Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 30th & 31st March 2024

1. 2024 – உலக கபடி நாளன்று, 128 வீரர்களின் பங்கேற்புடன் கின்னஸ் உலக சாதனை படைத்து வரலாறு படைத்த நாடு எது?

அ. இந்தியா

ஆ. ஜப்பான்

இ. மலேசியா

ஈ. வங்காளதேசம்

 • உலக கபடி நாளான மார்ச்.24ஆம் தேதியன்று பஞ்ச்குலாவில் உள்ள தௌ தேவி லால் மைதானத்தில் 128 வீரர்கள் பங்கேற்புடன் கின்னஸ் சாதனை படைத்தது இந்தியா. ஹிப்சா மற்றும் ஹரியானா அரசு இடையே போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் உலகளவில் கபடியை ஊக்குவிப்பது இந்த நிகழ்வின் நோக்கமாகும். இவ்வரலாற்றுச் சாதனையானது கபடியின் வளர்ச்சி மற்றும் உலகளாவிய அதன் அங்கீகாரத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.

2. ICGS சமுத்ரா பஹேர்தார் என்பது என்ன வகையான கப்பல்?

அ. எண்ணெய் ஆய்வுக் கப்பல்

ஆ. மாசுக் கட்டுப்பாட்டுக் கப்பல்

இ. மீன்பிடிக் கப்பல்

ஈ. ஆராய்ச்சிக் கப்பல்

 • இந்தியக் கடலோரக் காவல்படையின் கப்பலான சமுத்ரா பஹேர்தாரை அண்மையில் வெளியுறவு அதிகாரிகள் மணிலா விரிகுடாவில் வைத்துப் பார்வையிட்டனர். ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ள ICGS சமுத்ரா பஹேர்தார், துணைத் தலைமை ஆய்வாளர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. பல ஆண்டுகளாக, சமுத்ரா பஹேர்தார் மாசு கண்காணிப்பு, நாடுகடந்த குற்றங்கள், கடல்சார் தேடல் மற்றும் மீட்பு உள்ளிட்ட பல்வேறு கடலோரக் காவல்படை நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.

3. தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்புடன் (NOTTO) தொடர்புடைய அமைச்சகம் எது?

அ. நீர்வள அமைச்சகம்

ஆ. நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம்

இ. சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம்

ஈ. மின்சார அமைச்சகம்

 • வாழும் மற்றும் காலஞ்சென்ற கொடையாளர்களின் விவரங்களைத் தொகுக்கத் தவறிய மாநிலங்கள்குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது. புது தில்லியில் அமைந்துள்ள NOTTO அமைப்பு, சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. மனித உடலுறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்றுச் சட்டம் (THOTA), 1994இன்கீழ் நிறுவப்பட்ட இந்த அமைப்பின் நோக்கம் உறுப்பு பெறுமுதல் மற்றும் விநியோகத்தை ஒழுங்கமைப்பதாகும். NOTTO ஒரு தேசிய பதிவேட்டை பராமரிக்கின்றது மற்றும் இறந்தோரிடமிருந்து பெறப்படும் உறுப்புதானம்மூலம் மாற்று அறுவை சிகிச்சைக்கான அணுகலை மேம்படுத்துவதற்காக தேசிய உறுப்புமாற்று திட்டத்தையும் (NOTP) அது நடத்தி வருகிறது.

4. அண்மையில், இந்திய தொல்லியல் துறை எத்தனை, ‘மத்திய பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களை’ நீக்க முடிவுசெய்துள்ளது?

அ. 16

ஆ. 17

இ. 18

ஈ. 20

 • தில்லியில், தற்போது காலிப்பூங்காவாக இருக்கும் பாரகாம்பா கல்லறை மறைந்து, சில தேய்மான எச்சங்களை மட்டுமே கொண்டுள்ளது. இந்தியா முழுவதும், “தேசிய முக்கியத்துவம்” இல்லாததால், 18 நினைவுச்சின்னங்களை அதன் பாதுகாக்கப்பட்ட இடங்களின் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை (ASI) திட்டமிட்டுள்ளது. இதில் உத்தரபிரதேசத்தில் 9, தில்லி, இராஜஸ்தான் மற்றும் ஹரியானாவில் தலா 2 உள்ளன. இந்தப் பட்டியலில் அருணாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களும் அடங்கும்.

5. அண்மையில் இந்திய மாஸ்டர்ஸ் தேசிய பூப்பந்து சாம்பியன்ஷிப்பில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்ற நஹீத் திவேச்சா சார்ந்த மாநிலம் எது?

அ. மகாராஷ்டிரா

ஆ. கர்நாடகா

இ குஜராத்

ஈ. ஆந்திர பிரதேசம்

 • பஞ்ச்குலாவில் நடைபெற்ற 2024 – இந்திய மாஸ்டர்ஸ் தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த நஹீத் திவேச்சா இரண்டு தங்கம் வென்றார். பாம்பே ஜிம்கானா மற்றும் ஷட்டில் கிரேஸ் அகாதெமியை பிரதிநிதித்துவப்படுத்திய அவர், ஹரியானாவின் சுனிதா சிங் பன்வாரை தோற்கடித்து பெண்கள் 50 ஒற்றையர் பட்டத்தை உறுதிசெய்தார். கூடுதலாக, திவேச்சா கிரண் மொகடேவுடன் கூட்டுசேர்ந்து கலப்பு இரட்டையர் 50 பட்டத்தையும் வென்றார்; முதல் தரவரிசையில் உள்ள கர்நாடக ஜோடியான பிரபாகரன் சுப்பையன் மற்றும் ஜெயஸ்ரீ இரகு ஆகியோரை வீழ்த்தி அவர் இந்தப் பட்டத்தை வென்றுள்ளார்.

6. ஒவ்வோர் ஆண்டும், ‘உலக நாடக நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. 26 மார்ச்

ஆ. 27 மார்ச்

இ. 28 மார்ச்

ஈ. 29 மார்ச்

 • 1961ஆம் ஆண்டு சர்வதேச நாடக நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட உலக நாடக நாள் ஆண்டுதோறும் மார்ச்.27ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும், ஒரு முக்கிய நாடக பிரமுகர் ஒரு செய்தியை வழங்குகிறார். கடந்த 1962இல் ஜீன் காக்டோ தொடக்க உரையை நிகழ்த்தினார். சர்வதேச நாடக நிறுவனம் 85 உலகளாவிய மையங்களைக் கொண்டுள்ளது. நாடக அரங்கு என்பது எழுத்தாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், ஆடை & அரங்கு வடிவமைப்பாளர்கள், ஒலி தயாரிப்பாளர்கள் மற்றும் நிகழ்ச்சி அழைப்பாளர்கள் உட்பட பல்வேறு பாத்திரங்களை உள்ளடக்கியதாகும்.

7. உலகளாவிய வர்த்தகத்தின் தற்போதைய நிலைகுறித்த அறிக்கையை வெளியிடுகிற அமைப்பு எது?

அ. UNCTAD

ஆ. ILO

இ. WHO

ஈ. WTO

 • வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் பேரவையானது (UNCTAD) உலகளாவிய வர்த்தகத்தின் தற்போதைய நிலைகுறித்த அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டில் இந்தியாவின் சேவைகள் ஏற்றுமதி 14% அதிகரித்துள்ள அதே நேரத்தில் பொருட்களின் ஏற்றுமதி 6% குறைந்துள்ளது. இது 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய வர்த்தகம் மீண்டும் எழும் என்று எதிர்பார்க்கிறது.
 • இருப்பினும், செங்கடல் & கருங்கடலில் நிலவும் கப்பல் போக்குவரத்து தடைகள்போன்ற போக்குவரத்துச் சவால்கள் செலவுகளை அதிகரிக்கலாம் மற்றும் விநியோகச் சங்கிலிகளை சீர்குலைக்கலாம் என்றும் இது தெரிவித்துள்ளது. 1964இல் நிறுவப்பட்ட UNCTAD, வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு விஷயங்களில் ஐநா பொதுச்சபையின் முதன்மை அதிகார மையமாகச் செயல்படுகிறது.

8. cVIGIL செயலி அல்லது விஜிலண்ட் சிட்டிசன் செயலியை உருவாக்கிய அமைப்பு எது?

அ. இந்தியாவின் தலைமைக் கட்டுப்பாட்டு மற்றும் தணிக்கையாளரகம்

ஆ. இந்திய தேர்தல் ஆணையம்

இ. நிதி ஆணையம்

ஈ. மத்திய தகவல் ஆணையம்

 • cVIGIL செயலி அல்லது விஜிலண்ட் சிட்டிசன் செயலி, தேர்தல்களின்போது குடிமக்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர்மீது புகாரளிப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் (ECI) உருவாக்கப்பட்டதாகும். திறன்பேசிகளைப் பயன்படுத்தி நிகழ்நேரத்தில் தவறான அரசியல் நடத்தை மற்றும் செலவுமீறல்களைப் புகாரளிக்க இந்தச் செயலி குடிமக்களை அனுமதிக்கிறது. இதன் முதன்மை நோக்கம் குடிமக்களுக்கும் தேர்தல் அமலாக்க அதிகாரிகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதாகும். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களில் குடிமக்கள் ஆற்றக்கூடிய பொறுப்பான பங்கை இது வலியுறுத்துகிறது.

9. அண்மையில், START – 2024 என்ற விண்வெளித்திட்டத்தைத் தொடங்கிய அமைப்பு எது?

அ. ISRO

ஆ. DRDO

இ. CSIR

ஈ. அறிவியல் & தொழில்நுட்பத் துறை

 • ISROஇன், ‘START – 2024’ என்ற திட்டம் என்பது இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை கற்பிக்கும் ஓர் இணையவழிப் பயிற்சித் திட்டம் ஆகும். இந்தத் திட்டம் 2024 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவுள்ளது. விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்குள் இளம் மாணவர்களை ஈர்ப்பதே இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும்.

10. ‘கல்ப சுவர்ணா’ என்பது கீழ்காணும் எந்தத் தோட்டப்பயிரின் புதிய குட்டை வகையாகும்?

அ. தென்னை

ஆ. தேக்கு மரம்

இ. மூங்கில்

ஈ. வாழைமரம்

 • உழவு மற்றும் உழவர்கள் நல அமைச்சகம், ‘கல்ப சுவர்ணா’ என்ற புதிய குட்டை தென்னை வகையையும், இரண்டு கோகோ கலப்பினங்களையும் CPCRIமூலம் அறிமுகப்படுத்தியது. ‘கல்ப சுவர்ணா’ தென்னை மற்றும் கொப்பரை உற்பத்திக்கு உகந்ததாகும்; இது நடவுசெய்த 30-36 மாதங்களுக்குப் பிறகு பூக்கும். இதன் காய்கள் பெரியதாகவும், நீள்வட்டமாகவும், பச்சை நிறமாகவும், 431 மிலி இளநீர் உள்ளடக்கம், 186 கிராம் கொப்பரை உள்ளடக்கம் மற்றும் 64.5% எண்ணெய் உள்ளடக்கத்தையும் கொண்டிருக்கும். ஆண்டுக்கு 108 முதல் 130 தேங்காய்கள் வரை இதில் இருந்து பெறமுடியும். கர்நாடகா மற்றும் கேரளாவிற்கு இது ஏற்றது.
 • கோகோ கலப்பினங்களான VTL CH I மற்றும் VTL CH II, அதிக கொழுப்பு மற்றும் ஊட்டச்சத்து உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளன. CH I ஆனது தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் ஊடுபயிராகப் பயிரிட ஏற்றது. மேலும் CH II ஆனது காயழுகலை எதிர்க்கும், அதிக மழைபெய்யும் பகுதிகளுக்கும் பொருந்தும் திறனுடையது.

11. அப்னசி நிகிடின் கடல்மலை அமைந்துள்ள கடல் எது?

அ. பசிபிக் பெருங்கடல்

ஆ. இந்தியப் பெருங்கடல்

இ. அட்லாண்டிக் பெருங்கடல்

ஈ. ஆர்க்டிக் பெருங்கடல்

 • இந்தியப்பெருங்கடலில் உள்ள அப்னசி நிகிடின் கடல்மலையை (AN Seamount) ஆய்வதற்கான உரிமைகளுக்காக இந்தியா சமீபத்தில் சர்வதேச கடற்படுகை ஆணையத்திடம் விண்ணப்பித்தது. AN கடல்மலை 400 கிமீ நீளமும் 150 கிமீ அகலமும் கொண்ட கோபால்ட், நிக்கல், மாங்கனீசு மற்றும் தாமிரம் நிறைந்த பரப்பாகும். இது இந்தியாவின் கடற்கரையிலிருந்து 3000 கிமீ தொலைவில் உள்ளது. இது கடல்மட்டத்திலிருந்து 1200 மீ உயரத்தில் உள்ளது. நடுக்கடல் முகடுகளுக்கு அருகே எரிமலைச்செயல்பாட்டின்மூலம் உருவாகும் கடல்மலைகள், பல்வேறு கடல்வாழ் உயிரினங்களுக்கான வளப்பகுதிகளாக அமைந்துள்ளன.

12. அண்மையில், G20இன் இரண்டாவது வேலைவாய்ப்பு பணிக்குழு கூட்டத்தை நடத்திய நாடு எது?

அ. பிரேஸில்

ஆ. சீனா

இ. தென்னாப்பிரிக்கா

ஈ. இந்தியா

 • பிரேஸில் தலைமையிலான இரண்டாவது வேலைவாய்ப்பு பணிக்குழு கூட்டம், இந்தியாவின் பங்கேற்புடன் பிரேசிலியாவில் கூடியது. இந்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை செயலர் சுமிதா தாவ்ரா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவுடன் இணைந்து இக்கூட்டத்திற்குத் தலைமைதாங்கினார். தரமான வேலைவாய்ப்பு, வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதில் தொழில்நுட்பத்தின் பங்கு மற்றும் பணியிடங்களில் பாலின சமத்துவம் ஆகிய தலைப்புகள் இந்தக் கூட்டத்தில் கவனம் பெற்றது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. முயற்சி திருவினையாக்கும்!

ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருக்கும் நீடித்த வளர்ச்சி இலக்குகளில் ஒன்று 2030க்குள் உலகளாவிய அளவில் காசநோய்க்கு முற்றுப்புள்ளி வைப்பது என்பது. ஆனால், கடந்த ஆண்டில் மட்டும் 25.55 இலட்சம் காசநோயாளிகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளார்கள். கடந்த 1962ஆம் ஆண்டில் தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டம் (NTEP) அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரையில் மிக அதிகமான காசநோய் பாதிப்புக்குள்ளானவர்கள் கடந்த ஆண்டில் கண்டறியப்பட்டிருக்கிறார்கள்.

மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2022இல் 16% குறைந்திருப்பதாகக் ‘காசநோய் அறிக்கை – 2024’ தெரிவிக்கிறது. காசநோய் மரண விகிதம் 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 18% குறைந்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் உலகளாவிய அளவில் 3,500 போ் காச நோயால் உயிரிழக்கிறார்கள்.

“நம்மால் காச நோயை ஒழிக்க முடியும்” என்பது இந்தாண்டு உலக காசநோய் ஒழிப்புக்கான கோஷம். உலகளாவிய நிலையில் 27% காசநோயாளிகள் இந்தியாவில்தான் இருக்கிறார்கள்.

கடந்த 1882இல் மருத்துவர் இராபர்ட் கோச் என்பவர் மைக்ரோ-பாக்டீரியம் டியூபர்குளோஸிஸ் (காசநோய்க்குக் காரணமான பாக்டீரியா) என்கிற பாதிப்பைக் கண்டுபிடித்தார். 1943இல் காசநோயைக் குணப்படுத்த, ‘செப்ட்ரோ மைஸின்’ கண்டுபிடிக்கப்பட்டது. 1950க்குப்பிறகு, ‘நுண்ணுயிர் எதிர்ப்பிகள்’ கண்டுபிடிக்கப்பட்டன. இப்போது அந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்குக் காசநோய் பாக்டீரியாக்கள் எதிர்ப்பு சக்தி பெற்றுவிட்ட நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!