சர்வதேச அமைப்புகள் Notes 12th Political Science Lesson 11 Notes in Tamil

12th Political Science Lesson 11 Notes in Tamil

11. சர்வதேச அமைப்புகள்

அறிமுகம்

 • நாம் சர்வதேச அமைப்புகளை பற்றி சிந்திக்கும் போதெல்லாம், அவை இருபதாம் நூற்றாண்டைச் சார்ந்த வரலாற்று நிகழ்வாகவும், குறிப்பாக சர்வதேச சங்கம் 1919ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பிறகு தோன்றியவையாகவும் கருதுகிறோம். உண்மையில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே குறிப்பிட்ட பிரச்சனைகளை தீர்ப்பதற்கான அமைப்பாக உலக நாடுகளால் ஏற்கனவே சர்வதேச அமைப்புகளை ஏற்படுத்தியுள்ளன. அவை 1865இல் உருவாக்கபட்ட சர்வதேச தந்தி கழகம் என அழைக்கப்படும் சர்வதேச தொலைதொடர்பு கழகம் (ITU) மற்றும் 1874இல் தோற்றுவிக்கப்பட்ட சர்வதேச அஞ்சல் கழகம் போன்றவையாகும். இவை இரண்டும் தற்பொழுது ஐ.நா-வின் அங்கங்களாக உள்ளன.
 • 1899இல் தி ஹேக் நகரில் நடைபெற்ற சர்வதேச அமைதிக்கான மாநாடானது அமைதியான வழியில் போரினை தடுப்பதற்கான முறைகளையும் மற்றும் போர் குறித்த சட்டங்களையும் வரையறை செய்தன. சர்வதேசப் பிரச்சனைகளை அமைதியான வழியில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றிய இம்மாநாடு நாடுகளுக்கிடையேயான பிரச்சனைகளில் சமரசம் செய்வதற்கு ஒரு நிரந்தர தீர்ப்பாயத்தை 1902ஆம் ஆண்டு ஏற்படுத்தியது. இந்த அமைப்பே பின்னாளில் சர்வதேச நீதிமன்றம் தோன்றுவதற்கு காரணமாக இருந்தது.
 • ஆனால், 1914 ஆம் ஆண்டு தொடங்கிய முதல் உலகபோரும், அதனால் ஏற்பட்ட அழிவுகளும் இந்த அமைப்புகளின் குறைவான அதிகார வரம்பை வெளிச்சமிட்டு காட்டின. மேலும், இத்துடன் ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு என்ற சர்வதேச அமைப்பும் முடிவுக்கு வந்தது.
 • நெப்போலியனின் படையெடுப்புகளுக்கு பின்பு பெரிய அளவில் எந்த போர்களும் நடைபெறாமல் காத்து வந்ததே இந்த அமைப்பின் சாதனையாகும்.
 • முதல் உலகப்போர் நடைபெற்ற 1914ஆம் ஆண்டு முதல் 1919 ஆம் ஆண்டு வரை உலகம் மாபெரும் மனிதப் பேரழிவைக் கண்டது. இரண்டு கோடிக்கும் அதிகமான மக்கள் மாண்டனர். பேரரசுகளின் வீழ்ச்சி (ஓட்டாமன், ஆஸ்டிரோ-ஹங்கேரியன், தற்காலிகமாக ரஷ்ய பேரரசு) மற்றும் புதிய தேசங்களான செக்கோஸ்லாவியா, எஸ்தோனியா மற்றும் பின்லாந்தின் தோற்றம், முற்போக்கு புரட்சியாளர்கள் ரஷ்யாவை வெற்றி கொண்டது மற்றும் ஜெர்மனியின் வீழ்ச்சி என ஒரு புதிய உலக ஒழுங்கமைவு தோன்றியது.

சர்வதேச சங்கம்

 • முதல் உலகப்போரின் இறுதியில் அமெரிக்க அதிபர் உட்ரோவில்சன் 1918ஆம் ஆண்டு ஜனவரியில் சர்வதேச சங்கத்திற்கான தனது கருத்தினை வெளிப்படுத்தினார். இதற்கு பெரும் அளவிலான ஆதரவு கிடைத்தது.
 • மேலும், முதல் உலகப்போர் ஏற்படுத்திய பெரும் அழிவு இக்கருத்துக்கு வலுசேர்த்தது. இராணுவ மோதல்கள் நடைபெறுவதற்கு முன்பாகவே பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு சர்வதேச அமைப்புகள் தேவையென முடிவுக்கு வந்தனர். இருந்தபோதும், அமெரிக்காவானது சர்வதேச அமைப்பில் இணையாதபோதும், குடியரசுத்தலைவர் உட்ரோ வில்சன் வெர்செல்ஸ் அமைதி மாநாட்டிற்கு தலைமை ஏற்று சர்வதேச அமைப்பு உருவாகச் செய்தார். வில்சன் அமெரிக்க காங்கிரசின் இரு அவையின் கூட்டுக் கூட்டத்தில் கீழ்க்கண்டவாறு அறிவித்தார்.
 • “இது அமைதிக்கான நிச்சமான ஓர் உத்திரவாதமாகும். ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான வார்த்தைகளை கொண்டது, நாகரீக உலகை கிட்டத்தட்ட அழிவின் விளிம்பிற்கே கொண்டு சென்ற ஒன்றுக்கு எதிரானது இது. இதன் நோக்கங்கள் அனைவருக்கும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் குற்றம் காணமுடியாத அதிகாரத்தை கொண்டது. இந்த சங்கமானது எந்த ஒரு சர்வதேச பிரச்சனைக்கும் தீர்வு தர வல்லது”.
 • சங்கமானது தற்காலிகமாக லண்டனில் இருந்து செயல்பட்டது. பின்பு 1920 முதல் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரத்தில் இருந்து இயங்கி வந்தது. ஆரம்பத்தில் சில பிரச்சனைகளை தீர்வு காண்பதி வெற்றி பெற்றது குறிப்பாக பின்லாந்து மற்றும் சுவீடன் இடையிலான ஆலன்ட் தீவு பிரச்சனை, ஜெர்மனி மற்றும் போலந்து இடையிலான மேல் சைலேசியா மற்றும் ஈராக் மற்றும் துருக்கி இடையிலான மொசூல் நகரம் மீதான பிரச்சனைகள் ஆகும்.
 • மேலும் சில வெற்றிகளை, குறிப்பாக ரஷ்யாவின் அகதிகள் பிரச்சனையைத் தீர்ப்பதிலும் மற்றும் சர்வதேச அபினி வர்த்தகத்தை ஒழிப்பதிலும் வெற்றிகண்டது. சர்வதேச சங்கத்தின் தலைமையின் கீழ் சர்வதேச அமைப்புகளான தொழிலாளர்களுக்கான சர்வதேச கழகம் மற்றும் சர்வதேச நீதிக்கான நிரந்தர நீதிமன்றம் போன்றவை செயல்பட்டன. பிற்காலத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறந்த முன் உதாரணமாக சர்வதேச சங்கம் அமைந்து இருந்தது.
 • சர்வதேச சங்கமானது முதல் உலகப் போரில் வெற்றி பெற்ற நாடுகளின் மேலாதிக்கத்தின் கீழ் இருந்தது. இதில் குறிப்பாக பிரான்சு, இங்கிலாந்து, ஐப்பான் மற்றும் இத்தாலி நாடுகளின் மேலாதிக்கத்தில் சங்கம் இருந்தது. துவக்கத்தில் இருபத்தி எட்டு உறுப்பினர்களைப் பிரதிநிதிகளாகக் கொண்ட பொதுச்சபையானது பெரும்பாலும் ஐரோப்பிய மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகளைக் கொண்டவையாகக் காணப்பட்டன. இதன் காரணமாக சர்வதேச சங்கமானது ஐரோப்பிய நாடுகளை மையப்படுத்தியே செயல்பட்டது.
 • அப்போது ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் ஐரோப்பிய ஏகாதிபத்திய ஆதிக்கத்தின் கீழ் இருந்தன. இப்பகுதிகளில் தங்களுக்கான சுயாட்சி அரசுகளை ஏற்படுத்திக்கொள்ளவும் மற்றும் விடுதலையும் பெறுவதற்கான வழிமுறைகளையும் சங்கம் ஏற்படுத்தி தந்தது.

உட்ரோவில்சனின் பதினான்கு கருத்துகள் (1918)

 1. வெளிப்படையான தூதாண்மை
 2. கடல்கள் மீதான சுதந்திரம்
 3. பொருளாதாரத் தடைகளை நீக்குதல்
 4. ஆயுதமயமாதலை குறைத்தல்
 5. காலனிய உரிமைகள் மீதான நெகிழ்வு
 6. ரஷ்ய கட்டுப்பாடு பகுதிகளை விடுவிப்பது
 7. பெல்ஜிய இறையாண்மையை பாதுகாப்பது
 8. பிரெஞ்சு பிரதேசங்களை விடுவிப்பது
 9. இத்தாலியின் எல்லைகளை மறுசீரமைத்தல்
 10. ஆஸ்திரியா-ஹங்கேரியினை பிரிப்பது
 11. பால்கன் எல்லைகளை மறுசீரமைத்தல்
 12. துருக்கியின் அதிகாரத்தை குறைப்பது
 13. போலந்தை சுதந்திர நாடாக்குவது.
 14. நாடுகளின் கூட்டமைப்பான சர்வதேச சங்கத்தை ஏற்படுத்துதல்.

சர்வதேச சங்கத்தின் தோல்விக்கு காரணங்கள்:

 1. அமெரிக்கா இதில் பங்கேற்காதது சங்கம் வலிமை பெறாமல் போனதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
 2. மேலும் இதன் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் ஜெர்மனி மற்றும் சோவியத் யூனியன் எந்த முக்கிய பொறுப்பையும் ஏற்காமல் வெறுமனே உறுப்பினராக மட்டுமே இருந்தன. 1926இல் ஜெர்மனியானது சங்கத்தில் இணைந்தது பின்பு நாஜிக்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதை அடுத்து 1933இல் அமைப்பில் இருந்து வெளியேறியது.
 3. 1933ஆம் ஆண்டு சோவியத் யூனியனானது சங்கத்தில் இணைந்தது; இருந்தபோதும் 1939இல் பின்லாந்து மீது தாக்குதல் தொடுத்ததை அடுத்து சோவியத் யூனியன் சங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது. சங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரே நாடு சோவியத் யூனியன் ஆகும்.
 4. ஜப்பான் 1933இல் மஞ்சூரியாவை ஆக்கிரமித்ததை சங்கம் விமர்சித்ததை அடுத்து ஜப்பானும் அமைப்பில் இருந்து வெளியேறியது. மேலும் இதே காரணத்திற்காக எத்தியோப்பியாவின் மீது தாக்குதல் நடத்தி அதனை ஆக்கிரமித்துக் கொண்ட இத்தாலியின் உறுப்பினர் ஆவதற்கான விருப்பமானது சங்கத்தால் நிராகரிக்கப்பட்டது. இத்தகைய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை சங்கத்தினால் கட்டுப்படுத்த முடியவில்லை.
 5. மேலும் 1930இல் ஏற்பட்ட உலக பொருளாதார மந்தநிலை இப்பிரச்சனைகளை மேலும் தீவிரமாக்கியது. குறிப்பாக, பிரான்சு மற்றும் பிரிட்டன் இந்த ஆக்கிரமிப்புப் போர்களைக் கண்டிக்கவில்லை, ஏனெனில் இவை அந்நாடுகளின் தேசிய பாதுகாப்பினை உடனடியாக பாதிக்கவில்லை. மேலும் சங்கம் திருப்திபடுத்தும் கொள்கையை கையிலெடுக்க, அதுவும் தோல்வியை தழுவியது.
 • 1938இல் நடைபெற்ற மூனிச் மாநாட்டில், ஹிட்லரின் அரசு செக்கோஸ்லாவியாவை ஆக்கிரமித்து, சூதன்லாந்து தன்னுடன் இணைத்துக் கொண்டதையும் பிரிட்டனும், பிரான்சும் ஏற்றுக் கொண்டன. இறுதியாக, 1939இல் சோவியத் யூனியன் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு ஜெர்மனி போலந்து மீது தாக்குதல் நடத்தியது. சர்வதேச சங்கத்திற்கான எல்லா வாய்ப்புகளையும் தகர்த்தெறிந்தது.
 • சர்வதேச சங்கமானது ஆக்கிரமிப்பு நாடுகளின் மீது தனது வலுவான அதிகாரத்தைச் செலுத்த முடியவில்லை. மேலும் ஆக்கிரமிப்புக்கு எதிராக இராணுவ குறுக்கீடு செய்யாமல் வெறும் பெயரளவிலான பொருளாதார தடையை மட்டுமே அந்நாடுகளின் மீது விதிக்க முடிந்தது.
 • உறுப்பினரல்லாத மற்ற நாடுகளின் மீது சர்வதேச சங்கத்தால் அதிகாரம் செலுத்தவோ கட்டுப்படுத்தவோ முடியவில்லை. உறுப்பு நாடுகள் உறுப்பினரல்லாத நாடுகளுடன் வர்த்தகம் செய்யவும் இயலவில்லை.
 • மேலும் சங்கத்திற்கென்று படைகள் என்று எதுவும் இல்லாததால், ராணுவ நடவடிக்கைகளின் போது, உறுப்பு நாடுகள், குறிப்பாக பிரான்சு மற்றும் பிரிட்டன், தங்களது படைகளை அனுப்ப வேண்டியிருந்தது.
 • இருந்தபோதும், எந்த நாடும் மிகவும் செலவு பிடிக்கும் ஆப்பிரிக்க மற்றும் ஆசிய பிரச்சனைகளில் தலையிடுவதை விரும்பவில்லை. இந்த நேரத்தில் சர்வதேச சங்கத்திலிருந்து 1939இல் சோவியத் யூனியன் வெளியேற்றப்பட்டது. இதுவே சர்வதேச சங்கத்தின் தோல்விக்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
 • மேலும் பின்நாட்களில் அமெரிக்க அதிபர் வில்சன் குறிப்பிட்ட “அமைதிக்கான நிரந்தர பாதுகாப்பு” என்பதற்கான வாய்ப்பு பொருளற்றதாக ஆகிவிட்டது.
 • இந்நிலையில் மீண்டும் ஓர் உலகப்போர் நிகழ்வதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்ததன. அப்படி ஓர் போர் நிகழாவண்ணம் தடுத்து உலகை காக்கும் திறன்படைத்த சர்வதேச அமைபு தேவையாக இருந்தது.

ஐக்கிய நாடுகள் சபை

 • சர்வதேச சங்கமானது தனது நோக்கத்தில் வெற்றி பெறாததை அடுத்து, உலக அமைதியை பாதுகாக்கும் சர்வதேச அமைப்பின் பணியானது ஒரு கனவாக நிறைவேறாமலேயே இருந்தது.

