Samacheer NotesTnpsc

இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் Notes 7th Social Science Lesson 19 Notes in Tamil

7th Social Science Lesson 19 Notes in Tamil

19] இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்

அறிமுகம்:

உலகின் பல பகுதிகளில் நிகழும் இயற்கை இடர்கள் மற்றும் பேரிடர்கள் குறித்த செய்திகளை ஒவ்வொரு நாளும் அனைத்து தொலைக்காட்சி மற்றும் செய்திதாள்கள் கொண்டு வருகிறது. இடர்களையும் பேரிடர்களையும் நிகழாமல் தடுக்க முடியாது. ஆனால் அதனுடைய அழிவைக் குறைக்க முடியும்.

இயற்கை இடர் என்றால் என்ன, பேரிடர் என்றால் என்ன?, பேரிடர் மேலாண்மை என்றால் என்ன? என்பதை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும். மேலும் பேரிடர் மேலாண்மை நுட்பங்களுடன், அதற்கு தொடர்புடைய கலைச்சொற்களையும் பற்றி கற்றுக்கொள்வோம்.

இடர் (Hazard):

பொதுவாக இடர் என்பது ஒரு ஆபத்தான நிகழ்வு, மனித செயல்பாடு அல்லது வாழ்க்கையில் இழப்பை ஏற்படுத்தும் நிலை, காயம், பொருட்சேதம், சொத்துக்கள் தேசமடைதல், வேலையிழப்பு, சுகாதார பாதிப்புகள், வாழ்வாதார இழப்பு, சமூக, பொருளாதார இடையூறு மற்றும் சுற்றுச்சூழல் சேதம் போன்றவையாகும். இயற்கை இடர்கள் என்பது இயற்கை நிகழ்வுகளையும், மற்றும் சுற்றுச்சூழல் மேல் ஏற்படும் எதிர்மறைத் தாக்குதலாகும். இயற்கை இடர்களை புவியியல் மற்றும் உயிரியல் இடர்கள் என இரு பிரிவுகளாக வகைகப்படுத்தப்பட்டுள்ளது.

பேரிடர்(Disaster):

ஒரு பேரிடர் என்பது பொதுவாக “சமூகத்தில் ஒரு கடுமையான இடையூறு, பரவலான பொருள், பொருளாதார, சமூக அல்லது சுற்றுச்சூழல் இழப்புகளை ஏற்படுத்துகிறது. இது பாதிக்கப்பட்ட சமூகத்தின் சொந்த வளங்களைப் பயன்படுத்தி சமாளிக்கும் திறனை மீறுகிறது.”

பேரழிவு தாக்கங்களில் உயிர் இழப்பு, காயம், நோய் மற்றும் மனித உடல், மன மற்றும் சமூக நல்வாழ்வில் பிற எதிர்மறையான விளைவுகள், சொத்து சேதம், சொத்துக்களை அழித்தல், சேவைகள் இழப்பு, சமூக மற்றும் பொருளாதார சீர்குலைவு மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு ஆகியவ அடங்கும்.

மனித வாழ்வில் பெரிய அளவில் சொத்துக்கள் மற்றும் மனித உயிர்கள் பரவலாக பாதிக்கப்படும்போது அவை பேரழிவுகள் என்று அழைக்கப்படுகின்றன.

உதாரணம்:

சூறாவளி (ஹரிக்கேன்) என்பது ஒரு இயற்கை இடர்! இது கடலில் உருவாகிறது. இந்த சூறாவளி நிலத்தை வந்து அடையும் பொழுது கட்டடங்களை சேதப்படுத்துகின்றன. மேலும் உயிர்சேதத்தையும் ஏற்படுத்துகிறது. இதனால் இதை பேரிடர் என அழைக்கின்றனர்.

பேரிடர்களின் வகைகள்:

வ.எண். பேரிடரின் வகை ஆதாரம் நிகழ்வுகள்
இயற்கைப் பேரிடர் புவி உட்பகுதியில் நிலநடுக்கம், சுனாமி மற்றும் எரிமலை வெடிப்புகள்
புவி மேற்பரப்பில் நிலச்சரிவு மற்றும் பனிச்சரிவு
வானிலை ஆய்வு/நீர் வளம் புயல்காற்று, சூறாவளி, பனிமழை மற்றும் வெள்ளம்
சுகாதாரம் தொற்றுநோய்கள்
மனிதனால் உருவாகும் பேரிடர் சமூக தொழில்நுட்பம் தொழில்நுட்ப, போக்குவரத்து பேரழிவுகள், கட்டமைப்பு சரிவு மற்றும் உற்பத்தி வீழச்சிகள்
போர் தேசிய மற்றும் சர்வதேச அளவில்

இயற்கை பேரிடர்கள்: நிலநடுக்கம்:

ஒரு திடீர் நகர்வு (அல்லது) புவி மேலோட்டில் ஏற்படும் நடுக்கத்தை நில நடுக்கம் என அழைக்கின்றோம். புவித்தட்டுகளின் நகர்வு, நிலச்சரிவு, மற்றும் மேற்பரப்பு பிளவு போன்றவை நில நடுக்கத்திற்கு காரணமாகின்றன.

பாதிப்புகள்:

அதிகப்படியான நில நடுக்கத்தால் கட்டடங்கள், சாலைகள், பாலங்கள் மற்றும் அணைக்கட்டுகள் இடிந்து சேதமடைகிறது. நிலநடுக்கத்தால், வெள்ளம், சுனாமி, நிலச்சரிவு, தீ, மின்சாரம் துண்டிக்கப்படுதல் மற்றும் நீர் குழாய்கள் உடைதல் போன்றவை நிகழ்கின்றன. மேலும் இது ஆற்றின் பாதையைக் கூட மாற்றியமைக்கிறது.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட விளைவுகள்

இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் அண்மையில் ஏற்பட்ட இடர்கள்:

2018 மே 2 மற்றும் 3 தேதியில் அதிக திசை வேகத்துடன் வீசிய புழுதிப்புயல் வட இந்தியாவின் ஒரு பகுதியைத் தாக்கியது. அதில் உத்திரபிரதேசத்தில் 43 பேர், இராஸ்தானில் 35 பேர் மற்றும் பிற மாநிலத்திலும் பலர் இறந்தனர். 200க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த காற்றானது 8000 மின்கம்பங்களை கீழே சாய்த்தது. நூற்றாண்டுகளாக வாழ்ந்த மரங்களையே வேரோடு சாய்த்தது.

2004 சுனாமிக்குப் பிறகு, தமிழகத்தைத் தாக்கிய மிக மோசமான புயல் கஜா. இது கடலோர மாவட்டங்களில் மிக மோசமான சேதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக வேளாண்மையை சீர்குலைத்தது.

கஜா புயலின் தாக்கம்

வட இந்தியாவில் புழுதிப் புயலின் தாக்கம்

ஆழிப்பேரலை (சுனாமி):

நிலநடுக்கம் கடலுக்கு அடியில் ஏற்படும் நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு மற்றும் குறுங்கோள்கள் போன்றவற்றால் ஏற்படும் மிகபெரிய அலைகளே ஆழிப்பேரலையாகும். கடல் அலைகள் பல மீட்டர்கள் உயர எழுந்து சில நிமிடங்களில் கடற்கரையை அடைகிறது.

பாதிப்புகள்:

வெள்ளப்பெருக்கு, போக்குவரத்து இடையூறு, மின்சாரம், தகவல் தொடர்பு, தண்ணீர் விநியோகம் போன்றவற்றைப் பாதிக்கின்றது.

வெள்ளப்பெருக்கு:

கனமழை, புயல், பனி உருகுதல், ஆழிப்பேரலை (சுனாமி) அல்லது அணைக்கட்டு உடைதல் போன்றவற்றால் திடீரென ஏற்படும் அதிக அளவிலான நீர் வெளியேறுதலே வெள்ளப்பெருக்கு என்கிறோம்.

பாதிப்புகள்:

  1. சொத்து மற்றும் உயிரிழப்பு.
  2. மக்கள் இடப்பெயர்வு.
  3. காலரா மற்றும் மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவுதல்.

புயல்:

உயர் அழுத்தத்ததால் சூழப்பட்ட குறைவழுத்தப் பகுதியில் உருவாகும் காற்று “புயல்” என அழைக்கப்படுகிறது.

புயலினால் ஏற்படும் பாதிப்புகள்:

வெப்ப மண்டல சூறாவளியால் உருவாகும் முக்கிய பாதிப்புகளில் கனமழை, பலத்த காற்று, கரையின் அருகில் பெரிய புயல் மற்றும் சுழல்காற்று உள்ளடங்கும்.

புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கடலோர பகுதிகளான வேதாரண்யம் மற்றும் நாகப்பட்டினத்தைச் சுற்றிலும் 2018ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி அதிகாலையில் கஜா என்னும் தீவிர புயல்காற்று 120 கி.மீ. வேகத்தில் வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

நாகப்பட்டினத்தில் கஜா புயலினால் ஏற்பட்ட பாதிப்புக்கள்

மனிதனால் உருவாகும் பேரிடர்கள்

நெரிசல்:

நெரிசல் என்பது மக்கள் கூட்டத்தில் திடீரென ஏற்படும் பாதிப்பை குறிக்கும். காயங்கள், மூச்சுத்திணறல் மற்றும் மிதித்தலினால் ஏற்படும் காயம், போன்றவை இதன் விளைவாக அமையும். பெரிய அளவிலான மக்கள் நெரிசலினால் ஏற்படும் பேரிடர் எளிமையான கூட்ட மேலாண்மை உத்திகளால் தடுக்க முடியுமென நம்பப்படுகிறது. மக்கள் கூட்ட நெரிசலானது, நிர்வாகம் போக்குவரத்து கட்டுப்பாடுகளான தடைகள், வரிசைமுறை பின்பற்றுதல் மற்றும் கூட்டம் கூடுதலை தவிர்த்தல் போன்றவைகளால் தடுக்கபடலாம்.

தீ:

தீ என்பது ஒரு பேரிடர். அது குறுகிய மின்சுற்று, வேதியியல் தொழிற்சாலை, தீப்பெட்டி, மற்றும் வெடி தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்தினை குறிக்கும்.

தீயின் மூன்று அம்சங்கள்:

  1. கண்டறிதல்.
  2. தடுத்தல்.
  3. அணைத்தல்

மலைப்பாங்கான பகுதியில் ஏற்படும் காட்டுத்தீ விபத்துகள்

பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்படும் தீ விபத்துகள்

தீ விபத்திற்கு முன், தீ விபத்தின்போது, தீ விபத்திற்குபின் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

தொழிற்சாலை பேரிடர்:

தொழிற்சாலையானது அதன் உற்பத்தி, மற்றும் எஞ்சிய கழிவுகளை அகற்றுதல், அணுமின் மற்றும் வேதியியல் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுப்பொருள்களால் பல ஆபத்துக்களை எதிர் கொள்கின்றன. உதாரணம்: போபால் விஷவாயு கசிவு.

பேரிடர் மேலாண்மை:

பேரழிவின் விளைவுகளைத் தணிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட நடவடிக்கைகள் பேரழிவு மேலாண்மை என்று அழைக்கப்படுகின்றன. பேரிடர் மேலாண்மையின் நிலைகள் ஆறு படிநிலைகளை கொண்டுள்ளது. அவை பின்வருமாறு:

பேரிடாருக்கு முன் ஆபத்தைக் குறைத்தல் நிலை:

  • தயார்நிலை.
  • மட்டுப்படுத்துதல்.
  • கட்டுப்படுத்துதல்.

பேரிடருக்குப் பின் மீட்டெடுத்தல் நிலை:

  • துலங்கல்.
  • மீட்டல்.
  • முன்னேற்றம்.

பேரிடர் மேலாண்மை சுழற்சி (அ) பேரிடர் சுழற்சி:

பேரிடர் மேலாண்மை நிலைகள் ஆறு படிநிலைகளாகக் கொண்டு பேரிடர் சுழற்சியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பேரிடருக்கு முந்தைய நிலை:

கட்டுப்படுத்துதல் மற்றும் மட்டுப்படுத்துதல்:

எதிர்கால பேரழிவு அச்சுறுத்தலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்துதல் மற்றும் தவிர்க்க முடியாத அச்சுறுத்தலின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளைக் குறைத்தல் ஆகியவை அடங்கும். பேரழிவைக் குறைத்தல் என்பது தாக்கத்தின் அளவை குறைப்பதாகும். மட்டுப்படுத்துதல் என்பது ஆபத்தை குறைப்பது மற்றும் பாதிக்கக்கூடிய நிலைமைகளை குறைப்பது போன்ற நடவடிக்கைகளுடன் தொடாபுடையதாகும்.

இந்த இயற்பியல் காரணிகளுக்கும் கூடுதலாக, தீமை, மற்றும் பாதிப்பிற்கு அடிப்படைக்காரணங்களும் மற்றும் அச்சுறுத்தக்கூடிய உடல் ரீதியான, பொருளாதார, சமூகத் தீமைகளைக் குறைப்பதும் மட்டுப்படுத்தலின் முக்கிய குறிக்கோளாக அமைகிறது. எனவே மட்டுப்படுத்தல் என்பது நில உரிமை, குத்தகை உரிமைகள், வளங்கள் பரவல், புவி அதிர்ச்சியைத் தாங்கக்கூடிய கட்டட குறியீடுகள் செயல்படுத்த இன்னும் பல இது போன்ற பிரச்சனைகளை அடையாளம் காணுதல் போன்றவற்றையும் உள்ளடக்கியதாகும்.

தயார்நிலை:

இந்த படிநிலையானது அரசாங்கம், சமூகங்கள் மற்றும் தனி ஒரு மனிதன் பேரிடர் சூழ்நிலைகளை திறம்பட சமாளிக்க எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை உள்ளடக்கியதாகும். உதாரணமாக, அரசின் அவசரநிலை திட்டங்கள், எச்சரிக்கை அமைப்பை மேம்படுத்துதல், சரக்குகளின் பராமரிப்பு, பொதுமக்கள் விழிப்புணர்வு, கல்வி மற்றும் தனிநபர் பயிற்சி போன்றவை அடங்கும்.

தொடர் பேரழிவின் ஆபத்தில் உள்ள பகுதிகளுக்கான மீட்பு நடவடிக்கைகளைக் கண்டறிவதுடன் திட்டங்களை வெளியேற்றவும் இதில் அடங்கும் அனைத்து வகை தயார் நிலை திட்டங்களும் உரிய பொறுப்பு மற்றும் பட்ஜெட் ஒதுக்கீடுகளும் கூடிய சட்ட விதி மற்றும் ஒழுங்குமுறைகளினாலும் ஆதரிக்கப்பட வேண்டும்.

ஆரம்பகால எச்சரிக்கை:

பேரிடர் ஆரம்பிக்கும் நிலையில் பாதிக்கப்படக் கூடியதாக உள்ள பகுதிகளைப் பார்வை இடுவது மற்றும் பேரிடர் தொடங்க உள்ளது என்ற செய்தியினை மக்களுக்கு பாதிப்பில்லாத வழியில் தெரிவிப்பது போன்றவை ஆரம்ப கால எச்சரிக்கையாகும். பயனுள்ளதாக அமைய, என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென அளிக்கப்படும் எச்சரிக்கை நிகழ்வுகள் மக்கள் கல்வி மற்றும் பயிற்சியுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.

பேரிடரின் தாக்கம்:

பேரிடரின் தாக்கம் என்பது பேரிடர் நிகழும் கால அளவு மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்பையும் குறிக்கும். பேரிடர் நிகழும் கால அளவு என்பது அச்சுறுத்தலின் வகையைப் பொறுத்து அமையும். புவி அதிர்ச்சியின் போது நில நடுக்கமானது சில நொடிகள் நிகழும். அதுவே, ஆழிப்பேரலை ஏற்பட ஒரு காரணமாகிறது.

பேரிடரின் போது: துலங்கல்:

கட்டுப்பாட்டு அறைகளை அமைத்தல், தற்செயல் திட்டத்தை செயல்படுத்துதல், எச்சரிக்கை விடுதல், வெளியேற்றுவதற்கான நடவடிக்கை, மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்வது, தேவைப்படுபவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குதல், ஒரே நேரத்தில் நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட எந்தவொரு பேரிடருக்கும் இது முதல் கட்ட பதிலைக் குறிக்கிறது.

வீடு இழந்தோருக்கு உணவு, உடை, குடிநீர் மற்றும் நிவாரணம் வழங்குதல், தகவல் தொடர்பு மறு சீரமைத்தல், பணமாகவோ அல்லது கருணையாகவோ உதவி வழங்குதலும் அடங்கும். பேரிடரின் போதோ, பேரிடரினைத் தொடர்ந்தோ அவசர கால நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதில் நிவாரணம் வழங்குதல், மீட்பு, சேதார மதிப்பீடு மற்றும் தேவையற்ற குப்பைகளை நீக்குதலும் அடங்கும்.

பேரிடருக்குப் பின் மீட்பு நிலை:

மீட்புநிலை என்பது அவசரகால நிவாரணம் வழங்குதல், மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்பு போன்ற 3 நிலைகளை உள்ளடக்கியது.

மறுவாழ்வு:

மறுவாழ்வு என்பது இடைக்கால நிவாரணமாக தற்காலிக பொது பயன்பாட்டுப் பொருள்கள் மற்றும் வீடுகள் வழங்குதல் அடங்கும் இது நெடுங்காலதிற்கு உதவக்கூடிய வகையில் அமையும்.

மறு சீரமைப்பு:

எல்லா அமைப்புகளும் இயல்பான அல்லது சிறப்பான நிலைக்கு வரும் வரை மீட்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன. கட்டட மறுசீரமைப்பு, அடிப்படை வசதிகள் வழங்குதல் இதில் அடங்கும். இதன் மூலம் பழைய நிலையே மீண்டும் தொடராமல் நிகழ நீண்ட கால மேம்பாட்டிற்கான வாய்ப்பினை அதிகரிக்கிறது.

வளர்ச்சி:

வளர்ந்து வரும் பொருளாதாரத்தில், வளர்ச்சி மேம்பாட்டு திட்டம் என்பது தற்போதைய செயல்பாடு ஆகும். நீண்ட கால தடுப்பு மற்றும் பேரிடரைக் குறைத்தல் என்பது வெள்ளப் பெருக்கினைத் தடுக்கும் வகையில் ஏரிக்கரை கட்டுதல், வறட்சியை ஈடுகட்ட நீர்ப்பாசன வசதிகள் செய்தல், நிலச்சரிவினைச் சரிசெய்ய மரம் நடுதல், சூறாவளி காற்று மற்றும் நிலநடுக்கத்தைத் தாங்கிக் கொள்ளும் வீடுகள் கட்டுதல் ஆகியவை மேம்பாட்டுத் திட்டத்தில் அடங்கும்.

இந்தியாவில் நடைமுறையில் உள்ள சில பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகள் குறித்து பார்ப்போம்.

இடரை மட்டுப்படுத்துதல் முக்கியமானது ஏன்?

பேரிடருக்குப்பின் மீட்டெடுத்தல் என்பதை விட இயற்கைப் பேரிடரை மட்டுப்படுத்துதல் என்பது குறைந்த செலவுடையதாகும். இடரை மட்டுப்படுத்துதல் என்பது எதிர்கால பேரிடர் விளைவுகளைக் குறைப்பதற்கான செயல் திட்டம் ஆகும்.

இடர்களின் பாதகமான பாதிப்பு மற்றும் பேரழிவிற்கான வாய்ப்பைக் குறைக்கும் பொருட்டு நிர்வாக கொள்கைகளை முறையான வழிமுறையில் பயன்படுத்துதல், நிறுவன மற்றும் செயல்பாட்டு திறன்கள் வளர்த்தல், சமாளிக்கும் திறனை அதிகப்படுத்துதல் போன்றவை பேரிடர் மேலாண்மை எனப்படும்.

இந்தியாவின் எச்சரிக்கை மையங்கள்:

அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை (DST), விண்வெளித்துறை(DOS), மற்றும் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் (CSIR) ஆய்வகங்கள் இந்தியப் பெருங்கடலில் சுனாமி புயல் எழுச்சி எச்சரிக்கை மையங்களை அமைத்துள்ளன.

இந்தியாவில் பேரிடர் மேலாண்மை:

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் NDMA என சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இது உள்துறை அமைச்சகத்தின் நிறுவனமாகும். இதன் முதன்மை நோக்கமானது இயற்கை மற்றும் மனிதனால் உருவாகும் பேரிடர்களுக்கான செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல், பேரழிவு நெகிழித் திறனில் மேம்பாடு, நெருக்கடிக்கால செயல்பாடு ஆகும்.

டிசம்பர் 25, 2005-ந் தேதி இந்திய அரசால் கொண்டுவரப்பட்ட பேரிடர் மேலாண்மை சட்டத்தின் மூலம் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) உருவாக்கப்பட்டது. தேசிய பேரிடர் மறுமொழி படை என்பது பேரழிவு மேலாண்மைச் சட்டம் 2005ன் கீழ் அச்சுறுத்தும் பேரழிவு நிலைமை அல்லது பேரழிவுக்கு நிபுணர் பதிலளிக்கும் நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட ஒரு சிறப்பு சக்தியாகும்.

தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (NDMI):

இந்தியாவில் இயற்கை பேரழிவுகளை நிர்வகிப்பதற்கான பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கான ஒரு முதன்மை நிறுவனமாகும்.

தமிழ்நாட்டில் பேரிடர் மேலாண்மை:

  • தமிழ் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமானது பேரழிவை மட்டுப்படுத்துதல், தயார்நிலை, துலங்கல் மற்றும் மீட்டெடுத்தல் போன்றவற்றிற்கு பொறுப்பானது ஆகும். இவை அனைத்தும் ஆணையத்தின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.
  • தமிழ்நாடு பேரிடர் மறுமொழி படை (SDRF) என்பது 80 போலீஸ் தனிப்படையுடன் அமைக்கப்பட்டது. இவர்கள் பேரிடர் மேலாண்மையில் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் தேசிய பேரிடர் மறுமொழி (NDRF) படையின் ஆலோசனையின்படி மீடபுச் செயல்களில் ஈடுபடுவோர்.
  • மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் (DDMA) மாவட்ட அளவிலான பேரிடர் மேலாண்மைக்கு பொறுப்பு ஆகும்.

மாநில பேரிடர் மேலாண்மைத்திட்டம் 2018-2030 முன்னோக்கத் திட்டமானது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்திற்கும், மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கும் இடையே ஒரு சிறு அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. தொலைபேசி, தொலைநகல் (FAX) மற்றும் மாநிலப் பிரிவுகள், தாலுகா, மாவட்ட தலைநகரை மாநிலத்தோடு தொடர்புபடுத்த IP தொலைபேசி மூலமும் மவாட்டத்தில் மீட்டெடுத்தல் பணி செய்யப்படுகிறது. கம்பியில்லா வானிலை அலைவரிசையானது மாநிலத்தில் அதிக அலைவரிசை மற்றும் குறைந்த அலைவரிசையிலும் கிடைக்கிறது.

உயிர் வாழ்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

  • புவி அதிர்ச்சியின் போது மேஜையின் கீழ் செல்; தரையில் மண்டியிடு மற்றும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். உறுதியான சுவற்றின் அருகில் செல், தரையில் அமர் மற்றும் தரையை இறுகப் பிடித்துக்கொள் மற்றும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். டார்ச் விளக்கினை மட்டும் பயன்படுத்தவும்.
  • வெள்ள முன்னறிவிப்பின் போது முதலுதவிக்குத் தேவையான பொருள்களை சேமித்து வைக்கவும், உள்ளுர் ரேடியோ மற்றும் தொலைக்காட்சி அறிவிப்புகளைக் கவனியுங்கள். நில நடுக்கம் மற்றும் வெள்ளத்தின் போது அனைத்து மின்சார இணைப்புகளைத் துண்டித்துவிடவும்.
  • தீ விபத்து எனில் அவசர சேவைக்கு 101 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
  • ஒருவருக்கு ஆடையில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டால், அவரை ஓடாமல் தரையில் படுத்து உருள செய்ய வேண்டும்.
  • சாலை விபத்தினைத் தவிர்க்க வேண்டுமெனில், ஓட்டுநர் உரிமம் பெற்றவரை மட்டுமே வாகனத்தை இயக்க அனுமதிக்க வேண்டும். சாலையில் நடந்து செல்லும்போதும், வாகனத்தை இயக்கும் போதும் பின்பற்றபட வேண்டிய சாலை விதிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
  • இரயில் பாதுகாப்பு ஆலோசனைகளை தெரிந்து கொண்டு அதன்படி பின்பற்ற வேண்டும். இரயில் எந்த நேரமும், எந்த திசையிலும் வரக்கூடும்.
  • இரயில் நிலைய மேடையின் ஓரங்களில் அமரக்கூடாது.
  • தண்டவாளங்களைக் கடந்து செல்ல கூடாது நடைமேடையை பயன்படுத்தவும்.
  • விமான நிலையத்தில் இருக்கும் போது பாதுகாப்பு குறித்த அறிவிப்பைக் விமானக் குழுவினர் அறிவிக்கும் பொழுது கவனமுடன் கேட்க வேண்டும். இருக்கை பையில் உள்ள பாதுகாப்பு விளக்க அட்டையினை வாசித்து அதில் பின்பற்ற வேண்டிய வழிகளை கையாள வேண்டும்.

சுருக்கம்:

  • இடர் மற்றும் பேரிடர் இரண்டுமே பொருட்சேதம் மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தும்.
  • பேரிடர் மேலாண்மை என்பது இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரிடரின் போது சொத்து மற்றும் உயிரைப் பாதுகாத்தலைக் குறிப்பது ஆகும்.
  • தயார்நிலை, மட்டுப்படுத்துதல், கட்டுப்படுத்துதல், துலங்கல், மீட்டெடுத்தல் மற்றும் முன்னேற்றம் ஆகியவை பேரிடர் மேலாண்மையின் ஆறு நிலைகள் ஆகும்.
  • புவி அதிர்ச்சி, சுனாமி, வெள்ளம் மற்றும் புயல் ஆகியன சில இயற்கைப் பேரிடர்களாகும்.
  • தீ விபத்து மற்றும் தொழிற்சாலையில் ஏற்படும் விபத்துக்களும் மனிதனின் கவனக்குறைவால் ஏற்படும் இந்நிகழ்வுகளும் பேரிடர்களாகும்.
  • அவசர கால மருத்துவ உதவிக்கு எண் 108-ற்கும், தீ விபத்திற்கு எண் 101-ற்கும் அழைக்க வேண்டும்.
  • ஒருவருக்கு ஆடையில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டால், அவரை ஓடாமல் தரையில் படுத்து உருள செய்ய வேண்டும்.

கலைச்சொற்கள்:

இடர் A dangerous event Hazard
பேரிடர் An event which causes enormous damage to property and fife Disaster
பாதிப்பு Severity Vulnerability
மட்டுப்படுத்துதல் Reduce (or) make something less severe Mitigate
வானிலை அறிவிப்பு Forecasting of weather Meteorology
நடுக்கம் Shaking or vibration Trembling
தடுத்தல் Stop something before it happens Preventive
அணைத்தல் To stop a fire or light Extinguish
அவசரகால A serious, or dangerous situation Emergency
உளவியல் ரீதியான Mental or emotional state of a person Phychological

தெரியுமா உங்களுக்கு?

  • சுனாமி என்ற சொல் ஜப்பானிய சொல்லிருந்து பெறப்பட்டது ஆகும். சு (Tsu) என்பது துறைமுகம் என்றும் னாமி (name) என்பது அலைகள் எனவும் பொருள்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!