TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 30th April 2024

1. 2024 – உலக கால்நடை மருத்துவ நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Value of Vaccination

. Veterinarians are essential health workers

இ. Promoting Diversity, Equity, and Inclusiveness in the Veterinary Profession

ஈ. Environmental protection for improving animal and human health

  • உலக கால்நடை மருத்துவ நாளானது ஆண்டுதோறும் உலகளவில் கால்நடை மருத்துவர்களின் பங்களிப்புகளைப் போற்றுகிறது. பொதுச் சுகாதாரம் மற்றும் விலங்கு நலனில் அவர்களின் பங்கை இந்நாள் வலியுறுத்துகிறது. ஏப்ரல் மாதத்தின் கடைசி சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்படும் உலக கால்நடை மருத்துவ நாள், விலங்குகள் மற்றும் மனித நலத்தை பராமரிப்பதில் கால்நடை மருத்துவர்களின் முக்கிய பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. 2024ஆம் ஆண்டில், ஏப்.27 அன்று கடைப்பிடிக்கப்பட்ட இந்த நாளுக்கானக் கருப்பொருள், “Veterinarians are essential health workers” என்பதாகும்.

2. அண்மையில், வில்வித்தை உலகக்கோப்பையில் ஆடவருக்கான ரீகர்வ் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நாடு எது?

அ. இந்தியா

ஆ. தென் கொரியா

இ. மலேசியா

ஈ. இந்தோனேசியா

  • வில்வித்தை உலகக்கோப்பை நிலை-1இல் தென்கொரியாவை தோற்கடித்து, 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஆடவர் ரீகர்வ் அணி வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கத்தை வென்றது. வெற்றி பெற்ற தீரஜ் பொம்மதேவரா, தருண்தீப் ராய் மற்றும் பிரவின் ஜாதவ் ஆகிய மூவரும் தென் கொரியாவின் உலக சாம்பியன் அணியை 5-1 என்ற கணக்கில் தோற்கடித்தனர். இதன்மூலம் வில்வித்தை உலகக்கோப்பையில் ஐந்து தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என மொத்தம் எட்டுப் பதக்கங்களை இந்தியா பெற்றது. 8 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் அடங்கிய 16 பேர்கொண்ட இந்திய அணி போட்டியில் பங்கேற்பதற்காக ஷாங்காய்க்குச் சென்றது.

3. பசுமை வகைப்பாட்டியல் என்றால் என்ன?

அ. சுற்றுச்சூழலுக்குகந்த முதலீடுகளை வகைப்படுத்துவதற்கான ஓர் அமைப்பு

ஆ. நிதி சொத்துக்களை அவற்றின் நிறத்தின் அடிப்படையில் வகைப்படுத்துவதற்கான ஒரு கட்டமைப்பு

இ. சுற்றுச்சூழல் திட்டங்கள் தொடர்பான அரசாங்க வரவு செலவுத்திட்டங்களை ஒழுங்கமைப்பதற்கான ஒரு முறை

ஈ. வெப்பமண்டல மழைக்காடுகளில் காணப்படும் ஒரு வகை தாவர இனம்

  • இந்திய ரிசர்வ் வங்கியும் நிதியமைச்சகமும் ASEANஇன் வளர்ந்து வரும் பசுமை வகைப்பாட்டிலிருந்து நிலையான பாதைகளுக்கு மாறுவதற்காக அதிலிருந்து வெளியேறலாம் எனக் கருதப்படுகிறது. பசுமை வகைப்பாட்டியல் என்பது சுற்றுச்சூழலுக்குகந்த முதலீடுகளை வரையறுக்கிறது; பசுமைக் கண்துடைப்பு செய்வதைத் தடுக்க உதவுகிறது. இது தட்பவெப்பநிலை தணிப்பு, தழுவல் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய நீடித்த நிலையான பொருளாதார நடவடிக்கைகளுக்கு நிதிகளை வழங்குகிறது.

4. இராஜா இரவிவர்மாவுடன் தொடர்புடைய துறை எது?

