Tnpsc

ஆசியா Notes 6th Social Science

6th Social Science Lesson 19 Notes in Tamil

19] ஆசியா

  • ஆங்கில மொழியின் தாயகம் பிரிட்டன்.

இப்பாடம் ஆசியா மற்றும் ஐரோப்பாவின் அமைவிடம், எல்லைகள், நிலத்தோற்றம் மற்றும் அரசியல்பிரிவுகள் பற்றி விவாதிக்கின்றது. முக்கிய ஆறுகள், காலநிலை, இயற்கைத் தாவரம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பாடம் கிடைக்கக்கூடிய வளங்கள் எவ்வாறு பொருளாதார நடவடிக்கைகளைத் தீர்மானிக்கின்றது என்பதையும் விளக்குகிறது. ஆசியா மற்றும் ஐரோப்பாவின் கலாச்சார கலவை பற்றிய ஒரு பார்வையைக் கற்போருக்குக் கொடுக்கின்றது.

ஆசியா

ஆசியாவானது உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட கண்டமாகும். இந்து உலகின் பரப்பளவில் 30 சதவீதத்தையும், மக்கள் தொகையில் 60 சதவீதத்தையும் உள்ளடக்கியது. ஆசியாவின் பெரும்பாலான நிலப்பரப்பு வடஅரைக்கோளத்தில் பரவியுள்ளது. இது பல வகையான நிலத்தோற்றம் மற்றும் கலாச்சாரக் கூறுகளைக் கொண்டுள்ளது. உயர்ந்த மலைகள், பீடபூமிகள், பரந்த சமவெளிகள், தீவுகள் மற்றும் தீபகற்பங்கள் ஆகியவை முக்கிய இயற்கை நிலத்தோற்றங்களாகும். வற்றாத ஆறுகள் ஆசியாவின் பல்வேறு நிலப்பரப்புகளில் பாய்கின்றன. இந்த ஆற்றுப் பள்ளத்தாக்குகள் நாகரிகங்களின் தொட்டிலாகும். (மெசபடோமியா, சிந்துவெளி, சீனநாகரீகம்). நம் ஆசியா கண்டத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

அமைவிடம் மற்றும் பரப்பு

ஆசியா 100 11’ தெற்கு அட்சத்திலிருந்து 810 12’ வடக்கு அட்சம் வரையிலும் , 260 2’ கிழக்கு தீர்க்கம் முதல் 1690 40’ மேற்குத் தீர்க்கம் வரையிலும் பரவியுள்ளது. இதன் மொத்த பரப்பளவு 44 மில்லியன் கி.மீ2 ஆகும்.

எல்லைகள்

ஆசியா கண்டம், வடக்கில் ஆர்டிக் பெருங்கடல், கிழக்கில் பசிபிக் பெருங்கடல் தெற்கில் இந்தியப் பெருங்கடல், மேற்கில் யூரல், காகசஸ் மலைகள், செங்கடல், மத்தியத் தரைக்கடல், காஸ்பியன் கடல் மற்றும் கருங்கடல் ஆகியனவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது. சூயஸ் கால்வாய் ஆசியாவை ஆப்பிரிக்காவிடம் இருந்து பிரிக்கின்றது. பேரிங் நீர்ச்சந்தி ஆகியவை வடஅமெரிக்காவிடம் இருந்து பிரிக்கின்றது.

  • ஆசியாவில் 12 நாடுகள் நிலத்தால் சூழப்பட்டுள்ளன. அதில் ஒன்று மட்டுமே இரண்டு முறை நிலத்தால் சூழப்பட்டுக் காணப்படுகின்றது. அதாவது, இது முழுவதும் நிலப்பரப்புள்ள நாடுகளால் சூழப்பட்டுள்ளது. அந்நாடு எது என்பதைக் கண்டறிக.

அரசியல் பிரிவுகள்

ஆசியாவில் நாற்பத்து எட்டு நாடுகள் உள்ளன. இந்நாடுகள் நிலத்தோற்றம் மற்றும் அரசியல் நிலைப்பாடுகளின் அடிப்படையில் பல்வேறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை,

1. கிழக்கு ஆசியா 2. தென்கிழக்கு ஆசியா

3. தெற்கு ஆசியா 4. தென்மேற்கு ஆசியா

5. மத்திய ஆசியா

இயற்கைப் பிரிவுகள்

ஆசியா நீண்ட மலைத் தொடர்கள், பனி படர்ந்த உயர்ந்த மலைகள், அகன்ற பீடபூமிகள், பரந்த சமவெளிகள், ஆற்றுப் பள்ளத்தாக்குகள் மற்றும் கடற்கரைகளைக் கொண்டுள்ளது. இவ்வேறுபட்ட இயற்கை கூறுகள், இக்கண்டத்தில் காணப்படும் மக்களின் பல்வேறுபட்ட பொருளாதார நடவடிக்கைகளுக்குத் துணைபுரிகின்றன. ஆசியாவின் இயற்கை அமைப்பினை ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை,

1. வட தாழ்நிலங்கள்

2. மத்திய உயர் நிலங்கள்

3. தெற்கு பீடபூமிகள்

4. பெரு சமவெளிகள்

5. தீவுக்கூட்டங்கள்

1. வட தாழ்நிலங்கள்

ஆசியாவிலேயே மிகவும் பரந்து காணப்படும் தாழ்நிலம் சைபீரியச் சமவெளி ஆகும். அது மேற்கே யூரல் மலைகளிலிருந்து கிழக்கே வெர்கோயன்ஸ்க் மலைத்தொடர் வரை பரந்து காணப்படுகின்றது.

2. மத்திய உயர்நிலங்கள்

மத்திய உயர்நிலங்கள் துருக்கியிலிருந்து பேரிங் நீர்ச்சந்தி வரை விரிந்து காணப்படுகின்றன. ஆசியாவில் இரு மலை முடிச்சுக்கள் காணப்படுகின்றன. அவை,

1. பாமீர் முடிச்சு

2. ஆர்மீனியன் முடிச்சு

இந்துகுஷ் மலைத்தொடர், சுலைமான் மலைத்தொடர், இமயமலைத் தொடர் மற்றும் டியான் ஷன் மலைத்தொடர் போன்றன பாமீர் முடிச்சிலிருந்து பரவிக் காணப்படுகின்றன. இந்துகுஷ் மலைத்தொடர் மேற்கே எல்பர்ஸ் எனவும் சுலைமான் மலைத்தொடர் தென் மேற்கே ஜாக்ரோஸ் மலைத்தொடராகவும் நீண்டு காணப்படுகிறது. எல்பர்ஸ் மற்றும் ஜாக்ரோஸ் ஆர்மீனியன் முடிச்சில் ஒன்றிணைகிறது. தாரஸ் மற்றும் போன்டைன் மலைத்தொடர்கள் ஆர்மீனியன் முடிச்சிலிருந்து பரவிக் காணப்படுகின்றன. பெரிய கிங்கன், அல்டாய், வெர்கோயான்ஸ்க், அரக்கன்யோமா போன்றவை இங்குக் காணப்படும் முக்கிய மலைத்தொடர்கள் ஆகும்.

இமயமலைத் தொடர்களே உலகின் உயரமான மலைத்தொடர் ஆகும். ஆசியாவின் உயர்ந்த சிகரம்பெவரெஸ்ட் சிகரம் (8848 மீ) ஆசியாவில் மட்டுமின்றி உலகின் உயரமான சிகரமும் இதுவே ஆகும்.

உலகின் தாழ்வான பகுதி ஆசியாவிலுள்ள சாக்கடலில் உள்ளது.

  • ‘முடிச்சு’ என்பது மலைத்தொடர்கள் கூடும்/புரியும் இடங்கள் ஆகும்.

மலையிடைப் பீடபூமிகள் இம்மலைத் தொடர்களிடையே காணப்படுகிண்றன. முக்கிய பீடபூமிகளாவன,

1. அனடோலிய பீடபூமி (போன்டைன் – தாரஸ் மலை)

2. ஈரான் பீடபூமி (எல்பர்ஸ் – ஜாக்ரோஸ்)

3. திபெத்திய பீடபூமி (குன்லுன் – இமயமலை)

  • திபெத் ‘உலகின் கூரை’ என அழைக்கப்படுகின்றது. அங்கு நிலவும் கடுங்குளிரின் காரணமாகவும், நன்னீரின் மிகப்பெரும் இருப்பிடமாகவும், மக்கள் வாழ இயலாத சூழல் காணப்படுவதாலும் திபெத் ‘மூன்றாம் துருவம்’ என்றும் அழைக்கப்படுகின்றது.

3. தெற்கு பீடபூமிகள்

தெற்கு பீடபூமிகள், வடக்கு பீடபூமிகளைக் காட்டிலும் உயரம் குறைந்து காணப்படுகின்றன. தெற்கு பீடபூமிகளில் முக்கியத்துவம் வாய்ந்த நான்கு பீடபூமிகளாவன: அரேபிய பீடபூமி (சௌதி அரேபியா), தக்காண பீடபூமி (இந்தியா) , ஷான் பீடபூமி (மியான்மர்), யுனான் பீடபூமி (சீனா). இவற்றில் மிகப் பெரியது அரேபிய பீடபூமி ஆகும்.

4. பெரும் சமவெளிகள்

ஆசியாவின் முக்கிய ஆறுகளினால் இப்பெரும் சமவெளிகள் உருவாக்கப்படுகின்றன. அவையாவன: மேற்கு சைபீரியச் சமவெளி (ஓப் மற்றும் எனிசி),மஞ்சூரியன் சமவெளி (அமூர்), சீன பெரும் சமவெளி (யாங்சி மற்றும் சிகியாங்), சிந்து – கங்கைச் சமவெளி (சிந்து மற்றும் கங்கை) , மெசபடோமிய சமவெளி (யூப்ரடிஸ் மற்றும் டைக்ரிஸ்), ஐராவதி சமவெளி (ஐராவதி).

5. தீவுக்கூட்டங்கள்

தென்கிழக்கு ஆசியாவின் பசிபிக் கடற்கரையையொட்டி எண்ணற்ற தீவுகள் காணப்படுகின்றன. குரில், தைவான், சிங்கப்பூர் மற்றும் போர்னியோ போன்றவை முக்கியமான தீவுகளாகும். பிலிப்பைன்ஸ் , ஜப்பான் மற்றும் இந்தோனேசியா ஆகியன ஆசியாவின் மிகப்பெரிய தீவுக்கூட்டங்களாகும். அரபிக்கடலில் உள்ள மாலத்தீவுகள் மற்றும் லட்சத்தீவுகள், பாரசீக வளைகுடாவில் உள்ள பஹ்ரைன் போன்றவை இந்தியப் பெருங்கடலில் காணப்படும் சிறிய தீவுக்கூட்டங்களாகும். இலங்கைத் தீவு வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளது.

  • ஒன்றிணைக்கப்பட்ட பல தீவுகள், தீவுக்கூட்டம் என அழைக்கப்படுகின்றது. இந்தோனேசியா மிகப்பெரியத் தீவுக்கூட்டம் ஆகும்.

வடிகால் அமைப்பு

ஆசியாவின் பெரும்பான்மையான ஆறுகள் மத்திய உயர்நிலங்களில் தோன்றுகின்றன. ஓப், எனிசி, லேனா ஆகிய முக்கிய ஆறுகள் வடக்கு நோக்கிப் பாய்ந்து ஆர்டிக் பெருங்கடலில் கலக்கின்றன. இவை குளிர்காலத்தில் உறைந்து விடுகின்றன. ஆனால், தெற்காசியாவில் பாயும் ஆறுகளான பிரம்மபுத்திரா, சிந்து, கங்கை (இந்தியா), ஐராவதி (மியான்மர்) ஆகிய வற்றாத ஆறுகள் பனிபடர்ந்த உயர்ந்த மலைகளில் தோன்றுகின்றன. இவை குளிர்காலத்தில் உறைவதில்லை. யூப்ரடிஸ் மற்றும் டைகிரிஸ் ஆறுகள் மேற்கு ஆசியாவில் பாய்கின்றன. அமூர், ஹோவாங்கோ, யாங்சி மற்றும் மீகாங் ஆகிய ஆறுகள் ஆசியாவின் தெற்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் பாய்கின்றன. ஆசியாவின் மிக நீளமான ஆறு யாங்சி ஆகும்.

முப்பள்ளத்தாக்கு நீர்த் தேக்கமானது யாங்சி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இஃது உலகின் மிகப்பெரிய நீர்த்தேக்கமாகும். இது சீனாவின் மின்சார தேவையில் 10 சதவீதத்தைப் பூர்த்தி செய்கிறது.

காலநிலை

ஆசியாவில் பலவகையான காலநிலைகள் நிலவுகின்றன. வடக்கு ஆசியப் பகுதியில் குளிர்காலம் நீண்டதாகவும், கோடைக்காலம் சற்று குளிர்ந்தும் காணப்படும். (குளிர்காலம் -370செ மற்றும் கோடைக்காலம் 100செ). இங்குப் பனிப்பொழிவு உண்டு (250 மி.மீ – 300 மி.மீ). ஆசியாவின் வடகிழக்குப் பகுதியில் மிகக் குளிர்ந்த குளிர்காலமும், மிதவெப்ப கோடைகாலமும், 50 மி.மீ முதல் 250 மி.மீ. மிதமான மழைப்பொழிவும் காணப்படுகிறது.

ஆசியாவின் முக்கிய ஆறுகள்

வ.எண் ஆறு பிறப்பிடம் சேருமிடம் நீளம் (கி.மீ)
1 யாங்சி திபெத் பீடபூமி கிழக்குச் சீனக்கடல் 6,350
2 ஹோவாங்கோ திபெத் பீடபூமி போகாய் வளைகுடா 5,464
3 மீகாங் திபெத் பீடபூமி தென்சீனக் கடல் 4,350
4 எனிசி தானுவாலா மலை ஆர்டிக் பெருங்கடல் 4,090
5 ஓப் அல்டாய் மலை ஓப் வளைகுடா 3,650
6 பிரம்மபுத்திரா இமயமலை வங்காள விரிகுடா 2,900
7 சிந்து இமயமலை அரபிக்கடல் 3,610
8 அமூர் சிகா, ஆர்கான் ஆறுகளின் சங்கமம் டாடார் நீர்ச்சந்தி 2,824
9 கங்கை இமயமலை வங்காள விரிகுடா 2,525
10 ஐராவதி வடக்கு மியான்மர் வங்காள விரிகுடா 2,170
  • தெற்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியப் பகுதிகள் பருவக்காற்றுகளின் தாக்கத்திற்கு உட்பட்ட பகுதிகளாகும். பொதுவாக கோடைக்காலம் அதிக வெப்பமும் ஈரப்பதத்துடனும், குளிர்காலம், வறண்டும் காணப்படும்.
  • கோடைக்காலப் பருவமழைக் காற்றுகள் இந்தியா, வங்காளதேசம், இந்தோ-சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் தெற்கு சீனா ஆகிய இடங்களுக்கு அதிக மழைப்பொழிவைத் தருகின்றன (1500 மி.மீ – 2500 மி.மீ).
  • இந்தியாவில் உள்ள மௌசின்ராம் (11871 மி.மீ) அதிக மழைப்பொழிவைப் பெறுவதால், இஃது உலகின் மிக அதிக மழைப்பெறும் பகுதியாகும்.
  • நிலநடுக்கோட்டிலும், அதனைச் சுற்றிலும் காணப்படுகின்ற பகுதியிலும் ஆண்டு முழுவதும் ஒரேமாதிரியான காலநிலை உள்ளது. இங்குக் குளிர்காலம் இல்லை. இங்குக் காணப்படும் சராசரி வெப்பநிலை (270 செ), சராசரொ மழைப்பொழிவு (1270 மி.மீ).
  • மேற்கு மற்றும் மத்திய ஆசியாவில் வறண்ட , வெப்பமான காலநிலை காணப்படுகிண்றன. இப்பகுதிகளில் வெப்பநிலை பகலில் அதிகமாகவும், இரவில் குறைந்தும் காணப்படும்.
  • மழையளவு 25 மி.மீ முதல் 200 மி.மீ வரை வேறுபடுகின்றது. ஆசியாவின் மேற்குக் கடற்கரையோரம் (மத்தியத் தரைக்கடல் ஓரம்) குளிர்காலத்தில் மழையைப் பெறுகின்றது. இங்குக் கோடைக்காலம் மிதவெப்பத்துடன் காணப்படும்.
  • ஆசியாவில் பாலைவனங்கள் மேற்கு கடற்கரையோரமாகக் காணப்படுகின்றன. இங்குள்ள அரேபிய (சௌதி அரேபியா) மற்றும் தார் (இந்தியா மற்றும் பாகிஸ்தான்) பாலைவனங்கள் மிக வெப்பமான பாலைவனங்கள் ஆகும்.
  • கோபி மற்றும் தக்லாமக்கன் பாலைவனங்கள் மிகவும் குளிர்ந்த பாலைவனங்கள் ஆகும். ஆசியாவின் மிகப்பெரிய பாலைவனம் அரேபிய பாலைவனமாகும்.

பாலைவனம்

பாலைவனப் பிரதேசம் என்பது மிகக் குறைந்த மழைப்பொழிவைப் பெறும் பகுதியாகும். இங்குக் குறைந்த அளவிலேயே தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் காணப்படுகின்றன. ஆசியாவில் இரண்டு வகையான பாலைவனங்கள் உள்ளன. வெப்பப் பாலைவனம் மற்றும் குளிர்ப்பாலைவனம்.

  • ரூப-அல்-காலி பாலைவனம் உலகின் மிகத் தொடர்ச்சியான மணற்பாங்கான பாலைவனமாகும். இது சௌதி அரேபியாவின் தென்கிழக்குப் பகுதியில் காணப்படுகின்றது.

இயற்கைத் தாவரங்கள்

  • மழைப்பொழிவு, வெப்பநிலை மற்றும் மண் ஆகியவற்றைச் சார்ந்து இயற்கைத் தாவரங்கள் உள்ளன. ஆசியா கண்டமானது நிலநடுக்கோட்டுப் பகுதியிலிருந்து, துருவப் பகுதிவரை பரவிக் காணப்படுவதால் இங்கு அனைத்துவகை இயற்கைத் தாவரங்களும் காணப்படுகின்றன.
  • உராங்குடான், கோமோடோ டிராகன், பெரிய பாண்டாக்கரடி போன்ற சில அரியவகை விலங்கினங்களும் இங்குக் காணப்படுகின்றன. ஆசியாவின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இயற்கைப் பிரதேசங்கள் (தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்)

வ.எண் காலநிலை இருப்பிடம் தாவரம் விலங்கினம்
1 அதிக வெப்ப நிலை, அதிக மழைப் பொழிவு இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை பசுமை மாறாத்தாவரங்கள் – மஹோகனி, ரப்பர், செம்மரம், சால் காண்டாமிருகம், உராங்குடான், கோமோடோ, டிராகன், புலி, பாபிரூஸா.
2 கோடைகால மழை, வறண்ட குளிர்காலம் இந்தியா, வியட்நாம், தெற்கு சீனா, கம்போடியா, தாய்லாந்து, இலையுதிர் காடுகள் –தேக்கு, சந்தனம், மூங்கில் புலி, யானை, இந்திய நாகப்பாம்பு, விரியன் பாம்பு.
3 தீவிரமான காலநிலை அரேபிய பாலைவனம், வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியா சப்பாத்திக் கள்ளி, பேரீச்சமரங்கள், (பாலைவனச் சோலை) முட்புதர்கள், கருவேல மரம் பாக்டிரியன் ஒட்டகம், மண் கௌதாரி, பாலைவன மான்.
4 வறண்ட குளிர்காலம், மிதவெப்ப கோடைகாலம் கிழக்கு சீனா, ஜப்பான், வட மற்றும் தென் கொரியா செர்ரி, ஆப்ரிகாட், பிளம் பெரிய பாண்டாக்கரடி, ஜப்பானி மகாக்யூ
5 மிதவெப்ப கோடைகாலம் குளிர்கால மழைப்பொழிவு இஸ்ரேல், லெபனான், துருக்கி, சிரியா அத்தி, ஆலிவ், சிட்ரஸ் பழங்கள் லிங்க்ஸ், ஜேக் முயல்
6 நீண்ட வறண்ட குளிர்காலம், குறுகிய, குளிர்ச்சியான கோடைகாலம் சைபிரீயா, இமயமலை ஊசியிலைக்காடுகள் – பைன், ஃபிர், ஸ்புரூஸ் சைப்பீரியப் புலி, பழுப்புக் கரடி, ஓநாய்
7 நிரந்தர பனிப்படர்வு பனி வரைக் கோட்டிற்கு அப்பால் லிச்சன் , பாசிகள் , புல் பனிக்கரடி, லெம்மிங், ஆர்டிக் நரி , கலைமான்

ஆசியாவின் வள ஆதாரங்களும், பொருளாதார நடவடிக்கைகளும்

கனிம வளங்கள்

ஆசியா பல்வகையான கனிம வளங்களைக் கொண்டுள்ளது. இரும்பு, நிலக்கரி, மாங்கனீசு, பாக்ஸைட், துத்தநாகம், டங்ஸ்டன், பெர்டோலியம் , தகரம் ஆகியவற்றின் உற்பத்தியில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. எண்ணெய் மற்றும் இயற்கை வாயு மேற்காசிய நாடுகளில் காணப்படுகின்றன. உலகின் மூன்றில் ஒரு பங்கு எண்ணெய் ஆசியாவிலிருந்து கிடைக்கப்பெறுகின்றது. மேற்காசிய நாடுகளிலேயே, ஈரானில் குறிப்பிடத்தக்க அளவில் கனிம வளங்கள் காணப்படுகின்றன. ஆசியாவில் காணப்படும் முக்கிய கனிம வளங்களாவன:

இரும்புத்தாது:

உலகிலேயே மிக அதிகமான இரும்புத்தாது வளத்தை ஆசியா கொண்டுள்ளது. சீனா மற்றும் இந்தியா அதிக இரும்புத்தாது இருப்புள்ள நாடுகளாகும். துருக்கி, பிலிப்பைன்ஸ், மலேசியா, தாய்லாந்து, மியான்மர் மற்றும் பல நாடுகளும் இரும்புத்தாது வளத்தைக் கொண்டுள்ளன.

நிலக்கரி:

நிலக்கரி ஒரு பரிம எரிபொருள் ஆகும். உலகிலேயே ஆசியாவில்தான் அதிக நிலக்கரி இரும்பு உள்ளது. ஆசியாவில் சீனா மற்றும் இந்தியா அதிகமாக நிலக்கரி உற்பத்தி செய்யும் நாடுகளாகத் திகழ்கின்றன.

பெட்ரோலியம்: பெட்ரோலியம் ஒரு கனிம எண்ணெய் வளமாகும். தென்மேற்கு ஆசியாவில்தான் அதிக அளவில் பெட்ரோலிய இருப்புகள் காணப்படுகின்றன. சௌதி அரேபியா, குவைத் , ஈரான், பஹ்ரைன், கத்தார் மற்றும் ஐக்கிய அரேபிய குடியரசு போன்றவை பெட்ரோலிய உற்பத்தி செய்யும் மேற்காசிய நாடுகளாகும். தென்சீனா, மலேசியா, புருனே, இந்தோனேசியா, இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் மற்ற நாடுகளாகும்.

பாக்ஸைட், இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளில் காணப்படுகின்றது. இந்தியா உலகிலேயே அதிக அளவில் மைக்காவினை உற்பத்தி செய்கின்றது. மியான்மர், தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் தகரம் காணப்படுகின்றது.

வேளாண்மை

  • ஆசியாவின் மொத்த பரப்பளவில் சுமார் 18 சதவிகிதம் மட்டுமே வேளாண்மைக்கு ஏற்ற நிலமாகக் காணப்படுகிறது. ஆசியநாட்டு மக்களின் முதன்மையான தொழில் வேளாண்மை ஆகும்.
  • தெற்கு, தென்கிழக்கு மற்றும் கிழக்காசியாவில் காணப்படும் ஆற்றுப்பள்ளத்தாக்குகள் செழுமையான வண்டல்மண் நிலங்களாகும்.
  • ஆற்றுச்சமவெளிகளில் தீவிர வேளாண்மை நடைபெறுகின்றது. இருப்பினும் ஆசியாவின் சில பகுதிகள் வேளாண்மை செய்ய உகந்தவை அல்ல.
  • ஆசியாவிலேயே அதிக பயிர்சாகுபடிசெய்ய ஏற்ற நிலப்பரப்பைக் கொண்டுள்ள நாடு இந்தியா ஆகும். பல மேற்காசிய நாடுகளில் நிலத்தடி நீர், நிலப்பரப்பிற்கு அருகில் கிடைக்கும் இடங்களில் பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
  • ஈராக் நாட்டில் வேளாண் நடவடிக்கை, மழைப்பொழிவு மற்றும் யூப்ரடிஸ், டைக்ரிஸ் ஆறுகளிலிருந்து பெறப்படும் நீரினைப் பொறுத்தே அமைகின்றன.
  • ஆசியாவின் முக்கிய உணவுப்பயிர்கள் நெல் மற்றும் கோதுமை ஆகும். உலகிலேயே மிக அதிகமாக நெல் உற்பத்தி செய்யும் நாடுகள் சீனா மற்றும் இந்தியா ஆகும்.
  • மியான்மர் , ஜப்பான் , வங்காளதேசம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் நெல் விளைவிக்கும் பிற முக்கிய நாடுகளாகும்.
  • அதிக மழைப்பொழிவு, செழுமை வாய்ந்த சமவெளிகள் மற்றும் மனிதவளம் ஆகியவற்றைப் பெற்றிருப்பதால் பருவமழை பெய்யும் ஆசியப்பகுதிகள் நெல் விளைய ஏற்ற பகுதிகளாகத் திகழ்கின்றன. தாய்லாந்து தென்கிழக்கு ஆசியாவின் ‘அரிசிக் கிண்ணம்’ என அழைக்கப்படுகின்றது.
  • கோதுமை ஆசியாவின் மிதவெப்ப மண்டல பகுதிகளில் விளைகின்றது. ரஷ்யா, இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அதிக அளவு கோதுமையை உற்பத்தி செய்கின்றன.
  • ஆசியாவின் வறண்ட பகுதிகளில் தினைப்பயிர்களான கம்பு, கேழ்வரகு, சோளம், மக்காச்சோளம் ஆகியன விளைகின்றன. இவை இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சில வளைகுடா நாடுகளில் பயிரிடப்படுகின்றன. இப்பயிர்கள் மட்டுமின்றி ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் பருப்பு வகைகள், நறுமணப்பொருட்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் ஆகியன விளைவிக்கப்படுகின்றன.
  • சணல் மற்றும் பருத்தி ஆகிய முக்கிய இழைப்பயிர்கள் ஆசியாவில் விளைகின்றன. உலகின் மூன்றில் ஒரு பங்கு பருத்தி ஆசியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது/
  • ஆசியாவில் அதிக பருத்தி உற்பத்தி செய்யும் நாடுகள் சீனா, இந்தியா, ரஷ்யா மற்றும் கஜகிஸ்தான். இந்தியா, பாகிஸ்தான், சீனா மற்றும் வங்காளதேசம்ஆகிய நாடுகள் அதிக அளவில் சணல் உற்பத்தி செய்கின்றன.
  • வெப்பமண்டலங்களில் காணப்படும் வறண்ட மற்றும் ஈரப்பதம்மிக்க காலநிலை ஆசியாவில் கரும்பு உற்பத்திக்கு ஏற்றதாகவுள்ளது. இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் அதிகமான அளவில் கரும்பு உற்பத்தி செய்கின்றன.
  • காபி, தேயிலை, ரப்பர், பனை மற்றும் கொக்கோ ஆகியன முக்கியத் தோட்டப்பயிராகும். இந்தியா, இலங்கை, தாய்லாந்து, வியட்நாம், மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் தோட்டப்பயிர்கள் வளர்க்கப்படுகின்றன.
  • மலேசியா மற்றும்தாய்லாந்து ஆகிய நாடுகள் இயற்கை ரப்பர் உற்பத்தியில் முதன்மையாக விளங்குகின்றன. மேற்காசிய நாடுகள் பேரீச்சம் பழங்களை அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றுள் உலகிலேயே ஈரான் இப்பழங்களை அதிக அளவு உற்பத்தி செய்கின்றது.

பனாவ் படிக்கட்டு முறை நெல் விவசாயம்

இப்கௌஸ் என்ற பிலிப்பைன்ஸ் மக்களால் 2000 ஆண்டுகளுக்கு முன் இது உருவாக்கப்பட்டதாகும். இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 1524 மீ உயரத்தில் அமைந்துள்ளது.

மீன்பிடித்தல்

மீன்பிடித்தொஇழ்ல் ஆசியாவின் மிக முக்கியமான பொருளாதார நடவடிக்கை ஆகும். கடல் மற்றும் உள்நாட்டு நீர்நிலைகளிலும் இத்தொழில் நடைபெறுகின்றது. சீனா மற்றும் ஜப்பான் மீன்பிடித்தொழிலில் முன்னணி நாடுகளாகத் திகழ்கின்றன. கம்போடியாவில் உள்ள ‘டோன்லேசாப்’ ஏரி உலகின் மிகச் சிறந்த நன்னீர் மீன்பிடி ஏரியாகும். இந்தியா, இலங்கை, மியான்மர் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் வங்காள விரிகுடாவில் சிறந்த மீன்பிடித் தளங்களைப் பெற்றுள்ளன. மீன்பிடித்தல் மாலத்தீவுகளின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்காற்றுகிறது. முத்துக்குளித்தல் கிழக்கு அரேபியக் கடற்கரையில் பிரசித்தி பெற்று விளங்குகின்றது.

தொழிற்பிரதேசங்கள்

மஞ்சூரியன், ஷங்காய் – வியூஹன், பீகிங் –ஷென்யாங், குவான்டோன் – ஹாங்காங் ஆகிய பகுதிகள் சீனாவின் முக்கியத் தொழிற்பிரதேசங்களாகும். டோக்கியோ, யோக்கோஹாமா மற்றும் ஒசாகா-கியோட்டோ பகுதிகள் ஜப்பானின் முக்கியத் தொழிற்பகுதிகளாகும். இந்தியாவில், மும்பை, அகமதாபாத், கோயம்புத்தூர், பெங்களூரு, சோட்டா நாக்பூர் ஆகியன முக்கிய தொழிற்பிரதேசங்களாகும்.

போக்குவரத்து

எந்த ஒரு நாட்டிற்கும் பொருளாதார முன்னேற்றத்தின் முதுகெலும்பாக விளங்குவது போக்குவரத்தே ஆகும். ஆசியாவின் பல நாடுகளும் தங்களது போக்குவரத்து வலையமைப்பை மேம்படுத்தி வருகின்றன. ஆசியாவில் காணப்படும் மிகப் பொதுவான போக்குவரத்து சாலைப் போக்குவரத்து ஆகும்.

சாலைப்போக்குவரத்து

ஆசிய நெடுஞ்சாலை கிழக்கில், டோக்கியோவையும் மேற்கில் துருக்கியையும், வடக்கில் ரஷ்யாவையும், தெற்கில் இந்தோனேசியாவையும் (1,41,000 கி.மீ) இணைக்கின்றது. இந்நெடுஞ்சாலை 32 நாடுகளின் வழியே கடந்து செல்கின்றது. ஆசிய நெடுஞ்சாலை வலையமைப்பிலேயே மிக நீளமான நெடுஞ்சாலை (20,557 கி.மீ) ஆசிய நெடுஞ்சாலை 1 (AH1) ஆகும். இது டோக்கியோவைத் துருக்கியுடன் இணைக்கிறது.ஆசிய நெடுஞ்சாலை 43 (AH43) இந்தியாவிலுள்ள ஆக்ராவிலிருந்து இலங்கையிலுள்ள மதாரா வரை செல்கின்றது. (3024 கி.மீ)

இருப்புப்பாதை போக்குவரத்து

  • உலகிலேயே நீண்ட இருப்புப்பாதை வழித்தடம் டிரான்ஸ் –சைபீரியன் இருப்புப்பாதை (9258 கி.மீ) ஆகும். அது பெருங்கண்ட இருப்புப்பாதை லெனின் கிரேட் மற்றும் விளாடிவோஸ்டாக் ஆகியவற்றை இணைக்கிறது. டிரான்ஸ் ஆசியா இருப்புபாதை சிங்கப்பூரை, துருக்கியிலுள்ள இஸ்தான்புல்லுடன் இணைக்கின்றது. சின்கான்சென் எனப்படும். உலகப்புகழ் வாய்ந்த அதிவிரைவு புல்லட் இரயில் (352 கி.மீ/மணி) ஜப்பானிலுள்ள ஒசாகா மற்றும் டோக்கியோ இடையில் பயணிக்கின்றது. ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய இருப்புப்பாதை போக்குவரத்து வலையமைப்பு இந்தியாவில் காணப்படுகிறது.

நீர்வழிப் போக்குவரத்து

நன்னம்பிக்கை முனை வழி, ஐரோப்பாவைத் தெற்கு ஆசியாவுடன் இணைக்கின்றது. டிரான்ஸ் பசிபிக் வழி , கிழக்காசியத் துறைமுகங்களை மேற்கு அமெரிக்க நாடுகளின் துறைமுகங்களுடன் இணைக்கின்றது. சூயஸ் கால்வாய் வழி உலக வர்த்தக வழியின் நடுவே பயணித்து ஐரோப்பாவைத் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவுடன் இணைக்கிறது. டோக்கியோ, ஷங்காய், சிங்கப்பூர், ஹங்காங், சென்னை, மும்பை, கராச்சி மற்றும் துபாய் ஆகியன ஆசியாவின் முக்கியத் தூறைமுகங்களாகும்.

ஆசியாவின் கலாச்சாரக் கலவை

மக்கள்தொகை

உலகிலேயே மிக அதிக மக்கள்தொகை கொண்ட கண்டம் ஆசியாவாகும். உலகில் சுமார் பத்தில் ஆறு பங்கு மக்கள்தொகை ஆசியாவில் காணப்படுகின்றது. பல்வேறுபட்ட இயற்கை கூறுகளினால் ஆசியாவின் மக்கட்பரவல் சீரற்றுக் காணப்படுகின்றது. ஆசியாவின் மொத்த மக்கள்தொகையில் ஐந்தில் மூன்று பங்கு மக்கள் சீனா மற்றும் இந்தியாவில் வசிக்கின்றனர். இவ்விரு நாடுகள் மட்டுமின்றி, வங்காளதேசம், இந்தோனேசியா, ஜப்பான், பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் மக்கள்தொகை 100 மில்லியனுக்கு அதிகமாக உள்ளது. ஆசியாவின் மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 143 நபர்கள் ஆகும். இந்தியா, ஜப்பான், வங்காளதேசம் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் மிக அதிக மக்கள் அடர்த்தியைக் கொண்டுள்ளன. குறிப்பாக, ஆற்றுச் சமவெளிகள் மற்றும் தொழிற்பகுதிகள் அதிக மக்கள் அடர்த்தியைக் கொண்டுள்ளன. ஆசியாவின் உட்பகுதிகளில் மக்கள் அடர்த்தி மிகக் குறைந்து காணப்படுகின்றது.

சமயம் மற்றும் மொழி

இந்து, இஸ்லாம், புத்தம், கிறித்துவம், மற்றும் சீக்கிய சமயங்கள் பெரும்பான்மையான மக்கள் பின்பற்றும் சமயங்கள் ஆகும். மற்ற சமயங்களான ஜொராஸ்டிரியனிசம், சமணம், ஷின்டோயிசம், கன்பூஷியானிசம் மற்றும் டாவோயிசம் ஆகியனவும் ஆசியாவில் பின்பற்றப்படுகின்றன. மாண்டரின், ஆங்கிலம், இந்தோனேசியன், ஜப்பானிய மொழி, அரபு, கொரியா, வியட்நாமீய மற்றும் இந்தி போன்ற மொழிகள் ஆசியாவில் பரவலாகப் பேசப்படுகின்றன.

அங்கோர்வாட் :

இஃது உலக்ப் பாரம்பரிய தளமாகும். இரண்டாம் சூரியவர்மன் என்ற மன்னரால் கி.பி. (பொ.ஆ) 1100ம் ஆண்டில் கம்போடியாவில் கட்டப்பட்டது. கெமர் மொழியில் ‘அங்கோர்வாட்’ என்றால் ‘கோயில்களின் நகரம்’ எனப் பொருள். இதுவே உலகின் மிகப்பெரிய கோயிலாகும்.

கலை மற்றும் கட்டடக்கலை

ஆசியா மூன்று நாகரிகங்களின் தாயகமாகும். (மெசபடடோமியன், சிந்து சமவெளி மற்றும் சீன நாகரிகங்கள்) இம்மூன்று நாகரிகங்களும் தொடக்கக் காலங்களிலேயே கட்டடக்கலைக்குப் பெரும் பங்காற்றின. உலக அதிசயங்களில் இரண்டு அதிசயங்கள் (இந்தியாவிலுள்ள தாஜ்மகால் மற்றும் சீனப்பெருஞ்சுவர்) ஆசியாவில் உள்ளன. ஏமன் நாட்டு மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வானுயர்ந்த மண் கோபுரத்தைக் கட்டினர். கம்போடியாவிலுள்ள அங்கோர்வாட், கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலுள்ள புத்த மடாலயங்கள், மேற்கு ஆசியாவிலுள்ள மசூதிகள் மற்றும் இந்தியாவிலுள்ள கோவில்களும், கோட்டைகளும் ஆசியக் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

உணவு

அரிசி, கோதுமை, சோளம் மற்றும் பார்லி ஆகியன ஆசியாவின் முதன்மையான உணவுகளாகும். இவைமட்டுமின்றி, பால் பொருட்கள், பழங்கள் மற்றும் கொட்டைகள் ஆகியனவற்றையும் உண்கின்றனர். கிழக்கு ஆசியாஇல் அரிசி கிடைக்கப்பெறாத இடங்களில் ரொட்டி மற்றும் நூடுல்ஸ் போன்ற உணவுகளை உண்கின்றனர். தேயிலை, காப்பி மற்றும் பச்சைத் தேயிலை ஆகியன முக்கிய பானங்களாகும். மேற்கு ஆசியாவில் மாமிசம், மூலிகைகள், ஆலிவ் எண்ணெய் ஆகியன உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் முதன்மைப் பொருட்களாகும்.

நடனம் மற்றும் இசை

  • ஆசியாவில் யாங்கி, டிராகன் நடனம், கபாகி போன்ற நடனங்கள் கிழக்காசியாவில் புகழ்பெற்ற நடனங்கள் ஆகும். தாய்லாந்தின் ராம் தாய், இந்தியாவில் பாங்க்ரா, கதக் மற்றும் பரதநாட்டியம் ஆகியவையும் ஆசியாவின் முக்கிய நடனங்கள் ஆகும்.
  • மேற்கு ஆசியாவில் சூஃபி இசை மற்றும் அரேபிய பாரம்பரிய இசை போன்றவை பொதுவாகக் காணப்படுகின்றன. பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய நடனம் ‘டினிக்லிங்’ ஆகும்.

திருவிழாக்கள்

சீனா, வியட்நாம் மற்றும் தைவானின் நடு இலையுதிர்கால பண்டிகை அல்லது நிலவு பண்டிகை, இந்தியாவின் பெரும்பான்மையான இடங்களில் ஹோலி மற்றும் மகர சங்கராந்தி/பொங்கல் , இஸ்ரேலின் சுக்கோத் போன்றவை ஆசியாவின் அறுவடைத் திருவிழாக்கள் ஆகும். பனிச் சிற்ப விழா, சீனப்புத்தாண்டு, தைப்பூசம், தீபாவளி, தைவான் விளக்குத் திருவிழா, சங்கிரான் மற்றும் குளிர்கால விளக்குத் திருவிழா போன்றன ஆசியாவின் புகழ்பெற்ற திருவிழாக்களாகும்.

வேற்றுமையின் இருப்பிடம்

உலகின் மிகப்பெரிய கண்டம் ஆசியாவாகும். அது மலைகள், பீடபூமிகள், சமவெளிகள், பள்ளத்தாக்குகள், விரிகுடாக்கள், தீவுகள் போன்ற பல்வேறுபட்ட நிலத்தோற்றங்களைக் கொண்டது. நிலநடுக்கோட்டிலிருந்து துருவப் பகுதி வரை பல்வேறு காலநிலைகளை உள்ளடக்கியது. இவைமட்டுமின்றி, பல இனங்கள், மொழிகள், சமயங்கள் மற்றும் கலாச்சாரங்களைப் பின்பற்றும் மக்கள் வாழும் இடமாகத் திகழ்கின்றது. எனவே ஆசியா கண்டம், ‘வேற்றுமையின் இருப்பிடம்’ என அழைக்கப்படுகின்றது.

ஆசியா மற்றும் ஐரோப்பா – ஓர் ஒப்பீடு

  • ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டங்கள் புவியியல் அமைப்பினால் ஒன்றுபட்டும், அரசியல் பிரிவுகளால் பிரிக்கப்பட்டும் உள்ளன.
  • ஆசியாவின் மிகப்பெரிய தீபகற்பமாக ஐரோப்பா திகழ்கின்றது. ஆசியாவின் இமயமலையும், ஐரோப்பாவின் ஆல்ப்ஸ் மலையும் ஒரே புவியியல் காலகட்டத்தில் தோன்றியவை.
  • ஸ்டெப்பி புல்வெளிகளும், ஊசியிலைக் காடுகளும் பல நூறு கிலோமீட்டர், ஐரோப்பாவிலிருந்து ஆசியா வரை பரவிக் காணப்படுகின்றன. இவ்விரு கண்டங்களிலும் சமவெளிகள் வடக்குப்பகுதியிலும், மலைகள் தெற்குப் பகுதியிலும் காணப்படுகின்றன.
  • ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டங்கள் பண்டைய நாகரிகங்கள் தோன்றிய இடங்களாகும். பண்டைய காலம் முதலே இவ்விரு கண்டங்களும் நறுமணப்பாதை மற்றும் பட்டுப்பாதை மூலம் வணிகத்தொடர்பு கொண்டிருந்தன. புவியியல் அமைப்பில் இவை இரண்டும் பலவகைகளில் ஒன்றுபட்டுக் காணப்பட்டாலும் இவ்விரண்டு கண்டற்களுக்கிடையே குறிப்பிடத்தக்க வேற்றுமைகளும் காணப்படுகின்றன.
ஆசியா ஐரோப்பா
  1. ஆசியா பரப்பு மற்றும் மக்கள்தொகை ஆகியவற்றின் அடிப்படையில் மிகப்பெரிய கண்டமாகும்.
  2. 10011’ தெ முதல் 81012’ வ அட்சம் வரையிலும் பரவியுள்ளது. அதாவது, நிலநடுக்கோட்டு பகுதி முதல் துருவப்பகுதி வரை பரவிக்காணப்படுகின்றது.
  3. இது கிழக்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ளது.
  4. பேரிங் நீர்ச்சந்தி ஆசியாவை வடஅமெரிக்காவிலிருந்து பிரிக்கின்றது.
  5. அரேபிய, இந்தோ-சீனா, இந்தியா மற்றும் கொரியா போன்றவை ஆசியாவின் முக்கிய தீபகற்பங்களாகும்.
  6. நிலநடுக்கோடு, கடகரேகை, ஆர்டிக் வட்டம் ஆகியு மிக முக்கிய அட்சக்கோடுகள் இதன் வழியே கடந்து செல்கின்றன.
  7. இங்கு அனைத்து வகைக் காலநிலைகளும் காணப்படுகின்றன. இக்கணடம் தனித்துவமிக்க பருவமழை காலநிலையையும் பெற்றுள்ளது. தெற்கு ஆசியா கோடைகால மழையைப் பெறுகின்றது.
  8. இங்கு வெப்ப மற்றும் குளிர் பாலைவனங்கள் உள்ளன.
  9. அதிக கனிம இருப்பைக் கொண்டது.
  10. தோட்டப் பயிர்களான தேயிலை, ரப்பர் மற்றும் பேரீச்சம் பழம் அதிகம் விளைவிக்கப்படுகின்றன.
  11. ஆசியாவின் பெரும்பான்மையான மக்கள் முதல்நிலைத் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.
  1. ஐரோப்பா பரப்பின் அடிப்படையில் மிகச் சிறியது. ஆனால் நன்கு வளர்ச்சியடைந்த கண்டமாகும்.
  2. 34051’ வ முதல் 81047’ வ அட்சம் வரை பரவியுள்ளது. அதாவது மிதவெப்ப மண்டலம் முதல் துருவப்பகுதி வரை பரவியுள்ளது.
  3. இது புவியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
  4. ஜிப்ரால்டர் நீர்ச்சந்தி ஐரோப்பாவை ஆப்பிரிக்காவிடமிருந்து பிரிக்கின்றது.
  5. ஸ்காண்டிநேவியன், ஐபீரியன், இத்தாலி மற்றும் பால்கன் போன்றவை ஐரோப்பாவின் முக்கிய தீபகற்பங்களாகும்.
  6. ஆர்டிக் வட்டம் மட்டுமே இதன் வழியே கடக்கின்றது.
  7. இது அதிகமாக மிதவெப்ப மண்டலத்தில் அமைந்துள்ளது. தனித்துவமிக்க மத்திய தரைக்கடல் காலநிலையைக் கொண்டது. தெற்கு ஐரோப்பா குளிர்கால மழையைப் பெறுகின்றது.
  8. இங்கு பாலைவனங்களே இல்லை.
  9. நிலக்கரி மற்றும் இரும்பு தவிர அளவான கனிம வளத்தைக் கொண்டுள்ளது.
  10. சிட்ரஸ் பழங்கள், ஆலிவ் மற்றும் திராட்சை ஆகியன ஐரோப்பாவில் அதிகம் பயிரிடப்படுகின்றன.
  11. ஐரோப்பாவில் பெரும்பான்மையான மக்கள் இரண்டாம்நிலை மற்றும் மூன்றாம்நிலைத் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!