Samacheer NotesTnpsc

விஜயநகர், பாமினி அரசுகள் Notes 7th Social Science Lesson 9 Notes in Tamil

7th Social Science Lesson 9 Notes in Tamil

9] விஜயநகர், பாமினி அரசுகள்

அறிமுகம்:

14ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் நிலவிய அரசியல் சூழல், தென்பகுதிகளில் பல புதிய அரசுகள் உதயமாவதற்கான சிறந்த வாய்ப்புகளை அளித்தது. முகமது பின் துக்ளக்கின் அடக்குமுறை நடவடிக்கைகள் புதிய சுதந்திர அரசுகள் தோன்றுவதற்கு இட்டுச்சென்றன. இந்தியாவின் தெற்கே விஜயநகரமும், குல்பர்கா அல்லது பாமினி ஆகியவை மாபெரும் அரசுகளாக எழுச்சி பெற்றன. பாமினி அரசு, மகாராஷ்டிரா மாநிலம் முழுவதிலும் மற்றும் கர்நாடகத்தின் சில பகுதிகளிலும் பரவி இருந்தது. பதினெட்டு முடியரசர்களால் ஆளப்பட்ட இவ்வரசு ஏறத்தாழ 180 ஆண்டுகள் நீடித்தது. இவ்வரசு பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சரிந்து பீஜப்பூர், அகமது நகர், கோல்கொண்டா, பீடார், பீரார் என ஐந்து சுல்தானியங்களாகப் பிரிந்தது. விஜயநகர அரசு வலுவான அரசாக 200 ஆண்டுகள் கோலோச்சியது. விஜயநகரின் செல்வமும் வளமும், அவ்வரசுக்கு எதிராகத் தக்காண முஸ்லீம் அரசுகளை ஒருங்கிணைத்தது. 1565இல் நடைபெற்ற தலைக்கோட்டைப் போரில் விஜயநகர் அரசை நசுக்குவதில் இவ்வரசுகள் வெற்றி பெற்றன.

விஜயநகரப் பேரரசு நிறுவப்படுதல்:

வெற்றியின் நகரம் என்றறியப்படும் விஜயநகரம் ஹரிஹரர், புக்கர் ஆகிய இரு சகோதரர்களால் கர்நாடகத்தின் தென்பகுதியில் நிறுவப்பட்டது. துக்ளக் அரசர்களிடம் பணி செய்து வந்த இவர்களை, சிருங்கேரி சைவ மடத்தின் தலைவரான வித்யாரண்யர் என்பார், அப்பணியைக் கைவிட்டு நாட்டை முஸ்லீம்களின் ஆதிக்கத்திலிருந்து மீட்குமாறு அறிவுறுத்தியாக ஒரு வாய்மொழி வரலாற்று மரபு கூறுகின்றது. இப்புதிய அரசு, இவர்களது ஆன்மீக குருவான வித்யாரண்யருக்கு மதிப்பளிக்கும் விதத்தில் வித்யாநகர் என குறிப்பிட்ட ஒரு காலம் வரை அழைக்கப்பட்டது. பின்னர் இவ்வரசு விஜயநகர் என அழைக்கப்பட்டது. இவ்வரசானது சங்கம (1336-1485), சாளுவ (1485-1505), துளுவ (1505-1570), ஆரவீடு (1570-1646) என்ற நான்கு அரச மரபுகளால் ஆளப்பட்டது.

ஹரிஹரர், புக்கர்

விஜயநகர அரசர்கள், பாமினி சுல்தான்கள், ஒடிசாவைச் சேர்ந்த அரசர்களுக்கிடையே மோதல்கள் ஏற்படுவதற்கு கிருஷ்ணா-துங்கபத்ரா நதிகளுக்கு இடைப்பட்ட செழிப்பான பகுதியும், கிருஷ்ணா-கோதாவரி நதிகளுக்கு இடைப்பட்ட கழிமுகப்பகுதியுமே காரணமாக அமைந்தன. சங்கம வம்சத்தைச் சேர்ந்த முதலிரண்டு சகோதரர்களான ஹரிஹரர்-புக்கர் ஆகியோரின் பெருந்துணிச்சலே இப்புதிய அரசை அதிக வலிமைமிக்க பாமினி சுல்தானியத்திடமிருந்து காப்பாற்றியது. விஜயநகர் அரசு உருவாகிப் பத்து ஆண்டுகளுக்கு பிறகே பாமினி அரசு நிறுவப்பட்டது.

சங்கம வம்சத்தின் முடிவு:

புக்கர் இயற்கை எய்தியபோது பரந்த ஒரு நிலப்பரப்பைத் தம் மகன் இரண்டாம் ஹரிஹரர் ஆள்வதற்காக விட்டுச்சென்றார். பாமினி அரசிடமிருந்து பெல்காம், கோவா ஆகிய பகுதிகளைக் கைப்பற்றியதே இவருடைய போற்றத்தகுந்த சாதனையாகும். இவருடைய மகன் முதலாம் தேவராயர் ஒடிசாவைச் சேர்ந்த கஜபதி வம்ச அரசர்களைத் தோற்கடித்தார். இவருக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டாம் தேவராயர் சங்கம வம்சத்தின் தலைசிறந்த அரசராவார். தம்மிடம் பணி செய்வதற்காகவும் தம்முடைய படைகளுக்கு நவீனப்போர் முறைகளில் பயிற்சியளிப்பதற்காகவும் இஸ்லாமிய வீரர்களை தமது படையில் பணியமர்த்தும் முறையை இவர் தொடங்கி வைத்தார்.

சாளுவ வம்சத்தின் தோற்றம்:

இரண்டாம் தேவராயருக்குப் பின்னர், பேரரசு ஆபத்தான சூழலுக்கு உள்ளானது. விஜயநகரப் பேரரசின் திறமைமிக்க படைத்தளபதியான சாளுவ நரசிம்மர் இச்சூழலைப் பயன்படுத்திக் கொண்டார். அவர் சங்கம வம்சத்தின் கடைசி அரசரான இரண்டாம் விருபாக்சி ராயரைக் கொலை செய்துவிட்டு, தம்மையே பேரரசராக அறிவித்துக் கொண்டார். ஆனால், அவருடைய மரணத்துடன் அவரால் உருவாக்கப்பட்ட சாளுவ வம்சமும் முடிவுக்கு வந்தது. அவருக்குப் பிறகு திறமை மிகுந்த படைத்தளபதியான நரசநாயக்கர் அரியணையைக் கைப்பற்றித் துளுவ வம்சத்தின் ஆட்சியைத் தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணதேவராயர்:

துளுவ வம்ச அரசர்களுள் மிகவும் போற்றதலுக்கு உரியவர் கிருஷ்ணதேவராயர் ஆவார். இவர் இருபது ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் துங்கபத்ரா நதிப் பள்ளத்தாக்குப் பகுதியில் சுதந்திரமாகச் செயல்பட்டு வந்த தலைவர்களை அடக்குவதே அவரின் முதற்கட்ட தலையாயப் பணியாக இருந்தது. இம்முயற்சியில் வெற்றிபெற்ற பின்னர், குல்பர்காவைக் கைப்பற்றுவது அவரின் இரண்டாவது இலக்கானது இச்சமயத்தில் பாமினி சுல்தான் முகமது ஷா, அவருடைய அமைச்சரால் பதவி பறிக்கப்பட்டு சிறை வைக்கபட்டிருந்தார். கிருஷ்ணதேவராயர் அவரை விடுவித்து மீண்டும் அரியணையில் அமர வைத்தார். மேலும் ஒடிசாவைச் சேர்ந்த கஜபதி வம்ச அரசர் பிரதாபருத்திரனோடு போர் மேற்கொண்டார். சமாதானம் செய்து கொள்ள வேண்டுகோள் விடுத்த பிரதாபருத்திரன், தமது மகளைக் கிருஷ்ணதேவராயருக்குத் திருமணம் செய்து தருவதாகவும் கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட கிருஷ்ணதேவராயர் தாம் கைப்பற்றி பிரதாபருத்திரனின் பகுதிகளை மீண்டும் அவருக்கே வழங்கினார். மேலும், போர்த்துகீசியப் பீரங்கிப்படை வீரர்களின் உதவியோடு கோல்கொண்டா சுல்தானை கிருஷ்ணதேவராயர் எளிதாகத் தோற்கடித்தார். தொடர்ந்து பீஜப்பூர் சுல்தானிடமிருந்து ரெய்ச்சூரைக் கைப்பற்றினார்.

கிருஷ்ணதேவராயர்

சிறந்த கட்டட வல்லுநர்:

கிருஷ்ணதேவராயர் மழைநீரைச் சேமிப்பதற்காகப் பெரிய நீர்ப்பாசனக் குளங்களையும், நீர்த்தேக்கங்களையும் உருவாக்கினார். இவர் தமது தலைநகரான ஹம்பியில் கிருஷ்ணசாமி கோவில், ஹசாரா ராமசாமி கோவில், விட்டலாசுவாமி கோவில் போன்ற புகழ்பெற்ற கோவில்களைக் கட்டினார். போர்களின் மூலம் தாம் பெற்ற செல்வங்களை மிகப்பெரும் தென்னிந்தியக் கோவில்களுக்கு வழங்கி, அதன் மூலம் கோவில்களின் நுழைவாயில்களில் கோபுரங்களை நிறுவினார். அவரது பெயருக்குப் புகழை சேர்க்கும் வண்ணம் அவை ராயகோபுரம் என அழைக்கப்பட்டன.

விட்டலாசுவாமி கோவில்

பெரும் படையொன்றை உருவாக்கிய அவர், பல வலிமைமிக்க கோட்டைகளையும் கட்டினார். அரேபியாவிலிருந்தும், ஈரானிலிருந்தும் பெரும் எண்ணிக்கையில் குதிரைகளை அவர் இறக்குமதி செய்தார். அவை கப்பல்கள் மூலம் மேற்கு கடற்கரையிலுள்ள விஜயநகர துறைமுகங்களை வந்தடைந்தன. போர்த்துகீசிய, அராபிய வணிகர்களுடன் அவர் சிறந்த நட்புறவை கொண்டிருந்தார். அதனால் சுங்கவரிகள் மூலம் நாட்டின் வருமானம் அதிகரித்தது.

இலக்கியம், கலை, கட்டடக்கலையின் புரவலர்:

கிருஷ்ணதேவராயர் கலை, இலக்கியத்தை ஆதரித்தார். அஷ்டதிக்கஜங்கள் என்றறியப்பட்ட எட்டு இலக்கிய மேதைகள் அவரின் அவையை அலங்கரித்தனர். அவர்களுள் மகத்தானவர் அல்லசானி பெத்தண்ணா ஆவார். மற்றொரு குறிப்பிடத்தகுந்த ஆளுமை தெனாலி ராமகிருஷ்ணன் (தெனாலிராமன்) ஆவார்.

தலைக்கோட்டைப் போரும் விஜயநகர் பேரரசின் வீழ்ச்சியும்:

கிருஷ்ணதேவராயரைத் தொடர்ந்து அவருடைய இளைய சகோதரர் அச்சுதராயர் ஆட்சிப் பொறுப்பேற்றார். இவருடைய ஆட்சிக் காலத்திலும் இவருக்குப் பின்னர் அரியணை ஏறிய முதலாம் வேங்கடர் காலத்திலும் முக்கிய நிகழ்வுகள் எதுவும் இடம் பெறவில்லை. இவர்களுக்குப் பின்னர் குறைந்த வயதைக் கொண்ட சதாசிவராயர் முடிசூட்டப்பட்டார். பகர ஆளுநராகப் பொறுப்பேற்றிருந்த ராமராயர் பேரரசின் திறமைமிக்கத் தளபதியாவார். சதாசிவராயருக்கு அரசு பதவி ஏற்கும் வயது வந்த பின்னரும் கூட அவைரப் பெயரளவிற்கு அரசராக வைத்துக் கொண்டு ராமராயரே உண்மையான அரசராக ஆட்சி புரிந்தார். இச்சமயத்தில் விஜயநகருக்கு எதிராகப் போர் புரிவதற்காகத் தக்காண சுல்தான்கள் ஓர் அணியில் திரண்டனர். எதிரிகளின் கூட்டுப்படைகள் 1565இல் தலைக்கோட்டை என்னுமிடத்தில் விஜயநகரப் படைகளை எதிர்கொண்டன. ராக்சச தங்கடி (தலைக்கோட்டைப் போர்) என்றறியப்பட்ட இப்போரில் விஜயநகரம் தோற்கடிக்கப்பட்டது. தொடர்ந்து நகரம் கொள்ளையடிக்கப்பட்டதோடு பயங்கரமான மனிதப் படுகொலையும் அரங்கேறியது. அனைத்துக் கட்டடங்களும், அரண்மனைகளும், கோவில்களும் அழிக்கப்பட்டன. அழகிய சிற்பங்களும், நன்கு கலைநயம் மிகுந்த வேலைப்பாடுகளும் சேதப்படுத்தப்பட்டன. இறுதியாக, விஜயநகரப் பேரரசு அழிக்கப்பட்டது.

விருபக்சா கோவில் – ஹம்பி

ஆரவீடு வம்சம்:

ராமராயர் போர்க்களத்தில் கொல்லப்பட்டார். அவருடைய சகோதரர் திருமலை தேவராயர், அரசர் சதாசிவராயருடன் தப்பித்தார். திருமலைதேவராயர் விலைமதிக்கமுடியா செல்வங்களோடு சந்திரகிரியைச் சென்றடைந்தார். அங்கு அவர் ஆரவீடு வம்சத்தின் ஆட்சியைத் தொடங்கினார். ஆரவீடு வம்சத்தார் பெனுகொண்டாவில் புதியதலைநகரை உருவாக்கிப் பேரரசை சில காலம் நல்ல நிலையில் வைத்திருந்தனர். பேரரசில் ஏற்பட்ட உட்பூசல்களாலும் பீஜப்பூர் கோல்கொண்டா சுல்தான்களின் சூழ்ச்சிகளாலும் விஜயநகர அரசு 1646இல் இறுதியாக வீழ்ச்சியுற்றது.

விஜயநகர நிர்வாகம்:

அரச பதவி பரம்பரையானதாக இருந்தது அரசர் ஒருவர் இயற்கை எய்திய பின்னர் அவருடைய மூத்த மகன் அரசபதவியேற்பது என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்திருந்தது. சில சமயங்களில் ஆட்சி செய்து வந்த அரசர்கள், தங்களுடைய வாரிசுகளின் பதவியேற்பு அமைதியாக நடைபெற வேண்டும் என்பதற்காகப் பட்டத்து இளவரசர்களை நியமித்தனர். சில சமயங்களில் அரச பதவி முறைகேடான முறையில் அபகரிக்கப்பட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அரச உரிமையைச் சாளுவ நரசிம்மர் முறைகேடாகக் கைப்பற்றியதால் சங்கம வம்சம் முடிவுற்று சாளுவ வம்ச ஆட்சி தொடங்கியது. அரச பதவியேற்றவர் வயதில் சிறியவராக இருந்தால், நிர்வாகப்பணிகளைக் கவனிப்பதற்காகப் பகர ஆளுநரை நியமனம் செய்யும் முறையும் நடைமுறையில் இருந்தது.

அரசமைப்பு:

பேரரசு பல்வேறு மண்டலங்கள் (மாநிலம்), நாடுகள் (மாவட்டங்கள்), ஸ்தலங்கள் (வட்டங்கள்), கிராமங்கள் என பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு மண்டலமும் மண்டலேஸ்வரா என்ற ஆளுநரின் கீழிருந்தது. கிராமமே நிர்வாகத்தின் மிகச்சிறிய அலகாக இருந்தது. ஒவ்வொரு கிராமத்திலும் கிராம சபை என்ற அமைப்பிருந்தது. கிராமம் தொடர்பான விடயங்களைக் கௌடா என்றழைக்கப்பட்ட கிராமத்தலைவர் நிர்வகித்தார்.

பேரரசின் இராணுவம் காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை ஆகிய பிரிவுகளைக் கொண்டிருந்தது. இராணுவம் நவீனமயமாக்கப்பட்டதால் விஜயநகரப் படைகள் வெடிமருந்து ஆயுதங்களைப் பயன்படுத்தின. வெடிமருந்து ஆயுதங்களும் குதிரைப்படையும் ஒருங்கிணைக்கப்பட்டதால், இப்படை இந்தியாவில் அதிகம் அச்சுறுத்தக்கூடிய படையாக இருந்தது.

பொருளாதார நிலை:

அக்கால உலகம் அறிந்திருந்த மிகவும் செல்வச்செழிப்பு மிக்க அரசுகளில் ஒன்றாக விஜயநகரப் பேரரசு திகழ்ந்தது. 15ஆம், 16ஆம் நூற்றாண்டுகளில் பேரரசிற்கு வருகை புரிந்த பல அயல்நாட்டுப்பயணிகள், தங்கள் பயணக்குறிப்புகளில் பேரரசின் செல்வம், மேன்மை குறித்துப் புகழாரம் சூட்டியுள்ளனர். விஜயநகரப் பேரரசர்கள் வராகன் என்னும் பெயரில் அதிக எண்ணிக்கையிலான தங்க நாணயங்களை வெளியிட்டனர்.

விஜயநகர பேரரசு – தங்க நாணயங்கள்

வேளாண்மை:

சிறந்த நீர்ப்பாசன முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வேளாண்மையை ஊக்குவிப்பதே விஜயநகர அரசர்களின் கொள்கையாக இருந்தது. அரசுக்கு அடுத்தபடியாக வேளாண்மையை முன்னேற்றம் அடையச் செய்யும் பொருட்டு நிலச்சுவான்தாரர்கள் கோவில்களிலும், நீர்ப்பாசனத்திலும் முதலீடு செய்தனர் போர்த்துகீசியக் கட்டுமானக் கலைஞர்களின் உதவியுடன் மிகப்பெரும் ஏரி கட்டப்பட்டதாகப் பாரசீகப் பயணியான அப்துர்ரஸாக் குறிப்பிட்டுள்ளார். ஏரியிலிருந்து நகரின் பல பகுதிகளுக்கு ஏரிநீரைக் கொண்டு செல்வதற்கு ஏதுவாகக் கால்வாய்கள் கட்டப்பட்டன. நகரத்தில் பல்வகைப்பட்ட வேளாண் பண்டங்கள் பெருமளவில் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.

குடிசைத் தொழில்கள்:

விஜயநகரின் வேளாண் உற்பத்திக்கு அதனுடைய பலவகையான குடிசைத் தொழில்கள் உதவி புரிந்தன. அவற்றுள் மிகவும் முக்கியமானவை நெசவுத்தொழில், சுரங்கத் தொழில், உலோகத்தொழில் ஆகியனவாகும். கில்டுகள் என்றழைக்கப்படும் தொழில்சார் அமைப்புகள் கைவினை, குடிசைத்தொழில்களை முறைப்படுத்தின. கைவினைஞர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் தனித்தனியே கில்டுகள் இருந்ததாக அப்துர் ரஸாக் குறிப்பிட்டுள்ளார்.

வாணிகம்:

உள்நாட்டுக் கடற்கரையோர, கடல்கடந்த வாணிகம் செழித்தோங்கியிருந்தது. இவ்வணிகம் சீனாவிலிருந்து வந்த பட்டு, மலபார் பகுதியைச் சேர்ந்த வாசனைப் பொருட்கள், பர்மாவிலிருந்து பெறப்பட்ட விலையுயர்ந்த ஆபரணக்கற்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இயங்கியது. பாரசீகம், தென்னாப்பிரிக்கா, போர்த்துகல், அரேபியா, சீனா, தென்கிழக்காசிய நாடுகள், இலங்கை ஆகிய நாடுகளுடன் விஜயநகரம் வாணிகம் மேற்கொண்டது.

இலக்கியப் பங்களிப்பு:

விஜயநகர அரசர்களின் ஆதரவினால் சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் சமயம் மற்றும், சமயம் சாரா நூல்கள் எழுதப்பட்டன. கிருஷ்ணதேவராயர் அமுக்தமால்யதா என்னும் காவியத்தைத் தெலுங்கு மொழியில் இயற்றினார். சமஸ்கிருத மொழியில் ஜாம்பவதி கல்யாணம் என்னும் நாடக நூலையும் எழுதினார். பாண்டுரங்கமகாத்தியம் என்னும் நூலைத் தெனாலி ராமகிருஷ்ணா எழுதினார். ஸ்ரீநாதர், பெத்தண்ணா, ஜக்கம்மா, துக்கண்ணா போன்ற புலவர்கள் சமஸ்கிருத, பிராகிருத மொழிகளில் எழுதப்பட்ட நூல்களைத் தெலுங்கு மொழியில் மொழியாக்கம் செய்தனர்.

கட்டடக் கலைக்குச் செய்த பங்களிப்பு:

விஜயநகர அரசர்களின் கோவில் கட்டுமான நடவடிக்கைகள் ஒரு புதிய பாணியை உருவாக்கின. அது விஜயநகரப்பாணி என அழைக்கப்பட்டது. பெரும் எண்ணிக்கையிலான வடிவத்தில் பெரிய தூண்களும் அவற்றில் இடம்பெற்றுள்ள சிற்ப, செதுக்கல் வேலைப்பாடுகளும் விஜயநகரப் பாணியின் தனித்துவ அடையாளங்களாகத் திகழ்ந்தன. இத்தூண்களில் செதுக்கப்பட்டுள்ள விலங்குகளில் குதிரைகள் அதிகம் இடம் பெற்றுள்ளன. மேலும் சிறப்பு நிகழ்வுகளின் போது கடவுளர்களைக் காட்சிப்படுத்துவதற்காக உயர்ந்த மேடையுடன் கூடிய மண்டபங்கள் அல்லது திறந்தவெளி அரங்குகள் கட்டப்பட்டன. இக்கோவில்களில் விரிவான அளவில் அழகிய செதுக்கல் வேலைப்பாடுகள் நிறைந்த தூண்களைக் கொண்ட கல்யாண மண்டபங்களும் காணப்படுகின்றன.

பாமினி அரசு:

பாமினி அரசு நிறுவப்படுதலும், ஒருங்கிணைக்கப்படுதலும்:

1347இல் அலாவுதீன் ஹசன் (ஹசன் கங்கு எனவும் அறியப்பட்டார்) தௌலதாபாத் நகரைக் கைப்பற்றி, பாமன்ஷா என்ற பெயரில் தம்மையே சுல்தானாக அறிவித்துக் கொண்டார் டெல்லி சுல்தான் முகமது பின் துக்ளக்கிற்கு எதிராக இத்துருக்கிய அதிகாரி மேற்கொண்ட கலக நடவடிக்கையை ஏனைய படைத்தளபதிகளும் ஆதரித்தனர். இரண்டு ஆண்டுகளில் அலாவுதீன் ஹசன் பாமன் ஷா தமது தலைநகரைக் குல்பர்காவிற்கு மாற்றினார். அவருக்குப் பின் வந்தோர் குல்பர்காவிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஓர் அரசை நிறுவுவதில் சிரமங்களை எதிர்கொண்டனர். எனவே, 1429இல் தலைநகர் மீண்டும் பீடாருக்கு மாற்றப்பட்டது. பாமினி வம்சத்தில் பதினெட்டு அரசர்கள் இடம்பெற்றுள்ளனர்

அலாவுதீன் ஹசன் பாமன்ஷா (1347-1358):

அலாவுதீன் ஹசன் பதினோராண்டுகள் ஆட்சி புரிந்தார் வாரங்கல் அரசிடமிருந்தும், ராஜமுந்திரி, கொண்டவீடு ஆகிய ரெட்டி அரசுகளிடமிருந்தும் ஆண்டுதோறும் கப்பம் வசூலிக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் அடிக்கடி போர்கள் ஏற்பட வழிவகுத்தன. அவர் தமது அரசை நான்கு மாகாணங்களாகப் பிரித்தார். அவை தராப் என அழைக்கப்பட்டன. ஒவ்வொரு மாகாண ஆளுநரும் படைகளுக்குத் தலைமையேற்றனர். அப்பகுதியை நிர்வாகம் செய்வதும், வரிவசூல் செய்வதும் அவருடைய பொறுப்பாகும். வலிமை மிகுந்த அரசர்களின் கீழ் இம்முறை சிறப்பாகச் செயல்பட்டது. வலிமைகுன்றிய அரசர்களின் காலத்தில் இம்முறையின் ஆபத்து வெளிப்படையாகவே தெரிந்தது.

அலாவுதீன் ஹசன் பாமன் ஷா

முதலாம் முகமது ஷா (1358-1375):

பாமன்ஷாவைத் தொடர்ந்து முதலாம் முகமது ஷா அரச பதவி ஏற்றார். விஜயநகரோடு அவர் மேற்கொண்ட இரு போர்களினால் பயனேதும் ஏற்படவில்லை. ஆனால் 1368இல் வாரங்கல் அரசோடு போரிட்டதின் மூலம் கோல்கொண்டா கோட்டை, பச்சை கலந்த நீலவண்ணக் கற்களால் செய்யப்பட்ட சிம்மாசனம் உட்பட பெரும் செல்வத்தை இழப்பீடாகப் பெற்றார். பின்னர் இச்சிம்மாசனமே பாமினி சுல்தான்களின் அரியணை ஆயிற்று.

கோல்கொண்டா கோட்டை

குல்பர்கா மசூதி

முதலாம் முகமது ஷா, பாமினி அரசிற்கு வலுவான ஓர் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார். அவருடைய அரச அமைப்பு முறையானது, பாமினி அரசு ஐந்து சுல்தானியங்களாகச் சிதறுண்ட பின்னரும் தொடர்ந்தது. அவர் குல்பர்காவில் இரண்டு மசூதிகளைக் கட்டினார். 1367இல் கட்டி முடிக்கப்பெற்ற முதல் மசூதி, மகாமசூதி 216 அடி X 16 அடி என்ற அளவில் கட்டப்பட்டதாகும். இம்மசூதி மேல்விதானத்தோடு கூடிய முற்றத்தைக் கொண்டுள்ளது. பெரும் எண்ணிக்கையில் அரேபியரும் துருக்கியரும் குறிப்பாகப் பாரசீகர்களும் தக்காணத்திற்குக் குடிபெயரத் துவங்கினர். அவர்களில் பலர் சுல்தான் முதலாம் முகமதுவின் அழைப்பை ஏற்று வந்தவராவார்கள் தொடாந்து வந்த தலைமுறைகளின் காலத்தில் அங்கே இஸ்லாமியக் கலாச்சாரம் வளர்வதில் இவர்கள் பெரும் செல்வாக்கு செலுத்தினர்.

முதலாம் முகமதுவுக்குப் பின்வந்த அரசர்கள்:

முகமதுவைத் தொடர்ந்து அவருடைய மகன் முஜாகித் பதவியேற்றார். ஆனால் விஜயநகருக்கு எதிரான போரை முடித்துக்கொண்டு குல்பர்கா திரும்பிய போது கொலை செய்யப்பட்டார். முகமதுவின் மாமானாரும் சதி செய்தவருமான தாவூத் என்பாரின் சகோதரனின் மகன் இரண்டாம் முகமது என்ற பெயரில் 1378இல் அரியணை ஏற்றப்பட்டார். இரண்டாம் முகமதுவின் ஆட்சிக்காலத்தில் அமைதி நிலவியது. அவர் தனது நேரத்தின் பெரும்பகுதியைத் தமது அரசவையைப் பண்பாட்டு, கல்விமையமாக மாற்றுவதில் செலவிட்டார்.

பாமினி அரசு விஜயநகர அரசு இடையே, துங்கபத்ரா கிருஷ்ணா நதிகளின் வளமான பகுதிகளை கைப்பற்றுவது தொடர்பாக தொடர்ந்து போர்கள் நடைபெற்றன. வடபுறத்திலிருந்து குறிப்பாக மாளவம் மற்றும் குஜராத்திலிருந்து அச்சுறுத்தல்கள் வந்தன. எண்பத்தைந்து ஆண்டுகள் (1377-1463) இடைவெளிக்குப் பின்னர், குறிப்பிட்டுச் சொல்லும்படியான அரசராக மூன்றாம் முகமது (1463-1482) திகழ்ந்தார். மூன்றாம் முகமது பத்தொன்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். இக்காலகட்டத்தில் அரசின் பிரதம அமைச்சராகவும் குறிப்பிடத்தகுந்த ஆளுமையாகவும் மகமது கவான் விளங்கினார்.

மகமது கவான்:

பிறப்பால் பாரசீகரான மகமது கவான் இஸ்லாமிய கோட்பாடுகளிலும் பாரசீக மொழியிலும், கணிதத்திலும் பெரும்புலமை பெற்றவராயிருந்தார். மேலும், அவர் கவிஞரும் உரைநடை எழுத்தாளருமாவார். அவரின் மேதமையிலும், இராணுவ அறிவு நுட்பத்திலும் மனதைப் பறிகொடுத்த பாமினி அரசர் மூன்றாம் முகமது அவரைப் பணியமர்த்தினார். தமக்குக் கீழ் சிறப்பான தனித்தன்மை மிக்க பிரதம அமைச்சராகப் பணியாற்றிய அவர் பாமினியரசின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பைச் செய்தார்.

கவான் தமது இராணுவ நடவடிக்கைகளுக்கும் நிர்வாகச் சீர்திருத்தங்களுக்கும் பெயர் பெற்றவராவர். பாரசீக வேதியியல் வல்லுநர்களை அழைத்து வந்து வெடிமருந்து தயாரிப்பதிலும் அவற்றைப் பயன்படுத்துவதிலும் படையினருக்குப் பயிற்சியளித்தார். பெல்காமில் நடைபெற்ற விஜயநகருக்கு எதிரான போரில் அவர் வெடிமருந்தைப் பயன்படுத்தினார். அடிக்கடி அரசர்களைப் போலவே நடந்துகொள்ளும் மாகாண ஆளுநர்களைக் கட்டுப்படுத்தவும், நிர்வாகத்தைக் கட்டுப்கோப்புடையதாக மாற்றவும் கவான் விரும்பினார். அதன் பொருட்டு பாமினி அரசில் ஏற்கெனவே இருந்த நான்கு மாகாணங்களை எட்டாக மாற்றினார். இதன் மூலம் ஒவ்வோர் ஆளுநரின் நிர்வாகத்தின் கீழுள்ள பகுதிகளின் அளவைச் சுருக்கி, மாகாண நிர்வாகத்தை எளிதாக நிர்வாகம் செய்யலாம் என நினைத்தார்.

மாகாணங்களிலிருந்த சில மாவட்டங்களை அவர் மத்திய நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தார். மாகாண ஆளுநர்களின் இராணுவ வலிமையைக் கட்டுக்குள் வைப்பதற்காக ஒவ்வோர் ஆளுநரும் ஒரு கோட்டையை மட்டும் தங்கள் வசம் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். ஏனைய கோட்டைகளைச் சுல்தான் தமது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொண்டார். ஊதியத்திற்குப் பதிலாக நிலங்களைப் பெற்றிருந்த உயர் அரசு அதிகாரிகள் தங்கள் வரவு செலவுகள் குறித்துச் சுல்தானுக்குத் தெரிவிக்கும் பொறுப்புக்கு உள்ளாக்கப்பட்டனர்.

கவானால் அறிமுகம் செய்யப்பட்ட நிர்வாகச் சீர்திருத்தங்கள் அரசின் திறனை மேம்படுத்தியது. ஆனால், பிராந்தியத் தலைவர்களின் அதிகாரங்களைக் குறைத்தது. அத்தலைவர்களில் பெரும்பாலோர் தக்காணத்தைச் சேர்ந்தோர் ஆவர். இதனால் தக்காணப் பிரபுக்களுக்கும் தக்காணத்தைச் சுற்றியுள்ளோர்களுக்கும் இடையே ஏற்கனவே நிலவிய பகைமை தீவிரமடைந்து மோதல்களாக வெடித்தன. தக்காணப் பிரபுக்கள் கவானின் வெற்றிகளால் அவர் மீது பொறாமை கொண்டனர். அவரைத் தங்கள் வளர்ச்சியைத் தடுக்கும் தடைக்கல்லாகக் கருதினர். சுல்தானுக்கு எதிராகக் கவான் சதியில் ஈடுபட்டிருப்பதைப் போன்ற போலிக் கடிதம் ஒன்றைத் தயார் செய்தனர். கவானின் மேலாதிக்கத்தை விரும்பாத சுல்தானும் அவருக்கு மரண தண்டனை வழங்கினார்.

பாமினி அரசின் சரிவு:

கவான் தூக்கிலிடப்பட்டதால் அரசின் முதுகெலும்பு எனக் கருதப்பட்ட பல வெளிநாட்டுப் பிரபுக்களைத் தக்காணத்தை விட்டு வெளியேறித் தங்கள் பகுதிகளுக்குத் திரும்பிச் செல்லத் தூண்டியது. சுல்தான் மூன்றாம் முகமதுவின் இறப்பிற்குப் பின்னர் முடிசூடிய முகமது அல்லது சிகாபுதீன் முகமது 1518 இறக்கும்வரை சுல்தானாக ஆட்சி புரிந்தார். அவருடைய நீண்டகால ஆட்சி, அரசு சிதையப் போவதற்கான செயல்பாடுகள் தொடங்கியதைச் சுட்டிக் காட்டின. அவருக்குப்பின் பதவியேற்ற நான்கு சுல்தான்களும் திறமைக் குன்றியவர்களாகப் பெயரளவிற்கே அரியணையில் இருந்தனர். சுல்தானியம் படிப்படியாக ஐந்து சுதந்திரமான தக்காண சுல்தானியங்களாகச் சிதைந்தது. அவை பீடார், பீஜப்பூர், அகமதுநகர், பீரார், கோல்கொண்டா ஆகியனவாகும்.

பாமினி சுல்தானிகளின் பங்களிப்பு:

கட்டடக்கலை:

கட்டடக்கலைக்குப் பாமினி சுல்தான்கள் ஆற்றிய பங்களிப்பைக் குல்பர்காவில் காணலாம். இப்பகுதிகளில் நடத்தப்பட்ட அகழ்வாய்வுகளில் அரண்மனைகள், அரசர் மக்களைச் சந்திக்கும் மண்டபங்கள், தூதுவர்கள் தங்கியிருந்த குடியிருப்புகள், வளைவுகள், குவிமாடங்கள், சுவர்கள், அரண்கள் ஆகியன வெளிக்கொணரப்பட்டன. இக்கண்டுபிடிப்புகள் அவர்களின் கட்டடக்கலைத் திறமையை படம் பிடித்துக் காட்டுகின்றன.

கல்வி:

பாமினி அரசை நிறுவிய அலாவுதீன் ஹசன் ஷா, அலாவுதீன் கில்ஜியின் படைத் தளபதிகளின் ஒருவரான ஜாபர்கான் என்பவரின் முயற்சியால் மூல்தானில் கல்வி கற்றார். அவர் அரசரான பின்னர் தமது மகன்கள் கல்வி கற்பதற்காக ஒரு பள்ளியை நிறுவுவதில் சிறப்பு கவனம் செலுத்தினார். அவருடைய மகன் முதலாம் முகமது கல்வி கற்பதை ஆதரித்தவராவார். பிரபுக்கள் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் போர் வீரர்களுக்கான கலைகளில் பயிற்சி பெறுவதற்காகப் பயிற்சி நிறுவனங்களை ஏற்படுத்தினார். பாமினி அரசின் எட்டாவது சுல்தானான சுல்தான் பிரோஸ், மொழியியல் அறிஞரும் கவிஞரும் ஆவார். இவருக்குப் பின் வந்த அரசர்கள் குல்பர்கா, பீடார், தௌலதாபாத், காண்டகார் ஆகிய இடங்களில் கல்விக் கூடங்களை நிறுவினர். இப்பள்ளிகளில் உண்டு உறைவிட வசதிகள் அரசரின் செலவில் ஏற்படுத்தப்பட்டன. பீடாரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற, மகமது கவானின் மதராச (கல்வி நிலையம்) 3000 கையெழுத்துப் பிரதிகளைக் கொண்ட பெரிய நூலகத்தைக் கொண்டிருந்தது. இவையாவும் கல்விக்கும், புலமைக்கும் கவான் அளித்த முக்கியத்துவத்தை தெளிவாகப் பறைசாற்றுகின்றன.

மகமது கவான் மதரசா

சுருக்கம்:

  • ஹரிஹரர், புக்கர் ஆகிய இரு சகோதரர்களால் விஜயநகர அரசு நிறுவப்பட்டதும், அவருக்குப் பின் வந்தோர்களால் குறிப்பாக இரண்டாம் தேவராயரால் அது ஒருங்கிணைக்கப்பட்டதும் விவரிக்கப்பட்டுள்ளது.
  • சிறந்த மன்னரான கிருஷ்ணதேவராயரின் முன்னேற்றமும் சாதனைகளும் கோடிட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளன.
  • தக்காண சுல்தான்களின் கூட்டுப்படைகளால் விஜயநகர் தோற்கடிக்கப்பட்டது எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
  • விஜயநகரின் அரசு நிர்வாக முறையும், பொருளாதாரமும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
  • கலை, இலக்கியம், கட்டடக்கலை ஆகிய துறைகளுக்கு விஜயநகர் செய்த பங்களிப்பு, எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
  • அலாவுதீன் பாமன் ஷாவால் பாமினி அரசு உருவாக்கப்பட்டதும் அவருடைய திறமை வாய்ந்த வழித்தோன்றலான முதலாம் முகமதுவால் அது ஒருங்கிணைக்கப்பட்டதும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
  • பாமன் ஷா அறிமுகம் செய்த நிர்வாக முறையும், முதலாம் முகமது, பின்னர் மூன்றாம் முகமதுவின் காலத்தில் மகமது கவான் ஆகியோர் மேற்கொண்ட நடவடிக்கைகளும் பகுத்தாய்வு செய்யப்பட்டுள்ளன.
  • கட்டடக்கலை, கல்வி ஆகியவற்றிற்குப் பாமினி சுல்தான்களிப் பங்களிப்பு திறனாய்வு செய்யப்பட்டுள்ளன.

சொற்களஞ்சியம்:

1 முரண்பாடு / மோதல் Conflict A serious disagreement
2 ஏறுவரிசையில் Ascending Leading upwards
3 நிகழ்ச்சிக்குப்பிறகு Subsequently After a particular thing
4 அலங்கரிக்கப்பட்ட Adorned Decorated
5 கொள்ளையடிப்பு Pillaging Robbing, using violence, especially in wartime
6 சதி திட்டம் / சூழ்ச்சி Intrigue Conspire, plot
7 முதல் குழந்தைக்கு வாரிசுரிமை Primogeniture The right of succession belonging to the first child
8 கம்பீரம் / சிறப்பு வாய்ந்த Splendour Magnificent
9 செழிக்கும் Flourishing Growing successfully
10 முக்கியத்துவம் Prominence The state of being important
11 உத்திரவாதம் Indemnity Guarantee, surety

உங்களுக்கு தெரியுமா?

  • முதலாம் புக்கருடைய மகனான குமார கம்பணா மதுரை சுல்தானியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு அங்கு ஒரு நாயக்க அரசை நிறுவுவதிலும் வெற்றி பெற்றார். குமார கம்பணாவின் மனைவி கங்காதேவியால் எழுதப்பெற்ற மதுரா விஜயம் என்னும் நூலில் விஜயநகரப் பேரரசால் மதுரை கைப்பற்றப்பட்டதைத் தெளிவாக விளக்குகிறது.
  • கிழக்குக் கர்நாடகத்தில், துங்கபத்ரா நதியின் கரையில் உள்ள விஜயநகரம் இருந்த இடம் தற்போது ‘ஹம்பி’ என அழைக்கப்படுகிறது. ஹம்பி சீர்குலைந்து இடிபாடுகளாகக் காணப்படுகிறது. யுனெஹ்கோ ஹம்பியை பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது.
  • ‘அமுக்தமால்யதா’ தெலுங்கு இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. இது, பெரியாழ்வாரின் மகளான கோதை தேவியைப் பற்றியதாகும். கடவுள் ரங்கநாதருக்கு அணிவிப்பதற்காகத் தொடுக்கப்பட்ட மாலைகளை அவருக்குச் சூடுவதற்கு முன்பாக இவ்வம்மையார் சூடிக்கொள்வார். அமுக்தமால்யதா என்பதற்கு தான் அணிந்த பின்னர் கொடுப்பவர் எனப்பொருள்.
  • பச்சை கலந்த நீல வண்ணக் கல்லானது விலையுயர்ந்த அணிகலன்களில் பயன்படுத்தப்படும் கல்லாகும். பாரசீக அரசர்களின் அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட சிம்மாசனங்களில் இத்தகைய வண்ணக்கல்லால் ஆன அரியணையும் ஒன்றாகுமெனப் பிர்தௌசி தன்னுடைய ஷா நாமா எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
  • கோல்கொண்டா கோட்டையானது ஹைதராபாத்திலிருந்து 11 கி.மீ தொலைவில், ஒரு குன்றின் மீது 120 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஒலி தொடர்பான கட்டடக்கலை அம்சங்களுக்கு இக்கோட்டை பெயர் பெற்றதாகும். கோட்டையின் மிக உயரமான இடம் பால ஹிசார் ஆகும். தர்பார் மண்டபத்திலிருந்து குன்றின் கீழே அமைந்துள்ள அரண்மனைக்குச் சுரங்கப்பாதை இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பாமின அரசின் எட்டு அமைச்சர்கள்:

  1. வக்கீல்-உஸ்-சல்தானா அல்லது அரசின் பிரதம அல்லது முதலமைச்சர் அரசருக்கு அடுத்த நிலையில் துணையதிகாரியாகச் செயல்பட்டவர்.
  2. பேஷ்வா நாட்டின் பிரதம மந்திரியோடு இணைந்து செயல்பட்டவர்.
  3. வஸிரி-குல் ஏனைய அமைச்சர்களின் பணிகளை மேற்பார்வையிட்டவர்.
  4. அமிர்-இ-ஜிம்லா நிதியமைச்சர்.
  5. நஷீர்-உதவி நிதியமைச்சர்.
  6. வஷிர்-இ-அசாரப்-வெளியுறவுத்துறை அமைச்சர்.
  7. கொத்தவால்-காவல்துறைத் தலைவர் மற்றும் நகர குற்றவியல் நடுவர்.

சதார்-இ-ஜகான்-தலைமை நீதிபதி, சமயம் மற்றும் அறக்கொடைகளின் அமைச்சர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!