டியுள்ளது. இந்த வளர்ச்சியானது உலகின் மொத்த எஃகு உற்பத்தியான 155.7 மில்லியன் டன்கள் (5.0%) என்பதுடன் வேறுபடுகிறது. மிகப்பெரிய உற்பத்தியாளரான சீனா, 7.2% சரிவைச்சந்தித்தது; அதே நேரத்தில் ஜப்பான், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகியவையும் சரிவை எதிர்கொண்டுள்ளன.

9. அண்மையில், மேற்கு வங்கத்தில், ‘மாசகற்றுதல் குறித்த கருத்தரங்கு & ஒத்திகைப் பயிற்சி’ நடத்திய ஆயுதப்படை எது?

அ. இந்தியக் கடலோரக் காவல்படை

ஆ. இந்திய வான்படை

இ. இந்தியக் கடற்படை

ஈ. தேசிய பாதுகாப்புப் படை

 • 2024 மே 22-23 தேதிகளில் ஹால்டியாவில் உள்ள கடலோரக் காவல்படை மாவட்ட எண்.08 (மேற்கு வங்கம்) தலைமையகத்தில், ‘மாசகற்றுதல் குறித்த கருத்தரங்கு மற்றும் ஒத்திகைப் பயிற்சி’க்கு இந்தியக் கடலோரக் காவல் படை ஏற்பாடு செய்திருந்தது. கடலில் எண்ணெய்க் கசிவுகளை எதிர்த்துப் போராடுவதில் உள்ள முக்கியமான சவால்களை எதிர்கொள்ள எண்ணெயைக் கையாளும் நிறுவனங்களையும் பல்வேறு நிறுவனங்களின் முக்கியப் பங்குதாரர்களையும் இந்நிகழ்வு ஒன்று திரட்டியது.
 • இந்த நிகழ்வில் இடம்பெற்ற மாசு அகற்றும் அதிநவீன உபகரணங்களின் செயல்விளக்கம் என்பது சுற்றுச்சூழல் நெருக்கடிகளுக்குத் தங்களின் தயார்நிலையை மேலும் மேம்படுத்துவதற்கு பங்கேற்பாளர்களுக்கு நடைமுறை அனுபவத்தை வழங்கியது. தேசிய எண்ணெய்க் கசிவுப் பேரிடர் தடுப்புத் திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதன் முக்கியத்துவத்தை கடலோரக்காவல்படை மாவட்டம் எண்.08இன் தலைமையகத் தளபதி வலியுறுத்தினார். கடல் வளங்களைப் பாதுகாப்பதற்கான கூட்டுப் பொறுப்பையும் அவர் சுட்டிக்காட்டினார்.

10. அண்மையில் துயரத்தை ஏற்படுத்திய டோம்பிவிலி கொதிகலன் வெடிப்பு சம்பவம் நடந்த மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. மகாராஷ்டிரா

ஈ. குஜராத்

 • மகாராட்டிர மாநிலத்தின் டோம்பிவிலி வேதி நிறுவனத்தில் கொதிகலன் வெடித்ததில் 8 பேர் இறந்தனர் மற்றும் 60 பேர் காயமடைந்தனர். கடந்த பத்தாண்டுகளில், இந்தியாவில் 130 குறிப்பிடத்தக்க வேதித்தொழிற்துறை சார்ந்த விபத்துக்கள் பதிவாகியுள்ளன; இதன் விளைவாக 259 பேர் இறந்துள்ளனர் மற்றும் 563 பேர் காயமடைந்தனர்.
 • போபால் விஷவாயு நிகழ்வு (1984), விசாகப்பட்டினம் விஷவாயுக்கசிவு (2020), சென்னை எண்ணெய்க்கசிவு (2017), மற்றும் நெய்வேலி கொதிகலன் வெடிப்பு (2020) ஆகியவை குறிப்பிடத்தக்க சம்பவங்களாகும். மோசமான பாதுகாப்பு விதிமுறைகள், பயிற்சியின்மை, உபகரணங்கள் செயலிழப்பு மற்றும் போதுமான அவசரகால தயார்நிலை இல்லை ஆகியவை இதுபோன்ற துயர நிகழ்வுகளுக்கான முக்கிய காரணிகளாக உள்ளன.

11. அண்மையில், ‘விஜயக்’ திட்டத்தின்கீழ், லடாக்கில், ‘REJUPAVE’ என்ற சாலை கட்டுமான தொழில்நுட்பத்தை வெற்றிகரமாகப் பயன்படுத்திய அமைப்பு எது?

