Samacheer NotesTnpsc

தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் Notes 7th Social Science Lesson 1 Notes in Tamil

7th Social Science Lesson 1 Notes in Tamil

1] தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

  1. பிற்காலச் சோழர்கள்:

அறிமுகம்:

தென்னிந்திய வரலாற்றில் பிரபலமான நன்கறியப்பட்ட முடியாட்சி அரசுகளில் சோழர் அரசும் ஒன்றாகும். அவர்களின் அரசுக் கட்டமைப்பு விரிவானது. நீர்பாசன அமைப்புமுறை விரிந்து பரந்தது. அதிக எண்ணிக்கையிலான கோவில்களை அவர்கள் கட்டியுள்ளனர். கலை மற்றும் கட்டடக்கலைக்குச் சோழர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். கடல் கடந்து அவர்கள் சாதனைகள் பல புரிந்துள்ளனர். இவையனைத்தும் அவர்களுக்கு வரலாற்றில் ஒப்புயர்வில்லா இடத்தை வழங்கியுள்ளது.

சோழர்கள் ஆட்சியின் புத்தெழுச்சி:

பண்டைய சோழ அரசு காவிரி ஆற்றின் கழிமுகப்பகுதியை மையப்பகுதியாகக் கொண்டிருந்தது. அதன் தலைநகர் உறையூர் (இன்றைய திருச்சிராப்பள்ளி) ஆகும். கரிகாலனின் ஆட்சிக்காலத்தில் இவ்வரசு சிறப்பான இடத்தை வகித்தது. அவருக்குப் பின் வந்தோர் காலத்தில் படிப்படியாகச் சரிவினைச் சந்தித்தது. ஒன்பதாம் நூற்றாண்டில் காவிரிக்கு வடக்கே ஒரு சிறு பகுதியை ஆண்டு வந்த விஜயாலயன் சோழ வம்சத்தை மீட்டெழச்செய்தார். அவர் தஞ்சாவூரைக் கைப்பற்றி அதைத் தனது தலைநகராக ஆக்கினார். பிற்காலத்தில் முதலாம் ராஜேந்திரனும் அவருக்குப் பின்வந்தோரும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகராகக் கொண்டு சோழப்பேரரசை ஆட்சி செய்தனர்.

முதலாம் ராஜராஜன் (கி.பி. (பொ.ஆ) 985-1014) சோழப் பேரரசின் மாபெரும் வல்லமை பெற்ற பேரரசர் ஆவார். அவர் காலத்தை வென்ற புகழை ஈட்டினார். தென்னிந்தியாவின் பெரும் பகுதியின் மீது சோழர்களின் அதிகாரத்தை அவர் நிலைநாட்டினார். அவருடைய கப்பற்படையெடுப்புகள் மேலைக்கடற்கரையிலும் இலங்கையிலும் சோழர் ஆட்சி விரிவடைவதற்கு வழிவகுத்தன. புகழ்பெற்ற ராஜராஜேஸ்வரம் கோவிலைத் (பிரகதீஸ்வரர் கோவில்) தஞ்சாவூரில் கட்டினார். அவருடைய மகனும் அவருக்குப் பின்னர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றவருமான முதலாம் ராஜேந்திரன் (கி.பி (பொ.ஆ) 1014-1044) தந்தையைப் போலவே பேரரசை விரிவுபடுத்தி கைப்பற்றிய பகுதிகளை ஒருங்கிணைத்தார். அவருடைய ஆட்சிக்காலத்தில் சோழப்பேரரசு தென்னிந்தியாவில் ஒரு வலுவான சக்தியாக விளங்கியது கி.பி.(பொ.ஆ) 1023இல் அரியணை ஏறிய பின்னர் அவருடைய மிக முக்கியப் படையெடுப்பான வட இந்தியப் படையெடுப்பில் பல பகுதிகளைக் கைப்பற்றினார். கங்கை கொண்டான் (கங்கையைக் கைப்பற்றியவர்) என்று தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டார். வடஇந்தியப் போர்களில் பெற்ற வெற்றியின் நினைவாக கங்கைகொண்ட சோழபுரம் கோவில் எழுப்பப்பட்டது. அவருடைய கடற்படை ஸ்ரீவிஜயப் பேரரசைக் (தெற்கு சுமத்ரா) கைப்பற்ற அவருக்குத் துணை புரிந்தது. சோழர்களின் கடற்பகுதிகளின் மீதான கட்டுப்பாடு கடல் கடந்த வணிகம் செழித்தோங்க உதவியது.

சோழப்பேரரசின் சரிவு:

முதலாம் ராஜேந்திர சோழனைத் தொடர்ந்து பதவியேற்ற மூவரும் திறமை வாய்ந்த அரசர்களாக இல்லை. மூன்றாவதாகப் பதவி ஏற்ற வீர ராஜேந்திரனின் மகன் அதி ராஜேந்திரன் உள்நாட்டுக் கலகம் ஒன்றில் கொல்லப்பட்டார். அவருடன் விஜயாலயனின் வழிவந்தோரின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

அதிராஜேந்திரனின் மறைவைக் கேள்விப்பட்டவுடன் கீழைச் சாளுக்கிய இளவரசரான ராஜேந்திர சாளுக்கியன், சோழ அரியணையைக் கைப்பற்றினார். முதலாம் குலோத்துங்கன் எனும் பெயரில் சாளுக்கிய-சோழ வம்சத்தின் ஆட்சியை அவர் தொடங்கி வைத்தார். சோழ அரியணைக்கு ஏற்பட்டிருந்த அச்சுறுத்தல்களை விரைவில் ஒழித்துக்கட்டி முதலாம் குலோந்துங்கன் தனது நிலையை உறுதிப்படுத்திக் கொண்டார். தேவையற்ற போர்களைத் தவிர்க்க அவர் பொது மக்களின் நன்மதிப்பைப் பெற்றார். ஆனால் இலங்கையில் சோழர்களுக்குச் சொந்தமாக இருந்த பகுதிகளை இழந்தார். பாண்டிய நாட்டிலிருந்த பகுதிகளும் சோழர்களின் கட்டுப்பாட்டிலிருந்து நழுவின. காஞ்சிபுரத்தைத் தெலுங்குச் சோழர்களிடம் இழக்க நேரிட்டது. 1279இல் பாண்டிய அரசன் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் மூன்றாம் ராஜேந்திர சோழனைத் தோற்கடித்துப் பாண்டியர் ஆட்சியை இன்றைய தமிழகத்தில் நிறுவினார். அத்துடன் சோழ வம்சத்தின் ஆட்சி முடிவுற்றது.

நிர்வாக முறை:

மத்திய அரசின் நிர்வாக அரசரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தது. நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருந்த அவர் பெருமளவு அதிகாரத்தைக் கொண்டிருந்தார். அரசரின் ஆணைகள் அவருடைய அதிகாரிகளால் பனையோலைகளில் எழுதப்பட்டன அல்லது கோவில் சுவர்களில் பொறிக்கப்பட்டன. அரசுரிமை பரம்பரை இயல்புடையதாய் இருந்தது. அரசர் தனது மூத்த மகனைத் தனது வாரிசாகத் தெரிவு செய்தார். மூத்தமகன் யுவராஜன் என்றழைக்கப்பட்டார். யுவராஜாக்கள் நிர்வாகத்தில் பயிற்சி பெறுவதற்காக மண்டல ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர்.

சோழ அரசர்கள் நன்கு கட்டமைக்கப்பட்ட நிர்வாக முறையை உருவாக்கியிருந்தனர். நிர்வாக வசதிக்காகப் பேரரசு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மண்டலமும் பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு நாட்டுப் பிரிவுக்குள்ளும் பல கூற்றங்கள் (கிராமங்களின் தொகுப்பு) இடம் பெற்றிருந்தன. கிராமமே நிர்வாக அமைப்பின் மிகச் சிறிய அலகாகும்.

உள்ளாட்சி நிர்வாகம்:

உள்ளாட்சி நிர்வாகமானது ஊரார், சபையோர், நகரத்தார், நாட்டார் எனும் அமைப்புகளின் மூலமாகச் செயல்பட்டது. வேளாண்மையின் விரிவாக்கத்தினால் கிராமப்புறங்களில் அதிக எண்ணிக்கையில் விவசாயிகளின் குடியிருப்புகள் உருவாயின. அவை ஊர்கள் என அறியப்பட்டன. நில உடமையாளர்களாக இருந்த ஊரார், ஊரின் சார்பாகப் பேசுபவர்களாக இருந்தனர். பிராமணர் கிராமங்களைச் சேர்ந்த சபையோர் பொது நிர்வாகத்தையும், நிதி நிர்வாகத்தையும், நீதி வழங்குதலையும் மேற்கொண்டனர். வணிகர்களின் குடியிருப்புகளை நகரத்தார் நிர்வகித்தனர். இருந்தபோதிலும் தனித்திறன் பெற்ற கட்டுமானக் கலைஞர்கள், இரும்புத் தொழில் செய்வோர், தங்க வேலை செய்வோர், நெசவு செய்வோர், மட்பாண்டம் வனைவோர் ஆகியோரும் நகரத்தில் வாழ்ந்தனர். நாடுகளில் நாட்டார் எனும் அமைப்பு நாடோடு தொடர்புடைய பூசல்களையும் ஏனைய சிக்கல்களையும் தீர்த்து வைத்தது.

ஊர், சபை, நகரம், நாடு ஆகியவற்றில் இருந்த மன்றங்கள் பல்வேறு குழுக்கள் மூலம் பணிகளை மேற்கொண்டன. இக்குழுக்கள் நீர்ப்பாசனம், சாலைகள், கோவில்கள், தோட்டங்கள், வரிவசூல், மத விழாக்களை நடத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டன.

உத்திரமேரூர் கல்வெட்டுகள்:

இன்றைய காஞ்சிபுர மாவட்டத்திலுள்ள உத்திரமேரூர் கிராமம் பிராமணர்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட ஒரு பிரம்மதேய கிராமமாகும். இக்கிராமத்தில் கிராம சபைக்கான உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறித்துத் தெளிவாக விளக்கும் கல்வெட்டுகள் உள்ளன.

ஓவ்வொரு குடும்பிலிருந்தும் (வார்டு) உறுப்பினர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். மொத்தம் 30 குடும்புகள் இருந்தன. போட்டியிடும் ஆடவர் 35-70 வயது வரம்புக்குள் இருத்தல் வேண்டும். வேத நூல்களிலும், சமய நூல்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பதும், நில உரிமையாளராகவோ, சொந்த வீடு உடையவராகவோ இருக்க வேண்டும் என்பவை தகுதிகளாகும். தேர்ந்தெடுக்கும் முறை: ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் தகுதியுடைய வேட்பாளர்களின் பெயர்கள் பனையோலைத் துண்டுகளில் எழுதப்படும். அவை மட்பாண்டம் ஒன்றில் போடப்படும். மன்றத்தின் மூத்த உறுப்பினர் ஒரு சிறுவனை அழைத்து குடத்துக்குள் உள்ள ஓலைத் துண்டுகளை எடுக்கச் சொல்லி அதில் எழுதப்பட்டுள்ள பெயரை அறிவிப்பார். இம்முறையின்படி பல குழுக்கள் முடிவு செய்யப்படும்.

உத்திரமேரூர் கல்வெட்டுகள்

வருவாய்:

சோழ அரசின் பொது வருவாய் முக்கியமாக நிலவரி மூலம் பெறப்பட்டது. நிலவரியானது “காணிக்கடன்” என அழைக்கப்பட்டது. நிலவரியை நிர்ணயம் செய்தற்காகச் சோழ அரசு விரிவான அளவில் நில அளவைப் பணியை மேற்கொண்டது. மகசூலில் மூன்றில் ஒரு பகுதி வரியாக வசூலிக்கப்பட்டது. இவ்வரி பெரும்பாலும் தானியமாகவே வசூல் செய்யப்பட்டது. நிலவரியைத் தவிர தொழில் வரிகளும் வணிகத்தின் மீதான சுங்கவரிகளும் வசூலிக்கப்பட்டன.

நிலம் சார்ந்த உறவுகளை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பு:

சோழ அரசர்கள் வரிவிலக்கு அளிக்கப்பட்ட நிலங்களை அரசு அதிகாரிகளுக்கும், பிராமணர்களுக்கும், கோவில்களுக்கும் (தேவதானக் கிராமங்கள்), மத நிறுவனங்களுக்கும் கொடையாக வழங்கினர். சமண சமய நிறுவனங்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் ‘பள்ளிச்சந்தம்’ என அழைக்கப்பட்டது. ‘வேளாண்வகை’ என்னும் நிலங்களின் உடைமையாளர்கள் வேளாளர் என்றழைக்கப்பட்டனர். வேளாளரில் ஒரு பிரிவினரான ‘உழுகுடி’ என்போர் நிலங்களின் உடைமையாளர்களாக இருக்க இயலாது. அவர்கள் பிரம்மதேய, வேளாண் வகை நிலங்களில் வேளாண்பணிகளைச் செய்ய வேண்டியிருந்தது. மொத்த விளைச்சலில் வேளாண்வகை நிலவுடைமையாளர்கள் ‘மேல்வாரத்தைப்’ (விளைச்சலில் பெரும்பகுதி) பெற்றனர். உழுகுடிகள் ‘கீழ்வாரத்தைப்’ (விளைச்சலில் சிறிய பகுதி) பெற்றனர். ‘அடிமை’ மற்றும் ‘பணிசெய் மக்கள்’ என்போர் சமுதாயத்தின் கீழ் நிலையில் இருந்தனர். சமூகத்தின் இடை மட்டத்தில் போர் செய்வோரும் வணிகர்களும் இடம் பெற்றனர்.

நீர்ப்பாசனம்:

சோழர்கள் நீர்ப்பாசனத்திற்கு முக்கியத்துவம் வழங்கினார். கங்கை கொண்ட சோழ புரத்தில் முதலாம் ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்ட பதினாறு மைல் நீளம் கொண்ட ஏரிக்கரைத் தடுப்பணை மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். காவிரியின் கழிமுகப் பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக மரபுசார்ந்த முறையில் நீரினைத் திசைமாற்றிவிடுவதற்கான ‘வடிவாய்க்கால்கள்’ அமைக்கப்பட்டிருந்தன. தேவைப்படும் நீரைக் கொண்டு வருவது ‘வாய்க்கால்’ தேவைக்கு அதிகமான நீரை வெளியேற்றுவது ‘வடிகால்’. பொதுமக்கள் அனைவருக்கும் சொந்தமான வாய்க்கால் ‘ஊர் வாய்க்கால்’ என அழைக்கப்பட்டது. நாடு எனும் நிர்வாகப் பிரிவின் மட்டத்தில் பயன்பட்ட வாய்க்கால்கள் ‘நாடு வாய்க்கால்கள்’ என குறிப்பிடப்பட்டன. நீர் விநியோகத்தில் சுற்றுமுறை நடைமுறையில் இருந்தது.

மதம்:

சோழர்கள் சைவத்தின் மீது மிகுதியான பற்றுக் கொண்டவராவர். சிவபெருமானின் திருவிளையாடல்கள் சைவ அடியார்களான நாயன்மார்களால் பாடல்களாக இயற்றப்பட்டுள்ளன. நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப்பட்ட அவை “திருமுறைகள” என அழைக்கப்படுகின்றன.

கோவில்கள்:

சோழர்கள் காலத்தில் பிரமாண்டமான கோவில்கள் கட்டப்பட்டன. தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் ஆகிய இடங்களிலுள்ள கோவில்கள் சோழர்களின் கலைகளான கட்டடங்கள், சிற்பங்கள், செப்புச் சிலைகள் ஓவியங்கள், படிமவியல் ஆகியவற்றின் களஞ்சியமாக

தஞ்சை பெரிய கோவில்

உள்ளன. சோழர்கள் காலக் கோவில்கள் வழிபாட்டிற்கான இடங்கள் மட்டுமல்லாமல் பெருமளவு இடங்கள் மட்டுமல்லாமல் பெருமளவு நிலங்களைச் சொந்தமாகக் கொண்டிருந்தன. அவை கல்வியையும், பக்திக் கலைகளின் வடிவங்களான நடனம், இசை, நாடகம் ஆகியவற்றையும் வளர்த்தன. நடனமாதர், இசைக்கலைஞர்கள், பாடகர்கள், இசைக்கருவிகைள மீட்டுவோர், அர்ச்சகர்கள் ஆகியோர் கோவில் பணியாளர்கள் ஆவர்.

சோழர்களின் கல்விப் பணி:

சோழ அரசர்கள் கல்விப் பணிகளுக்குப் பெரும் ஆதரவு நல்கினர். முதலாம் ராஜேந்திரன் எண்ணாயிரம் (தற்போதைய விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள) எனும் கிராமத்தில் வேதக் கல்லூரி ஒன்றை நிறுவினார். அக்கல்லூரியில் 14 ஆசியரியர்களின் வழிகாட்டுதலில் 340 மாணவர்கள் வேதங்கள், இலக்கணம், உபநிடதங்கள் ஆகியவற்றைக் கற்றனர். அவருக்குப் பின்வந்த ஆட்சியாளர்கள் அவருடைய அப்பணியை முன் உதாரணமாகக் கொண்டு பின்பற்றினார். அதன் விளைவாக இன்றைய புதுச்சேரிக்கு அருகேயுள்ள திருபவனை எனும் ஊரிலும், இன்றைய செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள திருமுக்கூடலிலும் முறையே 1048, 1067 ஆகிய ஆண்டுகளில் இதே போன்ற கல்லூரிகள் நிறுவப்பட்டன.

கங்கைகொண்ட சோழபுரம் கோவில்

உன்னதமான இலக்கியங்களான ‘பெரிய புராணமும் கம்பராமாயணமும்’ இக்காலப் பகுதியைச் சேர்ந்தவையாகும்.

வணிகம்:

சோழர்களின் காலத்தில் வணிகம் தழைத்தோங்கியது. ‘அஞ்சு-வண்ணத்தார், ‘மணி-கிராமத்தார்’ எனப்படும் வணிகக் குழு அமைப்புகளைச் (கில்டு) சேர்ந்த வணிகர்கள் வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அஞ்சு-வண்ணத்தார் குழுவானது மேற்கு ஆசியர்கள், அராபியர்கள், யூதர்கள், கிறித்தவர்கள், ஆகியோரை உள்ளடக்கியதாகும். அவர்கள் கடல் கடந்து வணிகம் செய்தோர் ஆவர். அவர்கள் மேற்கு கடற்கரையோரத் துறைமுக நகரங்களில் குடியிருந்தனர். மணி-கிராமத்தார் வணிகக் குழு அமைப்பைச் சேர்ந்த வணிகர்கள் உள்நாட்டு வணிகத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர் எனச் சொல்லப்படுகிறது. காலப்போக்கில் அவ்விரு அமைப்புகளும் “ஐநூற்றுவர்”, “திசை-ஆயிரத்து ஐநூற்றுவர்” எனும் பெயர்களில் ஒருங்கிணைந்தன. அவை கர்நாடக மாநிலம் ஐகோலில் இருந்த தலைமை அமைப்பின் வழிகாட்டுதலில் செயல்பட்டன. இந்த ஐநூற்றுவர் அமைப்பு தென்கிழக்காசிய நாடுகளை உள்ளடக்கிய கடல் கடந்த வணிக நடவடிக்கைகளைச் செயல்படுத்தியது. தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு மேற்கொள்ளப்பட்ட கடல் கடந்த வணிகத்தின் மூலம் யானைத் தந்தங்கள், பவழம், சங்குகள், ஒளிபுகும்-புகா கண்ணாடிகள், பாக்கு, ஏலம், வர்ணப் பட்டு நூல்களோடு நெய்யப்பட்ட பருத்தி இழைத்துணிகள் ஆகியன இறக்குமதி செய்யப்பட்டன. சந்தனக்கட்டை, கருங்காலிக்கட்டை, சுவையூட்டும் பொருட்கள், விலையுயர்ந்த ஆபரணக் கற்கள், மிளகு, எண்ணெய், நெல், தானியங்கள், உப்பு ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டன.

  1. பிற்காலப் பாண்டியர்கள்:

அறிமுகம்:

கி.மு.(பொ.ஆ.மு) நான்காம் நூற்றாண்டிலிருந்து தென்னிந்தியாவைக் குறிப்பிட்ட இடைவெளிகளோடு ஆட்சி செய்த மூன்று பழைமையான அரசவம்சங்களுள் பாண்டியர்கள் அடங்குவர். முத்துக்குளித்தலோடு தொடர்புடைய கொற்கை, தொடக்கக் காலத்தில் அவர்களின் துறைமுகமாகவும் தலைநகரமாகவும் இருந்ததாகக் கருதப்படுகிறது. பாண்டியர்களின் பல பழைமையான தமிழ்க் கல்வெட்டுகள் மதுரையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் கண்டறியப்பட்டுள்ளதால் அவர்கள் பிற்காலத்தில் மதுரைக்கு இடம் பெயர்ந்திருக்கலாம் எனக் கருதலாம். சங்ககாலப் பாண்டியர்களின் கீழ் மதுரை நகர் மாபெரும் பண்பாட்டுமையமாகத் திகழ்ந்தது. தமிழ்ப் புலவர்களும் எழுத்தாளர்களும் அங்கு ஒன்றுகூடித் தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களுக்குச் சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளனர். கி.பி.(பொ.ஆ) 6ஆம் நூற்றாண்டில் களப்பிரர்களை வெற்றிகொண்டு பாண்டியர்கள் தென் தமிழகத்தில் தங்களை மீண்டும் வலுவாக நிறுவிக் கொண்டனர். ஆனால் 9ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை தென்னிந்தியாவை ஆண்ட பிற்காலச் சோழர்களின் எழுச்சியைப் பாண்டியர்களால் எதிர்கொள்ள இயலவில்லை. பின்னர் சோழர்களின் வீழ்ச்சியைச் சாதகமாகப் பயன்படுத்திப் பிற்காலப் பாண்டியர் மீண்டும் தங்கள் அதிகாரத்தை நிறுவினர். அவர்களின் ஆட்சி 16ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது.

பாண்டிய அரசு மீண்டெழுதல் (கி.பி.(பொ.ஆ) 600-920):

கடுங்கோன் எனும் பாண்டிய அரசன் 6ஆம் நூற்றாண்டின் இறுதியில் களப்பிரர்களிடமிருந்து பாண்டியர்களின் பகுதிகளை மீட்டார். அவரைத் தொடர்ந்து வேறு இருவர் அரச பதவி ஏற்றனர். அரிகேசரி மாறவர்மன் எனும் வலிமை மிக்க முதல் பாண்டிய அரசர் கி.பி.(பொ.ஆ) 642இல் அரியணை ஏறினார். அவர் பல்லவ அரசர்கள் முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன் ஆகியோரின் சமகாலத்தவராவார். கல்வெட்டுகளும் செப்புப் பட்டயங்களும் தனது எதிரிகளான சேரர், சோழர், பல்லவர், சிங்களர் ஆகியோரை அவர் வெற்றி கொண்டதைப் புகழ்பாடுகின்றன. அரிகேசரி மாறவர்மன் சமணர்களைத் துன்புறுத்திய கூன் பாண்டியனே என அடையாளப்படுத்தப்படுகிறார்.

அரிகேசரிக்குப் பின்னர் பாண்டியர் அரசவம்சத்தின் மகத்தான மன்னான ஜடிலபராந்தக நெடுஞ்சடையன் (முதலாம் வரகுணன்) (756-815) ஆட்சிப் பொறுப்பேற்றார். அவரே வேள்விக்குடிச் செப்பேடுகளின் கொடையாளி ஆவார். நெடுஞ்சடையன் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கோயமுத்தூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகப் பாண்டிய அரசை விரிவுபடுத்தினார். நெடுஞ்சாடையனுக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்ற ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன், இரண்டாம் வரகுணன் ஆகியோர் பல்லவர்களால் தோற்கடிக்கப்பட்டனர். பின்னர் முதலாம் பராந்தகனின் கீழ் எழுச்சி பெற்ற சோழவம்சத்தை அவர்களால் எதிர்கொள்ள இயலவில்லை. முதலாம் பராந்தகனிடம் தோல்வியடைந்த பாண்டிய அரசன் இரண்டாம் ராஜசிம்மன் 920இல் நாட்டைவிட்டு வெளியேறினார். இவ்வாறு கடுங்கொனால் மீள் எழுச்சி பெற்ற பாண்டியர் ஆட்சி முடிவுற்றது.

பிற்காலப் பாண்டியர்களின் எழுச்சி (1190-1310):

அதிராஜேந்திரனின் (விஜயாலயனின் வழிவந்த கடைசி அரசர்) மறைவுக்குப் பின்னர் பாண்டிய நாட்டில் சோழ மண்டலாதிபதிகளின் ஆட்சி பலவீனமடைந்தது. அதன் விளைவாகப் பதிமூன்றாம் நூற்றாண்டில் பாண்டியர் மட்டுமே எழுச்சி பெற்ற தமிழ் அரச வம்சமாக விளங்கினர். மதுரை அவர்களின் தலைநகராகத் தொடர்ந்தது. அவ்வமயம் காயல் அவர்களின் முக்கியத் துறைமுகமாயிற்று. வெனிஸ் நாட்டைச் சேர்ந்த புகழ் பெற்ற பயணியான மார்க்கோபோலோ இரண்டு முறை (1288, 1293) காயலுக்கு வருகை தந்தார். இத்துறைமுக நகர் அராபிய, சீனக் கப்பல்களால் நிரம்பியிருந்தது என்றும் விறுவிறுப்பான வணிக நடவடிக்கைகளைக் கொண்டிருந்ததாகவும் அவர் நம்மிடம் கூறுகிறார்.

சடையவர்மன் சுந்தரபாண்டியன்:

இரண்டாம் பாண்டியப் பேரரசின் புகழ்பெற்ற அரசர் சடைய வர்மன் (ஜடா வர்மன்) சுந்தரபாண்டியன் (1251-1268) ஆவார். ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்த அவருடைய ஆட்சி ஆந்திர மாநிலம் நெல்லூர் வரை பரவியிருந்தது. அவர் ஹொய்சாளர்களைக் கட்டுக்குள் வைத்திருந்தார். மலைநாட்டுத் தலைவனான சேர அரசர் சுந்தர பாண்டியனின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு அவருக்குக் கப்பம் கட்டச் சம்மதித்தார். சோழ அரசின் வீழ்ச்சியால் ஊக்கம் பெற்ற மாளவப் பகுதியின் அரசர் வீர சோமேஸ்வரர் சுந்தர பாண்டியனைப் போருக்கு அழைத்தார். கண்ணனூர் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் சுந்தரபாண்டியன் வீர சோமேஸ்வரரைத் தோற்கடித்தார். வட தமிழகத்தில் கடலூர், காஞ்சிபுரம், மேற்குத் தமிழகத்தில் ஆர்க்காடு, சேலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குறுநிலத் தலைவர்களின் மேல் தனது அதிகாரத்தை நிறுவினார்.

பாண்டிய அரசின் நாணயம்

சுந்தர பாண்டியனின் ஆட்சியின் போது அவருடன் இரண்டு பேர் கூட்டு அரசர்களாக ஆட்சி செய்தனர். அவர்கள் விக்கிரம பாண்டியன், வீரபாண்டியன் ஆகியோர் ஆவர். சுந்தர பாண்டியனுக்குப் பின்னர் மாறவர்மன் குலசேகரன் வெற்றிகரமாக நாற்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்து நாட்டிற்கு அமைதியையும் செழிப்பையும் நல்கினார். அவருக்கு வீரபாண்டியன், சுந்தர பாண்டியன் என இரண்டு மகன்கள் இருந்தனர். அரசர் வீரபாண்டியனைக் கூட்டு அரசராக நியமித்தார். அதனால் தந்தை மீது வெறுப்புற்ற சுந்தர பாண்டியன் தந்தையார் மாறவர்மன் குலசேகரனைக் கொன்றார். தொடர்ந்து ஏற்பட்ட உள்நாட்டுப் போரில் வீரபாண்டியன் வெற்றி பெற்றுத் தன்னை வலுவாக நிறுவிக் கொண்டார். தோல்வியுற்ற சுந்தர பாண்டியன் டெல்லிக்கு விரைந்து அலாவுதீன் கில்ஜியின் பாதுகாப்பில் அடைக்கலமானார். இதுவே மாலிக்கபூரின் படையெடுப்புக்கான வாய்ப்பை வழங்கியது.

மாலிக்கபூரின் படையெடுப்புக்குப் பின்னர் ஆட்சி செய்து கொண்டிருந்த அரச குடும்பத்தைச் சேர்ந்த பல அரசர்களால் பாண்டிய நாடு பிரித்துக்கொள்ளப்பட்டது. மதுரையில் டெல்லி சுல்தானுக்குக் கட்டுப்பட்ட ஒரு முஸ்லீம் அரசு உருவாக்கப்பட்டது.

ஆட்சி அமைப்பும் சமூகமும்:

அரசு:

பாண்டிய அரசர்கள் தலைநகரைப் பொருத்த மட்டிலும் மதுரைக்கே முன்னுரிமை கொடுத்தனர். மதுரை பொது மக்களால் ‘கூடல்’ என்றே போற்றப்பட்டு வந்தது. பாண்டிய மன்னர்கள் பாரம்பரியமாகக் ‘கூடல்கோன்’ ‘கூடல் காவலன்’ என மதிக்கப்பட்டனர். ராணுவரீதியாக அண்டைநாடுகளைக் காட்டிலும் பாண்டியர்களின் ஆதிக்கம் ஓங்கியிருந்தது. இதன் காரணம் அவர்களிடம் இருந்த குதிரைப் படைகளாகும். அராபிய வணிக, பண்பாட்டு உலகில் அவர்களுக்கு இருந்த தொடர்பின் மூலம் அவர்கள் அந்தக் குதிரைகளை இறக்குமதி செய்தனர்.

அரசர், ‘மனு சாஸ்திரத்தின்படி’ தான் ஆட்சி செய்வதாகக் கூறினார். இக்கோட்பாடு சமூகத்திலிருந்த ஏற்றத் தாழ்வு நிலைகளை நியாயப்படுத்தியது. அரசர்களும் உள்ளுர் தலைவர்களும் ‘மங்கலம்’ அல்லது ‘சதுர்வேதிமங்கலம்’ எனும் பிராமணர் குடியிருப்புகளை உருவாக்கினர். இவை நீர்ப்பாசன வசதிகளோடு உருவாக்கப்பட்டிருந்தன. நிலத்தின் உண்மையான உடைமையாளர்கள் ‘பூமி’ புத்திரர்’ அல்லது ‘வேளாளர்’ என விவரிக்கப்பட்டுள்ளனர். வரலாற்று ரீதியாக அவர்கள் அப்பகுதியைச் சேர்ந்த மக்களாகையால் அவர்கள் ‘நாட்டுமக்கள்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளனர். இச்சமூக மக்கள் ஒன்றிணைந்த மன்றம் ‘சித்திர-மேழி-பெரிய நாட்டார்’ என அழைக்கப்பட்டது.

அரசு அதிகாரிகள்:

அதிகாரிகளின் குழுவொன்று அரசரின் ஆணைகளை நடைமுறைப்படுத்தியது. பிரதம மந்திரி ‘உத்திர மந்திரி’ என அழைக்கப்பட்டார். முக்கிய வரலாற்று ஆளுமைகளான மாணிக்கவாசகர், குலச்சிறையார், மாரன்காரி ஆகியோர் அமைச்சர்களாகப் பணியாற்றினர். அரசுச் செயலகம் “எழுத்து மண்டபம்” என அழைக்கப்பட்டது. மிகவும் மதிக்கப்பட்ட அதிகாரிகள் “மாறன்-எயினன்” “சாத்தன்-கணபதி”, ஏனாதி-சாத்தன்”, “திற-திறன்”, “மூர்த்தி-எயினன்”, ஆகியோரும் மற்றவருமாவர். “பள்ளி-வேலன்”, “பராந்தகன்-பள்ளி-வேலன்”, “மாறன்-ஆதித்தன்”, “தென்னவன்-தமிழ்வேள்” ஆகியவை படைத் தளபதிகளின் பட்டங்களாகும்.

நிர்வாகப் பிரிவுகள்:

சோழ நாட்டில் இருந்ததைப் போலவே “பாண்டியநாடு” பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. மண்டலங்கள் “வளநாடுகள்” என அழைக்கப்பட்டன. வளநாடுகள் பல “நாடுகளாகவும்”, “கூற்றங்களாகவும்” பிரிக்கப்பட்டன. நாடுகளை நிர்வகித்தவர்கள் “நாட்டார்” ஆவர். நாடுகளும் கூற்றங்களும் மங்கலம், நகரம், ஊர், குடி எனும் குடியிருப்புக்களைக் கொண்டிருந்தன். அவற்றில் பல்வகைப்பட்ட சமூகக் குழுக்களைச் சேர்ந்த மக்கள் வசித்தனர்.

கிராம நிர்வாகம்:

திருநெல்வேலி மாவட்டம் மானூர் என்னும் ஊரில் உள்ள கி.பி (பொ.ஆ) 800ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு கிராம நிர்வாகம் தொடர்பான செய்திகளைக் கொண்டுள்ளது. கிராம மன்றங்களையும், பல்வேறு குழுக்களையும் கொண்டிருந்த சோழர்களின் உள்ளாட்சித் துறை போலவே நிர்வாகம் காணப்படுகிறது. சிவில் ராணுவ அதிகாரங்கள் ஆகிய இரண்டும் ஒரே நபரிடம் வழங்கப்பட்டிருந்தன.

நீர்ப்பாசனம்:

பாண்டிய மன்னர்கள் அதிக எண்ணிக்கையில் நீர் ஆதாரங்களை உருவாக்கினர். வைகை, தாமிரபரணி ஆகிய ஆறுகளின் இரு கரைகளிலும் நீர்நிலைகளுக்கு நீர் கொண்டு செல்லும் கால்வாய்கள் வெட்டப்பட்டன. தென் தமிழகத்தில் சோழர்களைப் போலவே பாண்டியர்களும் புதிய நீர்ப்பாசனத் தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்தனர். நீர்பாசனப் பணிகள் உள்ளாட்சி அமைப்புகளாலும், அதிகாரிகள் மற்றும் உள்ளுர்த் தலைவர்களாலும் மேற்கொள்ளப்பட்டன. பழுது நீக்கும் பணிகள் பெரும்பாலும் உள்ளாட்சி அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டன. சில சமயங்களில் நீர்ப்பாசன ஏரிகளை வணிகர்கள் வெட்டிக் கொடுத்துள்ளனர்.

மதம்:

பாண்டிய அரசர்கள் வேத நடைமுறைகளுக்கு ஆதரவு நல்கினர். வேள்விக்குடிச் செப்பேடுகளும் ஏனைய பொறிப்பியல் சான்றுகளும் சிறந்த பாண்டிய அரசர்கள் ஒவ்வொருவரும் செய்த அஸ்வமேதயாகம், ஹிரண்ய கர்ப்பம், வாஜ்பேய வேள்வி போன்றவற்றைக் குறிப்பிடுகின்றன. பாண்டிய மன்னர்கள் சைவம், வைணவம் ஆகிய இரண்டையும் சமமாகவே கருதினர் என்பதைப் பொறிப்புச் சான்றுகளின் தொடக்கப் பகுதிகள் உணர்த்துகின்றன. இரு பிரிவைச் சேர்ந்த கோவில்களும் பாண்டிய மன்னர்களின் ஆதரவைப் பெற்றிருந்தன. இக்கோவில்களுக்கு நிலங்கள் கொடையாக வழங்கப்பட்டன. வரிவிலக்கும் அளிக்கப்பட்டது. அவை புனரமைக்கப்பட்டுப் புதிய கோபுரங்களும் விசாலமான மண்டபங்களும் கட்டப்பட்டன.

புகழ் பெற்ற சைவ, வைணவ அடியார்கள் (நாயன்மார்கள், ஆழ்வார்கள்) தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், ஆன்மிக அறிவு மேம்பாட்டிற்கும் பெரும் பங்களிப்பைச் செய்தனர். அக்காலப்பகுதியில் தீவிர மதமோதல்கள் இருந்ததாக குறிப்பிடப்படுகிறது. அக்கால கட்டப் பக்தி இயக்கம் புறசமயத்தாரை வாதத்திற்குத் தூண்டின. அப்படிப்பட்ட விவாதப் போட்டிகளில் பலமுறை பௌத்தர்களும் சமணர்களும் தோற்கடிக்கப்பட்டதாகப் பக்தி இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அக்காலப் பாண்டிய அரசர்கள் தமிழ், சமஸ்கிருதம் ஆகியவற்றை ஆதரித்து வளர்த்தனர்.

கோவில்கள்:

இடைக்காலப் பாண்டியர்களும் பிற்காலப் பாண்டியர்களும் புதிய கோவில்கள் எதையும் நிர்மாணிக்கவில்லை. ஏற்கெனவே இருந்த கோவில்களைப் பராமரித்தனர், புதிய கோபுரங்களையும் மண்டபங்களையும் கட்டிப் பெரிதாக்கினர். பெரிய வடிவிலான அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய ஒற்றைக்கல் தூண்கள் இடைக்காலப் பாண்டியர்களின் தனித்தன்மை வாய்ந்த பாணியாகும். சிவன், விஷ்ணு, கொற்றவை, கணேசர், சுப்ரமணியர் ஆகிய தெய்வங்களின் சிற்பங்கள் இக்கோவில்களில் காணப்படும் சிறந்த கலை வடிவங்களாகும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

வரலாற்றுச் சிறப்பு மிக்க மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் பாண்டியர் பேராதரவு நல்கினர். புதிய கோபுரங்களையும் மண்டபங்களையும் கட்டிக் கோவிலைத் தொடர்ந்து விசாலப்படுத்தினர்.

வணிகம்:

ஏழாம் நூற்றாண்டு முதல் தென்னிந்தியாவின் மேற்குப் கடற்கரையில் உருவாகியிருந்த அராபிய வணிகர்களின் குடியிருப்புகள் அவர்களின் வணிக உறவுகள் கிழக்குக் கடற்கரைக்கு இருந்த அரசுகள் அயல்நாட்டு வணிகர்களைப் பொறுத்தமட்டில் மிக தாராளமான, அறிவு பூர்வமான கொள்கையைப் பின்பற்றின. அவற்றின் பட்டயச் சட்டங்கள் வணிகர்களுக்குப் பல துறைமுக வரிகளிலிருந்தும், சுங்க வரிகளிலிருந்தும் விலக்கு அளித்தன. காயல் துறைமுகத்தில் மாலிக் உல் இஸ்லாம் ஜாமலுதீன் எனும் அராபிய வணிகரின் வணிக நிறுவனம் செயல்பட்டது. பாண்டிய அரசர்களுக்குக் குதிரைகள் எளிதாகக் கிடைப்பதற்கான வசதிகளை இந்நிறுவனம் செய்து கொடுத்தது.

13, 14ஆம் நூற்றாண்டுகளில் குதிரை வணிகம் மேலும் அதிகரித்தது. சம்பிரதாய விழாக்களுக்கும், போர் புரிவதற்கும் குதிரைகள் தேவைப்பட்டதால் அரசர்கள் குதிரைகளுக்காக முதலீடு செய்தனர் என்று மார்க்கோபோலோவும், வாசப்பும் குறிப்பிட்டுள்ளனர். குதிரை வணிகத்தில் ஈடுபட்டவர்கள் “குதிரைச் செட்டிகள்” என அழைக்கப்பட்டனர். அவர்கள் கடல்சார் வணிகத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். பாண்டியர்களின் துறைமுகங்களில் மிகவும் விறுவிறுப்பாக வணிகம் நடைபெற்ற துறைமுகம் கிழக்குக் கடற்கரையிலிருந்த காயல்பட்டினம் ஆகும். இது இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. வணிகப் பரிமாற்றங்கள் தங்க நாணயங்கள் மூலம் நடைபெற்றதால் நாணயங்கள் அதிக அளவில் புழக்கத்தில் இருந்தன. அவை காசு, கழஞ்சு, பொன் எனப் பலவாறு அழைக்கப்பட்டன.

சுருக்கம்:

  • சோழர்களும் பாண்டியர்களும் நன்கறியப்பட்ட தமிழ் முடியாட்சி மன்னர்கள் ஆவர்.
  • விஜயாலயன், சோழர்கள் வம்சாவழியை மீண்டெழச் செய்தார்.
  • முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு வாய்ந்த சோழ அரசர்களாவர்.
  • உத்திரமேரூர் பொறிப்புகள் கிராம நிர்வாகம் குறித்த விவரங்களை வழங்குகின்றன.
  • கடுங்கோன் பாண்டிய நாட்டுப் பகுதிகளைக் களப்பிரரரிடமிருந்து மீட்டார். அரிகேசரி மாறவர்மன், பராந்தக நெடுஞ்சடையோன் ஆகியோர் அக்காலத்தின் மிகச் சிறந்த பாண்டிய அரசர்கள் ஆவர்.
  • பிற்காலப் பாண்டிய அரசின் தலைசிறந்த அரசர்கள் சடையவர்மன் சுந்தர பாண்டியன், மாறவர்மன் குலசேகரன் ஆகியோர் ஆவர்.
  • பாண்டியர் காலத்துக் கடல்சார் வணிகம் மார்க்கோபோலோ, வாசப் ஆகியோரால் புகழப்பட்டுள்ளது.

சொற்களஞ்சியம்:

திருமண உறவுகள் மூலம் அரசியல் கூட்டு Matrimonial Alliances Political Allainces through Marraiges
தடுப்பணை Embankment A wall or stone structure built to prevent a river flooding an area as well as to store its water
தீவிரமான Ardent Passsionate
அரசருக்குக் கட்டுப்பட்ட குறுநில மன்னர் Feudatory A Subordinate to another sovereign/Ruler
புகலிடம் Refuge Shelter
கருவூலம் Repository Place in which things are stored

உங்களுக்கு தெரியுமா?

  • முதலாம் ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் சோழர்களுக்கும் கீழைச் சாளுக்கியர்களுக்கும் இடையிலான திருமணஉறவு தொடங்கியது. அவருடைய மகளான குந்தவை சாளுக்கிய இளவரசர் விமலாதித்தனை மணந்தார். அவர்களின் மகனான ராஜராஜ நரேந்திரன் முதலாம் ராஜேந்திரனின் மகளான அம்மங்கா தேவியை மணந்தார். அவர்களின் மகனே முதலாம் குலோத்துங்கன் ஆவார்.
  • சைவத் துறவியான திருஞானசம்பந்தர் அரிகேசரியைச் சமண மதத்திலிருந்து சைவத்திற்கு மாற்றினார். முதம் மாறிய பின்னர் அரிகேசரி சுமார் 8000 சமணர்களைக் கழுவேற்றியதாகக் கூறப்படுகிறது. எண்ணிக்கை மிகைப்படுத்திக் கூறப்பட்டிருப்பினும், சைவத்திற்கு மாறிய பின்னர் அரிகேசரியின் சமண எதிர்ப்புப் போக்கு சந்தேகத்திற்கு இடமில்லாதது.
  • பாண்டிய அரசு “செல்வச் செழிப்பு மிக்க, உலகிலேயே மிக அற்புதமான பகுதியாகும்” என மார்க்கோ போலா புகழாரம் சூட்டுகிறார். இலங்கையோடு சேர்ந்து உலகத்தில் காணப்படும் பெரும்பாலான மாணிக்கக்கற்களையும் முத்துக்களையும் உற்பத்தி செய்கிறது என மேலும் கூறுகிறார். தன்னுடைய பயணக் குறிப்புகளில் “சதி” (உடன்கட்டை ஏறுதல்) நிகழ்வுகளையும் அரசர்களின் பலதார மணத்தையும் பதிவு செய்துள்ளார்.
  • விரிவான அளவில் இக்காலத்தில் நடைபெற்ற குதிரை வணிகம் குறித்து வாசப் என்பவர் பதிவு செய்துள்ளார்..”10,000 க்கும் மேற்பட்ட குதிரைகள் காயலிலும் ஏனைய இந்தியத் துறைமுகங்களிலும் இறக்குமதியாயின. அவற்றில் 1400 குதிரைகள் ஜமாலுதீன் பொறுப்பில் இனப்பெருக்கம் செய்து வளர்த்து வந்த குதிரைகளாகும். ஓவ்வொரு குதிரையின் சராசரி விலை சொக்கத் தங்கத்தினாலான 200 தினார்களாகும்”. என அவர் எழுதுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!