Samacheer NotesTnpsc

பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை Notes 8th Social Science Lesson 21 Notes in Tamil

8th Social Science Lesson 21 Notes in Tamil

21. பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை

I. பாதுகாப்பு

அறிமுகம்

இந்தியா அமைதியை விரும்பும் ஒரு நாடு. பொதுவாக, இந்தியா அனைத்து நாடுகளிடமும் குறிப்பாக அண்டை நாடுகளிடம் நல்லுறவைப் பேணுகிறது. அதேநேரத்தில் அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து இந்திய எல்லையை பாதுகாப்பதற்கு, இந்தியா தன் பாதுகாப்பை பலப்படுத்துகிறது. எனவே இந்திய அரசு பாதுகாப்புத் துறைக்கு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது.

பாதுகாப்பு அமைப்பின் அவசியம்

ஒவ்வொரு நாட்டின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அதன் தேசிய பாதுகாப்பு மிகவும் அவசியமானது ஆகும். இது நாட்டின் அமைதிக்கும், முன்னேற்றத்திற்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

இந்திய பாதுகாப்புச் சேவைகள்

இந்தியக் குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவராகவும், நமது பாதுகாப்பு அமைப்பில் மிக உயர்ந்த பதவி நிலையையும் வகிக்கிறார். அவர் இந்திய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி ஆவார்.

இந்தியாவில் பாதுகாப்பு படைகளின் பிரிவுகள்

இந்திய ஆயுதப் படைகள் (Indian Armed Forces)- ஆயுதப் படையானது நாட்டின் இராணுவப் படை, கடற்படை, விமானப்படை மற்றும் கடலோரக் காவல்படை ஆகியவற்றை உள்ளடக்கிய முதன்மைப் படைகள் ஆகும். அவைகள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றன.

துணை இராணுவப் படைகள் (Paramilitary Forces) – அசாம் ரைபில்ஸ், சிறப்பு எல்லைப்புறப் படை ஆகியன துணை இராணுவப் படைகளாகும்.

மத்திய ஆயுதக் காவல் படைகள் (Central Armed Police Forces) – BSF, CRPF, ITBP, CISF மற்றும் SSB ஆகியன மத்திய ஆயுதக் காவல் படைகளாகும். அவைகள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றன. CAPF என்ற படைப்பிரிவுகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிக்கு ஏற்றவாறு இராணுவம் மற்றும் காவல் துறையுடன் இணைந்து பணியாற்றுகின்றன.

  • இந்திய ஆயுதப் படைகளை கௌரவிப்பதற்காக இந்திய அரசால் தேசியப் போர் நினைவுச் சின்னம் (National War Memorial) கட்டப்பட்டுள்ளது. இந்நினைவுச் சின்னம் புது டெல்லியில் உள்ள இந்திய கேட் அருகில் 40ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. போரின் போது நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இந்திய இராணுவ வீரர்களின் பெயர்கள் நினைவுச் சின்னத்தின் சுவர்களில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்திய ஆயுதப் படைகள்

இராணுவப் படை (Army)

  • இந்திய இராணுவப் படை என்பது நில அடிப்படையிலான ஒரு பிரிவு ஆகும். இது உலக அளவில் மிகப்பெரிய தன்னார்வப் படைப்பிரிவு ஆகும். இது ஜெனரல் (General) என்றழைக்கப்படும் நான்கு நட்சத்திர அந்தஸ்து கொண்ட இராணுவப் படைத் தளபதியால் வழிநடத்தப்படுகிறது.
  • தேசிய பாதுகாப்பு, தேசிய ஒற்றுமை, அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து நாட்டை பாதுகாத்தல், உள்நாட்டு அச்சுறுத்தல்கள் மற்றும் நாட்டின் எல்லைக்குள் அமைதியையும், பாதுகாப்பையும் பேணுதல் ஆகிய இந்திய இராணுவப் படையின் முதன்மைப் பணிகளாகும்.
  • மேலும் இது இயற்கை பேரழிவு மற்றும் பேரிடர் காலங்களில் மனிதாபிமான மீட்புப் பணிகளையும் செய்கிறது.
  • இந்திய இராணுவம் ‘ரெஜிமென்ட்’ என்ற ஒரு அமைப்பு முறையைக் கொண்டது. இது செயல்பாட்டு ரீதியாகவும் புவியியல் அடிப்படையிலும் ஏழு படைப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

