பேரியல் பொருளாதாரம் Notes 12th Economics Lesson 1 Notes in Tamil

12th Economics Lesson 1 Notes in Tamil

1. பேரியல் பொருளாதாரம்

“பேரியல் பொருளாதாரம் என்பது உண்மைகள் மற்றும் கோட்பாடுகளை ஒருங்கிணைப்பது பற்றியதே”.

 • டான் புஸ், பிஸ்சார், ஸ்டார்டிஸ்.

அறிமுகம்

 • பொருளாதார பாடமானது, நுண்ணியல் பொருளாதாரம் மற்றும் பேரியல் பொருளாதாரம் என்று இரண்டு கிளைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. நார்வேயைச் சேர்ந்த பொருளியல் வல்லுனரும், பொருளியல் அறிவியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்ற இணை பெறுநர் ரேக்னர்ஃபிர்ஸ்ச் (Ragnar Frich) என்பவர், சிறிய என பொருள் கொண்ட மைக்ரோ (Micro) மற்றும் பெரிய என்று பொருள் கொண்ட மேக்ரோ (Macro) என்னும் பதங்களை 1933-ல் உருவாக்கினார்.
 • இருப்பினும், பேரியல் பொருளாதாரத்தின் நவீன வடிவமானது ஜான் மேனாட் கீன்ஸ் (John Maynard Keyenes) ஆல் 1936ம், ஆண்டு வெளியிட்ட “வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றிய பொதுக் கோட்பாடு” (The General Theory of Employment , Interest and Money) – நூலிலிருந்து தோன்றியதாகும்.
 • உலக மகாமந்த (World Great Depression) காலத்தில், பொருள்கள் விற்பனையின்றி தேங்குதல் மற்றும் உழைப்பாளர்கள் வேலையில்லாமை நிலவியதிலிருந்து மீளும் விளக்கத்தை கீன்ஸ் வழங்கினார். எனவே, கீன்ஸ் ஐ நவீன பேரியல் பொருளாதாரத்தின் தந்தை என்பர்.

பேரியல் பொருளாதாரத்தின் பொருள்

 • கிரேக்க மொழியில் உள்ள ‘Makros’ என்ற சொல்லில் இருந்து ‘Macro’ என்ற சொல் பெறப்பட்டது. அதன் பொருள் “பெரிய” என்பது ஆகும்.
 • பேரியல் பொருளாதாரம் என்பது பொருளாதார அமைப்பு முழுமையையும் படிப்பது ஆகும். மாற்றாக கூறின், பேரியல் பொருளாதாரம் என்பது ஒட்டு மொத்தமாகிய தேசிய வருவாய், வேலைவாய்ப்பு மற்றும் நாட்டு உற்பத்தி போன்றவற்றை உள்ளடக்கியது. ‘பேரியல் பொருளாதாரத்தை வருவாய் கோட்பாடு’ எனவும் அழைப்பர்.

 • பேரிய பொருளாதாரத்தின் பாடப்பொருட்களாக உள்ளடங்கும் பகுதிகளாவன: வேலைவாய்ப்பு , தேசிய வருவாய், பணவீக்கம், வணிகச் சுழற்சி, வறுமை, ஏற்றத்தாழ்வு, வேறுபாடு, முதலீடு மற்றும் சேமிப்பு , மூலதன ஆக்கம், கட்டமைப்பு மேம்பாடு, பன்னாட்டு வாணிபம், பன்னாட்டு வாணிகச் சமநிலை மற்றும் பன்னாட்டு செலுத்துதலின் சமநிலை, மாற்று விகிதம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகும்.

பேரியல் பொருளாதாரத்தின் முக்கியத்துவம்

ஒரு பொருளாதார அமைப்பில், பேரியல் பொருளாதார கண்ணோட்டம் மற்றும் அதன் முக்கியத்துவம் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

 • ஒரு பொருளாதார அமைப்பின் ஒட்டு மொத்த செயல்பாடுகளை புரிந்து கொள்ளவும், அதற்குத் தேவையான சரியா யுக்திகளை மாற்றவும் மற்றும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் பேரியல் பொருளாதாரம் உதவுகிறது.
 • எதிர்கால பிரச்சினைகளைப் புரிந்துக் கொள்ளவும், தேவைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்வதற்கும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்கும் பேரியல் பொருளாதாரம் பயன்படுகிறது.
 • நடப்புப் பிரச்சினைகளை அறிவியல் பூர்வ விசாரணை மூலம் அறிய பேரியல் பொருளாதாரம் வாய்ப்பளிக்கிறது.
 • பொருளாதாரக் குறியீடுகளை பகுத்தாயவும் அவைகளை ஒப்பிடவும் பேரியல் பொருளாதாரம் உதவுகிறது.
 • பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணவும், சரியான கொள்கைகளை உருவாக்கவும், எதிர்காலத்தில் நடப்பவைகளை முன்கணிக்கவும் பேரியல் பொருளாதாரம் உதவுகிறது.

பேரியல் பொருளாதாரத்தின் பரப்பெல்லை (SCOPE)

பேரியல் பொருளாதாரத்தின் பரப்பெல்லை மிகப் பெரியதாகவும் பல முக்கிய பகுதிகளை உள்ளடக்கியதாகவும் இருக்கிறது,

 • தேசிய வருவாய் (National Income)

தேசிய வருவாயை கணக்கிடுதல் மற்றும் தேசிய வருவாயில் துறைகளின் பங்கு போன்றவை பேரியல் பொருளாதார பகுத்தாய்வின் அடிப்படை அம்சங்களாகும். தேசிய வருவாய் மற்றும் அதன் பங்குகளின் போக்கு ஒரு பொருளாதார அமைப்பின் வளர்ச்சி முறையின் நீண்ட கால அறிவைத் தருகிறது.

 • பண வீக்கம் (Inflation)

பண வீக்கம் என்பது பொதுவான விலை அளவு தொடர்ந்து அதிகரிப்பதை குறிப்பதாகும். மொத்த விலை குறியீட்டெண் மற்றும் நுகர்வோர் விலை குறியீட்டெண் போன்ற விலை குறியீட்டெண்களைப் பயன்படுத்தி மொத்த விலை அளவை மதிப்பிடுவது அவசியமாக இருக்கிறது.

 • வாணிபச் சுழற்சி (Business Cycle)

பொதுவாக எல்லா நாடுகளும் வாணிப ஏற்றத்தாழ்வு மற்றும் வாணிப சுழற்சியால் ஏற்படும் பிரச்சினைகளை சந்திக்கின்றன. மொத்த பொருளாதார காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாட்டின் வாணிபச் சுழற்சி மாற்றங்களைத் (செழிப்பு, பின்னிறக்கம், மந்தநிலை மற்றும் மீட்பு) தெரிந்துக் கொள்ள முடிகிறது.

