TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 29th May 2024

1. லீனியர் ஆக்சிலரேட்டர் (LINAC) சாதனத்தின் முதன்மைப் பயன்பாடு என்ன?

அ. காசநோயைக் கண்டறிய

. புற்றுநோயாளிகளுக்கு வெளிப்புற கதிர்வீச்சு சிகிச்சைகள் வழங்குவது

இ. வெப்ப அலைகளை அளவிடுவதற்கு

ஈ. மேற்கூறியவை எதுவுமில்லை

 • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இரண்டு முக்கியமான சுகாதார தொழில்நுட்பங்களான 1.5 டெஸ்லா MRI ஸ்கேனர் மற்றும் ஆறு MEV லீனியர் ஆக்சிலரேட்டர் ஆகியவற்றை மும்பை Society for Applied Microwave Electronics Engineering & Research (SAMEER) அமைப்புமூலம் செயல்படுத்துகிறது. இது திருவனந்தபுரம் மற்றும் கொல்கத்தாவில் உள்ள மேம்பட்ட கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையம் (C-DAC), பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான செயல்பாட்டு மையம் (IUAC) மற்றும் தயானந்த் சாகர் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து இது செயல்படுத்தப்படுகிறது.
 • MRI ஸ்கேனர் என்பது மென்மையான திசுக்களைக் காட்சிப்படுத்த பயன்படுத்தப்படும் ஊடுருவல் அல்லாத மருத்துவ இமேஜிங் சோதனையாகும். அதே நேரத்தில் லீனியர் முடுக்கி (LINAC) உயர் ஆற்றல் எக்ஸ்-கதிர்கள் அல்லது எலக்ட்ரான்களைப் பயன்படுத்தி புற்றுநோய் சிகிச்சைக்கு இது பயன்படுத்தப்படுகிறது. இதன் இறக்குமதியைக் குறைக்க தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் நிதி உதவியுடன் இது தொடர்பான திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

2. INS கில்டன் எந்த வகை நீர்மூழ்கிக் கப்பலைச் சேர்ந்தது?

அ. கமோர்டா வகுப்பு

ஆ. கல்வாரி வகுப்பு

இ. வகீர் வகுப்பு

ஈ. கரஞ்ச் வகுப்பு

 • மே.12 அன்று வியட்நாமின் கேம் ரான் விரிகுடா வந்தடைந்த INS கில்டன் கப்பலுக்கு வியட்நாம் கடற்படை வீரர்கள் மற்றும் இந்திய தூதரக அதிகாரிள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்திய கடற்படை மற்றும் வியட்நாம் கடற்படை இடையேயான கடல்சார் கூட்டாண்மை பயிற்சியுடன் இப்பயணம் நிறைவடையும்.
 • இப்பயிற்சி, சிறந்த நடைமுறைகளின் பரஸ்பர செயல்பாட்டு மற்றும் பரிமாற்றத்தை மேலும் மேம்படுத்தும். INS கில்டன் என்பது ஓர் உள்நாட்டு ASW கார்வெட்டாகும். இது இந்திய கடற்படையின் கடற்படை வடிவமைப்பு இயக்குநரகத்தால் வடிவமைக்கப்பட்டது மற்றும் கொல்கத்தாவின் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் எஞ்சினியர்ஸ் நிறுவனத்தால் கட்டப்பட்டது. INS கில்டன் நான்கு பி 28 நீர்மூழ்கி எதிர்ப்பு போர் (ASW) கார்வெட்டுகளில் மூன்றாவதாகும்.

3. ‘Oedocladium sahyadricum’ என்றால் என்ன?

அ. புரதம்

ஆ. பாசி

இ. வைரஸ்

ஈ. பாக்டீரியா

 • பத்தனம்திட்டை கத்தோலிக்க கல்லூரியைச் சேர்ந்த தாவரவியலாளர்கள் குழு, மேற்குத்தொடர்ச்சிமலையில் ‘Oedocladium sahyadricum’ என்ற புதிய பாசி இனத்தைக் கண்டுபிடித்தது. சயாத்ரி பகுதியின் பெயரால் பெயர் சூட்டப்பட்ட இந்தப் புதிய பாசி இனம், ஈரமான மண்ணில் பாய் போன்று படிந்து உருவாகிறது. வெல்வெட் பச்சை நிறத்தில் உள்ள இது, ​​முதிர்ச்சியடையும் போது மஞ்சள்-பச்சை நிறமாக மாறுகிறது.
 • இது மருத்துவம், விவசாயம் மற்றும் இயற்கை நிறமி உற்பத்தியில் சாத்தியமான பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. இது கேரளாவில் பதிவுசெய்யப்பட்ட ஓடோகிளாடியத்தின் முதல் இனமாகும்.

4. 2024 – உலக பசி நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Thriving Mothers, Thriving World

ஆ. Zero Hunger: A World without Hunger

இ. Leave No One Behind

ஈ. Unchain Our Food

 • உலக பசி தினம் ஆண்டுதோறும் மே 28 அன்று அனுசரிக்கப்படுகிறது; இது உலகளாவிய பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. “Thriving Mothers, Thriving World” என்பது இந்த நாளுக்கானக் கருப்பொருளாகும். உலகளவில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பெண்கள் மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். போர் மற்றும் காலநிலைமாற்றம்போன்ற பசியின் மூலகாரணங்களை எதிர்த்துப் போராடுவதற்கு நிலையான உணவு முறைகளை இந்த நாள் பரிந்துரைக்கிறது. இது ஊட்டச்சத்து குறைபாட்டின் விளைவுகளை வலியுறுத்துகிறது மற்றும் உலகளவில் மில்லியன் கணக்கானவர்களுக்கு சரியான ஊட்டச்சத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

5. சமீபத்தில், அணுசக்தி பாதுகாப்பு தொடர்பான சர்வதேச மாநாடு (ICONS-2024) எங்கு நடைபெற்றது?

அ. புது தில்லி

. வியன்னா

இ. வாஷிங்டன்

ஈ. தெஹ்ரான்

 • வியன்னாவில் நடைபெற்ற IAEAஇன் அணுசக்தி பாதுகாப்பு தொடர்பான சர்வதேச மாநாடு (ICONS) – 2024, அணுசக்தி கழிவுகள் தொடர்பான கவலைகளை எடுத்துரைத்தது. தற்போது, ​​145 நாடுகள் அணுசக்தி பொருட்களின் இழப்பு, திருட்டு அல்லது தவறாக கையாளப்பட்ட சம்பவங்களை IAEAக்கு தெரிவித்துள்ளன. கதிரியக்க பொருட்கள் மருத்துவம், கல்வி & தொழிற்துறைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. முக்கிய கவலை என்னவென்றால், தீவிரவாதிகள் இப்பொருட்களை, ‘கலப்பு வெடிகுண்டில்’ பயன்படுத்துகிறார்கள்; இது அணுகுண்டைவிட குறைவான ஆபத்தானது என்றாலும், நகர்ப்புறங்களில் பெரும் பீதியை ஏற்படுத்தும்.

6. ராஜாஜி புலிகள் காப்பகம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

அ. தமிழ்நாடு

ஆ. கர்நாடகா

இ. கேரளா

ஈ. உத்தரகாண்ட்

 • கார்பெட் புலிகள் காப்பகத்திலிருந்து ராஜாஜி புலிகள் காப்பகத்திற்கு மாற்றப்பட்ட பெண்புலி ஒன்று 4 குட்டிகளை ஈன்றுள்ளதாக தலைமை வனவிலங்கு காப்பாளர் தெரிவித்துள்ளார். 1983இல் நிறுவப்பட்ட ராஜாஜி தேசியப்பூங்கா, உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் அமைந்துள்ளது; இது ஹிமாச்சல பிரதேசம் மற்றும் ஹரியானாவில் உள்ள பிற புலிகளின் வாழ்விடங்களுக்கு ஒரு முக்கிய இணைப்பாகும். சுதந்திரப்போராட்ட வீரர் சி ராஜகோபாலாச்சாரியின் பெயரால் அழைக்கபடும் இந்தக் காப்பகம், 2015ஆம் ஆண்டில் இந்தியாவின் 48ஆவது புலிகள் காப்பகமாக ஆனது.

7. பூமியின் துருவங்களில் இருந்து இழந்த வெப்பத்தை அளவிடுவதற்கு எந்த விண்வெளி அமைப்பு சமீபத்தில் ஒரு சிறிய செயற்கைக்கோளை ஏவியுள்ளது?

அ. NASA

ஆ. ISRO

இ. JAXA

ஈ. CNSA

 • பூமியின் துருவங்களில் வெப்ப உமிழ்வுகளை ஆய்வுசெய்வதற்காக NASA சமீபத்தில் இரு காலநிலை செயற்கைக் கோள்களில் ஒன்றை விண்ணில் செலுத்தியது; அதற்கு PREFIRE (Polar Radiant Energy in the Far-InfraRed Experiment) என்று பெயர். பூமியின் ஆற்றல் திட்டத்தைப் பகுப்பாய்வு செய்வதற்கு இந்தப் பணி முக்கியமானது; இது அதன் வெப்பநிலை மற்றும் காலநிலையை தீர்மானிக்கிறது. தற்போது, ​​ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகாவில் இருந்து வெளிப்படும் தொலைதூர அகச்சிவப்பு கதிர்வீச்சை அளவிட எந்த வழியும் நம்மிடையே கிடையாது; இது கிரகத்தின் ஆற்றல் சமநிலையைப் புரிந்துகொள்வதில் இடைவெளியை ஏற்படுத்துகிறது. இந்த இடைவெளியை நிவர்த்தி செய்யும் வகையில் இரண்டாவது செயற்கைக்கோள் விரைவில் ஏவப்படும்.

8. பிரவா வலைத்தளம் எந்த நிறுவனத்தால் தொடங்கப்பட்டது?

அ. RBI

ஆ. SBI

இ. NABARD

ஈ. SEBI

 • ரிசர்வ் வங்கி ஆளுநர் மூன்று முக்கிய முயற்சிகளை வெளியிட்டார்: பிரவா போர்டல், சில்லறை நேரடி திறன்பேசி செயலி மற்றும் ஒரு ஃபின்டெக் களஞ்சியம். பிரவா என்பது ரிசர்வ் வங்கியிடமிருந்து அங்கீகாரங்கள், உரிமங்கள் மற்றும் ஒழுங்குமுறை ஒப்புதல்களைப் பெறுவதற்கான பாதுகாப்பான இணைய அடிப்படையிலான தளம் ஆகும். ஆன்லைன் விண்ணப்ப சமர்ப்பிப்பு, நிலை கண்காணிப்பு, வினவல் பதில்கள் மற்றும் சரியான நேரத்தில் முடிவுகள் ஆகியவை அதன் முக்கிய அம்சங்களில் அடங்கும். இது பல்வேறு கோரிக்கைகளுக்கான படிவம் உட்பட அறுபது (60) விண்ணப்பப்படிவங்களுடன், ஒழுங்குமுறை செயல்முறைகளின் செயல்திறனை மேம்படுத்துகிறது.

9. சமீபத்தில், 77ஆவது உலக சுகாதார சபையில் (WHA) குழு A இன் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. ராஜேஷ் பூஷன்

ஆ. அபூர்வ சந்திரா

இ. ஏ கே மிட்டல்

ஈ. அமித் அகர்வால்

 • மே 27 முதல் ஜூன்.01 வரை ஜெனீவாவில் நடைபெற்ற 77ஆவது உலக சுகாதார சபையில் குழு Aஇன் தலைவராக இந்திய மத்திய சுகாதார செயலாளர் அபூர்வ சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். குழு A உலகளாவிய சுகாதார பாதுகாப்பு, அவசரகால தயார்நிலை, நுண்ணுயிர் எதிர்ப்பு, காலநிலை மாற்றம் மற்றும் WHO நிதியுதவி போன்ற முக்கியமான சுகாதார தலைப்புகளில் உரையாற்றுகிறது. இந்தியாவின் COVID-19 மேலாண்மை & உலகளாவிய நலத்திற்கான அர்ப்பணிப்பை அபூர்வ சந்திரா எடுத்துரைத்தார்; இது “ஒரே உலகம், ஒரே குடும்பம்” தத்துவத்தை பிரதிபலிக்கிறது மற்றும் உடல்நலம் தொடர்பான நீடித்த வளர்ச்சி இலக்குகளை (SDGs) மேம்படுத்துகிறது.

10. இந்தியன் எண்ணெய் நிறுவனமானது (IOCL/IOC) சமீபத்தில் ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் செல் தொழில் நுட்பத்தை மேம்படுத்துவதற்காக இந்தியாவின் எந்த ஆயுதப்படையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது?

அ. இந்திய ராணுவம்

ஆ. இந்திய கடற்படை

இ. இந்திய விமானப்படை

ஈ. இந்திய கடலோர காவல்படை

 • இந்திய ராணுவம் மற்றும் இந்தியன் எண்ணெய் நிறுவனம் (IOCL) பசுமை மற்றும் நிலையான போக்குவரத்து தீர்வுகளை இணைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, ஐஓசிஎல் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா ஆகியோர் கலந்து கொண்டனர். ராணுவம் ஹைட்ரஜன் எரிபொருள் செல் பஸ்ஸைப் பெற்றது, இந்த ஒத்துழைப்பின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது புதுமைகளை வளர்ப்பது மற்றும் நிலையான போக்குவரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

11. சமீபத்தில், ‘ஆசிய கைவலு சாம்பியன்ஷிப் – 2024’ எங்கு நடைபெற்றது?

அ. புது தில்லி, இந்தியா

ஆ. அஸ்தானா, கஜகஸ்தான்

இ. தாஷ்கண்ட், உஸ்பெகிஸ்தான்

ஈ. பெய்ஜிங், சீனா

 • உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நடந்த ஆசிய கைவலு சாம்பியன்ஷிப்பில் இந்திய கைவலு வீரர்கள் ஏழு பதக்கங்களை வென்றனர்: ஒரு தங்கம் மற்றும் ஆறு வெண்கலம். ஸ்ரீமத் ஜா இடது கை பாரா பிரிவில் இந்தியாவின் ஒரே தங்கத்தையும் வலது கை பாரா பிரிவில் வெண்கலத்தையும் பெற்றார். லக்‌ஷமன் சிங் பண்டாரி மற்றும் சச்சின் கோயல் முறையே இரண்டு மற்றும் ஒரு வெண்கலப்பதக்கங்களை வென்றனர். இபி லோலன் பெண்கள் பிரிவில் 2 வெண்கலப்பதக்கங்களை வென்றார். PAFI தலைவர் ப்ரீத்தி ஜாங்கியானி, அணியின் வெற்றியைப் பாராட்டினார்.

12. சமீபத்தில், எந்த இந்திய அமைதி காக்கும் வீரர், ‘2023ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகளின் ராணுவ பாலின ஆதரவாளர்’ விருதைப் பெற்றார்?

அ. லக்ஷ்மி சேகல்

ஆ. ராதிகா சென்

இ. சோபியா குரேஷி

ஈ. பிரியா ஜிங்கம்

 • காங்கோ மக்களாட்சிக் குடியரசில் உள்ள இந்திய அமைதிக் காவலரான மேஜர் ராதிகா சென், கடந்த 2023ஆம் ஆண்டிற்கான ஐநாஇன் இராணுவ பாலின ஆதரவாளர் விருதைப் பெற்றார். MONUSCO உடன் பணியாற்றிய அவர், என்கேஜ் படைப்பிரிவுக்குத் தலைமைதாங்கினார். சமூக எச்சரிக்கை வலையமைப்புகளை நிறுவிய அவர், கலப்பு-பாலின ரோந்துகளை நடத்தினார். அவரது முயற்சிகளில் உள்ளூர் மக்களுக்கு கல்வி மற்றும் பயிற்சி வழங்குதல், பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் பாதுகாப்பான, உள்ளடக்கிய சூழலை வளர்ப்பது ஆகியவை அடங்கும். அவரது சேவை மார்ச் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை நீடித்தது. 2016இல் நிறுவப்பட்ட இந்த விருது, பாலின முன்னோக்குகளை ஒருங்கிணைக்கும் அமைதி காக்கும் வீரர்களை கௌரவிக்கிறது. 2019இல் தெற்கு சூடானில் பணியாற்றிய மேஜர் சுமன் கவானிக்குப் பிறகு இவ்விருதைப் பெறும் இரண்டாவது இந்தியர் மேஜர் சென் ஆவார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. நிலச்சரிவால் பப்புவா நியூ கினியாவில் 2,000 பேர் பலி! -இந்தியா 10 லட்சம் டாலர் நிதியுதவி.

