Book Back QuestionsTnpsc

மனித உரிமைகள் Book Back Questions 9th Social Science Lesson 22

9th Social Science Lesson 22

22] மனித உரிமைகள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

ஐ. நா. சபை நாள் அக்டோபர் 24.

இறுதிக்கு வந்த இன ஒதுக்கல் கொள்கை: இன ஒதுக்கல் (Apartheid) தென்னாப்பிரிக்காவில் காணப்பட்ட இனப்பாகுபாடு ஆகும். வசிப்பிடங்களும் இனத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டன. குறைந்த எண்ணிக்கையிலான வெள்ளை இனத்தவர் அதிக எண்ணிக்கையிலான கறுப்பினத்தவரின் மீது ஆதிக்கம் செலுத்திய இந்த இன ஒதுக்கல் கொள்கைக்கு எதிராக தென்னாப்பிரிக்க மக்கள் போராடினர். நெல்சன் மண்டேலா இன ஒதுக்கல் எனப்படும் கொள்கைக்கு எதிராக தொடர்ச்சியாகப் போராடினார். அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தியபோது, சிறையில் தள்ளப்பட்டார். உள்நாட்டிலும், உலக நாடுகளிடமிருந்தும் அவரது போராட்டத்திற்கு ஆதரவு பெருகியபோது, இன ரீதியான உள்நாட்டு போர் ஏற்படுமோ என்ற அச்சத்தினால், தென்னாப்பிரிக்க தலைவர் F. W. டி கிளார்க் 1990ல் அவரை விடுதலை செய்தார். மண்டேலா மற்றும் டி கிளார்க் ஆகியோரது கடும் முயற்சியினால் இன ஒதுக்கல் கொள்கை ஒரு முடிவிற்கு வந்தது. 1994ல் பல்லினப் பொதுத் தேர்தல் நடைபெற்றபொழுது, மண்டேலாவின் தலைமையிலான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்று, அந்நாட்டின் தலைவரானார்.

மனித உரிமை நாள் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 10ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் நலன்கள் பராமரிப்புச் சட்டம் 2007-ஆம் ஆண்டில் சட்டமாக இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் பிள்ளைகளுக்கும் வாரிசுகளுக்கும் தங்கள் பெற்றோரை அல்லது மூத்த குடிமக்களைப் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்ளும் சட்டப்பூர்வ வேண்டுகோள் ஆகும்.

மலாலா – நோபல் பரிசு வென்றவர் கூறுகிறார்: “நான் பள்ளியை நேசித்தேன். ஆனால் அடிப்படைவாதிகள் என் வசிப்பிடமாகிய ஸ்வாட் பள்ளத்தாக்கினை ஆக்கிரமித்த பொழுது அனைத்தும் மாறியது. பெண்கள் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. மற்ற பெண்களுக்காகவும், எங்களது கல்வி கற்கும் உரிமைக்காகவும் நான் குரல் கொடுத்தேன். 2012 அக்டோபரில், பள்ளியிலிருந்து வீடு திரும்பும் பொழுது, துப்பாக்கி ஏந்திய ஒருவர் எங்கள் பேருந்தில் ஏறி இதில் மலாலா யார்? என்று கேட்டு, என் தலையின் இடது பக்கத்தில் சுட்டான். பத்து நாட்கள் கழிந்து இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாம் என்னுமிடத்தில் உள்ள மருத்துவமனையில் கண் விழத்தேன். பல மாதங்கள் அறுவை சிகச்சைகளிலும், மறுவாழ்வு சிகிச்சையிலும் கழிந்தது. இங்கிலாந்திலுள்ள எனது புது வீட்டில் என் குடும்பத்தினரோடு மீண்டும் சேர்ந்த நான், ஒவ்வொரு பெண் குழந்தையும் பள்ளி செல்லும் வரை என் போராட்டத்தைத் தொடர்வேன் என உறுதி பூண்டேன். அனைத்து பெண்களும் 12 வருட இலவச, பாதுகாப்பான மற்றும் தரமான கல்வி பயில வேண்டும் என்பதை உறுதி செய்ய நான் ஒவ்வொரு நாளும் போராடுகிறேன். 130 மில்லியன் பெண்கள் பள்ளியில் பயிலாத இன்றைய சூழலில், நான் செய்ய வேண்டிய வேலைகள் அதிகம் உள்ளன. கல்வி மற்றும் சமத்துவத்திற்காக என்னோடு சேர்ந்து போராடுவீர்கள் என நம்புகிறேன். நாம் இணைந்து, பெண்கள் கல்வி பயின்று, வழிநடத்தும் ஓர் உலகை உருவாக்குவோம்”.

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (Right of Children to free and compulsory education) 2009, ஒவ்வொரு குழந்தையும் தொடக்கக் கல்வி பயில உரிமை உள்ளது என்பதை வலியுறுத்துகின்றது. இவ்வுரிமை, குழந்தைகள் தொடக்கக் கல்வி முடியும் வரை அருகாமையில் உள்ள பள்ளியில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி அளிக்க வழிவகை செய்கிறது. கல்வி பயிலும் குழந்தை எந்த வகையான கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியமில்லை

POCSO சட்டம் – பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம். பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (The Protection of children from sexual offence Act, 2012) ஒவ்வொரு நிலையிலும் குழந்தைகளின் நலனை மையமாகக் கொண்டு செயல்படுகின்றது.

POCSO சட்டத்தின் சிறப்பு அம்சங்கள்: இச்சட்டம் 18 வயது வரை உள்ளவர்களை குழந்தைகள் என வரையறுக்கிறது; அக்குழந்தைகளின் உடல், மன, அறிவு சார் மற்றும் சமூக வளர்ச்சியினை உறுதி செய்கிறது. பாலியல் வன் கொடுமையில் அதிகாரத்தில் இருப்பவரோ, குடும்ப உறுப்பினரோ, அண்டை வீட்டாரோ அல்லது அறிமுகமானவரோ ஈடுபட்டால் அவர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்கப்படும். குழந்தை என்ன வாக்குமூலம் கூறுகிறதோ, அதை அவ்வாறே பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தையை அடிக்கடி சாட்சி சொல்ல அழைக்கக் கூடாது. பனிரெண்டு பயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைச் செய்யப்படும் போது, வன்கொடுமை செய்தவருக்கு மரண தண்டனை வழங்குவதோடு கடுமையான தண்டனைகள் விதிக்க வகை செய்யும் சட்டம் 2018 ஏப்ரல் மாதம் கொண்டு வரப்பட்டது. குற்றவியல் சட்ட திருத்தச் சட்டம் 2018. இது இந்திய குற்றவியல் சட்டத்தில் கடுமையான திருத்தங்களைக் கொண்டு வந்தது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் விதிக்கப்படும் அபராதத் தொகையானது பாதிக்கப்பட்டவரின் மருத்துவச் செலவை ஈடுகட்டும் வகையில் இருக்க வேண்டும் என்பதாகும்.

ஆபத்து காலத்தில் உதவிட காவலன் SOS செயலி தமிழ்நாடு அரசினால் பொது மக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மட்டுமின்றி, சிக்கலான அல்லது நெருக்கடியான சூழலில் இருக்கும் அனைவரும் மாநில காவல் கட்டுப்பாட்டு அறையினை இச்செயலியின் உதவியோடு எளிதாகவும், நேரடியாகவும், தொடர்பு கொள்ள இயலும்.

1098 – உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கான உதவி மைய எண் (Child line) இந்தியாவின் முதல் 24 மணிநேர கட்டணமில்லா அவசர தொலைதொடர்பு சேவை ஆகும். குழந்தைத் தொழிலாளர், குழந்தைத் திருமணம் மற்றும் ஏதேனும் வன்கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.

குழந்தைகள் தேசத்தின் அடித்தளமாக விளங்குகின்றனர். சிறு வயதிலேயே பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைக்கப்படும் போது குழந்தைப் பருவத்தின் மகிழ்ச்சிகள், கல்வியறிவு, ஆரோக்கியமான வாழ்வு போன்ற பல சலுகைகளை அவர்கள் இழந்து விடுகின்றனர். இதனால் குழந்தைத் திருமணங்கள் சமூகத்தைப் பெருமளவில் பாதிக்கின்றன. எனவே குழந்தைத் திருமணங்கள் அனைத்து விதத்திலும் தடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

பச்பன் பச்சாவ் அந்தோலன் (இளமையைக் காப்பாற்று இயக்கம்) போன்ற பல குழந்தைகள் உரிமை அமைப்புகளின் நிறுவனர் கைலாஷ் சத்யார்த்தி. அவர் குழந்தை உழைப்பு, கொத்தடிமை, கடத்தல் போன்ற பல குழந்தைகளுக்கு எதிரான நடவடிக்கைகளிலிருந்து சுமார் 86, 000த்திற்கும் அதிகமான இந்தியக் குழந்தைகள் இவராலும், இவரது குழு உறுப்பினர்களாலும் மீட்கப்பட்டுள்ளனர். 1998ல் உலக மக்களின் கவனத்தை குழந்தை உழைப்பு முறை மீது திசை திருப்ப, 80, 000 கி. மீ. நீள “குழந்தை உழைப்புக்கு எதிரான உலகளாவிய அணிவகுப்பை (Global March against child labour) முன்னின்று நடத்தினார்.

பெண்களுக்கு மூதாதையர் சொத்துரிமை: தமிழ்நாடு இந்து வாரிசு உரிமை (தமிழ்நாடு திருத்தச்) சட்டம், 1989ஐ நிறைவேற்றி மூதாதையரின் சொத்துகளில் பெண்களுக்கும் சம உரிமை வழங்கியுள்ளது. மத்திய அரசு இந்து வாரிசுரிமைச் சட்டம் 2005-இல் திருத்தங்களை மேற்கொண்டது. இதில் மூதாதையரின் பிரிக்கப்படாத சொத்தில் வாரிசு அடிப்படையில் பெண்களுக்கு சம உரிமையினை அளித்தது.

இந்திய அரசியலமைப்பில் குழந்தைகள் உரிமை: பிரிவு 24: பதினான்கு வயதுக்குட்பட்ட எந்த குழந்தையும் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தக்கூடாது. பிரிவு 45: பதினான்கு வயது நிறைவடையும் வரை இலவச மற்றும் கட்டாயக் கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் அளிக்கப்பட வேண்டும்.

பெண் தொழிலாளர் நலனும் – டாக்டர் பி. ஆர். அம்பேத்கரும்: சுரங்கத் தொழிலாளர் பேறுகால நன்மைச் சட்டம், பெண் தொழிலாளர் நல நிதி, பெண்கள் மற்றும் குழந்தைத் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம், பெண் தொழிலாளர்களுக்கான பேறுகால நன்மைகள், நிலச்சரிச் சுரங்கங்களில் சுரங்கப் பணிகளில் பெண்களை ஈடுபடுத்தப்படுவதற்கான தடையை மீட்டெடுத்தல் போன்ற சட்டங்கள் டாக்டர். பி. ஆர். அம்பேத்கர் அவர்களால் பெண் தொழிலாளர்களுக்காக இந்தியாவில் இயற்றப்பட்டது.

பத்து ஆண்டுகளாக கேரளாவில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் வேலை செய்யும் பெண்கள் ஒரு நாளில் ஏறக்குறைய 12-14 மணிநேரமும் நின்றுகொண்டே வேலை செய்து கொண்டிருந்தனர். கடைகளிலிலும், வணிக வளாகங்களிலிலும் வேலை செய்யும் பெண் பணியாளர் அமர்ந்தோ, சுவரில் சாய்ந்தபடியே பணியாற்ற அனுமதிக்கப்படவில்லை. ஒரு நாளைக்கு, இருமுறை 5 நிமிடங்கள் மட்டுமே ஓய்வு எடுக்க அனுமதிக்கப்பட்டனர். பெண்களுக்கு இழைக்கப்படும் இந்த மனித தன்மையற்ற செயலுக்காக நீண்ட நாள்களாக பெருத்த கண்டனக் குரல்கள் ஒலித்து வந்தன. இப்பிரச்சனையைப் பரிசீலித்து குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு கேரள அரசு வணிக நிறுவன சட்டத்தில், 2018 ஜீலை மாதத்தில் சட்ட திருத்தம் கொண்டு வந்தது. இதன் மூலம் பெண்கள் இத்துயர் நீங்கி வெற்றி கண்டுள்ளனர்.

தொழிலாளர் நலனில் டாக்டர். பி. ஆர். அம்பேத்கரின் பங்களிப்புகள்: தொழிற்சாலையில் வேலை நேரம் குறைப்பு. தொழிற்சங்கங்களின் கட்டாய அங்கீகாரம். இந்தியாவில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அமைத்தல். தொழிலாளர் காப்பீட்டுக்கழகம் (ESI). தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச ஊதியம். நிலக்கரி மற்றும் மைகா சுரங்கத்தின் வருங்கால வைப்பு நிதி.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. இன ஒதுக்கல் (Apartheid) என்னும் கொள்கையைப் பின்பற்றிய நாடு ——————

(அ) தென் சூடான்

(ஆ) தென் ஆப்பிரிக்கா

(இ) நைஜீரியா

(ஈ) எகிப்த்

2. ஒரு அரசாங்கத்தின் உருவாக்கம் மற்றும் நிர்வாகத்தில் பங்கு பெறுவது —————

(அ) சமூகம்

(ஆ) பொருளாதாரம்

(இ) அரசியல்

(ஈ) பண்பாடு

3. ஒரு 10 வயது பையன் கடையில் வேலைப்பார்த்துக் கொண்டிருக்கிறான் – எந்த உரிமையைப் பயன்படுத்தி அவனை மீட்பாய்?

(அ) சமத்துவ உரிமை

(ஆ) சுதந்திர உரிமை

(இ) குழந்தை உழைப்பு மற்றும் சுரண்டலுக்கு எதிரான உரிமை

(ஈ) சமய சுதந்திர உரிமை

4. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி தகவலைப் பெறுவதற்கான கால வரம்பு —————

(அ) 20 நாட்கள்

(ஆ) 25 நாட்கள்

(இ) 30 நாட்கள்

(ஈ) 35 நாட்கள்

5. பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?

(i) மாநில மனித உரிமை ஆணையம் 1993ல் நிறுவப்பட்டது.

(ii) இது ஓர் உரிமையியல் நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரங்களைப் பெற்றுள்ளது.

(iii) இதன் அதிகாரம் மாநில எல்லையைக் கடந்தும் செயல்படும்.

(iv) இது பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க பரிந்துரைக்கலாம்.

(அ) i மற்றும் ii சரி (ஆ) i மற்றும் iii சரி (இ) i, ii மற்றும் iii சரி (ஈ) ii, iii மற்றும் iv சரி

6. கூற்று (A): உரிமைகளும் கடமைகளும் ஓர் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை.

காரணம் (R): நாம் விரும்பும் மதத்தை பின்பற்றுவதற்கான உரிமை உண்டு. பிற மதத்தினர் இடையே இணக்கமான உறவை ஏற்படுத்துவதுடன் அவர்களின் உணர்வையும் மதிக்க வேண்டும்.

(அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்.

(ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல.

(இ) (A) சரி ஆனால் (R) தவறு

(ஈ) (A) தவறு ஆனால் (R) சரி

7. ஐ. நா. சபையின்படி ————- வயது நிறைவு பெறாதோர் குழந்தை ஆவார்.

(அ) 12

(ஆ) 14

(இ) 16

(ஈ) 18

8. —————- கான நோபல் பரிசு கைலாஷ் சத்தியார்த்தி மற்றும் மலாலாவிற்கு கொடுக்கப்பட்டது.

(அ) இலக்கியம்

(ஆ) அமைதி

(இ) இயற்பியல்

(ஈ) பொருளாதாரம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. உலகளாவிய மனித உரிமை பிரகடனம் ———— பிரிவுகளைக் கொண்டுள்ளது.

2. அடிப்படைக் கடமைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ————— சட்ட திருத்தத்தின்படி சேர்க்கப்பட்டது.

3. தேசிய மனித உரிமை ஆணையம் ————–ஆண்டு அமைக்கப்பட்டது.

4. பெண்களுக்கான மூதாதையர் சொத்துரிமை சட்டத்தை 1989இல் நடைமுறைப்படுத்திய இந்திய மாநிலம் ———–

III. பொருத்துக:

1. வாக்களிக்கும் உரிமை – அ] பண்பாட்டு உரிமை

2. சங்கம் அமைக்கும் உரிமை – ஆ] சுரண்டலுக்கெதிரான உரிமை

3. பாரம்பரியத்தை பாதுகாக்கும் உரிமை – இ] அரசியல் உரிமை

4. இந்து வாரிசுரிமைச் சட்டம் – ஈ] சுதந்திர உரிமை

5. குழந்தை தொழிலாளர் – உ] 2005

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. தென் ஆப்பிரிக்கா, 2. சமூகம், 3. குழந்தை உழைப்பு மற்றும் சுரண்டலுக்கு எதிரான உரிமை, 4. 30 நாட்கள், 5. i, ii மற்றும் ivசரி, 6. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம், 7. 18, 8. அமைதி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. 30, 2. 42 வது, 3. 1993, 4. தமிழ்நாடு

III. பொருத்துக:

1. இ, 2. ஈ, 3. அ, 4. உ, 5. ஆ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!