 • இரண்டாம் உலகப்போர் ஏழு கோடி பேருக்கு மேற்பட்டோரை பலிகொண்டிருந்தது, ஐக்கிய நாடுகள் சபையை தோற்றுவிப்பதற்கான கருத்தானது உலகத் தலைவர்களை ஒருங்கிணைத்துப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததுடன் அமைதியைப் பாதுகாத்து எதிர்காலத்தில் போர் ஏற்படாமல் இருப்பதற்கான வலுவான ஓர் கட்டமைப்பை ஏற்படுத்தவும் செய்தது. மேலும் பிரிந்திருந்த நாடுகளை ஒருங்கிணைத்து ஓர் உலகம் தழுவிய அமைப்பை ஏற்படுத்துவதற்கான பணியினை மேற்கொள்ளச் செய்தது.
 • அமெரிக்கக் குடியரசுத்தலைவர் பிராங்களின் டி ரூஸ்வெல்ட் ஆல் உருவாக்கப்பட்ட “ஐக்கிய நாடுகள் சபை” என்ற பெயரானது முதன் முதலாக 1942 இல் இருபத்தி ஆறு நாடுகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டு ஏற்றுக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபைக்கான ஒப்பந்தத்தில் பயன்படுத்தப்பட்டது.
 • மேலும், இந்த அணி அச்சு நாடுகளின் அதிகாரத்திற்கு எதிராக அமைதியை நிலைநாட்ட தொடர்ந்து போராடி வந்தது. சர்வதேச சங்கத்தை போல் அல்லாமல் இது அனைத்து நாடுகளின் கூட்டணியுடன் தொடங்கியது. ஜப்பானில் பேர்ல் தூறைமுக தாக்குவதலுக்குப் பிறகு போரில் இறங்கிய அமெரிக்கா, முதல் உலகப்போருக்கு பின் அமெரிக்காவுடன் போர் பிரகடனம் செய்த ஜெர்மனியும் இணைந்தது.
 • 1944இல் ஆகஸ்டில் சீனா, சோவியத் யூனியன், இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளின் பிரதிநிதிகள் டம்பார்டன் ஓக்ஸில் சந்தித்து புதிய சர்வதேச அமைப்பிற்கான அடிப்படை வரைவை உருவாக்கினர். இது அக்டோபர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனமாக மாறியது.
 • 1945ஆம் ஆண்டு ஜெர்மனி சரண் அடைந்ததை அடுத்து, 50 நாடுகளின் பிரதிநிதிகள் சான் பிரான்ஸிஸ்கோ நகரில் ஜூன் 26, 1945-ல் கூடி சாசனத்தில் கையெழுத்திட்டனர்.
 • 1945இல் அக்டோபர் 24இல் பசிபிக் போர் முடிவுக்கு வந்ததை அடுத்து அமெரிக்காவானது அதிகார பூர்வமாக இதில் இணைந்து கொண்டது. இதற்கிடையே சாசனத்தை வரைவதில் எந்த பிரச்சனையை சர்வதேச சங்கம் எதிர் கொண்டதோ அதே பிரச்சனை எந்த மாற்றமும் இல்லாமல் ஐ.நா. அமைப்பும் எதிர் கொண்டது.
 • இந்த அடிப்படை குழப்பம் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே தொடர்ந்தது. ஒரு நாட்டின் இறையாண்மைக்கும், சர்வதேச கருத்துகளுக்குமிடையே எவ்வாறு சமநிலை காண்பது, நாடுகள் ஒன்றுக்கொன்று சமமில்லாத நிலையில், எவ்வாறு அனைவருக்கும் சமமான, பொருந்துகிற சாசனத்தை வரைவது, ஐ.நா.-வின் முடிவுகளில் விருப்பமில்லாதபோது, ஒரு நாடு ஐ.நா. அமைப்பை விட்டு எளிதாக வெளியேறாமல் தடுப்பது (1930 –களின் முற்பகுதியில் ஜப்பான் அவ்வாறு செய்தது). இவற்றிக்கெல்லாம் ஒரு தீர்வாக ரத்து அதிகாரத்தை சாசன வரைவாளர்கள் கொண்டு வந்தனர். ரத்து அதிகாரமானது ஐ.நா-வின் ஐந்து ஆரம்பகால உறுப்பினர்களான சீனா, பிரான்சு, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனுக்கு வழங்கப்பட்டுள்லது.
 • இவர்கள் நிரந்தர ஐந்து (P- ) உறுப்பினர்களாகக் கருதப்படுகின்றனர். அது மட்டுமல்லாமல் ஐ.நாவை துவக்கியவர்கள் மிகவும் நன்றாக சர்வதேச சங்கத்தின் தோல்விக்கான காரணங்களை அறிந்து இருந்ததால் அந்த அனுபவங்களைக் கொண்டு ஐ.நா-விற்கான சாசனத்தின் முக்கிய கூறுகளை வடிவமைத்தனர்.
 • முக்கிய எடுத்துக்காட்டாக, ஐ.நா-வின் சாசனமானது சர்வதேச சங்கத்தின் தீர்மானத்தைபோலவே சர்வதேச பாதுகாப்பை மேம்படுத்துவது மற்றும் அமைதியான வழியில் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கிறது. சாசனமானது மேலும் இரண்டு முக்கிய கூறுகளை முதன்மையாக கொண்டிருக்கிறது.
 • ஏற்கனவே இதனை பிரதிபலிக்கும் வகையில் ஐ.நா. சாசனத்தின் உறுப்பு –வது சர்வதேச சங்கத்தின் தீர்மானத்தைப் போலவே சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டை அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ளது.
 • சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டை வெறும் வார்த்தை அளவில் இல்லாமல் போர்களுக்கு இடைப்பட்ட ஆண்டுகளின் அனுபவத்தை வேராக கொண்டிருக்கிறது.
 • பலரும் குறிப்பிடுவதுபோல 1920 மற்றும் 1930-களில் ஏற்பட்ட உலகப் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அரசியல் எழுச்சிகள் பெரும் தேசியவாதத்தை ஏற்படுத்தியது அவற்றின் விளைவாக ஆக்கிரமிப்புகளுமே இரண்டாம் உலகப்போருக்கான காரணமாக அமைந்தன. இதுவே, ஐ.நா-வானது தோற்றுவிக்கப்பட்டு உலக பிரச்சனைகளில் முனைப்புடன் ஈடுபட செய்தது.

 • 1945 இல் ஐ.நா ஆறு முக்கிய அமைப்புகளை கொண்டதாக இருந்தது. அவை:
 1. பொதுச்சபை
 2. பாதுகாப்புக் குழு
 3. பொருளாதார மற்றும் சமூக குழு
 4. அறங்காவலர் குழு
 5. சர்வதேச நீதிமன்றம் மற்றும்
 6. செயலகம் ஆகும்.
 • இதில் அறங்காவலர் குழுவானது காலனிய ஒழிப்பிற்கான நடைமுறைத் தேவைகளை கொண்டிருந்தது. காலனிய ஒழிப்பிற்கு பிறகு இதன் பணி தேவையற்றதாக ஆகிவிட்டது.
 • இருந்தபோதும் இது ஐ.நா-வின் முக்கிய அடிப்படை அமைப்புகளில் ஒன்றாக திகழ்கிறது. ஐ.நா-வொன் அனைத்து அமைப்புகளும் மூறையே கூடி முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கின்றனர், உறுப்பினர்களின் ஓட்டெடுப்பின் அடிப்படையில் முடிவுகளும், அறிக்கைகளும் வெளியிடப்படுகின்றன.
 • இருந்தபோதும் இதன் ஒவ்வொரு அமைப்பின் நடைமுறைகளும் ஒன்றுக்கு ஒன்று வேறுபடுகின்றன.
 • குறிப்பாக பொதுச்சபையானது ஐ.நா-விற்கான நாடாளுமன்றமாகவும், பாதுகாப்புக் குழு நிர்வாகக் குழுவாகவும், செயலகம் நடைமுறைப்படுத்துவதற்கான அமைப்பாக (அல்லது) ஐ.நா-வின் நிர்வாக பிரிவாக செயல்படுகின்றது.

ஐ.நா-வின் நான்கு முக்கிய நோக்கங்கள்

 1. இராணுவ பாதுகாப்பு
 2. பொருளாதார மற்றும் சமூக மேம்பாடு
 3. மனித உரிமைகளை பாதுகாப்பது
 4. சர்வதேச நீதி

பொதுச்சபை

 • ஐ.நா-வின் பொதுச்சபையானது கூடி விவாதிக்ககூடிய ஓர் முக்கிய அமைப்பாக உள்ளது. உறுப்பு நாடுகள் பரப்பளவில் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், செல்வாக்கு மிக்கதாக இருந்தாலும் அவை அனைத்திற்கும் சமமாக ஒரு ஓட்டு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இங்கு ஐ.நா-வின் சாசனத்தின் கீழ் எழும் பிரச்சனைகள் குறித்த விவாதமானது நடைபெறுகிறது.
 • குறிப்பாக சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு, புதிய உறுப்பினர்களை இணைத்து கொள்வது, ஐ.நா-விற்கான நிதிநிலை அறிக்கைபோன்றவை மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஒரு நாட்டிற்கு ஒரு ஓட்டு என்ற விதியின் அடிப்படையில் நிறைவேற்றப்படுகின்றன.
 • உறுப்பு நாடுகளால் முன்மொழியப்படும் பிரச்சனைகள் மீது பொதுச்சபையில் தீர்மானங்கள் கொண்டுவரப்படுகின்றன. பொதுச்சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் உலக மக்களில் பெரும்பான்மையோரின் கருத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் இருப்பதால், அந்த பரிந்துரைகள், மதிப்பு மிகுந்ததாக உள்ளது. இதன் அடிப்படையில் சர்வதே உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள் மற்றும் சாசனங்களில் பல்வேறு நாடுகள் இணைந்து அவற்றின் அம்சங்களை நடைமுறைப்படுத்துகின்றன.
 • பொதுச்சபையின் கூட்டமானது ஒவ்வொரு செப்டம்பர் மாதமும் நடைபெறுகிறது. பெரும்பான்மையான தீர்மானங்கள் செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களிடையே நிறைவேற்றப்படுகின்றன. சிறப்பு கூட்டத்திற்கான கோரிக்கையானது பாதுகாப்புக் குழுவினாலோ அல்லது பெரும்பான்மை உறுப்பினர்களாலோ முன்மொழியப்பட வேண்டும். பொதுச்சபையின் வழக்கமான கூட்டத் தொடரின் முதல் இரண்டு வாரங்கள் உறுப்பு நாடுகளின் கருத்தை அறிவும் வண்ணம் பொது விவாதமாக நடத்தப்படுகிறது. இது மிகவும் பரந்த அளவிலான பிரச்சனைகள் தீவிரவாதம், போர், வறுமை, பசி மற்றும் நோய்கள் குறித்ததாக அமைகிறது.
 • பொதுச்சபையின் பணியள் ஆறு குழுக்களின் வழியே மேற்கொள்ளப்படுகிறது.]

பொதுச்சபையின் ஆறு முக்கிய குழுக்கள்

 • ஆயுத குறைப்பு மற்றும் சர்வதேச பாதுகாப்பு
 • பொருளாதாரம் மற்றும் நிதி
 • சமூகம், மனிதநேயம் மற்றும் பண்பாடு
 • சிறப்பு அரசியல் மற்றும் காலனிய ஒழிப்பு
 • நிர்வாகம் மற்றும் நிதிநிலை அறிக்கை
 • சட்டம்

ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் நடவடிக்கையின் பட்டியல்

 1. கண்டங்கள் : ஆப்பிரிக்கா

பணியின் பெயர் : காங்கோவில் ஐக்கிய நாடுகளின் செயல்பாடு (ONUC)

இடம் : காங்கோ ஜனநாயக குடியரசு

பிரச்சனை : காங்கோ நெருக்கடி

நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட ஆண்டு : 1960 – 1964

 1. கண்டங்கள் : ஆசியா

பணியின் பெயர் : ஐக்கிய நாடுகள் சபை இந்தியா – பாகிஸ்தான் கண்காணிப்பு பணி (UNIPOM)

இடம் : இந்தியா, பாகிஸ்தான்

பிரச்சனை : 1965 இந்தியா – பாகிஸ்தான் போர்

நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட ஆண்டு : 1965 – 1966

 1. கண்டங்கள் : ஆசியா

பணியின் பெயர் : ஐ.நா-வின் திரும்ப பெறுவதற்கான கண்காணிப்பு படை (UNDOF)

இடம் : இஸ்ரேல், சிரியா, லெபனான்

பிரச்சனை : யோம் கீப்பூர் போரில் இருந்து இஸ்ரேல் மற்றும் சிரியா படைகளை திரும்ப பெறுவது.

நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட ஆண்டு : 1974

 1. கண்டங்கள் : ஆப்பிரிக்கா

பணியின் பெயர் : சோமாலியாவில் ஐக்கிய நாடுகளின் செயல்பாடு –ஒன்று (UNOSOM -1)

இடம் : சோமாலியா

பிரச்சனை : சோமாலியா உள்நாட்டு போர்

நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட ஆண்டு : 1992 – 1993

 1. கண்டங்கள் : ஆப்பிரிக்கா

பணியின் பெயர் : ருவாண்டாவிற்கான ஐ.நா-வின் உதவித் திட்டம் (UNAMIR)

இடம் : ருவாண்டா

பிரச்சனை : ருவாண்டா உள்நாட்டு போர்

நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட ஆண்டு: 1993 – 1996

 1. கண்டங்கள் : வட அமெரிக்கா

பணியின் பெயர் : ஐ.நா-வின் தூதுக்குழு ஹைட்டி (UNMIH)

இடம் : ஹைட்டி

பிரச்சனை : 1991இல் ஹைட்டியில் ஆட்சி கவிழ்ப்பு மற்றும் இராணுவ ஆட்சி

நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட ஆண்டு: 1993 -1996

 1. கண்டங்கள் : ஐரோப்பா

பணியின் பெயர் : ஐ.நா-வின் தூதுக்குழு போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா (UNMIBH)

இடம் : போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா

பிரச்சனை : போஸ்னியா போர்

நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட ஆண்டு: 1995 – 2002

 1. கண்டங்கள் : ஐரோப்பா

பணியின் பெயர் : ஐ.நா-வின் இடைகால நிர்வாக தூதுக்குழு கோசாவா (UNMIK)

இடம் : கோசாவா

பிரச்சனை : கோசாவா போர்

நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட ஆண்டு: 1999

 1. கண்டங்கள் : ஆப்பிரிக்கா

பணியின் பெயர் : ஐ.நா-வின் தூதுக்குழு சீயரா லியோன் (UUNAMSIL)

இடம் : சியரா லியோன்

பிரச்சனை : சியரா லியோன் உள்நாட்டு போர்

நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட ஆண்டு: 1996 – 2006

 1. கண்டங்கள் : ஆப்பிரிக்கா

பணியின் பெயர் : ஐ.நா. வின் தூதுக்குழு எரித்திரியா மற்றும் எத்தியோப்பியா (UNMEF)

இடம் : எரித்திரீயா -எத்தியோப்பியா

பிரச்சனை : எரித்திரீயா – எத்தியோப்பியா போர்

நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட ஆண்டு: 2000 – 2008

 1. கண்டங்கள் : ஆப்பிரிக்கா

பணியின் பெயர் : ஐ.நா-வின் தூதுக்குழு சூடான் (UNMIS)

இடம் : சூடான்

பிரச்சனை : இரண்டாவது சூடான் உள்நாடுப் போர்

நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட ஆண்டு: 2005 – 2011

 1. கண்டங்கள் : ஆசியா

பணியின் பெயர் : ஐ.நா-வின் ஒருங்கிணைந்த தூதுக்குழு தைமூர் – லிஸ்டி (UNMIT)

இடம் : கிழக்கு தைமூர்

பிரச்சனை : 2006 கிழக்கு தைமூர் நெருக்கடி

நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட ஆண்டு: 2006 – 2012

 1. கண்டங்கள் : ஆசியா

பணியின் பெயர் : ஐ.நா-வின் கண்காணிப்பு தூதுக்குழு சிரியா (UNSMIS)

இடம் : சிரியா

பிரச்சனை : சிரியா உள்நாட்டு போர்

நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட ஆண்டு: 2012

 1. கண்டங்கள் : வட அமெரிக்கா

பணியின் பெயர் : ஐ.நா-வின் நீதிக்கு ஆதரவான தூதுக்குழு ஹைட்டி (MINUJUSTH)

இடம் : கிளர்ச்சி

பிரச்சனை : 2004 ஹைட்டி கிளர்ச்சி

நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட ஆண்டு: 2017

பாதுகாப்புச் சபை

 • ஐ.நா-வின் சாசனப்படி பாதுகாப்புச் சபையானது சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான பொறுப்பு மிக்க அமைப்பாகும். இது பொதுச்சபையைப் போல் வழக்கமாக கூடுவதில்லை மாறாக சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது எந்த நேரத்திலும் இதன் கூட்டமானது நடைபெறும்.
 • உறுப்பு நாடுகள் பாதுகாப்புச் சபையின் முடிவுகளை ஏற்று நடப்பு என்பது சட்ட ரீதியாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அமைதிக்கான அச்சுறுத்தல் ஏற்படும்பொழுது சபையானது பிரச்சனைக்குரிய நாடுகளை அழைத்துபேசி அமைதியான வழியில் ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும், மோதல்களை தவிர்க்கவும் செய்கிறது.
 • மேலும் பாதுகாப்புச் சபையானது பேச்சு வார்த்தையின் மூலம் போர் நிறுத்தத்தை அறிவிக்கவும், பொருளாதார தடை விதிக்கவும் அல்லது ஐ.நா-வின் உறுப்பினர்களின் ஒப்புதலின் பெயரில் அதிகாரபூர்வ அமைப்பாக படைபலத்தினை பயன்படுத்தவும் செய்கிறது.
 • பாதுகாப்புச் சபை அமைதியை நிலைநிறுத்துவதற்கான பாதுகாப்பு நடவடிக்கையையும் மேற்கொள்கிறது. இது ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் உட்பட பதினைந்து உறுப்பினர்களை கொண்டுள்ளது.
 • பிற பத்து உறுப்பினர்கள் பொதுச்சபையினால் இரண்டு ஆண்டுகள் காலத்திற்கு சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படுகிறனர். பாதுகாப்புச் சபையில் ஓர் தீர்மானமானது நிறைவேற்றப்பட பதினைந்தில் ஒன்பது உறுப்பினர்களின் ஓட்டு தேவைப்படுகிறது.
 • இருந்தபோதும் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் யார் ஒருவரும் தீர்மானத்திற்கு எதிராக ஓட்டு அளிப்பதை ரத்து அதிகாரமாக குறிப்பிடப்படுகிறது. மேலும் அத்தீர்மானமானது நிறைவேற்றப்படுவதில்லை. குழுவில் மேலும் அதிக நிரந்தர உறுப்பினர்களை இணைப்பதற்கான கோரிக்கைகள் எழுந்தால் அந்த கோரிக்கையானது ஐ.நா-வின் உறுப்பு நாடுகளால் தீர்மானிக்கப்படும்.

ஐ.நா-வின் பாதுகாப்புச் சபையில் நிரந்திர உறுப்பினராகும் இந்தியாவின் விருப்பம்

பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பினராக இடம் பெறும் இந்தியாவின் விருப்பமானது அது பாதுகப்புச் சபையுடன் வரலாற்று பூர்வமாக கொண்டிருக்கும் உறவை வெளிப்படுத்துவதாக உள்ளது. விடுதலை அடைந்த ஆரம்ப ஆண்டுகளில் காஷ்மீர் தொடர்பான பாகிஸ்தானின் ஆயுத மோதல்களை இந்தியா தனது கருத்தியல் கொள்கையின் அடிப்படையில் , ஐ.நா-வின் பார்வைக்கு எடுத்துச்சென்றது. பனிப்போர் உச்சத்தில் இருந்த அதிகார சமநிலையில்லாத அந்த காலகட்டத்தில் இந்தியா தனது கருத்தியல் கொள்கையின் அடிப்படையிலான நடவடிக்கைகளுக்கு பெரும் விலை கொடுக்க வேண்டியிருந்தது. காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா தலையிட அதுவே வழி வகுத்தது. இது மீண்டும் வெளிவர முடியாத எதிர் விளைவையே ஏற்படுத்தியது. இந்தியா பாதுகாப்புச் சபையில் கலந்து கொண்டு தனது விருப்பத்தை நிறைவேற்ற விடாமல் பெரும் அதிகார அரசியலாக மாற்றியது. மிகவும் குறிப்பாக நிரந்தர உறுப்பினராக சீனா, பாகிஸ்தான் பக்கம் நிறு கொண்டு எந்தவித சாத்தியமான விளைவுகளும் இந்தியாவிற்கு ஏற்படாத வண்ணம் குறுக்கீடு செய்தது.

இந்தியாவின் விருப்பமானது பாதுகாப்புச் சபையில் நீண்ட பல இந்திய வெளியுறவுக் கொள்கை குறித்த விவாதங்களை ஏற்படுத்தியது. தாராளவாத தன்மையுடன் சர்வதேச அமைப்பிற்கான பொறுப்புமிக்க ஒரு நாடாக இருக்குமா அல்லது சர்வதேச நிகழ்வுகளின் மரபுகளை மாற்றியமைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் அரசாக இருக்குமா என்ற விவாதங்கள் நடைபெற்றன. தற்பொழுது நடைமூறையில் இருக்கும் சர்வதேச முறையினை தூக்கி எறியாமல் இந்தியா ஒரு மிதமான சீர்திருத்தவாதியாக உலகளாவிய பார்வையுடன் சர்வதேச மரபுகளில் நெகிழ்வையும் மற்றும் வடிவமைப்பையும் ஏற்படுத்துவதாக பல அரசியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

இந்தியா எப்போதுமே மூன்றாம் உலக நாடுகளை வழிநடத்தும் ஒரு அரசாக இருந்து வருகிறது. ஐ.நா.-வின் பொதுச்செயலராக இருந்த கோபி அன்னான் புதுதில்லியில் ஒரு கூட்டத்தில் உரையாற்றும்போது மற்ற எந்நாட்டினரைக் காட்டிலும் இந்தியர்களின் சுதந்திரம் பற்றிய புரிதல் அதிகம் எனவும், வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் யாவும் சுதந்திரத்தினால் விளைந்தவை எனவும் அவை ஒன்றுக்கொன்று மாற்று அல்ல என்பதையும் இந்தியர்கள் அறிந்துள்ளனர் என்று குறிப்பிடுகிறார். இந்தியர்கள் தங்களது பன்மைத்துவ மக்களாட்சி மூலம் பரந்த சுதந்திரம் நோக்கி செல்வதாக மேலும் குறிப்பிடுகிறார்.

பாதுகாப்புச் சபையில் ரத்து அதிகாரம் குறித்த விமர்சனங்கள்

ரத்து அதிகாரமானது அதன் மக்களாட்சி பண்புகளற்ற தன்மைக்காக விமர்சிக்கப்படுகிறது. இது பாதுகாப்புச் சபையின் பெரும்பான்மையினரின் முடிவை ஒரு தனிப்பட்ட நாடு தடுப்பதாகும். உதாரணமாக அமெரிக்காவானது தொடர்ச்சியாக இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானங்கள் மீது தனது ரத்து அதிகாரத்தை பயன்படுத்தி வருகிறது. மேலும் நிரந்தர உறுப்பினர்கள் தங்களுக்கு எதிரான விமர்சன தீர்மானங்களின் மீது ரத்து அதிகாரத்தை பயன்படுத்துவதும் வழக்கமானது ஆகும். 2014ஆம் ஆண்டு ரஷ்யாவானது, கிரிமியாவை இணைத்துக் கொண்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தனது ரத்து அதிகாரத்தை மக்களின் விருப்பங்களை பாதுகாப்பதற்கு மாறாக தங்களின் சுய அரசியல் விருப்பங்களுக்கும் அல்லது புவிசார் அரசியல் விருப்பங்களுக்கும் பயன்படுத்துவதாக சர்வதேச பொது மன்னிப்புச் சபை குற்றம் சாட்டுகிறது.

சில விமர்சகர்கள் பாதுகாப்புச் சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களுகே உரித்தான ரத்து அதிகாரமானது நியாயமற்றது என்று விமர்ச்சிக்கின்றனர். 21ஆம் நூற்றாண்டில் ரத்து அதிகாரமானது சர்வதேச அளவில் பார்க்கப்படும் பொழுது சமச்சீரற்ற அதிகாரமாக மேலும் சர்வதேச பிரச்சினைகள் மீதான நடவடிக்கைகளுக்கு தடையாக அமைந்துள்ளது. ரத்து அதிகாரத்தின் அளவற்ற ஆற்றலானது ஐ.நா-வை இன அழிப்பு, கலவரங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களின்போது அதைத் தடுப்பது மற்றும் பொறுப்பேற்பதில் ஆற்றலற்றதாக ஆக்குகிறது. இந்த ஐந்து நிரந்தர உறுப்பினர் தவிர மற்ற பல நாடுகள் குறிப்பாக அணிசேரா இயக்கத்தினர் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியம் ரத்து அதிகாரத்தை குறைக்க கோருகின்றன.

“அமைதிக்கான ஒற்றுமை” என்ற தீர்மானத்தை நிறைவேற்றும்போதும் நடைபெற்ற விவாதத்தில் வழக்கமான ஐ.நா.சட்டங்களின்படி பொதுச்சபையின் அதிகாரமானது பாதுகாப்புச் சபையின் “ரத்து அதிகார” பிரச்சனையுடன் தொடர்புடையதாகும். 1950ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி ஐ.நா-வின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட A/RES/377 தீர்மானமானது குறிப்பிடுவது யாதெனில் ஐ.நா-வின் சாசனப்படி ஒருவேளை பாதுகாப்புச் சபையானது தனது முதன்மை நோக்கமான அமைதியை பாதுகாப்பதில் இருந்து தவறினால் அப்போது சர்வதேச அமைதிக்காக பொதுச்சபை எடுக்கும் மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்தும் நடவடிக்கைகளை பாதுகாப்புச் சபை தடுக்கமுடியாது தடுக்கக் கூடாது. இந்த விளக்கமானது சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகளில் பொதுச்சபையானது இரண்டாவதாக பொறுப்புடையது என்பதை விட இறுதி பொறுப்புடையதாக அங்கீகரிக்கப்படுகிறது. ஐ.நா-வின் பல்வேறு அதிகாரப்பூர்வ மற்றும் அதிகாரப்பூர்வமற்ற அறிக்கைகளில் குறிப்பிடுவது “அமைதிக்கான ஒற்றுமை” தீர்மானமானது ஐ.நா-வின் பொதுச்சபையின் நடவடிக்கைகளை மீறி பாதுகாப்புச் சபையின் ரத்து அதிகாரமானது செயல்பட முடியாது என்பதாகும்.

பொருளாதார மற்றும் சமூக குழு

 • ஐ.நா-வின் பொருளாதார மற்றும் சமூக குழுவிற்கான ஐம்பத்து நான்கு உறுப்பினர்கள் அனைத்து கண்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மூன்று ஆண்டு காலத்திற்கு தேர்வு செய்யப்படுகின்றனர். இது ஐ.நா-விற்கான மைய அமைப்பாக ஐ.நா-வின் பொருளாதார மற்றும் சமூக பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்கிறது.
 • ஐ.நா-வின் எழுபது சதவிகித திட்டங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது, வறுமையை ஒழிக்கும் வகையில் முழு வேலை வாய்ப்பு, பொருளாதார மற்றும் சமூக பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்கிறது.
 • ஐ.நா-வின் எழுபது சதவிகித திட்டங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது, வறுமையை ஒழிக்கும் வகையில் முழு வேலை வாய்ப்பு, பொருளாதார மற்றும் சமூக மேம்பாடு மற்றும் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது.
 • இது வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்துவது, மனித உரிமைகளை பாதுகாப்பது, வறுமையை ஒழிப்பதற்கான உலகம் தழுவிய ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்கிறது.
 • இப்பணிகளை மேற்கொள்வதற்கான சிறப்பு அமைப்புகளையும் தனக்கு கீழ் இக்குழுவானது கொண்டிருக்கிறது.
 • அவை, உணவு மற்றும் விவசாய கழகம் (FAO), ஐ.நா-வின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாடு கழகம் (UNESCO), ஐ,.நா-வின் வளர்ச்சித் திட்டங்கள் (UNDP), ஐ.நா-வின் குழந்தைகளுக்கான நிதி (UNICEF) மற்றும் ஐ.நா-வின் அகதிகளுக்கான உயர் ஆணையர் (UNHCR).

அறங்காவலர் குழு

 • ஐ.நா-வின் சாசனப்படி அறங்காவலர் குழுவானது பதினொரு முன்னால் காலனிய நில பகுதிகளின் நிர்வாகத்தை கண்காணித்து வருகிறது. இரண்டாம் உலகப்போரின் முடிவில், தற்சார்பற்ற இந்நிலப்பகுதியை சார்ந்த மக்களின் வளர்ச்சிக்காக சுயாட்சி அரசுகள் ஏற்படவும் அல்லது விடுதலையை அடைவதற்கான ஓர் நவீன முறையாகவும் இது உருவாக்கப்பட்டது.
 • இந்த பதினொரு பகுதிகளும் மற்றும் எழுபதுக்கும் மேற்பட்ட காலனிகளும் விடுதலை அடைவதற்கு ஐக்கிய நாடுகள் சபை உதவியாக இருந்தது. 1994இல் கடைசி பகுதியான பலாவ் விடுதலை அடைந்ததை அடுத்து அறங்காவலர் குழுவானது தனது பணியினை நிறுத்தி கொள்ளவும், தேவைப்படும்போது மட்டும் இக்குழு கூடுவதாகவும் முடிவு செய்தது.
 • சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா கூட்டமைப்பு மற்றும் அமெரிக்காவை இதன் நிரந்தர உறுப்பினர்களாக கொண்டு ஐ.நா அறங்காவலர் குழுவை அமைத்திருந்தது.
 • அனைத்து உறுப்பினர்களுக்கும், ஒருவருக்கு ஒரு ஓட்டு விகிதம் குறைந்தபட்ச பெரும்பான்மையுடன் இதன் முடிவுகள் இயற்றப்படுகின்றன. காலனிய ஒழிப்புப் பணிகள் முடிவற்ற இக்கால சூழலில் அறங்காவலர் குழு முக்கியத்துவமற்றதாக காணப்படுகிறது.

சர்வதேச நீதிமன்றம்

 • ஐ.நா-வின் முக்கிய அமைப்பாக சர்வதேச நீதிமன்றம் செயல்படுகிறது. இது நெதர்லாந்தில் உள்ள தி ஹேக் நகரத்தில் அமைந்துள்ளது. சர்வதேச நீதிமன்றம் அல்லது உலக நீதிமன்றமானது 1945இல் ஏற்படுத்தப்பட்டு 1946முதல் செயல்பட்டு வருகிறது. இது ஒரு நிரந்தர நடுவர் நீதிமன்றமாகச் செயல்படுகிறது. இந்நீதிமன்றமானது சர்வதேச சட்டங்களின்படி நாடுகளுக்கு இடையில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கிறது.
 • மாறாக, இது தனிநபர்களின் வழக்குகளை விசாரிப்பது இல்லை. எந்த நாடும் இதன் விசாரணை தேவை இல்லை என கருதினால் தானாகவே விலகி கொள்ளலாம். இதற்கென்று எந்த சிறப்பு ஒப்பந்த விதிமுறைகளும் இல்லை. எந்த நாடு இந்நீதிமன்றத்தின் விசாரணையை ஏற்றுக்கொள்கிறதோ அது கண்டிப்பாக இதன் தீர்ப்புகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
 • 1946இல் இருந்து சர்வதேச நீதிமன்றமானது 150க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. குறிப்பாக, பொருளாதார உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, போக்குவரத்துவழிக்கான உரிமைகள், படையை பயன்படுத்தாமல் இருக்கவும் , நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாமல் இருக்கவும், தூதரக உறவுகள், பணயக்கைதிகளை விடுவிப்பது, அடைக்கல உரிமை மற்றும் தேசிய இன பிரச்சனைகள் போன்றவற்றிற்கும் தீர்வு கண்டிருக்கிறது.
 • இந்நீதிமன்றத்தின் பதினைந்து நீதிபதிகளும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களாக ஒன்பது ஆண்டு காலத்திற்கு தேர்வு செய்யப்படுகின்றனர். நீதிபதிகளை பொதுச்சபையும் , பாதுகாப்புச் சபையும் சேர்ந்து தேர்வு செய்கின்றனர். இந்நீதிமன்றமும் அதன் அலுவலகம்யும் “அமைதிக்கான அரண்மனையாக” திகழ்கின்றன. இதன் கட்டடமானது கார்னேஜ் அறக்கட்டளை என்ற லாபநோக்கம் இல்லாத அமைப்பால் சர்வதேச நீதிக்கான நிரந்தர நீதிமன்றத்தின் தலைமையிடமாக சர்வதேச சங்கத்திற்கு வழங்கப்பட்டது.
 • ஐ.நா-வானது இக்கட்டடத்தை பயன்படுத்துவதற்கான ஆண்டு நிதியை இந்த அறக்கட்டளைக்கு வழங்குகிறது. பாதுகாப்புச் சபை இந்நீதிமன்றத்திற்கு வழக்குகளை பரிந்துரை செய்கிறது.

செயலகம்

 • ஐ.நா-வின் செயலக அதிகாரிகள் ஐ.நா-வின் பிற முக்கிய அமைப்புகளுக்கான திட்டங்களையும் மற்றும் கோள்கைகளையும் வடிவமைக்கின்றனர். இச்செயலகத்திற்கான தலைமை செயலாளரை பொதுச்சபையானது பாதுகாப்புச் சபையின் பரிந்துரையின் பெயரிலேயே நியமிக்கிறது. தலைமை செயலாளர் ஐந்து ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்படுகின்றார். அவர் மீண்டும் நியமிக்கப்படலாம்.
 • தலைமைச் செயலாளர் ஐ.நா-விற்கான தலைமை நிர்வாக அதிகாரியாக பிற அமைப்புகளையும் அதன் அலுவலர்களையும் இயக்கலாம். இவர்கள் சர்வதேச குடிமைப் பணியாளர்களாக அறியப்படுகின்றனர்.
 • ஒரு குறிப்பிட்ட நாட்டின் பிரதிநிதியாக செயல்படும் தூதர் போல் இல்லாமல் 193 உறுப்பு நாடுகளிலும் சர்வதேச குடிமைப் பணியாளர்களாக இவர்கள் பணியாற்றுகின்றனர். இதற்கான ஆணையை தலைமைச் செயலாளரிடம் இருந்து பெறுகின்றனர்.
 • மாறாக அவர்கள் பணியாற்றும் நாட்டின் அரசிடமிருந்து பெறுவதில்லை. செயலகத்திற்கான தலைமை அலுவலகம் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது. பிற அலுவலகங்கள் ஜெனிவா, வியன்னா, நைரோபி, அடிஸ்அபாபா, பெய்ரூட், சாண்டியாகோ மற்றும் பாங்காக் நகரங்களில் அமைந்துள்ளன.
 • உறுப்பு நாடுகளில் இருந்து பெற்ற 16,000 ஊழியர்களை கொண்டு செயலக அதிகாரிகள் அமைப்பின் தினசரி பணிகளை மேற்கொள்கின்றனர்.
 • இதன் பணிகள் மிகவும் பரந்த அளவில் காணப்படுகிறது. அமைதியை நிலைநாட்டுவதற்கான பணிமுதல், சர்வதேச பிரச்சனைகளுக்கான நடுநிலையாளராக , சமூக மற்றும் பொருளாதார நிலை குறித்த தகவல்களைத் திரட்டுதல், சர்வதேச ஒப்பந்தங்களுக்கான அடிப்படைப் பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் சர்வதேச மாநாடுகளை நடத்துவது ஆகும்.
 • செயலகத்தின் பணியானது பன்முகத் தன்மையுடன் தன் கீழுள்ள தேசிய அரசுகளின் அழுத்தங்களையும் மீறி தனது சர்வதேச குறிக்கோள்களை அடைவதாகும்.
 • தலைமைச் செயலாளர் பாதுகாப்புச் சபையின் விவகாரங்களில் கவனம் செலுத்தி சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு இடையூறான சிக்கல்களில் தனது கருத்தினை தெரிவிக்கலாம்.
 • குறிப்பாக பிரச்சனைகளைத் தடுப்பதற்கும் அல்லது பிரச்சனைக்குரிய நாடுகள் அமைதியான வழியில் தீர்வு காண்பதற்கும் இவர் தனது அலுவலகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் தலைமை செயலாளர் மனிதநேய பிரச்சனைகள் அல்லது சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளுக்கான நடவடிக்கையினை மேற்கொள்ள முடியும்.
 • ஐ.நா-யின் குடும்பம் மிக பெரியது பதினைந்து முகவாண்மைகள், பல திட்டங்கள் மற்றும் நிறுவனங்களைக் கொண்டது. இதில் சில நிறுவனங்கள் சர்வதேச சங்கத்தின் காலத்திலேயே துவக்கப்பட்டுவிட்டன.
 • குறிப்பாக சர்வதேச தொழிலாளர் கழகம் மேலும் சில அமைப்புகள் 1945இல் தோற்றுவிக்கப்பட்டு குறிப்பிடத்தக்க பிரச்சனைகள் மற்றும் நிகழ்வுகளைத் தீர்ப்பதற்கான அமைப்பாக ஐ.நா துவக்கப்பட்டதிலிருந்து செயல்படுகின்றன. இதன் காரணமாக ஐ.நா-வானது பன்முகத்தன்மை வாய்ந்ததாக காட்சி அளிக்கிறது. இந்நிறுவனங்கள் துவக்கப்பட்டதிலிருந்து பின்பு வந்த பல பத்தாண்டுகளில் இவற்றின் பணியானது மிகப் பரந்த அளவில் கொண்டு செல்லப்பட்டு ஐ.நா-வும் இதனை ஏற்று வழிநடத்த செய்கிறது.
 • இதன் விளைவு, பல புதிய அமைப்புகள் கூடுதலாக தோற்றுவிக்கப்பட்டு நிரந்தரமாகவும், சில தற்காலிக அமைப்பாகவும் செயல்படுகின்றன.
 • குறிப்பாக, ஐ.நா-வின் அகதிகளுக்கான உயர் ஆணையர் (UNHCR) போன்றவை. இவை நிரந்தர அமைப்பாக செயல்படபோவது இல்லை.
 • ஐ.நா-வின் வரலாற்றைப் பார்த்தால், பல்வேறு காலகட்டங்களில் பல துணை அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி இருப்பதை காணலாம். ஐ.நா தற்போது மூவாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு-சாரா நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுகிறது.
 • தொலைநோக்கு பார்வையுடன் 1945இல் கொண்டு வரப்பட்ட ஐ.நா சாசன உறுப்பு 77-வது அரசு-சாரா அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதற்கு ஏதுவாக தேவையான ஏற்பாடுகளை ஐ.நா செய்து கொள்ளலாம் என்று தெளிவாக கூறுகிறது.
 • இதன் காரணமாக ஐ.நா நூற்றுக்கும் மேற்பட்ட அரசு-சாரா நிறுவனங்களைக் கொண்டு பிரச்சனைக்குரிய பகுதிகளில் மனிதநேயப் பணிகளை மேற்கொள்ள முடிகிறது.
 • உதாரணமாக ஐ.நா-வின் தூதுக்குழுவானது போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினோவிற்கிடையே 1995 – 2002 ஆம் ஆண்டுகளில் செயல்பட்டதைக் கூறலாம்.
 • 32 அரசு-சாரா அமைப்புகள், ஐ.நா பொதுச்செயலருக்கு ஒரு திறந்த மடல் ஒன்றை 2007ஆம் ஆண்டு எழுதினர். அதில் ஐ.நா-வின் அமைதிக்காக்கும் படையை போர்பதற்றம் சூழ்ந்த தார்பர் பகுதிக்குள் அனுப்ப அனுமதி மறுக்கும் சூடானைப் பணிய வைக்க கோரியிருந்தனர்.
 • பொருளாதார மற்றும் சமூகக் குழுவானது (ECOSOC) ஐ.நா-வின் குடும்ப அமைப்பாக ஐ.நா-வின் பொருளாதார மற்றும் சமூகப் பணிகளை ஒருங்கிணைக்கிறது. இதன் முக்கியப் பணி, வளர்ச்சிக்கான சர்வதேச ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதாகும். எவ்வாறு பாதுகாப்புச் சபையானது ராணுவ பாதுகாப்பை வழங்குகிறதோ அதேபோல பொருளாதார மற்றும் சமூக குழுவானது (ECOSOC) பொருளாதாரப் பாதுகாப்பை வழக்குகிறது.
 • இருந்தபோதும் 1930-ல் உலகப் பொருளாதார மந்தநிலையின் காரணமாக இரண்டாம் உலகப்போர் ஏற்பட்டதை எளிதாக எடுத்துக் கொள்ள ஐ.நா-வின் சாசனத்தை வரைந்தவர்கள் கருதவில்லை.
 • பொருளாதாரம் மற்றும் சமூக குழுவானது ஐ.நா-வின் அமைப்பு, ஐ.நா-வின் எண்ணிடலங்கா வெளியுறவுப் பணிகள் மற்றும் மண்டலக் குழுக்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைந்த அதிகாரங்களைக் கொண்ட அமைப்பாகும். மனித உரிமைக்கான குழுவானது உலக அளவில் மனித உரிமைகளை பாதுகாப்பது மற்றும் கண்காணிப்பது போன்ற பணிகளை செய்கிறது.
 • பிற அமைப்புகள் சமூக வளர்ச்சியை மையப்படுத்தும் விதமாக பெண்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குற்றத்தடுப்பு மற்றும் போதை மருந்து ஒழிப்பு போன்ற பணிகளை மேற்கொள்கின்றன.
 • இருந்தபோதும் பொருளாதார மற்றும் சமூக குழுவின் நோக்கம் கானல் நீராகவே இருக்கிறது. உண்மையில் உலகப் பொருளாதார அதிகாரமானது மூன்று சகோதரிகள் அமைப்புகள் என்ற அமைப்புகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அவை;

அ) உலக வங்கி

ஆ) சர்வதேச நிதி நிறுவனம்

இ) உலக வர்த்தக கழகம்

பொது செயலாளர்கள் வரிசை

 1. டிரைகிவு லீ (நார்வே) 1946 – 1952
 2. டேக் ஹமர்ஸ்கீஜிஓல்டு (சுவிடன்) 1953 – 1961
 3. யூ தாண்ட் (பர்மா தற்பொழுது மியான்மர்) 1961 – 1971
 4. குர்ட் வல்தீம் (ஆஸ்திரியா) 1972 – 1981
 5. சேவியர் பெரஸ் டி குல்லர் (பெரு) 1982 – 1991
 6. பூட்ரோஸ் பூட்ரோஸ் காலி (எகிப்து) 1992 – 1996
 7. கோபி அன்னான் (கானா) 1997 – 2006
 8. பான் –கீ-முன் (கொரிய குடியரசு) 2007 – 2016
 9. ஆண்டனியோ குட்ரஸ் (போர்சுகல்) 2017 முதல்

உலக வங்கி

 • வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள உலக வங்கியானது உண்மையில் மறுகட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான சர்வதேச வங்கியாகும். உலக வங்கி அல்லது உலக வங்கி குழுமம் 1945-ல் உருவாக்கப்பட்டு உலகில் வளர்ந்து வரும் நாடுகளின் தேவைக்கான மிகப்பெரும் நிதியையும் மற்றும் ஆலோசனைகளையும் வழங்கிவருகிறது.
 • “உலக வங்கி” என்ற பெயரானது மறுகட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான சர்வதேச வங்கியின் பொருளாதார சட்டப்பிரிவினால் 1944ஆம் ஆண்டு ஜூலை 22இல் பிரெட்டன் உட்ஸ் மாநாட்டில் அளித்த அறிக்கையில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது. இவ்வங்கியின் முதன்மை நோக்கமாக ஏழை மக்கள் மற்றும் ஏழை நாடுகளில் தனது ஐந்து நிறுவனங்கள் மூலம் வறுமை ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது, வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது போன்ற பணிகளில் தனது நிதி ஆதாரங்களையும் மற்றும் தனது எல்லையற்ற அனுபவங்களையும் கொண்டு செயல்படுகிறது.
 • உலக வங்கியின் நிர்வாகமானது அதன் உறுப்பு நாடுகளால் மேற்கொள்ளப்படுகிறது. அவர்களே கடன் அளிப்பவர், பெறுபவர் மற்றும் நன்கொடையாளராகவும் இருக்கின்றனர்.
 • உலகின் பெரும்பான்மையான வளரும் நாடுகள் உலக வங்கியின் உதவிகளிஅ கடன் மற்றும் மானியங்கள், தொழில்நுட்ப உதவி மற்றும் கொள்கை உருவாக்கத்திற்கான அறிவுரைகளை பெறுகின்றன.
 • வங்கியானது மிகப் பரந்த அளவிலான செயல்பாட்டாளர்களைக் கொண்டிருக்கிறது.
 • குறிப்பாக அரசுத்துறை நிறுவனங்கள், குடிமைச் சமூக அமைப்புகள், பிற உதவி நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையினர் போன்றோரின் மூலமாக செயல்படுகிறது.
 • உலக வங்கியின் அடிப்படை நோக்கமான வறுமை ஒழிப்பு மற்றும் வாழ்க்கைத் தர மேம்பாடு போன்றவை எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து இருக்கின்றன. ஆனால் தற்பொழுது புதிய பொருளாதார சூழலின் அடிப்படையில் வளரும் நாடுகளுக்கான தேவையைக் கருதி தனது அணுகுமுறையில் மாற்றம், கொள்கையில் நெகிழ்வைக் கடைபிடிக்கிறது.
 • வளர்ச்சிக்கான தற்போதைய சவால்களை எதிர்க்கொள்ள நிறுவனங்கள் மக்களுக்கு நெருக்கமாக இருந்தால் மட்டும் போதாது, மேலும் அவை சர்வதேச நெருக்கடிகளை சமாளிக்கும் விதத்தில் அரசு, தனியார் மற்றும் குடிமைச் சமூகத்தில் உள்ள ஆற்றல் மிக்கோரை ஒன்றிணைக்கவும் வேண்டும். இச்சவால்களை எதிர்க்கொள்ளும் விதமாக எதற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பதில் வங்கி கவனமாக உள்ளது. அதற்கேற்றார் போல் தன்னுடைய நிர்வாக உத்தியில் மாற்றம் மற்றும் ஆளுகையில் முன்னேற்றம் போன்றவற்றைக் கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றங்கள் சுயசார்பானதாக, புதுமையானதாக, திறமையானதாக, செயலாக்கம் மிக்கதாக மற்றும் வெளிப்படையானதாக என ஐந்து பகுதிகளைக் கொண்டதாக உள்ளது. மேலும் அவை;

கடன் முறைகளில் சீர்திருத்தம் :

மிகவும் நவீனப்படுத்தப்பட்ட நிதி சேவை மற்றும் கடன் முறைகளைக் கொண்டு, வங்கியானது கடன் பெறுபவரின் தேவையை அறிந்து மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்கிறது. நெருங்கிய கண்காணிப்பு நடவடிக்கையின் மூலம் நிலையான பயனை அடைவதற்கான அழைப்பை விடுக்கிறது. மேலும் அதிக பாதுகாப்பற்ற முதலீடுகளின் மீது நேரடியான நடவடிக்கையை வலுப்படுத்துவது மற்றும் கண்காணிப்பை மேம்படுத்துவது போன்றவற்றை மேற்கொள்கிறது.

பங்கேற்பை அதிகப்படுத்தி குரல்களை ஒலிக்க செய்கிறது:

இயக்குநர்கள் குழுவில் கூடுதல் இடங்களை பின்தங்கிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு அளிப்பதன்மூலம் வளர்ந்து வரும் நாடுகளின் ஓட்டு அதிகாரத்தை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் வங்கியானது, வளர்ச்சி மற்றும் மாற்றம் அடைந்து வரும் நாடுகளின் பிரதிநிதித்துவம் மற்றும் அதன் தாக்கத்தை ஆராய்ந்து அந்நாடுகளுக்கு வங்கி குழுமங்களில் இடம் அளிக்கிறது.

பொறுப்பு மிக்க நல்ல அரசை ஏற்படுத்துவது:

இதன் முக்கிய பகுதியாக, வங்கியானது அனைத்து துறைகள் மற்றும் நாடுகளிலும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இதன் முக்கிய அடிப்படையாக வறுமை ஒழிப்பிற்கான திறமை மிக்க மற்றும் பொறுப்புமிக்க அரசாக வளர்ச்சிக்கான அனைத்து வாய்ப்புகளையும் உருவாக்க செய்கிறது.

உலக வங்கியின் ஐந்து நிறுவனங்கள்

 • மறுகட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான சர்வதேச வங்கி
 • சர்வதேச வளர்ச்சி கூட்டமைப்பு
 • சர்வதேச நிதி கழகம்
 • பல்தேசிய முதலீட்டு உத்தரவாதத்திற்கான பாதுகாப்புக் குழுமம்
 • முதலீடு தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான சர்வதேச மையம்

மிகவும் வெளிப்படையான, பொறுப்பு மிக்க தகவல்களை அளித்தல்:

வங்கியின் தகவல் கொள்கையானது இதற்கான வாய்ப்பை வழங்குகிறது. வங்கியானது தனது அறிவாற்றல் மற்றும் அனுபவங்களை மிக பரந்த அளவில் அனைவரும் அறியும் வண்ணம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதன் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சி நிரல்கள் பற்றிய தகவல்களை அளிக்கிறது.

புதுப்பிக்கப்பட்ட அமைப்பு:

வளர்ச்சிக்கான மிகச் சிறந்த பங்காளராக வங்கியானது பல சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இச்சீர்திருத்தங்கள் மூன்று முக்கிய பகுதிகளை கொண்டது. அவை;

 • நவீன கடன் அளிப்பு, அறிவாற்றல் உதவி மற்றும் சேவைகளை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. குறிப்பாக, வறுமை ஒழிப்பிற்கான பணிகளில் உதவுகிறது.
 • மேம்பட்ட வகையில் தனது சிறந்த அறிவினை மற்றும் அனுபவங்களை அமைப்பிற்குள்ளும் மற்றும் வெளியிலும் பகிர்ந்து கொள்வதை மேற்கொள்கிறது.
 • வங்கியின் அமைப்பு மற்றும் நடைமுறைகளில் நவீனத்துவத்தை கடைபிடிப்பதாகும்.
 • இதன் துவக்கமானது 1946இல் 33 உறுப்பினர்களை கொண்டு துவக்கப்பட்டது மிகபெரும் அளவிலான மாற்றங்களை இதன் உறுப்பினர்களிடையேயும் மற்றும் உலக அளவிலும் ஏற்படுத்தி உள்ளது.
 • காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை அடைந்த பல நாடுகள் வங்கியில் உறுப்பினர் ஆகின. கூடவே உறுப்பு நாடுகளின் வளர்ச்சிக்கான தேவையும் அதிகரித்தது.

மறுகட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான சர்வதேச வங்கி (IBRD)

இதன் முக்கிய நோக்கமானது நடுத்தர வருவாய் நாடுகள் மற்றும் குறைவான வருவாய்க்கான கடன்களை பெறும் நாடுகளில் வறுமை ஒழிப்பு மற்று சுயசார்பான வளர்ச்சியை ஏற்படுத்துவது, உத்திரவாதம் அளிப்பது, பகுப்பாய்வு மற்றும் ஆலோசனைகளை வழங்குவதாகும். 1945இல் ஏற்படுத்தப்பட்ட இவ்வங்கியில் 184 உறுப்பு நாடுகள் உள்ளன. இதன் மொத்த வருவாய் மற்றும் நிதியாண்டுகளில் கிடைக்கும் வருவாய் என 2018ஆம் ஆண்டு ஜூனில் 698 பில்லியன் அமெரிக்க டாலரை கொண்டு இருந்தது.

சர்வதேச வளர்ச்சி கூட்டமைப்பு (IDA)

உறுப்பு நாடுகளின் துணையுடன் ஏழை நாடுகளில் வறுமை ஒழிப்பிற்கான வட்டியில்லா கடன்கள், மானியங்களை உறுப்பினர்களிடமிருந்து நிதி உதவியாகப் பெற்று வழங்குகிறது. 1960இல் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு தனது பொறுப்பில் 24 பில்லியன் அமெரிக்க டாலரை ஜூன் 2018ஆம் நிதியாண்டில் மேலாண்மை செய்தது.

சர்வதேச நிதி கழகம் (IFC)

வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான கடன்களை தனியார் துறையினருக்கு வழங்கிறது. 1956இல் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பில் 176 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. 2018ஆம் நிதியாண்டில் 23.3 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடாக செய்துள்ளது.

பல்தேசிய முதலீட்டு உத்தரவாதத்திற்கான பாதுகாப்புக் குழுமம் (MIGA)

இக்குழுமமானது வளரும் நாடுகளில் தனியார் துறையினரின் முதலீட்டினை அதிகரிக்க செய்கிறது. மேலும் ஒப்பந்தங்கள், பிரச்சனைகள், போர் மற்றும் பணப்பரிமாற்று விகிதங்களினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து முதலீட்டிற்கான பாதுகாப்பை வழங்குகிறது. 1988இல் உருவாக்கப்பட்ட இவ்வகைப்பில் 164 உறுப்பினர்களைக் கொண்டு அதிகபட்சமாக 5.3 பில்லியன் தொகையை வர்த்தகம் செய்துள்ளது.

முதலீடு தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான சர்வதேச மையம் (ICSID)

வளரும் நாடுகளில் வெளிநாட்டு முதலீட்டை ஆதரிக்கிறது. மேலும் முதலீடு தொடர்பான பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கிறது. 1966இல் ஏற்படுத்தப்பட்ட இவ்வமைப்பில் 140 உறுப்பினர்கள் உள்ளனர்.

சர்வதேச நிதி நிறுவனம்

 • சர்வதேச நிதியமானது உலகின் மிகப் பெரிய முதன்மையான சர்வதேச நிதி நிறுவனமாகும். 1930 இல் ஏற்பட்ட உலக நாடுகளின் பெரும் பொருளாதார மந்த நிலைக்குப் பதிலாக 1944இல் பிரெட்டன் உட்ஸ் மாநாட்டில் இது உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு நாடும் பக்கத்து நாடுகளிடம் கடன் வாங்குவது இதனால் குறைந்தது.
 • உறுப்பு நாடுகளின் செழித்த நிலை தேவைக்கான குறுகிய மற்றும் இடைக்கால நிதியை வழங்குவதுடன் அந்நாடுகளின் பொருளாதார கொள்கையில் நெகிழ்வை ஏற்படுத்தி பண மதிப்பு இழப்பு போட்டியை தடுத்து வர்த்தகத்தைப் பாதுகாக்கிறது.

சர்வதேச நிதி நிறுவனத்தின் தேவை

 • சர்வதேச நிதி நிறுவனம் ஓர் சுதந்திரமான சர்வதேச அமைப்பாகும். இது 185 உறுப்பு நாடுகளை கொண்டுள்ளது. இதன் நோக்கமானது பொருளாதார நிலைதன்மையை ஏற்படுத்தி வளர்ச்சிக்கு வித்திடுவதாகும்.
 • உறுப்பு நாடுகள் இதன் பங்குதாரராக கூட்டுறவு முறையில் சர்வதேச நிதி நிறுவனத்திற்காக மூலதனத்தை தங்கள் நாட்டிற்கான ஒதுக்கீடு அடிப்படையில் வழங்குகின்றன. இதற்காக நிதியமானது அதன் உறுப்பினர்களுக்கு நுண்பொருளாதார கொள்கைக்கான ஆலோசனைகளை, செலுத்து நிலை தேவைக்கான நிதியுதவி, தொழிற்நுட்ப உதவி மற்றும் தேசிய பொருளாதார மேம்பாட்டிற்கான மேலாண்மை பயிற்சிகளை வழங்குகிறது.
 • நிதியமானது ஐ.நா-வின் பல்வேறு தன்னாட்சி நிறிவனங்களில் ஒன்றாக சிறப்பு முகவாண்மையாக குறிப்பிடப்படுகிறது.
 • மேலும், இது ஐ.நா-வின் நிரந்தர பார்வையாளராகவும் உள்ளது. நிதியத்தின் விதி எண் ஒன்றானது கீழ்க்கண்ட முக்கிய நோக்கங்களை குறிப்பிடுகிறது.
 • ஒரு நிரந்தர அமைப்பாக சர்வதேச அளவில் நிதி ஒத்துழைப்பை ஏற்படுத்துகிறது. மேலும் சர்வதேச பணவியல் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்கான வழிமுறைகளை உருவாக்குகிறது.
 • பரந்த அளவிலான, சமச்சீரான, சர்வதேச வியாபார வளர்ச்சிக்கான வாய்ப்பை வழங்குகிறது. மேலும் அதிக வேலை வாய்ப்பு மற்றும் வருவாயைப் பாதுகாத்து உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கையைக் கடைபிடிக்க உறுப்பு நாடுகளை அறிவுறுத்துகிறது.
 • பரிவர்த்தனை விகிதங்களில் நிலைத்த தன்மை, உறுப்பு நாடுகளிடையே ஒழுங்கமைந்த பரிமாற்றத்திற்கான வழிமுறைகளை ஏற்படுத்துதல் மற்றும் போட்டியின் காரணமாக மதிப்பு குறைத்தலைத் தடுக்கிறது.
 • உறுப்பினர்களுக்கு இடையே நடைபெறும் நடப்பு பரிவர்த்தனையில் பல்தேசிய பண வழங்கல்முறை ஏற்படுவதற்கான உதவியை செய்கிறது மற்றும் உலக வர்த்தக வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் அந்நிய செலாவணி பரிமாற்று விகிதங்களின் மீதான கட்டுபாடுகளை நீக்குகிறது.
 • நிதியமானது தனது பொது நிதி வளங்களை உறுப்பினர்களுக்கு தற்காலிகமாக பயன்படுத்தி தங்களைப் பாதுகாத்து கொள்வதற்கான நம்பிக்கையை அளிக்கிறது. இதன் மூலம் செலுத்து நிலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாத வகையில் மீட்சி அடைவதற்கான வாய்ப்பினை வழங்குகிறது.
 • உறுப்பினர்களிடையே செலுத்து நிலையில் ஏற்படும் நிலையற்ற தன்மையின் தாக்கம் மற்றும் அதன் கால அளவினை குறைக்க செய்கிறது.
 • முக்கியமாக நிதியமானது தனது ஒற்றை பண்பாக ஓர் சர்வதேச நிதி நிறுவனமாக தொலைநோக்குப் பார்வையுடன் தனது பொறுப்பு மிக்க நடைமுறையின் மூலம் சர்வதேச வளர்ச்சி மற்றும் நிதி பரிமாற்ற முறைகளைக் கையாள்கிறது.

சர்வதேச நிதி நிறுவனத்தின் செயல்பாடுகள்

நிதியமானது மிக பரந்த அளவிலான பணிகளை அதன் முக்கியத்துவம் கருதி மேற்கொள்கிறது.

உறுப்பினர்களின் பொருளாதார கொள்கையினைக் கண்காணிப்பது

எந்த நாடு நிதியத்தில் உறுப்பினராக இணைந்து அதன் கொள்கையினை ஏற்று கொண்டதோ அது தனது பொருளாதார கொள்கையினை நிதியத்தின் நோக்கத்திற்கு இணையானதாகக் கொண்டு செயல்படவேண்டும். மேலும் உலகின் எல்லா நாடுகளின் பொருளாதார நிலையினை தொடர்ந்து கண்காணிப்பதற்கான முக்கிய ஒரே அமைப்பாக செயல்படுகிறது.

செலுத்துநிலை தேவைக்கான தற்காலிக நிதிவழங்கல்

செலுத்துநிலைத் தேவைக்கான கடன்களை நிதியமானது உறுப்பு நாடுகளுக்கு தற்காலிகமாக வழங்குகிறது. மேலும் நாடுகளின் செலுத்து நிலை தேவைக்கான நிதியினை வெளியிலிருந்து திரட்டும் பணியையும் மேற்கொள்கிறது.

குறைந்த வருவாய் கொண்ட நாடுகளில் வறுமை தடுப்பு

நிதியமானது வருவாய் குறைந்த நாடுகளுக்கு நிபந்தனையற்ற கடன்களை அளித்து அந்நாடுகளில் வறுமை ஒழிப்பிற்கான முயற்சிகளை மேற்கொள்கிறது. இந்த முயற்சியில் நிதியமானது உலக வங்கி மற்றும் பிற வளர்ச்சிக்கான பங்குதாரர்களையும் கொண்டு பணியாற்றுகிறது. கூடுதலாக நிதியமானது கடன்களில் இருந்து மீள்வதற்கான இரண்டு சர்வதேச பணிகளையும் மேற்கொள்கிறது. அவை:

 1. மிக அதிக கடனில் உள்ள ஏழை நாடுகள் (HIPC)
 2. பல்தேசிய கடனில் இருந்து மீள்வதற்கான முன்னெடுப்பு (MDRI)

வெளியிலிருந்து நிதியினை திரட்டுவது

நிதியமானது நாடுகளின் கொள்கை நடைமுறைக்கான நிதியினை பல்தேசிய கடன் அளிப்போர் மற்றும் நன்கொடையாளர்களிடம் இருந்து திரட்டுவதை முக்கிய பணியாக கொண்டிருக்கிறது. நாடுகளின் பொருளாதார எதிர்காலத்தை அறிந்து கொள்வதற்கான முக்கிய தகவல்களை நிதியத்தின் கொள்கை ஆய்வுகள் மற்றும் பரிந்துரைகள் மூலம் முதலீட்டாளர்கள் மற்றும் நிதிச் சந்தைகளுக்கு அளிக்கின்றது. இதன்மூலம் பொருளாதாரத்தின் மீதான முதலீட்டாளர்கள் மற்றும் சந்தையாளர்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்க செய்கிறது.

சர்வதேச பணவியல் முறையை பலப்படுத்துவது

நிதியமானது சர்வதேச பணவியல் முறைக்கான மைய அமைப்பாக செயல்படுகிறது. தனது உறுப்பினர்களுக்கு சர்வதேச பணவியல் தொடர்பான ஆலோசனைகளையும் மற்றும் உதவிகளையும் வழங்குகிறது. இது தனது பணியாக பிற பல்தேசிய நிறுவனங்களுடன் இணைந்து சர்வதேச பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் சர்வதேச விதிகளின் துணையுடன் அவற்றை கட்டுப்படுத்துவது மற்றும் மேம்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்கிறது.

சர்வதேச இருப்பை உலகளவில் வழங்குதலை அதிகரித்தல்

உலக தேவைகளுக்காக நிதியமானது அதிகாரபூர்வ அமைப்பாக தனது சர்வதேச கையிருப்பை வழங்குகிறது. இது சிறப்பு எடுப்பு உரிமை (SDR) என கூறப்படுகின்றது. இந்த சிறப்பு எடுப்பு உரிமையானது சர்வதேச கையிருப்பை உறுப்பினர்களின் எந்த மாற்றத்தக்க பணங்களுடனும் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.

தொழில்நுட்ப உதவி மற்றும் பயிற்சியின் மூலம் ஆற்றலை வளர்த்தல்

நிதியமானது சிறந்த பயிற்சி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை உறுப்பு நாடுகளுக்கு தங்கள் பொருளாதார கொள்கைக்கான வடிவங்களையும் மற்றும் பொருளாதார மேலாண்மைக்கான தீரமையினை மேம்படுத்தும் வகையில் வழங்குகிறது. இந்த உதவியானது கொள்கைகள் தோல்வியடைவதை மற்றும் அதிர்வுகளை ஏற்படுத்துவதை தடுக்கும் வகையில் திட்டங்களுக்கான வடிவங்கள் மற்றும் நடைமுறைகளை வழங்குகிறது. இந்த நடவடிக்கைகள் குறிப்பாக வளரும் நாடுகளுக்கு தங்கள் வளங்களை பாதுகாக்கவும் மற்றும் நிறுவனங்கள் வீழ்ச்சியடையாமல் தடுப்பதற்கும் பயன்படுகிறது.

தகவல் பரிமாற்றம் மற்றும் ஆராய்ச்சிகள்

 • நிதியமானது உறுப்பு நாடுகளின் பொருளாதார கொள்கைகள் பற்றிய பொருளியல் பகுப்பாய்வுகள் மற்றும் புள்ளி விவரங்களைப் பெறுவதற்கான முதன்மை அமைப்பாகும். நிதியமானது தனது தகவல்களை அளிக்கும் வகையில் எண்ணிலடங்கா அறிக்கைகள், ஆய்வறிக்கைகள் மற்றும் சிறப்பு வாய்ந்த புள்ளி விவரங்களை வெளியிடுகின்றது.
 • மேலும் குறிப்பாக, தனது பொருளாதார பகுப்பாய்வு மற்றும் உறுப்பு நாடுகளுக்கு அளிக்கும் ஆலோசனைகளை மேம்படுத்தும் வகையில் பல ஆய்வுகளை அதன் முக்கியத்துவம் மற்றும் நடைமுறைகளை அடிப்படையாக கொண்டு மேற்கொள்கிறது. இதன் வெளியீடுகளை புத்தகமாகவும், இதழ்களில் கட்டுரையாகவும், ஆய்வு அறிக்கைகளாகவும் மற்றும் இணையத்திலும் காணலாம்.
 • இருந்தபோதும் நிதியத்தின் மீதான பொது விமர்சனமானது சேவைத்துறைகளை வணிகமயமாக்குவதன் மூலம் பெரு நிறுவனங்களின் விருப்பத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது என்பதாகும்.
 • குறிப்பாக கல்வி, மருத்துவம், மக்கள்நல திட்டங்கள் போன்றவற்றை லாபகரமாக தொழில் விருப்பமாக மாற்றுவதுடன் மேலும் இறையாண்மை உடைய அரசுகளை சர்வதேச பெருநிறுவன வணிகத்திற்கு ஆதரவாக சேவையாற்ற கட்டாயப்படுத்துகிறது என்பதாகும்.

ஆசிய வளர்ச்சி வங்கி

 • சர்வதேச நிதி நிறுவனமானது பெரும்பாலும் சுயநிதியினை சார்ந்தது. ஆனால் பல்தேசிய வளர்ச்சி வங்கிகள் தங்கள் சேவைகளுக்கு பெரும்பாலும் பங்குதாரர்களின் பங்களிப்பைச் சார்ந்தே செயல்படுகின்றன.
 • குறிப்பாக, தங்கள் நிதி நடவடிக்கையான வட்டி குறைவான கடன்களை வழங்குதல், மானியம் அளித்தல் மற்றும் மிகவும் ஏழை நாடுகளுக்கான வட்டியில்லா கடன்கள் போன்றவையாகும்.
 • பல்தேசிய வளர்ச்சி வங்கிகளை மூன்று வகைகளாக பிரிக்கலாம்.
 1. உலக அளவில்
 2. மண்டல அளவில் மற்றும்
 3. துணை-மண்டலங்கள் என மூன்றாகப் பிரிக்கலாம்.

இதன் மூலம் அவற்றின் ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளை எளிதில் கண்டறியலாம்.

 • பல பல்தேசிய வளர்ச்சி வங்கிகள் மேலே குறிப்பிட்ட மூன்று வித பிரிவுகளையும் உள்ளடக்கியதாகக் குறிப்பிட்ட ஓர் கண்டத்தினை மட்டுமே நேரடியாகக் கொண்டு செயல்படுகின்றன. அவை, ஆசிய வளர்ச்சி வங்கி, ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டுமான மற்றும் முதலீட்டு வங்கி, புதிய வளர்ச்சி வங்கி, அமெரிக்க வளர்ச்சி வங்கி, இஸ்லாமிய வளர்ச்சி வங்கி, ஐரோப்பிய முதலீட்டு வங்கி போன்றவையாகும்.
 • 1930-களின் பிற்பகுதியில் மற்றும் 1940-களின் முற்பகுதிக்கு இடைப்பட்ட காலத்தில் தற்கால பொருளாதார வளர்ச்சிக்கான பல் தேசிய வங்கிகள் தோன்றின. இது முக்கியமாக ஆங்கிலேய பொருளாதார அறிஞர் ஜான்மேயார்டு கியின்ஸ் குறிப்பிட்டதுபோல போருக்கு பிந்தைய கால பொருளாதார மற்றும் சமூக தேவையாக உருவாகியது.
 • இதனை மெய்ப்பிக்கும் வகையில் அமெரிக்க பொருளாதார அறிஞரான ஹரிடெக்ஸ்டர் ஒயிட் தொலைநோக்கு பார்வையில் சில நிறுவனங்களை ஏற்படுத்தினார்.
 • ஒயிட் 1942ஆம் ஆண்டு இதற்கான பாதையை அமைக்கும் வகையில் வளர்ச்சியை அடிப்படைக் கொள்கையாக கொண்டு ஓர் கோரிக்கையை ஐ.நா-விற்கு அளித்தார். ஐக்கிய மற்றும் துணை நாடுகளுக்கான சர்வதேச நிதியத்தையும், மறுகட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான வங்கியையும் உருவாக்க கோரினார். இது போருக்குப் பிந்தைய சர்வதேச பணவியல் சீர்திருத்தங்களுக்கான அடிப்படைகளை வழங்கியது. இந்த கோரிக்கையானது போருக்குப் பிந்தைய பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வகையில் இரண்டு நிறுவனங்களையும் அதிகாரம், வளங்கள் மற்றும் கட்டமைப்பு கொண்டதாக உருவாக்க கோரியது.
 • பல்தேசிய வங்கிகள் உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கிகள் போலவே பொதுவான நிதி நிறுவன உறுப்பு நாடுகளின் வளர்ச்சிக்கான பொறுப்புமிக்க அமைப்பாகும். கியூபா மற்றும் வட கொரியாவை தவிர உலகில் பெரும்பான்மையான நாடுகள் பல்தேசிய வளர்ச்சி வங்கியின் உறுப்பினர் ஆகின.
 • பல்தேசிய வளர்ச்சி வங்கியின் உறுப்பினரான எல்லா நாடுகளும் தங்கள் பங்களிப்பை அளித்து வங்கியானது அங்கீகரிக்கப்பட்டதிலிருந்து கடன்களை அவர்களுக்கு அளித்து வருகிறது.
 • பல்தேசிய வளர்ச்சி வங்கிகள் பெரும் அளவிலான வளர்ச்சி திட்டங்கள் குறிப்பாக நீர்மின் நிலையங்களுக்கான அணைகள், பாசனத் திட்டங்கள் , போக்குவரத்து வளர்ச்சிகள், எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்கள், வறுமையை குறைத்து, பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்க செய்து வளர்ச்சிக்கு வித்திடுவதாக இருந்தன.
 • இருந்தபோதும் இவற்றிற்கு எதிராக பிரச்சனைகள் எழுந்தன. வங்கி கூறுவது போல இல்லாமல் இந்த திட்டங்கள் சுற்றுச்சூழலை மற்றும் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையை அழிப்பதாக எதிர்ப்புகள் எழுந்தன.
 • பலரும் இதன் திட்டங்கள் அம்மக்களின் நலன்களை மட்டுமல்ல சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல்களை பாதித்து எதிர்மறையான பலன்களைத் தந்ததாக வாதிட்டனர்.
 • ஆசிய வளர்ச்சி வங்கி ஓர் மண்டலப் பல்தேசிய நிதி நிறுவனமாகும். இது பொறுப்பு உணர்வுடன் ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளில் வறுமையை குறைப்பதற்கான பணியினை மேற்கொள்கிறது. 1966இல் உருவாக்கப்பட்ட இவ்வங்கியில் 66 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இவற்றில் பெரும்பான்மை ஆசிய பகுதியை சார்ந்தவை.
 • வங்கியின் பங்கு முதலீடாக 44 பில்லியன் அமெரிக்க டாலரையும் மற்றும் இருப்பாக 7.9 பில்லியன் அமெரிக்க டாலரையும் கொண்டு உள்ளது. இது தோற்றுவிக்கப்பட்ட 1966 ஆம் ஆண்டிலிருந்து 2002ஆம் ஆண்டு வரை வங்கியானது பொது மற்றும் தனியார் துறையினருக்கு 98.831 பில்லியன் தொகையை கடனாக வழங்கி உள்ளது. மேலும் ஐந்து பில்லியன் கடன்களை பல்வேறு திட்டங்களுக்கு மண்டலத்திற்கு வெளியிலும் வழங்கி உள்ளது. இதன் ஆண்டு வருவாய் 500 பில்லியன் ஆகும்.
 • ஆசிய வளர்ச்சி வங்கியின் “வறுமை குறைப்பு செயல்திட்டம் (PRS)” ஆனது மைய பொருளாக கொண்டு நீண்டகால செயல்திட்ட கட்டமைப்பு (LIST 2001-2015) அமைந்துள்ளது. இந்த பதினைந்து ஆண்டு கால திட்டமானது ஆசிய வளர்ச்சி வங்கி ஐ.நா-வின் நூற்றாண்டு வளர்ச்சியின் வெற்றியாக கொண்டு உலக அளவில் வறுமையில் வாழும் மக்களின் எண்ணிக்கையை நோக்கமாக கொண்டு மேற்கொள்கிறது.
 • வங்கி குறிப்பிடுவதைபோல இதன் வளர்ச்சி திட்டங்கள் ஆசிய மற்றும் பசிபிக் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி உள்ளது. மேலும் குறிப்பாக 900 மில்லியன் ஆசிய மக்கள் ஒரு நாளைக்கு ஒரு டாலருக்கும் கீழான வருவாயில் வறுமையில் வாழ்கின்றனர். வங்கியின் முதன்மை நோக்கமாக பொருளாதார வளர்ச்சி, மனித வளர்ச்சி, பெண்கள் , நல்ல அரசாங்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தனியார்துறை வளர்ச்சி மற்றும் மண்டல ஒருங்கிணைப்பாகும்.
 • ஆசிய வளர்ச்சி வங்கியானது தற்பொழுது ஐந்து புவியில் பகுதியாக நாடுகளை பிரித்து அதற்கு ஏற்ப துறை ரீதியாக பணிகளை கொண்டு செயல்படுகிறது. அவை,
 1. கிழக்கு மற்றும் மத்திய ஆசியா
 2. தி கெக்காங்
 3. பசிபிக்
 4. தெற்கு ஆசியா
 5. தென்கிழக்கு ஆசியா
 • ஒவ்வொரு மண்டல துறைகளும் அதன் நாடுகளுக்கான திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளையும் மேற்கொள்கின்றன. துணை மண்டலங்கள் குறிப்பிட்ட நாட்டிற்கான உதவிகள் என்பதாக பணிகளை மேற்கொள்கின்றன.
 • பிற வங்கிகளை போலவே ஆசிய வளர்ச்சி வங்கியும் தனக்கான நிதியினை பங்குதாரர்களிடமிருந்து பெறுகிறது. ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் பங்களிப்பு இதன் உறுப்பு நாடுகளைவிட மிக அதிகமாக 15.9 சதவிகிதமாகும்.

ஷாங்காய் கூட்டமைப்பு (SCO)

குயிண்டாஓ தீர்மானம்

 • சீனாவின் விருப்பமான “பட்டு சாலை முன்னெடுப்பில்” இந்தியா இணைவதற்கு மறுத்துவிட்டது.
 • ஷாங்காய் கூட்டமைப்பு பகுதியின் முழுமையான பாதுகாப்பிற்கான செயல் யுக்திகளை இந்தியா வகுத்துள்ளது.

ஷாங்காய் கூட்டமைப்பு

 • இது ஓர் ஐரோப்பிய ஆசிய அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு அமைப்பாக 2001 துவக்கப்பட்டது. இதன் தலைமையகம் பிஜிங்கில் உள்ளது.
 • இதன் துவக்கத்திற்கு காரணமாக ஷாங்காய் ஐந்து எனப்படும் ஐந்து நாடுகள் அமைந்திருந்தது (1996 இல் சீனா , ரஷ்யா, கஜகிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜகிஸ்தான் கொண்ட பல்தேசிய அமைப்பாக இது ஷாங்காய் நகரத்தில் துவக்கப்பட்டது).
 • இதன் தத்துவமானது “ஷாங்காய் உற்சாகம்” என அறியப்படுகிறது. இது நல்லிணக்கம், நற்சிந்தனையான பணி, பிற்கலாசாரங்களை மதித்தல், பிற நாட்டு உள்விவகாரங்களில் தலையிடாமல் இருத்தல் மற்றும் அணி சேராமை ஆகும்.
 • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு எட்டு உறுப்பினர்களை கொண்டுள்ளது, அவை இந்தியா, கஜகீஸ்தான் , சீனா, கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜ்கிஸ்தான் மற்றும் உஸ்பெக்கிஸ்தான் ஆகும்.
 • 2018 ஆம் ஆண்டில் நடந்த இந்த கூட்டத்தில் இந்தியா அதன் முழுநேர உறுப்பினராக முதல் முறையாக கலந்து கொண்டது. இந்தியாவுடன், பாகிஸ்தானும் 2017இல் கஜகிஸ்தானில் நடந்த அஸ்டானா உச்சி மாநாட்டில் முழுநேர உறுப்பினராக இணைந்தன.
 • இவ்வமைப்பின் கீழ் நான்கு அரசுகள் இதன் பார்வையாளராகவும் மற்றும் ஆறு அரசுகள் விவாத பங்கேற்பு உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (OPEC)

ஆசிய பிரிமீயம்

 • இது ஆசிய நாடுகளுக்கான எண்ணெய் விற்பனையில் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் மேல் அதிக கட்டணத்தை வசூலிப்பதாகும்.
 • இது 1986இல் இருந்து சந்தை நிலைக்கு ஏற்ப கச்சா எண்ணெய் விலையை தீர்மானிக்கும் முறையிலிருந்து துவங்குகிறது.
 • உலக சந்தையில் ஆசிய பகுதிக்கான எண்ணெய் விலையை தீர்மானிப்பதில் மூன்று முக்கிய சந்தைகள் திகழ்கின்றன. அவை:
 • ஐரோப்பிய சந்தையின் லயிட் சுவிட் எண்ணெய் நிறுவனமான ப்ரென்ட்.
 • அமெரிக்க சந்தையின் பிரதிநிதியாக ஃவெஸ்ட் டாக்ஸ் இடைநிலையாளர்கள் (WTI).
 • மத்திய கிழக்கு மற்றும் ஆசிய சந்தைக்கான துபாய்/ ஓமன் நாடுகள் ஆகும்.
 • கச்சா எண்ணெய்யின் எந்த ஓர் நிலையையும் அதன் வருங்கால வர்த்தக நிலையை அடிப்படையாகக் கொண்டு அதற்கான சந்தை மற்றும் விலையை தீர்மானிப்பதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவானது முன்நிலை வகிக்கின்றன. ஆசிய பிரதிநிதிகளான துபாய்/ ஓமன் நாடுகளின் வர்த்தக பங்கு நிலையானது இதன் முடிவை தீர்மானிப்பதாக இல்லை.
 • இதனால் ஐரோப்பிய மற்றும் அமெரிக்காவை காட்டிலும் ஆசிய நாடுகள் ஒன்றில் இருந்து இரண்டு டாலர் வரை அதிக விலை கொடுக்க நேரிடுகிறது. இந்த விலை வேறுபாடே “ஆசிய பிரிமீயம்” என அழைக்கப்படுகிறது.

ஒபெக் (OPEC) கூட்டமைப்பு

 • இது ஓர் அரசுகளுக்கு இடையிலான அமைப்பு இதன் நோக்கம் உறுப்பு நாடுகளுக்கு இடையே ஒரே விதமான பெட்ரோலிய கொள்கையை உருவாக்குவதற்கான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதாகும், இதன் அடிப்படையில் பெட்ரோலிய நுகர்வு நாடுகளுக்கு பெட்ரோலிய பொருட்களின் விலையை நிலையானதாக மற்றும் பாதுகாப்பானதாக பொருளாதார திறன்பட்டதாக தொடர்ந்து வழங்குவதாகும். மேலும் இந்த தொழிலில் முதலீடு செய்துள்ள மூலதனத்திற்கு சிறந்த பலனைத் திரும்ப பெறச் செய்வதாகும்.
 • இதன் தலைமையகம் ஆஸ்டிரியாவின் – வியன்னா நகரில் அமைந்துள்ளது.
 • இது 1960-ஆம் ஆண்டு நடந்த பாக்தாத் மாநாட்டில் ஈராக் , குவைத், சவுதி அரேபியா மற்றும் வெனிசூலா நாடுகளை உறுப்பினராகக் கொண்டு துவக்கப்பட்டது.
 • இந்நாடுகள் உலக எண்னெய் உற்பத்தியில் 44 சதவீதத்தையும் , மஆற்றும் உலகின் 81.5 சதவீத எண்ணெய் வளத்தையும் கொண்டுள்ளன.

சர்வதேச அணுசக்தி கழகம் (IAEA)

 • இது அணு சக்திக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஒருங்கிணைப்பாக அரசுகளுக்கு இடையிலான உலகம் தழுவிய அமைப்பாகும்.
 • இது 1957இல் ஐ.நா-வால் சர்வதேச தன்னாட்சி நிறுவனமாக உருவாக்கப்பட்டது. அணுசக்தி கழகமானது தனது நிலையை நிலைநிறுத்துவதற்கான தனி சர்வதேச ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளது.
 • அணுசக்தி கழகமானது ஐ.நா-வின் பொதுச்சபை மற்றும் பாதுகாப்புச் சபை ஆகிய இரண்டிற்கும் தனது அறிக்கையை அளிக்கிறது.
 • இது அணு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பாதுகாப்பானதாக மற்றும் அமைதியான வழியில் பயன்படுத்துவதற்கான பணியை மேற்கொள்கிறது.
 • இது மேலும் ஐ.நா-வின் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை அடைய தனது பங்களிப்பைச் செய்கிறது.
 • இதன் தலைமையகம் ஆஸ்டிரியாவின், வியன்னாவில் அமைந்துள்ளது. இதில் இந்தியா உறுப்பினராக உள்ளது.
 • சர்வதேச அணுசக்தி கழகமானது அணு ஆயுத பரவலை தடுத்து பாதுகாக்கிறது. மேலும், அணுசக்தி சார்ந்த பொருட்கள் மற்றும் தொழில்நுட்பத்தினை தவறாக பயன்படுத்துவதை முன்னறிந்து தடுக்கிறது.
 • 2009ஆம் ஆண்டு இந்திய அரசு மற்றும் அணுசக்தி கழகத்தின் இடையே “பாதுகாப்பான சிவில் அணுசக்தி வாய்ப்பிற்கான” ஒப்பந்தமானது கையெழுத்தானது. பிறகு 2014 இல் இந்தியா இதனை மாற்றி கூடுதல் நெறிமுறையாக (அமெரிக்க இந்திய அணு ஒப்பந்தத்தில் ஓர் பகுதியாக) ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தை அணுசக்தி கழகத்துடன் ஏற்படுத்திக்கொண்டது.
 • கூடுதல் நெறிமுறை என்பது சர்வதேச அணுசக்தி கழகத்தின் மிக முக்கிய கருவியாகும். பாதுகாப்பு ஒப்பந்த விதிமுறைகளின்படி, அந்த நாட்டின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் அனைத்து அணுடக்தி பொருட்களின் பயன்பாட்டை சோதித்தறிவதற்கான அதிகாரத்தை அணுசக்தி கழகத்திற்கு வழங்குகிறது.

வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டமைப்பு (BIMSTEC)

 • பிம்ஸ்டெக் (BIMSTEC) ஓர் மண்டக கூட்டமைப்பாகும். இதன் உறுப்பு நாடுகளான ஏழு நாடுகள் நிலவியல் ரீதியாக நெருங்கிய மற்றும் வங்காள விரிகுடா பகுதியில் அமைந்துள்ள பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாலம், ஸ்ரீலங்கா, மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகும்.
 • இது ஓர் துணை மண்டலக் கூட்டமைப்பாக 1997ஆம் ஆண்டு ஜூன் 6இல் பாங்காக் தீர்மானத்தின்படி தோற்றுவிக்கப்பட்டது.
 • இதன் செயலகம் டாக்காவில் உள்ளது.

தெற்கு – தெற்கு ஒத்துழைப்பு (SSC)

 • தெற்கு-தெற்கு ஒத்துழைப்பானது உலகின் தென்பகுதியில் உள்ள நாடுகள் தங்களிடையே வளர்ச்சிக்கான தொழில்நுட்பங்களை பரிமாறிக் கொள்வதாகும்.
 • 1955இல் நடந்த பாண்டுங் மாநாடானது தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு ஏற்படுவதற்கான காரணமாக அமைந்தது.

இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா கூட்டமைப்பு (IBSA)

 • இது ஓர் சர்வதேச முத்தரப்பு அமைப்பாக இந்தியா, பிரேசில், தென் அப்பிரிக்கா நாடுகள் இடையே சர்வதேச ஒருங்கிணைப்பு ஏற்படுத்துவதற்காக உருவானதாகும்.
 • இது முறையே இந்தியா, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர்களால் 2003 ஜூன் 6-இல் பிரேசிலியா தீர்மானத்தின்படி உருவாக்கப்பட்டது.
 • இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா கூட்டமைப்பு (IBSA) ஆனது வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த செயற்பொறியாக வறுமை மற்றும் பட்டினியை ஒழிப்பதற்கான நிதியைக் கொண்டு செயல்படுகிறது.
 • இது தனது நோக்கமாக நவீன முறையிலான மனித வளர்ச்சிக்கான திட்டங்களை வளரும் நாடுகளில் நடைமுறைப்படுத்தி வறுமை மற்றும் பட்டினிக்கு எதிராக போரிட்டு வருகிறது.
 • இதற்கான நிதியாக இதன் உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் வருடத்திற்கு ஒரு மில்லியன் டாலரை வழங்கி வருகின்றன.
 • இந்த நிதியை ஐ.நா-வில் அமைந்துள்ள தெற்கு-தெற்கு கூட்டமைப்பின் அலுவலகம் (UNOSSC) ஆனது நிர்வகித்து வருகிறது.

வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகளின் கூட்டமைப்பு (NATO – 1949)

 • வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகளின் கூட்டமைப்பானது 1949இல் அமெரிக்கா, கனடா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் சோவியத் யூனியனுக்கு எதிரான கூட்டு பாதுக்காப்பு அமைப்பாக ஏற்படுத்தப்பட்டது.

 • இது மேற்கு உலக நாடுகளுடன் போரில்லாத அமைதி காலத்தில் அமெரிக்கா ஏற்படுத்திக் கொண்ட முதல் ராணுவ ஒப்பந்தமாகும். ஒப்பந்தத்திற்கு பிறகு மேற்கு ஹம்பிரிஸின் புறம்பகுதி வழியாக அமெரிக்கா நுழைந்தது.
 • தாக்குதல் ஏதேனும் ஏற்பட்டால் அமெரிக்கா தானாகவே அதில் தலையிடும் என்ற உறுதியை அமெரிக்காவிடம் இருந்து மேற்கு ஐரோப்பிய நாடுகள் விரும்பின. இதன் விளைவாக 1949இல் வட அட்லாண்டிக் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா, பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ், ஐஸ்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் குறிப்பாக அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகளில் யார் ஒருவர் தாக்கப்பட்டாலும் அனைவரும் கலந்தாலோசித்து கூட்டாக தாக்குவது என்பதை ஏற்றுக்கொண்டன.
 • இந்த ராணுவக் கூட்டுப் பாதுகாப்பு ஏற்பாட்டின்படி நேட்டோவானது மேற்கு ஐரோப்பிய பகுதி முழுவதையும் அமெரிக்காவின் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தது. இருந்தபோதும் இது பனிப் போரை தோற்றுவித்தது. இந்த பிரச்சனை முடிந்தபோது பல முன்னாள் சோவியத் நாடுகளையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு நேட்டோ விரிவுபடுத்தப்பட்டது. தற்போது இதுவே உலகின் அமைதிக்கான மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பாக திகழ்கிறது.

ஐ.நா-வின் உலக தீவிரவாத தடுப்பு ஒருங்கிணைப்பு நடவடிக்கை

 • இது ஒரு முப்பத்தி ஆறு அமைப்புகள், இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் அமைப்பு மற்றும் உலக சுங்க அமைப்பு ஆகியவை ஐ.நா-வின் தலைமையின் கீழ் சர்வதேச தீவிரவாதத்தை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு உதவுவதற்காக ஏற்படுத்திக் கொண்ட கூட்டணி ஆகும்.

நோக்கம்

 • ஐ.நா-வின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க ஐ.நா-வின் உலக தீவிரவாத எதிர்ப்பு செயல் உத்திகள் மற்றும் இவை சார்ந்த பிற தீர்மானங்களின்படி உறுப்பு நாடுகள் இடையே ஒருங்கிணையும் திறனை வளர்த்துக் கொள்வதற்கான வழி முறைகளையும் நடைமுறைப்படுத்துகிறது.
 • பாதுகாப்புச் சபையின் முக்கிய அமைப்புகள் மற்றும் பிற ஐ.நா-வின் அமைப்புகள் இடையே விரிவான நெருங்கிய கூட்டினைவை ஏற்படுத்துகிறது.
 • ஐ.நா-வின் உலக தீவிரவாத தடுப்பு நடவடிக்கையின் ஒருங்கிணைப்பு குழுவானது தனது மேற்பார்வை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஐ.நா-வின் தீவிரவாத தடுப்பு துணை பொதுச் செயலாளரின் கீழ் மேற்கொண்டு வருகிறது.
 • இது 2005இல் உருவாக்கப்பட்ட தீவிரவாத எதிர்ப்பு படைக்கு மாற்றாக ஏற்படுத்தப்பட்டது.

சர்வதேச ஒப்பந்தங்கள்

முழுமையான அணு சோதனை தடை உடன்படிக்கை (CTBT)

அணு சோதனை தடைஉடன்படிக்கை என்றால் என்ன?

 • இது எல்லாவிதமான ராணுவ மற்றும் சிவில் சார்ந்த அணு வெடிப்பு பரிசோதனைகளையும் தடைசெய்யும் ஓர் பல்தேசிய உடன்படிக்கையாகும்.
 • இது ஜெனிவாவில் நடந்த ஆயுத குறைப்பு மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டு 1996இல் செப்டம்பர் 24ஆம் தேதி ஐ.நா-வின் பொதுச்சபையில் கையெழுத்திடப்பட்டது.
 • இவ்வுடன்படிக்கையானது 183 நாடுகளின் கையெழுத்து மற்றும் 163 ஒப்புதல்களை மிகப்பெரும் ஆதரவுடன் பெற்ற ஆயுதக் குறைப்பிற்கான உடன்படிக்கையாகும்.
 • இது அணு தொழில்நுட்ப ஆற்றலைக் கொண்ட எட்டு நாடுகளான சீனா, எகிப்து, இந்தியா, ஈரான் , இஸ்ரேல், வட கொரியா, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவின் ஒப்புதல் பெற்ற பின்பே நடைமுறைக்கு வந்தது.
 • இந்த உடன்படிக்கையானது முழுமையான அணு ஆயுத சோதனை தடை (CTBTO) அமைப்பை ஏற்படுத்தியது. ஆஸ்திரியாவின் வியன்னாவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இவ்வமைப்பு இந்த உடன்படிக்கையின் நிபந்தனைகளை உறுப்பு நாடுகள் பின்பற்றுவதை உறுதி செய்கிறது.

CTBT இல் இந்தியாவின் நிலை

 • இவ்வுடன்படிக்கைக்கு 1996இல் இந்தியா ஆதரவளிக்கவில்லை. பின்வரும் காரணங்களால், இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்காமலே உள்ளது. இந்த உடன்படிக்கை ஆயுதக்குறைப்பை முழுமையாக தடுக்கும் நோக்கில் இல்லை மற்றும் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர்களுக்கு ஆதரவாக அவர்களின் ஆயுதக்குவிப்பை பற்றி கண்டு கொள்ளாமல் இருப்பதாகும்.
 • மற்றோர் பிரச்சனையான கட்டாயமாக உள்நுழைதல் (EIF) என்பதை இந்தியா உரிமை மீறலாக கருதுவதால் இந்த சர்வதேச உடன்படிக்கையில் இருந்து தனது பங்கேற்பை தானாகவே விலகிக்கொண்டது. நாடுகளின் ஒப்புதலைப் பெற்று இந்த உடன்படிக்கை உருவாக்கப்பட்ட போதே அதன் ஒரு பகுதியாக சர்வதேச கண்காணிப்பு முறையின் (IMS) முக்கிய விதியாக கட்டாயமாக உள்நுழைதல் (EIF) ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் காரணமாகவே இந்தியா சர்வதேச கண்காணிப்பு முறையில் (IMS) இருந்து தனது பங்கேற்பை திரும்பப் பெற்றுக் கொண்டது.

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் (NPT) 1968

 • இதன் நோக்கமானது அணு ஆயுதம் மற்றும் ஆயுத தொழில்நுட்பம் பரவாமல் தடுப்பதாகும். மேலும் அணுசக்தியை அமைதியான வழியில் பயன்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது என்பதுடன் தனது எதிர்கால இலக்காக அணு ஆயுத குறைப்பு மற்றும் முழுமையான பொது ஆயுத குறைப்பை கொண்டுள்ளது.
 • இந்த ஒப்பந்தத்தில் இந்தியா, இஸ்ரேல், வடகொரியா, பாகிஸ்தான் மற்றும் தெற்கு சூடான் பங்கேற்கவில்லை.

சர்வதேச அரசு-சாரா நிறுவனங்கள்

 • சர்வதேச அரசு-சாரா நிறுவனங்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருவது உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இவற்றின் செயல்பாட்டு எல்லை, அளவு, உறுப்பினர் எண்ணிக்கை மற்றும் அமைந்துள்ள இடத்தை பொருத்து பெரும் அளவில் வேறுபடுகின்றன.
 • எடுத்துக்காட்டாக சர்வதேச பொது மன்னிப்புச் சபை, மனித உரிமை கண்காணிப்பகம், மருத்துவ சான்ஸ் பிராண்டியர்ஸ் (MSF : ஆனது எல்லை அற்ற மருத்துவர்களாக அறியப்படுகிறது) போன்றவற்றை கூறலாம்.
 • சர்வதேச அரசு-சாரா அமைப்புகள் முக்கியமாகக் கொள்கை உருவாக்கம் மற்றும் அதன் வழிமுறைகளைத் தீர்மானிப்பதில் பெரும் அளவில் பணியாற்றுகின்றன. சர்வதேச அரசு-சாரா அமைப்புகள் உள்நாட்டுக் கொள்கை வடிவமைப்பாளர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஆதரவை திரட்டுவது மற்றும் தகவல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது போன்ற பணியில் ஈடுபடுகின்றன.
 • மேலும் சர்வதேச நிகழ்வுகளில் சர்வதேச அரசு-சாரா நிறுவனங்கள் அரசுகளுக்கு இடையிலான அமைப்புகள் மற்றும் நன்கொடையாளர்களிடையே தங்கள் பணியின் மூலம் குறிப்பிட்ட கொள்கைக்கான பெரும் அளவிளான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
 • சீப காலமாக சர்வதேச அரசு-சாரா நிறுவனங்களின் தாக்கமானது வர்த்தக மற்றும் முதலீட்டு நடைமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கொள்கை முடிவுகள் மீதான மனிதநேய குறுக்கீடு, பொருளாதார தடை மற்றும் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்கிறது.
 • 1945இல் ஐ.நா-வின் சாசனம் ஏற்றுக்கொள்ளப்படும் வரை அரசு –சாரா நிறுவனங்கள் என்ற பதமே வழக்கத்தில் இல்லை. 1910ஆம் ஆண்டு, 132 அமைப்புகள் ஓர் குழுவாக இணைந்து சர்வதேச அமைப்புகளுக்கான சங்கத்தை துவக்கினர்.
 • 1929இல் சில அமைப்புகள் தொடர்ச்சியாக சர்வதேச சங்கக் கூட்டங்களில் கலந்து கொண்டன. மேலும் தனியார் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச அமைப்புகள் இணைந்து ஜெனிவாவில் ஓர் கூட்டமைப்பை ஏற்படுத்தினர். ஐ.நா-வின் சாசனமானது சன் பிரான்ஸ்கோ மாநாட்டில் இறுதி செய்யப்பட்டபிறகு சர்வதேச அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகிய இரண்டும் முறையே அங்கீகரிக்கப்பட்டு பொருளாதார மற்றும் சமூக குழுவுடன் (ECOSOC) உறவுகளை மேற்கொள்வதற்கான விதிமுறைகளை இயற்றின.
 • இருந்தபோதும் இரண்டு அமைப்புகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் இரண்டு சர்வதேச அமைப்புகளும் ஒரே தகுதியுடன் குறிப்பிடப்படுவதை விரும்பவில்லை. உறுப்பு 57 ஆனது, ஓர் புதிய வரையறையாக சிறப்பு முகவாண்மைகள் என்ற வார்த்தையை அரசுக்களுக்கு இடையிலான அமைப்புகளை குறிப்பிடப் பயன்படுத்தியது. உறுப்பு 71 ஆனது , இரண்டாவது புதிய வரையறையாக அரசு-சாரா நிறுவனங்கள் என்ற வார்த்தை அறிமுகப்படுத்தியது.
 • ஐ.நா-வானது , உலக அரசுக்கான அமைப்பாக கருதப்படும் வேலையில் அரசு-சாரா நிறுவனங்கள் உலகில் உள்ள அனைத்து நாட்டு மக்களின் பிரதிநிதியாக கருதப்படுகின்றன.

71-வது உறுப்பு

பொருளாதாரம் மற்றும் சமூக குழுவானது அரசு-சாரா நிறுவனங்கள் தாங்கள் தொடர்புடைய பணிகளில் ஆற்றல்களை வளர்த்து கொள்வதற்கான தகுந்த ஏற்பாடுகளை உருவாக்கி தருகிறது. இந்த ஏற்பாடுகள் சர்வதேச அமைப்புகள் மற்றும் அதன் தேவைக்கானவை, தேசிய அமைப்புகளுடன் கலந்தாலோசித்த பிறகே இவற்றை ஐ.நா. உறுப்பினராக்குகிறது.

சர்வதேச பொது மன்னிப்புச் சபை

 • சர்வதேச பொது மன்னிப்புச் சபை ஆனது மிகப் பெரிய சர்வதேச அரசு-சாரா நிறுவனங்களில் ஒன்று. இதன் பணியானது உலகம் தழுவிய அளவில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதாகும். இது தனது பணிக்காக சர்வதேச மனித உரிமைக்கான பிரகடனம் (UDHR) மற்றும் பிற சர்வதேச மனித உரிமைகளுக்கானக் கருவிகளைக் கொண்டு எல்லா விதமான மனித உரிமைகளையும் மேம்படுத்துவதற்கான உலக அளவிலான பிரச்சார இயக்கத்தினை மேற்கொள்கிறது.
 • இது உலகின் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் 2.2 மில்லியன் மக்களை தனது உறுப்பினராகவும், கையெழுத்திட்டவர்களாகவும் மற்றும் ஆதரவாளராகவும் கொண்டிருக்கிறது.
 • சர்வதேச பொது மன்னிப்புச் சபை ஆனது 1961இல் லண்டனில் அதன் ஸ்தாபனரான பீட்டர் பென்சன் ஆல் தோற்றுவிக்கப்பட்டது. 1977ஆம் ஆண்டு சர்வதேச பொது மன்னிப்புச் சபை சித்திரவதைகளுக்கு எதிரான தனது பிரச்சாரத்திற்காக நோபல் பரிசை பெற்றது.

சர்வதேச பொது மன்னிப்புச் சபையின் முக்கிய குறிக்கோள்கள் சிலவற்றை கீழே காண்போம்.

 • பெண்களைப் பாதுகாத்தல்.
 • குழந்தைகளைப் பாதுகாத்தல்.
 • சட்டத்திற்கு புறம்பாக சித்திரவதைகள் மற்றும் படுகொலைகளை முடிவுக்கு கொண்டு வருதல்.
 • கைதிகளின் கருத்துரிமையை பாதுகாத்தல் (உணர்வுகள், கருத்துகளுக்கான சுதந்திரம் மற்றும் கருத்துரிமைக்காக கைது செய்யப்பட்டவர்களை விடுவித்தல்).
 • அகதிகளை பாதுகாத்தல்.
 • உடல் மற்றும் உளவியல் ரீதியான மனித உரிமை மீறல்களிலிருந்து விடுவித்து பாதுகாத்தல்.
 • கைதிகளுக்கான, மரண தண்டனை, சித்திரவதைகள் மற்றும் கொடூர தண்டனை முறைகளை ஒழித்தல்.
 • அரசியல் கைதிகளுக்கான வெளிப்படையான விரைவான விசாரணை.
 • எல்லாவிதமான பாகுபாடுகளையும் முடிவுக்கு கொண்டு வருவது குறிப்பாக பால், இனம், மதம், மொழி, அரசியல் கருத்துகள், தேசியம் (அல்லது) சமூக தோற்றம் மற்றும் பிற.
 • உலக ஆயுத வியாபாரத்தை ஒழுங்குபடுத்துவது.

மனித உரிமை கண்காணிப்பகம்

 • 1978இல் தோற்றுவிக்கப்பட்ட மனித உரிமை கண்காணிப்பகமானது துவக்கத்தில் ஐரோப்பா மற்றும் ஆசிய பகுதிகளின் “ஹெல்சிங்கி வாட்ச்” அக் அறியப்பட்டது. இது ஓர் சர்வதேச லாபநோக்கம் இல்லாத அரசு-சாரா நிறுவனமாகும்.
 • இதன் ஊழியர்களாக மனித உரிமையில் மிகவும் திறமை பெற்றவர்கள் பல்வேறு நாடுகளில் புகழ்பெற்ற அறிஞர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் பல்வேறுபட்ட பின்புலன்களில் தேசங்கடந்த செயல்பாட்டாளர்களைக் கொண்டுள்ளது.
 • மனித உரிமை கண்காணிப்பகத்தின் மிக துல்லியமான ஆய்வுகள், பாரபட்சமற்ற அறிக்கைகள், ஊடகங்களுக்கும் மேலும் உள்ளூர் மனித உரிமை குழுக்களுக்கும் மிகவும் பயன் உள்ளதாக அறியப்படுகிறது.
 • உலகின் 90-க்கும் மேற்பட்ட நாடுகளின் மனித உரிமை நடவடிக்கைகளைக் குறித்த 100-க்கும் மேற்பட்ட அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. மனித உரிமை கண்காணிப்பகம் உலகளவில் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும்.
 • நாங்கள் மனித உரிமை மீறல்கள் குறித்த மிகவும் பொறுப்புமிக்க ஆய்வினை மேற்கொண்டு அதற்கான காரணங்களை பரந்த அளவில் வெளிப்படுத்துகிறோம். இதன் நோக்கம் உரிமைகளை மதித்து நீதியை பாதுகாப்பதற்கான அதிகாரப்பூர்வ அழுத்தத்தைக் கொடுப்பதே ஆகும்.”
 • மனித உரிமை கண்காணிப்பகம் சுதந்திரமான ஒரு சர்வதேச அமைப்பாகும். இதன் பணியானது ஒரு செயலாக்கமிக்க இயக்கமாக தனிமனித சுயமரியாதையைப் பாதுகாத்து அனைவருக்குமான மனித உரிமைகளை மேம்படுத்துவதாகும்.
 • இதன் மதிப்புமிக்க பணி மனித உரிமைக்கான சர்வதேச நெறிமுகளை மற்றும் மனிதநேய சட்டங்களை வழிகாட்டியாகக் கொண்டு தனிமனித சுயமரியாதை மதிக்கச் செய்வதாகும். மனித உரிமை கண்காணிப்பகம் தனது சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையில் அரசின் நேரடியான (அ) மறைமுகமான உதவிகளையும் (அ) எந்த தனிப்பட்ட நிதிநிறுவனங்களின் ஆதரவையும் பெறுவதற்காக தனது நோக்கம் மற்றும் சுதந்திரமான செயல்பாடுகளை பாதிக்கும் வகையில் சமரசம் செய்து கொள்வது இல்லை. மேலும் , இது எந்த அரசியல் சார்பும் இல்லாமல் மற்றும் எந்த பாகுபாடுமின்றி ஆயுத மோதல்கள் நடைபெறும் இடங்களில் நடுநிலையோடு பணியாற்றுகிறது.
 • மனித உரிமை கண்காணிப்பகம் மிகவும் உயர்ந்த நுட்பமான மற்றும் வெளிப்படையான தன்மையை கடைப்பிடிக்கிறது. குறிப்பாக, பல்நோக்கு பார்வையை வளர்க்கும் விதமாக பிரச்சனைகளை மிகவும் ஆழமாகப் பகுத்து ஆராய்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புமிக்க சாட்சியாளராக கண்காணிப்பகம் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்வது ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மேலும், மனித உரிமை கண்காணிப்பகம் தற்போது குறிப்பாக ஆயுத வியாபாரம் மற்றும் மனித உரிமைகள், குழந்தைகள் உரிமைகள், மாற்றுத்திறனாளி உரிமைகள், சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமைகள் , சுகாதாரம் மற்றும் மனித உரிமைகள், சர்வதேச நீதி, ஓரின சேர்க்கையாளர்கள் , தன்பால் இனத்தவர், மாற்றுப்பால் இனத்தவர் உரிமைகள், அகதிகள், தீவிரவாதம் மற்றும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள், பெண்கள் உரிமைகள் மற்றும் அவசர கால பிரச்சனைகள் என பல்வேறு கருத்துகள் சார்ந்த துறைகள் அல்லது திட்டங்களை கொண்டு செயல்படுகிறது.

கிரீன்பீஸ் அமைப்பு

 • இது ஓர் அரசு-சாரா சுற்றுச்சூழல் நிறுவனமாகும். இதன் தலைமையகம் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ளது. மேலும் 36 நாடுகளில் தனது அலுவலகங்களை கொண்டுள்ளது.
 • சூழலியல் செயல்பாட்டாளர்கள் கனடாவை சார்ந்த இர்விங் ஸ்டோவே மற்றும் அமெரிக்காவின் டோரதி ஸ்டோவே என்ற இருவரால் 1971ஆம் ஆண்டு இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
 • பல்வகை உயிரிகளும், தாவரங்களும் செழித்து வளருமாறு அமைந்துள்ள பூமியின் திறனை காப்பதே இதன் நோக்கமாக இந்த அமைப்பு அறிவித்துள்ளது.
 • உலகம் முழுவதும் , வன அழிப்பு, பருவநிலை மாற்றம், அளவுக்கதிகமாக கடல் வளங்களை பயன்படுத்துதல் மற்ற்ய்ம் அணு ஆயுதம் போன்றவற்றிற்கு எதிராக இந்த அமைப்பு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது.
 • இதன் குறிக்கோளை அடைவதற்கு, களத்தில் நேரடி செயல்பாடு, ஆராய்ச்சி மற்றும் பரப்புரை என பல வழிமுறைகளை கொண்டுள்ளது. இந்த அமைப்பு எந்த அரசாகத்திடமிருந்தும், வர்த்தக நிறுவனங்களிடமிருந்தும் அரசியல் கட்சிகளிடமிருந்தும் நிதியை பெறுவதில்லை.
 • மாறாக முப்பது லட்சத்துக்கும் மேலாக உலகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்களிடமிருந்தும் அறக்கட்டளைகளிடமிருந்தும் இதற்கான நிதியை பெறுகிறது. ஐ.நா-வின் பொருளாதார மற்றும் சமூக அமைப்பிற்கு ஆலோசனை அளிக்கும் குழுவிலும், சர்வதேச அரசு-சாரா நிறுவனங்களின் அமைப்பின் உறுப்பினராகவும், இந்த கிரீன்பீஸ் அமைப்பு உள்ளது. கிரீன்பீஸ் அமைப்பானது அதன் நேரடி கள செயல்பாட்டிற்காக பாராட்டப்பட்டுள்ளது. உலகில் அனைவரும் அறிந்த ஒரு சுற்றுச்சூழல் அமைப்பாக இது விளங்குகிறது.

மனித உரிமை கண்காணிப்பகத்தின் சாதனைகள்

மனித உரிமை இயக்கங்களுக்கு பங்களித்தல் மற்றும் கொடுமைகளை முடிவுக்கு கொண்டு வருதல் போன்றவற்றில் சிறப்பான செயல்பாட்டிற்காக மனித உரிமை கண்காணிப்பகத்திற்கு ஐ.நா விருது வழங்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் இந்த விருது, சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் 60ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின்போது 2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் மனித உரிமை கண்காணிப்பகத்திற்கு வழங்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அவை (UNHRC)

 • இது உலக அளவில் மனித உரிமையை பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் 2006ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு சிறப்பு நிபுணத்துவம் கொண்ட நிறுவனமாகும்.
 • இந்த அவை 47 உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கிறது, உறுப்பினர்கள் பொது அவையால் ஆண்டுக்கு ஒருமுறை நேரடியாக, ரகசிய வாக்கெடுப்பு முறைமூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர், பதவிக்காலம் ஓர் ஆண்டாகும்.
 • ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவைக்கு இந்தியாவை, அதிக வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் பொது அவை தேர்ந்தெடுத்து உறுப்பினராக்கியது.
 • இதன் உறுப்பினர்கள் அனைவரும் புவியியல் ரீதியான சமத்துவ-சுழற்சி அடிப்படையில் ஐக்கிய நாடுகளின் “மண்டலக் குழுக்கள் முறையில்” தேர்வு செய்யப்படுவர்.
 • உறுப்பினர் நாடுகள், இரண்டு முறைக்கு மேல் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் பதவியில் இருக்க முடியாது.

முடிவுரை

சர்வதேச அமைப்புகள் சர்வதேச வாழ்க்கைக்கான பொது கருத்தியலாக வளர்ச்சியடைந்துள்ளன. சர்வதேச அமைப்புகளின் பெருக்கம் மற்றும் நாடுகளின் பிரதிநிதிகளிடையே ஒப்பந்தங்கள் ஏற்படுவது என்பது வழக்கமான ஒன்றாக சர்வதேச அரசியலில் காணப்படுகிறது. இது மேலும் மேலும் அமைப்பியல் ஆக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக சர்வதேச அமைப்புகளின் கொடையாக கடந்த பத்தாண்டுகளாக கோட்பாட்டு ரீதியாக ஏன் சர்வதேச அமைப்புகள் நீடிக்கின்றன என்ற புரிதலையும், அதன் செயல்பாடுகளையும் , உலக அரசியலைத் தொடர்ந்து சுத்திகரித்த வண்ணம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன என்பதை அனுபவமுறையினை கொண்டு மேலும் வசதியாக பகுத்தாய்வு செய்கிறது. இதுமட்டுமின்றி பிற புதிய வடிவிலான பகுத்தாய்வின் துணைக் கொண்டு சர்வதேச அமைப்புகள் குறித்து படிப்பதற்கான புதிய ஆராய்ச்சிக்கான வடிவங்களை உருவாக்குகின்றது. வரக்கூடிய ஆண்டுகளில் மாணக்கர்களுக்கு மாறிவரும் சர்வதேச அமைப்புகளின் மரபுகள் மற்றும் நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு தேவைப்படுகிறது. மேலும் சர்வதேச அமைப்புகளின் நடைமுறைகள் மற்றும் அதன் ஆற்றல்கள் மிகவும் பரந்த அளவில் மாறிவரும் உலகின் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *