Samacheer NotesTnpsc

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாத்தின் காலம் Notes 12th History Lesson 5 Notes in Tamil

12th History Lesson 5 Notes in Tamil

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாத்தின் காலம்

அறிமுகம்

  • இந்திய தேசிய காங்கிரசில் இடதுசாரிகளின் செல்வாக்கும் படிப்படியாகச் சுதந்திரப் போராட்டத்தில் அது ஏற்படுத்திய தாக்கமும் 1920களின் பிற்பகுதியில் கணிசமான அளவில் உணரப்பட்டது.
  • இந்தியப் பொதுவுடைமைக் (கம்யூனிஸ்ட்) கட்சியானது எம்.என்.ராய், அபானி முகர்ஜி, எம்.பி.டி.ஆச்சார்யா, முகமது அலி, முகமது ஷாஃபிக் ஆகியோரால் உஸ்பெகிஸ்தானிலுள்ள தாஷ்கண்டிலும் பின்னர் சோவியத் யூனியனிலும் 1920ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் உருவாக்கப்பட்டது. அது இந்தியாவில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் ஒரு புதிய புரட்சிகர தேசியவாத சகாப்தம் தோன்ற வழிவகுத்தது.
  • ஏற்கனவே இந்தியாவில் பல புரட்சிகர தேசியவாதக் குழுக்கள் செயல்பட்டுவந்தன. முன்னதாக சோவியத் ரஷ்யாவின் வடிவில் ஒரு கம்யூனிஸ்ட் அரசு அமைந்தது இந்தியாவில் ஆங்கிலேயருக்குப் பெரிதும் அச்சமூட்டியது.
  • 1921 ஜூன் 3 இல் முதல் புரட்சிகர தேசியவாதக் குழுவினர் பெஷாவருக்கு வந்தனர். கலகம் விளைவிப்பதற்காக இந்தியாவுக்கு ரஷ்ய கம்யூனிஸ்ட் இயக்கத்தினரான போல்ஷ்விக்குகள் வந்துள்ளனர் என்று குற்றம் சாட்டி, அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர்.
  • 1922 – 1927ஆம் ஆண்டுகளுக்கு இடையில் அவர்கள் மீது தொடர்ச்சியாக ஐந்து சதி வழக்குகள் தொடுக்கப்பட்டன. அவற்றுள் முதலாவது பெஷாவர் சதி வழக்கு ஆகும். இதனைத் தொடர்ந்து கான்பூர் (போல்ஷ்விக்) சதி வழக்கு 1924ஆம் ஆண்டிலும் மிகவும் பிரசித்தி பெற்ற மீரட் சதி வழக்கு 1929ஆம் ஆண்டிலும் தொடுக்கப்பட்டன. இதற்கிடையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய மண்ணில் 1925இல் பம்பாயில் முறைப்படி தொடங்கப்பட்டது.
  • ஆங்கிலேயர் அண்டுவந்த இந்தியாவில் அப்போது சோசலிச லட்சியங்களை ஏற்றுக்கொண்ட பல்வேறு தேசபக்த புரட்சிகரக் குழுக்கள் செயல்பட்டுவந்தன.
  • ஆனால் அவை கம்யூனிஸ்ட் கட்சிகள் அல்ல. இந்துஸ்தான் புரட்சிகர சோசலிசக் கூட்டமைப்பைச் சார்ந்த பகத்சிங் வங்காளத்தில் சிட்டகாங் படைத்தளத்தில் தொடர்ச்சியான தாக்குதலை ஏற்பாடு செய்த இந்திய குடியரசு இரணுவத்தைச் சேர்ந்த கல்பனா தத் ஆகிய இரண்டு புரட்சியாளர்கள் அடுத்த பகுதியில் கவனம் பெற உள்ளனர்.
  • இந்திய தேசிய காங்கிரசின் கராச்சி கூட்டத்தொடரும் அதில் நிறைவேற்றப்பட்ட புகழ் வாய்ந்த தீர்மானங்களும் –குறிப்பாக அடிப்படை உரிமைகளும் கடமைகளும் ஆகியனவற்றை அடுத்து நாம் பார்க்கவுள்ளோம்.
  • கடைசி இரண்டு தலைப்புகளும் உலகம் முழுவதும் நிலவிய மாபெரும் மந்தநிலை என்று பரவலாக அறியப்பட்ட பொருளாதார மந்தநிலை குறித்தும் இந்தியாவிலும் தமிழ்ச் சமூகத்திலும் அது விளைவித்த தாக்கமும் இந்தியாவில் பதிவான தொழில் மேம்பாடும் அதன் விளைவுகளும் குறித்தவௌ ஆகும்.
  • மாபெரும் மந்தநிலையானது உழைக்கும் தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு ஒரு கடுமையான அடியைக் கொடுத்ததைத் தொடர்ந்து இந்தியச் சுதந்திரத்தின் மீது ஒரு குறிப்பிடத்தக்க வகையில் செல்வாக்கும் செலுத்தியது.

கான்பூர் சதிவழக்கு, 1924

  • கம்யூனிஸ்ட் கொள்கைகள் பரவுவதைக் காலனிய ஆட்சியாளர்களால் மிகச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. பம்பாய், கல்கத்தா, மதராஸ் ஆகிய பிரிட்டானியர் பிரதேசங்களிலும் ஒன்றுபட்ட பிரதேசத்தில் கான்பூர் போன்ற தொழில்மையங்களிலும் பல காலத்திற்கு முன்பே தொழிற்சாலைகள் வந்துவிட்ட லாகூர் போன்ற நகரங்களிலும் புரட்சிகர தேசியவாதம் பரவியது.
  • அதன் விளைவாக சணல், பருத்தி ஆடைத் தொழிற்சாலைகளிலும் நாடெங்கிலுமுள்ள ரயில்வே நிறுவனங்களிலும் பல்வேறு நகராட்சிப் பணியாளர்கள் மத்தியிலும் தொழிற்சங்கங்கள் உருவெடுத்தன.
  • குறிப்பாக அப்போது போல்ஷ்விசம் என்று அழைக்கப்பட்ட அரசியல் புரட்சிகர தேசியவாதத்தை நசுக்கும் பொருட்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.
  • 1924ஆம் ஆண்டில் கான்பூர் சதிவழக்கு அத்தகையதொரு நடவடிக்கையே ஆகும். அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கம்யூனிஸ்ட்களும் தொழிற்சங்கவாதிகளும் ஆவர்.
  • குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆறுமாத கால அளவில் கைது செய்யப்பட்டனர். இந்திய தண்டனைச் சட்டம் 121 ஏ பிரிவின் கீழ் அவர்களுள் எட்டு பேர் “வன்முறையான புரட்சி ஒன்றின் மூலம் ஏகபோக பிரிட்டனிடமிருந்து இந்தியாவை முற்றிலும் பிரித்து பிரிட்டானிய இந்தியாவின் பேரரசரின் இறையாண்மைக்குக் குந்தகம் விளைவிப்பதாகக்” குற்றம் சாட்டப்பட்டுப் பல்வேறு சிறைகளுக்கு அனுப்பப்பட்டனர் .
  • இந்த வழக்கு மாட்சிமை பொருந்திய அமர்வு நீதிபதி H.E.ஹோம்ஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
  • இவர் கோரக்பூர் அமர்வு நீதிபதியாகப் பணியாற்றியபோது சௌரிசௌரா வழக்கில் தொடர்பு கொண்டவர்களாகக் குற்றம் சாட்டப்பட்ட 172 விவசாயிகளுக்கு மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்துப் பிரசித்தி பெற்றவர்.
  • கான்பூர் சதிவழக்கில் முசாபர் அகமது, சவுகத் உஸ்மானி, நளினி குப்தா, எஸ்.ஏ.டாங்கே ஆகியோர் நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அனுபவிப்பதற்காகச் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
  • இதற்கிடையில் , இந்த விசாரணையும் சிறைத் தண்டனையும் இந்தியாவில் கம்யூனிஸ்ட்களின் நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஓரளவுக்கு ஊட்டியது.
  • ஆங்கிலேயர் ஆண்ட இந்தியாவில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்களை அமர்த்தவும் நிதி திரட்டவும் ‘கம்யூனிஸ்ட்களின் பாதுகாப்புக் குழு’ ஒன்று உருவாக்கப்பட்டது. இவற்றுக்கு அப்பால், இந்தியாவின் மாநில மொழிப் பத்திரிகைகள் நீதிமன்ற நடவடிக்கைகளை மிக விரிவான முறையில் வெளியிட்டன.
  • சதி வழக்கின் விசாரணையும் சில தலைவர்கள் கைது செய்யப்பட்டதும் புரட்சிகர தேசியவாதத்தின் உணர்வை மழுங்கடிப்பதற்குப் பதிலாக்க் கம்யூனிஸ்ட்களின் நடவடிக்கைகளுக்கு உத்வேகத்தையே ஊட்டியது.
  • டிசம்பர் 1925 இல் இந்தியாவெங்கிலும் இருந்து வந்திருந்த பல்வேறு கம்யூனிஸ்ட்களின் குழுக்களின் மாநாடு ஒன்று நடந்தேறியது. இந்த மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து சிங்காரவேலர் சென்று கலந்துகொண்டார். அங்கிருந்துதான் பம்பாயைத் தலைமையிடமாகக் கொண்டு இந்திய கம்யூனீஸ்ட் கட்சி முறைப்படி நிறுவப்பட்டது.