கடற்படை (Navy)

கடற்படையின் முதன்மை நோக்கம் நாட்டின் கடல் எல்லைகளை பாதுகாப்பதாகும். மேலும் நாட்டின் பிற ஆயுதப்படைகளுடன் இணைந்து இந்திய நிலப்பகுதி , மக்கள், கடல்சார் நலன்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் (அ) ஆக்கிரமிப்புகளைத் தடுக்க அல்லது தோற்கடிக்கும் பணியில் ஈடுபடுகிறது. இது அட்மிரல் (Admiral) என்றழைக்கப்படும் நான்கு நட்சத்திர அந்தஸ்து கொண்ட கடற்படைத் தளபதியால் வழிநடத்தப்படுகிறது. இது மூன்று கடற்படைப் பிரிவுகளைக் கொண்டது.

விமானப்படை (Air Force)

இந்திய விமானப்படை என்பது இந்திய ஆயுதப்படைகளின் வான்வெளி படை ஆகும். இந்திய வான்வெளியைப் பாதுகாப்பதும், ஆயுத மோதலின் போது வான்வழிப் போரை நடத்துவதும் இதன் முதன்மை நோக்கம் ஆகும். இது ஏர் சீப் மார்ஷல் (Air Chief Marshall) என்றழைக்கப்படும். நான்கு நட்சத்திர அந்தஸ்து கொண்ட விமானப்படை தளபதியால் வழிநடத்தப்படுகிறது. இது ஏழு படைப்பிரிவுகளைக் கொண்டது.

  • பீல்டு மார்ஷல் (Field Marshal) – இது ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட பொது அதிகாரி பதவி. இது இந்திய இராணுவத்தின் உயர்ந்த பதவி ஆகும்.
  • சாம் மானக்‌ஷா என்பவர் இந்தியாவின் முதல் பீல்டு மார்ஷல் ஆவார். கே.எம். கரியப்பா இரண்டாவது பீல்டு மார்ஷல் ஆவார்.
  • இந்திய விமானப்படையில் ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட மார்ஷல் பதவிக்கு உயர்வு பெற்ற முதல் மற்றும் ஒரே அதிகாரி அர்ஜுன் சிங் ஆவார்.

இந்தியக் கடலோரக் காவல்படை (Indian Coast Guard)

இந்தியப் பாராளுமன்றத்தின் 1978ஆம் ஆண்டு கடலோரக் காவல் படைச் சட்டத்தின்படி, இந்தியாவின் சுதந்திர ஆயுதப் படையாக இந்தியக் கடலோரக் காவல்படை 1978இல் நிறுவப்பட்டது. இது பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்த கடலோரக் காவல் படையானது கடற்படை, மீன்வளத் துறை, சுங்கத்துறை, மத்திய-மாநில காவல்படை ஆகியவற்றுடன் ஒத்துழைத்து செயல்படுகிறது.

  • 1758ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ‘மெட்ராஸ் ரெஜிமென்ட்’ (The Madras Regiment) இந்திய இராணுவத்தின் மிகப்பழமையான காலாட்படை பிரிவுகளில் ஒன்றாகும். இந்த ‘ரெஜிமென்ட்’ தமிழ்நாட்டின் உதகமண்டலத்தில் உள்ள வெல்லிங்டன் எனுமிடத்தில் அமைந்துள்ளது.
  • 1962இல் நடந்த சீன-இந்திய போரானது இராணுவ அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதின் அவசியத்தை உணர்த்தியது.
  • இந்திய இராணுவத்தின் அவசர ஆணையத்திற்கான அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்க பூனா மற்றும் சென்னை ஆகிய இடங்களில் ‘அதிகாரகள் பயிற்சிப் பள்ளிகள்’ (Officers Training Schoold _OTS) நிறுவப்பட்டது.
  • 1998 ஜனவரி 1 முதல் அதிகாரிகள் பயிற்சிப் பள்ளியானது ‘அதிகாரிகள் பயிற்சி அகாடமி’ (Officers Training Academy – OTA) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
  • கி.பி. (பொ.ஆ) 1025இல் தமிழ்நாட்டில் இருந்து சோழ மன்னர் முதலாம் இராஜேந்திரன் தென்கிழக்கு ஆசியாவின் கடல் சார் பகுதியான ஸ்ரீ விஜயம் மீது தன் கடற்படையெடுப்பை தொடங்கினார். மேலும் தற்போது கேதா என்றழைக்கப்படும் கடாரம் பகுதியை வென்றார். முதலாம் இராஜேந்திர சோழனின் ஸ்ரீ விஜயத்துக்கு எதிரான இந்த கடல் கடந்த படையெடுப்பு இந்திய வரலாற்றில் சிறப்பான நிகழ்வாக கருதப்படுகிறது.

துணை இராணுவ பாதுகாப்புப் படைகள்

  • உள்நாட்டு பாதுகாப்பை பராமரிக்கவும், கடலோரப் பகுதியை பாதுகாக்கவும், இராணுவத்திற்கு உதவுவதற்கும் பயன்படுத்தப்படும் படைகள் துணை இராணுவப் படைகள் என்றழைக்கப்படுகின்றன.
  • இரயில் நிலையங்கள், எண்ணெய் வயல்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் ஆகிய முக்கியமான பகுதிகளை பாதுகாக்கும் பணியைச் செய்கிறது.
  • இயற்கை மற்றும் மனித பேரழிவுகளிலிருந்து மக்களை மீட்கும் பணியிலும் இப்படைகள் ஈடுபடுகின்றன.
  • அமைதி காலங்களில் இந்த துணை இராணுவப் படைகள் சர்வதேச எல்லைகளைப் பாதுகாக்கும் பொறுப்பை வகிக்கின்றன. அவைகள்:

1. அஸ்ஸாம் ரைபிள்ஸ் (AR)

2. சிறப்பு எல்லைப்புறப் படை (SFF)

அஸ்ஸாம் ரைபிள்ஸ் (Assam Rifles – AR)

இது அஸ்ஸாம் பகுதியில் 1835ஆம் ஆண்டு பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்டது. இது கச்சார் லெவி எனப்பட்ட குடிப்படை (இராணுவ பயிற்சி பெற்ற மக்கள் குழு) ஆகும். தற்போது இதில் 46 படைப்பிரிவுகள் உள்ளன. இது உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

சிறப்பு எல்லைப்புற படை (Special Frontier Force – SFF)

சிறப்பு எல்லைப்புற படை என்பது ஒரு துணை இராணுவ சிறப்புப்படை ஆகும். இது 1962இல் உருவாக்கப்பட்டது. இப்படை புலனாய்வு பணியகத்தின் (IB) நேரடி மேற்பார்வையில் இருந்தது. பின்னர் இது இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் கீழ் செயல்பட்டு வருகிறது.

மத்திய ஆயுதக் காவல் படைகள் (Central Armed Police Forces – CAPF)

துணை இராணுவப் படையில் இருந்த பின்வரும் ஐந்து படைப்பிரிவுகள் மத்திய ஆயுதக் காவல் படையாக மறுவரையறை செய்யப்பட்டு மார்ச், 2011 முதல் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

  1. மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF)
  2. இந்தோ –திபெத்திய எல்லைக் காவல் (ITBP)
  3. எல்லை பாதுகாப்புப் படை (BSF)
  4. மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (CISF)
  5. சிறப்பு சேவை பணியகம் (SSB)

மத்திய ரிசர்வ் காவல் படை (Central Reserve Police Force – CRPF)

  • அரசியலமைப்பின் மேலாதிக்கத்தை நிலைநிறுவத்துவதற்காகவும் தேசிய ஒருமைப்பாட்டை காப்பதற்கும், சமூக நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் , சட்டம், ஒழுங்கு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பினை திறம்பட மற்றும் திறமையாக பராமரிப்பதற்கும் இந்திய அரசாங்கத்திற்கு உதவுவதே மத்திய ரிசர்வ் காவல் படையின் நோக்கம் ஆகும்.
  • மத்திய ரிசர்வ் காவல் படையின் ஒரு சிறப்பு பிரிவே விரைவு அதிரடிப் படை (Rapid Action Force – RAF) ஆகும்.
  • இது கலவரம், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துதல், மீட்பு, நிவாரண நடவடிக்கைகள் மற்றும் அமைதியற்ற சூழ்நிலைகள் ஆகியவற்றை திறம்பட எதிர்கொள்கிறது.

இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் (Indo-Tibetan Border Police –ITBP)

  • இது எல்லையை பாதுகாக்கும் ஒரு காவல்படை ஆகும். இப்படை அதிக உயரமான பகுதியில் செயல்படுவதில் சிறப்பு வாய்ந்தது.
  • இந்திய-சீன எல்லைப்பகுதிகளில் லடாக் முதல் அருணாச்சல பிரதேசம் வரையிலான எல்லைப் பகுதிகளை காக்கும் பணிகளுக்காக இது பயன்படுத்தப்படுகிறது.

தேசிய மாணவர் படை (National Cadet Corps – NCC)

தேசிய மாணவர் படை என்பது இராணுவப்படை, கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முத்தரப்பு சேவை அமைப்பாகும். இந்த அமைப்பு நாட்டின் இளைஞர்களை ஒழுக்கமான மற்றும் தேசபக்தி மிக்க குடிமக்களாக உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது. தேசிய மாணவர் படை என்பது ஒரு தன்னார்வ அமைப்பாகும். இது இந்தியா முழுவதும் உள்ள உயர் நிலைப்பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலிருந்து மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறது. மேலும் மாணவர்களுக்கு சிறிய ஆயுதங்கள் மற்றும் அணிவகுப்புகளில் அடிப்படை இராணுவப் பயிற்சியும் அளிக்கிறது.

எல்லை பாதுகாப்புப்படை (Border Security Force – BSF)

இது இந்தியாவின் எல்லைக்காவல் படை என அழைக்கப்படுகிறது. அமைதி காலங்களில் இந்திய நில எல்லைப்பகுதிகளைக் காப்பது மற்றும் நாடு கடந்த குற்றங்களை தடுப்பது ஆகிய பணிகளைச் செய்கிறது.

மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (Central Industrial Security Force – CISF)

மத்திய தொழிலக பாதுகாப்புப் படை 1969 மார்ச் 10ஆம் நாள் இந்திய நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது. முக்கிய அரசாங்க கட்டடங்களை பாதுகாப்பது, டெல்லி மெட்ரோ பாதுகாப்பு மற்றும் விமான நிலைய பாதுகாப்பு ஆகியன இதன் முக்கிய பணிகள் ஆகும்.

ஜனவரி 15 – இராணுவ தினம்

பிப்ரவரி 1 – கடலோரக் காவல்படை தினம்

மார்ச் 10 – மத்திய தொழிலக பாதுகாப்புப் படை தினம்

அக்டோபர் 7 – விரைவு அதிரடிப் படை தினம்

அக்டோபர் 8 – விமானப்படை தினம்

டிசம்பர் 4 – கடற்படை தினம்

டிசம்பர் 7 – ஆயுதப்படைகள் கொடி தினம்

சிறப்பு சேவை பணியகம் / சாஷாஸ்திர சீமா பால் (Special Service Bureau / Sashastra Seema Bal – SSB)

இது இந்தியா-நேபாளம் மற்றும் இந்தியா-பூடான் எல்லைப் பகுதிகளை பாதுகாக்கும் எல்லை ஆயுதப் படைகள் ஆகும்.

ஊர்க்காவல் படை (Home Guard)

  • இந்திய ஊர்க்காவல் படை ஒரு தன்னார்வப் படை ஆகும். இது இந்தியக் காவல்துறைக்கு துணையாக பணியாற்றுகிறது.
  • இப்படை உறுப்பினர்கள் சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளான தொழில்சார் வல்லுநர்கள், கல்லூரி மாணவர்கள், விவசாய மற்றும் தொழிற்துறை பணியாளர்கள் ஆகியோர்களிலிருந்து நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் சமுதாய முன்னேற்றத்திற்காக தங்கள் ஓய்வு நேரத்தை ஒதுக்குகின்றனர்.
  • 18 முதல் 50 வயதுடைய அனைத்து இந்தியக் குடிமக்களும் ஊர்க்காவல் படையில் சேர தகுதியுடையவர்களாவர்.
  • ஊர்க்காவல் படையில் சேரும் உறுப்பினர்களின் பதவிக்காலம் 3 முதல் 5 ஆண்டுகள் ஆகும்.
  • நம் நாட்டை பாதுகாக்க , இந்திய ஆயுதப் படைகள் எப்போதும் தயராக வைக்கப்பட்டுள்ளன.
  • நாட்டிற்கு சேவை செய்யவும், நாட்டை காப்பதற்கும் இளைஞர்கள் தாமாக முன் வந்து இராணுவத்தில் சேர வேண்டும்.
  • இளைஞர்களை பணியில் சேர்க்க பாதுகாப்புத் துறை தயாராக உள்ளது. நாட்டிற்கு சேவை செய்ய ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.

II. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

வெளியுறவுக் கொள்கை என்பது இறையாண்மை கொண்ட ஒரு நாடு உலகின் மற்ற நாடுகளுடன் எவ்வாறு தொடர்பு கொள்ளும் என்பதை வரையறுக்கும் அரசியல் இலக்குகளின் தொகுப்பாகும்.

இது நாட்டு மக்களின் நலன்களையும் நாட்டின் பொருளாதாரத்தையும் பாதுகாக்க முயல்கிறது. நமது நாட்டின் வெளியுறவு என்பது சில கொள்கைகளையும், செயல்திட்டங்களையும் அடிப்படையாக கொண்டது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது அதன் காலனித்துவ பாதிப்புகளின் பின்னணியிலிருந்து உருவானது ஆகும்.

இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கொள்கைகள்

  • தேசிய நலனைப் பாதுகாத்தல்
  • உலக அமைதியினை அடைதல்
  • ஆயுதக் குறைப்பு
  • காலனித்துவம், இனவெறி மற்றும் ஏகாதிபத்தியம் ஆகியவற்றை நீக்குதல்
  • நட்பு நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்தல்
  • பொருளாதார வளர்ச்சி

பஞ்சசீலம்

  • சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, இந்திய வெளியுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் முதன்மை சிற்பியாக இருந்தார்.
  • நேரு உலக அமைக்கு ஆதரவாளராக இருந்ததால் தனது கொள்கை திட்டமிடலில் உலக அமைதிக்கு மிக முக்கிய இடத்தை வழங்கினார்.
  • பஞ்சசீலம் என்றழைக்கப்பட்ட அமைதிக்கான ஐந்து கொள்கைகளை அவர் அறிவித்தார். அவைக்கள்:
  1. ஒவ்வொரு நாட்டின் எல்லையையும், இறையாண்மையையும் பரஸ்பரம் மதித்தல்
  2. பரஸ்பர ஆக்கிரமிப்பின்மை
  3. பரஸ்பர உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருத்தல்
  4. பரஸ்பர நலனுக்காக சமத்துவம் மற்றும் ஒத்துழைத்தல்
  5. அமைதியாக இணைந்திருத்தல்

அணிசேராமை

  • அணிசேராமை என்ற சொல் வி.கே.கிருஷ்ணமேனன் என்பவரால் உருவாக்கப்பட்டது. அணிசேராமை என்பது இந்திய வெளியுறவுக் கொள்கையின் மிக முக்கிய அம்சமாக விளங்குகிறது.
  • இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உருவான அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் தலைமையிலான இராணுவக் கூட்டில் இணையாமல் வெளிநாட்டி விவகாரங்களில் தேசிய சுதந்திரத்தை பராமரித்தலே அணி சேராதிருத்தலின் நோக்கம் ஆகும்.
  • அணிசேராமை என்பது நடுநிலைமையும் அல்ல, ஈடுபாடின்மையும் அல்ல.
  • அணிசேராமை என்பது எந்தவொரு இராணுவக் கூட்டணியிலும் (அமெரிக்கா, ரஷ்யா) சேராமல் சர்வதேச பிரச்சனைகளில் சுதந்திரமாக தீர்மானிக்கும் நிலைப்பாட்டைக் குறிக்கும்.

அணிசேரா இயக்கத்தின் தலைவர்கள்: இந்தியாவின் ஜவஹர்லால் நேரு, யுகோஸ்லாவியாவின் டிட்டோ, எகிப்தின் நாசர், இந்தொனேசியாவின் சுகர்னோ மற்றும் கானாவின் குவாமே நிக்ரூமா ஆகியோராவர்.

நெல்சன் மண்டேலா: இவர் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் (தென் ஆப்பிரிக்கா) தலைவராக செயல்பட்டார். இவர் இனவெறிக்கு எதிரான ஓர் உறுதியான போராளி ஆவார். நிறவெறிக் கொள்கை என்பது இனப்பாகுபாட்டின் ஒரு மோசமான வடிவம் ஆகும். இது மனிதாபிமானத்திற்கும், மக்களாட்சிக்கும் எதிரானது. இனவெறிக் கொள்கை மற்றும் அனைத்து வகையான இனப்பாகுபாட்டிற்கும் எதிராக இந்தியா போராடியது. 1990 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் இனவெறிக் கொள்கையை முடிவுக்குக் கொண்டு வந்தது இந்திய வெளியுறவுக் கொள்கையின் மிகச்சிறந்த வெற்றியாகும்.

அண்டை நாடுகளுடனான இந்தியாவின் நட்புறவு

  • அண்டை நாடுகளுடன் இந்தியாவின் நிலைப்பாடு தனித்துவமானது. இந்தியா எப்போதும் சர்வதேச மற்றும் பிராந்திய நாடுகளுடன் ஒத்துழைப்பைக் கொண்டுள்ளது.
  • ஏனென்றால் ஒத்துழைப்பு மூலமே நாடுகளிடையேயான பிரச்சனைகளை அமைதியான முறையில் தீர்க்க முடியும் என்று இந்தியா நம்புகிறது.
  • இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது நட்புறவுகளை வளர்ப்பது மற்றும் அண்டை நாடுகளுடன் ஒத்துழைப்பது என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது.
  • பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், சீனா, பூடான், வங்காளதேசம் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளுடன் இந்தியா பொதுவான நில எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது. மேலும் இலங்கையுடன் பொதுவான கடல் எல்லையையும் பகிர்ந்து கொள்கிறது.

இந்தியா பின்வரும் நாடுகளுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொண்டு பரந்த நாடாக விளங்குகிறது.

  • வடமேற்கில் – பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான்
  • வடக்கில் – சீனா, நேபாளம், பூடான்
  • கிழக்கில் – வங்காளதேசம்
  • தூர கிழக்கில் – மியான்மர்
  • தென்கிழக்கில் – இலங்கை
  • தென்மேற்கில் – மாலத்தீவு

அண்டை நாடுகளுக்கான முன்னுரிமைக் கொள்கை

  • இக்கொள்கையானது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதியாகும். இது இந்தியாவின் அண்டை நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்துகிறது.
  • வள ஆதாரங்கள், கருவிகள் மற்றும் பயிற்சி ஆகிய வடிவில் அண்டை நாடுகளுக்கு தேவையான ஆதரவினை இந்தியா அளித்து வருகிறது.
  • பொருட்கள், மக்கள், ஆற்றல், மூலதனம் மற்றும் தகவல்கள் ஆகியவற்றின் தடையில்லா பரிமாற்றத்தை மேம்படுத்துவதற்காக அதிக இணைப்பும் ஒருங்கிணைப்பும் அளிக்கப்படுகிறது.

கிழக்குச் செயல்பாடு என்ற கொள்கை

  • தென்கிழக்கு ஆசியா இந்தியாவின் வடகிழக்கில் இருந்து ஆரம்பமாகிறது.
  • மியான்மர் இந்தியாவிற்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கும் பாலமாக அமைந்துள்ளது.
  • இக்கொள்கையின் நோக்கம் ஆசியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பதோடு, இந்தோ-பசிபிக் பகுதியில் நிலையான மற்றும் பன்முக சமநிலையை உறுதி செய்வதும் ஆகும்.
  • இந்தியா தனது அண்டை நாடுகளுடன் பின்வரும் பொதுவான பொருளாதார செயலாண்மைத் திறனில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

சார்க் (SAARC)

  • இந்தியா பிராந்திய ஒத்துழைப்பில் நம்பிக்கை கொண்டுள்ளது. தெற்காசிய நாடுகளுக்கிடையே சகோதரத்துவ பிணைப்புகளை வளர்ப்பதற்காகவும், ஒத்துழைப்பு மற்றும் அமைதியான முறையில் இணைந்திருத்தல் ஆகியவற்றிற்காகவும் தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பு நிறுவப்பட்டது.
  • சார்க் அமைப்பு 8 உறுப்பு நாடுகளைக் கொண்டது. அவைகள் இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான், நேபாளம், பூடான், இலங்கை, மாலத்தீவு மற்றும் ஆப்கான்ஸ்தான் ஆகியனவாகும்.

பி.சி.ஐ.எம் (BCIM)

இது வங்காளதேசம், சீனா, இந்தியா, மியான்மர் பொருளதார போக்குவரத்து, எரிசக்தி மற்றும் தொலை தொடர்பு ஆகியவற்றில் எல்லை கடந்து ஒரு செழிப்பான பொருளாதார மண்டலத்தை உருவாக்க இக்கூட்டமைப்பு உதவுகிறது.

பிம்ஸ்டெக் (BIMSTEC)

  • இது வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார கூட்டுறவிற்கான முயற்சி ஆகும்.
  • தொழில்நுட்ப அடிப்படையில் பொருளாதார ஒத்துழைப்பு, பன்னாட்டு வர்த்தகம், வெளிநாட்டு நேரடி முதலீடு ஆகியவற்றை வலுப்படுத்துவதும் மேம்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கமாகும்.
  • இதன் உறுப்பு நாடுகளாவன, வங்காளதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான் மற்றும் நேபாளம்.

பி.பி.ஐ.என் (BBIN)

  • பயணிகள், சரக்கு மற்றும் எரிசக்தி மேம்பாடு ஆகியவைகளின் பரிமாற்றத்திற்கான கூட்டமைப்பில் வங்காளதேசம், பூசான், இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
  • சுருக்கமாக கூறினால், இந்தியா பன்முக கலாச்சாரங்களக் கொண்ட ஒரு பெரிய நாடு.
  • இது தென்கிழக்கு ஆசிய நாடுகளிடையே உயர்ந்த நிலையைக் கொண்டுள்ளது.
  • நாடுகளிடையே அமைதி , சுதந்திரம் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு ஆகியவற்றை பராமரிப்பதே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் முக்கிய நோக்கமாகும்.
  • இந்தியா எந்த பெரிய இராணுவ கூட்டணியிலும் இல்லை என்றாலும், முக்கிய சக்திகளுடனான இந்திய உறவுகள் ஆழமான வியூகத்தை பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!