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இயற்கைப்பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள பப்புவா நியூ கினியாவிற்கு உதவும் பொருட்டு, இந்தியா சார்பில் நிவாரண நிதியாக, $1 மில்லியன் டாலர் நிதியுதவி உடனடியாக வழங்கப்படுவதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாகவும், இந்திய-பசிபிக் தீவுகள் ஒருங்கிணைப்புக் கூட்டமைப்பின் உறுப்பினராக உள்ள பப்புவா நியூ கினியாவில் கடந்த 2018ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கம், அதனைத் தொடர்ந்து, கடந்த 2019, 2023ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு ஆகிய இயற்கைப் பேரிடர் காலத்தில் அந்நாட்டுக்கு தேவையான உதவிகளை இந்தியா வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

2. பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்.

ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளான ஸ்பெயின், நார்வே, அயர்லாந்து ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அதிகாரபூர்வமாக அங்கீகரித்தன. பாலஸ்தீனத்தை தனி நாடாக கடந்த 1988ஆம் ஆண்டில் அங்கீகரித்த உலகின் முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது நினைவுகூரத்தக்கது.

3. கோயம்புத்தூரில் இரண்டு நாள் இராணுவ தளவாடக்கண்காட்சி தொடக்கம்.

இந்திய பாதுகாப்புத் துறையுடன் கொடிசியா ராணுவ புத்தாக்கம் மற்றும் அடல் அடைவு மையம், தரைப்படை, வான் படை, கப்பல் படை, NITI ஆயோக், தொழிற்துறை, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் ஆகியவை இணைந்து, இந்திய ராணுவத்தின் தென்னிந்தியப் பிரிவின்கீழ், இரண்டு நாள் நடைபெறும் இராணுவ தளவாடக்கண்காட்சி கோயம்புத்தூரில் தொடங்கியது.

4. கலைஞரின் கனவு இல்லம்: வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு.

ஒரு வீட்டுக்கு `3.10 லட்சம் என்ற அளவில் தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் கான்கீரிட் வீடுகள் கட்டும் திட்டமே, கலைஞரின் கனவு இல்லம் திட்டமாகும். இத்திட்டத்துக்கு `3,100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கான வழிகாட்டி நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் நோக்கம்: குடிசைகளில் வசித்து வரும் அனைத்து மக்களுக்கும் புதிதாக சிமெண்ட் கூரைகொண்ட வீடுகள் கட்டித்தருவது.

குடிசைகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களே, இந்தத்திட்டத்தில் பயன்பெறத் தகுதியானவர்கள். சொந்தமான நிலம், பட்டா உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தின்கீழ் அதே இடத்தில் வீடுகட்டத் தகுதி படைத்தவர்கள். புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ள குடிசைக்குப் பதிலாக இத்திட்டத்தில் வீடு கட்ட இயலாது. அதேசமயம், புறம்போக்கு இடம் ஆட்சேபனை அற்றது என்று வருவாய்த்துறையால் முறைப்படுத்தப்பட்டால் ஏற்றுக்கொள்ளலாம்.

வீடுகள் அனைத்தும் குறைந்தது 360 சதுர அடியுடன் இருக்க வேண்டும். அதில், 300 சதுர அடி RCC கூரையும், 60 சதுர அடி தீப்பிடிக்காத பொருள்களைக் கொண்டும் பயனாளிகளின் விருப்பத்துக்கு ஏற்ப கட்டப்பட வேண்டும். கூரை / ஆஸ்பெடாஸ் சீட் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும் என்று வழிகாட்டி நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!