ஆட்சித்துறை Notes 12th Political Science Lesson 3 Notes in Tamil

12th Political Science Lesson 3 Notes in Tamil

ஆட்சித்துறை

அறிமுகம்

அரசின் கட்டமைப்பு

ஒன்றிய ஆட்சித்துறை

 • இந்தியக் குடியரசுத்தலைவர்
 • இந்தியக் குடியரசுத் துணைத்தலைவர்
 • பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவைக் குழு
 • இந்திய அரசமைப்பின் முன்னுரையில் இந்தியாவை ஒரு இறையாண்மை, சமதர்ம, மதசார்பற்ற, மக்களாட்சி மற்றும் குடியரசு பெற்ற நாடு என்று அறிவிக்கிறது. இங்கு இங்கிலாந்தைப் போல் முடியாட்சியாக அதாவது அரசரோ, அரசியோ மன்னர்களாக ஆட்சியில் இல்லாமல் , மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிகளால்தான் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இந்தியக் குடியரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
 • தேசிய அரசின் அனைத்து அரசமைப்புத் துறைகளின் தலைவராக இந்தியக் குடிரசுத்தலைவர் விளங்குகிறார். (எ.கா.) சட்டம், நிர்வாகம், நீதி மற்றும் ஆயுதப்படை ஆகிய துறைகளின் செயல்பாடுகளை குடியரசுத்தலைவர் மேற்பார்வையிடுகிறார். மேலும் அரசமைப்புச் சட்டங்களுக்குட்பட்டு இத்துறைகள் செயல்படுவதை இவர் உறுதிப்படுத்துகிறார்.
 • இந்திய நாட்டின் முழு அரசமைப்பு, பிரதிநிதித்துவம் மற்றும் மாநில செயல்பாடுகளை ஒவ்வொரு மண்டலத்திலும் குடியரசுத்தலைவர் நிலை நிறுத்துகிறார்.
 • ஆனால் அமெரிக்க குடியரசுத்தலைவரை போல் உண்மையான செயல் அதிகாரம் இல்லாமல் பெயரளவில் மட்டும் அதிகாரத்தைக் கொண்டுள்ளார். குடியரசுத்தலைவரது பெயராலும், அவரது மேற்பார்வையிலும் நிர்வாகம் நடைபெறுகின்றதே தவிர, நேரடியான, செயலளவிலான நிர்வாகம் பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் குழுவிடம்தான் உள்ளது. அந்த அமைச்சரவையும் நாடாளுமன்றத்திற்கு பொறுப்புடையது. இதைத்தான் நாடாளுமன்ற ஆட்சிமுறை என்கிறார்கள்.
 • மேலும் நடைமுறையில் உண்மையான அதிகாரங்கள் அனைத்தும் பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவைக் குழுவிடம் உள்ளது. இவ்வாறு இந்தியக் குடியரசானது அமெரிக்க குடியரசிலிருந்து வேறுபடுகிறது.

குடியரசுத்தலைவர்

இந்திய தேசத்தின் தலைவராக குடியரசுத்தலைவர் இருக்கிறார். அவர் இந்தியாவின் முதல் குடிமகன் ஆவார். மேலும், தேசிய ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நிலைத்தன்மை சின்னமாக அவர் திகழ்கிறார்.

குடியரசுத்தலைவர் தகுதி மற்றும் தேர்தல்

உறுப்பு 58;

 • இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
 • 35 வயதை பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும்.
 • மக்களவை உறுப்பினராவதற்கான அனைத்து தகுதிகளும் கொண்டிருத்தல் வேண்டும்.

மத்திய மாநில அல்லது உள்ளாட்சி அமைப்புகளிலோ அவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள எந்த ஒரு அமைப்பிலோ ஆதாயம் தரக்கூடிய எந்த பதவியில் இருந்தாலும், அவர் குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவராகிறார்.

மேலும் அரசமைப்பின் 52-வது உறுப்பு குடியரசுத்தலைவர் பதவிக்கான குறைந்தபட்சம் 50 தேர்வுக்குழு வாக்காளர்களால் முன்மொழிவு செய்யப்பட வேண்டும் என்றும், மேலும் வேட்பாளர் தேர்வுக் குழுவின் 50 உறுப்பினர்கள் மூலம் வழிமொழியப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. மேலும் ஒவ்வொரு வேட்பாளரும் ₹.15,000/-ஐ இந்திய ரிசர்வ் வங்கியில் வைப்பு தொகையாக கட்ட வேண்டும்.

பதிவான வாக்குகளில் ஆறில் ஒரு பங்கை ஒரு வேட்பாளர் பெறவில்லையெனில் இந்த தொகை அவருக்கு திருப்பித்தரப்படாது.

இந்தியக் குடியரசுத்தலைவர் மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவதில்லை. மாறாக, கீழ்க்கண்டவர்களை உறுப்பினர்களாக கொண்ட வாக்களர் குழுவினால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்;

 • நாடாளுமன்றத்தின் ஈரவைகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்.
 • மாநில சட்டசபைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்.
 • டெல்லி மற்றும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேச சட்டமன்றங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்.
 • குடியரசுத்தலைவர் தேர்தல், ஒற்றை மாற்று வாக்கெடுப்பு மற்றும் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் நடைபெறுகிறது.
 • இந்த முறை வெற்றிகரமான வேட்பாளர் முழுமையான பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெறுகிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது.

தேர்தல் வெற்றி =

 • தேர்தல்போது ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு வாக்குச்சீட்டு மட்டுமே தரப்படுகிறது. வாக்களர், வாக்களிக்கும் வேட்பாளர்களின் பெயர்களுக்கு எதிராக 1,2,3,4 என வரிசைப்படி முன்னுரிமைகளைக் குறிக்கிறார்கள். முதல் கட்டத்தில், முதல் விருப்ப வாக்குகள் கணக்கிடப்படுகின்றன.
 • ஒரு வேட்பாளர் இந்த கட்டத்தில் தேவையான ஒதுக்கீட்டைப் பெற்றால், அவர் தேர்ந்தெடுக்கப்படுவர். இல்லையெனில் , வாக்குகளை மாற்றுவதற்கான செயல்முறை மேற்கொள்ளப்படுகிறது.
 • வாக்கெடுப்பில் முதல் விருப்பவாக்கில் குறைந்த வாக்குகள் பெற வேட்பாளரை நீக்கிவிட்டு அவர்களின் இரண்டாம் விருப்ப வாக்குகள் மற்றவர்களுக்கு மாற்றப்படுகிறது. ஒரு வேட்பாளருக்கு தேவைப்படும் வாக்குகள் கிடைக்கும் வரை இந்தச் செயல்முறை தொடர்கிறது.
 • இந்திய அரசமைப்பின் 52-வது உறுப்பு இந்தியாவிற்கு ஒரு குடியரசுத்தலைவர் இருக்க வேண்டுமென்கிறது. உறுப்புரிமையின் 53-வது உறுப்பு இந்திய ஒன்றியத்தின் ஆட்சி அதிகாரத்தை அவருக்கு அளிப்பதுடன் அவற்றை நேரடியாகவோ மறைமுகமாகவோ செயல்படுத்த வகை செய்கிறது.

குடியரசுத்தலைவரின் பதவிப் பிரமாணம்

குடியரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ஒருவர் கீழ்க்கண்ட உறுதி மொழிகளைப் பதவி பிரமாணத்தின்போது அவர் ஏற்கிறார்.