 • வறுமை மற்றும் வேலையின்மை (Poverty and Unemployment)

வளங்கள் நிறைந்த நாடுகளிலும் வறுமை மற்றும் வேலையின்மை மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. இது ஒரு பொருளாதார முரண்பாடுகளின் ஒன்றாகும். இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண, வளங்களை ஒதுக்கீடு செய்யவும், சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பேரியல் பொருளாதாரம் உதவுகிறது.

 • பொருளாதார வளர்ச்சி (Economic Growth)

பேரியல் பகுத்தாய்வின் மூலம் தான் ஒரு பொருளாதார அமைப்பின் வளர்ச்சி மற்றும் முன்னெஏற்றம், அதை தீர்மானிக்கும் காரணிகள் போன்றவற்றை புரிந்துக்கொள்ள முடியும்.

 • பொருளாதார கொள்கைகள் (Economic Policies)

பொருளாதார கொள்கைகளை உருவாக்குவதற்கு பேரியல் பொருளாதாரம் உதவுகிறது. அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், தடைகளை தகர்த்தெறியவும் மற்றும் வளர்ச்சியை அடைவதற்கும் பொருளாதாரக் கொள்கைகள் தேவைப்படுகின்றன.

குறைகள்

பேரியல் பொருளாதாரம் கீழ்க்காணும் குறைகளைக் கொண்டுள்ளது. அவையாவன

 1. பொருளாதாரம் முழுமைக்கும் மிகைப்படுத்தி பொதுமையாக்கும் ஆபத்து காணப்படுகிறது.
 2. தனிப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் ஓரினத் தன்மை வாய்ந்தது என்ற எடுகோளை பேரியல் பொருளாதாரம் கொண்டுள்ளது.
 3. தொகுத்தலில் தவறுகள் காணப்படும். ஒரு தனி நபருக்கு சரியானவை, ஒரு நாட்டிற்கு சரியாக இருக்காது. ஒரு நாட்டிற்கு பொருந்துவது, மற்ற நாட்டிற்கும் மேலும் மற்றொரு காலத்திற்கும் பொருந்தாது.
 4. பொருளாதார நடவடிக்கைகளை பல பொருளாதாரமற்ற காரணிகள் தீர்மானிக்கின்றன. ஆனால் பேரியல் பொருளாதார கோட்பாடுகளில் இக்காரணிகள் இடம் பெறவில்லை.

பொருளாதார அமைப்பு மற்றும் அதன் வகைகளும்

 • பொருளாதார அமைப்பு என்ற கருத்தினை ஏ.ஜே.பிரவுண் (A.J.Brown) என்பவர், “மக்கள் தங்கள் பிழைப்பை அமைத்துக் கொள்ளும் முறையை குறிப்பது” என்று வரையறுத்துள்ளார்.
 • ஜே.ஆர்.ஹிக்ஸ் (J.R.Hicks) “நுகர்வோரின் விருப்பங்களை பூர்த்தி செய்வதற்கான பொருட்கள் மற்றும் சேவைகளை தயாரிக்கும் உற்பத்தியாளர் மற்றும் பணியாளர்களுக்கிடையே உள்ள கூட்டுறவே பொருளாதார அமைப்பு” என கூறுகிறார்.
 • சுருங்கக்கூறின், ஒரு பொருளாதார அமைப்பு என்பது பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எந்த முறையையோ அல்லது பகுதியையோ குறிப்பதாகும்.
 • ஒவ்வொரு பொருளாதார அமைப்பும் அதனது தனி தன்மைகளை கொண்டு காணப்படும். அதன்படி, அதன் பணிகள் அல்லது நடவடிக்கைகளும் வேறுபடும். ஒரு பொருளாதார அமைப்பின் நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளை கீழ்க்காணும் வரைபடம் மூலம் விளக்கலாம்.
 • ஒரு பொருளாதார அமைப்பின் அடிப்படை நடவடிக்கைகள் உற்பத்தி (Production) மற்றும் நுகர்வு (Consumption) ஆகும். இந்த இரு நடவடிக்கைகளும் பல்வேறு பிற நடவடிக்கைகளால் உதவப்படுகின்றன.
 • இஉந்த நடவடிக்கைகளின் தலையான நோக்கம் வளர்ச்சியை (Growth) அடைவதாகும். பரிமாற்றம் பணி (Exchange Activity) யானது உற்பத்தி மற்றும் நுகர்வு பணிகளுக்கு உதவுகின்றன. இந்த நடவடிக்கைகள் பல்வேறு பொருளாதார மற்றும் பொருளாதார மற்ற நடவடிக்கைகளால் பாதிக்கப்படுகின்றன.
 • முக்கிய பொருளாதார நடவடிக்கைகளாவன (Economic Activities): போக்குவரத்து, வங்கிப்பணி, விளம்பரம், திட்டமிடல், அரசின் கொள்கை மற்றும் பிற பணிகள்.
 • முக்கிய பொருளாதார மற்ற நடவடிக்கைகளாவன (Non-Economic Activities): சுற்றுச்சூழல், ஆரோக்கியம், கல்வி, பொழுது போக்கு, ஆட்சிமுறை, நெறிப்படுத்துதல் போன்றவை. இந்த உதவிப் பணிகளுக்கு மேலாக, பிற பொருளாதாரத்தின் வெளி நடவடிக்கைகளான இறக்குமதி, ஏற்றுமதி, பன்னாட்டு உறவுகள், குடியேற்றம், இடப்பெயர்ச்சி, பன்னாட்டு முதலீடு, பன்னாட்டு மாற்று வருவாய் போன்றவை பொருளாதார அமைப்பின் மொத்த செல்பாட்டையும் பாதிக்கின்றன.

பொருளாதார அமைப்புகளை பல்வேறு அடிப்படையில் வகைப்படுத்தலாம்.

 1. வளர்ச்சி நிலை: வளர்ந்த, வளராத, முன்னேறாத மற்றும் வளரும் பொருளாதார அமைப்புகள்
 2. நடவடிக்கைகளின் முறை: முதலாளித்துவ, சமத்துவ மற்றும் கலப்பு பொருளாதார அமைப்புகள்
 3. நடவடிக்கைகள் அளவு : சிறிய மற்றும் பெரிய பொருளாதார அமைப்புகள்
 4. செயல்படும் தன்மை : நிலையான மற்றும் இயங்கும் பொருளாதார அமைப்புகள்
 5. செயல்பரப்பு தன்மை : மூடிய மற்றும் திறந்த வெளி பொருளாதார அமைப்புகள்
 6. முன்னேற்ற தன்மை : பழைமையான மற்றும் நவீன பொருளாதார அமைப்புகள்
 7. தேசிய வருவாய் அளவு: குறைந்த வருவாய், இடைநிலை வருவாய் மற்றும் அதிக வருவாய் பொருளாதார அமைப்புகள்.

பொருளாதார அமைப்பு முறைகள் (ECONOMIC SYSTEMS)

 • பொருளாதார அமைப்பு முறை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மக்களையும் நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகும். இது சமுதாயத்தின் தேவைகளை நிறைவு செய்வதற்காக மேற்கொள்ள உதவும் பொருளாதார நடவடிக்கைகளின் செய்யும் வழிமுறை ஆகும். பொருளாதார அமைப்புமுறை மூன்று முக்கிய வகைகளைக் கொண்டுள்ளது. அவையாவன:
 1. முதலாளித்துவ பொருளாதார அமைப்பு (முதலாளித்துவம்)
 2. சமத்துவ பொருளாதார அமைப்பு (சமத்துவம்) மற்றும்
 3. கலப்புப் பொருளாதார அமைப்பு (கலப்புத்துவம்)

 • முதலாளித்துவம் மற்றும் சமத்துவம் ஆகிய இரு அணுகுமுறைகளும் ஒன்றுக்கொன்று எதிரிடையானது. முதலாளித்துவ பொருளாதாரத்தில், தனியார் உற்பத்தி நிறுவனங்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது.
 • சமத்துவ பொருளாதாரத்தில், தனியார் நிறுவனத்திற்கு சுதந்திரம் இல்லை. மாறாக உற்பத்தியில் அனைத்து செயல்பாடுகளும் பொதுவுடைமை ஆக்கப்படும். கலப்பு பொருளாதார அமைப்பு என்பது முதலாளித்துவம், சமத்துவம் ஆகிய இரண்டின் இயல்புகளையும் உள்ளடக்கியது. கீழ்க்கண்ட பகுதியில் பல்வேறு பொருளாதார அமைப்பு முறைகளின் இயல்புகள், நன்மைகள் மற்றும் குறைகள் விளக்கப்பட்டு உள்ளன.

உலகத்துவம்

பன்னாட்டு வாணிபத்தால் நாடுகளை இணைப்பதன்மூலம் உலகமுன்னேற்றத்தை எதிர்நோக்கம் உலகமயமாக்குதல் என்ற புதிய அங்காடி தத்துவத்தை குறிப்பிட்ட, உலகத்துவம் (Globalism) என்ற பதத்தை, மேன்பிரட்டிஸ்டீகர் (Manfred D Steger) 2002ஆம் ஆண்டு உருவாக்கினார். இந்த தத்துவம், விரிவுபடுத்தப்பட்ட முதலாளித்துவம் (Extended Capitalism) என்றும் குறிப்பிடப்படுகின்றது.

முதலாளித்துவ பொருளாதார அமைப்பு (முதலாளித்துவம்)

 • ‘முதலாளித்துவத்தின் தந்தை’ ஆடம் ஸ்மித் ஆவார். முதலாளித்துவப் பொருளாதார அமைப்பை தடையில்லா பொருளாதாரம் (Laissez faire – லேசிபேர், லத்தீனில் – Free Economy) அல்லது சந்தைப் பொருளாதாரம் (Market Economy) என்றும் அழைக்கிறோம். இகு பொருளாதார நடவடிக்கைகளை தீர்மானிப்பதில் அரசாங்கத்தின் பங்கு குறைவாகவும், சந்தையின் பங்கு அதிகமாகவும் இருக்கும்.
 • முதலாளித்துவ பொருளாதாரத்தில் உற்பத்தி நடவடிக்கைகள் தனியார் வசம் இருக்கும். பொருட்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இலாப நோக்கத்தை முதன்மையாகக் கொண்டிருப்பார்கள்.
 • தனிநபர் தங்களுக்கான வேலைடைத் தெரிந்தெடுப்பதிலும் மற்றும் திறமையை வளர்த்துக் கொள்வதிலும், சுதந்திரமாகச் செயல்படுவர். USA, மேற்கு ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு உதாரணங்கள் ஆகும்.
 • மேலும், இவ்வமைப்புகளில் அங்காடிச் சக்திகளிடம் இருந்து (Market forces) அடித்தட்டு சாதாரண மக்களை பாதுகாக்க தேவையான சமூக நல நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர்.

முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் இயல்புகள்

 1. தனியார் சொத்துரிமை மற்றும் பரம்பரைச் சட்டம் (Private Ownership of Property and Low of Inheritance)

முதலாளித்துவத்தின் முக்கிய இயல்பு என்னவெனில், நிலம், உழைப்பு , மூலதனம், இயந்திரங்கள், சுரங்கம் போன்ற அனைத்து வளங்களும் தனிநபர்களிக்கு சொந்தமாக இருக்கும். உரிமையாளர்கள் வளங்களை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு உரிமம் கொள்ள, வைத்துக்கொள்ள, விற்க மற்றும் பயன்படுத்த அதிகாரம் படைத்தவர்களாவர். உரிமையாளர்கள் இறந்த பிறகு சொத்துக்கள் அவர்கள் வாரிசுகளுக்கு மாற்றப்படும்.

2. தெரிந்தெடுப்பதில் சுதந்திரம் (Freedom of Choice and Enterprise)

ஒவ்வொரு தனிநபரும் தங்களது வேலையைத் தேர்ந்தெடுப்பதிலும், உற்பத்தி செய்யும் பொருட்களை தேர்ந்தெடுப்பதிலும் மற்றும் வியாபார இடத்தை தெரிவு செய்வதிலும் முழு சுதந்திரம் பெற்றிருப்பர். அதே போன்று நுகர்வோர்கள் தங்களுக்கு விருப்பமான பொருட்களை தெரிவு செய்வதிலும் முழு சுதந்திரம் பெற்றிருப்பார்கள்.

3. இலாப நோக்கம் (Profit Motive)

முதலாளித்துவ பொருளாதார அமைப்பில், அனைத்து பொருளாதார நடவடிக்கைகளிலும் இலாபம் பெறுவதே உந்து விசையாக காணப்படும். ஒவ்வொரு தனிநபர்களும், அமைப்புகளும் அதிக இலாபம் தரக்கூடிய பொருட்களை மட்டுமே உற்பத்தி செய்வார்கள். இங்கு வேலை பகுப்பு, புதிய தொழில்நுட்பம் மற்றும் சிறப்புக் கவனம் போன்றவை பின்பற்றப்படும். முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் உற்பத்தியாளர்களால் பின்பற்றப்படுகின்ற தங்க விதி (Golden Rule) “உச்ச இலாபம்” அடைதல்.

4. போட்டியில் சுதந்திரம் (Free Competition)

பொருட்கள் சந்தை மற்றும் காரணிகள் சந்தை ஆகிய இரண்டிலும் முழு சுதந்திரம் உண்டு. அரசாங்கமோ வேறு எந்த அமைப்போ நிறுவனங்களின் வாங்குதல் மற்றும் விற்பதில் தலையிட முடியாது. வாங்குபவர் மற்றும் விற்பவர் இடையே போட்டி நிலவும்.

5. விலை இயங்கு முறை (Price Mechanism)

விலை இயங்கு முறையானது முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் இதயமாகும். அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் விலை இயங்கும் முறை, தேவை மற்றும் அளிப்பு அங்காடி சக்திகளால் கட்டுப்படுத்தப்படுகிறது.

6. அரசின் பங்கு (Role of Government)

முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும் விலை இயங்கு முறையை கட்டுப்படுத்துவதால், அரசின் பங்கு மிகக் குறைவாக இருக்கும். அடிப்படை பணிகளான பாதுகாப்பு, பொதுநலம், கல்வி போன்றவற்றை அரசாங்கம் வழங்குகிறது.

7.  ஏற்றத்தாழ்வு (Inequalities of Income)

முதலாளித்துவ சமுதாயம் இரண்டு வகுப்பாகப் பிரிக்கப்படுகிறது. சொத்துக்களை வைத்திருப்பவர்கள் (Haves) மற்றும் சொத்துக்கள் இல்லாதவர்கள் (Have-nots) எனப் பிரிக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவாக, பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்களாகவும் , ஏழைகள் இன்னும் ஏழைகளாகவும் இருக்கின்றனர். இதனால் பொருளாதார சமனற்ற நிலை அதிகரிக்கிறது.

முதலாளித்துவத்தின் நன்மைகள் (Merits of Capitalism)

 1. தானாக இயங்குதல்: முதலாளித்துவ பொருளாதாரத்தில் அரசாங்கத்தின் எந்த தலையீடும் இல்லாமல் பொருளாதாரம் தானாகவே செயல்படும்.
 2. வளங்களைத் திறமையாகப் பயன்படுத்துதல்: இப்பொருளாதாரத்தில் அனைத்து வளங்களும் திறமையாக உத்தம அளவில் பயன்படுத்தப்படுகிறது.
 3. கடின உழைப்பிற்கு வெகுமதி: கடின உழைப்பு ஊக்குவிக்கப்படுவதும், அதிக திறனால் தொழில் முனைவோர்கள் அதிக இலாபம் பெறுவதும் காணப்படும்.
 4. பொருளாதார முன்னேற்றம் : முதலாளித்துவ பொருளாதார அமைப்பில், உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் அளவு மிக அதிகமாகும்.
 5. நுகர்வோர் இறையாண்மை: அனைத்து உற்பத்தி நடவடிக்கைகளும் நுகட்வோர்களை திருப்தி செய்வதை முக்கிய நோக்கமாக கொண்டிருக்கின்றன.
 6. மூலதன ஆக்க வீதம் அதிகரித்தல்: சேமிப்பும், முதலீடும் அதிகரிக்கும். மூலதன ஆக்க வீதத்தை உயர்த்த வழி வகுக்கும்.
 7. புதிய தொழில்நுட்ப முன்னேற்றம்: இலாபம் பெறுவது நோக்கமாக இருப்பதால், உற்பத்தியாளர்கள் புதிய தொழில் நுட்பத்தில் முதலீடு செய்து, தரமான பொருட்களை உற்பத்தி செய்வர்.

முதலாளித்துவத்தின் குறைகள் (Demerits of Capitalism)

 1. வருமானம் மற்றும் செல்வச் செறிவு

முதலாளித்துவத்தில் வருமானம் மற்றும் செல்வம் சிலரது கைகளில் மட்டும் குவிகிறது. இதனால் வருமான ஏற்றத்தாழ்வு அதிகரிக்கிறது.

2. வளங்கள் வீணாக்கப்படுதல்

போட்டி விளம்பரங்களினாலும் பொருட்களின் பிரதிகளினாலும் வளங்கள் அதிக அளவில் வீணாக்கப்படுகின்றன.

3. வகுப்புப் போராட்டம்

முதலாளித்துவமானது, சமுதாயத்தை முதலாளிகளாகவும், வேலைக்காரர்களாகவும் பிரிப்பதால் வகுப்பு போராட்டத்திற்கு வழிவகுக்கிறது.

4. வாணிபச் சூழல்

தடையில்லாச் சந்தை முறை (Free Market System) அதிக அளவில் பொரிளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கும் பல்வேறு நெருக்கடிகளுக்கும் கொண்டு செல்கிறது.

5. அத்தியாவசியமில்லா பொருட்களின் உற்பத்தி

இலாபத்தைப் பெறுவதற்காக வாய்ப்பு இருக்குமாயின், தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கூட உற்பத்தி செய்யப்படும்.

சமத்துவப் பொருளாதார அமைப்பு (Socialism)

 • கார்ல் மார்க்ஸ் சமத்துவத்தின் தந்தை ஆவர். சமத்துவம் என்பது மொத்த திட்டமிடுதல், பொது உடமை மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் அரசின் கட்டுப்பாடு ஆகிய முறைகளை குறிப்பிடுவதாகும். அரசே பெரும்பான்மையான தொழில்களை உரிமம் கொண்டு மற்றும் கட்டுப்படுத்தி ஒரு சமுதாயத்தின் ஒழுங்குபடுத்தும் முறையை வரையறுப்பது சமத்துவம் ஆகும்.
 • ஒரு சமத்துவ பொருளாதார அமைப்பை, திட்டமிட்ட பொருளாதாரம் (Planned Economy) அல்லது கட்டளைப் பொருளாதாரம் (Command Economy) என்றும் அறியப்படுகிறது.

 • ஒரு சமத்துவ பொருளாதார அமைப்பின் அனைத்து வளங்களையும் அரசே உரிமமாக்கி பயன்படுத்தும். பொதுநலமே (Public Welfare) அனைத்து பொருளாதார நடவடிக்கைகளின் பின்புல முக்கிய நோக்கமாகும்.
 • வருவாய் மற்றும் செல்வம் பகிர்வதில் சமத்துவம் மற்றும் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்குவதே இதன் குறிக்கோள். ரஷ்யா, சீனா, வியட்நாம், போலந்து மற்றும் கியூபா ஆகியவை சமத்துவ பொருளாதார அமைப்புகளுக்கு உதாரணமாகும். ஆனால் தற்காலத்தில், முற்றிலும் பொருத்தமான சமத்துவ பொருளாதார அமைப்புகள் எங்கும் இல்லை.

சமத்துவ பொருளாதார அமைப்பின் இயல்புகள்

 1. உற்பத்தி மூலங்களின் பொது உரிமம் (Public Ownership)

அனைத்து வளங்களுக்கும் அரசே உரிமம் கொண்டிருக்கும். இதன் பொருள் என்னவெனில், அனைத்து உற்பத்திக் காரணிகளும் பொது அதிகாரத்தால் (அரசால்) தேசிய மயமாக்கப்பட்டு நிர்வகிக்கப்படும்.

2. மைய திட்டமிடல் (Central Planning)

ஒரு சமத்துவ பொருளாதார அமைப்பில், திட்டமிடுதல் என்பது ஒருங்கிணைந்த ஒரு பகுதியாகும். இந்த அமைப்பு முறையில், மைய திட்ட அதிகாரமே அனைத்து முடிவுகளையும் மேற்கொள்ளும்.

3. அதிகபட்ச சமூக நலன் (Social Benefit)

சமூக நலன் அனைத்து பொருளாதார நடவடிக்கையின் வழி காட்டுக்கொள்கையாகும். பெரும்பாலான பயன்கள் சமூகத்திற்கு சம அளவில் பகிரும்படியாக முதலீடுகள் திட்டமிடப்படுகின்றன.

4. போட்டி இல்லாமை

சமத்துவ பொருளாதார அமைப்பு முறையில் போட்டி இல்லாத அங்காடி காணப்படும் . பண்டங்கள் மற்றும் பணிகளின் உற்பத்தியையும், பகிர்வையும் அரசே முற்றிலும் கட்டுப்படுத்துகிறது. நுகர்வோருக்கு ஒரு வரையறுக்கப்பட்ட விருப்ப அளவே உண்டு.

5. விலை இயங்கு முறை இல்லாமை (Price mechanism)

மையத்திட்ட அதிகாரத்தின் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குப்படுத்துதலின் அடிப்படையில் விலை நிர்ணய முறை காணப்படும்.

6. வருவாயில் சமத்துவம் (Equality of Income)

சமத்துவ பொருளாதார அமைப்பின் மற்றொரு அத்தியாவடிய தன்மையானது பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதும் மற்றும் குறைப்பதும் ஆகும். சமத்துவ பொருளாதாரத்தில், தனியார் சொத்துரிமை மற்றும் வாரிசு சொத்துரிமை நடைமுறையில் இல்லை.

7. வாய்ப்புகளில் சமத்துவம் (Equality of Opportunity)

இலவச மருத்துவம், கல்வி மற்றும் பயிற்சி ஆகியவை சமத்துவ பொருளாதாரத்தில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும்.

8. வகுப்பு பேதமில்லா சமூகம் (Classless Society)

சமத்துவ பொருளாதாரத்தில், வகுப்பு பேதமுல்லா சமூகம் மற்றும் வகுப்பு சண்டைகள் இல்லை. ஒரு உண்மையான சமத்துவ சமூகத்தில், பொருளாதார நிலையில் அனைவரும் சமம்.

சமத்துவ பொருளாதார அமைப்பின் நன்மைகள்

 1. ஏற்றத்தாழ்வுகளில் குறைவு

எந்த நபராலும் தனியார் சொத்துக்கலை உரிமம் கொண்டு மற்றும் பயன்படுத்துவதன் மூலம் மற்றவர்களை சுரண்ட அனுமதி இல்லை.

2. வளங்கள் அறிவார்ந்த முறையில் ஒதுக்கீடு

மைய திட்ட அதிகாரத்தால் திட்டமிட்டபடி வளங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வளங்கள் விரயமாவது குறைக்கப்படுவதுடன் முன்திட்ட அடிப்படையில் முதலீடுகள் மேற்கொள்ளப்படுகிறது.

3. வகுப்பு சண்டைகள் இல்லாமை

ஏற்றத்தாழ்வுகள் குறைவாக இருப்பதால் பணக்காரர் மற்றும் ஏழைகளுக்கிடையேயான சண்டைகள் இருப்பதில்லை. சமூகம் சுமுகமான சூழலில் செயல்படும்.

4. வாணிக சூழலுக்கு முடிவு

பண்டங்கள் மற்றும் பணிகளின் உற்பத்தி மற்றும் பகிர்வை திட்ட அதிகாரமே முழு கட்டுக்குள் வைத்துக்கொள்ளும் அதனால், தவிர்க்க முடியும்.

5. சமூக நலன் முன்னேற்றம்

சுரண்டல் இல்லாமை, மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குறைக்கப்படுகிறது. ஏற்றத்தாழ்வுமிக்க வாணிகச் சூழல் தவிர்த்தல் மற்றும் உற்பத்தித்திறன் அதிகரித்தல் ஆகியவை சமூக நலன் வளர உதவுகிறது.

சமத்துவ பொருளாதார அமைப்பின் தீமைகள்

 1. சிகப்பு நாடா (Red Tapism) மற்றும் அதிகார வர்க்கம் (Bureaucracy)

அனைத்து முடிவுகளையும் அரசு அமைப்புகளை எடுப்பதாலும், அநேக அலுவலர்களின் அனுமதி பெற வேண்டி, கோப்புகள் ஒரு மேஜையிலிருந்து மற்றொன்றுக்கு செல்ல எடுக்கும் கால அளவு அதிகமாவதாலும் ஒரு சிகப்பு நாடா நிலைக்கு கொண்டு செல்லப்படும்.

2. ஊக்கமில்லாமை (Absence of Incentive)

சமத்துவத்தின் மிகப்பெரிய குறை என்பது, இந்த முறையில் திறமைக்கு எந்த ஊக்கமும் அளிப்பதில்லை. எனவே, உற்பத்தி தீறனும் பாதிக்கப்படும்.

3. தெரிவு செய்வதில் சுதந்த குறைவு (Limited Freedom & Choice)

பண்டங்கள் மற்றும் பணிகளை நுகர்வதில் தெரிவு செய்யும் சுதந்திரம் நுகர்வோரால் அனுபவிக்க முடியாது.

4. அதிகாரம் குவிதல் (Concentration of Power)

அரசே அனைத்து முடிவுகளையும் எடுக்கிறது. பொருளாதார தீர்மானங்களில் தனியார் எந்த முயற்சியும் எடுப்பது இல்லை. எனவே, அரசே மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு வாய்ப்பாகவும் அமைகிறது.

கலப்புப் பொருளாதாரம் (கலப்புத்துவம்)

 • கலப்புப் பொருளாதார அமைப்பு முறையில், தனியார் மற்றும் பொதுத்துறைகள் இணைந்து பொருளாதார மேம்பாட்டிற்காகப் பணியாற்றும். இம்முறை முதலாளித்துவம், சமத்துவம் ஆகியவற்றின் கலவையாகும்.
 • முதலாளித்துவம் மற்றும் சமத்துவ பொருளாதார அமைப்பு முறைகளின் தீமைகளை களைய இம்முறை உதவும். இப்பொருளாதார அமைப்பு முறைகளில் தனியார்களும் அரசும் வளங்களைக் கொண்டிருப்பர். இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில் ஆகிய நாடுகள் கலப்புப் பொருளாதார நாடுகளின் உதாரணங்கள் ஆகும்.

கலப்பு பொருளாதார அமைப்பின் தன்மைகள்

 1. சொத்து, உற்பத்திச் சாதனங்களின் உரிமம் (Ownership of Property and Means of Production)

உற்பத்திச் சாதனங்களும் சொத்துக்களும் தனியார் மற்றும் பொதுத்துறைக்குச் சொந்தமாக இருக்கும். பொதுத்துறையும் தனியார் துறையும் வளங்களைக் கொள்முதல் செய்யவும், பயன்படுத்தவும் அல்லது மாற்றவும் உரிமை கொண்டிருக்கும்.

2. பொது மற்றும் தனியார் துறைகள் இணைந்திருக்கும் (Coexistence of Public and Private Sectors)

கலப்புப் பொருளாதாரங்களில் தனியார், பொதுத்துறைகள் இரண்டும் இணைந்திருக்கும். தனியார் தொழிற்சாலைகள் இலாபத்திற்காகவே நடவடிக்கைகளை மேற்கொள்ளும். சமூகநலனை உச்சப்படுத்துவதற்காக பொதுத்துறை நிறுவனங்கள் அரசின் வசம் இருக்கும்.

3. பொருளாதாரத் திட்டமிடல் (Economic Planning)

மைய திட்டமிடல் அதிகாரம் பொருளாதாரத் திட்டங்களைத் தயாரிக்கும். அரசினால் தயாரிக்கப்படும் தேசிய திட்டங்களை தனியார் துறையும் பொதுத்துறையும் மதித்து பின்பற்றும். பொதுவாக, திட்டத்தில் வரையறுக்கப்பட்ட நோக்கங்கள், முன்னுரிமைகள், இலக்குகள் அடிப்படையில்தான் எல்லாத்துறைகளும் இயங்கும்.

4. பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு (Solution to Economic Problems)

எதனை உற்பத்தி செய்வது? எப்படி உற்பத்தி செய்வது? யாருக்காக உற்பத்தி செய்வது? மற்றும் எப்படிப் பகிர்ந்தளிப்பது போன்ற அடிப்படைப் பிரச்சினைகளை விலை இயக்க முறை (Price mechanism) மற்றும் அரசின் தலையீட்டின் (Government Intervention) மூலம் தீர்க்கப்படும்.

5. சுதந்திரமும் கட்டுப்பாடும் (Freedom and Control)

வளங்களை உரிமை கொண்டாடவும், பண்டங்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்து பகிரவும் தனியாருக்குச் சுதந்திரம் இருந்தாலும்கூட, அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளின் ஒட்டுமொத்தக் கட்டுப்பாடும் அரசிடமே காணப்படும்.

கலப்புத்துவத்தின் நன்மைகள்

 1. அதிவேகப் பொருளாதார வளர்ச்சி (Rapid Economic Growth)

கலப்புப் பொருளாதாரத்தின் சிறந்த நன்மை அதிக வேக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதாகும். இவ்விதம், பொதுத் தேவைகளும், தனியாரின் தேவைகளும் சந்திக்கப்படுகின்றன.

2. சமமான பொருளாதார வளர்ச்சி (Balanced Economic Growth)

பொருளாதாரத்தின் சமநிலை வளர்ச்சியை கலப்புத்துவம் ஊக்குவிக்கிறத்ய். இது வேளாண்மை மற்றும் தொழில், நுகர்வுப் பண்டங்கள் மற்றும் மூலதனப் பண்டங்கள், கிராமம் மற்றும் நகரம் ஆகியவற்றிடையே சமமான வளர்ச்சியை ஊக்கப்படுத்தும்.

3. வளங்களைச் சரியாக பயன்படுத்துதல் (Proper Utilization of Resources)

ஒரு கலப்புப் பொருளாதாரத்தில், வளங்களின் சரியான பயன்பாட்டை அரசு உறுதிப்படுத்தலாம். அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை நேரடியாகக் கட்டுப்படுத்தும். மேலும் தனியார் துறையை மறைமுகமாகக் கட்டுப்படுத்தும்.

4. பொருளாதாரச் சமத்துவம் (Economic Equality)

அரசு வருவாய் வரியை விதிப்பதற்கு வளர்வீத வரிமுறையைப் பயன்படுத்தி பொருளாதார சமத்துவத்தை கொண்டு வருகிறது.

5. சமூகத்துக்கு சிறப்பு நன்மைகள் (Special Advantages to the Society)

குறைந்தபட்சக் கூலிகள் மற்றும் பகிர்வு முறைச் சட்டங்கள், நியாயவிலைக் கடைகளை ஏற்படுத்துதல், மற்றும் சமூகநல நடவடிக்கைகளை உருவாக்குதல் போன்றவற்றின் மூலம் தொழிலாளர்கள், நலிவடைந்த பிரிவினரின் ஆர்வங்களை அரசு பாதுகாக்கும்.

கலப்பு பொருளாதார அமைப்பின் தீமைகள் (Demerits of Mixedism)

 1. ஒருங்கிணைப்பு இல்லாமை (Lack of Coordination)

கலப்புத்துவத்தின் மிகப்பெரிய குறைபாடு பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாததாகும். இவ்விரண்டு துறைகளும் வேறுபட்ட நோக்கங்களுடன் செயல்படுவதால் ஒருங்கிணைப்புத் தொடர்பான பிரச்சினைகள் உருவாகின்றன.

2. போட்டி மனப்பான்மை (Competitive Attitude)

அரசு மற்றும் தனியார் துறைகள் சமூகத்தின் நலனுக்காக இணைந்து செயலாற்றும் மனப்பான்மையுடன் இருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. ஆனால் நடைமுறையில் இவ்விரண்டு துறைகளும் அவற்றின் நடவடிக்கைகளில் போட்டித் தன்மையுடனேயே நடந்துகொள்கின்றன.

3. திறமையின்மை (Inefficiency)

மந்தமான அதிகாரமுறை, சிவப்புநாடாமுறை, ஊக்கமின்மை ஆகியவற்றால் பொதுத்துறை நடவடிக்கைகளில் பெரும்பாலானவை திறனற்றவைகளாகவே இருக்கின்றன.

4. தேசியமாக்கல் பற்றிய பயம் (Fear of Nationalization)

கலப்புப் பொருளாதார அமைப்பில், தேசியமயமாக்குதல் பற்றிய பயம் தனியார்துறைகளில் காணப்படுவதால், தனியார் தொழில்முனைவோர்கள் அவர்களின் வாணிப நடவடிக்கைகளையும், புத்தாக்க முயற்சிகளையும் சுருக்கி விடுகின்றனர்.

5. விரிவடையும் சமத்துவமின்மை (Widening Inequality)

வளங்களின் உரிமை, பரம்பரைச்சட்டங்கள், மக்களின் இலாப நோக்கம் ஆகியவை பணக்காரர், ஏழைகளிடையே இடைவெளியை விரிவடையச் செய்கின்றன.

இறுதியாக, முதலாளித்துவத்தின் சமத்துவமின்மையும், சமதர்மத்தின் திறமையின்மையும் கலப்புப் பொருளாதாரத்தில் காணப்படுகின்றன.

பொருளாதார அமைப்புகளை ஒப்பிடுதல்

வ.எண் தன்மைகள் முதலாளித்துவம் சமத்திவம் கலப்புத்துவம்
1 உற்பத்தி மூலங்களின் உரிமை தனியார் உரிமை பொது (அரசு) உரிமை தனியார் மற்றும் பொது உரிமை
2 பொருளாதார நோக்கம் இலாபம் சமூக நலன் சமூக நலன் மற்றும் இலாபநோக்கம்
3 மைய பிரச்சனைகளின் தீர்வு தடையில்லா சந்தை முறை மத்திய திட்டமுறை மத்திய திட்ட முறை மற்றும் தடையில்லா சந்தை
4 அரசின் பங்கு உள்ளீடு கட்டுப்பாடு மட்டும் முழு ஈடுபாடு குறைந்த பங்கு
5 வருவாய் பங்கீடு சமனற்றநிலை சமநிலை குறைந்த சமநிலையற்ற நிலை
6 நிறுவன தன்மை தனியார் நிறுவனம் அரசு நிறுவனம் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள்
7 பொருளாதார சுதந்திரம் முழுமையான சுதந்திரம் சுதந்திரமின்மை கட்டுப்பாட்டுடன் சுதந்திரம்
8 முக்கிய பிரச்சனை சமமின்மை திறனின்மை சமமின்மை மற்றும் திறனின்மை

பேரியல் பொருளாதாரத்தின் கருத்துக்கள்

பேரியல் பொருளாதாரத்தின் பயன்படுத்தும் முக்கிய கருத்துகள் கீழ்க்கண்டபடி விளக்கப்பட்டுள்ளன.

இருப்பு (Stock) மற்றும் ஓட்டம் (Flow) மாறிலிகள்.

 • பொருளாதார ஆய்வில் பயன்படுத்தும் மாறிலிகளை இருப்பு மற்றும் ஓடும் மாறிலிகள் என வகைப்படுத்தலாம். இந்த இரு இருப்பு மற்றும் ஓட்ட மாறிலிகளும் கால அடிப்படையில் அதிகரிக்கவோ அல்லது குறையவோ செய்யும்.
 • இருப்பு (Stock) என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் (Point of Time) கணக்கிடப்படும் பொருட்களின் அளவினை குறிப்பதாகும். பேரியல் பொருளாதாரத்தில், பண அளிப்பு, வேலை இல்லாமை அளவு, வெளிநாட்டு ம்,ஆற்று இருப்பு, மூலதனம் போன்றவை இருப்பு மாறிலிகளுக்கு எடுத்துக்காட்டாகும்.
 • ஓட்டம் (Flow) மாறிலிகள் என்பவை ஒரு குறிப்பிட்ட காலகட்ட அளவில் (Period of Taime) கணக்கிடப்படுபவையாகும். தேசிய வருவாய், ஏற்றுமதி, இறக்குமதி, நுகர்வு, உற்பத்தி, முதலீடு போன்றவை ஓட்ட மாறிலிகளுக்கு எடுத்துக்காட்டாகும்.

பொருளாதார மாதிரிகள் (Economic Models)

 • மாதிரி (Model) என்பது உண்மை சூழலை எளிமையாக பிரதிபலிப்பது ஆகும். பொருளாதார வல்லுநர்கள், பொருளாதார நடவடிக்கைகள், அவைகளுக்கிடையேயான உறவுகள், நடத்தைகள் பற்றி விவரிப்பதற்கு மாதிரிகளை பயன்படுத்துகின்றனர்.
 • மாதிரி என்பது, பொருளாதாரம் எவ்வாறு இயங்குகிறது என்பதை விளக்குகிறது. பெரும்பாலான பொருளாதார மாதிரிகள், கணிதம் (Mathematic) வரைபடங்கள் (Graphs) மற்றும் சமன்பாடுகளால் (Equations) அமைக்கப்பட்டு, பொருளாதார மாறிலிகளுக்கிடையேயான உறவுகளை விளக்க உதவுகின்றன. அளிப்பு- தேவை (Supply – Demand) மாதிரிகள், வட்ட ஓட்டம் (Circular flow) மாதிரிகள் மற்றும் ஸ்மித் மாதிரிகள் ஆகும்.

வருவாயின் வட்ட ஓட்டம்

 • ஒரு பொருளாதார அமைப்பின் வருவாயின் வட்ட ஓட்டம் மாதிரியானது அந்த பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளுக்கிடையே உள்ள தொடர்பினை விளக்குவதாகும். இது, பொருளாதார முகவர்களாகிய நிறுவனம், குடியிருப்பு, அரசாங்கம் மற்றும் நாடுகளிடையே வருவாய், பொருட்கள் மற்றும் பணிகள், மற்றும் உற்பத்தி காரணிகளின் ஓட்டத்தை காண்பிப்பதாகும். வருவாயின் வட்ட ஓட்டம் ஆய்வானது தேசிய கணக்குகள் மற்றும் பேரியல் பொருளாதாரத்தின் அடிப்படையாகும்.
 • முக்கிய பொருளாதார அமைப்புகளை பிரதித்துவம் செய்யும் மூன்று வருவாயின் வட்ட ஓட்ட மாதிரிகள் உள்ளன.
 1. இரண்டு துறை மாதிரி (Two Sector Model)

இது இல்லத்துறை (Household sector) மற்றும் நிறுவனத்துறையை (Firm sector)யஒ கொண்ட எளிய பொருளாதாரம்.

2. மூன்று துறை மாதிரி (Three Sector Model)

இது இல்லத்துறை, நிறுவனத்துறை மற்றும் அரசுத்துறை ஆகியவை அடங்கிய கலப்பு மற்றும் மூடிய பொருளாதாரத்திற்குரியது.

3. நான்கு துறை மாதிரி (Four Sector Model)

இது இல்லத்துறை , நிறுவனத்துறை, அரசுத்துறை மற்றும் வெளியுறவுத் துறை (External sector) ஆகியவை அடங்கிய திறந்த பொருளாதார அமைப்புக்குரியதாகும்.

இரு துறை பொருளாதாரத்தின் வருவாயின் வட்ட ஓட்டம் (Two Sector Economy)

இல்லத்துறை மற்றும் நிறுவனத்துறை என்ற இரு துறைகள் மட்டுமே காணப்படும்.

i) இல்லத்துறை (Household Sector)

இல்லத்துறை தான் பொருட்கள் மற்றும் பணிகளை வாங்கும் ஒரே துறையும், நிலம், உழைப்பு , மூலதனம் மற்றும் அமைப்பு ஆகிய உற்பத்தி காரணிகளை அளிக்கும் ஒரே துறையும் ஆகும். இத்துறை, அதன் அனைத்து வருவாயையும் நிறுவனத்துறை தயாரிக்கும் பொருட்கள் மற்றும் பணிகளை வாங்க பயன்படுத்துகிறது. இல்லத்துறையானது, அதற்கு சொந்தமான உற்பத்திக் காரணிகளை அளிப்பதன் மூலம் வருவாயை பெறுகிறது.

ii) நிறுவனத்துறை (Firm Sector)

நிறுவனத்துறையானது பொருள் மற்றும் பணிகளை இல்லத்துறைக்கு விற்பனை செய்வதன் மூலம் வருவாயை ஈட்டுகின்றது. இல்லத்துறைக்கு சொந்தமான நிலம், உழைப்பு, மூலதனம் மற்றும் அமைப்பு ஆகிய உற்பத்திக் காரணிகளை, பணியமர்த்துகிறது. நிறுவனத்துறை அதன் அனைத்து உற்பத்தியையும் இல்லத்துறைக்கு விற்பனை செய்கின்றது.

 • இருதுறை பொருளாதாரத்தில், உற்பத்தி மற்றும் விற்பனை சமமாகவும் வருவாய் மற்றும் பொருட்கள் வட்ட ஓட்டமாகவும் காணப்படும். வெளி வட்டமானது. உற்பத்திக்காரணிகள் மற்றும் பொருட்கள் பிரதிபலிக்கும் உண்மை ஓட்டம் (real Flow) மாகவும், உள் வட்டமானது காரணி விலை மற்றும் பொருள் விலையை குறிக்கும் பண ஓட்ட (Monetary Flow)மாகவும் காணப்படும்.
 • உண்மை ஓட்டம் (Real Flow) என்பது இல்லத்தூறையிலிருந்து நிறுவனத்துறைக்கு மாறும் உற்பத்தி காரணிபணிகளையும், நிறுவனத்துறையிலிருந்து இல்லத்துறைக்கு மாறும் பொருட்கள் மற்றும் பணிகளையும் குறிப்பதாகும். ஒரு இருதுறை பொருளாதாரத்தின் அடிப்படை அடையாளத்தை கீழ்க்கண்டவாறு குறிப்பிடலாம்.

Y = C + I

இங்கு

Y என்பது வருவாய் (Income); C என்பது நுகர்வு (Consumption); I என்பது முதலீடு (Investment)

மூன்று துறை பொருளாதாரத்தின் வருவாயின் வட்ட ஓட்டம்

 • இல்லம் மற்றும் நிறுவனத்துறைக்கு மேலாக அரசுத்துறை சேரும்போது மூன்று துறை மாதிரி (Three Sector Model) அமைகிறது. அரசானது இல்லத்துறை மற்றும் நிறுவனங்களில் வரி விதிக்கின்றனர் நிறுவனங்களிலிருந்து பொருள் மற்றும் பணிகளை வாங்குகின்றன.
 • மேலும், இல்லத்துறையிலிருந்து உற்பத்தி காரணிகளையும் பெறுகின்றன. இதற்கு மாறாக, அரசானது ஓய்வு ஊதியம், நஷ்ட ஈடு, மானியம் ஆகிய சமூக பரிவர்த்தனைகளை இல்லங்களுக்கு வழங்குகிறது. அதுபோல, நிறுவனங்களிடமிருந்து வாங்கும் பொருள் மற்றும் பணிகளுக்கு பணமளிக்கிறது. மூன்று துறை பொருளாதார மாதிரியை வரைபடம் விளக்குகிறது.
 • மூன்று துறை மாதிரியில், தேசிய வருமானம் (National Income) என்பது நுகர்வுச் செலவு (Consumption Expenditure) முதலீட்டு செலவு (Investment Expenditure) மற்றும் அரசின் செலவு (Government Expenditure) ஆகியவற்றை கூட்டுவதால் அடையலாம்.

Y = C + I + G

இங்கு, Y = வருவாய்; C = நுகர்வுச் செலவு; I = முதலீட்டுச் செலவு; G = அரசின் செலவு

நான்கு துறை பொருளாதாரத்தின் வருவாயின் வட்ட ஓட்டம்

நான்கு துறை பொருளாதாரத்தில், இல்லம், நிறுவனம் மற்றும் அரசு இவற்றோடு வெளியுறவுத்துறையும் இணைக்கப்படுகிறது. நிஜவாழ்க்கையில், நான்கு துறை பொருளாதாரம் காணப்படுகிறது.

இந்த மாதிரியில் அமைந்துள்ள நான்கு துறைகளாவன.

 1. இல்லங்கள் (House hold)
 2. நிறுவனங்கள் (Firms)
 3. அரசு (Government)
 4. வெளியுறவுத் துறை (External Sector)

வெளியுறவு துறையில் அதிகமாக அடங்குவது ஏற்றுமதிகள் (Exports) மற்றும் இறக்குமதிகள் (Imports) இதை வரைபடம் விளக்குகிறது.

நான்கு துறை பொருளாதாரத்தில், ஒட்டு மொத்த செலவானது, உள்நாட்டு செலவுகள் (C + I + G) மற்றும் நிகர ஏற்றுமதி (X – M) ஐ உள்ளடக்கும்.

Y = C + I + G + (X – M)

தொகுப்புரை

பேரியல் பொருளாதாரம் ஒரு பொருளாதார அமைப்பின் நடத்தை மற்றும் செயல்பாட்டை முழுமையாகப் படிப்பது ஆகும். பெரிய கருத்துகளான வேலைவாய்ப்பு, தேசிய வருவாய், பணவீக்கம், வாணிபச் சூழல், வறுமை, ஏற்றத்தாழ்வுகள் வேறுபாடு, முதலீடு மற்றும் சேமிப்பு, மூலதன ஆக்கம், கட்டமைப்பு மேம்பாடு வங்கிகள், பொதுநிதி, பன்னாட்டு வாணிபம், வாணிப சமநிலை மற்றும் செலுத்துதலில் சமநிலை, மாற்று வீதம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை இது ஆய்கிறது. பொருளாதார மாதிரிகள் ஒரு பொருளாதார அமைப்பினை அறிய பயனுள்ளதாயிருக்கிறது வட்ட ஓட்ட மாதிரிகள் ஒரு பேரியல் பொருளாதாரத்தின் செயல்பாட்டை அறிவதற்கு அடிப்படையாக அமைகிறது.

பொருளாதார அமைப்பு முறை அடிப்படையில் ஒரு பொருளாதார அமைப்பை முதலாளித்துவ பொருளாதார அமைப்பு, சமத்துவ பொருளாதார அமைப்பு மற்றும் கலப்புப் பொருளாதார அமைப்பு என வகைப்படுத்தலாம். இருப்பினும், நவீன காலத்தில் நூறு சதவீதம் முதலாளித்துவ முறையையோ அல்லது சமத்துவ முறையையோ அல்லது நேர்த்தியான கலப்புப் பொருளாதார அமைப்பையோ காண்பது அரிதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *