தேசிய வருவாய் Notes 12th Economics Lesson 2 Notes in Tamil

12th Economics Lesson 2 Notes in Tamil

2. தேசிய வருவாய்

“பெரிய பிரச்சனைகளான வேலைவாய்ப்பு இன்மை, பண வீக்கம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை சமாளிப்பதற்காக தயாரிக்கப்பட்ட தவிர்க்க முடியாத தயாரிப்பே தேசிய வருவாய் எனும் கருத்துரு ஆகும்”.

 • சாமுவேல்சன்

அறிமுகம்

ஒரு நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை அளவிடும் ஒரு முழுமையான அளவு கோலை தேசிய வருவாய் தருகிறது. ஒரு நாட்டின் வாங்கும் சக்தியை குறிப்பிடும் காரணியாக இருக்கிறது. உண்மை தேசிய வருவாயின் வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மாறும் விகிதத்தைப் பொருத்தே பொருளாதாரத்தின் வளர்ச்சி அளவிடப்படுகிறது. பொருளாதாரத் திட்டமிடுதலுக்கான ஒரு கருவியாக இது திகழ்கிறது. மேலும் இது ஒரு மிக முக்கிய பேரினப் பொருளியல் மாறியாகவும் இருக்கிறது. எனவே தேசிய வருவாயின் பொருள், பல்வேறு கருத்துருக்கள், அளவிடும் முறைகள் மற்றும் பயன்களை தெளிவாக புரிந்து கொள்ளுதல் அவசியம் ஆகும்.

நோபல் பரிசு பெற்றுள்ள சைமன் குஷ்நெட்ஸ் (Simon Kuznets) இந்தக் கருத்துருவை முதலில் அறிமுகப்படுத்தினார்.

தேசிய வருவாயின் பொருள்

பொதுவாகக் கூறப்போனால், தேசிய வருவாய் என்பது ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த பண்டங்கள் மற்றும் பணிகளின் பண மதிப்பாகும்.

இலக்கணம்

“ஒரு நாட்டில் உள்ள உழைப்பும் முதலும் சேர்ந்து அங்குள்ள இயற்கை வளங்களைப் பயன்படுத்தி பண்டங்கள் மற்றும் பணிகளைப் பயன்படுத்துகின்றன. இதுவே அந்நாட்டின் நிகர ஆண்டு வருமானம், தேசிய வருவாய் அல்லது தேசிய ஈவுத்தொகை ஆகும்”.

 • ஆல்ஃபிரட் மார்ஷல் (Alfred Marshall)

ஒரு நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)யில் வரையறுக்கப்பட்ட நிலையில் தேசிய வருமானம் அளவிடப்படுவதின் மூலம் அந்நாட்டின் நலத்தை அறிய முடியும்… அதிக வளர்ச்சிக்கான இலக்குகள் எதற்காக எப்படி என்பதை வரையறுக்க வேண்டும்.

“ஓர் ஆண்டில் பொருளாதாரத்தின் உற்பத்தி அமைப்பில் இருந்து பண்டங்களும் பணிகளும் உற்பத்தி செய்யப்பட்டு நிகர வெளியீடாக அவை இறுதி நிலை நுகர்வோரின் கைகளுக்கு செல்கின்றன அல்லது அந்த நாட்டில் இருக்கக்கூடிய மூலதனப் பொருட்களின் இருப்போடு நிகர கூடுதலாகச் சேர்கிறது”

 • சைமன் குஸ்நட்ஸ்

தேசிய வருவாயின் அடிப்படைக் கருத்துருக்கள்

தேசிய வருவாயை அளவிடுவதற்கு கீழ்கண்ட கருத்துருக்கள் பயன்படுகின்றன.

 1. GDP
 2. GNP
 3. NNP
 4. காரணிச் செலவில் நிகர தேசிய உற்பத்தி (NNO at factor cost)
 5. தனிநபர் வருமானம் (Personal Income)
 6. செலவழிக்கக் கூடிய வருமானம் (Disposable Income)
 7. தலா வருமானம் (Per capita Income)
 8. உண்மை வருமானம் (Real Income)
 9. GDP குறைப்பான் (GDP Deflator)

மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product : GDP)

ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதிநிலைப் பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த சந்தை மதிப்பே மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஆகும். இதற்கு சந்தையில் நிலவும் விலை பயன்படுத்தப்பட்டால் இது சந்தைவிலையின் GDP என அழைக்கப்படுகிறது.

செலவு முறையைப் பயன்படுத்தி கணக்கிடப்படும்

GDP = C + I + G + (X – M).

இதில் C – நுகர்வு பண்டங்கள் ; I – முதலீட்டு பண்டங்கள், G – அரசின் வாங்குதல்கள் ; (X – M) = நிகர ஏற்றுமதி (இது நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ இருக்கலாம்.

அ) நிகர உள்நாட்டு உற்பத்தி (Net Domestic Product : NDP)

நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP) என்பது ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் ஏற்படும் தேய்மானத்தை கழித்த பிறகு கிடைக்கும் நிகர உற்பத்தி ஆகும். ஒரு நாட்டில் உள்ள சில முதலீட்டுக் கருவிகள் உற்பத்தி செய்யும் போது தேய்மானம் அடையலாம், பழுதாகிப் போகலாம் அல்லது பயனற்று போகலாம். தேய்மானத்தின் மதிப்பை GDPயிலிருந்து கழித்துவிட்டால் கிடைப்பது NDP ஆகும்.

நிகர உள்நாட்டு உற்பத்தி = GDP – தேய்மானம்.

மொத்த தேசிய உற்பத்தி (Gross National Product) (GNP)

 • மொத்த தேசிய உற்பத்தி (GNP) என்பது ஒரு நாட்டில் ஓர் ஆண்ட்ல் உற்பத்தி செய்யப்பட்ட முடிவடைந்த பொருட்கள் மற்றும் பணிகளின் அங்காடி மதிப்பின் மொத்த கணக்கிடுதல் ஆகும். இதில் நிகர வெளிநாட்டு வருமானமும் (நிகர ஏற்றுமதி) சேர்க்கப்படும். GNP-ல் கீழ்க்கண்ட ஐந்து வகையான முடிவடைந்த பொருட்கள் மற்றும் பணிகள் உள்ளன.
 1. ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட முடிவடைந்த பண்டங்கள் மற்றும் பணிகளின் மதிப்பு. இவை மக்களின் நுகர்வுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக உற்பத்து செய்யப்பட்டவை. இதனை நுகர்வு (Consumption : C) என்கிறோம்.
 2. மொத்த உள்நாட்டு மூலதனப் பொருட்களின் தனியார் முதலீடுகளில் இதில் மூலதனத் திரட்சி, வீடுகட்டுதல், ஊற்பத்திக்காக வைப்பில் உள்ள முடிந்த மற்றும் முடியாத பொருள்கள் ஆகியவை அடங்கும். இதனை முதலீடு (I) எனக் குறிக்கிறோம்.
 3. அரசால் வாங்கப்பட்ட அல்லது உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகள் G எனக் குறிப்பிடப்படுகிறது.
 4. உள்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு செய்யப்பட்ட ஏற்றுமதியிலிருந்து (X) வெளிநாட்டிலிருந்து வருவிக்கப்பட்ட இறக்குமதியை (M) கழித்தால் கிடைக்கும் (X –M) நிகர ஏற்றுமதி. இது நேர்மறையாகவோ (+) எதிர்மறையாகவோ (-) இருக்கலாம்.
 5. நிகர வருமானம் என்பது வெளிநாடுகளில் இருந்து பெற்ற காரணிகளின் வருவாய்க்கும் (கூலி, வட்டி, இலாபம்) நம் நாட்டில் குடிருக்கும் வெளிநாட்டுகாரர்களுக்கு கொடுக்கப்பட்ட காரணிகளின் வருவாய்க்கும் இடையே உள்ள வேறுபாடு (R – P) ஆகும், சந்தை விலையில் GNP என்பது C + I + G + (X – M) + (R – P)

சந்தை விலையில் GNP = சந்தை விலையில் GDP + வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் நிகர வருமானம்.

நிகர தேசிய உற்பத்தி (NNP at Market Prices)

நிகர தேசிய உற்பத்தி என்பது ஒரு ஆண்டின், பொருளாதாரத்தின் நிகர உற்பத்தியின் மதிப்பு ஆகும். GNPயிலிருந்து தேய்மானத்தின் மதிப்பு, முதலீட்டு சொத்தின் மாற்று கழிவு ஆகியவற்றை கழித்த பின் கிடைப்பது நிகர தேசிய உற்பத்தி ஆகும்.

NNP = GNP – தேய்மான கழிவு

தேய்மானத்தை மூலதன நுகர்வு கழிவு (Capital Consumption Allowance) என்றும் கூறலாம்.

காரணி செலவில் நிகர தேசிய உற்பத்தி (NNP at Factor Cost)

NNP என்பது உற்பத்தியின் சந்தை மதிப்பு ஆகும். காரணி செலவில் NNP என்பது உற்பத்தி காரணிகளுக்கு வழங்கப்பட்ட மொத்த வருமான செலுத்துதல் ஆகும். காரணி செலவில் நிகர தேசிய வருவாயௌ பெறுவதற்கு, சந்தை விலையில் NNPயின் பண மதிப்பிலிருந்து மறைமுக வரியை கழிக்க வேண்டும். மேலும் மானியங்களை கூட்ட வேண்டும்.

காரணிசெலவில் NNP = சந்தை விலையில் NNP – மறைமுகவரி + மானியம்

தனிநபர் வருமானம் (Personal Income):

 • தனிநபர் வருமானம் என்பது ஒரு ஆண்டில் ஒரு நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு தனி நபருக்கும் பல வழிகளில் இருந்து கிடைக்க பெறும் மொத்த வருமானம் ஆகும். அவை வட்டியாகவோ, வாரமாகவோ, கூலியாகவோ இருக்கலாம். அவை அனைத்தையும் ஒவ்வொரு தனி நபருக்கும் கூட்டினால் அது தனிநபர் வருமானம் ஆகும்.
 • தனிநபர் வருமானம் தேசிய வருமானத்திற்கு சமமாக இருக்காது. ஏனெனில் மாற்று செலுத்துதல்கள் (Transfer Payment) தனிநபர் வருமானத்தோடு சேர்க்கப்படுகிறது.
 • அரசிடம் இருந்து கிடைத்த ஓய்வூதியம் (Pension) தனிநபர் வரிமானத்துடன் சேர்க்கப்படுகிறது. எனவே, தேசிய வருவாயிலிருந்து பங்களிக்கப்படாத பார்பரேட் இலாபம் மற்றும் சமூக பாதுகாப்புத்திட்டங்களில் உழைப்பாளர்களி பங்களிப்பு ஆகியவற்றை கழித்துவிட்டு, மாற்று செலுத்துதல்களை கூட்டு தனிநபர் வருமானம் கணக்கிடப்படுகிறது.

தனி நபர் வருமானம் = தேசிய வருமானம் – (சமூக பாதுகாப்பு பங்களிப்பு மற்றும் பகிரப்படாத கார்பரேட் இலாபம்) + மாற்று செலுத்துதல்கள்

செலவிடக்கூடிய வருமானம் (Disposable Income):

 • செலவிடக்கூடிய வருமானம் என்பது தனிநபர் செலவிடக்கூடிய வருமானத்தை குறிக்கிறது. தனிநபர் வருமானத்திலிருந்து நேர்முகவரிகளைக் (Eg. Income Tax) கழித்தால் கிடைப்பது செலவிடக்கூடிய வருமானம். இந்த வருமானம் தான் தனிநபர்கள் நுகர்வுக்காக செலவிடக்கூடிய பண அளவு ஆகும்.

செலவிடக்கூடிய வருமானம் = தனிநபர் வருமானம் – நேர்முகவரிகள்

தலா வருமானம் (Per Capita Income):

தலா வருமானம் என்பது ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் வசிக்கும் ஒரு நபரின் சராசரி ஆண்டு வருமானம் ஆகும். தேசிய வருமானத்தை மக்கள் தொகையால் வகுக்கக்கிடைப்பது தலா வருமானம்.

உண்மை வருமானம் (Real Income):

பண வருவாய் என்பது தேசிய வருமானத்தை ஒரு ஆண்டில் உள்ள பொது விலை அளவுகளின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. மாறாக தேசிய வருவாய் என்பது ஒரு ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட முடிவுற்ற பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பை பண அளவுகளில் குறிப்பிடப்படுகிறது. உண்மை வருவாயை கீழ்க்கண்ட முறையில் கணக்கிடலாம்.

நிலையான விலையில் உண்மை வருமானம் = நடப்பு விலையில் தேசிய வருவாய்

= நடப்பு ஆண்டு விலைக் குறியீடு

= அடிப்படை ஆண்டின் விலைக்குறியீடு

GDP குறைப்பான் (GDP Deflator)

GDP குறைப்பான் என்பது GDPயில் குறிப்பிட்டுள்ள பண்டங்கள் மற்றும் பணிகளின் விலை மாற்ற குறியீட்டெண் ஆகும். கொடுக்கப்பட்ட ஆண்டில் பணமதிப்பு அடிப்படையில் கணக்கிடப்பட்ட GDPயை உண்மை GDPயால் வகுத்து, 100ஆல் பெருக்கினால், GDP குறைப்பானை கணக்கிடலாம்.

GDP குறைப்பான் =

தேசிய வருவாயை அளவிடும் முறைகள்

ஓர் ஆண்டில் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து பண்டங்கள் மற்றும் பணிகளின் மதிப்பை கணக்கிட்டு, அதனை பணமதிப்பில் மதிப்பிடப்படவேண்டும். அதாவது நமது சுய நுகர்வுக்காவோ அல்லது சேமிப்பிற்காகவோ பண்டங்கள் உற்பத்தி செய்யப்பட்டாலும் அதன் பண மதிப்பையும் தேசிய வருவாய் கணக்கிடலில் சேர்க்கவேண்டும்.

தேசிய வருவாயை மூன்று முறைகளை பயன்படுத்தி அளவிடலாம். அவை : உற்பத்தி முறை, வருவாய் முறை மற்றும் செலவு முறை இவற்றை:

 1. உற்பத்தி அல்லது மதிப்புக் கூடுதல் (Value added) முறை
 2. வருமானம் அல்லது காரணிகளின் ஊதிய முறை மற்றும்
 3. செலவு முறை

இம்மூன்று முறைகளை சரியாக பயன்படுத்தி கணக்கிட்டால் உற்பத்தி, வருமானம், செலவு இம்மூன்றின் மதிப்பும் சமமாக இருக்கும்.

உற்பத்தி = வருமானம் = செலவு

ஏனென்றால் இம்மூன்று முறைகளும் இயல்பாகவே ஒரு சுழற்சியாக இருக்கும். நுகர்வை பூர்த்தி செய்ய உற்பத்தி தொடங்கப்படுகிறது. உற்பத்தி செய்ய உற்பத்தி காரணிகளை வேலைக்கு அமர்த்தி உற்பத்தி முடிந்த பிறகு வருமானம் பெருகும். பிறகு உற்பத்தி காரணிகளுக்கு ஊதியத்தை அளித்து அதன் மூலம் நுகர்வு செலவு செய்யப்படும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி – செலவுகள் , காரணி வருவாய், உற்பத்தி கூட்டுமுறை

GDP (செலவு கூட்டுமுறை) GDP (காரணி வருவாய் முறை) GDP (உற்பத்தி முறை)
 • நுகர்ச்சி
 • அரசு செலவினங்கள்
 • முதலீட்டுச் செலவினங்கள்
 • இருப்புகளின் மதிப்பு மாறல்
 • ஏற்றுமதி
 • -இறக்குமதி
 • = மொத்த உள்நாட்டு உற்பத்தி
 • மக்களின் சம்பளம், கூலி, சுய வேலை செய்வோருக்கான சம்பளம்
 • தனியார் துறை வியாபாரம் மூலம் கிடைக்கும் இலாபம்
 • நில உரிமையாளர்கள் பெறும் வாடகை
 • பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையிலும் கூட்டப்பட்ட மதிப்பு
 • இத்துறைகள்
 • முதன்மை
 • இரண்டாம் நிலை
 • தயாரிப்பு
 • துணை நிறுவனங்கள்

உற்பத்தி முறை (Product Method)

 • உற்பத்தி முறை என்பது ஒரு நாட்டின் உற்பத்தியை கணக்கிடுவது ஆகும். இம்முறை சரக்கு முறை என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட ஆண்டில் விவசாயம், தொழில், வணிகம் போன்ற துறைகளின் உற்பத்தியின் மொத்தமே தேசிய உற்பத்தி ஆகும்.
 • ஒரு துறையின் வெளியீடு (Output) மற்றொரு துறையின் உள்ளீடு (Input) ஆகச் செல்ல வாய்ப்பு இருப்பதால் ஒரே பொருள் இரு முறை அல்லது பல முறை கணக்கில் வர வாய்ப்பு உள்ளது. இதற்கு இருமுறை கணக்கிடல் என்று பெயர்.
 • இதனை தவிர்க்க இறுதி பொருட்களின் மதிப்பையோ அல்லது ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்ட மதிப்புக் கூட்டலையோ கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் பண்ணை உற்பத்தியின் மொத்த மதிப்பு கீழ்க்கண்டவாறு கணக்கிடப்படுகிறது.

 1. 64 வகை விவசாயப் பொருள்களின் மொத்த உற்பத்தி மதிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு பயிரின் அதன் ஒரு ஹெக்டேருக்கான சராசரி (Per acre) உற்பத்தியை கணக்கிட்டு அந்தந்தப் பயிர்கள் பயிரடப்பட்ட மொத்த நிலப்பரப்பால் பெருக்கி பயிரின் உற்பத்தி கணக்கிடப்படுகிறது.
 2. ஒவ்வொரு பொருளின் மொத்த உற்பத்தியும் சந்தை விலையால் மதிப்பிடப்படுகிறது.
 3. இந்த 64 வகை பயிர்களின் மொத்த உற்பத்தி மதிப்பை எடுத்துக்கொண்டு விவசாயத்துறையின் மொத்த உற்பத்தியின் மதிப்பு கணக்கிடப்படுகிறது.
 4. விவசாய உற்பத்தியின் நிகர மதிப்பு கணக்கிடுவதற்கு, மொத்த விவசாய உற்பத்தி மதிப்பிலிருந்து விதை, உரம், அங்காடி கட்டணம், சரிசெய்தல் மற்றும் தேய்மானம் போன்ற செலவுகள் கழிக்கப்படுகின்றன.

இதுபோல, மற்ற துறைகளுக்கும் (உதாரணம் கால்நடை, காடுகள், மீன், சுரங்கம்., தொழிற்சாலை) மொத்த உற்பத்தி மதிப்பீடு செய்யப்பட்டு அவற்றின் சந்தை விலையால் பெருக்கி உற்பத்தியின் மொத்த மதிப்பு பெறப்படுகிறது. மேற்குறிப்பிட்ட விவசாயம் சார்ந்த பிற துறைகளின் மொத்த மதிப்பில் இஉந்து இடு பொருட்களின் செலவு, தேய்மானம் ஆகியவற்றைக் கழித்து நிகர மதிப்பு கணக்கிடப்படுகிறது.

இவ்வாறுதான், பிற துறைகளின் உற்பத்தி நிகர பங்களிப்பின் மதிப்பு தேசிய வருவாயில் எவ்வளவு இருக்கிறது என கணக்கிடப்படுகிறது.

முன்னெச்சரிக்கைகள்

பின்தங்கிய மற்றும் வளர்ந்துவரும் நாடுகளில் உற்பத்தி கையாளப்படுகிறது. இதில் பிழைகள் அதிகம் வர வாய்ப்புண்டு. இந்தியாவில் இம்முறை விவசாயம், சுரங்கம், தயாரிப்பு மற்றும் கைவினைப் பொருள்கள் துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

 1. ஒரே பொருள் பல இடங்களின் மதிப்பிடப்படும் வாய்ப்பு இம்முறையில் இருக்கிறது. இறுதி உற்பத்திக்கு எந்த ஒரு பொருள் மூலப் பொரூளாகவோ அல்லது இடைநிலைப் பொருளாகவோ இருந்தால் அப்பொருளின் உற்பத்தியை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. உதாரணத்திற்கு, ஜவுளியின் விலைக்குள் துணியின் விலையும், துணியின் விலைக்குள் நூலின் விலையும், நூலின் விலைக்குள் பஞ்சின் விலையும் உள்ளது. எனவே, பஞ்சு , நூல், துணி ஆடைகள் ஆகியவற்றின் மொத்த மதிப்பினைக் கூட்டுவது “பல முறை கணக்கில் சேர்த்தல்” என்ற பிழைக்கு வழிவகுக்கும்.
 2. சொந்த நுகர்வுக்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் மதிப்பையும் தேசிய வருவாய் கணக்கில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு விவசாயிகள் தாம் உற்பத்தி செய்த பலவற்றை சந்தைப்படுத்தாமல் தனிப்பட்ட சொந்த நுகர்வுக்காக வைத்துக்கொள்ளலாம். அவற்றின் அளவையும் சந்தை விலையுடன் பெருக்கி மதிப்பைக் கண்டு தேசிய வருவாய் கணக்கில் சேர்க்க வேண்டும்.
 3. இரண்டாம் முறையாக கைமாற்றப்பட்ட நீடித்த (Durable) பொருள்களின் வாங்குதல் மற்றும் விற்றல் ஆகியவற்றின் பணமதிப்பை தேசிய வருவாயில் சேர்க்கக் கூடாது. உதாரணம் . கைப்பேசி, கார், போன்ற பொருட்கள் இருமுறைகள் அல்லது அதற்கு மேல் விற்கப்படுகின்றன.

வருமான முறை (Income Method)

வருமான முறை என்பது தேசிய வருவாய் கணக்கிடல் பகிர்வு பகுதியிலிருந்து அணுகப்படுகிறது. உற்பத்தி நிலைகளில் உற்பத்திக் காரணிகள் பெற்ற அனைத்து வித ஊதியங்களையும் கூட்டி தேசிய வருமானத்தைக் கணக்கிடலாம். வருமான முறை, காரணிகள் சம்பாதிக்கும் முறை என்றும் அழைக்கப்படுகிறது.

கணக்கிடுவதன் நிலைகள்

 1. மொத்த நிறுவனங்களும் வெவ்வேறு தொழில் குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன.
 2. காரணிகளின் வருவாய் மூன்று வகையான இனங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது உழைப்பாளர் வருமானம், மூலதன வருமானம் மற்றும் கலப்பு வருமானம்.
 3. உழைப்பாளர் வருமானம் – கூலி மற்றும் சம்பளம், சமூக பாதுகாப்புக்கு முதலாளியின் பங்கு, உற்பத்தி திறன் ஊக்கு (Fringe) ஊதியங்கள்.
 4. மூலதன வருமானம் – இலாபம் , வட்டி, இலாப ஈவு மற்றும் இராயல்டி.
 5. கலப்பு வருமானம் – விவசாயம் மற்றும் பண்னை சிறு தொழில் செய்வோர் மற்றும் பிற வேலைகளிலிருந்து கிடைக்கும் வருமானம்.
 6. உள்நாட்டு காரணி வருவாய்களுடன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் நிகர வருவாயை கூட்டுவதன் மூலம் தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது.

Y = w + r + i + + (R – P)

இதில்,

W = கூலி, r = வாடகை, i = வட்டி, = இலாபம், R = ஏற்றுமதி, P = இறக்குமதி.

 • மொத்த தேசிய வருவாய் கணக்கிடுவதில் பிற துறைகளான சிறு நிறுவனங்கள், வங்கி மற்றும் காப்பீடு, வாணிபம் மற்றும் போக்குவரத்து, கலை, வீட்டுவேலை செய்பவர்கள், பொது நிறுவனங்கள், வீட்டுச் சொத்து வருமானம் மற்றும் அயல்நாட்டு வாணிப பரிமாற்றம் போன்றவைகளின் வருமானம் மதிப்பிடப்படுகிறது.
 • செலுத்துநிலைக் கணக்கில் (Balance of Payments) , வெளிநாடுகளில் இருந்து வந்த அல்லது வெளிநாடுகளுக்குச் சென்ற தொகை தொடர்பான புள்ளி விவரங்கள் பெறப்படுகின்றன.

முன்னெச்சரிக்கைகள்

 • பின்தங்கிய மற்றும் வளர்ந்துவரும் நாடுகளில் உற்பத்தி கையாளப்படுகிறது. இதில் பிழைகள் அதிகம் வர வாய்ப்புண்டு. இந்தியாவில் இம்முறை விவசாயம், சுரங்கம், தயாரிப்பு மற்றும் கைவினைப் பொருள்கள் துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.
 1. இறுதி உற்பத்திக்கு எந்த ஒரு பொருள் மூலப் பொருளாகவோ அல்லது இடைநிலைப் பொருளாகவோ இருந்தால் அப்பொருளின் உற்பத்தியை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது.
 2. ஒரே பொருள் பல இடங்களில் மதிப்பிடப்படும் வாய்ப்பு இம்முறையில் இருக்கிறது. உதாரணத்திற்கு, ஜவுளியின் விலைக்குள் துணியின் விலையும், துணியின் விலைக்குள் நூலின் விலையும், நூலின் விலைக்குள் பஞ்சின் விலையும் உள்ளது. எனவே, பஞ்சு, நூல், துணி ஆடைகள் ஆகியவற்றின் மொத்த மதிப்பினைக் கூட்டுவது “பல முறை கணக்கில் சேர்த்தல்” என்ற பிழைக்கு வழிவகுக்கும்.
 3. சொந்த நுகர்வுக்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் மதிப்பையும் தேசிய வருவாய் கணக்கில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு விவசாயிகள் தாம் உற்பத்தி செய்த பலவற்றை சந்தைப்படுத்தாமல் தனிப்பட்ட சொந்த நுகர்வுக்காக வைத்துக்கொள்ளலாம். அவற்றின் அளவையும் சந்தை விலையுடன் பெருக்கி மதிப்பைக் கொண்டு தேசிய வருவாய் கணக்கில் சேர்க்க வேண்டும்.
 4. இரண்டாம் முறையாக கைமாற்றப்பட்ட நீடித்த (Durable) பொருள்களின் வாங்குதல் மற்றும் விற்றல் ஆகியவற்றின் பணமதிப்பை தேசிய வருவாயில் சேர்க்கக் கூடாது. உதாரணம் கைப்பேசி, கார் போன்ற பொருட்கள் இருமுறைகள் அல்லது அதற்கு மேல் விற்கப்படுகின்றன.

செலவு முறை (Expenditure or outlay method):

இம்முறையில், ஓர் ஆண்டில் சமுதாயத்தில் உள்ளவர்களால் மேற்கொள்லப்படும் மொத்த செலவுகள் அனைத்தையும் கூட்டி தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது. தனிநபர் சுய நுகர்வு செலவுகள் , நிகர உள்நாட்டு முதலீடு, அரசின் கொள்முதல் செலவு, முதலீட்டு பொருள் வாங்கும் செலவு மற்றும் நிகர ஏற்றுமதி போன்ற அனைத்து செலவுகளையும் கூட்டி செலவு முறையில் தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது.

மொத்தச் செலவும் கீழ்க்கண்ட முறையில் சமன்பாட்டின் மூலம் கணக்கிடப்படுகிறது.

GNP = C + I + G + (X – M)

C – தனியார் நுகர்வுச் செலவு, I – தனியார் முதலீட்டு செலவு, G – அரசின் கொள்முதல் செலவு, X – M = நிகர ஏற்றுமதி.

முன்னெச்சரிக்கைகள்

 1. ஏற்கனவே வாங்கிய பொருளை மீண்டும் வாங்குதல்:

ஏற்கனவே வாங்கப்பட்ட கார், இருசக்கர வாகனம், கைபேசி மற்றும் இயந்திரம் போன்ற பொருள்களை இரண்டாம் முறை வாங்கும் போது மேற்கொள்ளப்படும் செலவுகளை தேசிய வருவாய் கணக்கிடலில் சேர்க்கக் கூடாது.

2. பங்கு மற்றும் பத்திரங்கள் வாங்குதல் :

பழைய பங்கு, பத்திரங்களை இரண்டாம் நிலை அங்காடிகளில் வாங்கும்போது ஏற்படும் செலவுகளை தேசிய வருவாய் கணக்கிடலில் சேர்க்கக் கூடாது.

3. மாற்று செலுத்துநிலை:

அரசாங்கம் செய்யும் மாற்றுச் செலுத்துதல்களான முதியோர் ஓய்வூதியம் போன்றவற்றிற்கு செய்யும் செலவுகளை சேர்க்கக்கூடாது.

4. இடைநிலை பொருள்களுக்கு செய்யும் செலவுகள்:

விவசாயிகள் விதை மற்றும் உரம் வாங்க செய்யும் செலவுகள், துணி தொழிற்சாலைகளுக்கு ஏற்படும் பருத்தி மற்றும் நூல்களுக்கு செய்யும் செலவுகள் போன்றவற்ரை தேசிய வருவாய் கணக்கிடலில் சேர்க்கக் கூடாது. முடிவடைந்த பொருட்களின் செலவுகளை மட்டுமே சேர்க்க வேண்டும்.

காரணி செலவு (FC)

 • பொருள்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்யும் துறைகளில் பலவகையான உள்ளீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த உள்ளீடுகள் உற்பத்தி காரணிகள் என அழைக்கப்படுகிறது, அவையாவன, நிலம், உழைப்பு, முதல் மற்றும் தொழில் முனைவு.
 • உற்பத்தியாளர்கள் மேற்கூறிய உற்பத்தி காரணிகளுக்கு, பொருட்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்ய செலவு செய்கின்றன. இந்த செலவுகள் பொருளின் விலையில் சேர்க்கப்படுகிறது.
 • காரணி செலவு என்பது ஒரு நிறுவனம் பொருட்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்யும் போது உற்பத்தி காரணிகளுக்கு செய்யும் செலவை குறிப்பது ஆகும்.
 • இயந்திரங்களை வாடகைக்கு எடுத்தல், நிலம் மற்றும் இயந்திரம் வாங்குதல், கூலி மற்றும் சம்பளம் கொடுத்தல், மூலதனத்தை பெற செய்யும் செலவு (வட்டி) மற்றும் தொழில் முனைவோருக்கு கிடைக்கும் இலாபம் போன்றவை உற்பத்தி செலவிற்கான உதாரணங்கள் ஆகும்.
 • அரசிற்கு செலுத்தும் வரிகள் உற்பத்தி செலவில் சேர்ப்பது இல்லை. ஏனெனில் வரிகள் நேரடியாக உற்பத்தி நடவடிக்கைகளில் பங்கு பெறுவது இல்லை.
 • உற்பத்தியில் உதவித்தொகைகள் ( Subsidies) நேரடியான விளைவை ஏற்படுத்துவதால், இத்தொகைகள் காரணி செலவில் சேர்க்கப்படுகின்றன.

சந்தை விலை (Market Price (MP))

 • உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பணிகள் சந்தையில் விலைக்கு விற்க்கப்படுவதை குறிக்கிறது.
 • சந்தை விலை என்பது நுகர்வோர்கள் பொருளுக்கான விலையை விற்பனையாளர்களிடம் செலுத்தி பொருளை பெறுவது ஆகும்.
 • சந்தை விலை நிர்ணயிக்கின்றபோது, காரணி விலையில் (Factor price) அரசு விதித்த வரி சேர்க்கப்படுகிறது. மாறாக, அரசு வழங்கிய உதவித் தொகைகள் காரணிவிலையில் குறைக்கப்படுகிறது.
 • அரசு விதிக்கும் வரிகள் உற்பத்தியாளர்களுக்கு செலவாக இருப்பதால், அவைகள் விலையில் சேர்க்கப்படுகின்றன. மாறாக, அரசு செலுத்திய உதவி தொகைகள் ஏற்கனவே காரணிச் செலவில் சேர்க்கப்பட்டுள்ளதால், இத்தொகைகள் விலையில் சேர்க்கப்படுவது இல்லை.
 • ஆகவே சந்தை விலை (MP) = காரணி செலவு (FC) – உதவித்தொகைகள்.
 • அல்லது காரணி செலவு = சந்தை விலை (MP) – மறைமுகவரி + உதவித்தொகைகள்

தேசிய வருவாய் (NNPfc) = ஒரு நாட்டில் இருக்கும் அனைத்து உற்பத்தி துறைகளும் உற்பத்தி செய்த மொத்த மதிப்பு – தேய்மானம் – நிகர மறைமுகவரி + நிகர வெளிநாட்டு காரணிகளின் வருமானம்.

இங்கு,

நிகர மறைமுகவரிகள் = மறைமுகவரி – உதவித்தொகைகள்

மொத்த மதிப்பு கூட்டல் = உற்பத்தியின் மதிப்பு – இடைநிலை நுகர்வு

உற்பத்தியின் மதிப்பு = விற்பனை + இருப்பில் மாற்றம்

இருப்பில் மாற்றம் = முடியும் இருப்பு (Closing Stock) – தொடக்க இருப்பு (opening Stock)

குறிப்பு : ஒரு ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த பொருள்களும் விற்கப்பட்டால், மொத்த உற்பத்தி, விற்பனைக்கு சமமாக இருக்கும்.

உற்பத்தியின் மதிப்பு = விலை விற்பனை அளவு

GDPMP = தனியார் இறுதி நுகர்வு செலவு + அரசின் இறுதி நுகர்வு செலவு + மொத்த உள்நாட்டு மூலதன ஆக்கம் + நிகர ஏற்றுமதி (ஏற்றுமதி – இறக்குமதி)

தேசிய வருவாய் பகுத்தாய்வின் முக்கியத்துவம்

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தேசிய வருவாய் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தேசிய வருவாய் பொருளாதாரத்தின் கணக்கு அல்லது “சமூகக் கணக்கு” (Social Accounting) எனச் சொல்லப்படுகிறது. தேசிய வருவாய் பகுத்தாய்வின் முக்கியத்துவம் பின்வருமாறு:

 1. தேசிய வருவாய் கணக்கீட்டின் மூலம், பொருளாதாரத்தில் இருக்கும் பல்வேறு துறைகளின் முக்கியத்துவம் பற்றியும் தேசிய வருமானத்தில் அத்துறைகளின் பங்களிப்பு பற்றியும் அறிய முடிகின்றது. மேலும் பொருள்கள் மற்றும் பணிகள் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றன, பகிரப்படுகின்றன, செலவு செய்யப்படுகின்றன, சேமிக்கப்படுகின்றன, மற்றும் வரிவிதிக்கப்படுகின்றன போன்றவைகளை அறிய இயலும்.
 2. தேசிய அளவிலான பணவியல் மற்றும் பொதுநிதிக் கொள்கைகளை உருவாக்கவும், பொருளாதாரத்தைச் சரியான பாதையில் இட்டுச் செல்ல கடைபிடிக்க வேண்டிய சரியான வழிமுறைகளைக் கையாளவும் தேசிய வருவாய் ஆய்வு உதவுகிறது.
 3. திட்டமிடுதலுக்கும், திட்டங்களின் விளைவுகளை மதிப்பிடுவதற்கும் நாட்டின் மொத்த வருமானம், உற்பத்தி, சேமிப்பு மற்றும் நுகர்ச்சியின் அளவு ஆகிய புள்ளி விவரங்களை தேசிய வருவாய் கணக்கீடு அளிக்கின்றது.
 4. குறுகிய கால மற்றும் நீண்ட கால பொருளாதார மாதிரிகளை உருவாக்க தேசிய வருவாய் கணக்கீடு பயன்படுகிறது.
 5. துறைவாரியான பொருளாதார விவரங்களையும், ஒரு நாட்டில் வட்டாரங்களின் வருமானத்தை ஒப்பிடவும், மற்ற நாடுகளின் வருமானத்தோடு ஒப்பிடவும், தேசிய வருவாய் விவரங்கள் பயன்படுகின்றன.
 6. தேசிய வருமானம் மூலம் தலா வருமானம் கணக்கிடப்படுகிறது. தலா வருமானம் ஒரு நாட்டின் பொருளாதார நலனை அறிய பயன்படுகிறது.
 7. ஒரு நாட்டில் இருக்கும் பல்வேறு உற்பத்தி காரணிகளின் வருமானப் பகிர்வை தெரிந்து கொள்ள தேசிய வருவாய் பயன்படுகிறது.
 8. பேரியல் பொருளாதாரக் காரணிகளான வரி – GDP விகிதம், நடப்புக் கணக்கு பற்றாக்குறை – GDP விகிதம், நிதிப்பற்றாக்குறை – GDP விகிதம், கடன் – GDP விகிதம் போன்றவற்றை கண்டறிய உதவுகிறது.

தேசிய வருவாய் கணக்கீட்டில் உள்ள சிரமங்கள்

 • தேசிய வருவாய் கணக்கீடு செய்யும் போது இந்தியாவின் சிறப்பு இயல்புகளை மனதில் கொள்ள வேண்டும். இந்தியா ஒரு ஒழுங்குபடுத்தப்படாத, அன்றாட பிழைப்பை நடத்தும் சிறு தொழில்களையும் பண்ட மாற்று அங்காடிகளையும் உள்ளடக்கிய நாடு. எனவே ஒரு சரியான தேசிய வருமான மதிப்பீடு தருவதில் சிரமங்கள் இருக்கின்றன. சில சிரமங்கள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

சிரமங்கள்

மாற்றுச் செலுத்துதல்கள் (Transfer Payments)

ஓய்வூதியம், வேலையின்மைக்கான உதவித்தொகை, மானியங்கள் போன்றவற்றை அரசு அளிக்கிறது. இவைகள் அரசின் செலவுகள் ஆகும். ஆனால் இவைகளை தேசிய வருவாயில் சேர்ப்பதில்லை. தேசியக்கடனுக்காக செலுத்தப்படும் வட்டியும் இது போன்றதே.

தேய்மானங்கள் கொடுப்பனவு மதிப்பிடுவதில் சிக்கல் (Difficulties in assessing depreciation allowance)

 • தேய்மானம் கொடுப்பளவு, விபத்து இழப்பீடு மற்றும் பழுது கட்டணங்கள் போன்றவற்றை தேசிய வருவாயிலிருந்து கழிப்பது என்பது மிக எளிதானது அல்ல. இவைகளை அதிக கவனத்துடன் சரியாக மதிப்பீடு செய்து கழிக்க வேண்டும்.

பணம் செலுத்தப்படாத சேவைகள் (Unpaid Services)

இந்தியாவில் அதிகமான பெண்கள் வீட்டிலேயே அதிக வேலை செய்கின்றனர். உணவு தயாரித்தல், தையல், பழுது பார்த்தல், துவைத்தல், சுத்தம் செய்தல், குழந்தைகளை வளர்த்தல் போன்ற வேலைகளையும் எந்தவித பண வருமானமும் இன்றியும் நட்பு, பாசம், அன்பு, மரியாதை போன்ற பணத்தால் மதிப்பிட முடியாத காரணங்களுக்காகவும் வேலை செய்கிறார்கள். ஆனால் அவர்களுடைய அர்ப்பணிப்பு தேசிய உற்பத்தியில் சேர்க்கப்படுவதில்லை.

சட்டவிரோத நடவடிக்கையிலிருந்து பெறும் வருமானம் (Income from illegal activities)

சூதாட்டம், கடத்தல் மற்றும் சட்ட விரோதமாக மதுவை தயாரித்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பெறப்படும் வருமானம் தேசியவருமானத்தில் சேர்க்கப்படுவது இல்லை. இந்த நடவடிக்கைகள் மக்களின் விருப்பத்தை நிறைவு செய்தாலும் சமுதாய ரீதியில் உற்பத்தியைச் சார்ந்தது என்று எடுத்துக் கொள்ள முடியாது.

சுய நுகர்வுக்கு உற்பத்தி செய்தல் மற்றும் விலை மாற்றம் (Production for self-consumption and changing price)

விவசாயிகள் தங்களின் சுய நுகர்விற்காக உற்பத்தியில் ஒரு பகுதியை ஒதுக்கி வைக்கின்றனர். சந்தையில் விற்பனை செய்யாமல் ஒதுக்கிய உற்பத்தி தேசிய வருமானத்தில் சேர்க்கப்பட்டதா என்பதை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது.

உற்பத்தி முறையில் தேசிய வருவாய் கணக்கிடுதல் என்பது நடப்பு சந்தை விலையில் முடிவடைந்த பொருள்கள் மற்றும் பணிகளின் மதிப்பை அளவிடுதல் ஆகும். ஆனால் விலைகள் ஒரே மாதிரி நிலையாக இருப்பது இல்லை. இந்த பிரச்சனைக்கு தீர்வுக்கான, பொருளியல் அறிஞர்கள் நுகர்வோர் விலை குறியீட்டெண்ணை பயன்படுத்தி நிலையான விலையில் உண்மை தேசியவருவாயை கணக்கிடுகின்றனர்.

மூலதன இலாபம் (Capital Gains)

மூலதன சொத்துக்களான வீடு மற்றும் பிற சொத்துக்கள், பங்குகள் போன்றவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்வதன் மூலம் மூலதன இலாபம் கிடைக்கிறது. தேசிய வருவாய் கணக்கீட்டில் மூலதன இலாபம் சேர்க்கப்படுவது இல்லை.

புள்ளி விவர சிக்கல் (Statistical Problems)

புள்ளிவிவரங்களை சேகரிப்பதில் பல பிரச்சினைகள் உள்ளன. ஒரே விவரத்தை பல முறை கணக்கில் சேர்ப்பது, நம்பகத்தன்மை, புள்ளி விவரங்கள் கிடைக்காமை, சேகரிப்பவர்களின் திறன் குறைவு, அர்ப்பணிப்பு இன்மை ஆகியவை தேசிய வருவாய் கணக்கிடுதலில் பிரச்சனைகளைத் தரலாம்.

 1. விவசாயத்துறையில் உற்பத்தி அளவை கணக்கிடுவது சிரமம். மேலும் கால்நடைத்துறையின் உற்பத்தி போன்றவை பற்றிய புள்ளிவிவரங்கள் சரியாகவும் முழுமையாகவும் கிடைக்காது.
 2. பல்வேறு மொழி மற்றும் கலாச்சாரம் போன்ற காரணத்தினாலும் புள்ளிவிவரங்களை மதிப்பிடுவதில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
 3. அரசு அலுவலர்கள் – மக்கள் உறவு நம் நாட்டில் சுமூகமாக இல்லாத நிலையில் புள்ளி விவரங்கள் சேகரிப்பதில் பிரச்சனைகள் வருகின்றன. மக்கள் உண்மையான புள்ளிவிவரங்கள் தருவதில்லை.
 4. புள்ளி விவரங்களை சேகரிக்கும் பெரும்பான்மையான அலுவலர்கள் பயிற்சி அற்றவர்களாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளனர்.

ஆகையினால் தேசிய வருவாய் மதிப்பீட்டில் துல்லிய தன்மை இல்லாமலும், புள்ளி விவரங்கள் போதுமானதாக இல்லாமலும் இருக்கின்றன. 10 சதவிகிதம் அதிகமாகவோ அல்லது குறைத்தோ மதிப்பிடப்படுகின்றது. இத்தகைய காரணங்களினால் இந்தியாவின் GDP யின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு ஏறக்கூறைய 2 டிரில்லியன் US$ யிலிருந்து 5 டிரில்லியன் US$ வரை வேறுபடுகிறது.

தேசிய வருவாய் மற்றும் சமூகக் கணக்கிடுதல் (National Income And Social Accounting)

இம்முறையில் ஒரு நாட்டின் பொருளாதாரம் பல்வேறு துறைகளாக பிரிக்கப்படுகிறது. தனிநபர்கள் உள்ளடக்கிய ஒரு குழு போன்றவைகளுக்கு இடையே நடைபெறும் பொருளாதாரப் பரிமாற்றங்களை ஒரு துறை என்கிறோம். ஒரு நாட்டின் பொருளாதாரம் கீழ்க்கண்ட துறைகளாக பிரிக்கப்படுகிறது.

 1. நிறுவனங்கள்
 2. குடும்பங்கள்
 3. அரசு
 4. வெளிநாட்டு வாணிபம்
 5. மூலதன துறை
 • நிறுவனங்கள்

நிறுவனங்கள் உற்பத்திக் காரணிகளைப் பணியில் அமர்த்தி பண்டங்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்கின்றன.

 • குடும்பங்கள்

குடும்பங்கள் தங்கள் உழைப்பினை அளித்து கூலியை பெற்று, அதன் மூலம் பண்டங்கள் மற்றும் பணிகளை வாங்குகின்றன. அதாவது ஊதியத்தினைப் பெற்று பொருட்களை வாங்குகின்றது. நிறுவனங்கள் குடும்பங்களின் பணியை பெற்று கூலியை தருகின்றன. குடும்பங்கள் கூலியை பெற்று நிறுவனங்களின் உற்பத்திப் பொருள்கள் மற்றும் பணிகளை வாங்குகின்றன.

 • அரசு

அரசுத் துறையில் பல நிலைகள் உள்ளன. கிராமம், வட்டம், மாவட்டம், மாநிலம், மத்திய அரசு என பல நிலைகள் உள்ளன. எடி மற்றும் பீகாக் (Edey and Peacock) கூற்றுப்படி, அரசு என்பது “ஒன்று சேர்க்கப்பட்ட நபர்கள்” எனக் குறிப்பிடுகின்றனர். வரி, தண்டனை, கட்டணம் மற்றும் கடன் மூலமாக அரசு நிதியைத் திரட்டி பண்டங்களையும் பணிகளையும் வாங்குகிறது. பாதுகாப்பு, பொது சுகாதாரம், கல்வி ஆகியவற்றை மக்களுக்கு வழங்குவதுதான் அரசின் முக்கிய பணி ஆகும். பொதுநிறுவனங்களான அஞ்சல் அலுவலகம் மற்றும் இரயில்வே துறைகள் அரசுத்துறையாக சேர்க்கப்படாமல் நிறுவனங்களாக கருதப்படுகின்றன.

 • வெளிநாட்டு வாணிபம்

ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகள் மூலம் கிடைக்கும் வருமானம், வெளிநாட்டு கடன்கள், வெளிநாட்டு மூலதன வருமானம் மற்றும் செலுத்துதல்கள் போன்றவை வெளிநாட்டுத் துறையாகக் கருதப்படுகிறது.

 • மூலதன துறை

மூலதனத்துறை சேமிப்பையும் முதலீட்டையும் உள்ளடக்கியது. காப்பீட்டு நிறுவனம், வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் பண பரிமாற்றங்கள் இதில் அடங்கும். மூலதனத்துறை, நிறுவனங்களாக கருதப்படுவது இல்லை. மாறாக தொழில் நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்து வருகின்றன.

GDPயில் துறைகளின் பங்கை மதிப்பிடுவதற்கு ஒரு நாட்டின் பொருளாதாரம் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் துறை என பிரிக்கப்படுகிறது.

தேசிய வருவாயும் பொது நலனும் (National Income and Welfare)

 • ஒரு நாட்டின் வளர்ச்சியும் பொருளாதார அந்தஸ்தும் அந்நாட்டின் தேசிய வருவாயைப் பொறுத்தே அமைகிறது. GDP யில் தலைவீத வருமானம் மற்றும் அதன் ஆண்டு வளர்ச்சி வீதம் அடிப்படையில் நாடுகளின் பொருளாதார முன்னேற்றம் அளவிடப்படுகிறது. அதிக தலைவீத வருமானம் உடைய நாடு, நல்ல வாழ்க்கைத்தரத்துடன் அதிக பொருளாதார நலனையும் பெற்றதாக இருக்கும்.
 • ஆனால் GDP அல்லது தலைவீத வருமானம் அதிகரித்தால் பொருளாதார நலனும் அதிகரிக்க வேண்டும் என்பது இல்லை. பொருளாதார நலன் குறியீட்டெண்ணாக தலைவீத வருமானம் உள்ள போதிலும் கீழ்க்கண்ட குறைகளை கொண்டுள்ளது.
 1. பொருட்கள் மற்றும் பணிகளின் அளிப்பை பொது நலன் சார்ந்து உள்ளது. நுகர்வு பொருட்களை காட்டிலும் மூலதன பொருட்கள் அதிகமாக இருந்தால், பொருளாதார நலனின் முன்னேற்ற குறைவாக இருக்கும். அதே போன்று ஆடம்பர பொருட்களின் உற்பத்தி பணக்காரர்களுக்காக மட்டுமே இருக்கும்.
 2. இயற்கை வளங்களான காற்று, நீர் மற்றும் மண் போன்றவற்றை மாசுபடுத்தி அதிகமான GDPயை பெற்றால் பொருளாதார நலன் குறையும்.
 3. இராணுவ தளவாடங்கள் உற்பத்தி அதிகரிப்பதினால் தேசிய உற்பத்தி அதிகரித்தாலும் பொருளாதார நலன் குறையும்.
 4. பெண்களுக்கு வேலைவாய்ப்பை தருதல் மற்றும் உழைப்பாளர்களை அதிக நேரம் வேலை செய்ய வைத்தல் போன்றவற்றின் மூலமாக தலைவீத வருமானத்தை அதிகரிக்கலாம். ஆனால் பொருளாதார நலனில் முன்னேற்றம் இருக்காது.

ஆகவே PQLI என்பது பொருளாதார நலனை கணக்கிடுவதில் முக்கிய குறியீட்டெண்ணாக உள்ளது. மக்களின் வாழ்க்கை தரம், வாழும் காலம் மற்றும் கல்வியறிவு போன்றவை PQLI (Physical Quality of Life Index) உள்ளடங்கி இருக்கிறது.

தேசிய வருவாய் மற்றும் நாட்டின் செல்வம் அரிக்கப்படுதல் (National Income & Erosion of national Wealth)

அதிகமான GDPயை அடையவேண்டும் என்பதற்காக நாட்டின் இயற்கை வளங்கள் அதிக அளவில் அரிக்கப்படுகின்றன அல்லது சேதப்படுத்தப்படுகின்றன. இதனால் எதிர்கால வளர்ச்சி குறைகிறது. ஆகையால் தேசிய வருவாயை கணக்கிடும் போது, இயற்கை வளங்களின் இழப்பை தேசிய வருவாயிலிருந்து கழிக்க வேண்டும்.

US$ அடிப்படையில் தேசிய வருமானம் (National income in terms of US$)

தேசிய வருவாயைக் குறிப்பிடும் பணத்தின் மதிப்பை வைத்தும் ஒரு நாட்டின் பொருளாதார நிலைமையை அறியலாம். உதாரணத்திற்கு இந்திய தேசிய வருவாயை அமெரிக்க பணமான டாலரில் சொல்ல வேண்டும். இதன் விளைவாக இந்திய தேசிய வருமானம் மிகக் குறைவாகத் தோன்றலாம். ஆனால் வாங்கும் சக்தியின் அடிப்படையில் அளவிட்டால் இந்தியத் தேசிய வருமானம், அதிகமாகத் தோன்றும்.

சமூக மற்றும் சுற்றுச்சூழல் செலவு (Social and Environmental Cost)

பொருளாதார நுகர்வு பண்டங்களை உற்பத்தி செய்யும் போது, பல சுற்றுச்சூழல் மற்றும் சமுதாயக் கேடுகள் உருவாக்கப்படுகின்றன. தேசிய வருவாய் கணக்கிடும் போது இவைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

தொகுப்புரை

ஒரு நாட்டின் பொருளாதார செயல்திறன் அல்லது உற்பத்தி செயல்திறனை தேசிய வருவாய் விளக்குகிறது. பொருளாதார வல்லுநர்கள் , திட்டமிடுபவர்கள், அரசு, வியாபாரிகள் மற்றும் IMF, உலக வங்கி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தேசிய வருவாய் பற்றிய புள்ளி விவரத்தை பயன்படுத்துகின்றன. நாட்டின் பல்வேறு நோக்கங்களுக்காக இந்த புள்ளி விபரங்களை பகுத்தாய்வு செய்கின்றன. மக்களின் வாழ்க்கைத்தரம் அதிகரித்துள்ளதா என்பதை கண்டறிய தேசிய வருவாய் உதவுகிறது. மேலும் பிற நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தோடு ஒப்பிட்டு பார்க்கவும் தேசிய வருவாய் பற்றிய புள்ளி விவரம் பயன்படுகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சியின் அளவி கணக்கிட தேசிய வருவாய் பயன்படுத்தப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *