Tnpsc Current Affairs in Tamil – 6th & 7th February 2024
1. டார்லிபாலி அனல்மின் நிலையம் அமைந்துள்ள மாநிலம் எது?
அ. ஒடிசா
ஆ. குஜராத்
இ. கர்நாடகா
ஈ. மத்திய பிரதேசம்
- பிரதமர் நரேந்திர மோதி, NTPC நிறுவனத்தின் டார்லிபாலி அனல்மின் நிலையம் (1,600 MW), ரூர்கேலா PP-II விரிவாக்கத்திட்டம் (250 MW) ஆகியவற்றைத் திறந்துவைத்தார். மேலும், ஒடிஸா மாநிலத்தில், `28,978 கோடி மதிப்பீடுகொண்ட தல்ச்சர் 2×660 MW உற்பத்தித்திறன் அலகிற்கான அடிக்கல்லையும் நாட்டினார்.
- டார்லிபாலி நிலையமானது நாட்டின் பல்வேறு மாநிலங்களுடன் மின்விநியோக ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது. எஃகு ஆலைக்கு மின்சாரம் வழங்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது ரூர்கேலா திட்டம். அதேநேரம் தல்ச்சரின் 660 MW உற்பத்தி அலகு ஒடிஸா மாநிலத்திற்கு 50% மின்சாரத்தையும் தமிழ்நாடு, குஜராத் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களுக்கு மீதமுள்ள 50% மின்சாரத்தையும் பகிர்ந்து வழங்கும்.
2. ‘மின்சாரம் – 2024’ என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
அ. பன்னாட்டு எரிசக்தி முகமை
ஆ. பன்னாட்டு மேம்பாட்டு சங்கம்
இ. பொருளாதார வளர்ச்சிக்கான அமைப்பு
ஈ. உலக வங்கி
- இந்தியாவின் எரிசக்தி எதிர்காலம் பற்றிய பன்னாட்டு எரிசக்தி முகமையின், ‘மின்சாரம்-2024’ அறிக்கையானது நிலையான நிலக்கரி சார்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் எழுச்சி (மொத்த திறனில் 44%) மற்றும் அணுசக்தியின் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி ஆகிய முக்கிய போக்குகளை வெளிப்படுத்தியது. இந்தியாவின் நிகர சுழிய இலக்கு ஆண்டாக 2070 இருந்தபோதிலும், 2026ஆம் ஆண்டில் இந்தியாவின் 68% மின்சாரத் தேவையை நிலக்கரியே பூர்த்திசெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
- புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தி 2023இல் 21%ஆக நிலைபெறுகிறது. மேலும் மாறிவரும் வானிலை காரணமாக நீர் மின்னுற்பத்தி 15% என்ற தேக்கநிலையை எதிர்கொள்கிறது. இந்தியா, 2032ஆம் ஆண்டளவில் அணுவாற்றல் திறனை மும்மடங்காக உயர்த்துவதை இலக்காகக் கொண்டுள்ளது.
3. 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்ட மொத்த செலவு எவ்வளவு?
அ. ரூ.47.66 இலட்சம் கோடி
ஆ. ரூ.33.56 இலட்சம் கோடி
இ. ரூ.48.20 இலட்சம் கோடி
ஈ. ரூ.45.15 இலட்சம் கோடி
- 2024-25 நிதியாண்டுக்கான அரசாங்கத்தின் வரவுசெலவுத்திட்டம் `47, 65,768 கோடி (47.66 இலட்சம் கோடி) எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது திருத்தப்பட்ட 2023-24 நிதியாண்டுக்கான மதிப்பீட்டிலிருந்து 6% உயர்வைக் குறிக்கிறது. எதிர்பார்க்கப்படும் வளர்ச்சியில் வருவாய்ச் செலவினங்களில் 3.2 சதவீத அதிகரிப்பும், வரவிருக்கும் நிதி ஆண்டிற்கான நிதிசார் முன்னுரிமைகள் மற்றும் பொருளாதார உத்திகளைப் பிரதிபலிக்கும் மூலதனச்செலவில் குறிப்பிடத்தக்க 16.9 சதவீத அதிகரிப்பும் இதில் அடங்கும்.
4. அண்மையில், ‘தேசிய ஆரோக்கிய கண்காட்சி’ நடைபெற்ற இடம் எது?
அ. காந்தி நகரம்
ஆ. புது தில்லி
இ. சண்டிகர்
ஈ. ஜெய்ப்பூர்
- 2024 பிப்.01-04 வரை புதுதில்லியில் ஆயுஷ் அமைச்சகத்தின் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய ஆரோக்கிய கண்காட்சி ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தியாவின் வளமான மருத்துவ மரபுகளின் ஆற்றல்மிக்க ஒருங்கிணைப்பாக அமைந்தது.
- இது பாரம்பரிய மருத்துவ முறையைக் கொண்டாடுவதற்கும் காட்சிப்படுத்துவதற்கும், முழுமையான நல்வாழ்வை வலியுறுத்துவதற்கும் ஒரு தளமாக அமைந்தது. இந்நிகழ்வில் நலம்குறித்த பயிலரங்குகள் மற்றும் கருத்தரங்குகள், ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி கண்காட்சிகள், இலவச சுகாதார ஆலோசனைகள், கலாச்சார நிகழ்ச்சிகள்போன்ற முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன.
5. 2024 – உலக ஈரநிலங்கள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
அ. Wetlands and Human Wellbeing
ஆ. Wetlands for a Sustainable Urban Future
இ. Wetlands and Climate Change
ஈ. Wetlands and Water
- நடப்பு 2024ஆம் ஆண்டின் உலக ஈரநிலங்கள் நாளுக்கானக் கருப்பொருள், “Wetlands and Human Wellbeing” என்பதாகும். ஈரநிலங்களும் மனித வாழ்வும் எவ்வாறு ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்பதையும், ஈர நிலங்களிலிருந்து மக்கள் எவ்வாறு வாழ்வாதாரம், உத்வேகம் மற்றும் நெகிழ்திறன் ஆகியவற்றைப் பெறுகிறார்கள் என்பதையும் இந்தக் கருப்பொருள் எடுத்துக்காட்டுகிறது. உலக ஈரநிலங்கள் நாள் ஒவ்வோர் ஆண்டும் பிப்.2ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. இது ஈரநிலங்களின் (சதுப்பு நிலங்கள்) நிலையான மேலாண்மை மற்றும் பாதுகாப்பை ஊக்குவிக்கும் ஒரு உலக நாளாகும்.
6. 2024-25 இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற்ற, ‘நீலப்பொருளாதாரம்-2.0’ என்ற சொல்லாடலைப் பின்வரும் எது சிறப்பாக விவரிக்கிறது?
அ. பெருங்கடல்கள், கடல்கள் மற்றும் கடற்கரைகள் தொடர்பான நிலையான வளர்ச்சி
ஆ. புதிய வேளாண் நடைமுறை முறைகளை வழங்குதல்
இ. நகர்ப்புற உட்கட்டமைப்பை மேம்படுத்துதல்
ஈ. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள்
- பெருங்கடல்கள், கடல்கள் மற்றும் கடற்கரைகள் தொடர்பான நிலையான வளர்ச்சியில் கவனஞ்செலுத்தும், ‘நீலப் பொருளாதாரம்-2.0’இன் முன்னேற்றத்திற்கு இடைக்கால பட்ஜெட் முன்னுரிமை அளிக்கிறது. ஓர் ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் கடலோர புனரமைப்பு, மீன்வளர்ப்பு மற்றும் கடல்வாழ் உயிரிகளை வளர்ப்பதற்கான திட்டங்கள் இதில் அடங்கும். ஐந்து ஒருங்கிணைந்த நீர்வளப் பூங்காக்களை அமைப்பது மற்றும் உற்பத்தித்திறன், ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காக பிரதமர் மத்ஸ்ய சம்பதா யோஜனாவை மேம்படுத்துவது ஆகியவை இத்திட்டங்களில் அடங்கும்.
- நீலப்பொருளாதாரம் என்பது உலக வங்கியால் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பட்ட வாழ்வாதாரத்திற்காக கடல் வளங்களின் நிலையான பயன்பாடு, கடற்சூழலமைப்பின் நலத்தைப் பாதுகாத்தல் என வரையறுக்கப்படுகிறது.
7. கோதுமை பயிரில் ஏற்படும், ‘கோதுமை எரிபந்த’ நோயானது, பின்வருவனவற்றில் எதனால் ஏற்படுகிறது?
அ. பூஞ்சை
ஆ. பாக்டீரியா
இ. புழுக்கள்
ஈ. தீ நுண்மம்
- எதிர்கால கோதுமை எரிபந்த (Wheat Blast disease) நோய்ப்பரவலை ஒப்புருவாக்கம் செய்துள்ள ஆராய்ச்சியாளர்கள், ‘Magnaporthe oryzae’ஆல் விரைவாக பரவும் பூஞ்சை நோயால் 2050ஆம் ஆண்டளவில் உலகளாவிய கோதுமை உற்பத்தி 13% குறையும் எனக் கணித்துள்ளனர். கோதுமை எரிபந்த நோயானது குறிப்பாக கோதுமை, பார்லி, காட்டுப்புல் மற்றும் அரிசி உள்ளிட்ட பல்வேறு புல்லினங்களை பாதிக்கிறது. இது பாதிக்கப்பட்ட விதைகள் மற்றும் வித்திகள்மூலம் பரவுகிறது. பூஞ்சைக்கொல்லிகளை எதிர்க்கும் திறன்கொண்ட இது வெளிரல், குறைந்த மகசூல் மற்றும் மோசமான விதை தரத்திற்கு காரணமாக அமைகிறது. இதை தடுக்கும் ஒரு தடுப்பு நடவடிக்கையாக பயிர்கள் அனைத்தும் சில சமயங்களில் எரியூட்டப்படுகின்றன.
8. ‘GHAR’ இணையதளத்தின் முதன்மை நோக்கம் என்ன?
அ. வரலாற்று நினைவுச்சின்னங்களின் மறுசீரமைப்பை கண்காணித்தல்
ஆ. வழிதவறிய குழந்தைகளை மீட்டு, அவர்கள் வீட்டில் சேர்ப்பதை டிஜிட்டல் முறையில் கண்காணித்தல்
இ. குழந்தைகளுக்குச் சுகாதார சேவைகளை வழங்குதல்
ஈ. வரவிருக்கும் பேரழிவுகள் பற்றிய நிகழ்நேர அறிவிப்புகளை வழங்குதல்
- தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தால் உருவாக்கப்பட்ட GHAR (Go Home and Re-UNite) இணையதளம், சிறார் நீதிச் சட்டத்தின்கீழ், வழிதவறிய குழந்தைகளை டிஜிட்டல் முறையில் கண்காணிக்கவும் அவர்களை அவர்களின் வீட்டுக்குக் கொண்டு சேர்ப்பதையும் எளிதாக்குகிறது. வழக்குகளைக் கண்காணிப்பதன் மூலமும், அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாற்றுவதன்மூலமும் இது குழந்தைகள்மீட்பை எளிதாக்குகிறது. குழந்தைகள் நலக்குழுக்கள், உதவி தேவைப்படும் குழந்தைகளைக் கண்டறிவதற்காக இந்த இணையதளத்தின் சரிபார்ப்புப் பட்டியலைப் பயன்படுத்துகின்றன.
9. ‘INS சந்தாயக்’ என்பது என்ன வகையான கப்பலாகும்?
அ. ஆய்வுக்கப்பல்
ஆ. போர்க்கப்பல்
இ. தாக்கியழிப்பான்
ஈ. விமானந்தாங்கிக் கப்பல்
- இந்திய கடற்படை தனது அண்மைய ஆய்வுக்கப்பலான INS சந்தயாக்கை விசாகப்பட்டினத்தில் வைத்து பணியில் இணைத்தது. கொல்கத்தாவின் GRSEஆல் கட்டப்பட்ட இதன் முதன்மை நோக்கமானது துறைமுகத்தைச் சேர்தல் மற்றும் கலஇயக்க வழிகளுக்காக நீரியல் ஆய்வுகளை மேற்கொள்வதாகும். இந்தக் கப்பல் பிரத்தியேக பொருளாதார மண்டலம் மற்றும் கண்டத்திட்டு ஆகியவற்றை உள்ளடக்கி கடல்சார் தரவுகளை சேகரிக்கும்.
- வரையறுக்கப்பட்ட பாதுகாப்புத் திறன்களுடன், ஒரு மருத்துவமனைபோன்ற கப்பலாகவும் இது செயல்படும். அதி நவீன கருவிகள் பொருத்தப்பட்ட INS சந்தயாக், இரண்டு டீசல் எஞ்சின்கள்மூலம் இயக்கப்படுகிறது.
10. 2024 – உலக புற்றுநோய் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
அ. Close the Care Gap
ஆ. Not Beyond Us
இ. Together let’s do something
ஈ. We can I can
- உலக புற்றுநோய் நாளானது ஒவ்வோர் ஆண்டும் பிப்.4 அன்று புற்றுநோயின் உலகளாவிய சவாலை எடுத்துக் காட்டி கடைப்பிடிக்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டில் வரும் உலக புற்றுநோய் நாளுக்கானக் கருப்பொருள், “Close the Care Gap: Everyone Deserves Access to Cancer Care” என்பதாகும். இதன் துணைக் கருப்பொருளாக, “Together, we Challenge those in Power” என்பது உள்ளது.
11. சிக்னஸ் X-1 என்றால் என்ன?
அ. சிறுகோள்
ஆ கருந்துளை
இ. AI கருவி
ஈ. நீர்மூழ்கிக்கப்பல்
- இந்தியாவின் முதல் பன்னலைநீள வானியல் ஆய்வுத்திட்டமான ஆஸ்ட்ரோசாட், சிக்னஸ் (Cygnus) X-1 கருந்துளை அமைப்பின் X-கதிர் முனைவாக்கத்தை வெற்றிகரமாக அளந்துள்ளது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட, சிக்னஸ் X-1 என்பது நமது விண்மீன் மண்டலத்தின் முதல் உறுதிப்படுத்தப்பட்ட கருந்துளை அமைப்புகளில் ஒன்றாகும். இந்தக் கருந்துளையானது சூரியனின் நிறையை ஒப்பிட்டால் 20 மடங்கு அதிகமாகும். பூமி-சூரியன் தூரத்தைவிட 400 மடங்கு தொலைவில் இது அமைந்துள்ளது.
12. அண்மையில், இந்திய அரசின் முதன்மை நீர்வியலாளர் பொறுப்பை ஏற்றவர் யார்?
அ. ஆதிர் அரோரா
ஆ. கரம்பீர் சிங்
இ. லோச்சன் சிங் பதானியா
ஈ. சுனில் லம்பா
- துணை கடற்படை அதிகாரி லோச்சன் சிங் பதானியா இந்திய அரசாங்கத்தின் தலைமை நீர்வியலாளர் ஆவார். 1990ஆம் ஆண்டில் இந்தியக்கடற்படையின் நிர்வாகக்கிளையில் சேர்ந்த அவர் தர்ஷக் மற்றும் சந்தயாக் ஆகிய கப்பல்களுக்குத் தலைமைதாங்கினார். மேலும் இந்திய மற்றும் இந்தியப்பெருங்கடல் பரப்பு முழுவதும் பல்வேறு நீரியல் ஆய்வுகளை அவர் மேற்கொண்டுள்ளார்.
13. ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின்கீழ், வட இந்தியாவின் முதல் மனித DNA வங்கியை தொடங்கியுள்ள நிறுவனம் எது?
அ. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்
ஆ. ஐஐடி கான்பூர்
இ. தில்லி பல்கலைக்கழகம்
ஈ. ஐஐடி டெல்லி
- பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (BHU) ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின்கீழ் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தானியங்கி DNA பிரித்தெடுக்கும் இயந்திரங்கொண்ட வட இந்தியாவின் முதல் மனித DNA வங்கியைத் திறந்து வைத்தது. இது பல்வேறு உயிரியல் பொருட்களிலிருந்து DNAஐ திறம்பட பிரித்தெடுக்கிறது. இம்முன்னெடுப்பு 2023 மார்ச்சில் நடைபெற்ற தனிப்பயனாக்கப்பட்ட மருத்துவம் குறித்த மூன்று நாள் மாநாட்டிலிருந்து உருவானதாகும்.
14. 2024 – பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான ஜோதியை ஏந்தவுள்ளவர் யார்?
அ. சாய்னா நேவால்
ஆ. நீரஜ் சோப்ரா
இ. அபினவ் பிந்த்ரா
ஈ. P V சிந்து
- முன்னாள் துப்பாக்கிச் சுடுதல் வீரரும், ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் தங்கப்பதக்கம் வென்றவருமான அபினவ் பிந்த்ரா, 2024 பாரீஸ் ஒலிம்பிக்கிற்கான ஜோதியை ஏந்தவுள்ளார். 2024 ஒலிம்பிக்கிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 11,000 ஜோதி ஏந்திகளில் அபினவ் பிந்த்ராவும் ஒருவர். 2024 – ஒலிம்பிக் ஜோதி ஓட்டமானது பிரான்சில் 2024 மே.08 அன்று தொடங்கும். 68 நாட்கள் பிரான்ஸ் முழுவதும் பயணிக்கும் இந்தச் சுடர், இறுதியாக மார்சேயில் வந்துசேரும்.
15. ‘டிரைக்கோகுளோசம்’ என்றால் என்ன?
அ. பண்டைய நீர்ப்பாசன அமைப்பு
ஆ. கப்பல் எதிர்ப்பு எறிகணைகள்
இ. ஒரு வகை பூஞ்சை
ஈ. சிறுகோள்
- கேரள மாநிலத்தில், ‘Trichoglossum syamviswanathii’ என்ற ஒரு புதிய வகை பூஞ்சை இனத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ‘Trichoglossum’ என்பது அதன் இழைபோன்ற அமைப்பின் காரணமாக, ‘Hairy Earth Tongues’ என அழைக்கப்படுகின்றன. மட்கு ஊட்ட உயிரின் நடத்தையை வெளிப்படுத்துகிற இது தாவரத்தின் வேர்களில் அகவாழ் உயிரணமாகக் காணப்படுகிறது. ஐந்து கண்டங்களில் உள்ள வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல காடுகளில் பரவியுள்ள இந்தப் பூஞ்சைகள், அங்ககப் பொருட்களை சிதைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
16. காமாக்யா திவ்யலோக் பரியோஜனாவுடன் தொடர்புடைய மாநிலம் எது?
அ. மணிப்பூர்
ஆ. மிசோரம்
இ. அஸ்ஸாம்
ஈ. சிக்கிம்
- மத்திய அரசின் `498 கோடி மதிப்பிலான காமாக்யா திவ்யலோக் பரியோஜனா திட்டமானது, அஸ்ஸாம் மாநிலம் கௌகாத்தியில் உள்ள காமாக்யா திருக்கோவில் யாத்திரை அனுபவத்தை மேம்படுத்துவதை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. உட்கட்டமைப்பு மேம்பாடுகள், மேம்படுத்தப்பட்ட இணைப்புகள், திருக்கோவிலை அழகுபடுத்துதல் மற்றும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும். இந்த முயற்சி வடகிழக்கில் சுற்றுலாவை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாந்த்ரீக முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆலயம் நிலாச்சல் மலையின் மேல் அமைந்துள்ளது. அங்கு ஆண்டுதோறும் அம்புபச்சி மேளா நடத்தப்படுகிறது.
17. மசாலா மற்றும் சமையல்சார் மூலிகைகள் மீதான CODEX குழுமத்தின் 7ஆவது அமர்வு நடைபெற்ற இடம் எது?
அ. கொச்சி
ஆ. திருவனந்தபுரம்
இ. ஜெய்சால்மர்
ஈ. கட்ச்
- மசாலா மற்றும் சமையல்சார் மூலிகைகள் மீதான CODEX குழுமத்தின் 7ஆவது அமர்வு, ஜன.29 முதல் பிப்ரவரி.02 கொச்சியில் நடைபெற்றது. 2013ஆம் ஆண்டு CODEX அலிமென்டேரியஸ் ஆணையத்தின்கீழ் நிறுவப்பட்ட இந்தக் குழுமத்திற்கான அமர்வை மசாலா வாரியத்துடன் இணைந்து இந்தியா தொடர்ந்து நடத்திவருகிறது. இவ்வமைப்பின் செயலகமாகவும் இந்தியா செயல்படுகிறது. இந்த அமர்வில், சிறு ஏலக்காய், மஞ்சள், இளநீர், மசாலா, நட்சத்திர சோம்பு ஆகியவற்றின் தரம்குறித்து நிர்ணயம் செய்யப்பட்டது.
- FAO மற்றும் WHO ஆகியவற்றால் கூட்டாக நிறுவப்பட்ட CODEX அலிமென்டேரியஸ் ஆணையம் என்பது 189 உறுப்புநாடுகளைக் கொண்ட ஒரு பன்னாட்டு அமைப்பாகும். இந்த அமைப்பானது ஆண்டுதோறும் ஜெனிவா மற்றும் ரோமில் கூடுகிறது.
18. Gamma Ray Astronomy PeV EnergieS phase-3 (GRAPES-3) திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?
அ. அண்டக்கதிர்களை ஆராய்வது
ஆ. புறக்கோளை ஆராய்வது
இ. இருண்ட பருப்பொருளை ஆராய்வது
ஈ. பூமியின் இயற்கை வளங்களை அளவிடுதல்
- தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தின் உதகமண்டலத்தில் (ஊட்டி) அமைந்துள்ள GRAPES-3 பரிசோதனையகம் ஆனது, TATA அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தின்மூலம் செயல்படுத்தப்படுகிறது. அது அண்டக்கதிர் புரோட்டான் நிறமாலையில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பை மேற்கொண்டு 166 TeVஇல் ஒரு புதிய அம்சத்தை வெளிப்படுத்தியது. வளிப்பொழிவு உணர்கருவிகள் மற்றும் ஒரு பெரிய மியூயான் உணர்கருவிகள் பொருத்தப்பட்ட, GRAPES-3 ஆனது அண்டக்கதிர்களின் தோற்றம், முடுக்கம் மற்றும் பரவல், அவற்றின் ஆற்றல் நிறமாலையில், ‘Knee’ இருப்பது உள்ளிட்டவற்றை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது அதிக ஆற்றல்கொண்ட அண்டக்கதிர்களின் உற்பத்தி, பல-TeV γ-கதிர்களின் வானியல் மற்றும் பூமியில் சூரியனின் தாக்கம் ஆகியவற்றையும் ஆராய்கிறது.
19. அண்மையில், பொது சிவில் சட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளித்த மாநில அமைச்சரவை எது?
அ. இராஜஸ்தான்
ஆ. உத்தர பிரதேசம்
இ. உத்தரகாண்ட்
ஈ. இமாச்சல பிரதேசம்
- உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியின்கீழ் உள்ள அமைச்சரவை, பொது சிவில் சட்ட (Uniform Civil Code) மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கென அமைக்கப்பட்ட குழு பரிந்துரைகளின் அடிப்படையில், இம்மசோதா மதச்சார்புகளை கடந்து குடிகளுக்கானச் சட்டங்களை தரப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முன்மொழியப்பட்ட நடவடிக்கைகளில் பலதார மணம் மற்றும் குழந்தைத்திருமணத்தை தடைசெய்தல், பொதுவான திருமண வயதை நிரணையித்தல் மற்றும் மணமுறிவுக்கான சீரான காரணங்களையும் நடைமுறைகளையும் அமல்படுத்துதல், சட்ட தரப்படுத்தலை ஊக்குவித்தல் ஆகியன அடங்கும்.
20. அண்மையில், ஒருமித்த கொடுக்கல் இணைப்பிடைமுகம் (UPI) என்ற கொடுப்பனவு முறையை ஏற்றுக்கொண்ட முதல் ஐரோப்பிய நாடு எது?
அ. ஜெர்மனி
ஆ. இத்தாலி
இ. பிரான்ஸ்
ஈ. ஸ்பெயின்
- பாரிஸில் உள்ள இந்திய தூதரகத்தில் நடந்த இந்திய குடியரசு நாள் விழாவின்போது, பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் முன்னிலையில் இந்தியாவின் ஒருமித்த கொடுக்கல் இணைப்பிடைமுகம் (Unified Payment Interface) முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய தூதரகம் UPIஇன் உலகளாவிய விரிவாக்கத்தை குறிக்கும் வகையில் ஈபிள் டவரில் வைத்து UPI-ஐ அறிமுகப்படுத்தியது. கடந்த 2016ஆம் ஆண்டில் இந்திய தேசிய கொடுப்பனவுக் கழக்கத்தால் உருவாக்கப்பட்ட UPI ஆனது பல வங்கிக்கணக்குகளை ஒரே திறன்பேசி செயலியில் ஒருங்கிணைத்து, ஒரே தளத்தில் பல்வேறு கணக்குகளை நிர்வகிப்பதற்கான வசதியான அமைப்பை வழங்குகிறது.
21. ‘வாயு சக்தி – 24’ பயிற்சி நடைபெறும் இடம் எது?
அ. ஜோத்பூர்
ஆ. பொக்ரான்
இ. பாலசோர்
ஈ. அஜ்மீர்
- 2024 பிப்.17 அன்று ஜெய்சால்மருக்கு அருகிலுள்ள பொக்ரான் ஏர் டூ கிரவுண்ட் ரேஞ்சில், ‘வாயு சக்தி-24’ பயிற்சியை இந்திய வான்படை நடத்தவுள்ளது. ஏற்கெனவே 2019 பிப்.16ஆம் தேதி இத்தகைய பயிற்சி நடந்தது. இப்பயிற்சியில் இந்திய இராணுவத்துடனான கூட்டு நடவடிக்கைகளும் காட்சிப்படுத்தப்படும். இந்த ஆண்டு, இந்தப் பயிற்சியில் உள்நாட்டு தேஜஸ், பிரசாந்த், துருவ் உட்பட 121 விமானங்கள் பங்கேற்கும்.
ரபேல், மிராஜ்-2000, சுகோய்-30 MKI, ஜாகுவார், ஹாக், C-130J, சின்னூக், அப்பாச்சி, MI-17 ஆகிய விமானங்களும் பங்கேற்கின்றன. துல்லியமாகவும், சரியான நேரத்திலும், பேரழிவு விளைவுடனும் செயல்படும் இந்திய விமானப் படையின் திறனை இந்தப் பயிற்சி எடுத்துக்காட்டுவதாக இருக்கும்.
22. அண்மையில், பார்வையற்றோருக்கான ஆடவர் தேசிய T20 கிரிக்கெட் போட்டியில், ‘நாகேஷ் கோப்பை’யை வென்ற மாநிலம் எது?
அ. மகாராஷ்டிரா
ஆ. கேரளா
இ. கர்நாடகா
ஈ. குஜராத்
- நாக்பூரில் நடைபெற்ற 2023-24 பார்வையற்றோருக்கான ஆடவர் தேசிய T20 கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் ஆந்திர பிரதேச அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கர்நாடக அணி நாகேஷ் கோப்பையை வென்றது. இந்த வெற்றியின்மூலம், 20 ஆண்டுகாலத்திற்குப் பிறகு கர்நாடக அணி முதன் முறையாக இந்தக் கோப்பையைப் பெறுகிறது. இது பார்வையற்ற கிரிக்கெட் வீரர்களின் குறிப்பிடத்தக்க திறமை மற்றும் உறுதியைப் பறைசாற்றுகிறது.
23. 2024 – சர்வதேச பெண் பிறப்புறுப்பு சிதைப்பு எதிர்ப்பு நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
அ. Unleashing Youth Power
ஆ. Achieving the new Global Goals through eliminating FGM
இ. Her Voice, Her Future
ஈ. Unite, Fund and Act
- 2024 – சர்வதேச பெண் பிறப்புறுப்பு சிதைப்பு எதிர்ப்பு நாளுக்கானக் கருப்பொருள், “Her Voice, Her Future” என்பதாகும். நீடித்த மாற்றத்தை அடைவதில் சமூகத்தின் தலைமையிலான முன்னெடுப்புகளின் முக்கிய பங்கை இந்தக் கருப்பொருள் எடுத்துக்காட்டுகிறது. சர்வதேச பெண் பிறப்புறுப்பு சிதைப்பு எதிர்ப்பு நாள் என்பது பெண்ணின் பிறப்புறுப்பு சிதைப்பை ஒழிப்பதற்கான ஐநா’இன் முயற்சிகளின் ஒருபகுதியாக பிப்.6 அன்று கடைப்பிடிக்கப்படும் ஒரு விழிப்புணர்வு நாளாகும். இது முதன்முதலில் 2003இல் கடைப்பிடிக்கப்பட்டது.
24. உண்ணி முள்ளுச்செடி (Lantana Camara) என்பது பின்வரும் எவ்வினத்தைச் சேர்ந்ததாகும்?
அ. பூக்கும் தாவரம்
ஆ. பட்டாம்பூச்சி
இ. மீன்
ஈ. தவளை
- ஆக்கிரமிப்புத்தாவரமான உண்ணி முள்ளுச்செடியைக்கொண்டு செய்யப்பட்ட சிற்பங்கள் அண்மையில் பெங்களூரு கண்காட்சியில் கவனத்தை ஈர்த்தன. அமெரிக்க வெப்பமண்டலத்தை பூர்வீகமாகக் கொண்ட இது காலனித்துவ காலத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. காலநிலை மாற்றங்களுக்குத் தகவமைத்துக்கொள்ளும் தன்மை இருந்தபோதிலும், உண்ணி முள்ளுச்செடி உலகின் முதல் பத்து ஆக்கிரமிப்பு தாவர இனங்களில் ஒன்றாக உள்ளது. மேற்குத்தொடர்ச்சிமலையில் உள்ள நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் அதன் ஆக்கிரமிப்பால் பெரிதினும் பெரிதாக பாதிப்படைந்துள்ளது.
25. உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் யார்?
அ. ரிது பஹ்ரி
ஆ. ஹிமா கோலி
இ. இந்திரா பானர்ஜி
ஈ. ரூமா பால்
- உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக நீதிபதி ரிது பஹ்ரி பதவியேற்றார். அவருக்கு துணைநிலை ஆளுநர் குர்மீத் சிங் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். முன்னதாக பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பாணியாற்றிவர் ரிது பஹ்ரி. அவரின் பதவியேற்பு விழாவில் உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, சுற்றுலாத்துறை அமைச்சர் சத்பால் மகாராஜ், உயர்கல்வித் துறை அமைச்சர் தன்சிங் இராவத், தலைமைச்செயலாளர் இராதா ரதுரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. இந்தியாவின், ‘சக்தி’ இசைக்குழுவுக்கு கிராமி விருது.
66ஆவது ‘கிராமி’ விருது வழங்கும் விழாவில், ‘சிறந்த இசைத்தொகுப்பு’ என்ற பிரிவின்கீழ், இந்தியாவின், ‘சக்தி’ இசைக்குழுவுக்கு விருது வழங்கப்பட்டது. ‘சக்தி’ குழுவின் ‘திஸ் மொமென்ட்’ என்கிற இசைத்தொகுப்பிற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஷங்கர் மகாதேவன், இசையமைப்பாளர் செல்வகணேஷ் விநாயக்ராம், கணேஷ் இராஜகோபாலன், உஸ்தாத் ஜாகீர் உசேன் உள்ளிட்டோர், ‘சக்தி’ இசைக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு, ‘RRR’ திரைப்படத்தின், ‘நாட்டு நாட்டு’ பாடலுக்குக் ‘கிராமி’ விருது கிடைத்தது.
2. ‘மக்களைத் தேடி ஆய்வகம் சேவை’ என்ற திட்டம் தொடக்கம்.
தமிழ்நாட்டில் முதல்முறையாக, ‘மக்களைத் தேடி ஆய்வகம் சேவை’ என்ற திட்டத்தை கன்னியாகுமரியில் வைத்து மக்கள் நல்வாழ்வுத் துறை தொடங்கியுள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 1.72 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர். ‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தின் மூலம் 2.20 இலட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. ‘வருமுன் காப்போம்’ திட்டத்தின்கீழ், ஆண்டுக்கு 1250 இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே பொதுமக்கள் 63 வகையான பரிசோதனைகளை மேற்கொள்ளவியலும் என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
3. வளரிளம் பெண்கள் 57% பேருக்கு இரத்தசோகை பாதிப்பு.
தமிழ்நாட்டில் வளரிளம் பருவத்திலுள்ள 57% பெண்களுக்கும், 43% ஆண்களுக்கும் இரத்தசோகை பாதிப்பு இருப்பது பொது சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
4. நீர்மாசு தடுப்பு சட்டத்திருத்த மசோதா: மாநிலங்களவையில் நிறைவேற்றம்.
நீர்மாசு தடுப்பு சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்புமூலம் நிறைவேறியது. நீர்மாசில் சிறு குற்றங்களில் ஈடுபடுவர்கள்மீது குற்ற நடவடிக்கை எடுப்பதிலிருந்து விலக்கு அளிக்கவும், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர்கள் நியமனத்திலும், தொழிற்சாலைகளுக்கு அனுமதியளிப்பது, மறுப்பதுபோன்ற விவகாரங்க -ளில் மத்திய அரசு வழிமுறைகளை வகுக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது. நீர்மாசுபாடு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம்-1974இல் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
5. உத்தரகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம்.
உத்தரகண்ட் மாநிலச் சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்பட்ட பொது சிவில் சட்ட (UCC) மசோதா பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேறியது. நாட்டில் முதல் மாநிலமாக உத்தரகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. பழங்குடி சமூகத்தினருக்கு மட்டும் இதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்ட மசோதா வரைவை உருவாக்க ஓய்வுபெற்ற நீதிபதி இரஞ்சனா தேசாய் தலைமையில் 5 பேர்கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு உருவாக்கிய 172 பக்கங்கள் கொண்ட பொது சிவில் சட்ட மசோதா 392 பிரிவுகளைக் கொண்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்: உத்தரகண்ட் மாநிலப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொது சிவில் சட்ட மசோதவில் பழங்குடி சமூகத்தினருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் பலதார திருமணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மறுமணம், விவாகரத்துகுறித்த பொது விதிகளை மசோதா கொண்டுள்ளது. அதேபோல், திருமணங்களைப்போன்று, மணம் புரியாமல் சேர்ந்து வாழ்வதற்கு (live-in) விரும்புவோரும் அரசிடம் பதிவு செய்து கொள்வது கட்டாயாமாக்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு கோவா மாநிலத்தில் மட்டுமே பொது சிவில் சட்டம் போர்த்துகீசியர் ஆட்சிக் காலத்தில் இருந்து நடைமுறையில் உள்ளது.
6. ஸ்பெயினின் எடிபன் நிறுவனம் தமிழ்நாட்டில் `540 கோடி முதலீடு.
ஸ்பெயினைச் சேர்ந்த எடிபன் நிறுவனம் தமிழ்நாட்டில் `540 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.