அ. விளையாட்டு

ஆ. மருத்துவம்

இ. இசை

ஈ. ஓவியம் மற்றும் கலை

  • இராஜா ரவிவர்மாவின், “இந்துலேகா” ஓவியத்தின் முதல் மெய்ப்பிரதி, அவரது 176ஆவது பிறந்தநாளில், கேரளாவில் உள்ள கிளிமானூர் அரண்மனையில் வெளியிடப்படவுள்ளது. 1848இல் பிறந்த இராஜா இரவிவர்மா, ஒரு புகழ்பெற்ற இந்திய ஓவியராவார்; இந்திய கருப்பொருள்களுடன் ஐரோப்பிய நுட்பங்களை இணைப்பதற்காக அவர் புகழப்பட்டார். இந்து புராணங்களை மேற்கத்திய கலவையுடன் கலந்து சுமார் 7,000 ஓவியங்களைப் புனைந்தார். ராஜா ரவிவர்மா அவர்களின் குறிப்பிடத்தக்க படைப்புகளில், ‘தமயந்தி அன்னத்துடன் பேசுதல்’ மற்றும் ‘துஷ்யந்தை தேடும் சகுந்தலா’ ஆகியவை அடங்கும்.

5. அண்மையில், 2024 – ‘முக்கிய கனிமங்கள் தொடர்பான உச்சிமாநாடு’ நடைபெற்ற இடம் எது?

அ. சென்னை

ஆ. புது தில்லி

இ. ஹைதராபாத்

ஈ. போபால்

  • நிலையான எரிசக்தி அறக்கட்டளை, எரிசக்தி, சுற்றுச்சூழல், நீர் கவுன்சில் மற்றும் நிலையான மேம்பாட்டு நிறுவனம் (IISD) ஆகியவற்றுடன் எரிசக்தி அமைச்சகம் இணைந்து, 2024 ஏப்.29-30 வரை இரு நாட்களுக்கு புது தில்லியில், “முக்கிய கனிமங்கள் உச்சிமாநாடு: பயன்கள் மற்றும் செயலாக்கத் திறன்களை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் உச்சிமாநாட்டை நடத்தின.
  • தொழிற்துறை பிரதிநிதிகள், புத்தொழில் நிறுவன பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு இந்திய மற்றும் சர்வதேச வல்லுநர்களை இந்த உச்சிமாநாடு ஒருங்கிணைத்தது. கனிம ஏல முன்னேற்றம், சுற்றுச்சூழல் ரீதியாக நீடித்த தீர்வுகளை மேம்படுத்துதல் போன்ற முக்கியமான பிரச்சினைகளை மையமாகக்கொண்ட கலந்துரையாடல் மற்றும் பயிலரங்குகள் இதில் நடைபெற்றது. கிளாக்கோனைட் (பொட்டாஷ்), லித்தியம், குரோமியம், பிளாட்டினம், கிராபைட், கிராபைட்டுடன் தொடர்புடைய டங்ஸ்டன், உள்ளிட்ட 8 முக்கிய கனிமங்கள் குறித்த தொழில்நுட்ப அமர்வுகள் இந்த உச்சிமாநாட்டில் இடம்பெற்றது.

6. அண்மையில், புத்தொழில் நிறுவனங்களுக்கான பெருநிறுவன ஆளுகை சாசனத்தை அறிமுகப்படுத்தியுள்ள வர்த்தக சங்கம் எது?

அ. இந்திய வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு (ITPO)

ஆ. இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு (CII)

இ. ASSOCHAM

ஈ. இந்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பு (FICCI)

  • இந்திய தொழிற்துறை கூட்டமைப்பானது (CII) வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மைபோன்ற கொள்கைகளை வலியுறுத்தி, புத்தொழில் நிறுவனங்களுக்கான பெருநிறுவன ஆளுகை சாசனத்தை வெளியிடவுள்ளது. நிலைப்புத் தன்மை மற்றும் வெற்றியை நோக்கி புத்தொழில் நிறுவனங்களை வழிநடத்தும் நோக்கில், இது பாரத்பே மற்றும் கோமெக்கானிக் போன்ற உயர்தர நிகழ்வுகளில் காணப்படும் நிர்வாகத் தோல்விகளுக்குத் தீர்வுகாண்கிறது. நிறுவனங்கள் சட்டம், 2013இன்கீழ் புத்தொழில் நிறுவனங்களுக்குப் பொருந்தும் இந்தப் புதிய சாசனம், பல்வேறு நிலைகளுக்கான வழிகாட்டுதல்களை கோடிட்டுக் காட்டுகிறது.

7. அண்மையில், “உடல்சார் தண்டனை முறைகளை ஒழிப்பதற்கான வழிகாட்டுதல்களை (GECP)” வெளியிட்ட மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. தெலுங்கானா

இ. கேரளா

ஈ. மேகாலயா

  • கல்வி உரிமைச்சட்டம், 2009இன்படி மாணாக்கர்க்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்காக பள்ளிகளில் உடல்சார் தண்டனை முறைகளை ஒழிப்பதற்கான வழிகாட்டுதல்களை மாண்புமிகு தமிழ்நாடு அரசு வெளியிட்டது. பள்ளி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர்கள் இணைந்து வெளியிட்ட இந்த வழிகாட்டல்கள், உடல் மற்றும் மன ரீதியான (பாகுபாடு) பாதிப்புகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சிறார் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் குறித்த விழிப்புணர்வும் இதில் அடங்கும். புகார்களை உடனடி நிவர்த்தி செய்தல் மற்றும் பள்ளிகளில் கண்காணிப்புக் குழுக்களை உருவாக்குதல் ஆகியவை நடவடிக்கைகளில் அடங்கும்.

8. அண்மையில், 2024 – ‘கோல்ட்மேன் சுற்றுச்சூழல் பரிசுக்குத்’ தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர் யார்?

அ. இராஜேந்திர சிங்

ஆ. துளசி கவுடா

இ. அலோக் சுக்லா

ஈ. இரமேஷ் அகர்வால்

  • சத்தீஸ்கர் மாநிலத்தின் சுற்றுச்சூழல் ஆர்வலரான அலோக் சுக்லாவுக்கு அவரது அடிமட்ட முயற்சிகளுக்காக 2024 – கோல்ட்மேன் சுற்றுச்சூழல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. “பசுமை நோபல் பரிசு” என்று அறியப்படும் இது, சத்தீஸ்கரின் சுற்றுச்சூழல் அமைப்பின் ஹஸ்தியோ அரந்த் காடுகளைப் பாதுகாப்பதற்காக அவராற்றிய பணியைப் போற்றுகிறது. நிலக்கரிச் சுரங்க அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட அலோக் சுக்லா, உள்ளூர் பழங்குடியினரை ஒன்றுதிரட்டி, 2022இல் 21 நிலக்கரிச்சுரங்கங்களின் ஏலத்தை இரத்துசெய்யுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தார். அவரது அமைப்பான, ‘ஹஸ்திய ஆரண்ய பச்சாவோ சங்கர்ஷ் சமிதி’, அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிசெய்தது.

9. INS விக்ராந்த் என்றால் என்ன?

அ. நீர்மூழ்கிக்கப்பல்

ஆ. விமானந்தாங்கிக்கப்பல்

இ. பீரங்கிகள்

ஈ. போர்க்கப்பல்கள்

  • இந்தியக் கடற்படை அண்மையில் அதன் இரண்டு விமானந்தாங்கிப்போர்க்கப்பல்களான INS விக்ரமாதித்யா மற்றும் INS விக்ராந்த் ஆகியவற்றின் இரட்டைத் தாங்கு செயல்பாடுகளை காட்சிப்படுத்தியது. இந்த விமானந்தாங்கிகளை இந்தியா இயக்குகிறது. INS விக்ராந்த் என்பது கடந்த 1960களிளிருந்து செயல்பாட்டில் உள்ள இங்கிலாந்தில் இருந்து வாங்கப்பட்ட முதல் விமானந்தாங்கிக்கப்பலாகும். INS விராட் என்பது இந்தியாவின் இரண்டாவது விமானந்தாங்கி ஆகும்; அதன் அசல் பெயர் HMS ஹெர்ம்ஸ் ஆகும். 2013இல் இந்தியக் கடற்படையில் சேர்ந்த INS விக்ரமாதித்யா என்பது இந்தியாவின் மூன்றாவது விமானந்தாங்கிக்கப்பலாகும்.

10. அண்மையில், இந்திய இமயமலை ஆற்றுப்படுகைகளின் நீர்ப்பிடிப்புகளில் பனிப்பாறை ஏரிகளின் விரிவாக்கம் குறித்த செயற்கைக்கோள் தரவு அடிப்படையிலான பகுப்பாய்வை வெளியிட்ட அமைப்பு எது?

அ. ISRO

ஆ. DRDO

இ. CSIR

ஈ. NDMA

  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது (ISRO) அண்மையில் இந்திய இமயமலை ஆற்றுப்படுகைகளின் நீர்ப்பிடிப்புகளில் பனிப்பாறை ஏரிகளின் விரிவாக்கம் குறித்த செயற்கைக்கோள் தரவு அடிப்படையிலான பகுப்பாய்வை வெளியிட்டது. இப்பகுப்பாய்வு ஏரிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் காட்டுவதற்காக 1984 முதல் 2023 வரையிலான நீண்டகால செயற்கைக்கோள் நிழற்படங்களைப் பயன்படுத்துகிறது.
  • ISROஇன் கூற்றுப்படி, 2016-17இல் அடையாளம் காணப்பட்ட 10 ஹெக்டேருக்கும் அதிகமான 2,431 ஏரிகளில் 676 ஏரிகள் 1984 முதல் கணிசமாக விரிவடைந்துள்ளன. பனிப்பாறை ஏரி விரிவாக்கத்தின் அபாயங்கள் மற்றும் அதன் உள்கட்டமைப்பு மற்றும் அத்தகைய ஏரிகளின்கீழ் உள்ள குடியிருப்புகளில் அவற்றின் தாக்கத்தை இந்தப் பகுப்பாய்வு எடுத்துக்காட்டுகிறது.

11. அண்மையில், ஓரினச்சேர்க்கை உறவுகளைக் குற்றமாக அறிவிக்கும் சட்டத்தை நிறைவேற்றிய நாடு எது?

அ. ஈரான்

ஆ. ஈராக்

இ. வியட்நாம்

ஈ. எகிப்து

  • ஈராக் நாடாளுமன்றம் அண்மையில் ஓரினச்சேர்க்கை உறவுகளை குற்றமாகக்கருதும் சட்டத்தை நிறைவேற்றியது; அத்தகைய செயல்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அந்நாடு அறிவித்துள்ளது. ஓரினச்சேர்க்கை அல்லது விபச்சாரத்தை ஊக்குவிப்பது குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு வழிவகுக்கும் என அந்நாடு எச்சரித்துள்ளது. கூடுதலாக, ஒருவரின் அசல் பாலினத்தை மாற்றுவது (அ) பெண்ணின் ஆடை அணிந்து கொள்வது போன்றவை 1-3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைக்கு வழிவகுக்கும். சமயஞ் சார்ந்த விழுமியங்களை நிலைநிறுத்தவும், தார்மீகச் சிதைவிலிருந்து ஈராக்கிய சமுதாயத்தைப் பாதுகாக்கவும் இந்தச் சட்டம் பழமைவாத ஷியா இசுலாமிய கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ளது.

12. அண்மையில், முதன்முறையாக மக்களவைத் தேர்தலில் வாக்களித்த புரூ பழங்குடியினம் சார்ந்த மாநிலம் எது?

அ. மிசோரம்

ஆ. திரிபுரா

இ. நாகாலாந்து

ஈ. கர்நாடகா

  • அண்மையில் நடந்தேறிய 2024 – மக்களவைத் தேர்தலில், வடகிழக்கு இந்திய மாநிலமான திரிபுராவைச் சேர்ந்த புரூ சமூகத்தினர், முதன்முறையாக வாக்களித்தனர். முதன்மையாக திரிபுரா, மிசோரம் மற்றும் அசாமில் வசிக்கும் அவர்கள், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுவாக உள்ளனர். இனரீதியாக இந்தோ-மங்கோலாய்டு இனத்தைச் சார்ந்த அவர்கள் ஆஸ்ட்ரோ-ஆசிய மொழியியல் குழுவைச் சேர்ந்தவர்களாவர்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. உதகமண்டலம், கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

COVID-19 காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட இ-பாஸ் நடைமுறையை மே.07 முதல் ஜூன்.30 வரை உதகமண்டலம், கொடைக்கானல் செல்பவர்களுக்கு அமல்படுத்த வேண்டும் என நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

2. பறவைக் காய்ச்சல்: தமிழ்நாட்டில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

கேரளத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு பரவி வருவதால், தமிழ்நாட்டில் வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

H5.N1 என்ற வகை பறவைக் காய்ச்சல், தமிழ்நாட்டிலும் சில இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பறவைக் காய்ச்சலுக்குள்ளான கோழிகள், பிற பறவையினங்களிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்றுபரவ வாய்ப்புள்ளது. அதன் கழிவுகளில் இருந்து மனிதர்களுக்கு எளிதில் பாதிப்பு பரவும். காய்ச்சல், தலைவலி, தசைப்பிடிப்பு, இருமல், மூச்சுத்திணறல் போன்றவை பறவைக் காய்ச்சலுக்கான அறிகுறிகளாகும்.

தனிநபர் சுகாதாரம் பேணுதல், கை கழுவுதல், பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க முகக்கவசம் அணிதல் இந்நோய்க்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக கூறப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!