கான்பூர் சதிவழக்கில் ஆரம்பத்தில் 13 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது:

  1. எம்.என்.ராய்
  2. முசாபர் அகமது
  3. சவுகத் உஸ்மானி
  4. குலாம் ஹுசைன்
  5. எஸ்.ஏ.டாங்கே
  6. எம்.சிங்காரவேலர்
  7. ஆர்.எல்.சர்மா
  8. நளினி குப்தா
  9. ஷமுத்தின் ஹாசன்
  10. எம்.ஆர்.எஸ்.வேலாயுதன்
  11. டாக்டர் மணிலால்
  12. சம்பூர்ண நந்தா
  13. சத்ய பக்தா.

8 பேர் மீதே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது: எம்.என்.ராய், முசாபர் அகமது, எஸ்.ஏ.டாங்கே, நளினி குப்தா, குலாம் ஹுசைன், சிங்காரவேலர், சவுகத் உஸ்மானி, ஆர்.எல். சர்மா. குலாம் ஹுசைன் அரசுத் தரப்புச் சாட்சியாக (அப்ரூவர்) மாறிவிட்டதால் அவர் விடுவிக்கப்பட்டார். எம்.என்.ராய், ஆர்.எ;.சர்மா ஆகியோர் முறையே ஜெர்மனியிலும் பாண்டிச்சேரியிலும் (ஒரு பிரெஞ்சுப் பிரதேசம்) இருந்ததால் நேரில் வரவழைக்காமல் குற்றப்பத்திரிகைகள் அனுப்பிவைக்கப்பட்டன. சிங்காரவேலர் மோசமான உடல்நிலை காரணமாக, அந்தப் பட்டியலில் நால்வர் மட்டுமே எஞ்சியிருந்தனர்.

எம்.சிங்காரவேலர் (18 பிப்ரவரி 1860 – 11 பிப்ரவரி 1946) மதராசில் பிறந்தார். இவர் இளமைக் காலத்தில் புத்தமதத்தைத் தழுவியவர். பிற கம்யூனீஸ்ட் இயக்கத் தலைவர்கள் பலரைப் போன்று இவரும் ஆரம்பத்தில் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து செயல்பட்டவர். எனினும், சில காலத்திற்குப் பிறகு அவர் புரட்சிகர தேசியவாதப் பாதையைத் தேர்ந்தெடுத்தார். திரு.வி.கல்யாணசுந்தரத்துடன் இணைந்து தென்னிந்தியாவில் பல தொழிற்சங்கங்களை இவர் தோற்றுவித்தார். 1923 ஆம் ஆண்டு மே மாதம் முதல் நாள் முதன்முறையாக நாட்டில் மே தினத்தைக் கொண்டாடினார். 1928ஆம் ஆண்டு தென்னிந்திய ரயில்வே வேலைநிறுத்தத்தை (பொன்மலை, திருச்சிராப்பள்ளி) ஏற்பாடு செய்ததில் இவர் முக்கியப் பங்கு வகித்தார். அதற்காகத் தண்டனை பெற்றார்.

மீரட் சதி வழக்கு, 1929

கம்யூனிஸ்ட்களின் செயல்பாடுகள்

  • 1929ஆம் ஆண்டின் மீரட் சதி வழக்குதான் அனேகமாக, ஆங்கிலேய அரசினரால் தொடுக்கப்பட்ட அனைத்துக் கம்யூனிஸ்ட் சதி வழக்குகளிலும் பெரிதும் புகழ்பெற்றதாகும்.
  • 1920களின் பிற்பகுதி ஏராளமான தொழிலாளர் எழுச்சிகளைக் கண்டது. இந்த நிலையின்மைக் காலம் மாபெரும் பொருளாதார மந்தநிலையின் சகாப்தம் (1929 – 1939) வரை நீண்டது.
  • தொழிற்சங்க நடவடிகைகள் பற்பல நகர்ப்புறங்களுக்குப் பரவி, தொழிலாளர் வேலைநிறுத்தங்களை ஏற்படுத்தியது. இந்தக் காலக்கட்டம் முழுவதிலும் உழைப்பாளி வர்க்கத்தை ஒருங்கிணைப்பதில் கம்யூனிஸ்டுகள் முக்கியப் பாத்திரத்தை வகித்தனர்.
  • 1927ஆம் ஆண்டு பிப்ரவரியிலும் செப்டம்பரிலும் நடைபெற்ற காரக்பூர் ரயில்வே பணிமனை வேலைநிறுத்தங்கள், 1928ஆம் ஆண்டு ஜனவரி, ஜூலை மாதங்களுக்கிடையில் நடைபெற்ற லில்லுவா ரயில் பணிமனை வேலைநிறுத்தம், 1928ஆம் ஆண்டின் கல்கத்தா துப்புரவுத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், 1929ஆம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வங்காளத்தின் சணல் ஆலைகளில் நடைபெற்ற பல்வேறு வேலைநிறுத்தங்கள், 1928ஆம் ஆண்டு ஜூலையில் திருச்சிராப்பள்ளியின் பொன்மலை பணிமனையில் நடைபேற்ற தென்னிந்திய ரயில்வே வேலைநிறுத்தம், 1928 ஏப்ரலில் பம்பாயில் நடந்தேறிய ஜவுளித் தொழிலாளர் வேலைநிறுத்தம் ஆகியன குறிப்பிட்டுச் சொல்லத்தக்கச் சில வேலைநிறுத்தங்கள் ஆகும்.

அரசு ஒடுக்குமுறை

  • இந்த வேலைநிறுத்தங்களின் அலையாலும் கம்யூனிஸ்ட் செயல்பாடுகள் பரவுதாலும் கவலை அடைந்த ஆங்கிலேய அரசு 1928ஆம் ஆண்டின் தொழிற்தகராறுகள் சட்டம், 1928 ஆம ஆண்டின் பொதுமக்கள் பாதுகாப்பு மசோதா ஆகிய இரு கொடுஞ்சட்டங்களை இயற்றியது.
  • இவ்விரு சட்டங்களும் பொதுவாகப் பொதுமக்கள் உரிமைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் – குறிப்பாக தொழிற்சங்க நடவடிக்கைகளை அடக்குவதற்கும் உரிய அதிகாரங்களை அரசுக்கு அளிப்பதாக விளங்கியது.
  • தொழிலாளர்கள், விவசாயிகள் மத்தியில் வலுவான கம்யூனிஸ்ட் செல்வாக்கு நிலவுவது கண்டு அரசு கவலை கொண்டது.
  • புரட்சிகர தேசியவாத இயக்கத்தை துடைத்தெறியத் தீர்மானித்த அரசு பல்வேறு ஒடுக்குமுறை நடவடிக்கைகளில் இறங்கியது. அவர்கள் பம்பாய், கல்கத்தா, பஞ்சாப், பூனா, ஒருங்கிணைந்த பிரதேசங்கள் போன்ற பிரிட்டிஷ் இந்தியாவின் பகுதிகளிலுருந்து கம்யூனிஸ்ட் கட்சியின் 32 முன்னோடிச் செயல்பாட்டாளர்களைக் கைது செய்தது.
  • அவர்கள் அனைவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் அல்லரெ எனினும் அவர்களில் பெரும்பாலானோர் தொழிற்சங்கச் செயல்பாட்டாளர்கள் ஆவார்கள்.
  • அவர்களில் குறைந்தபட்சம் 8 பேர் இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்தவர்கள். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டியமைக்க உதவுவதற்கென பிரிட்டானிய கம்யூனிஸ்ட் கட்சியால் அனுப்பிவைக்கப்பட்ட பிலிப்ன் ஸ்ப்ராட், பான் ப்ராட்லி, லெஸ்டர் ஹட்சின்சன் ஆகிய பிரிட்டானிய கம்யூனிஸ்டுகள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.
  • கான்பூர் சதி வழக்கில் கைது செய்யப்பட்டவர்களைப் போன்று இவர்களும் இந்திய தண்டனைச் சட்டம் 121 ஏ பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டனர். கைது செய்யப்பட்ட 32 தலைவர்களும் மீரட்டுக்கும் (அப்போது ஒருங்கிணைந்த பிரதேசத்தில் இருந்தது) கொண்டுவரப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
  • காலனிய நிர்வாகத்தினரால் ‘நிலைகுலைவிக்கும் விஷயங்கள்’ (subversive materials) என்று விவரிக்கப்பட்ட புத்தகங்கள், கடிதங்கள் போன்ற கணிசமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான சாட்சியங்களாக ஒப்படைக்கப்பட்டன.
  • விசாரணையை மீரட் நகரில் நடத்துவதென்று பிரிட்டானிய அரசு தீர்மானித்தது. (எடுத்துக்காட்டாக, குற்றம் சாட்டப்பட்டவர்களில் அதிகமானவர்கள் பிடிபட்ட பம்பாய் போன்ற இடங்களில் அல்லாமல்). எனவே அவர்கள் நடுவர் விசாரணை என்ற சலுகையைப் பெற முடிந்தது. நடுவர் விசாரணை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அனுதாபத்தை உருவாக்கக் கூடும் என்று அவர்கள் அஞ்சினர்.

விசாரணையும் தண்டனையும்

  • இதற்கிடையில், இந்த வழக்கில் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக ஒரு தேசிய மீரட் சிறைவாசிகளின் பாதுகாப்புக் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. கே.எஃப். நாரிமன், எம்.சி.சக்லா போன்ற புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வாதாடினர்.
  • காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு போன்ற தேசியத் தலைவர்கள்கூடச் சிறைக்குச் சென்று குற்றம் சட்டப்பட்டவர்களைப் பார்த்துவிட்டு வந்தனர். நமது சுதந்திரப் போராட்ட வரலாற்றில் இந்த வழக்கின் முக்கியத்துவத்தை இவையனைத்தும் காட்டுகின்றன.

  • 1929இல் நடைபெற்ற கைது நடவடிக்கைகளுக்கு நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் 1933 ஜனவரி 16இல் மீரட் அமர்வு நீதிமன்றம் கடுமையான தீர்ப்பை வழங்கியது. 27 பேர் தண்டிக்கப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
  • விசாரணையின்போது, கம்யூனிஸ்டுகள் அரசியல் சித்தாந்தங்களை உருவாக்கியதன் மூலம் தங்கள் தரப்பைத் தங்களுக்கான பிரச்சார மேடையாகப் பயன்படுத்திக் கொண்டனர். அவை செய்தித்தாள்களில் பரவலாக வெளியாகி அதன்வழியாக லட்சக்கணக்கான மக்கள் கம்யூனிசச் சித்தாந்தம் குறித்தும் அறிந்துகொண்டனர்.
  • தீர்ப்புக்கு எதிராகக் கிளர்ச்சிகள் வெடித்தன. இங்கிலாந்து நாட்டினர் மூவர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு சர்வதேச அளவிலும் தெரியவந்தது.
  • மிகவும் முக்கியமாக ரோமன் ரோலண்ட், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்றவர்களும் கூடக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.
  • தேசிய, சர்வதேச அழுத்தங்களின் காரணமாக, அவர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து ஜூலை 1933இல் தண்டனை வெகுவாகக் குறைக்கப்பட்டது.

பகத்சிங்கும் கல்பனா தத்தும்

பகத்சிங்கின் பின்புலம்

  • தேசியவாதத்தின் ஓர் ஒப்பற்ற நிலையைப் பகத்சிங் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவருடைய புரட்சிகர தேசியவாத நிலைப்பாடு, ஒரு தனித்த வழி என்ற அளவில் ஒட்டுமொத்த விடுதலை இயக்கத்தின் லட்சியங்களுக்காகப் பெரிதும் பாராட்டப்படுகிறது.
  • கிஷன்சிங் (தகப்பனார்), வித்யாவதி கவுர் (தாயார்) ஆகியோரின் மகனாக பகத்சிங், தற்போதைய பாகீஸ்தானின் ஒரு பகுதியான பஞ்சாப் மாநிலத்திலுள்ள லயல்பூர் மாவட்டம், ஜார்ன்வாலா என்ற இடத்தில் 1907 செப்டம்பர் 28இல் பிறந்தார்.
  • அவருடைய தகப்பனார் ஒரு தாராளவாதியாக இருந்தார். அவருடைய குடும்பத்தினட்ர் சுதந்திரப் போராட்டக்காரர்களாக விளங்கினர். பகத்சிங்கின் 14ஆம் வயதில் ஜாலியன்வாலாபாக் படுகொலை நிகழ்ந்தது.
  • அவர் தனது இளமைக்காலம் முதலாகவே, நவ்ஜவான் பாரத் சபா, ஹிந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேஷன் ஆகிய அமைப்புகளில் தன்னை இணைத்துக்கொண்டார்.
  • இதில் இரண்டாவது அமைப்பு சச்சின் சன்யால், ஜோகேஷ் சட்டர்ஜி ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்டது. செப்டம்பர் 1928இல் அதனைத் தொடர்ந்து ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷன் என்று பகத்சிங்காலும் அவரது தோழர்களாலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அவ்வமைப்புத் திருத்தியமைக்கப்பட்டது.
  • 1917இல் ரஷ்யாவில் நடந்தேறிய அக்டோபர் புரட்சியும் சோசலிசச் சித்தாந்தங்களும் இந்தப் புரட்சியாளர்களிடையே பெரும் செல்வாக்கைச் செலுத்தியது.
  • சந்திரசேகர ஆசாத், சிவராம் ராஜகுரு, சுகதேவ் தாபர் ஆகியோருடன் ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷனின் தலைவர்களில் ஒருவராக பகத்சிங் விளங்கினார்.

பகத்சிங்கின் குண்டுவீச்சு

  • பகத்சிங்கின் பெயரை நாம் குறிப்பிடும்போதே நமது நினைவுக்கு வருகிற சித்திரம் அவர் 1929 ஏப்ரல் 8இல் மத்திய சட்டமன்றத்தில் குண்டு வீசிய நிகழ்வுதான். அந்தக் குண்டுகள் எவரையும் கொல்லவில்லை.
  • ஆங்கிலேயர்களின் கொடுங்கோன்மைச் சட்டங்களுக்கு எதிரான ஒரு போராட்ட செயலாகச் செயல்பூர்வமான ஒரு நடவடிக்கையாகப் புரட்சியாளர்களால் அது கருதப்பட்டது. தொழிலாளர் வர்க்கத்திற்கு முற்றிலும் எதிரான ஒரு சட்டத்தைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றுவதற்காக அதற்கான தொழிற்தகராறுகள் மசோதாவை அறிமுகப்படுத்தும் நாளை அவர்கள் இதற்கெனத் தேர்ந்தெடுத்திருந்தனர்.

லாகூர் சதி வழக்கு

  • ராஜகுரு, சுகதேவ், ஜதீந்திரநாத் தாஸ் ஆகியோருடன் பகத்சிங்கும் மேலும் 21 பேரும் கைது செய்யப்பட்டனர். சாண்டர்ஸ் கொலை தொடர்பான விசாரணைக்கு அவர்கள் ஆளாக்கப்பட்டனர் (இந்த வழக்கு இரண்டாவது லாகூர் சதி வழக்கு என்று அறியப்படுகிறது).
  • சிறையின் மோசமான நிலைமைகள், பாரபட்சமான நடவடிக்கைகள் ஆகியவற்ரை எதிர்த்து உண்ணாவிரதம் மேற்கொண்டச் ஜதீந்திரநாத் தாஸ் 64 நாட்களுக்குப் பின்னர் சிறையிலேயே மரணம் அடைந்தார்.
  • லாகூரில் சதி வழக்கின் விசாரணைகள் முடியும்வரை குண்டு வீச்சு வழக்கின் தீர்ப்பு ஒத்துவைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில்தான் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு 1930 அக்டோபர் 7 அன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.
  • தேசத்தின் விடுதலைக்காக மரணத்தை எதிர்கொள்ளும் தருணத்திலும் இந்தியாவின் எதிர்காலத்தைக் குறித்து நம்பிக்கையையும் துணிவையும் காட்டிப் பஞ்சாப் மாநில ஆளுநருக்கு அவர்கள் கடிதம் ஒன்றை அனுப்பினர். அந்தக் கடிதத்தில் “முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்தப் போர் எங்களுடன் தொடங்கியதுமல்ல, எங்கள் வாழ்க்கையுடன் முடிவு பெறப்போவதுமல்ல …
  • நாங்கள் போர் தொடுத்ததால் போர்க் கைதிகள் ஆனோன் என்று உங்கள் நீதிமன்றத் தீர்ப்பு கூறுகிறது. அப்படியானால் எங்களைத் துக்கிலிடுவதற்குப் பதிலாகச் சுட்டுக் கொல்லுங்கள்” என்று கோரப்பட்டிருந்தது.
  • பகத்சிங்கையும் அவருடன் இருந்த தேசபக்தர்களையும் புரட்சிகர தேசியவாதிகள் எனச் சில குறிப்புகள் விவரிக்கின்றன. அது ஒரு தவறான கருதுகோள் ஆகும்.
  • வரலாற்றுப் புகழ்பெற்ற பகத்சிங், பிற புரட்சிகர தேசியவாதிகளிடமிருந்து அவருடைய குழுவினர் எவ்விதம் வேறுபடுகின்றனர் என்று விளக்கம் அளித்துள்ளார். “புரட்சி என்பது வெறும் குண்டு எறிதலோ கைத்துப்பாக்கியால் சுவதோ அல்ல. புரட்சி என்பது மனிதகுலத்தின் பிரிக்க முடியாத உரிமை ஆகும்.
  • சுதந்திரம் என்பது அனைவரின் அழியாத பிறப்புரிமை ஆகும். உழைப்பாளிகள், சமூகத்தின் உண்மையான ஆதரவாளர்கள் ஆவர். இந்தப் புரட்சியின் பலிபீடத்தில் நாம் மாபெரும் லட்சியத்துக்காக அளிக்கும் எந்த்த் தியாகமும் அதற்கு முன் பெரிதல்ல” என்று விசாரணையின்போது நீதிமன்றத்தில் அவர் கூறினார்.
  • இதனை உணர்த்தும் விதமாக அவர்களது தரப்பு அறிக்கையை விடுத்த பின்பு ‘புரட்சி ஓங்குக’ (Inquilab Zindabad) என்று அவர்கள் முழக்கமிட்டனர்.
  • லாகூர் சிறைச்சாலையில் 1931 மார்ச் 23 அன்று அதிகாலையில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். தங்கள் இறுதிமூச்சு அடங்கும்வரை ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் ‘புரட்சி ஓங்குக’ என்று முழங்கியவாறு அவர்கள் தூக்குமரக் கொட்டடியை எதிர்கொண்டனர்.
  • தேசியத்தின் புரட்சிகரமான அணியினரான இந்தப் புரட்சியாளர்களின் ஆகச் சிறந்த தியாகம் இல்லாமல் விடுதலைப்போராட்டத்தின் வரலாறு முழுமை அடையாது. இது போன்ற வீரம் செறிந்த போராளிகளின் பட்டியலில் இடம்பெறும் இன்னொரு பெயர் கல்பனா தத்.

ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷன் என்பது ஹிந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேஷனின் புதுப்பிக்கப்பட்ட ஓர் அத்தியாயமே ஆகும். முதலாளித்துவ, ஏகாதிபத்திய அரசைத் தூக்கி எறிந்து புரட்சி ஒன்றின் மூலமாக ஒரு சோசலிசச் சமூகத்தை நிலைநாட்டுவதே அதன் குறிக்கோளாகும். ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷன் லாகூரில் சாண்டர்ஸினைக் கொன்றது போன்ற பல நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது. 1928 டிசம்பர் மாதத்தில் லஜபதி ராய் மீது கொடுந்தாக்குதல் நடத்தியதற்கும் அதனைத் தொடர்ந்த ராயின் மரணத்திற்கும் பொறுப்பான லாகூர் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஜேம்ஸ் ஏ.ஸ்காட்டுக்குப் பதில் தவறுதலாக சாண்டர்ஸ் பலியானார். 1929, டிசம்பரில் இர்வின் பிரபு (1926 – 1931 ஆஅம் ஆண்டுகளில் கவர்னர் ஜெனரலாகவும் வைஸ்ராயாகவும் இருந்தவர்) பயணம் செய்துகொண்டிருந்த ரயிலைக் கொளுத்தும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டனர். 1930ஆம் ஆண்டில் பஞ்சாபிலும் உத்தரப்பிரதேசத்திலும் இதுபோன்ற எண்ணற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கல்பனா தத் (1913 – 1995)

  • 1920களின் பிற்பகுதியில் கல்பனா தத் என்னும் ஓர் இளம்பெண் (கம்யூனிஸ்ட் தலைவர் பி.சி,ஜோஷியைத் திருமணம் செய்து கொண்ட பின்னர் கல்பனா ஜோஷி என்று அறியப்பட்டவர்) சிட்டகாங் ஆயுதப் படைத்தளத்தைத் துணிகரமாகத் தாக்கியதன் மூலம் இளம் நெஞ்சங்களில் தேசபக்தியைக் கனன்றெழச் செய்தவர்.
  • கல்பனா தத்தின் வீரத்தை அறிந்துகொள்வதற்கு, இந்த லட்சியங்களின்பால் அவரைப் போன்ற பெண்களை ஈர்த்த தேசியத்தின் புரட்சிகரத் தன்மையைக் குறித்து நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
  • பிரிட்டிஷ் இந்தியாவில் பல புரட்சிக் குழுக்கள் இருந்தன என்று ஏற்கனவே அறிந்துகொண்டீர்கள். தனித்தனியாக ஒவ்வொருவரைக் கொன்றொழிப்பது என்பதிலிருந்து சமூக அமைப்பில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்குடன் கூட்டான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பதாக இந்த அமைப்புகளின் தன்மை படிப்படியாக மாறியது.
  • சிட்டகாங் ஆயுதப் படைத் தாக்குதலின் புரட்சிகரத் தலைவரான சூரியா சென் “தனிப்பட்ட நடவடிக்கைகளின் இடத்தில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை ஏற்பாடு செய்வது என்னும் பாதையை ஓர் அர்ப்பணிப்பு மிக்க இளைஞர் பட்டாளம் காட்டித்தர வேண்டும். அதன் போக்கில் நம்மில் பலர் இறக்க நேரிடும். ஆனால் அத்தகைய உன்னத நோக்கத்திற்கான நமது தியாகம் வீண் போகாது” என்று ஆனந்த குப்தாவிடம் கூறினார்.
  • 1920களின் நடுப்பகுதியில் யுகந்தர், அனுஷிலன் சமிதி போன்ற புரட்சிகரக் குழுக்கள் தேக்கமடைந்தவிட, அவற்றிலிருந்து புதிய குழுக்கள் தோன்றின. அவற்றுள் வங்காளத்தில் பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்த சூரியா சென்னின் தலைமையில் செயல்பட்ட குழு முக்கியமானதாகும்.
  • அவர் ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாகப் பங்கெடுத்ததுடன் , கதரையும் அணிந்துவந்தவர். அவருடைய குழு இந்திய தேசிய காங்கிரசின் சிட்டகாங் பிரிவுடன் மிகவும் நெருக்கமாக இனைந்து செயல்பட்டது.
  • போர்த் தளவாடக்கிடங்குத் தாக்குதலின் போது தப்பித்த இருவர் 1932 ஜூன் 13இல் அரசுப் படைகளுக்கு எதிராக நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டபோது, கொல்லப்பட்டனர். அதே வேளையில் அவர்கள் தல்காட் கிராமத்தில் அரசுப்படைகளின் தளபதி கேப்டன் கேமரூனை ஒரு ஏழை பிராமண விதவையான சாவித்ரி தேவி என்பாரின் வீட்டில் கொன்றனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு அவ்விதவைப் பெண்மணி அவரது குழந்தைகளுடன் கைதுசெய்யப்பட்டார். விசாரணையின்போது அப்பெண்மணிக்கு வேண்டியளவு உதவி செய்வதாகத் தூண்டியும் அவரிடமிருந்து ஒரு வார்த்தைக் கூட காவல்துறையால் பெற முடியவில்லை. படிப்பறிவற்ற ஏழையாயிருந்தும் தங்கம் போன்றப் பொருள்களுக்கு ஆசைப்படாமல் தயக்கமின்றி அத்தனைக் கொடுமைகளையும் பழியையும் தாங்கிக்கொள்ள முடிந்தது.

கல்பனா தத்தின் சுயசரிதையில் இருந்து.

(Chittagong ARmoury Raiders’ Reminiscences)

சிட்டகா ஆயுதப்படைத் தாக்குதல்

  • சூரியா சென்னின் புரட்சிகரக் குழுவான இந்தியக் குடியரசு இராணுவம் ஐரிஷ் குடியரசுப் படைக்குப் பின் அதுபோன்று பெயர் சூட்டிக்கொண்டது. சிட்டகாங்கைக் கைப்பற்றுவதற்காக மறைந்திருந்து தாக்கும் கொரில்லா பாணி தாக்குதலை நடத்த அவர்கள் திட்டமிட்டனர்.
  • 1930 ஏப்ரல் 18 அன்று இரவில் சிட்டகாங் படைத்தளம் தாக்கித் தகர்க்கப்பட்டது. மாகாணத்தின் பிற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தும் முகமாக ரயில்வே உட்பட அனைத்துத் தகவல்தொடர்பு வலைப்பின்னல்களையும் துண்டிக்கும் பொருட்டு தந்தி, அலுவலகங்கள், படைத்தளங்கள், காவல்துறை முகாம்கள் ஆகியவற்றின் மீது அது போன்ற தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. காலனிய நிர்வாகத்திற்கு நேரடியாகச் சவால் விடுக்கும் நோக்குடன் அது நடந்தேறியது.
  • புரட்சியாளர்கள் தேசியக்கொடுயை ஏற்றி ‘வந்தே மாதரம்’ , ‘புரட்சி ஓங்குக’ போன்ற கோஷங்களை முழங்கிக் குறிப்புணர்த்தினர். இந்தத் தாக்குதல்களும் எதிர்ப்பும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குத் தொடந்தன.
  • பெரிதும் அவர்கள் கிராமங்களிலிருந்து செயல்பட்டனர். கிராமத்தினர் அவர்களுக்கு உணவும் உறைவிடமும் அளித்தனர்.
  • அதற்காக அவர்கள் காவலர்களால் பெரும் துன்பத்திற்கு ஆளாகினர். தொடர்ந்த நடவடிக்கைகளின் காரணமாக ஆயுதப்படைத் தாக்குதல் தொடர்பான விசாரணையும் நடைபெற்றது.
  • சூரியா சென்னைக் கைது செய்ய மூன்று ஆண்டுகள் பிடித்தன. பிப்ரவரி 1933இல் அவர் கைதானார். பதினொரு மாதங்கள் கழித்து 1934 ஜனவரி 12இல் அவருக்குத் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த சிட்டகாங் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் கல்பனா தத்தும் ஒருவர் ஆவார்.

அதிரடி செயல்களில் பெண்கள்

  • நாட்டின் சுதந்திரத்திற்காகத் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட இளைஞர்கள் பலரைப் பிரதிநிதித்துவப்படுத்த பகத்சிங் போன்றோர் இருக்கின்ற அதே வேளையில், ஆணாதிக்கமிக்க இச்சமூகத்தில் தாய்நாட்டைக் காப்பதற்காய் இளம்பெண்களின் பிரதிநிதியாய் விடுதலைப்போரில் ஆயுதந்தாங்கி கல்பனா தத் போன்றோரும் பங்கேற்றனர்.
  • வெறும் செய்திகளை அங்குமிங்கும் எடுத்துச் செல்பவராய் மட்டுமின்றி, போரின் நேரடி நடவடிக்கைகளில் பங்கு பெற்று, துப்பாக்கிக் கொண்டு ஆண்களுடன் இணைந்து போராடினர்.
  • புரட்சிகர சிட்டகாங் இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றதினால் கல்பனா தத் கைது செய்யப்பட்டார். தண்டனையாக சூர்யா சென்னும் கல்பனா தத்தும் வாழ்நாள் முழுதும் நாடுகடத்தப்பட்டனர்.
  • சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டு யாதெனில் “பேரரசருக்கு எதிரான போரை நடத்தியது .” சிட்டகாங் ஆயுதக்கிடங்கு தாக்குதல் தொடங்கி அவர்கள் மீதான ஒட்டுமொத்த வழக்கு விசாரணையும் சிட்டகாங் ஆயுதக்கிடங்கு வழக்கு என அறியப்படுகிறது.
  • Chittagong Armoury Raiders’ Reminiscenes என்னும் தனது நூலில் சிட்டகாங்கின் புரட்சிகர இளைஞர்கள் நம்பிக்கையுடன் போரிட்டால் வெளியாட்களின் உதவியின்றி கூட அரசாங்கத்தை எதிர்த்துப் போராட முடியும் என்று நிரூபித்துள்ளதை நினைவூட்டுகிறார்.

இந்திய தேசிய காங்கிரசின் கராச்சி அமர்வு, 1931

  • இந்திய தேசிய காங்கிரஸ், புரட்சியாளர்கள் வன்முறைச் செயல்களுக்கு மாறாக, வன்முறையற்ற போராட்டங்களுக்கு மக்களை அணிதிரட்டியது. காந்தியடிகளின் தலைமையின் கீழ் காங்கிரஸ் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்தது.
  • உலக அளவிலான பொருளாதார பெருமந்தநிலையால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டு விவசாயிகளும் சொல்லொணாத் துயரத்தில் இருந்ததால் காங்கிரஸ் விவசாயிகளை அணிதிரட்டியது.
  • தனது சட்டமறுப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக காங்கிரஸ் குத்தகை செலுத்தா மற்றும் வரிசெலுத்தாப் போராட்டத்தைக் கடைபிடித்தது.
  • பெருமந்த அழுத்தத்தினால் ஏற்பட்ட சமூக-பொருளாதாரத் தேவைகள் கராச்சியின் காங்கிரஸ் அமர்வில் தீவிரமாய் பேசப்பட்டது.

  • விடுதலைப் போராட்டம் ஒரு புதிய வடிவம் பெற்றது. விவசாயிகள் கிசான் சபா எனப்படும் விவசாயிகள் சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டும் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இணைந்துகொண்டும் தங்களது பெரிய அளவிலான ஈடுபாட்டைச் சுதந்திரப் போராட்டக்களத்தில் உணர்த்தினர்.
  • 1930களில் இந்திய தேசிய காங்கிரஸ் ஒரு பெரும் மக்கள்கட்சியாக உருவெடுத்தது. நேருவின் தலைமையின் கீழ் வந்த காங்கிரஸ் சமூக மற்றும் பொருளாதாரநீதி அடிப்படையில் ஒரு சமத்துவ சமூகத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தது.
  • மார்ச் 1931இல் நடந்த கராச்சி அமர்வு சர்தார் வல்லபாய் படேல் தலைமையில் அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகளில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியதோடல்லாமல் சுதந்திர இந்தியாவின் பொருளாதார கொள்கை பற்றிய ஒரு பார்வையை வழங்கியது.
  • பின் இதுவே சுதந்திர இந்தியாவிற்கான இந்திய தேசிய காங்கிரசின் கொள்கை அறிவிப்பு விளக்கமானது. இந்த உரிமைகளும் சமூக மற்றும் பொருளாதாரத் திட்டங்களும் உறுதிசெய்வது யாதெனில் அரசியல் சுதந்திரம் மற்றும் பொருளாதாரச் சுதந்திரம் என்பது பிரித்துப் பார்க்கமுடியாத ஒன்றாகும்.
  • அடிப்படை உரிமைகள் தீர்மானத்தை மேலோட்டமாய் பார்த்தால்கூட பிரிட்டிஷாரால் நமது அடிப்படை உரிமைகள் எப்படியெல்லாம் மறுக்கப்பட்டுள்ளது என்பதை அப்பட்டமாய்த் தெரிந்து கொள்ளமுடியும்.
  • அதனாலேயே அடிப்படை உரிமைகள் தீர்மானத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளன. கொடூரமான சட்டங்கள் போட்டும், அடக்குமுறைகளைக் கையாண்டும் மக்களின் சுதந்திரத்தைக் காலனியரசு நசுக்கியது.
  • சுதந்திர இந்தியாவில் இந்திய தேசிய காங்கிரஸ் தான் வழங்க உறுதியளித்துள்ள உரிமைகள் பட்டியலில் காந்தியடிகளின் கொள்கைகளும் நேருவின் சோசலிச பார்வைகளும் இடம் பெற்றன.
  • தற்போதைய சமூக உறவுகள், குறிப்பாகச் சாதி அமைப்பு மற்றும் தீண்டாமை நடைமுறை ஆகியவை பொது இடங்களிலும் நிறுவனங்களிலும் சமமான அணுகுமுறையை உறுதி செய்ய சவாலாய் இருந்தன.
  • அடிப்படை உரிமைகள், உண்மையில் இந்திய அரசமைப்பின் பகுதி IIIஇல் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் சில, பகுதி IVஇல் நாட்டின் அரசு வழிகாட்டு நெறிமுறைகளில் இடம்பெற்றுள்ளன. இந்திய அரசமைப்பின் மீதான விவாதத்தை இரண்டாம் தொகுதியில் அலகு 13இல் நீங்கள் மேலும் படிக்கலாம்.

உலகப் பெருமந்தமும் இந்தியாவில் அதன் தாக்கமும்

  • உலகப் பெருமந்த நிலை 1929இல் இருந்து ஒரு பத்தாண்டாக நீடித்த ஒரு கடுமையான மற்றும் நீடித்தப் பொருளாதார நெருக்கடி ஆகும். மந்தமான பொருளாதார நடவடிக்கைகள், குறிப்பாகத் தொழிலகத்தில் உற்பத்திக் குறைப்பு, கதவடைப்பு, ஊதிய குறைப்பு, வேலையின்மை மற்றும் பட்டினி போன்ற நெருக்கடிகளுக்கு இட்டுச் சென்றது.
  • வட அமெரிக்காவில் தொடங்கிய பொருளாதாரப் பெருமந்தமானது ஐரோப்பாவையும் உலகின் அனைத்துத் தொழில்துறை மையங்களையும் பாதித்தது.
  • உலகம் அதன் காலனித்துவ ஒழுங்கினால் ஒருங்கிணைக்கப்பட்டிந்ததால், அதன் பொருளாதார மண்டலத்தில் உலகின் ஒரு பகுதியில் ஏற்படும் வளர்ச்சியானது மற்ற பகுதிகளையும் பாதித்தன.
  • அமெரிக்காவில் வால் தெருவில் (Wall Street) உண்டான (அமெரிக்கப் பங்குச் சந்தை அமைந்துள்ள இடம்) பெரும் அளவிலான பொருளாதார வீழ்ச்சி உலகையே உலுக்கியது. இது இந்தியாவையும் தாக்கியது.
  • பிரிட்டிஷ் காலனித்துவம் இந்தியாவின் நிலைமையை மேலும் மோசமாக்கியது. பெருமந்தம் உற்பத்தித்தொழில், வேளாண் துறைகள் என இரண்டையும் பாதித்தது.
  • தொழில்துறை மையங்களான பம்பாய், கல்கத்தா, கான்பூர், ஐக்கிய மாகாணம் , சென்னை ஆகிய இடங்களில் ஊதியக் குறைப்புகள், வேலை முடக்கம் ஆகியவற்றிற்கு எதிராயும் வாழ்க்கை நிலையை மேம்பாடடையச் செய்யக் கோரியும் தொழிலாளர் போராட்டம் வெடித்தது.
  • வேளாண் துறையில், சணல் மற்றும் கச்சாப் பருத்தி போன்ற ஏற்றுமதி விவசாயப் பொருட்களின் விலைகள் அதலபாதாளத்தில் சரிந்தன.
  • 1929 – 1930இல் ₹.311 கோடியாயிருந்த இந்திய ஏற்றுமதியின் மதிப்பு 1932 – 1933இல் ₹.132 கோடியாகச் சரிந்தது. எனவே, 1930களில் தோன்றிய கிசான் சபாக்கள் குத்தகைக் /வாடகைக் குறைப்புகள், கடன் பிடியிலிருந்து நிவாரணம், ஜமீன்தாரி முறை அகற்றப்படுதல் ஆகியவற்றிற்காகப் போராடியது.
  • இந்தியத் தொழில்துறைக்குக் கிடைத்த ஒரே நேர்மறைத் தாக்கம் குறைக்கப்பட்ட விலையில் கிடைத்த நிலங்கள் மற்றும் மலிவான ஊதியத்தில் கிடைத்த தொழிலாளர்கள்.
  • பிரிட்டனுடனும் பிற முதலாளித்துவ நாடுகளுடனும் ஏற்பட்ட பலவீனமான உறவுகளால் சில இந்திய தொழில்களில் வளர்ச்சியடைந்தன. ஆயினும் உள்ளூர் நுகர்வுக்கு முக்கியத்துவமளித்த தொழில்கள் மட்டுமே செழித்தோங்கியன.

இந்தியாவில் தொழில்துறை வளர்ச்சி

  • பிரிட்டிஷ் வணிகக் கொள்கையானது உள்நாட்டுத் தொழிதுறையைப் பெரும் எண்ணிக்கையாக்கியது. இந்தியாவைத் தொழில்மயமாக்குதல் பிரிட்டிஷ் கொள்கையின் ஒரு பகுதி அல்ல. மற்ற காலனிகளைப் போலவே இந்தியாவும் ஒரு மூலப்பொருள் கொள்முதல் செய்யும் பகுதியாகவும் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தையாகவும் கருதப்பட்டது.
  • இதுமட்டுமன்றி, முதல் உலகப்போரின் போதும் பொருளாதாரப் பெரும் மந்தம் போன்ற சில எதிர்பாராத சந்தர்ப்பங்கள் காரணமாகவும் இந்தியாவில் தொழில்துறை விரிவாக்கம் ஏற்பட்டது.

  • 1854இல் பம்பாயில் கவஸ்ஜீ நனாபாய் தவர் (1815 – 73) என்ற பார்சி இனத்தைச் சேர்ந்த இந்தியரே பருத்தி ஆலையை முதன்முதலில் தொடங்கினார். இது பாம்பே ஸ்பின்னிங் அண்ட் வீவிங் கம்பெனி என்று அறியபட்டது.
  • நகரத்தின் முன்னணி வர்த்தகர்கள், பெரும்பாலும் பார்சிக்கள், இந்த முயற்சிக்குப் பங்களிப்புச் செய்தனர். அமெரிக்க உள்நாட்டுப் போர் (1861 – 65) பருத்தி விவசாயம் செய்தோருக்கு ஒரு வரம். ஆனால் உள்நாட்டுப் போருக்குப்பின் பிரிட்டன் அமெரிக்காவிலிருந்து தொடர்ந்து பருத்தி இறக்குமதி செய்ததால் இந்தியப் பருத்தி விவசாயிகள் துயரத்திற்குள்ளாயினர்.
  • ஆனால் ஐரோப்பியர்கள் பருத்தியின் மலிவான, அபரிதமான உற்பத்தியால் இந்தியாவில் ஜவுளித் தொழிற்சாலைகளைத் துவக்கினர், இந்தியத் தொழில் முனைவோரால் அகமதாபாத் ஜவுளி ஆலைகள் நிறுவப்பட்டதும், அகமதாபாத் மற்றும் பம்பாய் ஆகியவை பருத்தி ஆலைகளின் முக்கிய மையங்களாக மாறின.
  • 1914 ஆம் ஆண்டு வாக்கில், பம்பாய் மாகாணத்திற்குள் 129 நூற்பு, நெசவு மற்றும் பிற பருத்தி ஆலைகள் இருந்தன.
  • 1875 – 76க்கும் 1913 -14க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் பருத்தி ஜவுளி ஆலைகள் எண்ணிக்கை 47 லிருந்து 271 ஆக அதிகரித்தது.
  • இந்தியாவில் தொழில்துறையை நிறுவுவதில் ஒரு முக்கியமான மைல் கல் இந்தியாவின் இருப்புப்பாதை விரிவாக்கமும் புகைவண்டிப் போக்குவரத்து அதிகரித்ததுமேயாகும்.
  • முதல் பயணிகள் ரயில் 1853இல் பம்பாய்க்கும் தானேவுக்குமிடையே இயங்கியது. இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய பொறியியல் தொழில் இரயில்வே ஆகும்.
  • பிரிட்டிஷாரால் நிர்வகித்து, ரயில்வே நிறுவனங்களால் நடத்தப்பட்ட இந்த நிறுவனத்தில் 1911இல் 98,723 நபர்கள் பணியில் இருந்தனர். இரயில்வே, இதரப் போக்குவரத்து மற்றும் துறைகளின் வளர்ச்சிக்கு உதவியது.

  • இந்தியாவில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சணல் உற்பத்தி மற்றொரு தொழில் ஆகும்.
  • முதல் சணல் உற்பத்தி ஆலை கல்கத்தாவில் 1855இல் நிறுவப்பட்டது. சணல் தொழில் வளர்ச்சி மிகவும் விரைவாக இருந்ததால் 1914ஆம் ஆண்டில் கல்கத்தா மாகாணத்தில் மட்டும் 64 ஆலைகள் இருந்தன.
  • இருப்பினும், பாம்பே துணி ஆலைகள் போலன்றி, இந்த ஆலைகள் ஐரோப்பியர்களுக்குச் சொந்தமானவை.
  • பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொழில்துறை வளர்ச்சி முக்கியமாகப் பருத்தி, சணல் போன்ற பல துறைகளில் மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் இதனை மடைமாற்றப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
  • உதாரணமாக, 1843இல் ரவீந்திரநாத் தாகூரின் தாத்தா துவாரகநாத் தாகூர் (1794 – 1847) என்பவரால் ராய்கஞ்ச் என்ற இடத்தில் பெங்கால் நிலக்கரி நிறுவனம் நிறுவப்பட்டது.
  • 1892 க்கு பிறகு நிலக்கரி உற்பத்தித் துறையின் வளர்ச்சி வேகமெடுத்து முதல் உலகப்போரின் போது உச்சத்தையெட்டியது.
  • இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்தியாவில் தொழில்துறை மாற்றுப்பாதையில் விரிவுபடத் தொடங்கியது. 1907இல் பீகாரிலுள்ள சாகி நகரில் டாடா குழுமத்தால் டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் (TISCO)- முதன்முதலில் சுதேசி இயக்கத்தின் ஒரு நிகழ்வாக அமைக்கப்பட்டது.
  • இதற்கு முன்னர், 1875இல் ஐரோப்பியர்கள் குழு ஒன்று வங்காள இரும்பு நிறுவனத்தை நிறுவ முயற்சித்தது. இதைத் தொடர்ந்து 1889இல் வங்காள இரும்பு மற்றும் எஃகு ஆலை அமைக்கப்பட்டது.
  • இருப்பினும், இந்தத் துறையில் உள்ள மற்ற முயற்சியாளர்களைவிட டாடா மிக உன்னத நிலையை அடைந்துள்ளது. அதன் உற்பத்தி 1912 – 13இல் 31,000 டன்னிலிருந்து 1917-18இல் 1,81,000 டன்னாக அதிகரித்துள்ளது.
  • முதல் உலகப் போர் நாட்டைத் தொழில் மயமாக்குவதற்கு ஒரு இடைக்காலத் தடையாய் இருந்தது. முதல் முறையாக, பிரிட்டனின் கிழக்கு நோக்கிய திட்டமிடலுக்கு ஜப்பான் சவாலாய் இருந்தது.
  • பாரம்பரியமிக்க வர்த்தகப் பாதைகள் தாக்குதலுக்கு உள்ளாகலாமென்பதால் தன் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தியாவில் தொழில்துறையின் வளர்ச்சி அவசியம்.
  • எனவே, பிரிட்டன் தனதுக் கட்டுப்பாட்டிலிருந்த இந்திய முதலீட்டாளர்களுக்கு சில சலுகைகள் வழங்கியது. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஒப்பீட்டுத் தளர்வுக் கட்டுப்பாடு மற்றும் போரினால் கிடைத்த உள்நாட்டுச் சந்தை விரிவாக்கம் , தொழில்மயமாக்கலை எளிதாக்கியது.
  • முதல் முறையாக 1916இல் ஒரு தொழில்துறை ஆணையம் நியமிக்கப்பட்டது. போர் காலத்தில் பருத்தி மற்றும் சணல் தொழில்கள் அதிக வளர்ச்சியைக் காட்டின. இக்காலத்தில் எஃகு தொழிற்துறையானது கணிசமான வளர்ச்சியைக் கொண்ட மற்றொரு துறை ஆகும்.
  • மேலும் வளர்ச்சியடைந்த தொழில் நிறுவனங்கள் காகிதம், வேதிப்பொருட்கள், சிமெண்ட், உரங்கள், தோல் பதனிடுதல் முதலியன. 1882ஆம் ஆண்டில் லக்னோவில் முதல் காகித ஆலை இந்திய முதலாளிகளால் –கூப்பர் பேப்பர் மில் என்ற பெயரில் அமைக்கப்பட்டது.
  • இதைத்தொடர்ந்து ஐரோப்பியர்களால் இதகர் காகித ஆலை மற்றும் பெங்கால் காகித ஆலை நிறுவப்பட்டது.
  • 1904இல் மதராஸ் நகரில் தென்னிந்திய தொழிற்சாலை நிறுவனம் சிமெண்ட் உற்பத்தியைத் தொடங்கியது. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன.
  • 1860இல் கான்பூரில் அரசால் ஒரு தோல் பதனிடும் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. 1905இல் முதன் முதலாக இந்தியருக்குச் சொந்தமான தேசிய தோல் பதனிடும் தொழிற்சாலை ஒன்று கல்கத்தாவில் அமைக்கப்பட்டது. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மைசூர் கோலார் தங்கச் சுரங்கத்தில் தங்கம் வெட்டியெடுக்கும் பணி தொடங்கப்பட்டது.
  • போர்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதி உற்பத்தித் தொழில்களின் வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. ஆச்சரியத்தக்கவகையில் பிரிட்டன் மற்றும் உலக சராசரியை விடவும் இந்தியத் தொழில்களின் வளர்ச்சி சிறப்பாக இருந்தது.
  • 1923-24 இல் ஒரு சிறிய தடுமாற்றத்திற்குப் பிறகு, நெசவுத் தொழில் சிறப்பாக செயல்படத் தொடங்கியது. போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில், தறிகள் மற்றும் சுழல் அச்சுக்கள் எண்ணிக்கையில் கணிசமாய் உயர்ந்தன.
  • 1929-30களில் இந்தியாவால் 44 சதவீதம் வெளியில் இருந்து நுகர்வு செய்யப்பட்ட பருத்திப் பொருட்கள் 1933-34இல் பெருமத்தநிலைக்குப் பின்னர், 20.5 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது.
  • வளர்ச்சியைப் பதிவு செய்த ஏனைய இரண்டு தொழில்கள் சர்க்கரை உற்பத்தியும் சிமெண்ட் உற்பத்தியும் ஆகும் போர்களுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில் கப்பல் தொழிலும் வளர்ச்சியைக் கண்டது.
  • சிந்தியா நீராவிக் கப்பல் கம்பெனி லிமிடெட் (1919) ஏனையவற்றிற்கு முன்னோடியாக இருந்தது. 1939இல், அவர்கள் பிரிட்டிஷாரின் பம்பாய் நீராவிக் கப்பல் நிறுவனத்தையும் வாங்கிவிட்டனர்.
  • இந்த துறையில் எட்டு இந்திய நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. இரண்டாம் உலகப் போருடன் ஒரு புதிய கட்ட உற்பத்தி துவங்கி, அது இயந்திர உற்பத்தி, விமானப் போக்குவரத்து, ரயில்பெட்டி, ரயில் எஞ்சின் உற்பத்தி மற்றும் பலவற்றிற்கான உற்பத்தித் தொழில்களாய் விரிவடைந்தது.

ஜே.என்.டாடா எனப் பிரபலமாய் அறியப்பட்ட ஜாம்ஷெட்ஜி நுஸர்வஞ்சி டாடா (1839 – 1904), பரோடாவில் உள்ள நவ்சாரி என்ற இடத்தில் ஒரு பார்சி (ஜொராஷ்ட்ரியன்) வணிகக் குடும்பத்திலிருந்து வந்தவர். இந்தியாவின் முதல் வெற்றிகரமான தொழிலதிபர் இவர் என்பதால், இந்திய நவீனத் தொழிலகங்களின் தந்தை என அழைக்கப்படுகிறார். தனது தந்தையின் வியாபாரத்திற்கு உதவும் பொருட்டு, அவர் உலகம் முழுவதிலும் பயணம் மேற்கொண்டார். மேலும் அவருடைய அனுபவம் எதிர்கால முயற்சிகளுக்கு இது உதவியது. 1868இல் நிறுவப்பட்ட அவருடைய வர்த்தக நிறுவனம் டாடா குழுமம் என்றானது. ஒரு தேசியவாதியாய், குர்லா, பம்பாயில் உருவாக்கிய தனது நிறுவனம் ஒன்றிற்கு “சுதேசி” எனப் பெயரிட்டார். அவரது மகன்களான தோரப்ஜி டாடா மற்றும் ரத்தன்ஜி டாடா ஆகியோர் அவரது கனவுகளை நனவாக்கி வந்தனர். தோராப்ஜி டாடா அவரது தந்தையின் நீண்ட காலக் கனவான இரும்பு மற்றும் எஃகு நிறுவனத்தை 1907ஆம் ஆண்டில் நிறுவினார். இதற்காக அவர் இரண்டு ஆண்டுகள் அமெரிக்காவில் உள்ள அமெரிக்கன் இரும்புத் தொழிலகங்களில் உத்வேகத்துடன் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார். ஒரு நீர்மின்சக்தி நிறுவனத்தை அமைப்பதற்கான அவரது மற்றொரு கனவு அவரது வாழ்நாளுக்குள் நிறைவேறவில்லையெனினும் 1910இல் மிகப்பெருமளவில் டாடா நீர்மின்சக்தி நிறுவனம் உதயமானது. தொலைநோக்குப் பார்வையுடன் இந்திய அறிவியல் கழகம் ஒன்றை பெங்களூரில் டாடா குழுமம் நிறுவியுள்ளது.

பொருளாதாரப் பெருமந்தத்தின்போது தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சி

  • சென்னை மாகாணத்தில் தொழில்துறை வளர்ச்சி கணிசமானதாக இருந்தது. கோயம்புத்தூரில், 1896இல் ஸ்டேன்ஸ் மில் (கோயம்புத்தூர் நூற்பு மற்றும் நெசவு ஆலை) நிறுவப்பட்ட பின் வேறு எந்த ஆலைகளும் வரவில்லை.
  • பொருளாதாரப் பெருமந்தத்தால் ஏற்பட்ட நிலத்தின் விலை வீழ்ச்சி, குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்கள், குறைந்த வட்டி விகிதத்தில் கடன் போன்றவை கோயம்புத்தூரில் ஜவுளித்துறையின் விரிவாக்கத்திற்கு வழிவகுத்தன.
  • 1929-37 களில் கோயம்புத்தூரில் இருபத்து ஒன்பது ஆலைகள் மற்றும் விதை நீக்கும் தொழிற்சாலைகள் தோன்றின. 1932இல் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மதுக்கரை என்ற இடத்தில் சிமெண்ட் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இது மாநிலத்திற்கே ஊக்கம் தருவதாயிருந்தது.
  • 1931 – 1936க்கு இடையில் மாகாணத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை இரண்டிலிருந்து பதினொன்றாய் உயர்ந்தது. இதே காலத்தில் அரிசி ஆலைகள், எண்ணெய் ஆலைகள் மற்றும் சினிமா நிறுவனங்களின் பெருக்கமும் அதிகரித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!