Indus Valley Civilization Notes - சிந்து சமவெளி நாகரிகம் பாடக்குறிப்புகள்Tnpsc

சிந்துவெளி நாகரிகம் Notes 6th Social Science

6th Social Science Lesson 3 Notes in Tamil

3] சிந்துவெளி நாகரிகம்

மேலே குறிப்பிட்ட அனைத்து நாகரிகங்களும் நதிக்கரை நாகரிகங்கள் ஆகும். தொடக்கத்தில் மனிதர்கள் குழுக்களாக வாழ்ந்தார்கள். அக்குழுக்களில் இருந்து சமுதாயங்கள் உருவாகின. பின் அவை சமூகங்களாக வளர்ந்து காலப்போக்கில் நாகரிகங்களாயின.

மக்கள் ஏன் நதிக்கரையில் குடியேறினர்?

மனிதர்கள் தங்கள் குடியேற்றங்களாக நதிக் கரைகளைக் கீழ்க்கண்ட காரணங்களுக்காகத் தேர்ந்தெடுத்தார்கள்.

  • வளமான மண்
  • ஆறுகளில் பாயும் நன்னீர் குடிப்பதற்கும் கால்நடைகளின் தேவைகளுக்கும், நீர்ப்பாசனத்திற்கும் பயன்பட்டன.
  • போக்குவரத்துக்கு ஏற்ற வழிகளாக இருந்தன.

ஹரப்பா – புதையுண்ட நகரம்

  • ஹரப்பா நகரத்தின் இடிபாடுகளை முதன்முதலில் சார்லஸ் மேசன் என்ற ஆங்கிலேயர் தமது நூலில் விவரித்தார். அவர் கிழக்கிந்தியக் கம்பெனியில் பணிபுரிந்த படைவீரரும், ஆராய்ச்சியாளரும் ஆவார். அவர் தற்போது பாகிஸ்தானில் உள்ள இந்தியாவின் வடமேற்கு பகுதியைப் பார்வையிட்டபோது சில செங்கல் திட்டுகள் இருப்பதைக் கண்டார்.

  • “அந்தப் பாழடைந்த செங்கற்கோட்டை உயரமான சுவர்களுடனும், கோபுரங்களுடனும் ஒரு மலை மீது கட்டப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டார். இதுதான் ஹரப்பா இருந்ததற்கான முதல் வரலாற்றுச் சான்று ஆகும்.
  • கி.பி,. (பொ.ஆ) 1856-இல் பொறியாளர்கள் லாகூரில் இருந்து கராச்சிக்கு இரயில் பாதை அமைக்கும் பொருட்டு நிலத்தைத் தோண்டிய பொழுது அதிகமான சுட்ட செங்கற்கள் கண்டறியப்பட்டன. அவர்கள் அவற்றின் முக்கியத்துவத்தை உணராமல், அவற்றை இரயில் பாதைக்கு இடையில் போடப்படும் கற்களுக்குப் பதிலாக பயன்படுத்தினர்.
  • கி.பி.(பொ.ஆ) 1920இல் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ நகரங்களை அகழாய்வு செய்ய ஆரம்பித்தனர். அப்பொழுது நீண்டநாள் மறைந்து கிடந்த நகரத்தின் எஞ்சிய பகுதிகளை உலகின் பார்வைக்குக் கொண்டு வந்தார்கள்.
  • 1924இல் இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் இயக்குநர் ஜான் மார்ஷல் ஹரப்பாவிற்கும், மொகஞ்ச-தாரோவிற்கும் இடையே பொதுவான அம்சங்கள் இருப்பதைக் கண்டறிந்தார்.
  • அவை இரண்டுமே ஒரு பெரிய நாகரிகத்தைச் சார்ந்த வெவ்வேறு பகுதிகள் என்ற முடிவுக்கு வந்தார். ஹரப்பாவிலும், மொகஞ்சதாரோவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மட்பாண்டங்களுக்கிடையே சிறிய அளவு வேறுபாடு இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். எனவே, ஹரப்பா நாகரிகம் மொகஞ்சதாரோவை விடப் பழமையானது என முடிவுக்கு வருகின்றனர்.
  • நாகரிகம் என்ற சொல் பண்டைய லத்தீன் மொழிச் சொல்லான ‘சிவிஸ்’ (CIVIS) என்பதிலிருந்து வந்தது. இதன் பொருள் ‘நகரம்’ ஆகும்.

தொல்லியலாளர்கள் எவ்வாறு புதையுண்ட நகரத்தைக் கண்டு பிடிக்கிறார்கள்?

  • அகழ்வாராய்ச்சியாளர்கள் செங்கற்கள், கற்கள், உடைந்த பானை ஓடுகள் போன்றவற்றை ஆராய்ந்து அவை பயன்படுத்தப்பட்ட காலத்தை அறிந்து கொள்கிறார்கள்.
  • பண்டைய இலக்கிய ஆதாரங்களைப் பயன்படுத்துகின்றனர்.
  • வான் வழிப் புகைப் படங்கள் மூலம் புதையுண்ட நகரங்கள் மற்றும் இடங்களின் மேற்பரப்பைக் கண்டறிந்து கொள்கிறார்கள்.
  • நிலத்தடியை ஆய்வு செய்ய காந்தப்புல வருடியை (Magnetic scanner) பயன்படுத்துகின்றனர்.
  • எஞ்சிய தொல்பொருள் புதையுண்டு இருக்கின்றனவா இல்லையா என்பதை ரேடார் கருவி மூலம் அறிய முடியும் (தொலை நுண்ணுணர்வு முறை)

கால வரையறை

புவி எல்லை – தெற்கு ஆசியா

காலப்பகுதி – வெண்கலக்காலம்

காலம் – கி.மு. (பொ.ஆ.மு) 3300 – 1900 (கதிரியக்க கார்பன் வயதுக் கணிப்பு முறை மூலம் முடிவு செய்யப்பட்டது)

பரப்பு – 13 லட்சம் சதுர கி.மீ

நகரங்கள் – 6 பெரிய நகரங்கள்

கிராமங்கள் – 200க்கும் மேற்பட்டவை

வெண்கலக் காலம் என்பது, மக்கள் வெண்கலத்தாலான பொருள்களைப் பயன்படுத்திய காலம் ஆகும்.

இந்திய எல்லைகளில் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்

நகர நாகரிகம்

ஹரப்பா நாகரிகம் ஒரு நகர நாகரிகம் எனலாம். அதற்கான காரணங்கள்:

  • சிறப்பான நகரத் திட்டமிடல்
  • சிறப்பான கட்டிடக்கலை வேலைப்பாடு
  • தூய்மைக்கும், பொதுச் சுகாதாரத்திற்கும் கொடுக்கப்பட்ட அதிக முன்னுரிமை
  • தரப்படுத்தப்பட்ட எடைகள் மற்றும் அளவீடுகள்
  • விவசாய மற்றும் கைவினைத் தொழில்களுக்கானத் திடமான அடித்தளம்

ஹரப்பா நாகரிகத்தின் தனித்தன்மை

சிந்துவெளி நாகரிகத்தின் சிறப்பம்சமே திட்டமிட்ட நகர அமைப்பு ஆகும். நகரம் திட்டமிடப்பட்ட இரண்டு பகுதிகளாக இருந்தது.

மெஹர்கர் – சிந்துவெளி நாகரிகத்துக்கு முன்னோடி

மெஹர்கர் புதிய கற்கால மக்கள் வாழ்ந்த ஓர் இடம் ஆகும். இது பாகிஸ்தான் நாட்டில் பலுச்சிஸ்தான் மாநிலத்தில் போலன் ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இது தொடக்க கால மனிதர்கள் வாழ்ந்ததாகக் கண்டறியப்பட்ட இடங்களுள் ஒன்று. மக்கள் வேளாண்மையிலும் , கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டதற்கான சான்று இங்கு கிடைத்துள்ளது. கி.மு. (பொ.ஆ.மு) 7000-ஐ ஒட்டிய காலத்திலேயே மெஹெர்கரில் நாகரிகத்துக்கு முந்தைய வாழ்க்கை நிலவியதற்கான தொல்லியல் சான்றுகள் கண்டிபிடிக்கப்பட்டுள்ளன.

தெருக்களும் வீடுகளும்

  • தெருக்கள் சட்டக வடிவமைப்பைக் கொண்டிருந்தன.
  • தெருக்கள் நேராக அமைக்கப்பட்டிருந்தன. அவை வடக்கு தெற்காகவும், கிழக்கு மேற்காகவும் சென்றன. ஒன்றை ஒன்று செங்கோணத்தில் வெட்டிக் கொள்ளும் படியும் இருந்தன.
  • சாலைகள் அகலமாகவும் வளைவான முனைகளைக் கொண்டதாகவும் இருந்தன.
  • வீடுகள், தெருக்களின் இரு ஓரங்களிலும் சீராக அமைக்கப்பட்டிருந்தன. வீடுகள் ஒன்று அல்லது இரண்டு மாடி அடுக்களை உடையனவாகக் காணப்படுகின்றன.
  • பெரும்பாலான வீடுகள் பல அறைகளையும் ஒரு முற்றத்தையும் ஒரு கிணற்றையும் கொண்டிருந்தன. ஒவ்வொரு வீட்டிலும் கழிவறையும், குளியலறையும் இருந்திருக்கின்றன
  • வீடுகள் சுட்ட செங்கற்களாலும் சுண்ணாம்புக் கலவையாலும் கட்டப்பட்டிருந்தன. சூரிய வெப்பத்தில் உலர வைக்கப்பட்ட செங்கற்களும் பயன்படுத்தப்பட்டன. பெரும்பாலான செங்கற்கள் சீரான அளவுகள் உடையதாகவே இருந்தன. கூரைகள் சமதளமாக இருந்தன.
  • அரண்மனைகளோ, வழிபாட்டுத்தலங்களோ இருந்ததைத் தீர்மானிக்கக் கூடிய சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை.

கட்டடங்கள் கட்டுவதற்கு ஏன் சுட்ட செங்கற்கள் பயன்படுத்தப்படுகின்றன?

ஏனென்றால், அவை வலுவானவை., கடினமானவை, நிலைத்து நிற்கக் கூடியவை, நெருப்பைக் கூடத் தாங்குபவை. மேலும், அவை நீரினால் கரைவதில்லை.

கழிவு நீர் அமைப்பு

  • ஏறத்தாழ எல்லா நகரங்களிலும் மூடப்பட்ட கழிவு நீர் வடிகால் அமைப்பு இருந்தது. வடிகால்கள் செங்கற்களைக் கொண்டும் கல்தட்டைகளைக் கொண்டும் மூடப்பட்டிருந்தன.
  • வடிகால் கழிவு நீர் தேங்காமல் செல்ல வசதியாக லேசான மென்சரிவைக் கொண்டிருந்தது. கழிவுப் பொருள்களை அப்புறப்படுத்துவதற்கான துளைகளும் சரியான இடைவெளியில் அமைக்கப்பட்டிருந்தன.
  • வீட்டிலிருந்து கழிவுநீர் பல தெருக்களின் கீழ் அமைக்கப்பட்டிருந்த குழாய்கள் மூலமாக முக்கிய வடிகால்களைச் சென்றடையுமாறு அமைக்கப்பட்டிருந்தது.
  • ஒவ்வொரு வீட்டிலும் திடக் கழிவுகளைத் தேக்குவதற்கான குழிகள் இருந்தன. அவை திடக்கழிவுகளைத் தேக்கி, கழிவு நீரை மட்டும் வெளியேற்றின.

பெருங்குளம் – கொகஞ்ச-தாரோ

  • இந்த பெருங்குளமானது நன்கு அகன்று, செவ்வக வடிவத்தில் அமைந்திருந்த நீர்த்தேக்கம் ஆகும். இது நகரின் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. நீர் கசியாத கட்டுமானத்துக்கான மிகப் பழமையான சான்று எனலாம்.
  • இக்குளத்தின் சுவர்கள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டு, நீர் கசியாமல் இருப்பதற்காக சுவரிலும், தளத்திலும் பல அடுக்குகள் இயற்கைத் தார் கொண்டு பூசப்பட்டிருந்தன.
  • வடபுறத்திலிருந்தும், தென்புறத்திலிருந்தும் குளத்திற்குச் செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. குளத்தின் பக்கவாட்டில் மூன்று புறமும் அறைகள் உள்ளன.
  • அருகில் இருந்த கிணற்றில் இருந்து நீர் இறைக்கப்பட்டு பெருங்குளத்தில் விடப்பட்டது. உபயோகப்படுத்தப்பட்ட நீர் வெளியேறவும் வகை செய்யப்பட்டிருந்தது.

தானியக் களஞ்சியம் – ஹரப்பா

  • தானியக் களஞ்சியம் – செங்கற்களால் அடித்தளமிடப்பட்ட, பெரிய, உறுதியான கட்டட அமைப்பு.
  • இவை தானியங்களைச் சேகரித்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டன.
  • தள வெடிப்புகளில் கோதுமை, பார்லி, தினைவகைகள், எள் மற்றும் பருப்பு வகைகளின் மிச்சங்கள் சிதறிக் காணப்பட்டன.
  • செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களைக் கொண்ட தானியக் களஞ்சியம் ஒன்று ஹரியானா மாநிலத்தில் உள்ள ராகிகர்கியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முதிர்ச்சியடைந்த ஹரப்பா காலத்தைச் சார்ந்தது.

மாபெரும் கட்டடங்கள்

மொகஞ்ச-தாரோவில் இருந்த இன்னொரு மிகப்பெரும் பொதுக் கட்டடம், கூட்ட அரங்கு ஆகும்.

இது 20 தூண்கள் 4 வரிசைகளை கொண்டு பரந்து விரிந்த கூடம் ஆகும்.

வணிகம் மற்றும் போக்குவரத்து

  • ஹரப்பா மக்கள் பெரும் வணிகர்களாக இருந்தனர்.
  • தரப்படுத்தப்பட்ட எடைகள் மற்றும் அளவைகள் அவர்களால் பயன்படுத்தப்பட்டது. பொருட்களின் நீளத்தை அளவிட, அளவுகள் குறிக்கப்பட்ட குச்சிகளைப் பயன்படுத்தினர்.
  • அவர்கள் சக்கர வண்டிகளைப் பயன்படுத்தினர். ஆரக்கால் இல்லாத, திடமான சக்கரங்களைப் பயன்படுத்தினர்.
  • மெசபடோமியாவுடன் விரிவான கடல் வணிகம் நடைபெற்றிருக்கிறது. சிந்துவெளி முத்திரைகள் தற்கால ஈராக், குவைத் மற்றும் சிரியா ஆகிய பகுதிகளைக் குறிக்கும் பண்டைய மெசபடோமியாவில் உள்ள சுமேர் பகுதிகளில் கிடைத்துள்ளமை இதை உறுதிப்படுத்துகிறது.
  • சுமேரியாவின் அக்காடியப் பேரரசிற்குட்பட்ட அரசன் நாரம் –சின் என்பவர் சிந்துவெளிப் பகுதியிலுள்ள மெலுக்கா என்னுமிடத்தில் இருந்து அணிகலன் வாங்கியதாக நாரம் – சின் குறித்த காவியத்தில் கூறப்பட்டுள்ளது.
  • போக்குவரத்திற்குக் காளைகளைப் பயன்படுத்தினர்.
  • பாரசீக வளைகுடா மற்றும் மெசபடோமியாவில் கண்டுபிடிக்கப்பட்டதைப் போன்று உருளை வடிவ முத்திரைகள் சிந்து வெளிப்பகுதியிலும் காணப்படுகின்றன. இது இந்த இரு பகுதிகளுக்கும் இடையில் வணிகம் நடைபெற்றதைக் காட்டுகிறது.

கப்பல் கட்டும் தளம் – லோத்தல்

தற்கால குஜராத்திலுள்ள லோத்தலில் கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அவர்கள் மேற்கொண்ட கடல் வணிகத்தை உறுதிப்படுத்துகிறது..

லோத்தல் என்னும் இடம் குஜராத்தில் சபர்மதி ஆற்றின் ஒரு துணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

மொகஞ்ச-தாரோ-தலைவர்

  • அமர்ந்த நிலையில் உள்ள ஓர் ஆண் சிலை மொகஞ்ச-தாரோவில் உள்ள ஒரு கட்டிடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • அது நெற்றியில் ஒரு தலைப்பட்டையுடனும் வலது கை மேல்பகுதியில் ஒரு சிறிய அணிகலனுடனும் காணப்படுகிறது.
  • அதன் தலை முடியும், தாடியும் நன்றாக ஒழுங்குபடுத்தபட்டு காணப்படுகிறது.
  • காதுகளின் கீழ் காணப்படும் இரு துளைகள், தலையில் அணியப்படும் அணிகலனைக் காதுவரை இணைக்க ஏற்படுத்தப்பட்டிருக்கலாம்.
  • இடதுதோள் பூக்கள் மற்றும் வளையங்களின் வடிவமைப்பில் அலங்கரிக்கப்பட்ட ஒரு மேலங்கியால் மூடப்பட்டுள்ளது.
  • இது போன்ற வடிவமைப்பு அப்பகுதியில் உள்ள மக்களால் இன்றளவும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது

தொழில்நுட்பம்

  • சிந்துவெளி நாகரிக மக்கள் தரப்படுத்தப்பட்ட எடைகள் மற்றும் அளவீடுகளை உருவாக்கினர்.
  • குஜராத் மாநிலத்தில் உள்ள லோத்தலில் கண்டுபிடிக்கப்பட்ட தந்தத்தினாலான அளவுகோல் 1704 மி.மீ. வரை சிறிய அளவீடுகளைக் கொண்டுள்ளது. (அதன் சமகாலத்திய நாகரிகங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அளவுகோல்களில் இது தான் மிகச் சிறிய பிரிவு ஆகும்)
  • மனிதர்களால் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட உலோகம் – செம்பு.

மொகஞ்ச-தாரோவில் வெண்கலத்தால் ஆன இந்த சிறிய பெண் சிலை கிடைத்தது. ‘நடன மாது’ என்று குறிப்பிடப்படுகிற இந்தச் சிலையைப் பார்த்த சர் ஜான் மார்ஷல் “முதலில் இந்தச் சிலையை நான் பார்த்தபொழுது இது வரலாற்றிற்கு முந்தைய காலத்தின் உருவாக்க முறையைச் சார்ந்தது என்று நம்புவதற்குக் கடினமாக இருந்தது. ஏனெனில் இதுபோன்று உருவாக்கம் பண்டைய மக்களுக்கு கிரேக்க காலம் வரை தெரியவில்லை. இவை ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என நினைத்தேன். இச்சிலைகள் அக்காலகட்டத்துக்கு உரியதாகவே இருந்தன” என்றார்.

கே.வி.டி. (கொற்கை – வஞ்சி – தொண்டி) வளாகம்: பாகிஸ்தானில் இன்றும் கொற்கை, வஞ்சி, தொண்டி, மத்ரை , உறை, கூடல்கர் என்ற பெயர் கொண்ட இடங்கள் உள்ளன. கொற்கை, பூம்புகார் போன்ற சங்க கால நகரங்கள் மற்றும் துறைமுகங்களின் பெயர்களுடன் உள்ள இடங்கள் ஆப்கானிஸ்தானில் உள்ளன. ஆப்கானிஸ்தானில் உள்ள ஆறுகளான காவ்ரி, பொருண்ஸ் மற்றும் பாகிஸ்தானில் உள்ள ஆறுகளான காவிரி வாலா மற்றும் பொருனை ஆகிய பெயர்கள் தமிழிச் சொற்களை முழுமையாகப் பிரதிபலிக்கின்றன.

சிந்துவெளி நாகரிகத்தின் மறைந்த பொக்கிஷங்கள்

பழங்கால எழுத்துக்களைப் படிப்பதன் மூலம் அக்கால நாகரிகத்தை நாம் அறிந்துகொள்ளலாம். ஆனால் சிந்துவெளி எழுத்துகளை இன்றுவரை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே, சிந்துவெளி மக்களின் வாழ்க்கை முறையை அறிவதற்கு வேறு ஏதாவது சான்றுகளையே நாம் நோக்க வேண்டி உள்ளது.

உடை

  • பொதுவாக பருத்தி ஆடைகளே பயன்பாட்டில் இருந்தன.
  • அங்கு கண்டுபிடிக்கப்பட்ட நூலைச் சுற்றி வைப்பதற்கான சுழல் அச்சுக்கள் மூலம் அவர்கள் நூற்கவும் செய்திருக்கின்றனர் என்று தெரிகிறது.
  • கம்பளி ஆடைகளும் உபயோகப்படுத்தப்பட்டன.

அன்பும் அமைதியும்

  • குடியிருப்புகள் தரைமட்டத்திலிருந்து நன்கு உயர்த்தப்பட்ட தளங்களில் கட்டப்பட்டிருந்தன.
  • சிந்துவெளி மக்கள் அமைதியான வாழ்க்கை வாழ்ந்திருப்பதாகவே தோன்றுகிறது. ஏனென்றால் அவர்களிடம் படை இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. மேலும் சில ஆயுதங்கள் மட்டுமே அங்கிருந்து கிடைத்துள்ளன.
  • அவர்கள் தங்களின் மேம்பட்ட நிலையை அவர்களுடைய ஆடைகள், விலைமதிப்பற்ற நகைகள் மற்றும் மேம்பட்ட நகர வாழ்க்கை மூலம் வெளிப்படுத்தினர்.

அணிகலன்கள்

  • ஆண், பெண் இருபாலரும் ஆபரணங்களை விரும்பி அணிந்திருக்கின்றனர்.
  • கழுத்தணிகள், கையணிகள், வளையல்கள், மோதிரங்கள், காதணிகள் மற்றும் காலணிகள் முதலியவறையும் அணிந்தனர். தங்கம், வெள்ளி, தந்தம் , சங்கு, செம்பு , சுடுமண் மற்றும் விலையுயர்ந்த கற்களால் அணிகலன்கள் செய்யப்பட்டிருந்தன.

அவர்களை நிர்வகித்தது யார்?

நகரத் திட்டமிடலை நிர்வகிக்கவும், வணிகத்தை மேம்படுத்தவும், நகரத்தில் அமைதியை நிலைநாட்டவும், வடிகால் அமைப்பைப் பராமரிக்கவும், ஓர் அதிகார மையம் இருந்து இருக்கவேண்டும் என்று வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர்.

  • சிந்துவெளி மக்கள் இரும்பு மற்றும் குதிரையை அறிந்திருக்கவில்லை.
  • சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய சிவப்பு நிற மணிக்கற்களைப் (carnelian) பயன்படுத்தினர்.

தொழில்

  • சிந்துவெளி மக்களின் முதன்மையான தொழில் பற்றி எதுவும் தெரியவில்லை, எனினும் வேளாண்மை, கைவினைப் பொருள்கள் செய்தல், பானை வனைதல், அணிகலன்கள் செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டனர் என தெரிகிறது.
  • அங்கு வர்த்தகர்கள், வணிகர்கள் மற்றும் கைவினைஞர்களும் இருந்துள்ளனர்.
  • கால்நடை வளர்ப்பும் அவர்களது தொழிலாக இருந்தது.
  • அவர்கள் சக்கரத்தின் பயனையும் அறிந்திருந்தனர்.

மட்பாண்டங்கள்

  • மட்பாண்டங்களைச் சக்கரங்கள் கொண்டு உருவாக்கினர். அவை தீயிலிட்டுச் சுடப்பட்டன.
  • மட்பாண்டங்கள் சிவப்பு வண்ணத்தில் இருந்தன. அதில் கருப்பு வண்ணத்தில் அழகிய வேலைப்பாடுகளைச் செய்தனர்.
  • அங்கு கிடைந்த உடைந்த பானைத் துண்டுகள் விலங்குகளின் உருவங்களுடனும், வடிவியல் வடிவமைப்புகளுடனும் காணப்படுகின்றன.

சமய நம்பிக்கை

  • சிந்துவெளி மக்களின் வழிபாடு மற்றும் அவர்களின் மத நடைமுறைகள் பற்றி அறிய எந்த ஓர் ஆதாரமும் கிடைக்கவில்லை.
  • அங்கு கிடைக்கப்பெற்ற பெண் சிலைகள் மூலம் சிந்துவெளி மக்களிடையே தாய் தெய்வ வழிபாடு இருந்திருக்கலாம் எனத் தெரிகிறது.

கலைகள்

பொம்மை வண்டிகள், தலையையும், கால்களையும் அசைக்கக்கூடிய பசுபொம்மைகள், களிமண் பந்துகள், சிறிய பொம்மைகள், சிறிய களிமண் குரங்கு, சுடுமண் பொம்மைகள், கொட்டைகளைக் கொறிக்கும் அணில் பொம்மைகள், மண்ணால் ஆன நாய்கள், நடனமாடும் ஆண் பொம்மை போன்றவையும் கிடைத்துள்ளன.

சுடுமண்ணால் செய்யப்பட்ட பல்வேறு வகையான பொம்மைகள் மக்களின் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு ஆர்வத்தைக் காட்டுகின்றன.

ஹரப்பா நாகரிகத்திற்கு நடந்தது என்ன?

கி.மு. (பொ.ஆ.மு) 1900ஆம் ஆண்டில் ஹரப்பா நாகரிகம் சரியத் தொடங்கியது. அதற்குக் கீழ்க்கண்டவை காரணங்களாக அமைந்திருக்கலாம்.

  • ஆற்றின்கரையில் உள்ள அதன் நகரங்களில் அடிக்கடி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு
  • சுற்றுச்சூழல் மாற்றம்
  • படையெடுப்பு
  • இயற்கைச் சீற்றங்கள்
  • காலநிலை மாற்றம்
  • காடுகள் அழிதல்
  • தொற்றுநோய்த் தாக்குதல்.
  • முதல் எழுத்து வடிவம் சுமேரியர்களால் உருவாக்கப்பட்டது.
  • மொகஞ்ச-தாரோவில் தொல்பொருள் ஆராய்ச்சி நடைபெறும் இடம் உலகப் பாரம்பரியத் தளமாக யுனெஸ்கோ அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

சிந்துவெளி நாகரிகம் – பொதுவான உண்மைகள்

  • உலகின் மிகப்பழமையான நாகரிகங்களில் ஒன்று.
  • பழமையான நான்கு நாகரிகங்களில் பெரிய பரப்பளவு கொண்டது.
  • உலகின் முதல் திட்டமிடப்பட்ட நகரங்கள்.
  • மேம்பட்ட சுகாதாரம் மற்றும் வடிகால் அமைப்பு.
  • சுத்தம் மற்றும் சுகாதாரம் பற்றிய உணர்வு மேலோங்கியிருந்தது.

கதிரியக்க கார்பன் வயதுக்கணிப்பு முறை – தொல்லியல் ஆய்வாளர்களுக்கான தரப்படுத்தப்பட்ட முறை

கார்பனின் கதிரியக்க ஐசோடோப் ஆன கார்பன்14 ஐப் பயன்படுத்தி, ஒரு பொருளின் வயதை அறியும்முறை கதிரியக்க கார்பன்முறை அல்லது கார்பன்14(C14) முறை என்று அழைக்கப்படுகிறது.

2 Comments

  1. எதனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே தமிழ் நாட்டிலே

  2. முதல் எழுத்து வடிவம் சுமேரியர்களால் உருவாக்கப்பட்டது… வரலாறு மாறும் காலம் எது ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!