 • பதவியில் உண்மையுடன் பணியாற்றுவது.
 • அரசமைப்பு மற்றும் சட்டத்தைப் பாதுகாப்பது,
 • இந்தியாவின் மக்கள் சேவை மற்றும் நல்வாழ்விற்காக தன்னை அர்ப்பணிப்பது ஆகியவற்றை உறுதிமொழியாக ஏற்கிறார்.

இந்தியாவின் தலைமை நீதிபதி குடியரசுத்தலைவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். தலைமை நீதிபதி இல்லாதபோது உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி அப்பதவிப் பிரமாணத்தை செய்து வைக்கிறார்.

குடியரசுத்தலைவருக்கான வசதிகள் அல்லது சலுகைகள்

 • அவரது அதிகாரப்பூர்வ இல்லமான குடியரசுத்தலைவர் மாளிகையை (ராஷ்டிரபதி பவன் – டெல்லி) வாடகையின்றி பயன்படுத்த அவருக்கு உரிமையுண்டு.
 • நாடாளுமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து ஊதியம் , படிகள், தனிஉரிமைகளையும் அனுபவிக்க அவருக்கு உரிமையுண்டு.
 • குடியரசுத்தலைவருக்கு மேலும் சில சலுகைகளும் விதி விலக்குகளும் தரப்பட்டுள்ளன. அவர் தனது அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளுக்கு நீதிமன்ற நடவடிக்கைகளினின்று தனிப்பட்ட விலக்கு பெறுகிறார். அவரது பதவி காலத்தின் போது, அவருக்கு அனைத்து குற்றவியல் நடவடிக்கைகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது.

பதவிக்காலம், பதவி நீக்கம், பதவியை நிரப்புவது பற்றிய விதிமுறைகள்

பதவிக்காலம்

 • குடியரசுத்தலைவர் தனது அலுவலகத்தில் நுழைந்த தேதி முதல் ஐந்து வருட காலத்திற்கு குடியரசுத்தலைவராக பதவி வகிப்பார் என்று இந்திய அரசமைப்பு உறுப்பு 56 கூறுகிறது.
 • எனினும் குடியரசுத் துணைத்தலைவரிடம் பதவி விலகல் கடிதத்தை கொடுப்பதன் மூலம் எந்த நேரத்திலும் தனது பொறுப்பிலிருந்து விலக முடியும். நாடாளுமன்றத்தால் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலமும், இதைத்தவிர குற்றம் சாட்டப்படுவதன் மூலமும் அவரை பதவி நீக்கம் செய்ய முடியும். குடியரசுத்தலைவராக இருப்பவர் மீண்டும் அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட தகுதியுடையவராவார்.
 • தமது பதவியை குடியரசுத்தலைவர் ஐந்து வருட காலத்திற்கு அல்லது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத்தலைவர் பதவி ஏற்கும் வரை பொறுப்பில் தொடரலாம்.

பதவி நீக்கம்

 • அரசமைப்பின் 61-வது உறுப்பு, குடியரசுத்தலைவர் மீது குற்றம் சாட்டி கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு ஒரு விரிவான நடைமுறைகளை தந்துள்ளது.
 • குடியரசுத்தலைவர் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு முதலாவதாக, நாடாளுமன்றத்தின் எந்தவொரு அவையிலும், அதன் மொத்த உறுப்பினர்களில் நான்கில் ஒரு பகுதியினரால் கையொப்பமிடப்பட்ட தீர்மானத்தின் மூலம் ஒரு குற்றச்சாட்டை முன்வைக்க வேண்டும்.
 • குறைந்தபட்சம் 14 நாட்கள் முன்கூட்டியே அறிவிப்பு வழங்க வேண்டும். அத்தகைய தீர்மானம் ஒரு சபையால் விவாதிக்கப்படும் போது, அவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கிற்குக் குறையாத பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட வேண்டும். அது மற்ற அவையால் பின்னர் விசாரணை செய்யப்பட வேண்டும்.
 • விசாரணையின் பின்னர், அதன் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினரின் ஒப்புதலுடன் அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அந்த நாள் முதல் குடியரசுத்தலைவர் பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்யப்படுவார்.

பதவியை நிரப்புவது

குடியரசுத்தலைவரின் பதவி கீழ்க்கண்ட வழிகளில் காலியாகலாம்.

 1. ஐந்து ஆண்டுகளில் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில்
 2. அவரது பதவி விலகல் மூலம்
 3. நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்படுவதன் மூலம்
 4. அவரது மரணத்தின் மூலம்
 5. அவர் தகுதியை இழந்தால் அல்லது அவரது தேர்தல் செல்லாது என அறிவிக்கப்பட்டால்
 • நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் அல்லது இறப்பு ஆகியவற்றால் குடியரசுத்தலைவர் பதவி காலியாகும்போது, ஆறு மாதங்களுக்குள் புதிய குடியரசுத்தலைவரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்படவேண்டும்.
 • இடைப்பட்ட காலத்தில் குடியரசுத் துணைத்தலைவர் குடியரசுத்தலைவராக செயல்படுவார். மேலும், பதவியில் இருக்கும் குடியரசுத்தலைவர், நோய், இயலாமை அல்லது வேறு காரணங்களால் தமது பதவிக்குரிய செயல்களை செய்ய முடியாத நிலையில் குடியரசுத்தலைவர் திரும்பவும் தன் பொறுப்பினை செயல்படுத்தும் வரை குடியரசுத் துணைத்தலைவர் அவரது பணிகளை மேற்கொள்வார்.

குடியரசுத் தலைவரின் பணிகளும் அதிகாரங்களும்

 • குடியரசுத்தலைவரின் பணிகளும் அதிகாரங்களும் பரந்துபட்டவை நாடாளுமன்றத்தைக் கூட்டுவதும், உரையாற்றுவதும், ஒத்திவைப்பதும் அவரே. வெவ்வேறு துறைகளில் முன்னணியிலுள்ள 12 உறுப்பினர்களை மாநிலங்களவைக்கும் இரண்டு ஆங்கிலோ-இந்தியப் பிரதிநிதிகளை மக்களவைக்கும் நியமனம் செய்கிறார்.
 • நாடாளுமன்றத்திலிருந்து வரும் நிதி சாராத முன்வரைவுகளை மீண்டும் மறுபரிசீலனை செய்வதற்காக திருப்பி அனுப்பவும் ரத்து செய்யவும் அவருக்கு அதிகாரமுள்ளது.
 • நாடாளுமன்றத்தின் முன்வரைவுக்கு ஒப்புதல் பெறும்பொருட்டு ஈரவைகளின் கூட்டுக் கூட்டத்தை அழைக்கவும் அவருக்கு உரிமை உண்டு. அவரால் ஆறுமாத காலத்து மிகாதக் அவசரச் சட்ட்த்தை அறிவிக்கவும் முடியும். மாநிலச் சட்டங்களை ரத்து செய்யவும் அவருக்கு அதிகாரமுள்ளது.
 • பிரதமர் தலைமையிலான அமைச்சரவையை நியமிக்கிறார். அத்துடன் அத்தகைய அமைச்சரவை நாடாளுமன்றத்தின் ஆதரவைப் பெற்றதாக இருப்பதை உறுதி செய்கிறார் குடியரசுத்தலைவர் மட்டுமே அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
 • மக்களவையின் ஆதரவை இழந்து விடுகின்றபோது அமைச்சரவையை கலைக்கும் அதிகார பெற்றுள்ளார்.
 • குடியரசுத்தலைவர் இல்லாதபோது அவரது பதவியை தற்காலிகமாக குடியரசுத் துணைத்தலைவர் அல்லது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதி வகிப்பர். அப்போது அவர்கள் நாடாளுமன்றத்தினால் தீர்மானிக்கப்பட்ட குடியரசுத்தலைவருக்கான சலுகைகள், ஊதியம் போன்ற அனைத்து சலுகைகளையும் உரிமைகளையும் குடியரசுத்தலைவரைப் போலவே அனுபவிப்பதற்கு அதிகாரமும் உரிமையும் படைத்தவராக இருப்பர்.

இந்திய அரசமைப்பின் XVIII பாகத்தில் இந்தியக் குடியரசுத்தலைவரின் நெருக்கடிகால அதிகாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆட்சித்துறை சட்டத்துறை நிதித்துறை நீதித்துறை நெருக்கடிக்கால அதிகாரங்கள் இதர அதிகாரங்கள்
 1. குடியரசுத் தலைவரது பெயரால் நிர்வாகத்தை நடத்துவது. அரசுப் பொறுப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கான விதிகளை உருவாக்குவது அமைச்சர்களுக்கு பொறுப்புகளைப் பகிர்ந்தளிப்பது.
 2. அமைச்சரவைக்குழுமுக்கிய முடிவுகளைப்பற்றி அறிந்திருப்பதும், அமைச்சர்கள் குழுவின் கவனத்திற்கும் பரிசீலனைக்கும் எந்த ஒரு விஷயத்தையும் கொண்டு வருவது.
 3. முக்கியமான பொறுப்புகளுக்கு நியமனங்கள் செய்வதும், நீக்குவதும்
 4. அயல்நாடுகளுடனான உறவுகளைக் கையாள்வது
 5. முப்படைகளின் தலைவராக இருப்பது
 6. உச்ச நீதிமன்றம் மற்றும் இதர சுயேட்சையான அமைப்புகளுக்கான நடைமுறை விதிகளையும் வரையறைகளையும் அங்கீகரிப்பது
 7. மாநில அரசுகளுக்கான வழிகாட்டுதல்களையும், ஆணைகளையும் அனுப்புவது மற்றும் அரசமைப்பு இயந்திரம் செயலற்றுப்போகும்போது மாநில அரசின் மீது அரசமைப்பு 356-வது உறுப்பை நிறைவேற்றுவது
 8. ஒன்றிய ஆளுகைக்குட்பட்டப் பகுதி மற்றும் பட்டியலின மற்றும் பழங்குடியினப்பகுதிகளை நிர்வாகம் செய்வது
 1. நாடாளுமன்றத்தின் அவைகளின் கூட்டங்களைக் கூட்டுவது, மக்களவையை ஒத்திவைப்பது மற்றும் மக்களவையை கலைத்தல்
 2. மாநிலங்களவைக்கு 12 உறுப்பினர்களையும் மக்களவைக்கு இரு உறுப்பினர்களையும் நியமனம் செய்வது
 3. நாடாளுமன்றக் கூட்டங்களின் துவக்க உரையை நிகழ்த்துவது. நாடாளுமன்றத்திற்கு தகவல்கள் அனுப்புவது
 4. நிதிசாராத முன்வரைவுகள் மீது முழுமையான அல்லது தற்காலிக மறுதலிப்பு அதிகாரத்தைப் பயன்படுத்துவது
 5. சில வகையான முன்வரைவுகளை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவதற்கான அனுமதியை வழங்குவது
 6. நாடாளுமன்றம் நடப்பில் இல்லாதபோது அவசரச் சட்டங்களைப் பிறப்பிப்பது
 7. வெவ்வேறு குழுக்களுடைய அறிக்கைகளையும், பரிந்துரைகளையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கச் செய்வது
 8. மக்களவையின் இடைக்கால அவைத் தலைவரை நியமிப்பது
 9. துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் தொடர்பான சட்டங்களை நீட்டிப்பது, மாற்றியமைப்பது அல்லது நீக்குவது
 10. சில குறிப்பிட்ட மாநிலச் சட்டங்கள் மீது முழுமையான மறுதலிப்பு அதிகாரத்தைப் பயன்படுத்துவது.
 1. குடியரசுத்தலைவரது முன் அனுமதியுடன் மக்களவையில் நிதி முன்வரைவை அறிமுகப்படுத்துவது
 2. இந்தியாவின் ஒதுக்கீடு செய்யப்படாத நிதியத்தின் மீது கட்டுப்பாட்டினை வைத்திருத்தல்
 3. நாடாஉமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்கச் செய்தல்
 4. நிதிக்குழுவை நியமனம் செய்தல்
 5. வருமான வரியிலிருந்து மாநிலங்களுக்கான பங்கினை முடிவு செய்தல், அசாம், பீகார், ஒடிசா, மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சணற்பொருட்களுக்கான ஏற்றுமதி வரிகளுக்கு மாற்றாக தரவேண்டிய மானியங்களை முடிவு செய்தல்
 1. தமது கருணைக்காட்டும் உரிமையைப் பயன்படுத்தி தண்டணைகளை மாற்றி அமைப்பது, விலக்கு அளிப்பது, மன்னிப்பு வழங்குவது, தண்டணையைக் குறைப்பது, ஒத்தி வைப்பது
 2. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் முதன்மை நீதிபதிகளையும், ஏனைய நீதிபதிகளையும் நியமிப்பது
 3. எந்த ஒரு சட்டம் அல்லது பொருள் குறித்து உச்சநீதிமன்றத்தில் ஆலோசனையை நாடுவது
 1. மூன்றுவிதமான நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கு குடியரசுத்தலைவருக்கு தனிச்சிறப்பான அதிகாரங்களை அரசமைப்பு வழங்கியுள்ளது
 • தேசிய நெருக்கடி (உறுப்பு – 352)
 • குடியரசுத்தலைவரின் ஆட்சி (உறுப்பு -356 அ 365)
 • நிதி நெருக்கடி (உறுப்பு 360)
 1. அரசமைப்பு 352- வது உறுப்பு குடியரசுத்தலைவர் போர், வெளியிலிருந்து ஆக்ரமிப்பு மற்றும் உள்நாட்டுக் கலகங்கள் மூலம் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது தேசிய அளவில் நெருக்கடி நிலையை அறிவிக்கிறார்.
 2. ஒரு மாநிலத்தில் அரசமைப்பு நிர்வாகம் செயலிழந்து போகும்போது அரசமைப்பு உறுப்பு 356-கீழ் குடியரசுத் தலைவர் நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்கிறார்.
 3. எப்போது ஒரு மாநிலம் தேசிய அரசின் கட்டளைகளை அல்லாத அரசமைப்பு விதிகளுக்கு இணங்க மறுக்கிறதோ அப்போது குடியரசுத்தலைவரின் ஆட்சியை அம்மாநிலத்தில் புகுத்துவதற்கு உறுப்பு 365 வழிவகை செய்கிறது.
 4. இந்தியாவின் நிதியில் நிலையற்ற தன்மையும் வருவாயும் அச்சுறுத்தலில் உள்ளதாக குடியரசுத்தலைவருக்குத் தோன்றினால் நிதி நெருக்கடி நிலைமையைப் பிரகடனம் செய்ய உறுப்பு 360 வகை செய்கீறது.
 1. பொதுமக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த எந்த ஒரு விவகாரத்தைப் பற்றியும் சட்டம் அல்லது உண்மைகளைப் பற்றி உச்ச நீதி மன்றத்தின் கருத்தினைக் கோருதல்
 2. உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் எண்ணிக்கையை முடிவு செய்வது
 3. ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணிஅய அமைப்பு மற்றும் விதிகளை உருவாக்குதல்
 4. ஆட்சி ன்மொழிக் குழுவை அமைப்பது மற்றும் ஆட்சி நடத்துவதில் படிப்படியாக ஹிந்தி மொழியின் பயன்பாட்டை அதிகரிக்கச்செய்யும் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது.
 5. ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்திற்கான சிறப்பு ஒழுங்காற்று விதிகளை உருவாக்குவது
 6. பட்டியலிடப்பட்ட மற்றும் பழங்குடியினர் பகுதிகளை நிர்வாகம் செய்வதற்கான சிறப்பு சட்டங்களையும் விதிகளையும் உருவாக்குதல்

குடியரசுத் துணைத்தலைவர்

அமெரிக்க அரசமைப்பினைப் போன்று இந்திய அரசமைப்பும் துணைக் குடியரசுத்தலைவர் பதவியை (இந்திய அரசமைப்பு உறுப்பு – 63) வழங்குகிறது. இந்தியாவின் துணைக் குடியரசுத்தலைவர் பதவி நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த பதவியாகும்.

தேர்தல்

இந்தியக் குடியரசுத் துணைத்தலைவர் நாடாளுமன்றத்தின் ஈரவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் இரகசிய வாக்கெடுப்பு மூலம் விகிதாச்சார முறையில் மாற்றத்தக்க ஒற்றை வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

தகுதிகள்

இந்திய குடியரசுத் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர் கீழ்க்காணும் தகுதிகளைக் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

அ) இந்தியாவின் குடிமகனாக இருக்க வேண்டும்.

ஆ) 35 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும்.

இ) மாநிலங்களவை உறுப்பினராவதற்கு தகுதிவாய்ந்தவராக இருக்க வேண்டும்.

ஈ) ஊதியம் பெறும் எந்த பதவியிலும் இருக்கக்கூடாது.

பதவிக்கான வரையறைகள்

 • குடியரசுத் துணைத்தலைவர் ஐந்து வருட காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவார். குடியரசுத்தலைவரிடம் தனது பதவி விலகல் கடிதத்தை கொடுப்பதன் மூலம் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாக அவர் தனது பதவியிலிருந்து தாமாகவே பதவி விலகலாம்.
 • மாநிலங்களவை உறுப்பினர்களின் அறுதிப் பெரும்பான்மை ஆதரவோடு, மக்களவையின் ஒப்புதலோடு அவருக்கெதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுவதின் மூலம் அப்பதவியிலிருந்து அவரை நீக்க முடியும். ஆனால் அத்தகைய தீர்மானத்திற்கு 14 நாட்கள் முன்னறிப்பு அவசியமாகும்.

பொறுப்புகளும் பணிகளும்

 • குடியரசுத் துணைத்தலைவர் அப்பதவியினால் மாநிலங்களவையின் அலுவல்வழி தலைவராகிறார் (இந்திய அரசமைப்பின் 64-வது உறுப்பு). அவர் மாநிலங்களவைக் கூட்டங்களை நடத்துகிறார்.
 • மக்களவையில் சபாநாயகர் போன்றே, இவருக்கு மாநிலங்களவையில் அதிகாரம் உள்ளது. மாநிலங்களவையின் தலைவர் என்ற நிலையில் மட்டுமே இவர் ஊதியம் பெறுகிறார், ஏனெனில் குடியரசுத் துணைத்தலைவர் பதவிக்கு என எந்த ஊதியமும் இல்லை.
 • குடியரசுத்தலைவரின் இறப்பு அல்லது பதவி நீக்கம் ஆகியவற்றின் காரணமாக காலியிடம் ஏற்பட்டால் அல்லது வேறு ஒரு குடியரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவரை குடியரசுத் துணைத்தலைவரே அந்த பதவியை கூடுதலாக வகிப்பார்.
 • இந்த காலம் ஆறு மாதங்களுக்கு மட்டுமானது ஆகும். இந்தியக் குடியரசுத்தலைவராக செயல்படும் போது குடியரசுத்துணைத்தலைவரின் ஊதியம், இதர படிகள், நாடாளுமன்ற முடிவுகளின்படி பெறுகிறார். அதே நேரத்தில் அவர் மாநிலங்களவையின் தலைவராக செயல்பட முடியாது.

பிரதமர் மற்றும் அமைச்சர்கள் குழு

பிரதமர் என்பவர் சமமானவர்களில் (அமைச்சர்களில்) முதன்மையானவர். அத்துடன் காபினர் (அமைச்சர்கள் குழு) அமைப்பின் அடிப்படைத் தூணாகவும் உள்ளார். அப்பதவியும் பொறுப்பும், அப்பதவி இருக்கும் வரையிலும் ஒப்பிடமுடியாத ஒன்றாகவும், தனிச்சிறப்புமிக்க அதிகார மையமாகவும் விளங்குகிறது.

 • மார்லே பிரபு

பிரதமர்

அறிமுகம்

ஆட்சித்துறை:

அரசமைப்பு பிரதமரின் தலைமையிலான அமைச்சரவைக் குழுவிடம் நிர்வாக பொறுப்பைத் தந்துள்ளது.

பொருள்:

நாட்டில் கொள்கைகளை உருவாக்கவும், முக்கிய முடிவுகளை எடுக்கவும், அவற்றை அமல்படுத்தவும் அரசமைப்பு மற்றும் சட்டங்களின் மூலம் ஒரு குழுவிற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய மத்திய அரசில் இரு முக்கியமான உறுப்புகள் உள்ளன.

 • ஒன்றிய சட்டமன்றம் அல்லது ஒன்றிய நாடாளுமன்றம்
 • ஒன்றிய ஆட்சித்துறை

இந்திய அரசமைப்பின் IV பகுதியிலுள்ள 52 முதல் 78 வரையிலான உறுப்புகள் ஒன்றிய ஆட்சித்துறையைப் பற்றிக்கூறுகின்றன.

பிரிட்டிஷ் நாடாளுமன்ற ஆட்சிமுறையை, அதாவது பிரதமரை அரசின் தலைவராகக் கொண்டுள்ள முறையை இந்திய அரசமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. பிரதமர் அமைச்சரவையில் சமமானவர்களில் முதன்மையானவராக திகழ்கிறார்.

நியமனம்

 • பிரதமரின் தேர்வு மற்றும் நியமனம் பற்றிய குறிப்புகள் எதுவும் அரசமைப்பில் இல்லை. பிரதமர் பதவிக்கு நேரடித் தேர்தல் எதுவும் இல்லை.
 • அரசமைப்பின் 75-வது உறுப்பு பிரதமரை குடியரசுத்தலைவர் நியமனம் செய்வதாக கூறுகிறது. ஆனால் பிரதமரைத் தன்னிச்சையாக குடியரசுத்தலைவர் தேர்வு செய்ய இயலாது.
 • மக்களவையில் பெரும்பான்மையுள்ள கட்சி அல்லது கட்சிகளின் கூட்டணியின் தலைவரையே பிரதமராகக் குடியரசுத்தலைவர் நியமனம் செய்கிறார். எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பெரும்பான்மை ஆதரவைத் திரட்டக்கூடியவர் எனக் குடியரசுத்தலைவரால் கருதப்படுகின்ற ஒருவரை பிரதமராக நியமனம் செய்வார்.
 • பிரதமருக்கென குறிப்பிட்ட பதவிக்காலம் எதுவும் இல்லை. பெரும்பான்மை கொண்ட கட்சி அல்லது கட்சிகளின் தலைவராக இருக்கும் வரையில் அவரே பிரதமராகத் தொடர்வார்.

பணிகள்

 • பிரதமரின் முதன்மையானதும் முக்கியமானதுமான பொறுப்பு அவரது அமைச்சரவையின் உறுப்பினர்கள் பட்டியலைத் தயாரிப்பதே. அவர் அந்த பட்டியலுடன் குடியரசுத்தலைவரை சந்தித்து, ஒப்புதல் பெற்றவுடன் அமைச்சரவை அமைக்கப்படுகிறது.
 • மிக முக்கியமான அமைச்சர்கள் காபினெட் அந்தஸ்து கொண்ட அமைச்சர்களாக அறிவிக்கப்படுகிறார்கள். மற்றவர்கள் மாநில அமைச்சர்கள் என்றும் மூன்றாம் நிலையிலுள்ளவர்கள் துணை அமைச்சர்கள் என்றும் அறியப்படுவர்.
 • பிரதமர் விரும்பினால் ஓர் அமைச்சரை துணைப்பிரதமர் என அறிவிக்க முடியும். பிரதமரின் ஆலோசனையின்படி குடியரசுத்தலைவர் அமைச்சர்களுக்குரிய துறைகளை ஒதுக்குவார். பிரதமர் எந்த துறை அல்லது துறைகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும்.
 • அவ்வப்போது அமைச்சர்களின் பொறுப்புகளை மாற்றியமைக்க குடியரசுத்தலைவருக்கு பிரதமர் ஆலோசனை வழங்கலாம். அதுபோன்று ஒரு துறையை இரண்டாகவோ மூன்றாகவோ பிரிக்கலாம் அல்லய்து இரண்டு, மூன்று துறைகளை ஒரே துறையாகவும் இணைக்கலாம்.

பிரதமரின் முதன்மை நிலை கீழே தரப்பட்டுள்ள காரணிகளால் தெளிவாகிறது.

 1. மக்களவையின் பெரும்பான்மை கொண்ட கட்சியின் தலைவராக அவர் உள்ளார்.
 2. மற்ற அமைச்சர்களை தேர்வு செய்யக் குடியரசுத்தலைவருக்கு பரிந்துரை செய்யவும், எந்த ஒரு அமைச்சரையும் பதவி நீக்கம் செய்யப் பரிந்துரைக்கவும், பதவி விலகுமாறு கட்டளை இடவும் பிரதமருக்கே அதிகாரமுள்ளது.
 3. அமைச்சர்களுக்குப் பொறுப்புகளை ஒதுக்கீடு செய்வது பிரதமரின் பொறுப்பாகும். அதுபோன்று எந்த அமைச்சரையும் ஒரு துறையிலிருந்து வேறொரு துறைக்கு மாற்றவும் அவருக்கு உரிமை உள்ளது.
 4. அமைச்சரவையின் தலைவர் பிரதமரே, அதன் கூட்டங்களைக் கூட்டவும், தலைமையேற்று நடத்துவதும், பல குழுக்களின் தலைவரும் பிரதமரே ஆவார்.
 5. அரசின் கொள்கை முடிவுகளை ஒருங்கிணைத்து அனைத்து துறைகளின் நடவடிக்கைகளையும் மேற்பார்வையிடுகிறார்.
 6. ஓர் அமைச்சர் தாமாகவே பதவி விலகிவிட்டால், ஓர் அமைச்சர் பதவி காலியிடமாகிறது. ஆனால் ஒரு பிரதமர் பதவி விலகினாலோ, அல்லது இறந்து விட்டாலோ அவரது அமைச்சரவையே இல்லாமல் போய்விடுகிறது.
 7. அமைச்சர்களுக்கும் குடியரசுத் தலைவருக்கும் இடையில் தொடர்புப் பாலமாக இருப்பவர் பிரதமரே. அதே போன்று நாடாளுமன்றத்துக்கும் அமைச்சர்களுக்கும் இடையில் பாலமாக இருப்பவரும் அவரே. அரசின் வெளிநாட்டு விவகாரங்களை வெளியிடும் முக்கிய நபராகவும் அவர் உள்ளார்.

பிரதமரின் அலுவலகம்

பொருள்

 • நடைமுறையில் அரசின் தலைவராகவும் , உண்மையான நிர்வாகத் தலைவராகவும் இருக்கின்றபடியால், நாட்டின் அரசியல் – நிர்வாக அரங்கில் பிரதமர் மிக முக்கியமான பங்கு வகித்து வருகிறார்.
 • அவரது பொறுப்புகளை நிறைவேற்றும் பொருட்டு பிரதமருக்கு உதவியாக பிரதமர் அலுவலகம் உள்ளது (PMO – Prime Minister Office) பிரதமர் அலுவலகம், செயலக உதவிகளையும் ஆலோசனைகளையும் பிரதமருக்கு வழங்குகிறது.
 • இந்திய அரசின் உச்சகட்ட முடிவுகளை வடிவமைக்கும் நிலையிலுள்ள பிரதமர் அலுவலகம் அரசமைப்பால் குறிப்பிடப்படாத ஓர் அதிகார மையமாகத் திகழ்கிறது.
 • பிரதனர் அலுவலகத்திற்கு இந்திய அரசின் துறைகளில் ஒன்று என்ற தகுதி உள்ளது. இந்த அலுவலகம் 1947-இல் உருவாக்கப்பட்டது. 1997-வரை இது பிரதமரின் செயலகம் (PMS – Prime Minister’s Secretariat) என்றே அழைக்கப்பட்டு வந்தது. அரசியல் ரீதியாக பிரதமரும், நிர்வாக ரீதியாக முதன்மைச் செயலரும் இதன் தலைமையாகச் செயல்படுவர்.

பிரதமர் அலுவலகத்தின் பல்வேறு பணிகள்

 1. அரசாங்கத்தின் தலைவர் என்ற நிலையில் உள்ள பிரதமருக்குத் தேவையான உதவிகளைச் செய்வது, மத்திய அமைச்சகங்களுடன் / துறைகளுடன் மற்றும் மாநில அரசுகளுடன் தொடர்புகளைப் பராமரிப்பது.
 2. நிதி ஆயோக் மற்றும் தேசிய வளர்ச்சி குழு போன்றவற்றிற்கு தேவையான உதவிகளைச் செய்வது.
 3. ஊடகங்களுடனும், பொதுமக்களுடனுமான பிரதமரின் தொடர்புகளைப் பராமரிப்பது.
 4. பிரதமரின் அலுவல்களுக்கு விதிகளின் படி நடவடிக்கைகளை மேற்கொள்வது.
 5. குறிப்பிட்ட விதிகளின்படி பிரதமருக்கு அனுப்பப்படும் விவகாரங்களைப் பற்றி ஆராய்ந்தறிவதற்கு பிரதமருக்கு உதவுவது.
 6. குடியரசுதலைவர் , ஆளுநர்கள், அயல்நாட்டுத் தூதர்கள் போன்றவர்களுடன் இணக்கமான உறவுகளுக்காக பிரதமருக்கு உதவுவது.
 7. பிரதமரின் சிந்தனை ஊற்றாகச் செயல்படுவது பிறதுறைகளுக்கும் அமைச்சகங்களுக்கும் ஒதுக்கப்படாத அனைத்து விபரங்களையும் கையாள்வது.
 8. அமைச்சரவை தொடர்பான விவகாரங்களில் பிரதமர் அலுவலகம் ஈடுபடுவதில்லை. அமைச்சரவை தொடர்பான விபரங்களை அமைச்சரவை செயலகம் நேரடியாகக் கையாள்கிறது. ஆனால் அந்த அமைச்சரவை செயலகமும் பிரதமரின் வழிகாட்டுதலின்படியே செயல்படுகிறது.

மத்திய அமைச்சர்கள் குழு

 • அரசமைப்பு 74-வது உறுப்பின்படி குடியரசுத்தலைவருக்கு உதவவும், ஆலோசனை வழங்கவும், பிரதம அமைச்சரைத் தலைவராகக் கொண்ட ஓர் அமைச்சர்கள் குழு இருக்கும்.
 • குடியரசுத்தலைவர் தமது பொறுப்புகளை நிறைவேற்றுவதில் இந்த அமைச்சர்கள் குழுவின் ஆலோசனையின்படி நடந்துகொள்வார்.
 • அமைச்சர்கள் குழுவின் ஆலோசனையை குடியரசுத்தலைவர் ஏற்றுக் கொள்கிறார். அமைச்சர்கள் குழுவில் மூன்று வகையான அமைச்சர்கள் இருப்பர். அவை
 1. காபினர் அமைச்சர்கள்
 2. அமைச்சர்கள்
 3. துணை அமைச்சர்கள்.
 • காபினட் அமைச்சர்கள் கொள்கை முடிவுகளை எடுப்பதில் ஈடுபடுபவர்கள். மற்ற இரு பிரிவு அமைச்சர்களும் நிர்வாகப் பொறுப்புகளை மேற்கொள்பவர்கள். இந்த மூன்று பிரிவு அமைச்சர்களுக்கும் வெவ்வேறு விதமான பதவி, ஊதியம் உள்ளிட்ட படிகள் அரசியல் முக்கியத்துவம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. அனைவருக்கும் உச்சமாகப் பிரதமர் நாட்டின் மிக உயர்ந்த ஆட்சி அதிகாரம் கொண்டவராக இருக்கிறார்.

அமைச்சர்கள் குழுவின் நியமனம்

 • அரசமைப்பு 75-வது உறுப்பின்படி குடியரசுத்தலைவரால் பிரதமர் நியமிக்கப்படுகிறார். பிரதமரின் ஆலோசனையின் பேரில் மற்ற அமைச்சர்கள் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்.
 • குடியரசுத்தலைவரின் விருப்பம் உள்ளவரை அமைச்சர்கள் பதவியில் இருப்பர். குடியரசுத்தலைவரின் விருப்பத்தின் பேரிலேயே அமைச்சர்கள் நியமனம் என்று கூறப்பட்டாலும், நடைமுறையில் அவர்கள் பிரதமராலேயே தேர்வு செய்யப்படுகின்றனர். பிரதமரால் பரிந்துரைக்கப்படாத யாரையும் குடியரசுத்தலைவர் அமைச்சராக நியமனம் செய்ய முடியாது.

நிழல் அமைச்சரவை

இங்கிலாந்து நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு துறையிலும் உள்ள வ்வகாரங்களைப் பற்றி ஆராய தமது உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைக்கிறது. இதன் மூலம் எதிர்க்கட்சிகள் அரசு தொடர்பான பிரச்சனைகளை தெளிவாக அறிந்து கொள்ளவும் அரசினை விழிப்பாக இருக்கச் செய்யவும் முடிகிறது. இது நிழல் அமைச்சரவை என்று அழைக்கப்படுகிறது.

அமைச்சர்களின் தனிப்பட்ட மற்றும் கூட்டுப்பொறுப்பு

 • இந்திய அரசமைப்புப்படி அமைச்சர்கள் தனியாகவும், கூட்டாகவும் மக்களவைக்கு பொறுப்பானவர்கள். கூட்டுப்பொறுப்பு என்பது , அரசின் நடவடிக்கைகளுக்கு அமைச்சரவையின் அனைத்து அமைச்சர்களும் கூட்டாக மக்களவைக்குப் பொறுப்பானவர்கள் ஆகின்றனர் என்று பொருள்.
 • அனைத்து அமைச்சர்களும் பொதுவெளியில் தங்களுக்குள்ளான வேறுபாடுகளை வெளிக்காட்டக் கூடாது என்பதும் இதன் பொருள் எனலாம்.
 • எந்த ஒரு பொதுப் பிரச்சனையிலும், பொது நிகழ்விலும் அனைத்து அமைச்சர்களும் அரசின் நிலைப்பாட்டை ஒருமித்து ஆதரிக்க வேண்டும்.

குடும்ப அமைச்சரவை என்றால் என்ன?

குடும்ப அமைச்சரவை என்பது அமைச்சரவைக்குள்ளேயே ஒரு சிறு குழுவாகச் செயல்படும் அமைச்சர்களின் குழு. இது முறை சாரா குழு எனினும் உண்மையான அதிகார மையமாகும். இந்தியாவின் ஒவ்வொரு பிரதமருக்கும் இப்படி ஒரு அமைச்சரவைக் குழு இருந்துள்ளது. முக்கியமான அரசியல் பிரச்சனைகளில் முடிவுகள் எடுப்பதில் ரகசியத்தைப் பாதுகாக்கப் பிரதமருக்கு இந்த அமைச்சரவைக் குழு முறை உதவியாய் உள்ளது.

ஒன்றிய (மத்திய) அமைச்சர்கள் குழு

 • அமைச்சரவையின் ஓர் உட்குழுவாக இது இருக்கிறது. அமைச்சரவையிலிருந்து அமைக்கப்படும் இந்த உட்குழு அரசமைப்பில் குறிப்பிடப்படாத ஒன்றாகும். அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் ஒன்றாக அமர்ந்து கொள்கை முடிவுகளை எடுப்பதுவோ, அலுவல்களை விவாதிப்பதோ இல்லை.
 • மாறாக ஒன்றிய அமைச்சரவைக் குழு எனப்படும். அமைச்சர்குழுவின் அட்குழுவைச் சேர்ந்தவர்கள்தான் பிரதமர் தலைமையில் ஒன்றாகக்கூடி அம்முடிவுகளை எடுக்கிறார்கள் அவற்றை அமைச்சர்கள் குழுவின் ஆலோசனைகளாக குடியரசுத்தலைவருக்கு ஆலோசனை வழங்குகிறார்கள். இந்திய அரசின் நிர்வாக விவகாரங்களைப் பார்த்துக்கொள்ளும் உச்சமான ஆட்சிக் குழுவாக அமைச்சரவைக் குழு விளங்குகிறது அமைச்சர்கள் குழுவின் கருவாக அது செயல்படுகிறது.

அமைச்சர்கள் குழுவின் செயல்பாடுகள்

 1. அமைச்சரவைக் குழுதான் உயர்ந்தபட்ச முடிவுகளை எடுப்பதற்கான மற்றும் கொள்கைகளை வகுப்பதற்கான அதிகாரம் பெற்ற அமைப்பாகும்.
 2. இது அனைத்து முக்கியமான சட்ட, நிதி மற்றும் வெளியுறவு விவகாரங்களையும் கையாளுகிறது.
 3. அரசமைப்புரீதியான அனைத்து நியமனங்களையும் மூத்த செயலக நிர்வாகிகளையும் இது கட்டுப்படுத்துகிறது.
 4. நாடாளுமன்றம் நடைபெறாதபோது அவசரச் சட்டங்களைப் பிறப்பிக்க குடியரசுத்தலைவருக்கு பரிந்துரை செய்கிறது.
 5. இது விசாரணைக் குழுக்களை நியமிக்கிறது மற்றும் துறைகளுக்கு இடையிலான சிக்கல்களைத் தீர்த்து வைக்கிறது.
 6. நெருக்கடி நிலையை பிரகடனம் செய்வதற்கும், மக்களவையைக் கலைத்து விடவும், நாடாளுமன்றக் கூட்டங்களை முடித்து வைக்க அல்லது ஒத்தி வைக்குமாறு குடியரசுத்தலைவருக்கு பரிந்துரை செய்யவும் அதிகாரம் கொண்டுள்ளது.

அமைச்சரவைக் குழுச் செயலர்

 • அமைச்சரவைக் குழுவில் உள்ள ஒவ்வொரு அமைச்சருக்கும் உதவி செய்ய ஒரு செயலர் இருப்பர். அத்தகைய அமைச்சரவைக் குழு செயலர்களின் முதன்மை இடம் முதன்மைச் செயலருக்குத் தரப்பட்டுள்ளது.
 • உயர்த் தேர்வுக் குழுவின் (Board) தலைவராக அவர் இருப்பர். அக்குழுதான் மத்திய தலைமைச் செயலகத்தின் இணைச் செயலர்களை நியமிக்கும். அந்த முதன்மைச் செயலர்தான் ஆண்டுதோறும் நடைபெறும் (மாநில) தலைமைச் செயலர்களின் மாநாடுகளுக்கு தலைமை வகிக்கிறார்.
 • நிர்வாகத்தின் அனைத்து அம்சங்களிலும், கொள்கைகளிலும் பல்வேறு நிர்வாகத்துறைகளுக்கும் நிர்வாகப் பணியினருக்கும் அரசியல் அமைப்புகளுக்கு இடையில் தொடர்பாகச் செயல்படுபவரும் முதன்மைச் செயலரே ஆவார்.

ஆட்சித்துறை : மாநிலங்கள்

 • இந்திய அரசமைப்பின் IV-வது பகுதியிலுள்ள 153 முதல் 167 வரையிலான உறுப்புகள் மாநில நிர்வாகத்தைக் குறிப்பிடுகின்றன.
 • மத்திய அரசில் காணப்படும் நாடாளுமன்ற நிர்வாக முறையே மாநிலத்திலும் உள்ளது. மாநில நிர்வாகமும்,ஆளுநர் மற்றும் முதலமைச்சரைத் தலைவராகக் கொண்ட அமைச்சர்கள் குழு ஆகியவற்றைக் கொண்டது.
 • மத்தியில் குடியரசுத்தலைவரைப் போன்று மாநிலத்திலும் ஆளுநரே நிர்வாகத்தின் தலைவராக உள்ளார்.
 • அனைத்து மாநிலங்களிலும் இதே முறைதான் உள்ளது. ஆனால் சில மாநிலங்களில் ஒற்றை அவைகளைக் கொண்ட சட்டமன்றமும், மற்ற சில மாநிலங்களில் இரண்டு அவையைக் கொண்ட சட்டமன்றமும் உள்ளன. ஆனால் IV-வது பகுதியில் காணப்படும் இப்பிரிவுகள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குப் பொருந்தாது.
 • அரசமைப்பு 370-வது உறுப்பின்படி அம்மாநிலம் சிறப்புநிலை கொண்ட ஒன்றாகவும், தனக்கென தனி அரசமைப்புக் கொண்ட ஒன்றாகவும் இருந்தது.

மாநில நிர்வாகம்

 • ஆளுநர்
 • முதலமைச்சர் தலைமையிலான அமைச்சர்கள் குழு

ஆளுநர்

ஆளுநரின் தேர்வுமுறை

அரசமைப்பின் 153-வது உறுப்பு ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் ஆளுநர் இருப்பார் என்கிறது. பொதுவாக, ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருப்பார். ஆனால் 1956-ஆம் ஆண்டின் அரசமைப்பு திருத்தப்படி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக ஒருவரே இருக்க முடியும்.

ஆளுநரின் நியமனம்

ஒரு மாநில ஆளுநர் இந்தியக் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுகிறார். (உறுப்பு – 155). அவர் ஆளுநராக நியமிக்கப்பட கீழ்க்கண்ட தகுதிகள் வேண்டும்.

 • இந்தியாவின் குடிமகன்
 • வயதை நிறைவு செய்தவர்
 • ஊதியம் பெறும் எந்த பதவியிலும் இருக்கக்கூடாது.
 • நாடாளுமன்ற அல்லது மாநிலச் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடாது.

பதவி மற்றும் காலம்

 • ஆளுநரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். (உறுப்பு – 156). அவர் எந்த நேரத்திலும் குடியரசுத்தலைவரால் பதவி நீக்கப்படலாம்.
 • குடியரசுத்தலைவரால் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாற்றப்படலாம். நாடாளுமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை ஆளுநர் பெறுகிறார். அதன்படியே சில சலுகைகளை படிகளையும் பெறுகின்றார்.
 • இந்திய அரசமைப்பின்படி , மாநில அரசமைப்பு மற்றும் நிர்வாகத்தின் தலைவராக ஆளுநர் இருக்கிறார். மாநில நிர்வாகத்தின் ஆட்சிப்பொறுப்பு ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 • மாநிலத்தின் அனைத்து ஆட்சி நடவடிக்கைகளும் அவரது பெயரால் நடைபெறுகின்றன. ஆனால் நடைமுறையில், மாநிலத்தின் உண்மையான செயல் அதிகாரங்கள் முதலமைச்சரின் தலைமையிலான அமைச்சர்கள் குழுவுக்கே உள்ளது.
 • மாநிலத்தின் சட்டசபைக்கு ஒட்டுமொத்தமாக கூட்டுப் பொறுப்புள்ள அமைச்சர்களின் ஆலோசனைப்படி, ஆளுநர் செயல்படுகிறார்.

ஆளுநரின் அதிகாரங்களும் பணிகளும் பின்வருமாறு

 1. நிர்வாக அதிகாரங்கள்
 2. ஆளுநர் மாநில அரசின் நிர்வாகத் தலைவராக உள்ளார். ஆளுநர் நிர்வாக அதிகாரங்களை நேரடியாகவோ அல்லது அவருக்கு கீழுள்ளவர்களாலோ (154-வது உறுப்பின்படி அமைச்சர்கள்) செயல்படுத்துகிறார். அனைத்து நிர்வாகச் செயல்பாடுகளும் அவருடைய பெயரில் நடத்தப்படுகின்றன. மாநில பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்திலும் ஆளுநருக்கு அதிகாரம் உண்டு.
 3. சட்டமன்றத்தில் பெரும்பான்மை கட்சியின் தலைவரை முதலமைச்சராக ஆளுநர் நியமிக்கிறார். முதலமைச்சரின் ஆலோசனையின்படி, பிற அமைச்சர்களை அவர் நியமிக்கிறார். முதலமைச்சர் விரும்பும் வரையில் மட்டுமே அமைச்சர்கள் அப்பதவியில் இருப்பர். ஏனெனில் முதலமைச்சரின் ஆலோசனைப்படிதான் ஆளுநர் செயல்படுகிறார்.
 4. மாநில அரசின் தலைமை வழக்குரைஞர், மாநிலப் பொதுப் பணி ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஆளுநர் நியமிக்கிறார். துணை சார்பு நீதிமன்றங்களின் நீதிபதிகளின் நியமனங்கள், பதவிகள் , பதவி உயர்வு போன்றவற்றை ஆளுநர் தீர்மானிக்கிறார்.
 5. மாநில நிர்வாகத்தை சீராக இயக்கும் பொறுப்பு ஆளுநருடையதாகும். மாநில அரசமைப்பு இயந்திரம் நிலைகுலைந்து விட்டாலோ அல்லது மாநில நிர்வாகம் அரசமைப்பின் விதிமுறைகளுக்கு இணக்கமாக செயல்படாவிட்டாலோ, அரசமைப்பு விதிகளின்படி அரசமைப்பு அவசர நிலையை பிரகடனப்படுத்தி குடியரசுத்தலைவர் ஆட்சியை அரசமைப்பு 356-வது உறுப்பின்படி பரிந்துரைக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. குடியரசுத்தலைவரது நேரடி ஆட்சி என்றால் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி என்று பொருள்படும். அமைச்சரவை இல்லாத மாநில ஆட்சி என்றும் பொருள்படும்
 6. சட்டமன்ற அதிகாரங்கள்

ஆளுநர் மாநிலச் சட்டமன்றத்தின் ஒரு பகுதி (உறுப்பு – 168) ஆவார். எனவே, அவர் சட்ட அதிகாரங்களையும் கொண்டிருக்கிறார். அவரது சட்ட அதிகாரங்கள் பின்வருமாறு

 1. ஆளுநர் சட்டமன்றத்தை கூட்டவும், முடித்து வைக்கவும், ஒத்தி வைக்கவும், கலைத்து விடவும் அதிகாரம் படைத்தவர்.
 2. ஆளுநர் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றுகிறார்.
 3. ஆளுநரின் அனுமதியின்றி, எந்த முன்வரைவும் சட்டமாக்க முடியாது. அது மாநிலச் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டாலும் அவரது ஒப்புதலின்றிச் சட்டமாகாது. சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படும் முன்வரைவுகள் அவரது ஒப்புதலுக்காக அனுப்பப்படும். அவற்றிற்கு ஒப்புதலைத் தரவோ அல்லது அந்த முன்வரைவை நிறுத்தி வைக்கவோ அல்லது குடியரசுத்தலைவரின் கருத்திற்காக முன்வரைவை ஒதுக்கி வைக்கவோ முடியும், மறுபரிசீலனை செய்யுமாறு ஆளுநரால் இந்த முன்வரைவுகள் அவை நடுவருக்கு திருப்பி அனுப்ப முடியும். முன்வரைவு மீண்டும் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டால் (திருத்தங்கள் இல்லாமலும்), ஆளுநர் தனது ஒப்புதலை அளித்தே ஆகவேண்டும்.
 4. சட்டம் 213-ன் கீழ் சட்டமன்றம் அமர்வில் இல்லாத காலங்களில் ஆளுநர் அவசர சட்டங்களையும் பிறப்பிக்கலாம். (எனினும், இத்தகைய அவசர சட்டங்கள் தொடர்வதற்கு, அவை மாநிலச் சட்டமன்றம் மீண்டும் கூடியதிலிருந்து ஆறு வாரங்களுக்குள் அங்கீகரிக்கப்பட வேண்டும்.)
 5. மாநிலச் சட்டமன்றம் இரண்டு அவைகளை கொண்டிருந்தால், அதன் மேலவைக்கு ஆறில் ஒரு பங்கு உறுப்பினர்களை இலக்கியம், அறிவியல், கலை, கூட்டுறவு இயக்கம் , சமூகப்பணி போன்றவற்றில் சிறப்பு அறிவும் அனுபவமும் உள்ளவர்களை நியமிக்கலாம். அத்துடன் கீழவைக்கு ஆங்கிலோ – இந்திய பிரதிநிதியையும் நியமிக்கலாம்.
 6. நிதி அதிகாரங்கள்

ஆளுநருக்கு பின்வரும் நிதி அதிகாரங்கள் உள்ளன.

 1. நிதி அமைச்சர் மாநிலச் சட்டமன்றத்தில் வரவு –செலவு திட்டத்தை அல்லது நிதிநிலை அறிக்கையை சமர்பிக்கிறார். ஆனால் எந்த நிதி முன்வரைவும் ஆளுநரின் முன் ஒப்புதலின்றி சட்டமன்றத்தில் கொண்டுவரமுடியாது.
 2. ஆளுநரின் பரிந்துரையின்றி மானியங்களுக்கான கோரிக்கை எதுவும் கோரப்பட முடியாது.
 3. மாநிலத்தின் ஒதுக்கு நிதியின் பாதுகாவலர் ஆளுநர் ஆவார். நிதி நெருக்கடியான கட்டங்களில் சட்டமன்றத்தின் முன் அனுமதியின்றியும் அவரால் இந்நிதியை பயன்படுத்த முடியும்.
 4. நீதித்துறை அதிகாரங்கள்

ஆளுநரின் நீதித்துறை அதிகாரங்கள் பின்வருமாறு

 1. மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட கிளை நீதிமன்றங்கள் உள்ளிட்ட சார்பு நீதிமன்றங்களின் பதவிகள், நியமனங்கள், பதவி உயர்வுகள் போன்றவற்றை தீர்மானித்தல்.
 2. உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் நியமனம் செய்யும் போது அவர் இந்தியாவின் குடியரசுத்தலைவரால் கலந்தாலோசிக்கப்படலாம்.
 3. மாநில அரசின் அதிகார வரம்பிற்குட்பட்ட வழக்குகளில் தண்டிக்க தக்கவர்களில் குற்றம் சாட்டப்பட்ட எந்தவொரு நபரின் தண்டனையைக் குறைப்பதற்கும் மன்னிப்பு வழங்குவதற்கும், நிறுத்துவதற்கும், விலக்குவதற்கும் அல்லது மாற்றுவதற்கும் ஆளுநருக்கு அதிகாரம் உண்டு.
 4. விருப்ப அதிகாரங்கள்
 5. எந்தவொரு கட்சி அல்லது தலைவர் சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைப் பெறாத சூழ்நிலையில் ஒரு புதிய முதலமைச்சரை நியமித்தல்.
 6. அவையின் பெரும்பான்மை ஆதரவை இழந்தபோதும் அல்லது நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் பதவி விலக மறுக்கும் நிலையில் அமைச்சரவையை பதவி நீக்கம் செய்வது.
 7. பெரும்பான்மை ஆதரவை இழந்த ஒரு முதலைச்சரின் ஆலோசனையின் பேரில் சட்டசபையைக் கலைத்துவிடுதல்.
 8. அரசமைப்பு இயந்திரச் சீர்குலைவது பற்றி குடியரசுத்தலைவருக்கு அறிக்கை அனுப்புதல் மற்றும் குடியரசுத்தலைவர் ஆட்சியை மாநிலத்தில் கொண்டுவருதல்.
 9. சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட முன்வரைவுகளுக்கு ஒப்புதல் அளித்தல்.

குடியரசுத்தலைவர் ஆட்சி: வெளிநாட்டு ஆக்கிரமிப்பு அல்லது ஆயுதமேந்திய கிளர்ச்சியிலிருந்து எழும் நெருக்கடி நிலைகளை சமாளிப்பதற்கான அவசர நிலையை பிரகடனம்செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. ஆனால் அரசமைப்பின் விதிமுறைகளுக்கு இணங்க மாநில அரசை நடத்த இயலாத சூழல் ஏற்பட்டால் அது பற்றி குடியரசுத்தலைவருக்கு அறிவுறுத்தி அறிக்கை தரும் அதிகாரம் உள்ளது. (உறுப்பு -356). இதன் மூலம் குடியரசுத்தலைவர் தாமே மாநில அரசின் ஆட்சிப்பொறுப்பினை ஏற்று நடத்திச் செல்வதற்கு வகை செய்கிறார்.

தலைமை வழக்குரைஞர்

ஒவ்வொரு மாநிலத்திற்கும் மத்திய அரசின் தலைமை வழக்குரைஞருக்கு இணையாக ஒரு அரசின் தலைமை வழக்குரைஞர் நியமிக்கப்படுகிறார். உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகும் தகுதியுடையவர்களையே ஆளுநர் தலைமை வழக்குரைஞராக நியமனம் செய்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *