Tnpsc

14th February 2020 Current Affairs in Tamil & English

14th February 2020 Current Affairs in Tamil & English

14th February 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

14th February 2020 Current Affairs in Tamil

14th February 2020 Current Affairs in English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. பன்னாட்டு வேளாண் மேம்பாட்டு நிதியத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

அ. நியூயார்க்

ஆ. ஜெனீவா

இ. ரோம்

ஈ. நைரோபி

  • பன்னாட்டு வேளாண் மேம்பாட்டு நிதியம் என்பது இத்தாலியின் ரோம் நகரை தலைமையிடமாகக் கொண்ட ஒரு பன்னாட்டு நிதி நிறுவனமாகும். இது, வறுமை & பசியின்மைக்கு தீர்வுகாண்பதற்கான ஐ.நா அவையின் சிறப்பு நிறுவனமாகும்.
  • “Investing in sustainable food systems to end hunger by 2030 – எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் பட்டினியை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக நீடித்த உணவு முறைகளில் முதலீடு செய்தல்” என்ற கருப்பொருளில், பன்னாட்டு வேளாண் மேம்பாட்டு நிதியத்தின் ஆளுநர்கள் குழுவின் 43ஆவது அமர்வு அண்மையில் ரோமில் நடைபெற்றது. இதன் தொடக்க விழாவிற்கு, மாலிய அதிபர் இப்ராஹிம் பெளபக்கர் கெஸ்டா தலைமைதாங்கினார்.

2.எந்தத் திட்டத்தின்கீழ், பள்ளி சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய தூதர் முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது?

அ. தூய்மை இந்தியா இயக்கம்

ஆ. ஆயுஷ்மான் பாரத்

இ. போஷான் அபியான்

ஈ. கட்டுடல் இந்தியா இயக்கம்

  • ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின்கீழ் மத்திய சுகாதார அமைச்சரும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரும் இணைந்து பள்ளி சுகாதார மற்றும் ஆரோக்கிய தூதர் முன்னெடுப்பைத் தொடங்கினர். இந்த முன்னெடுப்பின்கீழ், ஒவ்வொரு பள்ளியிலும் 2 ஆசிரியர்கள் நலவாழ்வு பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, “சுகாதாரம் & ஆரோக்கிய தூதர்” என்று நியமிக்கப்படுவார்கள்.
  • இந்தத்திட்டம், தொடக்கத்தில் 200 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். மேலும், “கட்டுடல் இந்தியா (Fit India) இயக்கம்”, “சரியானதை உண்ணுங்கள் (Eat Right) பரப்புரை”, போஷான் அபியான் உள்ளிட்ட பிற அரசு திட்டங்களுடன் இது இணைக்கப்படும்.

3. 2020 பிப்ரவரி 13 அன்று அனுசரிக்கப்பட்ட, “உலக வானொலி நாளுக்கான” கருப்பொருள் என்ன?

அ. Radio and Diversity

ஆ. Radio across World

இ. Radio and Multilingualism

ஈ. Connecting through Air

  • பிப்.13ஆம் தேதியை, “உலக வானொலி நாளாக” கொண்டாடுவதற்கான UNESCO உறுப்புநாடுகளின் பேரறிவிப்பு, ஐ.நா பொது அவையால் கடந்த 2013ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நடப்பாண்டு (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருள், “வானொலி மற்றும் பன்முகத்தன்மை”.
  • வானொலியின் முக்கியத்துவம் மற்றும் தகவல் அணுகல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, UNESCO தலைமையில் உலகெங்கும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளின்போது, “We are Radio; We are Diversity” என்ற பரப்புரையும் தொடங்கப்பட்டது.

4.பிரதமர் வன் தன் யோஜனா என்பது எந்த மத்திய அமைச்சகத்தின் முதன்மைத் திட்டமாகும்?

அ. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்

ஆ. பழங்குடியினர் விவகார அமைச்சகம்

இ. புவி அறிவியல் அமைச்சகம்

ஈ. கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சகம்

  • பழங்குடியினர் விவகார அமைச்சகம், TRIFED மூலம், 2019ஆம் ஆண்டில் ‘பிரதமர் வன் தன் யோஜனா’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டம், வனத்தில் விளையும் பொருட்களைப் பயன்படுத்தி, பழங்குடிகளுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்குவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. தயாரிப்புகளை அடையாளக்குறியிடவும், சிப்பமாக்கவும் வன் தன் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
  • அண்மையில், TRIFED (இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு) ஏற்பாடுசெய்த, “வன் தன் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு” குறித்த பயிலரங்கத்தை மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சர் ஸ்ரீ அர்ஜுன் முண்டா தொடங்கிவைத்தார்.

5.அரசுக்கு சொந்தமான 3 பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக அண்மையில் அவற்றுக்கு எவ்வளவு மூலதனம் வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது?

அ. ரூ. 2000 கோடி

ஆ. ரூ. 2500 கோடி

இ. ரூ. 3000 கோடி

ஈ. ரூ. 5000 கோடி

  • ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனம் (OICL), தேசிய காப்பீட்டு நிறுவனம் (NICL), யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் (UIICL) ஆகிய பொதுத்துறையைச்சேர்ந்த மூன்று காப்பீட்டு நிறுவனங்களுக்கு முதலீடு வழங்குவதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது.
  • மூன்று பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் மோசமான நிதிநிலை மற்றும் கடனை தீர்ப்பதற்குத் தேவையான முதலீடு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு உடனடியாக `2500 கோடி நிதியை விடுவிக்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

6.மத்திய அமைச்சரவையின் ஒப்புதலின்படி, எந்தத் தீர்ப்பாயத்தின் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வுகாண்பதற்காக, ‘விவாத் சே விஸ்வாஸ்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது?

அ. கடன் மீட்பு தீர்ப்பாயம்

ஆ. தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம்

இ. தொலைத்தொடர்பு சிக்கல் தீர்வு & மேல்முறையீட்டு தீர்ப்பாயம்

ஈ. ஆயுதப்படைகள் தீர்ப்பாயம்

  • வருமான வரி உள்ளிட்ட நேரடி வரிகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வுகாணும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்ட விவாத் சே விஸ்வாஸ் (சர்ச்சையிலிருந்து நம்பிக்கை) மசோதாவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இம்மசோதாவில் வருமான வரி உள்ளிட்ட நேரடி வரிகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்வுகாணும் நோக்கில் வழிமுறைகள் இடம்பெற்றுள்ளன.
  • `9 இலட்சம் கோடி மதிப்பிலான நேரடி வரிகளை வசூல் செய்வது தொடர்பாக பல்வேறு வழக்குகள் வெவ்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்த மசோதா நிறைவேற்றப்படுவதன் மூலம், நேரடி வரிகள் தொடர்பாக வழக்கு தொடுத்துள்ளோர் மார்ச்.31ஆம் தேதிக்குள் அவற்றின் மீது தீர்வு காண வழிவகை ஏற்படும். நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு மார்ச் 31ஆம் தேதிக்குள் தீர்வு காணத் தவறுபவர்களுக்கு 10% கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

7.உள்நாட்டு வான்பயண பாதுகாப்புப் பணியகத்தால், அண்மையில், அனைத்து வானூர்தி நிலையங்க -ளிலும் வானூர்திகளிலும் தடைசெய்யப்பட்ட தயாரிப்பு எது?

அ. மது

ஆ. இ – சிகரெட்

இ. போதை மருந்துகள்

ஈ. முகமூடிகள்

  • அண்மையில், இந்தியாவில் உள்ள அனைத்து வானூர்தி நிலையங்கள் மற்றும் வானூர்திகளில் இ-சிகரெட்டுகள் மற்றும் அது ஒத்த தயாரிப்புகளை தடை செய்துள்ளதாக இந்தியாவின் வான்பயண பாதுகாப்பு கட்டுப்பாட்டாளரான உள்நாட்டு வான்பயண பாதுகாப்புப் பணியகம் அறிவித்தது.
  • எந்தவொரு வானூர்தி நிலைய வளாகத்திலும் அல்லது இந்தியாவுக்கு வரும் / புறப்படும் எந்தவொரு வானூர்தியிலும் இதுபோன்ற பொருட்களை விநியோகித்தல், விற்பனை செய்தல், சேமித்தல் ஆகியவற் -றையும் அது தடை செய்துள்ளது. மின்னணு நிகோடின் விநியோக முறை (ENDS) இதில் அடங்கும் என்பதால், கடந்த ஆண்டு, சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் இ-சிகரெட்டுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் இறக்குமதியை தடைசெய்தது.

8.பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் (ICAI) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ. அதுல் குமார் குப்தா

ஆ. நிஹார் நிரஞ்சன் ஜம்புசாரியா

இ. பிரபுல்லா சாஜேத்

ஈ. N D குப்தா

  • மூத்த பட்டய கணக்காளர் அதுல் குமார் குப்தா, அண்மையில், 2020-21ஆம் ஆண்டுக்கான பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். முன்னதாக அவர், 2019-20 காலப்பகுதியில் அவ்வமைப்பின் துணைத்தலைவராக பணியாற்றிவந்தார். இவருக்குமுன் பிரபுல்லா சாஜேத் தலைவராக இருந்தார். நிஹார் நிரஞ்சன் ஜம்புசாரியா, 2020-21ஆம் ஆண்டுக்கான துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

9.அண்மையில் காலமான வெண்டெல் ரோட்ரிக்ஸ், எந்தத் துறையுடன் தொடர்புடையவர்?

அ. திரைத்துறை

ஆ. வணிகம்

இ. அரசியல்

ஈ. ஆடை வடிவமைப்பு

  • பிரபல ஆடை வடிவமைப்பாளரான வெண்டல் ரோட்ரிக்ஸ், அண்மையில், கோவாவில் காலமானார். ஆடை வடிவமைப்பிள் பிரபலமான இவர் ‘மினிமலிசத்தின் குரு’ என்றும் அழைக்கப்பட்டார். நாட்டில், ‘பொழுதுபோக்கிட உடைகள்’ மற்றும் ‘சுற்றுச்சூழலுக்குகந்த ஆடைகள்’ போன்ற யோசனைகளை அறிமுகப்படுத்தியதற்காக அவர் அறியப்பட்டார். அவர், காதி இயக்கத்தின் ஊக்குவிப்பாளராகவும், இந்தியாவின் நான்காவது மிகவுயர்ந்த விருதான ‘பத்மஸ்ரீ’ விருதைப் பெற்றவராகவும் இருந்தார். இவர் ஒரு சமூக ஆர்வலராகவும் இருந்தார்.

10.அண்மையச் செய்திகளில் இடம்பெற்ற அமித் பங்கல், எந்த விளையாட்டுடன் தொடர்புடையவராவார்?

அ. வில்வித்தை

ஆ. குத்துச்சண்டை

இ. மல்யுத்தம்

ஈ. டென்னிஸ்

  • உலக குத்துச்சண்டைப் போட்டியில் வெள்ளி வென்ற அமித் பங்கல், IOC குத்துச்சண்டைப் பணிக் குழுவால் தரவரிசையில் முதலாமிடத்தில் வைக்கப்பட்டுள்ளார். அடுத்த மாதம் ஜப்பான் ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப்போட்டிகள் நடக்கவுள்ள நிலையில் இப்பெரிய கெளரவம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 10 ஆண்டுகளில், இத்தகைய உலகளாவிய கெளரவத்தைப் பெற்ற இந்திய குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
  • கடந்த 2009ம் ஆண்டில், உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 75 கி.கி எடைப்பிரிவில் வெண்கலம் வென்ற விஜேந்தர் சிங் இதே கெளரவத்தைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச குத்துச்சண்டை சங்கம் தற்போது இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால், ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப்போட்டி மற்றும் டோக்கியோவில் நடைபெறவுள்ள முதன்மை நிகழ்வு ஆகிய இரண்டையும் IOC பணிக்குழு நடத்தும்.

தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்

Image result for tamilnadu map logo

  • வ உ சிதம்பரனார் துறைமுக பொறுப்புக்கழகத்தின் துணைத்தலைவராக இருந்த நா. வையாபுரி பணி ஓய்வு பெற்றதைத்தொடர்ந்து, அப்பதவியில், பிமல் குமார் ஜா பொறுப்பேற்றுக்கொண்டார்.
  • சென்னை உள்பட 11 மாநகராட்சிகளில் நடந்தும் மிதிவண்டியிலும் பொதுமக்கள் சிரமமின்றி செல்லும் வகையில், “மாபெரும் சாலைகள்” திட்டம் செயல்படுத்தப்படும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் S P வேலுமணி தெரிவித்துள்ளார்.
  • சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக (பொறுப்பு) நீதிபதி துரை ஜெயச்சந்திரன் பொறுப்பேற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!