அ. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI)

ஆ. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO)

இ. எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு (BRO)

ஈ. இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO)

 • லடாக்கில், எல்லைப்புறச் சாலைகள் அமைப்பின் திட்டமான விஜயக், CSIR-CRRIஆல் உருவாக்கப்பட்ட, ‘REJUPAVE’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உலகின் இரண்டாவது குளிரான மக்கள் வசிக்கும் இடமான டிராஸில் உள்ள Drass-Umbala-Sankoo வழித்தடத்தில் உயரமான நிலக்கீல் சாலைகளை அமைத்துள்ளது. உயிர்க்கூளம் மற்றும் புதுப்பிக்கத்தக்க வளங்களிலிருந்து தயாரிக்கப்படுகிற ‘REJUPAVE’, வெப்பத்தின் தேவைகளை குறைக்கிறது மற்றும் போக்குவரத்தின்போது வெப்பநிலையை பராமரிக்கிறது.

12. அண்மையில், உலகின் முதல் 100% மக்கும் பேனா அறிமுகப்படுத்தப்பட்ட நாடு எது?

அ. இந்தியா

ஆ. நேபாளம்

இ. மியான்மர்

ஈ. பூடான்

 • ஆண்டுக்கு 50 பில்லியன் பந்துமுனை பேனாக்கள் குப்பைக்குச் செல்கின்றன; அவை 95% நெகிழியால் ஆனவை. புது தில்லியைச் சேர்ந்த சௌரப் H மேத்தா உலகின் முதல் 100% மக்கும் பேனா ஒன்றை உருவாக்கியுள்ளார். bioQ என்ற நிறுவனத்தை நிறுவிய அவர், சுற்றுச்சூழல் தோழமை மிக்க எழுதுபொருட்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தினார்; மேலும் பேனாக்களில் நெகிழி சேர்ப்பை அகற்றுவதற்காக NOTE (No Offence to Earth) தொடங்கினார். NOTE பேனாவில் மறுசுழற்சி செய்யப்பட்ட தாள்கள், நச்சுத்தன்மையற்ற மை மற்றும் நீக்கக்கூடிய உலோக முனை ஆகியவை இடம்பெற்றுள்ளன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தகைசால் தமிழர் விருதை இனி தமிழ்வளர்ச்சித்துறை வழங்கும்: அரசு அறிவிப்பு

‘தகைசால் தமிழர்’ விருதை இனி தமிழ்வளர்ச்சித்துறை வழங்கும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, இந்த விருதை வழங்கும் பணி பொதுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது.

தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மாநில அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்தி:

தகைசால் தமிழர்: மாநிலத்தின் பெருமையையும், தமிழையும் போற்றி வருவோரில், ஒருவருக்கு ஆண்டுதோறும் ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஈராண்டுகளாக பொதுத்துறையின் சார்பில் அளிக்கப்பட்டு வந்த இந்த விருதானது, நிகழாண்டு முதல் தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் வழங்கப்படவுள்ளது.

ஜெர்மனியிலுள்ள கொலோன் பல்கலை, ஹூஸ்டன் பல்கலை, புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை, ஒடிஸா மாநிலம், புவனேசுவரம் ஆகிய இடங்களில் தமிழ்வளர்ச்சிக்கான மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திருக்குறளை மாணவர்களும் அறிந்திட வசதியாக, குறள் முற்றோதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த மூன்றாண்டுகளில் குறளை முற்றோதல் செய்த 451 மாணவர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.

மின்னூல்களாக பெரியார் நூல்கள்:

பெரியாரின் படைப்புகளை மின்னூல்களை மாற்ற அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 21 இந்திய மற்றும் உலக மொழிகளில் அச்சு மற்றும் மின்னூல் பதிப்புகளாகத் தயாரிக்க `5 கோடி நிதியை அரசு ஒதுக்கியுள்ளது.

தமிழ்மொழி தொடர்பாக அயல்நாட்டறிஞர்கள் எழுதிய நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. இராபர்ட் கால்டுவெல் எழுதிய நூலும், கிரேக்க காப்பியங்களான ஓமரின் இலியட், ஒடிசி போன்ற நூல்களும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

செம்மொழி மாநாடு: இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, சென்னையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தமிழ்நாடரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில் தமிழ்நாடு தொடர்ந்து உடலுறுப்பு தானத்தில் முதலிடத்தில் உள்ளது. உறுப்புதானம் செய்வோரின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்று கடந்தாண்டு செப்.23ஆம் தேதி தமிழ்நாடு அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!